எஸ்.வியாழேந்திரன்

எஸ்.வியாழேந்திரன்

“அரசுடன் இருப்பதனால் தான் எமது மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எழும் போது தடுக்க முடிகிறது.” – எஸ்.வியாழேந்திரன்

“எமது சமுகத்திற்கு தரவேண்டிய நீதியான நியாயமான எந்தவொரு கோரிக்கையினையும் விட்டுக்கொடுக்க தயாரில்லை.மேலும் இன்று அரசியல் அதிகாரம் கைகளில் உள்ளதன் காரணமாகவே சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடிகிறது.” என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழ்வாதார உதவிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் புனரமைப்புக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் நடைபெற்றது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் ஊடாக இந்த நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதன்கீழ் வறிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக 59 குடும்பங்களுக்கு ஆடுகளை வழங்குவதற்கு 18 இலட்சம் ரூபாவும் 12 குடும்பங்களுக்கான வீடுகள் திருத்துவதற்காக 26 இலட்சம் ரூபாவும் மூன்று விளையாட்டு மைதானங்களை புனரமைப்பதற்காக 15 இலட்சம் ரூபாவும் 18 குடும்பங்களுக்கு மலசல கூட வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக 12 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவும் மிகவும் வறிய நிலையில் உள்ள 18 குடும்பங்கள் மின்சாரத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக 04 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கான நிதிகள் மற்றும் ஆடுகள் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் க.சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவற்றினை வழங்கிவைத்தார். இந்த நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சபேசன், அமைச்சரின் பிரதேச இணைப்பாளர் நிரோஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் பேசிய அவர்,

கடந்த மூன்று தசாப்தத்துக்கு மேற்பட்ட காலமாக ஆளுந்தரப்பில் தமிழ் மக்கள் சார்பாக மக்கள் பிரதிநிதிகள் இருந்தது என்பது மிகவும் அரிதான விடயமாகும். அதனால் கடந்த காலத்தில் அரசியல் அதிகாரம் இல்லாத சமூகமாகவே நாங்கள் இருந்துவந்துள்ளோம். அந்த அரசியல் அதிகாரம் இல்லாத காரணத்தினால் தமிழ் சமூகம் பல வழிகளில் சுரண்டப்பட்டுள்ளது.

அதிகாரிகள் இன்று இரவு பகல் பாராமல் தங்களது வேலைநேரக்கடமைக்கு அப்பால் சென்று விடுமுறைகள் என்று பாராமல் எந்தவித இனவாத, மதவாத நோக்கமில்லாமல் உளச்சுத்தியுடன் கடமையாற்றிவரும் நிலையில் மாவட்ட அரசாங்க அதிகாரிகளை அரச பயங்கரவாதம் என்று சொல்கின்ற கீழ்தரமான அரசியலை சிலர் மேற்கொள்கின்றனர். அரசியல் அதிகாரம் என்பது இன்று எங்களது கைகளிலும் இருக்கின்றது. அதன் காரணமாகவே இன்று எமது சமூகத்திற்கு விரோதமான நடவடிக்கைகளை முடிந்தளவுக்கு தடுத்து நிறுத்தி வருகின்றோம். ஆளுந்தரப்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ் மக்கள் கொண்டுவந்துள்ளார்கள்.

இந்த மாவட்டத்தில் உள்ள மக்களுக்கான மூன்று விதமான பிரச்சினைகள் உள்ளன. இந்த மூன்று விதமான பிரச்சினைகக்கும் இராஜதந்திரமான அணுகல்களை மேற்கொண்டு தீர்வினைப்பெற்றுக்கொடுப்பதே எங்கள் அரசியல் பயணமாகும். இதில் எந்தவித மாற்றுக்கருத்துகளுக்கும் இடமில்லாமல் மிகவும் தெளிவாகயிருக்கின்றோம்.

இன்று பாதுகாப்பு படையினர் வசமிருக்கின்ற காணிகள் விடுவிக்கப்படுகின்றது. உடனடியாக தீர்க்கப்படவேண்டிய பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. அரசாங்கத்துடன் நாங்கள் இருந்து ஜனாதிபதியுடன் பிரதமருடன் தொடர்புடைய அமைச்சுகளுடன் பேசி ஒவ்வொரு பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை காத்திரபூர்வமாக முன்னெடுத்து படிப்படியாக மேற்கொண்டுவருகின்றோம். மூன்று தசாப்தமாக விடுவிக்கப்படாத கும்புறுமுலை இராணுவமுகாம் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.

எங்களது அரசியல் அதிகாரத்தினைக்கொண்டு இன்னுமொரு இனத்தின் நியாயமான, நீதியான எந்த கோரிக்கையினையும் நாங்கள் தட்டிப்பறிக்கவில்லை. அதேபோன்று எமது சமுகத்திற்கு தரவேண்டிய நீதியான நியாயமான எந்தவொரு கோரிக்கையினையும் விட்டுக்கொடுக்க தயாரில்லை. தமிழ் எம்பிக்கள் 16 பேர் முட்டுக்கட்டை கொடுத்து பாதுகாத்த நல்லாட்சிக்காலத்தில் ஒரு தமிழ் அரசியல் கைதியை பொதுமன்னிப்பில் விடுவிக்கமுடியவில்லை. ஆனால் தற்போதைய ஜனாதிபதி ஒரே தடவையில் 16 அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கிவிடுவித்தார்.

“என் தொடர்பான விமர்சனத்தை உறுதிப்படுத்தினால் 24மணி நேரத்திற்குள் நான் எனது அரசியல்வாழ்விலிருந்து ஒதுங்குவேன்.” – எஸ்.வியாழேந்திரன் காட்டம் !

“லொஹான் ரத்வத்தையினை செங்கம்பள விரிப்புடன் நான் வரவேற்றதை உறுதிப்படுத்தினால் 24மணி நேரத்திற்குள் நான் எனது அரசியல்வாழ்விலிருந்து ஒதுங்குவேன்.” என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை இன்று (திங்கட்கிழமை) காலை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நடாத்தினார்.

“எமது தமிழ் அரசியற் கைதிகளை அச்சுறுத்தி, அவமானப்படுத்திய லொஹான் ரத்வத்தயின் பாதணியை நீங்கள் நக்குவதற்காகவா அவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வந்தீர்கள் என்ற கேள்வியையே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கேட்கின்றார்கள்.” என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவி்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே  இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பினை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நடாத்தியிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும்  கருத்து தெரிவித்த அவர்,

சமூக,சில ஊடகத்தளங்களில் வெளியான செய்திகளை பார்த்து நாடாளுமன்ற  உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் சில கருத்துகளை கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கவேண்டிய அவசியம் இருக்கின்றது. முகப்புத்தகத்திலும் இணையத்திலும் வந்த செய்திகளைப்பார்த்து ஊடகசந்திப்பினை செய்யாமல் என்னிடம் கேட்டிருந்தால் நான் விளக்கமளித்திருப்பேன்.

கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கபில அத்துக்கொரல, இராஜாங்க அமைச்சர் லொகாத் ரத்வத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதிலக அவர்களும் மட்டக்களப்பு பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு வருகைதந்திருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும் 30இலட்சம் ரூபா நிதியொதுக்கப்படுகின்றது. வரவிருக்கின்ற வரவு செலவுத்திட்ட விடயத்தினை கட்சிசார்ந்தவர்களுடனும் கலந்துரையாடி கிராம மட்டத்துடன் கலந்துரையாடுவதற்காகவும் அவர்கள் வருகைதந்திருந்தனர். அவர்கள் வருகைதந்த பின்னர் நானும் இந்த மாவட்டத்தின் இராஜாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொழும்பு தலைமையகத்தினால் தீர்மானிக்கப்பட்டு அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.அந்த அடிப்படையிலேயே அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்தார்கள். இந்த நிலையில் ஒரு சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. வியாழேந்திரன்,சந்திரகுமார் ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்தார். வந்தவர் வியாழேந்திரன், சந்திரகுமாருடன் சந்திப்பினை நடாத்திவிட்டுசென்றார்,வியாழேந்திரன் லொஹான் ரத்வத்தைக்கு செங்கம்பல வரவேற்பளித்தார் போன்ற குற்றச்சாட்டுகளை முகப்புத்தகங்கள் ஊடாகவும் இணையத்தளங்கள் ஊடாகவும் கோவிந்தன் கருணாகரம் அவர்கள் முன்வைத்திருந்தார்.

இந்தவேளையில் நான் ஒரு பகிரங்க சவாலை விடுக்கின்றேன்.லொகான் ரத்வத்தை உட்பட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை நானோ சந்திரகுமாரோ தனிப்பட்ட ரீதியாக அழைத்து கூட்டம் நடாத்தவில்லை. தலைமைப்பீடத்தினால் தீர்மானப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களை நாங்கள் அழைக்கவில்லை, லொஹான் ரத்வத்தைக்கு நான் செங்கம்பல வரவேற்பை வழங்கவில்லை. அவர் என்னுடனோ சந்திரகுமாருடனோ தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடவில்லை.கூட்டம் ஆரம்பித்து இறுதிநேரத்திலேயே நான் அதில் கலந்துகொண்டேன்.

தனிப்பட்ட ரீதியாக நானோ,சந்திரகுமாரோ லொகான் ரத்வத்தையினை மட்டக்களப்புக்கு அழைத்துவந்ததை நிரூபிக்கவேண்டும். செங்கம்பளம் விரித்தார்களா என்பதை நிரூபிக்கவேண்டும்,என்னோடும்,சந்திரகுமாரோடும் தனிப்பட்ட கலந்துரையாடலை மேற்கொண்டார்களா என்பதை நிரூபிக்கவேண்டும். அவ்வாறு நிரூபித்தால் 24மணி நேரத்திற்குள் நான் எனது அரசியல்வாழ்விலிருந்து ஒதுங்குவேன்.அவ்வாறு நிரூபிக்காவிட்டால் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசியல்வாதிகளினால் அரசியலில் இருந்து ஒதுங்க முடியுமா என்று சவால்விடுகின்றேன்.

மட்டக்களப்பு மக்கள் மீது தங்களது வங்குரோத்து அரசியலை செய்வதற்காக,தங்களது கட்சிசார்ந்த அரசியலை முன்னெடுப்பதற்காக பிழையான கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லமுடியாது.

“நீங்கள், உரிமையையும் பெற்றுக் கொடுப்பதில்லை அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுப்பதில்லை. எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசிக்கொண்டு காலத்தைப் முடிக்கிறீர்கள் ” –  தமிழ்க்கட்சிகள் மீது வியாழேந்திரன் பாய்ச்சல் 

“நீங்கள், உரிமையையும் பெற்றுக் கொடுப்பதில்லை அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுப்பதில்லை. எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசிக்கொண்டு காலத்தைப் முடிக்கிறீர்கள் ” என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு- ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் எஸ்.வியாழேந்திரன் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது புதிய வடிவம் வந்துள்ளது. பாராளுமன்றில் எதிர்க்கட்சியில் இருக்கின்ற  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், வியாழேந்திரனைப் பாருங்கள் என்றும் வடக்கிலே அங்கஜனைப் பாருங்கள் என்றும் எங்களைப்பற்றிதான் குறைகூறிக்கொண்டிருக்கின்றனர்.

எனக்கொரு சந்தேகம் அபிவிருத்தியையும் உங்களால் பெற்றுக்கொடுக்க முடியாது. நீங்கள் என்ன சொல்லி தமிழ் மக்களிடம் வாக்குகளைப் பெற்றீர்கள். தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத்தருவோம், உரிமையைப் பெற்றுத்தருவோம் என்று அதைப் பெற்றுக்கொடுங்கள். நாம் அபிவிருத்தியை செய்கிறோம்.

ஆனால் நீங்கள், உரிமையையும் பெற்றுக் கொடுப்பதில்லை அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுப்பதில்லை.! நீங்கள் எதிர்க்கட்சியில்  இருந்துகொண்டு ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசிக்கொண்டு காலத்தைப் முடித்து அரசாங்கம் தரும் வாகன அனுமதிப்பத்திரத்தை, மாத சம்பளத்தை பொலிஸ் பாதுகாப்பையும், அரசாங்கம் தரும் சிற்றூண்டிச் உணவையும் நன்றாகச் சாப்பிட்டு, அரசாங்க விடுதியில் நன்றாக படுத்து நித்திரை கொண்டு பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதற்கு இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கின்ற அரசியல் தலைவர்கள் எம் மக்களுக்குத் தேவை. உங்களால் தமிழ் மக்களுக்குரிய அடிப்படைப் பிரச்சினையை கூட பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் எதற்கு அரசியலில் இருக்கின்றீர்கள். நாங்கள் ஆளும் கட்சியில் இருந்தாலும் எமது இனத்திற்கு எதிரான வேலைகளை ஒரு போதும் செய்ய மாட்டோம்.

மக்களின் எதிர்பார்ப்பை நாடி பிடித்து   நிறைவேற்றுபவன்தான் உண்மையான மக்கள் தலைவனாக இருக்க வேண்டும்.  பத்திரிகைக்கும்  நாடாளுமன்றில் சத்தமிடுவதாலோ பத்திரிகைகளில் அறிக்கை விடுவதாலோ தமிழ் மக்களின் பிரச்சினை தீர்ந்து விடுவதில்லை.

எதிர்க்கட்சியில் இருக்கின்ற இரா.சம்பந்தன் உட்பட அத்தனை  நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் இரு கரம் கூப்பி அழைக்கிறேன் .வாருங்கள் தமிழ் மக்களின் பிரச்சினை சார்பாக எதிர்க்கட்சி ஆளும் கட்சி என்றில்லாமல் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒன்றாகப் பேசுவோம். நாங்கள் உங்களோடு வருகிறோம்.

உங்களுக்கு அது முக்கியமில்லை பிரச்சினையிருந்தால்தான் உங்களுக்கு அரசியல். எங்களுக்கு  எவ்வாறாவது பிரச்சினையைத் தீர்த்துக்கொடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

“நீங்கள், உரிமையையும் பெற்றுக் கொடுப்பதில்லை அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுப்பதில்லை. எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசிக்கொண்டு காலத்தைப் முடிக்கிறீர்கள்

“ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பாதுகாத்த பெருமை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையே சாரும்” – இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் குற்றச்சாட்டு !

“ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பாதுகாத்த பெருமை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையே சாரும்” என என கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய அரசாங்கத்தின் கால் நடை மற்றும் சிறுபயிர் செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கடுக்காமுனை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

“இப்பொழுது சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சில வாதப்பிரதிவாதங்களை , அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நீதி அமைச்சரிடம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டதை கேலிகூத்தாக எடுத்து பேசி வருகின்றமையினை ஊடகங்கள் வாயிலாக எம்மால் அறிய முடிகின்றது.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசலாம், பிரதமரிடம் பேசலாம், நீதி அமைச்சரோடும் பேசவேண்டும் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீதி அமைச்சருக்கும் பங்கு இருக்கின்றது, அவர் நாட்டினுடைய நீதித்துறைக்கு பொறுப்பானவர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் அன்று தொடக்கம் இன்றுவரை குரல் கொடுத்தவனாகவே இருந்து வருகின்றேன், அவர்களது விடுதலைக்காக தொடர்ந்தும் குரல்கொடுப்பேன்.

300க்கும் மேற்பட்ட உயிர்கள் பயங்கரவாத தாக்குதலால் கடந்த ஏப்ரல் 21 இல் வெடித்து சிதறி பலியாகினர். அந்தப் பயங்கரவாதத்தை தடுக்காமல் இருந்த அரசாங்கத்தை, மக்கள் விடுதலை முன்னணியினர் அந்நேரத்தில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த போது ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பாதுகாத்த பெருமை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையே சாரும்.

ஒவ்வொரு முறையும் அரசாங்கத்திற்கு வாக்களிக்கும் பொழுதும், அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிக்கும் பொழுதும், பத்து அல்லது இருபது அரசியல் கைதிகளை விடுதலை செய்தால்தான் வாக்களிப்போம் என்ற நிபந்தனைகளை முன்வைத்து இருந்தால் கடந்த 4, 1/2 வருடங்களில் பல்வேறுபட்ட பிரச்சினைக்கான தீர்வினை கடந்த அரசாங்கத்திடமிருந்து எமது தமிழ் மக்களுக்காக பெற்றுக்கொடுத்திருக்க முடியும்”  எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்”

கூட்டமைப்பினை நம்பி கடந்த காலத்தில் வாக்களித்த மக்களுக்கு உரிமையும் இல்லை, தீர்வும் இல்லை, அபிவிருத்தியும் இல்லை ! – எஸ்.வியாழேந்திரன்

கூட்டமைப்பினை நம்பி கடந்த காலத்தில் வாக்களித்த மக்களுக்கு உரிமையும் இல்லை, தீர்வும் இல்லை, அபிவிருத்தியும் இல்லை. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற நிலை தவிடு பொடியாக்கப்பட்டுள்ளதாக தபால் சேவைகள், தொழில் அபிவிருத்தி, வெகுஜன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

நேற்று மாலை ஜனாதிபதியின் ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய வீதிகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கிராமிய வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வீச்சுக்கல் முனை –சேத்துக்குடா வீதி நேற்று (25.08.2020) மாலை புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.இரண்டு மில்லியன் ரூபா செலவில் இந்த வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அ.அசோக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தபால் சேவைகள், தொழில் அபிவிருத்தி, வெகுஜன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த அரசுக்காலத்தில் எந்த பாரிய அபிவிருத்தியையும் நாங்கள் எதிர்பார்க்க முடியவில்லை. தற்போதைய பிரதமர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பெருந்தெருக்கள், பாலங்கள் போன்ற பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் பின்னர் வந்த ஐக்கிய தேசிய கட்சியினால் எதிர்பார்த்த எந்த வேலைத்திட்டங்களும் நடைபெறவில்லை.

தற்போதுள்ள அரசாங்கம் ஒரு உறுதியான அரசாங்கம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை நெருங்கியிருக்கின்ற ஒரு பலமான அரசாங்கம். இந்த பலம்பொருந்திய அரசாங்கத்தில் இந்த மாகாணத்தில் ஒரு அமைச்சராக நாடுமுழுதும் சேவையாற்றும் வாய்ப்பு இந்த அரசாங்கத்தினால் எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தினை நாங்கள் ஒருபோதும் வீணடித்து விடமுடியாது. இந்த சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்தி எமது மாவட்டத்திற்கு, மாகாணத்திற்கு அரசாங்கத்தினால் எமது மக்களுக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய அதிகபட்ச நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய அதியுட்ச நன்மைகளை நாங்கள் பெற்றுக்கொடுத்தேயாக வேண்டும். அதுதான் மக்களின் அதிகூடிய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இந்த மாகாணத்தில் மக்களின் இருப்பினை பாதுகாப்பதற்காக வாக்களித்த அந்த மக்களை நாங்கள் ஓருபோதும் மறந்துவிடமுடியாது. அந்த மக்களினால் இந்த மாவட்டமும் மாகாணமும் நன்மைபெறயிருக்கின்றது.

தற்போது எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் அரசாங்கம் ஒரு விடயத்தினை சொல்வதற்கு முன்பாகவே ஒரு விடயத்தினை முன்மொழிய முன்பாகவே, ஒரு விடயத்தினை செயற்படுத்துவதற்கு முன்பாகவே எதிர்க்கட்சியினர் பல்வேறுபட்ட கதைகளை திரிவுபடுத்தி மக்கள் மத்தியில் பிழையான கருத்துகளை கொண்டுசேர்ப்பதை பார்க்கமுடிகின்றது. எமது மக்கள் இதுகுறித்து எந்தவிதமான குழப்பமும் அடையத் தேவையில்லை.

இந்த நாட்டில் சிறுபான்மை மக்களை பாதுகாக்ககூடிய, சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, அனுகூலங்களை ஏற்படுத்தக்கூடிய முன்மொழிவுகளை இந்த அரசாங்கம் முன்வைக்கும். அதற்காக இந்த அரசாங்கத்துடன் இணைந்து மக்களின் நன்மைக்காக உழைக்கத் தயாராகயிருக்கின்றோம்.

கடந்த காலத்தில் தற்போதுள்ள எதிர்க்கட்சியுடன் இணைந்துகொண்டு தங்களது அரசியல் நாடகத்தினை வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் அரங்கேற்றிய அதே தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் கட்சிகள் இன்று அதே நாடகத்தினை கையிலெடுத்துள்ளனர். இதனை மக்கள் நன்றாக புரிவார்கள்.

உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை நாங்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தேர்தல் களத்தில் நாங்கள் முன்வைத்த மக்கள் எதிர்பார்ப்பு கள அரசியல் என்ற தொனிப்பொருளுக்கு மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். அந்த அங்கீகாரத்தினை சரியாக நாங்கள் மக்களுக்கு பயன்படுத்தி நாங்கள் சேவை செய்ய வேண்டும்.

தேர்தல் காலங்களில் நாங்கள் கூறியவை அனைத்தும் நடைபெற்றுள்ளது. இனி மாகாண சபை வரவிருக்கின்றது. இலங்கையில் ஒன்பது மாகாண சபை இருக்கின்றது. இதில் எட்டு மாகாண சபைகளை அரசாங்கம் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. சிலவேளைகளில் ஒன்பதையும் கைப்பற்றமுடியும்.

ஒரு காலகட்டத்தில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் என்று கூறிய நிலையின்று தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பினை நம்பி கடந்த காலத்தில் வாக்களித்த மக்களுக்கு உரிமையும் இல்லை, தீர்வும் இல்லை, அபிவிருத்தியும் இல்லை. இனிமேல் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்ற நினைத்தாலும் மக்கள் ஏமாறுவதற்கு தயார் இல்லை.அவர்கள் தயார் இல்லையென்பதை அண்மைய தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மக்களை ஏமாற்றவேண்டும் என்று நினைத்த பலர் அரசியலில் இருந்தே காணாமல் போய் விட்டனர். கூட்டமைப்பில் இருந்து வெளியேறினால் அரசியலே இல்லையென்று சிலர் கூறினர். இன்று அவர்களே இல்லாமல் போய் விட்டனர். நாங்கள் கட்சிமாறினால் காணாமல் போயிவிடுவார்கள் என்று கூறியவர்கள் இன்று அரசியலில் இருந்து காணாமல் போய் விட்டார்கள் என்றார்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ள அமைச்சரான வியாழேந்திரன் முன்னைய 2015 பாராளுமன்றத்தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பாக மடடக்களப்பு மாவட்டத்தில்  போட்டியிட்டு 22,218 வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.