ஒற்றையாட்சி

ஒற்றையாட்சி

நாட்டின் ஒற்றையாட்சிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தும் எதற்கும் ஆதரவு வழங்க முடியாது. – சரத் வீரசேகர

தேசிய ஒற்றுமையை, நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் ஏற்றுக்கொண்ட விடயங்களை செயற்படுத்த வேண்டும் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அலுவலகத்தை ஸ்தாபித்ததன் பின்னர் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் அதனையும் செய்ய வேண்டும். ஆகவே நாட்டின் ஒற்றையாட்சிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தும் எதற்கும் ஆதரவு வழங்க முடியாது. இந்த சட்டமூலத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பேன் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

 

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளது. இந்த ஆணைக்குழு ஊடாக இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்ட முடியும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவ அதிகாரிகள் இன்று தண்டிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு சர்வதேச மட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாராளுமன்றத்தின் ஊடாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான சட்டமூலத்தில் தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பதற்கு உருவாக்கப்பட்ட அரச கொள்கைகளை செயற்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் இந்த அலுவலகத்தின் ஊடாக அதனையும் செயற்படுத்த வேண்டும். 29 ஆயிரம் இராணுவத்தினர் இதற்காகவே உயிர் நீத்தார்கள்.

 

தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் சட்டமூலம் சூழ்ச்சி நிறைந்தது. எதிர்காலத்தில் இராணுவத்தினருக்கு மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தும் ஆகவே இந்த சட்டமூலத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பேன் என்றார்.

 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற தேசிய ஒற்றுமைக்கும்,நல்லிணக்கத்துக்குமான அலுவலகம், தேசிய நீரளவை சட்டமூலம் என்பன மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஒற்றையாட்சிக்குள் தீர்வு வேண்டாம் – எம்.ஏ.சுமந்திரன்

ஒற்றையாட்சி அரச முறைமைக்குள் தீர்வு என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அர்த்தமுள்ள அதிகார பகிர்வையே எதிர்பார்ப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு, அதனை விடுத்து செயற்பட்டால் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறினார் என கருதப்படும் எனவும் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதியுச்ச அதியுச்ச அதிகார பகிர்வு என குறிப்பிட்டுக் கொண்டு ஒற்றையாட்சி முறைமைக்குள் அர்த்தமுள்ள அதிகார பகிர்வு சாத்தியமற்றது எனவும்; அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எங்களை தவிர ஏனைய எல்லா வட-கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சியை ஏற்க தயாராகி விட்டார்கள்.” – கஜேந்திரகுமார் விசனம் !

“வட- கிழக்கு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 18 நாடாளுமன்ற பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியாகிய  நாம் இருவரை தவிர மற்ற எல்லோரும் ஒற்றையாட்சியை ஏற்க தயாராகி விட்டார்கள். என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட செற்பாட்டாளர்களுடன் நேற்று (21.01) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் எமது கட்சி செயற்பாட்டாளர்களும், சிவில் அமைப்புக்களும், சிவில் செயற்பாட்டாளர்களும் சந்தித்து தமிழ் கட்சிகள்  என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் முகவர் அமைப்புக்கள்  சேர்ந்து கலந்துரையாடி தமிழ்  மக்களுடைய  அரசியல் அபிலாசைகளை ஒற்றையாட்சிக்குள் முடக்குகின்ற  சதி முயற்சியை முறியடிக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணியும்  சிவில் சமூகங்களும் இணைந்து முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தி,  அதன் முதல் கட்டமாக எதிர்வரும் 30  ஆம் திகதி யாழில் நடைபெறும் எதிர்ப்பு போராட்டம் முதலாவது நடவடிக்கையாக அமையும். அதன் பின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த விழிப்புணர்வு போராட்டம் நடைபெறும். அதன் பின் ஒவ்வொரு கிராமங்களிலும் வீடுவீடாகச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில்  தேசியத்தை நேர்மையாக நேசிக்கும் அனைத்து தரப்புக்களுடனும் சேர்ந்து இந்த முயற்சியை முன்னெடுக்க ஒன்றினைந்து செயற்பட விரும்புகின்றோம் எனக் கேட்டிருந்தோம். அதே கோரிக்கையை நாம் வவுனியாவிலும் கோருகின்றோம்.

சர்வதேச ரீதியில் இலங்கையில் இருக்க கூடிய அனைத்து மக்கள் கூட்டங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியலமைப்பு நிறைவேறுவது அத்தியாவசியம் என்றும் அப்படி அனைத்து தரப்புக்களும்  ஏற்றுக் கொள்ளும் அரசியலமைப்பு ஒன்று நிறைவேற்றப்பட்டால் தான் விசேடமாக தமிழ் தரப்புக்கு  இனப்பிரச்சனை தீர்க்கப்பட்டதாக கருத்தப்படும்.  அதுவரைக்கும் இனப்பிரச்சனை நீடிக்கின்றது என்ற செய்தியையே வழங்கும் என்பதையும் கூறியுள்ளார்கள்.

கோட்டபாய ராஜபக்ச புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வர எத்தனித்துள்ளார். அவர் இந்த புதிய அரசியலமைப்பை இந்தியாவிற்கு சீனாவை காட்டி சீனாவை நாங்கள் தவிர்க்க விரும்பினால்  தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஒற்றையாட்சிக்குள் முடக்க  நீங்கள் ஒத்துழைக்க  வேண்டும். அதனை நீங்கள் செய்தால் நாம் சீனாவின் விடயத்தில் பரிசீலிக்கலாம் என்ற  ஒரு கருத்தை சொல்ல இருக்கும் பின்னனியில்  இந்தியாவின் கடுமையான அச்சுறுத்தல் காரணமாகவும், கட்டளையும் தான் அவர்களுடைய முகவர் அமைப்புக்கள் இன்று  ஒன்று சேர்ந்து  13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்திய பிரதமரிடடம் இந்திய விரும்பி கேட்டதை தங்களுடைய கோரிக்கையாக முன் வைத்துள்ளார்கள்.

எங்களைப் பொறுத்தவரை ஒற்றையாட்சிக்குள் எந்தவொரு இடத்திலும் தமிழருக்கு தீர்வு வரப்போவதில்லை. மாறாக ஒற்றையாட்சி அரசியலமைப்பை போன ஆட்சிக் காலத்தில்  ஏக்கய ராச்சிய என ஏற்றுக் கொண்டது. ஒற்றையாட்சி என்ற சிங்கள வசனத்தை ஒருமித்த நாடு என தமிழ் மக்களுக்கு பூச்சாண்டி காட்டி ஏக்கய ராச்சிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வைக்கும் சதி ஒன்றை செய்தது.  அதனை நாம் முறியடித்தோம்.

13 வது திருத்தச் சட்டம் அல்லது இன்னொரு வடிவமாக இருக்கலாம் ஒற்றையாட்சியை நிராகரிப்பது தான் எம்மிடம் இருக்கும் ஓரே ஒரே வழி. இலங்கையில் நிறைவேற்றி இருக்கின்ற மூன்று அரசியலமைப்புக்களையும் நாம் நிராகரித்து இருப்பதனால் தான் போர் முடிந்து 13 வருடங்களுக்கு பிறகும் இந்த தீவில் ஒரு இனப்பிரச்சனை இருக்கின்றது என பேசக் கூடியதாக இருக்கின்றது.

அந்த பேச்சுக்கே இடமில்லாமல் செய்யும் அளவுக்கு இந்த இந்திய அடிப்படை அமைப்புக்கள் தமது எஜமான் விரும்பியதற்கு செயற்பட தயாராக இருக்கிறார்க்கிறார்கள். நான்காவது அரசியலமைப்பு வெறுமனே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டும் நிறைவேறுவது ஆபத்தானது. மக்களது சர்வசன வாக்கெடுப்புக்கு விடாது வெறுமனே நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறக் கூடிய ஆபத்தும் இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் இன்றைக்கு இருக்கின்ற வட- கிழக்கு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 18 நாடாளுமன்ற பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியாகிய  நாம் இருவரை தவிர மற்ற எல்லோரும் ஒற்றையாட்சியை ஏற்க தயாராகி விட்டார்கள். அதை முறியடிப்பதற்கும்  மக்கள் விழிப்புணர்வு அடைந்து இந்த மோசனமான துரோகத்திற்கு எதிராக அணி திரள வேண்டும்.
இதற்கு எதிராக வன்னியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றோம். தமிழ் தேசத்தின் நலன் கருதி இந்த தமிழ் தேசத்தை நேசிக்கும் ஒவவொரு தரப்பும் எம்மோடு கைகோர்த்து இந்த விடயத்தில் ஒன்று பட வேண்டும் என உரிமையோடு கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பை தாங்கள் ஏற்றுக் கொண்டு பாராளுமன்றம் செல்கின்றோம் ! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள், இலங்கையின் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்வதாக நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளத் தயாராகி வருகின்றனர்.

இது கட்சியின் கொள்கை முரண்பாட்டினையும் சுயநலச் சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டினார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்கேற்றுள்ளனனர்.

இதில் இருவருக்கும் இடையில் காரசாரமான விவாதம் ஏற்பட்டது.

குறித்த விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , ஒற்றையாட்சியை நிராகரிப்பதாகவும் சமஷ்டி முறை அல்லாத எந்தவொரு விடயத்தினையும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக பரிசீலிக்கத் தயாராக இல்லை என்றும் தெரிவிக்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள், இலங்கையின் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்வதாக நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளத் தயாராகி வருகின்றனர். இது சைக்கிள் கட்சியின் கொள்கை முரண்பாட்டினையும் சுயநலச் சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் தாய்க் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் அரசியல் யாப்பில் சுயாட்சியின் மெய்ப்பொருளை எந்தவொரு அரசியலமைப்பின் (ஒற்றையாட்சி அரசியலமைப்பாயினும் சரி) கீழும் இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் பெற்றுக் கொள்ளும் வகையில் அரசியலமைப்பு இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருவதாகவும் எந்தவொரு இடத்திலும் சமஷ்டி வலியுறுத்தப்பாடாத நிலையில் குறித்த கட்சியின் பெயரிலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தேர்தலை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த தமிழ் தேசியக் மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தற்போதைய ஒற்றையாட்சி அரசியலமைப்பை தாங்கள் ஏற்றுக் கொண்டு, நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் பின்னர், தங்களுடைய அரசியல் எதிர்பார்ப்பை நோக்கி செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.