கடாபி

கடாபி

கடாபியின் மகனின் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை நிராகரித்த தேர்தல் ஆணையம் !

லிபியாவில் அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. ஐ.நா. தலைமையில் பல வருடங்களாக ஜனநாயக ரீதியிலான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், நாட்டின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு, அடுத்த மாதம் 24ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகிறது.
மறைந்த சர்வாதிகாரி கடாபியின் மகன் செயிப் அல் இஸ்லாம் கடாபி இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
தடை செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  செயிப் அல் இஸ்லாம் கடாபிக்கு எதிரான முந்தைய தண்டனைகள் காரணமாக அவர் தகுதியற்றவர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.
2015 ஆம் ஆண்டு தனது தந்தையை பதவி விலகக் கோரிய எதிர்ப்பாளர்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தியதற்காக செயிப் அல் இஸ்லாம் கடாபிக்கு திரிபோலி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.  ஆனால் அந்தத் தீர்ப்பு லிபியாவின் போட்டி அதிகாரிகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. பின்னர் அவர் 2017ல் விடுவிக்கப்பட்டார். எனினும், போர்க் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.