கருப்பு யூலை

கருப்பு யூலை

என் குடும்பத்தின் எதிர்காலத்தையும் எம் இனத்தின் எதிர்காலத்தையும் புரட்டிப் போட்ட நாள்: கருப்பு யூலை!

ரவி என் அண்ணா, ஊரில் அவனை எல்லோருக்கும் அப்படித்தான் தெரியும். தனபாலன் பதிவுப் பெயர். நாங்கள் அனுராதபுரத்தில் தான் பிறந்தோம். அவன் முதற் பிள்ளை பெரிய உயிரைக் காப்பாற்றுவதா? சின்ன உயிரைக் காப்பாற்றுவதா? என்ற போராட்டத்தோடு தான் அண்ணா சத்திரசிகிச்சை மூலம் இவ்வுலகிற்குக் கொண்டு வரப்பட்டான். அதனால் அவனை இந்த உலகிற்குக் கொண்டுவந்த டொக்கடர் தனபாலனின் பெயரே அவனுக்கும் சூட்டப்பட்டது. அவனையும் ஒரு டொக்டர் ஆக்க வேண்டும் என்ற கனவோடு தான் அம்மா அவனை வளர்த்தார். ஏ எல் பயோ சயன்ஸ் படித்தான். யாழ் வட்டு இந்துக் கல்லூரியில் படித்தான். யாழ் நியூ மாஸ்ரருக்கு ரியூசனுக்குப் போய் வந்தான். ஊரில் நல்ல பிள்ளை என்று பெயர். படிப்பிலும் பரவாயில்லை. ஆனால் டொக்டர் கனவை எட்டியிருக்க முடியுமா தெரியவில்லை. பெரும்பாலான நேரம் அவன் அரசியல் கூட்டங்கள் என்று தான் திரிந்தான்.

யாழ் வட்டு கார்த்திகேய வித்தியாலயத்தில் ஒரு சிவராத்திரி விழா என்று தான் நினைக்கிறேன்; அப்போது அ அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர்; திரு திருமதி அ அமிர்தலிங்கம் உரையாற்றுவதற்காக வந்திருந்தனர். அப்போது கிளர்ச்சியூட்டும் கோசங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. மங்கையற்கரசி அமிர்தலிங்கத்தின் உரைகள் பொறி பறக்கும். அந்தக்காலம் அ அமிர்தலிங்கம் தளபதி. கையைக் கீறி இரத்த திலகம் இடுவதுதான் அன்றைய வைரல் ரென்ற். அன்றைய கூட்டத்தில் அண்ணாவும் அ அமிர்தலிங்கத்திற்கு இரத்த திலகம் இட்டான். ஏ எல் முடித்துவிட்டு கொக்குவில் ரெக்கில் படித்தான்.

1983 யூலை 23 இரவு யாழ் திருநல்வேலியில் 13 இராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் ஆங்காங்கு எழுந்தமானமான அசம்பாவிதங்களை ஏற்படுத்தினர். இளைஞர்கள் தாக்கப்பட்டனர்.

அப்போது எனக்கு வயது 12. அண்ணாவுக்கு வயது 19. இராணுவ கெடுபிடி என்றாலும் அவன் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கவில்லை. எப்போதும் ஓடி ஆடித் திரிந்துகொண்டுதான் இருப்பான். ஆனால் மாலை ஆறு மணி ஏழு மணிக்குள் வீட்டிற்கு வரவேண்டும். அப்போதெல்லாம் வேலியில் தடியயை முறித்து கோட்டைக் கறீ, கோட்டுக்குள் பிள்ளைகளை நிற்க வைத்து அடிப்பது நல்ல பெற்றோரின் ஸ்ரைல். பத்தொன்பது வயதிலும் அம்மா கீறிய கோட்டைத் தாண்டாமல் துள்ளித் துள்ளி அடிவாங்குவான்.

நாங்கள் யாழ்ப்பாணத்தில். அப்பா அனுராதபுரத்தில் வேலை. ஆண்மகனாக அப்பாவின் இடத்தில் அண்ணா தான் வெளிநிர்வாகம் முழுவதும். அவனுக்கு நட்புகளுக்கும் குறைவில்லை. அவனும் அவனது தலைமுறையும் தேசியவாத அலையில் அள்ளுண்டனர். அதைவிட அங்கு பெரிய மாற்றீடு இருக்கவில்லை. ஊரோடு ஒத்தோடி இருப்பார்கள். ஆனையிறவை பெரிதாக தாண்டாத சிங்களவர்களையோ வேற்று ஆட்களையோ கண்டிராத ஒரு சமூகம். அப்போது என்ன பெரிய அரசியல் அறிவு இருந்திருக்கும். ஈழநாடு சுதந்திரன் போன்ற பத்திரிகைகளின் கருத்தோடு அள்ளுண்ட காலங்கள் அவை.

1976 இல் வட்டுக்கோட்டையில் தமிழீழப் பிரகடனம் செய்தது அப்போது எங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. 1977 கலவரம் வரை நாங்களும் எல்லோரும் அனுராதபுரத்தில் தான் வாழ்ந்தோம். கலவரம் ஆரம்பிக்கப்பட்டபோது அண்ணா அனுராதபுரம் விவேகானந்தக் கல்லூரியில் ஓல் படித்திருக்க வேண்டும். அன்று பாடசாலைநாள். காடையர்கள் தமிழர்களைத் தாக்க ஆரம்பித்துவிட்டனர். தமிழர்களின் வீடுகள் கடைகள் எரியூட்டப்பட்டது. அப்பாவோ சின்னையாவோ தெரியவில்லை பள்ளிக் கூடம் சென்றிருந்த அண்ணாவை ஓடிப்போய் கூட்டிவந்து பக்கத்தில் இருந்த சிங்கள நண்பரின் வீட்டில் ஓரிரு நாட்கள் ஒளிந்துகொண்டோம். சில மங்களான ஞாபகங்கள் இன்றும் உள்ளது.

அனுராதபுரத்தில் யாழ்ப்பாண சந்திக்கு அருகில் இருந்த எங்கள் வீடும் எரிக்கப்பட்டதாக சொன்னார்கள். ஓரிரு நாட்களில் நாங்கள் பொலிஸ் பாதுகாப்போடு அனுராதபுரம் கச்சேரிக்கு கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டோம். அப்போதும் கடையர்கள் பெற்றோல் குண்டுகளோடு துரத்தினர். அனுராதபுரம் கச்சேரியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு இராணுவ பாதுகாப்போடு வவுனியா வரை கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டோம். மாங்குளத்தில் காடையர்கள் பஸ்ஸை கற்கள் கொண்டு தாக்கினர். அக்காலத்திலும் உண்மைச் சம்பவங்களும் வதந்திகளும் சேர்ந்து மரண பயத்தை ஏற்படுத்தி இருந்தது. அப்போது எனக்கு இதனைப் புரிந்துகொள்ளும் வயதில்லை. ஆனால் அண்ணாவுக்கு இவை தெளிவாக மனதில் பதிந்து இருக்கும். அந்த உணர்வுகளோடு தமிழ் தேசியத்தின் தலைநகரான யாழ் மண்ணில் அவன் இளைஞனான்.

கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல் கொழும்புக்கு மறுநாள் மாலையளவில் கொண்டு செல்லப்பட அங்கு பதட்டம் ஏற்பட்டது. கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் இருந்த தமிழர்கள், அவர்களின் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் தாக்குதலுக்கு இலக்கானது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் ஆட்சியில், இக்கலவரம் கட்சி ஆதரவாளர்களால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக யூலை 25 மாலை வெலிக்கடை சிறையில் அடைத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் 35 பேர் சிறைச்சாலை அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்போடு படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 17 அரசியல் கைதிகள் யூலை 27 இல் படுகொலை செய்யப்பட்டனர். பரவலாக தென்பகுதியில் குறிப்பாக கொழும்பில் நடந்த வன்முறையில் சிங்களக் காடையர்களால் 800 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

அப்போதெல்லாம் 24 மணிநேரச் செய்திச் சேவைகள் கிடையாது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சொல்வதுதான் செய்தி. லங்கா புவத் – ப்பொறு புவத் என்று கிண்டலாக அழைக்கப்பட்டது. அன்றும் அசம்பாவிதங்கள் வதந்திகளாக வந்துகொண்டிருந்தது. நாளாந்த வாழ்க்கை சீர்குலைந்தது. சமைத்து சாப்பிடுவதே கஸ்டமானதாக இருந்த நாட்கள். ஒவ்வொரு வீட்டுலுமே இழவு நிகழ்ந்தது போன்ற உணர்வு. மாலை ஆறு மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் செய்திகளுக்காக எல்லோரும் மயான அமைதியோடு காத்திருந்தோம். வெலிகடைப் படுகொலைகள் பற்றி சொல்லி கொல்லப்பட்டவர்களின் பெயர்களும் சொல்லப்பட்டது. அண்ணா குமுறினான். அருகில் இருந்தவற்றை தூக்கி எறிந்தான். கொல்லப்பட்டவர்களில் அவனுக்கு நெருக்கமான மாஸ்ரரும் ஒருவர். கொல்லப்பட்டவர்களில் சிலர் அவனுக்கு நெருக்கமாக இருந்தனர் அல்லது அவர்கள் தனக்கு நெருக்கமாக இருந்ததாக உணர்ந்து இருக்க வேண்டும்.

அப்பொழுதெல்லாம் நாளாந்தம் செய்தி கேட்பது நாளாந்த வாழ்வின் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை ஒழிப்பு மறைப்பு கூட்டுத்தாபனமானது. அதனால் செய்திகளுக்கு இந்தியாவின் ஆகாசவானியின் செய்திகள், மாநிலச் செய்திகள், பிபிசி இன் தமிழோசை, பிலிப்பைன்ஸில் இருந்து வெரித்தாஸ் வானொலி ஆகியன தமிழ் வீடுகளின் நாளாந்த பெயர்களாக அறியப்பட்டிருந்தது. தமிழ் இயக்கங்கள் கரந்தடிப் படைகள் என வெரித்தாஸ் வானொலியால் என்று தான் நினைக்கிறேன் அழைக்கப்பட்டது.

அவனுடைய போக்குகள் மாற்றம் அடைந்தது. அவன் தன் பொறுப்புகளை உணர்ந்தவன் போல் ஆனான். மேற்கொண்டு தான் படிக்கத் தயாரில்லை என்ற முடிவுக்கு வந்தான். ஊர்விட்டு வேலை விடயமாக வேறோர் ஊரக்குப் போகப் போவதாகக் கூறினான். அவன் பொய் சொல்கிறான் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது சாத்தியமில்லை என்று அவனை நம்ப வைப்பதற்கு எங்களால் முடியவில்லை. நாட்கள் நகர்ந்தது. அவனது நடவடிக்கைகள் முற்றாக மாற்றம் அடைந்தது. ஒரு நாள் இரவு வேலைக்கு போவதாகக் கூறி வெளிக்கிட்டான். ஒரு பாக்கிற்குள் சில உடுப்புகளை எடுத்து வைத்தான். இது எங்களுடைய வீட்டில் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் உள்ள பல வீடுகளில் இதுதான் நடந்தது.

அம்மா கட்டி அணைத்து அழுதா. அவவுடைய கனவுகள் அனைத்தும் அன்று உடைந்தது. அனாலும் அவன் எடுத்த முடிவில் அவன் வெற்றி பெற வேண்டும் என்ற ஆதங்கம் இருந்திருக்க வேண்டும். அம்மா கத்தியை எடுத்து கையை கீறி அவனுக்கு இரத்த திலகம் இட்டா. அவன் எந்த சலனமும் இல்லாமல் இருளோடு கரைந்து, படலைக்கு வெளியே அவனை ஏற்றிச் செல்வதற்காக நின்றவரோடு சைக்கிளில் பயணமானன்.

இவ்வாறு ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் புறப்பட்டனர். புறப்பட்டவர்களில் பலருக்கும் புறப்படுவதற்கான காரணம் பெரும்பாலும் அன்றைய அரசியல் சூழல்தான். சில தனிப்பட்ட காரணங்களும் அவர்களை அதனை நோக்க உந்தியிருக்கும்.

அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டம் எழுச்சிக் கொண்டது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. யூலைப் படுகொலைகள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு பண்பு நிலை மாற்றத்தை தோற்றுவித்தது. இதுவரை சீராக படிமுறை வளர்ச்சி பெற்று வந்த போராட்டம்; தலைமைகளிடம் வீவேகத்தின் அவசியத்தை வலியுறுத்தி இருந்தது. ஆனால் யூலைக் கலவரம் அதனைப் புரட்டிப்போட்டது. விவேகமற்றவர்கள், அவசரக் குடுக்கைகள் தலைமைகளுக்கு முன் தள்ளப்பட்டனர். வெறும் உணர்ச்சிப் பிளம்பில் போராட்டம் வீறுகொண்டு எழுந்தது.

ஆனால் அவர்களுடைய போராட்ட இலக்கையும் வடிவத்தையும் அவர்களோ அவர்களுடைய தலைமைகளோ தீர்மானிக்கவில்லை. மாறாக எதிரியான பேரினவாத அரசிடமும் இந்திய உளவுத்துறையிடமும் அது கையளிக்கப்பட்டுவிட்டது. ‘நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான்’, ‘நாங்கள் ஆயதம் ஏந்த வேண்டும் என்பதையும் எதிரி தான் தீர்மானிக்கிறான்’ என்று பெருமையாக அன்று முழங்கினார்கள். அது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை இன்று உணர முடிகிறது. ஏனெனில் இறுதியில் இவர்களை முள்ளிவாய்காலில் முடிப்பது என்று எதிரியான சிங்கள அரசும் இந்திய உளவுத்துறையும் தான் தீர்மானித்தது. ‘ஒப்ரேசன் பிக்கன்’ என்ற 2006 இல் போடப்பட்ட தீட்டத்திற்கமைய அதன் கால அட்டவணப்படியே தமிழீழ விடுதலைப் போராட்டம் நகர்ந்து 2009 இல் முடிவுக்கு வந்தது.

சகோதரப் படுகொலைகளையும் சில அங்கொன்றும் இங்கொன்றுமான நாளாந்த தாக்குதல்களைத் தவிர எமது விடுதலைப் போராட்டத்தை பேரினவாத அரசும் இந்திய உளவுத்துறையுமே நடத்தியது.

எமது சகோதரர்களும் சகோதரிகளும் விட்டில் பூச்சிகளாக மடிந்து மறைந்தனர். இன்று எமது வரலாறுகளை பேரினவாத அரசும் இந்திய உளவுத்துறை முகவர்களுமே மும்மரமாக எழுதுகின்றனர். யாழ் நூலகத்தை எரிக்க முன்நின்ற காமினி திஸ்ஸநாயக்காவை பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்த எட்வேர்ட் குணவர்த்தன தனது நூலின் மூலம் காப்பாற்றியது போல் இந்திய உளவு முகவர்கள் எமது போராட்டத்திலும் படுகொலைகளிலும் இந்திய உளவுத்துறையின் இரத்தக்கறைகளை கழுவ முயல்கின்றனர். அதற்காகவும் தங்கள் செயல்களை மறைக்கவும் இன்னுயிர் ஈர்ந்த சகபோராளிகள் மீது வீண்பழி சுமத்துகின்றனர் இந்த உளவுத்துறை முகவர்கள்.

இலங்கையில் ஆயத வன்முறையயை ஏற்படுத்துவதில் இந்திய உளவுத்துறையின் பங்கு தீர்மானகரமானது. தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழீழ விடுதலை இயக்கமும் காத்திரமான அரசியல் இல்லாத அமைப்புகள் என்பதால் அவர்களுக்கு ஆயதங்களை இறைத்து அப்பாவி சிங்கள மக்களைப் படுகொலை செய்யவும் அவர்களைத் தூண்டியது. அதனால் இவ்விரு அமைப்புகளுமே இராணுவ கட்டமைப்பில் பலம்பெற்று இறுதியில் விடுதலைப் புலிகள் ஏகபோக தலைமையாகினர்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்த இந்தியாவுக்கு எதிரானவர்களை பலவீனப்படுத்தும் முயற்சியாக சந்ததியார் படுகொலை. பின்னர் உமாமகேஸ்வரன் இலங்கை அரசுடன் நெருக்கமாக அவருடைய படுகொலை, மாலைதீவு தாக்குதல் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை கொண்டு நடத்தியதே இந்திய உளவுத்துறையே. உளவு நிறுவனங்கள் நேரடியாக வெளிப்படையாக தாங்கள் முன்நின்று எதனையும் செயற்படுத்துவதில்லை. ஆனால் அவ்வாறு செயற்படுவதற்கான சூழலை அந்தந்த அமைப்புகளில் உள்ள தங்கள் விசுவாசிகளுடாக அவர்கள் அறியாமலேயே உருவாக்கி விடுவார்கள். இது தான் காகம் இருக்க பனம் பழம் விழுவதென்பது.

ஒரு விடுதலைப் போராட்டத்தின் மத்திய குழுவில் இந்திய உளவுத்துறை அதிகாரியும் இருந்தார் என்றால் அது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தான். இந்திய இராணுவத் தளபதியான சேகர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழு உறுப்பினர். இந்திய உளவுத்துறை இன்னமும் பலரையும் தனது முகவர்களாக வளர்த்துக்கொண்டது. இவ்வாறான முகவர்கள் எல்லா இயக்கங்களிலும் இருந்தனர். இன்று இவ்வாறான முகவர்களைக் கொண்டு இந்திய உளவுத்துறை தனது செயல்களுக்கு வெள்ளையடிக்க முயற்சி செய்கின்றது.

தனபாலன் இயற்பெயர். ஊரில் ரவி. தமிழீழ மக்கள் கழகத்தில் வசந்தன் என அறியப்பட்டவன். கழகத்தின் சமூக விஞ்ஞான கல்லூரியில் கற்றவன். இந்த சமூக விஞ்ஞானக் கல்லூரி இந்திய உளவுத்துறைக்கு பிடித்தமான ஒரு அம்சமாக ஒரு போதும் இருந்ததில்லை. இந்திய உளவுத்துறைக்கு அரசியல் தெரிந்து இந்தியாவை தெரிந்துகொள்பவர்களை விரும்பவில்லை. இந்தியாவுக்கு விசுவாசமான முகவர்களும் தாங்கள் சொல்வதைக் கேட்டு களமிறங்கக் கூடியவர்களுமே தேவைப்பட்டனர். சிந்திக்கக் கூடியவர்கள் அவர்களுக்கு ஒரு போதும் தேவைப்பட்டதில்லை.

தோழர் எஸ் பாலச்சந்திரன் தமிழகத்தில் வசந்தனோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர். அங்கிருந்த இடதுசாரி அமைப்புகளுக்கு வசந்தனூடக உதவிகளைப் பெற்றுக்கொடுத்தவர். இன்றும் அந்த நாட்களை நினைவு கூருகின்றார். அண்ணா வசந்தன் பின்நாட்களில் வவுனியா முள்ளிக்குளம் முகாமில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மூன்று நாட்களாக நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டான். இம்மோதலில் தமிழீழம் கேட்டுப் போராடச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பெரும்பாலும் இம்மோதலில் கொல்லப்பட்ட பலரின் உடல்களை அருகே இருந்த கிறிஸ்தவ பாதிரியாரே அடக்கம் செய்திருந்தார். சில மாதங்களுக்குப் பின் அப்பகுதிக்குச் சென்று எம் தந்தையார் அந்த பாதிரியாரைச் சந்தித்து வந்தார். அம்மா சில ஆண்டுகளாகவே அவன் சிலவேளை எங்காவது தப்பியோடி இருந்து வருவான் என்ற நம்பிக்கையிலேயே இருந்தா. அண்ணாவின் உற்ற நண்பனான பரமானந்தன் தான் எனது மூத்த சகோதரியயை மணம் முடித்தார். அவரின் ஞாபகமாகவே அவர்களுடைய மூத்த மகளுக்கு வசந்தினி என்றும் மகனுக்கு வசந்தன் என்றும் பெயர் சூட்டப்பட்டது.

(வசந்தனோடு போராடச் சென்ற சக போராளியான நேதாஜி – என்றழைக்கப்படும் பிரேம்சங்கரின் காணொலி கீழே கொமன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.)

இவ்வாறாக பல ஆயிரம் போராளிகள் விட்டில் பூச்சிகளாக பேரினவாதத்தினதும் சர்வதிகாரத்தினதும் உளவு நிறுவனங்களினதும் நோக்கங்களுக்காக பலிகொடுக்கப்பட்டனர். வேடர்கள் எழுதுவது வரலாறு அல்ல. வியட்கொங்கின் வரலாற்றை சிஐஏ முகவர்களும் ஹொலிவூட்டும் எழுத முடியாது. அது போல தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வரலாற்றை இந்திய உளவு முகவர்கள் எழுத முடியாது. உண்மையான போராளிகளை வரலாறு பதிவு செய்யும். அல்லாதவர்களை வரலாறு காட்டிக்கொடுத்துவிடும்.