காணாமல் ஆக்கப்பட்டோர்

காணாமல் ஆக்கப்பட்டோர்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா கைது !

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா கைது செய்யப்பட்டார்.

இவர் இன்றைய தினம் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலையினை வலியுறுத்துமாறு கோரி போராட்டம் மேற்கொண்டு வரும் கொட்டகைக்கு சட்டவிரோதமாக மின்சாரத்தினை பெற்றனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“நாம் கடந்த 2210 நாட்களாக குறித்த கொட்டகையிலேயே போராடி வருகின்றோம். அந்த கொட்டகைப் பகுதியில் இருந்த மின்சார தூணில் வீதி மின்விளக்கு ஒன்று பொருத்தப்பட்டிருந்தது.

எமக்கான மின்சாரம் மின்சார சபையால் வழங்கப்பட்டிருந்தது. வடமாகாண சபை செயற்பாட்டில் இருக்கும் போதே வழங்கப்பட்டிருந்தது. அதில் பழுதுகள் ஏற்பட்டபோதும் கூட இலங்கை மின்சார சபையினை சேர்ந்தவர்கள் வருகைதந்து அதனை சீரமைத்தும் தந்திருந்தனர்.

இந்நிலையிலேயே எமது சங்கத்தின் தலைவி தற்போது கைதுசெய்துள்ளமையை ஏற்றுக்கொள்ளமுடியாது. நாம் சட்டவிரோதமாக மின்சாரத்தை பெறவில்லை.

எமது போராட்டத்தினை திசைதிருப்புவதற்காகவே இவ்வாறான சட்டங்கள் பிரயோகிக்கப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காசிப்பிள்ளை ஜெயவனிதா, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் பிரசார துண்டு பிரசுரத்தில் தனது மகள் உள்ளதாக கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றிருக்கும் முறைப்பாடுகள் பற்றிய விசாரணை விரைவில் முடிவுக்கு வரும் – நீதி அமைச்சர் !

“வடமாகாண மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விசேட இணக்கசபை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்துவரும் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நடமாடும் சேவை நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்வினால் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது  கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வட மாகாண மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசாங்கம் முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த வருடம் ஜனவரி  மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு நடமாடும் சேவைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. விசேடமாக  இந்தியாவில் இருந்து இங்குவந்திருக்கும் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் முகமாக ஏற்கனவே விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

நீதி அமைச்சின் செயலாளரின் தலைமையிலான குழுவொன்று அதற்காக நியமிக்கப்பட்டிருக்கின்றன. அந்த குழுவினால் வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் வடமாகாண மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விசேட இணக்கசபை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் சொத்துக்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு இழப்பீட்டுக்கான அலுவலகமும் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக காணாமல் போனவர்கள் தொடர்பான காரியாலயமும் அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் காணாமல் போனவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றிருக்கும் முறைப்பாடுகள் சம்பந்தமான விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதுடன் அந்த காரியாலயத்துக்காக நியமிக்கப்பட்டிருக்கும் புதிய அதிகாரிகள் அதுதொடர்பாக ஆரம்பித்திருக்கும் விசேட வேலைத்திட்டம் காரணமாக எதிர்வரும் சில மாதங்களுக்குள் குறித்த விசாரணைகள் முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும்.

மேலும் ஒட்டுமொத்த நாடும் எதிர்கொண்டுள்ள போதைப்பொருள் தொடர்பான பிரச்சினை வடமாகாணத்திலும்  பரவலாகப் பரவி வருவதால், இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அதை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுப்பது பாதுகாப்புப் படையினர் உட்பட அனைவரின் பொறுப்பாகும். அதனாத் இதுதொடர்பாகவும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

இதன்போது யுத்தம் மற்றும் வேறு விபத்துக்களால் பாதிக்கப்பட்ட சிலருக்கு அமைச்சரின் தலைமையில் நட்டஈடும் வழங்கி வைக்கப்பட்டது.

ஊழல்வாதிகளுக்கு எதிராக ஆகஸ்ட் 9ல் போராட போகிறாராம் பொன்சேகா !

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற அவசரகால சட்டம் நீடிப்பு தொடர்பான விவாவத்தில் உரையாற்றியபோதே சரத் பொன்சேகா இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

போராட்டக்காரர்கள் நாட்டுக்காக போராடினார்கள். அவர்கள் எங்களின் உறவினர்கள். அவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம். அதேநேரம் ஊழல் அரசியல்வாதிகளை பாதுகாக்க வேண்டாம் என்றும் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார். இவ்வாறான தாக்குதல்கள் மூலம் இலங்கை இராணுவத்துக்கு கிடைத்த பெருமையைக் குலைக்க வேண்டாம் என்றும் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார்.

இதேவேளை போராட்டவாதிகள் மத்தியில் பல்வேறு கொள்கைகள் இருக்கின்றபோதும், ஒரே கொள்கைக்காக ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தநிலையில் ஓருவரை இருவரை அகற்றியதன் மூலம் தூய்மையான அரசியலை ஏற்படுத்தமுடியாது. எனவே எதிர்வரும் 9ஆம் திகதியன்று கொழும்பில் ஒன்றுகூடி ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

இந்த நிலையில் போராட்டவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டார்.

……..

இன்று இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஒவ்வொரு தென்னிலங்கை தலைவர்களுமே கூட்டாக பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் தான்.  இன்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசை ஊழல்வாதிகள் என  கடுமையாக சாடும் இதே பொன்சேகா கடந்தகாலங்களில் ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டுச் சேர்ந்தே ராஜபக்ஷக்களுக்கு எதிரான தேர்தலை எதிர்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று தனக்கான ஆதரவுத் தளத்தை உறுதி செய்ய இன்று ஊழல் என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளார்.

பொன்சேகாவின் இந்த பாராளுமன்ற உரை கூட தனித்த ஒரு இனத்தை மட்டுமே மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி நேரத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்கள் அனைத்திலும் இவருக்கும் பங்கு உண்டு.இறுதி போர்க்குற்றங்கள் தொடர்பிலும் – காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்களிலும் வாய் மூடிக்கொண்டிருக்கும் இதே பொன்சேகா இன்று மக்களின் உணர்வு – மனிதாபிமானம் போன்றன பற்றியெல்லாம் பேசுவது வேடிக்கையானது.

இன்று நல்லவர் வேடம் போட்டுக்கொண்டு தனது அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளார் பொன்சேகா. இன்று தென்னிலங்கை சமூகத்தின் கனிசமான இளைஞர்களும் போர் வெற்றியை கோட்டாவுக்கு கொடுக்க கூடாது என்பதற்காக பொன்சேகாவுக்கு கொடுக்கிறார்கள். கோ கோம் கோட்டா போராட்ட களங்களிலும் இதனை அவதானிக்க முடிந்தது.

ஆக மொத்தத்தில் ஒரு விட இன்றைய கால போராட்டங்களில் தெளிவாக தெரிகிறது ” இந்த இலங்கை மீண்டும் இனவாத சாக்கடைக்குள் மூழ்கி மூழ்கியே இருக்க போகிறதே தவிர மீட்சி அடைய வழியே இல்லை”

சுமந்திரன் முன்னிலையில் 4000 சிங்கள குடியேற்றங்களுக்கு அனுமதி – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் குற்றச்சாட்டு !

கதிர்காமர், ஒரு அமைச்சராக, தமிழரின் சுதந்திரப் போராட்டத்தை சட்டவிரோதமாக்க உலகம் முழுவதும் பயணம் செய்தார். இப்போது கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளராக சுமந்திரன், கதிர்காமர் போல உலகம் முழுவதும் சுற்றி வருகிறார் என வவுனியாவில் கடந்த 1731 நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். ஊடக சந்திப்பில் பேசிய அவர்கள்,

இன்று தமிழர்களுக்கு ஆபத்தான நாள். ஏனென்றால் சுமந்திரன் அமெரிக்காவில் இருக்கிறார்.
அமெரிக்காவிலிருந்து திரு.சுமந்திரன், தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தை நிறுத்த முடிந்தால் , 95% க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களால் கூட்டத்தை நடத்துவதற்கான உரிமைக்கு போராட முடியாதெனின், தமிழர்களின் உரிமைக்காக இந்தக் கட்சி எவ்வாறு போராட முடியும் என்பதை இது எடுத்து
காட்டுகிறது.

ஜி.எல்.பீரிஸ் மற்றும் ராஜபக்சக்களைச் சந்தித்த பின்னர், சுமந்திரன் மூலம் இலங்கையின் செய்தியை வெளிப்படுத்தவே இந்த அமெரிக்கச் சந்திப்பு என்பதை தமிழர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். சுமந்திரனை பதவி நீக்கம் செய்யுமாறு தமிழ் அரசு கட்சியை வலியுறுத்துகிறோம். இன்று நல்ல நேரம். அவரை நீக்கினாலும் சட்டப்படி கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

கதிர்காமர், ஒரு அமைச்சராக, தமிழரின் சுதந்திரப் போராட்டத்தை சட்டவிரோதமாக்க உலகம் முழுவதும் பயணம் செய்தார். இப்போது கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளராக சுமந்திரன், கதிர்காமர் போல உலகம் முழுவதும் சுற்றி வருகிறார்.

கதிர்காமர் உயிருடன் இருந்திருந்தால் சுமந்திரன் என்ன செய்கிறாரோ அதையே அவர் செய்வார், அதாவது ஐசிசி வழக்கின் பொறியை அழிப்பார். தந்தை செல்வாவின் கட்சியில் இருந்து சுமந்திரனை நீக்க இன்று நல்ல நாள். அப்படிச் செய்தால் தந்தை செல்வா சொர்க்கத்திலிருந்து உங்களைப் பார்த்து சிரிப்பார் என்று உறுதியளிக்கிறோம்.

தயவு செய்து சம்பந்தன் சொல்வதைக் கேட்காதீர்கள், சிறிதரனின் கூற்றுப்படி, சம்பந்தனுக்கு லேசானது முதல் மிதமான டிமென்ஷியா உள்ளது, அவருக்கு கொழும்பு அரசாங்க கார் மற்றும் பங்களா தேவை. சம்பந்தனை ஓய்வு பெறச் சொல்லவும் இன்று நல்ல நாள். அவரது தலைமை தமிழர்களுக்கு தேவையில்லை. அப்படி செய்யாவிட்டால் தந்தை செல்வாவுக்கு உங்கள் மேல் கோபம் வரும். சுமந்திரன் தனது கொள்கையை தந்தை செல்வாவுக்கு எதிராகவே அனைத்தையும் செய்தார்.

சுமந்திரன் சிங்கள குடியேற்றத்தை ஊக்குவிக்கிறார். சுமந்திரன் , செல்வம் அடைக்கலநாதன், சத்தியலிங்கம் முன்னிலையில் நெடுங்கேணியில் 4000 சிங்களவர்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டமைக்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. பௌத்தத்திற்கு முதன்மையான மதம் கொடுத்தார். வடகிழக்கு இணைப்புக்கு சதி செய்துள்ளார். ஏக்கிய ராஜ்ஜியவுக்கு சரி என்கிறார். இது ஒற்றையாட்சி, தமிழர்களின் சமஷ்டி எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது, அது எங்குள்ளது என்பது அவருக்கும் தெரியாது. அரியநேந்திரன், நேற்று சுமந்திரன் மீது குற்றம் சாட்டுகிறார். முஸ்லிம்களை ஆட்சி செய்ய அனுமதித்ததன் மூலம் தமிழர்கள் மட்டக்களப்பில் ஓரிரு எம்பி ஆசனங்களை இழந்தனர்.

பல லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் தங்கள் கொடூரமான கதையை ஐசிசியின் வழக்கறிஞருக்கு அனுப்பி பல ஆபத்துக்களை எடுத்தனர். இப்போது சுமந்திரன் இம் முயற்சியை அழிக்க நினைக்கிறார். சுமந்திரனின் சதி என்னவென்றால் ஐசிசியின் வழக்குரைஞர்களுக்கு அதிகாரம் இல்லை என்பது அவரது வாதம். ஐசிசி வழக்கை எடுத்தால் கொழும்பில் சிங்களவர்கள் மத்தியில் வாழும் சுமந்திரன் போன்றோருக்கு பாதுகாப்பு கிடைக்காது. கொழும்பில் உள்ள சிங்களக் கும்பலால் அச்சுறுத்தப்படுவார்கள். ஆம், அது அவரின் நியாயமான கருத்து . எனவே தமிழ் அரசியலை விட்டு வெளியேறி கொழும்பில் தங்குவது அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.

சிங்களவர்கள் விரும்பாத எந்தவொரு அரசியல் தீர்வும் சிங்களவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம் என்று அவர் எப்போதும் வாதிடுகிறார். சுமந்திரனை தமிழ் அரசு கட்சி நீக்க வேண்டும் என்பதே சரியானது . அவர் தமிழ் அரசு கட்சியை விட்டு வெளியேறியவுடன் கொழும்பில் பாதுகாப்பாக இருப்பார் என்றனர்