கூலிப்படை

கூலிப்படை

இளைஞர்களின் கூலிப்படைக் கலாச்சாரம் முடிவுக்கு வரவேண்டும் – லிற்றில் எய்ட் ஒளிவிழாவில் வண பிதா எஸ் கே டானியல் சிறப்புரை

தமிழ் இளைஞர்களின் கூலிப்படைக் கலாச்சாரம் முடிவுக்கு வரவேண்டும் என லிற்றில் எய்ட் அமைப்பில் நத்தார் தினத்தையொட்டி நடந்த ஒளிவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வண பிதா எஸ் கே டானியல் தெரிவித்தார். இன்றைய இளைஞர்கள் பணத்துக்கு அடிமையாகி கூலி அடிமைகளாக மாறும் கலாச்சாரம் முடிவுக்கு வரவேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்த வண பிதா டானியல் எல்லா சமயங்களும் அன்பையே போதிக்கின்றன, யேசுபிரான் அன்பின் அவதாரமாகவே பிறந்து இந்த உலகத்தை காக்கின்றார் என்றும் அன்பையும் காருண்யத்தையும் உடையவர்கள் யேசுவின் சகோதரர்கள் ஆவீர்கள் என்றும் தெரிவித்தார்.

லிற்றில் எய்ட் மாணவிகளாலும் மாணவர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். லண்டனில் இருந்து தாயகம் செய்னிறருந்த லிற்றில் எய்ட் அமைப்பின் உறுப்பினர் டொக்டர் பொன் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்து மாணவ மாணவியருக்கு பரிஸில்களை வழங்கினார்.

மேலும் லிற்றில் எய்ட் கிளிநொச்சி உறுப்பினர் குகனும் லிற்றில் எய்ட் ஆசிரியை அனுஷியாவும் மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கினர். லிற்றில் எய்ட் இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி, கணணி தொழில்நுட்ப ஆசிரியர்கள் பவதாரனி, கோபி ஆகியோர் நிகழ்வை மேற்பார்வை செய்து மாணவ மாணவிகளுக்கு அணுசரனையாகச் செயற்பட்டனர்.

மாணவிகளின் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பமான நிகழ்வில் செல்வி அ அன்பரசி வருகைதந்தோரை வரவேற்றுக்கொள்ள வண பிதா போல் அனக்கிளிற் ஆசியுரை வழங்கினார். மாணவன் ச தர்சன் தலைமையுரை நிகழ்த்தி விழாவை ஆரம்பித்து வைக்க மாணவர்கள் கி ஐதுஷிஹன், அ கடல்வேந்தன் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வு முற்றிலும் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களினாலேயே நிகழ்த்தப்பட்டமையும் இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் தொழில்நுட்பக் கல்வி விருத்தியுடன் மட்டும் நின்று விடாமல் அவர்களின் ஆளுமை விருத்தியையும் மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளிலும் லிற்றில் எய்ட் கடந்த சில ஆண்டுகளாகச் செயற்பட்டு வருகின்றது. காலம்சென்ற வயித்தீஸ்வரன் சிவஜோதி லிற்றில் எய்ட் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதல் கிளிநொச்சியின் சமூக மையத்தளமாக லிற்றில் எய்ட் வளர்க்கப்பட வேண்டும் என்ற கனவுக்கு அவர் உரமளித்திருந்தார்.

மாணவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய வண பிதா போல் அனக்கிளிற் நாங்கள் அனைவரும் அன்பினால் இணைக்கப்பட்டு செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். கிளிநொச்சியில் லிற்றில் எய்ட் இன் பங்களிப்பையும் விதந்துரைத்தார்.

இளைஞர்களின் வன்முறைக்கு எதிராக காட்டமாக தனது கருத்துக்களை முன்வைத்த வண பிதா டானியல் அண்மையில் கிளிநொச்சி சாந்தபுரத்தில் வாள்வெட்டுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலையைச் சுட்டிக்காட்டி இவ்வாறான வழிகளில் இளைஞர்கள் செல்வதை தடுப்பதற்கு அவர்களுக்கு வழிகாட்டுபவர்கள் சரியானவர்களாக நடக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். வ சிவஜோதியின் வழிகாட்டலில் வளர்ந்த இந்த மாணவர்கள் அப்படிச் செல்லமாட்டார்கள் என்றும் அவ்வாறு சென்றால் அது சிவஜோதியின் கனவுகளை மிதிக்கின்ற அவருடைய ஆத்மாவை அவமதிக்கின்ற செயல் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த இளைஞர்களை வழிப்படுத்துவதில் வழிநடத்துவதில் லிற்றில் எய்ட் இன் பங்களிப்பு மிகக் காத்திரமானது எனத் தெரிவித்த வண பிதா டானியல், இவர்களின் இந்த சேவை இந்தப் பகுதிக்கு மிக அவசியமானது என்பதை வலியுறுத்தினார்.

நிகழ்வின் இறுதியில் லிற்றில் எய்ட் இணைப்பாளர் மற்றும் ஆசிரியர்களோடு உரையாடிய லண்டனில் இருந்து வந்திருந்த லிற்றில் எய்ட் உறுப்பினர் டொக்டர் பொன் சிவகுமார் மாணவர்களின் திறமைகளைப் பாராட்டியும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டியும் கருத்துக்களைத் தெரிவித்து இருந்தார்.

கடந்த 12 ஆண்டுகளாக தனது சேவைகளை கிளிநொச்சி மண்ணில் வழங்கி வரும் லிற்றில் எய்ட் கணணிக் கற்கை நெறிகளோடு சுயதொழில் வேலை வாய்ப்பிற்கான தையல் மற்றும் வடிவமைப்பு பயிற்சிகளை வழங்கி வருகின்றது. ஆங்கில மொழிக் கல்வி லிற்றில் எய்ட் இல் வழங்கப்படுவதுடன் கிளி விவேகானத்தா பாடசாலை மாணவர்களுக்கும் ஆங்கில மொழி வகுப்புகளை நடத்துகின்றனர். மேலும் கல்வியூட்டலுக்கு அப்பால் மாணவர்களின் ஏனைய துறைகளை வளர்ப்பதற்காக விளையாட்டு – செஸ் கிளப் நடத்தப்படுகின்றது. லண்டனில் இருந்து சேனன் இதனை நடத்துகின்றார். மாணவர்களின் ஆளுமை மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பதற்கான சிரமதானம், கலைநிகழ்வுகள், விழ்ப்புணர்வு நிகழ்வுகள் என்பனவற்றையும் மாணவர்கள் தம் பொறுப்பில் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.