கோவிந்தன் கருணாகரம்

கோவிந்தன் கருணாகரம்

“என் தொடர்பான விமர்சனத்தை உறுதிப்படுத்தினால் 24மணி நேரத்திற்குள் நான் எனது அரசியல்வாழ்விலிருந்து ஒதுங்குவேன்.” – எஸ்.வியாழேந்திரன் காட்டம் !

“லொஹான் ரத்வத்தையினை செங்கம்பள விரிப்புடன் நான் வரவேற்றதை உறுதிப்படுத்தினால் 24மணி நேரத்திற்குள் நான் எனது அரசியல்வாழ்விலிருந்து ஒதுங்குவேன்.” என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை இன்று (திங்கட்கிழமை) காலை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நடாத்தினார்.

“எமது தமிழ் அரசியற் கைதிகளை அச்சுறுத்தி, அவமானப்படுத்திய லொஹான் ரத்வத்தயின் பாதணியை நீங்கள் நக்குவதற்காகவா அவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வந்தீர்கள் என்ற கேள்வியையே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கேட்கின்றார்கள்.” என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவி்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே  இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பினை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நடாத்தியிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும்  கருத்து தெரிவித்த அவர்,

சமூக,சில ஊடகத்தளங்களில் வெளியான செய்திகளை பார்த்து நாடாளுமன்ற  உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் சில கருத்துகளை கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கவேண்டிய அவசியம் இருக்கின்றது. முகப்புத்தகத்திலும் இணையத்திலும் வந்த செய்திகளைப்பார்த்து ஊடகசந்திப்பினை செய்யாமல் என்னிடம் கேட்டிருந்தால் நான் விளக்கமளித்திருப்பேன்.

கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கபில அத்துக்கொரல, இராஜாங்க அமைச்சர் லொகாத் ரத்வத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதிலக அவர்களும் மட்டக்களப்பு பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு வருகைதந்திருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும் 30இலட்சம் ரூபா நிதியொதுக்கப்படுகின்றது. வரவிருக்கின்ற வரவு செலவுத்திட்ட விடயத்தினை கட்சிசார்ந்தவர்களுடனும் கலந்துரையாடி கிராம மட்டத்துடன் கலந்துரையாடுவதற்காகவும் அவர்கள் வருகைதந்திருந்தனர். அவர்கள் வருகைதந்த பின்னர் நானும் இந்த மாவட்டத்தின் இராஜாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொழும்பு தலைமையகத்தினால் தீர்மானிக்கப்பட்டு அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.அந்த அடிப்படையிலேயே அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்தார்கள். இந்த நிலையில் ஒரு சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. வியாழேந்திரன்,சந்திரகுமார் ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்தார். வந்தவர் வியாழேந்திரன், சந்திரகுமாருடன் சந்திப்பினை நடாத்திவிட்டுசென்றார்,வியாழேந்திரன் லொஹான் ரத்வத்தைக்கு செங்கம்பல வரவேற்பளித்தார் போன்ற குற்றச்சாட்டுகளை முகப்புத்தகங்கள் ஊடாகவும் இணையத்தளங்கள் ஊடாகவும் கோவிந்தன் கருணாகரம் அவர்கள் முன்வைத்திருந்தார்.

இந்தவேளையில் நான் ஒரு பகிரங்க சவாலை விடுக்கின்றேன்.லொகான் ரத்வத்தை உட்பட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை நானோ சந்திரகுமாரோ தனிப்பட்ட ரீதியாக அழைத்து கூட்டம் நடாத்தவில்லை. தலைமைப்பீடத்தினால் தீர்மானப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களை நாங்கள் அழைக்கவில்லை, லொஹான் ரத்வத்தைக்கு நான் செங்கம்பல வரவேற்பை வழங்கவில்லை. அவர் என்னுடனோ சந்திரகுமாருடனோ தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடவில்லை.கூட்டம் ஆரம்பித்து இறுதிநேரத்திலேயே நான் அதில் கலந்துகொண்டேன்.

தனிப்பட்ட ரீதியாக நானோ,சந்திரகுமாரோ லொகான் ரத்வத்தையினை மட்டக்களப்புக்கு அழைத்துவந்ததை நிரூபிக்கவேண்டும். செங்கம்பளம் விரித்தார்களா என்பதை நிரூபிக்கவேண்டும்,என்னோடும்,சந்திரகுமாரோடும் தனிப்பட்ட கலந்துரையாடலை மேற்கொண்டார்களா என்பதை நிரூபிக்கவேண்டும். அவ்வாறு நிரூபித்தால் 24மணி நேரத்திற்குள் நான் எனது அரசியல்வாழ்விலிருந்து ஒதுங்குவேன்.அவ்வாறு நிரூபிக்காவிட்டால் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசியல்வாதிகளினால் அரசியலில் இருந்து ஒதுங்க முடியுமா என்று சவால்விடுகின்றேன்.

மட்டக்களப்பு மக்கள் மீது தங்களது வங்குரோத்து அரசியலை செய்வதற்காக,தங்களது கட்சிசார்ந்த அரசியலை முன்னெடுப்பதற்காக பிழையான கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லமுடியாது.

“பதவி நியமனங்கள் வழங்கப்படும் போது தகுதிக்கும் திறமைக்கும் முன்னுரிமை அளியுங்கள். உறவுக்கும் இனத்துக்கும் முன்னுரிமையளிக்காதீர்கள்.” – கோவிந்தன் கருணாகரம்

“பதவி நியமனங்கள் வழங்கப்படும் போது தகுதிக்கும் திறமைக்கும் முன்னுரிமை அளியுங்கள். உறவுக்கும் இனத்துக்கும் முன்னுரிமையளிக்காதீர்கள்.” என  பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரித்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்தக் கேள்விகளை அவர் எழுப்பினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நமது நாடு ஒரு சுந்தரத் தீவு. நமது நாடு இந்து சமமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முத்து. நமது நாடு உலகுக்கு ஆன்மீக ஒளியைப் பரப்பிய நான்கு மதங்களும் தளைத் தோங்கும் நாடு. நமது நாடு மூப்பு, பிணி, சாக்காடு கண்டு தனது இல்லற வாழ்வில் அழகிய இளம் மனைவியையும் துறந்து தனக்கு ராஜபோகம் தரக்கூடிய அரச சுகபோகங்கள் அனைத்தையும் துறந்து உலகுக்கு ஞான ஒளியினை தன் பரி நிர்வாணம் மூலம் ஏற்படுத்திய கௌதம புத்தரின் ஆன்மீக ஒளியின் பெருமையினை பின்பற்றும் நாடும் கூட.

மூப்பு, பிணி, சாக்காடு கண்டு முத்தி கண்ட கௌதம புத்தருக்கு எதிரி என்று எவருமில்லை. இருப்பவரும் வாழ்பவரும் மனுக்குலத்தவரே. இந்த மண்ணில் வாழ்வது இன, மத, மொழி பேதங்களற்ற ஒரே மனுக்குலமே என்று போதி மர நிழலில் இருந்து பெற்ற ஞானம் மூலம் அறியத் தந்த கௌதம புத்தரை விசுவாசிக்கும் நாட்டில், அந்த விசுவாசம் உண்மையாக மாறி மாறி நாட்டை ஆட்சி செய்த அரசுத் தலைவர்களுக்கு உண்மையாக இருக்குமானால், இந்த நாட்டில் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விவாதம் ஒன்று ஏன் தேவை என்பதுதான் இன்று என் முன் எழுந்துள்ள பிரதான கேள்வியாகும்.

நம் அரசின் தலைவர்கள் தாம் உதட்டளவில் பேசும் பௌத்த தர்மம், தேசாபிமானம் என்பன தம் உள்ளத்திலிருந்து வெளிவராததன் காரணமாகவே இந்த நாட்டின் உயரிய சபையில் இன்று இந்த விவாதம் நடைபெறுகிறது. இதையிட்டு கௌதம புத்தரின் போதனைகளை மதிக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் வெட்கமடைவதா, தேவையடைவதா, துக்கமடைவதா, துயரமடைவதா இல்லை கௌதம புத்தனைப் போல் என் மனைவி பிள்ளைகளை விட்டுத் துறவறம் செல்வதா என்று பல்வேறு சிந்தனைகள் என் மனதைக் குழப்புகின்றது. வேதனைப்படுத்துகின்றது.

ஆட்சி மாறும் போது அமைச்சர்கள் மாற்றம் பெறுவார்கள், அமைச்சின் செயலாளர்கள் மாற்றம் பெறுவார்கள், அரச திணைக்கள, கூட்டுத்தாபன நியதிச் சபைகள் உட்பட அரச இயந்திரம் முற்றிலும் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளருக்குச் சாதகமாக மாறும் கடந்த அரசாங்க காலத்தில் உயர் பதவி பெற்றவர்கள் ஏன் அகில இலங்கைச் சேவை ஆளணியினர் கூட பொலிஸ் சேவை இப்படி பல பதவி நிலையில் இருப்பவர்கள் பந்தாடப்படுவார்கள்.

இது எமது நாட்டின் ஆட்சி மாற்றங்கள் நடைபெறும் பொழுது காணும் சாதாரண காட்சிகள். ஓவ்வொரு ஆட்சியாளரும் தமது பக்க நியாயத்தை தாம் சார்ந்த அலுவலர்கள் சார்பில் நியாயப்படுத்துவார்கள். இன்று எமது கௌரவ நீதி அமைச்சர் அலி சப்றி கூட பிரதம நீதியரசர் பதவியிலிருந்து சிரானி பண்டாரநாயக்கா அவர்கள் நீக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது அல்ல எனவும், பிரதம நீதியரசர் மொஹான் நீதியரசர் அந்தப்பதவியிலிருந்து நீக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது என்றும் ஒரு சட்டத்தரணிக்கே உரிய வாதத்திறனோடு நியாயப்படுத்துகிறார்.

இவை ஆட்சி மாற்றங்கள் நடைபெற்ற போது பெரும்பான்மை இன மக்களுக்கிடையே, பௌத்த சிங்க மக்களுக்கிடையே ஏற்படும் அரசியல் பழிவாங்கல்களினதும் அவற்றுக்கான நிவாரணம் வழங்குவது என்பதும் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனும் வகையில் ஓரிரு உதாரணங்களாகும்.

தமது இனத்துக்குள்ளே, தமது மதத்துக்குள்ளே, மாறி மாறி ஆட்சியமைக்கும் அரசியல் தலைவர்களால் அரசியல் பழிவாங்களல்கள் ஏற்படுவதென்றால், அர்த்த புஸ்டியுள்ள அதிகாரப்பகிர்வுக்காகவும் புறக்கணிப்புக்கு எதிராகவும் சமத்துவத்துக்காகவும் போராடும் எமது மக்கள் எத்துணை பழிவாங்கப்பட்டிருப்பார்கள்.  இத்தகைய பழிவாங்கல்களுக்காக நியாயம் கேட்க முடியாத நாதியற்ற சமுதாயமாக எமது மக்கள் எவ்வளவு காலம் வாழ்ந்திருப்பார்கள். சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து தொடர்ச்சியாக தேசியத்துக்கு உழைத்த எம் இனத் தலைவர்கள் கூட இன்று உரிய தேசிய மரியாதை இன்றி புறக்கணிக்கப்படுகின்றார்கள்.
ஆனால், எம் இனத்தின் பெயரில் அரசிற்கு ஆதரவு வழங்கும் ஒரு சில அரசியல் வாதிகளுக்கு எலும்புத் துண்டுகளுக்கும் குறைவான மரியாதையை மக்கள் வழங்குகின்றார்கள் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆட்சியாளர்களுக்குச் சார்பாக அரச சட்டங்கள் வளைந்து கொடுக்கின்றன. கிருசாந்தி குமாரசாமி கொலை வழக்கில் நீதி மன்றத்தின் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்ட மரண தண்டனைக் கைதி ஒரு பெரும்பான்மை இன இராணுவச் சிற்பாய் என்பதனால் அவர் அரசின் பொது மன்னிப்புக்கு ஆளாகின்றார்.
இப்படி எத்தனையோ இராணுவத்தினர் நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனைத் தீர்ப்பிலிருந்து பொது மன்னிப்பு பெற்றுள்ளனர். ஆனால், தாயை இழந்து தனியாக உறவினர் தயவில் வாழும் தன் மகளின் வாழ்வை காப்பாற்றுவதற்காக ஆனந்த சுதாகரனுக்கு பொது மன்னிப்பு அளியுங்கள் என்று முழந்தாளில் நிற்காத குறையாக அகிலமே வண்டியும் கூட ஆட்சியாளர்களின் அஹிம்சைக் கண் திறக்கவில்லை.

தென்னாபிரிக்காவின் தேச பிதாவான நெல்சன் மண்டேலா அவர்களை ஏகாதிப்பத்திய அரசு 26 வருடங்கள் சிறையில் வைத்து 26 வது வருடத்தில் விடுதலை செய்தது. இங்கு 26 வருடங்களுக்கு மேலாக விசாரணைகளின்றி வழக்குத் தாக்கலின்றி வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் எத்தனை அரசியல் கைதிகள் சிறையில் வாடுகின்றனர்.

தமது வாழ்வின் இளமையைத் தொலைத்துள்ளனர். இவர்கள் செய்த குற்றம் என்ன. தன் இனத்தை தன் மொழியை தன் மண்ணை நேசித்ததா, இது போன்ற ஒரு அரசியல் பழிவாங்கல் உலகின் இராணுவ ஆட்சி நடக்கும் நாட்டில் கூட நடந்ததாக, நடப்பதாக அண்மைய உலக வரலாறுகள் எதுவும் பதிவுசெய்யவில்லை.
ஆனால் உலகுக்கு ஜனநாயகத்தைப் போதித்த பாராளுமன்ற சம்பிரதாயங்களின் தாய் என போற்றப்படும், பிரித்தானியாவுக்கு முன்னரேயே சர்வஜன வாக்குரிமையை வழங்கியதாக பெருமை கொண்ட ஆசியப்பிராந்தியத்தில் பாராளுமன்றப் பிரதி நிதித்துவ ஜனநாயகத்தைப் பேணும் ஒரு முக்கிய நாடான எமது நாட்டில் இத்தகைய பழிவாங்கல்கள் என்று ஓயும். இவை ஓயுமா, அல்லது அடுத்த தலைமுறைக்கும் இது நகர்த்தப்படுமா?

அரச உயர் பதவி நியமனங்களில் தமிழர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள். அண்மைய இலங்கை நிருவாக சேவைப் பரிட்சைகளின் முடிவு இதற்குத் தகுந்த சான்றாகும். முட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் கடந்த முறை 69 பேர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அதில் ஒரு பரீட்சாத்தி கூட தமிழ் பேசுபவர் இல்லை என்பதே ஒரு உதாரணமாகும். ஒரு பழிவாங்கலுமாகும்.

அந்தப்பரீட்சை முடிவுகளின்படி சித்தியடைந்த அனைவருமே பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாவார்களா என்பதைக் கேட்க விரும்புகிறேன். இது ஒரு திட்டமிட்ட பழிவாங்கலாகும். பதவி நியமனங்கள் வழங்கப்படும் போது தகுதிக்கும் திறமைக்கும் முன்னுரிமை அளியுங்கள். உறவுக்கும் இனத்துக்கும் முன்னுரிமையளிக்காதீர்கள். ஒரு காலத்தில் புகழ் பூத்த வெளிநாட்டுச் சேவையாக இருந்த இலங்கை வெளிநாட்டுச் சேவை இன்று அரசியல் நியமனங்களால் அலங்கரிக்கப்பட்டு நிற்கின்றது என்பதற்கு அண்மைய ஜெனீவா மகா நாடு சரியான முன்னுதாரணங்களாகும்.
எமது நாடு மீண்டும் பண்டைய சிறப்புகளை, பண்டைய பெருமையினைப் பெற வேண்டுமாக இருந்தால் ஆட்சியாளர்கள் கடந்த கால வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவைகள் அனேகம் உண்டு. தவறுகளும் குறைபாடுகளும் கொண்டதுதான் மனித வாழ்க்கை. தவறுகள் இனங்காணப்பட்டு குறைகள் களையப்பட்டு வாழ்க்கையைச் சீராக்க வேண்டியது வாழ்வியலின் தத்துவம்.
இது தனிமனித வாழ்க்கைக்கு மாத்திரமல்ல நாட்டின் ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும்.
ஆட்சியாளர்களே! எமது நாட்டின் கடந்த கால வரலாற்றினை நன்கு சீர்தூக்கிப் படியுங்கள் தவறுகள் எங்கு எவ்வாறு எவரால், உருவாக்கப்பட்டது என்பதனைக் கண்டுபிடியுங்கள். அதற்கான தீர்வினை இன மத, மொழி வேறுபாடின்றி நடுநிலையுடன் வழங்குவதற்கு முனையுங்கள். வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாத எவரும் மக்கள் போற்றும் அரசுத் தலைவராக மிளிர முடியாது. இதனை உணர்ந்து உங்கள் தீர்மானங்களை எடுங்கள். அவ்வாறு நீங்கள் தீர்மானம் மேற்கொள்வீர்களாக இருந்தால் அரசியல் பழிவாங்கல் என்ற சொல் இலங்கை அரசியல் வரலாற்றின் அகராதியில் இருந்து பூரணமாக நீக்கப்பட்டுவிடும்.

இந்த நாட்டில் இன்று தமிழ் பேசும் மக்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இந்த அரசியல் பழிவாங்கலுக்கு நல்ல உதாரணமாகும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த 28 ஆண்டுகளாக அந்தப்பிரதேச செயலகம் தனியாக இயங்கிவந்தது. 40ஆயிரத்துக்கும்அதிகமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். 29 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டு இருக்கும் அந்தப்பிரதேச செயலகம் இன்று தரம் இறக்கப்பட்டதாக அறிகின்றோம். கடந்த கால ஆட்சியில் அது தரம் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். அது தவிர்க்கப்பட்டிருக்கிறது, கல்முனை நகரில் அரசியல் செய்யும் அரசியல் வாதியான ஹரீஸ் எம்.பியின் நடவடிக்கைதான் இது. பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டுமே தவிர தரம் இறக்கப்படக் கூடாது. இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் இறக்கப்பட்டுள்ளது.

ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினர், தான் சார்ந்த சமூகத்தின் மரணமானவர்களின் உடலங்கள் எரிக்கப்பட்டிருக்கும் போதே 20வது திருத்தத்துக்கு வாக்களித்து ஆதரவளித்து தன்னுடைய சமூகத்துக்கே துரோகம் செய்தவர். இன்னுமொரு சமூகத்துக்கு உதவி செய்வார் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் நாங்கள் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம்கள் இன ஒற்றுமையாக வாழவேண்டுமென்று ஆசைப்படுகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் தமிழ் முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று எங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பெரும்பான்மை ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரத்தின் ஊடாக இந்த வேலையைச் செய்கின்றார்கள். எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. 20வது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்த இவர்கள் பிரதேச செயலகத்தினை தரம் இறக்குவதன் மூலம் எதிர்வரும் காலங்களில் கொண்டு வரப்படவிருக்கின்ற கொழும்பு துறைமுக நகர பிரேரணையிலும் அதரவைப் பெறுவதற்காக இப்படிச் செய்கின்றார்கள என்று நினைத்துப்பார்க்க வேண்டியதாகயிருக்கிறது.

அதற்கும் மேலாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தொல்பொருள் என்ற ரீதியில் பழிவாங்கப்பட்டு பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அம்பாறை பொத்துவில்லிருந்து பருத்தித்துறை வரையில் பல ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன.

கௌதம புத்தரின் பௌத்த சின்னங்கள் இருப்பதாகக் அடையாளம் காட்டி நீங்கள் அபகரிக்கின்றீர்கள். கடந்த காலங்களில் இந்து மன்னர்கள் வாழ்ந்த, ஆட்சி புரிந்த பொலநறுவை, அனுராதபுரம் போன்ற இடங்களில் இந்து சின்னங்கள் இன்னும் இருக்கின்றன. அங்கு நூறு ஏக்கர் காணியைக் கொடுத்து இந்து மத ஸ்தாபனம் அமைக்க உங்களால் இடம் தரமுடியுமா என்று கேட்க விரும்புகிறேன்.

“தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக, அடிமைகளாக நடத்தப்பட்டதன் காரணமாக அகிம்சை ரீதியாக, ஆயுத ரீதியாக நாம் போராடினோம்” – கோவிந்தன் கருணாகரம்

ஜே.வி.பி அமைப்பின் தலைவர்கள், போராளிகள் இலங்கையின் தலைநகரிலே நினைவு கூரப்படும்போது தங்களது உறவுகளை இழந்த உறவினர்கள் அவர்களை நினைவு கூருவதற்கு இந்த அரசு தடை விதித்திருக்கின்றதென்பது உலகத்தில் ஒரு அவமானமான அரசாங்கமாக இந்த அரசாங்கம் இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

பொலிஸாரினால் தடைகள் ஏற்படுத்த முற்பட்டபோதும் நிகழ்வு அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளை பிற்றிய நிலையில் மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலை நினைவுத்தூபியருகே நடைபெற்றுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு கிளையின் தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணி தலைவர் கி.சேயோன், வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தி.தீபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நினைவேந்தலை  தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த கோவிந்தன் கருணாகரம்,

“இங்கு அப்பாவி பொதுமக்கள் கொத்தணியாக கொல்லப்பட்ட வரலாறு இருக்கின்றது. உலகத்தின் பல நாடுகளில் தங்களது உரிமைகளைப்பெறுவதற்காக பல விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக, அடிமைகளாக நடத்தப்பட்டதன் காரணமாக அகிம்சை ரீதியாக, ஆயுத ரீதியாக நாம் போராடினோம்.

அந்தப் போராட்டத்தில் இறந்த எமது உறவுகளை நினைவு கூருவதற்குக்கூட இந்த அரசாங்கம் தடை விதிக்கின்றதென்றால் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு எப்படி இருக்கின்றது என்பதை உலக நாடுகள் தெரிந்துகொள்ள வேண்டும்.

உலகின் எந்தவொரு நாட்டிலுமே இறந்தவர்களை நினைவு கூருவதற்கு தடைவிதித்ததாக வரலாறுகள் இல்லை. இலங்கையில்கூட 1771, 1989ஆம் ஆண்டு காலகட்டங்களில் ஜே.வி.பி எனும் அமைப்பு இலங்கை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக போராடிக்கொண்டிருந்தார்கள்.

இன்றும் அவர்களது தலைவர்கள், போராளிகள்கூட இலங்கையின் தலைநகரிலே நினைவு கூரப்படும்போது தங்களது உறவுகளை இழந்த உறவினர்கள் அவர்களை நினைவு கூருவதற்கு இந்த அரசு தடை விதித்திருக்கின்றதென்பது உலகத்தில் ஒரு அவமானமான அரசாங்கமாக இந்த அரசாங்கம் இருக்கின்றது.

2015ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் காலகட்டத்திலே எந்தவித தடையுமில்லாமல் இந்த நாட்டிலே அனைத்து நினைவுகூரல்களும் நடத்தப்பட்டன.

2020ஆம் ஆண்டிற்குப் பின்பு ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் நினைவிடங்களை அழிப்பதும் நினைவுகூரல்களை தடுப்பதும் அவமானமான செயலாக இருக்கின்றது. இலங்கையில் வடக்கு கிழக்கில் அழிந்த எமது உறவுகளுக்கு ஒரு நீதி வேண்டி தற்போது நாங்கள் இராஜதந்திர ரீதியாக போராடிக்கொண்டிருக்கின்றோம்.

எதிர் வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை ஆணையகத்தில் இந்த படுகொலைகளுக்கு எதிரான ஒரு பிரேரணை வரவிருப்பதாக நாங்கள் அறிகின்றோம். அந்த வகையில் இலங்கையிலே நடைபெற்ற இந்த அட்டூழியங்களுக்கு நிலையானதொரு தீர்வு கிடைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும். பாதிப்புகளை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று வேண்டி இன்று மிகவும் அமைதியாக இந்த நினைவுகூரலை மேற்கொண்டிருக்கின்றோம். இப்பகுதி மக்கள் தங்களது மக்களை நினைவுகூருவதைக்கூட தடுப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.