சங்கிலி கந்தசாமி

சங்கிலி கந்தசாமி

பாகம் 16: சுழிபுரம் படுகொலையும் அதன் பின்னணியும்!!!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 14 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 09.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 16:

தேசம்: 83 க்குப் பிறகான காலகட்டம், ஈழவிடுதலை அரசியலைப் பொறுத்தவரைக்கும் கடுகதி வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த அரசியல் தானே. அரசியல் நகர்வுகள் அல்லது அந்த அரசியல் சூழல் வேகமாக மாறிக் கொண்டிருந்தது. 84 இந்திராகாந்தி மரணம் அடைந்தார். அதற்குப் பிறகு இலங்கை ராணுவம் திட்டமிட்ட படுகொலைகளை மேற்கொண்டது. 15 பேர் கொல்லப்படுகிறார்கள். ஒதிய மலையில் கொல்லப்படுகிறார்கள். அதேபோல தமிழீழ விடுதலை இயக்கங்கள் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கினம். இன உணர்வு என்பது மிகக் கொதிநிலையில் இருந்த காலங்கள். இந்த காலப்பகுதியில் சகோதரப் படுகொலைகளும் இடம்பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக, மிகவும் உக்கிரமாக பேசப்பட்ட படுகொலை, சுழிபுரம் 6 பேரின் படுகொலை. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அல்லது அனுதாபிகள் ஆறு பேர் கொல்லப்பட்டது. எந்தவிதமான விடயங்கள் இந்த படுகொலைகளை நோக்கி நகர்த்தி இருக்குது. அந்த நேரம் நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். யார் அந்த நேரம் புளொட்டுக்குப் பொறுப்பாக இருந்தது?

அசோக்: அந்த காலகட்டத்தில் தோழர் கேசவன் தளப் பொறுப்பாளராக இருந்தார். மாவட்ட பொறுப்பாளராக தோழர் நேசன் இருந்தவர். இராணுவப் பொறுப்பாளராக சின்ன மென்டிஸ் இருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் பின் தளத்திலிருந்து படைத்துறைச் செயலர் கண்ணன் யோதீஸ்வரனும் வந்து நின்றவர். 84 டிசம்பர் காலகட்டம் என்று நினைக்கிறேன், இந்த காலத்தில் சுழிபுரத்தில் உமாமகேஸ்வரனும் வந்து தங்கி இருந்தார்.

தேசம்: அதால தான் படைத்துறைச் செயலர் உட்பட முக்கியமான ஆட்கள் எல்லாம் வந்து நின்றவை…

அசோக்: அதற்கு முதலே படைத்துறைச் செயலர் கண்ணன் வந்துட்டார். வந்து தளத்தில் சந்திப்புகள் எல்லாம் செய்து கொண்டிருந்தவர். அதற்குப் பிறகுதான் உமாமகேஸ்வரன் வாறார். வந்து சுழிபுரத்தில் தான் தங்கி இருக்கிறார். அது ஒரு ரகசியப் பயணம் தான். யாருக்குமே சொல்லப்படாமல் வந்த ரகசியப் பயணம். கிளிநொச்சி வங்கி கொள்ளை நகையின் ஒரு பகுதியை உமாமகேஸ்வரன் தன் பாதுகாப்பில் யாழ்ப்பாணத்தில் புதைத்து வைத்திருந்தார். அதை எடுக்கவே இந்த ரகசிய பயணம். வந்த உமாமகேஸ்வரனுக்கான பாதுகாப்பை புளொட்டின் ராணுவப் பிரிவு சங்கிலி – கந்தசாமி தலைமையில் சுழிபுரத்தைச் சேர்ந்த ஆட்கள்தான் கொடுக்குறாங்க.

தேசம்: சுழிபுரம் அந்த நேரம் புளொட்டின் ஒரு கோட்டையாகவும் இருந்தது?

அசோக்: பூரண பாதுகாப்பாகவும் அந்த இடம்தான் இருந்தது. அந்த நேரம் புலிகளின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 6 பையன்கள் சுவரொட்டி ஒட்ட போயிருக்கிறார்கள். அந்தப் பையன்களை இவங்கள் உளவு பார்க்க வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்து படுகொலை செய்து புதைசிட்டாங்க. யாருக்குமே தெரியாது. இந்தப் படுகொலை நடந்து இரண்டு மூன்று நாட்களில், தங்களின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த இந்த மாணவர்களை காணவில்லை என்று சொல்லி புலிகள் தேட தொடங்கிட்டாங்க. அந்த நேரம் புலிகளின் மாணவர் அமைப்புக்கு பொறுப்பாக இருந்தது திலீபன்.

தேசம்: திலீபன் அப்ப உங்கட பேனா நண்பர்…

அசோக்: திலீபன் பேனா நண்பர் இல்லை. புலிகளில் இருந்த என் பேனா நண்பியின் மூலம் ஏற்பட்ட உறவு. இது பற்றி முன்னர் கதைத்திருக்கிறன். எங்களிட்ட தனிப்பட்ட உறவு இருந்தது, கதைப்பம் பேசுவோம். தனிப்பட்ட பிரச்சனை எல்லாம் கதைக்கக் கூடிய உறவு ஒன்று இருந்தது. திலீபனின் மூத்த அண்ணன் ஒருவர் புளொட்டில் பின் தளத்தில் இருந்தவர். பிற்காலத்தில் திலீபன் பற்றி விமர்சனங்கள் வரும்போது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, இவனா என்று சொல்லி. அந்தக் காலகட்டத்தில் திலீபனிடம் வித்தியாசமான குணாதிசயங்கள் இருந்தது. திலீபன் அந்த நேரம் புலிகளின் மாணவர் அமைப்பிற்கும் பொறுப்பாக இருந்தவர்.

சுழிபுரம் பக்கம் போன இந்த மாணவர்களை காணவில்லை என்றவுடன், இவங்களுக்கு சுழிபுரம் புளொட் ஆட்கள் மீது சந்தேகம் வந்துவிட்டது. அவங்க கைது செய்திருப்பாங்க என்ற சந்தேகம் இவங்களுக்கு வந்து விட்டது. அந்த நேரம் உமாமகேஸ்வரன் அங்க வந்து நிற்கிறது இவங்களுக்கு தெரியாது.

தேசம்: திலீபன் ஆட்களுக்கு…

அசோக்: ஒம். உண்மையிலேயே அவர்கள் உளவு பார்க்க போக வில்லை. சுழிபுரத்தை அண்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சேர்ந்த பையன்கள் அவர்கள். விக்டோரியா கொலேஜ்சில் படித்துக் கொண்டிருந்தவர்கள். சுவரொட்டி ஒட்டுவதற்காகத்தான் போய் இருக்கிறார்கள். அவங்களுக்கு உமாமகேஸ்வரன் வந்து நிற்கும் விடயம் எதுவுமே தெரியாது.

பிறகு யாழ்ப்பாண யுனிவர்சிட்டியில் மாணவர்கள் மத்தியில் இப்பிரச்சனை வருகின்றது. யுனிவர்சிட்டியைச் சேர்ந்த மாணவர் அமைப்புகளில் ஒன்று இருந்தது என்ன என்றால், பிரச்சனை என்றால் கதைக்கலாம். உரையாடல் தளம் ஒன்று இருந்தது எல்லோர் மத்தியிலும். அப்போ திலீபன் ஆட்கள் வந்து கதைக்கிறார்கள், சுழிபுரம் பகுதிகளுக்கு சுவரொட்டி ஒட்ட போன மாணவர்களைக் காணவில்லை என்று சொல்லி. முகுந்தன் வந்து நிற்பதை இந்த நேரத்தில அவர்கள் அறிந்து விட்டனர். அப்ப அவங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. புளொட்தான் கைது செய்திருக்கும் என்று.

சுழிபுரம் புளொட் ஏரியா. அதற்குள் இவர்கள் சென்று விசாரிக்க முடியாது. என்னைத்தான் சென்று விசாரிக்க திலீபனும், கிட்டுவும் கூப்பிடுகிறார்கள். நான், சுழிபுரம் போய் விசாரித்து விட்டு வாரன் என்று இவர்களிடம் சொன்னேன். தாங்களும் வருவதாக சொன்னாங்க. நானும், திலீபனும், கிட்டுவும் அங்கு போகின்றோம். புளொட் ராணுவம் வளைத்து நிற்கிறது. சித்தன்கேணி கோயிலடியில் சந்தியில சென்ரி நின்ற ஆட்களை கேட்டதும், அப்படி யாரும் வரவில்லை என்று சொல்லிப் போட்டாங்க. ரெண்டு பக்கமும் பெரிய வாய்த்தர்க்கம். புளொட் காரங்க மிக மோசமாக நடந்து கொண்டாங்க. இவங்களை கூட்டி வந்ததற்கு என்னையும் பேசினாங்க. நான் இடையில நின்று சமாதானப்படுத்தி திலீபனையும், கிட்டுவையும் கூட்டிட்டு வந்துட்டேன். வரும்போது அவங்க சொன்னாங்க, அவர்களுடைய கதைகள் பேச்சிலிருந்து புளொட் தான் ஏதோ செய்திருக்கு என்று தாங்க நம்புவதாக. அவங்கள் ஒரு முடிவுக்கு வந்துட்டார்கள் புளொட் தான் ஏதோ செய்து விட்டது என்று…

தேசம்: திலீபனும், கிட்டுவும் ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க

அசோக்: ஓம். பிறகு தோழர் கேசவனிடம் நான் போய் நடந்த முழு கதையும் சொன்னேன். அந்த நேரம் கேசவன் சொன்னார், புளொட் கைது செய்திருக்காது, எதுக்கும் நான் சுழிபுரம் போய் விசாரித்து கொண்டு வாரேன் என்று சொல்லி, சுழிபுரம் போனவர். போயிட்டு வந்து சொன்னார், புளொட் கைது செய்யல என்றுதான் சொல்லுறாங்கள் என்று. அந்த நேரம் படைத்துறைச் செயலர் கண்ணனும் சுழிபுரம் போய் விசாரிக்கின்றார். அவரும் வந்து, கேசவன் தோழர் சொன்ன மாதிரியே சொல்கிறார். அப்ப கொந்தளிப்பான காலகட்டம். மக்களுக்கு, எங்க தோழர்களுக்கு இச் சம்பவம் தொடர்பாக தெளிவுபடுத்த துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிட வேண்டும் என்று சொல்லி கண்ணன், நேசன் எல்லாருடைய முடிவோடையும் துண்டு பிரசுரம் ஒன்று அடிக்கப்படுது, ஒன்றுபட்டு செயற்படுவோம் என்ற தலைப்பில.

தோழர் கேசவன்தான் அந்த துண்டுப் பிரசுரத்தை எழுதுகின்றார். அதன்ற உள்ளடக்கம் இப்போது எனக்கு ஞாபகம் இல்லை. காணாமல் போன மாணவர்கள் தொடர்பான விடயத்தில், புளொட்டிக்கு எந்த சம்பந்தமும், தொடர்புகளும் இல்லை என்றும், இயக்கங்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும் எழுதப்பட்டதாக நினைக்கிறன்.

தேசம்: அந்த துண்டுப் பிரசுரம் வரேக்க அவர்களுடைய உடல் எடுக்கப்பட்டுட்டுதா?

அசோக்: இல்லை இல்லை. அந்த நேரம் எதுவுமே தெரியாது. என்ன நடந்தது என்றே தெரியாது. அந்த காலகட்டத்தில் தான் இந்த துண்டுப் பிரசுரம் வருகிறது. நாங்களும் உண்மையாவே நம்புறோம் புளொட் செய்ய வில்லை என்று.

பிறகு உடல் தோண்டி எடுக்கப்படுது. உமாமகேஸ்வரன் பின் தளம் போனதற்குப் பிறகு, அந்த இடங்களெல்லாம் கட்டுப்பாடு இல்லாமல் போகுது. பிறகு நாய்கள் கடற்கரையில் மோப்பம் பிடித்து தோண்டிய இடத்தில் உடல்கள் காணப்படுது. ஈபிஆர்எல்எஃப் தோழர்களும் பார்த்திருக்கிறாங்க அவங்கதான் படங்கள் எடுத்தார்கள் என்று சொன்னார்கள்.

தேசம்: நான் நினைக்கிறேன் அந்த நேரம் ஈபிஆர்எல்எஃப் இல் இருந்த கொன்ஸ்ரன்ரைன் இப்ப லண்டனில் இருக்கிறார். அவர் அந்த காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் ஈழமுரசில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். அந்தப் படத்தை அவர்தான் எடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அசோக்: எனக்கு நல்ல ஞாபகம், இந்த சம்பவம் நடந்ததற்கு பிறகு, நான் நீர்வேலி என்ற கிராமத்தில் இருந்தன். திலீபன் என்னை தேடி வந்தவர். அதுக்கு முதல் திலீபன் கிட்ட நான் சொல்லிட்டேன் மாணவர்கள் காணாமல் போனதுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று. ஆனால் அவங்களுக்கு சந்தேகம் இருந்தது. அப்ப திலீபன் என்னை கண்டதும் அழத் தொடங்கிட்டார். படத்தை காட்டி சொன்னார், இப்ப என்ன சொல்லுறீங்க? நீங்கள்தான் செய்திருக்கிறீர்கள். சுழிபுரத்தில் தான் தோண்டி எடுக்கப்பட்டு இருக்கு என்று சொல்லி. எதுவுமே கதைக்கல நான். என்ன கதைக்க முடியும்? கதைக்க வார்த்தையும் வரல. ரெண்டு பேருக்குமான உறவு அதோட முடிந்து போயிட்டது. இறந்து போன மாணவர்களை புலிகளின் மாணவர் அமைப்பினுள் கொண்டு வந்தது திலீபன்தான். இவங்களோடு நெருக்கமாகவும் இருந்துள்ளார்.

தேசம்: இந்த திலீபன் தான் பின்னாட்களில் உண்ணாவிரதம் இருந்தவர்?

அசோக்: உண்ணாவிரத திலீபன். பிற்காலத்தில் திலீபனுடைய வாழ்க்கை முறையும் வேறயா போயிட்டுது. டெலோ அழிப்பில் முன்னுக்கு நின்றவர் என்டு சொல்லி பயங்கர குற்றச்சாட்டுகள்.

தேசம்: அப்போ எப்ப உங்களுக்கு தெரியும் இதில் புளொட் ஈடுபட்டது என்று சொல்லி?

அசோக்: சுழிபுரத்துக்குள்ள தானே இது நடந்திருக்கு. எனக்கு டவுட் வந்துட்டுது இவர்கள் தான் செய்திருப்பார்கள் என்று சொல்லி. அன்றைக்கு கிட்டு, திலீபனுடன் நடந்த உரையாடல் ஆரோக்கியமாக இருக்கல. இவங்கள் நிதானமாக கதைத்தவங்கள். புளொட் ஆட்கள் அதுல நடந்துகொண்ட முறை சரியான பிழை. அப்பவே கொஞ்சம் சந்தேகம் இருந்தது.

தேசம்: யார் யார் அதில் சார்பாக உரையாடலில் ஈடுபட்டது.

அசோக்: அதுல சங்கிலி உட்பட பெரிய குழு. அவங்களோட பெயர் ஞாபகம் இல்லை இப்போது. எப்படி நீ இவங்கள கூட்டிட்டு வருவாய், எங்க ஏரியாக்குள்ள புலிகளை எப்படி கூட்டிட்டு வருவாய் என்று சொல்லி என் மீது படு கோபம். மிக மோசமாக நடந்துகொண்டனர். அப்ப அவங்களை பொறுத்தவரை புளொட்டின்ட ஏரியா, இவங்களை எப்படி கூட்டிட்டு வரலாம் என்றுதான். மிக ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்கள்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் மீரான் மாஸ்டர் எல்லாம் அங்கு முன்னணியில் இருந்த உறுப்பினர்கள் என்று நினைக்கிறேன். இது சம்பந்தமாக நீங்கள் யாருடனாவது கதைத்தீர்களா?

அசோக்: பிற்காலத்தில் மீரான் மாஸ்டரை நான் இங்க பாரிசில் சந்தித்தேன். அப்ப அவர் நோர்வேயில் இருந்தவர். எனக்கு மீரான் மாஸ்டரும் அதில் சம்பந்தப்பட்டவர் என்று படுகோபம் இருந்தது. அவரை சந்திக்கவே நான் விரும்பவில்லை. பிறகு பிரண்ட்ஷிப்பா சந்திக்கலாம் என்றுதான் சந்தித்தேன்.சந்தித்த இடத்தில் சுழிபுரம் தொடர்பான கதை வந்தது. மிக மறுத்தார் அவர். சம்பவம் நடந்த இடத்தில் அவர் இருந்திருக்கிறார். சங்கிலி கந்தசாமி ஆட்களோடு சண்டை பிடித்திருக்கிறார்.

தேசம்: சம்பவம் நடந்த நேரத்திலா?

அசோக்: ஓம். அவருக்கு அவர்கள் அப்பாவி பையன்கள் என்று தெரியும்.

தேசம்: அவருடைய மாணவர்களா?

அசோக்: நான் நினைக்கிறேன் அவருக்கு தெரிந்த மாணவர்களாக இருக்கலாம். இவர் பயங்கரமாக சண்டை பிடித்து இருக்கிறார், செய்யக்கூடாது என்று சொல்லி. அப்ப சங்கிலி மற்ற ஆட்கள் எல்லாம் இவரை சுட வெளிக்கிட்டு இருக்கிறார்கள். இந்த இடத்தை விட்டுப் போ, இல்லாவிட்டால் உன்னையும் சுட வேண்டி வரும் என்று சொல்லி இருக்காங்க. இவரை வெளியேற்றிப் போட்டுத்தான் இந்த சம்பவங்கள் நடந்திருக்கு. மீரான் மாஸ்டர் இந்த சம்பவத்தைப் பற்றி சொல்லும்போது நான் நம்பவில்லை. ஆனால், பிற்காலத்தில் வேற ஆட்கள் இந்த சம்பவம் பற்றி கதைக்கும் போது, இப்படி மீரான் மாஸ்டர் சண்டை பிடித்தவர் என்று சொல்லியும், அதில் மீரான் மாஸ்டருக்கு தொடர்பில்லை என்றும் சொன்னார்கள். ஆனால் மீரான் மாஸ்டர் அதில் தொடர்பு என்று சொல்லித்தான் வதந்தி. மீரான் மாஸ்டருக்கு பிடிக்காதவர்கள் அந்த குற்றச்சாட்டை பரப்பிவிட்டுட்டாங்கள்.

தேசம்: இந்தப் படுகொலை விஷயத்தில் உமா மகேஸ்வரன் அந்த பகுதியில் இருந்ததால்தான் இது நடந்தது என்று சொல்லப்படுது. அவர்கள் விசாரிக்கப்பட்டு சுடப்பட்டு, மிக மோசமாக துன்புறுத்தப்பட்டு, அவர்களது உடல்களும் வெட்டப்பட்டு இருந்திருக்கு. அது இலங்கை ராணுவம் செய்கின்ற கொடுமையிலும் பார்க்க மிக மோசமான கொடுமை.

அசோக்: பயங்கரமாக சித்திரவதை செய்து தான் கொலை செய்திருக்கிறார்கள். இந்த சித்திரவதை மனோபாவம் ஒரு விடுதலை இயக்கத்தில் இருக்கிறது என்பதே பெரிய அதிர்ச்சியான விஷயம்தான். இதுதான் காலப்போக்கில் பயிற்சி முகாம்களில் சித்திரவதை செய்வதற்கு காரணமாக இருந்திருக்கு. உண்மையிலேயே இந்த நபர்களை பார்த்தீர்களென்றால், இவங்கள் எப்படி புளொட்டுக்குள்ள வந்தார்கள் என்றே தெரியாது. சங்கிலியை கொண்டு வந்தது சந்ததியார். வவுனியாவில் கடையில வேலை செய்து கொண்டிருந்தவர். இவங்கள் சண்டியர்கள் ஆக இருந்தார்களேயொழிய…

தேசம்: கொண்டு வாறத்துல பிரச்சினை இல்லை. ஆனால் அவர்களுக்கு எந்த ஒரு அரசியல் விழிப்புணர்வும் கொடுக்கல.

அசோக்: என்னதான் அவங்கள் பிழையான திசையிலிருந்து வந்தாலும் கூட, அவங்களை அரசியல் கல்வி ஊட்டி, நல்வழிப்படுத்தி இருக்கலாம். புளொட்டினுள் கொலைகளையும், சித்திரவதைகளையும் செய்த நபர்கள் பலர் தோழர் சந்ததியாரினால் இயக்கத்தினுள் கொண்டு வரப்பட்டவங்க. இதைப்பற்றி முன்னமே சொல்லி உள்ளேன். இவர்கள் தனிநபர் விசுவாசிகள் ஆக்கப்பட்டு, பிற்காலத்தில் முகுந்தனால் பயன்படுத்தப்பட்டார்கள். சங்கிலி கந்தசாமியோட பழகின ஆட்களை காலப்போக்கில் சந்திக்கும்போது தனிப்பட்ட வகையில் மிக நல்லவர் என்று தானே சொல்கிறார்கள். ஆனால் அவர் மிகக்கொடூரமான கொலை கார மனுஷனாக இருந்திருக்கார் . உளவியல் சார்ந்த நோயாகவே போயிட்டுது இந்த கொலைகள்.

வரலாற்றில் பார்த்தோமானால் இப்படிப்பட்டவர்கள் தனிப்பட்ட வகையில் தங்களைச் சார்ந்தவர்களுக்கு நல்லவர்களாக பண்பானவர்களாகத்தான் இருந்திருக்காங்க. இது ஒருஉளவியல் சார்ந்த பிரச்சனை. புளொட்டில் பலர் கொடுர சாடிஸ்டுகளா இருந்திருக்காங்க. உண்மையில இதை அமைப்பு சார்ந்த பிரச்சனையாகத்தான் பார்க்க வேணும். ஆயுத இயக்கங்கள் அரசியல் சித்தாந்த மார்ச்சிய வழிகாட்டல் இல்லாமல், அரசியல் கல்வி இல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய அக்கறையில்லாமல், இயக்கம் நடாத்த வெளிக்கிட்டால் இப்படி பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.

தேசம்: இந்தப் படுகொலை தொடர்பாக மத்திய குழுவில் பேசப்பட்டிருக்கா?

அசோக்: விவாதம் எல்லாம் நடந்தது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க என்று சொல்லி. ஏனென்றால் சங்கிலி கந்தசாமி மத்திய குழுவில் இருக்கிறார் தானே.

தேசம்: வேற யார் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட ஆட்கள்.

அசோக்: வெங்கட் என்று நினைக்கிறேன். மத்திய குழுவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கல.