சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்துக்கு அமைய நாட்டின் அரசியலமைப்பு இயற்றப்படவில்லை. -பேராசிரியர் சரித ஹேரத்

சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்துக்கு அமைய நாட்டின் அரசியலமைப்பு இயற்றப்படவில்லை.ஆகவே அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

 

கொழும்பில் புதன்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்ட நடவடிக்கைகள் நிறைவுப் பெறும் வரை எந்த தேர்தலையும் நடத்த போவதில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது.

 

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் செயற்பாடுகள் எதிர்வரும் ஜூலை மாதம் நிறைவடைவதாக குறிப்பிடப்படுகிறது.பொதுத்தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

 

எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.அதற்கு முன்னர் எந்த தேர்தலும் நடத்தப்படாது என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு தான் ஜனாதிபதி அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்துக்கு அமைய நாட்டின் அரசியலமைப்பு இயற்றப்படவில்லை.ஆகவே அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

 

தேர்தல் வாக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் ஜூலை மாதம் முன்னெடுக்கும்.

 

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பில் சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஊடாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட தீர்மானித்துள்ளோம் என்றார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை தற்போது மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் திருத்தங்களை செய்வோம் – சஜித் பிரேமதாச

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை தற்போது மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான  அரசாங்கம் திருத்தங்களை மேற்கொள்ளுமென அந்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பான கட்சியின் நிலைப்பாட்டை, நிதியத்தின் பிரதிநிதிகளுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது தான் அவர்களுக்கு எடுத்துரைத்ததாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது காணப்படும் பிரச்சனைகளுக்கான நேரடி தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடியுள்ளது.

இதன்படி, தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்காலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமென அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டாலும் தமது கட்சி நிச்சயம் மேற்கொள்ளுமெனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பை சில அரசியல் கட்சிகள் புறக்கணித்திருந்ததாக சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியத்தை மீறி எங்களால் செயற்படமுடியாது – அரசாங்கம் திட்டவட்டம் !

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய கடன் வழங்குநர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டைத் தவிர்த்து, நாட்டின் பொருளாதாரத்தை ஒரு தினத்திற்கும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், யார் அரசாங்கத்தை நிர்வகித்தாலும் எந்த ஜனாதிபதி நாட்டை ஆண்டாலும் அரசாங்கத்தின் ஆயுட்காலம் இரண்டு வாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு விடும். தடம் புரண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கடந்த வருடத்தில் மீள நிவர்த்தி செய்துள்ளது. பிறந்துள்ள புதிய வருடம் தீர்க்கமான ஒரு வருடமாகும்.

 

தற்போது நிலவும் பொருளாதார சவால் 2027 ஆம் ஆண்டு வரை தொடரும். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டம் 2027 ஆம் ஆண்டு நிறைவு பெறும் வரை சட்டப்படி செயற்பட்டாலே நெருக்கடியை நிவர்த்தி செய்ய முடியும்.

சர்வதேச இணக்கப்பாட்டுடனான சட்டங்கள் மற்றும் நிதி முறைமைக்கு இணங்க நாடு என்ற ரீதியில் நாம் நிதி சந்தைக்கு சென்று பிணைமுறியை விநியோகித்து கடனைக் கோரினாலும் 2027 ஆம் ஆண்டு எமக்கு 1500 மில்லியன் டொலர்களை மட்டுமே கடனாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

2027 ஆம் ஆண்டு வரை மூன்று, நான்கு வருடங்களுக்கு இந்த சவால்கள் தொடரும்.

பெருமளவு இறக்குமதியிலேயே தங்கியுள்ள பொருளாதாரத்தை கொண்டுள்ள எமது நாடு எரிபொருள், உரம், மருந்து, இரசாயன பொருட்கள், அரிசி, மா, சீனி, கிழங்கு, வெங்காயம், பருப்பு, மிளகாய் உள்ளிட்ட நுகர்வு பொருட்கள் மற்றும் இயந்திரங்கள், வாகனங்கள் போன்றவற்றையும் இறக்குமதி செய்தே ஆக வேண்டும்.

அவற்றை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கத்தின் கையிருப்பின் அடிப்படையில் கடன் பத்திரத்தை விநியோகிப்பது அவசியம். இந்த பொருட்களைக் கொள்வனவு செய்யாமல் இரண்டு வாரங்களையும் எம்மால் முன்னெடுத்துச் செல்ல முடியாது.” என்றார்.

இலங்கை வளர்ச்சியை நோக்கி பயணிக்க 16 அம்சங்களை உள்ளடக்கிய பரிந்துரைகளை வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம் !

இலங்கை பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிப்பதற்கான பதினாறு அம்சங்களை உள்ளடக்கிய நிர்வாக ஆளுகை மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு 2.9 பில்லியன் கடனுதவியை சர்வதேச நாணய நிதியம் வழங்கியிருந்த நிலையில், அது தொடர்பான முதலாம் கட்ட மீளாய்வு அண்மையில் நடைபெற்றிருந்தது.

இந்த நிலையில், தற்போது பதினாறு அம்சங்களை உள்ளடக்கிய நிர்வாக ஆளுகை மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் அடுத்த ஆண்டின் இறுதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பதினாறு அம்சங்களை உள்ளடக்கிய வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் காணப்படும் நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் அரசாங்க செயல்பாடுகளுக்குள் வேரூன்றிய ஊழல் சிக்கல்களை நிவர்த்தி செய்வது இந்த மதிப்பீட்டின் நோக்கமாக அமைந்துள்ளது. இதன்படி, இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான ஆணைக்குழுவுக்கு ஆணையாளர் நாயகம் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை இணைத்துக் கொள்ளும் பணிக்காக அடுத்த மாதமளவில் சுயாதீன நிபுணர்களை உள்ளடக்கிய ஆலோசனை குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென நிதியத்தின் நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஊழியர் சேமலாப நிதியத்தின் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் புதிய நிர்வாகமொன்றை அமைப்பது குறித்த அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் ஜுன் 2024 ஆம் ஆண்டில் சமர்பிக்கப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

வரிச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளல், பொதுக் கொள்முதல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை குறித்த அறிக்கையில் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இவற்றை வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலம் இலங்கை பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிக்குமென நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

Gallery

IMF உடனான பயணம் நல்லதல்ல எனக்கூறும் பெரும்பான்மையான இலங்கையர்கள் – ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் !

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தம் இறுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என இலங்கை சனத்தொகையில் 28% மட்டுமே நம்புவதாக வெரிட்டி ரிசர்ச் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெரிட்டி ரிசர்ச் கடந்த ஜூன் மாதம் 1008 இலங்கைப் பிரஜைகளை உள்ளடக்கிய கணக்கெடுப்பை நடத்தியது. கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 45% பேர் சர்வதேச நாணய நிதியத்துடனான பயணம் நல்லதல்ல என்று கூறியுள்ளனர்.

ஐஎம்எஃப் உடனான இந்த ஒப்பந்தம் நல்லதாக இருக்குமா இல்லையா என்பது குறித்து தங்களால் திட்டவட்டமான கருத்தை தெரிவிக்க முடியாது என்று கணக்கெடுப்பில் பங்கேற்ற 27% பேர் கூறியுள்ளனர். 28 வீதம் பேர் மட்டுமே IMF ஒப்பந்தம் நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என நம்புகின்றனர்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) புதிய உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது என நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்லவில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக் கடனை மேம்படுத்துவதற்கான அடிப்படைத் தேவையாக இருந்த உள்நாட்டுக் கடன் உகப்பாக்கம் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், எனவே வெளிநாட்டுக் கடனை மேம்படுத்துவதையும் விரைவில் முடிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

“சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பிடிக்குள் சிக்கியுள்ள இலங்கையில் காலனித்துவ ஆட்சியே நடக்கிறது.” – அனுரகுமார விசனம் !

இலங்கைக்கு அதன் வரிவிதிப்பு அல்லது நிதிக் கொள்கைகளை தீர்மானிக்க சுதந்திரம் அல்லது இறையாண்மை இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய பிக்கு முன்னணி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

“வரிவிதிப்பு, நிதிக் கொள்கைகள் போன்றவற்றின் அனைத்து முடிவுகளும் அமெரிக்க தலையீட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கேற்ப செய்யப்படுகின்றன.

நாடாளுமன்றத்திற்கு பொது நிதி அதிகாரம் இருப்பதாக கூறப்பட்டாலும், இலங்கையில் வரிகளை சுமத்துவதற்கும், மாற்றுவதற்கும் மற்றும் நீக்குவதற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கு அதிகாரம் உள்ளது.

மத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டு நாள் விவாதத்தை எதிர்க்கட்சிகள் கோரியபோது, அது சாத்தியமில்லை, விவாதம் இரண்டு நாட்களுக்கு நீடித்தால், சர்வதேச நாணய நிதியம் வழங்கிய காலக்கெடுவை பாதிக்கும்.

இது, சட்டங்களைத் திணிப்பதும், பொது நிதி மீதான கட்டுப்பாடும் இனி நாடாளுமன்றத்தின் கீழ் இல்லை என்பதை இது காட்டுகிறது. அத்துடன் தற்போதைய ஆட்சி காலனித்துவ ஆட்சிக்கு ஒத்ததாக இல்லையா?  எனவே மக்களின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கான புதிய போராட்டம் தற்போது தேவைப்படுகிறது.” என்றார்.

“சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க இலஞ்ச – ஊழல் ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம்.” – பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர்!

இலஞ்ச – ஊழல் ஆணைக்குழு தொடர்பான புதிய சட்டமூலம் இன்று நாடாளுமன்றில், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, பழைய சட்டத்தில் காணப்படும் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டே இந்தப் புதியச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க தான், இலஞ்ச – ஊழல் ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவரவுள்ளதாக விமர்சிக்கப்பட்டது.

 

இது தவறான கருத்தாகும். நீண்ட நாட்களாக நடைமுறையில் இருக்கும் சட்டமூலம் தொடர்பாக மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் காணப்படுகின்றன.

 

இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டுதான் நாம் இந்த புதிய இலஞ்ச- ஊழல் ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை தயாரித்துள்ளோம்.

 

ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்கும் வகையில், ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட பதவிகள் அனைத்தும், அரசமைப்பு பேரவைக்கு இணங்க தான் நியமிக்கப்படும்.

 

ஓய்வுபெற்ற நீதிபதிகள், பொலிஸாரை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிப்பதால், சட்டமூலத்தின் ஊடாக எதிர்ப்பார்த்த பலன் கிடைக்காது என்பதை நாம் அனுபவங்கள் ஊடாக கண்டுள்ளோம்.

 

எனவே, 62 வயதுக்கு மேற்படாத, குறித்த விடயதானத்தில் அனுபவமும் நிபுணத்துவம் வாய்ந்த நபர்களைதான் ஆணைக்குழுவுக்கு நியமிக்கவுள்ளோம்.

 

மேலும், ஜனாதிபதி முதல் ஆணைக்குழுக்களின் தலைவர்கள், தூதுவர்கள், ஆளுநர்கள், மாகாண முதல்வர்கள், மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் என அனைவரும் தங்களின் சொத்துப் பட்டியலை உறுதிப்படுத்த வேண்டும் என்ற சரத்தும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டியலை வெளியிட வேண்டும். ஓய்வு பெற்றாலும், இரண்டு வருடங்களுக்கு சொத்துக்களின் விபரங்களை வெளியிட வேண்டும்.

 

அதேநேரம், அரச திணைக்களங்களில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுக்கிறார்கள்.

 

இந்தக் குற்றத்திற்கு எதிராகவும் இந்த புதிய சட்டமூலத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.எம்.எப் 62 நிபந்தனைகளில் இதுவரை இருபத்தைந்து நிபந்தனைகளே பூர்த்தி !

சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெறுவதற்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டிய 62 நிபந்தனைகளில் இதுவரை இருபத்தைந்து நிபந்தனைகள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் இரண்டாவது தவணையைப் பெறுவதற்கு முன்னர் இந்த ஒப்பந்தங்களை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படவிருந்த புதிய மத்திய வங்கிச் சட்டத்திற்கு நாடாளுமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல் உள்ளது.

மேலும் பந்தயம் மற்றும் கலால் வரிகளை அதிகரிப்பது ஆகிய இரண்டு உடன்படிக்கைகளை இலங்கை அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு நிதி வெளிப்படைத்தன்மைக்கான இணைய முறையை உருவாக்குவது என்ற உறுதிப்பாடும் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 30 ஆம் திகதிக்குள், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் 37 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தொண்ணூறு சதவீதமான நிபந்தனைகள் பூர்த்தி – நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதமான நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் நீதி அமைச்சினாலேயே முன்னெடுக்கப்பட்டன. ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு அவசியமான சட்டங்கள், தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டம், ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சட்டங்களை நாமே தயாரித்தோம் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயற்பாடுகளை மக்களுக்கு பயனுள்ள வகையில் மேலும் வலுப்படுத்துவது குறித்த நீதியமைச்சின் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வொன்று நேற்று சனிக்கிழமை (13) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே நீதியமைச்சர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாம் அனைவரும் ஒவ்வொரு மட்டத்திலிருந்து நாட்டு மக்களுக்கு சேவையாற்றி வருகிறோம். நாம் வகிக்கும் பதவியும், எமக்குரிய பொறுப்புக்களும் வேறுபடலாம். இருப்பினும், எம் அனைவரினதும் இலக்கு ஒன்றுதான்.

நாடு என்ற ரீதியில் நாம் அபிவிருத்தி அடைய வேண்டுமானால், முதலில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும். சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படாததன் விளைவாக தங்கச் சுரங்கங்களைக் கொண்ட பல ஆபிரிக்க நாடுகளால் இன்னமும் அபிவிருத்தி அடைய முடியவில்லை. தற்போது நாமும் அந்நாடுகளை ஒத்த நிலையிலேயே இருக்கின்றோம்.

எமது நாட்டில் இல்லாத வளம் என்று எதனையும் கூறமுடியாது. எம்மிடம் உள்ள வளங்கள் இந்தியாவில் கூட இல்லை. இருப்பினும், நாம் இன்னமும் உரிய இடத்தை அடையவில்லை. ஜப்பான், கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகள் பொருளாதார ரீதியில் எம்மை விடவும் பின்னடைவான நிலையிலேயே இருந்தன. அந்நாடுகளின் தலா வருமானம் எமது நாட்டை விட குறைவான மட்டத்திலேயே காணப்பட்டன.

கல்வியறிவு வீதம், சிசு மரண வீதம், கர்ப்பிணித்தாய்மாரின் மரணவீதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்குமிடத்து எமது நாடு முன்னேற்றகரமான மட்டத்தில் உள்ளது.

எது எவ்வாறிருப்பினும், பொருளாதார நெருக்கடியின் விளைவாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவி பெறவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறுவதென்பது ஏனைய நாடுகளுக்கு இலகுவானதொரு விடயமாக இருக்கவில்லை. இருப்பினும், இலங்கையை பொறுத்தமட்டில் நிதியமைச்சும் திறைசேறியும் மிகச் சரியாக செயற்பட்டு, இந்தக் கடனுதவிக்கான இணக்கப்பாட்டை எட்டியிருக்கின்றன என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. ஆனால், இவ்விடயத்தில் நீதியமைச்சு சரியாக செயற்பட்டிருக்காவிட்டால் இந்த இணக்கப்பாட்டை எட்டுவதில் மேலும் ஒரு வருட காலதாமதம் ஏற்பட்டிருக்கும் என்ற விடயம் மக்களுக்குத் தெரியாது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதமான நிபந்தனைகளை பூர்த்திசெய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் நீதியமைச்சினாலேயே முன்னெடுக்கப்பட்டன.

அதேபோன்று எமது நாடு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழந்திருந்த காலப்பகுதியில், அதனை மீளப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான நிபந்தனைகளில் நூற்றுக்கு அறுபது சதவீதமான நிபந்தனைகள் எமது அமைச்சினாலேயே நிறைவேற்றப்பட்டன.

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு அவசியமான சட்டங்கள், தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டம், ஊழல் மோசடிகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சட்டங்கள் எமது அமைச்சினாலேயே தயாரிக்கப்பட்டன என்று சுட்டிக்காட்டினார்.

“இனப்பிரச்சினைக்கு தீர்வு தந்தால் தமிழ் பேசும் முதலீட்டாளர்கள் இலங்கை வருவார்கள்.” – நாடாளுமன்றத்தில் சாணக்கியன்!

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை மட்டும் வைத்துக்கொண்டு நாட்டினது பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தினது ஒப்பந்தம் மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் கலந்து கொண்டு கருத்தத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் பெருமையாக கூறிக்கொள்வதைப்போல் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை மட்டும் வைத்துக்கொண்டு நாட்டினது பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியாது.

மிக நீண்டகாலமாக எமது நாட்டில் தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படவேண்டும். அதன்மூலமே சர்வதேசம் மற்றும் பெருமளவான முதலீட்டாளர்களின் கவனத்தினைப் பெறமுடியும்.

குறிப்பாக புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இப்பொழுதும் தயாராகவே இருக்கின்றார்கள். ஆனால் முதலில் எமது இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வைப் பெற்றுத் தருவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும்.

அவ்வாறு கிடைக்கப்பெறும் பட்சத்தில் எமது வடக்கு கிழக்கு மாகாணங்களை நாம் பொருளாதார கேந்திர மையங்களாக அபிவிருத்தி செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். ஆனால் அரசாங்கம் இன்னமும் கடனைப் பெற்றுக் கொள்வதிலேயே குறியாக இருக்கின்றது.

அதிலும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னரே பாராளுமன்றத்தில் அது தொடர்பான விவாதம் முன்னெடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

அவ்வாறு இடம்பெற்றிருந்தால் குறித்த ஒப்பந்தம் தொடர்பான நிபந்தனைகளை மறுசீரமைத்திருக்கலாம். மக்கள் தற்போது அனுபவிக்கின்ற வரிச்சுமைகள் உள்ளிட்ட பாதிப்புக்களைத் தவிர்த்து இருக்கலாம்.

அதனைவிடுத்து தற்போது ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு முதல் தவணைக் கடiபை; பெற்றுக்கொண்டதன் பின்னர் குறித்த ஒப்பந்தம் பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டமை பயனற்றது. அது தொடர்பாக விவாதங்களை நடத்துவதும் வீண்விரயமான செயலாகவே நாம் காண்கின்றோம்.

அதுவும் மக்கள் பணத்தினை வீணடித்து இவ்வாறு செயற்படுவது தவறான செயலாகும். இந்த விவாதத்திற்காக மூன்று நாள் எடுத்துக் கொள்வது பணத்தை வீணடிக்கும் செயலாகும்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ள கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதிலும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் விரைவாக முன்னெடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்ட பல நாடுகள் 46 நாட்கள் முதல் 100 நாட்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டுள்ளன.

எனினும் நாம் ஏழு மாத காலம் தாமதித்தே சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைப் பெற்றுக் கொண்டோம்.

அனைத்துச் சந்தர்ப்பத்திலும் நாம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை, மற்றும் கடந்த செப்டெம்டபர் மாதம் கைச்சாத்திடப்பட்ட ஊழியர் மட்ட இணக்கப்பாடு குறித்த அறிக்கை ஆகியவற்றை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தி இருந்தோம்.

எனினும் அரசாங்கம் அதனைப் பொருட்படுத்தவில்லை. மக்களை மேலும் பாதாளத்திற்குள் தள்ளிவிட்டு பெருமை கொள்கின்றது இந்த அரசாங்கம்.

புதிய சட்டங்களைக் கொண்டுவரும் அரசாங்கம் எதனையும் நடைமுறைப்படுத்துவதாகத் தெரியவில்லை. நடைமுறைப்படுத்தவும் இல்லை.

உதாரணமாக வரிக்  கொள்கைகளில் திருத்தம் தொடர்பாக நாணய நிதியம் வழங்கிய ஆலோசனைகளை அரசாங்கம் விரைவாகவும் அவசரமாகவும் அமுல்படுத்தியிருந்தது.

ஆனால் அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்புக்களில் மறுசீரமைப்பு ஏற்படுத்துவலது தொடர்பாக அனைத்தையும் அரசாங்கம் மறந்துவிட்டது.

அத்துடன் ஊழல் ஒழிப்புத் தொடர்பில் நடைமுறைக்கு பொருத்தமான மற்றும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பையும் கடனையும் மட்டும் வைத்துக் கொண்டு நாட்டினது பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொள்ளவே முடியாது.

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு முதலில் தீர்வினைப் பெற்றுத் தாருங்கள் நாம் வடக்கு கிழக்கு மாகாணங்களை நாட்டினது பொருளாதார கேந்திர நிலையங்களாக மாற்றிக் காட்டுகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்குத் தயாராகவே இருக்கின்றது.

மேலும் இந்த விடயத்தில் புலம்பெயர் தமிழ் தரப்புக்கள் என்றும் தயாராகவே இருக்கின்றன. ஆனால் அதற்கு முன்னர் மிக நீண்டகாலமாகவே தொடரும் எமது இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்க்கமான முடிவு காணப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மேலும் குறிப்பிட்டார்.