சுரேஷ் பிரேமச்சந்திரன்

சுரேஷ் பிரேமச்சந்திரன்

“கோட்டாயாய அரசின் முகவர்களாக மாறியுள்ள கஜேந்திரர்கள்.” – சுரேஷ் பிரேமச்சந்திரன் சாடல் !

“தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் எதை செய்ய நினைக்கிறார்களோ அதனை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள். அதாவது தற்போது அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு வடக்கின் முகவர்களாக செயற்படுகின்றார்கள் என்றுதான் கூற வேண்டும்.” என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

13வது திருத்தச் சட்டத்தினை நாம் தமிழரின் தீர்வாக ஒரு போதும் ஏற்கவில்லை அதனை ஏற்க போவதும் இல்லை. ஆனால் தற்போதுள்ள பூகோள அரசியல் நிலையில் தமிழ் மக்களை பாதுகாக்க அதாவது வடக்கில் இராணுவ மயமாக்கல், சிங்கள குடியேற்றங்களைத் தடுத்து தமிழ் மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக ஏற்கனவே இந்தியாவின் தலையீட்டில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியே 6 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றின் மூலம் அனுப்பி வைத்துள்ளோம்.

அந்த கடிதத்தின் தொடர்ச்சியாக நாம் டெல்லி சென்று இந்திய பிரதமரை சந்தித்து அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம். தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மக்கள் மத்தியில் போலிப் பிரசாரத்தினை மேற்கொள்வது போல நாங்கள் 13 வது திருத்தச்சட்டத்தை தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் எதை செய்ய நினைக்கிறார்களோ அதனை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள். அதாவது தற்போது அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு வடக்கின் முகவர்களாக செயற்படுகின்றார்கள் என்றுதான் கூற வேண்டும்.

குறிப்பாக அரச தலைவர் தேர்தலில் கோட்டாபய போட்டியிடும் போது வடக்கு மக்களின் வாக்களிப்பு எனக்கு தேவையில்லை ஆதனால் தேர்தலை புறக்கணியுங்கள் என்று கூறியிருந்தார். அதனையே அந்த தேர்தலின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செய்திருந்தார்கள்.

அதாவது அந்த தேர்தலை புறக்கணிக்குமாறு கூறியிருந்தார்கள் தற்போது கோட்டாபய கூறுகின்றார் 13வது திருத்தம் தேவையில்லை அபிவிருத்தி மட்டும் போதும் என, அதேபோல் அரசாங்கத்தில் உள்ளவர்களும் அதனை கூறுகின்றார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் வடக்கில் அந்தக் கோரிக்கையினையே செயற்படுத்துகின்றார்கள். கட்சியிலிருந்து மணிவண்ணன் பிரிந்து சென்றுவிட்டதால் தமது கட்சியை மணிவண்ணன் கொண்டு சென்று விடுவார் என்பதற்காக கட்சியில் உள்ளோருக்கு ஏதாவது ஒரு வேலையை கொடுக்க வேண்டும் தானே அதற்காகத்தான் 13வது திருத்தச் சட்டத்தினை சவப்பெட்டியில் வைத்து மக்கள் மத்தியில் ஊர்வலமாக கொண்டு செல்கிறார்கள்.

அவர்கள் தமது கட்சியை காப்பாற்றுவதற்காக இவ்வாறு போலி பிரச்சாரத்தினை மேற்கொள்கிறார்கள். மக்களை ஏமாற்றி கோட்டாபய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்படுகின்றார்கள் எனவே மக்கள் போலிப் பிரசாரங்களை நம்ப கூடாது எனவும் தெரிவித்தார்.

வடக்கில் பைசர் தடுப்பூசி மையங்களை உருவாக்குங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

கொழும்பு இராணுவ வைத்தியசாலைகளில் போடும் பைசர் தடுப்பூசியை வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களிலே போடுவது பலருக்கு வாய்ப்பாகுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இன்று (30) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாணங்களை தாண்டிச் செல்ல தடை செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், அவ்வாறு செல்வதாக இருந்தால் பல்வேறுபட்ட அனுமதியைப் பெற்று செல்ல வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. ஆகவே வெளிநாடுகளிற்கு செல்வோருக்கு பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இலகுவாக வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களில் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கான ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.

மாகாணங்களை தாண்டி பிரயாணம் செய்ய முடியாத சூழலில் இவ்வாறு கொழும்புக்குச் சென்று தடுப்பூசியை பெறும் நடவடிக்கை சிறந்த ஒன்றாக இருக்க முடியாது. ஆகவே இங்கு எவ்வளவு மாணவர்கள் தடுப்பூசிக்கு விண்ணப்பம் செய்திருக்கிறார்களோ அவர்களுக்குரிய தடுப்பூசிகளை உரிய பகுதிகளில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆகவே, இலங்கை அரசாங்கம், சுகாதார பிரிவு இதிலே தலையிட்டு வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு போன்ற இடங்களில் தடுப்பூசி மையங்களை உருவாக்குவதன் மூலம் குறித்த மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இலகுவாக இருக்கும்.

வடமாகாண ஆளுநரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மாணவர்கள் நலன் கருதி தடுப்பூசியை வடக்கு மாகாணத்தில் பெற்றுக்கொடுக்க ஆவண செய்ய வேண்டும் என்றார்.

“வடக்கில் சிங்களக் குடியேற்றங்களுக்கு அரசின் உதவி ஒத்தாசை கிடைக்கும் என்பதை மறைமுகமாக சொல்லவே ஜனாதிபதி வவுனியாவின் சிங்கள கிராமத்துக்கு விஜயம் செய்கிறார்.” – சுரேஷ் பிரேமச்சந்திரன்

“வடக்கில் சிங்களக் குடியேற்றங்களுக்கு அரசின் உதவி ஒத்தாசை கிடைக்கும் என்பதை மறைமுகமாக சொல்லவே ஜனாதிபதி வவுனியாவின் சிங்கள குடியேற்ற கிராமத்துக்கு விஜயம் செய்கிறார்.” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணை ஊடகப் பேச்சாளரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வவுனியா மாடவட்டத்தின் சிங்களக் கிராமத்துக்கு இன்று வருகை தருவது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது:-

கோட்டாபய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டது முதல் தான் ஒரு சிங்கள – பௌத்த மேலாதிக்க சிந்தனையில் இயங்குபவன் என்பதை சொல்லிலும் செயலிலும் நிரூபித்து வருகின்றார். அதன் ஒரு கட்டமே அவரின் வவுனியாவின் சிங்களக் கிராமத்துக்கான வருகை.

போரின் பின்னர், தமிழ் மக்களின் பரம்பரைக் காணிகளை பிடித்து உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றக் கிராமமே கலாபோகஸ்வௌ. போரால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எத்தனையோ தமிழ் கிராமங்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவை எவற்றுக்கும் செல்லாமல், சிங்களக் கிராமம் ஒன்றுக்கு கோட்டாபய செல்கின்றார்.

தமிழ் மக்களுடன் நல்லெண்ணத்தை வளர்ப்பது என்பது அவரது அகராதியில் கிடையவே கிடையாது. சிங்கள – தமிழ் மக்களுடன் ஓர் உறவை ஏற்படுத்தும் சிந்தனையும் அவருக்கு கிடையாது.

சிங்களக் குடியேற்றங்களை தமிழர் தாயகத்தில் ஊக்குவிப்பதற்கும், அவ்வாறு குடியேறியவர்களுக்கு அரசின் உதவி ஒத்தாசைகளை வழங்குவதுமே அவரது பயணத்தின் நோக்கமாக இருக்கின்றது. அவர் இதன் ஊடாக சிங்கள மக்களுக்கு சொல்லும் செய்தியும் அதுதான்.

தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து ஒரு துரும்பும் எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது என்பதுதான் அவரின் நோக்கம்” – என்றார்.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ அவர்கள் பதவியேற்று 16 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அவர் இது வரை வடக்கின் எந்த பகுதிக்கும் விஜயம் செய்திராத நிலையில் இன்றைய விஜயமே வடக்கிற்கான முதல் விஜயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“புதிய அரசாங்கமானது பௌத்த கோயில்கள் கட்டுவது, பௌத்த புராதன சின்னங்களைப் பராமரிப்பது என பல திட்டங்களின் கீழ் தமிழ் மக்களின் காணிகளைத் தொடர்ந்து கபளீகரம் செய்கிறது” – சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு !

“புதிய அரசாங்கமானது பௌத்த கோயில்கள் கட்டுவது, பௌத்த புராதன சின்னங்களைப் பராமரிப்பது என பல திட்டங்களின் கீழ் தமிழ் மக்களின் காணிகளைத் தொடர்ந்து கபளீகரம் செய்து வருகின்றது. இதனை அரசாங்கம் நழறுத்த வேண்டும்” என  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தன்னுடைய கோரிக்கையினை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்  சுரேஷ் பிரேமச்சந்திரன் . அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தனது ஒரு வருட நிறைவு விழாவில் தான் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்டவராகவும் சிங்கள மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். கடந்த ஒருவருட சாதனைகளை அவர் பட்டியலிடும் பொழுது, முதலாவதாக கிழக்கிலங்கையில் சிங்கள பௌத்த புராதனச் சின்னங்களை அடையாளமிடுவதற்கான ஆணைக்குழுவை நான் நியமித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரையை கபளீகரம் செய்து, அதனை சிங்கள விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல, வடக்கு-கிழக்கின் முக்கியமான பல பகுதிகளை முழுமையாக கபளீகரம் செய்து, அங்கும் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, நாயாறு போன்ற பகுதிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையானது இந்த பிரதேசத்தின் நிர்வாகத்தைக் கையேற்பதன் மூலம் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபருக்கோ? அல்லது பிரதேச செயலருக்கோ? எத்தகைய நிர்வாக அதிகாரமும் இல்லாமல் செய்து, அதனை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கையேற்பதன் ஊடாக அதனை முழுமையான சிங்களக் குடியேற்றத்திற்கு உட்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருப்பினும்கூட, அடுத்த கட்டங்களில் என்ன நடக்குமென்று கூறமுடியாது. இதனைப் போன்றே, திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் ஏறத்தாழ ஒன்பது காணித்துண்டுகள் அடையாளம் காணப்பட்டு பௌத்த கோயில்கள் கட்டுவதற்காக அடையாளமிடப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தென்னமரவாடி கிராமத்தில் 20,2343 ஹெக்டெயர் நிலப்பரப்பும் அதே பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புல்மோட்டையில் மூன்று வெவ்வேறு இடங்களில் 11ஹெக்டெயர், 7 ஹெக்டெயர், 1ஹெக்டெயர் நிலப்பரப்பு காணிகளும் குச்சவெளி திரியாய் கிராமத்தில் 20ஹெக்டெயர் நிலப்பரப்பும் குச்சவெளி கும்புறுபிட்டி கிழக்கு கலப்பையாறு கிராமத்தில் 20 ஹெக்டெயர் நிலப்பரப்பும் குச்சவெளி புல்மோட்டை 3 பிரதேசத்தில் 6ஹெக்டெயர் நிலப்பரப்பும் குச்சவெளி புல்மோட்டை 1 நிலப்பரப்பில் 13 ஹெக்டெயர் நிலப்பரப்பும் அதே பிரதேசத்தில் மற்றொரு பகுதியில் 19 ஹெக்டெயர் நிலப்பரப்பும் பௌத்த கோயில்கள் கட்டுவதற்காக அரசாங்கம் ஒப்புதலளித்து வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களும் திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட குச்சவெளி பிரதேச எல்லைப்புற கிராமங்களும் சிங்கள மயமாக்கப்படுவதற்கான அடிப்படையிலேயே புத்த கோயில்களுக்கான காணிகளை கையகப்படுத்துவதும் முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின்கீழ் காணிகளை அபகரிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ்பேசும் மக்கள் செறிந்துவாழும் குச்சவெளி போன்ற ஒரே பிரதேச செயலகப்பிரிவில் ஒன்பதுக்கும் மேற்பட்ட பௌத்த கோயில்களைக் கட்டுவதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்துவதன் நோக்கம் என்ன? சிங்கள மக்களே இல்லாத இத்தகைய பிரதேசத்தில் மிக நெருக்கமான முறையில் பௌத்த கோயில்களைக் கட்டுவதற்கு முயற்சிப்பதும், இதனை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் காணிகளை வழங்க முன்வருவதும், மிகப் பாரிய அளவிலான சிங்கள பௌத்த விஸ்தரிப்பினை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகும். இது அந்தப் பிரதேசங்களில் பெரும்பான்மையாக வாழும் சிறுபான்மை தேசிய இனங்களை சிறுபான்மையாக்கும் முன்னெடுப்பாகும்.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை, போன்ற எல்லைப்புற பிரதேசங்களிலும் வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களின் எல்லைப்புற பிரதேசங்களிலும் அங்கு வசித்து வந்த தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வந்திருக்கின்றனர். இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் தமிழ் மக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. வடக்கிலும் கிழக்கிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் கடந்த எழுபது வருடங்களாக முற்றுப்பெறாத நிலையில், இந்த புதிய அரசாங்கமானது பௌத்த கோயில்கள் கட்டுவது, பௌத்த புராதன சின்னங்களைப் பராமரிப்பது, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினூடாக காணிகளை நிர்வாகம் செய்வது போன்ற பல திட்டங்களின் கீழ் தமிழ் மக்களின் காணிகளைத் தொடர்ந்து கபளீகரம் செய்துவருவதையே மேற்கண்ட நடவடிக்கைகள் தெளிவுபடுத்தி நிற்கின்றது.

இலங்கை அரசாங்கங்களின் இத்தகைய நடவடிக்கையானது தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு-கிழக்கின் நிலத்தொடர்ச்சியை இல்லாமல் செய்து வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக இரண்டு பகுதிகளாக மாற்றுவதற்கான முயற்சியே ஆகும். இதனூடாக தமிழ் மக்களின் இருப்பும் அடையாளமும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

நீதிமன்றங்களினூடாக பெற்றுக்கொள்ளப்படும் தற்காலிகத் தடை உத்தரவுகள் என்பது இவற்றுக்கான நிரந்தரத் தீர்வாக அமையாது. வடக்கு-கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவை தொடர்பாக காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசாங்கத்தின் இத்தகைய கபடத்தனமான சூழ்ச்சிகளை முறியடித்து, தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.” என அவர் தன்னுடைய கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.