டிரொக்ஸ் புரோகிராம்

டிரொக்ஸ் புரோகிராம்

லண்டன் பழைய மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! உங்கள் பழைய மாணவர்களுக்கு இலவச ‘டிரொக்ஸ் புரோகிராம்’ ஒன்றை ஆரம்பியுங்கள்!!!

ஞாயிறு 23/10/2021 யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் லண்டன் ஹரோவில் மாலை மூன்று மணிக்கு கூடுகின்றனர். இந்தச் சந்திப்பில் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் மட்டுமல்ல ஏனைய கல்லூரிகளின் பழைய மாணவர்களும் மதுவுக்கும் போதைவஸ்துக்கும் அடிமையான தங்கள் நண்பர்களை மீட்பதற்கான கூட்டுத் திட்டம் ஒன்றை முன் வைக்க வேண்டும். இந்தப் பழைய மாணவர்களின் குடியும் போதைப் பொருள் பாவனையும் நூற்றுக்கணக்கான குடும்பங்களைச் சீரழித்து வருகின்றது. இதனால் மற்றுமொரு தலைமுறைச் சிறார்கள் மோசமான பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்த பழைய மாணவர் சங்கங்கள் தலையீடுகள் மற்றும் இவர்களின் நிதி உதவியில் யாழ்ப்பாணத்தினதோ வடக்கினதோ கல்விநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இலங்கையில் கல்வியில் பின் தங்கிய மாகாணமாகவோ மாவட்டமாகவும் தமிழ் பிரதேசங்களே உள்ளன. இந்த பழைய மாணவர் சங்கங்கள் பாடசாலை அதிபர்களை சோம்பேறிகளாகவும் அவர்களை மோசடி செய்யத் தூண்டுபவர்களாகவுமே உள்ளனர். இந்த பழைய மாணவர்கள் ஊருக்குப் போகும் போது கிலுகிலுப்பு காட்டி வருவதைவிட அங்கு பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை. இவ்வாறான அரசு செய்ய வேண்டிய வேலைகளை பழைய மாணவர் சங்கங்கள் செய்ய வேண்டிய தேவையில்லை என முன்னாள் கல்விச்செயலாளர் ரவீந்திரன் லண்டன் வந்திருந்த போது மிகத் தெளிவாகவே சுட்டிக்காட்டி இருந்தார்.

இன்று யாழ் இந்துவின் மைந்தர்கள் மட்டுமல்ல மானிப்பாய் இந்துக் கல்லூரி, சென்ஜோன்ஸ், சென்ரல் கொலீஜ், மகாஜனாக் கொலீஜ் என்று பழைய மாணவர் சங்கம் நடத்துபவர்கள் இங்குள்ள தங்கள் உறுப்பினர்களுக்கு ‘டிரொக்ஸ் புரோகிராம்’ செய்ய வேண்டும். மேற்குறிப்பிட்ட பாடசாலைகளைச் சேர்ந்த பல பழைய மாணவர்கள் மதுவுக்கும் போதைப் பொருட்களுக்கும் அடிமையாகி பல பெண்களின் வாழ்வைச் சீரழிக்கின்றனர். இவர்கள் மதுவுக்கும் போதைப் பொருட்களுக்கும் அடிமையானதால் இவர்களின் பிள்ளைகளின் வாழ்வும் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றது. இந்த இந்துக் கல்லூரிகளினதும் கிறிஸ்தவ கல்லூரிகளினதும் மைந்தர்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு டிரொக்ஸ் புரோகிராம் ஒன்றை முன்வைத்து செயற்பட்டால் அழிந்துகொண்டிருக்கின்ற பலரின் வாழ்வைச் சீர்செய்ய முடியும். கோட்டும் ரையும் கட்டி கனவான்களாக வலம் வருவதைவிட்டுவிட்டு முதலில் எம் பெண்கள் சமூகத்தை, குழந்தைகளை இந்த குடிக்கு அடிமையானவர்களிடம் இருந்து காக்க முயற்சிக்கவும்.

கற்க கசடறக் கற்ககற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக!