டெலோ

டெலோ

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும்.”- கஜேந்திரகுமார்

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியுடனான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சந்திப்பு நடைபெற்ற போதும் கூட இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு தொடர்பில் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் நடக்கவில்லை என்பது ஊடகங்கள் மூலம் உறுதியாகின்றது.

அதேசமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பக்கத்திலிருந்து 13ஆம் திருத்தத்தை அமல்படுத்துவதற்கான அழுத்தங்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிப்படுத்துகின்றன. இது சம்பந்தமாக நாம் தெரிவித்து வந்த கருத்துக்களானது மீண்டும் மீண்டும் உறுதியாவதாகவே கருதுகிறோம்.

கடந்த காலங்களில் புலம்பெயர் தமிழர்களை தடை செய்த அரசு தற்போது பொருளாதார நெருக்கடி எழுந்துள்ளபோது அந்த புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கின்றது. புலம்பெயர் தமிழர்கள் மீதான தடையை நீக்குவதற்கு கூட அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி உள்ளது. இது எதை காட்டுகிறது என்றால் தடை என்பது இலங்கை அரசாங்கத்தினுடைய தேசிய பாதுகாப்பு சம்பந்தமான விடயம் அல்ல என்பதே ஆகும்.

13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற ரெலோ, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே. அவ்வாறெனில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும் என்றார்.

“சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை முற்றுமுழுதாக நிர்மூலமாக்கிய வரலாறு டெலோவுக்கே உண்டு.” – கருணாகரம் ஜனா பெருமிதம் !

தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு நெடிய நீண்ட வரலாறு இருக்கின்றது எனவும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை முற்றுமுழுதாக நிர்மூலமாக்கிய வரலாறு டெலோவுக்கே உண்டு எனவும் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) தொடர்பில் அண்மைக் காலங்களில் வெளிவந்த கருத்துக்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆரம்பிப்பதற்கு முயற்சி எடுத்த அமைப்பு முதலாவதாகச் சந்தித்த கட்சி தமிழீழ விடுதலை இயக்கம் தான். அதனைத் தொடர்ந்து தான் ஏனைய கட்சிகளை அந்த அமைப்பு சந்தித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு ஒரு பெரிய நீணட வரலாறு இருக்கின்றது. தமிழீழ விடுதலை இயக்கம் தான் ஆயுதப் போராட்ட இயக்கங்களிலே முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். இதில் சில காலம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கூட இருந்ததாக வரலாறுகள் உண்டு.

தமிழீழ விடுதலை இயக்கம் தான் ஒரு பாதுகாப்புப் படையினரின் அறணை முற்றுமுழுதாக அழிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு அதனைக் காணொளியாகப் படைத்தது. 1984ம் ஆண்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை முற்றுமுழுதாக நிர்மூலமாக்கிய வரலாறு டெலோவுக்கே உண்டு. ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்குள் பல முரண்பாடுகள் ஏற்பட்டது வெளிப்படையான உண்மை. 2001லே கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து நாங்கள் எல்லோரும் ஒன்றாகினோம். இன்னுமொரு உண்மையும் இருக்கின்றது, ஆயுதப் போராட்ட இயக்கங்களாக இருந்து அரசியற் கட்சிகளாக போராட்ட இயக்கங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்பு 1989ம் ஆண்டில் இருந்து இன்றுவரைக்கும் தொடர்ச்சியாக நடைபெற்ற ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் தமிழீழ விடுதலை இயக்கம் மாத்திரம் தான் பாராளுன்ற உறுப்புரிமையை வகித்திருந்தது.

ஆனால் வரலாறு தெரியாத சில பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியத்தின் குழந்தைப் பிள்ளைகள், 2009 ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியத்துக்குள் வந்தவர்கள் கூறுகின்றார்கள் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவும் ஒரு கட்சி என்று மக்களுக்குக் காண்பிப்பதற்காக ஜெனீவாவுக்கு அனுப்பிய கடிதத்தில் கையொப்பம் வைத்துள்ளது என்று. தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு நெடிய நீண்ட வரலாறு இருக்கின்றது. எமது கட்சியின் 50வது ஆண்டு பூர்த்தியை நாங்கள் 2019ம் ஆண்டு கொண்டாடியுள்ளோம். 52வது ஆண்டிலே தமிழீழ விடுதலை இயக்கம் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்த விடயங்கள் தெரியாமல் கருத்துக்கள் கூறுவது சிறுபிள்ளைத் தனமானது.

கட்சியிலே தேசியத்துடன் நீண்ட காலம் இருக்க வேண்டும், வளர வேண்டும், பக்குவம் அடைய வேண்டும், அதற்குப் பின்பு இந்த வரலாறுகளைச் சரியாகப் படிக்க வேண்டும். எம்மைப் பொருத்தமட்டில் சுமார் 39 வருடங்களாக போராட்டம், அரசியல் தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்ற வரலாற்றுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்களுக்கு கடந்த கால வரலாற்றினை யாரும் சொல்லித் தரத் தேவையில்லை. ஆனால் சிலருக்கு இந்த வரலாறுகளை யாராவது சொல்லிக் கொடுக்க வேண்டும் அல்லது ஏதாவது புத்தகத்தில் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த வரலாறுகளைப் பற்றி அறிய வேண்டுமாக இருந்தால் அவற்றைச் சரியானவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்

தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய நடவடிக்கை தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் அதிருப்தி !

தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய தேசியப்பட்டியலை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் அம்பாறை மாவட்ட கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவருக்கு அந்த ஆசனம் வழங்கப்பட்டது.  இந்நிலையில் இந்த முடிவை எடுக்கும் போது கூட்டமைப்பினுடைய தலைவர் தங்களுடன் கலந்துரையாடவில்லை என நேற்றையதினம்  மன்னாரில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் கருத்தையும் கேட்டு அந்த கருத்தின் பிரகாரம் முடிவுகளை எடுத்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும். தன்னிச்சையாக தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமையை வண்மையாக கண்டிக்கின்றேன்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஆசன ஒதுக்கீடானது பங்காளிக் கட்சிகயான புளொட் மற்றும் டெலோ ஆகிய இரு கட்சிகளுடன் எவ்வித ஆலோசனைகளும் நடத்தாமல் தேசியப்பட்டியல் ஆசனத்தை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கி வைத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்திற்கு குறித்த தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமைக்கு டெலோ எவ்வித எதிர்ப்பும் இல்லை. ஏனைய மாவட்டங்களில் பிரதி நிதித்துவம் இருக்கின்றமையினால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஏனையவர்களினால் மிகவும் மோசமான செயற்பாடுகளினால் பாதீக்கப்படுகின்றனர்.

அடக்கு முறைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கு ஒரு பிரதி நிதித்துவம் தேவை. அந்த பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்குவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

ஆனால் ஜனநாயக ரீதியில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடையத்திலாவது கலந்தாலோசிக்க வேண்டிய நிலை உள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் கருத்தையும் கேட்டு அந்த கருத்தின் பிரகாரம் முடிவுகளை எடுத்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்.

சம்பந்தன் தன்னிச்சையாக குறித்த தெரிவை மேற்கொண்டு இருக்கின்றார் என்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. சின்ன விடையத்திலே இவ்வாறு நடந்து கொண்டால் இனி வரும் காலங்களில் சரியான ஒரு முடிவை மேற்கொள்ளுவதற்கான செயற்பாடுகளை செய்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த கருத்துக்களை நாங்கள் முன் வைக்கின்றோம்.

எங்களோடும் கலந்து ஆலோசித்து எடுக்கப்படுகின்ற முடிவுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற அனைவரும் ஆதரவை வழங்குவோம்.

ஏற்கனவே எமக்கு ஆசனங்கள் குறைவடைந்துள்ளது. எங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை என்கின்ற நிலைப்பாடு உள்ளது. அந்த வகையிலே இவ்வாறான சம்பவங்கள் காலப்போக்கில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும்.

மாவை சேனதிராஜாவிடம் கூட ஆலோசனைகள் செய்தார்களா? என்று தெரியவில்லை. குறித்த தேசிய பட்டியல் ஆசனமானது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். தன்னிச்சையான முடிவை நாங்கள் எதிர்க்கின்றோம். இவ்வாறான தன்னிச்சையான முடிவு இனி எந்த காலத்திலும் மேற்கொள்ளப்படக் கூடாது.

சம்மந்தன் ஒரு வயது முதிர்ந்தவர்.அனுபவம் உள்ளவர். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவராக உள்ளவர். இவ்வாறான சம்பவங்கள் எமது மக்களை சஞ்சலத்திற்கு உள்ளாக்கும்.

எனவே குறித்த தன்னிச்சையான செயற்பாட்டிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என அவர் அங்கு குறிப்பிட்டார்.