நினைவேந்தல் தடை

நினைவேந்தல் தடை

“விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்பது முழு உலகக்கும் தெரியும்.” – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர அரசு ஒருபோதும் தடைவிதிக்கவில்லை. ஆனால், போரில் உயிரிழந்த பயங்கரவாதிகளை நினைவேந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. நாட்டில் இன நல்லிணக்கம் ஏற்படவேண்டும் எனில் பயங்கரவாதிகளை நினைவுகூருவது முறையற்ற செயலாகும்.” என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசின் காலத்தில் மாவீரர் வாரம் கடைப்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது ஏன் அனுமதி வழங்கப்படுவதில்லை என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நவம்பர் 27ஆம் திகதி பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நாள் என்று உலகுக்கே தெரிந்த விடயம். இந்தநிலையில் அவர்களை பொதுமக்கள் என்ற ரீதியில் நினைவேந்துவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் முற்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

சட்டத்தின் பிரகாரம் காவற்துறையினர் செயற்படுகின்றனர். அதற்கமைய பயங்கரவாதிகளை நினைவேந்துவதை தடை செய்வதற்காக காவற்துறையினர் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவுகளைப் பெற்றுள்ளனர். இது எவரையும் பழிவாங்கும் நோக்கமல்ல. காவற்துறையினர் தமது கடமைகளை உரியவாறு செய்கின்றனர். எனவே, எந்தச் சந்தர்பத்திலும் பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளை நினைவுகூர எமது அரசு அனுமதி வழங்காது.

நல்லாட்சி அரசு பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதி வழங்கிய காரணத்துக்காக எமது அரசு நாட்டின் சட்டத்தை மீறி செயற்படாது. நல்லாட்சி அரசின் ஏற்றுக்கொள்ள முடியாத சில செயல்களால்தான் நாடு இன்று மோசமான நிலைக்கு வந்துள்ளது. நாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் எமது அரசு ஈடுபட்டு வருகின்றது.

நாட்டில் இன நல்லிணக்கம் ஏற்படவேண்டும் எனில் பயங்கரவாதிகளை நினைவுகூருவது முறையற்ற செயலாகும். இது இனங்களுக்கு இடையே பகைமையையே ஏற்படுத்தும்” – என்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் புலிகள் அமைப்புடனான பேச்சுக்கு அரச குழுவுக்கு தலைமை தாங்கியவர் ஜி.எல்.பீரிஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.