நிமல் சிறிபால டி சில்வா

நிமல் சிறிபால டி சில்வா

மக்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை பிக்பொக்கெட் அடிக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ – சஜித் பிரேமதாஸ சாடல் !

நாட்டின் அப்பாவி மக்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிக்பொக்கெட் அடிக்கப் பார்க்கிறார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (09) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலம் இது தொடர்பில் பேசியுள்ள அவர்,

நாட்டில் மிகப்பெரிய நிதியமாக ஊழியர் சேமலாப நிதியம் காணப்படுகிறது. இங்கு 3 ட்ரில்லியன் நிதி காணப்படுகிறது. இதனூடாக 250 பில்லியன் இலாபமாகப் பெறப்படுகிறது. இவ்வாறான நிலையில் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 25 சதவீத வரியை நிதி அமைச்சு அறவிட உள்ளது.

நாட்டின் அப்பாவி மக்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை நிதி அமைச்சர் பிக்பொக்கெட் அடிக்கப் பார்க்கிறார். தொழிலாளர்களின் பணத்திலிருந்து பில்லியன் கணக்காணப் பணத்தைப் பெற்று நிதி அமைச்சர் தனக்கு நெருங்கியவர்களை மகிழ்விக்கப்போகிறார். என தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

EPF, ETF நிதிகளை கொண்டு மேற்கொள்ளப்படும் முதலீடுகள் ஊடாகக் கிடைக்கப்பெறும் இலாபத்துக்கு வரியை செலுத்த வேண்டும் வருமான வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது என குறிப்பிட்டார்.

எனினும் EPF, ETFக்கு வரியை அறிவிடுவது தவறென தொழில் அமைச்சு கொள்கை ரீதியாக முடிவொன்றை எடுத்துள்ளது. இந்த முடிவை நாம் சில மாதங்களுக்கு முன்பாகவே இலங்கை வருமான வரித் திணைக்களம், திறைசேரி ஆகியவற்றுக்கு அறிவித்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கீடு செய்த எதிர்க்கட்சி தலைவர் சஜித், ஊழியர் சேமலாப நிதியத்துக்கு வரி அறவிடுவதை தொழில் அமைச்சு எதிர்க்கிறது என்றால், நிதி அமைச்சு எவ்வாறு இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டது எனவும் கேள்வி எழுப்பினார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வரி அறவிடுவதில் இருந்து EPF, ETF நிதியங்களை விடுவிக்க வேண்டும் என சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதனூடாக இப்பிரச்சினைக்கு இலகுவில் தீர்வை காண முடியும் என்றார்.

“வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பி தொழில் இல்லாது இருப்போருக்கு வட்டியில்லாத கடன்” – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று தற்போது நாடு திரும்பி தொழில் அற்று உள்ளோருக்கு 1 இலட்சம் ரூபா வரையான உதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(02.02.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிததுள்ளதாவது,
அவர்களுக்கு வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க 50,000 ரூபா வரையான வட்டியில்லா கடனை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடாக வழங்கவும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
தொழிலை இழந்து நாட்டுக்கு வரும் இலங்கையர்களுக்கு 50,000 ரூபா வரை உதவித்தொகை வழங்கப்படும். எனினும் இதனை 100,000 வரை அதிகரிக்குமாறு நான் கேட்டுக்கொண்டேன். மேலும் 50,000 ரூபாவை வட்டியில்லா கடனாக வழங்குமாறு கேட்டேன். தொடர்ந்தும் நாட்டில் இருக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கு இந்த உதவியை வழங்குமாறு நான் அதிகாரிகளை பணித்துள்ளேன்’ எனவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுச் செய்து வெளிநாடு சென்ற பணியாளர்களுக்கு நாடு திரும்ப தேவையான விமான பயணச் சீட்டை பெற்றுக் கொடுக்குமாறும் அமைச்சர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இன்னும் இணக்கம் தெரிவிக்கவில்லை” – அமைச்சர் ரமேஷ் பத்திரன

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இன்னும் இணக்கம் தெரிவிக்கவில்லை” என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

எனினும், சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தீவிரமாக ஈடுபட்டுவருகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“பெருந்தோட்டக் கம்பனிகளுடன் இவ்விவகாரம் தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. எனினும் தீர்வு எட்டப்படவில்லை. இம்மாதத்துக்குள் முடிவொன்றை எடுப்பதற்கு எதிர்ப்பார்க்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுக்கப்படுமென்ற உறுதிமொழியை அரசாங்கம் வழங்கியிருந்தது.

தமக்கு அடிப்படை நாட் சம்பளமாகவே ஆயிரம் ரூபாய் வேண்டுமென தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுபற்றி அரச தரப்பில் இருந்தோ அல்லது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்க தரப்புகளிலிருந்தோ இன்னும் உரிய விளக்கம் வழங்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடமையில் ஈடுபட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் உயிரிழக்கும் ஊழியர்களுக்கு 20 இலட்சம் நட்டஈட்டு!

வேலைத்தளத்தில் அல்லது கடமையில் ஈடுபட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் உயிரிழக்கும் ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 5 இலட்சம் ரூபா நட்டஈட்டு தொகையை 20 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒருவர் உயிரிழந்தால் அந்த குடும்பம் முழுமையாக நிர்க்கதியற்று இருக்கும் சந்தர்ப்பத்தில் 5 இலட்சம் ரூபா நட்டஈடு எந்த விதத்திலும் போதுமானதாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். தொழிலாளர் திணைக்களத்தில் இடம்பெற்ற தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் உரையாற்றும் போது அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது வரையில் நிலுவையில் உள்ள தொழிலாளர் நட்டஈட்டு வழக்குகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.