பஷில்ராஜபக்ஷ

பஷில்ராஜபக்ஷ

“இலங்கையில் அடிப்படைவாதம், பயங்கரவாததிற்கு இனியும் இடமில்லை.” – வரவுசெலவுத்திட்ட உரையில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ !

“தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படும், இந்த நாட்டில் அடிப்படைவாதம், பயங்கரவாததிற்கு இனியும் இடமில்லை.” என வரவு செலவு திட்ட உரையில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 76 ஆவது வரவுசெலவுத்திட்டத்தையும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரண்டாவது வரவு செலவு திட்டத்தையும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் சமர்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் தொற்றில் நாடு பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பூகோள சவால்கள் என சகல விதத்திலும் நாம் சவால்களை எதிர்கொண்டு வருகின்றோம். 500 பில்லியனுக்கும் அதிகமான  ரூபா வருமானம் இழந்த நாடாக உள்ளோம். மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளும் நாடாக மாற்றம் கொண்டுள்ளோம். எனினும் சகல சவால்களையும் வெற்றி கொள்ளும் திறம் எம்மிடத்தில் உள்ளது.

அமைச்சர்கள், அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை மாதத்திற்கு ஐந்து வீதத்தால்  குறைக்கவும், தொலைபேசி கொடுப்பனவுகளை 25 வீதத்தால் குறைக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படும், இந்த நாட்டில் அடிப்படைவாதம், பயங்கரவாததிற்கு இனியும் இடமில்லை.  கொவிட் சவால்களை வெற்றிகொள்ளவும், மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த நாட்டை நீண்ட காலம் முடக்க நேர்ந்தது. மூன்றாம் அலையை தடுக்க கடுமையான தீர்மானங்கள் எடுக்க நேர்ந்தது.

ஆசிய கண்டத்தின் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட நாடாகவே இலங்கையை பலர் அடையாளபடுத்துகின்றனர்.  ஆசிய வலயத்தின் ஏனைய நாடுகளை விடவும் எம்மால் விரைவாக மீழ்ச்சி காண முடியும் என்ற நம்பிக்கை எம்மிடத்தில் உள்ளது. எனினும் சர்வதேச போதைப்பொருள் மாபியாக்குள் இலங்கையை சிக்கவைக்கும் முயற்சி இன்றும் பலமாக முன்னெடுக்கப்படுகின்றது. இளைஞர்களே இதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல்  வியாபார மாபியா, மற்றும் சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்தும் தரகர்கள் சமூகத்தில் கலந்துள்ளனர். இது குறித்து சகலரும் அவதானமாக இருக்க வேண்டும்.

உற்பத்தி பொருளாதாரத்திற்கு முன்னுரிமையும், நாட்டில் பொருளாதரத்தை உற்பத்தி பொருளாதாரத்தின் பக்கம் கொண்டுசெல்லும் வேலைத்திட்டம் அவசியமாகின்றது. இந்த ஆண்டில் சுற்றுலாத்துறை மூலமாக கிடைத்த 5 பில்லியன் ரூபா கிடைக்காது போயுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளின் மூலமாக கிடைக்க வேண்டிய நிதியும் குறைவடைந்துள்ளது. கடன் நெருக்கடி, முழு வருமானத்திற்கு சமமான படு கடனில் விழுந்துள்ளோம்.  வரவு செலவு திட்டத்தின் அதிக செலவு கடன்களுக்கான வட்டியை செலுத்தவே ஒதுக்கப்பட்டுள்ளது.

கடன் நெருக்கடிக்கு மத்தியிலும் 2 பில்லியன் டொலர் பெறுமதியான சர்வதேச பிணைமுறிகள் இரண்டினை செலுத்தியுள்ளோம்.  2018 ஏப்ரல் 2019 யூலை வரையில் 15 மாதங்களில் 6.9 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டிய பாரிய சுமை எமக்கு சுமத்தப்பட்டுள்ளது.

ஏற்றுமதி தொழிற்சாலைகளை மீண்டும் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சௌபாக்கிய நோக்கு திட்டத்தில் அதற்கான பரந்த வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்.  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஒரு சிறந்த தலைவருக்கான எடுத்துக்காட்டாக உள்ளார். வரவு -செலவு திட்டத்தில் அதற்கான சிறந்த வெளிப்பாடு ஏற்பட்டுள்ளது.

2022 வரவு செலவு திட்டத்தை உருவாக்கும் வேளையில் சௌபாக்கிய  நோக்கு திட்டத்தை முழுமையாக கவனத்தில் கொண்டே வரையப்பட்டுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை மாதத்திற்கு ஐந்து லீட்டரால் குறைக்கவும், தொலைபேசி செலவை 25 வீதத்தால் குறைக்கவும், மின்சாரத்தை சூரிய கலத்தினால் நிரப்பவும் யோசனை ஒன்றினை முன்வைக்கின்றேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ள 5 ஆண்டுகள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினால் போதும் என்ற யோசனையை 10 ஆண்டுகளாக அதிகரிக்க யோசனை, ஜனாதிபதி முறைமை உள்ளிட்ட சகல துறைகளுக்கும் இது பொருந்தும்.

அதேபோல் அரச சேவையில் ஓய்வு பெரும் வயதெல்லை 65 வயதுவரை நீடிப்பு, இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் நெருக்கடி ஏற்படாது

“நான் எடுத்த முயற்சி காரணமாகவே 16 கைதிகள் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.” – சுரேன் ராகவன்

“எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் நாட்டினுடைய பொருளாதாரத்தை பஷில்ராஜபக்ஷ மீட்டெடுப்பார் என்ற ஆழமான நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.” என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வவுனியா மாவட்டத்திலுள்ள நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வவுனியாவில் இடம்பெற்றது.

இதன்பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வன்னிமாவட்டத்தில் பொருளாதார, அரசியல் சமூகபிரச்சனைகள் இருக்கின்றன. இவற்றை கட்சி ரீதியான பிரிவினைகளை பார்த்து, செய்தால் மக்களுக்கு நன்மை செய்யமுடியாமல் போகும். தேர்தல் காலத்தி்ல் அரசியல் செய்வது வழக்கமானவிடயம். ஆனால் தேர்தலுக்கு அப்பாற்பட்டு ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

வன்னிமாவட்ட மக்கள் கொரோனா நோய்த்தாக்கத்தில் குறைந்தளவில் பாதிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. மக்களினுடைய பொறுப்புணர்ச்சியினாலேயே அது நடந்துள்ளதென நம்புகிறேன். அடுத்தவாரம் இந்த மக்களிற்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு இடம்பெறும். குறிப்பாக வன்னியில் உள்ள குளங்களை திருத்தவேண்டும். கமத்தினூடாக எமது பொருளாதாரம், மற்றும் சமூகம், வளர்ச்சியடைய இலகுவான வழி அதுவே.

அத்துடன் இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யும் கேந்திரமாக இலங்கை மாறியிருப்பதாக ஐக்கியநாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றுக்கொண்டுள்ளது. எமது மக்கள் நோயின்றி நலமாக வாழவேண்டும் என்று எடுத்த முயற்சியில் சில தடைகள் ஏற்ப்பட்டது உண்மையே. சில பொருளாதார திட்டங்களை ஏற்ப்படுத்தும் போது தடைகள் ஏற்படும்.

இதேவேளை கைதிகள் தொடர்பில் நான் எடுத்த முயற்சி காரணமாக 16 கைதிகளை அண்மையில் விடுதலைசெய்திருக்கிறோம். இதன் பணி மேலும் தொடரும். எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் இன்னுமொரு தொகுதி கைதிகளை விடுதலை செய்வதற்கு தாயாராக இருக்கிறோம். அவர்கள் விடுதலைபெற வேண்டும். “நான் எடுத்த முயற்சி காரணமாக 16 கைதிகளை அண்மையில் விடுதலைசெய்திருக்கிறோம்.

அவர்கள் பிழைசெய்திருக்கலாம். அவர்கள் கொண்ட நோக்கத்துடன் அவர்கள் செய்தது அரசுக்கோ அல்லது நீதிக்கோ பிழையாக இருக்கலாம். ஆனால் போர் முடிந்து 11 வருடங்களிற்கு பின்னர் பொது மன்னிப்புகொடுத்து அவர்கள் வாழவழிவிடப்பட வேண்டும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவன் நான். அத்துடன் காணாமல் போனோர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் புதிய சீர்சிருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

காணாமல் போனோருக்கான நிலையம் முழுமையாக இயங்கும் வகையில் தடைகளை நீக்கியிருக்கின்றோம். உடைந்த உறவினை வளர்த்தெடுத்து சமாதானத்தின் பாதையில் செல்லவேண்டும். நியாயமான விடயத்திற்காக இந்த நாட்டை வளர்த்தெடுக்கவேண்டும். இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியில் இருப்பது என்பதனை மறுக்ககூடாது. அதனை மறைப்பதில் ஒரு பலனும் இல்லை. எனவே பசில் மீது இருக்கும் நம்பிக்கை மூலமாக பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவரக்கூடிய திட்டங்களை எடுப்பதற்கான முழுமையான பொறுப்பினை கொடுக்கவேண்டும் என்று அரசாங்கம் முன்வந்துள்ளது.

எதிர்வரும் ஆறு மாதங்களிற்குள் அவரது வருகையின் நன்மையினை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். அவர் செய்வார் என்ற ஆழமான நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இந்தியாவில் நரேந்திரமோடி 45 புதிய அமைச்சர்களை நியமித்துள்ளார். எனவே புதிய அமைச்சுக்களை உருவாக்குவதோ அல்லது புதியவருக்கு அமைச்சினை வழங்குவதோ அரசியலில் புதியவிடயமல்ல.எனவும் தெரிவித்துள்ளார்.