பாபர் அசாம்

பாபர் அசாம்

விராட் கோஹ்லியை பின்தள்ளி ஐ.சி.சி. தரப்படுத்தலில் முதலிடத்தை பிடித்த பாபர் அசாம் – இருபதுக்கு 20 ல் மட்டும் இலங்கை வீரர்கள் இருவர் முதல் 10 இடங்களில் !

ஐ.சி.சி.யின் சர்வதேச ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார்.

ஐ.சி.சி.யின் சர்வதேச கிரிக்கெட் ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரப்படுத்தல் இன்று வெளியிடப்பட்டது.

இதன்படி சர்வதேச ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் 857 புள்ளிகளுடன் முதலிடத்திலிருந்த விராட் கோஹ்லியை பின்தள்ளிய பாபர் அசாம் 865 புள்ளிகளைப் பெற்று முதலிடத்துக்கு முன்னேறினார்.

முதலிடத்திலிருந்த விராட் கோஹ்லி 856 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டதுடன், ரோஹித் ஷர்மா 825 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்த தரப்படுத்தலின் முதல் 10 வீரர்களில் இலங்கையர் எவரும் இல்லை. இந்த தரப்படுத்தலில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அஞ்சலோ மெத்தியூஸ் 575 புள்ளிகளுடன் 39 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிப் பிரிவில் மாத்திரம் இலங்கையர்கள் மூவர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கைக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால் பதித்த பங்களாதேஷ், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அண்மையில் நுழைந்த ஆப்கானிஸ்தான் அணிகளின் வீரர்கள்கூட இலங்கையர்களைக் காட்டிலும் சிறப்பான தரவரிசைகளில் உள்ளனர்.

இதில் சர்வதேச இருபதுக்கு 20 தனிநபர் தரப்படுத்தல்களில் லக்சான் சந்தகன், வனிந்து ஹசரங்க மற்றும் சமரி அத்தபத்து ஆகிய மூவரைத் தவிர எவரும் முதல் 10 இடங்களில் இல்லை என்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.

இதில் சந்தகன் 639 புள்ளிகளுடனும் ஹசரங்க 625 புள்ளிகளுடனும் ஆண்களுக்கான சர்வதேச இருபதுக்கு 20 இன் பந்துவீச்சாளர்களுக்கான தனிநபர் தரப்படுத்தலில் முறையே 9 ஆம் மற்றும் 10 ஆம் இடங்களை வகிக்கின்றனர்.

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணித்தலைவியான சமரி அத்தப்பத்து பெண்களுக்கான சர்வதேச இருபதுக்கு 20 இன் சகலதுறை தரப்படுத்தலில் 265 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்தை வகிக்கிறார்.