பிரேசம்சங்கர்

பிரேசம்சங்கர்

சமூக விஞ்ஞானக் கல்லூரி (T3S) மாணவனும் முன்னாள் போராளியுமான க பிரேம்சங்கரின் ‘கழுதை சுமந்த கவிதை’ நூல் வெளியீடு

தனது பள்ளிப் பராயக் கனவை நனவாக்கும் வகையில் தனது வாழ்க்கை அனுபவங்களை சிறு கவிதைகளாக தொகுத்து ‘கழுதை சுமந்த கவிதை’ என்ற தலைப்பில் வெளியிடுகின்றார் கவிக்கூத்தன் க பிரேம்சங்கர். இளம் பிராயம் முதல் அவர் கிறுக்கிய கவிதைகளை அவர் தனது பதின்ம வயதிலேயே வெளியிட ஆசைப்பட்டாலும் இப்போது தான் அது சாத்தியமாகியுள்ளது. “தொலைக்கப்பட்ட எழுத்துக்களை தோண்டி எடுக்கிறேன் நெஞ்சு வலிகளோடு வருகின்றது…” என்று அவர் இந்நூல் பற்றிய குறிப்பில் பதிவு செய்கின்றார்.

நூல் வெளியீடு பற்றிய விபரம்:
காலம்: January 23, 2022
நேரம்: மாலை 4:00 மணி முதல் 7 மணி வரை
இடம்: London Ayyappan Temple Hall, 36 Masons Avenue, Harrow, HA3 5AR

யாழ் சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியும் பின் யாழ் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியும் கற்ற கவிக்கூத்தன் பிரேம்சங்கர் எண்பதுக்களில் எழுச்சி பெற்ற விடுதலையுணர்வால் உந்தப்பட்டு தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணிக்க முன் வந்த ஆயிரம் ஆயிரம் இளைஞர்களில் ஒருவர். தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டி தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து கொண்ட க பிரேம்சங்கர், சென்னையில் உருவாக்கப்பட்ட சமூக விஞ்ஞான கல்லூரியில் சமூக அரசியல் பொருளாதாரம் கற்றவர்.

அனுவம் என்பதே அறிவு. அந்த வகையில் க பிரேம்சங்கரின் வாழ்க்கை அனுபவம் என்பதும் ஒரு அருமையான புத்தகமாக அமையும். அதனை சிறு கவிதைகளாக தொகுத்து இருப்பது அவருடைய வாழ்வின் பிரதிபலிப்பாக அமையும் என்பதில் ஐயம்மில்லை. “பல இளமைக்காலக் கவிதைகள் தொலைந்தாலும்… முதுமையில் மீண்டும் முத்துக்குளித்திருக்கிறேன்” என்று இந்நூல் உள்ளடக்கம் பற்றி குறிப்பிடுகின்றார். “கற்பனை, நிசம் அனுபவமாகின்றது! இங்கு வரிகளாகிறது” என்று குறிப்பிடும் அவர் “நரை விழுந்த காலம் என்றாலும் உரைக்கிறது எழுதுகோல்” என்று தான் இந்நூலை கொண்டுவந்ததன் பின்னணியைக் குறிப்பிடுகின்றார்.

கவிக்கூத்தன் க பிரேம்சஞ்கரும் எனது சகோதரனும் சமூக விஞ்ஞானக் கல்லூரியில் – Thamileelam Social Science School (T3S) ஒன்றாகக் கற்றவர்கள். உற்ற நண்பர்கள். அதனால் நான் லண்டன் வருவதற்கு முன்னரே குடும்ப நண்பரானவர். லண்டன் வந்தபின் அந்த சகோதரத்துவமும் நட்பும் இன்றும் நிலைக்கின்றது.

கவிக்கூத்தன் க பிரேம்சஞ்கரின் வாழ்க்கை அனுபவம் என்பது பன்முகப்பட்டது. படைப்புகள் ஆக்க இலக்கியங்கள் அக்காலத்தினை பிரதிபலிக்கக் கூடிய கண்ணாடிகள். அந்த வகையில் இந்தக் ‘கழுதை சுமந்த கவிதை’ நூல் எமது வரலாற்றின் ஒரு கூறைச் சுமந்து வரும் என்ற ஆவலோடு இந்நூல் வெளியீட்டில் கலந்துகொள்ள உள்ளேன். கவிக்கூத்தன் க பிரேசம்சங்கர் வெவ்வேறு படிநிலைகளில் தன் வாழ்வைக் கடந்து செல்கின்றார். ஒரு துடிப்புள்ள இளைஞனாக போராளியாக பிற்காலத்தில் ஆன்மீகத்தின் வழித்தடங்களில் என்று அவருடைய பயணம் தொடர்கின்றது. நிச்சயமாக ‘கழுதை சுமந்த கவிதை’ எம்மைச் சிந்திக்க வைக்கும்.

நூல் வெளியீடு பற்றிய விபரம்:
காலம்: January 23, 2022
நேரம்: மாலை 4:00 மணி முதல் 7 மணி வரை
இடம்: London Ayyappan Temple Hall, 36 Masons Avenue, Harrow, HA3 5AR