பொருளாதார வல்லரசுகள்

பொருளாதார வல்லரசுகள்

உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா !

உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகளின் பட்டியலை மெக்கன்சி அண்ட் கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் உலகின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது.

உலகின் மொத்த சொத்து மதிப்பு 2000-ம் ஆண்டு 156 லட்சம் கோடி டொலராக இருந்தது. அது 2020-ம் ஆண்டில் 514 லட்சம் கோடி டொலராக உயர்ந்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சிக்கு சீனா காரணமாக இருந்துள்ளது.

இதன் மூலம் சீனா நாட்டின் சொத்து மதிப்பு அதி வேகத்தில் அதிகரித்து இருக்கிறது. உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பினராக சீனா ஆவதற்கு முன்பு 2000-ம் ஆண்டில் அந்நாட்டின் சொத்து மதிப்பு 7 லட்சம் கோடி டொலராக இருந்தது.

2020-ல் சீனாவின் சொத்து மதிப்பு 120 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதனால் உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து 90 லட்சம் கோடி டாலராக உள்ளது. உலகின் மொத்த வருமானத்தில் 60 சதவீதத்துக்கு மேல் 10 நாடுகளிடம் மட்டுமே உள்ளது.

மேலும் உலகின் பணக்கார நாடுகளான சீனா, அமெரிக்கா ஆகியவற்றின் சொத்துக்களில் மூன்றில் இரண்டு மடங்கு 10 சதவீத குடும்பத்தினரிடம் மட்டுமே உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகின் சொத்து மதிப்பில் 68 சதவீதம் ரியல் எஸ்டேட்டில் உள்ளது. மற்றவைகள் உட்கட்டமைப்பு, இயந்திரங்கள், சாதனங்கள் மற்றும் மிகக் குறைவாகவே அறிவு சார் சொத்துக்கள், காப்புரிமைகளில் உள்ளன.

இணைய வழியில் சந்தித்த உலகின் பொருளாதார வல்லரசுகளின் தலைவர்கள் – பழைய நண்பருக்கு வணக்கம் என ஆரம்பித்த சீனா !

உலகின் இரு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே தற்போது மோதல் போக்கு நிலவி வருகிறது. வர்த்தகம், கொரோனா வைரஸ், ஹாங்காங், தைவான் ஆகிய நாடுகள் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இடையே இரு நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது.

தென்சீன கடல் பகுதியில் சீனா அத்துமீறி செயல்படுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு இடையே சமீபத்தில் அமெரிக்காவின் வாஷிங்டனில் அமெரிக்கா- சீனா உறவுகள் குறித்த தேசிய கமிட்டி கூட்டம் நடந்தது.

இதில் அமெரிக்காவுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைய சீனா தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் – சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தநிலையில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி காட்சி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சீன ஜனாதிபதி கூறும்போது, “பழைய நண்பருக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளின் உறவுகள் மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.

ஜோபைடன் கூறும்போது, “நாடுகள் இடையேயான போட்டிகள் எளிமையாக, நேரடியானதாக இருக்க வேண்டும். அது மோதலாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வது சீன-அமெரிக்காவின் தலைவர்கள் என்ற முறையில் நமது பொறுப்பு என்று தோன்றுகிறது” என்றார்.

ஜின்பிங் பேசும்போது, “உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் ஒருமித்த கருத்தை உருவாக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து சீனா-அமெரிக்காவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும் உறவுகள் நேர்மறையான திசையில் முன்னோக்கி செல்கின்றன” என்றார்.

அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு உள்ள நிலையில் இரு நாட்டு தலைவர்களின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

சந்திப்புக்கு தயாராகும் உலகின் இரு பொருளாதார வல்லரசுகளின் தலைவர்கள் !

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இரு தரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
வர்த்தகப் போர், கொரோனா பரவல் விவகாரம், தற்போது தைவானுக்கு சீனா போர் விமானங்களை அனுப்பியது என பல்வேறு பிரச்சினைகளால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவில் கசப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனும், சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினருமான யாங் ஜீச்சியும் சுவிட்ர்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் கடந்த மாதம் சந்தித்துப் பேசினார்கள்.
அப்போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் காணொலிக் காட்சி வழியாக சந்தித்து பேசுவது என முடிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வரும் 15ம் திகதி காணொலிக் காட்சி வழியாக சந்தித்து பேச உள்ளனர் என வெள்ளை மாளிகையின் செயலாளர் தெரிவித்துள்ளார். அப்போது இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.