ப.சத்தியலிங்கம்

ப.சத்தியலிங்கம்

“தமிழரசுக்கட்சியின் மாகாணசபை முதலைமைச்சர் வேட்பாளர் மாவை சேனாதிராஜா இல்லை” – தமிழ் அரசு கட்சியின் பதில் பொது செயலாளர் ப.சத்தியலிங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ, தமிழ் அரசு கட்சியினதோ வடக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது இது வரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொது செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் கூட்டத்தின் போது மாகாணசபை தேர்தலில் அக்கட்சியின் மாகாணசபை முதல்வர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா களமிறக்கப்படவுள்ளதாக ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இது பற்றி கூறும்போதே ப.சத்தியலிங்கம்இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டம் கடந்த 30ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றிருந்தது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கருத்து தெரிவித்த போது, வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசா களமிறக்கப்பட வேண்டுமென்றார். சீ.வீ.கே.சிவஞானம் அதை ஆதரித்திருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லையென நேற்று கருத்துரைக்கும் போது கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள்தான் இப்படியொரு குழப்பத்தை ஏற்படுத்தின, தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ, தமிழ் அரசு கட்சியினதோ முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.

நாங்கள் பல விடயங்களை கலந்துரையாடினோம், மாகாணசபையை குறித்தும் கலந்துரையாடினோம், ஆனால் முதலமைச்சர் வேட்பாளர் பற்றி தீர்மானங்கள் எடுக்கவில்லை.

அந்த முடிவை அரசியல்குழுவிலும் எடுப்பதில்லை, அதை மத்தியகுழுவிலேயே எடுக்க வேண்டும், இந்தக் கூட்டத்தில் சில வேளை பல பின்னடைவுகளை கண்ட கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா சுமந்திரன் மீது அதிக கோபத்தை அல்லது, கடுமையான கட்சி நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கலாம், அதனைத் தனிக்கவே சிறிதரன் மிகவும் சமயோசிதமாக இந்தக் கருத்தை கூறி கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவை சாந்தப்படுத்தினார், முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் சுமந்திரன் உட்பட கட்சியில் உள்ள பலர் பொது வேட்பாளரையே விரும்புகிறோம்.

கட்சித் தலைவர் மாவை சென்ற முறையும் போட்டியிட விருப்பப் பட்டவர் அதனை அப்போது மிக லாபகமாக தடுத்து முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனை கட்சிக்குள் அழைத்து வருவதில் சிறிதரனின் பங்கு மிகப் பெரியது, இதனை கட்சித் தலைவர் மாவையும் புரிந்து செயற்படுவார்.

ஒட்டு மொத்தத்தில் சுமந்திரன் மீதான விமர்சனத்தை தடுப்பதற்கு சிறிதரன் மேற்கொண்ட மிகச் சிறந்த முயற்சி, அதை யாரும் முடிந்த முடிவாக கருதுவது தவறானது, எமக்குக் கிடைத்த மிகச் சிறந்த சொத்து ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், அவரின் கருத்து இந்த விடயத்தில் பலராலும் எதிர்பார்க்கப் படுகிறது, நாம் கூடி நல்லதொரு முடிவினை எடுப்போம்.

அத்துடன் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரை தமிழ் அரசு கட்சி மட்டும் தீர்மானிப்பதில்லை, அது குறித்து, மற்றைய இரண்டு கட்சிகளுடனும் பேசிய பின்னரே தீர்மானிப்பது வழங்கம் என்றார்.

“தீபங்களை வீசியெறிந்த இராணுவத்தினரின் செயல் உச்சபட்ச அடக்குமுறையாகும்” – ப.சத்தியலிங்கம் கண்டனம் !

தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை)  வடக்கிலுள்ள தமிழர்கள் கார்த்திகை தீப திருநாளை அனுஸ்டித்தபோது, இராணுவத்தினர் பல இடங்களிலும் சமய அனுஸ்டானங்களை செய்யவிடாது தடுத்துள்ளனர்.

இந்நிலையிலேயே குறித்த செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து  ப.சத்தியலிங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“கார்த்திகை தீபம் ஏற்றிய இந்துக்களை அச்சுறுத்தி தீபங்களை வீசியெறிந்த இராணுவத்தினரின் செயல் உச்சபட்ச அடக்குமுறையாகும். இச்செயலை வன்மையாக கண்டிப்பதோடு, இலங்கையில் சமய, கலாச்சார நிகழ்வுகளை சிறுபாண்மையினர் அச்சமின்றி கடைப்பிடிக்கும் சூழல் ஏற்படவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.