ரிஷாட் பதியுதீன்.

ரிஷாட் பதியுதீன்.

தமிழர், முஸ்லீம் மட்டுமே என்பதாலா கிழக்கு சதொச கிளைகள் மூடப்பட்டன..? – நாடாளுமன்றத்தில் ரிஷாட் பதியுதீன் கேள்வி !

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் பணிபுரிந்த பெரும்பாலான சதொச கிளைகள் மூடப்பட்டு, அங்கிருந்த ஊழியர்கள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமையால், பிரதேச மக்களும் சதொச பணியாளர்களும் மிகவும் கஷ்டப்படுவதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வர்த்தக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

 

நேற்றைய தினம் (01) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

 

“நான் கைத்தொழில் வர்த்தக அமைச்சைப் பொறுபேற்ற போது 275 சதொச கிளைகளே இயங்கின. எனது பதவிக்காலத்தில் அவற்றை 400 ஆக அதிகரித்து, இந்த நிறுவனத்தை இலாபகரமானதாக ஆக்கினேன். கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்த பின்னர் கிழக்கு மாகாணத்தில் இயங்கிய சதொச கிளைகள் திட்டமிட்டு மூடப்பட்டன. அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர். 35௦௦௦ ரூபா சம்பளத்தில் இவர்கள் வெளிமாவட்டங்களில் எவ்வாறு பணிபுரிய முடியும்? தமிழ், முஸ்லிம் என்பதனாலா இவர்கள் இவ்வாறு பழிவாங்கப்படுகின்றனர்? எனவே, மூடப்பட்டுள்ள சதொச கிளைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

 

இதற்கு பதிலளித்த வர்த்தக வாணிப அமைச்சர் ரமேஷ் பத்திரன, “நீங்கள் சொல்வது முற்றிலும் சாதாரணமானதும் நியாயமானதும் கூட. இருப்பினும், நிறுவனத்தின் இலாபத்தையும் கருத்திற்கொண்டு, அவற்றை மீளத் திறக்க நாம் நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதான தாக்குல் – ரிஷாட் பதியுதீன் கண்டனம் !

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதான தாக்குதலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

அவரது கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“சிறுபான்மைச் சமூகங்கள் இன்னும் அடக்குமுறைக்குள் இருப்பதையே இந்தத் தாக்குதல் வெளிப்படுத்துகிறது. சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால், சிறுபான்மை மக்களின் நிலை எப்படியிருக்கும்?

பேரினவாதக் கும்பலின் அட்டகாசங்களுக்கு சிறுபான்மை மக்கள் பலியாவது அல்லது அவமானப்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இவற்றைச் செய்யாமல் சமூக ஐக்கியம் எங்கே வரப்போகிறது?

பொலிஸாருக்கு முன்னால் இவ்வாறன அடாவடித்தனங்கள் இடம்பெறுவது சட்டவாட்சியை கேலிக்கூத்தாக்குகின்றது. சட்டத்தின் ஆட்சியை பேரினவாதக் கும்பல் கையிலெடுக்கும் நிலைமைகள் ஒழிக்கப்படாத வரை, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பே கிடையாது. அரசியல் உரிமைகளை உணர்வு ரீதியாக மதிக்கவும் இடமில்லாத இந்த ஆட்சியில், நாம் எந்த நம்பிக்கையில் வாழப்போகிறோம்?” இவ்வாறு அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் வழக்கு – ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்தது நீதிமன்றம் !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த வழக்கில் இருந்து விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை மீண்டும் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்திருந்தனர்.

“இனவாத சக்திகளின் கரங்களை ஓங்கவிடாமல் பாதுகாக்க வேண்டும்.” – ஜனாதிபதி ரணிலிடம் ரிசாட் கோரிக்கை !

பதவிகளுக்காக இல்லாமல் நாட்டுக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறான ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தால் ஆதரவு வழங்கத் தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சர்வகட்சி தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“நாடு எதிர்கொண்டுள்ள மோசமான நிலையை மாற்றி அமைப்பதற்காகவும், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் இன்னோரன்ன தேவைகளை எளிதில் நிறைவேற்றும் வகையிலும், கியூவில் நின்று பொருட்களை பெரும் கலாச்சாரத்தை முற்றாக ஒழிக்கும் வகையிலும் ஜனாதிபதி எடுக்கும் நல்ல நடவடிக்கைகளுக்கு நாம் பூரண ஒத்துழைப்பு நல்குவோம் எனவும் இச்சந்திப்பில் உறுதியளித்தோம்.

மேலும், காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிவைத்து கைது செய்யப்பட்டமை மற்றும் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டாலினின் கைது தொடர்பிலும் எமது ஆட்சேபனையையும் கவலையையும் தெரிவித்ததோடு, இவ்வாறான பயமுறுத்தல் நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை இன்னும் அதலபாதாளத்திற்கு கொண்டு செல்லும் என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

19 ஆவது திருத்தத்தை உடனடியாகக் கொண்டு வந்து, அதனை விரைவாக நடைமுறைப்படுத்துமாறும், பாராளுமன்றத்தில் அமைச்சுக்களை கண்காணிக்கும் குழுக்களை அமைக்குமாறும் வேண்டுகோள் விடுத்தோம். அத்துடன், அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி, வகைதொகையின்றி ஆட்களை கைது செய்யும் நடவடிக்கையை உடன் நிறுத்துவதுடன், அவசரகாலச் சட்டத்தில் தொடர்ந்து நீடிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினோம்.

இனவாதத்தையும் மதவாதத்தையும் கக்கி ஆட்சிக்கு வந்தவர்கள், கடந்த காலங்களில் நாட்டினதும், மக்களினதும் நலனைக் கருத்திற்கொள்ளாது செயற்பட்டமையை உணர்த்தியதுடன், இனவாதத்தை விதைப்பதன் ஊடாக தங்களது அரசியல் இருப்பு நீடிக்கும் என்ற தப்பெண்ணம் கொண்டு செயற்பட்டதனால்தான், இந்த நாடு இவ்வாறான கீழ்நிலைக்கு தள்ளப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

ஆகையால், எதிர்காலத்தில் இனவாத சக்திகளின் கரங்களை ஓங்கவிடாமல் பாதுகாக்க வேண்டும் எனவும், அந்த விடயத்தில் கூடிய கவனஞ்செலுத்துமாறும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்” என்று அவர் தெரிவித்தார்.

சிறுமி ஹிஷாலினியின் மரணம் – ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் !

சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக அடுத்த வாரம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பான வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகக் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமி ஹிஷாலினி கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரது தந்தை, சகோதரர் மற்றும் குறித்த சிறுமியை பணிக்கு அமர்த்திய தரகர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அதுவரையில் வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மீதும் இந்த விடயத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், வீட்டில் சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையில் சில எழுத்துகள் அடையாளம் காணப்பட்டன.

இதனையடுத்து சிறுமி ஹிஷாலியின் சடலம் இரண்டாவது பிரேதப் பரிசோதனைகளுக்காகக் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி மீளத் தோண்டி எடுக்கப்பட்டது. இரண்டாவது பிரேதப் பரிசோதனை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதோடு அன்றைய தினம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஈஸ்டர் தாக்குதல் , ஹிசாலினி மரணம் தொடர்பான வழக்குகளில் இருந்து ரிஷாட் பதியுதீனுக்கு பிணை !

ஈஸ்டர் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிக்கு உதவிய குற்றச்சாட்டு மற்றும் ஹிசாலினி மரணம் தொடர்பான வழக்குகளில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு கோட்டை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தலா இரண்டு 50 இலட்சம் ரூபாய் பிணைகளில் அவரை விடுவிக்கக் கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஹிஷாலினி மரணித்தமை தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றிலும் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவ்வழக்கிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த வழக்கு – 5ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டார் ரிஷாட் பதியுதீன் !

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு பணிக்குச் சென்ற 16 வயதுடைய சிறுமி, இம்மாதம் 3ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் , நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட  ஹிஷாலினி உவழக்கில் ரிஷாட் பதியுதீன் 5ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட 4 பேர் எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

“முஸ்லிம் சமூகத்தை இந்த அரசு பழிவாங்குவதற்காகவே எமது மத உரிமையை தடுத்து நிறுத்துகின்றது.” – ரிஷாட் பதியுதீன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர், அது தொடர்பில் தன்னை சம்பந்தப்படுத்தி குற்றஞ்சுமத்தியுள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கைகள் குறித்து, அதே ஆணைக்குழுவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (வெள்ளிக்கிழமை) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

தனது சட்டத்தரணி ருஷ்தி ஹபீபுடன் இணைந்து, இந்த முறைப்பாட்டை  நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் செய்துள்ளார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,

“விமல் வீரவன்சவின் இனவாதக் கருத்துக்களையும் அப்பட்டமான பொய்களையும், பிழையான குற்றச்சாட்டுக்களையும் கண்டித்ததுடன் அது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு உரிய கவனம் செலுத்துமெனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

இதன்போது ஜனாஸா விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “கொரோனா ஜனாஸாக்களை தொடர்ந்தும் எரிக்க வேண்டுமென்ற அரசின் நிலைப்பாடு அப்பட்டமான பழிவாங்கல் நடவடிக்கை ஆகும்.

இலங்கை வாழ் இருபது இலட்சம் முஸ்லிம்களும் இன்று துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதுமாத்திரமின்றி,  உலகிலுள்ள சுமார் இரண்டு பில்லியன் முஸ்லிம்களும் கவலையில் இருப்பதோடு, பல நாடுகள் இலங்கைக்கு எதிரான எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றன. இதன் விளைவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி, நாட்டையும் சமூகங்களையும் பாதிக்கும்.

முஸ்லிம் சமூகத்தை இந்த அரசு பழிவாங்குவதற்காகவே எமது மத உரிமையை தடுத்து நிறுத்துகின்றது. அரசியலில் ஞானம் உள்ளவர்களாக இருந்தால் இவ்வாறான பிற்போக்குத்தனமான செயலை செய்யமாட்டார்கள்.

முஸ்லிம் அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மனிதநேயமுள்ள மாற்று மத பிரமுகர்களும் இதனை வென்றெடுப்பதில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் நாட்டின் முன்னாள் தலைவர்களான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிங்கள  நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிவில் சமூக ஏற்பாட்டாளர்களும் இதற்காக குரல் எழுப்பி வருகின்றபோதும், அரசும் சுகாதார அமைச்சும் இன்னும் செவிடன் காதில் ஊதிய சங்குபோலதான் இருக்கின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“புலிகளால் விரட்டப்பட்டு அகதியான போதும் கூட பிச்சை எடுக்கவேண்டிய அவசியமிருக்கவில்லை” – ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ரிஷாட் பதியுதீன்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்பதியுதீன் ‘இலங்கையில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு பலம்பொருந்திய நாடுகள் சில மேற்கொணட சதிமுயற்சியே ஏப்பிரல் 21 தாக்குதல் என  தெரிவித்துள்ளார்.

மேலும் ஆணைக்குழுவினரால் பல கேள்விகள் ரிஷாட்பதியுதீனிடம் கேட்கப்பட்டன.

கேள்வி :- துருக்கியில் தடைசெய்யப்பட்ட எவ்.ஈ.டி.ஓ என்ற அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகளில் தலையிட்டீர்களா..?

பதில் :-  பதிலளிக்கும் போது ரிசாத் பதியுதீன் ‘அந்த குற்றச்சாட்டு உண்மையில்லை. எனக்கு அந்த அமைப்பை சேர்ந்தவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை’ என தெரிவித்துள்ளதுடன் விசாரணைகளில் தான் தலையிடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி :- கனடாவில் உள்ள ரிசாத் பதியுதீனின் சகோதரியின் வீட்டினை தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்தியமை குறித்து அறிந்திருக்கின்றீர்களா?

பதில்:- “நான் அதனை அறிந்திருக்கவில்லை எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரே அதனை அறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட வீட்டிற்கு தான் விஜயம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேள்வி :- உங்கள் தம்பி எப்போதாவது கைதுசெய்யப்பட்டாரா?

பதில் :- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையின் போது அவர் கைதுசெய்யப்பட்டார். சினமன் கிரான்டில் தாக்குதலை மேற்கொண்டவர் எனது சகோதரரிற்கு ஏழு தொலைபேசி அழைப்புகளை விடுத்துள்ளார், என்பதை ஊடகங்கள் மூலம அறிந்தேன் ” என ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் நான் எனது சகோதரரிடம் இன்சாவினை ஏன் அவர் தொடர்புகொண்டார் என கேட்டதற்கு அரசாங்கம் செப்பு ஏற்றுமதியை இரத்துசெய்தமையால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தே பேச்சுக்களை மேற்கொண்டதாக எனது சகோதாரர் தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி :- நீங்கள் மறைமுகமாக இன்சாவ் சகோதரர்களிற்கு ஆதரவளித்துள்ளீர்களா?

 

பதில்:- நான் இந்த குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கின்றேன்,இன்சாவ் சகோதரர்களிற்கு நான் உதவவேயில்லை என தெரிவித்துள்ளார்.

கேள்வி :- விடுதலைப்புலிகள் வடக்கிலிருந்து வெளியேற்றிய பின்னர் ஐந்து வருடங்கள் முகாமில் அகதியாக வாழ்ந்ததாக தெரிவிக்கின்றீர்கள்-நீங்கள் எப்படி அரசியலிற்கு வந்தீர்கள்? செல்வந்தராக மாறினீர்கள்? என ஆணைக்குழுவின் நீதிபதியொருவர் ரிசாத்பதியுதீனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ரிசாத் பதியுதீன் நான் அகதியாகிவிட்டதால் பிச்சை எடுக்கவேண்டிய அவசியமிருக்கவில்லை,என்னால் வர்த்தகத்தில் ஈடுபட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் உங்கள் அமைச்சு பதவிகளை பயன்படுத்தி இவ்வளவு சொத்தினை சேர்த்தீர்களா? உங்கள் குடும்பத்தினையும் , வர்த்தகத்தினையும் முன்னேற்றினீர்களா? என்ற கேள்விக்கு ரிசாத்பதியுதீன் நான் எந்த வர்த்தகத்தினை முன்னேற்றுவதற்கு எனது அமைச்சு பதவியை பயன்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.