லக்ஸ்மன் கிரியல்ல

லக்ஸ்மன் கிரியல்ல

“யுத்தத்தின்போது இறந்தவர்களை நினைவுக்கூறுவதில் எந்த தவறும் இல்லை.” – எதிர்க்கட்சி

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதென்பது உலக நடைமுறை. அதில் எவ்வித தவறும் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே எதிரணியின் பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மட்டுமன்றி 2005 இல் வந்த அரசாங்கம், 2010 இல் வந்த அரசாங்கம் என அனைத்து அரசாங்கங்களும், சர்வதேசத்துடன் பகைமையையே வளர்த்துக் கொண்டன. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த 2012 முதல் 2015 வரையான காலப்பகுதியில் எமது நாட்டுக்கு எதிராக மூன்று பிரேரணைகள் ஐ.நா.வில் நினைவேற்றப்பட்டன.

2015 இல் அவர் ஜனாதிபதியாக இருந்திருந்தால், நாம் பொருளாதாரத் தடைக்கு முகம் கொடுத்திருப்போம். இதனால்தான் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே, அன்று ஜனாதிபதித் தேர்தலை வைத்தார். பின்னர் நாம் ஆட்சிக்கு வந்தவுடன், மஹிந்த ராஜபக்ஷவையும் காப்பாற்றிக் கொண்டே 4 அரை வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தோம். சர்வதேசத்துடனும் ஒன்றித்து பயணித்தோம்.

இன்று மீட்டும் இந்த அரசாங்கம் பழைய போக்கையை கடைப்பிடித்து வருகிறது. சர்வதேசம் இன்று மீண்டும் எமது நாடு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. இதில் பிரதானமாக நாட்டின் சிவில் நிர்வாகம் இராணுவத்தின் கைகளில் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பு சுயாதீனத்தன்மையை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 19 ஐ இல்லாதொழித்து 20 ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டு வந்தமையினால் இந்த விளைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கம் அக்கரைச் செலுத்துவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத ரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நாம் ஆட்சியில் இருந்தக் காலத்தில் தேசியக் கீதத்தைக்கூட தமிழில் இசைத்தோம். இதனாலேயே நாம் சர்வதேசத்தினால் பாராட்டப்பட்டோம். சிறுபான்மையினருக்கு எதிராக செயற்படும் ஒரு அரசாங்கத்திற்கு எந்தக் காரணம் கொண்டும் சர்வதேசத்தின் ஆதரவு கிடைக்காது என்பதை இந்த அரசாங்கம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அத்தோடு, ஊடக சுதந்திரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், யுத்தத்தின்போது இறந்தவர்களை நினைவுக்கூற தடை செய்யப்பட்டுள்ளமைக்கும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களாகும். இதற்கெல்லாம் அரசாங்கம் பதில் கூறியே ஆகவேண்டும்.

அதேநேரம் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பாகவும் சர்வதேசம் சில நிபந்தனைகளை விதித்துள்ளன. அவர்களின் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளக்கூடியவையாகவே காணப்படுகின்றன.

அரசாங்கத்தினால் இவற்றை நிறைவேற்ற முடியும். இதுதொடர்பாக அரசாங்கம் திருத்தங்களையேனும் கொண்டுவந்தால் நாம் முழுமையான ஆதரவினை வழங்குவோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

“அரசவளங்களை பாதுகாப்போம் என தெரிவித்து ஆட்சிக்குவந்த அரசாங்கம் தற்போது அரசவளங்களை விற்பனை செய்துவருகின்றது.” – லக்ஸ்மன் கிரியல்ல குற்றச்சாட்டு !

“அரசவளங்களை பாதுகாப்போம் என தெரிவித்து ஆட்சிக்குவந்த அரசாங்கம் தற்போது அரசவளங்களை விற்பனை செய்துவருகின்றது.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்களிற்கு பதில் அளிக்கையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“உலகின் முக்கியமான நாடுகளின் கவனம் இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளதால் இன்னொரு நாடு திருகோணமலை துறைமுகத்தை கோரும் நிலையேற்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.
வேறு எந்த அரசாங்கமும் வெளிநாடுகள் இலங்கையில் நிரந்தரமாக கால்பதிப்பதற்கு அனுமதிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் அதேவேளை அந்த அரசாங்கங்கள் உலக நாடுகளுடன் சிறந்த உறவுகளை பேணிண எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 100,  150வருடங்கள் நிரந்தரமாக கால்பதிப்பதற்கான நிலையை வெளிநாடுகள் உருவாக்கியுள்ளன என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
எனினும் அடுத்த 25 வருடங்களிற்கு அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுகநகரம் மூலம் இலங்கைக்கு எந்த வருமானமும் கிடைக்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.