வன்முறை

வன்முறை

இரு தரப்பு மோதல் கொலையான சம்பவம் – கிளிநொச்சியில் 22 வயது இளைஞர் கைது !

கிளிநொச்சி, ஊற்றுக்குளம் பகுதியில்  நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருதரப்பினரிடையே இடம்பெற்ற மோதல் வலுவடைந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் உருத்திரபுரம் சிவநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர்  கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் அடித்துப் படுகொலை!

முல்லைத்தீவு – சிலாவத்தையில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, உடைமைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று இன்று பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்த இரண்டு கொள்ளையர்கள் வீட்டிலிருந்த மூவர் மீது தாக்குதல் நடத்தி பணம், 10 பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, கொள்ளையர்களால் பொல்லால் தலையில் தாக்கப்பட்ட 63 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்

முல்லைத்தீவு பொலிஸார், தடயவியல் பொலிஸார் இணைந்து மோப்ப நாய்களின் உதவியுடன் சந்தேகநபர்களின் தடயங்கள் தொடர்பில் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி, சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டோர் சடலத்தை பார்வையிட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர்.

தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

அயல்வீட்டாரின் மிலேச்சனத்தனமான தாக்குதலால் 55 வயதுடைய நபர் படுகாயம் – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணம் – சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஜெ-199 அம்பனை பகுதியில் தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று(வியாழக்கிழமை) மாலை 2 மணியளவில் பழைய பகையின் காரணமாக அயல் வீட்டார் பணி நிமிர்த்தம் வெளியே செல்லும் போது மற்றுமொரு அயல் வீட்டாரினால் வீதியில் வைத்து மிலேச்சத்தனமாக போத்தல்கள் மற்றும் கம்பிகளால் தாக்கப்பட்ட சம்பவமே இவ்வாறு பதிவாகியுள்ளது.

தாக்குதலுக்குள்ளானவர் பலத்த காயங்களுடன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு யாழ்.போதனா  வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் 55 வயதுடைய முத்து ஜெகதீசன் என்பவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அயல் வீட்டாரான இரு ஆண்களையும் ஒரு பெண்ணையும் கைது செய்துள்ளதாக சுண்ணாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பாக சுண்ணாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

காணொலிப் பதிவு: வாடகை ரவுடிகள்: ஒருமணி நேர இடைவெளியில் இரு வன்முறைச்சம்பவங்கள்

யாழ் நகரம் வன்முறை மிகுந்த நகரமாக மாறி வருகின்றது. வாடகைக் கொலையாளிகள் வாடகை ரவுடிகளின் கூடாரமாக யாழ்ப்பாணம் மாறிவிட்டது. யூலை 22 இரவு ஒருமணி நேர வித்தியாசத்தில் இரண்டு வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்றது. யாழ் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் முதலாவது தாக்குதல் இடம்பெற்று குறுகிய நேர இடைவெளியில் மற்றுமொரு சம்பவம் யாழ் அராலியில் இடம்பெற்றுள்ளது. அண்மைக்காலமாக இடம்பெறும் சம்பவங்கள் சில தாக்குதல் நடத்தியவர்களுக்கும் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கும் இடையே தனிப்பட்ட முரண்பாடுகள் இல்லாத நிலையில் கூலிக்கு அமர்த்தப்பட்டு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. சமூகக் கட்டுப்பாடுகள் முற்று முழுதாக செயலிழந்துள்ள நிலையில் யாழ் தமிழ் சமூகம் உள்ளுணர்வு பிறள்வுநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கு இரவு ஒன்பது மணியளவில் கடையயை மூடிவிட்டுச் சென்றதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் இரு வாள்களுடன் வந்தவர்கள் பெற்றோல் குண்டுகளை எறிந்து புடவைக் கடைக்கு தீ மூட்டி உள்ளனர். இந்த தீவைப்புத் தாக்குதல் சம்பவம் ஒளிப்பதிவாகி உள்ளது. இந்த ஒளிப்பதிவில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதலில் ஈடுபட்டது பதிவாகி உள்ளது.

இத்தாக்குதல் பற்றி தெரிவித்த கடையின் உரிமையாளர் தானும் தனது கணவரும் இரு மாதங்களுக்கு முன்னரேயே கடையை ஆரம்பித்ததாகவும் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் தலைநகர் கொழும்பில் இருந்தும் தருவிக்கப்பட்ட ஆடைகள் கடையில் இருந்தாகவும் தெரிவித்தார். இத்தீவைப்புச் சம்பவத்தால் தனக்கு அறுபது லட்சம் ரூபாய்களுக்கு மோலாக நட்டம் ஏற்பட்டதையும் கண்ணீர்மல்கத் தெரிவித்தார்.

தாக்குதலை நடத்தியவர்கள் தங்கள் பொக்கற்றினுள் இருந்து எடுத்த பெற்றோல் போத்தல்களை எறிந்து கடையின் கண்ணாடிகளை அடித்து நொருக்கி தீ வைத்துள்ளனர். இச்சம்பவங்கள் ஒளிப்பதிவாகி உள்ளது. யாழ் பொலிஸ்மா அதிபருக்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ள கடையின் உரிமையாளர் பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு தங்களுக்கு தீர்வு பெற்றுத்தர வேண்டும் என்று கண்ணீரோடு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுவிடயமாக கொக்குவிலைச் சேர்ந்தவரும் யாழ் மேயரின் உறவினருமான த சஞ்சீவ்ராஜ் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் தமிழ் அரசியல்வாதிகளும் யாழ் மேயரும் யாழ் நகரில் இடம்பெறும் வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள் பற்றி மௌனமாக இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து உள்ளதும் இவ்வாறான வாடகை ரவுடிகள் உருவாவதற்குக் காரணம் எனத் தெரிவித்த அவர் அரசியல் வாதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவரான இவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறீதரனின் மகன் யாழ் இந்துக்கலலூரி மாணவனாக இருந்து வன்முறைக் குழுக்களுடன் செயற்பட்டதைச் சுட்டிக்காட்டி அரசியல்வாதிகள் முன்மாதிரியாக நடக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அண்மையில் யாழ் மேயர் மணிவண்ணனின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் ரஜீவன் யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் பிரச்சினையில் வாள்வெட்டில் உட்பட்டு தலை மறைவாக சில நாட்களின் பின் பொலிஸில் சரணடைந்தது தெரிந்ததே.

கொக்குவில்குளப்பிட்டிச் சந்தியில் வைக்கப்பட்ட தீ எரிந்து கொண்டிருக்கின்ற போதே ஒரு மணி நேரத்தில் இரவு பத்து மணியளவில் மோட்டார் சைக்கிளில் யாழ் அராலி வீதியில் உள்ள வீட்டு வளவுக்குள் நுழைந்தவர்கள் வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொருக்கி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியயை அடித்து நாசம் செய்துள்ளனர். அதன் பின் அதற்கு தீ வைக்கவும் முயன்றுள்ளனர். நித்திரையில் இருந்தவர்கள் விழித்துக்கொண்டு அயலவர்களையும் அழைத்து தாக்குதல் நடத்தியவர்களை விரட்டி அடித்துள்ளனர்.

இச்சம்பவங்கள் வியாபாரப் போட்டி காரணமாகவே இடம்பெற்றிருக்கலாம் என கொக்குவில் குளம்பிட்டிச் சந்தி தாக்குதலுக்கு இலக்காண புடவைக்கடை உரிமையாளர் தெரிவிக்கின்றார். இவ்வாறான தாக்குதல்கள் பல நடைபெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன் யாழ் நியூமார்க்கற்றில் தனது கடையயை வாடகைக்கு வழங்கியது தொடர்பில் கடையின் உரிமையாளர் திருநல்வேலியில் இருந்த அவரின் வீட்டில் வைத்து தாக்கப்பட்டு பலத்த வாள் வெட்டுக்கும் இலக்கானார். இது பற்றி சம்பந்தப்பட்ட எழுபதுக்கும் மேல் வயதான உரிமையாளரின் உறவினர் தேசம்நெற்க்கு தகவல் தருகையில் குறித்த கடையை வேறொருவரும் தனக்கு கேட்டிருந்ததாகவும் அவருக்கு கொடுக்க மறுத்து இன்னுமொருவருக்கு கடையை கொடுத்ததாலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடையை தங்களுக்கு வாடகைக்குத் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்தவர் வாடகைக்கு ரவுடிகளை அமர்த்தி இத்தாக்குதலை நடத்தியதாகவே தாங்கள் நம்புவதாக பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர் தெரிவித்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யவில்லை.

வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவ்வாறான வாடகை ரவுடிகளைப் பயன்படுத்தி வருவதாக தெரியவருகின்றது. அரசியல் வாதிகள் பொலிஸார் வெளிநாட்டவர்கள் என்று அனைவரது கரங்களிலும் கறைகள் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து கொண்டு ஊர் சென்றுவரும் சிலர் அங்கு பெண்களை பாலியல் பொருட்களாக பயன்படுத்துவதை தனது ‘ஒற்றைப் பனைமரம்’ படத்தில் இயக்குனர் புதியவன் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் வாள்வெட்டு! தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேசசபை உறுப்பினர் தலைமறைவு!

யூலை 11 மாலை யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட பிரதேசசபை உறுப்பினர் தலைமறைவாகி உள்ளார். சித்தங்கேணி பிள்ளையார் கோவிலின் மகாகும்பாபிசேகக் கணக்கு தொடர்பில் எழுந்த வாக்குவாதத்தில் கேள்விகேட்டவரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினார் வாளால் வெட்டியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கு இலக்கானவர் தலையிலும் கையிலும் வெட்டுக் காயங்களுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலுக்கு உள்ளானவர் யாழ் பல்கலைக்கழகத்தில் தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்கும் பயிற்றுனர் எனவும் தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக அன்று சிவன்கோவிலின் 6ம் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர் ஒருவர் தகவல் தெரிவிக்கையில் சம்பவம் மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றதாகவும் சித்தங்கேணி பிள்ளையார் கோவிலின் கணக்கு வழக்குத் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் வாக்குவாதப்பட்டதை கேட்கக் கூடியதாக இருந்ததாகவும் தெரிவித்தார். சற்று நேரத்தில் வாக்குவாதம் மோதல்நிலைக்குச் செல்ல தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் வாளை எடுத்து வெட்டியதாகவும் அப்பக்தர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

சித்தங்கேணி சிவன் கோவிலும் பிள்ளையார் கோவிலும் சித்தங்கேணிச் சந்தியின் இரு புறமும் அருகருகே உள்ள ஆலயங்கள். இந்த ஆலயங்களின் நிர்வாகசபையில் உள்ளவர்களும் பெரும்பாலும் அதே உறுப்பினர்களாக இருப்பர். இந்த மோதலில் சம்பந்தப்பட்ட இருவருமே இரு ஆலயங்களினதும் நிர்வாகசபையில் உள்ளவர்களே.

தமிழ் பிரதேசங்கள் வன்முறை சம்பவங்கள் மலிந்த பிரதேசங்களாக மாறியுள்ள சூழலில் ஒழுக்கம் பண்புகளைப் பேண வேண்டிய ஆலயத்தில் வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவதற்காக உழைக்க வேண்டிய அரசியல் கட்சியினரே இந்த வாள்வெட்டை மேற்கொண்டும் உள்ளமை தமிழ் பிரதேசங்கள் எதிர்கொள்ளும் ஆபத்தினை கட்டியம் கூறுபவையாக உள்ளன.

தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் இளைஞர்களின் காடைத்தனங்களின் பின்னால் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாப தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு ஆண்டுகளாக இருந்து வருகின்றது. கடைத்தனங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு மாறாக அவர்களை சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வெளியே எடுத்து தங்கள் கட்சியின் நலன்களுக்கு பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டுகள் சமூகவலைத்தளங்களில் பரவலாக பதிவுசெய்யப்பட்டு உள்ளது. இந்தப் பின்னணியிலேயே நேற்று தமிழ் தேசிய முன்னணயின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரே பட்டப்பகலில் ஒரு ஆலய வளாகத்தில் அடியார்கள் முன்னிலையில் வாள்வெட்டில் ஈடுபட்டுள்ளார்.

ஆலயத்தை பாரம்பரியமாக பராமரித்து வருபவர்களிடம் பிடுங்கிக் கொண்ட புதிய நிர்வாகத்தினர் தற்போது ஆலயத்தை மிகமோசமான முறையில் பரிபாலனம் செய்வதாக பெயர் குறிப்பிடவிரும்பாத அடியார் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இதன் உச்சகட்டம் தான் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தாக்குதலில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் தற்போதைய யாழ் மேயர் மணிவண்ணனுக்கு ஆதரவானவர் என்றும் இந்த அணியிலேயே வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடைய பலர் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகின்றது. இவர்களுடைய மிரட்டல்களுக்கு அஞ்சியே யாழ் ஊடகங்கள் சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினரின் கட்சியை குறிப்பிடுவதைத் தவிர்த்துள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் சிவகுமார் கஜேன் மரணித்து இருந்தார். இவருடைய மரணம் கொலையாக இருக்கும் என்ற சந்தேகம் எழுவதற்கும் கட்சியின் வன்முறை போக்கே காரணம் என நம்பப்படுகின்றது. ஆனால் சிவக்குமார் கஜேனின் மரணம் தற்கொலை என இறந்தவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காதலித்த பெண்ணை மணக்க அனுமதியாமல் மற்றுமொரு பெண்ணுடன் திருமணத்திற்கு நிர்ப்பந்தித்ததாலேயே சிவக்குமார் கஜேன் தற்கொலை செய்துகொண்டதாக இராமாவில் பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை தெரிந்ததே

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் யாழ் மேயர் மணிவண்ணனும் யாழில் நடைபெறும் வன்மறைச் சம்பவங்கள் தொடர்பில் பொறுப்பான முறையில் செயற்பட வேண்டும். கட்சிக்குள் வன்முறையைக் களையும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வன்முறையுடன் தொடர்புபட்டவர்களை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். தங்களுடைய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களே ஒவ்வொருவராக தற்கொலை செய்வதை பொருட்படுத்தாமல் இருந்துகொண்டு சமூகத்துக்கு எப்படி இவர்களால் வழிகாட்ட முடியும்.

யாழ்ப்பாணம் நல்லலூரடியில் ஒடுக்கபட்ட சமூகப் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வந்த போது துரிதகதியில் வந்து அவர்களை விரட்டியடிக்க முழுமூச்சுடன் செயற்பட்ட மேயர் மணிவண்ணன் குழுவினர் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் வன்முறை தொடர்பிலும் அவர்களின் தற்கொலைகள் தொடர்பிலும் துரிதகெதியில் செயற்பட வேண்டும்.