வலிந்து காணாமல் ஆக்கபட்டோர்

வலிந்து காணாமல் ஆக்கபட்டோர்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பொலிஸாரின் அடாவடித்தனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டப் பேரணி !

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பொலிஸாரின் அடாவடித்தனத்தை கண்டித்தும், வவுனியா மாவட்ட தலைவி ஜெனிற்றா விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரியும் முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இன்று (08) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் ஜனாதிபதி வருகையின்போது நியாயம் கேட்கச் சென்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவி கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு புனித இராஜப்பர் தேவாலயத்துக்கு முன்பாக ஆரம்பமானது.

குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக சென்று நிறைவு பெற்றிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘பொலிஸ் அராஜகம் ஒழிக’, ‘விடுதலை செய் விடுதலை செய் ஜெனிற்றாவை விடுதலை செய்’, ‘சர்வதேச விசாரணையே எமக்கான தீர்வு’, ‘ரணில் அரசே நட்ட ஈடு வழங்கி எமது பேராட்டத்தை நிறுத்தக் கனவு காணாதே’, ‘பாதிக்கப்பட்ட உறவான ஜெனிற்றாவை உடன் விடுதலை செய்’, ‘ஜனநாயக வழியில் போராடுபவர்களை கைது செய்வதுதான் ரணில் அரசின் நல்லிணக்கமா?’, ‘சர்வதேச விசாரணையே எமக்கான தீர்வு’ போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.

முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பினை வெளிப்படுத்தி கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.

இப்போராட்டத்தில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

2261வது நாட்கள் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டீம் !

2261வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளிற்கு நீதி கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மே நாளான இன்று அதற்கான எதிர்ப்பை வெளியிட்டும், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் முன்பாக A9 வீதியில் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்துக்கு தேசிய பொங்கல் கொண்டாட வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து மக்கள் போராட்டம் – நீர்த்தாரை பிரயோகித்த பொலிஸ் !

ஜனாதிபதியின் யாழ்ப்பாணம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த போராட்டத்தை அரசடி சந்தியில் வைத்து பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்போது அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தேசிய தைப்பொங்கல் நிகழ்வு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உறவுகள் எங்கே..? எனக்கேட்டோருக்கு 300 மில்லியன் ரூபாவை தருவாக கூறியுள்ள ராஜபக்ஷ அரசு !

யுத்தம் முடிவடைந்த காலப்குதி தொடங்கி கவனிக்கப்படாத பிரச்சினையாக இருந்து வருவது காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விவகாரமாகும். யுத்தம் முடிந்து மூன்று அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்துள்ள போதும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் எந்த ஒரு அறிவிப்புமே வெளியாகியிருக்கவில்லை. காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேசம் தொடர்ந்தும் வலியுறுத்தியதால் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டது. எனினும் அது இயங்கியதாக தெரியவில்லை.

இது ஒரு புறமிருக்க காணாமலாக்கப்பட்டவர்களை தேடி அவர்களுடைய உறவினர்கள் தொடர்டச்சியான போராட்டங்களை 1000 நாட்களை கடந்தும் மேற்கொண்டு வருகின்ற நிலையில் அண்மையில் ஐ.நா தொடரில் பேசிய ஜனாதிபதி கோத்தாபாய இறந்தவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கவுள்ளதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. இந்த நிலையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு செலுத்துவதற்காக 300 மில்லியன் ரூபாயை ஒதுக்க முன்மொழியப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

உங்களிடம் கையளித்த பிள்ளைகளை தாருங்கள் என கேட்டோரிடம் பணம் தருவதாக பஷில்ராஜபக்ஷ கூறியிருப்பது தமிழ்மக்களை் தொடர்பான ராஜபக்ஷக்களுடைய மனோநிலையையே காட்டியுள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கபட்டோருக்கான நீதி கேட்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்த்துக்கு அழைப்பு !

தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் 4 வருடங்களை எட்டுகின்றது. இதுவரையிலும் தமது பிள்ளைகளை தேடியபடி போராடி வந்த 72 க்கும் மேற்பட்ட தாய் தந்தையர் நீதியே இன்றி இறந்து போயுள்ளார்கள் . தொடர்ந்தும் கேட்பார் யாரும் இன்றி இவர்களின் போராட்டம் தொடர்கிறது .
இந்நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் தினத்தில் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையம் முன்பாகவும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தடியிலும் வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்க படவுள்ளது .
பாதிக்கப்பட்டவர்களாக தொடர்ந்தும் வலிகளோடு போராடி வரும் தாய்மாருக்கு வலு சேர்க்க இந்த போராட்டங்களில் இன ,மத ,அரசியல் பேதங்கள் கடந்து அனைவரும் பங்கெடுக்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.