2020 தேர்தல்

Thursday, January 20, 2022

2020 தேர்தல்

2020 பாராளுமன்ற வாக்களிப்பில் மாவட்டங்களின் வாக்களிப்பு வீதம் வெளியானது! – வன்னியில் 73% வாக்களிப்பு.

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. மிகுந்த பாதுகாப்புடனும் சுகாதார நடைமுறைகளுடன் நடைபெற்ற இந்த தேர்தலில் எதிர்பாக்கப்பட்டதை விட மக்களுடைய வரவு சிறப்பாக காணப்பட்டதாக பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இதே நேரத்தில் தமது வாக்கினை பதிவு செய்வதற்காக கொவிட் 19 தொற்று பரவலுக்கு மத்தியிலும் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு வருகை தந்த அனைத்து வாக்காளர்களுக்கும் விசேடமாக தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கிடைத்திருக்கக் கூடிய தகவல்களின் படி  இன்று காலை 07 மணி முதல்  மாலை 5 மணி வரை 22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விகிதம் பின்வருமாறு,

நுவரெலியாவில் 75%
மொணராகலையில் 74%
பதுளையில் 74%
திருகோணமலையில் 74%
ஹம்பாந்தோட்டையில் 73%
வன்னியில் 73%
இரத்தினபுரியில் 73%
கொழும்பில் 72%
திகாமடுல்லையில் 72%
மட்டக்களப்பில் 72%
மாத்தறையில் 71%
களுத்துறையில் 71%
மாத்தளையில் 71%
பொலன்னறுவையில் 71%
கண்டியில் 71%
அனுராதபுரத்தில் 71%
கேகாலையில் 71%
கம்பஹாவில் 69%
குருணாகலையில் 69%
காலியில் 69%
யாழ்ப்பாணத்தில் 64%
புத்தளத்தில் 63%

என்ற வகையில் மக்களின் வாக்களிப்பு வீதம் காணப்படுகின்றது.

தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் நடமாடும் சேவை ஆரம்பம்!

தேர்தல் கடமைகளுக்காக 69,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் நடமாடும் சேவை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

3,069 பொலிஸ் நடமாடும் சேவைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில்  பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் 10,500 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – தேர்தல்கள் ஆணைக்குழு

நாளைய தினம் (05.08.2020) நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலக பொறுப்பில் உள்ள வாக்கு பெட்டிகளை இன்று (4.05.2020) காலை 8.00 மணிக்கு வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு எடுத்துச்செல்கின்ற பணி ஆரம்பமானது. 12,985 வாக்களிப்பு நிலையங்களுக்காக 71 மத்திய நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. மத்திய நிலையங்களுக்கு வாக்கும் பெட்டிகளை அனுப்பும் பணி இன்று மாலைக்குள் பூர்த்தி அடையவுள்ளது.

நாளை நடைபெறவுள்ள வாக்களிப்பு தொடர்பான ஒத்திகை இன்று தேர்தல் மத்திய நிலையங்களில் இடம்பெறுவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்குப் பெட்டிகளுக்களுக்கான பாதுகாப்பில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்களிப்பு நிலையங்களில் கிருமி நீக்க பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிப்பதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

இம்முறை பொது தேர்தலில் 25 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களை பிரதிநித்துவப்படுத்தி 7,456 பேர் போட்டியிடுகின்றனர். இதேவேளை பொது தேர்தலில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த 10,500 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாருக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு படையினரும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவிததார்.

3000க்கு மேற்பட்ட தேர்தல் முறைப்பாடுகள் பதிவு – வடக்கிற்கு முதலிடம்!

இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது அதிகளவான தேர்தல் சட்டமீறல் சம்பவங்கள் வட மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சியின் ஒன்றிணைந்த செயற்குழு உறுப்பினர் அதில் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அதில் மேலும் குறிப்பிடும்போது அவர்,

நாடளாவிய ரீதியில் 3000இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. அவற்றில் அரைவாசிக்கு அதிகமானவை வட மாகாணத்தில் பதிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். சுமார் 1800 முறைகேடுகள் வடமாகாணத்தில் மட்டும் பதிவாகியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட விரோத பரப்புரை நடவடிக்கைகள், வாக்காளர்களுக்கு பணம் வழங்குதல், வாக்காளர்களை மத ரீதியான சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்லல், கட்சியின் பெயர் இலக்கம் பொறிக்கப்பட்ட பத்திரங்களை விநியோகித்தல், தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்குகளை மீறல், சட்ட விரோத வாகன பேரணிகள் போன்ற தேர்தல் சட்ட மீறல்கள் சம்பவங்களே வட மாகாணத்தில் அதிகளவாகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை அமைதிக் காலம் மற்றும் தேர்தல் தினத்திலும் பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொள்ள சில கட்சிகளும் வேட்பாளர்களும் திட்டமிட்டுள்ளமை குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை கட்டுப்படுத்த பொலிஸார் பக்கச்சார்பின்றி செயற்பட வேண்டுமென மேலும் அவர் இதன்போது  தெரிவித்துள்ளார்.

சுகாதாரமான தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கான பணிகள் முன்னெடுப்பு.

நாளை மறுதினம் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு  கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி இலங்கையின் சகலபகுதிகளிலும் சுகாதாரமான தேர்தல் ஒன்றை நடாத்த தேர்தல் திணைக்களமானது முடியுமானவரை இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில்  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு இரசாயண திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் மட்டக்களப்பின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் 6 வாக்களிப்பு நிலையங்களும், ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் 7 வாக்களிப்பு நிலையங்களும், வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் 16 வாக்களிப்பு நிலையங்களுக்கும் இரசாயண திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.

இதன்போது கோறளைப்பற்று மத்தி, ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் வாக்களிப்பு நிலையங்களுக்கு மக்களின் பாதுகாப்பு கருதி இரசாயண திரவம் தெளிக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் நோய் காரணமாக வாக்காளர்களின் நன்மை கருதி சுகாதார விதிமுறைகளைப் பேணி இத்தேர்தல் நடாத்த சகல ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக சுமார் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!

இலங்கை பாராளுமன்றத்தேர்தலுக்கான அனைத்து விதமான பிரச்சார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்ற நிலையில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இதுவரையில் 6483 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஒரு வன்முறை செயல் கூட இதுவரை பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று (01.08.2020) பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 249 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் பாதுகாப்பிற்கென முப்படையினரும் கடமையில் – மஹிந்த தேசப்பிரிய

எதிர் வரும் 05.08.2020 நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலுக்கான பிரச்சாரங்கள் யாவும் இன்று நள்ளிரவு முதல் முடிவுக்கு வருகின்ற அதே நேரம் இன்று நள்ளிரவு முதல் அமைதிக்காலமாக ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் தேர்தல் தொடர்பான பாதுகாப்பிற்கென நாளை முதல் முப்படையினர் கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளர் . பிரச்சினைகள் ஏற்படக்கூடுமென ஊகிக்கப்படும் பிரதேசங்களுக்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை – சுரங்க ரணசிங்க

இலங்கையின் பொதுத்தேர்தலுக்கான பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றன நிலையில் இன்று நள்ளிரவுடன் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் யாவும் நிறுத்தப்படவேண்டும். அத்துடன் சமூக ஊடகங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள பிரசாரங்கள் அனைத்தும் அகற்றப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முரண்பாடுகள் தீர்வுப்பிரிவின் உதவி ஆணையாளர் சுரங்க ரணசிங்கவின் தகவல்படி சமூக ஊடகங்களின் பிரசாரங்கள் ஆணைக்குழுவினால் இன்று நள்ளிரவுக்கு பின்னர் உடனடியாகவே அகற்றப்படும்.

இதேவேளை கடந்த ஒரு வாரக்காலப்பகுதிக்குள் சமூக ஊடக பிரசாரத்துக்காக வேட்பாளர்கள் 1லட்சம் 50ஆயிரம் டொலர்களை செலவிட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.