2020 Parliament election

2020 Parliament election

3000க்கு மேற்பட்ட தேர்தல் முறைப்பாடுகள் பதிவு – வடக்கிற்கு முதலிடம்!

இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது அதிகளவான தேர்தல் சட்டமீறல் சம்பவங்கள் வட மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சியின் ஒன்றிணைந்த செயற்குழு உறுப்பினர் அதில் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அதில் மேலும் குறிப்பிடும்போது அவர்,

நாடளாவிய ரீதியில் 3000இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. அவற்றில் அரைவாசிக்கு அதிகமானவை வட மாகாணத்தில் பதிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். சுமார் 1800 முறைகேடுகள் வடமாகாணத்தில் மட்டும் பதிவாகியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட விரோத பரப்புரை நடவடிக்கைகள், வாக்காளர்களுக்கு பணம் வழங்குதல், வாக்காளர்களை மத ரீதியான சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்லல், கட்சியின் பெயர் இலக்கம் பொறிக்கப்பட்ட பத்திரங்களை விநியோகித்தல், தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்குகளை மீறல், சட்ட விரோத வாகன பேரணிகள் போன்ற தேர்தல் சட்ட மீறல்கள் சம்பவங்களே வட மாகாணத்தில் அதிகளவாகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை அமைதிக் காலம் மற்றும் தேர்தல் தினத்திலும் பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொள்ள சில கட்சிகளும் வேட்பாளர்களும் திட்டமிட்டுள்ளமை குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை கட்டுப்படுத்த பொலிஸார் பக்கச்சார்பின்றி செயற்பட வேண்டுமென மேலும் அவர் இதன்போது  தெரிவித்துள்ளார்.

சுகாதாரமான தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கான பணிகள் முன்னெடுப்பு.

நாளை மறுதினம் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு  கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி இலங்கையின் சகலபகுதிகளிலும் சுகாதாரமான தேர்தல் ஒன்றை நடாத்த தேர்தல் திணைக்களமானது முடியுமானவரை இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில்  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு இரசாயண திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் மட்டக்களப்பின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் 6 வாக்களிப்பு நிலையங்களும், ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் 7 வாக்களிப்பு நிலையங்களும், வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் 16 வாக்களிப்பு நிலையங்களுக்கும் இரசாயண திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.

இதன்போது கோறளைப்பற்று மத்தி, ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் வாக்களிப்பு நிலையங்களுக்கு மக்களின் பாதுகாப்பு கருதி இரசாயண திரவம் தெளிக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் நோய் காரணமாக வாக்காளர்களின் நன்மை கருதி சுகாதார விதிமுறைகளைப் பேணி இத்தேர்தல் நடாத்த சகல ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக சுமார் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!

இலங்கை பாராளுமன்றத்தேர்தலுக்கான அனைத்து விதமான பிரச்சார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்ற நிலையில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இதுவரையில் 6483 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஒரு வன்முறை செயல் கூட இதுவரை பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று (01.08.2020) பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 249 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் பாதுகாப்பிற்கென முப்படையினரும் கடமையில் – மஹிந்த தேசப்பிரிய

எதிர் வரும் 05.08.2020 நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலுக்கான பிரச்சாரங்கள் யாவும் இன்று நள்ளிரவு முதல் முடிவுக்கு வருகின்ற அதே நேரம் இன்று நள்ளிரவு முதல் அமைதிக்காலமாக ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் தேர்தல் தொடர்பான பாதுகாப்பிற்கென நாளை முதல் முப்படையினர் கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளர் . பிரச்சினைகள் ஏற்படக்கூடுமென ஊகிக்கப்படும் பிரதேசங்களுக்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவை – – அமைச்சர் மஹிந்த அமரவீர

பொதுத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சகல பஸ் வண்டிகளையும் சேவையில் ஈடுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் மாகாணங்களுக்கிடையிலான பஸ் வண்டிகள் மாத்திரமன்றி மாகாண போக்குவரத்து அதிகார சபையின் கீழ் இயங்கும் பஸ் வண்டிகளும் சேவையில் ஈடுப்படவுள்ளன.

இவ்வாறு 600 பஸ்கள் சேவைக்கென தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதற்கு மேலதிகமாக சகல புகையிரதங்களும் விசேட நாட்களில் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம், மட்டக்களப்பு, கண்டி, பதுளை, பெலியத்த வரையில் மேலதிக ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன. தேவையேற்படும்; பட்சத்தில் மேலதிக ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.