2022 வரவு செலவு திட்டம்

2022 வரவு செலவு திட்டம்

“9 மாகாணங்களையும் ஒன்றாகக் கருதி இன, மத பேதமின்றி வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.” – நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் வடக்கு, கிழக்கு தொடர்பில்  கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என  நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு என்று பாராது 9 மாகாணங்களையும் ஒன்றாகக் கருதி இன, மத பேதமின்றி வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று சனிக்கிழமை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மேலும் கூறுகையில்,

பொருட்களின் விலைகளை குறைக்க குறுங்கால தீர்வுகள் தோல்வியடைந்துள்ளதால் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் பொருட்களின் விலைகளைக் குறைக்க வேறு அணுகுமுறை  முன்வைக்கப்பட்டுள்ளது. எந்த அரசும் பொருட்களின் விலைகளைக் குறைத்தது கிடையாது. பொருட்களின் விலையேற்ற பிரச்சினைக்கு குறுகிய கால தீர்வு தேடி எமது நாடு மட்டுமன்றி ஏனைய நாடுகளும் தோல்வியடைந்தன. உற்பத்தியை அதிகரித்து பொருட்களை சந்தையில் இலகுவாகப் பெறக் கூடிய நிலைமையை உருவாக்க வேண்டும்.

இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் பொருட்களின் விலைகளைக் குறைக்க வேறு அணுகுமுறை  தீர்வையே   முன்வைத்துள்ளோம். வெளிநாட்டிலிருந்து தருவிக்கும் பொருட்கள் அடுத்த வருடம் குறையும் என்று கூறு முடியாது. இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்போது விலைகள் உயரும். பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க ஆவண செய்யப்படும்.

பொருட்களின் விலைகளில் மாற்றம் இருந்தாலும் தட்டுப்பாடின்றி அவை கிடைக்கும். முறையற்ற விதத்தில் பொருட்களின் விலைகளை அதிகரித்து மக்களைச் சூறையாட வேண்டாம் என வியாபாரிகளிடம் கோருகின்றோம். பின்தங்கிய மக்களுக்கு நிவாரணம் மற்றும் சலுகை வழங்குவதற்காக 31 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு 24 மாதங்களுக்கு நிவாரணப் பொதி வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்காக ஓரிரு பொருட்களின் விலைகளை குறைப்பதில் பயனில்லை. எரிவாயு  விலையைக் குறைப்பதால் சகல மக்களுக்கும் நன்மை கிடைக்காது. எரிவாயு  பாவிக்காத மக்களும் உள்ளனர். விசேட வர்த்தகப் பண்டவரியின் கீழ் மக்கள் மீது சுமையேற்றப்படமாட்டாது – என்றார்.

இதன்போது வடக்கு, கிழக்கு தொடர்பில் இந்த வரவு – செலவுத்திட்டத்தில்  கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில்  ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச பதிலளிக்கையில்,

நாம் ஒரே நாடாகவே இந்த வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளோம். வடக்கு, கிழக்கு என்று பாராது 9 மாகாணங்களையும் ஒன்றாகக் கருதி இன, மத பேதமின்றி இந்த வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

30 வருட போர் காரணமாக அப்பிரதேசங்கள் பின்னடைந்திருந்தன. எமது அரசு  வடக்கின்  வசந்தம் மற்றும் கிழக்கின்  உதயம் திட்டங்களின் கீழ் அப்பிரதேசங்களை ஏனைய மாகாணங்களுக்கு சமமாக அபிவிருத்தி செய்தது. சகல உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டன. 17 மிதவைகளுக்குப் பதிலாக பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டன. வடக்கில் 85 வீதம் வயல் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ளன.

9 மாகாணங்களிலும் வாழும் மக்களையும்  சமமாக கவனிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கு, கிழக்கு உட்பட 14 ஆயிரத்து 21 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனது கிராம சேவகர் பிரிவுக்கும் 3 மில்லியன் ரூபாதான் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தச் சந்தர்ப்பத்திலும் இன, மத மற்றும் பிரதேச பேதமின்றி சுதந்திரமாக வாழும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

3 வருடங்களின் பின்னர் சிகரெட் விலை 5 ரூபாவால் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த நிதி அமைச்சர், “சிகரெட் விலையைக் கூடுதலாக அதிகரிப்பது தொடர்பில் சட்டப் பிரச்சினை உள்ளது. சிகரெட், மதுபானம் மற்றும் சீனிக் கட்டுப்பாடு தொடர்பில் சுகாதாரத் தரப்பால்  எமக்கு யோசனை முன்வைக்கப்பட்டது. இந்தநிலையில், சீனி தவிர  சிகரெட் மற்றும் மதுபானம்  ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதி அமைச்சர் பதிலளிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய காலம் 5 வருடத்தில் இருந்து 10 ஆக அதிகரிக்கும் யோசனை ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால்தான் முன்வைக்கப்பட்டது. அரச ஊழியர்களுக்கும் 10 வருடங்கள் பணியாற்றினாலே ஓய்வூதியம் கிடைக்கின்றது. அதனால்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் பெறுவதற்கான  காலம் 10 வருடங்களாக நீடிக்கப்பட்டது. இந்த யோசனையை  முன்வைத்தபோது ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் கரகோசம் செய்தனர். இது தொடர்பான சட்டத்துக்கு ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவர் என நம்புகிறேன். இளம் நாடாளுமன்ற உறுப்பினர்க்களே கூடுதலாக உள்ளனர். அடுத்த தடவையும் அவர்களுக்குப் நாடாளுமன்றம் வரச் சந்தர்ப்பம் உள்ளது – என்றார்.

“சுமையாக மாறியுள்ள அரச சேவையாளர்கள். ஒரு சலுகையையும் இப்போதைக்கு இல்லை.” – நிதியமைச்சர் பசில் ராஜபக்ச

“அரச சேவை நாட்டுக்கு சுமையாக மாறியுள்ளது. அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டுமாயின் அதற்காக பொதுமக்களிடம் இருந்து வரியை அறவிட வேண்டும்.” என  நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக  கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்  போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

அரச சேவை நாட்டுக்கு சுமையாக மாறியுள்ளது. அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டுமாயின் அதற்காக பொதுமக்களிடம் இருந்து வரியை அறவிட வேண்டும். இதன் காரணமாக மேலும் ஒரு வருடத்திற்கு அரச சேவைக்கு பொது நிதியை செலவிட முடியாது.

இலங்கை சுதந்திரமடையும் போது நாட்டின் பொது மக்களில் 118 பேருக்கு ஒரு அரச ஊழியர் இருந்தார். எனினும் தற்போது 13 பேருக்கு ஒரு அரச ஊழியர் இருக்கின்றார். இந்த அரச ஊழியர்களில் பலர் காலம் கடந்து திருமணம் செய்கின்றனர். இந்த அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் காலத்திலேயே அவர்களின் பிள்ளைகள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுகின்றனர் என்பது மட்டுமல்ல, உயர்கல்வியை கற்க ஆரம்பிக்கின்றனர்.

இது அரச ஊழியர்களுக்கு பெரிய பிரச்சினை. இதன் காரணமாகவே நாங்கள் அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மேலும் 10 ஆண்டுகள் அதிகரித்துள்ளோம். தற்போது அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 55 இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கும்.

அத்துடன் அரச சேவைக்கு அனுபவம் கொண்ட ஊழியர்கள் அவசியம். எதிர்காலத்தில் வருடாந்தம் ஓய்வுபெறும் அரச ஊழியர்களின் சதவீதத்திற்கு அமைய புதிய தொழில் வாய்ப்புக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.