COVID-19

COVID-19

கொரோனா தொற்று அச்சத்தால் இருவர் தற்கொலை !

உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக பல இலட்சக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றாளர்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் உலக நாடுகள் கனிசமாக மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக இலங்கையில் கொரோனா மூன்றாம் கட்ட பரவல் ஏற்பட்டுள்ளதுடன் நாளுக்கு நாள் தொற்றாளர்களுடைய தொகையும் அதிகரித்த வண்ணமுள்ளது. மேலும்  தற்போது பரவும் வைரஸ் மிக வேகமாக தொற்றக்கூடியது என இலங்கையின் பல்கலைகழக ஆராய்வு முடிவுகளில் கூறப்பட்டிருந்தது.அதே நேரத்தில் கொரோனா வைரஸால் இறப்பவர்களுடைய தொகையும் இலங்கையில் கனிசமாக அதிகரித்துள்ளது. இது மக்களிடையே கொரோனா தொடர்பான அச்சத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக இருவேறு இடங்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி களுத்துறை – அகலவத்தையை சேர்ந்த (56-வயது) இ.போ.ச பேருந்து சாரதி ஒருவரே இவ்வாறு நேற்று (08) தற்கொலை செய்து கொண்டார்.

நாகொடை வைத்தியசாலை ஊழியர்கள் பலரை அவர் ஏற்றிச் சென்ற நிலையில் கொரோனா தொற்றலாம் என்ற அச்சத்தில் இருந்தார் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

கம்பஹா – ஜாஎலவை சேர்ந்த (72-வயது) பெண் நேற்று முன் தினம் (07) தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது மூத்த மகளுக்கும் மருமகனுக்கும் முன்னதாக கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட இவர் கவலையில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கடுகதியில் பரவும் கொரோனாவைரஸ் – தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு !

அமெரிக்காவில் கொரோனாவைரஸ் பாதிப்பு ஏறக்குறைய ஒரு கோடியை எட்ட உள்ளது. அங்கு தொடர்ந்து 3-வது நாளாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனாவைரஸ், சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தியதைவிட, அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது

அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் கடும் அச்சத்தையும், பீதியையும் உருவாக்கியுள்ளது. மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் இருப்பதாலும், முகக்கவசம் அணியாமல் சுற்றுவதாலும் கொரோனாவைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 3 நாட்களாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகளின் வருகை அதிகரித்து வருவதால், அவர்களைச் சமாளிக்க முடியாத சூழலை உருவாக்கியுள்ளது.

மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 20 மாகாணங்களில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இல்லினாய்ஸ், டெக்சாஸ் மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டது. இது தவிர நெப்ரஸ்கா, இன்டியானா, ஐயோவா, மின்னசோட்டோ, மிசவுரி, நார்த் டகோடா, ஒஹியோ, விஸ்கான்சின், அர்கானோஸ், கொலராடோ, மைனி, கென்டகி, ஓரிகன், நியூ ஹெமிஸ்பயர், ஒக்லஹோமா, ஹோட் ஐலாந்து, உத்தா, வெஸ்ட் விர்ஜினியா ஆகிய மாகாணங்களில் புதிதாக கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த திடீர் அதிகரிப்பு காரணமாக பல்வேறு மாகாண அரசுகள் மக்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பொது இடங்களில் மக்கள் கூடும் எண்ணிக்கையையும் குறைத்துள்ளன. அமெரிக்க மருத்துவமனைகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் புதிதாக ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 204 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,125 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக உயிரிழப்பு ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தப் பாதிப்பு 99 லட்சத்து 19 ஆயிரத்து 522 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 2 லட்சத்து 40 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 09 வயது சிறுமிக்கு கொரோனா !

யாழில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒன்பது வயதுச் சிறுமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதான வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உடுவில் – சங்குவேலியில் அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கே தொற்று உள்ளமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் நேற்றிரவு அறிக்கையிடப்பட்டுள்ளது.

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நட்சத்திர விடுதியில் பணியாற்றும் தந்தையிடம் சென்று திரும்பிய தாய் மற்றும் மகள்கள் இருவர் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் மூவரிடமும் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன.அவர்களில், ஒன்பது வயதுச் சிறுமிக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாய் மற்றும் இன்னொரு பிள்ளைக்கு முதல் பரிசோதனையில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் உடுவில் அம்பலவாணர் வீதி – உதயசூரியன் சந்தியில் தாய் மற்றும் இரண்டு வயது மகளுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில் அமெரிக்காவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா வைரஸ் – ஒரே நாளில் ஒரு லட்சத்தை நெருங்கும் புதிய தொற்றாளர் தொகை !

சீனாவின் வுகான் நகரத்தி பரவ ஆரம்பித்ததாக கண்டுபிடிக்கப்பட்ட  கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. அத்துடன் புதிய உச்சத்தையும் தொட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் ஒருநாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது. தற்போது அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 93 லட்சத்தைக் கடந்துள்ளது.
மேலும், ஒரே நாளில் 970-க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 35 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்துள்ளது. தற்போது 30 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வரும் செவ்வாய்க்கிழமை அங்கு ஜனாதிபதி தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் நடக்க உள்ள நிலையில், கொரோனா தாக்கம் வேகம் எடுத்திருப்பது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்து விட வேண்டும் என்ற ஜனாதிபதி டிரம்பின் முயற்சி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறு மாதங்களுக்கு மேலாக கொரோனாத்தொற்று இல்லாத நாடாக தாய்வான் சாதனை – சீனாவுக்கு அருகிலிருந்தும் கொரோனாவை எவ்வாறு கட்டுப்படுத்தியது தாய்வான் ?

ஐரோப்பா கொரோனாவின் 2-வது அலையை சந்தித்து வருகிறது. பிரான்சிலும், ஜெர்மனியிலும் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தினமும் உலகம் முழுதும் பலலட்சக்கணக்கிலானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வண்ணமுள்ளனர்.
இந்நிலையில், தாய்வானில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி முதல் உள்ளூரில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. முன்னதாக 553 பேருக்கு தொற்று இருந்தது. 7 பேர் இறந்திருந்தனர். அதன் பிறகு கடந்த 200 நாட்களில் யாருக்கு தொற்று ஏற்படவில்லை. இருப்பினும் கட்டுப்பாடுகளை தாய்வான் கடைபிடித்து வருகிறது.
சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை உயர தொடங்கிய ஜனவரி மாதமே தாய்வான் தனது எல்லைகளை மூடியது. பயணங்களை ஒழுங்குபடுத்தி வந்தது. இன்னமும் எல்லைகள் மீதான கட்டுப்பாடுகளை அப்படியே வைத்துள்ளது. முன்கூட்டியே எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கை இது என்கிறார்கள். அது தவிர நிபுணர்கள் பரிந்துரைத்த அனைத்து விதிகளையும் கண்டிப்புடன் அமுல்படுத்தியது.
Taiwan's president: how the country contained coronavirus spread - Business  Insider
தொற்று ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களை தீவிரமாக கண்டுபிடித்தது. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவருடன் சம்பந்தப்பட்ட 150 பேர் வரை தனிமைப்படுத்தியது. அனைவருக்கும் அரசால் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டன.  உள்ளூர் அளவில் தாய்வானில் கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், கடந்த 2 வாரங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 20 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இதனால் எச்சரிக்கையை தொடர்ந்து கடைப்பிடிக்கிறது.

“கொரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்கி இருப்பதால் குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்” – கனடா பிரதமர் ஜஸ்டின்

கொரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்கி இருப்பதால் குளிர்காலம் கடுமையானதாக இருக்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, “நேற்று 2,674 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,22,887 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,001 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதுவரை 1,86,464 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்க இருப்பதால் குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

கனடாவில் கொரோனா பரவலை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை பயணத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

உலகில் சுமார் 4.42 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த  கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4.42 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.24 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 10.62 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 79 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

“தொற்று நோயியல் நிபுணர்கள் வழங்கியுள்ள தரவுகளின் பிரகாரம் இன்னமும் வைரஸ் பரவல் சமூகத் தொற்றாக மாறவில்லை“ – அமைச்சர் ரமேஷ் பத்திரன

கொவிட்-19 வைரஸ் இலங்கையில் சமூகப் பரவலடைந்துள்ளதாக நிபுணர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்ததுள்ளார்.

முழு நாட்டையும் முடக்கி மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதற்கு அரசாங்கம் தயாராகவில்லை. அதேபோன்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கும் எதிர்காலத்தில் நெருக்கடிக்கு உள்ளாகும் மக்களுக்கும் பொருளாதார சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்குமெனவும் அவர் கூறினார்.

அத்துடன், நாட்டில் நிரம்பல் ஏற்பட்டுள்ள மீன் வகைகளை கொள்வனவு செய்து டின் மீன் உற்பத்திகளை அதிகரிக்க உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ரமேஸ் பத்திரன இவ்வாறு கூறினார். ஊடகச்சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில்களையும் வழங்கியுள்ளார்.

கேள்வி : – வைத்தியசாலைகளில் கட்டில்கள் பற்றாக்குறையாகவுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளரே?

பதில் :- இலங்கையில் தற்போதைய சூழலில் 4,468 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நோயாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களை வேறாக பராமரிப்பதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். தனிமைப்படுத்தல் நிலையங்களாயின் அங்கு விசேட கண்காணிப்பின் கீழ் அவர்களை பேணவும் வைத்தியசாலைகளில் விசேட சிகிச்சை பிரிவுகளை உருவாக்கமும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி :- நாடு முழுவதும் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறிப்படுகின்றனர். இது ஒரு கொத்தணியா அல்லது வைரஸ் சமூகப் பரவலைடைந்துள்ளதா?

பதில் :- நோயை கட்டுப்படுத்துவது மற்றும் ஒழிக்கும் செயற்பாடுகள் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனையின் பிரகாரம்தான் அரசாங்கம் செயற்படுகிறது. தொற்று நோயியல் நிபுணர்களின் வழங்கியுள்ள தரவுகளின் பிரகாரம் இன்னமும் வைரஸ் பரவல் சமூகத் தொற்றாக மாறவில்லை.

கேள்வி :- கொவிட் 19 க்கு உள்ளானவர்களுடன் முதல் தொடர்பை பேணியுள்ளவர்களை வீடுகளிலேயே தனிமையில் இருக்குமாறு அரசாங்க அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடர்த்தி அதிகரித்துவிட்டதா?

பதில் :- தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடர்த்தி அதிகரித்துள்ளமை தொடர்பிலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளமையால்தான் முதல் தொடர்பாளர்களை வீடுகளிலேயே தனிமையில் இருக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலின் வேகம் தீவிரமாக அதிகரித்துள்ளது. முதல் முறை பரவலிலிருந்த வைரஸையும் விட தற்போது பரவியுள்ள வைரஸ் தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை மிகவும் உயர்வாகவுள்ளது. அதனால் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும். சுகாதார வழிக்காட்டல்களை முழுமையாக பின்பற்றுவதும் அவசியமாகும்.

ஆகவே, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் சுகாதார ஆலோசர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் முழுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றார்.

இலங்கையில் வேகமடையும் கொரோனா வைரஸ் பரவல் – நோயாளர் எண்ணிக்கை இன்று சடுதியான அதிகரிப்பு !

இலங்கையில் மேலும் 293 பேருக்கு கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னைய நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகிய 291 பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 2 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 8,706 ஆக உயர்வடைந்துள்ளதுடன்  4,646 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 27  கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் இன்று நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,043ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 445பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன்  கொரோனா தொற்று காரணமாக 19 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இவர்களுள் 03 பேர் இன்று மட்டுமே மரணமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நாட்டில் இன்றுவரை 460455 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

“கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தவறிய அரசு நாட்டை அடிபாதாளத்திற்குள் தள்ளிவிட்டது” – ரஞ்சித் மத்தும பண்டார

அரசாங்கம் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தவறியுள்ளதன் மூலம் நாட்டை அடிபாதாளத்திற்குள்  தள்ளியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அறிக்கை ஒன்றை வெளியிட்டு இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தற்போதைய நிலையில் நாடு இக்கட்டான நிலையில் உள்ளதாகவும், இதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டமைக்கான காரணத்தை அரசாங்கம் இதுவரை தெரிவிக்க தவறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாடு கடும் பின்னடைவை சந்தித்துள்ள தற்போதைய சூழலில் அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் நடந்துக் கொள்வதை கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து திருப்தியடைய முடியாது என நாராஹேன்பிட்டிய அபேராமய விஹாராதிபதி முரித்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

´சுகாதார அதிகாரிகள் தற்போதைய நிலைமை குறித்து ஏற்கனவே சிந்தித்து செயற்படவில்லை. அதனால் தற்போது கொவிட் 19 பரவல் நாட்டில் வியாபித்துள்ளது. அதற்கான பொறுப்பை ஏற்பார் இல்லை. அரச வைத்திய பரிசோதனை நிலையத்தின் செயற்பாடு பூச்சியமாக காணப்படுகின்றது. அந்த நிலையத்தை தனியாருக்கு வழங்குவதில் பிரச்சினையுள்ளது என்றார்.