Namal Rajapaksa

Namal Rajapaksa

பதவி விலகியமை தொடர்பில் ஊடகங்களிடம் பேசியுள்ள நாமல் ராஜபக்ச !

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்துக்குத் தலைவணங்கி தனது அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளதாக நாமல் ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் மக்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி அவர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலைியில் அனைத்து அமைச்சர்களும் பதவி விலகியுள்ளதாக தினேஷ்குணவர்த்தன அறிவித்திருந்தார்.

ஊடகங்களிடம் இது தொடர்பில் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவது,

“நாடு என்றுமில்லாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இன்னமும் உரிய தீர்வு காணப்படவில்லை. இதற்கு அரச தலைவர் தலைமையிலான அமைச்சரவை தான் பொறுப்புக்கூற வேண்டும். இந்நிலையில், மக்களின் போராட்டத்துக்குத் தலைவணங்கியும் , புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு வலியுறுத்தியும் அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளேன்.

புதிய அமைச்சரவை தொடர்பிலும், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு குறித்தும் அரச தலைவரும் பிரதமரும் இணைந்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புகின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“தடைகளுக்கு மத்தியிலும் நாட்டை அபிவிருத்தி செய்து வருகிறோம்.” – நாமல் ராஜபக்ஷ

“தடைகளுக்கு மத்தியிலும் நாட்டை அபிவிருத்தி செய்து வருகிறோம்.” என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இரத்கம பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இதனை கூறியுள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

உலகில் தற்போது எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  இங்கிலாந்திலும் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் நிற்கின்றனர்.

உலகில் பல நாடுகளில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. எனினும் இலங்கை ஓரளவு அந்த நிலைமையில் இருந்து மீண்டு, தொழிற்சாலைகளை இயக்கி வருகிறது. தடைகளுக்கு மத்தியிலும் நாட்டை அபிவிருத்தி செய்து வருகிறோம்.

ஆர்ப்பாட்டங்களை நடத்தி மீண்டும் நாட்டை மூடும் தேவையே எதிர்க்கட்சிக்கு இருக்கின்றது. எனினும் அப்படியான நிலைமை ஏற்பட இடமளிக்கப் போவதில்லை.

எவ்வாறான சவால்கள் வந்தாலும் சௌபாக்கிய நோக்கதை முன்னெடுத்துச் செல்வோம். எதிர்கால சந்ததிக்காக நாட்டை கட்டியெழுப்புவோம் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சுப்பதவிகளில் ராஜபக்க்ஷக்களே ஆதிக்கம் !

நேற்றை தினம் இலங்கையினுடைய புதிய அமைச்சரவை கண்டி மகுல்மடுவவில் பதவியேற்றுக்கொண்டது.  இம்முறை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் ராஜபக்ஷ குடும்பத்துக்கு 8 அமைச்சுக்கள் பகிரப்பட்டுள்ளமையை கண்டித்து பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

அமைச்சுக்கள் பகிரப்பட்ட விதம் குறித்து அரசாங்கத்திலுள்ள முக்கிய அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ராஜபக்ஷ குடும்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப்பதவிகளின் பிபரங்கள் வருமாறு ..,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – பாதுகாப்பு அமைச்சர்

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ – நிதி, புத்தசாசனம், மத விவகாரம், கலாசாரம், நகர அபிவிருத்தி அமைச்சர்

சமல் ராஜபக்ஷ – நீர்பாசன அமைச்சர் மற்றும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்

நாமல் ராஜபக்ஷ – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

சமல் ராஜபக்ஷவின் புதல்வர் சஷிந்திர ராஜபக்ஷ – நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு மற்றும் விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்பம் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரியின் புதல்வர் நிபுண ரணவக்க நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர்களை தவிர ஜனாதிபதியின் மற்றுமொரு சகோதரரான பசில் ராஜபக்ஷ தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நபராக இருப்பார் எனவும் கூறப்படுகிறது.