புன்னியாமீன் பி எம்

புன்னியாமீன் பி எம்

சர்வதேச மனித உரிமைகள் தினம் International Human Rights Day: புன்னியாமீன்.

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்திழப்புக்கள், மனிதப்படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப்பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனமாகும்.

1945 -ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தையடுத்து 1946 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் “மனித உரிமை ஆணைக் குழு” உதயமாகியது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளைக் கொண்ட இம் மனித உரிமை ஆணைக் குழு, தனது முதல் வேலைத்திட்டமாக ‘சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட இந்த குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் (Universal Declaration of Human Rights) பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

டிசம்பர் 10, 1948-ஆம் ஆண்டு பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் உள்ள “பலேடு சாயிலோற்’ என்ற மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது.

இந்த புனித நாள் 1950 -ஆம் ஆண்டிலிருந்து டிசம்பர் 10 ஆம் திகதி “சர்வதேச மனித உரிமைகள் தினமாக” (International Human Rights Day) கொண்டாடப்பட்டு வருகிறது. “சகல மனிதப் பிரஜைகளும் சமத்துவமானதும், விட்டுக் கொடுக்க முடியாததுமான உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களுடனேயே பிறக்கின்றனர்” என்ற உண்மையை உணர்த்தும் வகையிலான நிகழ்வுகளும், செயற்திட்டங்களும் இத்தினத்தில் முழு உலகிலும் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று மனித உரிமைகளைப் பேணிக்காத்து மேம்படுத்துவதற்கான உலகளாவிய ஒரு நியமமாக இந்தப் பிரகடனம் மாறிவிட்டது.

இந் நிகழ்வுகளின் பிரதான நிகழ்ச்சி இத்தினத்தில் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறும். அதே நேரத்தில் உலகளாவிய ரீதியில் அரசுகளும், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளையொட்டி பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் இத்தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் சர்வதேச மனித உரிமைகள் தினத்துக்கென தொனிப் பொருள் ஒன்று நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டுக்கான தொனிப்பொருள் “எங்கள் எல்லோருக்குமான கௌரவமும் நீதியும்’ (dignity and justice for all of us) என்பதாகும்.
1776 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப்பிரகடனத்தின், ‘எல்லாப் பிரஜைகளும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் வாழும் உரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியை நாடும் உரிமை போன்றன அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாத உரிமைகளாகும்.” என கூறப்பட்டிருந்தது. எனவே மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, வேலை செய்யும் உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றது.

மனித உரிமைகளின் சுருக்க வரலாறு.

மனித உரிமையின் வரலாறு பல நூறு ஆண்டுகளைக் கொண்டது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் இது விரிவு படுத்தப்பட்டுள்ளது. கிமு 539 இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால் வெளியிடப்பட்ட ‘நோக்கப் பிரகடனமும்,’ கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியாவின் அசோகப் பேரரசனால் வெளியிட்ட ‘அசோகனின் ஆணையும்” கிபி 622 இல் முகமது நபி அவர்களால் உருவாக்கப்பட்ட “மதீனாவின் அரசியல் சட்டமும்” விதந்து கூறக்கூடியவை. ஆங்கிலச் சட்ட வரலாற்றில் 1215 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்” (Magna Carta Libertatum) முக்கியத்துவம் பெறுகின்றது.

மறுமலர்ச்சிக் காலத்தில் 1525 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக ஜெர்மனியில் வெளியிடப்பட்ட “கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்” (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே ஐரோப்பாவின் மனித உரிமை தொடர்பான முதல் பதிவு எனக் கூறப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ‘பிரித்தானிய உரிமைகள் சட்டமூலமும்”, 1789 ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிரான்சின் தேசியசபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘மனிதர்களுக்கும், குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கையும்”. 1776 ம்ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தை அடுத்து முன்வைக்கப்பட்ட ‘ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கையும்”, 1789ம்ஆண்டு பிரான்ஸியப் புரட்சியை அடுத்து ‘மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள்” அறிக்கையும். முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் அனைத்துல செஞ்சிலுவைச் சங்கக் குழு நிறுவப்பட்டமை, 1864 ஆம் ஆண்டின் “லீபர் நெறிகள்” 1864 ஆம் ஆண்டின் முதலாம் ஜெனீவா மாநாடு என்பன அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்ததுடன் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் அச் சட்டங்கள் மேலும் வளர்ச்சி பெற உதவின.

முதலாம் உலகப் போரின் பின்னர் உருவான வொர்சாய் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் “சர்வதேச சங்கம்” உருவானது. இச்சங்கம், மீண்டும் ஒரு உலக மகா யுத்தம் நடைபெறக்கூடாது, என்பதைக் குறிக்கோலாகக் கொண்டிருந்தது. இந்த அடிப்படையில் ஆயுதக் களைவு, கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தவிர்த்தல், நாடுகளிடையேயான முரண்பாடுகளை கலந்துபேசுதல், இராஜதந்திர வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது. இம்முயற்சிகள் பூரண வெற்றியினைத் தரவில்லை. ஆனாலும், மனித உரிமைகளுடன் இத்திட்டங்கள் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளன. இவை இன்றைய உலக மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்வாங்கப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்

1948 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘சர்வதேச மனித உரிமை சாசனம்” 30 உறுப்புரைகளைக் கொண்டது. உலகளாவிய ரீதியில் நாடுகளின் அரசியல் திட்டங்கள் மனித உரிமைகள் பற்றிய உறுப்புரைகளை ஐ.நா.வின் மனித உரிமைகள் சாசனத்துக்கு இசைவாகவே அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்வுறுப்புரைகள் தற்போது விரிவான செயற்பாடுகளை மையமாகக் கொண்டு காலத்துக்குக் காலம் விரிவுபடுத்தப்பட்டதாக பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளன. உதாரணமாக 1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான உலக மாநாட்டுப் பிரகடனத்தில் “மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் எனக் கூறப்படுகின்றது.

மனித உரிமை பிரகடனம் முப்பது உறுப்புரைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் முதலாவது உறுப்புரை சுதந்திரமாக பிறக்கும் மனிதர்கள் யாவரும் சமமானவர்களெனவும் மதிப்பையும் நியாயத்தையும் கொண்டவர்களெனவும் கூறுகின்றது. இரண்டாவது உறுப்புரை இன, மத, மொழி, பால், நிறம், அரசியல் வேறுபாடுமின்றி, சமூக வேறுபாடுமின்றி இப்பிரகடனம் சகலருக்கும் உரித்தானதாக கூறப்படுகின்றது. உறுப்புரை மூன்றிலிருந்து இருபத்தொன்று (3 – 21) வரை உள்ளவற்றில் மனித இனத்தின் சிவில், அரசியல் உரிமைகள் பற்றி கூறப்படுகின்றது. அதாவது பாதுகாப்பு, அடிமைத்தனம், சித்திரவதை, சட்டத்தின் முன்னால் சமத்துவம், வேறுபாடு, அடிப்படை உரிமைகள், கைது, நீதி, நிரபராதி, அரசியல் தஞ்சமும் துன்புறுத்தல், திருமணம், சொத்துரிமை, சிந்தனை உரிமை, பேச்சு சுதந்திரம், தகவல் பரிமாற்ற உரிமை, ஒன்று கூடும் சுதந்திரம் போன்றவற்றை பற்றி அவை கூறுகின்றன. மற்றைய சரத்துகளான இருபத்தியிரண்டிலிருந்து இருபத்தியேழு வரையானவை (22 – 27) மனித இனத்தின் பொருளாதார சமூக கலாசார உரிமைகளை உள்ளடக்கியுள்ளன. அதாவது வேலை, உடை, உணவு, தங்குமிடம், மருத்துவ பராமரிப்பு, கல்வி போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் இறுதி சரத்துக்களான இருபத்து எட்டிலிருந்து முப்பதுவரை இச் சாதனத்தின் நடைமுறை, பொறுப்பு, உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக் காணப்படுகிறது. இந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கடமைப்பாடு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் உரியது.

சர்வதேச மனித உரிமை சாசனம் 30 உறுப்புரைகளும் கீழே சுருக்கமாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

உறுப்புரை 1: சமத்துவ உரிமை – சகல மனிதர்களும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.

உறுப்புரை 2: ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை – இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்து என்பன எத்தகைய வேறுபாடுகளுமின்றி இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள அனைத்து உரிமைகளுக்கும், சுதந்திரங்களுக்கும் அனைவரும் உரித்துடையவராவர். அதாவது நிறத்தில், பாலினத்தில், மதத்தில், மொழியில் வேறுபாடு இருப்பினும் அனைவரும் சமமே!

உறுப்புரை 3: வாழ்வதற்கும், சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆளெவருக்குமான உரிமை. அதாவது சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு

உறுப்புரை 4: அடிமை நிலை, அடிமை வியாபாரம் அவற்றில் எல்லா வகையிலும் விடுபடுவதற்கான சுதந்திரம். அதாவது உங்களை அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை. அதேபோல ‘யாரையும் அடிமையாக நடத்த உங்களுக்கும் உரிமை இல்லை”.

உறுப்புரை 5: சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற அல்லது இழிவான நடாத்துகைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

உறுப்புரை 6: சட்டத்தின் முன் ஆளாக கணிக்கப்படுத்துவதற்கான உரிமை
. அதாவது சட்டத்தால் சமமாக நடத்தபடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு

உறுப்புரை 7: சட்டத்தின் முன் அனைவரும் சமன். பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் உரித்துடையவர்கள்.

உறுப்புரை 8: ஒவ்வொரு நாடுகளிலும் அரசியலமைப்பினால், அல்லது சட்டத்தினால் அவர்களுக்கு அளி்க்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் செயல்களுக்காக தகுதியான நியாய சபை முன் பரிகாரம் பெறுவதற்கான உரிமை. அதாவது ஒருவரது உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.

உறுப்புரை 9: சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், நாடுகடத்தல் ஆகியவற்றுக்கு எவரும் ஆட்படுத்தப்படலாகாது. அதாவது நீதிக்கு புறம்பாக உங்களை காவலில் வைக்கவோ, உங்கள் தேசத்தில் இருந்து நாடு கடத்தவோ உரிமை இல்லை.

உறுப்புரை 10: நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை

உறுப்புரை 11:
1. தண்டனைக்குரிய தவறுக்குக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோர் குற்றம் நிரூபிக்கப்படும் வரை சுத்தவாளியென ஊகிக்கப்படும் உரிமை. அவ்விளக்கத்தில் அவர்களது எதிர்வாதங்களுக்கு அவசியமான எல்லா உறுதிப்பாட்டு உத்தரவாதங்களும் அவர்களுக்கிருத்தல் வேண்டும்.

2. தேசிய, சர்வதேசிய நாட்டிடைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் செயல் அல்லது செய்யாமை புரியப்பட்ட நேரத்தில் அச்செயல் அல்லது செய்யாமை தண்டணைக்குரிய தவறொன்றாக அமையாததாகவிருந்து அச்செயல் அல்லது செய்யாமை காரணமாக, எவரும் ஏதேனும் தண்டணைக்குரிய தவறுக்குக் குற்றவாளியாகக் கொள்ளப்படலாகாது. அத்துடன், தண்டணைக்குரிய தவறு புரியப்பட்ட நேரத்தில் ஏற்புடையதாகவிருந்த தண்டத்திலும் பார்க்கக் கடுமையான தண்டம் விதிக்கப்படலாகாது.

உறுப்புரை 12: அந்தரங்கத்துவம், குடும்பம், வீடு, அல்லது தொடர்பாடல்களில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம். அனைவருக்கும் நமது அந்தரங்கத்தை காத்துக்கொள்ள உரிமை உண்டு.

உறுப்புரை 13: ஒவ்வொரு நாட்டினதும் எல்லைக்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கான, நாட்டை விட்டு வெளியேற, திரும்பி வருவதற்கான உரிமை

உறுப்புரை 14: ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு

(1.) வேறு நாடுகளுக்குச் செல்வதன் மூலம் துன்புறுத்தலிலிருந்து புகலிடம் நாடுவதற்கும், துன்புறுத்ததலிலிருந்து புகலிடம் வழங்குவதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.

(2.) அரசியற் குற்றங்கள் அல்லாத குற்றங்கள் சம்பந்தமாகவும், அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும், நெறிகளுக்கும் முரணான செயல்களிலிருந்து உண்மையாக எழுகின்ற வழக்குத் தொகுப்புகள் சம்பந்தமாகவும் இவ்வுரிமை கேட்டுப் பெறப்படலாகாது.

உறுப்புரை 15:
(1.) ஒவ்வொரு பிரஜைக்கும் ஒரு தேசிய இனத்தினராகவிருக்கும் உரிமை உண்டு.

(2.) எவரினரும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது.

உறுப்புரை 16: விரும்பிய ஒருவரை திருமணம் செய்துகொள்ள குடும்ப பாதுகாப்பிற்கான உரிமை

(1.) பராய வயதையடைந்த ஆண்களும், பெண்களும், இனம், தேசிய இனம் அல்லது சமயம் என்பன காரணமாக கட்டுப்பாடெதுவுமின்றி திருமணம் செய்வதற்கும், ஒரு குடு்ம்பத்தை கட்டியெழுப்புவதற்கும் உரிமை உடையவராவர். திருமணஞ் செய்யும் பொழுதும் திருமணமாகி வாழும் பொழுதும், திருமணம் கலைக்கப்படும் பொழுதும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் சம உரிமையுண்டு.
(2.) திருமணம் முடிக்கவிருக்கும் வாழ்க்கைத் துணைவோரின் சுதந்திரமான, முழுச் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் முடிக்கப்படுதல் வேண்டும்.

(3.) குடும்பமே சமுதாயத்தில் இயற்கையானதும் அடிப்படையானதுமான அலகாகும். அது சமுதாயத்தினாலும் அரசினாலும் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையது.

உறுப்புரை 17: சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை
(1.) தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
(2.) எவரினதும் ஆதனம் ஒருதலைப்பட்ச மனப்போக்கான வகையில் இழக்கப்படுதல் ஆகாது.

உறுப்புரை 18: மதம் மற்றும் நம்பிக்கையை பின்பற்றுவதற்கான சுதந்திரம் சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் என்பவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையினுள் ஒருவர் தமது மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரமும், போதனை, பயிலல், வழிபாடு, அநுட்டானம் என்பன மூலமும் தத்தமது மதத்தை அல்லது நம்பிக்கையைத் தனியாகவும், வேரொருவருடன் கூடியும், பகிரங்கமாகவும் தனி்ப்பட்ட முறையிலும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் அடங்கும்.

உறுப்புரை 19: கருத்து, தகவலிற்கான சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்துக்கும் எவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையானது தலையீடின்றிக் கருத்துக்களைக் கொண்டிருப்பதற்கும், எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகளைப் பொருட்படுத்தாமலும், தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரத்தையும் உள்ளடக்கும்.

உறுப்புரை 20: எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ள, சங்கத்தில் உறுபினராக உரிமை உண்டு
(1.) சமாதான முறையில் ஒன்று கூடுவதற்கும் இணைவதற்குமான சுதந்திரத்துக்கு உரிமையுண்டு.

(2.) ஒரு சங்கத்தில் சேர்ந்தவராகவிருப்பதற்கு எவரும் கட்டாயப்படுத்தப்படலாகாது.

உறுப்புரை 21: அரசியல் உரிமை – அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபற்றவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை
(1.) ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டின் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமான முறையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்குபெறுவதற்கு உரிமையுண்டு.
(2.) ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.

(3.) மக்களின் விருப்பே அரசாங்க அதிகாரத்தின் எல்லையாக அமைதல் வேண்டும். இவ்விருப்பானது, குறித்த காலத்தில் நீதியாகவும், நேர்மையாகவும் நடைபெறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

உறுப்புரை 22: சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் கூடிய உரிமை – .

உறுப்புரை 23: தொழில் புரியவும், ஊதியத்தைப் பெறுவதற்குமான உரிமை

(1.) ஒவ்வொருவரும் தொழில் செய்வதற்கான, அத்தொழிலினைச் சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும், தொழிலின்மைக்கெதிரான பாதுகாப்பு உடையோராயிருப்பதற்கான உரிமையை உடையர்.

(2.) ஒவ்வொருவரும் வேறுபாடெதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரித்துடையவராவர்.

(3.) வேலை செய்யும் ஒவ்வொருவரும் தாமும் தமது குடும்பத்தினரும் மனித மதிப்புக்கிணையவுள்ள ஒரு வாழ்க்கையை நடத்துவதனை உறுதிப்படுத்தும் நீதியாவதும் அநுகூலமானதுமான ஊதியத்திற்கு உரிமையுடையோராவர். அவசியமாயின் இவ்வூதியம் சமூகப் பாதுகாப்பு வழிமுறைகளினால் குறை நிரப்பபடுவதாயிருத்தல் வேண்டும்.
(4.) ஒவ்வொருவருக்கும் தத்தம் நலன்களைப் பாதுகாப்பதற்கெனத் தொழிற் சங்கங்களை அமைப்பத்தற்கும். அவற்றில் சேர்வதற்குமான உரிமையுண்டு.
உறுப்புரை 24 இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை – இளைப்பாறுவதற்கும், ஓய்விற்கும் ஒவ்வொருவரும் உரிமையுடையவர். இதனுள் வேலை செய்யும் மணித்தியால வரையறை, சம்பளத்துடனான விடுமுறைகள் அடங்கும்.

உறுப்புரை 25: நல்ல வாழ்க்கை தரத்திற்கான உரிமை
(1.) ஒவ்வொருவரும் உணவு, உடை, உரையுள், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் என்பன உட்பட தமதும் தமது குடும்பத்தினாலும் உடனலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமையுடையவராவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புக்கும் உரிமையுடையவராவர்.
(2.) தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேட கவனிப்பிற்கும் உதவிக்கும் உரித்துடையன. சகல குழந்தைகளும் அவை திருமண உறவிற் பிறந்தவையாயினுஞ்சரி அத்தகைய உறவின்றிப் பிறந்தவையாயினுஞ்சரி, சமமான சமூகப் பாதுகாப்பினைத் அனுபவிக்கும் உரிமையுடையன.

உறுப்புரை 26: கல்விக்கான உரிமை
(1.) ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். ஆரம்பக் கல்வி கட்டாயப்படுத்தல் வேண்டும். தொழில் நுட்பக் கல்வியும் உயர் தொழிற் கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கன வாயிருத்தல் வேண்டும். உயர் கல்வியானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும்.

(2.) கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி செய்யுமுகமாகவும் மனிதவுரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்படு்த்துமுகமாகவும் ஆற்றப்படுத்தப்படல் வேண்டும்.

உறுப்புரை 27: தங்கள் சமூகத்தின் பண்பாட்டு அறிவியல் வளர்சியை பகிர்ந்து கொள்ளும் உரிமை –
(1.) சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையிற் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலைகளைத் தூய்ப்பதற்கும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
(2.) அறிவியல், இலக்கிய, கலைப் படைப்பின் ஆக்கியற் கர்த்தா என்ற வகையில் அப்படைப்புகள் வழியாக வரும் ஒழுக்க நெறி, பருப்பொருள் நலங்களின் பாதுகாப்பிற்கு அத்தகையோர் ஒவ்வொருவருக்கும் உரிமை உடையவராவர்.

உறுப்புரை 28: மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக முறைமையில் பங்குபற்றும் உரிமை இப்பிரகடனத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள உரிமைகளும் சுதந்திரங்களும் முழுமையாக எய்தப்படக்கூடிய சமூக, சர்வ தேசிய நாட்டிடை அமைப்பு முறைக்கு ஒவ்வொருவரும் உரித்துடையவராவர்.

உறுப்புரை 29: ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்
(1.) எந்த ஒரு சமூகத்தினுள் மாத்திரமே தத்தமது ஆளுமையின் கட்டற்ற பூரணமான வளர்ச்சி சாத்தியமாகவிருக்குமோ அந்தச் சமூகத்தின்பால் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு.
(2.) ஒவ்வொருவரும் அவரது உரிமைகளையும் சுதந்திரங்களையும் பிரயோகிக்கும் பொழுது இன்னொருவரின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்குமுரிய அங்கீகாரத்தையும் மதி்ப்பையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துக்காகவும், சனநாயக சமுதாயமொன்றின் ஒழுக்கசீலம், பொது மக்கள் ஒழுங்கமைதி, பொது சேமநலன் என்பவற்றுக்கு நீதியான முறையில் தேவைப்படக் கூடியவற்றை ஏற்படுத்தல் வேண்டுமெனும் நோக்கத்துக்காகவும் மட்டுமே சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் வரையறைகளுக்கு மாத்திரமே கட்டுப்படுவராயாமைதல் வேண்டும்.
(3.) இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் முரணாக எவ்விடத்திலேனும் பிரயோகிப்படலாகாது.

உறுப்புரை 30: இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் நீக்கும் உரிமை கிடையாது இப்பிரகடனத்திலுள்ள எவையும். இதன்கண் எடுத்துக்காட்டப்பட்டுள்ள உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றிலுள்ள எவற்றையும் அழிக்கும் நோக்கத்தையுடைய ஏதேனும் முயற்சியில் ஈடுபடுவதற்கும் அல்லது செயலெதனையும் புரிவதற்கும் எந்த ஒரு நாட்டுக்கோ குழுவுக்கோ அல்லது ஒருவருக்கோ உட்கிடையாக யாதேனும் உரிமையளிப்பதாகப் பொருள் கொள்ளப்படுதலாகாது.

மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும்.

தற்கால உலக அரசியல் அரங்கில் குடியியல், அரசியல் உரிமைகள் சம்பந்தமாகவோ, பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் சம்பந்தமாகவோ, எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும், மனித உரிமைகள் என்பதே பிரதான அம்சமாகத் திகழ்கிறது. மனித உரிமைகள் பற்றிய இந்தப் புதிய அக்கறை எழுச்சிபெற்ற மானுடத்தின் வெளிப்பாடு என்பது தெளிவானதே.

இவ்விடத்தில் 1998 மார்ச் 18ம் திகதி ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 54வது அமர்வில் அப்போதைய செயலாளர் நாயகம் கோபி அன்னான் நிகழ்த்திய உரை மனித உரிமைகள் தொடர்பான புதிய விளக்கத்தை வழங்குகின்றது. அதாவது ‘ சகல மக்களும் வன்முறை, பட்டினி, நோய், சித்திரவதை, பாகுபாடு ஆகிய பயங்கரவாதப்பிடியிலிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாக வாழவே விரும்புகின்றனர்.”

1979 இலிருந்து பல நாடுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கண்காணிப்புக்குட்படத் தொடங்கின. 1995 இல் எல் சல்வடோர், கம்பொடியா, ஹெயிட்டி, ருவண்டா, புரூண்டி ஆகிய நாடுகளில் ஐ. நா தன் கவனத்தைச் செலுத்தியது. 1993 ஜுன் 14 இல் வியட்னாமில் நடந்த 2வது மனித உரிமைகள் மகாநாடு பெண்கள் உரிமைகள் பற்றி கவனம் செலுத்தியது. இலங்கையில் யுத்த நிலையின் போது உரிமை மீறல்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்தது.

இலங்கை இப்பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில் இலங்கை ஐ.நா.வில் அங்கத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஆங்கிலேய காலனித்துவத்திடமிருந்து இலங்கை அதே ஆண்டில் தான் சுதந்திரத்தை பெற்றுக் கொண்டது. நாம் ஏற்கெனவே பார்த்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் சரத்தில் எவற்றை இலங்கைத் தீவில் வாழும் மக்களுக்கு சாதகமாக இலங்கை ஆட்சியாளர் பாவித்துள்ளார்கள்? உண்மையை கூறுவதானால் சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அத்தனை சரத்துக்களையும் இலங்கை மீறியுள்ளதற்கான ஆதாரங்கள் பலதை உதாரணப்படுத்தலாம்.

மனித உரிமைகள் என்பது சமாதானத்துக்கும், பாதுகாப்புக்கும், பொருளாதார அபிவிருத்திக்கும், சமூக சமத்துவத்துக்கும், பூரணத்துவம் வாய்ந்த ஊடகமாக உள்ளது. ஐ. நா. தாபனம இந்த மனித உரிமைகளை வெளிப்படுத்தவும், மேம்படுத்தவும், பாதுகாக்கவும் ஒரு மையமாகச் செயல்படுகிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற வேளையிலே குடியுரிமை, வாக்குரிமை பற்றி எடுத்துக் கூறும் இருபத்தியோராம் உறுப்புரையை மீறியது. அதாவது மலையகத் தோட்டத் தொழிளாலர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு சிங்களச்சட்டம் மூலம் சரத்து 2 உம் 3 உம் மீறப்பட்டன. 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இனக் கலவரங்கள் மூலம் சாரம் 3, 5, 12, 17 ஆகியவை மீறப்பட்டுள்ளன.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களை 1964 ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் நாடு கடத்தியதன் மூலம் சாரம் 4, 15, 23 ஆகியவை மீறப்பட்டுள்ளன. தமிழ் மாணவர்கள் சம கல்வி மறுக்கப்பட்டு தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சாரம் 26 மீறப்பட்டுள்ளது. தொடர்ச்சியான அவசரகால நிலையுடன் கூடிய பயங்கரவாதச் சட்டம் மூலம் சரத்துக்கள் 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 மீறப்பட்டுள்ளன. இவ்வாறு அடிக்கிக் கொண்டு போகலாம். இந்நிலை யுத்தகாலத்தில் மிகைத்திருந்தது.

இலங்கை போன்ற நாடுகளில் இனப்படுகொலை, சிறுபான்மையினர் ஒதுக்கப்படல், கல்வி, வேலை வாய்ப்புக்களில் அசமத்துவ நிலை, எதேச்சையாகக் கைது செய்யப்படல், காணாமற் போதல், தடுப்புக்காவல் தண்டனைகள், சிறைக்குள் படுகொலை, ஆகிய மனித உரிமை மீறல்கள் இனிமேலும் நடைபெறாதவாறு ஐ.நா சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மனித உரிமைகள் ஜனநாயகத்தின் ஆணிவேர், உயிர் நாடி, அது சகலராலும் மதிக்கப்பட அது பற்றிய விழிப்புணர்வு தேவை.

http://puniyameen.blogspot.com/2010/12/international-human-rights-day.html

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

2008ம் ஆண்டில் இத்தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்திருந்த செய்தியில், ‘உலகில் உள்ள பெண்களில் மூன்றில் ஒருவர் தமது வாழ்நாளில் ஏதாவது ஒரு விதத்திலாவது துஷ்பிரயோகத்தை சந்தித்து இருக்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் பல நாடுகள் பெண்களைப் பாதுகாக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட இவற்றை விட மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும், வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் புதிய பிரச்சாரத்தை முன்நின்று செய்யப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பான விரிவான கட்டுரையைப் படிக்க….
நவம்பர் 25ம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாகும்.
International Day for the Elimination of Violence Against Women – புன்னியாமீன்

http://puniyameen.blogspot.com

‘I am nothing. I am just a tool in the hands of God!’ அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா : பி எம் புன்னியாமீன்

Mother_Theresa_with_armless_babyகருணையின் வடிவம் என்று போற்றப்படும் அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் கொல்கத்தாவில் மிஸனரிஸ் ஒப் செரிட்டி (Missionaries of Charity) தலைமையகத்தில், ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளின் சிறப்பு வழிபாட்டுடன் ஆகஸ்ட் 26. 2010ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று செப்டம்பர் மாதம் 5ம் திகதி அன்னை தெரெசாவின் 13 வது சிரார்த்த தினமாகும்.

“அன்னை தெரெசா இறைவனால் அளிக்கப்பட்ட மதிப்பிட முடியாத ஒரு கொடை. இறைவனால் வழங்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அன்பளிப்புக்காக மனித குலம் இறைவனுக்கு நன்றி சொல்லும் ஒரு ஆண்டாகவே இந்த நூற்றாண்டு விழா அமையும் என தான் நம்புவதாகவும்,  தனது வாழ்நாள் முழுவதும் அன்போடு மக்களுக்கு அயராத உழைப்பை அன்னை மேற்கொண்டார்”, எனவும்  புனித பாப் ஆண்டவர் பெனடிக்ட் அவர்கள் அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா ஆரம்பம் குறித்து வெளியிட்டுள்ள தனது செய்தியில் தெரிவித்திருந்தார்.

“அவரது வாழ்வும், மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகளும், தொடர்ந்து இளைஞர்கள், முதியவர்கள், ஏழை, பணக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தும்” என, அன்னை தெரெசாவால் ஏற்படுத்தப்பட்ட மிஸனரிஸ் ஒப் செரிட்டி அமைப்பின் தற்போதைய தலைவியான அருட்சகோதரி நிர்மலா ஜோசி
தெரிவித்திருந்தார்.

அன்னை தெரெசா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய மத்திய அரசு அவரது உருவம் பொறித்த ரூபாய் 5 பெறுமதிமிக்க நாணயத்தை வெளியிட்டுள்ளது.

“ஏழை மக்களுக்கு தொண்டாற்றுவதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர் அன்னை தெரெசா” என்று நாணயத்தை வெளியிட்டு பேசுகையில் இந்திய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார். மேலும் ஏழைகளுக்குத் தொண்டாற்ற ஆரம்பித்தபோது தெரெசாவின் கையில் இருந்தது 5 ரூபாய் மட்டுமே. இதை நினைவுகூரும் வகையில் ஐந்து ரூபாய் நாணயத்தில் அவரது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் முகர்ஜி குறிப்பிட்டார்.

அன்னை தெரெசா குறித்த நூற்றாண்டு மலரின் முதல் பிரதியை குடியரசு ஜனாதிபதி பிரதிபா பாட்டேலிடம் முகர்ஜி கையளித்தார். “அன்னை என்ற வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர். கடவுள் அனைத்து இடங்களிலும் இருக்க முடியாது. எனவேதான் அன்னை தெரெசா போன்ற கருணை உள்ளம் கொண்டவர்களை படைத்தார். நீல கறை கொண்ட வெள்ளைப் புடவை அணிந்த அவர் மற்றும் கிறிஸ்தவ அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் பல அனாதைகளுக்கும், முதியோர்களுக்கும், வேலையில்லாதவர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் நம்பிக்கை அளிப்பவர்களாக திகழ்ந்தனர். அன்னை தெரெசாவின் சிறப்பான சேவைக்காக அவருக்கு 124 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் பாரத ரத்னா விருதும் அடங்கும்” என்று குடியரசு ஜனாதிபதி பிரதிபா பாட்டேல் புகழாரம் சு10ட்டினார்.

மேலும் அன்னை தெரெசாவின் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட அமெரிக்கா அரசு தீர்மானித்துள்ளது. செப்டெம்பர் 5. 2010ம் திகதி இந்த தபால் தலை வெளியிடப்படுமென அமெரிக்காவின் தொடர்பாடல் அமைச்சு அறிவித்திருந்தது. அதேநேரம் உயிருடன் இருந்தபோதே இந்திய தபால் முத்திரையில் உருவம் பதிக்கப்பட்ட முதலாவது நபரும் இவரேயாவார்.

Mother_Teresa1910 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26 ஆம் தேதி, மாசிடோனியா Republic of Macedonia நாட்டின் தலைநகராக இருக்கும் ஸ்கோப் Skopje நகரில் அவர் பிறந்தார். அவரது இயற்பெயர் அக்னஸ் கோன்ஜா போயாக்யூ, Agnes Gonxha Bojaxhiu (கோன்ஜா என்பதற்கு அல்பேனிய மொழியில் “ரோஜா அரும்பு” என்று பொருள்) அவர் பிறந்த போது ஸ்கோப் நகரம் அல்பேனியாவில் இருந்தது. 1929 ஆம் ஆண்டு அன்னை தெரெசா இந்தியாவுக்கு வந்தார். பின்பு இந்திய குடியுரிமை பெற்றார். மேற்கு வங்கத்தில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய இவர் செப்டம்பர் 5. 1997இல் (வெள்ளிக்கிழமை) கொல்கத்தாவில் காலமானார். அன்னை தெரெசா இறைவனடிசேரும் போது அன்னாருக்கு வயது 87.

முதுமைப் பருவத்தில் அடிக்கடி நோய்வாய்பட்ட அன்னை அவர்கள் இனி தன்னால் இத்தனைப் பெரிய பொறுப்பை ஏற்று நடத்த முடியாது என்பதை உணர்ந்தார். இளம் வயதில் அன்னையின் அன்பால் கவரப்பட்டு மதம் மாறி அவருடைய கன்னியர் சபையில் சேர்ந்த நேபாளத்தைச் சேர்ந்த அருட்சகோதரி நிர்மலா ஜோசி அவர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்து சபையின் பொறுப்புகள் முழுவதையும் அவரிடம் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றின் வழியாக ஒப்படைத்தார். அவர் உருவாக்கிய மிஷனரிஸ் ஒப் செரிட்டியின் தலைமையகத்திலேயே அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவருக்கு புனிதர் பட்டம் வழங்கும் நடவடிக்கையை மறைந்த போப் இரண்டாவது ஜான் பால் 2003 ஆம் ஆண்டில் முன்னெடுத்தார். அக்டோபர் 19, 2003 ல் அன்னை தெரேசாவிற்கு “அருளாளர் பட்டம்” அளிக்கப்பட்டது.

ஸ்கோப் நகரில் நிக்கல் – டிரானா போயாக்யூ தம்பதியரின் இளைய புத்திரியே அக்னஸ். இவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார். 1919 இல், அரசியலிலிருந்து விலகிய அவர் நோய்வாய்ப்பட்டு, அக்னஸ{க்கு எட்டு வயதாயிருக்கும் போது காலமானார். தந்தையின் மரணத்திற்குப் பின், தாயார் அவரை ரோமன் கத்தோலிக்கராக வளர்த்து வந்தார்.

“ஜோன் கிராப்”ஸின் வரலாற்றுக் குறிப்புகளின்படி குழந்தைப் பருவத்தில் அக்னஸ் மதப்போதனையினாலும் சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதில் இறைபணியில் தன்னை அர்ப்பணிப்பதற்குத் தீர்மானித்தார். பன்னிரண்டு வயதில் இறைபணியில் தன் கனவை முன் வைத்த போது “சின்னவள் நீ, பக்குவமற்றவள்” என்று தாய் வழிகாட்டியுள்ளார்.

தனது பதினெட்டாம் வயதில் அவர் வீட்டை விட்டு வெளியேறி, லொரேட்டோ சகோதரிகளின் சபையில் மத பிரசாரகராக தன்னை இணைத்துக் கொண்டார். அதற்குப் பிறகு தனது தாயையோ அல்லது உடன்பிறந்த சகோதரியையோ மீண்டும் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தியாவின் பள்ளிக்குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க லொரேட்டோ சகோதரிகள் பிரயோகிக்கும் மொழியான ஆங்கிலத்தைக் கற்பதற்காக, அயர்லாந்தின் ரத்ஃபர்ன்ஹாமில் உள்ள லொரேட்டோ கன்னியர் மடத்திற்கு முதலில் சென்றார்.

1929 ஆம் ஆண்டு அவர் இந்தியா சென்று,  இமய மலை அருகே உள்ள டார்லிங்கில் தனது கன்னியர் மட பயிற்சியை ஆரம்பித்தார். மே 24.1931 இல் “வாக்குத்தத்தம்” எடுத்துக் கொண்டு அருட்சகோதரியானார். அவ்வமயம் மதபிரசாரகர்களின் காவல் புனிதரான ‘தெரேசா டி லிசியு”வின் பெயரைத் தனக்குத் தெரேசா எனத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். கிழக்குக் கொல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது இறைபணியை ஆரம்பித்தார். கிழக்குக் கொல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது அர்ப்பணிப்பு பிரமாணங்களை 1937 மே 14 ஆம் தேதி எடுத்துக் கொண்டார்

சுதந்திரம் பெறும் முயற்சியில் தீவிரமாக வெள்ளையர்களுடன் இந்தியர்கள் போராடி வந்த காலகட்டத்தில் நாளாந்த உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கும், விதவைகளுக்கும் பராமரிப்பின்றி தத்தளிப்பவர்களையும்,  நோயால் வாடுகின்றவர்களையும் நேசிக்க ஆரம்பித்தார் அன்னை தெரேசா. இந்திய நாட்டிற்கு அளப்பரிய சேவையாற்றியமைக்காக 1948 ஆம் ஆண்டு இந்தியா அரசு குடியுரிமை வழங்கியது.

பள்ளிக்கூடத்தில் பயிற்றுவிப்பதை தெரேசா விரும்பினாலும் கல்கத்தாவில் அவரைச் சு10ழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமதிகமாய் கலங்கச் செய்தது. 1948 இல் ஏழைகளுடனான தனது ஊழியத்தை ஆரம்பித்தார். பாரம்பரிய லொரேட்டோவின் அங்கியைக் களைந்து,  நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தவராய், இந்திய குடியுரிமைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் நடமாடினார்.

தொடக்கத்தில் மோதிஜில்லில் பள்ளிக்கூடம் ஆரம்பித்த அவர் பின்னர் ஆதரவற்றோர், பட்டினியால் வாடுவோர் போன்றவர்களின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார். அவரது முயற்சிகள் விரைவிலேயே இந்தியப் பிரதமர் உட்பட இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்து அவர்களது பாராட்டுதலைப் பெற்றுத்தந்தன.

தெரேசா தனது நாட்குறிப்பில்,  தனது முதல் வருடம் கஸ்டங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும், ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் சௌகர்யத்திற்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் எழுதியிருந்தார்.

1950 அக்டோபர் 7 ஆம் தேதி அன்னை தெரெசாவின் தலைமையில் மிஸனரிஸ் ஒப் செரிட்டி இல்லம் (Missionaries of Charity) ஸ்தாபிக்கப்பட்டது. தூய்மையான பணிக்கு எடுத்துக் காட்டாக நீல நிறக்கரையுடன் கூடிய வெள்ளை கைத்தறிச் சேலையை அணிந்தார். அன்னையுடன் முதன் முறையாக இணைந்து கொண்ட சுபாஸினிக்கு தனது இயற்பெயரைச் சு10ட்டினார். இந்தியாவின் கொல்கத்தாவில் ஏழை மக்களுக்கும், சிறார்களுக்கும் பெரும் உதவி புரிந்த அன்னை தெரெசா அங்கு ஆசிரமம் ஒன்றையும் அமைத்து செயற்பட்டார். இதில் நோயாளிகளுக்குத் தன்னாலான தொண்டுப் பணிகளை முன்னெடுத்தார்.

மிஸனரிஸ் ஒப் செரிட்டி இல்லம் (Missionaries of Charity) பிற்காலத்தில் உருவெடுக்கப் போகும் பங்குக் குழுமத்தை ஆரம்பிக்க தெரெசாவுக்கு வத்திக்கானின் அனுமதி கிடைத்தது. செரிட்டியின் கடமையாக அன்னை கூறியது, “உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள்,  வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள்,  தொழு நோயாளிகள் போன்றோர்களையும், தங்களை சமூகத்திற்கே தேவையற்றவர்களெனவும், அன்பு செய்யப்படாதவர்களெனவும்,  கவனிக்கப் படாதவர்களெனவும் எண்ணிக்கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரமென்று எண்ணப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப் பட்டவர்களையும் கவனித்தலே ஆகும்.” கல்கத்தாவில் 13 உறுப்பினர்களைக்  கொண்ட சிறியதொரு அமைப்பாகவே இது ஆரம்பிக்கப்பட்டது. இன்று 4000க்கும் மேலான அருட்சகோதிரிகளால் நடத்தப்படும் அனாதை இல்லங்களையும்,  எய்ட்ஸ் நல்வாழ்வு மையங்களையும்,  தர்ம ஸ்தாபனங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர்,  ஊனமுற்றோர்,  முதியோர்,  மது அடிமைகள், ஏழை எளியோர்,  வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்காக வியாபித்துக் காணப்படுகிறது.

கத்தோலிக்க கன்னியாஸ்திரியான அன்னை தெரெசா நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும்,  நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும்,  இறக்கும் தருவாயிலிருப்போர்களுக்கும் தொண்டாற்றிக் கொண்டே,  முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஸனரிஸ் ஒப் செரிட்டியை விஸ்தரித்தார்.

50 ஆண்டுகள் ஏழை – எளியவர்களுக்குத் தொண்டுப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். அன்னை தெரேசாவின் அன்பின் பணியாளர் சபை, அவர் மரணத்த வேளை, 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக் கொண்டிருந்தது. இதில் எச் ஐ வி/எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள் மற்றும் இல்லங்கள்,  இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைத் திட்டங்கள்,  அனாதை இல்லங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களும் அடங்கும்.

1970 களுக்குள் இவர் சிறந்த பரோபகாரி எனவும் ஏழைகளுக்கும்,  ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்று உலகம் முழுவதும் புகழப்பட மேல்கம் முக்கெரிட்ஜ் இன் “சம்திங்க் பியுடிஃபுல் ஃபார் காட்” என்ற விளக்கப்படமும் ஒரு காரணமாகும் எனப்படுகிறது. அன்னையின் தொண்டூழியம் அனைத்து எல்லைகளையும் கடந்து செரிந்தது,  சிறந்தது. அதனால் அவர் உலகப் பிரஜையாக உன்னத ரதத்தில் பவனி வந்தார். அவரைப் பாராட்டாத நாடுகளில்லை, தலைவர்கள் இல்லை. அவர் பெறாத விருதுகளில்லை. அன்னை தெரெசாவின் சிறப்பான சேவைக்காக அவருக்கு சுமார் 124 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் பெற்ற சில விருதுகளும் பரிசுகளும் பின்வருமாறு:

1962-ல்,  பன்னாட்டுப் புரிந்துணர்தலுக்கான பிலிப்பைன்ஸின் “ரமோன் மேக்சேசே” விருது.

1964-ல், மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்திருந்த போப்பாண்டவர் தாம் பயன் படுத்திய வெண்ணிறக் காரை அன்னைக்கு பரிசாக அளித்தார். அன்னை அதை ஏலத்தில் விட்டு கிடைத்த பணத்தில் கொல்கொத்தா சாந்தி நகரில் தொழுநோயாளிகளுக்கென மருத்துவ மனை ஒன்றைக் கட்டினார்.

1971-ல், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ‘Good Samaritan’ விருதும்,  ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் மனிதாபிமானத்திற்கான டாக்டர் விருதும்.

1971-ல், அருட் தந்தை ஆறாம் சின்னப்பர், சமாதானத்துக்கான முதல் அருட் தந்தை 23 ம் அருளப்பர் பரிசை,  அவரது ஏழை எளியோர் சேவையையும் கிறிஸ்துவ தர்ம பறைசாற்றலையும், சமாதான முயற்சியையும் பாராட்டி அவருக்கு அளித்தார்.

1972-ல், அமைதி விருதான “நேரு” விருது

1976-ல், விசுவ பாரதி பல்கலைக் கழகத்தின் ‘தேசி கோத்தமா” விருது

1978-ல் இங்கிலாந்து அரசின் ‘தலை சிறந்த குடிமகன்’ விருது

1979-ல் நோபல் பரிசு

அன்னை தெரேசா சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார். சமாதானத்தின் அச்சுறுத்தல்களாக விளங்கும், ஏழ்மையையும், துயரத்தையும் வீழ்த்தும் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக அவ்விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற நோபல் பரிசு பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பாரம்பரிய விழா விருந்தை மறுத்த அவர் தனது பரிசுத்தொகையான 192,000 பவுண் நிதியை இந்தியாவின் ஏழைகளுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு அவர் கொடுத்த காரணம் “இவ்வுலக விருதுகள் உலகத்தின் ஏழைகளுக்கு உதவ வழிகோலும் பட்சத்தில் மட்டுமே முக்கியமானதாகக் கருதப்படும்” என்பதே. அன்னை தெரேசா பரிசை பெற்ற பொழுது அவரிடம், “உலக சாமாதானத்தை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?”, என்றுக் கேட்டனர். அதற்கு அவர், “வீட்டிற்கு போய் உங்கள் குடும்பத்தை அன்பு செய்யுங்கள்” என்று கூறினார். இக்கருத்தை வலியுறுத்தி தனது நோபல் நன்றியுரையில் . “உலகம் முழுவதும் ஏழை நாடுகளில் மட்டுமல்ல,  மேற்க்கத்திய நாடுகளிலும் கூட ஏழ்மையானது அகற்றுவதற்கு மிகக் கடினமானதாகவே இருக்கிறது” என்றுரைத்தார். “தெருவில் பசித்திருக்கும் மனிதன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனுக்கு ஒரு தட்டு சாதமோ,  ஒரு ரொட்டித்துண்டையோ கொடுத்து நான் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். அவனது பசியைத் நான் தீர்த்து விட்டேன். ஆனால் வெளியேற்றப்பட்ட ஒரு மனிதன், யாருக்கும் தேவையற்றவனாக, அன்பு செய்யப்படாதவனாக, கலங்கியவனாக, சமுதாயத்தை விட்டு ஒதுக்கப்பட்டவனாக இருக்கும் போது அத்தகையதொரு ஏழ்மையே என்னை அதிகம் பாதிக்கிறது. அதையே நான் மிகக் கடினமாக உணர்கிறேன்.”

1980-ல்,  மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் மிக உயர்ந்த விருதான இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான “பாரத் ரத்னா” விருது

1981-ல்,   ஹெய்டி ஆட்சியாளரான ஜியாண்-குளோட் டவலியரினால் “லெஜென் டி  ஹொனர்” (Legion d’Honneur) என்ற விருது.

1982-ல்,  ஆஸ்திரேலியாவின் “கௌரவ தோழர்” விருது.

1983-ல், BART MARANCH THE ORDER OF MERIT என்ற பிரிட்டிஸ் அரசி எலிசபெத்திடம் இருந்து பெற்ற விருது

1985-ல், அமெரிக்க ஜனாதிபதி ரோனல்ட் ரீகன் அன்னை தெரெசாவுக்கு சுதந்திரத்துக்கான ஜனாதிபதியின், பதக்கத்தை வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் வழங்கி கௌரவித்தார்.

1991-ல், குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனிடம் இருந்து பெற்ற “பாரதிய வித்யா பவன்” விருது

1992-ல், “பாரதத்தின் தவப் புதல்வி” விருது மற்றும் “பாரத சிரோமணி” விருது

1993-ல், ரஷ்ய அரசின் உலகப் புகழ் பெற்ற ‘லியோ டால்ஸ்டாய்” விருது

1994-ல், அல்பேனிய நாடு அவருக்கு தேசத்தின் தங்க மரியாதையை அளித்து கௌரவப்படுத்திய தோடல்லாமல், 1991-ல் குடியுரிமையும் அளித்திருந்தது.

1995-ல், கொல்கொத்தாவின் “நேதாஜி விருது” மற்றும் “தயாவதி மோடி” அறக்கட்டளை விருது

1996-ல், ‘அனைத்துலக நம்பிக்கை ஒற்றுமை’ விருது.

1996-ல், நவம்பர் 16, அன்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் கிளிண்டன் அமெரிக்க கௌரவ பிரஜா உரிமையை வழங்கினார்.

1997-ல்,  அமெரிக்க காங்கிரஸ் “தங்கப்பதக்கம்” வழங்கியது.

2003-ல்,  அக்டோபர் 19ம்திகதி “அருளாளர் பட்டம்” திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வத்திக்கான் நகரில் அறிவித்தார்.

அவரது அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம்,  இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு 1992 ல் வெளியிடப்பட்டது.

எத்தனை பட்டங்கள் கிடைத்த போதிலும் வெள்ளை சேலையும், சாதாரண பாதனிகளையும் அணிந்து கொண்டிருந்த அன்னை தெரேசா தன்னை புகழ்வோரிடமெல்லாமல் எப்போதும் சொல்லும் வார்த்தை,  ‘I am nothing. I am just a tool in the hands of God!’ என்பதுதான்.

கலாநிதி ஏ.ஸீ.எஸ். ஹமீட் அவர்களின் மறுபக்கம் – புன்னியாமீன்

acs-hameed.jpgநான்கு தசாப்தங்களாக தொடர்ச்சியாக இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததுடன் சுமார் 15 வருடங்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் இருந்த, கலாநிதி. ஏ.ஸீ.எஸ் ஹமீட் அவர்களின் 11வது சிரார்த்த தினம் செப்டம்பர் 3ம் திகதியாகும்.

ஒரு தலை சிறந்த இராஜதந்திரியாகவும்,  இலங்கை அரசுக்கும் -விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்ட ஒருவராகவும் இவர் விளங்குகின்றார்.

விடுதலைப்புலிகளின் பிரதான ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்களின் பாரியார் அடேல் பாலசிங்கம் எழுதிய The Will to Freedom எனும் நூலில் இடம்பெற்ற The Role Mr. Hameed  எனும் கட்டுரையில் “இராஜதந்திரத்தில் அவருக்கிருந்த ஆழ்ந்த அனுபவம் காரணமாகவும், சர்வதேச உறவுகளில் அவருக்கிருந்த மதிநுட்பம் மற்றும் அக்கறையும் காரணமாகவும் ஜனாப் ஹமீட் அவர்களுக்கு டில்லியைப் பகைத்துக் கொள்ள விருப்பமிருக்கவில்லை. ஜனாப் ஹமீட் அவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது பொறுமையுடன் செயல்பட்டதினால் அதிக நேரம் எடுத்தாலும் அவருடன் பணியாற்றுவதில் நாம் மற்றற்ற மகிழ்ச்சியடைந்தோம். அவர் முரண்பாடுகளைத் தீர்ப்பதில் பெரும் வல்லுனராகத் திகழ்ந்தார். இக்கலந்துரையாடல் பணியில் பங்குபற்றாதிருந்தால் இந்தியப் படையினர் வடகிழக்கில் இன்னும் நிலைகொண்டிருப்பார்கள்” என்று அடேல் பாலசிங்கம் 2001ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தார்.

ஒரு தீர்க்கதரிசனமிக்க அரசியல்வாதியாக எமக்கு நன்கு தெரிந்த ஹமீட் அவர்களின் மற்றுமொரு பக்கமான கலை இலக்கிய ஆர்வங்கள் பற்றி அனேகருக்குத் தெரியாது. அதனை எடுத்துக் காட்ட விளைவதே இக்கட்டுரையின் நோக்கம்.

acs-hameed01.jpgஎமது இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்பு ஆளும்கட்சி,  எதிர்க்கட்சி என நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் அரசியலில் ஈடுபட்டனர்,  ஈடுபட்டு வருகின்றனர். ஆனால்,  எல்லா அரசியல்வாதிகளும் மக்கள் மனதில் இலகுவாக இடம்பிடித்து விடுவதில்லை. சில அரசியல்வாதிகள் யாரென்ற விபரம் அடுத்த தலைமுறையினருக்கு தெரியாமலே போய்விடுவதும் உண்டு.

ஆனாலும், விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசில அரசியல்வாதிகள் மாத்திரமே மக்கள் மனதில் நிலையான இடத்தினைப் பிடித்து விடுகின்றனர். அந்த அடிப்படையில் இலங்கை அரசியல் வரலாற்றில் அமரத்துவம் அடையாத நாமங்களில் ஒன்றாகவே கலாநிதி,  அல்ஹாஜ் ஏ.ஸீ.எஸ். அவர்களின் நாமமும் அமைந்துள்ளது. அவர் நாட்டுக்கும்,  தனது சமூகத்துக்கும் ஆற்றிய அருஞ் சேவைகளே இத்தகைய மனப்பதிவுகளுக்கு காரணமாகின்றது.

கண்டி மாவட்டத்தில் பிரதான முஸ்லிம் கிராமங்களில் ஒன்றான அக்குறணையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 1960 மார்ச் 19ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்த ஹமீத் அவர்கள், 1999.09.03 ஆம் திகதி மரணிக்கும்வரை தொடர்ச்சியாக நான்கு தசாப்த காலங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 1977ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட இவர், 1989ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி வரை அதே அமைச்சில் பணியாற்றியுள்ளதுடன்,  இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையாக்கத்திலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளவராவார்.

இலங்கை அரசியலில் வெளிநாட்டு அமைச்சராக சிறுபான்மை இனத்தவர் ஒருவர் இருக்கமுடியாது என்று காணப்பட்ட நிலைமையை இவரது நியமனம் மாற்றியமைத்தது. பின்பு ஐக்கிய சோஸலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றத்தில் 1989.02.18ஆம் திகதி முதல் உயர்கல்வி விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக நியமனம் பெற்ற இவர், 1990.03.30ஆம் திகதி முதல் நீதியமைச்சராகவும், 1990.08.30ஆம் திகதி முதல் உயர்கல்வித் திட்ட அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். மீண்டும் 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் திகதி முதல் 1994 ஆகஸ்ட் 15ஆம் திகதி வரை இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பணியாற்றினார்.

கண்டி மாவட்டத்தில் அக்குறணை தேர்தல் தொகுதியில் குருகொடை எனும் கிராமத்தில் 1928 ஏப்ரல் 10ஆம் திகதி அப்துல் காதர் தம்பதிகளின் செல்வப் புதல்வராக சாஹ{ல் ஹமீத் பிறந்தார். கட்டுகஸ்தோட்டை சாந்த அந்தோனியர் வித்தியாலயம், மாத்தளை விஜய கல்லூரி, மாத்தளை ஸாஹிராக் கல்லூரி என்பவற்றில் தனது கல்வியினைப் பெற்ற ஹமீத் அவர்கள், தனது கல்லூரிக் காலம் தொட்டே மும்மொழிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு தனது இளமைப்பராயத்தில் கல்வி நடவடிக்கைகளில் இவர் அதிக ஆர்வம் காட்டி வந்தார். பிரதேசத்தில் ஒரு சிறந்த ஆங்கில ஆசானாக திகழ்ந்த இவர்,  1950இல் ஆங்கிலக் கல்விப் போதனைக்கென ஒரு தனியார் கல்லூரியையும் அமைத்தார். செயல்திறன்மிக்க இவரை அடையாளம் கண்டு கொண்ட மாத்தளை நகர மக்கள் மாத்தளை நகரசபைத் தேர்தலில் இவரை ஈடுபடச் செய்தனர்.

ஹமீத் அவர்கள் தனது மாணவப்பராயத்தில் தனது ஓய்வுநேரங்களை அதிகமாக வாசிப்பதிலும், பொதுச் சேவைகளிலுமே செலவழித்துள்ளார். வாசிப்பு ஒரு மனிதனின் அறிவுத்திறனை துலக்கமடையச் செய்யும். இந்த அடிப்படையில் தேசிய சர்வதேச சஞ்சிகைகளிலும்,  நூல்களிலும்,  பத்திரிகைகளிலும் பெற்ற அறிவே பிற்காலத்தில் இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலே இவரைப் புகழடையச் செய்ய அடிப்படைக் காரணியாக அமைந்தது. இவரின் திறமைகயைக் கருத்தில் கொண்டு சாஹ{ல் ஹமீத் அவர்களுக்கு கொரிய சனநாயகக் குடியரசு ஹனூக் பல்கலைக் கழகத்தினால் (Hanuk University, Republic of Korea) 1978ஆண்டில் அரசியல் விஞ்ஞானத்திற்கான கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் 1990இல் இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகமும்  இவருக்கு கலாநிதி கௌரவப் பட்டம் வழங்கி கௌரவித்தது.

ஒரு புகழ்பெற்ற சிரேஸ்ட அரசியல்வாதியாக இவரை நாம் அறிந்துள்ள போதிலும்கூட,  அரசியலுக்குப் புறம்பாக இவர் எழுத்துத்துறையிலும்,  ஊடகத்துறையிலும் அதீத ஆர்வமிக்கவராக இருந்தார் என்பது அநேகருக்குத் தெரியாத ஒரு விடயமே. தனது 15 வயதிலிருந்தே எழுத ஆரம்பித்த இவரின் கன்னியாக்கம் “சண்டே ஒப்சேவர்” பத்திரிகையின் சிறுவர் பகுதியில் 1943ம் ஆண்டில் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து நூற்றுக் கணக்கான ஆக்கங்களை ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதியுள்ளார்.    பாடசாலையில் வகுப்பு 7 இல் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது மாத்தளைப் பிரதேசப் பாடசாலைகளுக்காக “New Broom” என்ற பெயரில் ஒரு சஞ்சிகையொன்றை ஆரம்பித்தார். இச்சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து பல்வேறு பணிகளைப் புரிந்தார். தனது கல்லூரிக் காலம் முதல் தான் மரணிக்கும் வரை ஆயிரக்கணக்கான ஆக்கங்களை தேசிய, சர்வதேச இதழ்களிலும், பருவ வெளியீடுகளிலும்,  பத்திரிகைகளிலும் இவர் எழுதியுள்ளார். அதேபோல இதுவரை இவர் நான்கு பெறுமதிமிக்க நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றின் சுருக்க விபரங்கள் வருமாறு.

1. Foreign Policy Perspectives Of Sri Lanka
 Selected speeches 1977 – 1987
 இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் நோக்கு.
 தெரிவு செய்யப்பட்ட உரைகள். 1977- 1987

2. In Pursuit of Peace
 On Non-Alignment and Regional Coopertion
 சமாதானத்தை நோக்கி

3. The Owl and the Lotus (ஆங்கிலம்)
 Lotus Och Ugglan (பிரான்ஸ்)
 தாமரையும் ஆந்தையும்

இது ஒரு சிறுவர்களுக்கான நீதிக் கதை நூலாகும். ஆங்கிலத்தில் இவர் எழுதிய நூல் பின்பு பிரான்ஸிய மொழியிலும் வெளிவந்தது. 

4. The Spring Of Love and Mercy
 அன்பின் ஊற்று

அல்குர்ஆன் ஆயத்துக்களை அடிப்படையாகக் கொண்டு கலாநிதி ஏ.ஸீ.எஸ். ஹமீட் அவர்களினால் இயற்றப்பட்ட கவிதை நூல் The Spring Of  Love and Mercy   (அன்பின் ஊற்று) என்பதாகும். இந்நூலில் காணப்படக்கூடிய கவிதைகளை நோக்குமிடத்து கலாநிதி ஹமீட் அவர்களின் ஆங்கில மொழி அறிவும்,  வர்ணனைத் திறனும்,  மார்க்க உணர்வும் நன்கு புலப்படுகிறது. மேலும் சாதாரண மக்களின் ஆத்மீக உணர்வைத் தூண்டக் கூடிய வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது.

ஹமீத் அவர்களும் கார்ட்டூன் சித்திரங்களும்.

பெரும்பாலான அரசியல்வாதிகள் விரும்பாத ஒரு பக்கத்தை இவர் நேசித்த பண்பானது,  இவரின் கலைத்துறை இரசனையையும்,  ஆர்வத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. அதாவது,  ஒரு அரசியல்வாதியின் ‘சித்திரவதைக் களம்| என வர்ணிக்கப்படும் கார்ட்டூன் துறையில் அவருக்கிருந்த ஆர்வமும் அதை அவர் இரசித்த முறைகளும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதொரு விடயமாகும்.

இலங்கையின் பிரபல கார்ட்டூன் ஓவியர்களான விஜயசோமா,  யூனுஸ்,  ஜெரயின்,  அபேசேகரா போன்றோர் ஹமீத் அவர்கள் இலங்கையில் வெளிவிவகார அமைச்சராக இருந்த காலத்தில் வெளிநாடுகளுக்கு அவர் அடிக்கடி சென்ற சந்தர்ப்பத்தை அவர்களின் கார்ட்டூன் சித்திரங்கள் மூலம் கருப்பொருளாக்கி கேலி செய்வதில் அலாதி பிரியம் காட்டியிருந்தார்கள்.

இக்காலகட்டத்தில் ஈழத்து தேசிய பத்திரிகைகளில் கார்ட்டூன் சித்திரங்களில் அமைச்சர்களான பந்துல குணவர்தன,  கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் விமல்வீரவங்ச,  மர்வின்சில்வா இடம்பெறுவதைப் போல, 1980களில் இலங்கைத் தேசிய பத்திரிகைகளில் முக்கிய கருப்பொருளாக விளங்கியவர் கலாநிதி ஹமீத் அவர்களே. ஆனால்,  அந்த கேலிச் சித்திர ஓவியங்களைக் கண்டு ஹமீத் அவர்கள் கோபம் கொள்ளவோ அவர்கள் மீது தாக்குதல் நடத்தவோ அல்லது முகம் சுழிக்கவோ இல்லை. மாறாக,  தனது உலகம் சுற்றுதலை இலக்காக்கிக் கொண்டு தன்னை ஓவியங்கள் ஊடாக சித்திரவதைப்படுத்திய அவ்வோவியங்களைத் தொகுத்து ஒரு புத்தமாக வெளிவருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

பத்திரிகைகளில் வந்த கேலிச்சித்திரங்கள் அழிந்துவிடக் கூடாதென்றும், அவை பாதுகாக்கப்பட்டு ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் அப்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் சேகரித்து வெளியிடப்பட்ட இந்த கேலிச்சித்திர தொகுப்பு நூல் சிங்களம்,  தமிழ்,  ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளிவந்தது. “வெளிநாட்டமைச்சர் ஹமீத் பற்றிய கார்ட்டூன் சித்திரங்கள்” எனும் இந்நூலுக்கு கலாநிதி ஏ.ஸீ.எஸ். ஹமீத் எழுதிய முன்னுரையின் தலைப்பு “கல்லெறிக்கு பிரதியுபகாரமாக மலர்ச் செண்டு” என்பதாகும்.

அம்முன்னுரையில் வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸீ.எஸ். ஹமீத் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

“…நானே இலக்காகிச் சித்திரவதை செய்யப்பட்டிருக்கும் இந்தக் கார்ட்டூன் தொகுப்பிற்கு ஒரு முன்னுரையோ,  ஓர் அணிந்துரையோ (விரும்பியபடி வைத்துக் கொள்ளுங்கள்) வழங்குமாறு இதன் வெளியீட்டாளர்கள் என்னைக் கேட்டுக்கொண்டனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்று சொல்வார்களே. அதனைத் தான் இந்த வேண்டுகோள் ஞாபகப்படுத்துகிறது. இத்தொகுப்பைப் பார்க்கக் கையில் எடுக்கும் வாசக நேயர்,  பக்கங்களைப் புரட்டிச் செல்லும்போது நூல் முழுவதும் கல்லெறியும் சொல்லெறியும் விரவிக் கிடப்பதையே காண்பர். என்மீது தொடுக்கப்பட்ட கல்லெறிக்குப் பிரதியுபகாரமாக மலர்ச்செண்டு தரும்படி வேண்டுகிறார்கள். நான் அதனை மனமுவந்து வழங்குகின்றேன்…

‘முன்னைய காலத்தில் சித்திரவதை செய்வதற்கு ‘ரெக்’ என்ற கருவியை உபயோகித்தனர். இப்போதுதான் இருக்கவே இருக்கிறது பத்திரிகை’ என்று ஒஸ்கார் வைல்ட் ஒருமுறை குறிப்பிட்டார். இந்த இருவகை வேதனையூட்டும் சாதனங்களுள் எதை விரும்புகிறாய் என்று அரசியல்வாதியைக் கேட்டுப் பாருங்கள். நிச்சயமாக அவர் அப்புராதன சாதனத்தைத் தான் தேர்ந்தெடுப்பார். காட்டூன் சித்திரக்காரனை சகிக்கவொண்ணா கொடிய பிரதிநிதியாக காட்டும் பத்திரிகையைவிட பழைய கால ‘ரெக்’ காருண்யமானது….

…..இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள விஜேசோமா,  யூனுஸ்,  ஜெரய்ன்,  அபயசேகரா ஆகிய கார்ட்டூன் கலைஞர்களுக்கு ஓர் அந்தரங்கத்தை வெளிப்படுத்த விரும்புகின்றேன். மீண்டும் ஒஸ்கார் வைல்ட் கூறியவாறு “பிறர் பேச்சுக்கு ஆளாவது மோசம்: ஆனால்,  பேச்சுக்கு ஆளாகாமல்  இருப்பது அதனிலும் மோசம்”. அரசியல்வாதியைப் பொறுத்தமட்டில் பேச்சுக்கு ஆளாக்கப்படுவது மங்கிப்போகாது. பேரோடிருக்கவும், பெருவெற்றியீட்டவும் கார்ட்டூன்கள் துணiயாக நிற்கின்றன. ஆகவே,  கார்ட்டூன்காரர்கள் அரசியல்வாதிக்கு பக்க பலமானவர்களே…

….இக்கார்ட்டூன் சித்திரங்களைப் பார்த்தேன்: சுவைத்தேன் என்று சொல்லி வைக்க விரும்புகிறேன். எனது உவகையின் இரகசியத்தைத் தெரிந்து கொண்ட பின், என்னைப்போல் ‘இரை|யாக அகப்படுவோரை எள்ளி நகையாடுவதை இவர்கள் நிறுத்தமாட்டார்கள் என்று நினைக்கின்றேன்… 

….வேடிக்கை ஒரு புறம் இருக்க, தன்னையே நோக்கி ஒருவன் சிரிக்கப் பழகிக் கொள்வதானது ஜனநாயக முறைக்குத் தன்னைப் பயிற்றிக் கொள்வதாக அமையும். இது அரசியல்வாதிக்கு அத்தியாவசியம் தேவைப்படும் பண்பாகும். இம்முயற்சியில் அரசியல்வாதிக்கு துணைவனாய் விளங்குபவர் கார்ட்டூன் சித்திரக்காரர் என்பது மிகையாகாது….”

மேற்படி முன்னுரையானது ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய பல உட்கருத்துக்களை வெளிப்படுத்தி நிற்கின்றது. ஜனநாயக விழுமியங்களுக்கு புகழ்ச்சி மட்டுமல்ல.  இகழ்ச்சியும் அவசியம் என்பதையும்,  அத்தகைய இகழ்ச்சிகளை தாங்கிக் கொள்ளக்கூடிய வகையில் எதிர்கால அரசியல்வாதிகள் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் இவர் மிகவும் நாசுக்காக வெளிப்படுத்துகின்றார். மாறாக,  எவ்விடத்திலேனும் இந்த கேலிச்சித்திர ஓவியர்களை அவர் நிந்திக்கவோ, அவமதிக்கவோ இல்லை. இன்றைய அரசியல்வாதிகளுக்கும் ஹமீத் அவர்களின் இந்தப் பண்பு நல்லதொரு எடுத்துக் காட்டாகும். ஆனால் அண்மைக் காலத்தில் சில அரசியல் வாதிகள் கேலிச் சித்திரக்காரர்களை விமர்சிப்பதையும்;,  சில நேரங்களில் அவர்களைத் துன்புறுத்துவதையும்,  அச்சுறுத்தல்கள் விடுப்பதையும் ஊடகங்களில் காணக்கூடியதாக உள்ளது. இந்நிகழ்வுகள் குறித்த அரசியல் வாதிகளின் ஆற்றாமையையே வெளிப்படுத்துகின்றது.

இந்நூல் வெளிவந்த பின்பு கேலிச்சித்திர ஓவியர் யூனுஸ் அவர்களை நான்  கொழும்பில் ஒரு திருமண வீட்டில் சந்தித்து,  அவருடன் கதைத்துக் கொண்டிருந்த நேரத்தில் என்னிடம் கூறினார். “ஹமீத் ஒரு வித்தியாசமான மனிதர். நாங்கள் எவ்வளவுதான் கேலிச்சித்திரங்கள் மூலமாக அவரைக் கேலி பண்ணினாலும்கூட அவர் அதைப் பொருட்படுத்தவே மாட்டார். நாட்டிலிருந்தால் நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவிப்பார். அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான போக்கினைக் கொண்ட மனிதர் அவர்” என்றார்.

சில அமைச்சர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மைப் பற்றி ஒரு கேலிச்சித்திரம் வெளிவந்தால் அதைப் பெரிதுபடுத்திக் கொண்டு கேலிச்சித்திர ஓவியர்களை கண்டிக்கும் இக்காலத்தில் இப்படிப்பட்டவர்களுக்கு ஹமீத் அவர்களின் இந்த பண்பு ஒரு முன்னுதாரணமாகும்.

ஹமீத் அவர்கள் கலையை நேசித்ததாலேயே அவரால் கலையுணர்வினை நயக்க முடிந்தது. இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் காணப்படக்கூடிய தேசிய ஊடகங்களும் சரி,  தனியார் ஊடகங்களும் சரி  மறைமுகமாகவோ நேரடியாகவோ ஒவ்வொரு அரசியல்வாதிகளினதும் சாதகமான கருத்துக்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. ஒரு அரசியல்வாதியால் நிகழ்த்தப்படும் பேச்சிக்களையோ அல்லது அறிக்கைகளையோ கூட தமக்குச் சார்பான வகையில் உள்ளவற்றையே வெளியிட்டு வருகின்றன. இத்தகைய நிலையில் இன்று இலங்கையில் காணக்கூடிய ஊடகங்களில் பல இருப்பதை அவதானிக்கலாம். கட்டுரைகளில் மாத்திரமல்லாமல் கேலிச் சித்திரங்களில் கூட இத்தகைய போக்கினையே அவதானிக்கமுடியும்.

1970,  1980களில் கேலிச் சித்திரத் துறையில் இடதுசாரிப் போக்குமிக்க சில பத்திரிகைகளில் கட்டுரைகளிலும் சரி,  கேலிச்சித்திரங்களிலும் சரி பாரிய தாக்கங்களை ஏற்படுத்தின. இக்காலப் பகுதியில் ‘அத்த’ பத்திரிகையில் யூனூஸ் அவர்களின் கேலிச் சித்திரங்கள் வாசகர்களிடையே பெரிதும் வரவேற்பினைப் பெற்றதொன்றாகவே விளங்கியது. “வெளிநாட்டமைச்சர் ஹமீத் பற்றிய கார்ட்டூன் சித்திரங்கள்” எனும் நூலில் யூனூஸ் அவர்களின் கேலிச் சித்திரங்கள் முக்கிய இடத்தினைப் பிடித்திருந்தன.

யூனூஸ் அவர்களினால் அமைச்சர் ஹமீட் அவர்களைப் பற்றி வரையப்பட்ட கேலிச் சித்திரங்களுள்,  வாசகர்களிடையே பெரிதும் விமர்சனத்துக்குள்ளான சித்திரமும், அமைச்சர் அவர்களை வெகுவாகக் கவர்ந்ததுமான சித்திரம்,  அமைச்சர் அவர்கள் தமது அமைச்சின் வேலைப்பளு நிமித்தமாக அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்லும் போது  அவர் அதிகமான சந்தர்ப்பங்களில் தனது தொகுதியில் இருப்பதில்லை. இதனைக் கேலி செய்யும் வகையில் அமைச்சரவர்கள் விமானத்தில் இருந்து இறங்கி ஒரு பொதுமகனிடம் “ஹாரிஸ்பத்துவைக்குப் போகும் வழிஎன்ன?” என்று அமைச்சர் வினவுவதைப் போல அமைந்த கேலிச் சித்திரமாகும்.   

இலங்கையில் கேலிச் சித்திரத் துறையில் புகழ் பெற்ற மற்றுமொரு ஓவியரான டபிள்யு. ஆர். விஜேயசோமா ‘ஐலண்ட்’ பத்திரிகை நிறுவனத்தின்  கேலிச்சித்திர ஓவியராவார்.  இவர் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் புகழ்பெற்றவர்.  இவரின் கேலிச் சித்திரங்கள் பல கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கும். “வெளிநாட்டமைச்சர் ஹமீத் பற்றிய கார்ட்டூன் சித்திரங்கள்” எனும் நூலில் இடம்பெற்றுள்ள  கேலிச்சித்திரங்களை வரைந்த ஓவியர்களுள் ஒருவரான டபிள்யு.ஆர். விஜயசோமா அவர்கள் தன் கருத்தினைப் பின்வரும் அடிப்படையில் வெளியிட்டிருந்தார்.

“…..நியுயோர்க்கில் ஜனாப் ஹமீத் அவர்களை நான் சந்தித்தபோது கேலிச்சித்திர நூலொன்றைத் தாம் வெளியிட உத்தேசித்திருப்பதாக அவர் கூறினார். நான் ஒரு விநாடி சிந்தித்துக் கொண்டிருந்தபோது,  அவரே தொடர்ந்து “என்னைக் கிண்டல் செய்யும் சித்திரங்களையே வெளியிட உள்ளேன்” என்றார்.

உண்மையில் தான் மறைக்க விரும்பும் விடயங்களை ஓர் அரசியல்வாதி தானே வெளியிடத் துணிந்துள்ளமை இதுவே முதல் முறை போலும். கேலிச்சித்திரக்காரர்கள் அரசியல்வாதியின் பார்வையில் ‘உண்ணி’ போன்றவர்கள். ஓயாது எரிச்சல் ஊட்டுபவர்கள். பெரும்பாலான அரசியல்வாதிகள் இந்த சுய கேலிச்சித்திரக்காரர்களை சிறையில் போட வேண்டுமென்றே அந்தரங்கத்தில் விரும்புவர். ஆனால்,  ஹமீத் அவர்கள் இவர்களை எதிர்காலச் சந்ததியினர்களுக்காக புத்தகத்தில் போற்றி வைக்க முடிவு செய்துள்ளார்கள். தன்னையே கேலிப்பொருளாகக் கொண்டு சிரிக்கும் திறன் கிடைத்தற்கரிய பேறுகளுள் ஒன்று என்பது அறிஞர் கருத்து. இதனையே செய்ய முற்பட்டுள்ளார் ஜனாப் ஹமீத் அவர்கள். இது அவரின் வெற்றிச் சிரிப்பு என்றே கூற வேண்டும். என்றிருந்தார்

‘மார்க் ஜெரெயின்’ சன்,  வீக்கென்ட்,  தவச ஆகிய பத்திரிகைகளில் பிரபல்யம் பெற்ற கேலிச் சித்திர ஓவியராவார். இவரால் வரையப்பட்ட சித்திரங்கள் தேசிய ரீதியில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் பிரபல்யம் பெற்றிருந்தன. வெளிநாட்டு அமைச்சர் அவர்களைப் பற்றி நூற்றுக்கணக்கான கேலிச் சித்திரங்களை இவர் வரைந்துள்ளார். இவரால் வரையப்பட்ட பல சித்திரங்கள் வெளிநாட்டு ஊடகங்களில் பிரசுரமாகியுள்ளன. சர்வதேச புகழ்பெற்ற ‘மார்க் ஜெரெயின்’ ஹமீத் அவர்களை பற்றியும் அவரது கேலிச்சித்திர தொகுப்பு நூல் பற்றியும் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.  

ஹாஸ்யத்தைப் புரிந்து கொள்பவர்களுக்கு விளக்கம் தேவையில்லை,
புரிந்து கொள்ளாதவர்களுக்கு விளக்கம் சாத்தியமில்லை”.

இந்த வார்த்தையில் பொதிந்துள்ள அர்த்தங்கள் ஆயிரம்.

அமித அபயசேகரா தவச,  ரிவிரச,  சன்,  வீக்கென்ட் ஆகிய பத்திரிகைகளில் பிரபல்யம் பெற்ற கேலிச் சித்திர ஓவியராவார். இவரால் வரையப்பட்ட சித்திரங்கள் பிரபல்யம் பெற்றிருந்தன. தனக்கென ஒரு தனி வாசகர் வட்டத்தை வைத்திருந்தவர் இவர். இவரின் கேலிச்சித்திரங்கள் பாராளுமன்றத்தில் கூட விமர்சிக்கப்பட்டவை. வெளிநாட்டு அமைச்சர் அவர்களைப் பற்றி நூற்றுக்கணக்கான கேலிச் சித்திரங்களை இவர் வரைந்துள்ளார். அமித அபயசேகரா “வெளிநாட்டமைச்சர் ஹமீத் பற்றிய கார்ட்டூன் சித்திரங்கள்” எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.  

“…பிறரைப் பார்த்துச் சிரிப்பவர் பலபேர். தம்மையே எள்ளிநகையாடுபவர் வேறு சிலர். அவ்வாறு செய்யக்கூடிய அரசியல்வாதிகள் சிலரிலும் சிலரே. இதற்காதாரமாகப் பத்திரிகையாளர்கள்,  அரசியல் விமர்சகர்கள்,  நகைச்சுவையெழுத்தார்கள்,  கேலிச் சித்திரக்காரர்கள் ஆகியவர்களுக் கெதிராக அ.சி.ம. (அதி சிரேஸ்ட மனிதர்கள்) என்போரும், அ.சி.ம. (அதி சிறிய மக்கள்) என்போரும் நாள்தோறும் விடுக்கும் மிரட்டல்களை நோக்குக.

ஆகவே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் போன்றவொரு முன்னணி அரசியல்வாதி,  தன்னைத்தானே எள்ளிநகையாடும் அரிய திறன் பொருந்தியிருப்பதையும் இதற்கு மேலாக அவர் பற்றியும்,  அவருக்கெதிராகவும் வரையப்பட்ட கேலிச்சித்திரங்கள் அடங்கிய நூலொன்றை வெளியிட முற்பட்டதன் மூலம்,  தன் நகைப்புத் திறனைப் புதிய பாணியில் புலப்படுத்தியிருப்பதையும் எண்ணிப் பார்க்குமிடத்து புதிய உற்சாகமும் உள்ளக்கிளர்ச்சியும் ஏற்படுகின்றது. “ஹமீதும்,  வழக்கமும்,  பிறவும்” என இதனைக் குறிப்பிடலாம். (இவ்வாறு வெளியிடப்படுவதனால் இத்துறையில் முதன்மை ஒன்றினை மாண்புமிகு ஹமீத் அவர்கள் தட்டிக் கொண்டார்கள் என்றே கூற வேண்டும். நான் அறிந்த வேறு எந்த அரசியல்வாதியும் இவ்வாறு செய்ததில்லை)

இந்நாட்டின் அதிசிறந்த கேலிச்சித்திரக்காரர்களுள் ஒருவரான கோலெற் அவர்கள் லண்டன் மாநகரைச் சேர்ந்த டேவிட்லோ அவர்கள் போன்ற அரசியல் அபிப்பிராயத்தை உருவாக்கும் வன்மை படைத்தவர் என்று சொல்லப்படுகின்றது. (கோலெற் அவர்கள்,  அவுஸ்திரேலியாவுக்கு மூட்டை முடிச்சோடு சென்ற பின்னரே அமைச்சர் ஹமீத் அவர்கள்,  அரசியல் வானில் சுடர்விடத் தொடங்கினார்கள்) கோலெற் அவர்களிடம் இலவசக் கல்வியின் தந்தையாகிய கலாநிதி சி.டபிள்யு. கன்னங்கரா அவர்கள், கொண்டிருந்த தீராத விரோத உணர்வினால் (அக்காலத்தில் ரோயல் கல்லூரியின் ஆசிரியராக இருந்த) கோலெற் அவர்கள் தூரிகையைக் கீழே வைக்க வேண்டும். அல்லது அரசாங்க சேவையிலிருந்த விலகிக் கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டபோது கோலெற் அவர்கள் ஆசிரியத் தொழிலைத் துறந்து,  முழுநேரக் கேலிச்சித்திரக்காரராக உழைக்கத் தீர்மானித்தார், இலங்கையின் செய்தித்தாள் வாசக நேயர்களுக்கு திறமைவாய்நத கேலிச்சித்திரக் கலைஞர் ஒருவரை,  கன்னங்கரா அவர்கள் தன்னையறியாமலே வழங்குவதற்குக் காரணமானார். கோலெற் அவர்களை வெளியேற்ற கன்னங்கரா அவர்கள் காரணமாக இருந்தது போன்று,  கோலெற் அவர்களும் கலாநிதி கன்னங்கராவை அரசியலிலிருந்து வெளியேற்றுவதற்குக் காரணமாக விளங்கினார்கள். (இதில் படிப்பினை ஒன்று எங்கோ புதைந்து கிடக்கிறது)

“ஊதியத்துக்குத் தக்க உழைப்பாளியான கேலிச்சித்திரக் கலைஞர் ஒருவர்,  குரல் எழுப்பவியலாத பலரின் பிரதிநிதியான சாதாரண மனிதனுக்காகக் குரல் கொடுக்கும் பாங்கிலேயே செயற்படுகிறார். அவர்,  தான் உழைக்கும் தாபனத்தை உயர்த்தும் நோக்கில் சாதாரண மனிதனுக்குச் சேவையாற்றுவதில்லை. அமைச்சர் ஹமீத் அவர்கள் தாபனத்தின் ஓர் அங்கமானவர்,  அதில் அவர் போன்று இன்னும் பலரும் அங்கம் வகிக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்” என்று அமித அபயசேகரா தெரிவித்த கருத்தையும் இவ்விடத்தில் சிந்திப்பது பயனள்ளதாக இருக்கும்.   

அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பையும் ஞாபகமூட்டுவதற்கான சர்வதேச தினம். : பி எம் புன்னியாமீன்

arab_slave_tradeசில சர்வதேச நினைவு தினங்கள் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறுவதைப்போல சகல நினைவு தினங்களும் முக்கியத்துவம் பெறுவதில்லை. குறித்த நினைவு தினங்களின் முக்கியத்துவம் நவீன கால சமூக வாழ்வில் உணரப்படாமையினால் அவை பற்றி விரிவான விளக்கங்கள் மக்களுக்குக் கிடைப்பதில்லை. அந்த வகையில் அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பையும் ஞாபகமூட்டுவதற்குமான சர்வதேச தினத்தையும் குறிப்பிட முடியும்.

ஆனால் மனிதகுல வரலாற்றில் அடிமை வியாபார முறையையும், அதனை  ஒழிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எளிதில் மறந்து விட முடியாது. குறிப்பாக தொழில்நுட்பத்திலும், நவீன தொலைத்தொடர்பு வசதிகளிலும் முன்னேறியுள்ள இந்த மிலேனிய யுகத்தில் அக்கரை படிந்த வடுக்களை ஞாபகமூட்டப்படுவதினூடாக பல படிப்பினைகளைப் பெறக்கூடியதாக உள்ளதென்பதை மறுக்கமுடியாது. மத்திய கால மனிதனின் மனிதநேயமற்ற நடவடிக்கைகள் இன்றைய மனிதகுலத்தின் மனிதநேயத்தன்மைக்கு அடிப்படையை இட வேண்டியது அவசியமானதொன்றாகும்.

சர்வதேச ரீதியில் அடிமை வியாபாரத்தைப் பற்றியும், அதனை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றியும் ஞாபகமூட்டுவதற்கான தினம் 1998 முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. 23 ஆகஸ்ட்  1998 இல் ஹெய்டி நாட்டிலும், 23 ஆகஸ்ட் 1999 இல் செனகல் நாட்டிலும் இத்தினத்தின் பிரதான நிகழ்வுகள் இடம் பெற்றன. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் இத்தினத்தை நினைவு கூருகின்றன.

அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பை ஞாபகமூட்டுவதற்குமான சர்வதேச தினம் யுனெஸ்கோவின் UNESCO 29வது கூட்டத்  தொடரில் (29 C/40) பிரேரணையாக முன்வைக்கப்பட்டது. யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகத்தின் ஜுலை 29. 1998ம் திகதி இடப்பட்ட CL/3494  இலக்க சுற்றறிக்கைப் படி நாடுகளின் கலாசார அமைச்சர்களினூடாக இது தொடர்பான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. குறிப்பாக 1791 ஆகஸ்ட் 22ம் திகதி இரவும் ஆகஸ்ட் 23ம் திகதியும் island of Saint Domingue  (தற்போதைய ஹெய்டி) இல் இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அடிமைமுறை என்பது மனிதர்களை வலுக்கட்டாயமாக பிறமனிதர்கள் பிடித்து வைத்து, அல்லது அவர்களை விலைக்கு வாங்கி அவர்களிடமிருந்து பலாத்காரமாக வேலையை வாங்கும் முறையாகும். இம்முறை வரலாற்றுக் காலம்முதல் பல நாடுகளில் வழக்கில் இருந்துவந்துள்ளது. இங்கு அடிமைகள் என்பவர்கள் மனிதநேயத்திற்கு அப்பாட்பட்டவர்களாகவே எஜமானர்களால் மதிக்கப்பட்டனர். வேறு வகையில் கூறுமிடத்து உணர்வுகளை இழந்த சடப்பொருள்கள் என்ற வகையிலேயே அடிமைகள் நோக்கப்பட்டனர்.

ஆபிரிக்க – அமெரிக்கர்களின் வரலாறு அடிமை முறையிலிருந்துதான் ஆரம்பமாகின்றது. எல்லா இனங்களும், எல்லா கலாசாரங்களும், எல்லா சமூகங்களும் கட்டாய வேலைவாங்கும் மானிய முறையிலிருந்து (indentured servitude) கொடுமையான அடிமைமுறை வரை அடிமைமுறையை நடைமுறையில் உபயோகப்படுத்தியிருக்கின்றன.

ஆனால், ஐரோப்பியர்களே, அடிமைமுறையை ஒரு உற்பத்தி முறையாகவும், உலக பொருளாதாரத்தின் முக்கியமான அங்கமாகவும் மாற்றினார்கள். உலகில் காணப்பட்ட அனைத்து அடிமை முறைகளுடன் ஒப்புநோக்கும்போது ஐரோப்பியர்களின் அடிமை முறையே மிகவும் கேவலமான முறையாக வர்ணிக்கப்படுகின்றது. பல நூற்றாண்டுகள் எந்தவிதமான விடுதலையும் இல்லாமல் இது தொடர்ந்துள்ளது. சுமார் 60 மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைமுறை காரணமாகக் கொல்லப்பட்டார்கள். இன்னும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் சித்திரவதையாலும், நோயாலும்,  துயரத்தாலும் இறந்துள்ளனர் என வரலாற்றுக் கணிப்புகள் சான்று பகர்கின்றன.    

அடிமைமுறை வரலாற்றினை நோக்குமிடத்து பண்டையக் காலங்களில் இனங்களிடையே ஏற்பட்ட யுத்தங்களில்; தோல்வியுற்றவர்கள் அடிமைகளாக்கப் பட்டனர் எனக்கூறப்படுகிறது. இங்கு பெண்களும், குழந்தைகளும் கூட அடிமைகளாக்கப்பட்டனர். அடிமைமுறை மொஸப்பத்தோமிய நீதிமுறைகளில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சமூகவழக்காக காணமுடிகின்றது. பெண்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதும், பாலியல் இச்சைக்கு உட்படுத்துவதும் பழங்காலத்திலிருந்து இன்று வரை அடிமைமுறையின் ஒரு பண்பாக உள்ளது. அப்படி ஏற்பட்ட அடிமைகள் பெரிய இராணுவ, கட்டிட, பண்ணை, அரண்மணை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அல்லது பிரபுக்கள் வீட்டில் வேலை செய்ய பயன்படுத்தப்பட்டனர் அல்லது தாதுப்பொருள் சுரங்கங்களிலும், மற்ற உயிர் ஆபத்து நிறைந்த வேலைகளிலும் பயன்படுத்தப் பட்டனர். பல புராதன சமூகங்களில் “சுதந்திர” மனிதர்களை விட அடிமைகளே அதிகமாக காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அடிமைமுறையின் முக்கியமான காரணம் பொருளாதாரப் பேராசையும், மற்றவர்களை மேலாதிக்கம் செய்யும் ஆசையுமே. இவை மத ரீதியான காரணங்களல்ல, அடிமை முறையை எப்படி நடத்த வேண்டும் என்றும், அடிமைமுறையை மேலாதிக்கம் செய்தும், அடிமை முறையை அடிப்படையாகக் கொண்ட பேரரசுகளை ஆதரித்தும் அடிமை முறையைக் கொண்டொழுகிய பேரரசுகள் 1400 வருடகாலங்களாக நீடித்ததாக வரலாறுகள் சான்று பகர்கின்றன.

தற்போது கிடைக்கும் சான்றுகள் கல்வெட்டுக்களை வைத்து நோக்கும்போது அடிமை முறை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களிலே காணப்பட்டுள்ளது. புராதன எகிப்தியர் யுத்தங்களில் தோற்றவர்களையும், மற்றவர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கியவர்களையும் அடிமைப் படுத்தினர். இங்கு அடிமைகள் முதலில் அரசர் “பாரோ”விற்க்கு தான் சொந்தம். அரசர் தனக்கு வேண்டியவர்களுக்கு அடிமைகளை பரிசளிக்கலாம். 3ம் துத்மாஸ் (கிமு 1479-1425),  2வது ரமாசீஸ் (கிமு 1279-1213) போன்ற பாரோக்கள் தங்கள் கல்வெட்டுகளில் கனான் பிரதேசங்களில் தங்கள் படை தாக்கியபோது எத்தனை,  எப்படிப் பட்ட எதிரிகளை கொன்றும், கைதிகளாக்கியும் ஆட்கொண்டனர் என்று தெரிவிக்கிறனர். உயிர்போகும் வரை கட்டாய வேலையில் அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

யூத பிதாமகன் மோசஸ் காலத்தில்தான் யூதமக்கள் விடுதலை பெற்று தங்கள் நாட்டிற்க்கு திரும்பினர் என்றும், சில அடிமைகள் தங்கள் முயற்சியாலும், ஆற்றலாலும், அதிர்ஷ்டத்தாலும் நல்ல பதவிகளை அடைந்தனர் என்றும் கூறப்படுகின்றது. வரலாற்று சான்றுகளுடன் ஒப்பிடும்போது,  எகிப்திய அடிமைகள் ஒப்பீட்டளவில் சுமாராக  நடத்தப்பட்டிருக்கலாம்; என எண்ணத் தோன்றுகிறது.

புராதன கிரேக்க நாகரிகத்தில் அடிமைமுறை பெரும்பங்கு வகித்ததாகவும் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களாகவும், தொழிலாளர்களாகவும், பண்ணையாட்களாகவும், சுரங்க தொழிலாளர்களாகவும் ஊழியம் செய்தனர் என்றும் கூறப்படுகின்றது. இந்த அடிமைகள் பிறப்பினாலோ, (அடிமைக்குப் பிறந்தவனும் அடிமையே என்ற அடிப்படையில்) சந்தையில் வாங்கப்பட்டவராகவோ, போர் கைதிகளாகவோ இருக்கலாம். உதாரணமாக ஸ்பார்டாவின் கையின் தோல்வியுற்ற வீரர்கள் சைராகூஸ் சுரங்கங்களில் அடிமையாக வேலை செய்தனர். மற்ற இடங்களிலிருந்து கடத்தப்பட்ட நபர்களும் அடிமைகளாயினர்.

ஒரு அடிமையின் விலை அந்த அடிமையின் உருவம், வயது, உடல் வலிமை, ‘அடிமைத் தனம்”, இவற்றை பொருத்து தீர்மானிக்கப்பட்டது. பணக்கார கிரேக்க குடும்பங்கள் 20 அடிமைகளை கூட வைத்திருக்கலாம். கிரேக்க அடிமைகள் தங்கள் பெயர்களை வைத்துக் கொள்ள கூடாது. ஏஜமானரால் வைக்கப்படும் பெயர்களே இவர்களின் பெயர்களாகும். ஜனநாயகத்தின் பிறப்பிடம் எனக் கருதப்படும் ஏதென்ஸில்; 21,000 சுதந்திர மனிதர்களும், 400,000 அடிமைகளும் இருந்தார்கள் என கணக்கிலிடப்பட்டுள்ளதாக சில ஆதாரக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.

கிரேக்க நாகரிகத்தில் அடிமைமுறை பெரும்பங்கு வகித்ததைப் போலவே உரோமர் காலத்;திலும் அடிமை முறை முக்கியத்துவம் பெற்றிருந்ததை அவதானிக்க முடிகின்றது. உரோம சாம்ராச்சிய எழுச்சியுடன் பல்வேறு வெளிநாட்டு யுத்தங்களில் தோற்றுப்போன பல நாட்டினர்; அடிமைகளானர். இதனை தெளிவுபடக் கூறுவதாயின் உரோமர்கள், தங்களைத் தவிர மற்று எல்லா நாட்டவரையும் அடிமையாகினர் என்றால் மிகையாகாது. கி.பி.400 களில் அங்கு  அடிமைமுறை மேலும் தீவிரமாயிற்று. சில ஆய்வுகளின் படி கி.மு. 2ம் நூற்றாண்டு முதல் கி.பி 2ம் நூற்றாண்டு வரை அடிமைகள் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என்பர். இங்கு அடிமைகளுக்கு பெயரில்லை, அவர்கள் மணம் செய்யமுடியாது, சொத்துக்களை வைத்திருக்க முடியாது.

உரோமர் கால அடிமைமுறையின் கொடூரங்கள் தாங்காமல், பல அடிமைக் கலகங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் பல அடிமைகள் முன்னால் போர் வீரர்களாகவும் வாட்டசாட்டமாகவும், பலத்துடன் இருந்துள்ளனர். அக்கலகங்களில் புகழ்பெற்றது கிமு 73-71ல் நடந்த “ஸ்பார்டகஸ்” எழுச்சியாகும்.

புராதன காலத்தில் அரேபிய சாம்ராச்சியங்களிலும் சீன சாம்ராச்சியத்திலும் அடிமை முறை காணப்பட்டதாக கூறப்படுகின்றது. ஏந்தவொரு அடிமை முறையை எடுத்துக் கொண்டாலும்கூட, அதன் பண்புகள், தன்மைகள் ஒன்றாகவே காணப்பட்டன.

பண்டைய இந்தியாவில் வாங்கி, விற்கும் அடிமைகள் இருந்ததாக தெரியவில்லை. ஒருசில தமிழ் ஆய்வாளரின் கருத்துப்படி, தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் அடிமை முறை இருந்ததாகக் கூறப்படுகிறது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கியுள்ளனர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டன. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசு10லச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெல்குற்றுதல், வேளாண்மைப் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாக காணப்பட்டுள்ளன.

அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade)

மத்திய காலத்தில் அடிமை வியாபாரம் புதுப் பரிமாணத்தில் வளர்ச்சியடையலாயிற்று. இங்கு அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade) எனப்படுவது ஐரோப்பியர்கள் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி வணிகம் செய்தமையைக் குறிப்பதாகும். ஆப்பிரிக்காவில் பல இன மக்கள் வாழ்ந்து வந்தனர். இரண்டு இனங்களுக்கிடையே போர் ஏற்பட்டு அதில் வென்றவர்கள் தோற்றவர்களை ஆபிரிக்காவிற்கும் – அமெரிக்காவிற்கும் இடையே அடிமை வியாபாரம் செய்து வந்தவர்களுக்கு அடிமைகளாக விற்றனர். காடுகளிலோ, தோட்டங்களிலோ தனியாக இருந்தவர்களைத் திருட்டுதனமாகப் பிடித்து வந்து அவர்களுக்கு விற்றனர். அடிமை வியாபாரம் செய்து வந்தவர்கள் கொடுத்த பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் இனத்தவர்களையே திருட்டுத்தனமாகப் பிடித்துக் கொடுத்த சில கிராமத் தலைவர்களும் உளர்.

அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade) அட்லாண்டிக் பெருங்கடலை அண்மித்து நடைபெற்றமையால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. 15 முதல் 19ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர்கள் மத்திய ஆபிரிக்காவிலிருந்தும் மேற்கு ஆபிரிக்காவிலிருந்தும் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி “புதிய உலகம்” என அவர்கள் அழைத்த அமெரிக்கக் கண்டங்களுக்குக் கொண்டு சென்று விற்றுள்ளனர்.

ஐரோப்பாவிலிருந்து முதன் முதலில் வடஅமெரிக்காவுக்கு வந்தவர்களில் பெரும்பாலோர் பிரித்தானியாவிலிருந்து வந்தவர்களே. அமெரிக்காவிற்கு வந்து அங்கு ஏற்கெனவே வாழ்ந்து வந்த பழங்குடி மக்களின் நிலங்களை அவர்களிடமிருந்து பறித்துக்கொண்டு தங்கள் உடைமையாக்கிக்கொண்ட பிறகு அந்த நிலங்களில் உழைக்க அவர்களுக்கு உழைப்பாளிகள் தேவைப்பட்டனர். அப்போது ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்களைத் தந்திரமாகப் பிடித்து வந்து ஐரோப்பாவில் அடிமைகளாக விற்பது பரவலாக இருந்து வந்தது. இதைப் பின்பற்றி அமெரிக்காவில் வாழ்ந்து வந்தவர்களும் ஆப்பிரிக்கர்களை அமெரிக்காவிற்குக் கொண்டுவந்து அடிமைகளாக விற்கத் தொடங்கினர்.

9.4 முதல் 12 மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்கக் கண்டங்களை வந்தடைந்தனர். ஆனால் அடிமைகளாக்கப்பட்டோரின் தொகை இதைவிட மிக அதிகமாகும். இந்த அடிமை வணிகத்தை ஆபிரிக்க, ஆபிரிக்க அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் மாஃவா (Maafa) எனக் குறிப்பிடுகின்றனர். சுவாகிலி மொழியில் மாஃவா என்பதன் கருத்து “பெரும் அனர்த்தம்” என்பதாகும்.

16ஆம் நூற்றாண்டின் மத்தியில், அடிமை வியாபாரம், பொருளாதாரரீதியில் பெரும் இலாபகரமான வியாபாரமாக விளங்கியது. இதனால் மற்ற நாடுகளும் அடிமை வியாபாரத்தில் போட்டியிட ஆரம்பித்தன. ஊதாரணமாக போர்த்துக்கள், ஸ்பானியர்கள் போன்றோரைக் குறிப்பிடலாம். இவை பெரும் கப்பல்களை அனுப்பி ஆபிரிக்கர்களைக் கடத்திவர அனுப்பின. ஐரோப்பியர்கள் அடிமைகளை பிராந்திய ஆபிரிக்க தலைவர்களிடமிருந்து வாங்கினர். அல்லது கப்பலைப் பார்வையிட விரும்பிய ஆபிரிகர்களை பார்வையிட அனுப்பி ஏமாற்றி அவர்களைச் சிறைபிடித்தனர். சில சமயங்களில் ஒரு பழங்குடிக்கும் இன்னொரு பழங்குடிக்கும் இடையே பெரும் பழங்குடிப் போர்களுக்கும் அடிமை முறை காரணமாயிற்று. ஏனெனில் ஒரு பழங்குடி இன்னொரு பழங்குடியை அடிமையாக வியாபாரம் செய்ய முனைந்தமை போருக்கு வித்திட்டது.

அடிமை வியாபாரம் நடப்பதற்காகவே மேற்கு ஆபிரிக்கக் கடற்கரையோரங்களில் சில கோட்டைகள் கட்டப்பட்டன. உள்நாடுகளிலிருந்து பிடிக்கப்பட்டவர்கள் இந்தக் கோட்டைகளில் சில மாதங்கள் அடைக்கப்பட்டனர். பின்பு கழுத்திலிருந்து காலுக்குச் சங்கிலி போடப்பட்டும், கையோடு கையும், காலோடு காலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டும், நான்கு அடி உயரமே உள்ள அறைகளில் திணிக்கப்பட்டார்கள். நாற்றமும் கழிவும் நிரம்பிய அறைகள் வெகு விரைவிலேயே நோயையும் இறப்பையும் கொண்டுவந்தன. தப்பிப்பிழைத்தவர்கள் அங்கே தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பல்களில் ஏற்றப்பட்டு மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் தங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அடிமையாகச் செல்வதைவிட ஆபிரிக்க மண்ணிலேயே செத்துமடியலாம் என்று, சிலர் சாத்தியப்பட்டால் சங்கிலியோடு கடலில் குதித்து சுறாக்களுக்கு இறையானார்கள். வெளிநாட்டு மண்ணைத் தொடுவதற்குமுன்னர், அடிமைகளில் பாதிப்பேர் இறந்தனர்.

உயிர் பிழைத்துக் கொண்டுவரப்பட்டவர்கள் அமெரிக்காவிலுள்ள பெரிய நிலச்சுவான்தார்களுக்கு விற்கப்பட்டனர். இப்படி அடிமைகளாக விற்கப்பட்டவர்கள் வெள்ளையர் நிலங்களிலும் வீடுகளிலும் ஊதியம் எதுவும் இல்லாமல் உழைத்து தங்கள் அடிமைத் தளையிலிருந்து விடுபடாமலேயே தங்கள் வாழ்க்கையைக் கழித்து வந்தனர். அமெரிக்காவில் பெரும்பாலான வேலை பருத்தியை பறிப்பதுதான். இது முதுகொடியும் வேலை. இது ஒரு மனிதனின் கையை புண்ணாக்கி இரத்தம் வர வைக்கும். சவுக்கால் அடிபடுவது என்பது சர்வ சாதாரணம். 100 சவுக்கடி வரையிலும் வழங்கப்படும். இது விரலளவுக்கு ஆழமான சதைத் தோன்டிப் போகச் செய்தது. விழித்திருக்கும் ஒவ்வொரு வினாடியும் உழைப்பிலேயே கழிக்க வேண்டிய நிலை இந்த அடிமைகளுக்கு இருந்தது.

அறுவடையின் போது 18 மணி நேரமும், கர்ப்பமான பெண்களுக்கு பிரசவிக்கும் கடைசி நாள் வரையும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

அடிமை முறையிலிருந்து விடுபட முயன்ற சில ஆபிரிக்கர்களுக்கு பிடிபட்டபின் பெரிய தண்டனைகள் காத்திருந்தன. வெள்ளைக்காரனை அடித்த அடிமையின் முகத்தில் பழுக்கக்காய்ச்சிய இரும்பால் முத்திரையிட்டார்கள். பொதுவாக உபயோகப்படுத்தப்பட்ட தண்டனை, அடிமைகளை மரத்திலிருந்து தொங்கவிட்டு அவர்களது இடுப்பிலும் தொண்டையிலும் இரும்புக்குண்டுகளை தொங்கவிடுவதாகும். இதனால் விடுபட விரும்பிய பலரும்; முயற்சிகளை மேற்கொள்ளாமலே வாழ்க்கை முழுவதும் அடிமைகளாகவே வாழ்ந்தனர்.

அடிமைச் சமூகத்தில் தற்கொலை விகிதமும் அதிகரித்து காணப்பட்டது. அடிமைகளை வைத்திருந்த எஜமானர்கள் மேலும் அதிகமாக அடிமைகளை ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவருவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்தனர்.

மேலும் அவர்கள் விவசாய விலங்குகளைப்போல, வலிமை, உயரம், அளவு ஆகிய குணங்களை அதிகப்படுத்தும் நோக்கில், அடிமைகளை இனப்பெருக்கம் செய்யவைத்தார்கள். சில பெண் அடிமைகள் தொடர்ந்து கர்ப்பமாகவே வைக்கப்பட்டனர், இவர்கள் குழந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போல புதிய அடிமைகளை உருவாக்க வைக்கப்பட்டிருந்தார்கள். கருப்பு நிறப் பெண்களில் பலர் வெள்ளை ஆண்களின் உடல் பசிக்கு ஆளாகி நிறையக் கலப்புக் குழந்தைகள் பிறந்தனர். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு கலப்பு என்ற பட்டம் கொடுக்கப்பட்டாலும் இவர்களைக் கறுப்பர்கள் என்றே பாவித்தனர். இந்தக் குழந்தைகளுக்குத் தகப்பன்மார்களாகிய வெள்ளையர்கள் இவர்களை தங்கள் குழந்தைகள் என்று கூறிக்கொள்ளாததால் இவர்கள் தாய்மார்களோடேயே வளர்ந்தனர். அல்லது தாயின் கணவனான கறுப்பு இனத்தைச் சேர்ந்தவன் இவர்களுக்குத் தகப்பனாகக் கருதப்பட்டான். தங்களிடம் அடிமைகளாக இருந்த பெண்ககளுக்குத் திருமணம் செய்விக்கும் முன்பு அந்தப் பெண்களோடு உடல் உறவு வைத்துக்கொள்ளும் முதல் உரிமை எஜமானுக்கே இருந்தது.

ஆபிரிக்கர்களுக்கு எழுதப் படிக்க உரிமை இல்லை. அப்படிப் படிக்க முயன்றவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். அவர்களுக்கென்று தனி குடியிருப்புகள், தனி கிறிஸ்தவ ஆலயங்கள் இருந்தன. இந்தியாவில் தீண்டாமை இருந்தது போல் அமெரிக்காவிலும் ஆபிரிக்கர்களை வெள்ளையர்கள் தனிமைப்படுத்தினர்.

இவ்வாறாக  ஆபிரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அடிமை வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. 1730ம் ஆண்டில் 15கப்பல்கள் மட்டும் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தன. 1792ல் 132 கப்பல்களாக வளர்ந்து அடிமை வியாபாரம் அமோகமாக நடந்தது. இதில் இங்கிலாந்து அதிக இலாபம் சம்பாதித்தது. 1790ல் அமெரிக்காவில் 6லட்சத்து 97 கறுப்பின அடிமைகள் இருந்தனர். இது 1861ல் 40 லட்சமாக பெருகியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அடிமைமுறை ஒழிப்பு முயற்சிகள்

பல மதங்களும், அரசர்களும், சான்றோர்களும் அடிமைகளை நல்ல முறையில் நடத்த கோரினாலும், 18ம் நூற்றாண்டின் பின் பகுதியிலிருந்துதான், அடிமைமுறையை மொத்தமாக ஒழித்து கட்டுவதற்கான குரல்கள் எழுந்தன. இவை முதலில் இங்கிலாந்தில் வில்லியம் வில்பர்போர்ஸ் என்பவரால் பிரசாரம் செய்யப்பட்டன. இவர் 1787ல் ஆரம்பிக்கப்பட்ட ‘அடிமை ஒழிப்பு குழுவின்” முதல் தலைவர்.

பிரெஞ்சு புரட்சியின் போது ‘முதல் குடியரசு” பிரகடனம் செய்யப்பட்ட பின், அடிமைமுறை தடை செய்யப்பட்டது. ஆனால் நெப்பொலியன் தலைவராக ஆனவுடன்,  அடிமைதனத்தின் பல தடைகள் நீக்கப்பட்டன. 19ம் நூற்றாண்டில் பல நாடுகள் அடிமை முறையை தடை செய்து ஒழித்தன. அதாவது அடிமைகளை வைப்பதும்,  பிடிப்பதும், விற்று வாங்குவதும்,  கடத்துதலும் தடை செய்யப்பட்டன. அடிமை ஒழிப்பு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெரிய அரசியல் பிரச்சினையாகி,  அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு வித்திட்டது.

அடிமைகளைப் பொறுத்தவரையில் அநேகமாக பலசாலிகளாகக் காணப்பட்டனர். அவர்களுக்கு ஒன்றுசேரக்கூடிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவர்களின் சிந்தனை உரிமையும்,  கருத்து வெளியிட்டு உரிமையும் பறிக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட பின்னணியில் சிறுகச் சிறுக ஏற்பட்ட மறைமுக எழுச்சியின் ஒரு விளைவாக 1791 ஆகஸ்ட் 22ம் திகதி இரவும் ஆகஸ்ட் 23ம் திகதியும்  island of Saint Domingue  (தற்போதைய ஹெய்டி) இல் அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சி அடிமை வியாபாரத்தின் நெகிழ்விற்கு வித்தாகியது.

இக்கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட எழுச்சியையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் யுனெஸ்கோவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹெய்டி இராச்சியத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியினையடுத்து பல உலக நாடுகள் படிப்படியாக அடிமை வியாபாரத்தை தடைசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. உதாரணத்திற்கு சில நாடுகளை குறிப்பிடுவோமாயின் சிலி 1823இலும், ஸ்பெயின் 1837இலும்,  டொமினிகன் ரிபப்ளிக் 1844இலும்,  ஈகுவடார் 1854இலும்,  பிரேசில் 1888இலும் அடிமைமுறையைத் தடை செய்தன. இதே நேரத்தில் உலகத்தின் பெரும்பாலான கப்பல்படைகள் ஆபிரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கு இடையே நடந்துவந்த அடிமை வியாபாரத்தை நிறுத்திக்கொண்டன.

இன்று அமெரிக்க நாடுகளில் நீக்ரோக்கள் என்றழைக்கப்படும் கறுப்பினத்தவர்கள் அதிகமாக வாழ்கின்றார்கள் என்றால் அவர்கள் ஆபிரிக்கா கண்டத்திலிருந்து அடிமைகளாக அமெரிக்காவிற்கு கடத்திச் செல்லப்பட்டவர்களின் பரம்பரையினரே. ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்தவர்களை அடிமைத் முறையிலிருந்து விடுவிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் முயன்றபோது ஆபிரிக்கர்களை அதிக அளவில் அடிமைகளாக வைத்திருந்த தென் மாநிலங்களில் வாழ்ந்த வெள்ளையர்கள் (இந்த மாநிலங்களில்தான் பெரிய பண்ணைகளில் ஆபிரிக்கர்கள் கடுமையாக உழைத்தனர்) தங்களுக்கு ஏற்படும் இழப்பைக் கருதி லிங்கனின் திட்டத்தை எதிர்த்துத் தென் மாநிலங்களைத் தனி நாடாகப் பிரகடனப்படுத்தினர். இதனால் 1861இல், அதாவது ஆப்ரகாம் லிங்கன் பதவி ஏற்றவுடனேயே அமெரிக்க உள்நாட்டுப் போர் மூண்டது.

உள்நாட்டுப் போரில் தென்மாநிலங்களை லிங்கனின் தலைமையில் அமைந்த வட மாநிலங்கள் கடைசியாக வெற்றிகொள்வதற்கு முன்னால் நாடு முழுவதும் ஆபிரிக்கர்களை அடிமை முறையிலிருந்து விடுவிக்கும் பிரகடனத்தை லிங்கன் வெளியிட்டார்.

சட்டப்படி ஆபிரிக்கர்கள் அடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் வெள்ளை இனத்தைச் சேர்ந்த இனவெறியர்கள் அவர்களைச் சுதந்திர மனிதர்களாக வாழ விடவில்லை. இந்த கறுப்பினத்தவர்களுக்கு எத்தகைய உரிமைகளும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கறுப்பினத்தவருக்கெதிராக 1965ஆண்டுவரை அமுலில் இருந்த எல்லாத் தடைகளையும் நீக்கி முதல் முதலாக அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜோன்ஸன் ஆபிரிக்கர்களுக்கு நிபந்தனையற்ற வாக்குரிமையை வழங்கினார்.

அன்றிலிருந்து நீக்ரோக்கள் என்று அழைக்கப்பட்டு வந்த,  ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்களின் சந்ததிகள் ஆபிரிக்க – அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படலாயினர். அவர்களுக்கென்றிருந்த தனிப் பள்ளிகள்,  தனிக் கோவில்கள்,  தனிப் பொழுதுபோக்கு இடங்கள் என்பதெல்லாம் மெதுவாக மறையத் தொடங்கின.

கறுப்பினத்தவர்கள் வாக்குரிமை பெற்று ஐம்பத்தைந்து ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் ஒரு கறுப்பினத்தவரான பராக் ஒபாமாவை ஜனாதிபதியாகக் கூடிய அளவிற்கு கறுப்பினத்தவர்கள் இன்று உரிமைகளைப் பெற்றுள்ளனர்.

ஒபாமாவின் வாழ்க்கை வரலாறு மற்ற ஆபிரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டது. இவர் அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்களின் சந்ததிகளில் ஒருவர் அல்ல. இவர் தந்தை கென்யாவிலிருந்து அமெரிக்காவிற்கு மேற்படிப்பிற்காக வந்த இடத்தில் வெள்ளை இனத்தைச் சேர்ந்த இவரது தாயை மணந்திருக்கிறார். இவர் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியை விவாகரத்து செய்துவிட்டுத் தன் தாய்நாட்டிற்குத் திரும்பிவிட்டார். நல்லவேளையாக இவரைத் தன்னோடு அழைத்துச் செல்வேன் என்று அடம்பிடிக்கவில்லை. இவருடைய தந்தை கென்யா நாட்டைச் சேர்ந்தவர் என்ற வகையில் மட்டுமே இவருக்கும் ஆபிரிக்க இனத்திற்கும் தொடர்பு உண்டு.

ஒபாமாவுக்கு முன்பே ஆபிரிக்க அமெரிக்கர்களின் தலைவர்கள் சிலர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நிற்க முயன்றும் தோல்வியைத் தழுவியிருந்தனர். அவர்கள் எல்லோரும் தாழ்ந்த நிலையில் இருக்கும் ஆபிரிக்க இனத்தவர்களை முன்னேற்றுவதும் தங்கள் குறிக்கோள்களில் ஒன்று என்று தேர்தல் களத்தில் அறிவித்தனர்.

ஒபாமா “வெள்ளை அமெரிக்கா, கறுப்பு அமெரிக்கா என்று இரு பிரிவுகள் இல்லை. இரண்டு இனங்களும் உள்ள ஒற்றை அமெரிக்கா, அகில உலக அளவில் இழந்த செல்வாக்கை நான் மறுபடி நிலைநாட்டுவேன். உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சீர்குலைவைச் சரிசெய்வேன்” என்று கூறி வருகிறார்.

“நாட்டில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவேன்” என்று இவர் கூறி வருவது இளைஞர்கள் இடையில் இவருக்கு மிகுந்த செல்வாக்கைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

20ம் நூற்றாண்டில்,  ஐ.நா. சபை,  சர்வதேச தொழிலாளர் தாபனம் போன்றவை,  பழைய மற்றும் தற்கால அடிமைத்தனத்தை தடுப்பதற்கு பல சட்டங்களை இயற்றியுள்ளன. ஓரிரு நாடுகளை தவிர, எல்லா நாடுகளிலும் அடிமைமுறை வெளிப்படையாக தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அடிமை முறை பூரணமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று குறிப்பிட முடியாது. புராதன காலங்களில் காணப்பட்ட முறைபோலல்லாது நவீன காலத்தில் புதிய கோணத்தில் அடிமை முறை வளர்ந்து கொண்டிருக்கின்றது.

 தற்காலத்தில் அடிமைகள்

தற்காலத்தில் அடிமைத்தனம் பின்வரும் விதமாக இருப்பதாக அடிமை ஒழிப்பு சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அந்த அறிக்கைபடி நவீன கால அடிமை முறையாக அவர்களால் இனங்காட்டப்பட்ட ஒரு சிலதை பின்வருமாறு நோக்கலாம்.

அடகு தொழிலாளர் – இன்று இலட்சக்கணக்கான மக்கள் அடகு முறையில் மறைமுகமாகக் கட்டுண்டுள்ளனர். இது ஒரு நபர் நிலச்சுவாந்தாரிடம் தன்னை அடகு கொடுத்து பெரிய வட்டியில் கடன் வாங்கிää அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் தன்னையும்ää தன் மனைவி மக்களையும் சாசுவதமாக அச்சுவந்தாரிடம் அடகு கொடுத்து,  தலை முறை தலை முறையாக அந்த அடிமைத் தனத்திலிருந்து மீள முடியாமல் வாடுகிறனர். இத்தகைய முறை இந்தியாவில் இன்னும் காணப்படுவதாக கூறப்படுகிறது.

இளவயதில் கட்டாயத் திருமணம் – இது இளம் பெண்களைப் பீடிக்கிறது. பெண்கள் சம்மதமில்லாமலேயே மணம் செய்து வைக்கப்பட்டுää வன்முறைகளுக்கு ஆளாகிறனர்.

கட்டாய சேவை – அரசாங்கம்,  அரசியல் கட்சிகள், விடுதலை இயக்கங்கள்,  தனிமனிதர்கள் பல நபர்களை நீதிக்கு புறம்பான முறைகளில் ஆட்கொண்டு,  கட்டாய வேலைகளை – துன்புறுத்தியோ,  வன்முறை பீதியை ஏற்படுத்தியோ – பெற்றுக் கொள்கின்றன.

அடிமைச் சந்ததி – சில சமுதாய பாகுபாடுகளில் பிறந்தவர்களை ஏனைய சமுதாயம், அடிமைகளாகவோ,  கட்டாய வேலை எடுக்க ஏற்பட்டவர்கள் எனவோ கருதுகிறது.

ஆள் கடத்துதல் – மனிதர்கள்,  பெண்கள், சிறார்கள் இவர்களைத் கடத்தி துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்துவது,  ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்க்கு எடுத்துச் செல்லுதல்.

சிறுவர் தொழிலாளர்கள் – இன்று உலகம் முழுவதும் 126 மில்லியன் சிறுவர்கள் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்நிலைக்குப் பாதகமான சு10ழ்நிலையில்,  குறைந்த பட்ச பாதுகாப்பின்றி வேலை செய்துவருகின்றனர்.

நவீன காலத்தில் வீடுகளில் பணிப்பெண்களாகக் கடமை புரிவோரும் ஒரு வகையில் அடிமைத்துவ வாழ்க்கையையே அனுபவிக்கின்றனர்.

பழையகால வாங்கி/விற்கும் பொருள் அடிமை முறை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் தடை செய்யப் பட்டாலும் கூட,  இன்றும் ஆபிரிக்காவின் சில பகுதிகளில் இத்தகைய அடிமைமுறை நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக சுடான்,  மௌரிடேனியா போன்ற நாடுகளில் இது நடைபெறுகிறது. சர்வதேச அடிமை எதிர்ப்பு ஸ்தாபனம் 1997 ஆண்டறிக்கைப்படி “சுடானிய அரசு நேர்முகமாக அடிமை முறையில் பங்கு எடுக்கிறது என சொல்ல முடியாவிட்டாலும், அவ்வரசு அடிமை முறைக்கு உகந்த சமூக சீரழிவைத் தூண்டிவிட்டு, அதனால் இலாபமடைந்துள்ளது.”எனக் கூறப்பட்டிருந்து.

ஐக்கிய அமெரிக்கா அரசின் 1994 கணக்குப் படி, மௌரிடேனியாவில் 80,000 கருப்பர்கள் “பெர்பெர்” இனத்தவரின் அடிமை சொத்தாக இருக்கின்றனர். பெர்பெர்கள் கருப்பர்களை வேலைகளுக்கும், காம இச்சைகளுக்கும் பயன்படுத்துகிறனர் என்று கூறப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் தனது உரிமையைப்போல மனிதசமூகத்தைச் சேர்ந்த அனைவரினதும் உரிமைகளையும் மதிக்கும் நிலையை எம்முள் வளர்த்துக் கொள்ள அனைவரும் இத்தினத்தில் திடசங்கட்பம் பூணுவோமாக.

உலக மனிதநேய தினம் World Humanitarian Day : புன்னியாமீன்

whd_posters.jpgஉலக மனிதநேய தினம் World Humanitarian Day (WHD). ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

உலகளாவிய ரீதியில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், நோய், போஷாக்கின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பல இலட்சம் மக்களை நினைவுகூரும் வகையிலும், துன்பத்திலிருந்து விடுவிக்கப் படுவோருக்காகப் பணியாற்றுவோர் மற்றும் இப் பணிகளின் போது கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் ஆகியோரையும் நினைகூரும் வகையிலும் இத்தினத்தைஅனுஷ்டிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

2008 டிசம்பர் 11 ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் A/RES/63/139 இலக்கத் தீர்மானப்படி இத்தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கமைய முதலாவது உலக மனித நேய தினம் World Humanitarian Day ஆகஸ்ட் 19 2009 இல் கொண்டாடப்பட்டது.
இத்தினத்தை நாடுகளின் அரசாங்கங்களும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும், அரச சார்பற்ற நிறுவனங்களும், மனித நேயம் கொண்டவர்களும் இணைந்து உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையைப் பொறுத்தவரை மோதல் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மேற்கொண்டுள்ள பணிகளில் எட்டிய வெற்றிகள் மற்றும் சவால்களை வெளிப்படுத்தும் தருணமாக இத்தினம் விளங்குவதாக ஐ.நா. தகவல் நிலையம் 2010 இல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

உலக வரலாற்றில் மனிதகுலம் பல தடைகளைத் தாண்டி முன்னேறியுள்ளது. ஆரம்பத்தில் கடல் கொந்தளிப்பு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கையின் சீற்றங்களிலிருந்து தம்மைக் காத்துக்கொண்டு மனிதன் வளர்ந்தான். அடுத்தபடியாக, காட்டுவாழ்க்கையில் புலி, கரடி, சிங்கம், பாம்பு போன்ற கொடிய மிருகங்களின் தாக்குதல்களைச் சமாளித்து வாழக் கற்றுக் கொண்டான். மனிதன் குடும்பமாக வாழத்தலைப்பட்டதும் சமூக வாழ்வில் புதுவித ஆபத்து மனிதனுக்கு வந்தது. மனிதர்களிலேயே பலர் மிருகங்களாக மாறி, மற்றவர்களை இனத்தின் பெயரால், நிறத்தின் தன்மையால், தேசத்தின் பெயரால், மதத்தின் பெயரால் தாக்கத் தலைப்பட்டனர். இவ்வாறு மனிதர்களால் மனிதர்களுக்குத் தரப்படும் கொடுமைதான் இன்றைய காலம் வரை நீடித்து வருகிறது.

ஆயினும் ஒவ்வொரு காலகட்டத்திலும், அன்போடு, அருளோடு, தன்னலமற்ற பொதுநலத்துடன், மனித நேயத்துடன் மற்ற உயிர்களையும் காத்து நிற்கும் உத்தமர்கள் ஒரு சிலர் இருந்த காரணத்தால்தான் மனித குலம் இன்னமும் தழைத்து நிற்கிறது.

“உண்டால் அம்ம இவ்வுலகம்” என்ற புறநானூற்றுப் பாடலில் கூறியபடி, இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும், தமக்கென வாழாப் பிறர்க்குரிய சான்றோர்களில் சிலர் மனித நேயத்துடன் உலகில் வாழ்கின்ற காரணத்தால்தான், உலகம் என்பது இருக்கிறது. இன – மத – தேச வேறுபாடுகளைக் கடந்து, மனிதனை மனிதனாக மதிக்கும் மனித நேயம் மனித குலத்துக்கு நம்பிக்கையைத் தருகிறது.

“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய், தம்நோய்போல் போற்றாக் கடை” என்பது வள்ளுவம். கல்வியறிவு, செல்வச் செழிப்பு, பட்டம், பதவி ஆகியவை பெருமளவில் ஒருவனுக்குக் கிடைத்திருந்தாலும், அவற்றுடன் மனித நேயம் என்பது அவனிடம் இல்லை என்றால், சேர்ந்துள்ள மற்ற வசதிகளால் அவனுக்கோ அவன் சார்ந்த சமுதாயத்துக்கோ எந்தப் பயனும் இல்லாமற் போய்விடும்!
மனிதரின் தன்மையின் உயர் போக்கினை அடிப்படையாகக் கொண்ட உலக நோக்கு மனிதநேயம் ஆகும். சிறப்பாக மீவியற்கை அம்சங்களில் கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்காமல் மனிதரின் பகுத்தறிவை, அறத்தை, ஆற்றலை மனிதநேயம் முன்னிறுத்துகின்றது. அனைத்து மனிதர்களையும் அது மதிப்போடு நோக்குகின்றது. தமிழில் மனிதநேயத்தை மனிதபிமானம், மனிதத்துவம் என்றும் குறிப்பிடுவர்.

மனிதநேயம் என்பது மனித வாழ்க்கையில் மிக உத்தமமான ஓர் உணர்வாகும். ஆனால் இன்று மனிதாபிமானம் மனிதனிடத்தே செத்துக் கொண்டு வருவதாக பொதுவாகக் கூறப்படுகின்றது. உலகத்தில் வாழக்கூடிய அனைவரும் ஒரே நிலையில் வாழ்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியும். வரலாற்றுக் காலம் முதல் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஒரு பொதுவான விடயமே. இன்றைய ‘உலகமயமாக்கல் யுகம்’ இந்த ஏற்றத்தாழ்வுகள் பெரிதும் விரிவடைந்துவிட்ட நிலையில் மனிதன் பணத்தையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் காரணத்தினால் மனிதநேயம் என்பது வெகுவாக குறைந்த வண்ணமே உள்ளது.

இன்று உலகளாவிய ரீதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் நாடுகளின் எண்ணிக்கை அதிகம். பொதுவாக இந்நாடுகளில் போசாக்கின்மை, இதன் காரணமாக ஏற்படும் பாதிப்பான விளைவுகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வண்ணமே உள்ளது. ஒரு நேர உணவுக்குக் கூட சிரமப்படும் மக்கள் வாழும் நிலையில் அபிவிருத்தியடைந்த நாடுகள் மனிதாபிமானத்தைப் பற்றியும் மனிதநேயத்தைப் பற்றியும் கதைத்துக் கொண்டு தத்தமது நாடுகளின் அபிவிருத்தியையும், பாதுகாப்பினையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கோடான கோடி டொலர்களை மூலதனமாக்குவதை நோக்குமிடத்து மனிதநேயம் என்பதற்கு புதிய வரைவிலக்கணத்தை தேடவேண்டியுள்ளது.

உலகளாவிய ரீதியில் நோக்குமிடத்து போசாக்கின்மை, இயற்கை அனர்த்தங்கள், யுத்த அனர்த்தங்கள், பயங்கர நோய்கள், வறுமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலையை ஆழமாக சிந்திக்க வேண்டியதாக உள்ளது. மனிதன் என்று வரும்போது அனைவரும் எலும்புகளாலும் தசைகளாலும் படைக்கப்பட்டவர்கள். அனைத்து மனிதர்களின் உணர்வுகளும் ஒன்றே. ஒரு மனிதன் இயற்கையாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ பாதிக்கப்படும்போது அந்த மனிதனின் உள நிலைகளை சிந்திக்க வேண்டியதும், அம்மனிதர்களுக்கு உதவ வேண்டியதும் பாதிப்புக்குட்படாத மனிதர்களின் மனிதாபிமானத்தின் உயர் பண்பாகக் காணப்பட்டாலும்கூட, இதனை எத்தனை பேர் நிறைவேற்றுகின்றார்கள் என்பது கேள்விக்குறியே!
முதலாளித்துவ சமூக அமைப்புக்கள் தலைவிரித்து தாண்டவமாடிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒருவனுக்கு செய்யும் உதவிகள் கூட பேருக்காகவும், புகழுக்காகவும், விளம்பரத்துக்காகவும் அமைந்திருப்பது வேதனைக்குரிய ஒரு விடயமே. நவீன தொழில்நுட்ப விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எல்லாவற்றையும் சிந்திக்கும்போது மனிதாபிமானத்தின் அடிப்படையை உணரத் தவறுகிறோம். மனிதாபிமான சிந்தனைகள் உயரிய முறையில் முன்னெடுக்கப்படுமிடத்து இன்றைய உலகில் எத்தனையோ பிரச்சினைகளுக்கு எப்போதோ முடிவெடுத்திருக்கலாம்.

ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மனிதாபிமான தினத்தை பிரகடனம் செய்கையில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், நோய், போஷாக்கின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் எடுக்கும் தினமாகவும் இத்தகையோருக்கு உதவிகள் வழங்குவோரை கௌரவிக்கும் தினமாகவும் கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தது. இத்தகைய நிலைப்பாடுகளுக்கு ஒரு தினம் மாத்திரம் போதாது. பாதிக்கப்பட்டோரின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டியது மனிதாபிமானமிக்க ஒவ்வொருவரினதும் கடமையாகும். இத்தகைய உணர்வூட்டல்கள் சமய ரீதியாக, கல்வியியல் ரீதியாக ஊட்டப்பட வேண்டியது அத்தியாவசியமான ஒன்றே.

மனித உணர்வுகளை ஓரிரு தினங்களுக்குள் மாற்றிவிட முடியாது. ஒரு மனிதனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நிலை இயல்பாக உருவாக்கம் பெறுமிடத்து இதனால் ஏற்படக்கூடிய பலாபலன் நிலையானது. நிச்சயமாக புகழை எதிர்நோக்காமல் இலாப நோக்கங்களைக் கருத்திற் கொள்ளாமல் இவற்றையே வியாபாரமாக்காமல் உண்மையான நோக்குடன் மனிதநேயமிக்கவர்களை கௌரவிக்க வேண்டியது கடமையே. அதேநேரம், உண்மையான நோக்கமிக்கவர்கள் இத்தகைய கௌரவங்களை எதிர்பார்க்கப் போவதுமில்லை.

இலங்கையில் சர்வதேச மனிதநேய தினம்

இலங்கையில் சர்வதேச மனிதநேய தினம் நாடளாவிய ரீதியில் ஆகஸ்ட் 19ம் திகதி அனுஸ்டிக்கப்பட்டது. இதன் பிரதான நிகழ்வு கொழும்பிலுள்ள ஐ.நா.அலுவலகத்தில் நடைபெற்றபோது நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரைநிகழ்த்திய ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ‘நீல் பூனே’ பின்வருமாறு தெரிவித்தார்.

‘……உலக மனிதநேய தினத்தை நாம் ஏன் அனுஷ்டிக்கின்றோம் என்பதற்கு முதலாவது காரணமாக 7 வருடங்களுக்கு முன்னர் ஈராக் பாக்தாத்தில் ஐ.நா.தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 21 மனிதாபிமான பணியாளர்கள் பலியாகியிருந்த சம்பவத்தைக் கூறவேண்டும்….

….. இச்சம்பவத்தில் உலக நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஈராக்கியர்களும் பலியாகி இருந்தனர். அத்துடன் ஐ.நா.செயலாளர் நாயகத்தின் உதவிச் செயலர்களில் ஒருவரும் பலியானார். அத்துடன் பாக்தாத் சம்பவம் மட்டுமன்றி மேலும் பல காரணங்களும் உலக மனிதநேய தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கு ஏதுவாக அமைந்தது….

…. மோதல் வலயங்களிலிருந்து வெளியேறும் மக்களைப் பாதுகாப்பு வழங்கும் இலங்கை அரசின் முயற்சிக்கு நாமும் ஆதரவினை வழங்கியிருந்தோம். இம்மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் அரசுடன் எமக்குப் பரந்தளவிலான பங்கு இருந்தது. அக்காலப்பகுதியில் இலங்கையர்கள் (அரச தரப்பு, தனியார் தரப்பு), அரச சார்பற்ற நிறுவனங்கள், பாதுகாப்புப் படையினர், ஐ.நா.உதவி அமைப்புகளுடன் பணியாற்றும் உலகளாவிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், மக்களின் உயிரைப் பாதுகாக்க சிக்கலானதும் கடினமானதும் உடனடியான பணிகளை மேற்கொண்டிருந்தனர்….

….அத்துடன், மக்கள் தமது இயல்பு வாழ்வைத் தொடர்வதற்குத் தேவையான பலத்தினைப் பெற்றுக் கொள்ளவும் இவர்கள் ஆதரவாகச் செயற்பட்டுள்ளனர். இவற்றிற்கான நிதி அரசினாலும், உள்ளூர் மக்களாலும் வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு மக்களாலும் வழங்கப்பட்டுள்ளது….

….மக்கள் விரக்தி அடைந்திருந்த காலத்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பல சவால்களும் பல சிக்கலான சூழ்நிலைகளும் இருந்தன. இறுதியில் கடின உழைப்பு, சிறந்த ஒத்துழைப்பு, மனிதாபிமானக் கொள்கைகளைப் பிரயோகித்தல், பாதிக்கப்பட்ட மக்களின் முயற்சி ஆகியவற்றின் ஊடாக சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றன. தமது வாழ்வை மீள ஆரம்பிக்கும் தகுதியை மக்கள் பெற்றுக் கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்களும் நாட்டிலுள்ள ஏனையவர்களும் சமாதானத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற வாய்ப்பை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளனர்….

…..அனைத்து இலங்கையர்களுக்கும் தேவையான பாதுகாப்பான சுதந்திரமான வாழ்வுக்குரிய நிலையான அத்திவாரத்தை இடவும் மக்கள் மீட்சிபெற்று வாழ்வைக் கட்டியெழுப்ப ஐ.நா.தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்….

….இவ்வருட முதல் 6 மாதத்தில் 5 இலட்சம் மக்களுக்குத் தேவையான உணவு, வடக்கில் 130000 ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான உணவு, மீளக்குடியேறிய 40 ஆயிரம் குடும்பங்களுக்குத் தலா 25 ஆயிரம் நிதி உதவி, 92,800 குடும்பங்களுக்கு உணவற்ற பொதிகள் ஐ.நா.வால் வழங்கப்பட்டது. அத்துடன் 2009 இலும், 2010 இலும் 3 இலட்சம் இடம்பெயர்ந்த மக்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரச் சேவை வழங்கப்பட்டு நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர்…

…இவ்வருடம் ஜனவரி முதல் மே வரை அரசும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து 123 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளது….

….மக்கள் மீளக்குடியேறிய பகுதிகளில் 2915 கிணறுகள் சுத்திகரிக்கப்பட்டதுடன், 515 கிணறுகள் தரமுயர்த்தப்பட்டன. 275 வேலை நாட்களுக்கான பணப்பெறுமதியுடைய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 19,000 குடும்பங்களுக்கு விவசாய, மீன்பிடி, பண்ணை வளர்ப்புக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது….

….75 ஆயிரம் ஏக்கர் வயலும் 17 ஆயிரம் ஏக்கர் நிலமும் மீண்டும் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாக சீரமைக்கப்பட்டுள்ளதுடன், மெனிக்பாம் உள்ளிட்ட முகாம்களில் தொற்றுநோய்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களில் 5 வயதுக்கு குறைவான சிறுவர்களின் போஷாக்கின்மை வீதம் 32 ஆக இருந்தது. தற்பொழுது 2 வீதமாக குறைக்கப்பட்டு சிறுவர்கள் போஷாக்குடன் உள்ளனர்…

….புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் 57,673 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அத்துடன் 3,214 வீடுகள் இடம்பெயர்ந்த மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாடுகள் ஐ.நா.உதவி அமைப்புகளினால் மேற்கொள்ளப்பட்டவை ஆகும். இருந்தாலும் இன்னும் பலதேவைகள் இடம்பெயர்ந்த மக்களுக்காக நிறைவேற்றப்படவேண்டியுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தற்பொழுதும் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். இம்மக்களுக்கு அதாவது அண்மையில் மீளக்குடியமர்ந்த மக்களுக்குரிய அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும். மெனிக்பாம் மற்றும் ஏனைய முகாம்களில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் தங்கியுள்ளனர்…

…அத்துடன் இம்மக்கள் அபிவிருத்தி என்பதையே எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அத்துடன் ஸ்திரமான சமாதானத்தையும் ஸ்திரமான அபிவிருத்தியினையும் ஏற்படுத்த வேண்டிய தருணம் இது..”வெனத் தெரிவித்தார்.

நிகழ்வின் ஓர் அங்கமாக மன்னாரிலும் இத்தினம் மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து மன்னார் சிறுவர் பூங்கா வளாகத்தினுள் மேற்படி நிகழ்வினை நடத்தின. இதன் போது சுமார் 30 ற்கும் மேற்பட்ட அரச சார்பற்ற அமைப்புகள் கலந்துகொண்டதோடு நூற்றுக்கணக்கான மனிதாபிமான பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது இயற்கை அனர்த்தம் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களையும் உயிர் இழந்தவர்களையும் நினைவு கூர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பினால் மன்னார், அடம்பன், மடு ஆகிய வைத்தியசாலைகளுக்கு பெறுமதி வாய்ந்த குடி நீரை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அதேநேரம் ஏ.சீ.எப். தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17 ஊழியர் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இதுவரையில் தண்டனை விதிக்கப்படவில்லை என பிரான்ஸ் அதிருப்தியை வெளியிட்டிருந்தது. 2006ம் ஆண்டு மூதூர் பிரதேசத்தில் தன்னார்வ தொண்டர்கள் 17பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

படுகொலையாளிகள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் ‘பெர்னாட் குச்னர்’ தெரிவித்துள்ளார். இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் ஒருவரை மாறி ஒருவர் குற்றம் சுமத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

மனிதாபிமான தொண்டர்களின் பாதுகாப்பு மிகவும் முதன்மையானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனிதாபிமான தொண்டர்களின் பாதுகாப்பு குறித்து எதிர்வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளதாகவும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் மனிதநேயம் பற்றிய ஓர் தகவல்

இந்தியாவில் சிதம்பரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க வாழ் அறிவியல் மேதை வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009 ஆண்டு இரசாயண வியலுக்கான நோபல் பரிசு பெறுவோரில் ஒருவராக அறிவிக்கப்பட்டவுடன் உலகச் செய்தி ஊடகங்களில் அவரைப் பற்றிய செய்திகள் உலாவரத் தொடங்கின.அவர் பற்றி ‘தி ஹிந்து’ பத்திரிகை அக்டோபர் 08.2009இல் வெளியிட்ட செய்தியொன்றை இவ்விடத்தில் குறிப்பது பயனுள்ளதாக அமையும் எனக் கருதுகின்றேன்.
ஓர் விஞ்ஞான மேதையாக அகில அறிமுகம் பெற்ற வெங்கட்ராமன் ராம கிருஷ்ணனின் மனிதநேய மனத்தை அவரது சகாவும் ஓய்வுபெற்ற அணுக்கரு இயற்பியல் துறை பேராசிரியருமான ஜே.எஸ்.பண்டுக்வாலா வெளிப்படுத்தியுள்ளார். வெங்கி என்று செல்லமாக அழைக்கப்படும் டாக்டர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், சிறு வயது முதலே குஜராத் மாநிலம் வடோதராவில் வளர்ந்தவர். இவரது தந்தையார் வெங்கட்ராமன் மஹாராஜா சாயஜிரங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், தாயார் ராஜலஷ்மியும் குழந்தை உணவூட்டம் மற்றும் உயிர் வேதியல் துறையில் பேராசிரியர்.

பெற்றோர் இருவரும் பேராசிரியர்கள். எனவே இவரையும், இவரது சகோதரியையும் வளர்த்த வேலைக்கார அம்மையார் மீது இவருக்கு பாசம் அதிகம். அவருடைய குடும்பத்தை இவர் இன்றும் பரிவோடு கவனித்து வருகிறார்.

2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சங்பரிவார மதவெறியர்கள் மூட்டிய கலவர நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. வடோதராவில் இருந்த பெஸ்ட் பேக்கரியில் 12 முஸ்லிம்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். பேராசிரியர் பண்டுக்வாலாவின் வீடும் சூறையாடப்பட்டது. இதை அறிந்து மிகவும் வருந்திய டாக்டர் ராமகிருஷ்ணன், தனது நண்பர் பண்டுக்வாலா மூலம், வறுமையில் வாடும் முஸ்லிம் சிறுவர்கள் சிறுமிகளின் கல்வி தடைபடாமல் தொடர நிதியுதவி செய்து வருகிறார். பணம் கொடுத்தோம், கடமை தீர்ந்தது என்று இல்லாமல், அடிக்கடி ஏழை முஸ்லிம் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை விசாரித்து அறிவாராம். குறிப்பாக கணிதம், இயற்பியல், இரசாயணவியல் பாடங்களில் அவர்களுக்கு ஆர்வ மூட்டுமாறு பேராசிரியர் பண்டுக்வாலாவிடம் கேட்டுக் கொள்வாராம்.

சிதம்பரத்தில், பிராமண குடும்பத்தில் பிறந்து, குஜராத்திற்கு குடிபெயர்ந்து பின்னர் அமெரிக்காவில் கல்வி பயின்று, அந்நாட்டின் நிரந்தரக் குடியுரிமையையும் பெற்றுள்ள டாக்டர் ராமகிருஷ்ணன், குஜராத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அக்கறை செலுத்துவதும், முஸ்லிம் சிறார்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவுவதும் பாராட்டிற்குரியது.

“மனிதன் அறிவாளியாவது எளிது, அறிவாளி மனிதநேயத்தோடு திகழ்வது தான் அரிதினும் அரிது.”

நோபல் பரிசு பெற்றுள்ள டாக்டர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அறிவாலும், மனிதநேயத்தாலும் உயர்ந்து நிற்பதுமூன்றாம் உலக நாடுகளில் வாழும் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகம் இலங்கையில்… : பி எம் புன்னியாமீன்

hambantota1.jpgஇலங்கையில், தென் மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை “வெறும் வறுமையும் வரட்சியும் கொண்ட பிரதேசம்” என்ற கருத்தியலை மாற்றியமைக்கத்தக்க வகையில், நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகம் என்ற பெருமைக்குரிய இலங்கை ஹம்பாந்தோட்டை ‘மாகம்புர’ துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் முக்கிய நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று ஆகஸ்ட் 15. 2010 இல் இடம்பெற்றது. இத்துறைமுகம் ‘தெற்காசியாவின் ஆழமான துறைமுகம்’ எனவும் கருதப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை ‘கரசன்லேவாய’களப்பின் ஒரு பகுதியைச் சூழ அணைகள் அமைத்து அதனை ஆழமாக்கி 21 மீற்றர் உயரத்தினை கொண்ட இரண்டு இறங்குதுறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதன் முதலாவது கட்டத்தின் கீழ் கிழக்கிலிருந்து மேற்காக 14 கிலோ மீற்றர்களைக் கொண்ட இரு அலை தாங்கிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இப்பகுதி கப்பல்கள் மூலம் ஆழமாக்கப்பட்டு அங்கிருந்து புதிய துறைமுகத்துக்குள் தண்ணீர் நிரப்பப்பகிடுகின்றன.

h-tota01.jpgஇத்துறைமுக முதல்கட்ட நிர்மாணப்பணிகள் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி சீனக் கப்பல் பொருளியல் கூட்டுத்தாபனத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டது. 39 மாதத்தில் நிறைவு செய்யப்படவிருந்த இத்திட்டம் இலங்கை துறைமுக அதிகார சபையின் உள்ளுர் பொருளியலாளர்களின் ஒத்துழைப்புடன் 30 மாதங்களில் பூர்த்தி செய்யப்பட்டது. எதிர்வரும் நவம்பர் மாதம் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை முதல் கப்பல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நிர்மாணப்பணிகளுக்காக சீன எக்ஸிம் வங்கி 85 சதவீத நிதியை இலங்கைக்கு வழங்கியது. மிகுதி 15 சதவீத நிதியை இலங்கை துறைமுக அதிகார சபை வழங்கியிருந்தது. மொத்தம் 360 மில்லியன் அமெரிக்க டொலர் முதலாவது கட்டப் பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. இரண்டாவது கட்ட நிர்மாணப்பணிகளுக்கு உதவ சீன அரசாங்கம் முன்வந்துள்ளதோடு நவம்பர் மாதம் முதல்கட்டம் நிறைவுபெறும் போது இரண்டாம்கட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சர்வதேச துறைமுக கப்பல் பாதைக்கு ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. துபாய் மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களைப் போல இத்துறை முகத்தை வரிகளற்ற ஒரு தொழில் நுட்ப துறைமுகமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் அரசிடம் உள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் டென்மார்க் ரெம்போல் கம்பனியின் வளப்பங்களிப்புடன் 2005 ஆம் ஆண்டில் அடிப்படை திட்டம் தயாரிக்கப்பட்டது. திட்டத்தின் நில அளவு 2000 ஹெக்டயார்

ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணிப்பு (முதற்கட்டம்)

*  துறைமுக நிர்மாணிப்பு பணிகள் ஆரம்பம் 2008 ஜனவரி 15  முதற்கட்டவேலைகள் பூர்த்தி செய்யப்பட்ட தினம் : 2010  ஆகஸ்ட் 15

*.  மேற்கு நீர்தடுப்புச் சுவர் 988 மீட்டர்

*  கிழக்கு நீர்தடுப்புச் சுவர் 312 மீட்டர்

*  கப்பல் முனையம் 600 மீட்டர்

*  சேவைகள் நடைபெறும் முனையம் 105 மீட்டர்

*  எண்ணெய் முனையம் 310 மீட்டர்

*.  கப்பல் திசை திருப்பும் தடாகம் 600 மீட்டர்

*  தடாகத்தின் ஆழம் 17 மீட்டர்

*  துறைமுக உட்புகு கால்வாயின் அகலம் 210 மீட்டர்

*.  துறைமுக உட்புகு கால்வாயின் ஆழம் 17 மீட்டர்

*  முதல் கட்டத்தில் ஆழமாக்கப்பட்ட நில அளவு 43 ஹெக்டயார்

*   கொள்ளளவு 100,000 DWT அளவினையுடைய கப்பல்களுக்கு  வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

*  எண்ணெய் முனையம், ஆரம்பம் 07.10.2009, ஆகு செலவு 76  மில்லியன்,   அமெரிக்க டொலர்கள், நிர்மாணிப்புக் கம்பனி சீன ஹவான் கிவ் (HUWAN QUI)  இஞ்சினியரிங்.

*   எண்ணெய்த் தாங்கிகளைக் கொண்ட தொகுதியொன்று  நிர்மாணிக்கப்படுகிறது. அதன் மொத்தக் கொள்ளளவு 80000 m3.

*  கப்பல் எரிபொருள் தாங்கிகள் 08

*  விமான எரிபொருள் தாங்கிகள் 03

*   L. P. வாயு தாங்கிகள் 03 (திரவ பெற்றோலிய வாயு)

*  நிர்வாகக் கட்டடம், ஆரம்பம் 2009.10.07, நிர்மாணிப்பு சைனா ஹாபர் இஞ்சினியரிங் மற்றும் ஸைனோ ஹயிட்ரோ கோபரேஸன். 75000 சதுர அடியைக் கொண்ட 15 மாடிகளையுடைய 200 அடி உயரமான கட்டடமாகும்.

ஹம்பாந்தோட்டை  துறைமுகத்தால் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படும் சேவைகள்.

  *  பொதுவான கப்பல் சரக்குகள் எனும் சம்பிரதாய கப்பல்  சரக்குகள் (சிமெந்து, உரம், மா,இரும்பு, பலகை போன்றன)
 
  *  Raw  வசதிகள் – வாகன போக்குவரத்து வசதிகள், கப்பலின்   இயக்கச் செயற்பாடுகள் (இறக்குமதி / மீள்ஏற்றுமதி)
 
 *  கப்பல் நிறுத்துமிட வசதிகளை அளித்தல்.
  
 *  கப்பல்களுக்கான மரக்கறி உட்பட உணவுப் பொருட்களை (Ship Stores)  வழங்குதல்,  மருத்துவ வசதியினை வழங்குதல்.
 
 *  நீர் வழங்கல்
 
 *  கப்பல் பணியாளர்களை வழங்குதல், பணியாளர் பரிமாற்று  மத்திய நிலையமாக செயற்படல்.
 
 *  கப்பல் கட்டுதல் மற்றும் திருத்துதல்  (Dry Doc)  
 
 *  நடவடிக்கைகளுக்கு உலர் தடாக வசதிகளினை வழங்குதல்.
 
 *  துறைமுக வளாகத்தினுள் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கான வசதிகளை அளித்தல்.
  
 *  கொள்கலன் கையாளும் முனையம் உருவாக்குதல்.  நிலக்கரி, மின் உற்பத்தி பயன்பாடு தொடர்பில் வசதி அளித்தல்.

எதிர்பார்க்கப்படும் இலக்குகள்.

ஹம்பாந்தோட்டை துறைமுகமூடாக உள்நாடு, சர்வதேச ரீதியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகள் பின்வருமாறு.

சர்வதேச இலக்குகள்.

 * இலங்கையை உலகில் முன்னணி கப்பல் மத்திய  நிலையமாக மாற்றுதல்.
 * கப்பல் துறை பற்றி வலய மட்டத்தில் மேல் எழும் சவால்களுக்கு துணிச்சலுடன் முகங்கொடுத்தல்.
 * இலங்கை கடல் வலயத்திலிருந்து கிடைக்கப்பெறும் பாரிய அந்நிய நாட்டுச் செலாவணியை இலங்கை பொருளாதாரத்தின் மீது கவரவைத்தல்.
  * வெளிநாட்டு முதலீடுகளை வரவழைத்தல்.

தேசிய இலக்குகள்.

  * வெளிநாட்டு செலாவணியை நாட்டினுள் கொண்டு வருதல்.
  * தொழிலில்லா பிரச்சினைகளுக்கு தீர்வு காணல்.
  * 25000 – 30000 அளவிலான சுற்றாக தொழில் வாய்ப்புகள்  உருவாதலினால் பிரதேசத்தின் நிதிப் புழக்கம் அதிகரித்தல்.
  * பயிற்சி தொழில் முயற்சியாளர்களை உருவாக்கிக்  கொள்ளல்.
  * பிரதேச அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை  மேம்படுத்துதல்.
  * பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல்.
  * அரச ஆதாயத்தினை கூட்டுதல், புது நிதி கிடைக்கும்  வழிமுறைகள்  உருவாதல்

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒன்றிணைந்த அபிவிருத்தித் திட்டம்.

ஹம்பந்தோட்டை கரகங்லேவாய சுற்றுப் புறத்தில் 450 குடும்பங்கள் வசிக்கின்றன. 2000 ஹெக்டயார் காணி துறைமுகத் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு நட்டஈட்டுக் கொடுப்பனவு மற்றும் மாற்று நிலங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. அவற்றிற்கு சகல உட்கட்டமைப்பு வசதிகளும் துறைமுக அதிகார சபையினால் செய்து கொடுக்கப்பட்டது. ஹம்பாந்தோட்டை கரகங்லேவாய பழைய பாதைக்கு பதிலாக புதுப்பாதையொன்று நிர்மாணிக்கப்பட்டதுடன் துறைமுக அடிப்படை அமைவிடம் தொடர்பான சகல இடர்பாடுகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளன. பிரதேச மக்களுக்கு திட்டம் பற்றியும் சகல பிரிவுகள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. விசேடமாக பிரதேச பாடசாலைகள் ஊடாக நடத்தப்பட்ட துறைமுகம் பற்றிய கருத்தரங்கு அபிவிருத்தியின் நேர் சிந்தனையின் பால் ஹம்பாந்தோட்டை மக்களை கவரச் செய்துள்ளது.

உலக வரைபடத்தினை அவதானிக்கும் போது இலங்கையின் அமைவிடம் ஒரு முக்கிய கேந்திர இடத்தில் அமைந்துள்ளது. கடுகு சிறிதாயினும் காரம் பெரிது என்பது போல எமது நாடு சிறியதாயினும் சகல வளங்களும் மிக்க ஒரு நாடாக விளங்குகிறது.

உலக கடற் போக்குவரத்துத் துறையினை விரிவாக ஆராயும் போது ஏறக்குறைய 34,000 வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கை நாட்டை சுற்றிச் செல்வதை நாம் காண்கின்றோம். எமது கண்தூரத்திற்கு அருகாமையில் எமது நாட்டை தவிர்ந்து செல்லும் இக்கப்பல்களில் ஏறக்குறைய 10,000 கப்பல்கள் மட்டுமே கொழும்புத் துறைமுகத்தை வந்தடைகின்றன.

ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் திறக்கப்பட்டதும் பெரும்பாலான கப்பல்கள் இத்துறைமுகத்தை அண்மித்தே தமது பயணத்தை மேற்கொள்ளும். அப்போது இக்கப்பல்கள் இத்துறைமுகத்தை வந்து அடைவது இலகுவானதும் தவிர்க்க முடியாததுமாக இருக்கும் என்பதை நாம் கப்பல் போக்குவரத்து வரைபடத்தை அவதானித்தால் புரியும்.

தகவல்: இலங்கை துறைமுக அதிகார சபை

h-tota02.jpg

h-tota03.jpg

2010 : சர்வதேச இளைஞர் ஆண்டு International Year of Youth in 2010 – உலகில் 120 கோடி இளைய தலைமுறையினருக்காக இன்று ஆரம்பம் – புன்னியாமீன்

f-1-1.jpg ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச இளைஞர் ஆண்டு  இன்று  ஆகஸ்ட் 12. 2010 ஆரம்பமாகிறது.

இந்த இளைஞர் ஆண்டின் தொனிப்பொருள் ‘சம்பாஷணையும் பரஸ்பர புரிந்துணர்வும்’ என்பதாகும். இளைஞர் ஆண்டு; ஆகஸ்ட் 11. 2011ம் திகதி நிறைவு பெறும்.

2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச இளைஞர் வருடத்தை பிரகடனம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை நிறைவேற்றியது. இதற்கான உத்தியோகபூர்வமான அறிவித்தலை டிசம்பர் 18.2009இல் விடுத்தது.

சர்வதேச ஆண்டுகள் பொதுவாக ஜனவரி மாதத்தில் தான் ஆரம்பமாகும். ஆனால், இளைஞர் தினம் சர்வதேச இளைஞர் தினமான ஆகஸ்ட் 12ஆம் திகதி ஆரம்பமாவது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச இளைஞர் ஆண்டை குறிக்கும் வகையில் பிரதேசிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உலகளாவிய ரீதியில் அரசுகளையும் சிவில் சமூகங்களையும்,  தனிநபர்களையும் ஐக்கிய நாடுகள் சபை கோரி நின்றது.

சர்வதேச இளைஞர் ஆண்டானது பல சந்ததிகள், கலாசாரங்கள், மதங்கள், நாகரிகங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் சமாதான கோட்பாடுகளை ஊக்குவித்து மனித உரிமைகளுக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மதிப்பளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தீவிர வறுமை,  பட்டினி போன்றவை முதற்கொண்டு தாய்- சேய் மரணம்,கல்வி, சுகாதார பராமரிப்பை பெறுவதற்குரிய வசதியீனங்கள் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு 2015ம் ஆண்டளவில் தீர்வுகாண முனையும் ஐ.நா. மில்லேனிய அபிவிருத்தி இலக்குகளை அடைதல் உள்ளடங்கலாக முன்னேற்றத்தை போஷிப்பதற்கு தம்மை அர்ப்பணித்துக் கொள்ளுமாறு இளைஞர் ஆண்டு இளைய தலைமுறையை ஊக்குவிக்கிறது.

15 முதல் 24 வரையிலான வயதெல்லைக்கு உட்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை இளைய தலைமுறையாக வரையறை செய்கிறது. இந்த அடிப்படையில் சமகாலத்தில் உலக சனத்தொகையின் 18 சதவீதமானவர்கள் அல்லது 120 கோடி மக்கள் இளைய தலைமுறையினர்.

இவர்களில் வளர்முக நாடுகளைச் சேர்ந்த 87 சதவீதமானவர்கள் வளங்கள், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, பயிற்சி, தொழில் வாய்ப்பு,  பொருளாதார வாய்ப்புக்கள் போன்றவற்றைப் பெறுவதற்குரிய வசதியீனங்களால் சவால்களை எதிர்கொள்கிறார்கள்.

சகல நாடுகளையும் சேர்ந்த இளைஞர், யுவதிகள் அபிவிருத்தி,ஆக்கபூர்வமான சமூக மாற்றம், தொழில்நுட்ப ரீதியான புதுமுயற்சிகள் போன்றவற்றிற்குரிய பாரிய மனித வளங்களாகத் திகழ்கிறார்கள் என்பதை ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகள் அங்கீகரிக்கின்றன. இவர்களின் கொள்கைகள், பலம், தொலைநோக்கு போன்றவை தொடர்ச்சியான சமூக அபிவிருத்திக்கு அத்தியாவசியமானவை.

இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பயனாளிகளாக மாத்திரம் இல்லாமல் மாற்றத்திற்குரிய வினைத்திறன் மிக்க முகவர்களாக இருக்கிறார்கள். அர்ப்பணிப்பு, ஆர்வம், ஆக்கத்திறன் ஆகிய பண்புகளைக்கொண்ட இளைஞர், யுவதிகள் சமூகத்தின் சவால் மிக்க விவகாரங்களை எதிர்கொண்டு அபிவிருத்தியில் பங்களிப்பு நல்குகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரப் பிரகாரம் சர்வதேச இளைஞர் தினம் International Youth Day (IYD)  ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி கொண்டாடப்படுகின்றது. இளைஞர்கள் ஒரு நாட்டின் நிர்ணய சந்ததிகள். இளைஞர்களை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தலாம். அதேநேரம், அழிவுபூர்வமாகவும் பயன்படுத்தலாம். பொதுவாக ஒரு நாட்டின் சொத்துக்களாகக் கருதப்படும் இளைஞர்களை நெறிப்படுத்தி அவர்களை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி சௌபாக்கியமான எதிர்காலமொன்றுக்கு வழிகாட்டுவதும் அவர்களது உணர்வுகளை சிறந்த முறையில் நெறிப்படுத்துவதும், நம்பிக்கை உணர்வினையும்,  வெற்றி மனப்பாங்கினையும் ஏற்படுத்துவதுடன், இளைஞர்களின் செயற்பாடுகளை கௌரவித்து மதிப்பளிப்பதும் இளைஞர் தினத்தின் முக்கிய நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது.

1998ம் ஆண்டு ஆகஸ்ட் 08ம் தேதி முதல் 12ம் தேதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் குழு சர்வதேச ரீதியில் இளைஞர்களின் பிரச்சினைகளையும், இளைஞர்களின் செயல்பாடுகளையும் கவனத்திற் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என சிபாரிசு செய்தது. இதன்படி 1999 டிசம்பர் 17ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 54/120/ ( resolution 54/120)  இலக்க பிரேரணைப்படி சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12ம் தேதி கொண்டாடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 2000ம் ஆண்டு முதல் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பிரதானமாக கவனத்தில் ஈர்க்கும் முகமாக உலகளாவிய ரீதியில் அரசுகள், அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் செயல்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறாக ஆகஸ்ட் 12ம் தேதி சர்வதேச ரீதியில் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டாலும்கூட, சர்வதேச தினம் என்பதை விட ஒவ்வொரு நாடுகளும் தேசிய ரீதியில் இத்தினத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவதை அவதானிக்கலாம். உதாரணமாக இந்தியாவில் விவேகானந்த அடிகளாரின் பிறந்த தினத்தை மையமாகக் கொண்டு 1985ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரி 12ம் தேதி தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகின்றது. எவ்வாறாயினும் சர்வதேச ரீதியிலும் சரி,  தேசிய ரீதியிலும் சரி, பிரதேச ரீதியிலும் சரி இவ்வாறு கொண்டாடப்படும் விழாக்கள் ஒரே அடிப்படையினைக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.

நமது வாழ்க்கையை உடலியல் அடிப்படையில் குழந்தைப் பருவம், இளமை, முதுமை என மூன்று பிரதானப் பிரிவுகளாக வகுக்கலாம். குழந்தைப் பருவத்தில் உடலாலும் மனதாலும் நமது தேவைகளை நிறைவு செய்ய மற்றவர்களைச் சார்ந்துள்ளோம். இந்தப் பருவம் ஒவ்வொருவரின் எதிர்கால வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. நல்ல பழக்கங்கள், துணிச்சல் தன்னம்பிக்கை ஆகியன ஆழ்மனதுக்குள் செலுத்தப்பட வேண்டிய பருவம். சொந்த அனுபவங்கள் இல்லாத பருவம். பாகுபாடு காணத் தெரியாத உழைக்க முடியாத பருவம்.

விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லாப் பண்பாடுகளிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுவந்துள்ளது. அண்மைக் காலங்களில் பருவமடைதல் காலம் விடலைப் பருவத்துக்கு முன்னதாகவே தொடங்கி விடலைப் பருவத்துக்கு அப்பாலும் போவதைக் காணக்கூடியதாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள்ளது.

விடலைப் பருவத்துக்கு பின்னர் வரும் பருவம் இளமை ஆகும். பொதுவாக 18 – 24 வயது வரை இளமைப் பருவம் அமைகின்றது. சில அறிஞர்களின் கருத்துப் பிரகாரம்  29 வயதுவரை இளமைப் பருவம் வரையறுக்கப்படுகின்றது.

இவர்களை இளையோர் அல்லது வாலிபர் என்பர். பிற பருவத்தினருடன் ஒப்பிடுகையில் இளயோரிடம் குறிப்பிடத்தக்க சில பண்பியல்புகள் உண்டு. இளைய பருவம் மாற்றத்தை இலகுவில் ஏற்று தன்னை மாற்றியமைத்துக்கொள்ள கூடியதுää துணிவுமிக்கது, செயற்பாட்டை முதன்மைப்படுத்துவது. இப்பருவத்தில் பாலியல் கவர்ச்சியும் ஈடுபாடும் அதிகம் இருக்கும். இளையோரை பெரும் சதவீதமாக கொண்ட ஒரு சமூகம் வன்முறைப் போக்கு எடுப்பதற்கு கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு என்றும் கூறப்படுகின்றது. அனேக நாடுகளில் இளையோரே அதிகம் வேலையற்றோராக இருக்கின்றார்கள்.

முதுமை என்பதை 60க்கு மேல் எனக் கூறுவதே பொருத்தமாய் இருக்கும். பெரும்பாலும் 60 வருடம் என்பது பணி நிறைவுக்கான வயது. அதன்பின் ஓய்வு என்பது நடைமுறையிலுள்ள அரசு விதி, முதுமையில் பணிபுரிவதில் சக்தியின்மை இருந்தாலும் வாழ்க்கை அனுபவத்தால் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் வாய்ப்பு உண்டு.

ஒரு தடவை சுவாமி விவேகானந்தர், “இளைஞர்கள் 100 பேரை என்னிடம் கொடுங்கள்; இந்திய நாட்டையே நல்ல நாடாக மாற்றிக் காட்டுகிறேன்” என்று கூறியது இளைஞர் தம் சிறப்பு. உத்வேகம், அர்ப்பணிப்பு, நாட்டுப்பற்று மிக்க இளைஞர்களை வழிநடத்திச் செல்லக் கூடிய இளமை, துடிப்பு, சுயநலமில்லாது பாடுபடும் அர்ப்பணிப்பு, ஞானம் மிகுந்த விவேகானந்தரைப் போல் ஒரு வழிகாட்டியைக் கண்டுகொள்வதுதான் இன்றையச் சு10ழலின் தேவையாகிறது.

இன்று உலகின் எல்லா நாடுகளிலும் இளைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்தி அந்த நாடுகளின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக உள்ளனர். கடும் குளிர், மிகுந்த வெப்பம் என எந்தவிதமான நிலையிலும் பணிபுரியும் தகுதியுள்ளவர்கள். உடல் ஆற்றலுடன் அறிவாற்றலில் சிறந்து விளங்குபவர்கள் நம் நாட்டு இளைஞர்கள். உலகின் பல முன்னோடி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளைத் தம் தகுதியால் அலங்கரித்து வருபவர்கள். பணிபுரிய சுய கௌரவம் பார்க்காமல் குடும்பப் பொறுப்புடன் செயல்படும் இளைஞர் பட்டாளம் நம்மிடையே உள்ளது. சிக்கலான கல்வி கற்பதிலே முன்னணியில் நிற்பவர்கள் நம் இளைஞர்கள். தமக்கென தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, அதில் திறமையுடனும், துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் பயணிப்பவர்கள்தான் நம் இளைஞர்கள்.

இவ்விடத்தில் சோக்ரடீஸின் வரலாற்றுடன் இணைந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. ஓர் இளைஞன் சோக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சோக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சோக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான். சோக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?” என்று கேட்டார். அந்த இளைஞன் “காற்று” என்று பதிலளித்தான். சோக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்” என்று சொன்னார். இதைத் தவிர வேறு எந்த இரகசியமும் இல்லை.

இந்த உதாரணம் இளைஞர்களின் உணர்வுக்களிக்கப்படும் முக்கியத்துவத்தை படிப்பினையுடன் கூடி எடுத்துக் காட்டுகின்றது. ஒவ்வொரு இளைஞனும் தன்னம்பிக்கையுடன் தனது பணியினை முன்னெடுக்கக் கடமைப்பட்டுள்ளான்.

இன்றைய இளைஞர்கள் ஒருவரைப் பின்பற்றும்போது முழுக்க முழுக்க அவராகவே மாறிவிடக்கூடாது. மாறாக, நல்ல குணங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை விவேகானந்தர் அழகாகக் கூறுகிறார். ‘ஒரு விதையை நிலத்தில் போடுகிறோம். அதன் வளர்ச்சிக்குத் தேவையான எருää தண்ணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். அவ்விதை எருவாகவோ, தண்ணீராகவோ மாறாமல் தன் இயல்பிலேயே எடுத்துக்கொண்டு பிரம்மாண்ட மரமாகிறது’. அது போல, ‘கற்றுக்கொள்ள வேண்டியதை மட்டும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வழி சொல்கிறார்.‘அளவற்ற தன்னம்பிக்கை உடையவர்களாக இருங்கள். நான் இளமையில் அத்தகைய நம்பிக்கை உடையவனாக இருந்தேன். அதுதான் இப்பெரிய காரியங்களைச் செய்யக்கூடிய சக்தியை எனக்களித்து இருக்கிறது. இளமையும், சக்தியும், நம்பிக்கையும் இருக்கும் காலத்தில்தான் உங்கள் எதிர்கால இலட்சியத்தை நீங்கள் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.

உங்களின் மீதும் உங்கள் திறமைகளின் மீதும் உங்களுக்கு உள்ள ஆழமான நம்பிக்கைதான் உங்கள் கனவுகளை நிறைவேற்றும். உங்கள் கனவைச் சொல்லும்போதுää உங்கள் வார்த்தைகளில் உயிர் துடிப்பு இருக்க வேண்டும். உங்களின் ஆர்வம் கேட்போரைத் தொட வேண்டும். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும் அதை சாத்தியமில்லாது என்று ஒதுக்க வேண்டாம். “சாத்தியமில்லாதது” என்று எதுவுமேயில்லை.

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. தன்னம்பிக்கையோடு திட்டமிட்டு, விடாமுயற்சியோடு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.“Never, neer, neer give up’ என்று வின்ஸ்டன் சர்ச்சில் சொல்வதுண்டு. வீட்டில் சன்னலருகே வைக்கப்பட்டுள்ள செடியானது வெளிச்சம் தேடி வெளியே வளைந்து செல்வதைப் போல, விடா முயற்சியுடையவர்கள் புதிய பாதைகளைத் தேடிக்கொண்டு தொடர்ந்து முன்னேறுவர்.

வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது தாங்கள் மட்டும் விழித்திருந்து உழைத்தவர்களே. சலிப்புக்கு இடங்கொடாமல் கடும் உழைப்பை உணவாக உட்கொண்டவர்கள், “ஒளி படைத்த கண், உறுதிகொண்ட நெஞ்சம், களிபடைத்த மொழி, கடுமை கொண்ட தோள், தெளிவு பெற்றமதி” என்றெல்லாம் முகமன் கூறிய பாரதியின் வார்த்தைகளை இளையபாரதம் மெய்ப்பிக்க வேண்டும். குறுகிய சிந்தனையில் வாழ்வைக் குலைத்துக்கொள்ளாமல் சமுதாய நோக்கில் சிந்தித்து செயல்பட்டால் இளைஞர்களுக்கு வெற்றி நிச்சயம்.

சர்வதேச இளைஞர் தினம் கலைவிழாக்கள், போட்டி நிகழ்ச்சிகள், இளைஞர் பாசறைகள், கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களினூடாக முன்னெடுக்கப்படுகின்றன. 2000ம் ஆண்டில் முதலாவது சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்பட்ட போது இத்தினத்தை முறைப்படி கடைபிடிப்பதற்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதேபோல இளைஞர் ஆண்டிலும் பல்வேறு திட்டங்களை ஒவ்வொரு நாடுகளின் அரசாங்கங்களும் தனியார் அமைப்புகளும் ஐக்கிய நாடுகள் சபையும் ஒழுங்கு செய்துள்ளது.

2001ம் ஆண்டில் வேலையின்மை, சுகாதாரம் ஆகியவற்றில் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், 2002ம் ஆண்டில் நிகழ்க்காலத்திலும், எதிர்காலத்திலும் அபிவிருத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்புகள் குறித்தும், 2003ம் ஆண்டில் இளைஞர்களுக்கு பண்புமிக்கதும்,உற்பத்தித் திறனுடையதுமான தொழில் வாய்ப்புக்களை தேடிக் கொடுப்பது பற்றியும், 2004ம் ஆண்டில் சமூக அபிவிருத்தியில் இளைஞர்களின் பங்கு பற்றியும், 2005ம் ஆண்டில் இளைஞர்களின் பணிகள் பற்றியும், 2006ம் ஆண்டில் வறுமை ஒழிப்பில் இளைஞர்களின் பங்கு பற்றியும், 2007ம் ஆண்டில் அபிவிருத்திப் பணிகளில் இளைஞர்களின் கடப்பாடு பற்றியும், 2008ம் ஆண்டில் காலநிலை மாற்றம், நேரமுகாமைத்துவம் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு பற்றியும், 2009ம் ஆண்டில் அபிவிருத்தி, உற்பத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் சவால்களும்,  எதிர்காலம் பற்றியும் கருப்பொருளாகக் கொள்ளப்பட்டன.

குறிப்பாக சுழல், சமூகம், பொருளாதாரம் ஆகிய செயற்பாடுகளில் இளைஞர்களின் மனோநிலை விருத்தியை வளர்ப்பது குறித்தும், இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வது குறித்தும் இத்தினத்தில் விசேடமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன.

இளைஞர் தினத்தின் தொணிபொருள்களை பின்வருமாறு ஒரு பார்வையில் நோக்கலாம்.

2009 – SUSTAINABILITY: OUR CHALLENGE. OUR FUTURE.
2008 – Youth and Climate Change: Time for Action
2007 – Be seen> Be heard: Youth participation for development
2006 – Tackling Poverty Together
2005 – WPAY+10: Making Commitments Matter
2004 – Youth in an Intergenerational Society
2003 – Finding decent and productive work for young people everywhere
2002 – Now and for the Future: Youth Action for Sustainable Development
2001 – Addressing Health and Unemployment

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெறும் முரளி 800 விக்கெட் வீழ்த்தி சாதனை – புன்னியாமீன்

murali-800-w.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி பெரும் சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனையை இந்திய வீரர் பி.பி.ஓஜாவின் விக்கெட்டை வீழ்த்தி இவர் படைத்துள்ளார். இது அவரது 133 ஆவது டெஸ்ட் போட்டியாகும். இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் எட்டு விக்கெட்டுக்களை இவர் கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் ரெஸ்ட் போட்டிகளில் உலகிலேயே 800 விக்கெட்டுக்களை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்

முரளிதரன் நிகழ்த்திய உலக சாதனையை அவரது மனைவி மதிமலர், அவரது குடும்பத்தினர், மகன் உள்ளிட்டோர் நேரில் கண்டு குதூகளித்தனர். 800வது விக்கெட்டை முரளிதரன் வீழ்த்தியதும், ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் குதித்தனர். மைதானத்தில் விழாக்கோலம் காணப்பட்டது.

முரளியின் இச்சாதனை இலங்கைக்கு மட்டுமல்ல, டெஸ்ட் உலகிலே மகத்தானது. 800 டெஸ்ட் விக்கட்டுக்கள் என்பது இலகுவான இலக்கல்ல. இச்சாதனை முறியடிக்கப்பட இன்னும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும். தற்போது டெஸ்ட் அரங்கை எடுத்துநோக்குமிடத்து முரளியின் சாதனையை ஹர்பஜங்சிங் எட்டுவார் என முரளியே குறிப்பிட்டிருந்தாலும்கூட, முரளியின் சாதனையில் அனைத்தையும் எட்டுவதென்பது மிகக் கடினமான விடயமே.

இலங்கை அணிக்காக 1992 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு பிரேமதாச விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 28ம் திகதி தனது முதலாவது ரெஸ்ட் போட்டியில் முத்தையா முரளீதரன் விளையாடினார். தனது முதல் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட போட்டியை ஆகஸ்டு 12, 1993 இல் இந்திய அணிக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

இன்று டெஸ்ட் உலகிலிருந்து ஓய்வுபெறும் முரளி தனது இறுதி நேரத்தில் 800 விக்கட் என்ற இலக்கை எட்டி டெஸ்ட் வரலாற்றில் இலகுவாக மாற்றியமைக்க முடியாத இலக்கை அடைந்தமைக்கு தேசம்நெற் இன் வாழ்த்துக்கள்.

murali.jpgமுத்தையா முரளீதரன் இதுவரை 133 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாடி 800 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், 337 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 515 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். கண்டி புனித அந்தோனியார் கல்லூரி அணி மற்றும் தமிழ் யூனியன் கழகம் ஆகியவற்றின் ஊடாக முரளீதரன் முதல் முதலில் கிரிக்கட் உலகிற்கு அறிமுகமானார்.

1972ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதி கண்டியில் பிறந்த முத்தையா முரளீதரன், இலங்கை தேசிய அணி, ஆசிய அணி, சென்னை சுப்பர் கிங்ஸ், மத்திய மாகாண அணி, கென்ட், லாங்ஷெயர், ஐ.சீ.சீ. பதினொருவர் அணி, தமி;ழ் யூனியன் ஆகிய அணிகளின் சார்பில் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

1992 ஆகஸ்ட் 28 ஆம் திகதி தனது 20 ஆவது வயதில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் நடைபெற்றது. முதரளிதரனின் அறிமுக டெஸ்ட் போட்டி இதுவாகும். அப்போட்டியில் “கிரெய்க் மெக்டர்மட்” இன் விக்கட்டே முரளிதரன் கைப்பற்றிய முதலாவது டெஸ்ட் விக்கெட் ஆகும். அப் போட்டியில் முரளி 141 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அப்போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் டொம் மூடியின் விக்கெட்டை முரளிதரன் கைப்பற்றினார். மூடியை ஆட்டமிழக்கச் செய்ய முரளி வீசிய பந்து ஓப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்து சுமார் 2 அடி தூரம் சுழன்று லெக் ஸ்டம்பை வீழ்த்தியது. அந்த பந்தின் மூலம் கிரிக்கெட் உலகுக்கு திறமையான ஒப் ஸ்பின் பந்து வீச்சாளரின் வருகையை முரளி உணர்த்தினார். பின்னாளில் டொம் மூடி இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. அன்று முதல் முரளிதரன் பந்து வீச்சு திறமை ஒவ்வொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் பரிணமித்தது.

1993 ஆகஸ்ட்டில் மொரட்டுவையில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முரளிதரன் 104 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை முரளி கைப்பற்றியமை அது முதலாவது தடவையாகும். அந்த டெஸ்ட் போட்டியில் முரளி கைப்பற்றிய 5 விக்கெட்டுக்கள் கெப்லர் வெஸல்ஸ், ஹன்ஸி குரோஞ்ஞே, ஜொன்டிரோட்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளும் உள்ளடங்கியிருந்தது.

முரளிதரன் அவுஸ்திரேலிய அணியின் கிரேக் மெக்மெட்டை எல்பி. டபிள்யூ. முறையில் ஆட்டமிழக்கச் செய்ததால் தனது கன்னி விக் கெட்டைக் கைப்பற்றினார்.  50 வது விக்கெட்டுக்காக சித்து வையும், 100 வது விக்கெட்டுக்காக ஸ்டீபன் பிளமிங்கையும், 150 வது விக்கெட்டுக்காக கை விட்டலையும் 200 வது விக்கெட்டாக பென் ஹொலி ஹொக்கையும், 250 விக்கெட்டுக்காக நவிட் அஷ்ரப்பையும் 300 வது விக்கெட்டுக்காக ஷோன் பொலக்கையும் 350 விக்கெட்டாக முகம்மட் சரீப்பையும், 400 வது விக் கெட்டாக ஹென்ரி ஒலங்காவையும் 450 விக்கெட்டாக டரல் டபியையும் 500 வது விக்கெட்டாக மிச்சல் கஷ்பரொவிச்சையும் 550 விக்கெட் டாக காலிட் மசுட்டையும் 600 வது விக்கெட்டாக காலிட் மசுட்டையும் 650 விக்கெட்டாக மக்காயா நிட்டி னியையும் 700 வது விக்கெட்டாக செய்யட் ரஷலையும், முரளிதரனின் 709 வது விக்கெட்டாக போல் கொலிங்வூட்டை வீழ்த்தியதன் மூலம் ஷேன் வோனின் 708 விக்கெட் சாதனையை முறியடித்தார். 750 விக்கெட்டாக கங்குலியையும் 800 விக்கெட்டாக பிராக் கன் ஒஜா வையும் வீழ்த்தியே இச் சாதனைக்கு சொந்தக்காரராக மாறினார்.

டெஸ்ட் போட்டியொன்றின் இன்னிங்ஸில் அதிக தடவைகள் ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தியமை (67 தடவைகள்) டெஸ்ட் போட்டியொன்றில் அதிக தடவைகள் பத்து விக்கட்டுகளை வீழ்த்தியமை (22 தடவைகள்) உள்ளிட்ட பல்வேறு உலக சாதனைகளை முரளீதரன் படைத்துள்ளார். முரளிதரனுக்கு அடுத்தபடியாக வோர்ன் (அவுஸ்திரேலியா), 145 டெஸ்டில் 708 விக்கெட்களை கைப்பற்றி 2 வது இடத்தில் உள்ளார். கும்ளே (இந்தியா) 619 விக்கட்களும், மெக்ராத் (அவுஸ்திரேலியா) 563 விக்கெட்களும், வோல்ஸ் (மே. தீவு) 434 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

முத்தையா முரளீதரனின் சாதனைகளைப் போலவே 1995ம் ஆண்டு முதல் பந்து வீச்சு பாணி தொடர்பிலான சர்ச்சைகளும் பிரல்யமானவை. அவுஸ்திரேலியர்கள் குறிப்பாக நடுவர் டெரல் ஹெயார், ரொஸ் எமர்சன் மற்றும் அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஜோன் ஹோவார்ட் போன்றவர்கள் முரளீதரன் பந்தை வீசி எறிவதாக விமர்சித்திருந்தனர். இறுதியின் இந்த சர்ச்சைக்கு சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்வினை முன்வைக்கும் முகமாக சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தது.

விஸ்டன் கிரிக்கட் வீரர் உள்ளிட்ட உலக அளவிலான மிக முக்கியமான கிரிக்கட் விருதுகளை முரளீதரன் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் டுவன்ரி 20 போட்டிகளில் பங்கேற்பது தெடார்பில் ஆராய்ந்து வருவதாக முரளீதரன் தெரிவித்துள்ளார். உலக நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முரளீதரன் ஓய்வு இலங்கை அணிக்கு மட்டுமன்றி உலக சுழற் பந்து ரசிகர்களுக்கும் பெரும் இழப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

முத்தையா முரளீதரன் டி-20 அறிமுகம் 22 டிச. 2006
முத்தையா முரளீதரன் ஐ.பி.எல் அறிமுகம் 19 ஏப். 2008

முரளீதரனின் சாதனையை முறியடிப்பதென்பது ஹிமாலய சவாலாக அமையும் – மற்றமொரு உலக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன்

முரளீதரன் பந்தை வீசி எறிவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித நியாயமும் கிடையாதென அவர் குறிப்பிட்டுள்ளார். முரளீதரனின் பந்து வீச்சுப் பாணி தொடர்பில் விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், முரளீதரனை பின்பற்றி பந்து வீசும் இளம் தலைமுறையினர் சில வேலைகளில் பந்தை வீசி எறியக் கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிறவியிலேயே முரளீதரனின் கைகளில் காணப்படும் வளைவு காரணமாக பந்தை வீசி எறிவது போன்று தோற்றமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முரளீதரன் சவால்களை அதிகம் விரும்புவதாகவும், அவரது அபார திறமை பாரட்டுக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். முரளீதரனின் சாதனையை முறியடிப்பதென்பது ஹிமாலய சவாலாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முத்தையா முரளீதரனின் டெஸ்ட் பந்து வீச்சு சாதனையை எவரும் முறியடிப்பார்கள் என தாம் கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

murali-800-w2.jpg 

முரளிக்கு விசேட விருது

இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் ரெஸ்ட் போட்டிகளில் உலகிலேயே 800 விக்கெட்டுக்களை பெற்றவுள்ள நிலையில் பகல் போசன இடைவேளையின் போது காலி விளையாட்டரங்கிற்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் முத்தையா முரளிதரனுக்கு விசேட விருது ஒன்றை வழங்கி கௌரவித்தார்.

மண்ணின் மைந்தனால் இலங்கைக்கு பெருமை – ஜனாதிபதி

உலகளாவிய கிரிக்கெட் வீரர்களிடையே மிகுந்த கெளரவத்தை பெறும் வகையில் ஒரு சாதனை மிகு பந்து வீச்சாளராக உயர்ந்த ஸ்தானத்தை எட்டியுள்ள எமது மண்ணின் மைந்தனான முத்தையா முரளிதரனால் இலங்கை பெருமை கொள்கிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முரளிதரனுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

133 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுக்களை கைப்பற்றி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ள முரளிதரன் 18 வருட காலம் கிரிக்கெட் விளையாடிய பின் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். அத்துடன் இதுவரை 337 ஒரு நாள் போட்டிகளில் 515 விக்கெட்டுக் களையும் கைப்பற்றியுள்ளார். முரளி என்று நாம் அனைவரும் அழைக்கும் முத்தையா முரளிதரன் கிரிக்கெட் உலகில் ஒரு அலங்கார ஆபரணத்தைப் போல் இருந்து வந்துள்ளார்.

மிகவும் சிரமமான பல சவால்களுக்கு முகம் கொடுத்து ஒரு சுழல் பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ள அவர் தனக்கும் தனது அணிக்கும் தனது நாட்டுக்கும் வெற்றியை தேடித்தந்திருக்கிறார். இந்த மண்ணின் மைந்தனால் இலங்கை பெருமை கொள்கிறது என்று ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப் பட்டுள்ளது.

சாதிக்க முடியாத சாதனை: முரளிக்கு அரசு பாராட்டு

கிரிக்கெட் வரலாற்றில் எவராலும் சாதிக்க முடியாத சாதனையை நிலைநாட்டிவிட்டு ஓய்வு பெற்றுள்ள சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு அரசாங்கம் சார்பாக வாழ்த்துத் தெரிவிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, முத்தையா முரளிதரன் குறித்து பெருமை அடைவதாகவும் உரிய காலத்தில் ஓய்வுபெற்றுள்ள அவர் அனைவருக்கும் முன்மாதிரியாக செயற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்

நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் (Nelson Mandela International Day) : புன்னியாமீன்

Nelson_Mandelaமுதலாவது நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் 2010 ஜூலை 18ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் அனுஷ்டிக்கப்பட்டது. தென்னாபிரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றுப் பக்கங்களை புரட்டி பார்க்கின்ற போது நிலைத்து நிற்கவேண்டியவர்களுள் மண்டேலாவும் ஒருவராவார். இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை ஜனநாயக ஆட்சியின் ஒளிக்கு இட்டுச் சென்றவர். சாத்வீக போராளியாக, ஆயுதப் போராட்ட தலைவனாக, தேசத்துரோகம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி, ஜனாதிபதியாக, சமாதான நோபல் பரிசின் சொந்தக்காரராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது.

2010 ஜூலை 18 இல் இடம்பெற்ற முதலாவது நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தில் “மண்டேலா ஆபிரிக்காவின் மைந்தன் / தேசத்தின் தந்தை என்ற திரைப்படமொன்றும் திரையிடப்பட்டுள்ளது. அத்துடன், மண்டேலாவை கௌரவித்து ஐ.நா. பொதுச் சபையில் உத்தியோகபூர்வமற்ற அமர்வொன்றும் இடம்பெற்றுள்ளது. நெல்சன் மண்டேலா “மக்களின் மனிதர்” என்ற புகைப்படக் கண்காட்சியும் இடம்பெற்றதாக ஐ.நா. பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்திருந்தார். ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளிலும் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான ஜுலை 18 ஆம் திகதி பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நிற வெறிக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மாமனிதரான நெல்சன் மண்டேலாவின் 92வது பிறந்த தினமான 2010 ஜூலை 18 இல் முதலாவது நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தைக் கொண்டாடுவதென 2009 நவம்பரில் ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது.

மனித உரிமைகளை மேம்படுத்தவும், ஆண்-பெண் சம உரிமை ஏற்படவும், பல்வேறு மனித இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மலரவும் பாடுபட்ட மண்டேலாவின் உழைப்பை நினைவுகூரும் வகையில் அவரின் பிறந்த நாளை சர்வதேச தினமாக கடைப்பிடிக்கலாம் என்று ஐ.நா பொதுச்சபை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை முன்நகர்வாக ஜூலை 18 இல் நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தைக் கொண்டாட வேண்டுமென கியூபா பாராளுமன்றம் தீர்மானித்தது. அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வழமைக்கு மாறான அமர்வில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனிதத்துவத்திற்கு அளப்பரிய சேவையைச் செய்த நெல்சன் மண்டேலாவை கௌரவித்து கியூபா பாராளுமன்றம் தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. கியூபா முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ரோவுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்டிருந்தவர் நெல்சன் மண்டேலாவாகும்.

நெல்சன் மண்டேலா  (Nelson Mandela International Day), ஜூலை 18, 1918 இல் பிறந்தவர். இவர் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவின் முதல் குடியரசுத்தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். ஆரம்பத்தில் அகிம்சை வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆயுதமேந்திப் போராடும் கெரில்லா (போர்முறை) தலைவராக மாறினார். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், (இதில் பெரும்பாலான காலம் அவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் அடைப்பட்டிருந்தார்) நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது.

இதற்கு ஓர் உதாரணமாக தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா சிறையில் இருந்த காலத்தில் வெள்ளை இனத்தோர் மட்டும்தான் கிரிக்கெட் விளையாட முடியும். கறுப்பினத்தவர் கிரிக்கெட்டில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள். அது மட்டுமன்று. கலப்பின, கறுப்பு நாட்டவரோடு அவர்கள் கிரிக்கெட் விளையாடியது கூடக் கிடையாது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்யப்பட்டபோது (1971), அவர்கள் 172 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தனர். ஆனால் அவை அனைத்துமே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடியவை. அப்பொழுது உச்சத்தில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா ஒரு டெஸ்ட் போட்டியில்கூட விளையாடவில்லை. இந்தியா, பாகிஸ்தான் போன்ற கறுப்பு நாடுகளுடனும் விளையாடியதில்லை. நிறவெறி காரணமாக தென்னாப்பிரிக்கா அணி கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஐசிசியால் தடை செய்யப்பட்டது.

மண்டேலா விடுதலைக்குப் பிறகு 1991-ல் தென்னாப்பிரிக்கா மீண்டும் கிரிக்கெட் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து தென்னாப்பிரிக்கா 1992-ல் உலகக்கோப்பையில் பங்கேற்றது. 2010 இல் உதைபந்தாட்ட உலக கிண்ணத்துக்கான போட்டியும் தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்தது.

மண்டேலா சிறுபராயத்தில் குத்துச் சண்டை வீரராகவே அடையாளம் காணப்பட்டார். இவரது குடும்பம் பெரியது. இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாக 1918 இல் பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் பெயரின் முன்னால் உள்ள “நெல்சன்” இவர் கல்வி கற்ற முதல் பாடசாலை ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இளம்பராயத்திலே கல்வியைப் பெறுவதில் கூடிய ஆர்வம் கொண்ட மண்டேலா, பின்பு இலண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்பை மேற்கொண்டார்.

1948 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் ஆட்சி் அதிகாரங்களைப் பொறுபேற்ற அரசு: அராஜக நடவடிக்கைகளை கட்டழ்த்தது. இனவாதமும் அடக்கு முறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்து கொண்ட மண்டேலா சீற்றம் கொண்டவராக அரசியலுக்குள் குதித்தார். இவரின் தலைமையில் அரசின் இனவாத கொள்கைகளுக்கு எதிராக சாத்வீகப் போராட்டங்கள் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்டன.

Nelson_Mandelaமண்டேலா தனது பல்கலைக்கழகத் தோழன் ஒலிவர் ரம்போவுடன் இணைந்து இன ஒதுக்களுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக எங்கும் மண்டேலா ஒலித்தார். இதன் விளைவு பயங்கரமாக மாறியது. 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு மண்டேலாவும் அவரின் சுமார் 150 தோழர்களும் கைது செய்யப்பட்டு கடுமையான எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஆண்டாண்டு காலமாக தொடர்கின்ற ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் முன்னால் சாத்வீகம் தோல்வியுறும் போது, ஆயுதப் போராட்டமே இறுதி வழியென இவரால் உணரமுடிந்தது. வேறுவழியின்றி ஆயுதமேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

1961 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் படைத் தலைவராக மண்டேலா மாறினார். வெளிநாட்டு நட்பு சக்திகளிடமிருந்து பணம் மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்ற வண்ணம் அரச, இராணுவ கேந்திர நிலையங்கள் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை முன்னெடுத்தார்.

1961 டிசம்பர் 16 ஆம் திகதி இனவெறி அரச பயங்கரவாதத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடாத்தப்பட்டது. தாக்குதலுக்கான இலக்குகளாக அரச, இராணுவ அடையாளங்களாக கருதப்பட்ட பாஸ் அலுவலகம், நீதி மன்றங்கள், தபால் அலுவலகங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. அப்போதும் எக்காரணம் கொண்டும் எந்தவொரு பொது மகனும் மரணிக்கவோ அல்லது காயமடையவோ கூடாது” என வற்புறுத்தி நின்றார்.

இனவெறிக்கு எதிரான இவரது யுத்த நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை வைத்து அமெரிக்க அரசும் இவர் மீது பயங்கரவாத முத்திரை குத்தியது. மண்டேலா அமெரிக்க நாட்டுக்குள் உள்நுழைவதற்கான தடைசெய்யப்பட்டது. இத்தடை ஜூலை 2008 வரை அமுலில் இருந்தது.

1962 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இவர் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார். அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாக தொடர்ந்தது. 1990ல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்க குடியரசு மலர்ந்தது.

தென்னாபிரிக்காவில் பிரெடெரிக் வில்லியம் டி கிளார்க்கைத் தொடர்ந்து 10 மே 1994 இல் அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 14 ஜூன் 1999 வரை பதவி வகித்தார். மண்டேலா, இன்றைய உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார். இவரைத் தொடர்ந்து தென்னாபிரிக்கத் தலைவராக பதவியேற்றவர் தாபோ உம்பெக்கியாவார். 3 செப்டம்பர் 1998 முதல் 14 ஜூன் 1999  அணிசேரா இயக்கப் பொதுச் செயலாளராக பதவி வகித்தார்.

இவரின் முதலாவது வாழ்க்கைத் துணைவி எவெலின் மாசே (1944–1957). பின்பு 1957 இல் வின்னி மண்டேலாவைக் கரம்பற்றி 1996 வரை வாழ்ந்தார். 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவிட்டு மண்டேலா விடுதலையாகி வெளியே வந்ததும் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் 1996ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.  1998 இல் கிராசா மாச்செலை மணம் புரிந்த இவர் அவருடன் வாழ்ந்து வருகிறார். மெதடிசம் சமயத்தவரான இவர் தற்போது ஹூஸ்டன் எஸ்டேட்டில் வாழ்ந்து வருகிறார். 1993இல் மண்டேலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் ஜெயிலில் இருந்த போது, ஜெயில் அதிகாரியாக இருந்த டிகிளார்க்குடன் சேர்ந்து இந்த விருது வழங்கப்பட்டது.

தென்னாபிரிக்காவில் வெள்ளையரின் இனஒதுக்கல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகப் போராடிய நெல்சன் மண்டேலா அதிகாரத்துக்கு வந்த பின்னர் தனது கறுப்பின மக்களை அதுகாலவரை ஒடுக்கு முறைக்குள்ளாக்கிய வெள்ளையர்களை மன்னித்து நல்லிணக்கப்போக்கினைக் கடைபிடித்தார். தென்னாபிரிக்காவில் இனஒதுக்கல் ஆட்சியின் முடிவுக்குப் பின்னரான காலகட்டம் அனர்த்தங்கள் மிகுந்ததாகவே இருக்கும் என்று உலகம் நினைத்தது. ஆனால், இன ஒதுக்கல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த அமைதிவழிச் செயற்பாடுகளில் வெள்ளை ஆட்சியாளர்களுடன் கைகோர்த்துச் செயற்பட்ட நெல்சன்மண்டேலா 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பல்லின ஜனநாயகத் தேர்தலின் பின்னர் அமைத்த ஆட்சி உலகத்தின் நினைப்பைப் பொய்யாக்கியது. மண்டேலா ஆட்சியின் அடிநாதமாக நல்லிணக்கக் கோட்பாடே அமைந்தது.