வெடிபொருளான டைனமட்டையும் அதன் முக்கிய வெடிபதார்த்தமான ரிஎன்ரி யைக் கண்டுபிடித்தவரான அல்பிரெட் நோபலின் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை கண்டுபிடிப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்வுதான் நோபல்பரிசு. இப்பரிசுகளின் முக்கியத்துவமும் பிரபல்யமும் கொண்டது சமாதானப்பரிசு என்பதை யாவரும் அறிந்ததே. அல்பிரெட் நோபல் என்பவர் சுவீடனைப் பூர்வீகமானவராகக் கொண்டாலும் சமாதானப்பரிசை நோர்வேயில் கொடுக்க வேண்டும் என்று பணித்துச் சென்றார். அதன் காரணமாக சமாதானத்துக்கான நோபல்பரிசு நோபலின் எழுதிச்சென்ற கோட்பாட்டுக்கு இணங்க நோர்வேயிலேயே கொடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. சுவீடன் டென்மாக் போன்ற நாடுகளின் காலணித்துவத்தின் கீழ் நோர்வே இருந்தாலும் தனது சுதந்திரத்தை, நாட்டின் விடுதலையை இரத்தம் கொலைகள் இன்றி இராஜதந்திரமுறையில் நோர்வே வென்றெடுத்தது. இதனால் சமாதானப் பரிசு வழங்குவதற்கு நோர்வேயே சரியானது என அல்பிரெட் நோபல் கருதியிருந்தார். இருப்பினும் இரண்டாம் உலகப்போரில் சுவீடன் நாசிப்படையை திறந்து விட்டு எதிர்ப்பின்றி இருந்தாலும் நோர்வே ஜேர்மன் நாசிப்படையை எதிர்த்து கெரில்லாப் போரில் ஈடுபட்டிருந்தது குறிப்பிட வேண்டியது ஒன்றாகும்.
ஒரு பேரழிவுவைத்தரும் டைனமயிட்டைக் கண்டுபிடித்தவர் சமாதானத்தை ஊக்குவிக்கும் முகமாக தனது உழைப்பின் ஒரு பகுதியை உலகிற்கு ஈர்ந்து சென்றிருக்கிறார் என்றால் இதன்பின் ஒளிந்திருக்கும் எண்ணத்தை நாம் தோண்டிப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். கத்தியை நல்ல விடயங்களுக்கும் பாவிக்கலாம் கத்தியைக்கொண்டு கொலையும் செய்யலாம். அது கத்தியின் பிழையன்று. அதைப் பாவிப்பர்களின் பிழையே. அல்பிரட் நோபலின் நோக்கம் தனது கண்டுபிடிப்பு நல்லவற்றிற்கே பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் சமாதானத்துக்கான பரிசை தனிப்பட முக்கியப்படுத்தினார். இன்றும் மலைகளை உடைத்து வீடுகள் கட்டவும் பாதைகள் அமைக்கவும் அவரின் கண்டுபிடிப்பே உதவுகிறது என்றாலும் பேரழிவாயுதங்கள் தயாரிப்பதற்கு இந்த ரிஎன்ரி யே துணைபோகிறது. அதனால் அல்பிரெட்டின் நோக்கம் பிழை என்று கூற இயலாது. புதிய கண்டுபிடிப்பாளர்கள் வளரவேண்டும் புதிய கண்டுபிடிப்புக்கள் உலகிற்கு வரவேண்டும் என்பதே இப்பரிசுத்திட்டத்தின் நோக்கமாகும்.
2010 க்கான நோபல்பரிசை நோர்வே நோபல்பரிசுக்குழு 8.10.2010 மாலை அறிவித்தது. அந்த விடயம் பல நாடுகளில் பரபரப்பையும் சீனாவில் பெரிய பூகம்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பரிசானது மனித உரிமைகள் ஆர்வலரும் போராளியும் எழுத்தாளரும் ஜனநாயக விரும்பியுமான சீனத்தைச் சேர்ந்த லியூ சியாபூ (Liu Xiaobo) க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சீனாவில் மாற்றம் வேண்டும், மனிதஉரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும், அரசியல் மாற்றத்தினூடாக ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று போராடி வந்தவர்தான் லியூ. இவர் சீன அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார் என்று பலஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று அதாவது 09.10.2010 காலை இந்த நோபல்பரிசுச் செய்தியை தன் கணவனுக்குச் சொல்லச் சென்ற அவரின் மனைவியை காணவில்லை என்ற அறிவித்தல் நோர்வேக்கு கிடைத்தது. லியூவின் வழக்கறிஞருடன் தொடர்பு கொண்டபோது அவரின் வாக்கு மூலப்படி வீட்டுக்காவலில் இருந்த லியூவின் மனைவியை சீனாதான் மறைத்து வைத்துள்ளது என்று அறியமுடிகிறது. லியூவுக்கு நோபல்பரிசு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டபோது சீன வெளிநாட்டமைச்சகம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது என்பது இங்கே கருத்தில் கொள்ள வேண்டியது.
லியூவுக்கு எதற்காக நோபல்பரிசு வழங்கப்படுகிறது என்பதை நோபல்குழுவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதமரும், முன்னாள் தொழிற்கட்சிச் தலைவரும், இன்றைய ஐரோப்பா அமைச்சரச் செயலாளருமான தூர்பியோன் யாலாண்ட் குறிப்பிடுகிறார். பொருளாதார ரீதியாக சீனா முன்னேறினாலும், பல சர்வதேச உடன்படிக்கைகளை சீனா கையொப்பமிட்டாலும் அதனை மீறியுள்ளது எனவும், சீனச்சட்டம் 35ன்படி பேச்சுரிமை, கூட்டங்கள் கூடும் உரிமை, எழுத்துரிமை, ஊர்வலம்போகும் உரிமைகள் எழுத்துருவில் இருந்தாலும் அவை நடைமுறையில் மட்டறுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். சீனா தனது சட்டத்தையே குழிதோண்டிப் புதைத்துள்ளது என்பதை லியூவும் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
http://www.youtube.com/user/thenobelprize
இந்த நோபல்பரிசை லியூவுக்கு வழங்குவதால் நோர்வே பொருளாதார ரீதியாக பல தீமைகளை அனுபவிக்கும் என்பதை அறிந்தும் நோர்வே நோபல்குழு தன்நிலை தளராது பிசகாது அப்பரிசை லியூவுக்கு அளித்துள்ளமை பாராட்டுக்குரியது என பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். தீபெத்திய ஆத்மீகத் தலைவர் டலாய் லாமா நோர்வே நோபல்குழுவுக்கு தனது பாராட்டை இது ஒரு துணிகரமான செயல் என்று விமர்சித்துள்ளார். நோர்வேயின் மீன் ஏற்றுமதியின் பெரும்பகுதி சீனாவுக்கே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான தடையை நோர்வே எதிர்பார்த்திருக்கிறது.
பல சீன உல்லாசப் பயணிகளிடம் செவ்விகண்ட போது பலவிதமான கருத்துக்களை அறிய முடிந்தது. அதாவது ஏன் இந்தப் பரிசை அமைப்புகளுக்குக் கொடுக்கவில்லை, சீனச்சட்டத்துக்கு எதிரான பல வழக்கறிஞர்கள் சிறையில் சீனஅரசின் சித்திரவதைகளுக்கு உள்ளாகிக் கொண்டுள்ளார்கள் அவர்களுக்குக் கொடுக்கலாமே என்ற மாதிரியான பல கருத்துக்களைத் தெரிவித்தார்கள். உலகின் பல நாடுகளும் இப்பரிசு முன்மொழிவை துணிகரமான செயல் என்று பாராட்டி வரவேற்றுள்ளமை சிறப்புக்குரியதே.