செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தமிழ்ப் பொது வேட்பாளர் அர்த்தமற்றது! இலங்கைக்கான பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் – 2024 தொடர்பான அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் தமிழர்களின் நிலைப்பாடாக பொதுவேட்பாளர் என்ற கொள்கையை தமிழ்தேசிய கட்சிகள் முன்மொழிந்து வருகின்றன. இது தொடர்பில் பல வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் பொதுவேட்பாளர் தொடர்பிலும் அதிலுள்ள சாதக – பாதக நிலை தொடர்பிலும் எழுத்தாளரும் அரசியல் ஆர்வலருமான து.சேனன் அவர்களுடன் தேசம் ஜெயபாலன் கலந்துரையாடும் பரபரப்பான அரசியல் கலந்துரையாடல்.

தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

ரஃபா எல்லைகளை கைப்பற்றிய இஸ்ரேல் – மனிதாபிமான உதவிகள் முழுமையாக தடைப்பட வாய்ப்பு!

காசா பகுதியில் உள்ள ரஃபாஎல்லையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ரஃபா மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிஎன்பதுடன் எகிப்திலிருந்து காசாவிற்கான மனிதாபிமான உதவிகள் வருவதற்கான ஒரேயொரு பாதையாகவும் காணப்படுகின்றது.

ரஃபாவின் காசா பக்கத்தினை நாங்கள் தற்போது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளோம் எங்களது சிறப்பு படைகள் இந்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளன என இஸ்ரேலின் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை காசா எல்லை அதிகாரசபைக்கான பேச்சாளர் இஸ்ரேலிய டாங்கிகள் காணப்படுவதை உறுதிசெய்துள்ளார்.

அந்த பகுதி ஊடாக மனிதாபிமான உதவிகள் பயணிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை ஹமாஸ் அமைப்பு  மூன்று கட்ட யுத்த நிறுத்தம் தொடர்பான யோசனைகளையும் கைதிகள் பணயக்கைதிகள் பரிமாற்றம் தொடர்பான யோசனைகளையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள அதேவேளை இஸ்ரேல் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பல் !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் உயிரிழப்பை அடுத்து , அவரின் நண்பர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டதுடன், மருத்துவர்கள், தாதியர்கள், நோயாளிகளுடன் முரண்பட்டனர்.

அது தொடர்பில் மருத்துவ சேவைக்கு இடையூறு ஏற்படுத்தினார் என வைத்தியசாலை நிர்வாகத்தினரால், யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அடாவடியில் ஈடுபட்டவர்களை இனம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான இணுவில் குப்பைக் கிடங்கில் பரவிய தீ – மக்கள் போராட்டத்தில்!

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான இணுவில் குப்பைக் கிடங்கில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இணுவில் காரைக்கால் குப்பைக் கிடங்கில் நேற்று திங்கட்கிழமை (06) தீ பரவியது.

யாழ்.மாநகர சபை மற்றும் ஏனைய பகுதி பிரதேச சபையினரின் தீயணைப்பு படையினரின் நீண்ட நேர பிரயத்தனத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

குறித்த இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், இதற்கு முன்பும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குப்பை மேட்டுக்கு விஷமிகள் யாராவது தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தீ பரவியமைக்கான காரணம் உறுதியாக தெரியாத நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த குப்பைக் கிடங்கில் 2 ஆண்டுகளுக்கு முன்னரும் பாரிய தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த பகுதியில் குப்பை கிடங்கை அகற்றக்கோரி அப்பகுதி இளைஞர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (07) காலை போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

தேர்தல் வேலைத்திட்டத்திற்காக விசா கட்டண விவகாரத்தை அரசாங்கம் கையில் எடுத்துள்ளது – லக்ஸ்மன் கிரியெல்ல

எதிர்வரும் தேர்தல் வேலைத்திட்டத்திற்காக விசா கட்டண விவகாரத்தை அரசாங்கம் கையில் எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“சுற்றுலாப்பயணிகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு வரும் ஒருவருக்கு அறவிடப்படும் விசா கட்டணத்தை அதிகரிக்க பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டது.

ஆனால் வீ.எப்.எஸ். என மேலதிகமாக 20, 21 டொலர் கட்டணமாகவும் அறவிடப்படுகிறது. இதற்கு பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்படவில்லை.

இந்த விடயத்தில் பாராளுமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் என்றால் அதனைத் தனியாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்க வேண்டும்.

ஆனால் விசா கட்டண அதிகரிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையுடன் சட்ட விரோதமான முறையில் இணைக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியமைக்காக நிலையியற் கட்டளையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த விடயத்தில் அமைச்சரவையில் தீர்மானித்து அனுமதிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதுவும் இதற்கு நாடாளுமன்றம் அனுமதிக்கத தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது முற்றிலும் தவறான விடயமாகும்” என லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் கைதிகளை சந்தித்த கஜேந்திரன் – சிறீதரன்!

கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணன் மற்றும் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக நீதிமன்றில் முற்படுத்தப்படாமல் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் மூதூரைச் சேரந்த எஸ்.சுதாகரன் ஆகிய இருவரையும் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டார்கள் .

 

அதன்போது தனது விடுதலையை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆனந்தவர்ணன் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்ததாகவும், தனது விடுதலைக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

தான் பொய்க்குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் தனது தரப்புக் கருத்துக்களை கூறுவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் வழங்கப்படாமலேயே விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வழக்குத தவணை எப்போது என்றுகூடத் தெரியாத நிலையில் தன்னைத் தடுத்து வைத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

அதேபோன்று மூதூரைச் சேரந்த எஸ்.சுதாகரன் என்பவரும் இந்தியாவிலிருந்து திரும்பும்போது கைது செய்யப்பட்டு கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தனது விடுதலைக்காகவும் நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

 

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன் உறுப்பினர்கள் ஆனந்தவர்ணன் உடல்நலக்குறைவால் அவதியுறுவதாகவும், உணவு தவிர்ப்புப் போராட்டம் தொடர்ந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதனால் அவரது கோரிக்கையை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட தரப்புக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திள்ளார்கள். மேலும் இவ்விடயம் தொடர்பில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளது கவனத்திற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

விசா தொடர்பில் விசனத்தை வெளியிட்ட இளைஞனுக்கு நெருக்கடி கொடுத்தால் விளைவு விபரீதமாக இருக்கும் – நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி

விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை தனி இளைஞர் ஒருவர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

தவறுகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் அதனை விடுத்து இந்த இளைஞனுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தினால் அரசாங்கம் மீண்டும் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

சட்டத்தரணிகளும், நாட்டு மக்களும் ஒன்றிணைவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற பிரிவிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடல் (விசேட ஏற்பாடுகள்)திருத்தச் சட்டமூலம் (பராட்டே) என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது,

 

நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்கள் 52 சதவீதமளவில் பங்களிப்பு செய்கிறார்கள்.தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தொழில் முயற்சியாளர்கள் பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது.ஆனால் அவர்கள் மீதே பொருளாதார நெருக்கடி சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகளினாலும்,ஊழல் மோசடியாலும் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.

 

கொவிட் பெருந்தொற்றினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் கொவிட் பெருந்தொற்றினால் எமது அண்மை நாடுகளான மாலைத்தீவு,பங்களாதேஷ் மற்றும் பூட்டான் உள்ளிட்ட நாடுகள் வங்குரோத்து நிலையடையவில்லை. பொருளாதார மீட்சிக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அரசாங்கம் பேச்சளவில் குறிப்பிடுகிறது.ஆனால் செயலளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

 

வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் சட்டமூலம் தற்காலிகமானதே,07 மாதங்களை வரையறுத்தே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.ஏழு மாத காலத்துக்குள் நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையுமா என்பதை குறிப்பிட முடியாது,ஆகவே தொழில் முயற்சியாளர்களுக்கு 2 ஆண்டுகளேனும் நிவாரணம் வழங்க வேண்டும்.

வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை இளைஞர் ஒருவர் தனித்து வெளிப்படுத்தியுள்ளார். அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை அந்த இளைஞர் பயன்படுத்தியுள்ளார்.இந்த இளைஞன் குறிப்பிட்ட விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி,அதற்கு மக்கள் அவதானம் செலுத்தியதன் பின்னரே அமைச்சரவை பழைய முறைக்கு விசா விநியோகிக்க தீர்மானித்துள்ளது.

 

அரசாங்கம் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் அதனை விடுத்து இந்த இளைஞனுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் சட்டத்தரணிகளும், நாட்டு மக்களும் அந்த இளைஞனுக்கு சார்பாக செயற்படுவார்கள். கடந்த கால நிகழ்வுகளையும் அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவிப்பு – மகிழ்ச்சியில் பாலஸ்தீனியர்கள் !

எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் முன்வைத்த போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

அந்த அமைப்பை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, கத்தார் பிரதமர் மற்றும் எகிப்திய தலைவர்களுக்கு இந்த யோசனையை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஹமாஸ் ஏற்றுக் கொண்ட போர்நிறுத்தப் பிரேரணையை இஸ்ரேல் அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேலிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

இதனிடையே போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்த நிலையில் இடம்பெயர்ந்து ரபாவில் தங்கியுள்ள பலஸ்தீன மக்கள் மகிழ்ச்சி ஆராவாரத்தில் ஈடுபட்டுள்ளதையும் அறிய முடிகிறது.

 

 

விசா தொடர்பாக உருவாகியுள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காணுங்கள் – சனத்ஜெயசூரிய

விசா தொடர்பாக உருவாகியுள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காணுமாறு இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் சனத்ஜெயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடும் வியர்வை கண்ணீருடன் பணம்சார்ந்த விடயங்கள் எவற்றையும் எதிர்பார்க்காமல் பல இலங்கையர்களும் நானும் சுற்றுலாத்துறையை மீண்டும்செழித்தோங்க செய்தோம் என அவர் தனது சமூக ஊடகபதிவில் தெரிவித்துள்ளார்.

புதிய விசா நடைமுறைகள் குறித்து சுற்றுலாத்துறையை சார்ந்தவர்கள் பல கரிசனைகளை வெளியிட்டுள்ளதை நான் அவதானித்துள்ளேன். என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்துடன் தொடர்புபட்ட அனைவரும் இந்த விவகாரத்தி;ற்கு கூடிய விரைவில் தீர்வை காணவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என அவர்தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சி – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“85 வருட காலமாக இலவச கல்வி இந்த உரிமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. அத்துடன், கஷ்டப் பிரதேசங்களில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு வரும் மாணவர்களின் வாழ்க்கையை வெற்றியடையச் செய்வதற்கு பல்கலைக்கழகத்தில் பெறும் கல்வி பாரிய உதவியாக அமைந்திருந்தது.

இந்த உரிமைக்கு இப்போது சவால் விடுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையில் கடுமையான மாற்றங்களை மேற்கொள்ளும் முன்மொழிவுகளை அரசாங்கம் முன்வைத்துள்ளது.

உயர்கல்விக்கான பொறுப்பை நேரடியாக ஏற்றுக் கொள்ள தற்போதைய அரசாங்கம் தயாராக இல்லை. அரசாங்கம் கொண்டு வந்துள்ள பிரேரணைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாதொழிப்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல முக்கிய செயல்பாடுகளை கொண்டுள்ளது. பல்கலைக்கழக கட்டமைப்பின் கல்வித் தரத்தைப் பாதுகாப்பது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

உயர்கல்விக்கான முன்மொழிவுகளை அரசாங்கம் கொண்டு வந்தாலும், அவை நேர்மையான முன்மொழிவுகள் அல்ல” என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.