::விளையாட்டு

Friday, November 27, 2020

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி ..?

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி நடக்க உள்ளது. இதையொட்டி ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் முபாஷ்சிர் உஸ்மானி நேற்று அளித்த பேட்டியில், ‘கௌவரவமிக்க இந்த போட்டியை எங்கள் நாட்டு மக்கள் நேரில் பார்க்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்று விரும்புகிறோம். இங்கு நடக்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் 30 முதல் 50 சதவீதம் பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. நாங்களும் அதே சதவீத எண்ணிக்கையை எதிர்பார்க்கிறோம். ஸ்டேடியத்திற்குள் ரசிகர்களை அனுமதிப்பதற்கு எங்கள் அரசு ஒப்புதல் அளிக்கும் என்று நம்புகிறோம்.
அமீரக அரசின் தீவிரமான நடவடிக்கையால் எங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு (தற்போது 6,200 மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்) குறைந்துள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து கிட்டத்தட்ட தற்போது இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி விட்டோம். ஐ.பி.எல். போட்டிக்கு இன்னும் காலஅவகாசம் உள்ளது. அதற்குள் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்து விடும். 14 அணிகள் இடையிலான உலக கோப்பை தகுதி சுற்றை கடந்த ஆண்டு நடத்தினோம். இதே போல் இந்த மெகா தொடரையும் எங்களால் வெற்றிகரமாக நடத்த முடியும்’ என்றார்.

ஸ்டூவர்ட் பிராட்டுக்கு யுவராஜ்சிங் பாராட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 7-வது பவுலர் என்ற பெருமையை பெற்ற இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு, இந்திய முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். யுவராஜ்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஸ்டூவர்ட் பிராட் பற்றி நான் எப்போது எழுதினாலும் நான் அவரது ஒரே ஓவரில் 6 சிக்சர் (2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில்) விளாசிய சாதனையை மக்கள் நினைவூட்டுவார்கள் என்பதை அறிவேன். இப்போது அவர் டெஸ்டில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதை என்னுடைய ரசிகர்கள் அனைவரும் பாராட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 500 விக்கெட் என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், உறுதிமிக்க போராட்டமும் அவசியம். பிராட், நீங்கள் ஒரு ஜாம்பவான். வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டி நேற்று கோலாகல ஆரம்பம்

asia.jpg16ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப விழா நேற்று 12ம் திகதி வெள்ளிக்கிழமை மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எனினும் உதைபந்து போட்டிகள் கடந்த 07ஆம் திகதியே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. விளையாட்டுப் போட்டிகளில் நீர் விளையாட்டுகள், வீதி சைக்கிள் ஓட்டப் போட்டிகள், டன்ஸி ஸ்போட்ஸ், ஜிம்நாஸ்டிக், ஜூடோ, குறி பார்த்து சுடல், பாரம் தூக்கும் போட்டிகள் மற்றும் வூஷ¤ போட்டிகள் என்பன இன்று ஆரம்பமாகின்றன.

15 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி 2006 ஆம் ஆண்டிலே கட்டார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டிகளில் வழமைபோல் சீனா 124 தங்கம், 70 வெள்ளி மற்றும் 49 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடம் பெற்றதுடன், தென் கொரியா 44 தங்கம், 39 வெள்ளியும், 70 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தினையும், யப்பான் 43 தங்கம், 51 வெள்ளி மற்றும் 57 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

இலங்கைக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும், வெண்கலப் பதக்கங்கள் இரண்டும் கிடைத்தன. 36 நாடுகள் பங்குபற்றிய இந்த போட்டியில் இலங்கைக்கு 32 ஆவது இடம் கிடைத்தது.

ஆசிய நாடுகளிடையே நடைபெறும் பிரதான விளையாட்டுப் போட்டியான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 16 ஆவது முறையாக இம்மாதம் 12ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் சீனாவின் குவென்ஷ¤ நகரில் நடைபெறுகின்றது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் 47 நாடுகளைச் சேர்ந்த 42 விளையாட்டுப் போட்டிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ள உள்ளதாக சீனாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இலங்கை சார்பாக இம்முறை 22 நிகழ்ச்சிகளில் 138 வீரர்கள் கலந்துகொள்வதுடன், 29 அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

விளையாட்டுப் போட்டிக்காக குவென்ஷ¤ நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு கிராமமானது, 2.73 சதுர கிலோ மீட்டர் பரப்பினைக் கொண்டுள்ளது. விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் அடங்கலாக 14000 பேருக்கு அதில் தங்குமிட வசதியுண்டென ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு மேலதிகமாக 14000 பேர் அன்றாட கடமையில் ஈடுபடுவார்களென ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அவுஸ்திரேலிய மண்ணில் இலங்கை அணிக்கு முதல் தொடர் வெற்றி

upul.jpgஅவுஸ் திரேலியாவுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி டக்வத் லுவிஸ் முறைப்படி 29 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம் இலங்கை அணி ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக அவுஸ்திரேலிய மண்ணில் அவுஸ்திரேலியாவை தொடரொன்றில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

சிட்னியில் நேற்று நடைபெற்ற இரண் டாவது ஒருநாள் போட் டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதில் முதல் போட்டியில் பங்கேற்காத ஆஸி. அணித் தலைவர் ரிக்கி பொன்டிங் கள மிறங்கினார். இந்நிலையில், துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு உபுல் தரங்க, டி. எம். டில்ஷான் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை வழங்கினர். இருவரும் இணைந்து 119 பந்துகளுக்கு 98 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இதில் டில்ஷான் 57 பந்துகளில் 5 பெளண்டரிகளுடன் 47 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த மஹேல ஜயவர்தனவினால் 5 ஓட்டங்களையே பெற முடிந்தது. எனினும் 3ஆவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் குமார் சங்கக்காரவுடன் இணைந்த உபுல் தரங்க இலங்கை அணியின் ஓட்டங்களை மேலும் அதிகரித்தனர். இதன்போது இருவரும் இணைந்து 70 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற இலங்கை அணியின் மொத்த ஓட்டங்கள் 186 ஆக அதிகரித்தது.

இதனிடையே 34 ஆவது ஓவரில் வைத்து மழை குறுக்கிட்டது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 41.1 ஆவது ஓவரில் வைத்து மீண்டும் மழை குறுக்கிட்டது. இதன்போது இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் போட்டி நீண்ட நேரம் மழையால் தடைப்பட்டதால், இலங்கை அணியின் இன்னிங்ஸ் 41.1 ஓவர்களுக்கே வரையறுக்கப்பட்டது. இதில் இலங்கை சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய உபுல் தரங்க 112 பந்துகளுக்கு 6 பெளண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களைப் பெற்றார். அணித் தலைவர் சங்கக்கார 52 பந்துகளில் 4 பெளண்டரிகளுடன் 47 ஓட்டங்களை குவித்தார். இதன்படி டக்வர்த் – லுவிஸ் முறை அடிப்படையில் அவுஸ்திரேலிய அணிக்கு 39 ஓவர்களில் 244 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கமைய வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் முக்கியமான தருணங்களில் பறிபோயின.

இறுதியில் ஆஸி. அணி 39 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்களையே பெற்றது. இதன் மூலம் ஆஸி. ஒரு நாள் அரங்கில் தொடர்ச்சியாக 7ஆவது போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. கடந்த 13 ஆண்டுகளில் ஆஸி. அணி ஒருநாள் அரங்கில் பெற்ற மிக மோசமான பெறுபேறு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில் இலங்கை அணி ஆஸி. மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடர் ஒன்றை வென்று சாதித்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை சார்பில் சிறப்பாக செயல்பட்ட உபுல் தரங்க போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார்.

இலங்கைக் கிடைத்த ஒரே ஒரு தங்கமும் பறிபோகுமோ?

manju.gifஇந்தியாவில் நடைபெற்ற 19ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 56 கிரோ கிராம் எடைப் பிரிவு குத்துச் சண்டைப் பிரிவில் வெற்றிபெற்று இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த மஞ்சு வன்னியாராச்சி தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து தற்போது கருத்துக் கூற முடியாதென இலங்கை விளையாட்டுப் பிரிவின் வைத்திய பொது முகாமையாளர் வைத்தியர் கீதாஞ்சன மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

மஞ்சு வன்னியாராச்சி தொடர்பில் பல தகவல்கள் கசிந்துள்ள போதும் உத்தியோகப் பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் முறையான விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் உறுதியான தகவல்களை தெரிவிக்க முடியுமென வைத்தியர் கீதாஞ்சன மெண்டிஸ் கூறியுள்ளார். எனினும் மஞ்சு வன்னியாராச்சி போட்டியில் பங்குபற்றுவதற்கு முன்னர் அவரிடம் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பிரயோகித்துள்ளமை உறுதியாவதாகவும், பொதுநலவாய விளையாட்டுக் குழு இந்திய டில்லியில் இருந்து இலங்கைக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர் இலங்கை அதிகாரிகள் மஞ்சு வன்னியாராச்சியிடம் வினவியபோது, தான் அப்படியொரு ஊக்கமருந்தை பயன்படுத்தவில்லை என அவர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் தான் நோய் ஒன்றுக்காய் சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டதாக மஞ்சு வன்னியாராச்சி கூறியுள்ளார். இந்நிலையில் மஞ்சு வன்னியாராச்சியிடம் இலங்கை ஒலிம்பிக் குழு எதிர்வரும் 14 நாட்களுக்குள் உரிய விளக்கமளிக்குமாறி கோரியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒருநாள் போட்டியில் இருந்தும் முரளிதரன் ஓய்வு

muralidharan.jpgஇலங்கை அணியின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் பின்னர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் இருந்து கிரிக்கெட் உலகிற்கு பிரவேசித்த முரளிதரன் பல்வேறு சாதனைகளையும், சோதனைகளையும் தாண்டித்தான் கிரிக்கெட் உலகில் தனது இடத்தை நிலை நாட்டியிருந்தார். முரளிதரனைப் போன்ற சிறந்த சுழற் பந்துவீச்சாளர் இலங்கை அணிக்கு மட்டுமல்ல உலக அணிக்கும் கிடைக்கமாட்டார்.

முரளிதரன் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டிகளில் அதாவது இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இடம்பெறும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்துள்ளார்.

இவரது ஓய்வு அறிவிப்பானது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தாலும் காலத்தின் கட்டாயம் அவர் ஓய்வு பெற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. அவரது உடற்தகைமை, குடும்ப நோக்கம் மற்றும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கம் எனப் பல காரணங்கள் உண்டு. எது எப்படியோ முரளிதரன் ஓய்வு பெற்றாலும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு சுழற்பந்து வீச்சாளர் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் அவரை பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக பயன்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும்.

டெல்லி கொமன்வெல்த் போட்டியில் ஒரு ஈழத்தமிழரின் தங்க வேட்டை

commonwealt_logo.jpgஅவுஸ் திரேலியாவுக்காக தங்கப் பதக்கங்கள் வென்ற இலங்கைத் தமிழன் பிரஷாந்த் கொமன்வெல்த் போட்டியில் சாதனை டெல்லி கொமன்வெல்த் போட்டியில் ஒரு தமிழர் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் இலங்கை பிரஷாந்த் செல்லத்துரை. அவுஸ்திரேலியாவுக்காக விளையாடி வருகிறார் இந்த ஜிம்னாஸ்ரிக்ஸ் வீரர்.
சர்வதேச அரங்கில் தமிழர்களின் முத்திரை தற்போது அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் இப்போது டெல்லி கொமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டையில் முதலிடத்திலிருக்கும் அவுஸ்திரேலியாவுக்காக ஒரு தமிழர் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அவரது பெயர் பிரஷாந்த் செல்லத்துரை. பூர்வீகம் இலங்கை. இவரது குடும்பத்தினர் இலங்கையில் இனக்கலவரம் பெரிதாக வெடித்த 1983 ஆம் ஆண்டு அங்கிருந்து இடம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்றனர். தற்போது சிட்னியில் வசித்து வருகிறது செல்லத்துரையின் குடும்பம். பிரஷாந்த் அவுஸ்திரேலிய ஜிம்னாஸ்ரிக்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரர். அவுஸ்திரேலியாவுக்காக டெல்லி கொமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்று கொடுத்துள்ளார்.

டெல்லி கொமன்வெல்த் போட்டியில் இரு போட்டிப் பிரிவுகளில் கிட்டத்தட்ட 15,000 புள்ளிகள் வரை பெற்றுள்ளார் பிரஷாந்த். ஜிம்னாஸ்ரிக்ஸ் போட்டிகளில் இந்தளவுக்கு அதிக பட்ச புள்ளிகள் கிடைப்பது மிகவும் அரிதான விடயம். அந்தளவில் பிரஷாந்த் ஒரு சாதனையே படைத்துள்ளார்.

24 வயதேயாகும் பிரஷாந்த் “ரேடியோலோ” மாணவர் அவுஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்தது பிரஷாந்த்துக்கு எளிதாக இருக்கவில்லையாம். கடும் போராட்டங்கள், கடின பயிற்சி, கடுமையான முயற்சிக்குப் பின்புதான் அணியில் இடம்கிடைத்தது. கடந்த மெல்போர்ன் கொமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் பிரஷாந்த். இந்த முறை தங்கத்துடன் திரும்புவேனென சபதமே போட்டிருந்தாராம். சொன்னபடி வாங்கியும் விட்டார். டெல்லி கொமன்வெல்த் போட்டியில் ஒரு ஈழத்தமிழர் அதுவும்  தங்க வேட்டையாடி வருவது பெருமைக்குரிய விடயம் தான்.

ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் சங்கக்காரவுக்கு முதலிடம்

sangakkara.jpgஐ.சி.சி. டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன் அவர் நான்காவது இடத்தில் இருந்தார்.

2002 டிசம்பரில் ஹாமில்டனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு தற்போது தான் முதன் முறையாக 3வது இடத்திற்கு சச்சின் முன்னேறியுள்ளார்.

இதுபோல், வி.வி.எஸ். லட்சு மண் 4 இடங்கள் முன்னேறி 8 வது இடத்தைக் கைப்பற்றியுளார். இலங்கை வீரர் குமார சங்கக்கார முதல் இடத்திலும், ஷேவாக் இரண் டாமிடத்திலும் உள்ளனர். ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியல் நேற்று துபாயில் வெளியிடப் பட்டது.

கொமன்வெல்த் போட்டி இன்று கோலாகலமாக ஆரம்பம்

commonwealt_logo.jpgகொமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் இன்று கோலாகலமாக தொட ங்குகின்றன. இரவு 7 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது. எதிர்வரும் 14ம் திகதி வரை நடைபெறும்.

இன்று தொடக்க விழா நிகழ்ச்சி மட்டும் நடை பெறும். போட்டிகள் எதுவும் இல்லை. திங்கள் முதல் போட்டிகள் தொடங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த காமன் வெல்த் விளையாட்டுத் திரு விழாவில் 71 நாடுகள் கலந்து கொள்கின்றன. 6700 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஆகியோர் இணைந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைக்கின்றனர்.

”எமது கழகத்தில் நிதிநெருக்கடி உள்ளது. ஆனால் எமது முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் இதனைப் பெரிது படுத்துகின்றனர்!!!” வசந்தன் கிருஸ்ணன் (பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம்)

BTSL_Logoலண்டனில் தமிழ் விளையாட்டுக் கழகங்கள் லாபத்துடன் இயங்கி வருகின்றன. அப்படி இருக்கையில் மிகவும் வெறிறிகரமாகச் செயற்பட்ட பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் (British Tamils Spoerts League – BTSL) தற்போது நிதி நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளதாக அக்கழகத்தில் அங்கம் வகிக்கும் விளையாட்டுக் கழகங்கள் தெரிவிக்கின்றன. பந்துகள் வாங்குவதும் நடுவருக்கு கட்டணம் செலுத்துவதுமே பிரச்சினையானதாக மாறியுள்ளது எனவும் தெரியவருகின்றது.

பிரித்தானிய விளையாட்டுக் கழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அதன் பொறுப்பாளர் வசந்தன் கிருஸ்ணனை பிரித்தானியாவின் மிச்சம் பகுதியில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் சந்தித்து உரையாடினோம். அவர்களுடைய விளையாட்டுக்குழுவின் சந்திப்பின் பின்னதாக எமது சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலம்சென்ற போராளி கேணல் கிட்டுவின் பெரிய படத்துடன் இருந்த அந்தச் சந்திப்பு அறையிலேயே இச்சந்திப்பு நடைபெற்றது. தேசம்நெற் சார்பில் நானும் நண்பர் த சோதிலிங்கமும் தமிழர் விளையாட்டுக் கழகம் சார்பில் அதன் பொறுப்பாளர் வசந்தன் கிருஸ்ணன் வணங்கா மண் கப்பலில் பயணம் செய்த ஊடகவியலாளர் உதயணன் மற்றும் இரு உறுப்பினர்களும் இருந்தனர். பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் பொறுப்பாளர் என்ற வகையில் வசந்தன் கிருஸ்ணனின் கருத்துக்கள் மட்டுமே இங்கு பதிவு செய்யப்படுகிறது.

எமது கேள்விகள் பெரும்பாலும் பிரித்தானிய விளையாட்டுக் கழகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், அதன் அதன் நிதி நிர்வாகம், பிரித்ததானிய விளையாட்டுக் கழகத்தின் எதிர்காலம் பற்றியதாகவே இருந்தது.

இவற்றுக்குப் பதிலளித்த வசந்தன் கிருஸ்ணன் விளையாட்டுக் கழகம் சிறிய அளவில் நிதிநெருக்கடியை சந்தித்து உள்ளதாகவும் ஆனால் அது தங்கள் முன்னேற்றத்தை விரும்பாதவர்களால் பெரிதுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

‘பந்துகள் வாங்குவதற்கு பணம் வழங்கப்படுவதில்லை என்பதெல்லாம் உண்மையல்ல’ எனக் குறிப்பிட்ட அவர் ‘கிரிக்கட் விளையாட்டுக்கள் லண்டனின் பல்வேறு பாகங்களிலும் இடம்பெறுவதால் வாங்கிய பந்துகளை குறித்த நேரத்தில் விநியோகிக்க முடிவதில்லை’ எனத் தெரிவித்தார். இதற்கான மாற்று வழியாக விளையாட்டுக் கழகங்களே பந்துகளை வாங்கவும் நடுவருக்கான பணத்தைச் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார். ‘அதற்கான செலவை தாங்கள் அவர்களுடைய கட்டணத்தில் இருந்து குறைத்துக் கொள்வோம்’ எனவும் வசந்தன் சுட்டிக்காட்டினார்.

‘விளையாட்டுக் கழகம் கிரிக்கட் போட்டிகளை ஆரம்பித்த காலங்களில் மிகக் குறைந்த கட்டணத்தையே வசூலித்தது’ என்றும் அதனால் ஆரம்ப வருடங்களில் ஏற்பட்ட நட்டமே இப்போது நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாகவும் வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார்.

தமிழர் விளையாட்டுக் கழகம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக 10 வருடங்களுக்கு மேலாக யாழ் இந்தக்கல்லூரிப் பழைய மாணவர் எஸ் ஸ்கந்தமூர்த்தி என்பவர் கிரிகட் போட்டிகளை ஆண்டு தோறும் நடாத்தி வந்தார். இவருடைய லீக்கில் இருந்த விளையாட்டுக் கழகங்களைக் கவருவதற்காகவே பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் மிகக் குறைந்த கட்டணத்தை அறவிட்டது. அதில் ஓரளவு வெற்றியும் கண்டது. ஆனால் அதுவே இப்போதைய நெருக்கடிக்கு காரணமாகவும் அமைந்துள்ளது என வசந்தன் கிருஸ்ணன் தெரிவிக்கின்றார்.

‘ஸ்கந்தமூர்த்தி உருவாக்கிய விளையாட்டுக் கழகத்தில் இருந்து ஆரம்பத்திலேயே வெளியேறி தங்களுடன் இணைந்தவர்கள்  அதிருப்தியடைந்து வெளியேறியவர்கள். அவர்கள் தாயகப் பற்றுடையவர்கள்’ எனக் கூறும் வசந்தன் கிருஸ்ணன் ‘இறுதியில் வெளியேறி தங்களுடன் இணைந்தவர்கள் வேறு வழியின்றியே தங்களுடன் இணைந்தனர்’ எனக் கூறினார். ‘பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்துடன் பெரும்பாலான கழகங்கள் இணைந்த நிலையில் ஸ்கந்தமூர்த்தியினால் விளையாட்டுப் போட்டிகளை நடாத்த முடியாது போனமையினால் ஏனைய கழகங்கள் விரும்பமின்றி விளையாட்டுப் போட்டியில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே வந்து இணைந்தனர்’ என்றும் வசந்தன் கிருஸ்ணன் விபரித்தார். இவ்வாறான விளையாட்டுக் கழகங்களே தற்போது சிறிய விவகாரங்களையும் பெரிதுபடுத்துவதாக அவர் தெரிவித்தார்.

பிரித்தானிய விளையாட்டுக் கழகம் தனது கணக்கு விபரங்களை ஏன் இதுவரை வெளியிடவில்லை எனக் கேட்கப்பட்ட போது, ‘கழகங்கள் விரும்பும்பட்சத்தில் அதனைப் பார்வையிட முடியும்’ எனத் தெரிவித்தார் வசந்தன் கிருஸ்ணன். ‘அண்மையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது அதில் கணக்கு விபரங்களை வெளியிட்டோம். ஆனால் பல கழகங்கள் அதில் சமூகமளிக்கவில்லை’ எனவும் வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார். உங்கள் விளையாட்டுக் கழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் உறுப்புரிமைக் கட்டணம் செலுத்தியே உறுப்பினராக உள்ளனர். ஆகவே நீங்கள் கணக்கு விபரத்தை அவர்களுக்கு மின் அஞ்சலூடாக அனுப்ப முடியும் அல்லது உங்கள் இணையத்திலேயே பிரசுரிக்க முடியுமே எனக் கேட்ட போதும் ‘நாங்கள் கணக்கு வழக்கை காட்டத தயாராக உள்ளோம். விரும்பியவர்கள் எங்களை அணுகலாம்’ எனப் பதில் தரப்பட்டது.

தங்களுக்கு உள்ள நிதிநெருக்கடிகளை தாங்கள் ஓரளவு சமாளித்து வருவதுடன் கழகங்களிடம் பெற்ற கடன்களையும் மீளச் செலுத்தி வருவதாக வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார். இன்னும் சில ஆயிரம் பவுண்களே கடன்கள் இருப்பதாகத் தெரிவித்த வசந்தன் கிருஸ்ணன் இன்றுள்ள அரசியல் சூழலால் பல்வேறு தரப்பினரும் இந்த விளையாட்டுக் கழகத்தில் ஒரு கண் வைத்துள்ளதாகவும் இதனால், தான் உள்முரண்பாடுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளானதாகவும் கூறினார்.

எவ்வாறான நெருக்கடிகள் சிக்கல்கள் தோண்றிய போதும் பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் தனது பயணத்தை உறுதியுடன் தொடரும் என்றும் அவர் அழுத்தமாகத் தெரிவித்தார். தற்போதுள்ள நெருக்கடியில் இருந்து பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் மேவி வரும் என்ற நம்பிக்கையுடன் அவர் எமக்கு விடைதந்தார்.

._._._._._.

லண்டன் குரலில் வெளியான செய்தி:

100,000 பவுண் நிதிப்புரள்வு – 45,000 பவுண் லாபம் ஈட்டக் கூடிய அமைப்பு! 5 வருடங்களாக கணக்கு வழக்கு இல்லை! பிரித்தானிய தமிழர் விளையாட்டு கழகம் !

பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்தின் எதிர் காலம் கேள்விக் குறியாகி உள்ளது. ஆண்டுக்கு 50 000 பவுண்களை வரை லாபமீட்டக் கூடிய பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் கணக்கு வழக்குகளில் நட்டம் காட்டப்படுவதாக குற்றம்சாட்டப்படுகின்றது.

துடுப்பாட்ட விளையாட்டுக்கான பந்துகள் வழங்கப்படவில்லை, நடுவர்களுக்கு திகதியிடப்படாமல் வழங்கப்பட்ட காசோலைகள் திரும்புகின்றன, சில போட்டிகளுக்கு மைதானமே ஏற்பாடு செய்யப்படவில்லை. சில இடங்களில் பிரித்தானிய தமிழ் விளையாட்டு கழகத்திற்கு மைதானங்களை வழங்க உரிமை நிறுவனங்கள் மறுக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் தாயகத்தில் இருந்து வந்த வசந்தன் கிருஸ்ணன் என்பவர் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இவர் மட்டுமே பிரித்தானிய தமிழ் விளையாட்டு கழகத்தின் அறியப்பட்ட பொறுப்புடைய ஒருவராக உள்ளார். இவரைத்தவிர அந்த அமைப்பில் வேறு எவரையும் 1200 விளையாட்டு வீரர்களும் 60 விளையாட்டு கழகங்களும் அறிந்திருக்கவில்லை.

ஆனால் இந்த வசந்தன் என்ற பொறுப்பாளரின் பின்னால் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நிதி சேகரிப்பு விடயங்களுடனும் தொடர்புடைய தனம் என்பவர் இயங்குவதாக லண்டன்குரலுக்குத் தெரியவருகிறது.

100 000 பவுண் நிதி வருமானத்தையும்  45 000 செலவு தவிர்ந்த லாபத்தையும் பெறக்கூடிய பிரித்தானிய தமிழ் விளையாட்டக் கழகம் நட்டத்தில் உள்ளதாகக் கூறி விளையாட்டுக் கழகங்களின் பல்லாயிரக் கணக்கான பணத்தை காணாமலாக்கி உள்ளது.

1200க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களிடம் இருந்து ஆண்டுக்கு 100 000 பவுண்கள் வரை நிதியைப் பெற்றுக் கொள்கின்ற பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் (British Tamil Sports League) தற்போது நிதிப் பிரச்சினையில் சிக்கி உள்ளது. தங்களுடைய பொறுப்பு ”to develop such a sports organization and leagues set-up where sports and sportsmanship is truly developed and sustained at the same time”, என்று தங்கள் இணையத்தில் தெரிவித்துள்ள அமைப்பின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

அண்மைக் காலமாக பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் தன்னுடைய உறுப்பினர்களுக்கு வழங்கிய உறுதிமொழியில் இருந்தும் கடமையில் இருந்தும் தவறியுள்ளது. விளையாட்டு வீரர்களிடம் இருந்தும் விளையாட்டுக் கழகங்களிடம் இருந்தும் குறித்த காலத்தில் நிதியை வசூலித்த பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் தான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத்தவறியுள்ளது.

வாரம் தோறும் விளையாட்டுக் குழுக்களிடையே நடைபெறும் போட்டிகளை ஒழுங்கமைப்பதில் பல தவறுகள் விடப்பட்டு உள்ளது. கிரிக்கட் விளையாட்டில் தேவையான பந்துகள் வழங்கப்படவில்லை. நடுவர்களுக்கு வழங்க வேண்டிய கட்டணம் வழங்கப்படாததால் நடுவர்கள் கடமைக்கு வரத் தவறியுள்ளனர். சில போட்டிகளுக்கு மைதானமே பதிவு செய்யப்படாத சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக விளையாட்டுக் கழகங்கள் விளையாட்டு வீரர்கள் வெறுப்படைந்து போயுள்ளனர்.

பிரித்தானிய தமிழ் விளையாட்டு கழகத்தில் 40 துடுப்பாட்ட கழகங்களும் 20 உதைபந்தாட்டக் கழகங்களுமாக 60 விளையாட்டுக் கழகங்கள் 1200 விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.
அவை ஒவ்வொன்றும் ஆண்டுக்கு பின்வரும் கட்டணங்களைச் செலுத்துகின்றனர்.
விளையாட்டு வீரரின் உறுப்புரிமைக் கட்டணம் 10.00 பவுண்
விளையாட்டுக் கழகத்தின் நுழைவுக் கட்டணம் 605.00 பவுண்
Twenty – 20 துடுப்பாட்ட போட்டிகளுக்கான நுழைவுக்கட்டனம் 170.00 பவுண்
18 துடுப்பாட்ட போட்டிகளுக்கான அம்பயருக்கான கட்டணம் 360.00 பவுண் (ஒரு போட்டிக்கு ஒரு கழகம் 20 பவுண் செலுத்த வேண்டும் 18 போட்டிகளுக்கு)
18 துடுப்பாட்ட போட்டிகளுக்கான 18 பந்துகளுக்கான கட்டணம் 180.00 பவுண் (ஒரு பந்து 10.00 பவுண்)

இவ்வாறு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு இவற்றுடன் மைதானங்களுக்கான கட்டணமும் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு விளையாட்டுக் கழகமும் 1500 பவுண்கள் வரை கட்டணமாகச் செலுத்தி இருந்தனர்.

கட்டணங்களை ஆர்வமுடன் வசூலித்தவர்கள் அதற்கான சேவையை வழங்கவில்லை. இது பற்றி அறிய பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் பொறுப்பாளர் வசந்தன் கிருஸ்ணனுடன் தொடர்புகொள் முயற்சித்த போதும் அது வெற்றியளிக்கவில்லை. (லண்டன் குரல் பதிப்பிற்குச் சென்ற பின் வசந்தன் கிருஸ்ணனுடன் தொடர்புகொள்ள முடிந்தது. அதன் பின்னர் அவர்களுடைய அலுவலகம் சென்று வசந்தன் கிருஸ்ணனைச் சந்தித்தோம். அதன் விபரம் மேலுள்ளது.)

பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் பொறுப்பற்ற செயல் விளையாட்டு வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து வசந்தன் விளையாட்டுக் கழகங்களுக்கு யூலை 10, 2010ல் ஒரு மின்அஞ்சலை அனுப்பி இருந்தார். இம்மின் அஞ்சல் லண்டன் குரலின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அந்த மின்அஞ்சலில் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ”As you all aware, we have come across with some logistical problems in our 5th year Cricket league in 2010”, என வசந்தன் குறிப்பிட்டு உள்ளார். அதற்கு தீர்வாக விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்களில் இருந்து
1.    Organisation committee
2.    Team selecting committee
3.    Decision making committee
ஆகிய மூன்று குழுக்களை உருவாக்குவதாகக் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் இவ்வாறான குழுக்கள் இதுவரை அமைக்கப்பட்டது பற்றி தங்களுக்குத் தெரியாது என லண்டன் குரல் தொடர்புகொண்ட விளையாட்டு கழகங்கள் தெரிவித்தன.

அம்பயர் (நடுவர்)களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் வங்கிக் கணக்கில் பணம் இன்றித் திரும்பின. அதனால் நடுவர்கள் வராமல் இருப்பது ஒரு பிரச்சினையாக இருந்தது. பந்துகளும் வழங்கப்படுவதில்லை. அதனால் எதிர்காலத்தில் நடுவருக்கான கொடுப்பனவையும் பந்துகளை வாங்கும் பொறுப்பையும் கழகங்களுக்கே விட்டுவிடுவதாக வசந்தன் தன் மின் அஞ்சலில் குறிப்பிட்டு உள்ளார். கடந்த கால போட்டிகளில் நடுவருக்கான பணத்தைக் கட்டியும் நடுவர் வராது இருந்திருந்தால் அத்தொகையை அடுத்த ஆண்டு கண்டனத்தில் கழிப்பதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கு முன்னர் இவ்வாண்டு நடுப்பகுதியில்  விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு நிதி நெருக்கடி இருப்பதாகவும் அதற்காக விளையாட்டுக் கழகங்கள் 500 முதல் 1500 பவுண் வரை முற்பணமாகச் செலுத்தினால் யூன் 20 2010 ரூனமன்ற் முடிவில் அப்பணம் கையளிக்கப்படுவதுடன் அடுத்த ஆண்டு அவர்கள் கட்ட வேண்டிய லீக் கட்டணத்தில் அவர்கள் செலுத்திய தொகை கழிக்கப்படும் எனவும் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் சார்பில் வசந்தன் கேட்டு இருந்தார்.  இதற்கு சில விளையாட்டுக் கழகங்கள் செவிசாய்த்து பணத்தைச் செலுத்தியும் இருந்தன.

இது தொடர்பாக மகாஜநாக் கல்லூரியின் விளையாட்டுக் கழகத்துடன் தொடர்பு கொண்ட போது தாங்கள் கழகமாக பணம் செலுத்தவில்லை என்றும் தங்களுடைய இரு விளையாட்டு வீரர்கள் ஆளுக்கு 750 பவுண் வழங்கி 1500 பவுண்களை பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்திற்கு செலுத்தியதாக புவனேந்திரன் தெரிவித்தார். வேறு சில கழகங்களும் இவ்வாறு முற்பணத்தைச் செலுத்தி இருந்தனர். ஆனால் யூன் 20 ரூனமன்ற் நிறைவு பெற்று இரு மாதங்கள் ஓடிய நிலையிலும் இப்பணம் திருப்பி வழங்கப்படவில்லை. அதுவே வசந்தன் மின் அஞ்சல் அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. இருந்தும் வசந்தன் இதனை நடுவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற ஒரு 20 பவுண் பிரச்சினையாக உண்மையை மறைத்துள்ளார்.

வசந்தனுடைய மின் அஞ்சலுக்கு கடுமையான பதில்களை சில விளையாட்டு கழகங்கள் அனுப்பி வைத்தள்ளன. அவற்றில் சில லண்டன்குரலின் கவனத்திற்கும் அனுப்பப்பட்டு இருந்தது. யூலை 12 2010ல் கோட்டைமுனை விளையாட்டுக் கழகம் சார்பாக கார்த்திக் இவ்வாறு எழுதி இருந்தார். ”Hi Vasanthan, We are also in the same position, Just give us the money back and we have no intention of playing in your league for next year”.

இது பற்றி RLSSC விளையாட்டுக் கழகம் சார்பில் ரஞ்சன் எழுதிய மின் அஞ்சலில் ”Hi Vasanthan, Our club not accepting all this rubbish after five years. What happened to our money we already paid to you?” எனக் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் விளையாட்டுப் போட்டிகளை ஒழுங்கமைக்க லண்டனை தென்கிழக்கு, தென்மேற்கு வடகிழக்கு வடமேற்கு எனப் பிரித்து நால்வரை நியமித்துள்ளனர். அவர்கள் விபரம்
Southeast – Para (Lewshiam CC)
Southwest – Ragulan (Bloomfield CC)
Northeast – Sugumar (Five Star CC)
Northwest – Gobi (Tamil Union CC)

இவர்களில் லூசியம் விளையாட்டுக் கழகம் பரா, ஃபைவ் ஸ்ரார் விளையாட்டு கழகம் சுகுமார் ஆகியோருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. இவர்கள் பிரித்தானிய தமிழர் விளையாட்டு கழகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை உறுதிப்படுத்தினர். தங்கள் பகுதிகளில் உள்ள கழகங்கள் அதிருப்தி அடைந்துள்ளதையும் தெரியப்படுத்தினர்.

கடந்த ஐந்த ஆண்டுகளில் எப்போதாவது கணக்கு விபரங்கள் விளையாட்டு கழகங்களுக்கு காட்டப்பட்டதா எனக் கேட்ட போது பராவும் சுகுமாரும் இல்லையென்றே பதிலளித்தனர்.
பரா தனது பதிலில் ‘முதல் மூன்று வருடமும் பிரச்சினைகள் எதுவும் எழவில்லை. இப்போது தான் பிரச்சினைகள் எழுந்தள்ளது’ என்றார். அவர் மேலும் கூறுகையில் ‘எனக்கும் இந்த பண நிர்வாக விடயங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஒரு உதவியாக போட்டிகளை ஒழுங்குபடுத்தக் கேட்டார்கள் செய்கிறேன்’ என்றார். ‘இந்த வருடமே பணக் கஸ்டம் என்றால் ஏற்கனவே சில கிளப்புகளிடம் பணம் பெற்றுள்ளதால் அடுத்த வருஸம் எப்படி இருக்குமோ தெரியாது?’ என்றும் பரா சந்தேகத்தை வெளியிட்டார்.

சுகுமார் பதிலளிக்கையில் ‘அப்போது பணம் ஊருக்கு அனுப்பப்படுவதாகச் சொன்னார்கள். நாங்களும் யாரும் கணக்கு கேட்க விரும்புவதில்லை. இப்போது அங்கு பணம் அனுப்ப இவர்களுக்கு வழியில்லை. என்ன நடக்கிறது என்று கேட்கிறார்கள். பாஸ்ட் இஸ் பாஸ். இனி சரியாகச் செய்ய வேணும் என்று கேட்கிறார்கள். சில கிளப்புகள் கடுமையாக இருக்கிறார்கள். தாங்கள் அடுத்த வருடம் விளையாட வர மாட்டார்கள் என்கிறார்கள்’ என்றார். ‘இந்த வருசம் கிளப்புகள் பணம் செலுத்திவிட்டினம். அடுத்த வருஸம் அவர்கள் குறைந்த தொகையே கட்ட வேண்டி இருக்கும். அடுத்த வருஸம் எப்படிச் சமாளிப்பார்கள் என்று தெரியாது’ என சுகுமாரும் பரா போன்றே சந்தேகம் எழுப்பினார்.

விளையாட்டுப் போட்டிக்கான செலவுகள் அனைத்தும் 60 விளையாட்டுக் கழகங்களிடம் இருந்தும் பெறும் வேறுவேறு கட்டணங்களில் இருந்து பெறப்படுகிறது. மேலும் விளையாட்டுவிழா நுழைவுக் கட்டணம் செவனியர் மூலம் திரட்டப்படும் விளம்பரப் பணம், ஸ்பொன்சேர்ஸ் என்று பன்முகப்பட்ட வருவாய்கள் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு உண்டு. இவற்றைவிடவும் விளையாட்டுக் கழகத்தின் நுழைவுக்கும் விளையாட்டு வீரர்களின் உறுப்புரிமைக்கும் பெறப்படும் கட்டணம் 750 பவுண் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு உரியது. அதாவது ஆண்டுக்கு 45000 பவுண் செலவு தவிர்ந்த பணம்.  இந்நிலையில் பிரித்தானிய விளையாட்டுக் கழகம் நிதிப் பிரச்சினைக்கு உள்ளானதற்கான காரணங்கள் மர்மமானதாகவே உள்ளது. அதற்கான காரணங்கள் தெரியாத நிலையிலேயே உறுப்புரிமை செலுத்திய விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.

லண்டனில் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு முன்னரேயே இதில் தேர்ச்சி பெற்ற அமைப்புகள் இருந்தன. கிழக்கு லண்டனில் ஸ்கந்தமூர்த்தி கிரிக்கட் கழகங்களை இணைத்து விளையாட்டுப் போட்டிகளை பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடாத்தி வந்தார்.

தாயக மக்களுக்கு உதவுகின்றோம் தமிழ் கழகங்களில் வேறு இனத்தவர்கள் அனுமதிக்கப்பட முடியாது என்ற விடயங்களை முன் வைத்து பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் விளையாட்டுக் கழகங்களை தன் பக்கம் வளைத்தப் போட்டது. அதன் பின்னர் தங்கள் விதிமுறைகளை தேவைக்கு ஏற்ப வளைத்தனர். தமிழ் கழகங்களில் வேறு இனத்தவர்கள் இருக்கலாம் ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் என மட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் தாய் அல்லது தந்தை தமிழராக இருக்க வேண்டும் என்ற செருகல்கள் அனைத்தும் புகுத்தப்பட்டது. இருந்தும் தாயக மக்களுக்கு சில உதவிகள் கிடைக்கும் என பல விடயங்களும் பொறுத்துக் கொள்ளப்பட்டது. இப்போது நிலைமை முற்றாக மாறி உள்ளது.

தமிழ் பாடசாலைகள் விளையாட்டுக் கழகம் (Tamil Schools Sports Association – TSSA) கடந்த 19 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. இது பற்றி அவ்வமைப்பின் தலைவர் ந கெங்காதரன் லண்டன்குரலுக்குத் தெரிவிக்கையில், ‘TSSA என்றுமே விளையாட்டு விழாக்களை போட்டிகளை நடாத்தி நட்டப்பட்டதில்லை’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவு அறிக்கை கழகங்களின் பார்வைக்கு இருக்கும். பெறப்பட்ட லாபத்தில் மூன்றில் இரு பங்கு போட்டிகளில் கலந்துகொண்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களுக்கு பிரித்து வழங்கப்படும். அதனை அவர்கள் தங்கள் பாடசாலை வளர்ச்சிக்குப் பயன்படுத்தவார்கள். மூன்றில் ஒரு பங்கு TSSA இன் வளர்ச்சிக்கு அதன் வைப்பிலிடப்படும்’ எனத் தெரிவித்தார்.

பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் போட்டிகளை நடாத்திய அதே காலப்பகுதியில் தனிப் பாடசாலையாக தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி தங்கள் 150 ஆண்டு விழாவைக் குறிக்கும் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விளையாட்டுப் போட்டிகளிலும் தாங்கள் சில ஆயிரம் பவுண்களை யாவது லாபமீட்டியதாக அக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். தங்கள் வரவு செலவுக் கணக்கு வரும்போது உண்மையான தொகை தெரியவரும் எனத் தெரிவித்த அவர், பாடசாலையின் 150வது விழா என்பதால் தாங்கள் செலவுகளை சற்று அதிகமாகவே மேற்கொண்டதாவும் கூறினார்.

லண்டன்குரலுக்கு கிடைக்கின்ற தகவல்களும் ஏனைய விளையாட்டுக் கழகங்களின் அனுபவங்களும் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தில் பாரதூரமான நிதி நிர்வாகச் சீர்கேடுகள் இடம்பெற்றிருப்பதையே காட்டி நிற்கின்றது.