Multiple Page/Post

இலங்கையின் பொருளாதாரக் குறியீடுகள் என்பிபி அரசுக்கு சாதகமாக உள்ளது!

இலங்கையின் பொருளாதாரக் குறியீடுகள் என்பிபி அரசுக்கு சாதகமாக உள்ளது!

நிதித் தரநிர்ணய நிறுவனமான பிச் ரேற்றிங் (Fitch Rating) இலங்கையினுடைய கடன்பெறு தகுதியை அதிகரித்துள்ளது. 2022இல் நாட்டினுடைய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாததால் நெருக்கடிக்கு உள்ளான இலங்கை அதனுடைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான டொலர் கையிருப்பு இல்லாமல் ஸ்தம்பித்த நிலையிலிருந்தது.

இலங்கையைக் காப்பாற்றுகின்றோம் என்ற பெயரில் சர்வதேச நாணயநிதியம் கடனின் வட்டியையும் முதலையும் தங்களுக்கு சேதமில்லாமல் பெறுவதற்கான, கடன் மீள்செலுத்துகையை மீள்வரைபு செய்து அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் உடன்பாடும் எட்டப்பட்டது. அதன் பின் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு பாதகமில்லாமல் அல்லது மக்களுக்கு வரக்கூடிய நெருக்கடிகளை கூடியவரை குறைத்து இந்த கடன் மீள்செலுத்துகையை மேற்கொள்ள பல ஆடம்பரச் செலவீனக் குறைப்புகளையும், வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களையும் முன்னெடுத்தமைக்கு தற்போது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி கிட்டியுள்ளது. இதுவரை Issuer Default Rating (IDR), ‘RD’ (Restricted Default) இல் இருந்து ற்கு ‘CCC+’ ற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இலங்கை பெரும்பாலான நாடுள் நிறுவனங்களோடு கடன் மீள்வரைபை மேற்கொண்டுவிட்டது. அதனால் கடன் மீள்செலுத்துகையில் இலங்கைக்கு அதற்கான கால அவகாசம் கிடைத்துள்ளது. 2026இல் இலங்கையின் அந்நியச்செலாவணிக் கையிருப்பு 8.7 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என பிச் ரெற்றிங் மதிப்பிடுகின்றது. அத்தோடு அரசின் கடனுக்கும் மொத்த தேசிய உற்பத்திக்கும் உள்ள விகிதம் 90மூ 2028இல் குறையும் என்றும் இதற்கான வட்டிக்கும் மொத்த தேசிய உற்பத்திக்கும் உள்ள விகிதம் 2021 இல் 67மூ இல் இருந்தது 42மூ ற்கு குறையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் சிசிசி ரேற்றிங்கில் உள்ள நாடுகளில் இவ்விகிதாசரம் 16மூ ஆக இருக்க வேண்டும். இன்னமும் இலங்கையின் இந்த விகிதம் மிக உயர்வாகவே உள்ளது.

அதேசமயம் அரசாங்கத்தின் வருமானத்திற்கும் மொத்த தேசிய உற்பத்திக்குமான விகிதாசாரம் 2023இல் 11மூ ஆக இருந்து 2026இல் 15மூ ஆக உயரும் எனவும் பிச் ரேற்றிங் மதிப்பிட்டுள்ளது. இலங்கையுடைய பொருளாதார வளர்ச்சி 2022இல் 7.4 வீதமாக இருந்து 2023 இல் 2.2 வீதமாகச் சுருங்கியது. 2025 – 26 இல் இது 3.6 முதல் 4.2 வீதமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. விலைவீக்கம் 2022இல் 67 வீதமாக இருந்து 2025 – 26 இல் 5 வீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தரவுகளின் அடிப்படையில் புதிய அரசாங்கம் பொருளாதார நிலையில் சரியான பாதையில் இருந்தாலும் அபாயங்கள் முழுமையாகக் கடக்கப்படவில்லை. அதற்கான கால அவகாசமும் புதிய அரசுக்கு இல்லை.

கல்விக்கு ஒரு பிள்ளைக்கு மாதம் 15,000 ரூபாய்; செலவு! தனியார் கல்வி நிறுவனங்களின் முடிவின் ஆரம்பம்!

கல்விக்கு ஒரு பிள்ளைக்கு மாதம் 15,000 ரூபாய் செலவு! தனியார் கல்வி நிறுவனங்களின் முடிவின் ஆரம்பம்!

 

பாடசாலை ஆசிரியர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் வகுப்புகளை நடாத்துவதற்கு தடைவிதித்து மேல் மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர்கள் பாடசாலை நேரம் முடிந்த பிறகும், வார விடுமுறை நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் கூடுதல் வகுப்புகளை பல்வேறு வெளி இடங்களில் நடத்தி வருமானம் ஈட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் கல்வி அமைச்சுக்களால் சுற்றறிக்கைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

இந்நடைமுறையை யாழ் மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்பள்ளி கல்விச் செயற்பாட்டாளர் என் சச்சிதானந்தன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். வடக்கில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சி நெறிகளை யாழ் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களில் ஆரம்பிப்பதில் முன்நின்ற இவர், இலவசக் கல்வி பெயரளவில் உள்ளதேயல்லாமல் உண்மையில் மூன்று பிள்ளைகளையுடைய குடும்பம் மாதம் 50,000 ரூபாய்களை தனியார் கல்விக்குச் செலவிடவேண்டியுள்ளதாக தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இதே கருத்தை வெளியிட்ட வறணி ஆரம்பப் பாடசாலையின் அதிபர் நாகப்பர் கண்ணதாசன், 9ம் தரம் வரை மாணவர்கள் தனியார் கல்வியை நாட வேண்டிய அவசியம் இல்லை எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்வது கற்பதற்காக என்பதிலும் பார்க்க அதுவொரு கலாச்சாரமாகிவிட்டது.

நேர்காணலை மேற்கொண்ட த ஜெயபாலன், “தமிழ் மாணவர்கள் தனியார் கல்விக்கு இப்பெரும்தொகையைச் செலவழிக்க, இவர்களின் பெற்றோர்கள் செல்வந்தர்களாக வந்துவிட்டார்களா? அல்லது மாணவர்கள் சோம்பேறிகளாக ஆகிவிட்டார்களா?” எனக் கேள்வி எழுப்பினார். தன்னூக்கக் கல்வி முக்கியத்துவம் பெற்றுள்ள இன்றைய காலகட்டத்தில், தெரியாத ஒரு விடயத்தை கற்றுக்கொள்வது என்பது ஒரு பட்டனை அழுத்தும் தொலைவில் இருக்கும் இன்றைய காலத்தில் தனியார் கல்வி ஏன் அவசியம் என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. கல்வியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் இல்லை என்பதைக் கவனிக்க.

இதேவேளை, தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் இறுக்கமான தீர்மானங்களை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மேற்கொண்டிருந்தார். இதன்படி, தரம் 9 மற்றும் தரம் 9 இற்கு கீழப்பட்ட வகுப்புக்களுக்கான தனியார் கல்வி செயற்பாடுகள் மற்றும் குழு வகுப்புக்களை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் வேளைகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு நேரமாகவும் நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தனியார் கல்வி நிலைய வாசலில் பெற்றோர்கள் காத்திருப்பதனால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளை உரிய முறையில் நிர்வாகிகள் கட்டுப்படுத்த வேண்டும். தவறினால் பொலிஸாரின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக கடந்த காலங்களிலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆயினும் அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தபடவில்லை. புதிய அரசாங்கத்தின் கீழ் இவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கூகிளும் ஆட்குறைப்புச் செய்கின்றது! இலங்கை அரசும் ஆட்குறைப்புச் செய்ய வேண்டியுள்ளது!

கூகிளும் ஆட்குறைப்புச் செய்கின்றது! இலங்கை அரசும் ஆட்குறைப்புச் செய்ய வேண்டியுள்ளது!

கூகுளின் நிர்வாகப்பிரிவில் பணியாற்றும் 10 சதவீதம் ஊழியர்களை பணி விலக்கு செய்யப் போவதாக கூகுள் அறிவித்துள்ளது. கூகுளின் செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி “நிர்வாகப் பிரிவில் ஆட்குறைப்பு செய்யப்படும் அதேநேரம் சிலரது பணிநிலை வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படும். இதன் மூலம் கூகுளின் செயல்திறனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்கின்றது கூகுள்.

“கூகுளே உலகமயம்“ என்று சொல்லுமளவுக்கு எந்த விடயமாக இருந்தாலும் கூகுளில் பதில் கிடைத்துவிடும். இந்த நிறுவனத்தில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்காண ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தமிழ்நாட்டில் பிறந்த தமிழரான சுந்தர் பிச்சை கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பில் உள்ளார். கடந்த வருடம் 2023 இல் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் 12 ஆயிரம் ஊழியர்களை நீக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையை பொறுத்தவரை கூகுகளை முன்மாதிரியாக கொண்டு அரச துறைகளில் தேவைக்கு அதிகமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அரச ஊழியர்களை பணிநீக்க வேண்டும் எனபது சர்வதேச நாணய நிதியக் கடன் மீள்வரைவு உடன்பாட்டின் நிபந்தனைகளில் ஒன்று. குறிப்பாக 14 இலட்சம் அரச ஊழியர்களை 7 இலட்சமாக படிப்படியாக குறைப்பதன் மூலம் அரச இயந்திரத்தை வினைத்திறனாக செயற்பட வைக்கப்பட வேண்டும் என்பதே இலக்கு. அதுதவிர சிலரது பணிநிலைகளை வேறு பிரிவுகளுக்கு மாற்றலாம். இனிவரும் காலங்களில் இலங்கை டிஜிற்ரைலைசேனை நோக்கி நகரும்போது அரசதுறையில் பணிபுரியும் ஊழியர்களை அதற்கு தயார்படுத்தலாம்.

அவர்களினுடைய கல்வித்திறனை புதிய துறைகளில் உருவாகப்போகும் வேலைகளுக்கு மேம்படுத்தலாம் (upskill). தேவைக்கதிகமாக அரச துறைகளில் ஊழியர்களை பணிக்கமர்த்தி அவர்களுக்கு செய்வதற்கு கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் இல்லாமல் வைத்திருப்பதன் மூலம் மக்களின் வரிப்பணம் விரையமாக்கப்படுவதை தவிர்க்கலாம். அதற்காக இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி 1500 அரச பணியாளர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. அரச பணியாளர்கள் வேகமான மாற்றம் ஒன்றிற்குள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஜனாதிபதியின் பல்வேறு தகவல்களிலும் இது வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

 

எளிமையாக இருப்பது வைரலாகும் அளவுக்கு அரசியல்வாதிகளும் மக்களும் கெட்டுப்போனார்களா?

எளிமையாக இருப்பது வைரலாகும் அளவுக்கு அரசியல்வாதிகளும் மக்களும் கெட்டுப்போனார்களா?

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அநுரகுமார திசநாயக்க ஜனாதிபதியானதிலிருந்து அவரது எளிமையும் ஆடம்பரமற்ற நடவடிக்கைகளும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜனாதிபதி ஒருவர் இவ்வாறு மக்களோடு மக்களாக கலந்து வாழ்வது, நடமாடுவது என பொதுமக்கள் எளிதில் அணுகக் கூடிய நபராக இருப்பது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வாதப்பிரதிவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.

இலங்கை அரசியலைப் பொறுத்தவரை பெரும்பாலும் பிரபுத்துவ, நிலவுடமையாளர்களும் மற்றும் மேல்தட்டு வர்கத்தினரும் அவர்களின் வாரிசுகளுமே மாறி, மாறி அதிகாரத்தில் இருந்திருக்கின்றார்கள். இந்தப்போக்கை இலங்கையில் மட்டுமல்ல தெற்காசியாவிலும் பெரும்பாலான நாடுகளில் காணலாம்.

அநுரகுமார தான் முதல் தடவையாக தரைப் பாதையினூடாக யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதியாவர். சமீபத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார நாடு திரும்பும் போது அவர் பயணித்த விமானத்தில் எக்கொனமிக்ஸ் வகுப்பில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்த பயணிகளுடன் நலம் விசாரித்து அளவளாவியது சுற்றுலாப் பயணிகள் உட்பட பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்து. இந்த சம்பத்தை நேரில் பார்த்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறவினர்கள் அநுரகுமாரவின் நடத்தையை பாராட்டி சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருந்தனர்.

நேற்றைய தினம் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாரை பார்க்க சென்ற ஜனாதிபதி அநுர மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து தாயாரை பார்வையிட்ட செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாயாரைப் பார்ப்பதற்காக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இதன்போது பிடிக்கப்பட்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இவ்வாறு அதிகாரத்தின் உச்சத்திலிருக்கும் ஆட்சித் தலைவர்கள் மேற்கு நாடுகளில் தமது அன்றாட வாழ்க்கையில் தமக்கான வேலைகளை அவர்களே செய்வது சர்வ சாதாரணம். குறிப்பாக தமது தனிப்பட்ட குடும்ப தேவைகளுக்காக பொருட்கள் வாங்க செல்லும் அவர்கள், மக்களோடு மக்களாக வரிசையில் காத்து நின்று பணம் செலுத்தும், தமது அலுவல்களை முடிப்பதும் பேசு பொருளாவது இல்லை. ஜேர்மனியின் முன்னாள் கன்சலரின் அங்கேலா மார்க்கல் பேர்லினில் பல்பொருள் அங்காடியில் தானே சென்று பொருட்கள் வாங்குவது தான் வழமை. அதேமாதிரி நெதர்லாந்து ஆட்சியாளர் தானே சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது வழமை. ஆட்சியாளர்கள் மக்களோடு மக்களாக வாழும் போது தான் அவர்கள் மக்களுக்கு என்ன தேவை என்பதையும் அறியக் கூடியதாக இருக்கும்.

இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல்வாதிகளும் பெரும்பாலும் அரச மருத்துவமனைகளை நாடுவது இல்லை. மாறாக இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைகளையே நாடும் போக்கு காணப்படுகிறது. நாட்டின் – மக்களின் தலைவர்களான பிரதிநிதிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசு மருத்துவமனைகளை நாடாத காரணத்தால் அரச மருத்துவமனைகள் இயங்கும் நிலை பற்றிய அடிப்படை அறிவு இதுவரை ஆட்சியில் இருந்த எந்த அரசியல் தலைவர்களுக்கும் தெரிந்ததில்லை. இது மருத்துவ மாபியாக்கள் இலகுவாக தம் இஷ்டத்துக்கு செயல்படவும் , மருத்துவர்களின் அசட்டையீனங்களுக்கும், மருத்துவசாலை அதிகாரிகளின் அடாவடிகளுக்கும் காரணமாக உள்ளது.

வடக்கில் இடம்பெறும் மருத்துவ மாஃபியாக்களை பற்றி தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் யாருமே மறந்தும் வாய் திறந்தது கிடையாது. ஆர்வக்கோளாறு பாராளுமன்ற உறுப்பினர் ஊசி அர்ச்சுனா மருத்துவ மாபியாக்களை சாடி பாராளுமன்ற ஆசனம் ஒன்றை பெற்றிருந்தாலும் கூட ஆக்கப்பூர்வமான வகையில் மருத்துவமாபியாக்களை அவரால் அம்பலப்படுத்த முடியவில்லை. இதேவேளை தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்லக்கூடாது, நாட்டில் அதனால் தமிழர் உரிமைகளை பெறுவது சிக்கலாகும் என கூவும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னுடைய மருத்துவ சிகிச்சைக்காக பாராளுமன்ற அமர்வுகளுக்கு விடுப்பு எடுத்து அண்மையில் வெளிநாடு சென்றிருந்ததமையும் இங்கு கவனிக்கத்தக்கது. அவர் மட்டுமல்ல சமீபத்தில் திடீர் நோய் வாய்ப்பட்ட சிவாஜிலிங்கம் கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

எப்படியாயினும் ஜனாதிபதி அநுரகுமாரவின் எளிமையான நடவடிக்கைகள் ஒரு பக்கம் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது. ஜனாதிபதி தானாகவே கார் கதவை திறந்து கொண்டு இறங்குவது. மக்களை மிக நெருங்கி போய் உரையாடுதல் போன்ற செயற்பாடுகளின் போது ஜனாதிபதியினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சிக்கலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இமாலயப்பிரகடனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு!

இமாலயப்பிரகடனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு!
நேற்றைய தினம் கொழும்பு BMICH இல் நடைபெற்ற இமாலாய பிரகடனம் தொடர்பான கலந்துரையாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதேமாதிரியான ஒரு ஆர்ப்பாட்டம் கனடாவில் இமாலய பிரகடனத்துடன் தொடர்புடைய கனடிய தமிழ் கொங்கிரஸ் ஒழுங்கு செய்திருந்த தமிழர் தெருவிழாவில், தென்னிந்தியப் பாடகர் சிறினிவாஸின் இசை நிகழ்ச்சியை குழப்பும் வகையில் நடத்தப்பட்டிருந்தது. கனடாவில் நடந்த ஆர்ப்பாட்டம் இறுதியில் வன்முறையில் முடிந்திருந்திருந்து. கனடா வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு தலைகுனிவையும் ஏற்படுத்தியிருந்தது.
என்பிபி அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கப் போவதாக திட்டவட்டமாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்துள்ளது. இச் சூழலில் இனப்பிரச்சினைக்கும் புதிய அரசியலமைப்பு ஊடாக நிரந்தர தீர்வு காண்பதற்கு ஏதுவான சூழல் அமைந்துள்ளது. இச் சூழலை தமிழர் தரப்பு தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் ஒரு முக்கியான தருணத்தில் ஈழத்தமிழர் நாட்டிலும் புலத்திலும்; ஒற்றுமையின்றி பல்வேறு குழுக்கள், அமைப்புகள் மற்றும் கட்சிகளாக பிளவுபட்டு நிற்கிறார்கள். தமிழ் மக்களின் நலன்கருதியன்றி சுயநலமாகவும் தன்னிச்சையாகவும் செயற்படுகின்றனர். அப்படியொரு புலம்பெயர் அமைப்பான உலகத் தமிழர் பேரவையும் மற்றும் சிறந்த இலங்கைக்கான பௌத்த சங்கமும் இணைந்து உருவாக்கியதே இமாலய பிரகடனம். இந்தப்பிரகடனம் கடந்த வருடம் நேபாளம் நாட்டில் நாகர்கோட் என்ற நகரில் வைத்து வெளியிடப்பட்டது. இதன் நோக்கம் மற்றும் அவசியம் பற்றி உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்தர் இவ்வாறு கூறுகிறார்.
கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு பௌத்த குருமாரோடு இணைந்து ஒரு தமிழ்த் தரப்பு இவ்வாறு பிரகடனம் ஒன்றை வெளியிட்டிருப்பது இதுதான் முதல் தடவை.
2009 இல் யுத்தம் மௌனிக்கப்பட்ட, புலிகளுக்கு பின்னான, தமிழ் மக்களின் பேரம்பேசும் பலம் குறைந்து போய்விட்டது. அதனால்தான் தாயகத்துக்கு வெளியில் இருந்து தாயகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பிரகடனங்களை உருவாக்கும் உரிமையை ஜி.ரி.எஃப் (GTF) எவ்வாறு தன்னிச்சையாக கையிலெடுக்க முடியும் என புலத்திலும் நாட்டிலும் GTF உலகத் தமிழர் பேரவை விமர்சனத்தை எதிர்கொள்கிறது. அதேநேரம் GTF புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தையும் சரி, நாட்டில் வாழும் தமிழ் மக்களையும் முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும் எதிர்ப்புக்கள் எழுந்திருந்தன.
முதலில் நாட்டில் உள்ள தமிழ்க் கட்சிகள், செயற்பாட்டாளர்கள், நாட்டில் வாழும் பொதுமக்கள், சிவில் சமூக அமைப்புகளுடன் உரையாடியிருந்திருக்க வேண்டும். அதன்பின்னர் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியிலும் இது தொடர்பாக விவாதித்திருக்க வேண்டும். ஆயினும் இனப்பிரச்சினைக்கான இறுதி முடிவை எடுப்பது இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்மக்களே. புலம்பெயர் தமிழர்கள் நாட்டில் வாழும் மக்களின் ஜனநாயக அரசியல் உரிமையில் ஏதேற்சை அதிகாரத்தோடு செயற்பட முடியாது. ஏற்கனவே நடந்த தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் செலுத்திய செல்வாக்கால் தாயகத்தில் வாழ்ந்த மக்கள் பல நெருக்கடிக்களை சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இறுதி யுத்ததின் போது கடும் போர்ச் சூழலிலிருந்து மக்கள் வெளியேறினால் தனிநாடு கனவு பலிக்காது என கருதிய புலம்பெயர் தமிழர்கள், அவர்களை வெளியேற்ற வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்தும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். முள்ளிவாய்க்காலில் பேரவலம் நடந்து கொண்டிருக்க புலம்பெயர் நாடுகளில் அதனை நிறுத்த புலம்பெயர் அமைப்புக்கள் எந்தவிதமான இராஜதந்திர நகர்வுகளையும் செய்யவில்லை. மாறாக இந்த யுத்தத்தை புலிகள் ஆரம்பித்த போது அதனை நெய்யூற்றி வளர்த்துவிட்டவர்கள் புலம்பெயர் தமிழர்களே.
வன்னியில் விழுகின்ற செல்கள் வெளிநாடுகளில் உள்ள தங்களை எதுவும் செய்யாது என்பதாலும் தாங்களும் தங்களது பிள்ளைகளும் பாதுகாப்பாக உள்ளார்கள் என்பதாலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத் தமிழர்களை மரண யுத்தத்திற்குள் வலிந்து தள்ளிவிட்டனர். யுத்தத்தில் போய் களமாடியவர்கள் கால், கைகளை இழந்து தவிக்கின்றனர். இந்த யுத்தத்தைக் காட்டி உழைத்த சிலர் மில்லியனெயர்கள் ஆயினர். யுத்தத்தை பிரைட்ரைஸ் சாப்பிட்டுக் கொண்டு சோபாவிலிருந்து 56 இஞ்சி ரீவியில் பெரிசாகப் பார்த்தவர்கள் தான் இப்ப பெரிய தேசியவாதிகளாக தங்களைக் காட்டிக்கொள்கின்றனர். உணர்ச்சித் தேசியம் பேசுகின்றனர். இப்பவும் இவர்களுக்காக கொஞ்சப் பேர் சாகத் தயாராக இருப்பதாகவே இவர்கள் நினைப்பு.
இவ்வாறான பின்னணியில் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகளாகியும் யுத்தத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரம் மிகச் சீரழிந்த நிலையில் இருக்கிறது. அபிவிருத்தி மற்றும் மீள் கட்டுமானம் எல்லாம் மந்த கதியில் நடந்து கொண்டிருக்கின்றன. போராடியவர்கள் மறக்கப்பட்டுவிட்டார்கள். போராடத் தூண்டியவர்கள் நாடு திரும்பி தமது தனிப்பட்ட வியாபார முயற்சிகளை செய்கின்றனர். பணத்தை கொட்டி ஹோட்டல்கள் கட்டுகிறார்கள். இப்போது அன்றைய சிங்களப் பேரினவாத அரசு, இன்று அவர்களுக்கு உற்ற நண்பன். விடுதலைப் போராட்டத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த உயிர்களின் பெறுமதியையிட்டு யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை.

வெளிநாட்டு இலங்கையருக்கு கைமாறு: இவர்களும் தேர்தலில் வாக்களிக்கலாம்!

வெளிநாட்டு இலங்கையருக்கு கைமாறு: இவர்களும் தேர்தலில் வாக்களிக்கலாம்!

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பங்களித்த புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் ஏற்பாட்டை தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்து வழங்க உள்ளது. மேற்குலகெங்கும் வாழும் நாடுகளில் இத்தேர்தலையொட்டிய பிரச்சாரங்கள் அமோகமாக நடைபெற்றது. என்பிபி இன் கூட்டங்கள் மண்டபம் நிறைந்த மக்களோடு சர்வதேச தலைநகரங்களிலெல்லாம் நடைபெற்றது. என்பிபி இன் வெற்றியின் ஆரம்பம் இங்கிருந்துதான் ஆரம்பித்தது. அதற்கு நன்றியைத் தெரிவிக்கும் வகையில் அவர்களது வாக்குரிமையைப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்படுவது பலராலும் வரவேற்கப்படுகின்றது.

இலங்கைக்கு வெளியே தொழில், கல்வி, குடும்பம் மற்றும் இன முரண்பாடு போன்ற பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலங்கை பிரஜைகளுக்கு அங்கிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை ஆளும் புதிய என்பிபி அரசாங்கம் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர உள்ளதாக வெளிவிவகாரங்களுக்கான பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

அதன்படி வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகள் உள்ளூராட்சி தேர்தல்கள் உட்பட அனைத்து தேர்தல்களிலும் வாக்களிக்க முடியும். ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க இது தொடர்பில் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்படி நேரடியாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார் என அருண் ஹேமச்சந்திரா தெரிவிக்கின்றார்.

கடந்த ஒரு தசாப்தமாக இந்தவிடயம் தொடர்பில் புலம்பெயர் இலங்கை பிரஜைகள் அமைப்புக்கள் கோரி வந்தன. ஒருபக்கம் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களால் உறவுக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் நிதியுதவி மற்றும் அந்நியசெலவாணியையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மறுபுறம் வெளிநாடுகளில் தேர்தல்களில் வாக்களிக்கும் போது முறைகேடுகள் இடம்பெற அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. இவ்வாறான ஏற்பாட்டை இந்தியா ஏற்கனவே செய்து இலங்கைக்கு முன்மாதிரியாகவுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களும் தேர்தலில் வாக்களிக்கும் விதமாக தேர்தல் விதிமுறைகளில் இந்தியா திருத்தம் மேற்கொண்டுள்ளது. அப்படியாயின் வெளிநாடு வாழ் இலங்கையர்களும் தேர்தலில் வாக்களிக்கும் விதமாக தேர்தல் விதிமுறைகளை திருத்துவதில் பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை பெற்றிருக்கின்ற என்பிபி அரசாங்கத்திற்கு எந்தத் தடையும் இருக்கப் போவதில்லை. எவ்வாறெனினும் இலங்கை குடியுரிமை வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இலங்கையர் மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்திய சிறையிலிருந்து இரண்டு இலங்கை மீனவர்கள் விடுதலை!

இந்திய சிறையிலிருந்து இரண்டு இலங்கை மீனவர்கள் விடுதலை!

அனலைதீவுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இயந்திரக்கோளாறால் இந்தியாவிற்குள் எல்லை தாண்டி சென்ற மூன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். கடந்த 7 மாதங்களாக சிறிது காலம் புழல் சிறையில் திருச்சி இடைத்தங்கல் முகாமிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

புதிய என்பிபி அரசாங்கத்தின் முயற்சியாலும் தற்போதைய கடல்த்தொழிலமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஊக்கத்தாலும் நேற்றைய தினம் இம் மூன்று மீனவர்களும் விடுதலையாகி யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். சமீபத்தில் இந்திய விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதியின் நிகழ்ச்சிநிரலில் வடக்கு மீனவர்களின் பிரச்சினை முக்கிய இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுதவிர நேற்றைய தினம் வடமாகாண ஆளுநர் தனது அலுவலகத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சமூக பிரதிநிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார். அப்போது வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது. இச்சந்திப்பு தொடர்பில் கூறிய ஆளுநர் நா. வேதநாயகன், நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விடயங்கள் கடல்த்தொழில் அமைச்சருக்க பரிந்துரைக்கப்படும் என்றார்.

‘’நாங்கள் எந்த நிதி மோசடியிலும் ஈடுபடவில்லை!’’ முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் சகோதரர்

‘’நாங்கள் எந்த நிதி மோசடியிலும் ஈடுபடவில்லை!’’ முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் சகோதரர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்த போது விஜயகலா மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்ட நிதி, ஆலய புனர் நிர்மானங்களுக்கே பயன்படுத்தப்பட்டது என்றும் அந்த நிதியில் நாங்கள் கையாடியதாக திட்டமிட்டு சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர் அதனை நான் வன்மையாகக் கண்டிப்பதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நிச்சயமாக சட்ட நடவடிக்கையும் எடுப்பேன் என முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் சகோதரர் துவாரகேசன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

நாங்கள் நீண்டகாலம் வர்த்தகக் கப்பல் முதல் பல்வேறு தொழில்துறைகளையும் நடத்துகின்ற வர்த்தகத்தில் முன்னணியில் உள்ளவர்கள். இவ்வாறான வழிகளில் பணம் சேர்க்க வேண்டிய அவசியம் எங்கள் குடும்பத்திற்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் எங்களைப் பற்றிய இந்தப் பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார். இவர்களுக்கு எதிரகா சட்நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றும் துவாரகேசன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இவருடைய முழுமையான நேர்காணல் தேசம்ரியூப்பில் வெளியாக உள்ளது.

துப்பாக்கி – போதைவஸ்து – விலையுயர்ந்த கார்: கனடாவில்தமிழ் பெண்ணும் ஆணும் கைது!

துப்பாக்கி – போதைவஸ்து – விலையுயர்ந்த கார்: கனடாவில்தமிழ் பெண்ணும் ஆணும் கைது!

கார் கடத்தல் குற்றச்சாட்டில் சந்தேக நபர்களாக கருதப்படும் இரண்டு தமிழர்கள் டிசம்பர் 10இல் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கனேடிய பொலிஸார் குற்றப் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களோடு இணைந்து இணைந்து குற்றத்தில் ஈடுபட்ட மேலும் இருவரைத் தேடி வலைவிரித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 10 பிரம்டன் நகரில் ஒரு தொகை போதைப்பொருட்களும், களவாடப்பட்ட கார் ஒன்றையும் மீட்டுள்ளனர் பொலிஸார். பிக்கரிங் நகரசைச் சேர்ந்த 34 வயதான சுவிசான் கணேசமூர்த்தி மற்றும் பிரமன் நகரத்தைச் சேர்ந்த 29 வயதான அருண்ஷியா அருளானந்தம் என்ற இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நவம்பர் 4 இரண்டு கனேடிய சாலைகளான ஓல்ட் கெனடி மற்றும் டெனிசன் தெரு வீதிகளில் கார் ஒன்றை மூவர் துப்பாக்கி முனையில் திருடிச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட காரானது 2021 மெர்சிடஸ் ஜி வேகன் (Mercedes g Wagen) என்ற ரகமான பென்ஸ் என்று கூறப்படுகிறது. திருடப்பட்ட காரை மிசுசாகா குடியிருப்பு பகுதியில் கைவிட்டுவிட்டு நாலாவது சந்தேக நபர் ஓட்டி வந்த பி எம் டபிள்யூ (BMW) காரில் மற்றைய மூன்று சந்தேக நபர்களும் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். கடத்தப்பட்ட கார் கைவிடப்பட்ட இடத்திலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கும்பலைச் சேர்ந்த பலரை தேடிவருவதாக அறிவித்துள்ள பொலிஸார். பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

முன்னாள் எம்பி திலீபனின் லீலைகளும் கைதும் – ”இல்லை இல்லை சுத்தமான சுவாமிப்பிள்ளை” என்கிறார் திலீபன்! 

முன்னாள் எம்பி திலீபனின் லீலைகளும் கைதும் – ”இல்லை இல்லை சுத்தமான சுவாமிப்பிள்ளை” என்கிறார் திலீபன்!

முன்னாள் ஈபிடிபி வன்னி மாவட்ட எம்பி குலசிங்கம் திலீபன் காசோலை மோசடி முறைப்பாடொன்றை அடுத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். பின்னர் வவுனியா மாவட்ட நீதிவானால் 15 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ரணில் அரசாங்கத்தில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராகவும் செயற்பட்டிருக்கிறார்.

திலீபனின் பிரத்தியேக செயலாளாரும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஈபிடிபி சார்பாக போட்டியிட்ட வேட்பாளரான கிறிஸ்டோபர் டினேஸ் என்பவரை டிசம்பர் 19 இல் வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றப்பிரிவினர் காசோலை மோசடி முறைப்பாட்டில் கைது செய்திருந்தனர். காணி கொடுக்கல் வாங்கல் ஒன்றில் 15 இலட்சம் பெறுமதியான காசோலையை மோசடி செய்த குற்றச்சாட்டில் டினேஸ் கைது செய்யப்பட்டார். டினேஸ் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் திலீபனும் கைது செய்ப்பட்டிருந்தார்.

பிணையில் வெளியே வந்துள்ள திலீபன் ஊடகங்களிடம் தான் குற்றவாளி இல்லை என்கிறார். இந்த காசோலை பரிமாற்றம் தன்னுடைய அலுவலகத்தில் நடந்ததால் தான் அதற்கு பொறுப்பேற்றுக் கொண்டதாக கூறுகிறார். மேலும் இந்த கைதின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.

திலீபன் நவம்பர் 22 நடந்த பாராளுமன்ற தேர்தலில் வீணைச் சின்னத்தில் ஈபிடிபி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். தோல்வியின் பின்னர் ஈபிடிபி கட்சியிலிருந்தும் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. திலீபன் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. அவர் அபிவிருத்திக் குழு தலைவராக இருந்த போது அவருடைய சகாக்களால் பல காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது என்ற பெரிய குற்றச்சாட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் பெண்கள் விடயத்திலும் பலகீனமான திலீபன் பல்வேறு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர் என விமர்சிக்கப்படுகிறார்.

திலீபன் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் உலாவுகின்றன. திலீபனுடைய பிரத்தியேக செயலாளர் மீதும் திலீபனுடைய சகாக்கள் மீதும் பல முறைப்பாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

திலீபன் மீதான குற்றப் பின்னணி கருதி அவர் மீது ஈபிடிபி கட்சி மேலிடம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்த போது திலீபன் தானாகவே கட்சியிலிருந்து விலகிவிட்டார்.

முன்னாள் எம்பி திலீபன் மண் கடத்தல், மரம் வெட்டுதல், காணி அபகரிப்பு மற்றும் மோசடி என பல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்படுகின்றார். இவற்றின் உண்மைத் தன்மையை சோதித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வாங்கிக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்கிறார்கள் மக்கள். திலீபன் கள்ள மரம்வெட்டுதல் தொடர்பில் தேசம்நெற் கட்டுரையையும் வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.