தமிழ் சமூகம் குறிப்பாக யாழ் சமூகம் ஒரு இறுக்கமான சமூகம். இச்சமூகத்தின் சகல பிரச்சினைகளுக்கும் வெளியார் மீது பழிபோடுகின்ற போக்கு காலம்காலமாக இடம்பெறுகின்றது. இந்த நிலையைப் பேணுவதில் தமிழ் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது எந்த வகையிலும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவவில்லை. மாறாக கூடுதலான சீரழிவிற்கே வழிவகுத்தது.
பொதுவாக யாழ் சமூகத்தில் சமூகப் பிரச்சினைகள் சாதிப் பிரச்சினைகள் என்று வரும்போது எமது தமிழ் ஊடகங்கள் பிரச்சினைகளை மூடிமறைத்து விடும். அதற்கான காரணமாக எப்போதும் சொல்லப்படுவது இப்படியான சாதி சமூகப் பிரச்சிகைளை அம்பலப்படுத்துவதால் அவற்றுக்கு விளம்பரம் கொடுத்து அதை எல்லோருக்கும் தெரியப்படுத்தி பிரச்சினைகளை பெரிசு படுத்தக்கூடாது என்பதேயாகும். இப்படியான கருத்தை யாழ் சமூகம் பல சகாப்தங்களாக, இன்றும் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறது.
யாழ் பத்திரிகைகளும் மற்றைய பிரதேச ஊடகங்களும் இப்படியான கருத்தை கொண்டவர்களின் கைகளால்தான் நடாத்தப்படுகின்றது. இதுவரை யுத்தம் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைக்குரிய அம்சமாக இருந்ததால் அனைத்து கவனங்களும் யுத்தம் சார்ந்ததாகவே இருந்தது. தற்போது யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் சமூகத்தின் ஏனைய பிரச்சினைகள் முன்னிலைக்கு வந்துள்ளது. அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் பேசப்படும் சமூகச் சீரழிவுகள் சாதிப் பிரச்சினைகள், ஊர்ப் பிரச்சினைகள் என்பன பத்திரிகைகளிலும் பொது ஊடகங்களிலும் பொதுவாக வெளிவரத் தயங்குகின்றன. இது பத்திரிகைகளை நடாத்தும் நிறுவனத்தினரின் பொறுப்புணர்விலேயே தங்கியிருப்பதால் சமூகச் சீரழிவுகள் பற்றிய செய்திகளை மக்களும் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாது போய்விடுகின்றது.
ஒரு காலத்தில் யாழ் இயக்கங்களினால் சிறு களவுகளுக்கும் கூட மரண தண்டனைகள் வழங்கப்பட்டது. அதன் பின்னரான இயக்க மோதலின் போராளிகள் கொல்லப்பட்டனர். இவை எதனையும் யாழ் பத்திரிகைகள் கண்டனம் செய்யாமலும் இப்படியாக செய்யப்பட்ட கொலைகள் ஈறாக பத்திரிகைகளில் பிரசுரிக்காமலும் போயிருந்தன. அதேவேளை கொன்றுவிட்டு வந்த கிட்டு உட்பட புலிகளுக்கு கொலை செய்த களைப்புக்கு கோலா கொடுத்த செய்தி மட்டும் பெரிதாக வெளிவந்திருந்தது. இதனை புலிகளுக்கு பத்திரிகைகள் பயந்து இருந்தனர் என்றுமட்டும் சொல்லிவிட முடியாதுள்ளது. புலிகளை தமது சுயநலத்திற்கு ஆதரவளித்த தமிழ் பத்திரிகைகள் புலிகளின் தவறில் உள்ள ஆபத்துக்களை சுட்டிக்காட்டாமல் போனது பத்திரிகைகளின் தவறும் தமிழ் மக்களுக்காக போராடிய இளைஞர்களை தவறாக வழிநடாத்திய குற்றமும் இந்த பத்திரிகைகளுக்கு உண்டு. புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்களால் நடாத்தப்பட்ட பத்திரிகைகளும் இதற்கு விதிவலக்கல்ல.
அதேபோல இயக்கங்களின் பிரதேசங்களின் ஜக்கியம் பற்றியும் இந்த பத்திரிகைகள் மெளனம் காத்திருந்ததும் இன்று விமர்சனத்திற்கு உள்ளாகிறது. அதேகாலங்களில் இலங்கை அரசினால் நடாத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை முழுமையான எந்தவித விமர்சனங்களும் இன்றி கண்டனம் செய்திருந்ததும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
தமிழ் ஊடகங்கள் தமக்குரிய ஊடக கடமைகளை சரியாக செய்யத்தவறிவிட்டன ஜனநாயகம் மனித உரிமைகள் பற்றிய விடயங்களில் காட்ட வேண்டிய அக்கறைகளிலும் தவறியுள்ளன. புலிகளின் ஆட்சிக்காலத்தில் புலிகளினால் நடாத்தப்பட வேண்டிய ஜனநாயக நடைமுறைகளின் அவசியத்தை வலியுறுத்த மறந்து போயிருந்தன. அல்லது தவிர்த்தன.
தற்போது யாழ் சமூகத்தில் எழுந்துள்ள சமூகச் சீரழிவுகள் யாழ் சமூகத்தில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்துபவைகள் அல்ல. இப்படியான பல பிரச்சினைகள் முழு இலங்கையிலுமே எல்லா இனங்களிடையேயும் எல்லா சமயத்தவர்களிடையேயும் உருவாகியுள்ள சமூகச் சீரழிவேயாகும். போரினால் ஏற்பட்ட பாதிப்புக்களினால் அனாதரவாக்கப்பட குழந்தைகள் புலிகளின் சிறுவர்கள் சேர்ப்பிற்க்கு பயந்து திருமணம் செய்து வைக்கப்பட்ட இளம்வயதினரும் அவர்களின் குடும்ப பிரச்சினைகளும் கணவனை இழந்து விதவையானவர்களை சமூகத்தில் ஒதுக்கி வைத்துக் கொள்வதும் மனைவியை இழந்து குடும்பம் இழந்தவர்களும் என்பவற்றுடன் இளம்வயதுப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தலும் பாடசாலை மாணவர்களையும் பல்கலைக்கழக மாணவர்களை பாலியல் துன்பத்திற்கு உள்ளாக்கும் கயமைத்தனங்களும் சமூகத்தில் பல துன்பியல்களை நடாத்திக் கொண்டிருக்கின்றன.
இவற்றுடன் தமிழ் சிங்கள முஸ்லீம் சமூகங்களிடையே போதைவஸ்து பாவனை விபச்சாரம் என்பவற்றின் அதிகரிப்பும் சமூகச் சீரழிவை மேலும் பல மடங்கு மோசமான நிலைக்கு இட்டுச்சென்றுள்ளன. கடந்த 30 வருடங்களாக இலங்கையில் நடைபெற்ற யுத்தம் இந்த சமூகச்சீரழிவின் தாக்கத்தை, சமூகச் சீரழிவின் கயவர்களை யுத்தத்திற்குள் ஒளிந்துகொள்ள உதவியுள்ளது. ஜனநாயக நடைமுறையற்று இருந்த சமூகத்தில் இவர்கள் தமது கயமைத்னங்களுக்கு இலகுவாக இடம் தேடிக்கொண்டனர். இந்த சமூகச் சீரழிவின் நாயகர்களில் பலர் தமது அயோக்கியத்தனங்களுக்கு தேடிக்கொண்ட இடம் புலி இயக்கமும் அதன் ஆதரவாளன் என்ற பெயருமேயாகும்.
இன்று புலிகளின் அழிவின் பின்னர் இந்த கயமைத்தனங்களின் இருப்பிடமாக யாழ் பல்கலைக்கழகமும் யாழ் பாடசாலை சமூகமும் இருந்துள்ளது வெளிப்படையாகின்றது. இந்த சீரழிவின் வெளிப்பாடுகளே இன்று யாழ் சமூகத்தில் யாழ் அரச அதிபர் யாழ் முற்போக்காளர்கள் இந்த சீரழிவிற்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்னர். பல வருடங்களாக நடைபெற்று வந்த யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சீரழிவுகளை யாழ்ப்பாணத்திலுள்ள பத்திரிகைகள் ஊடகங்கள் நிச்சயமாக தெரிந்தே வைத்திருந்திருக்கும். ஆனால் இப்படியான சீரழிவுகளை வெளிப்படுத்துவதன் மூலம் யாழ் கல்விச்சேவைகள் யாழ் சமூகத்தின் பெயர் என்ற தமது வரட்டு கெளரவத்தை பாதுகாக்கவே இவற்றை மூடிமறைத்து வெளிப்படுத்தாமல் விட்டுள்ளனர் என்றே பலரும் அபிப்பிராயப்படுகின்றனர்.
அண்மையில் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பாசாலை மாணவர்களின் சீரழிவுகள் பற்றி வெளிப்படையாக கருத்து வைத்திருந்தது பாராட்டப்பட வேண்டியதாகும். சமூகத்தில் உள்ள சீரழிவுகளை வெளிப்படையாக பேச ஆரம்பிக்கும்போதுதான் அந்த சீரழிவிலிருந்து அந்த சமூகத்தை பாதுகாக்க முடியும்.
இமெல்லடா சுகுமார் போன்ற தமிழ் சமூகம்பற்றி விழிப்புணர்வு கொண்ட அக்கறை கொண்ட போர்க்கால அனுபவம் கொண்ட தமிழ் குலப் பெண்ணின் கருத்துக்கு நாம் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கி சமூகத்தில் உள்ள சீரழிவுகளில் இருந்து மீள பின்புலம் கொடுத்து உதவ வேண்டும். கடந்த 40 வருட கால அரச அதிபர்கள் வரிசையில் இப்போது தான் சமூக விழிப்புணர்வு கொண்ட துணிவு மிக்க அரசஅதிபர் ஒருவரை யாழ் தமிழ் சமூகம் பெற்றுள்ளது.
இந்த அரச அதிபருக்கு ஆதரவும் ஒத்தாசையும் வழங்கும் பொறுப்பு வட கிழக்கு மக்களுக்கும் புலம்பெயர் மக்களுக்கும் உள்ளது. போராட்டம் புரட்சி என்று கடந்த 30 வருடங்களாக பேசிய பொறுப்பு வாய்ந்தவர்களினதும்இ பொறுப்புள்ள புலம்பெயர் தமிழ் சமூகத்தினதும் ஆதரவு தமிழ் மக்களின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளுக்கு அடுத்து தமிழ் பிரதேசங்களில் எழுந்து கொண்டிருக்கும் சமூகச் சீரழிவுகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதும் இச்சீரழிவுக்கு எதிராக குரல் கொடுக்கும் இமெல்டா சுகமார் போன்றோருக்கு முடிந்த அளவு ஆதரவினை வழங்குவதும் தேவையாக உள்ளது.
தமிழ் சமூகத்தில் புதிய மாற்றங்களை உருவாக்க வேண்டுமாயின் இந்த மேற்கூறும் சமூகச் சீரழிவுகள் சாதியப் பிரச்சினைகளிலும் அக்கறை செலுத்த வேண்டும். இந்த சீரழிவுகளுக்கு ஆதரவும் பின்புலமுமாக இருப்பவர்களில் சிலரின் கைகளில்இ சமூகத்தில் சில விடயங்களை முன்னெடுத்துக் கொள்ளக் கூடிய அல்லது செயற்படுத்தும் வல்லமையும் அதிகாரமும் கொண்டவர்களாக உள்ளதையும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படியானவர்கள் அரச சார் நிறுவனங்களிலும் கல்வி சார் நிறுவனங்களிலும் பொதுமக்களின் சமத்துவத்தை பேண வேண்டிய அரச அலுவலகங்களிலும் கடைமையாற்றுகின்றனர் என்பதே உண்மையாகும். இப்படியான பொறுப்பு வாய்ந்த பதவிகளில் உள்ளவர்களில் பலர் இன்றும் சாதிய வெறியர்களாகவும் சாதி என்ற ஒருகாரணத்திற்காக சில குறிப்பிட்டவர்களின் சலுகைகளை உதவிகளை அவர்களுக்கு கிடைக்காமல் செய்வதமாக செயறபடுவதாக பல யாழ் மக்கள் கருத்துக் கொண்டுள்ளனர். இப்பேர்ப்பட்ட பேர்வழிகளை உடனடியாக ஊடகங்கள் அம்பலப்படுத்தி இந்த அயோக்கியத்தனங்களை களைய முன்வர வேண்டும்.
வெறுமனே இப்படியான சமூக சீர்கேடுகளை தட்டிக்கேட்பது மட்டும் போதாது. தொடர்சியாக எழும் சீர்கேடுகளையும் ஜனநாயக மீறல்களையும் சாதிவெறி அகங்காரங்களையும் கையாளப்பட்டு சமூகத்தில் இவற்றிக்கான அடிப்படைக் காரணங்களின் மாற்றத்தை உண்டு பண்ணக்கூடிய கல்வி முறைமையும் புதிய சட்டவரையறைகளும் சமூகத்தில் இணைக்கப்படல் வேண்டும்.
இதைவிட கடந்த 30 வருட பயங்கரவாதப் போரில் ஜனநாகத்தின் பெறுமதி புரியாமல் வளர்ந்து விட்ட ஒரு சந்ததியினரின் அறியாமையும் இந்த சீர்கேடுகளுக்கு உதவி புரிவதாகவே உள்ளது. இது முக்கியமாக எந்த பிரச்சினைகளை கையாளுவதிலும் அதற்கான நடுநிலைமையை பேணாது புலிகளின் ஆட்கள் என்றால் அது என்னவாக இருந்தாலும் சரி என்றதும் புலிகளின் தேவைக்கு என்றால் அது எப்படியாகிலும் கொடுத்துவிட வேண்டும் என்றதும் சிறு வயதினரை கட்டாய ஆட்சேர்ப்புககு உட்படுத்தியதின் விளைவுகளால் சிறுபராயத்திலே திருமணங்கள் பல நடைபெற்றதும் புலிகளின் ஆதரவாளர்களால் அரச படைகளால் வன்முறைக்குட்பட்ட குழந்தைகளில் மனநிலைகளால் பாதிக்கப்பட்டதுமாக ஒரு வன்முறை சக்கரம் தமிழ் சமூகத்தில் இன்று வரையும் சுழன்று கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இவை சில வேளைகளில் வன்முறையாகவும் பாலியல் வக்கிரங்களாகவும் வெளிவருகின்றது.
கடந்த 30 வருட தமிழர் போராட்டத்தினிடையே வளர்ந்த தமிழ் ஊடகங்கள் இன்று வரையிலும் தமது கடைமைகளில் சமூகத்தின் தேவைகளை ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது பிரிவினர் சம்பந்தமாகவே சார்பாகவே இயங்கியுள்ளனர். இந்த ஊடகங்கள் தமிழ் சமூகத்தின் ஒட்டு மொத்த சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கவில்லை என்பதை கடந்த தேர்தலின்போது யாழ் ஊடகங்களின் நடத்தைகளிலிருந்து அவதானிக்க முடிந்தது.
யாழ் சமூகத்தில் நடைபெறும் சமூகச் சீர்கேடுகள் பற்றி கூறிய கருத்தை பல பத்திரிகைகள் பிரதிபலிக்க தவறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று வவுனியாவில் நடைபெற்ற நகரசுத்தி தொழிலாளர்களின் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும் தவறியும் அம்மக்களுக்கு நீதிபெறும் வழிவகைகள் இன்று வரையில் அடையாளம் காணப்படவில்லை. தமிழ் ஊடகங்கள் ஊடகவியலை தமது ஊதியம் பெறும் தொழில் என்று மட்டும் பாராமல் இது சமூகத்தின் பாரிய கடமை என்ற உணர்வை உள்வாங்கியும் தற்போது உலக பொருளாதார சந்தைக்கு ஏற்ற சமூகத்தை எதிர்காலத்தில் எதிர்நோக்கியும் செயற்பட தயாராகிக்கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் தங்கள் பிரச்சினைகளையும் சமூகப் பலவீனங்களையும் சரியாக இனம்கண்டு அவற்றுக்கான தீர்வுகள் பற்றி ஆராயவேண்டும். அதைவிட்டுவிட்டு தமிழர்கள் கல்தோண்றி மண்தோண்றாக்காலத்தில் தேண்றிய மூத்த குடிகள் உயர்ந்த கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் கொண்டவர்கள் என்று மூச்சுவிடாமல் முழங்குவது தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஆகாது. சமூகப் பிரச்சினைகளைப் பொதுத் தளத்தறிகுக் கொண்டு வந்து விவாதிப்பதன் மூலமாக மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்தையும் சமூக மாற்றத்தை நோக்கி நகர்த்த முடியும். இவ்விடயத்தில் பத்திரிகைகள் காத்திரமான ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
BC
நல்ல ஒரு கட்டுரை.
புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள பல தமிழ் பத்திரிகைகள் புலம்பெயர்ந்த தமிழர்களை தவறாக வழி நடத்துவதற்காகவே நடத்தபடுவதாக தெரிகிறது.
தாமிரா மீனாஷி
ஒரு அரச அதிகாரி தமக்குள்ள அதிகாரங்களுடன் சமூக அக்கறையும் கொண்டவராக இருப்பது வரவேற்கப் படவேண்டியதுதான். எனினும் அதிகாரத்தின் மூலம் சமூகத்தின் கலாசாரத்தை கண்காணிப்பதோ அல்லது மாற்ற முனைவதோ ஆப்த்தானது. இன்று இரானில் விபசாரம் செய்ததாக ஒரு பெண் தூக்கிலிடப்படுவதற்கு இத்தகைய நிலைதான் காரணம். கலசாரத்தை நெறிப்படுத்தும் அதிகாரத்தை (policing the culture)ஆட்சியாளரின் கைகளில் ஒப்படைப்பது பற்றி நாம் அவதானமாக இருக்க வேண்டும்.
ஒரு சமுகத்தின் கலாசார மதிப்பீடுகளை மாற்றுவதற்கான முனைப்புக்கள் அதன் சமுகத் தலைவர்கள் மற்றும் சமுகத்தில் உள்ள சிந்தனையாளர்களாலேயே மேற்கொள்ளப் பட வேண்டும். இந்தியாவில் உடன் கட்டையேறும் வழக்கம் ஒழிக்கப் படுவதற்கு ராஜா ராம் மோஹன் ராயின் தீவிர பிரச்சாரம் காரணமாக இருந்தது.
மக்களுடைய ஆதரவின்றி வெறும் அதிகாரத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் சமுக்கத்தில் நிலைத்து நிற்க முடியாது என்பதற்கு நீங்கள் சொன்ன விடுதலைப் புலி கால திணிப்புக்கள் நல்ல உதாரணம்..
DEMOCRACY
திரு.சோதி, “கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி” என்பது, ஆரியர்(பிராமணர்?)களின் காலனியாதிக்க சலுகைகளை(தோலின் நிறம் அடிப்படையில்) தங்களுக்கு தருமாமாறு (விசுவாசத்தின் அடிப்படையில்), “திராவிட இயக்கத்தின்” கவர்ச்சிகர பிரச்சாரம். இதில் இலங்கைத் தமிழருக்கு சம்பந்தமில்லை!- காலனியாதிக்க இருப்பிற்கு ஆதரவு வழங்கியதில் ஒற்றுமை உண்டு.
ஆனால் ஐரோப்பியர்கள் இதை காதில் போட்டுக் கொள்ளவில்லை, “நிற வேற்றுமை” அடிப்படையிலேயே (கலாச்சார அம்சங்களை தவிர்த்து விட்டு)கொள்கைகளை வகுத்தார்கள். சீனர்களின் தோல் நிறம் வெள்ளை, தமிழர்களை அவர்கள் இதன் காரணமாக கேவலமாக மதிக்கிறார்கள், ஐரோப்பியர்கள தமிழர்களைவிட (விசுவாசமான), சீனர்கள் நெருங்கிய உறவுகள் என்று தமிழர்களை “முட்டாள்களாக” பிரதிபலிக்கவே விரும்பினார்கள். இதைதான் தமிழர்களாகிய? நாம் முப்பதாண்டுகளாக ஆயுதப் போரட்டம் நடத்தி “முட்டாள்கள்” என்று நிரூபித்திருக்கிறோம்!.
ஐரோப்பிய “தனிமனிதன்” ஆசியர்களை விட பலமடங்கு வேலை செய்வான், மரபணு ரீதியான உடல் வலிமை இதன் காரணம்- தொழிற்சாலை பொருளாதாரம் இவ்வலிமையால் செழித்தது!. ஆனால், நவீன கம்பியூட்டர் ஒருங்கிணைப்பினால் “ஒரு குறிப்பிட்ட வேலையை” பலமடங்கு செய்யலாம், இங்கு “தனிமனித வலிமை” அரோப்பியர்களால் வழங்க முடியவில்லை. இதற்கு கன்பியூஷிய – கம்யூனிச அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட சீன கட்டமைப்பு “கூட்டு வலிமை” மூலம் சாதித்தது. இதை ஐரோப்பியர்கள் இன்றுவரை இறக்குமதி செய்ய முடியவில்லை!. இதற்கு காரணம், மோட்டாருக்கு “ஆயில்” போல், கடுமையான உழைப்பால் சமூக “ஆன்மீகம்” வற்றி, சிதைந்துவிடாமல் இருக்க “தாவோயிசம்” மூலமான சீன கலாச்சாரமாகும். இந்த “லூபிரிகேஷன்” தென் இந்தியாவிலிருந்தே வழங்கப்பட்டிருந்தது. ஆகையால் ஐரோப்பியர்களின் நிற ரீதியான அணுகுமுறை தற்போதைய “நவீன பொருளாதாரத்தில்” சிக்கலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.
இலங்கைத் தமிழர்களும் பிரபாகரனும் யாழ் சமூக பிரச்சனைகளை சொல்லவேயில்லை. புலம்பெயர்ந்த தமிழர்கள் உட்பட “தங்கள் பிரச்சனைகளை சொல்லாத” இந்திய திரைப்படங்களை ரசிப்பதைப் போல், தமிழநாட்டு (திராவிட இயக்க) கவர்ச்சிகரப் பிரச்சாரங்களையே தங்களுடைய பிரச்சனையாக முன் வைத்திருந்தார்கள். அதனால்தான் என்னைப் போன்ற, அருள் எழிலன் போன்றவர்கள் இதில் பெரிதும் கவரப்படுகின்றார்கள். என் பள்ளி நாட்களில், திராவிட கவர்ச்சிப் பிரச்சாரத்துடன் “கன்டண்டும்” இருக்கவேண்டும் என்று “கலைஞர்” போன்று இல்லாமல், அரசியல் பின்னணியிலிருந்து வந்ததால் கருதியிருந்தேன்!. அதைச் சொல்லபோய் இலங்கைத்தமிழரிடம் மூக்குடைப் பட்டது என் அனுபவம். இந்தக் கவர்ச்சியை வைத்து, சினிமா உலகம் போல் பணம் பார்த்தவர்களே தற்போது புத்திசாலிகள். ஆகையால் ஐரோபியர்களை நம்பி ஏமாந்தது எப்படி என்று தற்போது பிடிபட்டிருக்கும் என்று நினைக்கிறேன்!. தற்போது ஐரோப்பியர்கள் முட்டுசந்தியில் நிற்கின்றனர். ஆனால் தற்போதும் சீனர்களை நிற ரீதியாக (கலாச்சாரத்தை தள்ளிவிட்டு) கவருகிற முயற்சியில் “தமிழர்கள்” மீண்டும் நசுக்கி அரைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்!.
நந்தா
இமெல்டா சுகுமார் என்ற பெண் அரசு அதிகாரிக்கு இருக்கும் துணிவு பாராட்டப்பட வேண்டியதே ஆகும். கடந்த காலங்களில் அரச அதிபராக வரும் சிங்களவர்களுக்கு யாழ்ப்பாணிகள் முருங்கைக்காயிலிருந்து பெண் வரை சப்ளை பண்ணிய வரலாறுகள் எனக்குத் தெரியும்.
யாழ்ப்பாணத்தவர்கள் “ஊழல்” என்பதையும் தமது கலாச்சாரமாக ஆக்கிக் கொண்டவர்கள். அதனால்த்தான் யாழ் மண்ணில் சட்டத்துக்குப் புறம்பான பல செயல்பாடுகள் தலை விரித்தாடுகின்றன.
பத்திரிகைகள் அதிகாரத்திலுள்ளவர்களுக்கு துதிபாடி தமது இருப்புக்களை நிரந்தரமாக்குவதில் மூழ்கியுள்ளன. அதனால் யாழ் மண்ணில் “அப்படி ஒன்றுமில்லை” என்று உலகத்தை ஏமாற்றும் செயலுக்கு யாழ் பத்திரிகைகள் துணை போகின்றன.
அரச ஊழியர்கள் என்பவர்கள் அரசு சட்டங்களை மதிக்காது தமது சொந்த சட்டங்களை அமுல் படுத்துகிறார்கள். சாதாரண மக்களுக்கு அரசினால் வழங்கப்படும் சேவைகள் கிடைக்காமல் போய் விடுவதில் இந்த அரச ஊழியர்களின் போக்கிரித்தனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த “மோசடிகளை” கண்டிக்காத அல்லது கண்டு கொள்ளாத அரசியல் வாதிகள் “மக்கள்” பாதிக்கப்படுகிறார்கள் என்று அரசியல் செய்கிறார்கள்.
போதை வஸ்து, பெண் கூட்டிக் கொடுப்பு, கள்ளக்கடத்தல், லஞ்சம் என்பன சமூகத்தின் காவலர்கள் என்பவர்களின் அறிவோடு நடத்தப்படுவது யாழ் மக்கள் அறிந்த விஷயம்.
மேர்வின் சில்வா பாணியில் யாராவது இறங்கினால் சிலவேளைகளில் விமோசனம் ஏற்படும்!