”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

Sivajilingam M K”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு பேச்சுவார்த்தையை நடத்தி இறுதித் தீர்வு எட்டப்படுமாக இருந்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தேசம்நெற்றுக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் தெரிவித்தார். இணைத்தலைமை நாடுகள் விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்ற வேண்டுகோளைவிடுத்த 24 மணி நேரத்தினுள் பெப்ரவரி 3ல் தேசம்நெற்றுக்கு பேட்டியளித்த பா உ சிவாஜிலிங்கம் விடுதலைப் புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சில தவறுகளை விட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக பலவீனமானதாக இருந்தது என்ற வகையில் கருத்து வெளியிட்ட அவர் விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்று ஒரு தீர்வுத் திட்டதை முன்வைக்காமல் போனது மிகப்பெரிய தவறு என்று தான் கருதுவதாகவும் கூறினார். தமிழ் மக்கள் இன்றொரு நெருக்கடி மிக்க சூழலில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் தமிழ் மக்களுக்கான கௌரவமான ஒரு அரசியல் தீர்வை பெறுவது மிகவும் அவசியமானது என்று குறிப்பிட்டார்.

லண்டன் மிச்சம் பகுதியில் அவர் தங்கியிருந்த இல்லத்தில் அவரைச் சந்தித்து இரண்டரை மணிநேரம் இச்சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் தேசம்நெற் ஆசிரியர்கள் ரி சோதிலிங்கமும் த ஜெயபாலனும் பா உ எம் கே சிவாஜிலிங்கத்தை நேர்கண்டனர். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உணர்ச்சிகரமாகப் பதிலளித்த பா உ சிவாஜிலிங்கம் இலங்கை இனப்பிரச்சினை தீர்க்கப்படாதவரை இலங்கை அரசால் விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள முடியாது என்று தெரிவித்தார். அது விடுதலைப் புலிகளின் மிகப்பெரிய பலம் என்றும் கூறினார்.

தேசம்நெற் வாசகர்களுக்காக பா உ எம் கே சிவாஜிலிங்கத்துடனான பேட்டி:

Sivajilingam M K & Jeyabalan Tதேசம்நெற்: இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையேயான யுத்தத்தில் சிக்கியுள்ள 250 000 தமழ் மக்களை யுத்த பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றுவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டைக்கொண்டு உள்ளது?

சிவாஜிலிங்கம்: முதலில் 250 000 என்பது தவறு. 400 000 இருந்து 500 000 வரை இருக்கிறார்கள். சர்வதேச சமூகமே 300 000 டின்று மதிப்பிட்டு இருக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் 150 000 என்றும் சிலசமயம் 100 000 கூறிக்கொண்டு உள்ளது.

வன்னியுத்தம் இன்று நேற்று ஆரம்பிக்கப்படவில்லை. மாவிலாற்றிலேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஜனவரி 2008ல் இலங்கை அரசாங்கம் யுத்தநிறுத்தத்தை மீறி பிரகடனப்படுத்திய ஒரு யுத்தத்தை நடத்துகிறது. இதனை தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப் போராகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.

தேசம்நெற்: மாவிலாறு அணைக்கட்டை மறித்து நீர் விநியோகத்தை தடுத்தது புலிகள். 2007 மாவீரர் உரையில் யுத்தப் பிரகடனம் செய்து தெற்கில் குண்டுகளை வெடிக்கச் செய்ததும் புலிகள். அதனைத் தொடர்தே அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த யுத்தத்தை ஆரம்பித்ததில் புலிகளுக்கு முக்கிய பங்கு உண்டு அல்லவா?

சிவாஜிலிங்கம்: மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வந்ததில் இருந்து ஜேவிபி மற்றும் ஜாதிக ஹெலஉறுமய போன்றவற்றின் ஆலோசனையுடயேனே செயற்படுகின்றார். அந்த நிகழ்ச்சி நிரலிலேயே செல்கிறார். தமிழ் தேசிய உணர்வாளர்களை யாழ்ப்பாணத்திலும் ஏனைய பகுதிகளிலும் வேட்டையாடியதைத் தொடர்ந்தே இந்த யுத்தம் ஆரம்பித்தது என்றே சொல்ல வேண்டும். அதன் தொடர்ச்சியாகத்தான் மாவிலாறு அமைந்தது. 2007ல் பெரிய குண்டுவெடிப்பு என்று எதுவும் இடம்பெறவில்லை.

யுத்த நிறுத்த மீறல்கள் என்று சொன்னால் 3000 – 5000 என்று புலிகள் சம்பந்தப்பட்டு இருந்தாலும் ஒருவரை இயக்கத்தில் சேர்திருந்தால் அதுவும் மீறல்தான். மற்றும்படி பெரிய மீறல்கள் என்று குறிப்பிட எதுவும் இல்லை. ஆனால் மகிந்த ராஜபக்ச ஒரு இராணுவத் தீர்வை நோக்கித் தான் செல்ல எண்ணியிருந்தார். அது தான் நடைபெறுகிறது.

தேசம்நெற்: மகிந்த ராஜபக்ச இராணுத் தீர்வுக்கு செல்லக் கூடியவர் என்பதனாலேயே புலிகள் அவரை வெற்றியடைச் செய்வதற்காக அதற்கு ஏற்ற வகையில் தமிழ் மக்களை வாக்களிப்பில் ஈடுபடவிடாமல் தடுத்தனர். அந்த அடிப்படையிலேயே புலிகளின் தலைவர் பிரபாகரனது அப்போதைய மாவீரர் தின உரையும் அமைந்தது.

சிவாஜிலிங்கம்: மகிந்த ராஜபக்சவை விடுதலைப் புலிகள் தெரிவு செய்தார்கள் என்பது தவறானது. சிங்களவர்கள் தங்களுடைய தலைவரை தாங்களே தெரிவு செய்ய வேண்டும் என்பதே விருப்பமாக இருந்தது. ஆனால் தமிழர் தரப்பில் சிலருக்கு ரணில் விக்கிரமசிங்கவைத் தெரிவு செய்திருந்தால் அவர் கொஞ்சம் மென்மையான போக்கை கொண்டிருப்பார் என்ற நம்பி;க்கை இருந்தது. இன்றைக்கு ரணில் விக்கிரமசிங்க இந்த இராணுவத் தீர்வை ஆதரித்து நிற்பதில் இருந்து எந்த சிங்களத் தலைவருமே ஒரு தீர்வுக்கு தயாரில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஆகவே நாங்கள் இதில் பிரேத பரிசோதணை செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. எவர் அந்த ஆட்சியில் இருந்திருந்தாலும் இந்த நிகழ்ச்சி நிரலிலேயே நடந்திருக்கும் ஆனால் வேகம் கூடலாம் அல்லது குறையலாம்.

தேசம்நெற்: இந்த யுத்தத்தை வலிய ஆரம்பித்ததில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் நிறைந்த பங்கு உள்ளது. பொங்கு தமிழ் போன்ற நிகழ்ச்சிகளில் இன உணர்வுகளை உசுப்பி போருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா உ க்களும் அழைப்பு விட்டிருந்தனர். தெற்கிற்கு சவப்பெட்டிகள் வரும் என்ற பேச்சுக்கள் பாராளுமன்றத்திலும் ஒலித்தது. அந்த தவறுகளை நீங்கள் இப்போது உணர்கிறீர்களா?

சிவாஜிலிங்கம்: இல்லை. இல்லை. அடக்குமுறையை நீங்கள் திணித்தால் அந்த அடக்குமுறைக்கு எதிராக நாங்கள் போராடுவோம். அந்த நேரத்திலே 40 000 சவப்பெட்டிகள் தெற்குக்கு வரும் என்று ரிஎன்ஏ பா உ கூறியிருந்தது யுத்த நிலமையல்ல. அதன் பிறகு பல தடவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்த முன்வந்திருந்தது. ஆனால் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா உ க்களை படுகொலை செய்தது அரசாங்கம். தமிழ் மக்களின் அரசியல் சக்திகள் எல்லாவற்றையும் அழித்தது அரசாங்கம். தமிழ் மக்களுக்காக யார் போராடுவார்களோ போராட முற்படுவார்களோ அவர்களை எல்லாம் வேட்டையாடப்படுவார்ட்கள் என்பது தான் சிங்களத்தினுடைய தெளிவான செய்தி.

தேசம்நெற்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுயாதீனமாக செயற்பட முடியாமல் விடுதலைப் புலிகளின் அறிவுறுத்தலின் படியே செயற்பட வேண்டிய ஒரு நிலை இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

சிவாஜிலிங்கம்: 2004 தேர்தலின் போதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளோடு நேரடியாகக் கலந்துபேசி தேர்தல் அறிக்கைகளை தயாரிக்க வேண்டிய நிலை இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்களுடைய உண்மையான பிரதிநிதிகள். பேச்சுவார்த்தைகள் புலிகளுடன் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். மற்றது 2003ல் விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை செயற்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் கோரி இருந்தோம். அதற்கு இலங்கை அரசு தவறிவிட்டது. தமிழ் தேசிய விடுதலை இயக்கத்துடன் இணைந்து செயற்படுவது அவர்களுடைய பினாமி என்பதல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுயாதீனமாகவே செயற்பட்டு வருகிறது.

தேசம்நெற்: விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி உரையாட முன்வரவேண்டும் அதுவே மக்களின் இழப்புகளைத் தவிர்ப்பதற்கு வழிவகுக்கும் என இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளும் 2002 பேச்சுவார்த்தையின் போது மத்தியஸ்தம் வகித்த இணைத் தலைமை நாடுகளும் இன்று கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

Sivajilingam M Kசிவாஜிலிங்கம்: மக்களை வெளியே கொண்டுவருவது என்பது இரண்டு தரப்பும் தீர்மானிக்க வேண்டிய விடயம். இலங்கை அரசாங்கம் பிடிவாதமாக எல்லோரையும் ஒழிக்க வேண்டும் என்ற நினைக்கின்ற வகையிலே மக்கள் வெளியேற விரும்பவில்லை. வேண்டுமென்றால் சர்வதேச சமூகம் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் மிசன் அங்கு செல்லட்டும். அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் அங்கு சென்று பார்வையிடட்டும்.

இன்றைக்கு புலிகள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏனைய இயக்கங்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டது ஒடுக்குமுறையின் அடக்குமுறையின் வெளிப்பாடு. சிங்களப் பெரினவாதம் எங்களை அழிப்பதைத் தடுப்பதற்கே ஆயும் ஏந்தப்பட்டது. அதனைக் கீழே வைப்பதை மக்கள் விரும்பவில்லை. இந்த இடத்திலே சர்வதேசம் தன்னுடைய நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையினுடைய தலையீட்டின் ஊடாக அரசியல் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்பது தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

அதைவிடுத்து இன்னொருவரின் நிகழ்ச்சி நிரலுக்கு உதவி செய்வதற்குத்தான் சர்வதேச சமூகம் வருகின்றது என்று சொன்னால் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் போராடி அழிவதற்கு ஆய்த்தமாக இருக்கின்றோம். அடிமை வாழ்வை ஏற்றுக் கொள்வதற்கு நாங்கள் யாரும் தயாராக இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தயாராக இல்லை.

தேசம்நெற்: சர்வதேச சமூகத்தினுடைய தலையீடு என்று எதனைக் கேட்கறீர்கள். சமாதானப் படை ஒன்று வரவேண்டும் என்று கேட்கறீர்களா? அல்லது பாதுகாப்பு வலயத்தை சர்வதேசத்தின் பொறுப்பில் விட வேண்டும் என்று கேட்கிறீர்களா? அவ்வாறு சர்வதேசத்தின் பொறுப்பில் பாதுகாப்பு வலயம் ஒப்படைக்கப்பட்டால் மக்களை பாதுகாப்பு வலயத்திற்கு அனுமதிக்கும்படி நீங்கள் கோருவீர்களா?

சிவாஜிலிங்கம்: இந்த நிலைமைகளை நேரில் வந்து பார்க்குமாறு விடுதலைப் புலிகள் அழைப்பு விட்டு இருக்கிறார்கள் அதனை ஏன் இன்னமும் செய்யவில்லை. அதனைச் செய்து விட்டு விடுதலைப் புலிகளோடு சர்வதேச சமூகம் பேசலாமே. இதனை நாங்கள் தீர்மானிக்க முடியாது. அங்கிருக்கின்ற மக்களும் புலிகளும் தான் தீர்மானிக்க வேண்டும்.

அங்கு ஆபத்தில் இருக்கின்ற மக்களுக்கு பாதுகாப்பைச் செய்யாமல் இலங்கை அரசாங்கத்தை நம்பி போகச் சொல்ல முடியாது.

தேசம்நெற்: இன்றைக்கு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்ல முடியாது. இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் கொல்லபடுவது பற்றிய கரிசனை இல்லாமல் இருக்கலாம்.

சிவாஜிலிங்கம்: இல்லாமல் இருக்கலாம் இல்லை துப்பரவாக இல்லை. இன்றைக்கு இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் தான் செய்து கொண்டிருக்கிறது.

தேசம்நெற்: அதனால் தான் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் தமிழ் மக்களுடைய பாதுகாப்பு தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் முக்கிய பங்கிருக்கிறது ஏனென்றால் அவர்கள்தான் தமிழ் மக்களுடைய ஏகபிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அப்படி இருந்தும் வடக்கு கிழக்கின் எல்லாம் பகுதிகளில் இருந்தும் பின்வாங்கிய புலிகள் மக்கள் செறிவாக உள்ள பகுதியில் பின்வாங்காமல் நின்று சண்டையிடுவதன் நோக்கம் என்ன? இப்பகுதியில் சண்டையிட்டால் பெரும் மனித அவலம் நிகழும். இந்த அழிவை எப்படி நிறுத்துவது?

சிவாஜிலிங்கம்: சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு துணைபோவதை முதலில் நிறுத்தட்டும். பின்னர் வன்னி சென்று மக்களுடன் பேசட்டும். புலிகளுடன் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். இதற்கு மேல் சிறிலங்கா அரசாங்கத்தினது கொடுமைகள் தொடருமாக இருந்தால் போராடுகிற சக்தியைக் கொண்டிருக்கின்ற நாங்கள். தாங்கும் சக்தியையும் கொண்டிருக்கிறோம். ஒரு படைபலமோ படைபத்தினுடைய எண்ணிக்கையோ ஆயுதங்களோ வெற்றியைத் தீர்மானிக்காது. தாங்குகிற சக்தி தான் தீர்மானிக்கும். இறுதி வெற்றி எங்களுக்கெ என்றதிலை நாங்கள் உறுதியாக இருக்கிறம்.

இதுவரை ஒரு லட்சம் மக்கள் கொல்லபட்டு இருக்கிறார்கள் 25 000 போராளிகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் இதன் முடிவென்ன? இதுக்கு விலையென்ன? வெறும் 13வது திருத்தம் அந்தத் திருத்தம் இந்தத் திருத்தம் என்று சொல்லி எங்களை ஏமாற்ற முற்படுவதற்கு சர்வதேச சமூகம் துணைபோகுமாக இருந்தால் நாங்கள் ஒரு போதும் சர்வதேசத்திற்கு அடி பணிய மாட்டோம். ஒட்டுமொத்த இனமும் அழிய வேண்டி ஏற்பட்டாலும் அதைச் சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் இது தான் எங்களுடைய நிலைப்பாடு.

தேசம்நெற்: ஒட்டுமொத்த இனமும் அழிவதற்கு தயாராக இருக்கிறம் என்று ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்துகொண்டு நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்?

சிவாஜிலிங்கம்: மக்களுக்கு எங்களுக்கு சுயமரியாதை என்ற அடிப்படையில் தான் நாங்கள் போராட ஆரம்பித்த நாங்கள். சுயமரியாதையை இழந்து நாங்கள் சரணாகதியடைந்து மீண்டும் இரண்டாம் தரப் மூன்றாம் தரப் பிரஜைகளாக வாழ்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. மக்கள் எங்களைத் தெரிவு செய்திருக்கிறார்கள் தங்களுக்கு நீதியான கௌரவமான வாழ்வை ஏற்படத்தித் தருவதற்கு.

தேசம்நெற்: ஒட்டுமொத்த இனத்தையும் அழிப்பதற்கு அல்லவே. வெளிநாடுகளுக்கு வந்துள்ள மூன்றிலொரு பகுதி தமிழர்களதும் சுயமரியாதை என்ன?

சிவாஜிலிங்கம்: அதை எங்களால் செய்ய முடியவில்லை என்றால் அடிமையாக செல்லுங்கள் என்று சொல்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. இதற்கு மேல் நீங்கள் வேறு விடயத்திற்கு செல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

வெறுமனே புலிகள் தான் விடுவிக்க வேண்டும் என்றால் விடுவிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நடந்தது. யாழ்ப்பாணம் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை. ஆறு லட்சம் மக்கள் இருக்கிறார்கள். வேட்டையாடப்படுகிறார்கள். அதே போல் வவுனியா நகரம் மன்னார் நகரத்தில் மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள். கிழக்கு மாகாணம் கொழும்பு நகரம் எங்கும் தமிழ் மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள். சரி வன்னி நிலப்பரப்பில் தான் அவலங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சரி வேறு எங்கும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறவில்லையா? இந்த அவலங்களுக்கு முடிவில்லாத நிலையில் வன்னியைவிட மோசமான அவலத்திற்குள் அந்த மக்களைத் தள்ளுவதற்கு நாங்கள் தயாரில்லை. அதற்கு துணை போக முடியாது.

Sivajilingam M K & Sothilingam Tதேசம்நெற்: அண்மையில் இந்தியா சென்று திரும்பிய நீங்கள் பல இந்தியத் தலைவர்களையும் சந்தித்து இருந்தீர்கள். இலங்கை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

சிவாஜிலிங்கம்: நான் அறிந்தவரை இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடு தவறானது என்பது தான் என்னுடைய கருத்து. பாகிஸ்தானும் சீனாவும் இலங்கையின் புலிகளை அழிக்கும் யுத்தத்திற்கு முழுமையாக உதவி வருகிறார்கள். இராணுவ ரிதியாக புலிகள் பலமிழந்து போயுள்ளனர். இலங்கை பெரும்பாலும் சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட நிலையே காணப்படுகிறது. ஈரான் நிதியுதவியை அள்ளிக் கொடுக்கிறது. இந்தியாவிற்கு எதிரானவர்கள் இலங்கையில் ஆளுகை செலுத்துகையில் குறைந்தது மூன்றில் ஒரு நிலப்பரப்பாவது தங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல் பழிவாங்கத் துடிப்பது சீனா, பாகிஸ்தான் நாடுகளின் கையை அங்கு ஓங்கச் செய்யும். இதனை இந்தியா விரைவில் உணரும்.

ஆனால் எமது தொப்புள்கொடி உறவுகளான தாய்த் தமிழக மக்கள் உணர்வாகவும் விழிப்பாகவும் இருக்கிறார்கள். 

தேசம்நெற்: இந்தியக் காங்கிரஸ் கட்சி தான் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். அடுத்த தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சி அமைந்தால் அது விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக அமையும் என்று நினைக்கிறீர்களா?

சிவாஜிலிங்கம்: இந்தியாவின் தேர்தலில் யார் வெற்றி பெறவேண்டும் என்பது பற்றி இந்திய மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் மாற்றங்கள் ஏற்பட்டால் வாய்புகள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் அவ்வளவுதான்.

பிஜேபி ஆட்சியின் போது அன்ரன் பாலசிங்கம் பயணம் செய்த கப்பல் இந்திய கடற்படையால் வழிமறிக்கப்பட்டது. அப்போது தங்கள் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு தொடர்பு கொண்டு தாங்கள் என்ன செய்வது என்று கப்பலில் இருந்தவர்கள் கேட்டுள்ளனர். அவர்களை சற்றுப் பொறுக்கும்படி சொல்லிவிட்டு விடுதலைப் புலிகள் நெடுமாறன் ஐயாவுடன் தொடர்புகொண்டனர். நெடுமாறன் ஐயா அப்போது பாதுகாப்புச் சௌலாளராக இருந்த ஜோர்ச் பேர்னான்டஸ் உடன் தொடர்பு கொண்டு பின்னர் மனிதாபிமான அடிப்படையில் பயணத்தைத் தொடர அனுமதி வழங்கப்பட்டது.

தேசம்நெற்: தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை படிமுறையாக வெற்றி பெற்றிருப்பதற்கான வாய்ப்பு ஒன்று இருந்தள்ளது. குறிப்பாக இலங்கை – இந்திய ஒப்பந்தம் சந்திரிகாவின் காலத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வுகள். இதில் தமிழ் அரசியல் தலைமைகள் தவறுவிட்டுள்ளனவா?

Sivajilingam M Kசிவாஜிலிங்கம்: தமிழ் தரப்பில் எவ்விதமான தவறும் இல்லை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூட தலைமை தாங்கிய வரதராஜப்பெருமாள் என்ன சொல்லிச் சென்றார். அதை நடைமறைப்படுத்த இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை. உண்மையான அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆனால் அப்படிச் செய்திருந்தால் அடுத்த பக்கம் கொண்டு சென்றிருக்கலாம். 2002 பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட தீ;ர்மானங்களை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை. ஐஎஸ்ஜிஏ க்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையே. பி ரொம்ஸ்க்கு என்ன நடந்தது.

தமிழ் தேசியத்தின் போராட்டம் ஓயாது. வேணும் என்றால் அது மிகவும் நசுக்கப்படலாம். அழிக்கப்படலாம் ஆனால் சாம்பல் மேட்டில் இருந்து பீனிக்ஸ் பறவை எழும்புவது போன்று இந்தப் போராட்டம் திருப்பி வெடிக்கும். எல்ரிரிஈ தவறுக்ள் விட்டுருக்கிறது. நாங்கள் தவறுகள் விட்டிருக்கிறம். ஆனால் அடுத்த தலைமுறை அந்தத் தவறை விடாது என்றதை நான் டெல்லியில் ஒரு திங் ராங்க் அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் சொல்லி இருக்கிறேன். புலிகள் அழிக்கப்பட்டாலும் ஒரு எதிர்ப்பு இயக்கம் ஒன்று எஸ் ஓ வை ஓ என்ற பெயரில் இருக்கட்டும் லோங்ரேமில் ஒரு வரலாறு படைக்கட்டும்.

தேசம்நெற்: தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள முரண்பாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?

சிவாஜிலிங்கம்: கட்சிகள் கூட்டமைப்புகள் அனைத்தையும் பிளவுபடுத்திய மகிந்த ராஜபக்சவால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 22 பா உ க்களில் ஒருவரையும் விலைக்கு வாங்க முடியாமல் போனது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று நான் கருதுகிறேன். 

தேசம்நெற்: இன்று இந்த ஆபத்தான சூழலில் தமிழ் மக்கள் தள்ளப்பட்டதற்கு பல்வேறு தவறான முடிவுகள் காரணமாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய பொறுப்பை சரிவரச் செய்யவில்லை என்று நீங்கள் கருதவில்லையா?

சிவாஜிலிங்கம்: விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் தீர்வுத் திட்டதை முன் வைக்கத் தவறிவிட்டது என்றே நான் கருதுகிறேன். அவ்வாறான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்காதது மிகப்பெரிய தவறு என்றே நான் கருதுகிறேன்.

தேசம்நெற்: மீண்டும் பழைய விடயத்திற்கே வருகிறேன். இந்த யுத்த்தில் சிக்குண்ட மக்கள் லட்சக்கணக்கான மக்களை எப்படி இந்த அவலத்தில் இருந்து மீட்க முடியும்?

சிவாஜிலிங்கம்: சர்வதேச கண்காணிப்பில் ஆயுதங்களை வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்குப் பொவது தான் மக்களுக்கும் நல்லது எல்லவற்றுக்கும் நல்லது. அப்படி பேச்சுவார்த்தையை நடாத்தி இறுதித் தீர்வு எட்டப்படுமாக இருந்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் புலிகள் சரணடைவதை ஒரு போதும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 Comments

  • a.vijayakumar
    a.vijayakumar

    காலம் கடந்த ஞானோதயம். பழையபடி செல்வம் அடைக்கலநாதனையும் கூட்டிக் கொண்டு போய் திருச்சி எழில்நகரில் டெய்லரிங் தொடங்க வேண்டியதுதான்.

    கடந்த மாதம் இந்தியாவில் இருந்து கொண்டு என்ன காட்டுகாட்டினார் இந்த சிவாஜிலிங்கம். இப்போது மிக செளகரியமாக லண்டனில் இருந்து கொண்டு பல்லிடுக்கில் சிக்கிக் கொண்ட முள்ளெடுப்பதெப்படி என கதை சொல்லுகின்றார்.

    புலிகளும் தவறு செய்து விட்டார்களாம். இனி எஸ் ஓ வை ஓ வந்து வரலாறு படைக்கட்டுமாம். இதத்தான் மொத்த தமிழனும் 25 வருடமாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.அதை உங்கட மேனாமினுக்கி உலகத்ததமிழர்களின் ஒட்டுமொத்த தலைவர் பங்கர் குடிமகன் 65000 உயிர்களை பலிகொண்ட பின் சூரிய நமஸ்காரம் செய்ய சொல்கின்றீர்களா? ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வன்னியில் இன்னும் உயிருக்காக போராடும் அந்த பத்தினிகளின் சாபம் உங்களைச் சும்மா விடாது. அது நின்று நிதானித்து கொல்லும்

    Reply
  • mutugan
    mutugan

    விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்று ஒரு தீர்வுத் திட்டதை முன்வைக்காமல் போனது மிகப்பெரிய தவறு .

    விடுவலைப் புலகள் எப்பவாவது அரசியல் தீர்வில் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டிருந்தார்களா? அவர்கள் தமிழீழத்தை தவிர வேறெதையும் கோரினார்களா? பிறகு எப்படி …..?

    யாழ்ப்பாணம் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை. ஆறு லட்சம் மக்கள் இருக்கிறார்கள். வேட்டையாடப்படுகிறார்கள். அதே போல் வவுனியா நகரம் மன்னார் நகரத்தில் மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள். கிழக்கு மாகாணம் கொழும்பு நகரம் எங்கும் தமிழ் மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள்

    வேட்டைகளைப் பற்றி நீங்கள் பேச முடியுமா? உங்கள் ரெலோ போராளிகளின் வேட்டைக்கு என்ன பிராயச் சித்தம்?

    நீங்கள் திருந்தப் போவதில்லை.

    Reply
  • thesi
    thesi

    //சாம்பல் மேட்டில் இருந்து பீனிக்ஸ் பறவை எழும்புவது போன்று இந்தப் போராட்டம் திருப்பி வெடிக்கும். எல்ரிரிஈ தவறுக்ள் விட்டுருக்கிறது. நாங்கள் தவறுகள் விட்டிருக்கிறம். ஆனால் அடுத்த தலைமுறை அந்தத் தவறை விடாது என்றதை நான் டெல்லியில் ஒரு திங் ராங்க் அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் சொல்லி இருக்கிறேன். புலிகள் அழிக்கப்பட்டாலும் ஒரு எதிர்ப்பு இயக்கம் ஒன்று எஸ் ஓ வை ஓ என்ற பெயரில் இருக்கட்டும் லோங்ரேமில் ஒரு வரலாறு படைக்கட்டும்.//

    என்ன சிவாஜிலிங்கம் ஒருபக்கம் பிசிறு அடிக்கிறமாதிரி தெரியுது.. எல்லாம் பிழைச்சுப்போச்சு போல கிடக்கு என்ன.. எது எப்படி இருந்தாலும் உங்களுக்கு எல்லாம் ஓகே தானே…. எங்கே உங்கள் சகாக்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன் செல்வம் அடைக்கலநாதன் மாவை சேனாதிராசா சிறிகாந்தா ஒருத்தற்ற சத்தத்தையும் காணோம் இனித்தான் வருவினம்போல கிடக்கு வரட்டும் வரட்டும்

    Reply
  • chandran.raja
    chandran.raja

    மக்களை பிரததிநிதிப்படுத்தாதும் அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய முடியாததையும் அதுவே அரசியலாய் கொள்ளாதவர்களையும் வரலாறு என்னமா தூக்கி குப்பைதொட்டியில் எறிகிறது என்பதற்கு புலிகளையும் புலிகளுக்கு சாசனம் எழுதிக்கொடுத்த பாராளமன்ற 22 உறுப்பினரை விட வேறு உதாரணம் வேண்டுமா?
    புலிகளின் கைக்குவந்த பணம் உலகத்தில் எந்த விடுதலை இயகத்திற்கும் வந்துசேர்ந்ததில்லை. இந்தபணத்தை மக்களின் நலன்களில் ஒருதுளி விசுவாசம் இருந்திருந்தால் கூட ஒரு நகரத்தை நிர்மாணித்திருக்க முடியும். தொழில்சாலைகளை நகரங்களை உருவாக்கி பொருளாதர ரீதியாகவே பேரினவாதத்தை அடிமைபடுத்தியிருக்க அழித்திருக்க முடியும். கற்பனை வீரசூரசாதுரியங்களின் நம்பிக்கை வைக்கிற குட்டி முதலாளித்துவர்கத்தின் வேலைத்திட்டம் ஒட்டுமொத்த மக்களுக்கு சல்லிக்கு உதவாதவை என்பதை மீண்டும் நீருபித்திருக்கிறது.

    Reply
  • Baabeeq
    Baabeeq

    Hello Mr.Sivagee Lingam, how many Tamils are living in west and south without any problem, and how many Tamils killed by LTTE ? just do not talk rubbish ?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஒரு பக்கத்தாலை கூத்தமைப்புத் தலைவர் சம்பந்தர் புலம்ப இங்காலை சிவாஜிலிங்கமும் புலம்புறாரு. சென்ற மாதம் இந்தியாவிலே நின்று தமிழீழப்பிரகடனம் செய்யப் போறனெண்டு வீராப்பு பேசிய வீரபுருசர் அல்லவோ இவர். இப்ப ஞானம் வந்திட்டுது போல. இன்றைய தமிழ் மக்களின் இந்த நிலைக்கு கூத்தமைப்பினரும் முக்கிய காரணம் என்பதை இன்னும் இவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மக்கள் பிரதிநிதிகள் என்று தம்மைக் கூறிக்கொள்பவர்கள் அரசாங்கம் தொகுதி அபிவிருத்திக்கு என்று கொடுத்த பணத்தை அப்படியே புலிகளின் காலில் கொட்டியதைத் தவிர மக்களுக்கு என்ன செய்தார்கள்?? இன்றைய நிலையில் கூட மக்களைக் காப்பாற்றும் எண்ணத்தை விட புலிகளை எப்படிக் காப்பாற்றலாமென்ற எண்ணத்திலேயே இருக்கின்றார். காரணம் புலிகள் இருந்தால்த் தானே இவர்களை மக்களிடமிருந்து காப்பாறுவார்கள். இல்லையேல் மக்களே இவர்களுக்குச் சமாதி கட்டிவிடுவார்கள்.

    Reply
  • Nathan
    Nathan

    சர்வதேச மூலதனத்தின் சதியை முடியடிப்போம்

    சுயநிர்ணயப் போராட்டம் என்பது தடம் புரண்டு நேரிடையாகவே சர்வதேசத்திற்கிடையில் சதுரங்க ஆட்டம் நடைபெறுகின்றது. கண்ணீர் விட்டோம் வளர்த்தோம் என்று நாம் இன்று நெஞ்சில் அடிப்பதன் மூலம் எவ்வித பயனும் அடையப் போவதில்லை. இன்றைய நிலையில் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என பார்ப்பதே முக்கியமானதாக அமையும்.
    வன்னியில் மக்கள் சிறிய பிரதேசத்தில் அகப்பட்டிருக்கின்றார்கள் இந்த மக்களை பாதுகாப்பதில் எவரும் கவனம் செலுத்துவதாக தெரிவில்லை. ஆனால் எவ்வாறு புலிகளை சரணடைய வைக்கலாம் அல்லது முற்றாக அழிக்கலாம் என்பதில் சர்வதேசம் தமக்கிடையே கருத்து ஒற்றுமை கொண்டு செயற்படுகின்றது.
    இவற்றை அறிந்து கொண்ட சிறிலங்கா பாசீச அரசு புலிகளை அழிக்கின்றோம் எனக் கூறிக் கொண்டு தமிழ் மக்களை படுகொலை செய்கின்றது. புலிகளின் பகுதிகள் அனைத்துமே ஏற்றுக் கொள்ளப்பட்ட தாக்குதல் இலக்கு என ஸ்கை செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியில் ராஜபட்சே கூறியிருந்தார். இதனால் அங்கிருக்கும் மக்களை பாதுகாப்பதில் இனவாத அரசு சிறிதும் அக்கறை கொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றது. (புலியெதிர்ப்பாளர்கள் இதனை உண்ணிப்பாக கவனிக்க தவறுகின்றனர் ) இதற்கு புலிகள் அந்த மக்களை தடுத்து வைத்திருப்பதாக அரசு கூறுகின்றது.

    புலிகளின் பிரதேசங்களில் இருக்கின்ற மக்களை பல்வேறு வகையாக பிரிக்கலாம்
    புலிகளின் தலைமையில் குடும்பத்தினர்
    மாவீரர் குடும்பத்தினர்
    தேசபக்தர்கள், அதாவது புலியை தமது விடுதலை அமைப்பாக ஏற்று கொண்ட விசுவாசிகள்.
    அங்கவீனமான போராளிகள்
    இவர்களில் குறிப்பிட்ட பகுதியினர் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்ட மக்களாக இருக்கவும் முடியும். இப்படி பலதரப்பட்ட மக்கள் இருக்கின்றனர். இவ்வாற வேளையில் சர்தேசியவாத நிலையில் இருந்துதான் முடிவெடுக்க வேண்டும். எவ்வாறெனில் உள்நாட்டு சர்வதேச எதிரிகளின் சூழ்ச்சி இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஆக புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டவர்களை விட மற்றவர்கள் எவ்வாறு அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரமுடியும்.
    இங்கு அரசபடை வடித்தெடுத்து கொலை செய்வார்கள்
    அரசபடைகளுடன் சேர்ந்தியங்கும் குழுக்களின் பழிவாங்கலுக்கு உள்ளாகுவர்.
    வரும் மக்கள் திறந்தவெளிச் சிறைச்சாலையில் தான் வாழ வேண்டும். ஏனெனில் அரச கட்டுப் பாட்டில் உள்ள பிரதேசங்கள் அத்தனையும் திறந்த வெளிச் சிறைச்சாலைக்கு ஒப்பாகத் தான் இருக்கின்றது. அங்கு வாழ்கின்ற மக்கள் சுதந்திரமாக வாழவில்லை. அப்பிரதேசத்தில் தந்திரோபாயமாக தமது வாழ்க்கையை தப்பி பாதுகாத்து வாழ்கின்றனர். இலங்கையில் ஒரு சிங்கள குடி எவ்வித (பொருளாதார வசதி இல்லாது இருக்கலாம்) எவ்வித உயிராபத்தும் இல்லாது வாழ முடிகின்றது போல தமிழ் மக்கள் வாழ முடிகின்றதா?
    இவர்களின் எதிரிகள் யார் எனப் பார்ப்பது நல்லது
    -சிறிலங்கா அரசபடைகளும்
    -அவர்களுடன் சேர்ந்தியங்கும் குழுக்கள்
    -விடுதலைப் புலிகளின் பழிவாங்கல்
    இந்த மூன்றுவிதமான இல்லாதொழிப்பிற்கு மத்தியில் வாழ வேண்டியிருக்கின்றது.

    இவ்வாறான நிலையில் பழிவாங்கல் என்றில்லாமல் மக்கள் தாமே தமது நிலையை தீர்மானித்துக் கொள்ளக் கூடிய வகையில் யுத்த நிறுத்தம் அமைந்து கொள்ள வேண்டும். கைதுகள், காணாமல்போதல், சித்திரவதை மற்றும் பழிவாங்கல்கள் அனைத்துப் பிரிவினராலும் நிறுத்தப்பட வேண்டும். இவையே யுத்தநிறுத்தத்தின் ஒரு அம்சமாக இருக்க வேண்டும்.
    புலிகள் தற்பொழுது இருக்கும் நிலைப்பரப்பில் அவர்களை வேண்டுமென்றால் முடக்கி விட முடியும். அதே வேளை அரசசார்பு குழுக்களின் நடமாட்டம், அரச படைகளின் கட்டுப் பாடு என்பது 1970களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். இவைகள் யுத்த நிறுத்தத்தின் பின்னரான பேச்சுவார்த்தையில் ஒரு அம்சமாக கொள்ளப்பட வேண்டும்.

    யுத்தத்தை நிறுத்துவது
    நிவாரணப் பொருட்களை அனுப்புவது
    அரசு தனது சுற்றிவளைத்துள்ள பகுதிகளில் பாதுகாப்பினை மேற்கொள்ளலாம் ஆனால் புலிகளின் பிரதேசத்தினுள் பிரவேசம் செய்யக் கூடாது.
    இதே போல புலிகளும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது.
    புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெளியேறும் மக்களை வெளியே புலிகள் அனுமதிக்க வேண்டும்

    அனைத்துப் பகுதியினரும் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவேண்டும்-
    அரசியல் தீர்வை முன்வைத்தல் வேண்டும் இவைகள்
    தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம்
    தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கு என்பதை ஏற்றுக் கொள்ளல் அத்துடன் முஸ்லீம், மலையக மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் வேண்டும்
    வட- கிழக்கு இணைப்பு
    அனைத்து மக்களுக்கும் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும்.

    புலிகள்: மக்கள் தாம் விரும்பியவாறு தமது போராட்டத்தை தொடர அனுமதித்தல் வேண்டும்
    ஏகபிரதிநிதித்துவக் கோட்பாட்டை கைவிடல் வேண்டும்.
    மேற்கூறியவை உடனடியாக அமுல்படுத்த வேண்டியவையாகும்.

    இதன் மூலமே புலியெதிர்ப்பாளர்கள் மக்களின் உரிமையை சோற்றுக்கும் சலுகைக்கும் நிகரானது என அரசுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இன்று வன்னி மக்களின் அவலத்திற்கு புலிகளை மாத்திரம் குற்றம் சுமத்திக் கொண்டு மக்களின் உரிமைகளை நசுக்குவதில் எவருக்கும் குறையாது செயற்படுகின்றனர்.
    யுத்த நிறுத்தம்
    நிவாரணம்
    படைகள் தத்தம் இடங்களில் நிலைகொள்வது
    மக்களை விரும்பும் இடத்தில் குடியிருக்க அனுமதிப்பது
    ஏகதலைமை கோட்பாட்டை புலிகள் கைவிடல்

    Reply
  • BC
    BC

    Nathan கேட்பது நிறைவேறினால் புலிகள் மறுபடியும் பொங்கு தமிழ் கொண்டாடி பண வசூலில் ஈடுபடுவதும், போட்டு தள்ளுதலும் தான் நடக்கும்.

    Reply
  • Sinna Siththar
    Sinna Siththar

    I welcome Mr Sivagilingam MP’s partially honest statement. Even at this eleventh hour he is willing to own up mistakes and apportion blame on LTTE. The reasons I suspect are: 1.He is now very confident that the LTTE is almost finished, therefore he has the new found courage to go against the LTTE. 2. He has the god given right to contest the forth coming election.

    This would be a total betrayal of LTTE and the people. The Tamil speaking people will not forgive TNA MPS for:

    1. Not being with them since the last election nor when they needed them .
    2. Being on permanent pilgrimage to Europe and India.
    3. Not being able to stand up to LTTE…
    4. Betraying LTTE at the last leg of their demise.

    Reply
  • accu
    accu

    நாம் இங்கு யாரையும் குற்றம் கூறியபடி இருப்பதில் எந்த வித லாபமும் இல்லை.கூட்டமைப்பை பொறுத்தவரை மிகப் பரிதாபமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் அவர்கள். புலிகளுக்கு வக்காலத்து வாங்கவே உருவாக்கப்பட்டவர்கள். ஒரு வார்த்தை பிழையாகச் சொன்னாலே துரோகியாகவோ அன்றி மாமனிதராகவோ ஆகவேண்டிய நிலை. அதற்க்கும் மேலாக எந்த பிழையும் விடாமலே புலிகளின் அரசியல் லாபங்களுக்காக புலிகளாலேயே கொல்லப்பட்டு அரசின் மேல் பழியைப் போடும் சந்தர்ப்பங்களையும் சுமந்து திரிந்தவர்கள். மற்றப்பக்கம் புலியெதிர்ப்பு குழுக்களின் பிரச்சனை வேறு. சிந்தித்துப் பாருங்கள் என்னதான் வசதியிருந்தாலும் எப்படியான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்களென்று. புலிகளின் இன்றைய தோல்விகளால் பெரிதும் நிம்மதி அடைந்திருப்பவர்கள் இவர்களாகத்தான் இருக்கும். பிபிசியில் புலிகள் வேறு நாம் வேறு எனும் சம்பந்தரின் செவ்வி, இந்தியாவில் இந்தப் போடுபோட்ட சிவாஜிலிங்கம் இப்போ எல்.ரி.ரி.ஈ.யும் தவறுகள் விட்டிருக்கின்றது சொல்லுமளவுக்காவது வந்துள்ள வீரம், இவர்களின் நிலையை எமக்கு நன்றாகவே காட்டவில்லையா? இவர்கள் மட்டுமா? ஒட்டுமொத்த தமிழினமே இரண்டு சகாப்தங்களுக்கு மேலாக வீரியம் குறைக்கப்பட்டு மந்தைகளாக வாய் பேசமுடியாமலல்லவா ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

    புலிகளும் தம் பங்குக்கு உலகின் நான்காவது பெரிய ராணுவத்தை தோற்க்கடித்தோம், இத்தனை சதுரமைல் நிலப்பரப்பை இத்தனை நாட்களில் மீட்டோம், என்ற தமது பிரச்சாரங்களையே உண்மையென நம்பி சுய இன்பத்தில் திளைத்து இன்று மகிந்தவின் படைக்கு முன் சுருண்டு போய் கிடக்கிறது. புலம்பெயர் புலி ஆதரவாளர்களோ தேசியத்தலைவரையும் தமிழ்ச்செல்வன்களையும் குஷிப்படுத்துவதற்க்காக தமது கற்ப்பனை வளங்களையெல்லாம் போட்டி போட்டு வெளிப்படுத்திய அரசியல் ஆய்வாளர்கள் என்னும் வெத்து வேட்டுக்களின் கதையில் மதிமயங்கிக் கிடந்து இன்று திகைத்துப் போய் நிற்கிறார்கள். இன்னும் சில காலத்தில் இவர்கள் தமது வேலைகளைப் பார்த்துப் போய்விடுவார்கள். ஆனால் வன்னியில் உள்ள அந்த அப்பாவி மக்கள்தான் தமது சிலுவைகளை தாமே சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள். ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழரும் ஒன்று சேர்ந்து இன்றைய யதார்த்த நிலையை உணர்ந்து புலிகளை ஆயுதங்களைப் போடவும் அரசை யுத்த நிறுத்தத்துக்கு கோருவதும் தான் அந்த மக்களை காப்பாற்ற ஒரே வழி.நடக்குமா? நன்றி.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலிகள் வக்கிரபுத்திகார்கள். அவர்கள் மக்கள் மக்கள் என்று சொல்வதெல்லாம் வெறும் பம்மாத்து. அவாகள் தம் அழிவோடு மக்களையும் அழிக்கவே பார்பார்கள். வரலாற்றில் மக்களுடைய சொத்துக்களையும் உடமைகளையும் சூறையாடுபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். மக்களுக்கு ஒருதலையிடி மாத்திரையோ ஒரு கோரப்புல்லையோ கொடுக்க வளர்க தங்கள் மனத்தை அவர்கள் பழக்கிக் கொண்டதில்லை. அப்படி யாராவது சொல்வார்களே யானால் தங்கள் நலனுக்கு செய்தவர்கள்யாகவே இருப்பார்கள் அது மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை. இப்படித்தான் புலிகள் தங்கள் வரலாற்றை எழுதி வைத்திருக்கிறார்கள். அவர்கள் விரும்புவது இரத்தம் தசை எலும்பு பிணங்கள் அதுவே அவாகளுக்கு மகிழ்சிதருபவை புலம்பெயர் ஆதரவாளர்களும் இந்த ரசணைக்கு உட்பட்டு நோய்வாய் பட்டிருக்கிறார்கள். புலிகள் ஆயுதத்தை போடுகிறோம் என்று சொன்னால் நம்புகிறவர்கள் முட்டாள்களே! புலிகளின் முக்கிய தலைவர்கள் கைதியாக்கப்பட வேண்டும:

    Reply
  • palli
    palli

    பல்லியின் கருத்து சிவாஜிலிங்கம் வந்த இடத்தில் அகதிக்கு பதிந்துவிட்டு ஏதாவது ஒரு தமிழ்கடையில் வேலைசெய்வது நல்லது. இவரபார்த்து மற்ற 21பேரும் வ்ர வாய்ப்பு இருக்கல்லவா?? ஆக இந்த 22ம் நாடு கடத்தபட்டாலே பிரச்சனைதீர ஒருவழி பிறக்கும். ஜெயபாலனும் சோதிலிங்கமும் இவர்களது பதவிக்காக இவரை பேட்டி கண்டிருப்பார்களென நினைக்கிறேன். மற்றபடி சிவாஜிசார் சின்னபொடிதான்??

    Reply
  • BC
    BC

    பல்லி- சிவாஜிலிங்கம் வந்த இடத்தில் அகதிக்கு பதிந்துவிட்டு ஏதாவது ஒரு தமிழ்கடையில் வேலைசெய்வது நல்லது. இவரபார்த்து மற்ற 21பேரும் வ்ர வாய்ப்பு இருக்கல்லவா?? ஆக இந்த 22ம் நாடு கடத்தபட்டாலே பிரச்சனைதீர ஒருவழி பிறக்கும்.
    பல்லி உங்கள் வாயில் சக்கரை போட வேண்டும்.

    Reply
  • illankovan
    illankovan

    //புலிகள் வக்கிரபுத்திகார்கள். அவர்கள் மக்கள் மக்கள் என்று சொல்வதெல்லாம் வெறும் பம்மாத்து. அவாகள் தம் அழிவோடு மக்களையும் அழிக்கவே பார்பார்கள்//
    மகிந்த மட்டும் தான் உக்கிர புத்திக்காரனோ>?

    Reply
  • palli
    palli

    இளங்கோவன் வீட்டுகாரனுக்கும் பக்கத்து வீட்டு காரனுக்கும் வித்தியாசம் வேண்டாமா??
    அரசு பலரை கொன்று விட்டு சிலரைதான்தாம் கொன்றதாக உலக நாடுகளை நம்பவைத்து தம்மை பாதுகாத்து கொள்கிறார்கள். நம்ம புலியோ சிலரை கொன்றுவிட்டு பலரை கொன்றதாக ஏப்பம் விடுவதாலும் அதை காவிபுலம் பெயர் தேசத்தில் வியாபாரம் செய்வதால் உலக நாடுகளில் ……..(பயங்கரவாதி) பட்டங்களை இலவசமாக இலகுவாக பெற்று கொள்கிறார்கள்.இப்போது புரியுதா? உக்கிர புத்திக்கும்; வக்கிரபுத்திக்கும் உள்ள வேறுபாடு.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நாதன் போன்றவர்களின் கருத்து மீண்டும் புலிகளை எவ்வாறு காப்பாற்றலாம் என்ற சிந்தனையையே காட்டுகின்றது. ஆனால் உண்மையில் பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணமிருந்தால் சர்வதேச பொது அமைப்புக்களின் பாதுகாப்பில் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வரும் மக்களை பாதுகாக்கும் படி அரசிடம் கோரிக்கையை வைக்கலாமே. இதை அரசும் தற்போதய சூழ்நிலையில் ஏற்றே ஆகவேண்டும். ஆனால் மாறாக இவர்களைப் போன்றோர் புலிகளைக் காப்பாற்றுவதில் மட்டுமே கோசம் போடுவதால் சர்வதேசமும் பாரா முகம் காட்டுகின்றது. இன்று நோர்வே அமைச்சர் எரிக் கொல்கெய்ம் கூட புலிகளை ஆயுதங்களை கீழே போடுமாறு சொல்லும் நிலைக்கு வந்துவிட்டது.

    Reply
  • சசிகரன்
    சசிகரன்

    தேசம் இணையத்தள ஆசிரியர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள் உந்த புலி புலிப்பினாமிகளின் பேட்டிகள் அறிக்கைகளை சமர்ப்பிக்கும்போது தயவு செய்து அவாகளின் திருமுகங்களை போடாது தவிர்க்கப்பார்க்கவும். எனது கம்பியூட்டர் மொனிட்டரை நான் இழப்பேனோ என சந்தேகமாக இருக்கின்றது.

    Reply
  • Nathan
    Nathan

    இன்று புலிகள் தமது தலைமையை பாதுகாத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் இன்று சிறிய பிரதேசத்தில் இருப்பவர்கள்
    அடிநிலைப் போராளிகள்
    சாதாரண மக்கள் போராளிகளின் குடும்பங்களும் பொது மக்களுமாவர். இவர்களை புலிகளின் தலைமை அல்லது அதிகாரவர்க்கத்தவர் இழப்புப்போல இவர்களை இழப்பதற்கு துணை போக முடியாது.
    அதிகார வர்க்கம் வேறு அடிமட்டப் போராளிகள் வேறு. ஏன் புலிகள் தலைமையின் தவறுகள் தமிழ் மக்கள் முன்னிலையில் விமர்சனப்படுத்தப் பட வேண்டும். ஆனால் புலிகளை தண்டிப்பதற்கு பிராந்திய வல்லரசுக்கோ அல்லது எந்த ஏகாதிபத்தியத்திற்கோ அல்லது சிறிலங்கா இனவெறி அரசுக்கோ தண்டிப்பதற்கு அருகதை இல்லை.

    Reply
  • palli
    palli

    நாதன் இந்த வசனம் எல்லாம் 25 வருடத்துக்கு முன்பாக பேசி முடிந்துவிட்டது.
    //ஆனால் புலிகளை தண்டிப்பதற்கு பிராந்திய வல்லரசுக்கோ அல்லது எந்த ஏகாதிபத்தியத்திற்கோ அல்லது சிறிலங்கா இனவெறி அரசுக்கோ தண்டிப்பதற்கு அருகதை இல்லை.//

    அப்போ எதுக்கு இந்த ஆர்பாட்டம் ஊர்வ்லம் எல்லாம். இப்போது புரியுமே ஏன் சர்வதேசம் புலியை காவுவாங்க உதவிகள் புரிகிறது என. புலிகொடி; புலிகுடை; புலிமணிக்கூடு; புலிபெனியன்; இப்படி பலதை விளம்பரத்துக்காக வெளியிட்ட இவர்கள் மனிதரை (தமிழரைமட்டுமல்ல) மதிக்க தெரியாமல் போனதுதான் தமிழினத்துக்கு வந்த சாபகேடு.

    Reply
  • palli
    palli

    //எரிக் கொல்கெய்ம் கூட புலிகளை ஆயுதங்களை கீழே போடுமாறு சொல்லும் நிலைக்கு வந்துவிட்டது.//

    இதை கத்து கொடுத்ததே புலிகள்தான். ஜெனிவாவுக்கு தமிழர் பிரச்சனை கதைக்க தீர்வுகான போன (பேச்சுவார்த்தை) புலிகளின் புத்திமான்கள். அங்கு கருனாவின் ஆயுத்தத்தை போடும்படி அரசு சொல்ல வேண்டும் அவர்கள் (கருனா) போடாத பட்ச்சத்தில் பறிக்கபட வேண்டும் என கொட்டாவி விடவில்லையா?? அதனாலேயே அந்த பேச்சுவார்த்தை கானாமல் போகவில்லையா?? கத்துகொடுப்பதில் எம்மவர் முதலிடம்.

    Reply
  • ashroffali
    ashroffali

    //தமிழ் மக்களின் அரசியல் சக்திகள் எல்லாவற்றையும் அழித்தது அரசாங்கம். தமிழ் மக்களுக்காக யார் போராடுவார்களோ போராட முற்படுவார்களோ அவர்களை எல்லாம் வேட்டையாடப்படுவார்ட்கள் என்பது தான் சிங்களத்தினுடைய தெளிவான செய்தி.//

    ஆமாம். அல்பிரட் துரையப்பா அமிர்தலிங்கம்- யோகேஸ்வரன்- சரோஜினி யோகேஸ்வரன்- பொன் சிவபாலன்- தோழர் ரொபர்ட் (சுபத்திரன்)- நீலன் திருச்செல்வம்- ராஜன் சத்தியமூர்த்தி இவர்களை மட்டுமல்ல இன்னும் பலரையும் படுகொலை செய்தது- புலிகளின் பாஷையில் போட்டுத் தள்ளியது -புலிகள் என்பது சிவாஜிலிங்கத்துக்கு மறந்து விட்டது போலும். அல்லது தான் சார்ந்த ரெலோ அமைப்பின் தலைவர்களையே அழித்தது புலிகள் எனும் உண்மை சிவாஜிலிங்கத்துக்கு மறந்து விட்டதா? பதவிக்காக வசதியாக மறந்து விட்டாரா?

    அது சரி சிவாஜிலிங்கம்… இவ்வளவு வீராப்புப் பேசும் நீங்கள் இந்தியாவில் தங்கியிருக்க- போய் வர- வெளிநாடுகளில் பல காரியங்களைச் சாதித்துக் கொள்ள அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளை தொலைபேசியில் அழைத்துக் கெஞ்சுவது எதற்காக? எதற்காக இந்த இரட்டை வேடம்? இந்த கேவலமான நாடகம் உங்களுக்குத் தேவைதானா?

    Reply