தமிழையும் வள்ளுவரையும் மானபங்கப்படுத்தும் யாழ் மாநகரசபை! மோடியின் கோமயம் எங்களுக்கு வேண்டாம்!!

திருவள்ளுவருக்கு பட்டையடித்து காவி போட்டு அவமானப்படுத்தும் உரிமையை யாழ் மாநகரசபைக்கு யார் கொடுத்தது? என்ற கேள்வி சுயசிந்தனையுடைய எவருக்கும் எழுவதைத் தவிர்க்க முடியாது. திருவள்ளுவர் என்றவுடன் இடதுகையில் ஓலைச்சுவடியும் வலதுகையில் எழுத்தானியுமாக முடிந்த சடையும் தாடியுடனும் வெள்ளைத்துணி போர்த்திய ஒரு மேலங்கியுடன் சப்பாணி கட்டி அமர்ந்திருக்கும் ஒரு நேரிய பார்வை கொண்ட தோற்றமே எம் கண்முன் வந்து நிற்கும். திருவள்ளுவர் என்று கூகுலில் தேடினாலும் அவ்வாறான ஒரு தோற்றத்தையே காண்பீர்கள்.

ஆனால் யாழ்ப்பாணத்தை அந்தப்புரமாக்கிக் கொண்டிருக்கும் ஹொட்டல் உரிமையாளர்களும் மோடியின் மோமயம் பருகி மயங்கிக் கிடப்பவர்களும் இணைந்து யாழ்ப்பாணத்தில் வள்ளுவர் சிலையைத் திறந்து வள்ளுவத்தையே சிதைத்துள்ளனர். ஆறுமுகநாவலருக்கும் வள்ளுவருக்கும் வித்தியாசம் புரியாமல் சிலையொன்றைத் திறந்து வள்ளுவனை கேவலப்படுத்தி உள்ளனர்.

உலகப் பொதுமறை என அழைக்கப்படக்கூடிய திருக்குறளை திருவள்ளுவர் எழுதியிருந்தார். திருக்குறள் தமிழ் மொழியின் மிக முக்கியமான ஒப்பற்ற பொக்கிஷம் ஆகும். அதில் இருக்கக்கூடிய தத்துவ கருத்துக்கள் மற்றும் மனித வாழ்க்கைக்கு தேவையான விடயங்கள் ஆகியவற்றினால் திருவள்ளுவர் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. திருக்குறள் ஒரு தமிழ் நூல் என்பதால் திருவள்ளுவர் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினதும் அடையாளமாக கருதப்படுகின்றார். “1330 பாடல்களைக் கொண்டுள்ள திருக்குறளில் எந்த ஒரு இடத்திலும் தனித்த ஒரு இனம் சார்ந்தோ – மதம் சார்ந்தோ –  ஒரு இனக் குழுமம் சார்ந்தோ –  சாதி சார்ந்தோ – எந்த குறிப்புகளும் இல்லை” என்பதே திருக்குறள் இன்று உலகப் பொதுமறை என கொண்டாடப்படுவதற்கான மிக முக்கியமான காரணமாகும்.

இப்படியாக சிறப்பு கொண்ட திருவள்ளுவரின் சிலை இன்று காவி அடிக்கப்பட்ட நிலையில்  யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மூன்று பட்டையுடன் ஒரு விதமான காவி வர்ணத்துடனான ஆடையை அணிந்து கொண்டு  காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார் திருவள்ளுவர். இந்த நிலை இன்னும் தீவிரம் அடையப் போகின்றது என்பது ஆக கவலையான விடயம். இதே நிலை தொடரும் பட்சத்தில் இந்தியாவில் இந்துத்துவாவாதிகள் கோமியம் என மாட்டு மூத்திரத்தை குடிப்பது போல இலங்கை தமிழர்களும் தங்களை இந்துத்துவாவாதிகள் என – இந்துக்கள் என நிரூபிப்பதற்காக மாட்டு மூத்திரத்தை  குடிக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டாலும் ஏற்படலாம்.

இந்தியாவில் மிகத்தீவிரத்தன்மையை எட்டியுள்ள இந்துத்துவாவாதம் தமிழ்நாட்டில் மிக வேகமாகவும் – மிக ஆழமாகவும் ஊடுருவியுள்ள நிலையில் அதனுடைய தாக்கம் இன்று இலங்கையையும் குறிப்பாக இலங்கையின் தமிழர் பகுதியையும் பற்றி பிடிக்க ஆரம்பித்துள்ளது. முக்கியமாக இலங்கையில் இந்துத்துவா கருத்துக்களை காவிச் செல்வோரில்  பெரும்பாலானோர் தமிழ் தேசியவாதிகளாக காணப்படுவது மிகப்பெரிய அபத்தமாகியும் உள்ளது. அதாவது இலங்கையில் இந்துத்துவா செல்வாக்கை ஏற்படுத்துவதன் மூலம் இந்தியாவுக்கு சார்பான ஒரு நிலைப்பாட்டில் பயணித்து இலங்கை தமிழர்களுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்கப் போகிறோம் என்பது போன்றதான பாணியிலும் – தமிழர் உரிமைகளை பாதுகாப்பதற்கு இந்து சமயம் ஒன்றை ஒரே தீர்வு எனவும் இந்த கண்மூடித்தனமான தேசியவாதிகளும் – இந்துத்துவாவாதிகள் பகற் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் அதீத எழுச்சி எவ்வாறு தமிழ்நாட்டை பாதித்து தமிழரின் வரலாற்றை காவி மயப்படுத்திக் கொண்டிருக்கின்றதோ அதே நிலை இலங்கையிலும் குறிப்பாக தமிழர் பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது. இதன்  நீட்சியாகவே அண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தலைவரான அண்ணாமலை  அவர்களின் இலங்கை வருகையை குறிப்பிட முடியும். இன்று மட்டுமல்ல பிரித்தானியர் இலங்கையை விட்டு சென்ற காலம் தொடங்கி இன்று வரை இலங்கையை பகடை காயாக பயன்படுத்தி வரும் இந்தியாவின் அரசாங்கங்கள் தன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்காவும் – தென்னாசியாவில் இந்தியாவின் ஏகாதிபத்திய வாத வளர்ச்சிக்காகவும் பல செயல்பாடுகளை மேற்கொண்டு வந்திருக்கின்றன.  அதன் ஒரு கட்டமாகவே இலங்கை தமிழர்களை தன்னுடைய ஒரு துருப்புச் சீட்டாக இந்தியாவில் பதவியேற்ற அரசாங்கங்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றன. இது தெரிந்திருந்தும் கூட இலங்கையின் தமிழ் தேசியம் பேசிய தலைவர்கள் இந்தியா மட்டுமே இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் என்கின்ற நிலையில் மடிப்பிச்சை  கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு புதிய வடிவமே இலங்கையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்துத்துவாவாதமாகும்.

இந்த இந்துத்துவவாதிகள் இலங்கை தமிழர்களுக்கு இடையே மதரீதியான சாதிய ரீதியான முரண்பாடுகளைத் தூண்டிவிடுகின்றது. இலங்கையில் இதுவரை காலமும் காணப்பட்டு வரும் இனம் சார்ந்த முரண்பாட்டை மதம் சார்ந்து மாற்ற முற்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவான உண்மை. இந்தியாவில் எவ்வாறு இந்துத்துவா கட்சிகள் இஸ்லாமிய மதத்துக்கு எதிரான கருத்துக்களை விதைத்து தொடர்ச்சியாக மதக்கலவரங்களை மேற்கொண்டு அதனூடாக அரசியல் லாபமிட்டுக் கொண்டிருக்கின்றனரோ அதே வடிவம் இலங்கையின் தமிழர் பகுதிகளிலும் இன்று உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது.  அண்மையில் திருக்கேதீஸ்வரம் பகுதியில் ஏற்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் இந்து சமயத்தவர்களுக்கும் இடையிலான முரண்பாடு கூட இதனுடைய ஒரு தொடர்ச்சியே.

இது மட்டுமல்ல இலங்கையில் தமிழர் வாழும் பல பகுதிகளிலும் இன்று இரவோடு இரவாக முளைத்து கொண்டிருக்கும் சிவலிங்கங்கள் கூட இந்த இந்துத்துவாவாதிகளினுடைய செயல்பாடுகளே. ஏற்கனவே 30 வருடங்கள் சிங்களவர்களுடனான இனப்போராக முடிவடைந்துள்ள நிலையில் இன்று தமிழர் என்கின்ற இனத்துக்குள்ளேயே மத போர் ஒன்றை இந்த இந்துத்துவாவாதிகள் உருவாக்க முற்படுகின்றனர்.

குறிப்பாக நேற்று வெளியிடப்பட்டிருந்த அறிக்கை ஒன்றில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 2000 வரையிலான கர்ப்பிணிப் பெண்கள் வறுமைக் கோட்டுக்குள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதுபோல் பிறந்த 50 நாட்களேயான ஒரு குழந்தை மந்த போசணை நிமித்தம் உயிரிழந்துள்ளது. அதுபோல அண்மைய காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாது தவிக்கின்ற பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பாடசாலை கல்வியை கைவிடும் ஒரு துர்பாக்கிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவையும் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற – நாளாந்த செய்திகளில் நாம் காண்கின்ற மிக முக்கியமான அவல நிலையே. இவர்களுக்கு உதவி செய்யத்தான் இவர்கள் யாருக்கும் மனதில்லை. இதை விடுத்து கடவுள்களுக்கு சிலை வைத்து மனிதர்களை காபட்பாற்ற முயன்று கொண்டிருக்கிறார்கள் இந்த இந்துத்துவாவாதிகள்.

ஆணையிறவில் பல கோடிகள் செலவில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய நடராஜர் சிலை, சந்திக்கு சந்தி முளைத்துக் கொண்டிருக்கும் புதிய கோயில்கள், யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை இந்துத்துவாவாதிகள் இலங்கையில் தமிழ் தேசியத்தை நிலை நாட்டுகிறோம் எனக் கூறி இந்தியாவில் காணப்படும் மதவாத அரசியலை இலங்கையின் தமிழர் பகுதியில் புகுத்துவதற்கு மிக கடினமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்களே ஆகப்பெரிய துணையாக இருக்கிறார்கள். இதன் உச்சகட்ட அநியாயம் இந்த இந்துத்துவாதிகளை நம்பி புலம்பெயர்  தேசங்களில் இருந்து கோயில்களை கட்டுவதற்காக கோடிக்கணக்கான பணம் கொட்டப்படுகின்றதாகும்.

யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கின்ற நிகழ்வில் உரையாற்றிய திரு. ஆறுதிருமுருகன் இதனை அவர் வாயினாலே ஒத்துக் கொண்டிருந்தார். அங்கு பேசிய அவர் கடவுளின் அருளால் புலம்பெயர் தேசங்களில் வாழக்கூடிய தமிழர்களின் இடத்தில் ஒரு சக்தி பிறந்திருக்கிறது. அந்த சக்தியின் ஊடாக இங்கு கோடானு கோடியை கொடுத்து பல கோயில்களை கட்டுகிறார்கள்,” என பெருமையாக கூறியிருந்தார்.

இந்த இந்துத்துவாவாதிகள் தொடர்பில் தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான தருணம் உருவாகியுள்ளது. இந்தியாவில் இந்துத்துவாவாதம் தமிழ் மொழியின் இருப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகி உள்ள நிலையில் இலங்கையிலும் இந்த நிலை நீடிப்பதற்கான வாய்ப்புகளே அதிகரித்துள்ளன. ஏற்கனவே பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து உரிமைகளை பாதுகாப்பதற்காக தமிழினம் ஏதோ ஒரு விதமாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த இந்துத்துவவாதிகளின் வருகை  வடக்கு – கிழக்கில்  இருக்கக்கூடிய தமிழர்களிடம் புதிய பிரிவினைகளை ஏற்படுத்தி அதன் ஊடாகவும் அரசியல் லாபமீட்ட முனையும் இந்தியாவிற்கு துணை போகுமே தவிர தமிழர் பகுதிகளில் எந்த ஒரு ஆரோக்கியமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதே உண்மை.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment