யாழ்ப்பல்கலைக்கழகத்தின் தில்லுமுல்லுகளும் திருகுதாளங்களும்..
பல்கலைக்கழகங்கள் உயர்கல்வியான பட்டப்படிப்பை வழங்கும் உயரிய கல்வி நிறுவனம். அதுமட்டுமல்லாமல் ஆய்வுகளை மேற்கொண்டு சமூகத்தின் தேவைக்கான அறிவியல் வழிகாட்டலை வழங்குகிறது. அப்படியான ஒரு நிறுவனம் வினைத்திறனற்று சரியாக இயங்காவிடில் அது சமூகத்திற்கு பெரும் கேடாகும். யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொடர்பில் சமீப காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொடர்பாக புதிய புதிய சர்ச்சைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
மக்களின் வரிப்பணமான 16 கோடி 60 இலட்சத்தை பிணையாக கட்டி புலமைப்பரிசில் திட்டங்களின் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சார்பில் சென்ற கல்வியாளர்கள் நாடும் திரும்பவில்லை மற்றும் கட்டிய பிணைப்பணமும் மீள வசூலிக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
வழமையாகவே பல்கலைக்கழகங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு புலமைப் பரிசில் பெற்றுச் செல்லும் கல்வியாளர்களும் மற்றும் கல்வித்துறை சாரா பல்கலைக்கழக ஊழியர்களும் குறிப்பிட்ட செயல்த்திட்டங்கள் முடிந்த பின்னர் பணிக்கு திரும்ப வேண்டும். அந்தவகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் செயல்த்திட்டங்கள் முடிவடைந்த பின்னரும் நாடு திரும்பி கடமைக்கு சமூகமளிக்கவில்லை.
இந்த விடயத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 2023 வருடாந்த அறிக்கையில் கணக்காளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். அவருடைய அறிக்கையின் படி 80 கல்விமான்களும் 21 கல்வித்துறை சாரா அலுவலர்களும் என 101 பேர் புலமைப் பரிசில் செயல்த்திட்டங்களின் ஊடாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் யாரும் இதுவரை நாடு திரும்பவும் இல்லை. கடமைகளைப் பொறுப்பேற்கவும் இல்லை. 1980 தொடக்கம் 2023 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறான புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் வெளிநாடு சென்று , நாடு திரும்பாது உள்ளனர்.
இவ்வாறு சென்றவர்களுக்கு செலுத்திய பிணைப்பணம் 16 கோடி 62 இலட்சத்து 98 ஆயிரத்து 684 ரூபாய் மீள அறவிடப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீளப்பெற யாழ்ப் பல்கலைக்கழகம் எந்த பிரயத்தனமும் செய்யவில்லை. மேலும் திரும்பப் பெறப்பட்ட 6 கோடி 17 இலட்சத்திற்கு அதிகமான பிணைப்பணம் திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என்றும் கணக்காளர் நாயகம் கண்டுபிடித்துள்ளார்.
பொதுமக்களின் வரிப்பணத்தில் இலவசமாக உயர்கல்வியை பெற்றுக் கொண்டவர்கள், நாட்டில் பணி புரியாமல் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அப்படியிருக்க அதே மக்களின் வரிப்பணத்தை பிணையாக வைத்து வெளிநாடு சென்றவர்கள் நாடு திரும்பாலும் குறைந்தபட்சம் பிணைப் பணத்தையாவது திரும்ப செலுத்தாமலும் இருப்பது மோசடி. இவ்வாறான ஊழலுக்கு யாழ்ப் பல்கலைக்கழகம் துணை போய்யுள்ளமை வெட்கக்கேடானது.
- பரீட்சை முடிவுகளில் தாமதம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அடுத்த திருகுதாளம் பரீட்சை முடிவுகள் மிகத் தாமதமாக வெளியிடப்பட்டு வந்திருக்கின்றது. இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
பொதுவாக பல்கலைக்கழகத்தில் நடாத்தப்படும் பரீட்சைப் பெறுபேறுகள் மூன்று மாதத்திற்குள்ளாக வெளியிடப்பட வேண்டும். ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2019 முதல் 2023 காலப்பகுதிகளில் மொத்தமாக 11 பீடங்களில் பரீட்சை முடிவுகளில் நான்கு மாதங்கள் தொடக்கம் 27 மாதங்கள் வரை தாமதிக்கப்பட்டே வெளியிடப்பட்டதாகவும் மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை கூறுகின்றது.
மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் யாழ்ப்பல்கலைக்கழ நிர்வாகம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய காலம் கனிந்து வருகின்றது. பரீட்சைகளை உரிய நேரத்தில் நடாத்தி பெறுபேறுகளை அறிவிப்பதையே பல்கலைக்கழகங்கள் தமது தலையாய பணியாக செய்ய வேண்டும் . பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தனிப்பட்ட சுயநலன்களுக்கு மாணவர் சமூகத்தை பிழையாக வழி நடத்துதல் தவிர்க்கப்பட வேண்டும். பெரும்பாலும் யாழ் பல்கலைக்கழகம் தற்போது மூவின சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதால் இன்னும் பொறுப்புடன் நடுநிலமையுடன் செயற்பட வேண்டும்.
- யாழ்ப்பல்கலைக்கழகத்தில் தொடரும் பகிடிவதை
1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க கல்வி நிறுவனங்களில் பகிடிவதையையும் வேறுவகையான வன்செயல்களையும் தடை செய்தல் சட்டத்தின் மூலம் பகிடிவதை செய்வதானது இலங்கையில் மிகக் கடுமையான குற்றங்களில் ஒன்றாகவும், பிணை வழங்கப்படாத குற்றமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது. இதன்படி பகிடிவதை செய்யும் அல்லது ஊக்குவிக்கும் எந்தவொரு நபரும் பிடியாணை இல்லாமல் கைது செய்யப்படலாம் எனவும் ஏற்பாடுகளை கொண்டுள்ளது.
பகிடிவதைக் குற்றத்திற்கு பிணை வழங்கப்படாது. அப்படியிருக்க யாழ்ப்பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர் ஒருவர் மீது சில சிரேஷ்ட மாணவர்களால் பகிடிவதை என்ற சாட்டில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான நாத்தாண்டியா மாணவர் கேட்கும் திறனை இழந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும், பொலிஸ்க்கும் மற்றும் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் முறைப்பாடு அளித்துள்ளார்.
சம்பவ தினம் அன்று விரிவுரைக்கு சென்று கொண்டிருந்த சம்பந்தப்பட்ட மாணவரை சில சிரேஷ்ட மாணவர்கள் வழிமறித்து , மோட்டார் சைக்கிளில் ஏற்றி தனியார் மாணவர் தங்கும் விடுத்திக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து ஏனைய சில புதுமுக மாணவர்களையும் பகிடிவதை என்ற பெயரில் ஹெல்மெட்டாலும் மற்றும் பலவாறும் தாக்கியுள்ளனர். அப்போது நாத்தாண்டியாவைச் சேர்ந்த மாணவர் மயக்கமுற்று விழுந்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த மாணவனுக்கு வலி நிவாரணியான பனடோலைப் கொடுத்து வெளியோ போக விட்டுள்ளார்கள். கூகுள் வரைபட உதவியுடன் யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதியை அடைந்த நாத்தாண்டியா மாணவர் அம்புலன்ஸ்ஸில் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.. இவ்வாறு உடல் மற்றும் உளரீதியாக மோசமாக பாதிப்படைந்துள்ள தனது மகனுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு தந்தை நீதி கேட்டு பொலிஸ் சென்றுள்ளமை யாழ்ப் பல்கலைக்கழகம் எவ்வளவு தூரம் மாணவர்களுக்கு ஆபத்தானதாக மாறியியுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றது.
யாழ்ப்பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமே வன்முறையை கையிலெடுக்கின்ற போது , அவரைப் போன்ற பேராசிரியர்களால் வழிநடத்தப்படும் மாணவர்கள் வன்முறையாளர்களாக மாறுவதில் ஆச்சரியம் இல்லை. சமீபத்தில் பேராசிரியர் சி . ரகுராம் கலைப்பீடத்தில் மாணவர்கள் பயன்பாட்டுக்கு அமைத்திருந்த கல்லாசனங்களை உடைத்து எறிந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பல்கலைக்கழகத்தில் புதுமுகப் பெண் மாணவிகளை பகிடிவதையின் போது சிரேஷ்ட மாணவர்கள் தூசண வார்த்தைகள் கொண்டு வசைபாடுவது தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடுகள் வந்துள்ளன. ஆண்புதுமுக மாணவர்கள் உடலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும் அறிந்ததே. அதேநேரம் பகிடிவதையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 4 இரண்டாம் வருட மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட விடயத்தில் யாழ்ப் பல்கலைக்கழகம் விசாரணைகளை செய்யும் என்றும் விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிரஜன் தெரிவித்துள்ளார். மேலும் சட்ட நடவடிக்கைகளுக்குப் யாழ்ப்பல்கலைக்கழகம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பல்கலைக்கழகம் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்கின்றது என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
யாழ்ப்பல்கலைக்கழகத்தில் பாலியல் சுரண்டல், பாலியல் இலஞ்சம் , ஊழல் , வன்முறை , போதைப்பொருள் கலாச்சாரத்துடன் பகிடிவதையும் சேர்ந்து பல்கலைக்கழக பெருமையை உலகறியச் செய்துள்ளது. விவகாரம் மானியங்கள் ஆணைக்குழு வரை சென்றுள்ளதால் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொடர்பில் தனியானவொரு சுயாதீனமான ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். யாழ்ப்பல்கலைக்கழகம் கிளீன் செய்யப்பட வேண்டும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.