Multiple Page/Post

“வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது”- நாமல் ராஜபக்ச உறுதி !

“வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவிற்கு நேற்று விஜயம் மேற்கொண்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இது குறித்து நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது” ஏனைய அரசியல் கட்சிகளைப் போன்று, தேர்தல் நேரத்தில் ஆதாயம் பெறுவதற்காக நாங்கள் எங்கள் கொள்கைகளை மாற்றுவதில்லை.

 

மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க முடியாது. வடக்கு கிழக்கையும் இணைக்க முடியாது. அவ்வாறு செய்தால் நாடு பிளவடையும் எனவே இந்த நாட்டை பிரிக்க நான் அனுமதிக்கமாட்டேன். வெளிப்படையாக அதனையே கூறுகிறேன்.

 

2015ம் ஆண்டு நாட்டின் வளர்ச்சி நிறுத்தப்பட்டது. ஆட்சியில் இருந்தது நல்லாட்சி அரசாங்கம்.

எனவே எங்கு நாட்டில் வளர்ச்சி தடைப்பட்டதோ அங்கிருந்து எனது பயணத்தை ஆரம்பிப்பேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது எமது பொறுப்பு” இவ்வாறு நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்

வெளியானது கொல்கத்தா மருத்துவமனையில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை !

இந்தியாவின் கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. கையால் கழுத்தை நெரித்ததில் மூச்சு திணறி அவர் உயிரிழந்ததாகவும் உடலின் உள்ளே 9 இடங்கள், வெளியே 16 இடங்களில் காயம் இருந்ததாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் மறுநாள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், பெண் பயிற்சி மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. அதன் விவரம்:

கடந்த 9-ம் தேதி மாலை 6.10 முதல் 7.10 மணி வரை பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. கையால் கழுத்தை நெரித்ததால், மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு நேர்ந்துள்ளது. இது கொலைதான். பாலியல் வன்கொடுமையும் நடந்ததற்கு மருத்துவ ரீதியிலான ஆதாரம் உள்ளது. பிறப்பு உறுப்பில் இருந்த 151 கிராம் திரவம் மற்றும் ரத்த மாதிரி ஆகியவை பரிசோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளன.

 

எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. உடலில் ரத்தம் உறைந்துள்ளது. கன்னம், உதடு, மூக்கு, கழுத்து, கைகள் என உடலின் வெளி பகுதியில் 16 இடங்களிலும், கழுத்து தசை, உச்சந்தலை என உள் பகுதியில் 9 இடங்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அவர் கடுமையாக போராடி உள்ளார் என தெரிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவ துறை பேராசிரியர் அபூர்வ பிஸ்வா, இணை பேராசிரியர் ரினா தாஸ், என்ஆர்எஸ் மருத்துவ கல்லூரியின் தடயவியல் மருத்துவ துறை துணை பேராசிரியர் மொல்லி பானர்ஜி ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளனர்.

கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் விரல் நகத்தில் இருந்த ரத்த மாதிரியும், கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் ரத்த மாதிரியும் ஒன்றுபோல இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால், கொலையில் சஞ்சய் ராய்க்கு தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

இதற்கிடையே, சம்பவம் நடந்த 2 நாட்களில், ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் பதவி விலகினார். கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றும் அவர் விசாரணைக்கு ஆஜரானார்.

 

‘‘பெண் மருத்துவர் உயிரிழந்த தகவல்அறிந்து மருத்துவமனைக்கு வந்த அவரதுபெற்றோரை, மகளின் சடலத்தை பார்க்க 3 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வைத்தது ஏன்?’’ என்று அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கேட்டனர். கொலை குறித்து முதலில் உங்களுக்கு தகவல்கொடுத்தது யார், சடலம் இருந்தபகுதிக்கு அருகே உள்ள அறைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உத்தரவிட்டது யார் என்பன உள்ளிட்ட கேள்விகளும் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

 

பத்ம விருது பெற்ற 70 மருத்துவர்கள் பிரதமருக்கு கடிதம்: புதுடெல்லி: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பத்ம விருது பெற்ற 70 மருத்துவர்கள் இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கதிரியக்க நிபுணர் ஹர்ஷ் மகாஜன், எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரந்தீப் குலேரியா, ஐசிஎம்ஆர் முன்னாள் இயக்குநர் பல்ராம் பார்கவா, நரம்பியல் வல்லுநர் எம்.வி.பத்மா வஸ்தவா உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் கையெழுத்திட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பெண் மருத்துவர் கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட, நம் நாட்டின் தலைவர் என்ற வகையில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும். இதுபோன்ற கொடூரமான செயல், மருத்துவ சேவையின் அடித்தளத்தையே ஆட்டம்காண செய்துள்ளது. பெண்கள், சிறுமிகள், சுகாதார துறையினருக்கு எதிரான வன்முறைக்கு தீர்வு காண வேண்டிய அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது. சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய, மாநில அரசுகள் உடனே தனி சட்டம் இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

வாக்குகளை பெறுவதற்காக அனைவரும் 13 வது திருத்தம் என்பதை உச்சரிக்கின்றனர் – சரத் பொன்சேகா

வாக்குகளை பெறுவதற்காக அனைவரும் 13 வது திருத்தம் என்பதை உச்சரிக்கின்றனர் என ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் 13 வது திருத்தம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

பல விடயங்களை செய்ய முயல்வதன் மூலம் ஒருவர் சமூகங்களின் மத்தியில் பகைமை உணர்வை உருவாக்ககூடாது.

 

இந்த விடயத்தில் நாங்கள் எதனை செய்தாலும் நாட்டின் அனைத்து மக்களினதும் ஆதரவு அதற்கு அவசியம்.

 

இந்த பரிந்துரைகளை வடக்குகிழக்கிற்கு மாத்திரம் நடைமுறைப்படுத்தும்போது தென்பகுதி மக்கள் குழப்பத்தில்; ஈடுபட்டால் அதனை உரிய தீர்வாக கருதமுடியாது.

 

இவை மிகவும் உணர்வுபூர்வமான விடயங்கள்.

 

இவற்றிற்கு முதல் நாங்கள் நாட்டை அபிவிருத்தி செய்யவேண்டும் நாட்டை அபிவிருத்தி செய்தால் மக்கள் சமாதானமாக வாழபழகிக்கொள்வார்கள். நல்லிணக்கம் அமைதி சமாதானம் போன்றவை காணப்படும்.

 

பொருளாதாரம் தொடர்பில் நாங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற போது வாக்குகளை பெறுவதற்காக மாத்திரம் அரசியல்வாதிகள் இனப்பிரச்சினை போன்றவற்றை பேசுகின்றார்.

 

இந்த விடயங்கள் குறித்து பேசுவதற்பு முதலில் நாட்டின் பின்னணி உரிய விதத்தில் காணப்படவேண்டும் .

வாக்கு கேட்டு வந்தால் அடிப்போம் – மக்களின் பதாகைகளால் பதற்றம்!

மாத்தளை – நாவுல, அடவல கிராம மக்கள் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கக் கோரி கிராமத்துக்கு வரும் மக்களை தாக்கப் போவதாக விளம்பரங்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

 

பல ஆண்டுகளாக தங்கள் கிராமத்துக்கு வந்த அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர்.

 

தங்கள் கிராமத்துக்கு செல்லும் சாலை வசதி, விவசாய நிலங்களில் உள்ள பிரச்சினை, போக்குவரத்து சிரமம் போன்ற காரணங்களால், இத்தேர்தலில், தங்கள் கிராம மக்கள் வாக்களிப்பதை புறக்கணிப்பதாக, கிராம மக்கள் கூறுகின்றனர்.

 

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல்வாதிகள் தங்கள் கிராமத்திற்கு வரவேண்டாம் என்றும் அவ்வாறு வந்தால் பதில் சொல்ல தயார் என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் கட்சி கூட்டங்களில் பங்கேற்க தடை – சுமந்திரன்

பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேந்திரன் அவர்களுக்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை எனத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதான வேட்பாளர்களுடன் போச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எமது அடிப்படை நிலைப்பாடு வடக்கு – கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஆகும்.

மூன்று பிரதான வேட்பாளர்களுடனும் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாகவும், பேசிய விடயங்களையும் கூட்டத்தில் தெரியப்படுத்தினோம். சில முன்னேற்றகரமான கருத்துக்களை அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவர்களது தேர்தல் அறிக்கை வெளிவந்த பின்னரே எமது இறுதி முடிவு எடுக்கப்படும்.

நாமல் ராஜபக்ஸ அவர்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து சந்தித்து இருந்தார். அவர்களிடம் உள்ள விடயங்களை தெரியப்படுத்தினார். அது அதி தீவிர சிங்கள வாக்குகளைப் பெற்றுக் கொள்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

அதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் கலந்துரையாடியிருந்தோம். தற்போது தெற்கில் சிங்கள பௌத்த பேரினவாதம் தலைத் தூக்காமல் உள்ளது. அது தொடர்பில் கலந்துரையாடினோம்.

எமது மக்களை வழிகாட்டுவதற்காக நாங்கள் ஆவணம் ஒன்றை தயாரிக்கவுள்ளோம். அதற்கான சிறு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தெளிவாக மக்களை வழிப்படுத்துவற்காக தேர்தலுக்கு முன்பாக நாங்கள் ஆவணம் ஒன்றை தெளிவாக வழங்கவுள்ளோம்.

தமிழ் பொது வேட்பாளராக வர்ணிக்கப்பட்டுள்ள அரியநேந்திரன் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டது. சென்ற கூட்ட தீர்மானத்தின் படி விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து அவருக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதற்குரிய பதில் கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம். அதுவரைக்கும் எமது கட்சியின் எந்தக் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள மாட்டார்.

அந்தப் பின்னணியில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் பிரசாரக் கூட்டங்கள் தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளது. கட்சி இது சம்மந்தமாக எமது ஆதரவாளர்களுக்குக் கொடுக்கும் அறிவுரை என்னவென்றால் ஒருவரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளோம்.

இதனால் மேடைகளில் ஏறி ஆதரித்துப் பேசும் போது அவதானமாக இருக்குமாறு கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கின்றோம். எமது கட்சி இது வரை யாருக்கு ஆதரவு வழங்குவது என எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி அல்லது மத சின்னங்களை பயன்படுத்த வேண்டாம் – தேர்தல் ஆணையம்

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி அல்லது மத சின்னங்களை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் அலுவலகங்களை தயார்படுத்துவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையிலும் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடியை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் மதச் சின்னங்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது – தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க

வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பல் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் உள்ள விடயங்கள் ஆணைக்குழு எதிர்பார்த்தது போன்று நடக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

“எமது ஆட்சியில் மத கலாசாரங்கள் பேணிபாதுகாக்கப்படுவதுடன் மத மற்றும் கலசார சீரழிவுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது” – அனுரகுமார திசாநாயக்க

“எமது ஆட்சியில் மத கலாசாரங்கள் பேணிபாதுகாக்கப்படுவதுடன் மத மற்றும் கலசார சீரழிவுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நடத்தப்படும் முதலாவது பொதுக்கூட்டம் இன்று தங்காலையில் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அநுரகுமார திசாநாயக்க மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”நாடு என்ற ரீதியில் முன்னோக்கி செல்வதற்கு தேசிய மட்டத்திலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தி தொடர்பாக இன்று பலர் வீண்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் பலர் அரசியல் பதவிகள் மற்றும் தனிப்பட்ட லாபம் கருதி கட்சித்தாவல்களில் ஈடுப்பட்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவாக இருந்தாலும் அல்லது வேறு எந்தவேட்பாளர்களாக இருந்தாலும் எத்தகையை கூட்டணிகள் அமைத்தாலும் நாட்டு மக்களை ஏமாற்றமுடியாது.பொதுமக்கள் இன்று தேசிய மக்கள் சக்தியுடன் உள்ளனர்” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வேகமெடுக்கும் குரங்கு அம்மை – சர்வதேச சுகாதார அவசரகால நிலை அறிவிப்பு!

உலகில் 13 நாடுகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு குரங்கம்மை நோய் தீவிரமடைத்து வருவது கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆபிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் குரங்கம்மை காய்ச்சல் பொதுச் சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது.

ஐநூறுக்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர். இதனை தடுத்து நிறுத்த சர்வதேச உதவி வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது. இதன்படி நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்களென 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில் கொங்கோ நாட்டில் 96 சதவீத அளவு பாதிப்புகளும் மற்றும் மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, கொங்கோவில் பாதிப்புகள் 160 சதவீதமும், மரணங்கள் 19 சதவீதமும் உயர்ந்துள்ளன.

இதுவரை 524 பேர் பலியாகியுள்ளனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க நாடுகளில் புது வடிவிலான வைரசாக இது பரவி வருகிறது.

கொங்கோவிலிருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் இது பரவியுள்ளது. எனினும், ஆபிரிக்காவில் குறைந்த தடுப்பூசி டோஸ்களே கையிருப்பில் உள்ளன.

இது பற்றி உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும் போது, நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விடயம். இந்த வைரஸ், ஆபிரிக்காவை கடந்து பரவக்கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பு, குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்ல  அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம்!

இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்ல  ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

2024 லங்கா பிரீமியர் லீக் போட்டியின் போது நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்ல இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதன் படி, நிரோஷன் டிக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரது தண்டனை காலம் எவ்வளவு என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.