Multiple Page/Post

பாடசாலைகளுக்கு உதவிகள் வழங்கும் சஜித் பிரேமதாசவின் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தை இடைநிறுத்திய தேர்தல்கள் ஆணைக்குழு!

எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற பிரபஞ்சம் வேலைத்திட்டம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 

நேற்றையதினம் அம்பாறையில் நடைபெறவிருந்த பிரபஞ்சம் நிகழ்வுகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.

 

ஒன்பது பாடசாலைகளுக்கு வசதியான வகுப்பறை உபகரணங்களை வழங்கும் பிரபஞ்சம் திட்டங்களே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்தும் பொதுக்கூட்டங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மௌனம் சாதித்த போதிலும்,

சஜித் பிரேமதாசவின் நிகழ்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை நியாயமற்றது என்றும் நளின் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இதேவேளை எதிர்வரும் நாட்களில் பிரபஞ்சம் திட்டத்தில் 70 நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நளின் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எட்டு மாதங்களில் 2.07 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்த 16 அதிகாரிகள்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடமையாற்றிய 16 அதிகாரிகள் கடந்த இரண்டு வருடங்கள் மற்றும் எட்டு மாதங்களில் 2.07 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தற்போது பயன்பாட்டில் உள்ள கட்டண முறையானது 2011 ஆம் ஆண்டு தற்காலிகமாக நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும்.

 

பின்னர் 2023 ஆம் ஆண்டு இறுதி வரையிலும் நவீன தொழில்நுட்பத்தின் படி பணம் செலுத்தக்கூடிய மென்பொருள் அமைப்பை ஏற்படுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.

 

இதேவேளை மோசடிகளை குறைப்பதற்காக தானியங்கி கதவுகளை திறக்கும் முறைமை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை கணக்காய்வுக்கு குறிப்பிட்டுள்ளது.

ஊழல் அமைச்சரவையில் ஆரம்பிக்கிறது! ஒரு டொக்டர் அர்ச்சுனாவால் முடியாது!! ஆட்சி மாற்றம் வேண்டும்!!! அருண் ஹேமச்சந்திரா

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜே.வி.பி கட்சி தொடர்பான நேர் – எதிர்மறையான கருத்துக்கள் வேகமாக பரவி வரும் நிலையில் இது தொடர்பான கருத்துக்களை ஜே.வி.பி கட்சியினுடைய திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரவுடன் கலந்துரையாடுகிறது தேசம்திரை.

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

நாமல் ராஜபக்ச மீது பொலிஸில் முறைப்பாடு செய்த அமைச்சர் பந்துல குணவர்தன !

அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு எவ்வித அறிவித்தலும் வழங்காமல் ஹோமாகம பொதுஜன பெரமுன கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்காக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக பந்துல குணவர்தன ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

அதன்படி நாமல் ராஜபக்ஷ ஒழுக்கத்தை மீறியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னிலையில் இது போன்ற விஷயங்களில் போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாது என போலீசார் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது

 

மேலும் இந்த தொகுதிக் குழுக் கூட்டத்தில் ஹோமாகம உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் உள்ளிட்ட சிறு குழுவினர் பங்கேற்றுள்ளதாகவும், நாமல் ராஜபக்ஷ, காமினி லோககே, திஸ்ஸ குட்டியாராச்சி ஆகியோர் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு எடுக்கும் அரசியல் தீர்மானத்தை இன்று பிற்பகல் அறிவிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு நிரந்தர மின் பிறப்பாக்கி !

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதிக்கான நிரந்தர மின் பிறப்பாக்கி நேற்று (27) சனிக்கிழமை வைத்தியசாலையை வந்தடைந்ததாக வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ரஜீவ் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைப் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவை மீண்டும் செயற்படவுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இன்று (28.7.2024) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் வெளிநோயாளர் பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவை மீண்டும் வைத்தியசாலையின் முன் பகுதிக்கு மாற்றப்படவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு , சத்திர சிகிச்சை கூடம் ஆகியவற்றை இயக்க ஆளணி மற்றும் மின்சாரம் தடைப்படும் வேளையில் மாற்றீடான மின்பிறப்பாக்கி ஆகிய அவசியமானதாக காணப்பட்டன.

தற்போது 400 கிலோ வாட்ஸ் வலுவுடைய நிரந்தர மின் பிறப்பாக்கி கிடைக்கப் பெற்றுள்ளது.

அதேவேளை ஒரு சில ஆளணி பற்றாக்குறையும் அடுத்த வாரம் அளவில் நிரப்பப்படவுள்ளது. எனவே அடுத்த வார நடுப்பகுதியில் புதிய அலகுகளை இயக்க உத்தேசித்துள்ளோம்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவை செயற்படுத்துவதற்கான மின்பிறப்பாக்கி இல்லாததன் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் சத்திர சிகிச்சைக் கூடத்தை இயக்க முடியாத நிலை இருந்து வந்தது.

இந்நிலையில், 400 கிலோ வாட்ஸ் வலுவுடைய நிரந்தர மின் பிறப்பாக்கி வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

எதிர்வரும் வாரத்தில் இருந்து குறித்த மின்பிறப்பாக்கி பயன்பாட்டிற்கு வரும் என்றும் அதுவரை தற்போதைய தற்காலிக மின் பிறப்பாக்கி பயன்பாட்டில் இருக்கும் எனவும் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ரஜீவ் தெரிவித்துள்ளார்.

பாடசாலைக்கு கஞ்சா கொண்டு சென்ற 13 வயது மாணவன் – முல்லைத்தீவில் சம்பவம்!

முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள பாடசாலைக்கு மாணவன் ஒருவன் கஞ்சாவுடன் சென்ற சம்பவம் கடந்த வியாழக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

 

இது தொடர்பில் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் 8இல் கல்வி கற்கும் இந்த மாணவன் தனது வீட்டில் இருந்து பாடசாலைக்கு செல்லும்போது சிறு கஞ்சா பொதி ஒன்றினை கொண்டு சென்றுள்ளான். இதனை அவதானித்த சக மாணவன் பாடசாலை அதிபரிடம் தெரிவித்துள்ளான்.

 

இது தொடர்பாக அந்த மாணவனை விசாரித்த பாடசாலை அதிபர், மாணவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

 

அத்தோடு, மாணவனுக்கு எங்கிருந்து கஞ்சா கிடைத்தது? வீட்டில் கஞ்சா பாவனை இடம்பெறுகிறதா? என பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் எகிறும் குற்றச்செயல்கள் – 300 நாட்களில் 500 கொலைகள் !

2023 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் சுமார் 500 கொலைகள் பதிவாகியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

அறிக்கையின்படி, கடந்த ஆண்டு குறித்த காலப்பகுதியில் 488 கொலைகள் நடந்துடன், அவற்றில் 52 துப்பாக்கிச் சூடுகள் அடங்கியுள்ளன.

 

தங்காலை, நுகேகொடை, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் எல்பிட்டிய ஆகிய ஐந்து பொலிஸ் பிரிவுகளில் அதிகளவான கொலைகள் பதிவாகியுள்ளதாகவும், தங்காலை பிரதேசத்தில் 32 கொலைகள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் 2018 மற்றும் 2022 க்கு இடையில் பலத்த காயங்கள் மற்றும் மனித கொலைகள் சம்பவங்கள் 7017 பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 2030 குற்றங்களும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாட்டில் இடம்பெறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கணக்காய்வு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில் கடந்த 6 ஆண்டுகளை கணக்கில் கொண்டால், கடந்த ஆண்டு அதிகளவான வீடுகளை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.

 

2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில் அந்த குற்றங்களில் 50 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இதேவேளை, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் 27 வீதத்தால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடும் கணக்காய்வு அறிக்கை, பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை 182ல் இருந்து 226 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஏனைய ஆண்டுகளை விட கடந்த ஆண்டில் பெண்களை காயங்களுக்கு உள்ளாக்கல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும், கடந்த வருடம் அந்த குற்றங்களை தீர்ப்பதில் 99 சதவீத முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக கணக்காய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவை பந்தாடி ஆசிய சம்பியனானது இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!

2024 ஆம் ஆண்டு மகளிருக்கான ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி முதல் முறையாக சுவீகரித்து சாதனை படைத்துள்ளது.

 

ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற 9 ஆவது மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதின.

 

இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

 

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Smriti Mandhana அதிகபட்சமாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

 

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Kavisha Dilhari 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

 

இதனையடுத்து, 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

 

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Harshitha Samarawickrama ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் Chamari Athapaththu 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

 

இந்தநிலையில் இந்திய மகளிர் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை மகளிர் அணி முதல் முறையாக ஆசியக் கிண்ணத்தைத் தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கன்னி கழியாத என்டோஸ்கொபி – டொக்டர் சத்தியமூர்த்தி அம்பியா..? அந்நியனா..? – தொடரும் குற்றச்சாட்டுக்கள்..

யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த சத்தியமூர்த்தி தன்மீது வீண்பழிகள் சுமத்தியதாக அவ்வைத்தியசாலையில் ; தற்போதும் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றும் டொக்டர் வி நாகநாதன் யூலை 25 அன்று குற்றம்சாட்டியுள்ளார்.

பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி இவ்வாறு பலர் மீதும் பாய்ந்துள்ளதாகவும் அவர் தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார் . அதிகாரத்தில் உள்ளவர் கையில் உள்ள முட்டை கூட அம்மிக்கல்லையும் உடைக்கும் எனத் தெரிவிக்கின்றார் , மிகுந்த மனவுறுதி கொண்ட டொக்டர் வி நாகநாதன் . பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தியால் ஓகஸ்ட் 2017 இல் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் , டொக்டர் வி நாகநாதன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று குற்றம்சுமத்தி அவரை தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்ததோடு அவருக்கு வழங்கவேண்டிய சம்பளத்தையும் இடைநிறுத்தி வைத் ; திருந்தார் .

இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

90 சதவீதமான மருந்துகளை இலங்கையில் உற்பத்தி செய்ய திட்டம்!

நாட்டின் மொத்த மருந்துத் தேவையில் 90 சதவீதத்தை எதிர்வரும் ஆண்டிலிருந்து உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

நாட்டில் பயன்படுத்தப்படும் 200இற்கும் மேற்பட்ட மருந்து வகைகள் தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த தொகை மொத்த மருந்து தேவையில் 25 சதவீதமாகும்.

 

இதற்கிடையில் மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.