::இனப்பிரச்சினைத் தீர்வு

::இனப்பிரச்சினைத் தீர்வு

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

ஜனாதிபதி – கூட்டமைப்பு சந்திப்பு தோல்வியில் முடிவடைந்தது!!!

TNA_Government_08June10தமிழ் தேசியக்கூட்டமைப்பு – ஜனாதிபதி சந்திப்பு தோல்வியில் முடிவடைந்துள்ளது! : விஸ்வா

நேற்று தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் எவ்வித இணக்கப்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது. நேற்று (07-06-2010) மாலை அலரி மாளிகையில் இச்சந்திப்பு நடைபெற்றது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள், மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீள்குடியமர்த்தல் ஆகியவிடயங்களுடன், இனப்பிரச்சினைக்கான நிரந்தர திர்வு, அரசியல் அமைப்பு சீர்திருத்தம் போன்ற விடயங்கள் கலந்துரையாடலின் போது கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்டன.  இவற்றிற்கு சாதகமான பதில்கள் எவற்றையும் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை.

போர் காரணமாக நிர்மூலமாக்கப்பட்டுள்ள பொது மக்களின் ஒரு இலட்சத்து அறுபதினாயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுத்தல் தொடர்பாக கேட்டபோது, இவற்றைக் கட்டிக்கொடுக்க அரசாங்கத்திடம் பணமில்லை எனவும், இரண்டு நெல் அறுவடைகளின் பின்னர் மக்களே தங்கள் வீடுகளைக் கட்டிக்கொள்வர் எனவும், விவசாயத்திற்கான உதவிகளை அரசாங்கம் வழங்கும் எனவும் அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவது பற்றிப் பேசப்பட்ட போது, ஏற்கனவே இருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட போதும் அவர்களில் ஒருவர் மாத்தறைப் பகுதியில் உளவு வேலைகளில் ஈடுபட்டு வந்தார் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

லண்டனில் உள்ள அமைப்புகள் சில தற்போது ஆட்சேர்ப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும். இந்நிலையில் பொது மன்னிப்பு வழங்கி அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் அவர்களும் குறிப்பிட்ட அமைப்புக்களில் இணைந்து நாட்டுக்கு எதிராக  செயற்படும் நிலை எற்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக்குடியமர்த்தல் உள்ளிட்ட ஏனைய விடயங்களுக்கும் ஜனாதிபதி சாதகமான பதில்களை கூறவில்லை. இனப்பிரச்சினை தொடர்பான அரசியல் விடயங்கள் பேசப்பட்ட போது, விடுதலைப்புலிகள் கேட்டவற்றை கேட்கக்கூடாது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இவை தொடர்பான விபரங்களை பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட்ட ஏனைய உறுப்பினர்களும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.

இதே வேளை, இப்பேச்சுவார்த்தைகள் ஆரோக்கியமானதாக அமைந்ததாகவும், ஜனாதிபதியின் இந்தியப் பயணத்தின் பின்னர் மீண்டும் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்தை நடத்த விரும்பவதாக தம்மிடம் கூறியதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாத கூட்டமைப்பின் இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில், இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி முதலில் ஜனாதிபதிடம் பேசியதாகவும், அதன் பின்பே அரசியல் விடயங்கள் பேசப்பட்டன என்றும், தாங்கள் கலந்துரையாடிய விடயங்களுக்கு எந்தவொரு இணக்கப்பாடான பதிலையும் ஜனாதிபதி வழங்கவில்லை எனவும், பேச்சக்கள் தோல்வியிலேயே முடிவடைந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

TNA_Government_08June10கூட்டமைப்பும் ஜனாதிபதியும் உடன்பட்ட விடயங்கள் : வி அருட்செல்வன்

வடக்கு மக்களின் பிரச்சினைகளில் பலவற்றுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதமளவில் தீர்வைப் பெற்றுத் தர முடியுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று மாலை ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினர். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. நீண்ட நேரம் மிகவும் சுமுகமாக நடந்த இந்தச் சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

வட பகுதி மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நடமாடும் கச்சேரி முறையொன்றை ஆரம்பிப்பது தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதன்மூலம் திருமண, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை விரைவில் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன், தற்போது தடுப்புக் காவலில் உள்ளவர்களில் நீதிமன்ற செயற்பாடுகளின் மூலம் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டவர்களை சமூக வாழ்வில் ஈடுபடுத்தும் திட்டமொன்றை விரைவில் நடைமுறைப்படுத்தவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த பயங்கரவாத சம்பவ காலத்தில் சாதாரண மக்களால் கைவிட்டுச் செல்லப் பட்ட துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உரிமையை உறுதிசெய்து அவற்றின் உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் திட்டமும் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு இந்த சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார். மீள்குடியேற்ற நடவடிக்கை முறையாகவும் திட்டமிடப்பட்ட வகையிலும், கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பின்னர் பாதுகாப் பான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும், இதனால் வட பகுதி மக்களின் நிலை தொடர்பாக கண்டறி வதற்காக பாராளுமன்றத்துக்கு தெரிவான புதிய உறுப்பினர்கள் குழுவொன்றை அங்கு அனுப்பிவைத்ததாகவும், இந்த குழுவின் அறிக்கை தனக்கு கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதி கூட்டமைப்புப் பிரதிநிதிகளுக்குப் பதிலளித்தார்.

அத்துடன் வட பகுதி மக்களை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அறுவடை பெற்றுக் கொள்ளும் வரை அந்த மக்களின் உணவுத் தேவைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயங்கரவாதிகளின் தேவை நிறைவேறுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்த எவருக்கும் இடம் கிடைக்காது என்றும், ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் சமாதான நாட்டை உருவாக்கவும், மீண்டும் வடக் கில் மக்கள் அழிவுக்கு உள்ளாகும் யுகத்துக்கு இட்டுச் செல்லப் போவதில்லையென ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு அதற்கு தேவைப்படுவதாகவும், அனைத்துத் தீர்வுகளும் அனைத்து மக்களுடனும் சம்பந்தப்பட்டதாக இருக்கவேண்டும் என்றும், அவசரமாக தீர்வை பெற்றுத் தருவது பிரச்சினைகளை தோற்றுவிக்கும். இதனால், கிரமமாக திட்டமிடப்பட்ட வகையில் செயலாற்றுவதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இங்கு பேசிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் பிரதேசங்களில் சுகாதாரம், கல்வி, விவசாயம், மீன்பிடி, மத தலங்க ளின் அபிவிருத்தி ஆகியவை பற்றி அவ தானம் செலுத்தப்படுமென குறிப்பிட்டார். இதன்படி 75 ஆயிரம் துவிச்சக்கர வண்டிகளை வழங்கும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைக ளுக்கு விவசாய திணைக்களம் மாகாண சபைகளுக்கு 100 உழவு இயந்திரங்களை வழங்கியுள்ளது. அத்துடன் மேலும் 500 இரண்டு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

எமது முழுமையான ஒத்துழைப்பை தங்களுக்கு வழங்குவோம். தாங்கள் சர்வகட்சி கூட்டமொன்றை கூட்டி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல்வேறு செயற்பாடுகள் மூலம் நடவடிக்கை எடுத்திருக்கிaர்கள். தமிழ் மக்களுக்கு சமமாக வாழும் உரிமையை பெற்றுத் தரவும், சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும். தங்களுடன் சேர்ந்து பணியாற்றுவது எமது விருப்பமாகும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக் கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவருமான ஆர். சம்பந்தன் இந்த சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

TNA_Government_08June10தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட உள்ளதாக ஜனாதிபதியுடனான இன்றைய பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.இப்பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் , அகதி முகாம்களில் வசித்து வரும் மக்களின் சுகாதரம் மற்றும் கல்வி, மீளகுடியமர்த்தப்படும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் தமிழர் விடுதலை கூட்டமைப்பின் சார்பில் ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஏ. விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், என். சிவசக்தி ஆனந்தன், பொன். செல்வராஜ், பி. அரியனேந்திரன், யோகேஷ்வரன், பி. பியசேன, சரவணபவன், எஸ். ஸ்ரீதரன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோரும் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்கள் மைத்திரிபால சிரிசேன, பசில் ராஜபக்ஷ, ஜீ. எல். பீரிஸ், நிமல் சிரிபால டி சில்வா, டலஸ் அலஹப்பெரும, மற்றும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, சரத் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

படங்கள்: ஏசியன் ரிபியூன் – நன்றி

தமிழ் மக்களுடன் சம்பந்தமாகுமா சம்பந்தரின் சாணக்கியம்!- ரி சோதிலிங்கம்.

Sambanthan_Rஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு சம்பந்தரும், புலிகளின் ஆதரவாளர்களும் தமிழ் மக்களை மீண்டும் முள்ளிவாய்க்காலுக்கே அழைத்துச் செல்கின்றனர் போலுள்ளது. இந்தத் தேர்தலில் பங்கு பற்றுவதா? வேட்பாளரை நிறுத்துவதா? இந்த தேர்தலில் முன்னிற்கும் வேட்பாளர்களில் யாருக்கு தமிழர்களை வாக்களிக்கும்படி கேட்பது அல்லது தமிழர்களை ஆதரிக்க தூண்டுவது என்பதிலே இன்று வரையில் இவர்கள் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கமுடியாமல் இருப்பதன் மர்மம் என்ன?

இந்த தேர்தலில் போட்டியிடும் பல்வேறுபட்ட சக்திகள் தாம் தமது தேர்தல் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போதே தாம் ஜனாதிபதியாக வரமாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளபோதும், தாம் தமது அரசியலை – தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் அபிலாசைகளுக்கான அரசியலை – உலகுக்கும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் பகிரங்கப்படுத்தவே போட்டியிடுகின்றனர். ஆனால் அன்று ‘இந்த தேர்தலைகளை எமது பிரச்சார மேடைகளாகவே பயன்படுத்துகிறோம் ஆனால் எமது இலட்சியம் தனித் தமிழீழம்’ என்று முழங்கிய கூட்டமைப்பு சம்பந்தர் இன்று இந்த தேர்தலை தமிழ் மக்களின் சுயநிர்ணயத்திற்கான பிரச்சார மேடையாகவும் பார்க்கவில்லை, தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்பு என்ன என்பதை உலகுக்கு தெரிவிக்கக்கூட இந்த தேர்தலை பயன்படுத்த முன்வரவுமில்லை. இது ஏன்?

ரிஎன்ஏ என்ன உடன்பாடுகளை யாரிடம் ஏற்படுத்தியுள்ளது என்பதையோ; சரத் / மகிந்தா எந்த வேட்பாளர் தான் ஆட்சிக்கு வந்தபின்பு தமிழரின் அரசியல் உரிமைகளுக்கு என்ன வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்கள் என்பதையோ; அல்லது எந்த ஒரு உடன்பாடோ அல்லது வாக்குறுதிகளோ யாரிடமிருந்தும் பெறவில்லை என்பதையோ ரிஎன்ஏ ஏன் பகிரங்கமாக மக்களுக்கு வெளிப்படுத்தக் கூடாது?

ரிஎன்ஏ அல்லது மற்றைய தேர்தல் வேட்பாளர்கள் மக்களுக்கான அரசியல் தேர்வையும் ஒப்பந்தங்களையும் இரகசியமாக ஏற்படுத்துவது மக்களுக்கு ஏற்புடையதல்ல. கடந்த காலங்களில் இப்படியான இரகசிய ஒப்பந்தங்களால் ஏற்பட்ட பல விளைவுகளுக்கு புலிகளே எம்முன்னால் உள்ள நல்ல உதாரணங்களாகும். இதில் முக்கியமானது பிரேமதாஸா இரகசிய ஓப்பந்தமும் ஆயத உதவியும். இதன் பின்னணியில் புலிகள் இந்தியாவின் எதிரிகளாகினர்.

எதிர்வரும் தேர்தலில் ரிஎன்ஏ யின் முடிவு என்ன? ரிஎன்ஏயும் அதன் தலைவர் சம்பந்தனும் எப்போது தமது முடிவுகளை தமிழ் மக்களுக்கு தெரிவிப்பார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளரை நிறுத்தும் காலம் காலாவதியாகிவிட்டது. ஆனால் இன்னும் ரிஎன்ஏ தனது நிலைப்பாடு என்ன என்று இதுவரையில் முடிவு எடுக்கவில்லை. இதற்கிடையில் ரிஎன்ஏ உறுப்பினர் சிவாஜிலிங்கம் சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் நிற்பதாக முடிவு எடுத்துள்ளார். ரிஎன்ஏயின் அங்கத்துவ கட்சி தமிழர் காங்கிரஸ் தனியாக, இரண்டு முக்கிய தேர்தல் வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை என்ற முடிவு எடுத்துள்ளனர். இப்படியாக ரிஎன்ஏயின் உறுப்பினர்கள் பிரிந்து நின்று செயற்படுவதன் காரணம் என்ன? ரிஎன்ஏ சம்பந்தர் காரணங்களை தமிழ் மக்கள் முன் வைப்பார்களா? ஏன் மக்களுடன் பேசுகிறார்கள் இல்லை?

சம்பந்தரின் குழம்பிய நிலையே ரிஎன்ஏயின் இழுபறி நிலை எனவும் பலரும் சந்தேகிக்கின்றனர். மக்களுக்காக எடுக்கும் முடிவுகளை மக்கள் முன் வைப்பதிலும் அதில் உள்ள குறை நிறைகளை ஆராய்வதிலும் எந்த கட்சியும் எந்த மக்கள் அமைப்பும் ஏன் ஒளிவு மறைவாக செயற்ப்பட வேண்டும். ஒளிவு மறைவாக செயற்ப்படுவதும் இழுத்தடிப்பதும் தாம் ஏற்கனவே தெரிவு செய்த வேட்பாளரை கடைசி நேரத்தில் தெரிவித்து அவருக்கு வாக்களிக்கும்படி கேட்கலாம் என்ற காலம் வாங்கும் தந்திரமா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

இன்று ரிஎன்ஏயில் எந்தவிதமான கூட்டு முடிவும் எடுக்கப்படுவதில்லை. சம்பந்தர் சுரேஸ் மாவை போன்றோரே ஏகபோகமாக தாமே முடிவு எடுத்துவிட்டு அதை ரிஎன்ஏ யின் முடிவாக திணிப்பதாக பல ரிஎன்ஏ உறுப்பினர்கள் சொல்லும் நிலையில், சம்பந்தர் எல்லா முடிவுகளுக்கும் நான் யோசிக்கிறேன், பொறுத்திருப்போம் என்ற இழுத்தடிப்பின் பின்னணியாக இருப்பது என்ன என்பது இன்றுவரையில் புதிராகவே உள்ளது. வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவு குழுக்களின் வற்புறுத்தலாக இருக்குமென? என பலர் சந்தேகிக்கின்றனர்.

இதன் பின்னணியிலேயே சம்பந்தர் வெளிநாடுகளுக்கு அழைக்கப்பட்டார் என்றும் இதில் சுவிஸ் மாநாடு தோல்வியில் முடிவடைந்ததால் அடுத்து வியன்னாவில் சம்பந்தருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் பலரும் சந்தேகிக்கின்றனர் (இந்த மகாநாடுகள் இரகசியமாகவே ஒழுங்கு செய்யப்பட்டது.)

tna-last11.jpgஇந்த மாநாட்டில் ரிஎன்ஏ ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை நிறுத்துவதில்லை என்றும் ஏதோ ஒரு வேட்பாளரை ஆதரிப்பதற்கானது இரகசிய உடன்பாடு எட்டியுள்தாகவும் இதையே சம்பந்தர் ரிஎன்ஏயின் முடிவாக தெரிவிக்க வெளிநாட்டிலுள்ள புலி ஆதரவு அமைப்புக்களும் புலிகளும் சம்பந்தருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர் என்றும்; அது சரத்தையே ஆதரிப்பது என்றும்; இதனாலேயே மகிந்தாவை வீழ்த்தலாம் என்ற கருத்து ரிஎன்ஏக்கு வெளியே எடுக்கப்பட்டுள்ளதாயும் இந்த உடன்பாட்டுக்கு லண்டனுக்கு விஜயம் மெற்கொண்ட ஜேவிபி யுஎன்பி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்ததாகவும் பேசப்படுகிறது. ஆனால் இந்த முடிவை எப்படி ரிஎன்ஏயின் முடிவாக திணிப்பது என்பதே சம்பந்தரின் குழம்பிய நிலையென பலரும் சந்தேகிக்கின்றனர்.

புலிகளின் ஆதரவாளர்களும் அமைப்புகளும் இன்னும் தமிழ் போராட்டங்களை புலிகளின் பழிக்குப் பழிவாங்கும் அரசியல் போலவே பார்க்கிறார்கள். அதன் எதிரொலியே சம்பந்தரின் ‘பார்ப்போம்’ பாட்டு ஆகும் என பலரும் சந்தேகிக்கின்றனர்.

வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவு அமைப்புகளும் ஏற்பாட்டாளர்களும் இன்று வரையில் தாம் யார்? தமது இயக்கத்தின் நிலை என்ன? பொறுப்பு என்ன? போன்ற விமர்சனங்களை முன்வைக்காமலே இன்றும் தமது ஆதரவாளர்க்கு ‘தலைவர் உயிருடன் உள்ளார். தருணம் வரும்போது வெளிவருவார்’ என்றெல்லாம் புலுடாவிடும் இவர்கள், புலிகளுக்காக மக்களிடம் இருந்து பெறப்பட்ட பெருந்தொகை சொத்துகளுக்கு நடந்தது என்ன? என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இன்று இந்த தேர்தலை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி தமக்கு ஒரு அரசியல் சாயம் பூச ஆரம்பித்துள்ளனர்.

சரத் / மகிந்தா இந்த இரண்டு வேட்பாளர்களும் தமிழர்களின் கடந்த 30 வருட போராட்டங்களினால் தமிழ் மக்கள் அடைந்த வேதனைகள், துன்பங்களை பகிர்ந்து கொண்டவர்கள் அல்லர். மாறாக இவர்களே தமிழர்களின் துன்பியல்களுக்கு பிரபாகரன் – புலிகளுக்கு அடுத்தபடியாக காரணமானவர்களாகும். இந்த இரு வேட்பாளர்களுமே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை கூட இன்று வரையில் பகிரங்கமாக தெரிவிக்காதவர்கள். இவ்விரு வேட்பாளர்களுமே தமிழர்களில் 30 ஆயிரம்பேர் வரையில் முள்ளிவாய்காலில் கொலை செய்தவர்கள். தமிழ் மக்களை பார்த்து இவர்களில் ஒருவருக்குத் தன்னும் வாக்களியுங்கள் என்று எந்த முகத்துடன் ரிஎன்ஏ அல்லது தமிழ் அரசியல்வாதிகள் கேட்க முடியும்

மரண சாசனம் கூட பெற முடியாத மக்கள் இன்று வரையில் தமது மரணித்த உறவுகளின் ஆண்டுத்திவசம் யாருக்கு எங்கே என்று அங்கலாய்த்துக் கொண்டு துன்பங்களில் இருப்பவர்களைப் பார்த்து உங்கள் உறவுகளை கொலை செய்தவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்க முடியுமா? இதை தமிழ் மக்களின் தலைவர்களால் எந்த சுயமரியாதையுடன் கேட்க முடியும்?

சர்வதேசம் இவர்கள் மீது போர்க் குற்றம் சுமத்தும் நிலையில் உள்ள சூழ்நிலையில், எந்த மக்கள் மீது போர்க்குற்றம் செய்தார்களோ அந்த மக்களை பார்த்து இந்த போர்க்குற்றவாளிக்கு வாக்களியுங்கள் என்று ரிஎன்ஏ சம்பந்தர் கேட்பாரா? எப்படி கேட்க முடியும்.

இன்று புலிகளின் பல முன்னணியாளர்கள் மக்கள் என்பதை கனவிலும் கூட நினைப்பதில்லை. புலிகள் அழிக்கப்பட்டு 6 மாதங்களில் இம் முன்னணியாளர்கள் தாம் தமது சொத்துக்கள் தமது சமூக அந்தஸ்துக்கள் என்பவற்றிலே அதிக கவனம் செலுத்துவதை அவதானிக்க முடியும்.

காலத்திற்குக் காலம் தமிழர் போராட்டங்களை சுதந்திரக் கட்சியும் யுஎன்பியும் மாறி மாறி தாம் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஏதோ ஒருவகையில் ஒருபடியாவது கீழே இழுத்து விழுத்தியே வந்துள்ளனர். இதன் ஒட்டுமொத்த வீழ்த்தலே மே மாத கடைசி யுத்தமும் இதை மகிந்தா கெட்டித்தனமாக தனது வெற்றியாக்கியதுமாகும்.

புலிகளின் பழிக்குப்பழி அல்லது ஆயுதக் கவர்ச்சியால்தான் தமது போராட்டப் பாதையை தவற விட்டவர்கள் என்பதை இன்றும் புலி ஆதரவாளர்கள் புரிந்ததாகத் தெரியவில்லை. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ரஜீவ் காந்தி கொலையும் இதனால் புலிகளுக்கு உண்டான அழிவுமாகும்.

இவ்விரு பிரதான வேட்பாளர்களும் மீண்டும் தமிழர்க்கு எதிரான செயற்பாட்டுக்காகவே இன்று புலி ஆதவாளர்களினதும் ரிஎன்ஏ தமிழர் ஆதரவினையும் பெற்றுவிட அங்கலாய்க்கின்றனர் என்பதை ரிஎன்ஏ சம்பந்தரும் புலி ஆதரவாளர்களும் மறந்து செயற்படக் கூடாது. ரிஎன்ஏ இன்றுவரை இத்தேர்தலில் தமிழர்கள் சார்பாக தமது நிலைப்பாடு என்ன என்று எதையும் ஏன் முன்வைக்கவில்லை? ரிஎன்ஏ யினர் ஏன் தமிழர்கள் சார்பாக தமது பிரதிநிதியை நிறுத்தி தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்பு என்ன என்பதை சிங்கள மக்களுக்கும் உலகுக்கும் தெரிவிக்கவில்லை? தெரிவிக்க முயற்ச்சி செய்யவில்லை? இதன்மூலம் சிங்கள மக்களின் மிககுறைந்த அங்கீகாரத்தையாவது பெற்றிருக்க முடியாதா? இத்தேர்தல் காலத்தில் ரிஎன்ஏ ஏன் இந்த சந்தர்ப்பத்தை தமிழரின் சுயாட்சிப் போராட்டத்திற்கான பிரச்சாரமாக பயன்படுத்தவில்லை? மாறாக ரிஎன்ஏ யும் சம்பந்தரும் சரத் ஆதரவு நிலை எடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதாக ரிஎன்ஏயின் அதிருப்தி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். ரிஎன்ஏ யில் கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் சரத் மகிந்தா இரண்டு பேரையும் ஆதரிக்கக்கூடாது என்பதில் அக்கறை காட்டுவதாகவும் அதன் காரணமாகவும் சம்பந்தர் குழம்பியுள்தாகவும் அவர்கள் எமக்கு தெரிவித்தனர். அத்துடன் ரிஎன்ஏயில் அங்கம் வகிக்கும் ரெலோவினர் ரிஎன்ஏ இரண்டு வேட்பாளர்களையம் ஆதரிக்க கூடாது என்ற கருத்துடனேயே தாம் இருப்பதாக தெரிவித்தனர்.

ரிஎன்ஏ யும் இதன் சாரதி சம்பந்தரும் வேறு வெளி அழுத்தங்களுக்கு உள்ளாகின்றார்கள் என்ற சந்தேகம் கொழும்பில் உள்ள பல ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளிடமும் உள்ளதை அறியமுடிகிறது.

இதைவிட ரிஎன்ஏயின் மும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் சம்பந்தர் சுரேஸ் மாவை ஆகியோர் முடிவை எடுத்துவிட்டு இம்முடிவுகளை இறுதி முடிவாக தெரிவிக்கும் இவர்களில் (இம்முறை) மாவை இந்த நிலைப்பாட்டிலிருந்து தன்னை அகற்றி தான் இந்தியாவில் சுகயீனம் காரணமாக தங்கியிருப்பதாவும் அறியப்படுகிறது. ரிஎன்ஏ யினரில் சம்பந்தர் இந்தியாவினால் கையாளப்படுகின்றார். ஆனால் கள நிலைமைகள் கட்டுக்கடங்காமல் இருப்பதனால் ஏற்படும் குழப்பமா? எனவும் பலரும் சந்தேகிக்கின்றனர்.

வெளிநாடுகளில் உள்ளவர்களில் பல முன்னாள் புலி ஆதரவு அமைப்பினர் யுஎன்பியின் கயிற்றை விழுங்கியவர்களாகவே தென்படுகின்றது. இது எதிர்காலத்தில் ரிஎன்ஏ யின் புலி ஆதரவாளர்களின் துரோகமாக பார்க்கப்படாதா? பிரபாகரன் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்ததின் காரணமே இந்த மிதவாத தலைவர்களின் துரோகங்கள் என்றுதானே?.

இன்று உள்ள நிலைமையில் ரிஎன்ஏ யும் இதன் சாரதி சம்பந்தரும் சரத்தையோ மகிந்தாவையோ ஆதரிக்க முடியாது. இவர்கள் இந்த இருவரையும் ஆதரிக்கும்படி தமிழ் மக்களை கேட்கவும் முடியாது என்பதே சாதாரண இலங்கைத் தமிழ் மக்களின் அபிப்பிராயமாகும்.

இந்த விடயத்தில் காங்கிரஸ் கட்சியினரின் முடிவு ஏற்கக் கூடியதே. தமிழ் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை இரு பிரதான வேட்பாளர்களுக்கும் வழங்காமல், தங்கள் வாக்குகளை எதிர்ப்பைத் தெரிவிக்கப் பயன்படுத்துவதே பொருத்தமானதாக அமையும் எனவும் கருத்து நிலவுகிறது. இதற்காக தமிழர்கள் தமது வாக்குகளை வேறு யாருக்கும் போடலாம் என்பதேயாகும்.

கடந்த காலங்களில் மாறி மாறி ஆட்சிக்குவந்த சு.க,  யுஎன்பியின் ஆட்சிக் காலத்திலேயே பல திட்டமிட்ட சதிகள் தமிழருக்கு எதிராக நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி ஆட்சிமுறையை ஏற்படுத்தி பாரிய தமிழ் எதிர்ப்பு நடவடிக்கைகளை செய்தவர்கள் என்பதையும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டு பாராளுமன்றில் புதிய யாப்பை உருவாக்கியவர்கள் என்பதையும், யுஎன்பி ஆட்சி காலத்திலேயே பல சாதாரண தமிழ்ர்க்கு எதிரான பல இராணுவ வெறியாட்டங்களை மேற்கொண்டவர்கள் என்பதையும் ரிஎன்ஏ மறந்துவிடக் கூடாது. யுஎன்பியினரால் கட்டியெழுப்பப்பட்ட தமிழர் எதிரப்பு கோபுரங்களையே மகிந்தா பயன்படுத்தி தனது வெற்றியாக்கினார் என்பதையும் ரிஎன்ஏ மறந்து விடக்கூடாது. (இதை பலதடவைகள் ரணில் தனது பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டுள்ளார்.)

மகிந்தாவை ஆதரித்து வெற்றி மகிந்தா பெற்றால் தமிழர்க்கு கிடைப்பது என்ன? சரத் வெற்றி பெற்றால் கிடைப்பது என்ன? என்பதே எம்முன்னால் உள்ள மிகப்பெரிய கேள்வியாகும் யாரைப் பழிவாங்குவது என்பதல்ல!

கடந்த பல வருடங்களாக தமிழர்கள் படித்தபாடம் என்ன? ரிஎன்ஏ பெற்ற அரசியல் முதிர்ச்சி என்ன? சம்பந்தர் பெற்ற அனுபவம் தான் என்ன? தமிழர்களின் தலைவர்கள் என்ற ரிஎன்ஏ தவறான முடிவுகளால் தமிழர்களை மீண்டும் முள்ளிவாய்க்காலில் போட்டுவிடாதீர்கள்.

பழிவாங்கல்கள் அல்ல அரசியல் தீர்வே தேவை!!

தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்பை அபிப்பிராயத்தை தமிழ் மக்களிடையேயான அபிப்பிராய வாக்கெடுப்பொன்றை நடாத்த தமிழ் அரசியல்வாதிகள் அரசை வலியுறுத்த வேண்டும்!!

பயங்கரவாதங்களையும் புலிகளின் அடக்குமுறைகளுக்குள்ளும் பட்டினிச் சாவுகளுக்குள்ளும் தமது வாழ்க்கைப் பாதையில் கவனமாக நடந்து வந்த மக்கள் இப்படியான சந்தர்ப்பங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாகவே படித்துள்ளனர். இந்தப் படிப்பினையை தமிழ் மக்கள் இந்த தேர்தலிலும் தமிழ் தலைவர்கள் என்பவர்களுக்கும் அரசுக்கும் வன்முறையாளர்க்கும் நிரூபிப்பர்.

சம்பந்தர் ரிஎன்ஏ சாணக்கியம் தமிழ் மக்களின் சாணக்கியமா? வரலாறு பதில் சொல்லும்!!

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

Rahuman Janஓகஸ்ட் 2ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பிலான சந்திப்பில் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்பகால உறுப்பினரும் பின்னர் தீப்பொறிக் குழுவாகச் செயற்பட்டவரும் தீப்பொறியின் வெளியீடாக அமைந்த உயிர்ப்பு சஞ்சிகையின் ஆசிரியருமான ரகுமான் ஜான் (ஜான் மாஸ்ரர்) வழங்கிய ஆரம்ப உரை.
._._._._._._._._.

நீண்ட காலத்தின் பின்பு ஒரு பகிரங்க அரங்கில் உங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேசம்நெற் இந்த கூட்டத்திற்கு என்னை அழைத்த போது நான் பலரது கருத்துக்களையும் கேட்கலாமே என்ற ஆர்வத்தில் சம்மதித்து விட்டேன். ஆனால் இங்கு வந்த பின்புதான் நான் உரையாற்ற வேண்டும் என்று கூறினார்கள். இதில் சற்று சங்கடங்கள் இருந்தபோதிலும், எல்லா உரையாடல்களும் ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கித்தானே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் நான் சம்மதித்தேன். இப்போதும் கூட, நான் ஒரு உரையாடலை தொடக்கி வைப்பவன் என்ற வகையிலேயே பேச ஆரம்பிக்கிறேன். இதனைத் தொடர்ந்து ஒரு ஆரோக்கியமான கருத்தாடலுக்கு இது வழிகோலுமாயின் எனது முயற்சியில் நான் வெற்றி பெற்றதாக கருதுவேன்.

ஒரு இருண்ட காலத்தில் இருந்து இப்போதுதான் நாம் படிப்படியாக வெளியே வந்து கொண்டிருக்கிறோம். நந்திக் கடற்கரையில் தோற்கடிக்கப்பட்டது புலிகள் அமைப்பின் தலைமை மட்டுமல்ல. தமிழ் தேசமும், அதன் அரசியலும் கூடத்தான் முறியடிக்கப்பட்டது. அங்கு அவமானப்படுத்தப்பட்டது ஒரு தனிமனிதன் மட்டுமல்ல, முழுத் தமிழருக்கும் தான் சிங்கள பேரினவாதம் கோவணம் கட்டி அசிங்கப்படுத்தியது. தனியொரு அமைப்பிடமும், அதன் தலைமையாக அமைந்த தனியொரு மனிதனிடமும் விடப்பட்டிருந்த தமிழரது தேசியவிடுதலைப் போராட்டமானது, அதன் தலைமையை இழந்து தோற்று அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலைமையில் போராட்டத்தை தொடர்வது என்பது ஒரு புறமிருக்க, கௌரவத்துடன் கூடிய சமாதானத்தை பெற்றுக் கொள்வது கூட கேள்விக்குரிய ஒரு விடயமாகிவிட்டுப் போயுள்ளது. ஈழத்தமிழர் அரசியல்ரீதியாக அநாதைகளாக்கப் பட்டுள்ளார்கள். அரசியல் தலைமையானது வெற்றிடமாக விடப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட கையறு நிலையில் இருந்து மீண்டெழும் முகமாக, எஞ்சியுள்ள போராளிகளையும், ஏற்கனவே சிதறடிக்கப்பட்டிருந்த செயற்பாட்டாளர்கள் (Activist) போன்றோரை ஒருங்கிணைத்து ஒழுங்கமைப்பது என்பது கூட பல சிக்கல்களை முறியடித்தே முன்னேறியாக வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் நடந்து முடிந்துபோன கசப்பான அனுபவங்களும், அவை ஏற்படுத்திவிட்டுப் போயுள்ள வடுக்களும் ஒரு புறம் என்றால், இப்போது எம்மத்தியிலே உள்ள கருத்து வேறுபாடுகள் அதினைவிட பெரிய தடையாக வியாபித்து நிற்கிறது. இந்த தடைகளையும் விதமாக சில விவாதங்கள் ஆங்காங்கே, ஒழுங்கமைக்கப்படாத விதத்தில் என்றாலும் நடைபெறுவது உண்மையே என்றாலும், துரதிஸ்டவசமாக இவை வெறுமனே பொதுப்புத்தி (commonsense) மட்டத்திலேயே நடைபெற்று வருவது வேதனை தரும் விடயமாக இருக்கிறது.

பொதுப்புத்தி என்பது விஞ்ஞானபூர்வமான கோட்பாட்டினால் அறிவொளியூட்டப்பட்டது (Enlighten) அல்ல. மாறாக, ஆதிக்க சித்தாந்தத்தினால் அறிவுறுத்தப்படுவது (Informed) ஆகும். ஆதிக்க சக்திகள் தமது அதிகாரப்படிநிலைகளை பேணிக் கொள்ளும் விதத்தில் பல கருத்துப் படிமங்களை கட்டமைத்து, அவற்றை தமது கைகளில் உள்ள வெகுஜன சாதனங்களின் துணை கொண்டு ஜனரஞ்சகப்படுத்தி வைத்துள்ளது. இந்த வகையான கருத்துப்படிமங்களே எமது பொதுப்புத்தியில் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. எனவே, பொதுப்புத்தி மட்டத்தில் நாம் எனது விவாதங்களை, உரையாடல்களை தொடரும் வரையில், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஆதிக்க உறவுகளையே மீளக்கட்டமைத்துக் கொண்டு இருக்கப்போகிறோம். இந்த இடர்பாட்டில் இருந்து விடுபடுவதானால் நாம் இந்த ஆதிக்க சிந்தாந்தகளில் மேலாதிக்கத்தை முறியடித்து, புரட்சிகர சித்தாந்த மேலாண்மையை நிறுவியாக வேண்டியுள்ளது. விடயங்களை நாம் கோட்பாட்டு, அரசியல் மட்டத்தில் அணுகும் போது மட்டுமே இப்படியான ஒரு நிலைமை சாத்தியப்படும்.

இன்று எம்மிடையே நடைபெறும் விவாதங்களை சற்று உற்று நோக்கினால் நாம் பயங்கரவாதம் பிரிவினைவாதம் பெரும்பான்மை – சிறுபான்மை போன்ற பல சொற்பதங்களை சர்வசாதாரணமாக காண முடியும். சற்றே இவற்றை கட்டுடைக்கமுயன்றால் இவை ஒவ்வொன்றும் ஆதிக்க சக்திகளான ஏகாதிபத்தியம் மற்றும் சிங்கள பேரினவாதம் என்பவற்றால் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை இனங்கண்டு கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒரு விடயத்தை மாத்திரம் எடுத்துக் கொள்வோம். பயங்கரவாதம் என்றால் என்ன?. இவர்கள் சொல்வது போல அரசியல் நோக்கங்களை வன்முறை மூலமாக அடைய முயல்வது பயங்கரவாதமா? அப்படியானால் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஆட்சி மாற்றத்தை வன்முறை மூலமாகத்தானே இவர்கள் செய்தார்கள். அல்லாவிட்டால் பொதுமக்களை இலக்காக கொள்வது பயங்கரவாதமா? ஈராக்கின் அதிர்ச்சி வைத்தியமும், இன்று பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் நடைபெறும் வெறும் பக்கவிளைவுகள் (collateral damage) என்று இவர்கள் உதாசீனப்படுத்தும் பொது மக்களது இழப்புகள் இவர்களைப் பொறுத்தவரையில் பயங்கரவாதமாக ஆகாமற் போவது எப்படி சாத்தியமாகிறது? ஒரே விளக்கத்தைதான் நாம் எட்ட முடியும். அதாவது, இந்த ஆதிக்க சக்திகள் வன்முறையை பயன்படுத்துவதற்கான உரிமையை தமது ஏகபோகமாக வைத்துக் கொள்ள முயல்கிறார்கள். மக்களது போராட்ட முயற்சிகள் அத்தனையையும் களங்கப்படுத்த கட்டமைக்கப்பட்ட புனைவுதான் இந்த பயங்கரவாத பூச்சாண்டியாகும்.

அமெரிக்காவில், ஆயுதம் தாங்கிய வன்முறைகள் மூலமாக பெருமளவிலான அப்பாவி பொதுமக்கள் நாள்தோறும் அநியாயமாக கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்: இந்த நிலையில், சமுதாயத்தில் கட்டற்ற விதத்தில் புளக்கத்தில் உள்ள ஆயுதங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மக்கள் நலன் விரும்பிகள் எடுக்கும் அத்தனை முயற்சிகளையும், ஆயுதம் ஏந்துவதற்கான தனிமனிதனது அரசியல் அமைப்பின் மூலமாக உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமை பற்றி கூச்சலிட்டு ஒரு வலதுசாரிக் கும்பல் குழப்பியடித்துக் கொணடிருக்கிறது. அதேவேளை இதே கும்பல் தேசங்கள் தம்மை தற்காத்து கொள்வதற்காக ஆயுதம் தரிப்பதற்காக உள்ள உரிமையை பயங்கரவாதம் என்று பூச்சாண்டி காட்டுகிறது. இது மிகவும் அயோக்கியத்தனமானதாகும். இப்படியாக நாம் எம்மையும் அறியாமல் ஆதிக்க சக்திகளது ஆய்வுச் சட்டகத்துள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் விழிப்பாக இருக்க வேண்டும். இது நிறைவேறாத வரையில் நாம் எமது நோக்கத்தில் ஒரு அங்குலமேனும் முன்னேறுவது சாத்தியமில்லாமல் போய்விடும். “நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே” என்ற வாசகங்களை நாம் எண்பதின் ஆரம்பம் வரையில் அடிக்கடி கேட்கக் கூடியதாக இருந்தது. பிற்காலத்தில் இந்த வாசகம் மட்டுமல்ல, அது சுட்டி நிற்கும் கருத்துச் சுதந்திரம் என்பது கூட எமது சமூகத்தில் தொலைந்துதான் போனது. எண்பதுகளில் புலிகளது ஏக பிரதிநிதித்துவம் பற்றிய ஒற்றைப் பரிமாண சிந்தனையுடன் தமிழரது அரசியலானது முடங்கிப் போனது. அதனால்தான் இப்போது நாம் 1976 ம் ஆண்டின் “வட்டுக்கோட்டை தீர்மானத்தை” தூசு தட்டி எடுத்து மீண்டும் ஒரு தடவை கருத்துக் கணிப்பு நடத்தியாக வேண்டியுள்ளது.

இந்த முப்பத்தி மூன்று ஆண்டுகால இழப்புகளையும் ஈடு செய்வது என்பது அத்தனை இலகுவான காரியமல்ல. நாமெல்லோரும் வெளிப்படையாகவும், மனம் திறந்தும் நிறையவே பேசியாக வேண்டியுள்ளது. அதுவும் கோட்பாட்டு, அரசியல் தளத்தில் தீவிரமாக சிந்தித்து, விரிவான கருத்தாடல்களை மேற்கொண்டாக வேண்டியுள்ளது. அப்படியாக செய்தால் மட்டுமே நாம் ஒவ்வொருவரும் எங்கெங்கு நிற்கிறோம் என்பது தெளிவாகும். இந்த நிலையில் மட்டும்தான் கருத்தொற்றுமை காண்பதும், அல்லது குறைந்தபட்சம் எமக்குள் உள்ள வேறுபாடுகள் எவை எப்பது பற்றியாவது எல்லைக் கோடுகளை நாம் கீறிக் கொள்வது சாத்தியப்படும். அப்படியாக செய்வதனால் மட்டுமே ஒருங்கிணைவதோ, அல்லது கூட்டு செயற்பாட்டிற்கான அடித்தளங்களை இடுவதோ சாத்தியப்படும். இதனால் நாம் நிறையவே பேசியாக வேண்டியுள்ளது, விவாதித்தாக வேண்டியுள்ளது.

மாற்று கருத்தை கொண்டிருப்பதற்கான உரிமையை ஏற்றுக் கொள்ள, ஆங்கிலத்தில் சொல்வார்களே Agree to Disagree என்று, அது போல. விட்டுக் கொடுக்க, தேவைப்படும் போது சமரசங்கள் செய்து கொள்ள நாம் புதிதாக கற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது. இன்னோர் அர்த்தத்தில் பார்த்தால் அரசியல் என்பது விட்டுக் கொடுப்பது, சமரசம் செய்து கொள்வது என்பவற்றின் மூலமாக கருத்தொற்றுமையை அடைய முயல்வது என்றும் வரையறை செய்யலாம் அல்லவா? ஆதலால் நாம் எல்லோரும் நிறையவே பேசியாக வேண்டியுள்ளது. அதிலும் அடுத்தவர் தமது கருத்தை முன்வைப்பதற்கான உரிமையை ஏற்றுக் கொள்ளுவதற்கு கற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது. ஒத்த நலன்கள் கொண்ட நட்பு சக்திகள் தமக்குள் விட்டுக் கொடுப்பது, சமரசம் செய்வது, இணக்கம் காண்பது என்பவை ஒன்றும் மோசமான குற்றச் செயல்கள் அல்ல. இவைதாம் மனித நாகரீகத்தின் அச்சாணிகள் என்ற புரிதல் வந்தால் அதுவே அரை கிணறு தாண்டியது போலத்தான்.

இப்போது நாம் தேசிய பிரச்சனையை அரசியல், கோட்பாட்டு தளத்தில் அணுகுவது பற்றிய பிரச்சனைக்கு வருவோம். நவீன சமுதாயத்தில் தேசத்திற்கு பொருத்தமான அரசியல் வடிவம் தேச – அரசு தான் என்பது அடிப்படையான அரசியல் உண்மையாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேசமும் தனக்கென தனியான அரசை கொண்டிருக்கும் போதுதான் அது தனது முழுமையான உள்ளாற்றலையும் வெளிப்படுதுவதும், உயர்ந்தபட்ச சுபீட்சத்தை அடைவதும் சாத்தியப்படுககிறது. மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ புரட்சிகளின் பிரிக்க முடியாத ஒரு கூறாக தேச– அரசை நிறுவுவது நடைபெற்றது ஒன்றும் தற்செயலானதல்ல. இதற்கு மாறாக பல்தேச அரசுகள் நிலவ முடியாது என்பதல்ல. ஆனால் இப்படிப்பட்ட நிலையில் தேசங்களுக்கிடையில் தப்பெண்ணங்களும் (Prejudice), சண்டைகளும் சச்சரவுகளும் நிகழ்வது வழக்கமாகிவிடும். இது எவ்வாறு நடைபெறுகிறது என்று பார்ப்போம்.

அரசானது தனது சட்டங்களை முதலாளித்துவ ஜனநாயக நடைமுறைப்படி பெரும்பான்மை மூலமாக நிறைவேற்றுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு சமூகமும் தான் பிறர் எனக் கருதும் சமூகங்கள் தொடர்பாக பல தப்பெண்ணங்களை (Prejudice) கொண்டிருப்பது இயல்பானதாகும். இப்படிப்பட்ட சூழலில், தேசங்களது எண்ணிக்கையில் மோசமான அசமத்துவம் நிலவும் பட்சத்தில், எண்ணிக்கையில் பலம் கூடிய ஒரு தேசம் ஏனைய தேசங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் “ஜனநாயகபூர்வமாகவே” சட்டங்களை இயற்றுவதும், அவற்றை செயற்படுத்துவதும் சாத்தியமானதாகிறது. இங்கு நிகழ்வது முதலாளித்துவ ஜனநாயகம் அல்ல. மாறாக ‘பெருன்பான்மைவாதமாகும்’ (Majoritarianism). அதாவது, முதலாளித்துவ ஜனநாயகத்தை அதன் எழுத்துக்களின் அளவில் ஏற்றுக் கொண்டு, அதன் ஆத்மாவை சாகடிக்கும் செயலாகும். ஆனால் ஜனநாயகத்தில் இரண்டாம் தர பிரசைகள் என்ற கருத்தாக்கத்திற்கு இடமில்லையானால், இந்த முரண்நிலையை தவிர்ப்பது எவ்வாறு என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

இங்குதான் பல்தேச அரசுகள் தமது ஏற்பாடுகளை கவனமாக மேற்கொண்டன. அதாவது, முதலாளித்துவ ஜனநாயகமும் இருக்க வேண்டும், ஆனால், அது வெறுமனே பெரும்பான்மைவாதமாக குறுக்கப்படவும் கூடாது. இதனை சாத்தியப்படுத்துவதாயின் நாம் முதலில் ஒவ்வொரு தேசத்திற்கும் குறிப்பான விடயங்களையும், பொதுவில் எல்லா தேசங்களுக்கும் பொதுவானதும் என்று விடயங்களை பிரித்துக் கொண்டு, குறிப்பிட்ட தேசங்களுக்கு பிரத்தியேகமாய் அமைந்த விடயங்களை அந்தந்த தேசங்கள் மட்டுமே தீர்மானிப்பதாகவும், எல்லா தேசங்களுக்கும் பொதுவான அம்சங்களை பொதுவில் பெரும்பான்மை மூலமாக தீர்மானிப்பது என்றும் வரையறுத்தாக வேண்டியுள்ளது. இப்படியாக ஒவ்வொரு தேசத்தினதும் மொழி, கலாச்சாரம், பிரதேசம், பொருளாதாரம், கல்வி, அபிவிருத்தி போன்றவற்றை தனித்தனியே அந்தந்த தேசங்களே தீர்மானித்துக் கொள்வதாகவும், எல்லா தேசங்களுக்கும் பொதுவான அம்சங்களை மாத்திரம் எல்லா தேசங்களும் சேர்ந்து மத்தியில் தீர்மானிப்பதாகவும் ஒரு ஏற்பாட்டை கற்பனை செய்து கொள்வோமேயானால், அதுவே கூட்டாட்சி (Confederation), சமஷ்டி (Federal system), மாநில சுயாட்சி (Regional Autonomy) என்று வெவ்வேறு பெயர்களுடன், வேறுபட்ட அளவிலான அதிகாரப் பகிர்வு மத்திய – மாநில அரசுகளுக்கிடையில் நிலவும் ஏற்பாடுகளாக இருப்பதை நாம் காண முடியும்.

இந்த வகையான ஏற்பாட்டின் மூலமாக ஒவ்வொரு தேசமும் தனது தனித்துவ தன்மைகளை பேணிக் கொள்வதுடன், பல்தேசிய அரசில் இடம் பெறுவது சாத்தியப்படுகிறது. இந்த ஏற்பாடுகள், அந்தந்த நாடுகளில் “பிரிவினைவாதத்தை” தோற்றுவித்து விடவில்லை. மாறாக, இப்படிப்பட்ட ஒரு ஏற்பாட்டின் மூலமாக மட்டுமே அந்தந்த நாடுகளில் இருந்த தனியரசுக்கான கோரிக்கைகள் கூட தனிக்கப்பட்டன. ஆகவே பல்தேச அரசு என்பது வரலாற்றில் என்றுமே சாத்தியப்படாதது அல்ல. தற்போதும் நடைமுறையில் இருந்து வரும் ஒரு ஏற்பாடேயாகும். எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு தேசம் தானாக முன்கையெடுப்பதன் மூலமாக, எண்ணிக்கையில் சிறியனவாக இருக்கும் தேசங்களது சந்தேகங்களை களைந்து, அவர்களது பிரிந்து செல்வதற்கான சுயநிர்ணய உரிமையையும் உத்தரவாதப்படுத்துவதன் மூலமாகவே இப்படிப்பட்ட பல்தேச அரசுகளை சாத்தியமானதாக ஆக்கின. இப்படிப்பட்ட ஒரு விரிவான சுயாட்சிக்கான ஏற்பாடுகள் இல்லாதவரையில் தேசங்களுக்கிடையில் சண்டைகளும், சச்சரவுகளும் தோன்றுவதும், அது ஒரு கட்டத்தில் யுத்தங்களாக வெடிப்பதும் தவிர்க்கப்பட முடியாததாகிறது. சோவியத் யூனியனது தகர்வை அடுத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற, இன்றும் தொடர்ந்து வரும் யுத்தங்களும் பேரழிவுகளும் இதற்கான சான்றுகளாக அமைகின்றன.

இலங்கையின் நிலைமைகளை எடுத்துக் கொண்டால் சிங்கள தேசத்தின் தலைவர்கள் இலங்கையை ஒரு பல்தேச அரசாக கட்டமைக்கும் அரசியல் முதிர்ச்சியும், தாராள மனப்பான்மையும் இல்லாதவர்களாக இருந்தார்கள். பொன். அருணாச்சலம் கோரிய கொழும்பு மேற்கு தமிழருக்கென தனித் தொகுதி விடத்திலேயே அந்த நம்பிக்கையை பேணத்தவறிவிட்டார்கள். இந்த கோரிக்கை ஒன்றும் ஒரு தேசம் தனக்கென தனிச்சலுகை கோரும் நோக்குடையது அல்ல. எண்ணிக்கையில் குறைந்த அல்லது குடிசன பரம்பலில் அல்லது வேறொரு காரணத்தால் தமது அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்காமற் போய்விடும் என்று ஒரு குறிப்பிட்ட சமூகம் பயப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் இப்படிப்பட்ட ஏற்பாடுகள் மூலமாகவே இந்த அச்ச உணர்வு களையப்பட்டுள்ளது. இன்று கூட இந்தியாவில் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் என்று விசேட தொகுதிகள் ஒடுக்கப்பட்டுள்ளன. மலையக மக்களது வாக்குரிமை மற்றும் பிரஜா உரிமை பறிப்பும் இந்த அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய கணிப்பிலிருந்து பிறந்தவையாகும். இதன் மூலமாக தேசிய மற்றும் வர்க்கரீதியில் அவர்கள் தாக்கப்பட்டார்கள்.

தமிழர் தாயகத்தில் நடைபெற்ற சிங்களக் குடியேற்றம் என்பதும் முதலில் தமிழரது அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில குடிசன பரம்பலை மாற்றியமைக்கும் (Altering Demographic Pattern) ஓர் நடவடிக்கைதான். ஆனால் இது ஒரு நாட்டின் பொருளாதார வளங்களை பகிரும் நடவடிக்கையாக நியாயப்படுத்தப்பட்டது. அப்படி பகிர்வதாயினும் அதனை செய்வதற்கு சிங்கள தேசம் தமிழ் தேசத்தின் அனுமதியை பெற்றாக வேண்டாமா? ஆனால் அப்படிப்பட்ட ஒரு சிந்தனையே சிங்கள அரசியல் தலைவர்களுக்கு சகிக்கமுடியாததாக இருந்தது. ஒருக்கால் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்ட பின்பு அது மூலவளங்களுக்கான போட்டியாக மாறி (Resourse War), அந்த பிரச்சனை இனக்கலவரத்தில் தமிழர்களை வெளியேற்றியதன் மூலமாக தீர்வு காணப்பட்டது. ஆயினும் முதலில் இதுவோர் தமிழரது அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய பிரச்சனை என்பதும் பின்னர் ஒரு கட்டத்தில்தான் இது வளங்கள் பற்றிய போட்டியாக மாறியது என்பதும் வலியுறுத்தப்பட வேண்டியதொன்றாகிறது.

இப்படியாக அடுத்தடுத்து வந்த மொழி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம், ஒற்றையாட்சி மற்றும் சிங்கள பௌத்தர்களுக்கு முதலிடத்தை அரசியமைப்பின் மூலமாக வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் போன்ற அனைத்துமே இலங்கையின் பாராளுமன்றத்தில் “ஜனநாயக பூர்வமான” செயற்பாடுகளின் ஊடாகவே நிறைவேற்றப்பட்டனவாகும். அவ்வாறே, இந்த பிரச்சனைகள் தொடர்பாக சட்ட மற்றும் காவல் துறையின் பாதுகாவல் தேடுவதற்கு தமிழர் எடுத்த முயற்சிகளின் போதும் இந்த அமைப்புக்களும் சிங்கள அமைப்புக்களே என்பதை நிரூபிக்கும் விதத்திலேயே அவை நடந்து கொண்டன. இந்தவிதமான ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தமிழ்மக்கள் ஜனநாயகரீதியாகவும், அகிம்சை வழியிலும், வெகுஜனப் போராட்ட வடிவலுமே தமது ஆரம்ப எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இவையெல்;ம் அரசினால் வன்முறை கொண்டு நசுக்கப்பட்ட நிலையிலேயே எதிர்ப்பியக்கங்களும் வன்முறை வடிவத்தைப் பெற்றன. இறுதியில் அது சென்று முடிந்த இடம் பற்றி பலரும் மிகவும் அதிருப்பியுறுவது புரிந்து கொள்ளத்தக்கதே. ஆனால் தமிழ் மக்கள் அடாவடியாக வன்முறையை நாடினார்கள் என்ற கருத்து தவறானது என்பதை குறித்துக் கொள்வது அவசியமானதாகிறது.

முதலாளித்துவ புரட்சிக்கு முந்திய காலத்தில் மக்கள் படிப்பறிவு அற்றவர்களாகவும், தமது மொழி, கலாச்சாரம் பற்றிய போதிய விழிப்புணர்வு அற்றவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பொதுக்கல்வி, சர்வஜன வாக்கெடுப்பு நிகழும் சமூக அரசியல் சூழலில் இப்படிப்பட்ட அடக்குமுறைகள் அவர்களுக்கு சகிக்கவொண்ணா நிலைமைகளை இலகுவில் தோற்றுவித்து விடக்கூடியவை ஆகின்றன. மக்களது ஜனநாயகபூர்வமான எதிர்ப்பியக்கங்கள் வன்முறை கொண்டு நசுக்கப்படும் பொழுது அவை தன்னியல்பாகவே ஆயுதம் தாங்கிய வடிவை பெற்று விடுகின்றன. இதுதான் வரலாறு திரும்பத் திரும்ப படிப்பிக்கும் பாடமாகும். மக்கள் எவ்வளவு மோசமாக தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களது போராட்டத்திற்கு அடிப்படையான ஒடுக்குமுறைகள் தொடரும் வகையில் அவர்கள் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டங்கள் திரும்பத் திரும்ப வெடிக்கவே செய்யும். இப்போது இன்னமும் தீவிரமாக, கடந்த கால படிப்பினைகளுடன் இன்னமும் எச்சரிக்கையுடன் இது நிகழவே செய்யும். ஆகவே பகுத்தறிவுடன் சிந்திப்பவர்கள் இந்தவிதமான போராட்டங்களை நசுக்குவது எப்படி என்று சிந்திப்பதிலும் பார்க்க, இந்த போராட்டத்திற்கு திரும்பவும் இட்டுச் செல்லக் கூடிய நிலைமைகளை தணிப்பது எப்படி என்றுதான் சிந்திக்கத் தலைப்பட வேண்டும்.

இப்போது நாம் எம்முன்னுள்ள பிரச்சனைக்கு வருவோம். இன்று தமிழரது போராட்டம் புலிகளது தலைமையில் இவ்வளவு மோசமாக தோற்கடிக்கப்பட்ட நிலையில் நாம் எப்படிப்பட்ட தீர்வுகளை நோக்கி நகரப்போகிறோம் என்பதுதான் இப்போதுள்ள பிரச்சனையாகும். இன்றுள்ள நிலைமையில் மகிந்த ராஜபக்ஷவினால் ( உத்தியோகப்பற்ற விதத்திலும் ஒருவித ஜனரஞ்சக பாணியிலும்) முன்வைக்கப்படும் தீர்வான தமிழரும், சிங்களவரும், முஸ்லிம்களும் தமக்குள் திருமண உறவுகளை மேற்கொள்வது, எல்லா மக்களும் நாட்டின் எந்த பிரதேசத்திலும் சுதந்திரமாக குடியிருப்பதற்கான உரிமைகளை உள்ளடக்கிய ‘ஒன்றுகலப்பது’ (Assimiliation) தொடக்கம், தனியான அரசை அமைப்பது வரையிலான பல தரப்பட்ட தீர்வுகளும் இங்கே சாத்தியமானவைதாம். கூட்டாட்சி, சமஷ்டி, மாநில சுயாட்சி, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்த, தனித்தனியாக பிரிந்த சுயாட்சி அலகுகள், மாவட்ட சபைகள், உதவி அரசாங்க அதிபர் பிரிவு மற்றும் கிராம அளவிலான அதிகாரப் பகிர்வு ஆகியவை உள்ளடக்கிய பல தரப்பட்ட விதமான, பல தரப்பட்ட அளவிலான அதிகாரப்பகிர்வு மாதிரிகளையும் ஒருவர் இங்கு கருத்திற் கொள்ள முடியும். ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால், தனியான ஒரு அரசை நிறுவது என்ற ஒரு முடிவைத்தவிர ஏனைய எல்லா தீர்வுகளுமே எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ள, அரசதிகாரத்தை தனது கைகளில் வைத்துள்ள சிங்கள தேசத்தின் நல்லெண்ணம் மற்றும் முன் முயற்சியிலேயே தங்கியுள்ளன.

இப்போதுள்ள பிரச்சனை என்னவென்றால், இலங்கைளில் தேசிய பிரச்சனை என்ற ஒன்று இருப்பதையே ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுடன், சமஷ்டி என்ற சொல்லையே அசூசையாக நினைப்பவர்களுடன், வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பிரிந்த நிலையில் கூட அந்தந்த மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் நிலம் தொடர்பான அதிகாரங்களை வழங்க மறுப்பவர்களுடன் எவ்வளவு தூரம் சமரசம் செய்து கொள்ளலாம் என்பதுதான். (இந்த இடத்தில் நாம் மேற்கு நாடுகளில் சாதாரண சிறிய நகரங்களுக்கே பொலிஸ் மற்றும் நில அதிகாரங்கள் இருப்பதை ஒரு ஒப்பீட்டுக்காக குறித்துக் கொண்டு செல்வோம்) இங்கு பிரச்சனை தீர்க்கப்படுவதற்கு ஒடுக்கப்படும் தேசம் விரும்பினால் மட்டும் போதாது. ஒடுக்கும் தேசம் தன்னிடம் நியாயமற்ற முறையில் குவித்துக் கொண்டுள்ள அதிகாரங்களை கைவிடத்தயாராக இருக்க வேண்டும். ஒடுக்கும் தேசம் இப்படிப்பட்ட ஒரு முடிவை தானாக முன்வந்து எடுப்பதற்கான நிலைமைகள் தற்போது இலங்கையில் இல்லை என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருப்பதாக தோன்றவில்லை. ஆனால் இந்த நிலைமைகளை மாற்றியமைக்கும் விதத்தில் நாம் ஏதாவது செய்வது சாத்தியமா? அப்படியானால் அந்த பணியை எங்கிருந்து தொடங்கலாம் என்பதில்தான் எமக்குள் கருத்த வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த வேறுபாடுகளை களைவதற்கு நாம் தீவிரமாக உழைத்தாக வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் இந்த வேறுபாடுகளுடன் நாம் கூட்டு செயற்பாடுகளை ஒரு குறிப்பிட்ட அளவிற்காவது மேற்கொண்டு கூட்டுத்தண்டனைக் குள்ளாக்கப்பட்டிருக்கும் (Collective punishment) வன்னி மக்களது இன்றைய அவலங்களை குறைக்க முடியுமா என்றாவது சிந்திக்காவிட்டால் வரலாறு எம்மை மன்னிக்காது என்பதை நாம் மறந்துவிடலாகாது.

இத்தோடு இன்னொரு விடயத்தையும் நான் தொட்டுச் செல்வது அவசியம் என்று நினைக்கிறேன். இன்றை விவாதங்களில் பேசப்படும் ஒரு குறிப்பான விடயம் தொடர்பாக எனது கருத்தை சொல்வது அவசியம் என்று கருதுகிறேன். கடந்த காலத்தில் ஆயுத போராட்டம் நடத்தப்பட்ட விதம், அது கொண்டுவந்து விளைவுகள், இறுதியில் அது தோற்கடிக்கப்பட்ட விதம் என்பவற்றை பார்க்கும் பலரும் வன்முறை மற்றும் வன்முறையற்ற போராட்ட வடிவங்களை ஒன்றிற் கொன்று எதிரெதிரானவையாக வைத்துப் பார்க்கும், இவற்றுள் ஒன்றை முற்றாக நிராகரித்து மற்றொன்றை மாத்திரம் ஆதரிக்கும் போக்கு தென்படுகிறது. இது ஆரோக்கியமான ஒரு போக்கல்ல என்பதுதான் எனது கருத்தாகும். இதன் அர்த்தம் நான் கடந்த கால படிப்பினைகளை நிராகரிப்பதாகவோ அல்லது இன்றுள்ள மக்களதும், செயற்பாட்டாளர்களதும் உணர்வுகளை புரிந்து கொள்ள மறுப்பதாகவோ அர்த்தப்படுத்தப்படக் கூடாது. ஆனால் அவ்வப்போது போராட்டத்தில் ஏற்படும் வெற்றி – தோல்விக்கு ஏற்ப, போராட்டத்தின் வேகம் எழும் – தணியும் நிலைமைக் கேட்ப எமது கொள்கைரீதியான முடிவுகள் அமையக் கூடாது என்ற கருத்தையே நான் இங்கு வலியுறுத்த முனைகிறேன். ஒரு மக்கள் கூட்டம், தேசம் தனது உரிமைகளை வென்றெடுக்க தன்னிடமுள்ள அத்தனை சாதனங்களையும், வழிமுறைகளையும் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை உடையது என்பதை மறந்துவிடக் கூடாது. மால்கம் எக்ஸ் (Malcom X) கூறியது போல, தேவைப்பட்டால் அத்தனை வழிகளிலும் போராடுவதற்கான உரிமை (If necessary by any means) ஒவ்வொரு சமூகத்திற்கும் இருக்கிறது.

கடந்த காலத்தில் தவறு எங்கு நேர்ந்தது என்றால், போராட்டத்தில் வடிவங்களை அதிகாரப்படிநிலைப்படுத்தியதில்தான். நாம் ஆயுதப் போராட்டத்தையும் ஏனைய போராட்ட வடிவங்களையும் ஒன்றிற்கொண்று எதிரெதிரானவையாக பார்த்தோம். அவற்றுள் ஆயுத போராட்டமே உயர்ந்தது என்றும், இறுதியில் அதுவே ஒரே போராட்ட வடிவம் என்று ஆகிவிட்டது. இப்போது நாம் பெற்ற தோல்வியின் பின்பு அடுத்த கோடிக்கு செல்லும் போதும் அதேவிதமான இன்னொரு தவறைத்தான் மேற்கொள்கிறோம். என்னை பொறுத்தவரையில் போராட்ட வடிவங்கள் ஒவ்வொன்று அவற்றிற்கே உரிய பாத்திரத்தை கொண்டவையாகும்: ஒன்றிற் கொன்று துணையானவை: ஒன்றையொன்று நிரப்பிச் செல்பவை (Compoimentary). போராட்டத்தின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு போராட்ட வடிவங்கள் முதன்மை பெறும். வரலாற்று நிலைமைகளும், மக்களது எழுச்சியின் தன்மையும், ஏன் எதிரியின் நடவடிக்கைகளும் போராட்ட வடிவங்களை தீர்மானிக்கக் கூடியவையாகும். இவற்றுள் ஒன்றை விலையாகக் கொடுத்து மற்றொன்றை முன்னெடுக்க முனைவது மீண்டும் ஒரு தோல்விக்கே இட்டுச் செல்லக் கூடியதாகும். இது குறித்து எச்சரிக்கையாக இருப்பதும், இந்த பிரச்சனைகள் குறித்தும் விவாதங்களில் கவனத்தை குவிப்பதும் அவசியமானதாகிறது.

சரி இப்போது அரசியல் தீர்வு பற்றிய விடயத்திற்கு வருவோம். சிறீலங்கா அரசுகள் கடந்த பல தசாப்தங்களாக தாம் அரசியல்ரீதியான தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்க முயன்று வருவதாக பாசாங்கு காட்டி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு தீர்வுத் திட்டத்தை வரைவது என்ன ஒரு காரிய சாத்தியமற்ற ஒரு விடயமா என்று யோசித்துப் பார்ப்போம். குறைந்த பட்சம் தமிழ் மக்கள் தரப்பில் இதுவரையில் பலவிதமான முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை தேர்ந்தெடுத்து, தமிழ் மக்கள் முன்

அவற்றை வைத்து அதனை அவர்கள் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக தேர்வு செய்ய விடுவதில் கொள்கைரீதியாக எனக்கு பிரச்சனைகள் ஏதும் இருப்பதாத தோன்றவில்லை. இதற்கு முன் மாதிரிகள் இலங்கை அரசியலிலேயே ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபை அமைப்பில், கிழக்கு மாகணம் வடக்கு மாகாணத்துடன் இணைந்து இருப்பதா இல்லையா என்பதை இரண்டு வருடகாலத்தில் கிழக்கு மாகாண மக்கள் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக தீர்மானிக்கலாம் என்று முன் மொழியப்பட்டு இருக்கிறது. இதே நியாயம் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற வகையிலும் கூட சாத்தியமானதுதானே. தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் எப்படிப்பட்ட அரசில் ஒழுங்கமைப்பிற்குள் சேர்ந்திருக்க விரும்புகிறார்கள்: அல்லது முற்றாக தனியான அரசை அமைப்பதுதான் அவர்களது அரசியல் முடிவாக இன்னமும் இருக்கிறதா என்பதை கண்டறிவது ஒன்றும் காரியசாத்தியமற்ற விடயம் அல்லவே? இது சர்வதேச ரீதியில் கூட அங்கிகரிக்கப்பட்ட நடைமுறையே. கிழக்கு தீமோர் உட்பட அன்றாடம் பல தேசங்கள் இந்த விதமான தீர்வை நோக்கி சர்வதேச அனுசரனையுடன் முன்னேறி வருகின்றன.

இங்கே தேவைப்படுவது பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற அரசியல் முனைப்பேயன்றி, சாத்தியப்பாடுகள் பற்றிய பிரச்சனை அல்ல. இலங்கையில் தேசிய பிரச்சனை என்ற ஒன்றே கிடையாது என்று சாதிக்க முனைபவர்கள் மத்தியில் இதனை சமாதானபூர்வமாக தீர்வுகாண முடியுமா என்பது கேள்விக்குறியதே. இப்படியாக அரசியல் தீர்வை சிங்கள தேசத்துடன் இணக்க பூர்வமாக அடைவது சாத்தியப்படாதபோது நாம் எமது முயற்சிகளை சர்வதேச அளவிற்கு நகர்த்துவது தவிர்க்க முடியாததாகிறது. அடுத்த கட்டமாக தமிழர் தாயகத்தை சர்வதேச சமூகத்தின் பொறுப்பில் ஒப்படைக்குமாறு கோருவதும், சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ், ஆயுதங்கள் களையப்பட்ட ஒரு அமைதியான சூழ்நிலையில் தனிநாடு அமைப்பது உட்பட விரிவான அரசியல் தீர்வுகளை உள்ளடக்கிய அரசியல் தேர்வுகளின் ஒரு பட்டியலில் இருந்து தமிழ் மக்கள் தாம் தமது பிரச்சனைகளுக்கு உண்மையான தீர்வாக அமையும் என உறுதியாக நம்பும் ஒரு முடிவை நோக்கி நகரவும், அந்த ஜனநாயகபூர்வமான தேர்வை சிறீலங்கா அரசு அங்கிகரித்தாக வேண்டும் என்ற நிலைமையை தோற்றுவிப்பதை நோக்கி நாம் முன்னேற முடியும்.

இப்போதும் கூட நாம் இலங்கையில் சிங்கள தேசத்துடன் ஒரு முறையாக அதிகாரப்பகிர்வுடன் கூடிய அரசில் தீர்வை எட்டுவது கொள்கையளவில் சாத்தியமானதே. ஆனால் இது ஒற்றையாட்சி அமைப்பு என்பதன் கீழ் ஒருபோதும் சாத்தியப்பட மாட்டாது. சிங்கக் கொடி உட்பட, சிங்கள பௌத்தத்திற்கு முதலிடம் வழங்கும் அரசியலமைப்பு போன்ற அனைத்தையும் சிறீலங்கா அரசு ஒரு பல்தேச கூட்டாட்சி அமைப்பினை நோக்கி மாற்றிக் கொள்ள முன்வருவது இந்த அரசியல் தீர்வு எதற்கும் முன்னிபந்தனையாகிறது. அதற்கான அரசியல் மனத்திட்பம் (Political Will) சிங்கள தேசத்திடம் இருக்கிறதா என்பதே இப்போதுள்ள பிரச்சனையாகும். சிங்கள தேசத்திடம் இப்படிப்பட்ட ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவது, அது முடியாத போது தமிழர் தாமே சுயாதீனமான ஒரு அரசியல் ஒழுங்கமைப்பை நோக்கி முன்னேறுவது என்பதே இப்போது எம்முன்னுள்ள தேர்வுகளாகும். இதில் எந்தவிதமான ஒரு முடிவை நோக்கி நாம் முன்னேறுவதாக இருப்பினும் முதலில் தமிழர் தம்மை அரசியல்ரீதியாக ஒழுங்கமைத்துக் கொள்வது அவசியமானதாகிறது. இதுவே இப்போது எம்முன்னுள்ள உடனடிப்பணியாகிறது. அதனை தொடங்குவதற்கே நாம் ஒரு விரிவான கருத்துப் பரிமாற்றத்தை உடனடியாக தொடங்கியாக வேண்டியுள்ளது.

குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறையை நிர்ணயம் செய்தல் : சந்திப்பின் தொகுப்பு : த ஜெயபாலன்

02Aug09_Audienceஒற்றைப் பரிமாண ஏக தலைமைத்துவ அரசியல் இயக்கம் மே 18ல் தனது வரலாற்று முடிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து பன்மைத்துவ அரசியல் செயற்பாடுகள் தீவிரமாகி உள்ளது. உறங்கு நிலையில் தங்கள் அரசியல் அபிலாசைகளை தக்க வைத்துக் கொண்டவர்கள் பலரும் தற்போதுள்ள சூழலை சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் மிகக் கவனமாக உள்ளனர்.

புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் புலிகளும் புலிகள் அல்லாத பிரிவினரும் ஈடுபட்ட உள்ளனர். இவர்களை பெரும்பாலும் மூன்று வகைக்குள் கொண்டுவரமுடியும்.
அ) புலி ஆதரவாளர்கள் – தேசியத் தலைவர் வே பிரபாகரனின் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து அவர் கொள்கை வழி செல்ல வேண்டுமென்பவர்கள்.
ஆ) அரச ஆதரவு சக்திகள் – இலங்கை அரசுடன் அனுசரித்து நடந்தே தீர்வை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றனர்.
இ) அரசுடனும் புலிகளுடனும் தங்களை அடையாளப்படுத்தாத அணி சேரா அணி.

இம் மூன்று அரசியல் பிரிவுகளைச் சார்ந்தவர்களும் வெவ்வேறு வகையான தீர்வுகளை நோக்கி செயற்படுகின்றனர்.
அ) தமிழீழ் – புலிகள் தங்களுக்குள் முரண்பட்டாலும் கொள்கையளவில் தமிழீழத்தைக் கைவிடவில்லை. அவ்வாறு கைவிடும் பட்சத்தில் அவர்கள் புலிகள் என்ற அடையாளத்தைக் கொண்டிருக்க முடியாது. அதே சமயம் புலிகளுடனும் அரசுடனும் அணி சேரா அணியில் உள்ள சிறு பிரிவினரும் கொள்கையளவில் தமிழிழத்தை தொடர்ந்தும் வைத்துள்ளனர்.
ஆ) ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தீர்வு – புலிகளுடனும் அரசுடனும் அணி சேரா அணியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இம்முடிவிலேயே ஏற்கனவே இருந்தனர். இன்று இவர்கள் தீவிரமாக இதனை வலியுறுத்துகின்றனர். அதேசமயம் புலிகளின் தோல்வியால் ஏற்பட்ட விரக்தி தமிழீழம் சாத்தியப்படாது என்ற முடிவுக்கு இன்னும் சிலரை நிர்ப்பந்தித்து உள்ளது.
இ) இலங்கை அரசு தருவதை பெற்றுக் கொண்டு நகர்வது – இயலாமையின் மொத்தத் தீர்வாக இது உள்ளது. பெரும்பாலும் தீவிர புலி எதிர்பாளர்களும் அரச ஆதரவு அணியினரும் இந்நிலையில் உள்ளனர்.

02Aug09_Audienceஇம்முரண்பட்ட அரசியல் பிரிவினர் முரண்பட்ட அரசியல் முடிவுகளுடன் உள்ளனர். இவ்வாறான தமிழ் அரசியல் சக்திகளிடையே குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான குறைந்தபட்ச வரையறையை நிர்ணயம் செய்வது இன்று காலத்தின் அவசியமாக உள்ளது. இதன் மூலம் பல்வேறு முரண்பட்ட அரசியல் சக்திகள் தற்போதுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முற்பட்டாலும் அவர்கள் குறைந்தபட்ச வரையறைக்குக் கீழ் செல்வதை தமிழ் அரசியல் சமூகம் தடுத்து நிறுத்த முடியும்.

இதையொட்டிய இரு சந்திப்புக்களை தேசம்நெற் ஒழுங்கு செய்திருந்தது. முதலாவது சந்திப்பு யூன் 21இலும் இரண்டாவது சந்திப்பு ஓகஸ்ட் 2 இலும் இடம்பெற்றது. இவ்விரு நிகழ்வுகளுக்கும் பேரின்பநாதன் தலைமை வகித்தார்.

._._._._._.

யூன் 21ல் இடம்பெற்ற முதற் சந்திப்பு அடுத்த கட்ட நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் என்ற தலைப்பில் இடம்பெற்றது. பல்வேறு அரசியல் தளங்களில் இருந்தும் 40க்கும் மேற்பட்டவர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். இக்கலந்துரையாடலில் பின்வரும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

அ)
வசந்தன் : கடந்த காலப் போராட்டம் பௌத்த பிக்குக்களையும் இஸ்லாமியரையும் மற்றும் பலரையும் துரோகிகள் ஆக்கிவிட்டது. எங்களுடைய அரசியல் முன்னெடுப்பிற்கு தமிழீழம் என்பதே முட்டுக்கட்டையாக அமைந்தது.

பாண்டியன் : ஒரு சமூகம் தான் தன்னை எவ்வாறு அடையாளப்படுத்த வேண்டும் என்பதனைத் தீர்மானிக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு தமிழீழம் வேண்டுமா இல்லையா என்பதை தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அரசாங்கத்தக்கு வேண்டாம் என்பதற்காக எங்களுக்கும் வேண்டாம் என்ற முடிவுக்கு நாங்கள் வர வேண்டியதில்லை. குறிப்பாக பின்வரும் விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். 1) உண்மையறியும் குழுவொன்று அவசியம். 2) ஆயுதப் போராட்டம் தேவையா? இல்லையா? 3) அதிகாரப் பரவலாக்கம் தமிழ் மக்களுக்கு மட்டுமா? அல்லது அனைவருக்குமா? 4) 13வது திருத்தச் சட்டம் ஏற்கனவே உள்ளது.  5) குடியேற்றம்

ரவி சுந்தரலிங்கம் : தமிழ் மக்கள் தேசிய இனமா என்பதில் எனக்கு கேள்விகள் உண்டு. இலங்கை மக்களுக்கு பொதுவான பிரச்சினைகள் பல உண்டு. அவர்கள் தங்களை பொதுவாகவும் அடையாளம் காண்கிறார்கள். ஒரு பொதுத் தேசியம் ஒன்றை உருவாக்குவது பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும்.

நிஸ்தார் மொகமட்: ரிஎன்ஏ தங்கள் பதவிகளைத் துறந்து மறு தேர்தலுக்கு தயாராக வேண்டும். ரெடிமேட் தீர்வுகள் எதுவும் சரிவராது. அனைவரையும் உள்வாங்கிய ஒரு தீர்வுக்கு தயாராக வேண்டும்.

சார்ள்ஸ் : இலங்கையில் தமிழர்கள் தமிழன் என்ற காரணத்தினாலேயே ஒடுக்கப்படுகிறார்கள். புலிகளுடைய தோல்வி செப்ரம்பர் 11க்குப் பின்னர் விடுதலை அமைப்புகளுக்கு ஏற்பட்ட தோல்வியின் தொடர்ச்சியே. தமிழர்களுடைய போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை.

பாலசுகுமார் : ஊரில் உள்ளவர்கள் கோபத்துடன் உள்ளார்கள். அவர்களது கோபம் நியாயமானது. இதுவெல்லம் ஏன் நடந்தது எனக் கேட்கிறார்கள். ஊரில் உள்ளவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது மிக முக்கியம்.

கணநாதன்: தமிழர்களுடைய போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டம் சரியானதா இல்லையா என்பதை எப்படி தீர்மானிப்பது?  மக்கள் இன்னமும் மிகுந்த ஒடுக்கு முறைக்குள் தள்ளப்பட்டு உள்ளார்கள். இலங்கை அரசு தற்போது தனது ஒடுக்குமுறையை மேலும் தூண்டியுள்ளது. தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கான எந்தத் தீர்வையும் இலங்கை அரசு முன்வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இடம்பெயர்ந்து முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளவர்களின் தேவைகள் உடனடியானது. அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சேனன் : இன்று நாங்கள் எந்தக் கட்டத்திற்கு வந்திருக்கின்றோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பல்வேறு அடையாளங்களாகப் பிளவுபடத்தப்பட்டு அவை கூர்மைப்படுத்தப்பட்டும் உள்ளது. பொதுத் தேசியத்தை அமைப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் சிங்கள அரசுடன் – இலங்கை அரசுடன் சேர்ந்து செயற்படுவது ஆபத்தானது.

நித்தி : அரசாங்கம் ஏதோ ஒரு தீர்வை முன்வைக்க முயற்சிக்கிறது. அதில் நாம் கூடிய தீர்வைப் பெறுவதற்கு ரிஎன்ஏயைப் பலப்படுத்த வேண்டும்.

ராஜேஸ் பாலா: முதலில் இந்த தமிழீழம், ஈழம் என்ற கதைகளை நாங்கள் விட வேணும். அங்குள்ள இடம்பெயர்ந்த முகாம்களில் உள்ள மக்களின் நலன்கள் தான் இப்பொழுது முக்கியம். நாங்கள் முரண்டு பிடித்து அரசியல் செய்து எதையும் சாதிக்கவில்லை. இனிமேல் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே தமிழ் மக்களுக்கு எதையாவது செய்ய முடியும்.

சிறி : தமிழ் மக்களுடைய அரசியல் அரங்கு பலவீனமாக உள்ளது. மேலும் பல்வேறு மூலதனங்கள் நாட்டினுள் நுழைந்து இலங்கை மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. இவற்றுக்கான ஒன்றுபட்ட போராட்டங்கள் பற்றி சிந்திக்க வேண்டும்.

நடாமோகன் : நான் மனைவி பிள்ளை என்று வாழ்கிறேன். என்னைப் போன்று என் மொழி பேசுபவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

ஆ)
ஆர் ஜெயதேவன்: நாங்கள் எவ்வளவுதான் கூட்டம் போட்டு பேசினாலும் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானது. இப்போது நடந்து முடிந்த அவலம் எதிர்பார்க்கப்பட்டது தான். பிரபாவும் – பொட்டரும் செய்த அரசியலின் விளைவு இது. புலம்பெயர்ந்தவர்களின் குரல்கள் டெல்லியை நோக்கிச் செல்ல வேண்டும். இது தொடர்பாக நான் இந்திய அதிகாரிகளிடமும் பேசி உள்ளளேன்.

ரவி சுந்தரலிங்கம் : இந்தியாவின் பாத்திரம் முக்கியமானது. பிந்திரன் வாலேயை உருவாக்கி சீக்கிய தேசியத்தை அதன் உச்சத்திற்குக் கொண்டு சென்று வேரறுத்தது இந்தியா. அதுவே முள்ளிவாய்க்காலிலும் நடந்தது. சிங்கள தேசியத்தின் உச்சத்திற்குச் செல்லும் மகிந்த ராஜபக்சவிற்கும் இது நடக்காது என்றில்லை. புலம்பெயர்ந்தவர்கள் இந்தியாவின் பாத்திரத்தை அசட்டை செய்ய முடியாது.

சையட் பசீர் : தமிழர்கள் என்று மட்டுமல்ல முஸ்லீம்கள் என்றும் சேர்த்துப் பேசப்பட வேண்டும். இப்போது முகாம்களில் உள்ள மக்களின் அவலம் வேதனையானது. அவர்கள் மீளவும்குடியமர்த்தப்பட வேண்டும். அதேசமயம் பலவருடங்களுக்கு முன் யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் இன்னமும் புத்தளம் முகாம்களில் தான் வாழ்கிறார்கள். அதற்காக எந்தக் கூட்டமும் கலந்துரையாடலும் நடாத்தப்படாதது மனவருத்தமானது.

போல் சத்தியநேசன்: புத்தளம் முகாமில் உள்ளவர்களின் விடயங்கள் பேசப்படாதது வேதனையானதே. அனால் இன்றுள்ள ஊடகத் தொழில்நுட்ப வளர்ச்சிகள் அன்றிருக்கவில்லை. இன்றைய அவலம் உடனுக்குடன் வந்தடைவதால் அதற்கான பிரதிபலிப்புகளும் உடனடியானவையாக உள்ளது. ஆனால் இங்குள்ள எல்லோருமே புத்தளம் முகாம்களில் உள்ளவர்கள் மீது அனுதாபமுடையவர்களே. அவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களுமே.

எஸ் வசந்தி : இலங்கையின் நிலை அதன் பிராந்திய நிலைகளாலும் தான் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் இலங்கையின் அரசியல் சூழலில் இந்தியாவின் தாக்கம் முக்கியமானது.

எஸ் அரவிந்தன் : நாங்கள் எந்த அடிப்படையில் வேலை செய்ய முற்படுகிறோம் என்பதை நிர்ணயித்த பின்னரே பிராந்திய அடிப்படையில் எவ்வாறு செயற்படப் போகின்றோம் என்ற முடிவுக்கு வர முடியும்.

கணநாதன் : இந்தியா தொடர்பாக தலைமுறையாக எங்களுக்குள் பிளவு உள்ளது. சிவசங்கர் மேனனைக் கொண்டு இந்தியாவைக் கையாள முடியாது என்றே நினைக்கிறேன். இலங்கை இந்தியாவின் விளையாட்டு மைதானம். ராஜபக்சவுக்கு ஒரு அதிஸ்டம் அடித்தள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவை வைத்து அரசியல் நகர்த்துவது தவறானது என்றே நான் கருதுகிறேன்.

பாலா : இந்தியாவில் தமிழ் நாட்டிலும் ஏராளமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இந்தியாவில் தங்கி நிற்கும் வணங்கா மண் கப்பலில் உள்ள பொருட்களை அங்குள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கே கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

சையட் பசீர் : நாங்கள் இலங்கையர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தியா போன்ற நாடுகளை வைத்துக் கொண்டு இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இலங்கைப் பிரச்சினைக்கான உள்ளுர்த் தீர்வு, சுய தீர்வு ஒன்றே பொருத்தமானது.

இ)
போல் சத்தியநேசன் : இடைக்கால அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலமே தற்போதுள்ள நிலையில் இருந்து மீட்சி பெறமுடியும். நாங்கள் முன்நோக்கி நகர்வது பற்றி சிந்திக்க வேண்டும்.

ரவி சுந்தரலிங்கம் : தாயகத்தில் உள்ளவர்கள் சமூக மாற்றம் ஒன்றிற்கு உள்ளாகி உள்ளனர். அவர்களுடைய வர்க்க நிலையும் மாற்றமடைந்துள்ளது. இவற்றை கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஆர் ஜெயதேவன் : இலங்கையில் உள்ள அமைப்புகள் மிகுந்த கஸ்டத்தை எதிர்நோக்குகின்றன. அரசாங்கம் மோசமான அழுத்தங்களை வழங்குகிறது. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு இனக்கலப்பான சமூகம் ஒன்றை உருவாக்கவும் அரசு முயல்கிறது.

வாசுதேவன் : பொது வேலைத் திட்டம் ஒன்றின் கீழ் நாங்கள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும். இதுவரை இருந்த ஏகபிரதிநிதித்துவம் ஜனநாயக மறுப்பு என்பவற்றைக் கடந்து பொது வேலைத்திட்டத்திக் கீழ் செயற்பட வேண்டிய காலம் இது.

ஆர் யூட் : இதுவரை காலமும் நடந்த செயற்பாடுகள் எங்களை இரகசிய சமூகமாக மாற்றி விட்டது. ஒருவரை ஒருவர் நம்ப முடியாத புலனாய்வுச் சமூகமாக நாம் இருந்துவிட்டோம். மனம் திறந்து பேசுவதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

பாலசுகுமார் : பொது வேலைத்திட்டத்தின் கீழேயே நாங்கள் அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்ல முடியும்.

சார்ள்ஸ் : சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பொது வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கிச் செயற்பட வேண்டும்.

சுகுண சபேசன் : புலம்பெயர்ந்தவர்களுக்கு கடமையொன்று உள்ளது. அவர்கள் ஜனநாயகச் செயன்முறையை ஊக்குவிக்க வேண்டும்.

தயா : இப்போது இங்குள்ள இணைவும் இணக்கப்பாடும் இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

சேனன் : ஜனநாயக நடைமுறையை ஜனநாயகச் செயன்முறையூடாகவே ஏற்படுத்த முடியும். மக்களை ஜனநாயகச் செயன்முறையில் எப்படி ஈடுபடுத்துவது என்பது பற்றி நாங்கள் கவனமெடுக்க வேண்டும்.

எம் பாலன் : பொது அடிப்படையில் ஒரு உடன்பாடு எட்டப்படுவது அவசியம்.

பாலமுரளி: தமிழ் அரசியல் அமைப்புகளிடையே குறைந்தபட்ச உடன்பாடு ஒன்று எட்டப்பட வேண்டும்.

பாண்டியன் : தாயகத்தில் உள்ள மக்களைப் பலப்படுத்துவதற்கான பொது வேலைத்திட்டம் ஒன்று அவசியம். காலப் போக்கில் அவர்களுக்கு என்ன தேவையோ அதை அவர்களே பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளைச் செய்வார்கள்.

ரவி சுந்தரலிங்கம் : எங்களுக்கு கலாச்சாரப் புரட்சி ஒன்று அவசியமாகத் தேவைப்படுகிறது. அதன் மூலமாக ஒரு சமூக மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இக்கலந்துரையாடலில் தமிழ் மக்களுடைய அரசியல் அவர்களுடைய எதிர்காலம் பற்றி பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டது. ஆயினும் பொது இணக்கப்பாடும் பொது வேலைத்திட்டத்தின் அவசியத்தையும் பலரும் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தி இருந்தனர். அதன் அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அரசியல் சக்திகளுக்கு இடையே புரிந்தணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை அனைவரும் வலியுறுத்தினர். அதற்கு குறைந்த பட்ச புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. 

இக்கூட்டத்தின் தொடர்ச்சியாக  குறைந்தபட்ச புரிந்துணர்வு எட்டப்பட வேண்டிய விடயங்கள் அதன் வரையறைகள் பற்றி கலந்தரையாடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.  அம்முடிவின் அடிப்படையில் ஓகஸ்ட் 2ல் ‘தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பில் இரண்டாவது சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் 70 பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்தக்களைப் பகிர்ந்து கொண்டனர். இச்சந்திப்பிற்கும் பேரின்பநாதன் தலைமை தாங்கினார்.

._._._._._.

RahumanJan_Jeyabalan_Perinbanathanஓகஸ்ட் 2ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  ‘தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பிலான சந்திப்பில் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்பகால உறுப்பினரும் பின்னர் தீப்பொறிக் குழுவாகச் செயற்பட்டவரும் தீப்பொறியின் வெளியீடாக அமைந்த உயிர்ப்பு சஞ்சிகையின் ஆசிரியருமான ரகுமான் ஜான் (ஜான் மாஸ்ரர்) ஆரம்ப உரையை வழங்கினார்.

”இலங்கைத் தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அரசுடன் இணைந்து செயற்படுவது முதல் தனியாகப் பிரிந்து சென்று தனியரசு அமைப்பது வரை பல்வேறு சாத்தியக்கூறுகள் உண்டு. கிராம சபை மாவட்ட சபை, 13வது திருத்தச் சட்டம், அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கம், சமஸ்டி என்று   இவற்றை விரித்துச் செல்லலாம்” என்று குறிப்பிட்ட ரகுமான் ஜான் ”நாங்கள் குறைந்தபட்சம் எதற்குச் செல்லலாம்” என்பது பற்றி முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ”பொதுப் புத்தியில் உள்ள விடயங்கள் ஆதிக்க சித்தாந்தத்தினாலேயே நிர்ணயம் செய்யப்படுகின்றது. கருத்துத்தளத்தில் பேரினவாதம் கட்டமைத்த சொல்லாடல்களே மேலாண்மை செலுத்துகின்றது.” என்றும் தெரிவித்தார். ”குறைந்தபட்ச வரையறையைச் செய்யும் போது பேரினவாதம் கட்டமைக்கின்ற கருத்தியல் மேலாண்மையை தகர்க்கின்ற கருத்தியல் மேலாண்மையை நாங்கள் ஏற்படுத்த வேண்டும்” என அவர் தனது உரையின் இறுதியில் குறிப்பிட்டார். அவருடைய உரை முழுமையாக வெளியிடப்பட உள்ளதால் அதற்குள் செல்வது இங்கு தவிர்க்கப்பட்டு உள்ளது.

ரகுமான் ஜானுடைய உரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றது.

எஸ் தவராஜா: தமிழ் சூழலில் தற்போது கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் 1) அகதிகள் 2) சமூகத்தை –  குழுக்களை ஒன்றிணைப்பது 3) உரிமைகள். தமிழ் சமூகத்தில் உள்ள அடிப்படைத் தவறு வேறுபாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு வாழ்வது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளாமை. 1977க்குப் பின்னர் மாறிய சூழலில் மக்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்கப்படவில்லை. அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வே பொருத்தமான தீர்வாக அமையும். எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

எம் ஜெயக்குமார் : புலிகளுடைய அழிவு அவர்கள் தேடிக்கொண்டது. எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகள் அடைய முடியாதவை என்றாகிவிடாது. அவற்றை அடையலாம் என்பதில் இன்றும் எனக்கு நம்பிக்கையுண்டு. எதிர்காலத்தில் போராட்டங்கள் சிங்கள பெரும்பான்மை மக்களையும் இணைத்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாண்டியன் : சிறுபான்மை இன மக்களுக்கு இனிரீதியான ஒடுக்குமுறையுள்ளது. அன்று புலிகள் இருக்கும் போது பயன்படுத்திய கொத்தை நாங்கள் தொடர்ந்தும் பயன்படுத்த முடியாது. நியாயமான கொத்தை பயன்படுத்த வேண்டும்.

சஞ்ஜீவ் ராஜ்: புலம்பெயர்ந்து வாழ்ந்ததால் புலத்தில் உள்ளவர்களுக்கு தாயகத்தில் உள்ள மக்கள் பற்றி பேச உரிமையில்லை என்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. இலங்கையில் நடைபெறும் தேர்தல் தொடர்பாக லண்டனிலும் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனச் சொல்லும்படி பிரச்சாரம் செய்யப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் புலம்பெயர்ந்து வாழும் மக்களே அங்குள்ளவர்களுக்கு குரல்கொடுக்க முடியும்.

தனபாலன் : 98 வீதமான மக்களுக்கு அரசியல் அறிவு இல்லை. நாங்கள் நகர்சார்ந்த மனோ நிலையில் இருந்து சிந்திக்கிறோம். ஆனால் கிராமங்களில் வாழும் மக்களின் மனோநிலை வேறு.

வாசுதேவன்: கடந்த கால எங்கள் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றிப் பார்க்க வேண்டும். எங்கள் பலத்தையும் பலவீனத்தையும் ஆராய வேண்டும். பொருளாதார பலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

ப்பாமி மொகமட்: MOU வரை நிறைய திட்டங்கள் தமிழ் மக்கள் மத்தியில் வந்தள்ளது. நீலன் திருச்செல்வம் அவர்கள் வரைந்த தீர்வுப் பொதி மிகச் சிறந்தது. ஆனால் அவரும் கொல்லப்பட்டார். வரதராஜப் பெருமாள் மாகாண சபையை நடத்துவதில் இருந்து தடுக்கப்பட்டார். இந்த நிலையில் இருந்து தமிழ் சமூகம் மாற வேண்டும்.

கணநாதன்: தமிழர்களுடைய உரிமைப் போராட்டம் பின்னடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. சர்வதேசச் சூழல் எமக்கு எதிராகவும் ராஜபக்ச அரசுக்கு சாதகமாகவும் அமைந்துவிட்டது. இந்நிலை இப்படியே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச அரங்கிற்கு அழுத்தங்களைக் கொடுத்து இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

டேவிட் ஜெயம் : தமிழ் கடற்தொழிலாளர்கள் பாரம்பரியமாக கடற்தொழில் செய்த இடங்களில் தற்போது சிங்கள மீனவர்கள் தொழில் செய்கின்றனர். இதனால் இன முரண்பாடுகள் இன்னமும் கூர்மையாகின்றது. மேலும் பல ஆண்டுகளாக நீடித்த மீன் பிடித்தடை நீக்கப்பட்ட போதும் தமிழ் மீனவர்களுடைய பொருளாதாரத்தில் அது முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை.

Shanmugaratnam Nசண்முகரட்ணம் : இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் ஆவணங்களை முற்றாக இழந்துள்ளனர். மேலும் விடுதலைப் புலிகளால் மக்களுக்கு கையளிக்கப்பட்ட காணிகளில் அரச காணிகளும் அடங்குகிறது. இவையெல்லாம் வன்னி முகாம்களில் உள்ள மக்களின் பிரச்சினையாக உள்ளது. இவை பற்றி கவனிக்கப்பட வேண்டும். இலங்கை அரசின் தன்மை தவறான வழியில் இறுக்கமடைந்துள்ளது. இலங்கை அரசின் பிரச்சினை ஒற்றையாட்சி அல்ல. அரசைப் பற்றிய அறிவு, சீர் திருத்தம், இராணுவ மயமாக்கல் போக்கு பற்றிய விடயங்களில் கவனமெடுக்க வேண்டும்.

சையட் பசீர் : திம்புப் பேச்சுவார்த்தை, ஒஸ்லோ உடன்படிக்கை எதிலுமே முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. பாலஸ்தீனப் பிரச்சினையை நீங்கள் விளங்கிக் கொண்ட விதத்தில் இஸ்ரேலை ஒத்த அரசக் கட்டமைப்பையே தமிழர்கள் உதாரணத்திற்கு எடுக்கின்றார்கள். உதாரணத்திற்குக் கூட பாலஸ்தீனியர்களின் வாழ்நிலை கவனத்திற்கு எடுக்கப்படவில்லை. இந்தச் சிந்தனைமுறையே தவறானது.

வி சிவலிங்கம் : சிங்கள மக்களுடனும் ஏனைய சிறுபான்மையின மக்களுடனும் இணைந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கை அரசில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் போராட்ட தந்திரோபாயங்களை வகுக்க வேண்டும்.

வரதகுமார்: குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்தவதற்கான வரையறையை நிர்ணயிப்பது இன்றைய சூழலில் மிக முக்கியமானது. ஆனால் அதுவொரு பாரிய வேலை. அதனைச் செய்வதன் மூலமே தமிழ் அரசியல் தளத்தைப் பலப்படத்த முடியும். இன்றைய நிலையில் இலங்கை இனப் பிரச்சினைக்கு குறைந்தபட்ச தீர்வு காணப்பட வேண்டுமானாலும் இன்றுள்ள இலங்கை அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.

._._._._._.

ஓகஸ்ட் 2ல் ‘தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பிலான ஐந்து மணி நேரம் வரை நீடித்த இக்கலந்தரையாடலில் பின்வரும் எட்டு விடயங்களில் குறைந்தபட்ச புரிந்தணர்வு ஏற்பட வேண்டும் என உடன்பாடு காணப்பட்டது.

1. முகாம்களில் உள்ள மக்களது மீள்குடியேற்றம்
2. இராணுவ மயமாக்கலை அகற்றுவது
3. மனித உரிமைகளை மேம்படுத்துவது
4. தமிழ் மக்களின் அரசியலை ஜனநாயகப்படுத்துவது
5. வடக்கு – கிழக்கு முஸ்லீம் மக்கள்
6. குடியேற்றம் – வளங்கலும் குடிபரம்பலும்
7. மனிதவள விருத்தி – அபிவிருத்தி
8. அரசியல் தீர்வு

இவ்விடயங்கள் தொடர்பான வரையறைகளை வகுப்பதற்கு செயற்குழு உருவாக்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு விடயத்தையும் தனித் தனியாக ஆராய்ந்து அறிக்கையைத் தயாரிப்பார்கள். அதில் குறைந்த பட்ச வரையறையையும் நிர்ணயிப்பார்கள்.

செயற்குழுவில் உள்ள அங்கத்தவர்கள் வருமாறு:

என் சண்முகரட்ணம்
வி சிவலிங்கம்
நிஸ்தார் மொகமட்
ரவி சுந்தரலிங்கம்
ஏ கனநாதன்
வரதகுமார்
ஜோசப் ஜெயம்
எஸ் தவராஜா
பேரின்பநாதன்
அரோ தீபன்
எஸ் வசந்தி
மாசில் பாலன்
ப்பாமி மொகமட்
ரி சோதிலிங்கம்
ஜெயக்குமார் மகாதேவா
த ஜெயபாலன் (ஒருங்கிணைப்பாளர்)

கலந்துரையாடலின் முடிவில் செயற்குழு ஒரு  குறுகிய சந்திப்பொன்றை மேற்கொண்டது. அவர்கள் குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டவேண்டிய விடயங்கள் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்கான தலைப்புகளை ஏற்றுக் கொண்டனர்.

ஒற்றுமை ஏன் எதற்காக? : அழகி

Pongu Thamil Kudaiஎமது தமிழ் தொலைக்காட்சிகளைத் திறந்தாலே அங்கே பேசப்படுவது தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை, அதனால்தான் எமது போராட்டம் இவ்வளவு அழிவுகளையும் சந்தித்து தோற்றுக் கொண்டு இருக்கிறது என்பதேயாகும். பல நேரடி நிகழ்சிகளிலும் கூட பல தமிழர்கள் தொலைபேசியூடாக வந்து ஒற்றுமையில்லை – தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கிறார்கள் – ஒட்டுக்குழுக்கள் பணத்திற்காக எதையும் செய்வார்கள் – எமது ஊர்வலங்களிலும் பார்த்த முகங்களையே காணக்கூடியதாக இருந்தது – எமது தலைவர் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளுவார் என இப்படியே மாரடிக்கும், அரசியல் அறிவைப் பெறாமல் இவ்வளவு காலமும் இந்த தொலைக்காட்சிகள் ஊடாக பிதற்றி வந்திருக்கிறார்கள்.

1986 ம் ஆண்டே ரெலோ போராளிகளை ரயர் போட்டு கொளுத்தி எந்த தார்மீகங்களுக்கும் மதிப்பழிக்காது கொன்று குவித்த அன்றே தமிழர் போராட்டம் பகிரங்கமாக இந்த உலகிற்கு காட்டிக் கொடுக்கப்பட்டு விட்டது என்பதை ஒற்றுமை இல்லை எனப் புலம்பும் இந்த பிரகிருதிகளுக்கு ஒரு போதும் உறைக்கவில்லை.

இதைவிட மேலும் நகைப்பிற்குரிய விடயம் இவர்கள் எல்லாம் உலக அரசியல் பேசுவதுதான். அமெரிக்க அரசியல், இங்கிலாந்து அரசியல் இந்திய அரசியல், உலக ராணுவ அரசியல் எல்லாவற்றையும் தண்ணீர்பட்ட பாடாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் பேசிய தமிழ் ஈழ அரசியல் புலி அரசியல் தலைவர் அரசியல் – எங்கட தலைவர் அரசியல் எல்லாம் வேரோடு பிடுங்கப்பட்டு புதை குழி தோண்டிப் புதைக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக கரைத்து இவர்களுடைய சாம்பலையும் கடலிலே வீசி விட்டார்கள். இவர்களுக்கு நடந்தது முன்னமே பல தடவைகள் வரலாற்றில் நிகழ்ந்தவைதான். ஆனால் எல்லா அரசியலும் பேசிய இவர்களுக்கும் அதே வரலாறு ஏன் நிகழ்ந்தது?

ஏன் இவர்களுடைய அரசியல் இப்படி பரிதாபமாகரமான நிலைக்கு சென்றது? எதற்காக? எமது அப்பாவி தமிழினத்தின் உயிர்களோடும் உடமைகளோடும் பெண்களோடும் குழந்தைகளோடும் விளையாடினார்கள்? இவர்கள் விடை சொல்லியே ஆக வேண்டும். எமது மக்களை இந்த இழிநிலைக்கு கூண்டோடு கொண்டு சென்றது ஏன்? தமிழினம் தமது வரலாற்றில் ஒரு நேர உணவுக்கும், குடி நீருக்கும், உடுபுடவைக்கும் ஏங்கும் நிலைக்கு ஏன் கொண்டு வந்து விட்டார்கள்?

தியாகம் என்பது என்ன? மற்றவர்கள் துன்பப்படும் போது அந்த துன்பத்தை போக்கி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து அவர்களுடைய முகங்களிலே மகிழ்ச்சியை உருவாக்கி தானும் மகிழ்ச்சியடைபவனே தியாகி. ஆனால் எமது போராட்டத்திற்குள் வந்தவர்கள் (ஒரு சிலரை தவிர) இப்படி நடந்தார்களா? ஈழ மக்களின் குருதியை குடித்தார்கள். அவர்களின் உழைப்பையெல்லாம் தட்டிப் பறித்தார்கள். ரௌடித்தனத்தாலும், கொலைகளாலும், பாலியல் வன்புணர்வுகளாலும் வாழ்க்கையின் சுக போகங்களை அடைவதற்கெனவே இயக்கங்களுக்கு சேர்ந்தவர்கள் பலர். இவர்களால் மக்களுக்கு விடிவை ஏற்படுத்தி விட முடியுமா?

புலம்பெயர் தமிழர்களை நோக்கினாலோ அவர்கள் பல வகையினர். 1986 ம் ஆண்டு ஈழப் போராட்டம் உச்சத்தில் இருந்த நேரம். போராட்டத்தை மாற்று இயக்கங்கள் மீது புலிகள் படுகொலைகளைப் புரிந்து காட்டிக் கொடுத்தபோது இதில் இருந்து தப்பி வந்தவர்கள். இவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1) உண்மையான போராளிகள்.
2) இயக்கப் பணத்தைக் கொள்ளையடித்து வெளிநாடு வந்தவர்கள்.
3) இவர்கள் எப்போதும் சுயநலம் மிக்கவர்கள்.

இயக்கப் பணத்தைக் கொள்ளையடித்தவர்களும் சுயநலம் மிக்கவர்களும் இங்கு ஒன்று சேர்ந்தார்கள். எந்த அரசியல் நோக்கும் இல்லாமல் தங்களை மேலும் வளர்த்துக் கொள்வதற்காக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டும் கொலைகள் செய்தும் கப்பம் வாங்கியும் எமது போராட்டததை வலுவிழக்கச் செய்து விட்டார்கள். மக்கள் எல்லோரையும் புலிகள் ஈழத்திலே கொன்றொழிக்க உறுதுணையாக இணையம் மூலமும், வானொலி, தொலைக்காட்சி, ஊர்வலங்கள், பொதுக் கூட்டஙகள், கொண்டாட்டங்கள், கோயில்கள், தமிழ் பாடசாலைகள், பொது அமைப்புக்கள், நிதி சேகரிப்பு, வியாபார நிறுவனங்கள் என சமூகத்தின மூலை முடுக்கெல்லாம் நுழைந்து செயற்பட்டுள்ளார்கள். இவற்றையெல்லாம் புலம்பெயர் மக்கள் சிந்திக்க தவறி விட்டார்கள்.

ஆனால் இன்று ஒற்றுமை இல்லை, தோற்று விட்டோம் என நேரலைகளில் வந்து கூப்பாடு போடுகிறார்கள்!

இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில் விடப்பட்ட தவறுகள் என்ன என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். தவறு விட்டவர்கள் தமது தவறுகளை மனந்துணிந்து அதே தொலைக்காட்சிகள் ஊடாக மன்னிப்பு கோர வேண்டும். புலம்பெயர் தமிழர்களை மிகவும் தவறாக வழிநடத்திய தீபம், தினேஸ், அனாஸ், டாக்டர் மூர்த்தி, இராஜமனோகரன், குமார் போன்ற முன்னணியில் நின்றவர்களும் இவர்களுக்கு பின்னணியில் நின்றவர்களும் அரசியலைக் கரைத்துக் குடித்த இவர்களைப் போன்றவர்கள் முரண்டு பிடிக்காமல் அரசியலில் இருந்து பேசாமல் ஒதுங்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் சேர்க்கப்பட்ட பணம் முழுவதும் அந்தந்த நாட்டு முகவர்கள் ஊடாக திருப்பி வழங்கப்பட வேண்டும். இவர்கள் விட்ட தவறுகளுக்கு மனம் வருந்த வேண்டும். புலம்பெயர் நாடுகளில் வீதி வீதியாக கத்திக் குழறி, உண்ணாவிரதம் இருந்து மிரட்டி, பாதைகளை மறித்து ஆட்டம் போட்டும் முள்ளிவாய்க்காலில் தலைவரோடு, ஆயிரக்கணக்கான மக்களையும் சேர்த்து பலியிட்டதற்கு, ஏன் அப்படி நடந்தது என்பதற்கு, இன்னமும் தொலைக்காட்சிகளில் ஒன்றும் தெரியாதவர்கள் மாதிரி ஆய்வுகளும் காரணங்களும் தேடிக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும்.

இதை விடுத்து ஒற்றுமை இல்லை, ஒற்றுமை இல்லை என திரும்ப திரும்ப சொல்லக் கூடாது. தமிழ் மக்களின் ஐக்கியத்தை தாங்களே ஒட்டுக்குழு துரோகிகள் என பிரித்து விட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். ஒற்றுமை என்றால் என்ன? தம் தவறுகளை உணர்ந்து திருந்தி மன்னிப்புக் கேட்டு மனிதர்களாக செயற்பட வேண்டும். நல்ல காரியங்கள் நல்ல மனிதர்களால் முன்னெடுக்கப்பட வேண்டும். பெரும்பான்மையான மக்களால் அவர்களின் விருப்புக்களோடு 100 வீதம் செயற்பட வேண்டும். எமது சமூகம் நற்சிந்தனைகளால் வளர்க்கப்பட வேண்டும். ஒருவன் இன்னொருவனை ஏமாற்றினால் ஒவ்வொருவனும் தலைகுனிய வேண்டும். ஏமாற்றுபவனைத் திருத்த முற்பட வேண்டும். ஏமாற்ற நினைப்பவனுக்கு ஊக்கம் கொடுத்து தங்கள் நலன்களை வளர்த்துக் கொண்டதால் ஒரு இனமே இன்று கண்முன் அழிந்து கொண்டிருக்கிறது.

நாம் ஓரளவிற்கேனும் ஜனநாயகம் இருக்கும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறோம். இந்த நாடுகளில் இருந்து நல்லவற்றைக் கற்றுக் கொண்டே ஆக வேண்டும். பொது விடயங்களில் எப்படி நடக்க வேண்டும், பொதுப் பணத்தை எப்படி கையாள வேண்டும் (கையாட அல்ல) என்பவற்றைக் கற்றுக் கொண்டாலே எமது மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.

விடுதலை என்ற பெயரில் தமிழ் மக்களை கொன்றொழித்த பிரபாகரனுக்கு பின்னால் அணிதிரளுங்கள் என்று சொன்னதும் – சொல்வதும் மிகவும் வேதனையான விடயமே. ஏழை, எளிய மக்களின் பிள்ளைகளுக்கு தற்கொலைக் குண்டுகளைக் கட்டி விட்டு; தமது பிள்ளைகளை அரச பரம்பரை மாதிரி வளர்த்ததற்கு பெயர் போராட்டமா?

இறுதியாக ஒற்றுமை ஒற்றுமை என போலியாக கூக்குரல் இடுபவர்கள் தமது உள்ளங்கiளில் கை வைத்து சொல்லட்டும் – என்னத்திற்கு ஒற்றுமை வேண்டும்? இப்பொழுதாவது தமிழ் மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். சுயமாக சிந்திக்க வேண்டும். எமது சமூகத்தை சுயநலமற்ற தமது வாழ்க்கைக்கு பொதுப் பணத்தை கையாடாத நல்லவர்களை முன்னிறித்தி சரியான சிந்தனைகளோடு எமது போராட்டத்தை முன்னெடுத்து செல்லலாம். இப்பொழுதும் நாம் சிந்திக்கவில்லையென்றால் இப்போதிருந்து எமது ஈழத்தில் எமக்கான நிலம் இல்லாமலே போய்விடும். தயை செய்து புலம் பெயர் தமிழர்கள் விழித்து செயற்படுங்கள்.

ஈஎன்டிஎல்எப் இந்தியப் பிரதமரை சந்தித்து இலங்கை நிலவரம் தொடர்பாக முறையிட்டுள்ளது : வி அருட்செல்வன்

Indiain PM Manmohan Singhஈழம் தேசிய ஜனநாயக முன்னணித் (ஈஎன்டிஎல்எப்) தலைவர் ஞா ஞானசேகரன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை ஓகஸ்ட் 7ல் சந்தித்தார். இந்தச் சந்திப்பினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்இ காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற செயலருமான இரா. அன்பரசு ஏற்பாடு செய்திருந்தார். அன்பரசு இச்சந்திப்பிலும் கலந்துகொண்டார்.

‘இலங்கை அரசு தமிழர்களின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள வரை குடியமர்த்தும் பணியினை மிக வேகமாக செய்து வருகிறது. தமிழர்களது பாரம்பரிய பிரதேசங்களில் பௌத்த விகாரைகளை பகிரங்கமாகவே அமைத்து வருகிறது. திருகோணமலை நகர் பகுதியில் தமிழர்களின் கோவிலான கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் மிகப்பெரிய பௌத்த விகாரையை கட்டி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தவோஇ சுட்டிக்காட்டவோ யாராலும் முடியவில்லை. எனவேதான் இந்தியா நேரடியாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிட்டு உரிமைகளை மீட்டுத்தர வேண்டும்” என்று ஈஎன்டிஎல்எப் தலைவர் ஞா ஞானசேகரன் இந்தியப் பிரதமரிடம் கோரி உள்ளார்.

இச் சந்திப்பின் போது பின்வரும் கோரிக்கைகளை ஈஎன்டிஎல்எப் முன்வைத்தது.

(01) ‘இந்திய – இலங்கை’ ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

(02) இலங்கை அரசு ‘இந்திய-இலங்கை’ ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்த மாட்டார்கள் என்பதை அனுபவரீதியாக நாங்கள் கண்டுள்ளோம். எனவே இந்தியா அமைதிப் படையை அனுப்புவதன் மூலமாகத்தான் ஒப்பந்தத்தினை நிறைவேற்ற முடியும். இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளாதப்பட்சத்தில் இந்தியா ஐ.நா.வின் அமைதிப்படையை அனுப்பும்படி ஐ.நா.வை வற்புறுத்த வேண்டும்.

(03) இலங்கை அரசு தமிழர்களின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்களவரை குடியமர்த்தும் பணியினை மிக வேகமாக செய்து வருகிறது. தமிழர்களது பாரம்பரிய பிரதேசங்களில் பௌத்த விகாரைகளை பகிரங்கமாகவே அமைத்து வருகிறது. திருகோணமலை நகர் பகுதியில் தமிழர்களின் கோவிலான கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் மிகப்பெரிய பௌத்த விகாரையை கட்டி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தவோஇ சுட்டிக்காட்டவோ யாராலும் முடியவில்லை. எனவேதான் இந்தியா நேரடியாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிட்டு உரிமைகளை மீட்டுத்தர வேண்டும் என்று கோருகிறோம்.

(04) வடக்கு மாகாணத்தில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற மூன்றரை லட்சம் தமிழர்களை நிபந்தனை எதுவும் இல்லாமல் விடுவிக்க வேண்டும். அவர்கள் விரும்பும் தங்களது பகுதியில் குடியமர இந்தியா அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

(05) தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக போதிய கல்வி அறிவு இல்லாமலும்;இ தொழிற்பயிற்சி பெறாமலும் முகாம்களில் முடக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கல்வியும்இ தொழில்; வாய்ப்புப் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும்.

(06) புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக இந்தியாவில் ஒரு மகாநாடு நடத்துவதற்கு இந்திய அரசும்இ தமிழக அரசும் அனுமதி வழங்கவேண்டும்.

இதற்க்கு பதிலித்த இந்தியா பிரதமர் ‘வடக்குக் கிழக்கில் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் சிங்களக் குடியேற்றங்களை நாங்கள் (இந்தியா) அவதானித்து வருகிறோம். அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என உறுதி அளித்தாக ஈஎன்டிஎல் தெரிவித்துள்ளது.
ஓகஸட் 7; நடைபெற்ற சந்திப்பின் போது இந்தியப் பிரதமர்இ ஈ.என்.டி.எல்.எப் க்கு கீழ்கண்டவாறு உறுதிமொழியழித்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்து உள்ளது.

* இந்திய-இலங்கை ஒப்பந்தம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

* வடக்குக் கிழக்கில் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் சிங்களக் குடியேற்றங்களை நாங்கள் (இந்தியா) அவதானித்து வருகிறோம். அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* அகதிகளாக்கப்பட்ட தமிழர்களை மீளக் குடியமர்த்துவதற்காக நாங்கள் 500 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். மேலும் அதற்கான உதவித் தொகைகளை கொடுப்போம். மீளக்குடியேற்றங்களையும் நேரடியாக அவதானித்து வருகிறோம்.

* தமிழகத்தில் உள்ள அகதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கான கல்வியும்இ தொழிற்பயிற்சியும் அளிக்கப்படும்.

* நிச்சயமாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரமான ஒரு நல்லத் தீர்வினை இந்தியா ஏற்படுத்திக் கொடுக்கும்.

* புலம்பெயர்ந்த தமிழர்களை ஒன்றிணைப்பதற்கான மாநாட்டிற்கு இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் திரு. எம்.கே. நாராயணன் அவர்களிடம் கலந்து பேசி அதற்கான ஆவணம் செய்யப்படும்
என்ற உறுதிமொழிகளை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்  ஈஎன்டிஎல்எப் தலைவர் ஞா ஞானசேகரக்கு வழங்கி உள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவிக்கின்றது.

கே.பி கைது! இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம்!!!

pathmanathan.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் சற்று முன் செய்தி வெளியிட்டுள்ளது. இவர் பாங்கொக்இல் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (ஓகஸ்ட் 5) காலை லண்டனில் இருந்து சென்றிருந்த ஒருவரையே கே பி இறுதியாகச் சந்தித்ததாகவும் அதன் பின்னர் அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் கே பிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்றுக்கு தெரிவிக்கின்றன.

நேற்று மதியமளவில் மலேசியாவில் வைத்து கே பி உத்தியோகப்பற்றற்ற முறையில் கைது செய்யப்பட்டதாக மற்றுமொரு செய்தி தெரிவிக்கின்றது. இக்கைது இலங்கைப் புலனாய்வுத்துறையின் அறிவுறுத்தலிலேயே இடம்பெற்றதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது. ஆனால் இலங்கைக்கும் மலேசியாவிற்கும் கைதிகளைப் பரிமாறும் உடன்படிக்கை இல்லாததால் அவர் தாய்லாந்திற்கு நாடுகடத்தப்பட்டு பாங்கொக் விமான நிலையத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கைது செய்யப்பட்டதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது. ஆனால் இச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.

சட்டத்தரணி உருத்திரகுமார் தலைமைiயில் நாடு கடந்த தமிழீழ அரசை கே பி உருவாக்குவதற்கான செயற்குழுவை உருவாக்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராகவும் தன்னை நியமித்துக் கொண்டார். இவருக்கு எதிரான அணி ஒன்றும் தீவிரமாக இயங்கி வந்தமை தெரிந்ததே.

வே பிரபாகரன் மற்றும் கே பி விட்டுச் செல்லும் தலைமை வெற்றிடத்தை நிரப்புவதற்குத் தகுதியான முகங்கள் எதுவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் இருப்பதாக தெரியவில்லை.

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்

Douglas DevanandaKaruna_ColPillayan_CM 02Uthayarajah_Sri_TELOSitharthan PLOTE1

புலிகளின் அழிவுக்கு முன்பு எமது விடுதலைப் போராட்டத்தில் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்திய விடயங்களில் கருணாவின் வெளியேற்றமும் அது தொடர்பாக நடைபெற்ற வாதப்பிரதிவாதங்கள் மற்றும் சம்பவங்களும் முக்கிய இடத்தை பெற்றுள்ளன. அதனால் புலியெதிர்ப்பின் அரசியல் என்ற விடயத்தை நாம் கருணாவின் வெளியேற்றம் என்ற விடயத்திலிருந்து தொடங்குவது பொருத்தமனாததாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கருணாவின் வெளியேற்றத்துடன், தமிழ் மக்களது தேசியத்தில் மிகவும் ஆழமாக ஊடுருவியிருந்த பிரச்சனை ஒன்று முன்னுக்கு வந்தது. யாழ்மையவாதமே அந்த பிரச்சனையாகும். ஆனால் இந்த பிரச்சனையை, அதற்கே உரிய அரசியல் தளத்தில் வைக்க முடியாத கருணாவின் அரசியல் வறுமை காரணமாக, இந்த பிரச்சனையானது அரசியல்ரீதியாக விவாதிக்கப்பட, தீர்வு காணப்பட முயலப்படவில்லை. கருணாவின் சொல்லாடல்கள் பொதுவாகவே யாழ் ஆதிக்கம் பற்றி பேசினாலும், ‘வன்னிப் புலிகள்’ பற்றிய இவர்களது பிற விமர்சனங்கள், இலக்கை சரியாக குறிபார்த்து வீசப்படாத கணைகளாக செயலிழந்து நின்றன. இந்த விதமான சொல்லாடல்கள், ‘யாழ்மையவாதம்’ என்ற விடயத்தை கருத்தாக்கம் என்ற அளவிலும், அதன் நடைமுறை வடிவங்கள் சார்ந்தும் விரிவாக எடுத்துக் கொண்டு விவாதிக்க, இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அணிதிரளக் கூடிய அனைத்து சக்திகளையும் இணைத்துக் கொள்ள, பெரிய தடையாக இருந்தது. இந்த பிரச்சனையானது வெறுமனே கிழக்கு சம்பந்தப்பட்ட பிரச்சனையாக, அதிலும் மட்டக்களப்பு சார்ந்த பிரச்சனையாக குறுக்கப்பட்டிருந்தது. இதனால், யாழ்மையவாதம் தொடர்பாக தீவிர விமர்சனங்களைக் கொண்டிருந்த திருகோணமலை, வன்னி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களைக் கூட நெருக்கமாக கொண்டுவர இவர்களால் முடியவில்லை.

கருணா எழுப்பிய யாழ் ஆதிக்கம் பற்றிய பிரச்சனையை முகம் கொடுப்பதில் ஆரம்பத்தில் புலிகளுக்கு சிரமம் இருக்கவே செய்தது. இதனால் இவர்கள் பல்வேறு நபர்களையும் தமது தற்காப்பிற்காக அணிதிரட்டினார்கள். மட்டக்களப்பை தமது அசலான பூர்வீகமாக கொண்டிராதவர்களாக கருதப்பட்ட சிலர், “யாழ் ஆதிக்கம் என்று ஒன்று கிடையவே கிடையாது” என்ற தொனியில் அறிக்கை விட்டார்கள். காசி ஆனந்தன், சிவராம் போன்றவர்கள் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர். இதிலும் சிவராமின் பாத்திரமானது, மிகவும் அயோக்கியத்தனமாகதாக இருந்தது. இந்த உடைவுக்கு காரணமானவர்களுள் ஒருவராக கருதப்பட்ட இவர், பின்பு பிரச்சனை முற்றிய போது புலிகளின் தரப்பிற்கு குத்துக் கரணம் அடித்ததாக விடயம் அறிந்து பலரும் குறிப்பிடுவர். (இவர் புலிகளின் ‘மாமனிதர்’ ஆன விடயமானது, புலிகள், சிவராம் ஆகியோரது நேர்மை பற்றி மட்டுமல்ல, புலிகளால் வழங்கப்பட்ட பட்டங்களின் தன்மைகளையும் அம்பலப்படுத்த போதுமானவை)

தமிழ் தேசியவாதத்தின் பிரதான போக்கானது (Main Streem) ஏற்கனவே யாழ்மையவாதத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்டே இருந்ததால், கருணாவின் குற்றச் சாட்டுகளை முறியடிப்பது புலிகளுக்கு சாத்தியமற்றதாக இருக்கவில்லை. மாறாக, கருணா தனது சொந்த நலன்களுக்காக பிரதேசவாதத்தை தூக்கிப் பிடித்ததாகவே தமிழ் தேசியவாதத்தின் பிரதான போக்கு முடிவு செய்தது. மிச்சத்தை புலிகள் இராணுவரீதியாக முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.

தமிழ் தேசியத்தின் பிரதான போக்கு இப்படியாக அமைந்தாலும் கூட, வேறு சிலரது நடவடிக்கைகளோ இதற்கு மிகவும் வித்தியாசமானதாக அமைந்திருந்தன. இவர்கள் நீண்ட காலமாகவே புலிகளை கடுமையாக விமர்சித்து வந்தவர்களாவர். இவர்களது விமர்சனங்கள் புலிகளது ஜனநாய மீறல்கள் தொடர்பானவையாகவே அமைந்திருந்தன. கருணா வெளியேறிய போது, இவர்கள் கருணா பற்றி எவ்வித விமர்சனங்களும் இன்றி, கருணாவை ஆதரிக்கத் தலைப்பட்டார்கள். கருணாவின் ‘ஜனநாயக பாரம்பரியம்’ (Democratic Credentials) பற்றி அறிந்திருந்த பலருக்கு, இவர்களது நடவடிக்கைகள் புதிரானதாக தோன்றின. எந்த விதமான தர்க்கரீதியான நியாயங்களையும் இவர்களது நடவடிக்கைகளில் காண முடியவில்லை. சம்பந்தப்பட்ட நபர்களது பூர்வீகம் பற்றி கவனித்த சிலர், இவர்கள் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களாக இருப்பதை கவனித்து, கிழக்கு மாகாண பிரதேசவாதமே இவர்களது முடிவுகளில் வெளிப்பட்டதாக கருதினார்கள். ஆனால், இந்த பிரதேசவாத வியாக்கீனங்களை விலக்கிவிட்டு சற்று நுணுக்கமாக அணுகிப்பார்த்தால் நாம் இன்னோர் காரணத்தை கண்டறியலாம். யாழ்மையவாத எதிர்ப்பு என்பதுதான் அதுவாகும்.

தமிழ் தேசிய இயக்கமானது, அதன் ஆரம்பம் தொட்டே யாழ்மையவாதத்தை அதன் ஆதிக்க சித்தாந்த கூறுகளில் ஒன்றாக தன்னுள் கொண்டிருந்தது. இதன் காரணமாக, கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் பெரியளவில் தமிழ் தேசிய இயக்கத்தில் இணைந்து கொண்டாலும், எப்போதுமே அசௌகரியமான ஒரு உணர்வுடனேயே இருந்தார்கள். அவ்வப்போது தமிழரசு கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற நடவடிக்கைகளில் இது வெளிப்படையாகவே தெரிய வரும்போது, அதற்கெதிரான போராட்டங்கள் அந்தந்த இடங்களில் சிறிய அளவில், உள்ளூர் மட்டத்தில் நடைபெற்றாலும், இந்த பிரச்சனை அதன் அரசியல் தளத்தில் வைத்து பேசப்படும் நிலைமை உருவாகிவிடவில்லை. தேசிய இயக்கத்தில் இருந்த நல்லெண்ணம் கொண்ட சிலர் இந்த யாழ்மையவாதத்திற்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்தாலும் -உதாரணமாக: திருகோணமலையை தலை நகரமாக அறிவிப்பது, தமிழ் பல்கலைக்கழகத்தை திருகோணமலையில் உருவாக்கும்படி முன்மொழிவது, முக்கியமான மாநாடுகளை திருகோணமலையில் நடத்துவது, அமைப்பினுள் தலைமைப் பொறுப்புக்களை நோக்கி கிழக்கு மற்றும் வன்னி பிரதேச அங்கத்தவர்களை கொண்டுவர முனைவது… போன்றவை. -இந்த நடவடிக்கைகள் ஒரு போதும் அரசியல் ரீதியானதாகவும், பிரக்ஞை பூர்வமானதாகவும் அமைந்திருக்கவில்லை.

இதற்கு மாறாக இன்னோர் பிரிவினர், இந்த யாழ்மையவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாக “யாழ் அகற்றிச் சங்கம்” எனும் பெயரில் முன்னெடுக்கத் தலைப்பட்டனர். இவர்களது நோக்கங்கள் சந்தேகத்திற்கு உரியனவாக ஆரம்பம் முதலாகவே அமைந்திருந்தது. இவர்களில் பலர் ஏதோ ஒரு வகையில் அசலான கிழக்கு அல்லது வன்னியர்களாக இருக்கவில்லை. பெரும்பாலும் யாழ்ப்பாணத்திலிருந்த அண்மையில் குடிபெயர்ந்தவர்களின் வழிவந்த இரண்டாம் தலைமுறையினராக இவர்கள் இருந்தார்கள். இவர்கள் உடனடியாக யாழ்ப்பாணத்தில் இருந்து வருபவர்களால் தமது வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக உணர்ந்ததன் விளைவாகவே இது அமைந்திருந்தது. (இந்த இடத்தில் பெனடிக்ட் அன்டர்சனின் ‘Imagined Community’ எனும் நூலிலுள்ள ‘Pilgrimage’ எனும் அத்தியாயத்தில் வரும் சம்பவங்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.) அத்துடன் இந்த யாழ் அகற்றிச் சங்கத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்களாகவும், தமிழ் தேசியத்தை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பவர்களாகவும் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர் தேசிய இயக்கங்கள் பலம் பெருகையில் இந்த விதமான நடவடிக்கைகள் பகிரங்கமாக முன்னெடுக்கப்படுவது நின்று போனாலும், இந்த புறக்கணிக்கப்படுதல் பற்றிய உணர்வானது நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்தது. த.வி.கூ. கட்சியின் செயற்பாடுகளிலும் இந்த பிரச்சனை வெளிப்பட்டது: எதிர் கொள்ளப்பட்டது. கிழக்கைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையுடன் முரண்பட இந்த பிரச்சனைகள் காரணமாக அமைந்தன. இதன் விபரங்களை இன்னோர் சந்தர்ப்பத்திற்காக ஒத்தி வைப்போம்.

இப்போது கருணாவுடன் இணைந்து கொண்டவர்களது விடயத்திற்கு மீண்டும் வருவோம். இவர்கள், நீண்ட காலமாகவே தமிழ் தேசியத்தில் ஓங்கியிருந்த யாழ்மையவாதம் காரணமாக அசௌகரியமாக உணர்வுடனேயே தமிழ் தேசிய இயக்கத்துடன் சேர்ந்து பணியாற்றியவர்கள் ஆவர். இவர்கள் ஏதாவது ஒரு காரணத்தால் புலிகளுடன் முரண்பட்ட போது, புலிகளை விமர்சிப்பதற்கு, புலிகளது ஜனநாயக விரோத நடவடிக்கைகள் என்பதை தமது தாக்குதலுக்கு வாய்ப்பான இலக்காக தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்களே ஒழிய, உண்மையான ஜனாநாயக அக்கறைகளினால் அல்ல. இதனால் கருணாவின் பிரிவின் போது வெளிப்பட்ட வாதப்பிரதிவாதங்களில் இவர்கள் தமது ஆதங்கங்களும் வெளிப்படுவதை Instinct level இல் கண்டார்கள். அதனால் கருணாவின் ஜனநாயக தகுதி (Democratic Credentials) பற்றியெல்லாம் இவர்களுக்கு கேள்விக்கே இடமில்லாமல் போயிற்று. கண்மூடித்தனமாக இவர்கள் கருணவை ஆதரித்து செயற்படத் தொடங்கினார்கள். அந்த வகையில் இதுவோர் Instant Hit ஆகும்.

இதே காரணங்களினாலேயே, கருணாவை இராணுவரீதியாக தோற்கடித்த பின்பும் கூட புலிகளால் கிழக்கில் ஒரு பலமான படைப்பிரிவை வைத்திருப்பது சாத்தியமில்லாமல் போயிற்று. இப்படியாகத்தான் கருணாவின் பிளவுடன் முன்னுக்கு வந்த பல்வேறு அரசியல் பிரச்சனைகளும் அவற்றிற்கே உரிய அரசியல் தளங்களை எட்டாமல் வெறுமனே புலியெதிர்ப்புவாதமாக குறுகிப் போனது.

இப்போது இந்த புலியெதிர்ப்புவாதம் என்றால் என்னவென்று பார்ப்போம். புலிகளது அரசியல் தொடர்பான முரண்பாடுகளை அதன் அரசியல் தளத்தில் வைத்து அணுகி, அவற்றிற்கு அரசியல்ரீதியாக பதிலளிப்பதற்கு மாறாக, இந்த பிரச்சனையை வெறுமனே புலிகள் என்ற அமைப்பு சார்ந்த பிரச்சனையாக குறுக்குவது: புலிகளது தலைமையான பிரபாகரனது தனிப்பட்ட குணநலன் சார்ந்த விடயமாக பார்ப்பது: இந்த வெளிச்சத்தில் புலிகளது செயற்பாடுகள் அனைத்தையும் எதிர்ப்பது, விமர்சிப்பது: புலிகளுக்கு எதிராக செயற்படுவதாக கூறிக் கொள்பவர்கள் செய்யும் எல்லா செயற்பாடுகளையும் ஆதரிப்பது, விமர்சனமின்றி ஏற்றுக் கொள்வது: என நாம் புலியெதிர்ப்புவாதத்தை இப்போதைக்கு தற்காலிகமான ஒரு வரையறையை வைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். இதுவொன்றும் முற்று நிறைவான வரையறையாக அமைய வேண்டும் என்பதில்லை. இந்த கட்டுரையில் பேசப்படும் விடயங்களின் பரப்பெல்லைக்குள், எமது நோக்கத்தை சரிவர நிறைவேற்ற போதுமான கருவியாக இருப்பின் அது இப்போதைக்கு போதுமானதே.

புலிகளது ஏக பிரதிநிதித்துவ கொள்கை, சகோதரப் படுகொலைகள் ஒன்றும் திடீரென தோன்றிவிடவில்லை. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான சுந்தரம் என்பவரை யாழ்ப்பாணத்தில், சித்திரா அச்சகத்தில் வைத்து சுட்டுக் கொன்றதுடனேயே தொடங்கிவிட்டது. இது அடுத்த மட்டத்தில் ஏனைய சகோதர இயக்கங்களைச் சார்ந்த போராளிகளை அவ்வப்போது படுகொலை செய்வது என்று தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்புதான் சக இயக்கங்களை முற்றாக தடைசெய்வது என்ற நிலையை அடைந்தது.

போராளிகள் இதனை ஆரம்பத்திலேயே சரிவர இனம் கண்டிருந்து, இந்த வகையான நடவடிக்கைகளுக்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்ட விதத்திலும், தூர பார்வையுடனும் செயற்பட்டிருந்தால் இதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய முயன்றிருக்கலாம். ஆனால் ஆரம்பம் முதலே ஒருவித சந்தர்ப்பவாத போக்கு சகல இயக்கங்களிலும் காணப்பட்டு வந்துள்ளது. எப்படிப்பட்ட குறுக்கு வழிகளிலாவது தாம் முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்பதில் இருந்த முனைப்பானது, ஒரு கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டை எடுத்து, அதற்காக விடாப்பிடியாக போராடுவது என்ற நிலைமையை உருவாக்க தடையாக இருந்தது. இதனால் குழுக்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்பட வழியிருக்கவில்லை. சக அமைப்புகளை சேர்ந்து பயணிப்பவர்கள் என்று பார்ப்பதற்குப் பதிலாக, போட்டிக் குழுக்களாக பாக்கும் நிலைமை தோன்றியது.

இதனைவிட, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்கங்கள் அனைத்துமே, ஒரு பிரக்ஞைபூர்வமான அரசியலை முன்வைக்காமல், தன்னியல்பாகவே செயற்பட்டதால், குழுக்களை இணைப்பதற்கு பொதுவான அரசியல் என்ற ஒன்று இருக்கவில்லை. இதனால் நபர்கள் முன்னுக்கு வந்தார்கள். கூடவே நபர்களுக்கு இடையிலான முரண்பாடுகளே, அரசியல் முரண்பாடுகளுக்கு மாறாக, முதன்மை பெற்றது. அரசியல் முரண்பாடுகள் என்பவை பரஸ்பரம் கலந்துரையாடல்கள், சமரசங்கள், விட்டுக் கொடுப்புகள் மூலமாக தீர்வு காணப்படக் கூடியவையாகும். ஆனால், இந்த நபர்கள் சார்ந்த முரண்பாடுகள் உண்மையில் இப்படியாக, இலகுவாக தீர்வு காணப்பட முடியாதவை. இப்படிப்பட்ட முரண்பாடுகள் அடிக்கடி சர்ச்சைகளை தோற்றுவித்தது. ஆயுதம் தாங்கிய நிலையில் இந்த சர்ச்சைகள் ஆயுத பிரயோகத்தில் போய் முடிந்தது. இரண்டு இயக்கங்களுக்கிடையில் மோதல்கள் நடக்கும் போது அடுத்த அமைப்பானது, இந்த மோதலில் குளிர்காய முனைந்ததும் சாதாரணமாகவே நடைபெற்றது.

இவற்றைவிட முக்கியமான விடயம் என்னவென்றால், ரெலோ இயக்கம் பகிரங்கமாக தடை செய்யப்பட்ட போது ஏனைய அனைத்து இயக்கங்களும் தமது ஆதரவாளர்களுடன் வீதியில் இறங்கியிருந்தால் அந்த நடவடிக்கைகளை அந்த இடத்திலேயே, அப்போதே நிறுத்தியிருக்கலாம். ஆனால் அப்படியாக செயற்படக்கூடிய வல்லமை, தலைமைத்துவம், ….. போன்றவை மற்றைய இயக்க தலைமைகளிடத்தில் இருக்கவில்லை. அப்போதைக்கு எப்படி பிரச்சனையில் சிக்குப்படாமல் தப்பிப்பது என்பதிலேயே ஒவ்வொரு இயக்கமும் குறியாக இருந்தன. இந்த தடைகளானது குறிப்பிட்ட ஒரு அரசியால் போக்கை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன என்ற புரிதல் இருந்திருந்தால், அடுத்த இலக்கு நாமும்தான் என்ற ஆதங்கத்தில், இந்த போக்கை தடுத்து நிறுத்துவது பற்றி அதிகம் அக்கறை எடுத்து இருக்க முடியும். எமது சிந்தனைகளோ உடனடியான சிறு வெற்றி என்பதைக் கடந்து சிந்திக்கும் அளவில் இல்லாத போது, இப்படிப்பட்ட சிந்தனையும், அதற்கான தயாரிப்பு நடவடிக்கைகளும் இவர்களது சிந்தனை வீச்சத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டனவாகவே அமைந்து விட்டன.

ஒவ்வொரு இயக்கத்தடையும் எழுந்தமானமாகவும், தற்செயலாகவும் நடைபெறவில்லை. குறிப்பிட்ட ஒரு இயக்கம் அதன் அக முரண்பாடுகள் வெளிப்படையாக வெடித்து, இயக்கமும் பலவீனமாக, மக்கள் மத்தியல் அவர்களைப் பற்றிய அபிப்பிராயமும் மோசமான ஒரு கட்டத்தை எட்டிய பின்புதான் இந்த தடை செய்யும் நடவடிக்கையும் நிறைவேறியது. ‘புறக்காரணிகள் கூட அகக்காரணிகளினூகவே செயற்படும்’ என்ற வாசகம் இங்கு நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாததாகிறது.

புலிகள் இயக்கத்தால் தடை செய்யப்படும் இன்னொரு இயக்கத்திற்கு, அதன் தலைமைக்கு இருக்க கூடிய சாத்தியக் கூறுகள் எவையெவை என்று பார்க்க முனைவோம்.

• முதலாவது, அந்த தடைவிதிப்பை மீறி தாம் சரியென இதுவரைகாலமும் எற்றுக்கொண்டிருந்த அரசியல் இலக்குகைள அடைவதற்காக தலைமறைவாக இயங்குவது, தேவைப்பட்டால் புலிகளின் தடைக்கு எதிராக சகல வடிவங்களிலும் போராடுவது.

• தமது இயக்க நடவடிக்கைகள் அனைத்தையும் கைவிட்டுவிடடு புலிகள் அமைப்பினருடன் இணைந்து புதிய அடையாளத்துடன் போராட்டத்திற்கான தமது பங்களிப்பை தொடர்ந்து வழங்குவது.

• அமைப்பைக் கலைத்துவிட்டு போவது. சாதாரண சிவிலியன் வாழ்க்கைக்கு திரும்புவது. தளத்தில் இருப்பது அவர்களது கடந்தகால அரசியல் காரணமாக குறிப்பிட்ட ஒருவருக்கு ஆபத்துகள் நேரலாம் எனக் கருதும் போது தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறுவது.

• புலிகளின் எதிரிகள் எனக் கருதப்பட்ட ஏனைய அமைப்புக்கள், அரசுகளுடன் இணைந்து செயற்படுவது.

இப்படியான பல்வேறுபட்ட Optionsகளும் எல்லோருக்கும் திறந்தே இருந்தனர். வெவ்வேறு நபர்களும், குழுக்களும் இந்த பல்வேறு Optionsகளிலும் தமக்கு சரியெனப்பட்டதை தேர்ந்து எடுக்கவே செய்தார்கள். அதன் அரசியல் மற்றும் தனிப்பட்ட சாதக மற்றும் பாதக அம்சங்களை அந்தந்த Optionsஐ மேற்கொண்டவர்கள் பெற்றுக் கொண்டார்கள்: தேவைப்பட்ட விலையை செலுத்தினார்கள்.

தமது இலட்சியங்களுக்கு துரோகம் செய்து விடக்கூடாது என்பதற்காக சிவிலியன் வாழ்க்கைக்கு திரும்பிய பலர் மிகவும் கஷ்டப்பட்டார்கள். தமது வாழ்க்கையின் முக்கிய ஒரு காலகட்டத்தில், பிற்கால வாழ்க்கைக்கு அவசியமான கல்வி மற்றும் தொழில் பயிற்சிகளை பெறும் வாய்ப்புகளை உதாசீனம் செய்து விட்டு அமைப்புக்களில் செயற்பட்டவர்களுக்கு முறையான ‘புனர்வாழ்வு’ கொடுத்து, சமூகத்துடன் இணைத்துக் கொள்ள முறையாக செயற்திட்டங்கள் எதுவும், எவரிடத்திலும் இருக்கவில்லை. இதனால் தமது அன்றாட வாழ்க்கையை நடத்தவே மிகவும் கஷ்டப்பட்டவர்கள் ஏராளம்.

அதிலும் அகதியாக மேற்கு நாடொன்றிற்கு வந்துசேர முடியாத பலர் அன்றாட உணவிற்கே மிகவும் கஷ்டப்பட்டார்கள். போதாக்குறைக்கு இவர்கள் குறிப்பிட்ட வயதை அடைந்து விட்டதால் திருமணமாகி குடும்பம், மனைவி, பிள்ளைகள் என்ற சுமைகள் வேறு. இந்த பலவீனமான நிலைமையை பயன்படுத்தி அவர்களை தம்மோடு இணைத்துக் கொள்ள ஆலாய்ப் பரந்தனர் சிலர். ஒதுங்கியிருந்தவர்களை சந்தேகக் கண்கொண்டு தொல்லைப்படுத்தியும், கொலைசெய்தும் புலிகள் தமது “களையெடுப்புகளை” மேற்கொண்டார்கள். இப்படியாக சிவிலியன் வாழ்விலும் கலந்து போகமுடியாமலும், தாம் நேசித்த அரசியல் வாழ்க்கையை தொடரமுடியாமலும் தமக்குள் தினம்தினம் போராடி, நொந்துபோய் உடல் – உள நோய்களுக்குள்ளாகி இளம் வயதிலேயே இறந்து போனவர்கள் பலர். மதுவிற்கும் போதைப் பொருட்களுக்கும் அடிமையாகிப் போனவர்கள் பலர். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள், கொல்லப்பட்டவர்கள், அதிலிருந்து மீள முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்கள் பலர். இதனை விட தற்கொலை செய்து கொண்டவர்கள் இன்னும் பலர். இத்தனை விலையையும் இவர்கள் கொடுத்தது தாம் அரசியல் ரீதியாக விலைபோய் விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே.

புலிகளுடன் இணைந்து கொண்ட சிலருக்கே அந்த இயக்கத்துடன் அப்படியே சங்கமமாவது சாத்தியப்பட்டது. பலரது வாழ்க்கை இன்னமும் கடினமாகவே இருந்தது. வேற்று இயக்கத்திலிருந்து வந்தவர்கள் என்றரீதியில் இன்னமும் சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கப்பட்டார்கள்.

புலிகளின் தடைகளை மீறி தலைமறைவாக செயற்பட அரிதாக சிலரே முன்வந்தார்கள். இவர்கள் எதிர்நோக்கிய சவால்கள் மிகவும் அதிகமானவை. தலைமறைவு வாழ்வின் உயிராபத்துகள் மற்றும் ஒழித்திருந்து தப்பிப் பிழைப்பது உட்பட அத்தனை நெருக்கடிகளுடனும் கூடவே, இந்த புதிய, ஆபத்தான வாழ்க்கை முறையில் தீர்க்கமான அரசியலை முன்னெடுப்பது, அதற்கு பொருத்தமான தாபன வடிவங்கள், போன்ற பிரச்சனைகளை இவர்கள் எதிர் கொண்டார்கள். தமது அரசியல் நடவடிக்கைகளை தொடர்வதற்குதம், தப்பிப் பிழைப்பதற்கும், தமது அங்கத்தவர்களை பராமரிப்பதற்கும், தமது அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கும் அவசியமான நிதி மற்றும் ஏனைய மூலாதார வளங்களை பெறுவது, பேணிக் கொள்வது பற்றிய பரிச்சனைகளும் சுமையாக இவர்களை அழுத்தின. இது போன்ற பற்பல கேள்விகளுக்கு விடை காண்பதிலேயே இவர்களது நேரங்களின் பெரும்பகுதியும், வளங்களின் பெருமளவும் செலவானது. தலைமறைவு வேலை முறைகள் பற்றிய கோட்பாட்டு ரீதியான தெளிவின்மை, போதியளவு முன் அனுபவமின்மை மற்றும் இது போன்ற விடயங்களில் தகுந்த ஆலோசனை பெற வழியின்மை காரணமாக, எல்லா விடயங்களையும் தமது சொந்த அனுபவங்கள் மூலமாக பல்வேறு தவறுகளுக்கூடாக தாமே கற்றாக வேண்டியிருந்தது. குறுகிவந்த வளங்கள் தலைமறைவு வாழ்க்கையை மிகவும் நெருக்கடி மிக்கதாக மாற்றி பலர் புலிகளிடமும், சிறீலங்கா மற்றும் இந்திய அரசிடம் கைதாகவும் நேர்ந்தது. அமைப்பினுள் நிலவிய குழப்பங்கள் காரணமாக பலர் ஒதுங்கி வெளியேறினார்கள். அரசியல் முரண்பாடுகள், நோய்கள், மரணங்கள், மது போதைப் பொருட்களுக்கு அடிமையாதல் தற்கொலை போன்றவை இவர்களையும் துரத்தியது. நீண்ட, கடினமான இந்த வாழ்க்கை முறை சிலரை கடுமையாக களைப்படையச் செய்து (Burned – Out) தமது பணிகளை தொடர்ந்தும் செய்ய முடியாத அளவிற்கு முடக்கியது.

இத்தனைக்குள்ளும், ஒருவர் தனது உயிரையும், ஆன்மாவையும் தக்க வைத்துக் கொள்வதே ஒரு பெரிய போராட்டமாகத்தான் அமைந்தது. இப்படிப்பட்ட நெருக்கடிகள் காரணமாக பல குழுக்கள் சில வருடங்களுக்கு மேலாக நீடித்து நிலைக்க முடியவில்லை. ஒரு குழு ஒரளவு தப்பிப் பிழைத்து, தனது கோட்பாட்டு, அரசியல் மற்றும் அமைப்புப் பணிகளை ஓரளவு முடித்துக் கொண்டு, தன்னை பகிரங்க அமைப்பாக பிரகடனப்படுத்தி வெளிப்படையாக செயற்பட முன்வந்தது. ஆனால், அவர்களது அதிஷ்டம் தொடரவில்லை. வெளிப்படையாக இயங்க ஆரம்பித்த இரண்டு வருடங்களுக்குள் அமைப்பானது முற்றாக சிதறிப்போனது. வெளியார்களால் பல வருடங்களாக தோற்கடிக்கப்பட முடியாத ஒரு அமைப்பானது, உள் நுழைந்தவர்களால் சிதற அடிக்கப்பட்டது. இதற்கான காரணங்கள் மற்றும் விமர்சனம், சுய விமர்சனங்களை இன்னோர் சமயத்தில் பார்த்துக் கொள்வோம்.

இப்போது இந்த கட்டுரைக்கு அவசியமாக தேவைப்படும் ஒரு பிரிவினரைப் பற்றி விரிவாக பார்ப்போம். இவர்கள் தாம், புலியின் எதிரிகள் என்று தம்மால் கருதப்பட்ட சக்திகளுடன் இணைந்து ‘புலி வேட்டைக்கு’ புறப்பட்டவர்களாவர். இவர்கள் இந்திய மற்றும் சிறீலங்கா அரசுகளிடம் சரணடைந்தார்கள். இந்த அரசுகளின் உளவுப் பிரிவுகள் இவர்களுக்கு பயிற்சி, ஆயுதம், தளவசதிகள், மற்றும் பணம் ஆகியவற்றை தாராளமாகவே வழங்கி, அவர்களை புலிகளுக்கு எதிராக செயல்படுவதற்கு ஊக்குவித்தார்கள், வழிநடத்தினார்கள், சமயத்தில் தமது “ஊத்தை வேலைகளுக்கும்” (Dirty Works) பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த சக்திகள் தமது நடவடிக்கைகளை, “எதிரியின் எதிரி நண்பன்” என்று நியாயப்படுத்தினார்கள். அத்தோடு, தம்மை இந்த அரசுகள் பயன்படுத்துகின்றன தமக்கு தெரியும் எனவும் வேறு வழியில்லையாததால் தாம் இதனை செய்ய நேர்ந்துள்ளதாக வேறு ஒப்புதல் வாக்கு மூலங்களை தனிப்பட்டரீதியில் வெளிப்படுத்தி, குற்ற உணர்வுடைய தமது மனச்சாட்சிகளுக்கு ‘பாவ சங்கீர்த்தனம்’ செய்து கொள்ள முனைந்தார்கள். ஆனால் பகிரங்கமாக இவர்கள் ஜனநாயகம் பற்றியும், அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ள புலிகள் என்ற அமைப்பு மாத்திரமே தடையாக இருப்பதாகவும்,; புலிகளை அழிப்பது தமிழ் மக்களின் சமாதானத்திற்கு மிகவும் முக்கியமானது எனவும் மார்தட்டிக் கொண்டார்கள்.

இவர்கள் ‘புலி வேட்டை நடத்தியவிதம்’ கவனிக்கத்தக்கது. புலிகளை தேடுவதாக கூறிக்கொண்டு ஊரூராக கதிகலக்கினார்கள். கைதுகள், சித்திரவதை, கொலை போன்ற அனைத்தும் தாராளமாகவே நடைபெற்றன. ஒவ்வொரு ஊரிலும் குறிப்பிட்ட சில நபர்களின் பெயர்கள் இவற்றால் பிரபலம் பெற்றது. இவற்றைவிட ஆட்கடத்தல்கள், பணம் பறிப்பு, பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் என்று தொடர்ந்தது. இவர்கள் நடத்திய அட்டகாசத்தில் இவர்களை விட புலிகள் பரவாயில்லை என்று புலிகளுக்கு நல்ல பெயர் பெற்றுக் கொடுத்தார்கள்.

இவற்றை விட தம்மை ஆட்டிவைக்கும் எஜமானர்களின் கோரிக்கைகளின் பேரில் இவர்கள் செய்த அரசியல் தில்லு முல்லுகள் ஏராளம். நபர்களை தேர்தலில் நிற்க வைத்தவிதமும், அதற்கு அவர்களை தேர்ந்தெடுத்தவிதமும் வேடிக்கையானவை. மது வெறியில் தான் எந்த பத்திரத்தில், ஏன் கையொப்பம் இடுகிறோம் என்று தெரியாமல் கையெடுத்திட்டு, தேர்தலில் “வெற்றி பெற்று” பின்பு குறிப்பிட்ட ஒரு அமைப்பின் முன்னணி ஊழியர் எனக் கருதப்பட்டு, புலிகளால் கொல்லப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.

வடக்கு – கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு வேற்பாளர்கள் பட்டியலை தாக்கல் செய்த தினத்தில் யாழ் கச்சேரியை சுற்றி வளைத்து இந்திய இராணுவம் தமது சட்டைப்பையில் ரூபா 500 வைத்திருந்து எவரையுமே உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. முன்பெல்லாம் ஈழம் என்ற பதம் தமிழ் ஈழத்தையே குறிக்கும் என அடித்துப் பேசியவர்கள், “ஜனநாயக வழிமுறைக்கு திரும்பியதும்” சிங்கள அரசியல்வாதிகளை திருப்திப் படுத்துவதற்காக ஈழம் என்பது முழு இலங்கையையும் குறிக்கும் பதமே என குத்துக்கரணம் அடித்தார்கள். இந்திய இராணுவம் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டபோது அவர்கள் குட்டையை குழப்பிவிட்டு செல்லும் நோக்கில், இவர்களைக் கொண்டு ‘தமிழீழ பிரகடனம்’ வேறு செய்துவிட்டுச் சென்றார்கள்.

இதே பாணியில் ENDLF தனது “ஜனநாயக கடப்பாடுகளை” நிறைவேற்றிச் சென்றது. கிளிநொச்சியும், மட்டு அம்பாறையும் இவர்களால் “புதுப் பொழிவு பெற்றது” EPDP வந்தார்கள்: இன்னுமொரு சுற்று படுகொலைகள் தொடர்ந்தது. மனித உரிமை மீறல்கள் இன்னுமொரு சுற்று பருத்தது. தீவுப் பகுதியில் இவர்கள் பண்ணிய அட்டகாசம் ஒரு தனியான கதை. இவர்கள் யாழ்ப்பாண தேர்தலில் வாக்குப் பெட்டிகளை தாமே நிரப்பினார்கள். விளைவு 12 எம்பிக்கள் பாராளுமன்றத்தில். அந்த புண்ணியத்தில் மந்திரி பதவிகள் வேறு. இதில் எம்பியான பலருக்கு பாராளுமன்றத்தில் சரிவர உரையாற்றக் கூடத் தெரியாது. இவர்களுக்கு உரைகளை எழுதிக் கொடுப்தற்கு புதிதாக ஆட்கள் தேவைப்பட்டது. இவர்கள் ஜனநாயக கடமைகளுக்கு மேலாக ஆட்களைக் கடத்தி பணத்தை பறித்தெடுப்பதை சிறப்பாகவே மேற்கொண்டார்கள். மாற்று அமைப்புக்களைச் சேர்ந்தவர்களை மாத்திரமன்றி, தமது அமைப்பிற்குள்ளேயே மாற்று கருத்துள்ளவர்களையும் கொன்று போட்டார்கள்.

கருணா – பிள்ளையான கோஷ்டியின் வருகையானது சிங்கள அரசியல்வாதிகளுக்கும், உளவுத்துறைக்கும் ஒரு புதிய வேலைத்திட்டத்தையே உருவாக்கிக் கொடுத்தது. அதுவரை காலமும் கருத்தளவிலேயே இருந்து வந்த ‘யாழ் அகற்றிச் சங்கத்திற்கு’ ஒரு செயல்திட்டமே வகுத்து விட்டார்கள். கிழக்கில் இருந்து யாழ் ‘வம்சாவளியினரை’ வெளியேற்றி தம்பங்கிற்கு ‘இனச்சுத்திகரிப்பை’ செய்து முடித்தார்கள். இதற்கிடையில் சிங்கள அரசியல் வாதிகளும், அவர்களை அண்டி வாழும் தமிழ் எடுபிடிகளும் இந்த குழுவை எப்படி உடைத்து யார் யாரை எப்படி எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பேசிக்கொண்டிருக்க வந்தது பார் இந்த தலைவர்களிடையே பிளவு. என்ன அரசியல் முரண்பாடு என்றால் ஒருவர் சொலகிறார், தான் சேர்த்துக் கொடுத்த 18 கோடி ரூயாயை மற்றவர் சுருட்டிவிட்டாராம். அது சரி இத்தனை பெரியளவு பணம் எப்படி வந்தது? இவர்களது உழைப்பில் உருவானதா? எல்லாம் ஆட்கடத்தல் பணம் தான். அதனை சுருட்டியவர் வெளிநாட்டிற்கு கொண்டு சென்று உறவினர் மற்றும் நண்பர்கள் பெயரில் முதலீடாம். சனியன் பிடித்த பினாமி சொத்து தமிழ் தேசியத்தின் ஒரு கூறு போலவே இவர்கள் ஆக்கி விட்டார்கள்.

இவற்றையெல்லாம் ஒன்று திரட்டிப் பார்த்தால் அதன் சாராம்சம் பின்வருமாறு அமையும். புலிகளை ஒடுக்குவது என்பதன் பெயரில் மோசமான மனித உரிமை மீறல்களை எவ்விதமான தயக்கங்களும் இன்றி நிறைவேற்றி முடித்தார்கள். இதனால் இன்னும் பலரை புலிகளுக்கு அணிதிரட்ட உதவினார்கள். அரசியல் தளத்தில் என்று பார்த்தால் தமிழ் தேசிய அரசியலை எந்தளவிற்கு சேதப்படுத்த முடியுமோ, அந்தளவிற்கு சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளார்கள்.

இன்னுமொரு விடயம் பலருக்கும் புரியாத புதிராக இருப்பதுண்டு. அதாவது விடுதலைப் புலிகள் இலங்கை அரசை எதிர்த்து போராடுகிறார்கள். அதற்கு அவர்களுக்கு கணிசமான அங்கத்தவர்ளை பராமரிப்பது, தேவையான ஆயுதங்கள், வெடி பொருட்களை வாங்குவது என்று பல்வேறு செலவினங்கள் இருந்திருக்கும். இதனை ஏதோ ஒர் விதத்தில் எமது மக்களிடம் இருந்துதானே அவர்கள் பெற்றார்கள். இதற்கான பணத்தை அவர்கள் பெற்றுக் கொண்டதற்கு ஒருவித நியாயமிருப்பதாக பலரும் உணர்ந்தார்கள். ஆனால் அதனைப் பெற்றுக் கொண்ட விதம் தொடர்பானதாவே விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இலங்கை மற்றும் இந்திய அரசின் ஏஜென்டுகளாக மாறி அவர்களது pay roll ல் இருந்து பணம் பெற்றுக் கொண்ட இந்த குழுக்களுக்கு, இந்த ஆட்கடத்தலும், பணம் பறித்தலும் தேவையற்றனவாகி இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவற்றை தொடர்ந்தும் மேற்கொண்டதில் அரச படைகளிலுள்ள சில அதிகாரிகளுக்கும் பங்கிருப்பதாக கருதப்படுகிறது. அவர்களுக்கு இதுவோர் இரட்டை இலாபம். கடத்திப் பெறும் கப்பத்தில் இவர்களது பங்கு குறித்தது முதலாவது அம்சமாகும். இப்படியாக பணத்தைப் பறிப்பதானது இந்த இயக்கங்களை மக்களை விட்டும் அதிகம் தூரம் அன்னியப்படுத்தி விட்டது. இதனால் இவர்களை தமது தேவைகள் முடிந்த பின்பு அழித்தொழிப்பதில் அதிகம் பிரச்சனைகள் இருக்க மாட்டாது அல்லவா? அத்துடன் இவர்களைக் கொண்டே தமிழர் தேசிய இயக்கத்திற்கு சேறு பூசும் வேலையை செய்யக் கூடியதாகவும் இருந்தது.

சரி, அப்படித்தான் இலங்கை, இந்திய அரசுகளுடன் இணைந்து செயற்படுவதற்காக தந்திரோபாய காரணங்கள் கூறப்பட்டாலும், இப்படியாக செயற்பட்ட காலத்தில் இவர்கள் தமிழர் தேசிய பிரச்சனை தொடர்பான அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு என்னவிதமான பங்கை ஆற்றியிருக்கிறார்கள்? முழுக்க முழுக்க எதிர்மறை பாத்திரம்தான் இவர்கள் செய்து வருவது. இலங்கை, இந்திய அரசுகள் தமிழரது தேசிய பிரச்சனையை எந்தளவு கொச்சைப்படுத்த முனைகிறார்களோ, அதற்கான ஊது குழலாக மட்டுமே இவர்கள் செயற்பட்டுள்ளார்கள். சிறீலங்கா அரசினால் மிக மோசமான படுகொலைகள், அரசியல் மோசடிகள், மற்றும் நிர்வாக நெருக்குதல்கள் தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் இவர்கள் அவற்றை கண்டிக்காதது மாத்திரமன்றி, அவற்றிற்கு தமது ஆதரவை புலியெதிர்ப்பின் பெயரால் தான் இவர்களால் வழங்க முடிந்தது. இந்திய தலையீட்டை கோருவது, மற்றும் இலங்கை அரசின் அத்தனை அரசியல் மோசடிகளையும் நியாயப்படுத்துவது போன்ற பணிகளைத்தான் இவர்கள் இப்போதும் செய்து வருகிறார்கள்.

புலிகளினால் அச்சுறுத்தப்பட்ட நிலையில், தமது சொந்த பாதுகாப்பு கருதித்தான் இவர்கள் இந்த அரசுகளிடம் அடைக்கலம் பெற்றதாக ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலுங் கூட, புலிகள் இப்போது அழிக்கப்பட்டு விட்டார்களே. அப்படியானால் தம்மை தவறாக வழிநடத்துபவர்களின் பிடியிலிருந்து வெளியேறி, சுதந்திரமாக தமது அரசியலை முன்னெடுக்க வேண்டாமா? அல்லது தமது அமைப்புக்களை கலைத்துவிட்டு ஒதுங்க வேண்டாமா? மாட்டார்கள். அவர்களுக்கு இப்போது தமது பதவிகள் முக்கியமானதாக போய்விட்டுள்ளது. இல்லாவிட்டால், இத்தனை போர்க் கொடுமைகளுக்கும் பின்பு, மூன்று இலட்சம் மக்கள் ஒரு மோசமான தடை முகாமில் இன்னலுறும் போது அதனை மூடி மறைக்க சிறீலங்கா அரசு நாடகமாடும் இந்த உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட இத்தனை பேர் முண்டியடித்துக் கொண்டிருப்பார்களா என்ன?

இந்த அமைப்புக்கள் மட்டுமன்றி ஏனைய சிறு குழுக்களும், தனிநபர்களைப் பொருத்தவரையிலும் கூட ஒரு விடயம் மிகவும் முக்கியமானதாகிறது. புலிகள் அமைப்பானது இராணுவரீதியில் முற்றாக தோற்கடிக்கப்பட்ட பின்பு, அவர்கள் எவரையும் அச்சுறுத்தக் கூடிய ஒருசக்தி என்ற வகையில் அழிந்துபோன பின்பு, மேற்கொண்டும் இந்த புலியெதிர்ப்பு வாதத்தை தூக்கிப் பிடிப்பது என்பது, தமிழர் தேசியத்திற்கு எதிரான செயற்பாடாகவே அர்த்தப்படுத்தப்பட வேண்டும்.

இந்த இடத்தில் இந்த “புதிதாக ஜனநாய வழிமுறைக்கு திரும்பியவர்களின்” கடந்த கால ஜனநாயக பாரம்பரியத்தை ஒரு தடவை மேலோட்டமாக தட்டிப் பார்ப்பது நிலைமைகளை இன்னும் தெளிவு படுத்திக்கொள்ள உதவும். இவர்களில் ஒருவர் வதை முகாம்களை இயக்கங்களினுள் முதன் முதலாக அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். இன்னொரு குழுவினர், அமைப்பினுள் ஜனநாயகம் என்பது வெறும் கேளிக்கூத்தாக்கியவர்கள். தமது அரசியல் மற்றும் சர்வதேச நிலைப்பாடுகளை பிறரை திருப்திப் படுத்துவதற்காக மாற்றிக் கொண்டவர்கள். தமது கொங்கிரசின் அறிக்கையை தளத்திற்கு அனுப்பும் போது தளத்திலுள்ள அங்கத்தவர்களின் எதிர்ப்புணர்வுகளை தணிப்பதற்காக, கொங்கிரசில் நிறைவேற்றப்பட்ட அறிக்கைக்கு மாறாக, வேறொரு அறிக்கையை செயற்கையாக தயார் செய்து அனுப்பிய மோசடியாளர்கள். மற்றவரோ, படுகொலைகளுக்கு பெயர் போனவர். தம்மிடம் சரணடைந்த 600 பொலிசாரை சர்வதேச போர் நியமங்களுக்கு மாறாக கொண்றொழித்த போர்க்கால குற்றவாளி. முஸ்லிம் மக்களை கிழக்கில் கோரமாக படுகொலை செய்தது மட்டுமன்றி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை வெளியேற்றியதன் பிரதான சூத்திரதாரியே இவர்தான். இப்படிப்பட்ட இந்த கிரிமினல் கூட்டம் “சமாதானத்தையும், இனங்களிடையே நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முனைவதாக” கூறுவதை விட வேறு கேலிக்கூத்து இருக்க முடியுமா? இவர்கள் ஈழத்தமிழருக்கு ஒரு சாபக்கேடு, அவமானச் சின்னம். இவர்கள் சொல்லுகிறார்கள் மகிந்த பிரச்சனையை தீர்ப்பார் என்று. வேலிக்கு ஓணான் சாட்சியாவதை இப்போது பார்க்கிறோம்.

இப்படியாக ஆதிக்க சக்திகளின் கைக்கூலிகளாக தாம் மாறிப் போனதற்கு புலிகளது தடை நடவடிக்கைகளை காரணமாகக் கூறும் இவர்கள், ஒன்றை மறந்து விட்டார்கள். அதாவது, ஒருவரது நடவடிக்கைகளுக்கு மூலாதாரமான காரணம் (Ultimate Reason) யார் என்பதுதான் அது. புலிகளால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் ஒவ்வொன்றின் முன்னும் பல்வேறு தேர்வுகள் (options) இருந்தன. அவற்றில் எதைத் தெரிவுசெய்வது என்பதும், அப்படி தெரிவு செய்யப்பட்டதில் ஏதாவது ஒரு தேர்வானது தவறானது என கண்டறியும் பட்சத்தில் அவற்றை மாற்றிக் கொள்ளும் வாய்ப்புகளும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இதனை மறைத்துவிட்டு வெறுமனே சூழ்நிலையின் கைதிகள் போல தம்மை காட்டிக் கொள்வதன் மூலமாக யாருமே தத்தமது ‘பாவ சுமைகளில்’ இருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. இப்போதெல்லாம் சர்வதேச போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர், தான் வெறுமனே மேலதிகாரிகளின் கட்டளைகளை மட்டுமே பின்பற்றியதாக தனது குற்றங்களுக்கு நியாயம் காட்ட அனுமதிக்கப்படுவது கிடையாது. அவர் மீதான புறநிலையான நெருக்குதல்கள் எவ்வளவுதான் கடுமையானவையாக இருந்தாலுங் கூட ஒருவருக்கு இன்னும் பலரை சித்திரவதை செய்வதை, படுகொலை செய்வதை நியாயப்படுத்தும் வகையிலான காரணங்களாக இவை ஆக மாட்டாது. இன்னும் பல உயிரை அழிப்பதற்குப் பதிலாக ஒருவர் தற்கொலை செய்து கொள்வதன் மூலமாக அப்படிப்பட்ட மோசமான கொடுமைகளில் ஒரு பங்காளராக, நிறைவேற்றுபவராக இல்லாமல் தன்னை அவர் விடுவித்துக் கொண்டிருக்க முடியும். இதனை விடுத்து வெறுமனே சூழ்நிலையின் கைதிகள் போல கழிவிரக்கம் பாடுவது: தம்மை பிறர் பயன்படுத்திக் கொள்வதை தம்மால் தவிர்க்க முடியவில்லை: என்றெல்லாம் சப்புக் கொட்டுவது அனுமதிக்கப்பட முடியாதவையாகும். நாம் போராளிகள் என்ற வகையில் தேவைப்பட்டால் எமது உயிரையும் எமது உயர்ந்த இலட்சியத்திற்காக அர்ப்பணிக்கத் தயாராகவே போராட்டத்தில் இணைந்து கொள்கிறோம். ஆனால் எமது உயிரை காப்பாற்றிக் கொள்ள, எமது சொகுசான வாழ்க்கையை தொடர்வதற்காக சாதாரண மக்களை எந்தவித்திலும் இடர்பாடுகளுக்கு உள்ளாக்க எமக்கு உரிமை கிடையாது.

சரி, ‘எதிரியின் எதிரி எமது நண்பன்’ என்ற முடிவை தந்திரோபாய அடிப்படையில் இவர்கள் மேற்கொண்டதாகவே வைத்துக் கொள்வோம். தந்திரோபாயம் என்பது மூலோபாயத்திற்கு உட்பட்டது அல்லவா? அப்படியாயின் இவர்களது அரசியல் திட்டம், மூலோபாயம், மற்றும் தந்திரோபாயம் எவை? எந்த நிலைமைகளின் கீழ், எதுவரைக்கும் இந்த ‘புதிய நண்பனுடன்’ ஒத்துழைப்பதாக தீர்மானிக்கப்படுகிறது? எந்த நிலைமைகளின் கீழ் இந்த ஒத்துழைப்பு முடிவுக்கு கொண்டுவரப்படும் என்பது தொடர்பான திட்டவட்டமான நிலைப்பாடுகள் ஏதாவது இருக்கிறதா? அப்படியாக மூலோபாயம் இல்லாத தந்திரோபாயத்தை என்னவென்பது? ‘சந்தர்ப்பவாதம்’ என்றுதான் அது அழைக்கப்படும். அதுசரி, எதிரி யார்? நண்பர் யார்? என்பதை எந்த அடிப்படையில் தீர்மானிப்பதாம். அவ்வப்போது எமக்கு ஏற்படும் உணர்வுகள் மற்றும் நெருக்கடிகளின் அடிப்படையிலா அல்லது எமது சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகள் பற்றிய விஞ்ஞான பூர்வமான பரிசீலனை மற்றும் அவற்றின் நீண்டகால வளர்ச்சிப் போக்கு பற்றிய புரிதலின் அடிப்படையிலா? இப்படியாக நாங்கள் எடுக்கும் முடிவுகள் நீண்டகால அடிப்படையில் எமது தேசத்திற்கு நன்மை விளைவிக்குமா? அல்லது தீங்கு விளைவிக்குமா? என்ற அக்கறை எமக்கு இருக்க வேண்டாமா?

இந்த இடத்தில் இது தொடர்பான இன்னோர் விடயமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதருக்கும் தாம் சரியென கருதும் அரசியலை ஏற்றுக் கொள்வதற்கும், அதற்கு அவசியமான அமைப்பு வடிவங்களை கட்டிக் கொள்வதற்கும் இருக்கும் சுதந்திரம் என்பது ஒவ்வொருவரதும் அடிப்படை ஜனநாயக உரிமை பற்றிய விடயமாகும். ஆனால், ஜனநாயகத்தில் ‘தனி நபர் ‘ என்ற அளவிலும், ‘சமூகம்’ என்ற வகையிலும் இருக்கும் நுண்மையான வேறுபாடுகளை (Democracy as Individual and Collecitve) நாம் மறந்துவிடக் கூடாது. சமூகத்தின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்டதாகவே தனிநபர்களது ஜனநாயகம் இருந்தாக வேண்டியுள்ளது. முழு தேசத்தின் ஜனநாயக உரிமையை – அந்த தேசத்தின் சுயநிர்ணய உரிமையை – மறுப்பதற்கு, தனிநபர்களின் ஜனநாயகம் பயன்படுத்தப்படுவது அனுமதிக்கப்பட முடியாததாகும். இந்த வகையில் புலியெதிர்புவாதம் என்பது முழுக்க முழக்க சந்தர்ப்பவாதமும், பிழைப்புவாதமும் அன்றி வேறில்லை என்பது தெளிவாகிறது.

Tamil Eelam_1980s2

போராட்டத்தில் இப்போது மேலோங்கியிருக்கும் நெருக்கடிகள், தோல்வி மனேபாவம், நம்பிக்கை வறட்சி, குழப்பங்கள், கலைப்புவாதம் என்பவை, இன்னோர் விதமான சிந்தனைகளுக்கு வழியமைத்துக் கொடுத்துள்ளது. இந்த இடத்தில் நாம் இந்த கருத்துக்களை பற்றி சற்று மேலோட்டமாக பார்த்துக் கொள்வது அவசியமானது என்று கருதுகிறேன்.

• சிறுபான்மையாக உள்ள தமிழர் ஏன் பெரும்பான்மையான சிங்களவருடன் மல்லுக்கு நிற்க வேண்டும்?

• அரச கரும மொழிச்சட்டம், சிங்கள ஸ்ரீ பற்றிய பிரச்சனை, தரப்படுத்தல் போன்ற அற்ப பிரச்சனைகளை பெரிதுபடுத்தி அடாது பண்ணியது தமிழர்தான்!

• தமிழர்கள் தமது சலுகை பெற்ற நிலையை தக்க வைப்பதற்காக, சிறிய பிரச்சனைகளை எல்லாம் பெரிதுபடுத்தியதுதான் இத்தனை இடர்களுக்கும் காரணம்!

• தமிழர்கள் சிங்கள பகுதியில் விரும்பிய இடமெல்லாம் குடியிருக்கும் போது சிங்களவர்களை மட்டும் தமிழ் பிரதேசத்தில் குடியேறுவதை தடுக்க முனைவது, அவர்கள் புத்த கோயில்கள் கட்ட முனைவதை எதிர்ப்பதுதான் தமிழ் இனவாதமாகும்.

• தனித் தமிழீழம் என்பதில் பிடிவாதமாக நிற்காமல், தமிழர் தரப்பு இறங்கி வந்திருந்தால் எப்போதோ தீர்வை நாம் கண்டிருக்க முடியும்.

• பேச்சுவார்த்தைகள் மூலமே தமிழர் பிரச்சனை தீர்வு காணப்பட முடியும்.

• ஐக்கியப்பட்ட புரட்சி தேசிய பிரச்சனைக்கு முடிவுகட்டும். கடந்த காலத்தில் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம்தான் இப்படிப்பட்ட ஒரு புரட்சிக்கான சூழ்நிலை உருவாகமல் தடுத்து நிறுத்தியது.

இப்படியாக ஒரு நீண்ட பட்டியலை நாம் தரமுடியும். அவை அணைத்தையும் எடுத்துக் கொண்டு, அவற்றை ஒவ்வொன்றாக பதிலளிப்பது இந்த இடத்தில் சாத்தியப்படமாட்டாது என்பதால், (இதனை இன்னோர் சந்தர்ப்பத்தில் விரிவாக மேற்கொள்வதாக நாம் உத்தரவாதம் அளிக்கலாம்) இப்போதைக்கு இவற்றில் ஒரு விடயத்தை மாத்திரம் எடுத்துக் கொள்வோம்.

தமிழீழம் தவிர மற்றதெல்லாம் தரலாம் என்றார் பிரேமதாசா. இப்போதைய தலைவர்களும் தமிழீழ கோரிக்கையில் தமிழர் தரப்பு பிடிவாதமாக இருப்பதே, அரசியல் தீர்வு எட்டப்படுவதற்கு தடையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். சரி, ஒரு வாதத்திற்காக தமிழர் தரப்பானது தமிழீழ கோரிக்கையை விட்டுக் கொடுத்து சமரசம் செய்ய தயாராக இருப்பதாக வைத்துக் கொண்டு, சற்றே கீழே இறங்கித்தான் பார்ப்போமே.

• தனிநாட்டுக் அடுத்தபடியாக நாம் பார்க்கக் கூடிய அரசியல் ஏற்பாடு கூட்டாட்சியாகும் (Confederation). இதற்கு சிறீலங்கா அரசு தயாரா? இல்லை.

• சரி, அதற்கும் ஒருபடி கீழிறங்கி சமஷ்டி ஆட்சி முறையை ஏற்பதாக வைத்துக் கொண்டாலும், இதற்கும் தயாராக இல்லை.

• இன்னுமொரு படி கீழே போவோம். வடக்கு – கிழக்கு இணைந்த மாநிலத்திற்கு விரிவான அதிகாரங்களை வழங்கத் தயாரா? இதற்கும் தயாராக இல்லை. இந்த இணைப்பு சர்வஜன வாக்கெடுப்பின்றி, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பிரித்தாயிற்று.

• சரி, வடக்கு, கிழக்கு பிரிந்த தனித்தனி மாகாணங்களுக்கு பொலிஸ், நில அதிகாரங்களை கொடுக்கவும் முடியாது.

• 13 வது அரசியலமைப்பிற்கான திருத்தமும் கிடையாது என்றால்., ……….
இதற்கு மேல் நாம் என்ன செய்யலாம்? நக்கலாம்… அதைத்தான் சிலபேர் ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறார்களே!

நாம்தாம் சிறீலங்கா அரசானது சிங்கள பேரினவாதத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது என்கிறோமே. அதன் அர்த்தம் என்ன? சட்டவாக்கம், நிர்வாகம், நீதித்துறை போன்ற அனைத்துமே சிங்கள் பேரினவாதத்தின் பிடியில் இருக்கின்றன என்பதுதானே. இவற்றிற்கும் மேலாக வரலாற்றுக்கும் ஐதீகங்களுக்கும் வேறுபாடு காண்பிக்காத ஒரு கல்வி முறையில் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு தலைமுறை. இந்த தலைமுறையை அதன் பயப்பிராந்தியை தணிய விடாமல் பார்ப்பதை கடமையாகக் கொண்ட ஒரு வெகுஜன சாதனம். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் இந்த அரசியல் இணக்கப்பாடு காணலாம் என்ற கருத்துப் போக்குகளும் நம்மத்தியிலே உலாவி வருகின்றன. இதற்கு மேல், சிறீலங்காவின் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடிப்படையாக வைத்துத்தான் நாம் செயற்படுவது என்றால் இந்த திசையில் நாம் ஒரு அடியாவது முன்னேற முடியுமா? நிர்வாகமும் இனவாத பிடியில் சிக்கியிருக்கிறது என்றான பின்பு சட்டவாக்க துறை ஏதாவது சட்டங்களை கொண்டு வந்தாலும் உம்: தமிழ் அரசகரும மொழியாவது, அவை முறையாக அமுல்படுத்தப்படும் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா? மற்றையது, இப்படிப்பட்ட சில்லரைத்தனமான யோசனைகள் மிகவும் காலம் தாழ்த்தியவை மட்டுமல்ல, மிகவும் பற்றாக்குறையானவை (Too Little and Too Late) என்பது கூடவா இவர்களுக்கு புரியவில்லை. அல்லது தமிழ் மக்களது அவலங்களை பார்த்து இவர்கள் கேலி செய்கிறார்களா?

மொழியுரிமை, குடியேற்றம், தரப்படுத்தல் போன்ற பிரச்சனைகள் ஒவ்வொன்றும் அவற்றிற்கே உரிய வரலாற்றுப் பின்னணியில் வைத்தே புரிந்து கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் அவற்றை கொண்டு வருவதில் ஒரு தரப்பு ஏன் அத்தனை தீவிரமாக இருந்தது என்பதும், மறுதரப்பு அதனை ஏன் கடுமையாக ஆட்சேபித்தது என்பதும், இந்த பரவலான, வெகுஜன மட்டத்திலான எதிர்ப்புணர்வுகளையும் மீறி அவற்றை கொண்டு வந்துவிடுவதில் சிறீலங்கா அரசு விடாப்பிடியாக நின்றதற்கான காரணமும் பிடிபடும். இல்லாத போது அந்த பிரச்சனைகளின் ஆழமும் அகலமும் புரிந்து கொள்ளப்படாமல் போய் விடும். சரி, அப்படித்தான் இவையனைத்துமே அற்ப பிரச்சனைகள் என்றால், தமிழர்களது கடுமையான எதிர்ப்புக்களையும் மீறி அவற்றை சட்டமாக்க, அந்த சட்டங்களை அமுலாக்க சிறீலங்கா அரசு பிடிவாதம் பிடித்ததேன்? பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்க்கலாம் என்றால், இதனை மட்டும்தானே தமிழர் தரப்பு 1970 களின் நடுப்பகுதி வரையில் செய்து வந்தது. அப்போது ஏன் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் போயின? வன்முறையின் மூலமாக அரசியல் நோக்கங்களை அடைய முனையக் கூடாது என்பவர்கள், ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்ற தமிழரது எதிர்ப்பு போராட்டங்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டவர்களை பார்த்தல்லவா இதனை சொல்ல வேண்டும்.

தமிழர் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பவர்கள், சிறீலங்கா அரசு எதனையாவது விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறதா? என்பதையும் கேட்க வேண்டாமா? ஒற்றையாட்சி மற்றும் சிங்கள – பௌத்தத்திற்கு முதலிடம் போன்றவற்றை வலியுறுத்தும் அரசியலமைப்புத் திட்டம், மற்றும் பல தேசமக்களது அபிலாசைகளை வெளிப்படுத்தாத தேசியக் கொடி உட்பட அனைத்திலும் விட்டுக் கொடுப்புக்களை செய்யத் தயாராக இல்லாமல் பல தேசங்களும் சேர்ந்த வாழ்வது இன்றை இலங்கையில் சாத்தியமில்லை. இப்போது நடப்பது என்னவென்றால், ஒடுக்குபவனை விமர்சிப்பதை விட்டுவிட்டு, ஒடுக்கப்படுபவர்களை சகித்து போகுமாறு போதிக்கப்படுகிறது. அதுவும் இதனை தமிழர்களே செய்வதுதான் கொடுமையானது.

அதனைவிட விசித்திரமானது என்னவென்றால், நாம் எமது கோரிக்கைகள் மூலமாக சிங்கள மக்களை பயப்படுத்தி விடக் கூடாதாம். நல்ல விசித்திரம். சிங்கள அரசியல்வாதிகள் கடந்த காலத்தில் தமது குறுகிய நோக்கங்களுக்காக சிங்கள மக்களை இனவாதம் கொண்டு உசுப்பேத்தி விட்டுள்ளார்கள். இந்த நிலையில் அவர்களை சங்கடப்படுத்தி விடக்கூடாது என்ற அக்கறையிலிருந்து பிரச்சனையை அணுகத் தொடங்கினால், நாம் ஏதாவது உருப்படியாக செய்ய முடியுமா?
இங்கே குறுக்கு வழியெதுவும் கிடையாது! பிரச்சனையின் தார்ப்பரியங்கள் வெளிப்படையாகவும், ஆழமாகவும் அக்கறையுடன் பேசப்பட வேண்டும். அதற்கு இந்த சந்தர்ப்பவாத அரசியல் வாதிகள் தயாராக இல்லையென்றால், தமிழர் தமது வழியை தாமே நிர்ணயித்துக் கொள்வதை தடுப்பதற்கு இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. நாம் எப்போது சுயமரியாதையுடனும், பகுத்தறிவுடனும் சிந்திக்க, செயற்படப் போகிறோம்? முன்பெல்லாம் புலிகளின் கொத்தடிமைகளாக செயற்பட்டவர்கள், இவர்கள், இப்போது சிறீலங்கா அரசை திருப்பி செய்யும் விதத்தில் கருத்துக்களை தெரிவிக்க தலைப்பட்டுள்ளார்கள். ஒரு வேளை புலத்தில் இருந்து கொண்டு அரசை கடுமையாக விமர்சிப்பது பாதுகாப்பு வகையில் பிரச்சனைக்குரியதாக இருக்கலாம். அது புரிந்து கொள்ளப்படத்தக்கதே! ஆனால், இதனை மறைத்து புலம்பெயர் போராளிகளை விமர்சிக்க முனைவது ஆரோக்கியமான போக்கல்லவே.

அடுத்து கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் ‘ஐக்கியப்பட்ட புரட்சி’ பற்றிய விடயமாகும். இலங்கையில் தேசிய பிரச்சனைக்கு நாம் தனியான அரசை அமைப்பதன் மூலமாக அன்றி, சிங்கள, தமிழ், முஸ்லிம், மற்றும் மலையக தொழிலாளர்களது ஐக்கியப்பட்ட புரட்சியின் மூலமாக தீர்வு காண்பதே சரியானது, என இவர்கள் கூறுகிறார்கள். இதன் சாத்தியப்பாடு தொடர்பான சர்ச்சைகளை இங்கு தவிர்த்துக் கொண்டு, இங்கு ஒரு விடயத்தை மட்டுமே நான் கவனத்தில் கொள்ள விரும்புகிறேன். அதாவது, ‘ஐக்கியப்பட்ட புரட்சி’ என்ற நிலைப்பாடு தேசிய பிரச்சனையை முகம் கொடுப்பதில் நின்றும் இந்த இடதுசாரிகள் தப்பித்துக் கொள்ளவதற்கான (Escapism) வழிமுறையாக பயன்படுத்தப்படுகிறதா? என்பதே அந்த பிரச்சனையாகும்.

விடயம் இதுதான்: இப்போது மார்க்சியவாதிகள் எவருமே சோசலிசப் புரட்சியானது தன்னளவிலேயே, சமூகத்திலுள்ள தேசிய பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிடும் என்று வாதிடுவதில்லை. சோவியத் யூனியன் கூட பல குடியரசுகளின் ஒன்றியமாகத்தானே இருந்தது. இவ்வாறே ஏனைய பிரச்சனைகளான சாதியம், பெண்ணடிமைத்தனம் போன்றவையும் தானாகவே சோசலிசத்தல் தீர்க்கப்பட்டு விடுவது கிடையாது. இதனால் இவர்கள் இந்த பிரச்சனைகளை சோசலிசத்தில் எப்படியாக தீர்க்கப் போகிறார்கள் என்று தமது திட்டத்தில் குறிப்பாக தெளிவு படுத்துவதுடன், நடப்பு சமூக அமைப்பின் வரம்பிற்குள் நடைமுறைப்படுத்தக் கூடிய கோரிக்கைகளை தமது குறைந்த பட்ச திட்டத்தில் முன்வைத்து, அவற்றை அடைவதற்கான போராட்டங்களை, கிளர்ச்சிகளை, பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள். அப்படியானால் தேசிய பிரச்சனை தொடர்பான இவர்களது நீண்டகால, குறுகியகால திட்டங்கள் எவை? அவற்றை அடைவதற்கு எந்த வழிமுறைகளில் போராடுகிறார்கள். இவற்றிற்கு ஆரோக்கியமான பதில்கள் கிடைக்காதவரையில் இவர்கள் இந்த ‘ஐக்கியப்பட்ட புரட்சி’ என்ற கோசத்தை பிரச்சனையிலிருந்து தப்பிக் கொள்ளும் வழிமுறையாக பாவிப்பதாகவே அர்த்தப்படும்.

சரி அப்படித்தான் ஐக்கியப்பட்ட புரட்சியை ஒரு சாத்தியமான நிலைப்பாடு என்று வைத்துக் கொண்டாலும் கூட, இந்த இடதுசாரி கட்சிகள் இதனை அடைவதற்கு என்ன பணிகளை செய்கிறார்கள் என்று தனிப்பட்ட முறையில் கேட்டுப் பாருங்கள். தென்னிலங்கையில் இனவாதம் பலமாக இருப்பதால் தம்மால் அங்கு கட்சிப் பணிகளை சரிவர செய்ய முடியவில்லை என இரகசியமாக ஒத்துக் கொள்வார்கள். இந்த கோரிக்கையின் கீழ் சிங்கள் மக்களை அணிதிரட்டி போராட் முடியாத இவர்கள், தம்மீதான ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் மக்களைப் பார்த்து அவர்களது போராட்டத்தை கைவிடுமாறு கோருவது அரசியல்ரீதியிலும், ஏன் தார்மீகரீதியிலும் எப்படி நாகரீகமான செயலாக இருக்க முடியும்.

“சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்கிறோம், ஆனால் பிரிந்து போவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது” என்ற வாதம் ஒரு அசலான முரண்நகையாகும். சுயநிர்ணய உரிமையை அங்கிகரிப்பது என்பதே, குறிப்பிட்ட தேசமக்கள், தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்கும் உரிமை உடையவர்கள் என்பதை ஏற்றுக் கொள்வதைத்தான் குறிக்கும். இதன் பின்பு என்ன அந்த கொசுறு, “பிரிந்து செல்வதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்பது. இதுவோர் மோசடியன்றி வேறல்ல. குறிப்பிட்ட ஒரு தேசத்தினர் எப்படிப்பட்ட முடிவை மேற்கொண்டுள்ளார்கள் என்பதில் சந்தேகமிருந்தால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்திப் பார்க்கலாமேயன்றி, தத்தமது இஷ்டத்திற்கு அந்த மக்களின் அரசியல் பற்றி வியாக்கீனம் செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது.

தமது அரசியல் தலைவிதியை தமது கரங்களிலேயே எடுத்துக் கொள்வதைவிடுத்த, வேறெந்த சமரச முடிவுகளும், அதாவது தனியான அரசை அமைப்பது என்ற முடிவுக்கு குறைந்து எந்தவொரு அரசியல் தீர்வும், சிங்கள் தரப்பில் இருந்து வரும் நேசக்கரத்தை முன்னிபந்தனையாக கோருகிறது. அதாவது, பிரிந்து போவதற்கான முடிவை, செயற்பாடுகளை ஒரு தேசம் தனியாக செய்து முடிக்கலாம். ஆனால் இன்னோர் தேசத்துடன் இணைந்து வாழ்வது என்பது அந்த தேசம் மாத்திரம் தனியாக மேற்கொள்ளக் கூடிய முடிவல்ல. அடுத்த தேசமும் இதனை நோக்கி செயலூக்கத்துடன் செயற்பட்டு, அந்த இணைவிற்கான தனது விருப்பத்தை வெளிப்படையாக, அரசியல்ரீதியாக தெரிவித்தால் மாத்திரமே இது சாத்தியப்படும். சிங்கள மக்களில் மிகப் பெரும்பான்மையானோர் சிங்கள இனவாதத்தின் பிடியில் சிக்கி இருக்கும்போது இது எப்படி சாத்தியமாகும்? சிங்கள- தமிழ் தலைவர்களை உள்ளடக்கிய ஒரு கொம்பூனிஸ்ட்டுக் கட்சி கூட இப்போது இலங்கையில் இல்லை. இந்த இலட்சணத்தில் தமிழ் மக்களை நோக்கி இந்த வகையிலான கோரிக்கைகளை முன்வைக்க இவர்களால் எப்படி முடிகிறது?

Wanni_IDPs_Queueing_for_Water3

இப்போது மீண்டும் எமது பிரதான விடயத்திற்கு வருவோம். யுத்தம் முடிந்துவிட்டது: புலிகள் அமைப்பானது இராணுவரீதியாக முழுமையாகவும், விரிவான அளவிலும் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள். புலிகளது தலைமை, அதன் இராணுவ இயந்திரம் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. நாட்டிலிருந்த அதன் அரசியல் கட்டமைப்புக்கள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு, அதன் தலைவர்கள் சரணடைந்துள்ளார்கள். இப்போது சிறீலங்கா அரசாங்கம் என்ன செய்ய முனைகிறது? போரை முடிவுக்கு கொண்டுவந்து விட்டதால், தமிழ் மக்களுடன் ஒரு சமாதான தீர்வை நோக்கி முன்னேற முனைகிறதா? அல்லது, வெற்றி பெற்றது நானே, அதனால் தான் பெருந்தன்மையாக தருபவற்றை நன்றியுடன் தமிழர்கள் எற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறதா?

இந்த இடத்தில் நாம் இன்னொரு குரலையும் கேட்க முடிகிறது. அதாவது, போர் இப்போதுதானே முடிந்திருக்கிறது. அரசாங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்பதே அதுவாகும். சரி, அதுவும் ஒரு நியாயமான கோரிக்கையாக பலருக்கும் படலாம். ஆனால் நடப்பு நிலைமைகளை கூர்ந்து அவதானிப்பதன் மூலமாக எப்படிப் பட்டதோர் திசையில் அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டாமா?

போர் முடிவடைந்து விட்டது. இந்த யுத்தத்தை நடத்துவதற்காக ஐந்தாண்டு திட்டம் ( ‘Project Beacon’) வகுத்து அதனை கச்சிதமாக செயற்படுத்திய ஒரு அரசாங்கத்திடம் அரசியல் தீர்வுக்கான திட்டம் இல்லையென்றால் இது சற்று இடறலாக இல்லை. புலிகளை அழிக்கும் விடயத்தில் தானே முன்கையெடுத்து செயற்பட்டு, எவரது ஆட்சேபனைகளையும் பொருட்படுத்தாது தனது முடிவுகளை முன்னெடுத்துச் சென்ற அரசானது, சமாதான விடயங்களில் இப்படியாக கால்களை இடறுவது விநோதமாக இல்லை. சர்வகட்சி மாநாட்டின் ஆலோசனைக்காக காத்திருப்பதாக கூறும் இவர் யுத்த விடத்தில் யாருடைய அபிப்பிராயத்தையும் கேட்கவில்லையே. சரி இதுவரையில் ஜனாதிபதி நேரடியாகவும், அவரது தமிழ் மற்றும் சிங்கள் பினாமிகளுக்கூடாகவும் சொன்ன விடயங்களை எடுத்துக் கொண்டால்: சமஷ்டி கிடையாது: அரசியலமைப்பிற்கான 13ம் திருத்தம் கிடையாது: வடக்கு, கிழக்கு பிரிந்தே இருக்கும்: அதற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களும் கிடையாது. அப்படியானால் இதற்கு மேல் ‘தீர்வுப் பொதியில்’ என்னதான் மிச்சமாக இருக்கிறது. அதுவும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் வென்றெடுக்கப்பட்டால்தான்! ஆகா, என்ன அற்புதமான தீர்வு இது! இதனை இவர்களேதான் மெச்சிக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களைப் பொருத்தவரையில் ‘பட்டை நாமம்’ தான் இதற்கு அர்த்தம்.

சரி ஏனைய நிலவரங்களையும் சேர்த்துப் பார்ப்போம். “மக்களை புலிகளின் அடக்குமுறையிலிருந்து மீட்டெடுக்க போரிட்ட” அரசிடம் வெளியேறிவந்த அகதிகளை வைத்து முறையாக பராமரிக்க ஒரு திட்டம், ஏற்பாடு இல்லாமல் இருந்தது போகட்டும்: இப்போது இரண்டு மாதங்கள் ஆகியும் அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடியவில்லை. அதில் இருக்கும் மக்களுக்கு குடிப்பதற்கு, குளிப்பதற்கு சரியான தண்ணீர் கிடையாது! (முகாம்களில் இப்படியாக தண்ணீர் தட்டுப்பாடு பற்றிய செய்திகளை வாசிக்கும் ஒரு வெளிநாட்டவர், இந்த முகாம்கள் ஏதோ சகாரா பாலைவனத்தில் இருப்பது போலவும், சைபீரியாவிலிருந்து உறைபனிக் கட்டிகளை கடலில் இழுத்துக் கொண்டு வந்துதான் தண்ணீர் வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்பது போலவும் யோசிக்கக் கூடும். முப்பது அடி ஆழத்தில் நிலத்தடி நீர் தாராளமாக உள்ளது. இதனைவிட சுற்றிவர ஆறுகளும், குளங்களும் தாராளமாகவே நீர் வசதிகளுடன் இருக்கின்றன. இங்கே தட்டுப்பாக இருப்து தண்ணீர் அல்ல. நல்லெண்ணம்தான்) முறையாக உணவு வசதிகள் கிடையாது!! கழிப்பிட வசதிகள் கூட கிடையாது!!! மருத்துவ வசதிகள், நடமாட்ட சுதந்திரம், உறவினர்களுடன் தொடர்பு கொள்வதற்கான சுதந்திரம்….இப்படியாக இல்லாதவற்றின் பட்டியல் மிக நீண்டது. இது வெறும் நிர்வாக குறைபாடுகள் என்பதா? அல்லது தமிழ் மக்களுக்கு வழங்கும் கூட்டுத் தண்டனை என்பதா? கிரிமினல் குற்றவாளிகளை அடைத்து வைக்கும் சிறைச்சாலைகள் கூட இத்தனை குறைபாடுகள் இயங்க முடியாதே. அதனைவிட மோசமான நிலைமைகளுடன் “அகதி முகாம்களை” வைத்திருப்பது பாரிய மனித உரிமை மீறலாகவும் போர்க்கால குற்றமாகவும் கருதப்படக் கூடியவையாகும்.

இந்த மக்கள் ஒன்றும் போர்க்கைதிகள் அல்லவே. அரசின் கூற்றுப்படியே, இவர்கள் புலிகளினால் பலவந்தமாக, தமது போர்க்கவசமாக பயன்படுத்தும் நோக்கில் தடுத்து நிறுத்தப்பட்டவர்கள். இவர்களின் சுதந்திரத்திற்கு போராடுவதாகத்தானே இந்த அரசு தனது போர் நடவடிக்கைகளுக்கான நியாயப்பாடுகளை முன்வைத்தது. இப்போது இவர்களை இப்படியாக மீட்டு கொண்டு வந்து அடிப்படை வசதிகள் ஏதுமற்ற தடை முகாம்களில் அடைத்து வைத்திருப்பதன் நியாயம் எதுவுமே இருக்க முடியாது. இது தமிழருக்கு வழங்கப்படும் கூட்டு தண்டனையாகவே கருதப்பட வேண்டும். அதனால், உடனடியாகவே இந்த தடை முகாம்களை மூடிவிட்டு, அதிலிருக்கும் மக்களை, தாம் விரும்பும் இடத்தில் சுதந்திரமாக குடியிருக்க அனுமதிக்க வேண்டும். அவர்களது சொந்த குடியிருப்பிடங்களுக்கு அவர்கள் திரும்புவதில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தால். அவர்களை ஐ. நா மற்றும் சர்வதேச தொண்டர் நிறுவனங்களது பொறுப்பில் விடவேண்டும்.

இவற்றைவிட தொடரும் படுகொலைகள் மற்றும் கப்பம் வசூலித்தல், பாலியல் துன்புறுத்தல்கள் போன்றவை உடனடியாகவே முடிவுக்கு கொண்டுவரப்பட்டாக வேண்டும். நடந்து முடிந்த பேரழிவின் அதிர்ச்சியில் இருந்து தமிழ் மக்கள் சுதாகரித்து எழுவதற்கு முன்னரே உள்ளூராட்சி தேர்தல் இல்லையென்று யார் அழுதார்களாம். இந்த தேர்தல்கள் முழுக்க முழுக்க சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் நடவடிக்கை என்பதால் இதில் தமிழ் மக்கள் பங்கெடுக்காது முற்றாகவே நிராகரிக்க வேண்டும். இந்த தேர்தலின்போது பத்திரிகை ஜனநாயகம் படும்பாடு நாமறிந்ததுதானே.

நடப்பு நிலைமைகளை உற்று நோக்கும் எவருமே, அரசில் தீர்வொன்றை முன்வைப்பதற்கு சிங்களத் தலைமை தயாராக இல்லை என்ற உண்மையை துலாம்பரமாக கண்டு கொள்வார்கள். இதற்கு மகிந்தவின் இனவாதம் காரணமா அல்லது சிங்கள இனவாதம் மகிந்தவின் நல்லெண்ணங்களையும் மீறி செயற்பட இடங்கொடுக்கவில்லையா என்பது இங்கு முக்கியமல்ல. தமிழ் மக்களுக்கு ஒரு கௌரவத்துடன் கூடிய சமாதானத்தை கொண்டு வர சிறீலங்கா அரசு தயாராக இல்லையென்பதே இங்கு நாம் குறித்துக் கொள்ள வேண்டியதாகும். புலிகள் போன்ற, சர்வதேசத்தின் முதல்தர கெரில்லா இயக்கத்தை தோற்றடித்த சிறீலங்கா அரசினால் சிங்கள பேரினவாதத்தை முகம் கொடுக்க முடியவில்லை என்றால் அது பேரினவாத சித்தாந்தத்தின் பலத்தை நமக்குக் காட்டுகிறது. இதற்கு மேல் தமிழ் மக்கள் தம்மை ஒழுங்கமைத்துக் கொண்டு பல்வேறு வழிமுறைகளிலும் போராடுவதன் மூலமாக மட்டுமே தமது உரிமைகளை பெற்றுக் கொள்ளலாம்.

கடந்த காலத்தில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும், கலந்து கொள்ளாமல் பார்வையாளர்களாக அல்லது ஆதரவாளர்களாக இருந்த ஒவ்வொருவருக்கும் போராட்டத்தின் தோல்வியில், மக்களது அழிவில் ஏதோ ஒருவிதத்தில் பங்கு இருக்கிறது. இவர்களது செயற்பாடுகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் – சுயவிமர்சனங்கள் இருப்பது தவிர்க்க முடியாததே. இவற்றை முன்வைத்து ஒரு உரையாடலினூடாக நாம் ஓர் உயர்ந்தகட்ட புரிதலை எட்ட முனைவது, அல்லது அது சாத்தியமில்லாத போது, எமக்கிடையே உள்ள வேறுபாடுகளை கோடு கீறிக்கொள்ள முனைவது அவசியமே.

ஆனால் அதேவேளை இன்று ஏற்பட்டுள்ள இந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்பியாக வேண்டியது, மிகவும் அவசரமான கடமையாக எம் எல்லோர் முன்னும் நிற்கிறது. தலைமையை உருவாக்குவது, இணைந்து செயற்படுவது என்றவுடன், உடனடியாகவே மீண்டும் புலிகளுக்கு அரங்கம் அமைத்துக் கொடுக்க முனைவதாக கருதத் தேவையில்லை. எந்தவிதமான அமைப்பாதல் நடவடிக்கைகளும் ஜனநாயகம், பன்முகதன்மை, வெளிப்படையான தன்மை, மற்றும் பதில் சொல்லும் பொறுப்பு என்பவற்றை அடிப்படையாக கொண்டதாகவே அமைய முடியும். வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பவர்கள், தத்தமது அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப தாம் விரும்பிய வடிவங்களில் ஒழுங்கமைத்துக் கொள்ளலாம். இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களது கூட்டுசெயற்பாடாக எமது அரசியல் முன்னெடுப்புகள் அமையட்டும். தொடரும் உரையாடல்களினூடாக உயர்ந்த பட்ச ஒற்றுமை அடையப்படும் பட்சத்தில் குழுக்கள் இன்னமும் நெருக்கமாக செயற்படுவது, இணைவது சாத்ததியப்படலாம். இல்லாவிட்டால் தேசியம், ஜனநாயகம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை அடிப்படையாக கொண்ட ஒரு விரிவான கூட்டமைப்பு பற்றிய சிந்தனைகளுடன் எமது நடவடிக்கைகளை சிறிய அளவிலேனும் உடனடியாக தொடங்கியாக வேண்டும்.

இன்றுள்ள நிலைமையின் பாரதூரமான தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் ஏகபோக தலைமையை நிலைநாட்ட முனைந்த புலிகள், ஏனைய மாற்று அமைப்புக்கள் எதுவுமே இல்லாது வன்மமாக அழித்துவிட்டு இன்று தாங்களும் அழிந்து போயுள்ளார்கள். நாட்டிலுள்ள ஏனைய அமைப்புக்கள் சிறீலங்கா அரசின் கைப்பாவையாக, அல்லது தமது உயிரின் உத்தரவாதம் கருதி சிறீலங்கா அரசிற்கு சவால் விடுக்க முடியாதவர்களாக மௌனமாக்கப் பட்டுள்ளார்கள். புலம் பெயர் புலிகளோ இன்னமும் பினாமி சொத்து பற்றிய பிரச்சனையை தீர்க்க முடியாமல் அடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சிறீலங்கா அரசு தானாக தீர்வுகளை முன்வைக்காத போது ஐ. நா மற்றும் சர்வதேச அமைப்புக்கள் மூலமாக நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியும், ஏனைய பலவிதமான போராட்டங்களை தமிழர்கள் முன்னெடுப்பதனாலுமே போராட்டத்தை மேற்கொண்டு தொடர முடியும். இதற்கு நாம் விரிவான அளவில், பரந்துபட்ட அளவில் உடனடியாக அமைப்பாக ஒழுங்கமைக்கப்பட்டாக வேண்டும். அதுவும் சர்வதேசரிதியில் இதனை செய்தாக வேண்டும். நாடு கடந்த பாராளுமன்றமோ, அல்லது பலஸ்தீன தேசிய கவுன்சில் போன்ற வடிவங்கள் மூலமாகவோ அல்லது இன்னோரன்ன வேறு வடிவங்கள் மூலமாகவே இதனை செய்தாக வேண்டும்.

இந்த நோக்கில் யார் யார் இணைந்து செயற்படு முன்வருகிறார்களோ அவர்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு செயற்பட நாம் தயாராக இருக்க வேண்டும். புலிகள் மட்டுமல்ல, ஏனைய அமைப்புக்களான EPRLF அமைப்பு, ரெலோ அமைப்பு, புளொட் அமைப்பு, NLFT….. போன்ற சிறு குழுக்களையும் இணைத்து செயற்பட தயாராக இருக்க வேண்டும். தமிழர் தேசியம், ஜனநாயகம், பன்முக தன்மை என்பவை மட்டுமே இந்த செயற்பாடுகளில் இணைந்து கொள்வதற்கான நிபந்தனைகளாக இருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் புலிகள் தேசிய விடுதலைக்கு இழைத்த தவறுகள் சிறியவை அல்ல. அதனை யாரும் இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. அந்த கட்டத்தில் ‘புலியெதிர்ப்பு வாதத்திற்கு’ ஒரு தார்மீக நியாயமும் இருந்தது. ஆனால் இப்போது புலிகளே அழிந்து விட்டார்கள். இதற்கு மேலும் நாம் புலியெதிர்ப்புவாதத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதானது, எதிர்காலத்தில் நாம் செய்தாக வேண்டிய பணிகளில் இருந்து எம்மை வழிதவற வைத்துவிடும். எனது நண்பர் ஒருவர் கூறியது போல இது “ பாம்பைப் பிடித்த குரங்கின் கதை” ஆகிப் போய்விடக் கூடாது அல்லவா?

புலிகள் திருந்துவார்களா, அவர்கள் ஏனையோரை விழுங்கிவிட மாட்டார்களா போன்ற கேள்விகள் நியாயமாவைதாம். இது பற்றி யாரும் யாருக்கும் உத்தரவாதம் வழங்க முடியாது. ஆனால் இப்போதுள்ள முக்கிய வித்தியாசம், பன்முக தன்மையை அங்கிகரிப்பதாகும். ஆனால் இதனையும் கடந்த இன்னும் பல விடயங்களை தற்போதைய புலிகளின் தலைமை செய்தாக வேண்டும். கடந்த காலத்தின் பாரிய மனித உரிமை மீறல்கள், அரசியல் படுகொலைகள், ஏக பிரதிநிதித்துவம் என்ற நிலைப்பாடு, இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை தவறென ஒத்துக் கொண்டு, சுயவிமர்சனம் செய்வதன் மூலமாக மட்டுமே, புலிகளின் புதிய தலைமை தனது நம்பக தன்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சுருக்கமாக சொல்வதானால், புலிகள் தமது கட்ந்த கால அரசியலை கட்டுடைக்காமல், மன்னிப்போம் மறப்போம் என்ற பாணியில் அதே அரசியலை தொடர முனைவது எந்த நல்ல விளைவுகளையும் நீண்ட கால நோக்கில் கொண்டு வந்துவிட முடியாது.

இப்படிப்பட்ட நிலைமைகளின் கீழ், யாரும் யாரோடும் நிர்ப்பந்தமாக இணைந்தாக வேண்டிய அவசியம் கிடையாது. தாம் விரும்பிய நபர்களுடன், தாம் சரியென நம்புக் கொள்கைகளின் அடிப்படையில், தாம் தேர்ந்தெடுக்கும் அமைப்பு வடிவங்களில் அவரவர்கள் இணைந்து அமைப்பாக்கம் பெறுவோம். இப்போதைக்கு இந்த அமைப்புகளின் ஒரு விசாலமான கூட்டுச் செயற்பாடு (Grand Coalition) என்பதற்கு மேல் நாம் யாரையும் நிர்ப்பந்திக்கத் தேவையில்லை.

நாம் எம்மை ஒழுங்கமைப்பது, விரிவான ஒரு கூட்டமைப்பை நோக்கி முன்னேறுவது போன்ற விடயங்களை பேசும் போதே இன்று தளத்திலுள்ள நிலைமைகள் பற்றி பாராமுகமாக இருக்கவும் முடியாது. அந்த விதத்தில் பின்வரும் விடயங்கள் எமது உடனடி கோரிக்கைகளாக அமைய வேண்டும் என்று கருதுகிறேன்.

• அனைத்து அகதி முகாம்களையும் உடனடியாக மூடி மக்களை தத்தமது சொந்த இடங்களில் குடியமற அனுமதி: மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் அந்த முகாம்களை சர்வதேச அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
• அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
• இராணுவத்தை திருப்பியழை. தேவைப்பட்டால் ஐ. நா. படைகளை நிலை நிறுத்து வேண்டும்.
• அனைத்து துணை இராணுவ குழுக்களையும் ஆயுதம் களைப்பு செய்ய வேண்டும்.
• அவசரகால சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட அமைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் உடன் இரத்து செய்தாக வேண்டும்.
• கடந்த காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், காணாமற் போதல் மற்றும் போர்க்கால குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணைக்கு ஏற்பாடு செய்தல் வேண்டும்.
• அரசியல் தீர்வுகளை உடனடியாக முன்வைத்து, தமிழ் மக்களின் அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.
• தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை எட்ட முடியாவிடில் தமிழர் தாயகத்தை ஐ. நா பொறுப்பில் ஒப்படைக்கப்பட வேண்டும். ஐ. நா வின் பரிபாலனத்தின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை செயற்படுத்தட்டும்.
• உலகத்திற்கு நாடகமாடும் உள்ளூராட்சி தேர்தல்களை உடன் இரத்து செய்ய வேண்டும். தமிழ் மக்கள் இந்த தேர்தலை நிராகரிக்க வேண்டும்.

இதனுடன் தொடர்புபட்ட முன்னைய கட்டுரை : நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

நாடு கடந்த அரசாங்கமும் அரசியல் தீர்வு முயற்சிகளும் – கலாநிதி எஸ்.ஐ. கீதபொன்கலன்

sri-lanka.jpgஇலங்கையில் தமிழ் அரசியல் என்பது சுவையானதும் முக்கியமானதுமான ஒரு காலகட்டத்தில் இருப்பதினாலும், தென்னிலங்கையில் கூறிக்கொள்ளக்கூடிய நிகழ்வுகள் எதுவும் இன்மையினாலும் தவிர்க்க முடியாதபடி தமிழ் அரசியல் பற்றியே கவனம் செலுத்த வேண்டிய ஒரு அவசியம் காணப்படுகின்றது. தமிழ் அரசியல் செயற்பாடுகளின் எதிர்காலம் அல்லது எதிர்கால செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் ஒன்று அவசியப்படுகின்ற பின்னணியில் இவ்விடயம் பற்றிய ஆவுகள் பயனற்றவையாக இருக்கப்போவதில்லை.

2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழ் சமூகத்தினுள் காணப்பட்ட மாற்றுக் கருத்துகள் மென்மையான ஒரு முறையிலேயே முன்வைக்கப்பட்டிருந்தன. மாற்றுக் கருத்துகள் உரத்துக் கூறப்படவில்லை அல்லது அவ்விதம் கூறக்கூடிய சூழ்நிலை ஒன்று காணப்பட்டிருக்கவில்லை. இதன் கருத்து என்னவெனில் குறைந்தது மிக அடிப்படையான பிரச்சினைகளில் பெரும்பான்மை அபிப்பிராயம் ஒருமுகப்படுத்தப்பட்டதாக இருந்தது. இந்நிலை இன்று காணப்படவில்லை. அடிப்படையான பிரச்சினைகளில் தமிழ் அபிப்பிராயம் பாரிய அளவிற்குப் பிளவுபட்டுள்ளது போன்றே தோன்றுகின்றது. தேசிய மட்டத்தில் இவ் அபிப்பிராயம் வேறுபாடு வெளிப்படுத்தப்படுகின்றதோ இல்லையோ சமூக மட்டத்தில் தெளிவானதாகவே உள்ளது. இதற்குப் பல்வேறு உதாரணங்கள் சுட்டிக்காட்டப்படலாம்.

அவ்வகையில் பிரதானமான ஒரு விடயம் அரசியல் இலக்கு என்பது பற்றி இலங்கையில் தற்போது வாழ்ந்துவரும் தமிழர்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இடையிலான அபிப்பிராய வேறுபாடு அல்லது வேறுபட்ட நிலைப்பாடு ஆகும். இவை இரண்டும் முழுமையாக வேறுபட்ட திசைகளில் பயணிக்கத் தொடங்கியுள்ளது போல் தோன்றுகின்றது. சுருக்கமாகக் கூறுவதாயின் உள்ளூர் அபிப்பிராயம் ஒன்றிணைந்த இலங்கையினுள் அரசியல் தீர்வு என்ற நிலைப்பாட்டை நோக்கி நகரத் தொடங்குகின்றபோது புலம்பெயர்ந்த தமிழர்கள் தனிநாடு என்ற நிலைப்பாட்டை கைவிடாதிருக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவே நாடு கடந்த அரசாங்கம் என்கின்ற வாசகம், அல்லது கோஷம்.

முதலில் உள்ளூர் அபிப்பிராயத்தை எடுத்துக் கொள்வோமாயின், நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியது போன்று தற்போது அவர்களது அரசியல் எதிர்பார்ப்பும் தன்நம்பிக்கையும் பாரியளவில் நகர்ந்துள்ளது. இதன் காரணமாக எதைக் கொடுத்தாலும் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்ற ஒரு சாரார் காணப்படவே செய்கின்றனர். இன்னுமொரு சாரார் இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று கருதப்பட்ட 13 ஆவது திருத்தத்தை வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். உண்மையில் இன்று பேசப்படுகின்ற 13 ஆவது திருத்தம் 1987 ஆம் ஆண்டு பேசப்பட்டதிலும் குறைவானதாகும். ஏனெனில் 87 ஆம் ஆண்டு வடக்கும் கிழக்கும் இணைந்த பொதியையே நாம் சட்டமாக்கியிருந்தோம். இன்றைய நிலை அதுவல்ல.

தமிழ் ஈழம் என்பது உரத்துக் கூறப்பட்ட காலத்திலேயே இலங்கை வாழ் தமிழ் மக்களிடையே சமஷ்டி, (அதாவது ஒன்றிணைந்த இலங்கையினுள் தீர்வு) என்பதற்கு பாரிய ஆதரவு காணப்பட்டிருந்தது. அதன் காரணமாகவே 2002 ஆம் ஆண்டு ஒஸ்லோவில் சமஸ்டி பற்றிய இணக்கம் காணப்பட்டபோது அதற்கு தமிழ் மக்களிடையே பாரிய வரவேற்பு இருந்தது. ஆயினும் இந்த தமிழ் சமூகத்தினுள் இருந்து சமஸ்டி என்ற பதத்தை பார்ப்பதோ கேட்பதோ கடினமானதாக மாறிவிட்டுள்ளது. இது அவர்களது அரசியல் தன்னம்பிக்கையில் ஏற்பட்ட தளர்வின் வெளிப்பாடே அன்றி வேறில்லை. இருப்பினும் தெரிவு ஒன்று வழங்கப்படுமாக இருப்பின் அவர்கள் சமஸ்டி தீர்வு ஒன்றை நாடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. இதன் கருத்து ஒன்றிணைந்த இலங்கை என்ற எண்ணக் கருவினுள் வழங்கப்படக் கூடிய தீர்வு இலங்கையில் இருக்கின்ற தமிழ் மக்கள் மட்டில் ஏற்புடையதாகவே இருக்கும் என்பதாகும்.

இதன் மறுபக்கம் என்னவெனில் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களிடையே தனிநாடு என்ற எண்ணக்கரு பலவீனமானதாகவே காணப்படுகின்றது. இலங்கையில் தமிழ் மக்களுக்கான தனியான ஒரு நாடு என்ற எண்ணக்கரு என்றுமே நடைமுறைச் சாத்தியமான அரசியல் இலக்காக இருக்கவில்லை. அன்று அது பிராந்திய அரசியல் யதார்த்தங்களினால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. உதாரணமாக 1980 களில் இந்தியா, தமிழ் இராணுவர் குழுக்களுக்கு ஆதரவு வழங்கிய செயற்பாடே கூட ஈழ எதிர்ப்பு கொள்கையின் மீதே தோற்றுவிக்கப்பட்டிருந்தது. புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட போது சட்டரீதியாகக் கூறப்பட்ட காரணம் தனிநாடு எனும் புலிகளின் அரசியல் இலக்கு இந்திய தேசிய நலனுக்கு எதிரானது என்பதே ஆகும்.

செப்டெம்பர் 11 தாக்குதலும், அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச யுத்தமும் இலங்கையில் மட்டுமல்ல உலகின் எந்த ஒரு பாகத்திலும் அரசுக்கு எதிரான போராட்டங்களை, குறிப்பாக வன்முறைப் போராட்டங்களை வெற்றி பெற முடியாதவையாக மாற்றி இருந்தன. இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்ட சமூகங்களில் தந்திரோபாயங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் கூடியளவான அரசியல் இலாபத்தை அடைந்து கொள்ளும் செயன்முறை தோற்றுவிக்கப்பட்டிருந்தது. துரதிஷ்ட வசமாக இலங்கையில் இந்த யதார்த்தம் புரிந்துகொள்ளப்படவில்லை. இதன் காரணமாக ஏற்பட்ட அரசியல், சமூக நட்டங்கள் சாதாரணமானவை அல்ல.

யுத்தத்தில் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை இராணுவம் சந்தேகத்திற்கிடமற்ற வகையில் நிரூபித்துள்ள ஒரு விடயம் இலங்கையில் தமிழர்களுக்கு தனியான ஒரு நாடு சாத்தியமற்றது என்பதாகும். இதுவும் ஒன்றிணைந்த இலங்கையினுள் தீர்வு என்பதற்கான ஆதரவு அதிகரிப்பதற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.

இத்தகைய ஒரு நிலையிலேயே புலம்பெயர்ந்த தமிழர்களிடையே இருந்து நாடு கடந்த அரசாங்கம் ஒன்றை அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் ஏற்கனவே, குறிப்பாக தென்னிலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விமர்சனங்களுக்கு அப்பால், இந்த யோசனை உள்ளூர் ரீதியாக பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

இதுதொடர்பில் நோக்கப்பட வேண்டிய பிரதானமான விடயம் நாடுகடந்த அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்பதாகும். பொதுவாக நாட்டிற்கு வெளியிலான அரசாங்கங்கள் குறுகிய எதிர்காலத்தில் நாடு திரும்பி உண்மையான அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்திலேயே தோற்றுவிக்கப்படுகின்றன. இலங்கையில் அவ்விதமான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான கோட்பாட்டு ரீதியான, நடைமுறை ரீதியான சாத்தியம் இல்லை என்பது தெளிவாகப் புரிகின்றபோது நாடுகடந்த அரசாங்கத்தின் நோக்கம் பற்றிய கேள்விகள் நியாயமானவையாகவே காணப்படும்.

அதேசமயம், யோசனை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வரலாற்றில் இருந்து சரியான பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லையோ என்ற சந்தேகத்தையும் தோற்றுவிக்கின்றது. நடைமுறை சாத்தியமற்ற இலக்கு மீதான பற்று பல அரசியல் தவறுகளுக்கு இட்டுச் சென்றுள்ள பின்னணியில் இது முக்கியமானதொரு கேள்வியாக அமைந்து விடுகின்றது. இதன் கருத்து நடைமுறை சாத்தியமான இலக்குகளை வகுத்துக் கொள்வது சகல தரப்பினருக்கும் நலன்களைக் கொண்டுவரும் என்பதாகும். உதாரணமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் நாடுகடந்த அரசாங்கமாக அன்றி தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்றை அடைந்து கொள்வதற்கான இயக்கமாக செயற்படுகின்றபோது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சாத்தியம் அதிகமாகும்.

இருப்பினும், நாடுகடந்த அரசாங்கத்தினால் உள்ளூர் ரீதியாக ஏற்படக்கூடிய பிரதான பிரச்சினை என்னவெனில், அது உள்ளூர் ரீதியாக அரசியல் தீர்வு ஒன்றை தேடுகின்ற செயன்முறையைக் கடினமானதாக ஆக்கிவிடக்கூடும். இச் செயன்முறையில் இரு பிரதானமான காரணிகள் காணப்படுகின்றன. ஒன்று தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் தீர்வு ஒன்றைத் தேடுவதற்கான ஆர்வம் காணப்படவேண்டும். நாடுகடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக தனிநாடு பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை அதிகரிக்கின்றபோது தீர்வை தேடும் நாட்டம் குறைந்து விடலாம். இரண்டாவது நியாயமான அரசியல் தீர்வு ஒன்றின் மூலம் பெறப்படுகின்ற அதிகாரங்களும், நலன்களும் தமிழர்களினால் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்ற நம்பிக்கை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுவது அவசியம். இந்த நம்பிக்கை அதிகரிக்கின்றபோது தீர்வின் மூலம் பெறப்படுகின்ற கட்டமைப்பின் அதிகாரங்கள் உறுதியாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமானவையாகும்.

இருப்பினும், தனிநாடு என்கின்ற சுலோகமும் கடல்கடந்து செயற்படுகின்ற அரசாங்கம்போன்றதொரு குழுவும் விஸ்வரூபமெடுத்து நிற்கின்ற போது சிங்கள மக்களிடையே இந்த நம்பிக்கை ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவானதாகும். எனவே, நாடு கடந்த அரசாங்கம் என்கின்ற எண்ணக்கரு தென்னிலங்கையில் அரசியல் தீர்விற்கான எதிர்ப்பியக்கத்தை உறுதிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

அதேசமயம், இராணுவ வெற்றியை அடிப்படையாகக் கொண்டு சிறுபான்மையினர், குறிப்பாக தமிழர்கள் ஒடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற அபிப்பிராயம் ஒன்றும் காணப்படுகின்றது. இவ்வித அடக்கி ஆளும் செயற்றிட்டத்தை நாடுகடந்த அரசாங்கம் போன்ற எண்ணக்கருக்கள் இலகுபடுத்தி நியாயப்படுத்திவிடக் கூடும்.

நாடு கடந்த அரசாங்க யோசனை ஏற்படுத்திய நடைமுறை ரீதியான சிக்கல்களுக்கு ஒரு உதாரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் உள்ளூர் முகவராக செயற்படும் என்று அறிவித்தமையாகும். புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து த.தே.கூட்டமைப்பை தனிமைப்படுத்துவதற்கான முயற்சி ஒன்று காணப்பட்டிருந்தது. இது அவர்கள் புலிகளின் முகவர்களாக செயற்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டினடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு முயற்சி ஆகும். ஆயினும் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தின் பின்னணியில் தலைமைத்துவத்தை வழங்குவதில் த.தே.கூட்டமைப்பிற்கு முக்கிய பங்கு ஒன்று காணப்படுகின்றது. இப்பங்கு தம்மை கடந்த காலத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு சுயாதீனமான அரசியல் கட்சியாக மாறுவதன் மூலமே பூர்த்தி செய்யப்படலாம். இதனை அறிவிப்பு நிச்சயமாகப் பாதித்திருந்தது. உண்மையில் இவ் அறிவிப்பு த.தே.கூட்டமைப்பை தனிமைப்படுத்தும் நோக்கில் பயன்படுத்தப்பட்டிருகக்கூடும். எனவே, த.தே.கூட்டமைப்பு இவ் அறிவிப்பிற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்நிலைப்பாடு கட்சியின் எதிர்கால செயற்பாட்டிற்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை.

அதேசமயம், தற்போதைய நிலையில் அனைத்து தமிழ் அரசியல் குழுக்களுமே வன்முறையை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நிச்சயமாக இது அகிம்சை பயனளிக்கும் என்ற நம்பிக்கையினால் ஏற்பட்ட நிலைப்பாடு அல்ல. மாறாக தமிழ் மக்களைப் பொருத்தவரை வேறு மாற்றுவழி ஒன்று காணப்படவில்லை. ஜனநாயகக் கட்டமைப்பினுள் அமைந்த ஒன்றிணைந்த இலங்கையினுள் நியாயமான தீர்வு ஒன்றை அடைந்து கொள்வதற்கான வன்முறை அற்ற இயக்கம் புதிய நண்பர்களை உருவாக்கக் கூடும் என்பது முக்கியமானது.

நன்றி: தினக்குரல் 05.07.2009

கருத்துப்புலிகள் அல்லது சற்றேறக்குறைய காகிதப்புலிகள் : ஆதவன் தீட்சண்யா

Athavan TheedchenvanTamilnathy._._._._._.

(ஈழத் தமிழர்களுடைய பிரச்சினை தமிழகத்திலும் நிறைந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது தெரியாததல்ல. அதேநேரம் இப்பிரச்சினை தமிழக அரசியல் தளத்தைக் கடந்து இலக்கிய மற்றும் சிற்றிதழ் தளங்களிலும் சர்ச்சைக்குரிய விடயமாக ஆகியுள்ளது. ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள அரசியல் முரண்பாடுகள் தற்போது தமிழகத்திலும் பிரதிபலிக்கின்றது. தமிழ்நதி – ஆதவன் தீட்சண்யா போன்றோரின் கருத்துநிலை முரண்பாடுகள் அதனை வெளிப்படுகின்றது.

ஆதவன் தீட்சண்யா தேசம்நெற் க்கு அனுப்பி வைத்துள்ள கட்டுரை இம்முரண்நிலையை வெளிப்படுத்தி நிற்கின்றது. கட்டுரையை வாசிப்பவர்கள் அதன் தொடர்ச்சியை புரிந்து கொள்வதற்காக தமிழ்நதி தனது புளொக்கில் வெளியிட்டுள்ள கட்டுரைகள் பின்னே இணைக்கப்பட்டு உள்ளது.)
._._._._._.

தமிழ்நதி அவர்களுக்கு,
வணக்கம்.                                                                                                                                 

1.
நான் உங்களைப்போல புலியடிமையல்ல. அல்லது மொன்னையான புலி ஆதரவு / எதிர்ப்பு அமைப்பு எதுவொன்றின் உறுப்பினனுமல்ல. எனவே இலங்கை / ஈழம் சார்ந்து உணர்ச்சிப்பிழம்புகள் நடத்தும் எந்தவொரு விவாதத்திலும் குறுகிய ஆதாயங்களுக்காக பங்கேற்கும் நோக்கம் எதுவும் எனக்கில்லை. எனது வாசிப்பு மற்றும் தோழர்கள் நண்பர்களுடனான உரையாடல்கள் வழியே எட்டிய புரிதல்கள் வழியே நான் இலங்கைத் தமிழர் பிரச்னையை புரிந்துகொள்கிறேன். சிங்களப் பேரினவாதத்தால் பீடிக்கப்பட்ட ஒரு அரசின் பயங்கரவாதத்திற்கு ஆளாகிவிட்ட இலங்கைத் தமிழர்களை நான் வாழும் காலத்தின் மிகக்கொடிய துயரமாக கருதுகிறேன்.

அதேவேளையில் ஜனநாயக உரிமைகளுக்காவும் சுயமரியாதைக்காவும் இலங்கை மக்கள் மேற்கொண்ட போராட்டத்தை என்றென்றைக்குமாக மிகப்பெரும் பின்னடைவுக்குள் தள்ளிவிட்டவர்கள் என்ற முறையிலும் ஏகப்பிரதிநிதித்துவம் என்கிற தன்முனைப்பில் பிற இயக்கங்களையெல்லாம் அழித்தொழித்தவர்கள் என்பதற்காகவும் புலிகள் மீது எனக்கு கடும் விமர்சனங்களுண்டு. புலிகள் இயக்கத்தின் பாசிசத்தன்மை, இந்துத்துவ வெறி, இஸ்லாமிய எதிர்ப்பு, சாதியழிப்பு பேசியவர்களையும் கம்யூனிஸ்ட்டுகளையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் தலையெடுக்கவொட்டாமல் தீர்த்துக்கட்டியவர்கள் என்று அந்த விமர்சனங்களுக்கான காரணங்கள் இன்னும் நீள்கின்றன. ஆகவே இலங்கைத் தமிழர் பிரச்னையில் எனது அக்கறை புலிகள் சார்ந்தது அல்ல, அது எளிய மக்கள் சார்ந்தது. இனவெறி ராணுவத்தின் இலக்காகவும் புலிகளின் கேடயமாகவும் சிக்கித் தவித்த லட்சக்கணக்கான மக்கள் குறித்தது. தமிழ்நாட்டின் அகதிகள் முகாமில் கைதிகளைப் போல வதியும் ஏதிலிகள் பற்றியது. ( இனவுணர்வின் மிகுதியில் எகிறிக் கொண்டிருக்கும் பல தலைவர்கள் இருக்கும் தமிழ்நாட்டில் அகதி முகாம்கள் எந்தளவிற்கு வாழத்தகுதியற்றதாய் இருக்கின்றன என்பது நீங்கள் அறிந்ததுதானே? )

தங்களது உட்சாதிப் பிரிவைக்கூட தாண்டி வெளியே வரத் துணியாத சாதிவெறியர்கள் இங்கே எழுப்பும் தமிழ் இனம் என்கிற முழக்கத்தின்பால் எனக்கு எப்போதும் ஈர்ப்பு ஏற்பட்டதில்லை. தலித்துகள் தாக்கப்படும்போதெல்லாம் இவர்கள் தீண்டத்தக்க சாதியினராகவும், சிறுபான்மையினர் தாக்கப்படுகையில் சுத்த இந்துக்களாகவும் பெண்ணுரிமை குறித்த விவாதங்களில் உள்ளாடையை கழற்றிக் காட்டத் துணிகிற ஆண்களாகவுமே வெளிப்படுகின்றனர். இத்தகைய குறுகிய வட்டங்களுக்குள் அடைபட்டுக் கிடக்கிற இனவுணர்வுத் திலகங்கள்தான் இன்று உங்களைப் போன்றவர்களின் கபடம் நிறைந்த பேச்சுக்கு கைதட்டும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அதிகாரப் பெருமிதமும் சாதிய சிறுமதியும் கொண்ட இவர்கள் இலங்கையின் பூர்வீகத் தமிழர்களை தம் சொந்த இனமாகவும், தமிழ்நாட்டிலிருந்து 150 வருடங்களுக்கு முன்பு இலங்கைக்கு பிடித்து செல்லப்பட்ட தமிழர்கள் குறித்து  பாராமுகமாகவும் இருக்கின்றனர்.

இவற்றையெல்லாம் உள்ளடக்கியே புதுவிசை இதழின் தலையங்கங்கள், நேர்காணலில் எழுப்பப்படும் கேள்விகள் அமைந்துள்ளன. எனவே ஈழப்பிரச்னையில் உள்ளன்று வைத்து புறமொன்று பேசி உங்களை நான் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டதாக கருதவில்லை. உங்களது நிலைப்பாட்டைச் சொல்ல உங்களுக்கிருக்கும் அதே உரிமை எனக்கும் உண்டு. ஆனால் அப்படியரு ஜனநாயகப் பண்பை கடந்தகாலத்தைப் போலவே இனியும்கூட நீங்கள் எட்டப்போவதில்லை என்பதற்கு என்னைப் பற்றிய உங்கள் அவதூறான பதிவே நிரூபணம்.

2.

‘ஓரளவுக்கு பதட்டம் தணிந்தால்கூடப் போதும், நான் ஊருக்குப் போய்விடுவேன்’ என்று கீற்று.காம் நேர்காணலில் தாங்கள் தாய்மண் பாசத்தோடு சொல்லியிருந்தபடியால் இந்நேரம் இலங்கைக்கு பறந்தோடிப்போய் மக்களோடு மக்களாகத்தான் இருப்பீர்கள் என்றெல்லாம் அதீதமாக நான் நினைத்துக்கொண்டிருக்கவில்லை.  ஆகவே மதுரை முகாமில் உங்களைப் பார்த்தபோது (அகதிகள் முகாமில் அல்ல- அங்கு போய் அவதியுற உங்களுக்கு தலையெழுத்தா என்ன?) எனக்கு சற்றும் அதிர்ச்சியில்லை. எனக்குத் தெரியும், இலங்கை முழுவதும் ஏ.சி.செய்யப்பட்டாலும்கூட நீங்கள் நாடு திரும்ப மாட்டீர்கள் என்று. இலங்கை ராணுவத்தாலும் உங்களது பிரியத்திற்குரிய போராளிகளாலும் சுடுகாட்டுச் சாம்பல் கொண்டு நிரவப்பட்டுவிட்ட அந்த மண்ணுக்குத் திரும்புகிற அளவுக்கானதல்ல உங்களது தாய்நாட்டு பக்தி. ஏனென்றால் நீங்கள் நேசித்தது நாட்டையோ மக்களையோ அல்ல, புலிகளை. (உடனே ஆதவன் என்னை நாட்டை விட்டுப் போகச் செல்கிறான் என்று திரித்து அடுத்தப் பதிவு எழுதி மூக்கு சிந்த பதைக்காதீர்கள் தமிழ்நதி. அந்த மலிவான உத்தி எல்லா நேரத்திலும் கைகொடுக்காது. )

ஆனால் நான் ஆச்சர்யப்பட்ட விசயம் என்னவென்றால், ‘இந்த தேவேந்திர பூபதியிடமிருந்து எப்படி என்னை தற்காத்துக் கொள்வது என்பதுதான்  தமிழ்நாட்டில் எனக்கு மிகப்பெரிய சவாலாகவும் திகிலாகவும் இருக்கிறது…’ என்று 2009 ஜனவரியில் அஞ்சி நடுங்கிய தமிழ்நதி இப்போது ஏன் அதே தேவேந்திரபூபதி நடத்துகிற முகாமுக்கு வலிய வந்திருக்கிறார் என்பதுதான். ஒருவேளை பூபதியைக் கையாளும் தற்காப்புக்கலையை அவர் பயின்றிருக்க வேண்டும் அல்லது சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று அதன் பிடரியை உலுக்குவது என்று தீர்மானித்து புறநானுற்று மறத்தமிழச்சியாக மனதளவில் மாறியிருக்கக்கூடும் என்று சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

மதுரை கூடல் சங்கமத்தின் இறுதி அமர்வில் தாங்கள் பேசத்தொடங்கும் போது ‘எனக்கு கதைகள் அவ்வளவாக வராது, அவை எல்லாமே சோதனை முயற்சிகள்தான்’ என்று சொன்னீர்கள். 24 மணிநேர அவகாசம்கூட எடுத்துக்கொள்ளாமல் ரெடிமிக்ஸ் சாம்பார் செய்கிற அதிரடி வேகத்தில் ‘ஆதவன் தீட்சண்யா தந்த அதிர்ச்சி’ என்ற தலைப்பில் பிரமாதமான ஒரு கதையை எழுதத் தெரிந்த  நீங்களே இப்படி உங்களை மட்டம்தட்டிக் கொள்ள வேண்டியதில்லை. ஒட்டுமொத்த நிகழ்விலிருந்தும் உங்களது நோக்கத்திற்கு இயைவான துணுக்குகளை மட்டும் தேர்ந்தெடுத்து நீங்கள் எழுதியிருக்கும் இந்த கதைக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையைப் பார்த்தாலே தெரியவில்லையா உங்கள் கதை வாசகர்களை ஈர்க்கும் வல்லமை கொண்டது என்பது? நீங்கள் திரித்துச் சொன்ன கதையை உண்மையென நம்பி ஈழப்போராட்டத்தின் லேட்டஸ்ட் துரோகி ஆதவன்தான் என்று முத்திரைக் குத்துவதற்கு சிலர் கிளம்பியிருப்பதும்கூட உங்கள் கதைத்திறமைக்கு கிடைத்த வெற்றி என்று கொண்டாடுங்கள் தமிழ்நதி.

(ஷோபா சக்தி ராஜபக்ஷேவிடம் வாங்கியப் பணத்தில்  ஒரு பகுதி ஆதவனிடம் இருப்பதாகவும் அந்தப் பணத்தில்தான் இப்படி மிடுக்காக திரிகிறார் என்றும், செருப்பால் அடிக்கவேண்டும் என்றும் வந்த பின்னூட்டங்களை மகிழ்ச்சியோடு பிரசுரித்துவிட்டு ‘‘ஆதவன் மீதும் ஷோபா சக்தி மீதும் தாக்குதல் தொடுத்து பின்னூட்டங்களை நான் வெளியிடவில்லை, எனக்கென்று சில அடிப்படை நேர்மைகள் உண்டு’’ என்று  மற்றுமொரு சுவாரசியமான கதையை தொடங்கியிருக்கிறீர்கள். இப்படியெல்லாம் பேசுவதற்கு கூசவில்லையா உங்களுக்கு? பணம் பெற்றிருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தவரும் மற்றும் அதை ‘நேர்மையோடு’ வெளியிட்ட தாங்களும் இந்த அவதூறுக்கான ஆதாரத்தை அவசியம் வெளியிட்டாக வேண்டும். அதுபோலவே செருப்பால் அடிக்கவிரும்புகிறவர் அநாமதேயம்போல் ஒளிந்து கொண்டிருக்காமல் நேருக்குநேர் என்னைச் சந்திக்க வேண்டும். அந்த சந்திப்புக்கான ஏற்பாட்டை அவருடைய நண்பர் என்ற வகையில் தாங்கள்தான் செய்யவேண்டும். இவ்விரண்டு விசயத்திலும் உங்களிடம் ஒருபோதும் சமரசம் கிடையாது) 

28.06.08 அன்று நடந்தவை எல்லாவற்றையும் மீண்டும் நன்றாக நினைவுபடுத்திக்கொண்டு தாங்கள் எழுதியிருப்பதெல்லாம் உண்மையா என்று ஒருமுறை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என்றெல்லாம் நான் வற்புறுத்தமாட்டேன். அந்தளவிற்கு உங்களுக்கு அறிவு நாணயம் இருந்திருந்தால் இப்படியரு கட்டுக்கதையை எழுதத் துணிந்திருக்கமாட்டீர்கள். எனவே நடந்ததை நானே ஒருமுறை உங்களுக்கு ரீவைண்ட் செய்து காட்டவேண்டியிருக்கிறது. உலகத்திலிருப்பவர்களெல்லாம் எங்களுக்காக ரத்தக்கண்ணீர் வடிக்க வேண்டும், ஆனால் மற்றவருக்காக நாங்கள் ஒரு சொட்டு உப்புக்கண்ணீரைக்கூட சிந்தமாட்டோம் என்று சத்தியம் செய்துவிட்டு வந்திருக்கிற உங்களுக்காகவெல்லாம் எங்களது நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறதே என்ற ஆற்றாமையோடுதான் இதை எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

அந்த அமர்வில் என்முறை வந்தபோது, எழுதுவதில் நான் சந்திக்கும் இடர்ப்பாடுகள் குறித்து மட்டுமே பேசிவிட்டு அமர்ந்துவிட்டேன். எனக்கு அடுத்து நீங்கள் பேச வந்தீர்கள். ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ’ என்று நீங்கள் யாரையோ பார்த்து கேள்வி கேட்டிருந்தால் நான் என்பாட்டுக்கு இருந்திருப்பேன். ஆனால் ‘ சமூக ஒடுக்குமுறைகளை காத்திரமாக எதிர்த்து எழுதுகிற ஆதவன் தீட்சண்யா ஏன் ஈழத்தமிழர் குறித்து எழுத மறுக்கிறார்’ என்று நீங்கள் மிக நேரடியாக என்னைக் கேட்டதை முன்னிட்டே நான் பேசித்தொலைக்க வேண்டியதாயிற்று என்பதையாவது மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். நரியோ நதியோ இடமும் போகாமல் வலமும் போகாமல் என்மீதே குறிவைத்துப் பாய்ந்தநிலையில்தான் நான் பேச வேண்டியிருந்தது என்பதை ஒப்புக்கொள்ளவும்கூட உங்களுக்கு ஆதரவாக ஊளையிட்டவர்கள் தயாரில்லாத நிலையில்தான் இந்த தன்னிலை விளக்கம்.

3.

‘‘நான் ஏன் எழுதவில்லை என்று கேட்க தமிழ்நதிக்கு உரிமையிருப்பதைப் போலவே தமிழ்நதியிடம் கேட்பதற்கு சில கேள்விகளும் அதை கேட்பதற்கான உரிமையும் எனக்கிருப்பதாக கருதுகிறேன். தமிழ்நாட்டில் இருக்கிற தமிழ்நதி இங்கு நிகழும் எத்தனை ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்?

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாக ஆடுமாடுகளைப்போல லட்சக்கணக்கான தமிழர்கள் பிடித்துச் செல்லப்பட்டனர்.  அந்த அடிமைத்தனத்திலிருந்தும் கொடிய சுரண்டலிலிருந்தும் அட்டைக்கடியிலிருந்தும் தம்மை விடுவித்துக் கொள்வதற்காக அவர்கள் நடத்தியப் போராட்டங்களுக்கு ஆதரவாக ஈழப்படைப்பாளிகள் எத்தனைபேரின் கவிமனம் பதறித் துடித்திருக்கிறது? பிறந்தமண்ணை பிரிந்து ஏறத்தாழ 150 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இலங்கை அரசாங்கம் அவர்களது குடியுரிமையைப் பறித்து சுமார் 10 லட்சம் பேரை நடுத்தெருவில் நிறுத்தியபோது ஈழப்படைப்பாளிகள் எத்தனைபேர் தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தினார்கள்? ( இந்தியத் தமிழர்களுக்கு ஆதரவாக செல்வநாயகம் பாராளுமன்றத்தில் பேசியதை படைப்பாளிகளின் கணக்கில் வரவி வைக்கத் துணிந்துவிடாதீர்கள்)

2005 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக கருத்தரங்கு ஒன்றில் எழுத்தாளர் அந்தனி ஜீவா, ‘இன்றளவும்கூட இலங்கைத்தமிழருக்கும் இலங்கையிலுள்ள இந்தியத்தமிழருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டதை சமீபத்திய செங்கதிர் இதழ் மறுபிரசுரம் செய்துள்ளதே- அதை என்னவென்று புரிந்து கொள்வது? இந்தியத் தமிழர்களை தோட்டக்கூலிகள், கள்ளத்தோணிகள் என்று இலங்கைத்தமிழர்கள் இன்றளவும் ஏளனம் பேசுவதைக் கண்டித்த ஈழப்படைப்பாளிகள் என்று யாரைக் காட்டுவீர்கள்? இந்தியாவிலிருந்து பிடித்து செல்லப்பட்ட இந்த மலையகத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள் என்பதால் அவர்களை தமிழர்கள் என்று இனரீதியாக இணைத்துக்கொள்ள யாழ்ப்பாண வெள்ளாள மனநிலை இடம் கொடுக்கவில்லை என்பதைக் கண்டித்து எழுதிய ஈழப்படைப்பாளிகள் உண்டா? 

தமிழ்பேசும் முஸ்லிம்கள் அனைவரையும் ஈழ விரோதிகள் என்று முத்திரை குத்தி 48 மணி நேர கெடு விதித்து  500 ரூபாய் பணம் அல்லது அதற்கீடான பொருளுடன் வெளியேற்றிய புலிகளின் இனச்சுத்திகரிப்பைக் கண்டித்த படைப்பாளி எவரேனும் உண்டா ஈழத்தில்? 

தமிழ்நாட்டில் வெண்மணியில் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டபோது ஈழத்திலிருந்து எந்த குரலும் ஒலிக்கவில்லை. திண்ணியத்தில் தலித்துகள் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமையை எதிர்த்தோ இதோ இப்போதும் உத்தபுரத்தில் மறித்து நிற்கிற சாதிச்சுவரை இடிக்க வேண்டுமென்றோ ஈழத்திலிருந்து எழுந்த தமிழினக்குரல் எதுவுமுண்டா? 

இதையெல்லாம் நீங்கள் செய்யவில்லை என்பதற்காக நாங்களும் எழுதவில்லை என்று ஏட்டிக்குப் போட்டியாக – டிட் ஃபார் டாட் என்று நான் சொல்வதாக நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. இலங்கைத்தமிழர் மீது நிகழ்த்தப்படும் கொலைபாதகங்களை ஏற்றுக்கொள்கிறவர்கள் இங்கு யாருமில்லை. அது குறித்த ஆழ்ந்த கவலைகள் எமக்குண்டு. ஆனால் அதற்காக ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை?’ என்று காசி ஆனந்தனைப்போல அதிகாரத்துக்காக நான் எழுத முடியாது.

இலங்கைத் தமிழர் பிரச்னை என்பது மட்டுல்ல, பொதுவாகவே சமகால நிகழ்வுகளை உள்வாங்கிச் செரித்து படைப்பாக வெளிப்படுத்துவதில் தமிழகப் படைப்பாளிகளிடம் ஒரு மனத்தடை இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஏதோ ஒரு கண்ணி அறுபட்டுக் கிடக்கிறது. ஒருவேளை கூட்டாக விவாதித்து அதை கண்டுபிடிப்போமானால் உடனடி நிகழ்வுகள் மீது படைப்புகள் வரலாம். அதுகுறித்து வேண்டுமானால் பேசலாம்…’’

4.
மேற்கண்டவை தான் அந்த அமர்வில் நான் பேசியவை. இவையெல்லாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கைவசமிருக்கும் வீடியோ பதிவில் இடம் பெற்றிருப்பது ஒரு ஆறுதலான விசயம்தான். அதை விடுத்து  உங்கள் பதிவில் இட்டுக்கட்டி குறிப்பிட்டுள்ளவாறு ‘நாங்கள் ஈழத்தமிழர்களுக்காக பேசவேண்டுமென்று, குரல் கொடுக்க வேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?’ என்றோ ‘எங்களுக்கே ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன, உங்களுக்காக நாங்கள் ஏன் பேச வேண்டும் எழுத வேண்டும்’ என்றோ நான் பேசவில்லை. பொய் சொல்லியாவது உங்கள் வலைப்பதிவின் வாசகர்களிடம் அப்ளாஷ் பெறுவது என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கும் பட்சத்தில் உங்களது பொய்யின் அளவு இன்னும் கூடும் என்று எதிர்பார்க்கிறேன்.

நான் பேசி முடித்ததும் நீங்கள், ‘நாங்கள் அதையெல்லாம் செய்யவில்லை என்பதற்காக இப்போது எங்களை பழிவாங்குகிறீர்களா ஆதவன்..?’ என்று கேட்டீர்கள். ஏட்டிக்குப் போட்டியில்லை என்றும் சமகாலப் பிரச்னைகளுக்கு முகம் கொடுப்பதில் தமிழகப்படைப்பாளிகளின் மனநிலை குறித்தும் நான் பேசியிருந்த நிலையில் நீங்கள் வேண்டுமென்றே திரித்துப் பேசுகிறீர்கள் என்பதை உணர்ந்தாலும் பொறுப்புடன் பதில் சொல்ல நான் மீண்டும் எழுந்தேன். அவ்வாறு நான் எழுந்ததை ‘ஆதவன் என்னைத் தாக்க எழுந்தார்’ என்று பதிவில் தலைவிரிக்கோலமாக எழுதாமல்  விட்ட உங்களது பெருந்தன்மைக்கு எப்படியாவது நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். அப்படி நான் எழுந்தபோதுதான் யோக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரான டி.கண்ணன் துள்ளியெழுந்து- வால் மட்டும் தெரிகிறது சார் என்று சொன்ன மாணவனைப்போல- ‘இது அயோக்கியத்தனம்’ என்று கத்தினார். எது அயோக்கியத்தனம் என்று நான் கேட்கும்போது, லேனாகுமார் ‘இது அவன் ஒருத்தனோட கருத்து. தமிழ்நாட்டு மக்களின் கருத்தல்ல…’ என்று கூறினார். ஒருவேளை என்னைத் தவிர்த்து மீதியுள்ள ஆறரைக்கோடி தமிழர்களும் அவரிடம் ஆதரவு கையெழுத்துப் போட்டு பிரமாணப்பத்திரம் எதுவும் கொடுத்திருக்கிறார்களோ என்னமோ என்று ஒருகணம் அசந்துதான் போனேன். அவர் சொன்னதும் ஒரு தனிமனிதனின் கருத்துதான் என்பதை மறந்துவிடுவதில்தான் உங்களுக்கெல்லாம் எவ்வளவு ஆர்வம்? அப்போது ஒரு கும்பல் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு ‘ஆதரவாக பல குரல்கள் எழுந்தன’ என்று எழுதி உங்களை நீங்களே இன்னும் எத்தனை காலத்திற்கு ஏமாற்றிக்கொள்ளப் போகிறீர்கள் தமிழ்நதி?

இந்தக்கட்டத்தில்தான் அரசு நுழைந்தார். அரசு என்றால் வன்முறைக்கருவி என்பது வீ.அரசுக்கும் பொருந்தும்போல. ‘ஆதவன் சொன்னதைப்போல இலங்கை வரலாற்றைப் பற்றி பேச இங்குள்ள பலரிடமும் ஏராளமான விசயங்கள் இருக்கு. அங்கு நிகழ்ந்த தவறுகள் ஏராளம். ஆனால் அதைப் பற்றி இப்போது பேசுவது உள்நோக்கம் கொண்டது.  ஆதவன் நடத்தும் புதுவிசை என்ற பத்திரிகையில் ( சிறுபத்திரிகை அரசியல் என்ற புத்தகத்தில் புதுவிசை என்ற பெயரை கவனமாக மறந்திருந்த அரசுவுக்கு இப்போது எப்படியோ ஞாபகம் வந்துவிட்டது பாருங்களேன்) சுரேந்திரன் என்பவருடைய பேட்டியை வெளியிட்டிருக்கிறார். (சுசீந்திரனைத்தான் சுரேந்திரன் என்கிறார்) அந்த சுரேந்திரன் புலிகளை கொச்சைப்படுத்தியிருக்கிறார். அதுவும் உள்நோக்கம் கொண்டது… ’ என்று நீட்டி முழக்கி ‘தவறான புரிதலோடு இருக்கிறீர்கள் என்று சொல்வதற்காக மன்னிக்க வேண்டுகிறேன் ஆதவன்…’ என்று ஆவேசமாக முடித்தார். (பலத்தக் கைத்தட்டல் என்று இவ்விடத்தில் ஒரு பிட்டை ஏன் குறிப்பிடாமல் விட்டீர்கள் தமிழ்நதி?).  நீங்கள்தான் தவறாகப் பேசியிருக்கிறீர்கள் அரசு. ஆகவே நீங்கள் கேட்டபடியே உங்களுக்கு மன்னிப்பு வழங்கத் தயாராக இருக்கிறேன் என்றேன்.

தாங்குமா அரசுவுக்கு? நான் சொன்ன வார்த்தையை வச்சிக்கிட்டு என்கிட்டயே விளையாட்டுக் காட்டுறியா… நான் தமிழ் வாத்தியான். என்கிட்ட வார்த்தை விளையாட்டுக் காட்டாதே… என்று எகிறினார். அவர் சலாமியா பாஷைக்குகூட வாத்தியாராக இருந்துவிட்டுப் போகட்டுமே, எனக்கென்ன அதைப்பற்றி? நான் அவரிடம் இலக்கணப்பாடத்தில் சந்தேகம் கேட்டு வந்த ஸ்கூல் பையனில்லையே? பின் எதற்கு இந்த எகிறாட்டம் என்று யோசிக்கும்போதே அடுத்த ரவுண்டுக்கு இறங்கினார் அரசு. ஈழத்தைப் பற்றி எனக்கொன்னும் சொல்லாதயா… போய்யா உன் வேலையப் பாத்துக்கிட்டு… என்றதும் ‘வாய்யா போய்யான்னு பேசறதுதான்  ஒரு பேராசிரியருக்கு அழகா?’ என்று நான் கேட்டதும் சுதாரித்துக்கொண்ட நமது மாண்புமிகு பேராசிரியப் பெருமகனார், ‘வாய்யா போய்யாங்கறது தமிழ்ல மரியாதையான சொல்தான்’ என்று பதவுரை பொழிப்புரை பகன்றார். ‘அப்படியானால் உங்க மாணவர்களை இனிமேல் உங்களை வாய்யா போய்யான்னே கூப்பிடச்சொல்லய்யா..’. என்று நானும் மரியாதை கூட்டி மறுமொழி பகன்ற பின் ஓரிரு மணித்துளிகளில் முகாம் முடிந்துவிட்டது.

ஆனால் இவ்விடத்தைப் பற்றி எழுதும்போதுதான் உங்களது ‘செலக்டிவ் அம்னீசியா’ வேலை செய்கிறது தமிழ்நதி. ‘இருவரும் வாய்யா போய்யா’ என்ற அளவுக்கு இறங்கினார்கள் என்று பொத்தாம் பொதுவாக உங்கள் பதிவில் எழுதிக் கடக்கிறீர்கள். அரசுவின் வாய்த்துடுக்கை கண்டிக்கத் துப்பில்லையா அல்லது தங்களுக்கு ஆதரவாக பேசியதற்கு பிரதிக்கருணையா?

விக்கிரமாதித்யன் இரண்டு நாட்களாக எதெதற்கோ ஸ்பிரிங் போல துள்ளிக் குதித்து என்னவெல்லாமோ பேசினார். அதையெல்லாம் குறிப்பிடாமல் உங்களுக்குத் தேவையானதை மட்டும் வெட்டி ஒட்டிக் காட்டுகிற இந்த எடிட்டிங் வேலையை எங்கே கற்றீர்கள்? அதற்கு பிறகு பேருந்தில் மதுரை வரை என் பக்கத்து இருக்கையில் அமர்ந்து அதே விக்ரமாதித்யன் என்னிடம் சொன்னதையெல்லாம் இப்போது நான் எழுதினால் என்ன சொல்வீர்கள்? 

விசயம் இத்தோடு முடியவில்லை. கூட்டம் முடிந்து வெளியே வரும்போது, ‘நீங்கள் வேறு ஏதோ கணிப்பில் என்னை டீல் செய்யறீங்க ஆதவன். தேவையில்லாமல் என்னை தமிழ் வாத்தியான் என்றெல்லாம் பேசிவிட்டீர்கள்’ என்றார் அரசு. நானொரு தமிழ் வாத்தியானாக்கும் என்று முண்டா தட்டத் தொடங்கியவர் அவர்தான், நானில்லை என்று தெரிவித்துவிட்டு நகர்ந்தேன். நாம் மீண்டும் பேசுவோம் என்றார். ‘இப்படித்தான் பேசுவோம் என்றால் நாம் பேசி என்ன ஆகப்போகிறது என்றேன். கையைப் பிடித்து நிறுத்திய  டி.கண்ணன் ‘நீ சொன்ன விசயமெல்லாம் சரிதாண்டா தம்பி. நேரம்தான் சரியல்ல’ என்றார். வெண்மணியில் இங்க எரியறப்பவும் அங்க அவங்க அநாதையாத்தாண்டா இருந்தாங்க என்று வரலாற்றை ஒரு தீட்டாக்கோணத்திற்கு திருப்பிவைத்தார் கண்ணன்.

இது பொருத்தமான நேரமல்ல, இந்த விசயத்தைப் பேச இதுவா நேரம்?, எப்ப எதைப் பேசணும்னு ஒரு கணக்கிருக்கில்ல என்ற வார்த்தைகள் ஈழப்போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து காதில் விழுந்து கொண்டேயிருக்கிறது. மாற்றுக்கருத்துகளில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொள்ள திராணியற்று நேரப்பொருத்தம் வாய்க்கவில்லை என்று இன்னும் எத்தனை காலத்திற்கு தப்பித்துக்கொள்ள முடியும்? மாற்றுக்கருத்து எதுவொன்றையும் பேச இது தருணமல்ல என்ற அறிவிப்போடு நிகழ்த்தப்பட்ட கொலைகள் தான் எத்தனை? அழிக்கப்பட்ட அமைப்புகள் ஒன்றா இரண்டா?

நேற்று பேச முயற்சித்தபோது, போராட்டக் களத்தில் இருக்கிறவர்களை விமர்சிக்கக்கூடாது என்று குரல்வளையைக் கவ்வினீர்கள். இன்று பேசும்போது அது இழவுவீடு என்கிறீர்கள். கடந்த கால் நூற்றாண்டு காலமாக இலங்கைத் தமிழ்மக்களின் வீடுகளில் தொடர்ந்து இழவு விழுந்து கொண்டேதான் இருக்கிறது. தியாகமென்றும் துரோகமென்றும் நானாவிதப் பெயர்களோடு மரணத்தை அவர்களுக்கு விநியோகித்தவர்கள் இப்போது கொல்லப்பட்ட நிலையில்தான் உங்களுக்கெல்லாம் இழப்பின் வலி உறைக்கிறது. ஆகவே இப்போதும் மௌனம் காக்கச் சொல்கிறீர்கள். இன்னும் நாலைந்து வருடம் கழித்துப் பேசினால், அதுதான் எல்லாம் முடிந்துவிட்டதே இப்போது எதற்கந்தப் பேச்சு என்று அப்போதும் வாயடைக்கப் பார்ப்பீர்கள்.  

நிகழ்ந்துவிட்ட இழப்புகளுக்கு சம பொறுப்பாளியாக இருந்தவர்களை அடையாளம் காட்டி அம்பலப்படுத்திவிடும் எந்தவொரு உரையாடலையும் மறுப்பதற்கே நேரப்பொருத்தம் என்ற வார்த்தைஜாலம் களமிறக்கப்படுகிறது. நேரம் கணிப்பதில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் பட்சத்தில் டி.கண்ணனும்  தமிழாசிரியர் அரசுவும் ஒரு நன்முகூர்த்தத்திற்காக காத்திருக்கட்டும். ஆனால் அதை என்மீது பிரயோகிக்க அவர்களுக்கு உரிமையில்லை.

உங்களுக்கு மேலும் சில விசயங்கள் தமிழ்நதி-

தங்களுக்கு உவப்பில்லாத விசயங்களைப் பேசுகிறவர்களையெல்லாம் ‘சிறுமை கொண்டவர்கள்’ என்று மதிப்பீடு செய்யும் புலிகளின் புத்தி உங்களுக்கும் இருக்கிறது. அதுசரி, ‘கத்த புத்தி செத்தால்தான் போகும்’ என்பது மூத்தோர் வாக்கு. பெருமைக்கும் சிறுமைக்குமான துலாக்கோலை உங்களுக்கு வழங்கியது யார் அம்மணி? அல்லது பாம்பின் கால் பாம்பறிகிறதா? ஒரு மாற்றுக்கருத்தை எதிர்கொள்ளத் திராணியற்று  பின்னூட்டம்  என்ற பெயரில் வசைபொழிகிற பத்து அநாமதேயங்கள் இருக்கிற தைரியத்தில் நீங்கள் எதுவும் எழுதுவீர்களோ?

மாற்றுக்கருத்து எல்லாவற்றுக்கும் ஷோபாசக்திதான் பிறப்பிடமா? அ.மார்க்ஸ் பேசினாலும் ஆதவன் பேசினாலும், நீலகண்டனோ அடையாளம் சாதிக்கோ  புத்தகம் போட்டாலும் அவர்களை உடனே ஷோபாசக்தியின் சீடர்களாக்கிவிடுவதில் உங்களைப் போன்றவர்களுக்கு அப்படியென்ன அலாதிப் பிரியம்? மேய்ப்பனின் கீழ் உழன்ற மந்தை மனோபாவம் பிறரையும் அவ்வாறே பார்க்கப் பணிக்கிறதா? உங்களது குரலுக்கு எஜமானர்களாக யாரையும் வைத்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களின் குரல் சுதந்திரமானதாய் இருக்கக்கூடும் என்று நம்புவதற்கான பயிற்சியை இனியாவது கைக்கொள்ளுங்களேன். எனது குரல் பிரான்சிலிருந்து கேட்கிறதென்றால், உங்களது குரல் எங்கிருந்து ஒலிக்கிறது என்று கேட்பதும் சாத்தியம்தானே? தமிழ்நாட்டின் எந்தவொரு சமூக- அரசியல் பிரச்னையிலும் தலையிடாத சிலர் இலங்கைத் தமிழர் பிரச்னையில் மட்டும் உரத்து முழங்கி உக்கிரவேஷம் போடுவதற்குப் பின்னால் வெறும் இனவுணர்வு மட்டும்தான் இருக்கிறதா என்று கேள்வி எழுப்ப எவ்வளவு நேரமாகும்? உங்களது சந்தேகத்தை திருப்பிப்போட்டு எதிர்மறையாக நீட்டித்தால், இலங்கைத் தமிழர்கள் செரிந்து வாழும் கனடாவை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் குடியேறியிருப்பதற்கான உள்நோக்கம் என்ன என்றும்கூட ஒருவர் குதர்க்கமாக கேட்டுவிட முடியும்.

உங்களுக்கு நியாயம் கேட்கிற அவசரத்தில் ‘எங்கோ இருக்கிற குஜராத்’ என்கிறீர்கள். தமிழ்நாட்டானைப் பொறுத்தவரை குஜராத் எங்கோ இருக்கிறது என்ற தர்க்கத்தில் இறங்கினால், இலங்கையும் தமிழ்நாட்டானுக்கு எங்கோ இருக்கிற ஒன்றாகிவிடும் என்பதாவது தங்களுக்குப் புரிகிறதா? எங்கோ இருக்கிற இலங்கையில் நடக்கிற பிரச்னைகளுக்கு இங்கே ஏன் 14 தமிழர்கள் தம்முயிரை மாய்த்துக் கொண்டனர் என்ற கேள்வி எழும்பாதா? உங்களுக்கென்ன, வென்றால் ஈழம் தோற்றால் இலங்கை. ஆனால் உங்களுக்காக இறந்துபோன அந்த இந்தியத் தமிழர்கள் 14 பேரின் குடும்பத்துக்கும் என்ன இருக்கிறது? அவர்கள் உங்களை எங்கோ இருக்கிற இலங்கைத்தமிழராக பார்க்கவில்லையே?  ஆனால் இலங்கையில் இஸ்லாமியர்களைக் கொன்றும் எஞ்சியவர்களை இரவிரவாக விரட்டியடித்தும் பெருமிதம் கொண்ட இந்து மனோபாவத்தின் எச்சம் உங்களுக்குள்ளிருந்து, எங்கோ இருக்கிற குஜராத்தின் இஸ்லாமியருக்கு  ஆதரவாக குரல் கொடுப்பவர்களைப் பார்த்து எரிச்சலடைகிறதோ? அதெப்படி உங்களால் அப்படி சொல்ல முடிகிறது? இங்குள்ள தமிழர்கள் யாருக்காக துக்கப்பட வேண்டும் என்பதைக்கூட நீங்கள்தான் தீர்மானிப்பீர்களோ? ஒடுக்கப்படுகிற ஒரு சமூகம் உலகின் பலபாகங்களில் ஒடுக்கப்படுகிற பிற சமூகங்களோடு இயல்பாகவே ஒருமைப்பாடு கொண்டிருக்கும். ஆனால் உங்களுக்கேன் இந்த வன்மம்? எனக்கொன்றும் பதில் சொல்ல வேண்டியதில்லை, முடிந்தால் ஒருமுறை யோசித்துப் பாருங்கள்.

இலங்கையின் ஒரு பகுதிக்குள்ளேயே இருக்கிற இந்தியத் தமிழர்களை ஒதுக்கிவைத்திருக்கிறீர்கள். ‘இந்தியத் தமிழர்களைத் தங்களுடன் அரவணைத்துக் கொள்வது பற்றி இலங்கைத் தமிழர்கள் நினைத்தும் பார்க்கவில்லை’ என்கிறார் அந்தனி ஜீவா ( செங்கதிர்- மே 2009 பக்கம்- 10). ஆனால்   நீங்கள்  இங்கேயுள்ள அவர்களது சொந்தங்களான எங்களிடம் வந்து துளியும் உறுத்தலின்றி ‘‘எங்களுக்காக குரல் கொடுங்கள்’’  என்று கேட்கிறீர்கள். ‘ஆடு பகை குட்டி உறவு’ என்று  எங்களூரில் சொல்லப்படும் ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. அதுகுறித்து நாங்கள் எதுவும் கேள்வி எழுப்பினால் சிறுமைப் புத்தி உள்ளவர்கள் என்று பதிவு எழுதக் கிளம்பி விடுகிறீர்கள். சரி, எங்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை என்று உங்களுக்கு வெகு அருகாமையில் ஒட்டியிருக்கும் கிழக்கு மாகாணத்து தமிழனிடமாவது உங்களால் கேள்வி எழுப்ப முடியுமா? அவர்கள் ஏன் உங்களிடமிருந்து பிரிந்து போனார்கள்? அவர்களில் ஒருவரும் ஏன் உங்களுக்காக தீக்குளிக்கவில்லை? உண்ணாவிரதம் ஊர்வலம் என்று ஒரு சுக்கும் நடக்காதது ஏன்? எல்லாவற்றுக்கும் கருணாவையும் பிள்ளையானையும் காரணமாக்கிவிட முடியுமா?

உங்கள் தேவைக்காக தமிழினம் என்று குரல் கொடுத்துக்கொண்டே உடனிருக்கும் தமிழர்களை அண்டவிடாமல் ஒதுக்கிவைத்தீர்கள், ஒழித்துக்கட்டினீர்கள். இந்த சூதுக்கள் அம்பலமாகிவிடும் என்பதால்தான் மாற்றுக்கருத்து தெரிவிப்போரை துரோகிகளாக சித்தரிக்கும் இழிவான செயல்களை கைக்கொள்கிறீர். உங்களையழிக்கும் துரோகிகள் வெளியிலிருந்துதானா வரவேண்டும்? புலிகளின் துரோகிகள் புலிகள்தான் என்ற உண்மையை எப்போது படிக்கப்போகிறீர்கள்?

மாற்றுக்கருத்துக்கு செவிமடுக்கும் ஜனநாயகப்பண்பும் சகிப்புத்தன்மையும் அற்ற புலிகளின் அராஜகப் போக்கு தமிழ்நாட்டிலும் பரவிக் கொண்டிருக்கிறது. அந்தப் போக்குக்கு இரையானவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தாங்கள் அறிந்திருப்பதே இறுதி உண்மை என்று நிறுவப்பார்க்கிறார்கள். அடுத்தவர் கருத்தை பொறுமையற்று கேட்கிறார்கள். அல்லது கேட்க மறுத்து காதையும் மனதையும் மூடிக் கொள்கிறார்கள். தாங்கள் வைத்திருக்கும் பலவீனமான நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ள மேலும் மேலும் அவர்கள் குறுங்குழு வாதங்களுக்குள் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு காலமும் புலிகளிடம் இருந்த துரோகி முத்திரையை இப்போது யார் முதுகில் குத்தலாம் என்று ஏந்தி அலைகிறார்கள். ‘புலிகள் ஈழத்தில் இருக்கமாட்டார்கள், ஆனால் புகலிடத்தில் இருப்பார்கள்’ என்றார் சுசீந்திரன். தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள் என்று சொல்லும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அப்படியானவர்களுக்கு ஒரு சாமர்த்தியமான- கற்பனை வளம்மிக்க- கதை ஜோடிக்கத் தெரிந்த ஒரு தலைவி தேவைப்படலாம். எனவே இங்கேயே இருங்கள். வீம்புக்காகவோ ரோஷத்திலோ ஊருக்குப் போறேன்னு கிளம்பிவிட வேண்டாம்.

மற்றபடி படைப்பாளியின் பார்வை எப்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் சொல்லும் இலக்கணமெல்லாம் சரிதான். ஆனால் அடுத்தவர்களுக்கு உபதேசிக்கும் முன் ஒருமுறையாவது அதை நீங்கள் கடைபிடிக்க வேண்டுமென்பதுதான் இதிலுள்ள அக்கப்போர். அதற்காக குறைந்தபட்சம் இப்போதாவது ஒரு மட்டக்களப்பானை, ஒரு இஸ்லாமியனை, ஒரு மலையகத்தமிழனை, முடிந்தால் ஒரு சிங்களனையும்கூட உங்களைப்போலவே அவர்களும் மனிதர்கள்தான் என்று நினைக்கப் பழகுங்கள்.

பார்த்துப் பழகிய ஆதவனை இனி பார்க்க முடியாது, பொய்யாகவேனும் ஒரு புன்னகையைக்கூட உதிர்க்க முடியாது என்று எழுதியிருக்கிறீர்கள். தனக்கு உவப்பான கருத்தைச் சொல்லாதவன் முகத்தில் விழிக்கக்கூடாது என்ற இந்த நினைப்புதான் சகிப்பின்மையாக உருவெடுத்து சகோதரப் படுகொலைகளை நிகழ்த்த உங்கள் தலைமையை இட்டுச் சென்றது. ஆனால் நான் உங்களை எதிர்கொண்டால் பேசுவேன். உள்ளார்ந்த அன்போடு புன்னகைப்பேன். இன்னா செய்தாரை ஒறுப்பது என்ற ரீதியில் அல்ல, கருத்துகளும் தனிமனித உறவும், ஒன்று மற்றொன்றுக்கான பலியோ பணயமோ அல்ல என்று நம்புவதால்.

._._._._._.

07.01.2009

தோழர் காமராஜுக்கு ஒரு கடிதம்

அன்புத் தோழர் காமராஜூக்கு

முதலில் உங்கள் அக்கறைக்கு நன்றி. இந்தப் பதிலை எழுதுவதற்கு முன்பு உங்களிடம் நான் ஒன்று சொல்லிவிடுகிறேன். “ஈழத்தமிழருக்காக நீங்கள் ஏன் பேசவில்லை, எழுதவில்லை?” என்று இனி இந்தத் தமிழகத்தில் பறக்கும் ஒரு குருவியிடம் கூட கேட்கமாட்டேன். ஏதோவொரு ஆதங்கம், பதைப்பு, நப்பாசை. கண்ணீர் விட்டுக் கதறிக் கேட்டும் கண்திறக்காமல் இருந்தன மத்திய, மாநில அரசாங்கங்கள். மக்களாவது எங்களோடு இருக்கிறார்கள் என்று நம்பியிருந்தோம். தேர்தல் முடிவு வெளியான அன்று அதுவும் பொய்த்தது. (அதிமுக வந்தால் ஒரு தேறுதல் என்று எதிர்பார்த்தோமேயன்றி பெரிய மாறுதல்களையல்ல என்பதை இங்கே சொல்லவிரும்புகிறேன்.) ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தில் உழைத்த உண்மையான உணர்வாளர்களை நான் இங்கு மறந்துவிட்டுப் பேசவில்லை. அவர்கள் எங்களுக்காகத் துடித்ததை நாங்கள் அறிவோம். சீமான், நெடுமாறன் ஐயா இன்னபிறர் மற்றும் குறிப்பிட்டளவான மக்களின் இதயம் எங்களுக்காகத் துடித்தது. அந்த நன்றி உணர்ச்சி எங்களிடம் இருக்கிறது. தொடர்ந்தும் இருக்கும்.

நான் அரசியல்வாதி அல்ல. எனக்குத் தெரிந்ததெல்லாம் புத்தகங்களும் எழுத்தாளர்களுந்தான். அவர்களை எனது நண்பர்களாகவும் வழிகாட்டிகளாகவும் முன்னோடிகளாகவும் ஆதர்சங்களாகவும் நம்பியிருந்தேன். இந்த அந்நிய நிலத்தில் அவர்களை எனது உறவினர்களாகக்கூட உள்ளுக்குள் கருதினேன் என்பதுதான் உண்மை. எழுத்து சார்ந்த நெகிழ்வு அது. அதைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. சாதாரணர்களிலும் ஒருபடி மேலானவர்களாக அவர்கள் இருக்கவேண்டும் என்று நான் பேராசைப்பட்டேன்.

அன்று கடவு கூட்டத்தில் அந்தக் கேள்வியை முன்வைத்தது ஒரு ஆதங்கத்தினால். அங்கே எல்லாம் எரிந்து கரிந்து முடிந்தது. எங்கள் மக்கள் அகதி முகாம்களுக்குள் அடிமைகளாய், விலங்குகளாய் அடைபட்டுவிட்டார்கள். வாழ்விடங்கள் சிதிலமாகி விட்டன. இனி எழுதி ஒன்றும் செய்வதற்கில்லை என்பது எனக்கும் தெரிந்தே இருந்தது. இருந்தும், ‘எம்மவர்கள் நீங்கள் ஏன் மௌனிகளாய் வாய்மூடி இருந்தீர்கள்?’என்று எனக்குக் கேட்கத் தோன்றியது. ஏனென்றால், அப்படிக் கேட்பதற்கான சந்தர்ப்பம் அன்றைக்கு எனக்குக் கிடைத்தது. தமிழக எழுத்தாளர்கள் எழுதி ஈழப்பிரச்சனை தீராது என்பது எனக்குத் தெரியாதா என்ன? ஆனால், உலகில் நடந்த பல தேசிய விடுதலைப் போராட்டங்களில் எழுத்தாளர்களின் பங்கு அளப்பரியதாக இருந்தது. மக்களை அவர்கள் தங்கள் வார்த்தைகளால் வழிநடத்தினார்கள் என்று சொன்னாலும் மிகையில்லை. மக்களுக்குள் இருக்கும் சுதந்திர வேட்கையை எழுத்துக்கள் தூண்டவல்லன என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

வலையிலும் வெளியிலும் ஈழப்பிரச்சனை பற்றிய பல பதிவுகள் வந்துகொண்டிருப்பதாகக் கூறினீர்கள். ஒப்பீட்டளவில் நான் சில என்றே சொல்வேன். நமது மக்களின் மனமானது ‘செலிபிரிட்டீஸ்’ என்று சொல்லப்படுகிற பிரபலங்களால் உதிர்க்கப்படும் கருத்துக்களைக் கையேந்திப் பெற்று நெஞ்சுக்குள் இறக்கிவிடக்கூடியது. காமராஜ் ஆகிய நீங்கள் சொல்வதற்கும் ரஜனிகாந்த் ஒரு கருத்தைச் சொல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்கிறீர்கள் அல்லவா? அதேபோல இணையத்தில் அறியப்படாத ஒருவர் எழுதுவதற்கும் அதையே எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பிரபலம் எழுதுவதற்கும் நிச்சயமாக வித்தியாசம் இருக்கும். “எஸ்.ரா. இப்படிச் சொன்னாராம்…” என்று பரவலாகப் பேசவே செய்வர். அதனால்தான், “அந்த வரலாற்றுத் தவற்றை நீங்கள் ஏன் செய்தீர்கள்?” என்று அந்தக் கூட்டத்தில் கூடியிருந்த பிரபல எழுத்தாளர்களைப் பார்த்துக் கேட்டேன்.

அதற்கு ஆதவன் தீட்சண்யா ஆற்றிய எதிர்வினை நியாயமானதாக இருக்கவில்லை. மதிப்பிற்குரிய ஆளுமை என்று நான் கருதிக்கொண்டிருந்தவரிடமிருந்து அப்படியொரு பதில் வந்ததில் நான் ஆடிப்போய்விட்டேன். அந்த அதிர்ச்சியில் எழுதிய பதிவே அது. எனக்கும் ஆதவன் தீட்சண்யாவிற்குமிடையில் தனிப்பட்ட பிரச்சனைகள் எதுவுமில்லை. ஏன்… எனக்கும் ஷோபா சக்திக்குமிடையில் கூட தனிப்பட்ட பிரச்சனைகள் எதுவுமில்லை. ஆனாலும் அவர் தனிப்பட்ட முறையில் என்னை விமர்சித்து எழுதியிருந்தார். கருத்தினால் அடிக்க முடியாதவன் காலால் அடித்தது மாதிரி இருந்தது. நான் இலக்கியக் கூட்டத்திற்குப் போய் அருவியை ரசிப்பது இவருக்கு என்ன முறையில் வலிக்கிறது என்று தெரியவில்லை. கருத்துக்களால் மோதுவதுதான் ஆரோக்கியமாக இருக்கமுடியும். அதுதான் நாகரிகமும்கூட.

தோழர்இ நான் தலித்தியத்தைக் கேலி செய்வதான பின்னூட்டங்களை ஆதரிக்கவில்லை. அப்படிச் செய்யவும் மாட்டேன். தனிப்பட்ட முறையில் ஆதவன் மீதும் ஷோபா சக்தி மீதும் தாக்குதல் தொடுத்து வந்த பின்னூட்டங்களை நான் பிரசுரிக்கவில்லை. எனக்கென்று சில அடிப்படை நேர்மைகள் உண்டு. யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் எனக்குள் அந்த நேர்மையை வைத்திருக்கிறேன். அது எனக்கு மட்டுமே தெரியும். ஏனென்றால், நானும் பாதிக்கப்பட்டவள். ஈழத்தமிழர்கள், தலித்துகள், அரவாணிகள் எல்லோரும் சிறுபான்மையினர்தான்.

உண்மையில் இவ்வாறான சர்ச்சைகளில் ஈடுபட எனக்கு நேரமில்லை. தெருச்சண்டைகளில் ஈடுபடுவதில் எனக்கு நாட்டமுமில்லை. இயல்பில் அமைதியான ஆள்தான் நான். என் நண்பர்களிடத்தில் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். வீட்டிலும் வெளியிலும் நாட்டிலும் கூட எனக்கு நிறையப் பணிகள் இருக்கின்றன. இந்தக் கடிதத்தின் ஆரம்பத்தில் கூறியதுபோல ‘எங்களுக்காக நீங்கள் ஏன் பேசவில்லை?’ என்று இனி மறந்தும்கூட யாரிடமும் கேட்கமாட்டேன்.

அது எங்கள் கனவு. எங்கள் துயரம். எங்கள் அழிவு. எங்கள் அநாதரவு. எங்கள் பசி. எங்கள் பயம். எங்கள் இனம். எங்கள் கண்ணீர். எங்கள் இழப்பு. எங்கள் இருள். எங்கள் மண். அதற்கு ஏதாவது செய்யமுடிகிறதா என்று இனி நான் முயற்சி செய்கிறேன். என் எழுத்தால் துளியளவு வலி துடைக்க முடியுமெனில் அதற்காக எழுதுவேன்.

தயவுசெய்து எனக்குப் பதில் எழுதாதீர்கள் தோழர். நான் நொந்துபோயிருக்கிறேன். வாழ்க்கை இவ்வளவு குரூரமாக இருந்திருக்கக்கூடாது.
வருத்தங்களுடன்

தமிழ்நதி

._._._._._.

06.29.2009

ஆதவன் தீட்சண்யா தந்த அதிர்ச்சி!

முற்குறிப்பு: கடவு இலக்கிய அமைப்பால் மதுரையில் நடத்தப்பட்ட இரண்டுநாள் ‘கூடல் சங்கமம்’நிகழ்வுக்கு நானும் தோழி உமா ஷக்தியும் சென்றிருந்தோம். அனைவரின் ஒத்துழைப்புடனும் இறுக்கமான நேரக் கட்டுப்பாட்டுடனும் பயனுள்ளதாகவும் அந்தக் கூட்டம் சிறப்பாக நடந்துமுடிந்தது. இந்தப் பதிவு, கூட்டத்தின் முடிவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பற்றியது. இரண்டுநாள் நிகழ்ச்சிகளையும் பற்றி விரிவாக நிதானமாக ஆற அமர்ந்து எழுத எண்ணியிருக்கிறேன். அதற்குள், அக்குறிப்பிட்ட சம்பவம் பற்றி எனக்குள் பொங்கும் ஆற்றாமையைப் பதிவாக்கியிருக்கிறேன். இதைச் சாட்டாக வைத்துக்கொண்டு, ‘அந்தக் கூட்டமும் சொதப்பிட்டாம்ல’ என்று கதைபரப்பிவிட வேண்டாமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் நன்றாகவே நடந்தது.

‘நான் மநுவிரோதன்’ என்ற நேர்காணல் தொகுப்பு வெளியீட்டின்போது முதன்முதலில் ஆதவன் தீட்சண்யாவைப் பார்த்தேன். பரிச்சயம் செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படவில்லை. பின்னர் ‘மணல்வீடு’ ஹரிகிருஷ்ணனால் சேலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘களரி’நிகழ்ச்சியில் அவரைச் சந்தித்தபோது பேசக்கூடியதாக இருந்தது. சேலம் நிகழ்ச்சி முடிந்ததும், திருச்சி ‘யுகமாயினி’ கூட்டத்தில் கலந்துகொள்ளவெனப் புறப்பட்ட எழுத்தாளர் பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா இருவருடனும் நானும் கவிஞர் குட்டி ரேவதியும் இணைந்துகொண்டோம்.(சித்தனின் அழைப்பின்பேரில்) திருச்சி சென்ற வழி ஆரோக்கியமான உரையாடலில் கழிந்தது. ஆதவன் தீட்சண்யாவின் கவிதைகளிலுள்ள அரசியல் எனக்குப் பிடிக்கும். (புலியெதிர்ப்பு அரசியலை இங்கு நான் குறிப்பிடவில்லை) ஆதவன் தீட்சண்யா ஆசிரியராக இருக்கும் ‘புது விசை’ குறிப்பிடத்தக்க அளவில் அதிகார மையங்களின் மீது விமர்சனங்களை முன்வைப்பது, சாதி-மதம் போன்ற புனிதங்களின் மீது கேள்விகளை எழுப்புவதும் கண்டிப்பதுமான போக்கினால் அவர்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன். மதமும் சாதியும் மக்களை எவ்விதம் அடிமைப்படுத்துகின்றன என்று குட்டி ரேவதியும் ஆதவனும் பிரபஞ்சன் அவர்களும் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த அன்றைக்கு எனக்குள் ஆதவன் மீதான மதிப்பின் ‘மீட்டர்’ மேலும் எகிறியதைச் சொல்லியாக வேண்டும்.

ஆளுமைகள் என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பவர்களின் அடிமனங்களில் சிறுமைகள் புற்றெடுத்துக் குடிகொண்டிருப்பதைக் காணநேரும் காலமோ இது என்று தோன்றுகிறது.

நேற்றைய நிகழ்ச்சி முடிவில் ஒழுங்கமைக்கப்பட்ட கலந்துரையாடலில், சில எழுத்தாளர்களை அவர்களது படைப்பு மனோநிலை குறித்து வந்திருந்த ஏனைய எழுத்தாளர்களோடும் பார்வையாளர்களோடும் பகிர்ந்துகொள்ளும்படி கேட்கப்பட்டது. கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், சுரேஷ்குமார இந்திரஜித், உதயசங்கர், ஆதவன் தீட்சண்யா, நாஞ்சில் நாடன் இவர்களோடு எனது பெயரும் திடுமுட்டாக அறிவிக்கப்பட்டபோது, தயக்கத்தோடும் கொஞ்சம் பதட்டத்தோடும் முன்னால் சென்று அமர்ந்தேன். “இந்த ஜாம்பவான்களோடு என்னை ஏன் அழைத்தார்கள். இலக்கியத்தைப் பற்றி நான் என்னதான் பேசுவது?”என்று அருகிலிருந்த பிரபஞ்சன் அவர்களிடம் கேட்டேன். அவருக்கும் எனக்கும் இடையில் மதிப்பும் அன்பும் கலந்த ஒரு நல்லுறவு இருக்கிறது. தோழனைப்போலவும் தந்தையைப் போலவும் ஒரேசமயத்தில் இருக்கக்கூடிய எளிமையான மனிதர் அவர். “ஏதாவது பேசுங்கள்… இது கலந்துரையாடல்தானே… ஒன்றும் பேசமுடியாவிட்டால் ஆம் இல்லை என்று சமாளியுங்கள்”என்றார்.

எனது முறை வந்தபோது நான் என்ன பேசுவதென்று தீர்மானித்திருந்தேன்.

“பெரிய எழுத்தாளர்களெல்லாம் எழுதுவதைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்கள். எனது ஒரு சிறுகதைத் தொகுப்பும் கவிதைத் தொகுப்பும் மட்டுமே வெளியாகியிருக்கின்றன. அவற்றைஇ எழுத்துப் பயணத்தில் சிறு முயற்சிகள் என்றே சொல்வேன். எனவே அவர்களிலிருந்து வித்தியாசப்பட்டு ‘எழுதிய விடயங்களைத் தவிர்த்து, ஏன் எழுதப்படவில்லை?’என்பதைக் குறித்துப் பேசலாமென்று நினைக்கிறேன்.

சில மைல்கள் அருகில் இருக்கும் இலங்கையில் இத்தனை இனப்படுகொலைகள் நடந்தும் உங்களில் யாரும் அதைப் பற்றி ஒன்றும் பேசாமல், எழுதாமல் இருந்ததன் காரணந்தான் என்ன? நான் வாசித்தவரையில் நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரைகள் சிலவற்றில் ஈழப்பிரச்சனை பற்றி எழுதியிருக்கிறார். எழுத்தாளர்கள் என்பவர்களுக்கு சமூக அக்கறை, பொறுப்புணர்வு இருக்கவேண்டும். எனக்குத் தாங்கவியலாத வியப்பாக இருந்தது. இவர்களால் எப்படி இப்படி மௌனம் சாதிக்க முடிகிறது என்பது நெஞ்சை அறுக்கும் கேள்வியாக இருந்தது. ஈழப்பிரச்சனையைப் பற்றி எழுத அதைப்பற்றி எங்களுக்கு முழுவதுமாகத் தெரியாது என்று சொல்லி நீங்கள் ஒதுங்கிக்கொண்டுவிட முடியாது. பெண்களின் மனவுலகம் பற்றி எழுதுகிறீர்கள். அதற்கு நீங்கள் பெண்களாயிருக்க வேண்டியதில்லை. எங்கோ குஜராத்தில் நடக்கும் மதக்கலவரம் பற்றி அங்கு பிரசன்னமாக இருக்காமலே எழுதுகிறீர்கள். இங்கே பக்கத்தில் இருக்கும் இலங்கையில் நடக்கும் மனிதப்பேரழிவை, படுகொலையைப் பற்றி மட்டும் முழு அரசியலும் தெரிந்துகொண்டுதான் எழுதுவோம் என்று எப்படிச் சொல்லமுடியும்?

இங்கே இந்தக் கூட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் நாங்கள் பெண்கள் இருக்கிறோம். இவ்வளவு பெரிய கூட்டத்தில் இப்படி மிகச்சில பேராக இருப்பது எங்களுக்கு சங்கடமாக இருக்கிறது. இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு என்றெல்லாம் பேசுகிறீர்கள். ஆனால், இங்கே இந்தக் கூட்டத்தில் பெண்களின் விகிதாசாரம் எவ்வளவு? அவர்கள் ஏதோவொரு பிரச்சனையால் வரவில்லை என்றால், அதை நிவர்த்தி செய்ய, சமரசம் செய்ய, நீங்கள் ஏன் முயற்சிக்கவில்லை? பேசித் தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று இலக்கியச் சூழலில் இருக்கிறதா என்ன?

இங்கே கூடியிருக்கும் எழுத்தாளர்களில் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் எனக்கு மிகப்பிடிக்கும். பிரபஞ்சன் அவர்களைப் பிடிக்கும். நாஞ்சில் நாடன் அவர்களது எழுத்தும் அப்படியே. ஜெயமோகனுடைய சில தடாலடியான கருத்துக்களில் – எல்லோருக்கும் சரியென்று தோன்றுவதைத் தவறெனும் நிலைப்பாடுகளில், அரசியல் அதிரடிக் கருத்துக்களில் எனக்கு மாறுபாடுகள் இருந்தாலும், அவருடைய புனைவுலகம் அழகியது. நாம் அவருடைய புனைவுகளை விரும்பிப் படிக்கிறேன். உங்களிடமெல்லாம் நான் கேட்பது ஒன்றுதான். ஈழத்தமிழர்கள் விடயத்தில் இப்படி மௌனமாக, பாராமுகமாக, மனச்சாட்சியில்லாமல் நீங்கள் நடந்துகொண்டதற்குக் காரணந்தான் என்ன? நீங்கள் அதிகாரங்களுக்கு அஞ்சுகிறீர்களா? அசிரத்தையா? தயவுசெய்து எனக்குப் பதில் சொல்லுங்கள்”

கோணங்கியும் எஸ்.ராமகிருஷ்ணனும் அதற்குப் பதிலளித்தார்கள். அவர்களது பதில் திருப்திகரமாக இருக்கவில்லை. “எங்களுக்குள் அந்த நெருப்பு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. அது இனிக் கொழுந்து விட்டெரியும்” என்பது மாதிரியான பதில் ஏறத்தாழ முற்றுமுழுதாக எரிந்துமுடிந்து சாம்பலில் புகை அடங்காத ஒரு சமூகத்தைப் பார்த்துச் சொல்லக்கூடிய பதிலாக எனக்குத் தோன்றவில்லை.

அதையடுத்து ஆதவன் தீட்சண்யா ஒலிபெருக்கியை கையில் வாங்கிப் பேசத் தொடங்கினார்.

“நாங்கள் ஈழத்தமிழர்களுக்காகப் பேசவேண்டுமென்று, குரல்கொடுக்கவேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? என்று ஆரம்பித்தார்.

‘அம்பாளா பேசுவது?’என்ற திக்பிரமை படர, அவருடைய அறிவார்த்தமான பேச்சை உன்னிப்பாகக் கவனிக்கவாரம்பித்தேன்.

“இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, வெள்ளைக்காரர்களால் இந்தியாவிலிருந்து இலட்சக்கணக்கான தமிழர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள். அவர்கள், ஏற்கெனவே அங்கே இருந்த பூர்வீகத் தமிழர்களால், சாதித்தமிழர்களால் கீழ்த்தரமாக நடத்தப்பட்டார்கள். ‘கள்ளத்தோணி’ என்று அழைக்கப்பட்டார்கள். மலையகத் தமிழர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டபோது, இலங்கைப் பாராளுமன்றத்தில் இருந்த தமிழ் எம்.பிக்களில் சிலர்கூட ஆதரவாக வாக்களித்தார்கள். எங்கள் மக்கள் சாதித் தமிழர்களால் அலட்சியப்படுத்தப்பட்டார்கள்.

முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் இரவிரவாக விரட்டியடிக்கப்பட்டார்கள். நீங்கள் அதைக் கேட்டீர்களா? திண்ணியத்தில் எங்களது தலித் மக்களின் வாயில் மலம் திணிக்கப்பட்டது. ஈழத்தமிழர்கள் அதற்கெதிராகக் குரல் கொடுத்தீர்களா? சாதிக்கலவரங்களில் அவர்கள் கொல்லப்பட்டபோது நீங்கள் குரல் கொடுத்தீர்களா? வெண்மணியில் எரிக்கப்பட்டபோது பேசினீர்களா?

எங்களுக்கே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன. நாங்கள் ஏன் உங்களுக்காகப் பேசவேண்டும்? எழுதவேண்டும்?”

ஒலிவாங்கியை என்னிடம் தரும்படி கேட்டு வாங்கினேன். அப்போது எனக்கு ஆதவன் தீட்சண்யா இதே சாயலுடைய கேள்வியை ஆனந்த விகடன் நேர்காணலில் கேட்டிருந்தது நினைவில் வந்தது.

“எழுத்தாளர்கள் என்பவர்கள் சாதாரண மக்களிலிருந்து சற்றே வித்தியாசப்பட்டுச் சிந்திக்கிறவர்கள். பெருந்தன்மையானவர்கள், சமூகப் பொறுப்புணர்வுடன் இயங்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு இருக்கிறது இல்லையா? ஆக, மலையகத் தமிழர்களை நாங்கள் கேவலமாக நடத்தினோம் என்பதற்காக இப்போது நீங்கள் எங்களைப் பழிவாங்குகிறீர்களா ஆதவன்?”என்று கேட்டேன்.

ரி.கண்ணன் என்பவரும், ‘யாதுமாகி’யின் ஆசிரியர் லேனா குமாரும் எழுந்து வந்து “தமிழ்நதி! ஆதவன் தீட்சண்யா அப்படித்தான் பேசுவான். நீங்கள் அதை ஒட்டுமொத்தத் தமிழகத்தின் குரலாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அது ஆதவன் தீட்சண்யா என்ற தனியொருவனின் குரல் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்”என்றார்கள். கூட்டத்திலிருந்து அதற்கு ஆதரவாகப் பல குரல்கள் எழுந்தன.

இதற்குள் பேராசிரியர் வீ.அரசு எழுந்து வந்து ஒலிவாங்கியை வாங்கினார்.

“தமிழ்நதி எழுப்பிய கேள்வி மிகச்சரியானது. அதற்கு ஆதவன் நீங்கள் பதிலளித்த விதம் சரியல்ல. இலங்கைத் தமிழர்களுக்குள் யாழ்ப்பாணத் தமிழன், வன்னித் தமிழன், மட்டக்களப்புத் தமிழன் என்ற வேறுபாடுகள் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன. மட்டக்களப்புத் தமிழனை வவுனியாத் தமிழன் ஏற்றுக்கொள்ள மாட்டான். வவுனியாத் தமிழனை யாழ்ப்பாணத் தமிழன் ஏற்றுக்கொள்ள மாட்டான். இவர்கள் எல்லோரும் சேர்ந்து மலையகத் தமிழர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவையெல்லாம் உண்மைதான். ஆனால், இந்தச் சமயத்தில் ஆதவன் இப்படிப் பேசுவது தவறு. ஈழத்தமிழினம் பிணக்காடாகி எரிந்துகொண்டிருக்கிறது. பிணங்கள் குவிக்கப்பட்டிருக்கும் மேட்டிலே ஏறிநின்றுகொண்டு நீங்கள் இப்படிப் பேசுவது மனிதாபிமானமுடையதல்ல. எந்த நேரத்தில் என்ன பேச்சுப் பேசுகிறீர்கள்? தவறான புரிதலோடு இருக்கிறீர்கள். மன்னிக்கவேண்டும் ஆதவன்”என்றார்.

அப்போது ஆதவன் எழுந்திருந்து, “நான் உங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், நீங்கள் தவறாகப் பேசியிருக்கிறீர்கள்”என்றார்.

பேராசிரியர் அரசு போனவேகத்தில் கோபத்தோடு திரும்பிவந்தார்.

“நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. நீ இந்த விசயத்தில் தவறான புரிதலோடு இருக்கிறாய் என்பதை அப்படி வெளிப்படுத்தினேன். நானே தமிழாசிரியன். இந்த வார்த்தை விளையாட்டுக்களெல்லாம் என்னோடு வைத்துக்கொள்ளாதே. எனக்கு எத்தனையோ ஆண்டுகளாக ஈழத்தமிழர்களோடு பரிச்சயம் இருக்கிறது. அவர்களின் வரலாற்றை நான் நன்கு அறிந்தவன். நீ புதிதாக ஒன்றும் சொல்லவராதே” என்றார் கடுமையாக.

இருவரும் ‘வாய்யா…போய்யா…’என்ற அளவுக்கு இறங்கினார்கள். ‘புதையல் எடுக்கப் போனால் பூதம் வருகிறதே’என்று நான் திகைப்போடு அமர்ந்திருந்தேன்.

இதற்குள் கவிஞர் விக்கிரமாதித்யன் வேட்டியைப் பிடித்துக் கொண்டு தடக்கித் தடக்கி எழுந்து வந்து ‘ஐம்பதினாயிரம் தமிழர்கள் செத்துப் போனாங்கய்யா… என்னய்யா பேச்சுப் பேசுற’ என்றார். கவிஞர் தேவேந்திர பூபதி அவரைக் கொண்டுபோய் மறுபடியும் இருத்திவிட்டு வந்தார். கவிஞர் விக்கிரமாதித்யனோ ‘ஸ்பிரிங் பந்து’ போல மீண்டும் மீண்டும் எழுந்து வந்துகொண்டேயிருந்தார். அவர் முன்னே வரும் ஒவ்வொரு தடவையும் இறந்துபோன ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது.

அருமையான ஒரு கூட்டத்தை ஆரவாரமாக முடித்துவைத்த பெருமை என்னைச் சேர்ந்தது.

இப்போது ஆதவன் தீட்சண்யாவிடம் கேட்பதற்கு என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன. அவரிடமிருந்து அவற்றுக்கான பதிலை நான் எதிர்பார்த்துக் கேட்கவில்லை. கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்த ‘அறிவில்’நான் ஏற்கெனவே ஆடிப்போயிருக்கிறேன்.

என்னால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்த விதத்தை நான் எப்படிப் பார்த்தேனென்றால், “நீ அன்னிக்கு என் கோலிக்குண்டைக் கிணத்துல தூக்கிப் போட்டுட்டயில்ல… அதான் இன்னிக்கு உன் பொம்மை கால உடைச்சுப்புட்டேன்”என்ற குழந்தைக் கோபமாக அது இருந்தது. பெரியவர்களிடம் அன்றேல் நாங்கள் பெரியவர்களாக நினைத்துக் கொண்டிருப்பவர்களிடமிருந்து இப்படியான பதில்கள் வருவது அயர்ச்சியையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

யோசித்துப் பாருங்கள் ஆதவன் (முன்னிலைக்கே வருகிறேன்) நாங்கள் மலையகத் தமிழர்களை அந்நாளில் மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை எங்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் வேலைக்காக வைத்திருந்தபோது அவர்களைச் சகமனிதர்களாகக் கருதாமல் நடந்துகொண்டோம் என்பதை ஒத்துக்கொள்கிறேன். “அன்று எங்களை நீங்கள் மதிக்கவில்லை. கள்ளத்தோணி என்றீர்கள். ஆகவே நீங்கள் கொல்லப்படுவதை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் இருந்தோம் இது உங்களுக்கு வேண்டியதுதானே…” என்று நீங்கள் சொல்வது எந்தவகையில் நியாயம்?

சமூகத்திலுள்ள சாதிஇ மதச் சதிகளை எதிர்ப்பேன். ஆனால், சகமனிதன் கொல்லப்படுவதை ரசிப்பேன் என்றவகையில் இருக்கிறது உங்கள் விவாதம்.

எழுத்தாளன் என்பவன் சாதாரணர்களிலும் அல்லது வாசகர்களிலும் பெருந்தன்மையோடும் மனிதாபிமானத்தோடும் பரந்த மனப்பாங்கோடும் சமூகப் பொறுப்புணர்வோடும் சிந்திக்கக்கூடியவன் அன்றேல் சிந்திக்க வேண்டியவன் என்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

விடுதலைப் புலிகள் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளே அல்ல என்பதே உங்கள் நிலைப்பாடாக இருக்கிறது. அப்படிச் சொல்லும் நீங்கள், விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை விரட்டியடித்தார்கள் என்பதையும் உங்கள் வாதத்திற்கு வலுச்சேர்க்க நேற்று உள்ளடக்கிப் பேசினீர்கள். ஆக, முஸ்லிம்களை விரட்டியடித்த விடுதலைப் புலிகளைத் தலைமையாகக் கொண்ட மக்களை நீங்கள் காப்பாற்ற விரும்பவில்லை என்றாகிறது அல்லவா? விடுதலைப் புலிகள் ஈழத்தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லையென்றால், மிகுதித் தமிழர்களுக்காக நீங்கள் ஏன் பேசவில்லை?

ஈழத்தின் தலித்துகளையும் மலையகத் தமிழரையும் மதிக்காத சாதித்தமிழர்கள் என்ற தொனியை நேற்றுக் கேட்க முடிந்தது. அப்படியானால் குண்டடிபட்டுச் செத்துப்போனவர்களும் இன்று அகதி முகாம்களில் இருப்பவர்களும் யாவரும் வெள்ளாளப் ‘பெருங்குடி’மக்களா? நீங்கள் தலித்துகளுக்காகவாவது பேசியிருக்கலாமே?

ஆக, உங்களது புரட்சிகர பரந்த அறிவு உங்கள் நாட்டிலுள்ள தலித்துகளின் முன்னேற்றத்துக்காக மட்டுமே பேசும். சகோதரத்துவம், சமத்துவம், எல்லைகளற்ற அன்பு என்பதெல்லாம் சும்மா! ‘நியாயமாகப் பார்த்தால் கொல்லப்பட வேண்டியவர்களே’என்ற தொனி சமூக மாற்றத்திற்கான சஞ்சிகையை நடத்துகிற ஒருவரிடமிருந்து வந்திருப்பது வியப்பளிக்கிறது.

படைப்பாளி என்பவன் நாடு, மதம், மொழி, நிறம், எல்லைகள், முன்விரோதங்கள், பின்குரோதங்கள் எல்லாவற்றையும் கடந்தவன் என்ற எண்ணங்களெல்லாம் தவிடுபொடியாகச் செய்தீர்கள் நண்பரே! நன்றி.

பார்த்துப் பழகிய ஆதவன் தீட்சண்யாவை இனிப் பார்க்க முடியாது. ‘எங்களை வருத்தினாய். நன்றாக அனுபவித்தாய் போ’என்ற முகத்தைப் பார்த்து பொய்யாகவேனும் ஒரு புன்னகையைக்கூட உதிர்க்க முடியாது.

இந்தக் கூத்தெல்லாம் முடிந்து வெளியே வரும்போது, “அவன் ஷோபா சக்தியின் குரலால் பேசுகிறான். பிரான்சிலிருந்தல்லவா அவன் குரல் ஒலிக்கிறது” என்றார் ஒருவர். அவரும் எழுத்தாளரே.

சத்தியக்கடதாசியில் ‘அமரந்தாவின் கடிதம்’ என்ற பதிவில் ஷோபா சக்தி என்னைச் சாடியிருப்பதாக ஒரு நண்பர் சொன்னார். தேடினேன். கிடைக்கவில்லை. ‘தமிழ்நதி போன்ற புலிச்சார்புப் பொய்மையாளர்கள்’என்று எழுதியிருப்பதாகக் கேள்வி. மேலும், ஈழத்தமிழருக்காக அழுகிறார். அதேசமயம், வால்பாறைக் கூட்டத்துக்கும் போகிறார் என்றும் எழுதியிருப்பதாகத் தகவல்.

நன்றாக இருக்கிறது உங்கள் ‘கட்டுடைப்பு’! தன் இனத்திற்காக அழுகிறவள் இலக்கியக் கூட்டத்திற்குப் போகக்கூடாது என்ற ஒற்றைச்சாயலுள் நீங்கள் என்னை எப்படிப் பொருத்தலாம்? அங்கே கொத்துக்குண்டுகள் வீசப்பட்டபோதும் நாங்கள் மூன்று வேளை சாப்பிட்டுக்கொண்டுதான் இருந்தோம். காலையில் எழுந்ததும் கக்கூசுக்குப் போகவும் தவறவில்லை. என்ன அனர்த்தம் ஆனாலும் எல்லாம் நடக்கிறபடி நடந்துகொண்டுதானிருக்கும். அங்கே பிணங்கள் விழுகிறதே என்ற துக்கம் இருக்கும். ஆனால், கூடலும் ஊடலும் தேடலும் எல்லாமும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கும். “அப்படி இல்லை. நான் நாள் முழுவதும் அழுதுகொண்டே அமர்ந்திருந்தேன்” என்று யாராகிலும் சொல்வார்களேயாகில், அது பொய்!

மேலும், நான் புலிகளை நேசிக்கிறேன்தான். அதற்காக நான் எழுதும் எல்லாவற்றுக்கும் நீங்கள் மஞ்சளும் கறுப்பும் கலந்து புலிச்சாயம் பூசவேண்டியதில்லை. என்னால் முன்வைக்கப்படும் கேள்விகளையெல்லாம் ‘நீ புலிக்குச் சார்பானவள். அப்படித்தான் பேசுவாய்’என்பதாக ஏன் அணுகுகிறீர்கள்? கேள்விகளிலுள்ள நியாயங்களைப் புரிந்துகொள்ளுங்கள். என்னையொரு சட்டகத்துள் அடைத்துப் பதில்சொல்ல விளையாதீர்கள்.

ஆதவன் தீட்சண்யாவும் ஷோபா சக்தியும் நண்பர்களா என்னவென்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது. இருவரும் நண்பர்கள் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஷோபா சக்தி! உங்கள் நண்பர் கேட்கிறார். “மலையகத் தமிழர்களை ஈழத்தின் சாதித்தமிழர்கள் மதிக்கவில்லை. அதனால், அவர்கள் மீது நடத்தப்பட்ட இனவழிப்பை நாங்கள் தட்டிக் கேட்கவில்லை. நாங்கள் கேட்கவேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?”என்று. நீங்கள் விடுதலைப் புலிகளது அராஜகங்களுக்கு எதிரானவர்தானே? ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர் அல்லவே? உங்கள் நண்பரின் கேள்விக்கான உங்களது பதில் என்னவாக இருக்கும்?

மீண்டும் சொல்கிறேன். இந்தக் கட்டுரையிலுள்ள விடயங்களைக் கதையுங்கள். எனது வார்த்தைகள் எல்லாமே கறுப்பும் மஞ்சளும் நீண்ட வாலும் கொண்டவையல்ல.