::இனப்பிரச்சினைத் தீர்வு

::இனப்பிரச்சினைத் தீர்வு

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தீர்வுத்திட்டம் மக்கள் தீர்ப்புக்கு விடப்படுமா? – ஏகாந்தி

Wanni Child2009ஆம் ஆண்டு இலங்கையைப் பொறுத்தமட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆண்டாக காணப்படுமென அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய வடமாகாண யுத்தம் மனிதாபிமான நெருக்கடியை மிகப் பாரியளவு தோற்றுவித்துள்ள நிலையில் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பான கருத்துக்களும் சர்வதேச மட்டத்தில் நெருக்கடியைக் கொடுத்துவருவதை அவதானிக்கலாம்.

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடானது, இந்தியாவின் நிலைப்பாட்டை ஒத்ததாகுமென்று தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரச்சினை குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் விரிவாகக் கலந்துரையாடியதாகக் கூறியுள்ள ஐ. நா. செயலாளர் நாயகம், இலங்கையில் சிவிலியன்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஐ. நா. வும் இந்தியாவும் கூட்டாக செயற்பட்டு வருவதாகவும் “ரைம்ஸ் ஒப் இந்தியா” பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்திருந்தார்.

“பாரிய மனிதாபிமானப் பிரச்சினை எழுவதைத் தவிர்க்க வேண்டுமானால், உடனடியாக மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும். ஐ. நா. வும் ஏனைய அமைப்புகளும் இதனைத் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கேட்டுக் கொள்கின்றன” என்று தெரிவித்த பான் கீ மூன், இறுதிக் கட்டமாக, அரசியல் தீர்வொன்று எட்டப்படுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு ஒரு நாள் விஜயமொன்றை மேற்கொண்ட ஐ. நா. செயலாளர் நாயகம், இலங்கை விடயம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சருடன் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார். எவ்வாறாயினும் அரசியல் தீர்வு என்ற விடயம் இலங்கை அரசுக்கு மிகவும் கட்டாயப்பாடான நிலையென்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரம், இதுகாலவரை இது விடயமாக காட்டிவந்த அசமந்தப் போக்கை இனியும் காட்ட முடியாது என்பதே இலங்கை அரசும் உணர்ந்திருப்பதை அரசு சார்பில் முன்வைக்கப்படக் கூடிய சில கருத்துக்களிலிருந்து அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் –

இனப்பிரச்சினைக்கான தீர்வாக மாகாண சபை முறைமையை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முன்வைக்க வில்லையென்றும், சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய முழுமையான அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான தீர்வு வரைவினையே தயாரித்து வருவதாகவும் குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண அண்மையில் தெரிவித்திருந்தார். இந்தத் தீர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டுமென்றும் அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தார்.

தீர்வு வரைவின் இறுதிப்பகுதி தொடர்பாக தற்போது கட்சிப் பிரதிநிதிகளுக்கிடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான இறுதிக்கட்டப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறிய அமைச்சர் திஸ்ஸவிதாரண “தீர்வுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு முன்பு 13 வது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் மாகாண சபை நிர்வாக முறைமையை நாம் முன்மொழியப் போவதில்லை. முற்றிலும் புதியதொரு அதிகாரப் பகிர்வினை அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் தயாரித்து வருகிறோம்” என்றும் தெரிவித்திருந்தார்.

குழுவின் கூட்டங்களை நிறைவு செய்ததும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறிய அமைச்சர், அதன் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கவுள்ளதாகக் கூறினார். இந்தக் கட்சிகளின் கருத்துகளையும் உள்ளடக்கி தீர்வு வரைவினை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு 100 இற்கும் மேற்பட்ட தடவை கூடி மாகாண சபை முறைமையை இனப்பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்க உள்ளதாகவும் அதிகாரப் பகிர்வு எதுவும் கிடையாதென்றும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று அமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார். இங்கு அமைச்சரின் கருத்துக்களைத் தொகுத்துப் பார்க்கும்போது, 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் பூரணமாக நடைமுறைப்படுத்துவதை அவர் ஏற்றுக் கொண்டுள்ள போதிலும்கூட,  எதிர்நோக்கப்படும் நெருக்கடிகள் காரணமாக இதுபோன்றதொரு கருத்தை முன்வைத்திருக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகின்றது.

13வது அரசியல் அமைப்புத் திருத்தத்துக்கு மேலாக வேறொன்றை வழங்கக் கூடாதென்று சில அரசியல் கட்சிகள் நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றன. மறுபுறமாக பொலிஸ் அதிகாரம், காணிப் பகிர்வு அதிகாரம் போன்வற்றை வழங்கப்போவதில்லை என அரசாங்கத் தரப்பில் சில பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திஸ்ஸவிதாரண குழுவினரால் முன்வைக்கப்படவுள்ள இறுதித் தீர்வுத் திட்டம் எத்தகையதாக இருக்கும் என்ற வினா பொதுவாக எழுந்துள்ளது.

மறுபுறமாக தற்போதைய யுத்த வெற்றிகளின் பின்னணியில் பெரும்பாலும் ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறக்கூடிய நிகழ்தகவு இருப்பதையும் காணமுடிகின்றது. இது தொடர்பாக ‘ராவய” பத்திரிகை எதிர்வுகூறுகையில் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்குமிடையில் பாராளுமன்றம்  கலைக்கப்படலாமென கூறியுள்ளது. இன்னும் சில ஊடகங்களின் கருத்துப்படி பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும்போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வொன்றுக்காக வேண்டி மக்கள் தீர்ப்பும் பெறப்படுமென கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும்,  இந்த நிலையைப் பொறுத்தமட்டில் அரசியல் தீர்வுத் திட்டம் என்ன என்பது மக்கள் மத்தியிலுள்ள பொதுவான கேள்வியாகும். இந்த சூழ்நிலையைப் பொறுத்தமட்டில் இன்னும் இன்னும் காலத்தை வீணடிக்காமல் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பான தெளிவானதும்,  நிலையானதுமான கருத்தொன்றை முன்வைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.