புலம்பெயர் வாழ்வியல்

புலம்பெயர் வாழ்வியல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்களுடைய வாழ்வியல், சமூக, அரசியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

ஆமை புகுந்த வீடும் ராகவன், நிர்மலா, ஷோபாசக்தி புகுந்த இலக்கியச் சந்திப்பும்! : பாகம் 34

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 34 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

தேசம்: நாங்கள் பரிசில் நடந்த கலை இலக்கிய முரண்பாடுகள் பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறோம். அதுல நீங்கள் சொல்லி இருந்தீர்கள் எக்ஸில் முரண்பாடு. அன்றைக்கு முக்கியமாக ஷோபாசக்தி அந்த முரண்பாட்டை தூண்டியதாக குற்றம்சாட்டி இருந்தீர்கள். அது என்ன மாதிரி நடந்தது? எக்ஸில் அது என்ன பிரச்சனை?

அசோக்: எக்சில் சஞ்சிகையில் ஏற்பட்ட முரண்பாடுகள் கோட்பாடு சார்ந்த பிரச்சனை இல்லைத்தானே கோட்பாடுகளில் சினேக முரண்கள்தோன்றினால் விவாதங்கள், உரையாடல்கள், கற்றல்கள் முலம் தீர்த்துக் கொள்ளலாம். கோட்பாடு ரீதியான பெரிய முரண்பாடுகள் வந்தா ஒன்று சேருவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போகும். இது தனிப்பட்ட முரண்பாட்டில் இருந்து தான் தோற்றம் பெறுது. இங்க கோட்பாடும் இல்லை. சித்தாந்த பிரச்சனையும் இல்லை. முழுக்க முழுக்க தனிநபர் முரண்பாடுகள்தான். இங்க ஈகோ பிரச்சனைதான். இதை இலகுவாக தீர்த்திருக்க முடியும். திட்டமிட்டு சாதிய முரண்பாடாக்கி ஊதிப் பெருக்கடி வைத்த புண்ணியம் நம்ம சோபாசத்தியைத்தான் சாரும். இந்த காலகட்டத்திலதான் தமிழ்நாட்டில் தலித்திய இலக்கிய அரசியல் ஏழுச்சி கொள்ளுது. அப்ப இந்த தனிப்பட்டமுரண்பாடுகளை சாதிய பிரச்சனை சார்ந்த முரண்பாடாக கட்டமைத்தால் இவர்களுக்கு சாதகம் என சோபாசக்தியின் சாணக்கிய மூளை கணக்குப்போட்டு இருக்கும்.

தேசம்: இதுக்குள்ள சாதிய முரண்பாடு என்று சொல்லுற அளவுக்கு இல்லை. பெரும்பாலும் இதுக்குள்ள அரசியல்ரீதியாக இருந்தவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் சாதிய எதிர்ப்பை கொண்டவங்கதானே.

அசோக்: தனி நபர் முரண்பாட்டை கூர்மையாக்க மற்றவர்களின் ஆதரவை பெற கலைச்செல்வன், லக்சுமி ஆட்கள் மீது இவ்வாறன குற்றச்சாட்டை வைக்க வேண்டிய தேவை அவங்களுக்கு வருகிறது. இந்த முரண்பாட்டிக்கு நீங்கள் நியாயம் கற்பிப்பதற்கான தேவை ஒன்று ஏற்படும் தானே. ஒவ்வொரு சாதியிலும் பிறப்பது தற்செயல் நிகழ்வு. ஆதிக்க சாதியான வேளாளர்கள் என்று சொல்லப்படுகின்ற சமூகத்தில் பிறக்கிற ஆட்களை வந்து முழுக்க முழுக்க எங்கள் மீதான ஒடுக்குமுறையாளர்கள் என்று கருத இயலாது. ஏனென்றால் அதிலும் நல்ல சக்திகள் உண்டு. ஒடுக்குமுறைக்கு எதிராக செயற்படுகின்ற இடதுசாரி கருத்தியல் கொண்ட ஆட்கள் இருப்பார்கள். இலங்கையில் நடந்த சாதிய எதிர்ப்புப் போராட்டங்களை கவனித்தம் என்றால் அந்த போராட்டங்களில் தீவிரமாக முண்ணனி வகித்தவங்க வேளாள சமூகத்தை சேர்ந்த தங்களை சாதிய தற்கொலை செய்து கொண்ட இடதுசாரிய கருத்தியல் கொண்ட தோழர்களாக இருப்பாங்க.

எங்களை ஒடுக்கிற ஆதிக்கம் செலுத்துகிற தங்களின் சுய சாதியிலிருந்து விடுபட்டு தோழமையோடு எம்மை நோக்கி வருகின்ற சக்திகளை நாம் சாதியின் பெயரால் புறம் தள்ளக் கூடாதுதானே. இவங்களிட்ட சாதியம் தொடர்பான எந்த புரிதல்களும் இருக்கல்ல. கோட்பாட்டு அரசியலும் இருக்கல்ல. தங்களை முதன்மைப்படுத்துற அடையாள சிக்கல்தான் இவங்களிட்ட இருந்தது. இது கலைச்செல்வன், லக்சுமி பக்கத்திலிருந்து பறிக்கப்படுவதாக இவங்க நினைக்கும் போது இந்த முரண்பாடுகள் வருகிறது. இவங்களால சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்குதானே அந்தக் காரணங்கள் எல்லாம் வந்து சோடிக்கப்பட்ட கட்டுக்கதைகள் ஆகத்தான் இருந்தது. அதற்கான உருவாக்கத்திற்கான பின்புலமாக சோபாசக்தி தான் இருந்தவர். சோபாசக்தி நினைத்திருந்தால் அந்த பிரச்சனையை தீர்த்து இருக்கலாம்.

நான் எப்பவுமே புலிகள் மீதான விமர்சனத்தை வைப்பதற்கான காரணம் என்னவென்றால் புலிகள் எப்பவுமே ஒரு ஜனநாயக அமைப்புகளை ஜனநாயக சக்திகள் ஒன்று கூடுவதை எப்பவுமே விரும்புவது இல்லை. எங்க போராட்ட வரலாற்றை எடுத்து பார்த்தீர்களென்றால் ஈழத்தில் தமிழ்ப் பிரதேசங்களில், புகலிட நாடுகளில் சகல ஜனநாயக அமைப்புகளை உடைத்தது எல்லாம் புலிகள்தான். அதுக்குள்ள ஊடுருவுவார்கள் அல்லது அப்படியே உள்வாங்குவார்கள். அல்லது அதிகாரத்தை பயன்படுத்தி அப்படியே இல்லாமல் ஆக்குவார்கள். இதில் அபத்தம் என்னவென்றால் கலைச்செல்வன், லக்சுமி ஆளுமைக்குள் உட்பட்டிருந்த இவங்கள், சுயநலப்போக்கும், மோசமான அரசியலும் கொண்ட பிழையான சத்தியான சோபாசக்தியின் வலையில் சிக்கிக் கொண்டதுதான்.

தேசம்: புலிகள் எதையுமே உருவாக்கினது கிடையாது…

அசோக்: ஷோபாசக்தி புலிகளில் இருந்து வந்தபடியால் அவரிடமும் அந்த இயல்பு இருக்கும்.

நான் முதலே சொல்லிஇருக்கிறன் புலிகளிடமிருந்து வந்த யாரையும் நம்புவதும் இல்லை, நான் ஏற்றுக்கொள்வதும் இல்லை. போராளிகள் பற்றியதல்ல இந்த அபிப்பிராயம். புலிகளில் குறிப்பிட்ட மட்டங்களில் கருத்தியல் சார்ந்து இயங்கிய எல்லாரிடமும் தங்களைத் தவிர ஏனைய அமைப்புகள் உருவாகுவதையோ ஏனைய சக்திகள் உருவாகுவதையோ அவங்கள் விரும்புவது இல்லை. ஒரு இலக்கிய சஞ்சிகையோ, இலக்கிய சந்திப்போ சாதாரண அமைப்புகள் கூட தங்களை வரக்கூடாது என்றுதான் விரும்புவார்கள்.

தேசம்: தங்கட கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைக்கினம்…

அசோக்: அப்படி தங்கட கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றால் உடைப்பார்கள் அல்லது அவர்கள் மீது ஏதும் அதிகாரத்தை பிரயோகிப்பார்கள். இலக்கிய சந்திப்புக்கும் அதுதான் நடந்தது. எக்ஸிலுக்கும் அதுதான் நடந்தது.

தேசம்: நீங்கள் இதே குற்றச்சாட்டை தான் ராகவன் நிர்மலா நித்தி மீதும் வைத்தீர்களா?

அசோக்: என்னைப் பொருத்தவரை இவர்கள் புலிகளை எதிர்க்கின்ற இன்னொரு புலிகள்தான். அதுல நீங்கள் ராகவன் ஆக இருந்தால் என்ன, நித்தியானந்தனாக இருந்தா என்ன நிர்மலாவாக இருந்தால் என்ன, முழு பேரும் அந்த மனோநிலையோடு, அந்த அந்த ஆதிக்க உளவியல் கட்டமைப்போடுதான் சிந்திப்பாங்க செயற்படுவாங்க. இவர்களை எல்லாம் ஒரு ஜனநாயக சக்தியாக நான் ஒருபோதும் பார்க்கவில்லை. ஏனென்றால் இருக்கிற முரண்பாடுகளை தீர்க்கின்ற நபர்களாக அவர்கள் எப்பொழுதும் இருந்ததில்லை. முரண்பாடுகளை கூர்மையாக்கி, குழுவாதத்தை உருவாக்கி தாங்க நினைப்பதை சாதிப்பாங்க. அதற்கு நாங்களும் துணை போவம். நீங்க பார்த்தீங்க என்றால் இவங்களுக்கு பின்னால் நாங்கதான் போனோமே தவிர எங்களுக்கு பின்னால் அவங்க வரவில்லை. தங்களின் அதிகாரத்தில் மேலாதிக்கத்தில் அவங்க கவனமாக இருந்தாங்க.

எல்லாத்தின் உடைவுகளுக்கும் மூல காரணங்களை தேடி போனீர்கள் என்றால் புலிகளில் இருந்த பழைய உறுப்பினர்களாக தான் இருப்பார்கள். ஒன்று சோபாசக்தி ஆக இருக்கும் ஒன்று ராகவன் ஆக இருக்கும், ஒன்று நிர்மலாவாக இருக்கும், இவர்கள்தான் பின்புலமாக இருந்திருப்பார்கள். இலக்கியச் சந்திப்புகளின் உடைவுகளை தேடி போனீர்கள் என்றால் முடிவு அங்க தான் இருக்கும். ஆனா என்னதான் உடைவு இருந்தாலும் சோபாசக்தி, ராகவன், நிர்மலா எனைய முன்னாள் புலிகள் இவங்களுக்குள்ள ஒற்றுமை இருக்கும். ஒரே அணியில இருப்பாங்க. யோசித்துப்பாருங்க. புலிகளின் வன்முறைகளுக்கும் கொலைக் கலாச்சாரத்திற்கும் எதிராக புகலிடத்தில் செயற்பட்ட TBC ரேடியோவுக்கு என்ன செய்தார்கள்? உங்க தேசம் இணையத்தளத்தை முடக்க தங்களின்ற குழுவாத கும்பல்களோடு சேர்ந்து கையெழுத்து வேட்டை நடத்தினாங்களே. இதையெல்லாம் எந்த நோக்கத்தில் செய்தாங்க.

தேசம்: புலிகள் என்பதும் எங்களுடைய சமூகத்தின் ஒரு உற்பத்தி தானே. நீங்க சொல்லுற இந்த குணாம்சம் இந்தப் பிரிவிடம் மிகக் கூடுதலாக இருக்கு என்று சொல்லவாறீர்களா?

அசோக்: எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் குணாம்சம் கொண்டவர்கள்தான் புலிகளிடம் போகிறார்களா அல்லது புலிகளுக்கு ஒரு சிந்தனை முறை இருக்குதானே புலிகளுடைய பயிற்றுவிப்பு கல்வியூட்டல்கள் சிந்தனை முறை இருக்குதானே அது இப்படித்தான் இவர்களை உருவாக்கிறது. தங்களை மீறி யாரும் வரக்கூடாது என்று. ஜனநாயக சக்திகளோ, தங்களை கேள்வி கேட்கின்றவர்களோ தங்கட இருப்புக்கு அது தடையாக இருக்கிறது என்று நினைப்பார்கள். தங்கட இருப்புக்கு ஒரு அமைப்பு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பார்கள். இல்லாதபட்சத்தில் அதை அழிப்பார்கள். இல்லாட்டி இவ்வளவு ஆரோக்கியமான இலக்கியச் சந்திப்புக்கு கடைசியில் என்ன நடந்தது?

இன்னொன்றையும் நீங்க அவதானிக்கலாம். புலிகள் பலரிடம் இந்த திறமை இருக்கு. எங்கட பலவீனங்களை கண்டு பிடித்து அதற்கு தீனி போடுவாங்க. பலரும் இவங்க பின்னால் அலைவதற்கு இதுவும் ஒருகாரணம். முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொள்கிற நாங்க தனிப்பட்ட வாழ்வில் மிகமிக பலவீனமானவங்க. அத அவங்க தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறாங்க. எவ்வளவுதிறமை சாலி அவங்க பாருங்க.

தேசம்: இலக்கிய சந்திப்பு எப்படி இப்படி உடைந்தது ?

அசோக்: இலக்கியச் சந்திப்பின் உருவாக்கம் சிறு சஞ்சிகைகளினுடைய ஆசிரியர்களின் வாசகர்களின் இணைவாக இருந்து ஒரு காலகட்டத்தில் அராஜகங்களுக்கு எதிரான ஒரு வடிவமாக வருது ஜனநாயகத்தையும், அதிகார எதிர்ப்பையும் முன்னிலைப்படுத்திய புகலிட இலக்கியச்சந்திப்பை சார்ந்தவர்கள், விடுதலைப் புலிகளால் புகலிடத்திலும், இலங்கையிலும் இருந்த அச்சுறுத்தலால், விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்களாக இருந்தது இயல்பாக இருந்தது. அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரான ஒரு இயல்பான அரசியல் அதுக்குள்ள மேலோங்கியிருக்கிறது.

நான் முதலாவது இலக்கிய சந்திப்பில் தொண்ணூற்றி மூன்றாம் ஆண்டு கலந்து கொள்கிறேன். அதுக்குப் பிறகு இரண்டு இலக்கிய சந்திப்பு பாரிசில் நடந்தது. அதை நாங்கள் லக்ஷ்மி, கலைச்செல்வன், புஸ்பராஜா, அசோக் பிரகாஸ், கிருபன், மோகன், உதயன், யோகராஜா நடத்தினோம். நாங்க எல்லா இலக்கிய சந்திப்புக்கும் போவோம். ஜெர்மனியில்தான் அதிகம்தான் நடந்தது. 2009 மே முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின்பு நிலைமை நிலமை மாறிப் போய்விட்டது. முள்ளிவாய்க்கால் பிரச்சனைக்குப் பிற்பாடு இலக்கிய சந்திப்பு ஒரு டேர்ன் எடுக்குது. முழுக்க முழுக்க புலிகள் அழிக்கப்பட்டதன் பிற்பாடு பாரிசில் நடந்த இலக்கிய சந்திப்பில் இலங்கை அரசு சார்பான ஒரு போக்கை அவர்கள் எடுக்கிறார்கள். அந்த எடுவைக்கு காரணம் அதுக்குள்ள இருந்த ஒரு சக்திதான். அதுல தலித் முன்னணி முக்கியமான ஆட்கள். அதுல ஷோபா சக்தியும் இருந்தவர். அடுத்தது ராகவன் ஆட்களும் அதுக்குள்ள இருந்தார்கள்.

புலிகள் மீது கடும் விமர்சனம் இருக்கு. முள்ளிவாய்க்கால் தொடர்பாக. பொதுமக்கள் அழிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம் புலிகளுடைய நடவடிக்கையும் ஒன்று. அது விமர்சிக்கப்பட வேண்டியது. புலிகள் மீது கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட வேண்டியது. அதற்காக நீங்கள் பேரினவாத அரசின் ஆதரவு சக்தியாக மாற முடியாது. நான் முள்ளிவாய்க்கால் படுகொலையை ஒரு இனப்படுகொலை என்றுதான் பார்க்கிறேன். அது தொடர்பாகக் கருத்து முரண்பாடு இருக்கலாம். மிக மோசமாக கொத்துக் கொத்தாக மக்கள் படுகொலை செய்யப்பட்டதை மறந்து இலங்கையில் ஜனநாயக சூழல் உருவாகிவிட்டது, ஜனநாயக இடைவெளி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லி இலங்கைப் பேரினவாத அரசு ஆதரவு நிலை கொண்டு நடத்தும் போது எப்படி எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியும். எப்படி நாங்கள் கலந்து கொள்ள முடியும்? அப்போ நான் அதில் இருந்து ஒதுங்கிக் கொண்டேன். இலக்கிய சந்திப்பின் பிரதான நோக்கத்தையே குழிதோண்டி புதைத்து விட்டார்கள்.

அதற்கு பிற்பாடு லண்டனில் நடந்த இலக்கிய சந்திப்பில் முரண்பாடு வருகிறது. இலக்கிய சந்திப்பை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி நடக்குது. இந்த இலக்கிய சந்திப்பு புகலிடத்திற்காக, அதன் அரசியல் இலக்கிய சமூக வெளிக்காக உருவாக்கப்பட்டது. எனவே, இலங்கைக்கு கொண்டு போக முடியாதென்று என்று பலரும் இதை எதிர்க்கிறாங்க. புகலிட இலக்கியச் சந்திப்பை இலங்கைக்கு கொண்டு போவதற்கான அவசியம், காரணம் என்ன என்ற முக்கியமான கேள்வி எங்களுக்கு எழுகிறது

தேசம்: புகலிடத்திற்காக உருவாக்கப்பட்ட இலக்கிய சந்திப்பை ஏன் இவர்கள் இலங்கைக்கு கொண்டு போக விரும்புகின்றார்கள்?

அசோக்: நல்ல கேள்வி. இவங்க முழுப்பேர்களுமே குறிப்பாக தலித் முண்ணனி, பிள்ளையான் அணி, ராகவனும் அவருடன் சேர்ந்த ஆட்களைப் பார்த்தீர்கள் என்றால், வெறும் இலங்கை அரசு ஆதரவாளர்களாக இருந்தார்களே தவிர தனித்துவ அடையாளங்கள் அற்றவங்க இவங்க. ஆழமான அரசியல் புரிதல்களோ, இலக்கிய ஆற்றலோ அற்றவங்க. இவங்க இலங்கைக்கு, வெறும் இலங்கை அரச விசுவாசத்தோடு தமிழ்ப் பிரதேசங்களுக்கு செல்லமுடியாது. அங்க யாரும் இவர்களை கவனிக்க மாட்டார்கள். அப்ப இவங்களுக்கு அடையாளம், ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. இலக்கிய சந்திப்புக்கு ஒரு வரலாற்று தடம் பங்களிப்பு இருக்கிறது. இலக்கிய சந்திப்பு பற்றி இலங்கையில் பெரிய எதிர்பார்ப்பு உண்டு. அப்ப இந்த இலக்கிய சத்திப்பினுடாக, அங்கு தங்கட அடையாளத்தை, இருத்தலை நிறுவ முயலுறாங்க இதுதான் நடந்தது.

தேசம்: இதை உங்களைப் போன்றவர்கள் எதிர்க்க வில்லையா?

அசோக்: இவர்கள் இலங்கை அரசு ஆதரவு நிலைப்பாடு எடுத்ததன் பின் இந்த இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்வதை நான் விட்டுட்டன். ஆனா இவர்களின் இந்த செயற்பாட்டிக்கு எதிராக கடும் கண்டனங்களை எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறன். நான் சிறிரங்கன், நாவலன் பலர் இதுபற்றி எழுதியுள்ளோம்.

இலங்கைக்கு கொண்டு போவதற்கு இவங்க முடிவு செய்த லண்டன் இலக்கிய சந்திப்பில் பலர் இதனை எதிர்த்திருக்காங்க. கிருஸ்ணராஜா, லட்சுமி, சுசிந்திரன், றஞ்சி, சிவலிங்கம் தோழர் போன்றவங்க. புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு இது. நீங்கள் நாட்டுக்கு கொண்டு போக இயலாது என்று. அதை மீறித்தான் அவங்க அங்கு கொண்டு போகிறார்கள். அப்போ இந்த ஜனநாயகப் பண்பை எப்பவும் ஏற்கவில்லை தானே இவர்கள். நாங்கள் எதற்காக ஒரு அமைப்பை உருவாக்கினோம், எதனை நோக்கி உருவாக்கினோம் என்ற அடிப்படை அம்சங்கள் எல்லாவற்றையும் இல்லாமலாக்கிப்போட்டு, நீங்கள் உங்களுடைய சுயநலத்துக்காக, உங்களுடைய அரசியலுக்காக கொண்டு போகின்ற போக்கு இருக்குதானே அது எனக்கு பெரிய அதிருப்தியாக இருந்தது.

இந்த ஜனநாயகத் தன்மை கொண்ட இலக்கிய சந்திப்பை தங்களின்ற அதிகார மேலாண்மை இருத்தலுக்காக பயகன்படுத்திக் கொண்ட இந்த நபர்களை பார்த்தால், இவங்களின்ற இந்த இலக்கிய சந்திப்பு தொடர்பு இடைக்காலத்தில்தான் ஏற்பட்டது. ஆனால் இந்த குறுகிய காலத்தில் தங்களுக்கேற்ற குழுவாதத்தை முரண்பாட்டை உருவாக்கி இலக்கிய சந்திப்பை தங்கள் உடமையாக்கிக் கொண்டாங்க. இதனைத்தான் நான் புலிக்குணம் என்றது. இதுதான் எனக்கு இருந்த விமர்சனமே தவிர தனிப்பட்ட ரீதியில் இவங்களோட எந்த முரண்பாடுகளும் எனக்கில்லை. சந்திக்கும்போது கதைப்பதுண்டு. அதேநேரம் கருத்துக்களும் விமர்சனங்களும் எனக்கு இருக்கும். இங்க ஒன்றை பதிவு செய்யணும். இவங்கட முரண்பாட்டிக்கு பிறகு இவங்க வெளியிட்ட எக்சில் சஞ்சிகையின் அட்டையில் லக்சுமியைபற்றி மிக மோசமாக தாக்கி எழுதி இருந்தாங்க. ஒரு இலக்கிய சஞ்சிகையின் அட்டையில் ஒருவரை தாக்கி மோசமாக எழுதி வெளியிட்ட பெருமை இவங்களைத்தான் சாரும்.

 

தேசம்நெற் பதிவை நீக்கக்கோரிய விண்ணப்பத்தை பிரித்தானிய நீதிமன்றம் நிராகரித்தது!

அபிராமி கணேசலிங்கம், ராகுலன் லோகநாதன் ஆகியோர் கூட்டாக தம்பிராஜா ஜெயபாலன் உட்பட ஒன்பது பேருக்கு எதிராக கொண்டுவர முற்பட்ட இடைக்காலத் தடையை வில்சன் கவுன்ரி கோட் நிராகரித்துள்ளது. மாவட்ட நீதிபதி கன்வர் முன்நிலையில் அபிராமி கணேசலிங்கம் தன்பக்கத்து வாதத்தை வைத்து தடையுத்தரவைக் கோரி இருந்தார். இந்த விண்ணப்பத்தில் அபிராமி கணேசலிங்கம் முதலாவது வாதியாகவும் ராகுலன் லோகநாதன் இரண்டாம் வாதியாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தனது விண்ணப்பத்தை முன்வைத்து அபிராமி கணேசலிங்கம் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கையில் தானும் தனது குடும்பமும் சட்டவிரோத மோசடிகளில் ஈடுபட்டதாக ஒன்லைன் வெளியீடு ஒன்றில் குறிப்பிட்டு இருந்ததாகவும், அதனால் தனது குடும்பத்தினர் பயமுறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும், பிரதிவாதிகள் தங்களுடைய நன்மதிப்பை பாதிக்கும் வகையில் இவ்விணையத்தளத்தில் கருத்துக்களை எழுதியதாகவும், அதனால் அப்பதிவை நீக்குவதற்கான இடைக்காலத்தடையுத்தரவை அவர் கோரியிருந்ததாக அந்த விண்ணப்பத்தை நிராகரித்து வழங்கப்பட்ட கட்டளையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இடைக்காலத்தடையுத்தரவைக் கோரிய விண்ணப்பதாரிகளான அபிராமி கணேசலிங்கம், ராகுலன் லோகநாதன் பற்றிய தம்பிராஜா ஜெயபாலனால் எழுதப்பட்ட செய்தியொன்று தேசம்நெற்றில் பெப்ரவரி 15 அன்று வெளியிடப்பட்டு இருந்தது. வாதிகளில் ஒருவரான ராகுலன் லோகநாதன் இயக்குநராக இருந்த ரெய்டன் (Raidenn Ltd) என்ற நிறுவனம் பற்றியும் அதன் வாடிக்கையாளர்கள் பற்றியும் அச்செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. குறிப்பிட்ட நிறுவனத்தின் செயற்பாடுகளால் தாங்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி இருந்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அச்செய்தியின் கீழ் அபிராமி கணேசலிங்கம் ராகுலன் லோகநாதன் ஆகியோருக்கு சார்பாகவும் எதிராகவும் கருத்தக்கள் வெளியிடப்பட்டு இருந்தது.

மேலும் அச்செய்தியில் ராகுலன் லோகநாதன் இச்செய்தி தொடர்பாக தம்பிராஜா ஜெயபாலனோடு தொடர்புகொள்வார் என்று அபிராமி கணேசலிங்கம் தம்பிராஜா ஜெயபாலனுக்கு உறுதியளித்து இருந்தார் என்றும் ஆனால் பல வாரங்களாகியும் பல்வேறு வகையில் முயற்சித்தும் ராகுலன் லோகநாதன் தொடர்பு கொள்ளவில்லை என்பதையும் அச்செய்தி சுட்டிக்காட்டி இருந்தது.

இதன் பின்னணியிலேயே அபிராமி கணேசலிங்கன் மற்றும் ராகுலன் லோகநாதன் ஆகியோர் வில்சன் கவுன்ரி கோர்ட்டில் இச்செய்திக்கு எதிராகத் தடையுத்தரவைக் கோரியிருந்தனர். பெப்ரவரி 17இல் நீதிபதி கன்வர் அபிராமி கணேசலிங்கம் மற்றும் ராகுலன் லோகநாதன் ஆகியோரின் விண்ணப்பம் சிபிஆர் 3.40 (CPR 3.40. க்கு அமைவாக அமையாததன் அடிப்படையில் அதனை நிராகரிப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.

அக்கட்டளை வருமாறு குறிப்பிடுகின்றது: The application for Injunction part 8 claim are struck out pursuant to CPR 3.40. இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள்: இந்த விணப்பத்துக்கான நியாயமான காரணங்கள் இல்லாமல் இருக்கலாம், இது நீதிமன்ற செயன்முறைகளை துஸ்பிரயோகம் செய்வதாக அமையலாம் எனப் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கலாம் என ஜஸ்ரிஸ்.கோ.யுகெ இணையத்தில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

இந்த விண்ணப்பத்தில் இச்செய்தியை எழுதிய தம்பிராஜா ஜெயபாலன் முதலாம் எதிரியாகவும் ரவிச்சந்திரன் சேனாதிராஜா இரண்டாம் எதிரியாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ரவிச்சந்திரன் சேனாதிராஜாவின் துணைவியார் புஸ்பாவதி சேனாதிராஜா மூன்றாம் எதிரியாகவும் இவர்களுடைய மகள் சிவானி ரவிச்சந்திரன் நான்காம் எதிரியாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ரவிச்சந்திரன் சேனாதிராஜா தன்னுடைய நண்பரான செல்வராஜா செல்வச்சந்திரனை ரீமோட்கேஜ் செய்து கொடுப்பதற்காக அபிராமி கணேசலிங்கத்திடம் அறிமுகப்படுத்தியதாக தேசம்நெற்றிடம் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பின்னாட்களில் இந்த ரீமோட்கேஜ் விடயம் விபரீதமாக ரவிச்சந்திரன் சேனாதிராஜா அபிராமி கணேசலிங்கம் தம்பதிகளின் வீட்டுக்கு நியாயம் கேட்கச் சென்றதாகவும் அப்போது தாங்கள் தன்னை தாக்க வருவதாக அவர் பொலிஸில் முறையிட்டு இருந்ததாகவும் தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார். இவை எதுவற்றிலுமே தன்னுடைய மனைவிக்கும் மகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தங்கள் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் செயற்படுவதாக அபிராமி – ராகுலன் தம்பதியினரால் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 5ம் எதிரி செல்வராஜா செல்வச்சந்திரன். ஆறாம் எதிரி செல்வராஜா செல்வச்சந்திரனின் துணைவியார் ஜெயவதனி செல்வச்சந்திரன். செல்வச்சந்திரன் – ஜெயவதனி தம்பதிகளின் மகள் கௌசிகா செல்வச்சந்திரன் ஏழாம் எதிரியாகக் குறிப்பிடப்பட்டு உள்ளார்.

எட்டாம் எதிரியாகக் குறிப்பிடப்பட்ட நடராஜா ரபீன்திரன் தேசம்நெற் இல் வெளியான வயதான தம்பதிகளோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவர். ரெய்டன் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் இவர் தொடர்பில் உள்ளதாக தெரியவருகிறது. ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

கடைசி எதிரியான ரூபன் நடராஜா யாழ் நல்லூரைப் பூர்வீகமாகக் கொண்ட அபிராமி கணேசலிங்கத்தின் மிக நெருங்கிய உறவினர். தான் வெளிநாடு வருகின்ற போது அபிராமி பிறந்திருக்கவில்லை என அவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். தானும் அபிராமியின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் முதலீட்டுக்காக நூறாயிரம் பவுண்களை வழங்கியதாகவும் ஆனால் ஆரம்பத்திலேயே ஏதோ சரியாகப்படவில்லை என்பதை உணர்ந்து பணத்தை மீளப்பெற முயன்றதாகவும் இன்னமும் தனக்கு பணம் வந்து சேரவில்லை எனவும் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

இச்செய்தி தொடர்பாக அபிராமி கணேசலிங்கம் – ராகுலன் லோகநாதன் ஆகியோரோடு தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவர்கள் தேசம்நெற்றை தொடர்புகொள்ளும் பட்சத்தில் அவர்களுடைய பக்கதை சொல்வதற்கான முழுமையான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

லண்டனில் தமிழர்கள் தமிழர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி முதிய தமிழ் தம்பதியர் வீட்டை இழக்கும் அபாயம்!!!

லண்டன் குரொய்டனில் தங்கள் சொந்த வீட்டில் வாழும் முதிய தம்பதியினர் தங்கள் வீட்டை பறிகொடுக்கும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 200,000 பவுண்களை (6.6 கோடி ரூபாய்) முதலீட்டுக்காகப் பெற்றுக் கொண்ட தமிழர் ஒருவரால் நடத்தப்படும் நிறுவனம் ரெய்டன் – Raidenn Limited அவர்களை நடுத்தெருவில் விட்டுள்ளது. ரகு லோகன் என அறியப்பட்ட ராகுலன் லோகநாதன் (43) என்பவரினால்; கொம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்நிறுவனத்திற்கே இத்தம்பதியினர் முதலீட்டுக்காக 200,000 பவுண்களை வழங்கி இருந்தனர். தற்போது இந்நிறுவனம் அவர்களுடனான சகல தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டுள்ளது. அந்நிறுவனத்தின் கட்டிடம் இருக்கின்றதேயொழிய அங்குள்ள யாருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை.

ஹரோ பகுதியில் வாழும் எஸ் செந்தூரன் எனத் தன்னை அறிமுகப்படுத்தியவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் தானும் ஒரே கல்லூரியிலேயே கல்விகற்றதாகவும், தாங்கள் சில சமயம் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதாகவும் தானும் இவ்வாறான ஒரிரு சம்பவங்கள் பற்றிக் கேள்விப்பட்டதாகவும் தெரிவித்தார். இதற்கு மேல் தன்னால் எதுவும் தெரிவிக்க முடியாது என்று மேலதிக தகவல்களைத் தர மறுத்துவிட்டார்.

அப்பகுதியில் நீண்ட காலமாக நிதி ஆலோசகராக வீடு வாங்குவதற்கான ஆலோசணைகளை வழங்குவது மோற்கேஜ் பெற்றுக்கொடுப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர் தேசம்நெற் க்கு தெரிவிக்கையில் அபி என்றொரு பெண் ரீமோட்கேஜ் இன்வெஸ்ற்மன்ற் என்று செயற்பட்டதாகவும் இதனால் சிலர் பாதிக்கப்பட்டதாக தனக்கு தெரியவந்ததாகத் தெரிவித்தார். இப்போதெல்லாம் ஊரை கொள்ளையடித்து ஏப்பம் விடும் சிலரும் மோட்கேஜ் செய்து தருகின்றோம் என்று கடைவிரிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

ராகுலன் லோகநாதன், அபி கணேசலிங்கம் (படங்கள்) ஆகிய இருவரும் ரீமோட்கேஜ் எடுத்து முதலீடுகளை மேற்கொண்டு லாபமீட்ட முடியும் என ஆசை வார்த்தைகளைக் கூறி நம்பிக்கையூட்டி இந்த வயோதிபத் தம்பதிகள் உட்பட சிலரை அவ்வாறு செய்ய வைத்துள்ளனர். ஆனால் முதலீட்டில் இருந்து வருமானம் ஈட்டுவது என்பது பல்வேறு புறச் சூழல்களிலும் தங்கியுள்ளது. ஆனால் இந்த முதலீட்டை மேற்கொண்டவர்களுக்கு இதன் ஆபத்துக்கள் பற்றி சொல்லப்பட்டதா என்பதோ சம்பந்தப்பட்ட இருவருமே நிதி ஆலோசணைகளை வழங்கத் தகுதி உடையவர்களா என்பதும் உறுதிபடத் தெரியவில்லை.

ஆனால் இவ்விருவரும் ஒரு மேட்டுக்குடித்தன வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். ராகுலன் லோகநாதன் பிரித்தானியாவின் மட்டுமல்ல உலகெங்கும் அறியப்பட்ட உதைபந்தாட்ட விளையாட்டு பிரமுகர் டேவிட் பெக்கத்துடன் நின்று எடுத்த புகைப்படங்களை எல்லாம் தன் முகநூலில் பரிமாறியிருந்தார்.

இத்தம்பதியினரின் சில படங்களும் அவர்களின் டாம்பீகமான வாழ்க்கையை வெளிப்படுத்தி நின்றன. ஆனால் இவர்களை நம்பி முதலீட்டை மேற்கொண்டவர்களின் நிலைமை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இவர்களை நம்பி முதலிட்டவர்களுடனான சகல தொடர்புகளையும் ரகு – அபி தம்பதியினர் துண்டித்துள்ளதைத் தொடர்ந்தே இவ்விடயம் பொதுத் தளத்திற்கு வந்துள்ளது.

பிரித்தானியா குறிப்பாக லண்டன் சுதந்திரமான செயற்பாட்டுக்கான களமாக இருந்தாலும் இந்தச் சுதந்திரம் என்பது மோசடிகளுக்கான சுதந்திரமாகவும் இருக்கின்றது. இந்த மோசடிகளுக்கு நடைமுறை விதி முறைகளில் உள்ள ஓட்டைகளும் உதவுகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். லண்டன் உலகின் நிதிப்பரிவர்த்தனையின் தலைநகரமாக இருக்கின்ற அதே நேரம் நிதி மோசடியாளர்களின் கூடாரமாகவும் இருக்கின்றது. உலக மோசடியாளர்கள் பலரதும் வாழ்விடமாகவும் லண்டன் இருப்பது ஒன்றும்; இரகசியமானது அல்ல. அவர்களுக்கு எதிராக பிரித்தானிய அரசும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றது. ரஷ்யாவின் பெரும் பணமுதலைகள் கூட பிரித்தானியாவிலேயே ஒழிந்து கொண்டுள்ளனர். பிரித்தானிய பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மத்திய கிழக்கு பணமுதலைகளுக்கு லண்டனில் கோடிக்கணக்கில் சொத்துப் பத்துக்கள் உள்ளன. தற்போது பிரதமர் பொறிஸ் ஜோன்சனே தவறான வழிகளில் தனது வீட்டைத் திருத்துவதற்கான செலவை செலுத்த முற்பட்டு அம்பலப்பட்டு உள்ளார். இந்தப் பின்னணியிலேயே லண்டனின் மோசடிகளை அணுக வேண்டியுள்ளது. லண்டனில் மோசடிகள் இடம்பெறுவது ஒன்றும் புதிதல்ல. தமிழர்கள் மத்தியிலும் இம்மோசடிகள் நிறைந்துள்ளது.

“வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்” என்ற பழமொழி; ஒரு மனிதனின் வாழ்வில் வீட்டைக் கட்டுவது அல்லது வாங்குவது திருமணம் செய்து கொள்வது என்ற இரு விடயங்களுமே மிக முக்கிய அம்சங்களாக கணிக்கப்படுவதை குறித்து நிற்கின்றது. அப்படியான கஸ்டங்களுக்கு மத்தியில் வாங்கிய வீட்டை முதுமைiயில் பறிகொடுப்பது என்பது மிகக் கொடுமையானது. அவ்வாறான ஒரு நெருக்கடியில் தமது முதுமையில் கணவன் அல்ஸ்மியர் என்ற மறதி நோய்க்கு ஆளாகிய நிலையில் வீட்டையும் இழக்கும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். லண்டன் குரொய்டனில் வாழும் இத்தம்பதியினரை நேரடியாகச் சந்தித்து அவர்கள் சேகரித்து இருந்த கட்டு ஆவனங்களையும் தேசம்நெற் பார்வையிட்டு இருந்தது.

இன்றைய காலகட்டங்களில் வீடு வாங்குவது என்பது அவ்வளவு இலகுவான பொறிமுறையல்ல. பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளில் மனிதர்கள் நேர்மையாக பொறுப்போடு நடந்துகொள்வார்கள் என்று நீங்கள் நம்பினால் அதற்கு பாரிய விலையை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். இந்த வீடு வாங்குவது விற்பது தொடர்பில் சற்று அசந்தாலும் பாரிய இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த வீடு வாங்கும் விற்கும் விடயங்களில் சட்டத்தரணிகளுக்கூடாகவே நிதிப் பரிமாற்றம் நிகழும். இவ்வாறான பரிமாற்றங்களில் சட்டத்தரணிகளே நிதியை கையாடிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது என்கிறார் கிழக்கு லண்டனில் மோற்கேஜ் ஏற்பாடுகளைச் செய்துகொடுத்து வருபவர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் கிழக்கு லண்டனைச் சேர்ந்த ஜெயசீலன் – ராணி தம்பதியினரும் அடக்கம். இவர்கள் 100,000 பவுண்களை (3.3 கோடி ரூபாய்) சட்டத்தரணியிடம் இழந்தனர். மற்றுமொரு இளைஞர் வாங்காத வீட்டுக்காக மோற்கேஜ் கட்டிக்கொண்டுள்ளார்.

குரொய்டன் தம்பதியினரிடம் இருந்து பெற்ற 200,000 முதலீட்டுக்கான வருமானம் செப்ரம்பர் 2021இல் நின்று போனது. இது தொடர்பாக தம்பதிகள் ரெய்டன் நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது இந்தா பணத்தை போடுகின்றோம் என்று சொல்லப்பட்டதேயல்லாமல் பணம் போடப்படவில்லை. மாதாந்தம் 1500 பவுண்களும் 400 பவுண்களுமாக 1900 பவுண் பணம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தேசம்நெற்றை அத்தம்பதியினர் டிசம்பரில் தொடர்பு கொண்ட போது அத்தம்பதியினருக்கு கடந்த மூன்று மாதங்களாக அவர்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டு இருந்தது. ரெய்டன் நிறுவனத்துடனனா அவர்களுடைய தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு இருந்தது. “தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலில்லை. மின் அஞ்சல்கள் பதிலளிக்கப்படவில்லை. தபால்களுக்கும் பதிலில்லை. ஹரோ விலேஜ் வேயில் இருக்கும் அந்நிறுவனத்திற்கு நேரடியாகப் போனபோது அது பூட்டிக்கிடந்தது. அருகில் உள்ள பிரபலமான ரெஸ்ரோறன்ருக்கு போனால் அவர்கள் புதிய வாடிக்கையாளர்களை அங்கு வரும்படி சொல்லி சந்திப்பதாக அறிந்தோம்” என அத்தம்பதியினர் தேசம்நெற்க்கு தெரிவித்தனர்.

இந்நிலையில் தேசம்நெற் ராகுலன் லோகநாதன் மற்றும் அங்கு பணியாற்றியதாக சொல்லப்பட்ட அபி கணேசலிங்கம் ஆகியோரது தொலைபேசியூடாக தொடர்புகொள்ள முயற்சித்தோம் ஆனால் அது பலனளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவர்களுடைய முகநூலூடாகவும் அவர்களுடைய நண்பர்களுடைய முகநூலூடாகவும் தொடர்புகொள்ள முயற்சித்து அபி கணேசலிங்கம் ரகு லோகநாதனை தொடர்பு கொள்ளுமாறு கேட்டிருந்தோம். அந்நிலையில் அபி கணேசலிங்கம் தேசம்நெற்றை தொடர்பு கொண்டார்.

அவரிடம், முதலீடு செய்யலாம் என்று சொல்லி ரீமோட்கேஜ் எடுத்து கொடுத்து தற்போது அவர்கள் தங்கள் முதலீட்டுக்கான வருமானம் இல்லாமல் வீட்டை இழக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீங்கள் இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று தேசம்நெற் கேள்வி எழுப்பியது. அவர் உடனடியாகவே தனக்கும் ரெய்டன் நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என்று விட்டார். அப்படியானால் நீங்கள் எப்படி பாதிக்க்பட்ட க்ளைன்ற்றோடு தொடர்பில் இருந்தீர்கள் என்று தேசம்நெற் கேட்டபோது தான் 2013 அளவில் அதில் வேலை செய்ததாகவும் தாங்கள் ரீமோட்கேஜ் போன்றவற்றை செய்து கொடுப்பதில்லை என்றும் தெரிவித்தார்.

அப்படியானால் பாதிக்கப்பட்டவர் எப்படி குறித்த முகவரியில் வந்து ரீமோட்கேஜ் பற்றி பேசியுள்ளார் என தேசம்நெற் கேள்வி எழுப்பியது. திரு பில்சாட் என்பவரே மோட்கேஜ் விடயங்களை கையாண்டவர் என்றார். அவரே அந்நிறுவனத்தின் பிரென்ஜைஸி எனத் தெரிவித்ததுடன் அதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றார். அப்படியானால் அதன் பிரென்ஜைசர் யார் (தாய் நிறுவனத்தின் உரிமையாளர்) எனக் கேட்ட போது ராகுலன் என்றார். ராகுலன் உங்கள் கணவரா? என்று தேசம்நெற் சார்பில் கேட்கப்பட்ட போது. ‘ஓம்’ என்றார் அபி.

அப்படியானல் உங்கள் கணவருடைய நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றி இருக்கின்றீர்கள். பாதிக்கப்பட்டவருடைய மோட்கேஜ் விடையத்தை நீங்கள் கையாண்டு இருக்கிறீர்கள்? என்று தேசம்நெற் தனது கேள்விகளைத தொடர்ந்தது. என்னுடைய கணவருக்கு இருக்கும் வர்த்தக தொடர்புகள் பற்றி தனக்குத் தெரியாது அதனை அவரோடு தான் கதைக்க வேண்டும் என்றவர், ஆனால் தான் தனக்கு குழந்தை கிடைப்பதற்கு முன் வரை வேலை செய்ததாகவும், குழத்தைகள் பிறக்க 2013இல் வேலையை விட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். நீங்கள் உண்மையைச் சொல்கிறீர்கள் இல்லை. நீங்கள் சில மாதங்களுக்கு முன் வரை மின் அஞ்சல் தொலைபேசியூடாக தொடர்பில் இருந்துள்ளீர்கள் அதற்கான ஆதாரங்கள் தேசம்நெற் இடம் உள்ளது என்று தெரிவித்ததுடன் அவருடைய கணவரை தொடர்பு கொள்ளுமாறு தேசம்நெற் கேட்டுக்கொண்டது.

இச்செய்தி எழுதப்படும் வரை ராகுலன் லோகநாதன் தேசம்நெற்றோடு தொடர்பு கொள்ளவில்லை. அபி கணேசலிங்கம் முதலும் கடைசியுமாக அன்றைய உரையாடலின் பின் தேசம்நெற்றோடு தொடர்பு கொள்ளவில்லை. அந்த உரையாடலை அடுத்து ராகுலன் லோகநாதன் அபி கணேசலிங்கம் இருவரது முகநூல்களும் மூடப்பட்டது. அதேச சமயம் தேசம்நெற் அபி கணேசலிங்கத்துடன் உரையாடியதன் பின் பாதிக்கப்பட்ட சிலருடன் ரெய்டன் தொடர்பு கொண்டதாக தேசம்நெற்க்கு தெரியப்படுத்தப்பட்டது.

ஆபி கணேசலிங்கம் தேசம்நெற்க்கு கூறியதற்கு மாறாக அவர் பாதிக்கப்பட்ட தம்பதியரோடு யூன் 7 2021 மற்றும் ஒக்ரோபர் 4 2021 இல் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஜனவரி 18 2021 காலை 8:23 மின் அஞ்சல் அனுப்பி உள்ளார். அதனால் அபி கணேசலிங்கம் 2013இற்குப் பின் வேலை செய்யவில்லை என்பது உண்மைக்குப் புறம்பானது.

கம்பனி ஹவுஸ் ஆவணங்களின் படி ரெய்டன் நிறுவனத்தின் பெறுமதி வெறும் ஒற்றைத்தான ஆயிரத்திற்குள்ளேயே இருக்கின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட இந்த தம்பதியினர் ரெய்டனில் வைப்பீட்டுக்கு வழங்கிய முதலீடு முத்தான ஆயிரமாக இருந்தது. ரெய்டன் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களிடம் வாங்கிய பணத்தை கஃப்லிங் என்ற நிறுவனத்திலேயே முதலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி தங்களையே முதலான தொடர்பாளர்களாகவும் ரெய்டன் பதிவு செய்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உண்மையான முதலீட்டாளர்களுக்கும் இடையே எவ்வித சட்ட ரீதியான தொடர்பும் இல்லை.

அபி கணேசலிங்கம் இல்லாத நேரங்களில் பிரியா, மேகா ஆகிய பெயர்களில் சிலர் மின் அஞ்சலில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக பாதிக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பையும் ரெய்டன் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் முதலீட்டுக்கு என்ன ஆனாது என்று தெரியாமல் இருண்ட எதிர்காலத்தோடு தாங்கள் குடியிருக்கும் வீட்டை இழக்கும் அச்சத்துடன் வாழ்கின்றனர்.

இங்கிலாந்தில் மோசடிகள் அதிகரிக்கின்றது! தமிழர்கள் தமிழர்களையே மோசடி செய்கின்றனர்!!!

இங்கிலாந்தில் பல்வேறு விதமான மோசடிகள் தொடர்ந்து வருவதும் இந்த மோசடிகளினால் அப்பாவிகள் பலர் பாரிய இழப்புகளுக்கும் உள்ளாகி வருவதும் தொடர்கதையாகி வருகின்றது. வியாபாரம், இலாப மீட்டுவது என்ற பெயரில் ஊரையடித்து உலையில் போடும் வேலைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். லண்டன் தமிழர்கள் சிலரும் தங்களை சமூகத் தலைவர்களாகக் காட்டிக்கொள்பவர்களும் கூட இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பணத்தை எப்படியாவது ஈட்டலாம் அதுவே தங்களது திறமை எனக்கருதும் இந்த உதவாக்கரைகள் தனிப்பட்ட பலரின் வாழ்க்கையை நாசமாக்குவதற்கு துணை போகின்றனர்.

இந்த மோசடிகளில் பெரும் இழப்பை ஏற்படுத்துவது வீட்டை வைத்து மேலதிக கடன்பெற்று முதலீடு செய்வது தொடர்பான மோசடிகள். ஹரோவில் இளம் தம்பதியினர் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட சிலர் ஆதாரங்களை வழங்கி உள்ளனர். அவர்களுக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கைகளும் தயாராகி வருகின்றது. ஒரு வயதான தம்பதிகள் இவ்வாறான ஒரு முதலீட்டு திட்டத்தில் 200,000 பவுண்களை வழங்கி கடந்த சில மாதங்களாக எவ்வித வருமானத்தையும் பெறாமல் அவர்கள் இருக்கின்ற வீடே தற்போது வங்கியினால் விற்கப்படும் அபாய நிலைக்கு வந்துள்ளது. இவ்வாறு பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் வீடுகளை வாங்குவதற்கு சட்டத்தரணிகளுக்கு செலுத்தப்படுகின்ற பணத்தை ஒரு சில சட்டத்தரணிகள் கையாடல் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளனர். இவ்வாறு வீட்டை வாங்கவதற்கு வாங்குபவர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 100,000 பவுண் வரை செலுத்திய தம்பதியினர் வீடும் வாங்காமல் அவ்வளவு பணத்தையும் இழந்து தொடர்ந்தும் வாடகை வீட்டில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

பப் அல்லது பார் – தவறணை நடத்துகிறோம் என்ற பெயரில் அரை நிர்வாண நடனங்களை ஏற்பாடு செய்து அவ்வாறான இடங்களில் போதைப்பொருட்களையும் கண்டும் காணாமல் அனுமதித்து இளம் சமூதாயத்தை அழிக்கும் தொழிலிலும் ஒரு சில தமிழ் தவறணை உரிமையாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அதீதமாக ஆசைப்பட்டு இல்லாதவர்களை ஆவணங்களில் உருவாக்கி தனிப்பட்ட மோசடிகளில் ஈடுபட்டு இருந்ததையும் இழந்துகொண்டிருக்கின்றனர். இவர்கள் வீட்டையும் வைத்துக் கொண்டு அரச உதவிகளையும் எடுக்கும் பேராசையில் வீட்டை அவணங்களில் ஒருவரை உருவாக்குவது அல்லது இன்னொருவரின் பெயரில் வீட்டை மாற்றுவது போன்ற மோசடிகளும் தொடர்ந்து இடம்பெறுகின்றது. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவபவர்கள் இங்குள்ளவர்களின் பெயர்களில் வீட்டை வாங்கி அந்த வீட்டில் இருந்துகொண்டே அரச உதவியை எடுப்பது போன்ற பல்வேறு மொள்ளமாரித்தனங்களிலும் ஈடுபடுகின்றனர்.

கிறடிட்காட் மோசடி மிகச் சாதாரணமான மோசடியாக இன்னமும் காணப்படுகின்றது. அண்மையில் கிங்ஸ்ரன் மருத்துவமனையில் மரணமானவரின் கிறடிட் காட்களை காணவில்லை என அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் கிறடிட் காட் தொலைத்துவிட்டதாக தாங்களே முறைப்பாடு செய்துவிட்டு அதனை பயன்படுத்திய சம்பவங்களும் சாதாரணமாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறானவர்கள் சிலர் மாட்டுப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

பிரித்தானிய பிரதமரே தன்னுடை இல்லத்தைத் திருத்துவதற்கான செலவை மூடி மறைத்த மோசடி தேசிய ஊடகங்களில் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. இந்த நேர்மையின்மை சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் வெளிப்பட்டு வருகின்றது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம் 13 தடவைகள் பாங்கிரப்சி செய்து ஜனாதிபதியானார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மதப் படுகொலைகளுடன் சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டு இன்னமும் பலமாக உள்ளது. மோசடிகளைச் சகித்துக்கொள்கின்ற சமூகம் ஒன்று உருவாகிக்கொண்டு இருக்கின்றது.

குட்டியின் கடைசி நிமிடங்கள் – நட்பு என்பது எதுவரை…

என்னுடைய அண்ணன் 1989 இல் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த மோதலில் கொல்லப்பட்ட போது அவனுக்கு வயது வெறும் 23. மரணத்தின் வலியை உணத்திய மரணம். அவனது உடல் கூடக் கிடைக்கவில்லை. போராடப் போனவர்கள் முட்டாள்களா? போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் முட்டாள்களா? அல்லது எமது போராட்டமே முட்டாள்தனமானதா? இதற்கு விடை கிடைக்கவில்லையா அல்லது விடையை அறியத் தயாரில்லையா தெரியவில்லை. ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்துவிட்டும், அதிமுட்டாள்தனமான அரசியலை இன்றும் முன்னெடுக்கின்றோம்.

2003இல் என் தந்தையார் தனது அறுபதுக்களில் மாரடைப்பால் மரணித்த போது, நான் லண்டனில். மரணச் செய்தி எனக்கு கிடைத்த போது தகனக் கிரியைகள் கூட முடிந்துவிட்டது. என்னிரு உறவுகளினதும் மரணத்திற்கு அருகில் நான் நிற்கவில்லை. பார்க்கவில்லை.

2001 செப்ரம்பரில் இரட்டைக் கோபுரங்களில் இருந்து மனிதர்கள் இறந்து கொண்டிருந்ததை நேரடியாக லைப்பாக பார்த்துக்கொண்டிருந்தேன். உலகமே பார்த்துக்கொண்டிருந்தது. உயிரைக் காக்க மாடிகளில் இருந்து குதித்து மரணத்தை தழுவிக்கொண்டிருந்தனர். விமானம் மோதி அதன் எரிபொருள் எரிந்து மக்கள் கருகிச் செத்துக்கொண்டிருந்ததை பாரத்தோம். அவர்களுக்கும் எனக்கும் இடையே மனிதம் என்பதைத் தவிர எந்த உறவும் இருக்கவில்லை. இந்த மரணங்களுக்கும் எனக்கும் பல்லாயிரம் மைல் இடைவெளி.

இப்போது கடந்த 12 மாத காலத்திற்குள் என்னோடு எவ்வித இரத்த சம்பந்தமுமற்ற நெருக்கமான இரு நட்புகளை முற்றிலும் மாறுபட்ட சூழலில் இழந்துள்ளேன். இந்த இரு நட்புகளோடும் இரு தசாப்தங்களுக்கு மேலான ஒரு உறவு இருந்தது. வண்ணத்துப் பூச்சிவிளைவு – butterfly effect என்பார்கள் அது போல் தான் இதுவும். உலகின் ஒரு மூலையில் வண்ணத்துப் பூச்சி பறக்க அந்த வண்ணத்துப் பூச்சியின் அசைவு மலரை அசைக்க மலரின் அசைவு கிளையை அசைக்க கிளையின் அசைவால் … என்று போய் உலகின் இன்னொரு மூலையில் புவிநடுக்கம் ஏற்பட்டது போல்தான்.

1954 நவம்பர் 26இல் வண்ணத்துப்பூச்சி ஏதும் செய்திருந்தால் 1987இல் இந்திய அமைதிப்படை இலங்கை வந்திருக்காது. நான் யாழ் வட்டு இந்துக் கல்லூரியிலேயே படித்துக் கொண்டிருந்திருப்பேன். சிவஜோதியையோ மற்றும் யாழ் விக்ரோரியாக் கல்லூரி நண்பர்களையோ சந்தித்திருக்க வாய்ப்பில்லை. அவன் எனக்கு ஒரு முகவரியற்ற மனிதனாக இருந்திருப்பான். ஆனால் எங்கோ பறந்த வண்ணத்துப் பூச்சியின் விளைவால் நண்பர்களானோம். மரணப் படுக்கையில் இருந்தபடியும் லிற்றில் எய்டைப் பற்றி பேசினான். இன்று அவன் துணைவிக்கு நான் உடன் பிறவா சகோதரன். லிற்றில் எய்ட் னை அவன் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து சுமக்கின்றார்.

அதேபோல் 1991இல் ஸ்பெயினில் நாங்கள் தரையிறக்கப்படாவிட்டால் சுவிஸ்லாந்தில் அகதி அந்தஸ்து கோரியிருப்பேன். சஞ்சீவ்ராஜ் என்ற குட்டியை சந்தித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் எங்கோ பறந்த வண்ணத்துப் பூச்சியின் விளைவால் ஸ்பெயினில் நாங்கள் மாட்டினோம். திருப்பி அனுப்பப்படும் போது லண்டனில் தரையிறங்கினோம். தமிழீழ மக்கள் கட்சியில் வேலை செய்ய ஆரம்பித்தேன். குட்டியைச் சந்தித்தேன். சமூகம், அரசியல் என்று ஓடித் திரிந்த குட்டியுடன் நட்பாகியது. ஏற்ற இறக்கங்கள் எல்லாம் உண்டு. இருந்தாலும் தேசம் சஞ்சிகை, லண்டன் குரல், தேசம்நெற் ஆகியவற்றின் உத்தியோகப்பற்றற்ற செய்தி சேகரிப்பாளன். இறுதியில் அவன் வாழ்க்கையே எங்களுக்கு ஒரு செய்தியாகிவிட்டது.

கடந்த டிசம்பர் 27இல் வீட்டில் தனியாக இருந்தவனோடு நானும் வந்து சேர்ந்தேன். ஊர்த்துலாவரம் எல்லாம் பேசுவோம். கடைசியில் சண்டையும் வரும். ‘உனக்கே வாழத் தெரியவில்லை. உனக்கு என்ன அரசியல் வேண்டிக் கிடக்கு’ என்று சத்தம் போட்டு முடிப்பேன். கொலைவெறியோடு முறைச்சுக்கொண்டு போவான். மறுநாள் பிள்ளைகளுக்கு இறைச்சிக் கறி வைத்து கவனமாக பாத்திரங்களில் போட்டுத் தருவான். எனக்கும் குறைந்தது இரு மரக்கறி வைத்திருப்பான். அவன் ஊரில் சமைப்பதைப் பற்றியெல்லாம் கதையளக்கின்ற போது அந்தச் சுற்றாடலை அப்படியே கண் முன் கொண்டுவந்து நிறுத்துவான். இரு கைகளால் வடைதட்டுவதும் எடுப்பதும் அவன் சொல்கின்ற அழகே தனி. பயிற்றங்காய் பிரட்டல் கறி வைப்தை சொல்லிக்கொண்டு வந்தால் பயிற்றங்காய் பிரட்டல் கறி சாப்பிட்ட திருப்தி வரும். அவ்வளவு சாப்பாட்டில் நுணக்கம். அவனுடைய மஞ்சவனப்பதி முருகன் கோயில் கதைகளும் அரசியல் கதைகளும் என்றால் எவ்வளவு நேரமும் கதைத்துக்கொண்டிருப்பான். சிலவேளை அறுவையாகவும் இருக்கும்.

அவனுடைய வீட்டுக்கு வந்த போது சிவஜோதி எதிர்ப்புசக்தியை தாக்குப்பிடிக்கவல்ல பக்ரீரியா தாக்கத்தினால் யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 30இல் எம்மைவிட்டுப் பிரிந்தான். அவனுடைய மரணம் முற்றிலும் எதிர்பாராதது. அவனொரு பன்முக ஆளுமை. மதுவின் வாசத்தையே அறியாதவன். தனது வாழ்வு முழவதும் மதுவை விலத்தி வைத்தவன். குட்டிக்கு சிவஜோதியை யாரென்றே தெரியாது. நான் சொல்லிக் கேள்விப்பட்டதும், நான் சிவஜோதியுடைய மனைவி ஹம்சகௌரியோடு உரையாடுவதை கேட்டு அறிந்ததும் தான். ஆனால் சிவஜோதியுடைய நினைவு நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்ற போது அதற்கு வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் சிவஜோதியுடைய நினைவாக தென்னங்கன்றுகள் வழங்குவோம் என்று சொல்லி அதற்கான செலவையும் தானே தந்தான்.

எனது ‘வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை’ நூல் வெளியீட்டு விழா பற்றி 2016இல் அவனோடு பேசினேன். ‘டேய் வித்தியாசமா செய்வோம். எங்களுடைய பிள்ளைகளையும் பேச வைப்போம். இரண்டாம் தலைமுறையையும் இறக்குவோம்’ என்றான். அவனொரு ஐடியா திலகம். ஆளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வேலையைச் செய்ய வேண்டும். எனக்கு அந்த எண்ணம் வரவில்லை. அவன் சொன்னதும் நல்லதாகப்பட்டது. அவனுடைய மூத்தவளை வரவேற்புரைக்கும் என்னுடைய மூத்தவனை நூல் அறிமுகத்திற்கும் போட்டு புத்தகவெளியீடு இனிதே முடிந்தது.

2019இல் அவன் மாடியில் இருந்து வீழ்ந்து உயிருக்காக போராடிக்கொண்டிருந்த போது நானும் தோழர் சிவலிங்கமும் அவனைப் பார்க்கச் சென்றிருந்தோம். அவன் நினைவுகளில் குழப்பம் இருந்தது. அவனுக்கு கொழுவப்பட்டிருந்த ரியூப்கள் எல்லாவற்றையும் பார்த்து நான் மருத்துவமனையில் மயக்கமடைந்து விட்டேன். அதற்குப் பிறகு நானும் நண்பர் ஹரியும் சென்று பார்த்து வந்தோம். அப்படி இருந்தவனுக்கு அவள் மறுஜென்மம் கொடுத்து பார்த்தாள்.

கடைசிக் காலங்களில் பலரைப் பற்றியும் ஆராய்வோம். தோழர் சிவலிங்கம் பற்றி எப்போதும் உயர்வான மதிப்பீட்டோடு பேசுவான். தோழர் ரகுமான் ஜானின் நூல்வெளியீட்டை முன்நின்று நடத்தினான். பின் பாரிஸ் நூல்வெளியீட்டுக்கு நான், குட்டி ரகுமான் ஜான் மூவரும் சென்று சில தினங்கள் தங்கி வந்தோம். அந்தப் பயணத்தின் போது நான் மிகுந்த மனக்கஸ்டத்தில் இருந்தேன். அவர்களோடு பல விடயங்களையும் பகிர்ந்துகொண்டிருந்தேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவன் மற்றையவர்களின் பலவீனத்தை பயன்படுத்தியது கிடையாது. வீட்டுக்கு வெளியே என் போன்ற நண்பர்களுக்கு அவன் உன்னதமான நண்பன்.

ஆனால் அவனுடைய வாழ்க்கையை சின்னா பின்னமாக்கிக் கொண்டிருந்த அந்த கெட்ட பழக்கத்தில் இருந்து அவனால் மீள முடியவில்லை. அவனை மீட்கலாம் என்று எனக்கு இருந்த நம்பிக்கை நாளாக நாளாகத் தேய்ந்து கொண்டே வந்தது. அவனுடைய கடைசி 12 மாதங்களில் அவனுக்கு நெருக்கமான ஒரே உறவு நான்தான். அவன் கொக்குவில் கிராமத்திலும் நான் அனுராதபுரத்திலும் பிறந்து எங்கெங்கோ வளர்ந்து இறுதியில் லண்டன் நியூமோல்டனில் அவனுக்கு நான் என்றாகியது.

தூரத்தே இருந்தாலும் கட்டியவள் பாசத்தோடு சாப்பாடு எடுத்து வருவாள். நண்பர்கள் ரமேஸ் உம் பிரபாவும் ஞாயிற்றுக் கிழமைகளில் வந்து எங்களையும் நடக்க அழைத்துச் செல்வார்கள். ரமேஸின் குழு குழவென்ற வெண்நிறப் பஞ்சு போலானா அந்நாய் எங்களிலும் பார்க்க கம்பீரமாகவே நடக்கும். அதன் வழி நாங்கள் நடப்போம். சிவமோகன் அடிக்கடி நிலைமையை மதிப்பீடு செய்து கவனமெடுப்பார். ‘உன் நண்பர்களைப் பற்றிச் சொல். உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்ற வாசகத்தை குட்டி முற்றிலும் பொய்யாக்கிக் கொண்டான். வண்ணத்துப் பூச்சி விளைவு விளையாட்டாக ஆரம்பித்த பழக்கம் வினையில் வந்து முடிந்தது. சில வேளை முதல் முதல் அருந்தும் போது இன்னுமொரு வண்ணாத்திப் பூச்சியால் க்கிளாஸ் தட்டி ஊத்தி தடங்கல் வந்திருந்தால் அவன் குடிக்காமலேயே இருந்திருக்கலாம். அல்லது அவனுக்கு குறிப்பு வேறு யாருடனாவது பொருந்தியிருந்தால் வந்தவள் பென்ட் எடுத்திருப்பாளோ என்னவோ… இந்த வண்ணத்துப்பூச்சி விளைவு எங்கெங்கெல்லாமோ முடிச்சவிக்கின்றது. முடிச்சுப் போடுகின்றது.

ஒக்ரோபர் ஒன்பது அவனுக்கு இயலாமலாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஒரிரு நாளிலேயே வந்துவிட்டான். அப்போது தான் ஓரளவு எனக்கும் அவனுக்கும் கூட இனி நிறையக்காலம் இல்லை என்பதை உணர முடிந்தது. எமது உடலுறுப்புக்களில் முக்கிய உறுப்பான ஈரல் செயலிழப்பதாக மருத்துவர்கள் சொல்லி உள்ளனர். அவனுடைய நிலையில் அதற்கான சிகிச்சை அளிப்பதிலும் பலனில்லை என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்திருக்க வேண்டும். அடுத்த ஒரு மாதத்தில் நவம்பர் 12இல் மீண்டும் மருத்துவமனைக்கு. அதுவே அவனது கடைசிப் பயணம் என்பதை என்னால் உணரமுடிந்தது. அதுவே அவனுக்கு இந்த வலி, வேதனையில் இருந்து விடுதலையைக் கொடுக்கும் என்று எண்ணினேன்.

அவனிருந்த வார்டில் சிகிச்சை பெற்றவர்கள் எல்லோருமே எண்பது வயதைத் தாண்டியவர்கள். இவன் மட்டுமே ஐம்பதுக்களில். அவன் வாழ்வதற்கு இன்னும் 30 ஆண்டுகள் இருந்தது. ஆனால் அவனது தவறான முடிவுகள், அவனது முடிவை முன்பதிவு செய்ய காரணமானது. மருத்துவமனையில் இருந்து, கட்டியவளுக்கு தொலைபேசி அழைப்பு இரவு பதினொருமணியளவில். அவளுக்கு எதுவும் புரியவில்லை.

மொழிபெயர்ப்பாளர் தேவை என்றாள். நான் அவளுக்கு நிலைமையை விளக்கினேன். அந்த இடியான செய்தியைச் சொல்லப் போகின்றனர். அவனுடைய கடைசிநாள் இது. அவனது உடல்வலிக்கு இது விடுதலை கொடுக்கும் என்று சமாதானம் சொல்லி தேற்றினேன். உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு அழைப்பு வந்தது. அவளையும் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினோம்.

தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் நிதானமாக விளங்கப்படுத்தினார். “இனிமேல் நாங்கள் செய்வதற்கு எதுவுமில்லை. அவரை நிம்மதியாக கஸ்டமில்லாமல் வழியனுப்பி வைப்பதே ஒரேவழி” என்றார். அவருடைய மருத்துவவியல் மொழியில் நாங்கள் வழியனுப்பி வைப்பதற்காக உயிரைப் பிடித்து வைத்துள்ளனர் என்பது தான் சாரம்சம். ஓரளவு எதிர்பார்த்தது தான். நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவரோடு இருக்கலாம் என்றவர் மெதுவாக திடீரென் எப்பவும் எதுவும் நடக்கலாம், அதனால் தமதிக்காமல் உள்ளே செல்வோம் என தீவிர சத்திரசிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே வார்ட் எட்டில் எவ்வித சலனமும் இல்லாமல் ரியூப்கள் பொருத்தப்பட்ட நிலையில் அவன். கட்டியவள் அவன் முகத்தை வருடி இதயத்தை வருடி கண்ணீர் விட்டிருக்க பிள்ளைகள் அவன் கையைப் பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்களோடு நானும் அவன் கையைப் பற்றிக்கொண்டேன். பத்து நிமிடங்களிருக்கும் மருத்துவர் என்னை சைகையால் வரச்சொன்னார். இனி தாமதிக்க முடியாது. சிலவேளை பிள்ளைகளுக்கு முன் ஏதும் ஆகிவிடலாம். ஆதனால் அடுத்த 5 நிமிடங்களுக்குள் அவர்களை கூட்டிச்சென்றுவிடலாம்” என்றார். அவ்வாறே பிள்ளைகள் கண்ணீரோடு அப்பாவை வழியனுப்பி வைத்தனர். அவர்களை இன்னுமொரு மருத்துவ தாதி வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றார்.
இப்போது அவனைக் கட்டியவளும் நானும்.

“அவரது இதயத்தை இயக்க வழங்கப்படும் மருந்தை நிறுத்துவோம். இதயத்துடிப்பு படிப்படியாகக் குறையும். அதேநேரம் சுவாசத்தையும் நிறுத்துவோம். அவர் எவ்வித வலியும் இன்றி ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்வார்” என்று மிவும் இதமாக முடிந்தவரை உணர்வுபூர்வமாகச் சொன்னார். அவள் அவனது இதயத்தையும் முகத்தையும் வருடியவாறு நிற்க அவளது கண்ணீர்த்துளிகள் அவன் மீது வீழ்ந்தது. நான் அவன் கைகளைப் பற்றிக்கொண்டேன். இதயத்துக்கு வழங்கப்பட்ட மருந்து நிறுத்தப்பட்டது. இதயத்துடிப்பு வீழ்ச்சியடையத் தொடங்கியது. உயிரை போகவிடாமல் இழுத்து வைத்திருந்த அந்த மெசின் சிவப்பு விளக்குகளை மின்னி மின்னி அலறியது. அந்தத்தாதி எதையெல்லாமோ அழுத்தி அந்த அலறலை மௌனமாக்கினால். இப்போது சிவப்பு விளக்கு மட்டும் மின்னி மின்னிக் கொண்டிருந்தது. சுவாசத்தை சரி செய்து அவனை அமைதியாக சுவாசிக்கச் செய்தனர். பின் சுவாசத்திலும் வீழ்ச்சி. இறுதியில் அவனது இதயம் கடைசியாக ஒரு தடவை துடித்தது. அவன் மார்பில் கை வைத்திருந்தவள் அதை உணர்ந்தாள். அவன் உயிர் பிரிந்தது. அந்த மெசினும் நிறுத்தப்பட்டது.

“என்ரை பிள்ளைகளை உன்ரை பிள்ளைகளைப் போல் பார்க்க மாட்டியா?” என்று கேட்டது மட்டும் என் காதில் எதிரொலித்துக்கொண்டது.

அவன் மரணத்தை நோக்கிச் செல்கின்றான் என்பது மிக உறுதியாகத் தெரிந்தும் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. இன்னுமொரு உயிர் இவ்வாறு இழக்கப்படக் கூடாது என்று எண்ணினேன். சஞ்சீவ்ராஜ் என்ற இந்தக் குட்டியின் முடிவை ஒரு வாழ்க்கை அனுபவபாடமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவனின் கடைசிக் காலங்களில் எனக்கு ஏற்பட்டது. அவனுக்கும் அதனைத் தெரியப்படுத்தி இருந்தேன். அவன் மறுத்தானா சம்மதித்தானா என்பதை என்னால் உணரமுடியவில்லை. அதனாலேயே இப்பதிவுகள். சேற்றில் கால் வைக்காமல் விதைக்க முடியுமா? ஆகவே குட்டியின் மரணம் யாராவது ஒருவருக்காயினும் படிப்பினையானால் அதுவே அவனது ஆத்மாவை சாந்தியடையச் செய்யும். அவ்வாறானவர்களின் வாழ்கையினூடாக அவன் நிம்மதியாக உறங்குவான்.

ஆகவே எங்கள் நண்பர்கள் நினைவாக அவர்களுடைய ஆத்மாசாந்தியடைய இந்த ஆண்டு முதல் நாங்கள் மதுவை எம் வாழ்விலிருந்து ஒதுக்கி வைப்பதற்கு கற்றுக்கொள்வோம். வரும் புத்தாண்டுச் சபதம் எடுப்பவர்கள் ஜனவரி மாதத்தை மதுவற்ற மாதமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

இந்த வாழ்க்கை என்பது ஒரு தடவை மட்டுமே. அது வாழ்வதற்கே. மரணம் என்றோ ஒரு நாள் எம்மை அனைத்துக்கொள்ளும். அது தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த மரணத்தைத் தேடி நாம் ஏன் செல்ல வேண்டும்? அதற்காக எம் வாழ்வில் மதுவிலக்குச் செய்வோம்.

மதுவைத் தவிர்த்தால் நோய் நொடியிலிருந்து தப்பலாம்!
மதுவைத் தவிர்த்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளை தவிர்க்கலாம்!
மதுவைத் தவிர்த்தால் உறவுகள் நட்புகள் சேரும் நேசிக்கும்!
மதுவைத் தவிர்த்தால் பொருளாதாரம் சிறக்கும்
மதுவை தவிர்த்தால் வாழ்க்கை மணம் கமழும்!

மதுவைத் தவிர்ப்போம் மாண்புள்ள மனிதர்களாக வாழ்வோம்!

அவனது இறுதிக் கிரியைகள்:
தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் இன் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்:

நிகழ்வுகள்:
 
பார்வைக்கு
Sunday, 05 Dec 2021 2:00 PM – 5:00 PM
Richard Challoner School Xavier centre School House Richard Challoner, Manor Dr N, New Malden KT3 5PE, United Kingdom
 
கிரியை
Wednesday, 08 Dec 2021 9:00 AM – 12:00 PM
Manor Park Hall 316 b Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom
 
தகனம்
Wednesday, 08 Dec 2021 12:40 PM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom

தை – ஜனவரி தமிழ் பாரம்பரிய மாதம் – லண்டன் அசம்பிளியில் ஏகமனதாகத் தீர்மானம்!

டீசம்பர் 02இல் லண்டன் அசம்பிளியில் நிக்களஸ் ரோஜர் என்ற அசம்பிளி உறுப்பினர் கொண்டுவந்த ‘ஜனவரி தமிழ் பாரம்பரிய மாதம்’ என்ற தீர்மானத்தை அனைத்துக் கட்சி லண்டன் அசம்பிளி உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இத்தீர்மானம் லண்டனில் வாழும் தமிழர்களின் வாழ்வியலில் பெரும் மாற்றத்தையோ தாக்கத்தையோ ஏற்படுத்தாத போதும், கடந்த நான்கு தசாப்தங்களாக தமிழர்கள் லண்டனின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழங்குகின்ற பங்களிப்பை அங்கீகரிக்கின்ற, அதனை கௌரவிக்கின்ற ஒரு தீர்மானமாக இதனைக் கொள்ளலாம்.

லண்டன் ஒரு பல்லினச் சமூகம் வாழுகின்ற, பலவர்ணம் கொண்ட, ஒருபோதும் உறங்காத ஒரு நகர். உதாரணத்திற்கு லண்டனில் உள்ள ஒரு பாடசாலையில் மட்டும் 56 மொழி பேசுகின்ற மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என்றால் இந்த நகரின் பன்மைத்துவத்தை கற்பனை செய்து பாருங்கள்.

பிரித்தானியாவில் குறிப்பாக லண்டனில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை ஏனைய சமூகங்களோடு (இந்தியர்கள்: குஜராத்திகள், சீக்கியர்கள், பாகிஸ்தானியர்கள், பங்களாதேசிகள், சீனர்கள்) ஒப்பிடுகையில மிக மிகக் குறைவு. லண்டனின் மொத்த சனத்தொகை அண்ணளவாக 9 மில்லியன், கிட்டத்தட்ட இலங்கையின் மொத்த சனத்தொகையின் 50 வீதத்திற்கு சற்றுக் குறைவு. இதில் மொத்த தமிழர்களின் எண்ணிக்கை அண்ணளவாக இருநூறாயிரம் மட்டுமே. ஆகக்கூடியது 2% வீதமானவர்கள் மட்டுமே. இந்த இரண்டு வீதத்திற்குள் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், ரீயூனியன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களில் இலங்கைத் தமிழர்களே லண்டனின் அரசியல், பொருளாதார விடயங்களோடு தங்களை கணிசமான அளவில் இணைத்துக்கொண்டு லண்டனை தங்கள் நகராக்கிக்கொண்டுள்ளனர். அதற்கு அவர்களுக்கு ஒரு தாயகப் பிரதேசம் இல்லாதது அடிப்படைக் காரணமாக உள்ளது. இந்திய, மலேசியத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் லண்டனை ஒரு இடைத்தங்கள் நிலையமாக காண்கின்றனர்.

லண்டன் ஈஸ்ற்ஹாம் என்பது ஒரு குட்டி யாழ்ப்பாணம் என்றால் அதில் மிகையல்ல. அங்கு கவுன்சிலராக பல ஆண்டுகள் வெற்றிபெற்று தைப் பொங்கலை ஈஸ்ற்ஹாம் வீதியில் கடந்த 20 ஆண்டுகளாகக் கோலாகலமாகக் கொண்டாடி வருபவர் முன்னாள் கவுன்சிலர் போல் சத்தியநேசன். தமிழ் சமூகம் பல்வேறு கூறுகளாக முரண்பட்டு இருந்தாலும் அவர்களை இணைத்து தமிழர்களுக்கு என்று ஒரு வரலாற்றை லண்டனில் உருவாக்க வேண்டும் என்பதற்கு வித்திட்டவர்களில் போல் சத்தியநேசன் குறிப்பிடத்தக்கவர். அவருக்கும் பல நெருக்கடிகள் வந்த போதிலும் அவற்றைக் கடந்து சில பல விடயங்களை அவர் சாதித்தும் உள்ளார். லண்டன் அசம்பிளியில் டிசம்பர் 2இல் கொண்டுவரப்பட்ட ‘ஜனவரி தமிழர் பாரம்பரிய மாதம்’ என்ற தீர்மானத்திற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னரேயே அவர் வித்திட்டு இருந்தார்.

தமிழர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் கல்வி, பொருளாதார தேடல் காரணமாக அவர்கள் லண்டனின் கல்வி, மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளில் கணிசமான தாக்கத்தைச் செலுத்தி உள்ளனர். கல்வியைப் பொறுத்தவரை தமிழர்களுடைய சனத்தொகை விகிதாசாரத்துக்கு அதிகமாகவே தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றனர். பெரும்பாலும் இங்கிலாந்தில் உள்ள முன்னணிப் பல்கலைக்கழகங்களில் தமிழ் சொசைற்றி ஒன்றை வைத்திருப்பார்கள். கல்வி மீதான பாரம்பரிய நம்பிக்கை இன்னமும் கணிசமான அளவில் காணப்படுகின்றது. இது ஆசியர்களுடைய குணாம்சங்களில் ஒன்றாகவும் உள்ளது.

லண்டனில் மட்டும் 40 வரையான தமிழ் கோயில்கள் உள்ளன. லண்டனில் தமிழர்கள் கணிசமாக வாழும் ஒவ்வொரு உள்ளுராட்சிப் பிரிவிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் பள்ளிகள், மற்றும் தமிழ் அமைப்புகள் உள்ளன.

லண்டனில் மட்டுமல்ல இந்கிலாந்தில் ரிரெயில் செக்ரரில் தமிழர்களின் சிறு வியாபார நிறுவனங்கள் இல்லாத இடமே இல்லையென்று சொல்லலாம். இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான பெற்றோல் ஸ்ரேசன்கள் தமிழர்களாலேயே நிர்வகிக்கப்படுகின்றது. தமிழர் பாரம்பரிய உணவு வகைகளையும் பல்வேறு சமூகத்தினரும் கொள்வனவு செய்கின்றனர். சட்டத்துறையிலும் தமிழர்களுக்கு குறைவில்லை. பிரித்தானியாவின் சுகாதார சேவைகளில் குறிப்பாக மருத்துவர்களில் கணிசமான பங்கினர் தமிழர்களாக உள்ளனர். தமிழ் மருத்துவர் இல்லாத ஒரு மருத்துவமனை இங்கிலாந்தில் இருக்குமா என்பது தெரியவில்லை. வங்கிகள், ஆசிரியத்துறை, ஊடகத்துறை என தமிழர்கள் பல்வேறு முனைகளிலும் தங்கள் சேவையை வழங்கி வருகின்றனர். தமிழர்களுடைய சனத்தொகைக்கு இத்துறைகளில் கணிசமான பங்கினர் ஈடுபட்டுள்ளனர். அதனால் தமிழர்கள் எண்ணிக்கையில் மிகச் சிறுபிரிவினராக இருந்தாலும் அவர்கள் ஏற்படுத்துகின்ற தாக்கம் கனதியானதாக உள்ளது. அதனால் அவர்கள் தவிர்க்கப்பட முடியாத ஒரு சிறுபான்மையாக உள்ளனர்.

இதுபோன்ற காரணங்களால் தமிழ் சமூகம் சிறுபான்மையாக இருந்தாலும் லண்டனில் ஒரு பார்வைக்குத் தெரியக் கூடிய ஒரு சமூகமாக எப்போதும் இருந்து வருகின்றது. அதனால் லண்டன் அரசியல் தளத்திலும் தமிழ் சமூகம் எப்போதும் ஒரு அதிர்வை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். இந்தப் பின்னணியிலேயே ‘ஜனவரி – தமிழர் பாரம்பரிய மாதம்’ என்ற தீர்மானத்தை லண்டன் அசம்பிளி எடுத்திருந்தது.

டிசம்பர் 02இல் கொன்சவேடிவ் கட்சியின் உறுப்பினர் நிக்களஸ் ரொஜர் இத்தீர்மானத்தைக் கொண்டுவந்திருந்தார். அவர் லண்டனின் உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கை மொசாக் படத்தின் ஒரு கூறாக ஒப்பிட்டுக் குறிப்பிட்டார். சில சமயங்களில் அந்த ஒவ்வொரு கூறையும் ஆழந்து கவனிக்க வேண்டும் என்றும் அந்த வகையில் லண்டன் தமிழ் சமூகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டார். இந்தப் பங்களிப்பு இலங்கையில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தப்பித்து வந்த பின்னரளித்த பங்களிப்பு என்றும் குறிப்பிட்டார். அந்த வகையில் ‘தமிழ் மொழியையும் அதன் வளம்மிக்க கலாச்சாரத்தையும் இந்த மாதத்தில் பதிவு செய்வது பொருத்தமானது. ஜனவரி தமிழர்களுடைய பாரம்பரிய மாதம். அறுவடை நாளான ஜனவரி 14கை நாங்கள் கருத்தில் எடுக்க வேண்டும். இதனை 2016இல் கனடிய அரசு அங்கிகரித்து இருந்தது. அதே போல் லண்டன் மேயரும் லண்டன் உள்ளுராட்சி மன்றங்களும் ஜனவரியை தமிழருடைய பாரம்பரிய மாதமாக அங்கீகரித்து அதனை அரத்தமுள்ளதாக்கி கொண்டாட வேண்டும்’ என்று நிக்களஸ் ரொஜர் விவாதத்தை தொடக்கி வைத்தார்.

கொன்சவேடிவ் கட்சியின் மற்றுமொரு உறுப்பினரும் கறுப்பினத்தவரான சோன் பெய்லி தமிழர்களுடைய பங்களிப்பை விதந்துரைத்ததுடன் (ஒக்ரோபர் மாதம்) கறுப்பின வரலாற்று மாதம் எவ்வாறு கறுப்பின மக்களுக்கு பயனைக் கொடுத்ததோ அதுபோல் தமிழர்களுடைய பாரம்பரியம் ஜனவரியில் மேற்கொள்ளப்படுவது அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றார். கறுப்பின வரலாற்று மாதம் பாடசாலைகளிலும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அடிமைத் தனத்தில் இருந்து கறுப்பின மக்கள் போராடி விடுதலை பெற்று பல்வேறு சாதனைகளைப் படைத்ததை நினைவு கூருவதனூடாக கறுப்பின இளம் தலைமுறையினருக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் கறுப்பின மக்களின் பங்களிப்புப் பற்றி இம்மாதத்தில் பேசப்படும்.

லண்டன் அசம்பிளியின் துணைத் தலைவரான கெய்த் பிரின்ஸ் கொன்சவேடிவ் கட்சியைச் சேர்ந்தவர் குறிப்பிடுகையில் ஜனவரி மாதம் அறுவடை நாள், தமிழர்களுடைய தைப்பொங்கல் தினம் என்றும் அவர்களுடைய பங்களிப்பை இம்மாதத்தில் கௌரவிப்பது பொருத்தமானது என்றும் தெரிவித்தார்.

தொழிற்கட்சியின் அசம்பிளி உறுப்பினர் குருபேஸ் ஹிரானி, தமிழர்களுடைய பங்களிப்பை விதந்துரைத்து தீர்மானத்தை வரவேற்பதில் தான் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

தொழிற்கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான ஒன்ஹார் ஸோஹோற்றா பேசுகையில் தமிழர்கள் பல்வேறு முனைகளிலும் தங்கள் பங்களிப்பை வழங்கி உள்ளனர் எனக்குறிப்பிட்டு தமிழர்கள் முன்ணுதாரணமாகத் திகழ்ந்துள்ளனர் என்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஜனவரி 14 தைப்பொங்கலை தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும் குறிப்பிட்டார். தொழிற் கட்சியின் மற்றுமொரு உறுப்பினராக உன்மேஸ் தேசாய் குறிப்பிடுகையில் 1984 இல் முதல் தொகுதி தமிழர்கள் குண்டுவெடிப்புகளில் இருந்து தப்பி குறிப்பாக யாழ்ப்பாண நகரில் இருந்து வந்ததாகக் குறிப்பிட்ட அவர் அவர்கள் தன்னுடைய பகுதியான ஈஸ்ற்ஹாமிலேயே குடியேறியதாகவும்; ஈஸ்ற்ஹாம் ரெட்பிரிஜ் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு தமிழ் வீடுகளிலும் உள்ளவர்களின் அவர்களின் ஊரில் உள்ள வீடுகளில் ஒருவரையாவது இந்த மோசமான யுத்தத்தில் இழந்துள்ளனர். உடல் ஊனமுற்றுள்ளனர் என்றார். தமிழர்கள் இல்லாமல் ஈஸ்ற்ஹாம் ஹைஸரீற் இல்லையென்றும் யுத்த வடுக்களோடு வந்து லண்டன் நகரோடு இரண்டறக் கலப்பதற்கு தமிழர்கள் ஒரு முன்ணுதாரணம் என்றும் கூறி தீர்மானத்தை வரவேற்றார்.

‘வணக்கம்’ என்று சொல்லி தான் பேச்சை ஆரம்பிக்க விரும்புவதாகக் கூறி ஆரம்பித்த லிபிரல் டெமொகிரட் கட்சியைச் சேர்ந்த ஹினா புஹாரி மற்றையவர்களைப் போல் தாங்களும் இத்தீர்மானத்தை மிகவும் வரவேற்பதாகவும் தமிழர்களுடன் தங்கள் கட்சி நெருக்கமாகச் செயற்படுவதைச் சுட்டிக்காட்டியதுடன் தமிழ் சமூகத்திற்கு ‘நன்றி’ என்று சொல்லி தன் பேச்சை முடித்தார்.

கொன்சவேடிவ் கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான ரொனி டெவினிஸ் சுருக்கமாக குறிப்பிடுகையில் நிக்களஸ் ரொஜர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் தான் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டார். கிரீன் பார்ட்டியைச் சேர்ந்த ஸாக் பொலாஸ்கி தமிழர்களுடைய பங்களிப்பையும் தீர்மானத்தையும் வரவேற்றுக் குறிப்பிட்டார்.

இறுதியாக நிக்களஸ் ரொஜர், தீர்மானத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

லண்டனில் தமிழர்களுடைய அரசியல் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும் அது அதன் முழவீச்சில் இன்னும் இல்லை. இதுவரை தமிழர் யாரும் பாராளுமன்ற உறுப்பினராக வரவில்லை. அதற்கான வாய்ப்புகளும் அண்மைய எதிர்காலத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் தமிழர்களுடைய சனத்தொகை கணிப்பின்படி ஒவ்வொரு தொகுதி தமிழர்களும் ஒரே மாதிரி வாக்களித்ததால் 50 உள்ளுராட்சி கவுன்சிலர்கள் வரக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் உள்ளுராட்சி உறுப்பினர்கள் பத்து முதல் பதினைந்து பேர் வரையே உள்ளனர். தமிழர்களுடைய அரசியல் செல்வாக்கு என்பது இன்னமும் தமிழ் தேசிய அரசியலை ஒட்டியதாகவே இன்னமும் உள்ளது. இங்குள்ள அரசியல் வாதிகளை வைத்து இலங்கை அரசுக்கு எதிராக எதையாவது சாதித்திட வேண்டும் என்ற முனையிலேயே லண்டன் தமிழ் அரசியல் இன்னமும் உள்ளது.

இவ்வாறு எல்லாவற்றையும் முன்ணுதாரணமாகக் காட்டுவதால் லண்டன் தமிழ் சமூகத்திற்குள் பிரச்சினையே இல்லையென்ற தவறான முடிவுக்கு யாரும் வந்துவிடக் கூடாது. இளைஞர் குழக்களின் வன்முறை தேசிய அளவில் பேசப்படும் அளவுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. கடந்த இரு தசாப்தங்களில் லண்டனை உலுக்கிய சில கொலைகள் உட்பட 30 வரையான தமிழ் படுகொலைகள் தமிழர்களால் நடந்துள்ளன. ரெயிலில் குதித்து தற்கொலை செய்ததாக செய்தி வந்தால் அது தமிழராக இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து தாய்மார் பிள்ளைகளைக் கொலை செய்து தற்கொலைக்கு முயற்சித்தனர். அவ்வளவுக்கு தமிழ் சமூகத்தில் மனநிலை பாதிப்புகள் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. குடும்ப வன்முறைகள் அதனால் பிள்ளைகள் அரச சமூகப் பிரிவின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் நிலைகளும் இங்குள்ளது.

ஆகவே ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் உள்ள சிக்கல்களும் கஸ்டங்களும் தமிழ் சமூகத்திற்குள்ளும் உள்ளது. அவற்றை ஆராய்ந்து பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டு அடுத்த கட்டம் நோக்கி தமிழர்கள் நகரவேண்டும். யாழ்ப்பாணத்தில் மழை பெய்தால் ஈஸ்ற்ஹாமிலும் ஹரோவிலும் குடை பிடிக்கும் அரசியல் இன்னும் எத்தினை நாளைக்கு. லண்டனில் பலநூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்களில் குடும்பவன்முறை பெரும் பிரச்சினையாக உள்ளது. அதற்கு அதீத மதப்பழக்கம் முக்கிய காரணமாக உள்ளது. மனவழுத்தம் பற்றிய விழிப்புணர்வு இன்னமும் சரியான வகையில் கையாளப்படவில்லை. இவை ஒரளவு வெளித்தளத்தில் தெரிகின்ற பிரச்சினைகள் இதைவிடவும் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் பலவும் உள்ளது. இங்குள்ள தமிழர்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளும் அவசியமாகின்றது. லண்டன் அசம்பிளி ‘ஜனவரி தமிழர் பாரம்பரிய மாதம்’ என்று அறிவித்தது போல் லண்டன் தமிழர்கள் ஜனவரியை மது விலக்கு மாதமாக அறிவிக்க வேண்டும். கடைப்பிடிக்க வேண்டும். திருமணம் மற்றும் விழாக்களில் மதுவை முற்றாகத் தடை செய்ய வேண்டும். பொது நிகழ்வுகளிலும் சமூக வலைத்தளங்களிலும் மதுப் பாவனையையும் அதன் படங்களைப் போட்டு கொண்டாடுவதையும் முற்றாக நிறுத்த வேண்டும்.

சஞ்சீவ்ராஜ்: மதுவும் மரணமும் – மரணத்தை வெல்ல மது நீக்கம் வேண்டும்!!!

லண்டனில் அரசியல், சமூக, கலை, இலக்கிய, நாடகச் செயற்பாடுகளில் நன்கு அறியப்பட்ட குட்டி என்று எல்லோராலும் வாஞ்சையுடன் அறியப்பட்ட தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் இன் இதயத்துடிப்பை, மருத்துவக்குழவினர் இன்று (நவம்பர் 23, 2021) அதிகாலை இரண்டுமணியளவில், அவருக்கு வழங்கப்பட்ட செயற்கை உயிராதரவுக் கருவியை நிறுத்தி, முடிவுக்கு கொண்டு வந்தனர். அவருடைய 52 வயது வாழ்க்கையின் அத்தியாயம் முடிவுக்கு வந்தபோது அவருடைய மனைவியும் குழந்தைகளும் நீண்ட நாள் நண்பனாகிய நானும் உடனிருந்தோம்.

சஞ்சீவ்ராஜ் உடைய வாழ்கையின் ஒரு பக்கத்தை பெரும்பாலும் அனைவரும் அறிவோம். அரசியலில் அதீத ஆர்வமும் ஈடுபாடும் உடையவர். தீப்பொறி குழவினருடன் மூன்று தசாப்தங்களாக புலம்பெயர் மண்ணில் மிக நெருங்கிப் பணியாற்றியவர். தீப்பொறியின் வெளியீடுகளாக வெளிவந்த உயிர்ப்பு, வியூகம் சஞ்சிகைகளின் வெளியீட்டில் முன்நின்று செயற்பட்டவர். தோழர் ரகுமான் ஜானுடைய நூல் வெளியீடுகளிலும் முன்நின்று செயற்பட்டவர்.

லண்டனில் வெளிவந்த ஈழபூமி பத்திரிகையில் இயக்குநர் புதியவன் ராசையா ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர். அத்தோடு பிற்காலத்தில் வெளியான வெளி பத்திரிகையை வெளியிடுவதில் புதிய திசைகள் அமைப்போடு நெருக்கமாகச் செயற்பட்டவர்.

லண்டனில் தற்போது தனக்கெனத் தடம்பதித் தமிழர் தகவல் என்ற தகவல் தொகுப்புக்கான எண்ணத்தை தமிழில் முதலில் உருவாக்கிய செயற்பாட்டாளர்களில் இவரும் ஒருவர். அன்றைய தமிழர் தகவல் மிக வெற்றிகரமாக இயங்கியது.

லண்டனின் தென் கிழக்கில் இசைக்குழவை உருவாக்கி இசை நிகழ்ச்சிகள் மூலம் வருமானத்தைப் பெற்று பொதுச்சேவைகள் பலவற்றைச் செய்த முன்னோடிகளில் இவரும் ஒருவர்.

நாடக இயக்குநர் க பாலேந்திராவின் தமிழவைக்காற்றுக் கழக நாடகக் குழவுடன் சில தசாப்தங்களாகவே இவர் இணைந்து பணியாற்றி வந்திருக்கின்றார். அத்தோடு கலை, இலக்கிய செயற்பாட்டாளர்களுடனும் தன்னை இணைத்துக்கொள்வார். ஆரம்ப காலங்களில் புலம்பெயர் தேசங்களில் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்புக்கள், பெண்கள் சந்திப்புக்கள், அரசியல் நிகழ்வுகளில் இவர் தன்னையும் இணைத்துக்கொண்டவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக விளையாட்டுக்களிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர்.

யாழ் கொக்குவிலைச் சேர்ந்த இவர் ஆரம்பக் கல்வியை அப்பகுதியிலும் அதன் பின் இடைநிலைக் கல்வியை யாழ் இந்துக்கல்லூரியிலும் பயின்று இந்துவின் மைந்தனானவர். யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தில் சஞ்சீவ்ராஜ் தன்னை எப்போதும் ஒரு மையப் புள்ளியாக தக்க வைத்துக்கொண்டவர்.

இவருடைய நெருங்கிய வட்டத்தில் இல்லாவிட்டாலும் அரசியல், சமூக, கலை, இலக்கிய, நாடகச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இவர் நன்மதிப்பொன்றைத் தக்க வைத்தவர். பொதுவாக வீட்டுக்கு வெளியே நல்ல நண்பர். சமூக அக்கறையாளன். தீவிர செயற்பாட்டாளன். ஒரு முற்போக்காளன். ஆனால் இவற்றையெல்லாம் உளப்பூர்வமாக இவர் நம்பினாரா என்பது பற்றி வெவ்வேறு தரப்பினருக்கு வெவ்வேறு அபிப்பிராயங்கள் உள்ளது.

தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் எவ்வாறு சமூகத்தின் முன் தன்னை முன்நிறுத்த முயன்றாரோ அதனை அவரால் சாதித்துக்கொள்ள முடியவில்லை. அவருடைய இறுதிக்காலங்கள் மிகவும் வேதனையானவை. ஆனால் அவரோடு சேர்ந்து பயணித்தவர்கள், அவருடைய இந்துவின் மைந்தர்கள் மற்றும் கல்லூரிகளின் நண்பர்கள், சமூக, கலை, இலக்கியச் செயற்பாட்டாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள்: சஞ்சீவ்ராஜ் எவ்வாறு சமூகத்தின் முன்தன்னைக் காட்ட முயன்றாரோ அதனை அவருடைய வாழ்வுக்குப் பின் செய்துகாட்ட முன்வருவதே நாங்கள் சஞ்சீவ்ராஜ்க்கு செய்யக்கூடிய அஞ்சலியாக இருக்கும்.

அந்த வகையில் அவருடைய நினைவாக ஏதும் செய்ய விரும்பினால் பணத்தையும் பொருளையும் வீண்விரயம் செய்யாமல், சஞ்சீவ்ராஜ் தனது வாழ்க்கையை எதனால் இழந்தாரோ அந்த மது அடிமைத்தனத்திற்கு எதிராக புலம்பெயர் தேசத்திலும் தாயகத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகளைச் செய்ய வேண்டும். விழிப்புணர்வுப் பிரசுரங்கள், நூல்கள், தமிழ் சமூகத்தில் மது ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய ஆய்வுகள், மதுவுக்கு அடிமையானவர்களை மீட்பதற்கான செயற்திட்டங்கள் ஆகியவற்றிலேயே கூடிய கவனத்தைச் செலுத்த வேண்டும்.

சஞ்சீவ்ராஜ் உடைய வாழ்வின் பெரும்பங்கை மதுஉட்கொண்டுவிட்டதால் அவரது மனைவி பிள்ளைகள் மதுபோதைக்கு எதிரான விழ்ப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு சஞ்சீவ்ராஜ் இன் ஆத்மசாந்தியடையச் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

ஆகையால் அவருக்கு அஞ்சலி கையேடுகளைத் தயாரிப்பதற்குப் பதிலாக மதுபோதைக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசுரங்கள், கையேடுகள், படைப்புகளைக் கொண்டுவந்து இன்னுமொருவர் இன்னுமொரு குடும்பம் இவ்வாறு பாதிப்படையாமல் காப்பாற்றப்பட வேண்டும்.

 

“இதுக்காகவாடி நாங்கள் ஊரில் இருந்து சீதனம் கொடுத்து தாலி வாங்கி வெளிநாடு வந்தோம்” தமிழ் பெருங்குடி’மக்கள் – பாகம் 01

இக்கட்டுரைத் தொடரை எழுதுவது தொடர்பாக சில மாதங்களாகவே எனக்குள் போராடி, ஒரு முடிவுக்கு வந்து இதனை எழுத ஆரம்பிக்கின்றேன். அனுவம் அறிவு. சிலருடைய வாழ்க்கை அனுபவங்களைத் தெரிந்துகொள்வதனூடாக, அதனைப் புரிந்துகொள்வதனூடாக, சிலருடைய வாழ்க்கையில் திருப்பங்களை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றேன்.

._._._._._.

மேற்கத்தைய ஜாஸ் இசையில் ஆர்வம் உள்ள பலரும் அமி வைன்ஹவுசை (படம்) அறிந்திருக்க முடியும். 1983 இல் இங்கிலாந்தில் பிறந்து 12 வயதிலேயே இசைத்துறையில் நுழைந்து 19 வயதில் தன் பெயரை மேற்கத்தைய இசையுலகை அறிய வைத்தவள். ‘தன்னுடைய இசையைக் கேட்டு ஒரு ஐந்து நிமிடங்கள் மக்கள் தங்கள் சோகத்தை மறக்க வேண்டும்’ என்று விரும்பியவள். ஆனால் 19வது வயதிலேயே மது, போதை, கூத்தும் கும்மாளமும் ஆனது அவள் வாழ்க்கை. புகழின் உச்சியில் இருந்த போதே அவள் வீழ்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தால். 20,000 ரசிகர்களுக்கு முன்னாள் எந்த நாட்டில் நிற்கின்றோம் என்பதையும் மறந்து பாடலின் சொற்களையும் மறந்து நிறைபோதையில் நின்றாள். யூலை 22, 2011 அவளுடைய மருத்துவருக்கு போன் செய்து “நான் சாக விரும்பவில்லை” என்றவள் அடுத்த 24 மணிநேரத்தில் யூலை 23, 2011இல் அதீத போதை விசமாக மரணித்தாள். தனியாகப்படுத்து இருந்த அவளுடைய கட்டிலில் காலியான வொட்காப் போத்தலும் கிடந்தது.

._._._._._.

அப்போது லண்டனில் பொறிபறக்கின்ற அரசியல் செய்தவர்களில் இவனும் ஒருவன். இந்துவின் மைந்தன். புலம்பெயர் அரசியில் கூட்டங்கள், நாடக விழாக்கள், திரைப்பட விழாக்கள் என்று அறியப்பட்ட ஒருவன். ஒரு காலத்தில் இவனுக்கென்று ஒரு பெரும் குடும்ப வட்டம், ஊர் வட்டம், நட்பு வட்டம், பாடசாலை வட்டம், அரசியல் வட்டம், நாடக வட்டம் எல்லாம் இருந்தது.

எனக்கும் அவனில் கணிசமான மதிப்பும் மரியாதையும் இருந்தது. அவனை 1997 முதல் எனக்குத் தெரியும். நானும் அவனோடு அரசியலில் பயணித்துள்ளேன். நல்ல நண்பன். அவனது வீட்டிற்கு வெளியே யாருக்கும் எந்த தீங்கும் செய்ததாக நான் அறியவில்லை. என் பிளைகளுக்கும் சமைத்து சாப்பாடு தந்துவிடுகின்ற நல்ல மனிதன்.

இந்த கொரோனா பரவலுக்கு முன்னதாக 2019 பிற்பகுதியில் ஏதோ வீழ்ந்து மரணத்தின் வாயில்வரை சென்று மூன்று மாதங்களிற்கு மேலாக சிகிச்சை பெற்று மனைவியின் துணையால் மீண்டு வந்தான். அப்போது அவனை மருத்துவமனை சென்று பார்த்த போது அவனிருந்த கோலத்தைப் பார்த்து நான் மயக்கமாகிவிட்டேன்.

2020இல் ஒரு நாள் போன் அடித்து அழுதான். அப்போது தான் அவன் குடிப்பான் என்பதே எனக்குத் தெரியும். அவன் குடிக்கு அடிமையானவன் என்பது 2021இல் தான் தெரியும். அதற்குப் பிறகு நான் அறிந்தவை எதுவும் ஆரோக்கியமானவையல்ல. அவன் முன்னர் வீழ்ந்தது கூட விபத்து அல்ல. போதையால் வீழ்ந்து எழும்பியது என்பதை பின்னர் அறிந்து கொண்டேன்.

கடந்த வாரமும் பார்த்தேன். எழுந்து நடக்கவே திரணியில்லாமல் நின்றான். அவன் அறையில் இருந்து வரும் மணம் சற்று கனதியாக இருந்தது. அவன் பெரிதாக உணவருந்தியதாக தெரியவில்லை. ஆனால் வயிறு சற்று வீங்கி இருந்தது. கட்டிலருகில் ஒரு போத்தல். ஜக் டானியல் அரைப் போத்தல் குடித்து முடித்த நிலையில் கிடந்தது. அவனுடைய கோலத்தைப் பார்த்து எனக்கு பேசுவதற்கோ திட்டுவதற்கோ மனம்வரவில்லை. அன்று காலையும் வெளியே போய் ஒரு போத்தல் ஜக் டானியல் 25 முதல் 30 பவுண் வரை வரும், வாங்கி வந்துள்ளான்.

“எமேர்ஜன்சிக்கு அடித்தியா?” என்று கேட்டால் நீண்ட இடைவெளிக்குப் பின் “அவங்கள் வர மாட்டாங்கள்” என்று புறுபுறுத்தான்.

“நான் அம்புலன்ஸ்க்கு அடிக்கிறன். நீ முதலில் உடுப்பை போடு” என்று உடம்பில் ஒட்டுத் துணியுமின்றி நின்றவனிடம் சொல்லிவிட்டு எமேர்ஜனசிக்கு போன் பண்ணினேன்.

வழமையான கேள்விகள். “சுவாசிக்கின்றாரா? வெப்பநிலை இருக்கின்றதா? இரத்தப்பெருக்கா?” என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போனார்கள். ஆனால் அவனால் உடுப்பைக் கூட போட முடியவில்லை. உடுப்பைப் போட உதவி செய்து கட்டிலில் கிடத்தினேன்.

சிறிது நேரத்தில் முதலில் காரில் ஒரு பராமெடிக் வந்து உடலைச் செக் பண்ணினான். நல்ல காலத்திற்கு கோவிட் என்ற படியால் முகக்கவசம் கையுறை எல்லாம் அணிந்திருந்ததால் அந்த அறையின் மணம் அவருக்கு தெரிந்திராது.

வந்த பராமெடிக் மேலும் சில விசயங்களைக் கேட்டார்: “இரத்தம் சிவப்பாக போகிறதா கருப்பாக இருக்கா? மலம் என்ன நிறத்தில் உள்ளது? குறிப்பாக கருப்பாக தார் நிறத்தில் உள்ளதா?” “வாந்தியோடு சிவப்பாக வருகின்றது. மலம் தார் கருப்பில் இருந்தது” என்று சொன்னேன்.

இதை நானும் ஓரளவு கேட்டறிந்து இருந்தேன். உடம்பினுள் குருதிப் பெருக்கு இருந்தால் அது கருப்பாகி மலத்தோடு வெளியேறும் என்று. ஏற்கனவே ஈரலில் பிரச்சினை. உடம்பின் வடிகட்டல் செயல்முறைகள் எல்லாம் பாதிக்கப்பட்டு பலவீனப்பட்டு இருப்பதால் வயிறும் வீங்கியிருக்க வேண்டும். பரா மெடிக்கிற்கு மேலதிகமாக எதுவும் சொல்ல வேண்டியிருக்கவில்லை. மேலும் நீரிழிவு நோயாளியுமான அவன் வாந்தி எடுப்பதும் சிக்கலானது என பராமெடிக் கூறி உடனடியாக இவரை மருத்துவமனைக்கு இட்டுச்செல்ல அம்புலன்ஸிற்கு அழைப்பு விட சில நிமிடங்களிலேயே அம்புலன்ஸ்ம் வந்து சேர்ந்தது. ஒரு ஆணும் இரு பெண்களுமாக மூவர் வந்திறங்கினர்.

எனக்கோ ஒரு வகையில் மக்கள் வரிப்பணத்தை துஸ்பிரயோகம் செய்கின்றோம் என்ற குற்ற உணர்வு. வந்தவர்களிடம் சொன்னேன்: “என்னை மனித்துக்கொள்ளுங்கள். இவர் ஒரு பெரும் குடிமகன். இவரைச் சுற்றி இருந்த எல்லோருமே இவருடைய இந்தப் பழக்கத்தினால், இவரால் பாதிக்கப்பட்டு கைவிட்டுச் சென்றுவிட்டனர். இனி இவரை திருத்தலாம் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. எங்களுக்கும் உங்களை அழைப்பதைத் தவிர வேறு வழிதெரியவில்லை. கடந்த மாதமும் குடியை மறப்பதற்கான சிகிச்சையை குழப்பிவிட்டு வந்துவிட்டார்”, என்று புலம்பித் தள்ளினேன்.

அந்த பராமெடிக் மிக நிதானமாகவே, “அதைப்பற்றி நீங்கள் யோசிக்க வேண்டாம். நீங்கள் எப்போது தேவையானாலும் எங்களை அழையுங்கள். அதற்குத் தான் நாங்கள் இருக்கின்றோம்”, என்று சொல்லிய படியே “எத்தனை நாட்கள் மாதங்கள் வருடங்கள் குடிக்கின்றார்” என்று கேட்டார். “மூன்று தசாப்தங்களாகக் குடிக்கின்றார்” என்றேன். “அப்படியானால் நீங்கள் எங்களை அழைப்பது இது கடைசித் தடவையாக இருக்கப் போவதில்லை. இன்றைக்கு சில வேளை எங்களால் இவரைக் காப்பாற்றி அனுப்ப முடியும். அவர் திருப்பியும் குடிப்பார். நீங்களும் திருப்பி எங்களுக்கு போன் பண்ணுவீர்கள். அவராக திருந்தினாலேயொழிய வேறேதும் வழியில்லை”. என்றார் அப்பரா மெடிக். “அரசு ஏன் பலாத்காரமாக இவர்களுக்கு குடியை மறக்கும் சிகிச்சையைச் செய்யக் கூடாது?” என்று என் ஆதங்கத்தை கேட்டேன். புன்சிரிப்பினூடாக அவர்கள் தங்கள் இயலாமையை வெளிப்படுத்திக் கொண்டு, மிக அன்போடும் கனிவோடும் அவனை அழைத்துச் சென்றனர். அவன் சிலோமோசனிலும் மெதுவாக ஒவ்வொரு படியாக இறங்கி வீட்டுக்கு முன் நின்ற அம்புலன்ஸை அடைய பத்து நிமிடங்கள் எடுத்தது.

அவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இன்று நவம்பர் 18, 2021 ஒரு வாரமாகிவிட்டது. இன்று அவனுடைய வாழ்க்கை ஆண்டுகள், மாதங்கள், வாரங்கள் என்று கேள்விக்குறியாகி நிற்கின்றது. இன்று அவனைச் சுற்றி எந்த வட்டமும் கிடையாது. கடமைக்காக கட்டியவள் மட்டும் சென்று பார்த்து வருகின்றாள். இதில் யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை.

உளவியல் எடுகோளின்படி ஒன்பது பேரில் எட்டுப் பேர் வாழ்வா சாவா என்று மரணத்தின் விளிம்பில் நிற்கின்ற போதும் நிதானித்து, தீர்க்கமாக முடிவெடுப்பதில்லை. அசட்டுத்தனமான நம்பிக்கையின் அடிப்படையில் தங்களுடைய நிலையை உணர்ந்துகொள்ள முடியாமல் தான் முடிவுகளை எடுக்கின்றனர். நாம் இயலுமானவர்களாக இருக்கின்ற போது எதிர்காலம் பற்றிய எவ்வித சிந்தனையும் இல்லாமல், எஞ்சி இருக்கின்ற காலமும் இவ்வாறே இருந்துவிடலாம் என இவர்கள் நினைக்கின்றார்களா என்று தெரியவில்லை. இதன் விளைவுகள் மிகப் பாரதூரமாக அமைந்துவிடுகின்றது.

கற்றறியும் வன்அறிவிலும் (hard skill) எமது இயல்புசார்ந்த மென்அறிவு (soft skill) மிக முக்கியமானது. தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய (ability to change) என்ற மென் அறிவு ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானது. ஆனால் கணிசமான மனிதர்கள் மத்தியில் இது காணப்படுவதில்லை. அவர்கள் மிகத் திறமையானவர்களாக மிகச் சிறந்த அறிவாளிகளாக இருந்த போதும் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய இந்த மென்அறிவைக் கொண்டிராதவர்கள் ஒரு கட்டத்தில் தடம்புரள்வது தவிர்க்க முடியாதது.

மாற்றம் ஒன்றைத்தவிர எதுவுமே நிரந்தரமில்லை. அந்த அடிப்படையில் மாற்றங்களை உள்வாங்கி எம்மை மாற்றிக்கொள்ளத் தவறினால் தடம்புரள்வது தவிர்க்க முடியாதது. மனித நடத்தை கொள்கையாளர்களின் படி அறிவு என்பதே நாங்கள் எங்கள் இயல்புகளை மாற்றிக்கொள்வது தான். நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களானால் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டுள்ள புறச்சூழலில் வாழ்வதற்கான தகமையை நாங்கள் இழந்துவிடுகின்றோம்.

அவனும் அரசியல் பேசினான், சமூக விடுதலை பேசினான், பெண் விடுதலை பேசினான், முற்போக்கு பேசினான். எங்கும் எப்போதும் தன்னையும் ஒரு புள்ளியாக்கிக் கொண்டிருந்தான். ஆனால் அது எல்லாமே அவன் தன்னை மறைக்க போர்த்திக்கொண்ட போர்வைகளோ என்றே எண்ணத் தோன்றுகிறது. அவன் பேசிய அரசியலுக்கும் அவன் வீட்டினுள் நடந்து கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவ்வாறு தான் எம்மத்தியில் பலர் உலாவருகின்றனர்.

“இதுக்காகவாடி நாங்கள் ஊரில் இருந்து சீதனம் கொடுத்து தாலி வாங்கி வந்தோம்” என்று ஒருத்தி தன் சினேகிதியோடு குமுறி அழுதாள். ஐந்து மாதக் கர்பிணிப் பெண்ணாக தனது இரண்டாவது குழந்தையை சுமந்து கொண்டு; போதைக்கு அடிமையான கணவன் உடலில் ஒட்டுத்துணியில்லாமல் கட்டிலில் மலம்சலம் கழித்துக் கிடக்க, குழந்தையையும் சுமந்தபடி அதனைத் துப்பரவு செய்வது தான் அவளின் நாளாந்த கடமைகளில் ஒன்று. வயிற்றில் சுமந்த குழந்தையை அவள் பெற்றொடுத்த போது அவன் உயிருடன் இல்லை.

இவைகள் எதுவுமே கற்பனைகள் அல்ல. எங்களோடு பயணித்துக்கொண்டிருக்கும் சக மாந்தர்களின் இதயத்தை கனக்க வைக்கும் வாழ்க்கைப் பதிவுகள். உண்மைகளைப் புறக்கணித்து வாழ முடியாது. எமது சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை நாங்கள் முதலில் ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்வுகளையும் தேட வேண்டும்.

(இன்னும் வரும்.)

பணமோசடியில் ஈடுபட்ட இரு லண்டன் தமிழர்களுக்கு பதினொரு ஆண்டுகள் தண்டனை!

 

லண்டன் குயின்ஸ்வே யில் செவர்னியர் – லண்டன் நகர் அழகியல் பொருட்களை விற்ககும் கடையில் பணமாற்றுச் சேவையை மேற்கொண்டவரும் அங்கு பணியாற்றியவரும் மொத்தமாக 11 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றுள்ளனர். 2016 முதுல் 2018 வரை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பவுண்கள் நாணய மாற்றை இவர்கள் செய்துள்ளனர். கடையை நடாத்தி வந்த ரவிராஜ் கணேஸ்பரன் (61) மற்றும் அவருடைய கடையில் பணியாற்றிய நிரோஜன் பாலசிங்கம் ஆகியோருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ரவிராஜ் கணேஸ்பரன் கடையை நடாத்த நிரோஜன் பாலசிங்கம் உள்ளுரிலும் வெளிநாட்டிலும் அவருக்கான மோசடி வாடிக்கையாளர்களைத் தேடிக்கொடுத்து வந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

லுல்சிம் புலாக்கி என்பவர் பணக்கட்டுக்கள் கொண்ட முதுகப்பையோடு கடைக்குள் நுழைவதை நோட்டமிட்ட பொலிஸார் கடையை முற்றுகையிட்டதில் கடையினுள் £140,000 பவுண்கள் இருந்துள்ளது. ஈஸ்ற்ஹாமில் வாழும் ரவிராஜ் கணேஸ்பரனுக்கு 5 ஆண்டுகளும் ஈலிங்கில் வாழும் நிரோஜன் பாலசிங்கத்திற்கு ஆறு ஆண்டுகளும் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது. இவ்வழக்கு சவுத்வார்க் கிரவுன்கோர்ட்டில் நடைபெற்றது.

உலகின் கருப்பு பணம் அதிகம் உலாவுமிடங்களில் ஒன்றாக பிரித்தானியா உள்ளது. உலகின் மிகப்பெரும் மோசடியாளர்களின் கூடாரமாகவும் பிரித்தானியா இருக்கின்றது. உலகின் வெவ்வேற நாடுகளில் பணமோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கும் பிரித்தானியா புகலிடமாக இருக்கின்றது. சென்றவாரம் வெளியான பன்டோரா அறிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள் பிரித்தானியாவில் இருப்பதுமட்டுமல்ல பிரித்தானிய அரசின் ஆட்சியாளர்களுடன் நெருக்கமானவர்களாகவும் உள்ளனர்.

இவ்வாறான பணமோசடி காரணமாக பிரித்தானிய வீதிகளில் கத்திக்குத்துகளும் கொலைகளும் இடம்பெற்று வருகின்றது. பணத்தின் மீது வெறிகொண்டு பணத்தைக்கொண்டு எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணத்தில் செயற்படுவதன் விளைவுகள் பாரதூரமாகிவிடுகின்றது.

அரசியல் பக்கம்: ஜேவிபி உடன் இணைவும் முறிவும்: பாகம் 3

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 03 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 3

தேசம்: இளந்தளிர் வாசகர் வட்டம் தொடர்பில் கதைத்திருந்தோம். அந்த நேரம் உங்களுக்கு கிட்டத்தட்ட 15 வயது வந்திருக்கும். அந்த காலகட்டத்தில் உங்களுடைய தந்தையார் இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அப்போது எத்தனை வயது உங்களுக்கு?

அசோக்: அப்பா இறக்கும் போது, எனக்கு பத்து வயது இருக்கும் என்று நினைக்கிறன்.

தேசம்: அது ஞாபகம் இருக்கா உங்களுக்கு…

அசோக்: பெரிதாக ஞாபகம் இல்ல. கொஞ்சம் ஞாபகம் இருக்குது. அப்பாக்கு தொடர்ந்து அஸ்மா தான். மட்டக்களப்பில் செல்லையா டாக்டர் என்று ஒருத்தர் இருந்தார். டிசம்பர் மாத காலத்தில், அப்பா எங்கட வீட்டில் இருக்கிறேல. Paying ward என்டு காசுக்கட்டி, செல்லையா டாக்டரிட வார்டில அப்பா அட்மிட் ஆகிடுவார். அந்தக் காலம் அங்கதான் அப்பா இருப்பார். ஏனென்றால் மார்கழி மாதக்குளிரில் அப்பாவுக்கு வருத்தும் கூட.

தேசம்: அந்த காலகட்டத்தில அப்பா ஓய்வு பெற்றுவிட்டாரா?

அசோக்: ஆம். அப்பா ஓய்வு பெற்றிட்டார். செல்லையா டாக்டரிட வாட்டிலதான் அப்பா இறந்தார். அம்மாவின் மடியில்தான் அப்பா இறந்தாக, அம்மா சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். நான் கடைசி ஆள் என்றபடியால், நான்தான் கிரியை செய்ய வேண்டும். அப்ப மொட்டையடித்து கொள்ளி வைத்தது அதெல்லாம் ஞாபகம் இருக்கு.

தேசம்: அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையிலான உறவு நிலையை எப்படிப் பார்க்கின்றீர்கள்? அவர்கள் விரும்பித் தான் செய்தவை. அவர்களுக்குள் சமத்துவம் இருந்ததா?

அசோக் : அப்ப தெரியல. ஆனால் இப்ப பார்க்கேக்கை, அப்பாட்ட ஒரு அதிகாரத்தனம் இருந்தது. தலைமை ஆசிரியரும் தானே அப்பா. அரசியல் ரீதியாக அப்பா ஒரு தமிழ்த் தேசியவாதியாகவும், பெரியாரிஸ்டாக இருந்தாலும், கூட வீட்டில ஒரு சட்டம்பியாகத்தான் இருந்தார். எனக்கு தெரிய படங்கள் எல்லாம் அவர் சொல்ற படங்கள் தான் அக்காக்கள் பார்க்க வேண்டும்.

தேசம்: பெண்களை பாதுகாக்கிற ஒரு எண்ணம்…

அசோக்: ஓம், சிவாஜி படங்கள் தான் பார்க்க வேண்டும். வேறு யாருடைய படங்களையும் பார்க்க கூடாது.

தேசம்: தன்னுடைய விருப்பங்கள் சார்ந்து செய்றார்.

அசோக் : சத்தியாகிரக போராட்டத்தில் அம்மா திருகோணமலைக்கு ஊர்வலமாக போனார் என்பது எங்களுக்கு முற்போக்காக பட்டாலும் கூட அது, அப்பாவினுடைய அபிலாஷையாகத்தான் இருக்க முடியும் என்று நான் நினைக்கிறன். அம்மா விரும்பி இருக்கலாம். ஆனால், அம்மாவுக்கு பெரிய ஒரு சுதந்திர வெளி இருந்ததாக தெரியவில்லை. ஆனால், அதற்காக அடக்குமுறை அடிப்பது அதுகள் இல்லை. ஆனா ஒரு ஆணாதிக்க தனம்தான் அப்பாவிடம் இருந்தது. அதிகார சட்டம்பித்தனந்தான் குடும்பத்தில் இருந்தது.

தேசம்: பெரும்பாலான முற்போக்கு பேசுபவர்களின் குடும்பங்களிலும் அதுதானே இன்றும் நிலைமை. அது அம்மாவை பாதிக்கும் விதமாக இருக்கவில்லை…

அசோக்: அப்படி இருக்கவில்லை. இதைவிட பெரிய பிரச்சினை கொடுக்கக்கூடிய ஆளாக நான் தான் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். என்னொரு விடயம் என்னென்றால், எங்கள் வீட்டில் அண்ணாக்கள் எல்லாருடையதும் காதல் திருமணம். அண்ணிமாரைத் திருமணம் செய்து அவங்கள்தான் அனைத்து பொறுப்பையும் பார்க்குற ஆட்களா இருந்தார்கள். அந்நேரம் அப்பா எதிர்ப்பு காட்டினாலும் கூட, காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஆளாக மாறிட்டார்.

தேசம்: திருமணத்தை தடுத்து நிறுத்தக்கூடிய அளவுக்கு எல்லாம் போகேலை

அசோக்: இல்லை

தேசம்: அப்பா இல்லாத காலத்தில் அந்தக் கால சமூகத்தில் ஆண் இல்லாமல் குடும்பத்தை கொண்டு நடத்துவது அல்லது முன்னுக்கு கொண்டுவருவது என்பது மிக கஷ்டமாக இருந்திருக்கும். நீங்கள் ஏழு வயதாக இருக்கும் போதே அப்பா இறந்துட்டார். அதற்குப் பிறகான உங்களை வளர்த்தெடுப்பதில் அம்மாவின் உடைய பங்கு எப்படி?

அசோக்: 7 வயதில்லை. எனக்கு அப்போது 10 வயது இருக்கும். அப்பா இறக்கும் போது அண்ணாக்கள் ஓரளவு வளர்ந்துட்டாங்க . ஆனா யாருக்கும் உத்தியோகம் இல்லை. அப்பாவினுடைய பென்ஷன் இருந்தது. காணிகள் வருமானங்கள் இருந்தது. அப்பா இறந்ததற்கு பிறகு என்ன நடந்தது என்றால் அப்பா அரசியல் நடவடிக்கைகள் சார்ந்து நிறைய கடன் பட்டிருந்தார். அப்பா நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார்.
எங்களுக்கு காணி, பூமி நிறைய இருந்ததால் அதை வைத்துதான் காலப்போக்கில் கடன்கள் எல்லாம் அடைத்தோம்.

78 ல் மட்டக்களப்பில் சூறாவளி வரும் வரைக்கும் தென்னந்தோப்பால் பெரிய வருமானம் இருந்தது. பொருளாதார ரீதியாக பெரிய பிரச்சனை இருக்கவில்லை. அம்மாவுக்கு நான் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற விருப்பம் நிறைய இருந்தது. 5ம் வகுப்பு கொலர்சிப்பில் பாஸ் பண்ணும் அளவுக்கு திறமை இருந்தது. ஆரம்ப இளம்வயதில் விளையாட்டுத்தனம் இருந்தாலும் இடைக்காலத்தில் நல்ல மாணவனாக நான் இருந்தேன். கிருஸ்ணபிள்ளை சேர், இவர் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்தவர். என்னில் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். இப்படித்தான் அம்மாவும்.

என் சிந்தனைகளும், போக்கும் அவங்களுக்கு நிறைய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என இப்ப நினைக்கிறன்.

தேசம் : அந்த நேரம் அப்பா தமிழரசுக்கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்திருக்கின்றார். அந்த காலகட்டத்தில் அப்பாவின் இழப்பு தமிழரசுக்கட்சி க்கு எப்படி இருந்தது?

அசோக்: தமிழரசுக் கட்சிக்கு அப்பாவினுடைய இழப்பு பெரிய ஒரு இழப்பாக இருக்கவில்லை. ஏனென்றால் அதை ஈடு செய்வதற்கு அவர்கள் இன்னொருவரை தேர்ந்தெடுத்து இருப்பார்கள்.

தேசம் : அவருக்கான கௌரவத்தை கொடுத்ததாக இல்லை?

அசோக் : இல்லை அப்பா தமிழரசுக்கட்சியை நேசித்தாரேயொழிய, தமிழரசுக்கட்சி அப்பாவை பயன்படுத்தியது. அது எனக்கு காலப்போக்கில் தெரியவந்தது. எனக்னொரு அத்தான் இருந்தார். இரா. பத்மநாதன் என்று பேர். சுதந்திரன் பத்திரிகையில் எஸ் .டி. சிவநாயகம் ஆசிரியராக இருந்த காலத்தில் அத்தான் அதன் துணை ஆசிரியராக இருந்தார். மட்டக்களப்பு எம்பியாக இருந்த இராஜ துரையின் வகுப்புத் தோழன். மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக உழைத்தவர். அத்தான், அப்பா போன்றவர்கள் பயன்படுத்தப்பட்டார்களே தவிர, எந்த கௌரவமும் அவர்களுக்கு கிடைக்கல்ல.

தேசம் : அதை எப்படி பார்க்குறீர்கள்? ஏன் அந்த உணர்வு உங்களுக்கு வருகிறது? நீங்கள் எந்த காலத்திலும் தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து வேலை செய்யவில்லை?

அசோக் : இல்லை. அண்ணாக்கள் தமிழரசுக் கட்சியுடன் மிகத் தீவிரமாக இருந்தவர்கள். ஒரு அண்ணன் இருக்கிறார் அவர் இப்போதும் தீவிரமான தமிழரசுக் கட்சிதான். எங்க குடும்பம் தமிழரசுக் கட்சி குடும்பமாக தான் எப்பவும் இருக்கிறது. எனக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவங்களின்ர காலத்தில் இருந்த அரசியல் நோக்கமும், போராட்ட உணர்வும் தமிழரசுக் கட்சியிடம் இல்லாமல் போய் விட்டது. அவர் உண்மையாகவே தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும், மலையக மக்களுக்குமான தீர்வை விரும்பினார். முதன் முதலில் முஸ்லிம் மக்களுக்காக தனிஅலகுக் கோரிக்கையை முன்வைத்தவர் அவர்தானே. முஸ்லிம் தமிழ் உறவை வளர்த்தவர். ஆனா, என்ன செய்வது வேறு தேர்வுகள் இல்லை. தமிழ் அரசுக் கட்சிதான் இருக்கிற திருடர்களில் நல்ல திருடனாக இருக்கிறது.

தேசம்: இந்த இளந்தளிர் வாசகர் வட்டம் தான் உங்களுடைய அரசியலின் அரும்பு நிலை என்று நினைக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் எப்படியான அரசியலை நீங்கள் தேர்வு செய்கின்றீகள்?

அசோக்: இளந்தளிர் வாசகர் வட்டத்துக்குள் இருக்கும்போது அப்ப 71 ஆம் ஆண்டு ஜனதா விமுக்திப் பெரமுன ஜே.வி.பி யின் ஆயுதப் புரட்சி நடக்குது.

தேசம்: அது தொடர்பாக உங்களுக்கு ஏதும் ஞாபகம் இருக்கின்றதா?

அசோக்: அது ஞாபகம் இருக்குது. அம்பாறையில் சென்றல் கேம் என்ற இடத்தில் ஒரு சிறைச்சாலை உருவாக்கி அங்கு அட்களை கொண்டு போனார்கள். அது மட்டக்களப்பிலிருந்து எங்கட ரோட்டாலதான் போனது. அப்பா சின்ன வயசுல நாங்க ….. கொண்டு போறாங்க என்று ஆட்கள் போய் பார்த்தவங்க. அந்த ஞாபகம் இருக்கு.

தேசம்: ஜே.வி.பி தொடர்பான பிரமிப்பு ஒன்று அந்த நேரம் இருந்திருக்கு…

அசோக் : அதுக்குப் பிறகு என்ன நடந்தது என்றால். 1977 ம் ஆண்டு இது நடக்குது. ஆறு வருஷத்தால ஜே.வி.பி வெகுஜன இயக்கமாக. ஜனநாயக முறைக்குத் திரும்புவதாக அறிவித்து அவங்கள் தங்களை பிரகடனப்படுத்துறாங்கள்.

78ஆம் ஆண்டு அவங்களுடைய கொள்கைப் பிரகடனம் தமிழில் வருது. இந்தப் பிரகடனத்தை படிக்கிறம் நாங்கள். ரஷ்யப் புத்தகங்களைப் படித்தது. கியுபா புரட்சி, வியட்நாம் போராட்டம் சேகுவேரா, பெடல் கஸ்ரோ, மார்க்சீய சித்தாந்தம் தொடர்பில் எங்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்ததுதானே. அந்தக் கொள்கை பிரகடனம் எங்களை கவர்ந்தது.

இலங்கையில் ஒரு வர்க்கப் போராட்டத்தை கொண்டு வரலாம் ஒரு முழுமையான புரட்சி என்ற சிந்தனை எங்களுக்கு இருந்தது.

தேசம்: கிட்டத்தட்ட 77 ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே உங்கட பார்வை ஒரு இடதுசாரி பார்வையாக வந்திட்டுது.

அசோக்: ஆம் ஏனென்றால் மாக்சிச புத்தகங்கள், ரஷ்யா நாவல்கள்: தாய், வீரம் விளைந்தது எல்லாம் படிக்கத் தொடங்கிவிட்டோம். லைபிறரில இந்த புத்தகங்கள் எல்லாம் வாரது தானே. அதால ஓரளவு இடதுசாரி அரசியல் எங்களுக்குள் உருவாகிவிட்டது. அதால தான் நாங்கள் அந்த கொள்கை பிரகடனத்தை படித்தவுடனேயே அதிலும் இலங்கையில் வர்க்கப் போராட்டம், தொழிலாளர் புரட்சி என பல்வேறு விடயங்கள் கதைக்க பட்டிருந்தது.

அப்ப நான் என்ன செய்தேன் என்றால் அந்த புத்தகத்தைப் படித்துவிட்டு, லயனல் பொபேகேவுக்கு கடிதம் எழுதுறன். அதுல ஒரு அட்ரஸ் போட்டிருந்தது. உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகின்றோம் என அனுப்பிட்டன். அனுப்பி ஒரு பதினைந்து இருபது நாள் போக அந்த கடிதத்தோடு தோழர் முபாரக் என்றவர் வீட்டில் வந்து என்னை சந்திக்க வாரார். நீங்கள் தோழருக்கு கடிதம் எழுதி இருந்தீங்க. உங்களோட கதைக்க வந்துள்ளேன் என்றார். அப்பதான் ஜனதா விமுக்திப் பெரமுனவுக்கும் எனக்கும் தொடர்பு ஏற்படுகிறது. பிறகு நாங்கள் தோழருடன் எல்லா நண்பர்களும் சந்தித்து வகுப்பெடுத்து…

தேசம்: நீங்கள் சொல்வது தனிப்பட்ட முறையிலா அல்லது இளந்தளிர் வாசகர் வட்டமாகவா?

அசோக்: இளந்தளிர் வாசகர் வட்டம்தான். நாங்கள் அவங்களுடைய கொள்கைப் பிரகடன த்தை படித்துவிட்டு தொடர்பு கொள்ளலாம் என்று முடிவெடுத்த பின்பு நான்தான் அந்த கடிதத்தை எழுதுறன். அவர் வந்து எங்களை சந்தித்த பிறகு கேள்விகள் கேட்கிறம். அந்தக் கேள்விக்கு எல்லாம் அவர் பதில் அளித்த பிறகு எங்களுக்கு சேர்ந்து வேலை செய்யலாம் என்று நம்பிக்கை வருது. எங்களுடைய முதல் வேலை போஸ்டர் ஒட்டுறது. துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது.

தேசம்: நீங்கள் சொல்லுகின்ற இதே காலகட்டத்தில் நீங்கள் ஜேவிபி சார்பாக போறீங்க அதே நேரம் உங்கட குடும்பம் வந்து தமிழரசு கட்சியுடன் தமிழ்தேசியத்தோட ஐக்கியமாகி இருக்கு. இதே காலகட்டத்தில் தான் வடக்கில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பாக நீங்கள் அந்த காலத்தில் ஏதும் அறிந்திருந்தீர்களா?

அசோக்: அப்பா சுதந்திரன் பத்திரிகை தொடர்ச்சியாக எடுக்கிறவர். அப்பா இறந்த பின்பும் சுதந்திரன் பத்திரிகை வீட்டுக்கு வாரது. அதற்கூடாக நாங்கள் அறிந்திருக்கிறோம்.

தேசம்: அறிந்திருந்தும் தான் நீங்கள் அங்கு செல்கிறீர்கள்?

அசோக்: ஓம். எனக்கு தமிழரசு கட்சியின் மீதான வெறுப்பு நிலை இருக்குதானே. இப்போ நினைத்துப் பாத்தா தமிழரசுக் கட்சி மீதான வெறுப்பு நிலையை விட அது கட்சி சார்ந்த எம் பிக்களின் போக்குகள் நடத்தைகள் காரணமாக வந்திருக்கும் எண்ணுகிறன்.

தேசம்: நீங்கள் ஒரு தமிழ் தேசிய அரசியல் குடும்பத்தில் இருந்து கொண்டு இடதுசாரி அரசியலை எடுக்கிறீர்கள். அதேநேரம் இடதுசாரி அரசியலை படிச்சுப்போட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பா தமிழ்த்தேசிய அரசியலுக்க போனவர்கள் இருக்கிறார்கள் தானே. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

அசோக்: அவர்கள் உண்மையான இடதுசாரி கருத்துக் கொண்டவர்களாக இருந்திருக்கெலாது. இருந்திருந்தால் புலி அரசியலுக்குள் போய் இருக்க முடியாது. இயக்கங்களை தேர்ந்தெடுத்து அங்கு போனதற்கு ஒவ்வொருவருக்கும் அரசியல் காரணங்கள் இருக்கு. அவங்ளின்ர அரசியல் வர்க்க நிலையும் இத தீர்மானிக்கும்தானே.

தேசம்: உங்களுக்கு ஜேவிபியோட இருக்கிற அரசியல் உறவிலிருந்து எப்படி நீங்கள் விடுபட்டீர்கள் பிறகு?

அசோக் : ஜே.வி.பியோட நாங்கள் தீவிரமாக வேலை செய்திருக்கிறோம். பாசறைக்கெல்லாம் போய் இருக்கின்றோம். படுவான்கரையில் ஒரு கிராமத்துல வீடெடுத்தனாங்கள். நாங்க ஒரு பதினைந்து இருபது தோழர்கள் போய் அங்கேயே தங்கி ஒரு வாரம் நின்று வகுப்பெடுத்து மிகத் தீவிரமாக இருந்தனாங்கள்.
அந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு முபாரக், உதுமாலெப்பை என்ற ஒரு தோழர் அவர் வந்து கொழும்பு மாவட்டத்தில் ஜேவிபினுடைய மாவட்ட சபை உறுப்பினராக இருந்தவர் என்று நினைக்கிறன். வகுப்பெடுத்தார்கள். முஸ்லிம் தோழர்கள் நிறைய பேர் ஜே.வி.பியில இருந்ததாங்க… அதுதான் மிகவும் ஆச்சரியமான விடயம். எங்களுக்கு வகுப்பெடுத்த 3 – 4 தோழர்கள் முஸ்லிம்கள். ஒரு தமிழ் தெரிந்த சிங்களத் தோழர். சிங்கள தோழர்கள் எடுக்கிறதை இவர்கள் மொழிபெயர்ப்பார்கள்.

தேசம்: மட்டக்களப்பில் தமிழ், சிங்களம், முஸ்லிம் சமூகமும் இருந்தபடியால் தான் ஜே.வி.பியினுடைய ஆதிக்கம் அங்கு வருதா? வடக்கில் நான் நினைக்கல இப்படியொரு ஆதிக்கம் இருந்தது என்று.

அசோக்: வடக்கில் இடதுசாரி கட்சிகள், இயக்கங்கள் இருந்தபடியால் அந்த இடத்தை ஜே.வி.பியால் நிரப்ப முடியவில்லை.

எங்களுக்குள்ள இடதுசாரித் தாக்கம் ஒன்று இருந்தபடியால் எங்களுக்கான இடம் வந்து ஜே.வி.பியாத்தான் இருந்தது. யாழ்ப்பாணத்தில இருந்த கம்யூனிஸ்ட் பார்ட்டி வேற ஏதும் வந்திருந்தால் நாங்கள் அவர்களுடன் சேர்ந்து இருப்போம்.

இடதுசாரி இயக்கம் வந்து, வர்க்கப் போராட்டம் என்று வந்திருந்தால், நாங்கள் அதற்குத்தான் போயிருப்போம். ஆனால் கிடைத்தது ஜே.வி.பி தான். பிறகு என்ன நடந்தது என்றால் அனுராதபுரத்தில் இனக்கலவரம் நடந்தது. அதற்குப் பின்னால் ஜே.வி.பி முக்கிய பங்கு வகித்தது என்ற ஒரு கதை வந்தது. அந்த கதை தொடர்பான உரையாடல்தான் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு வந்தது. பிறகு நாங்கள் அவர்கள் ஒரு இனவாதக் கட்சி தான் என்ற முடிவுக்கு வாறம். அதுல இருந்து நாங்க ஒதுங்குறம்.

தேசம்: ஜேவிபியினுடைய நீங்கள் சொன்ன ஐந்து பாடத்திட்டத்தில் ஒன்று இந்திய எதிர்ப்பு என்று நினைக்கிறேன்

அசோக்: அது எங்களுக்கு எடுக்கப்படவில்லை இந்திய விஸ்தரிப்புவாதம் என்ற அந்த வகுப்பு எங்களுக்கு இல்லை.

தேசம்: தமிழ் மக்களுக்கு எதிரான அந்த பகுதியே எடுத்துட்டாங்க

அசோக்: எடுத்திட்டாங்கள். வகுப்பில வந்து வந்து சுயநிர்ணய உரிமை பற்றி. தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் சம உரிமை, சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம்… சோசலிசம் இப்படி அரசியல் வகுப்புக்கள் இருக்கும். அவர்கள் எங்களுக்கு எடுக்காமல் விட்ட இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற வகுப்பு, மலையக மக்களுக்கு எதிரான இனவாதம் கொண்டது என்பதை அவர்களை விட்டு வந்த பிறகு அறிந்து கொண்டோம். ஜே.வி.பி இடது சாரி போலிமுகம் கொண்ட மோசமான இனவாதக்கட்சி.

தேசம் : கிட்டத்தட்ட 77ஆம் ஆண்டு காலகட்டம் என்றால் நீங்கள் ஜி.சி.இ எடுக்கிற காலகட்டம் என்று நினைக்கிறன்.

அசோக்: ஆம். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. சனி ஞாயிறு தான் எங்கடை சந்திப்புகள் எல்லாம் நடக்கும். ஒரு பாடசாலை விடுமுறை காலத்தில் தான் நாங்க பாசறைக்கு போனோம்.

தேசம்: பாசறை எங்க நடந்தது என்று சொன்னீர்கள்?

அசோக்: அது படுவான்கரையில் விவசாய நெல் காணியில் ஒரு வீடு எடுத்து, அங்கேயே தங்கி சமைச்சு சாப்பிட்டு அங்குதான் வகுப்பு நடந்தது.

தேசம்: இப்ப இந்த ஜே.வி.பியின் பிரச்சனைக்குப் பிறகு உங்களுக்கு இடைவெளி ஒன்று வரப்போகுது…

அசோக்: நாங்கள் என்ன செய்த என்றால் வெளியேறிவிட்டு, இளந்தளிர் வாசகர் வட்டம் , விளையாட்டுகள் என்று திரியிறம். இக் காலங்களில தேசிய இளைஞர் சேவை மன்றத்தோடும் நாங்க இருக்கம். அப்ப மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகஸ்தராக செட்டிபாளையத்தைச் சேர்ந்த செல்வநாயகம் அண்ணர் பொறுப்பாக இருந்தார். அவர் எங்களுக்கு நிறைய உதவிகள் செய்தார். அவர்கள் நடாத்தும் விளையாட்டு முகாம், தலைமைத்துவ பயிற்சி நெறி, சிரமதானம் என்று இதிலையும் ஈடுபடுகின்றோம். இந்த டைமில தான் 77 கலவரம் முடிந்து 78 என்று நினைக்கிறேன் காந்திய வேலைத்திட்டங்கள் அங்க மட்டக்களப்பு பிரதேசங்களில தொடங்குது.

தேசம்: 77 கலவரம் என்ன மாதிரி உங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது? அதுல கொஞ்சம் நீங்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?

அசோக்: அதை ஒரு இனவாதமாகத்தான் நாங்கள் பார்த்தனாங்கள். அதுல வந்து ஜே.வி.பி பெரிய ஈடுபாடு கொண்டிருந்தது என்பது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இடதுசாரி இயக்கமே அதுல பின்னணியாக இருந்தது என்பது பெரிய தாக்கமாக ஏமாற்றமாக இருந்தது. அது தாக்கத்தை கொடுத்தபடியால்த்தான் நாங்கள் காந்தியத்தோட வேலை செய்யத் தொடங்கினாங்கள். மக்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களோடு வேலை செய்ய வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு இருந்தது.

தேசம்: அப்பவும் தமிழ்தேசியத்தோடு அதற்கு போவதற்கு நீங்கள் விரும்பவில்லை?

அசோக் : இனவாதம், தேசிய இனப்பிரச்சனை, புறக்கணிப்புக்கள், தமிழர் மேலான வன்முறைகள், உரிமை மறுப்பு, கொடுமைகள் தொடர்பாய் எங்களுக்கு பார்வைகள் எண்ணங்கள் இருந்தன. திட்டமிட்ட சிங்கள குடியேற்ற திட்டங்களான கல்லோயா, கந்தளாய் பற்றியெல்லாம் அப்ப அறிந்திருந்தோம். தனிநாட்டுக் கோரிக்கை தொடர்பாக எங்களுக்கு அந்த ஐடியா இருக்கவில்லை. காசி ஆனந்தனின் பேச்சுக்கள் உணர்ச்சியூட்டக்கூடிய பேச்சுக்கள் எல்லாம் எனக்கு அந்த நேரமே அலர்ஜியாகத்தான் இருந்தது. அமிர்தலிங்கம் மங்கையர்கரசியின் பேச்சுக்களெல்லாம்… எப்பவுமே நான் இந்தக் கூட்டங்களில் ஆர்வம் காட்டியதில்லை.

தேசம்: அது முக்கியம் ஏனென்றால் அந்தப் பதின்ம வயதில் பெரிய அரசியல் விழிப்புணர்வு ஒன்று இருந்திருக்காது. இருந்தும், அது ஒரு சலிப்புத் தாற, உண்மைக்குப் புறம்பான விடயமாகத் தான் நீங்கள் பார்க்கிறீர்கள்?

அசோக்: காசி ஆனந்தனின் பாட்டெல்லாம் இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை கொடுத்தது ஆனால் எனக்கு எவ்வித தாக்கத்தையும் கொடுக்கவில்லை. இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை இலங்கைத் தொழிலாளர்களின் வறுமைப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது தமிழரசுக் கட்சியால் முடியாது என்பது அந்த வயதில் இந்த எண்ணம் எங்களிடம் இருந்தது. எங்க கிராமத்தில் தமிழரசுக் கட்சிக்கு செல்வாக்கு இருந்தது. எங்கள் மத்தியில் அது பெரிய தாக்கத்தை கொடுத்ததாக தெரியவில்லை. எனக்கு தெரிய மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி எம்பி மார்களின் குடும்பம் ஊழல் கொண்டதாகவே இருந்தது.பணம் ஒன்றே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.