லண்டன் குயின்ஸ்வே யில் செவர்னியர் – லண்டன் நகர் அழகியல் பொருட்களை விற்ககும் கடையில் பணமாற்றுச் சேவையை மேற்கொண்டவரும் அங்கு பணியாற்றியவரும் மொத்தமாக 11 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றுள்ளனர். 2016 முதுல் 2018 வரை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பவுண்கள் நாணய மாற்றை இவர்கள் செய்துள்ளனர். கடையை நடாத்தி வந்த ரவிராஜ் கணேஸ்பரன் (61) மற்றும் அவருடைய கடையில் பணியாற்றிய நிரோஜன் பாலசிங்கம் ஆகியோருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ரவிராஜ் கணேஸ்பரன் கடையை நடாத்த நிரோஜன் பாலசிங்கம் உள்ளுரிலும் வெளிநாட்டிலும் அவருக்கான மோசடி வாடிக்கையாளர்களைத் தேடிக்கொடுத்து வந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
லுல்சிம் புலாக்கி என்பவர் பணக்கட்டுக்கள் கொண்ட முதுகப்பையோடு கடைக்குள் நுழைவதை நோட்டமிட்ட பொலிஸார் கடையை முற்றுகையிட்டதில் கடையினுள் £140,000 பவுண்கள் இருந்துள்ளது. ஈஸ்ற்ஹாமில் வாழும் ரவிராஜ் கணேஸ்பரனுக்கு 5 ஆண்டுகளும் ஈலிங்கில் வாழும் நிரோஜன் பாலசிங்கத்திற்கு ஆறு ஆண்டுகளும் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது. இவ்வழக்கு சவுத்வார்க் கிரவுன்கோர்ட்டில் நடைபெற்றது.
உலகின் கருப்பு பணம் அதிகம் உலாவுமிடங்களில் ஒன்றாக பிரித்தானியா உள்ளது. உலகின் மிகப்பெரும் மோசடியாளர்களின் கூடாரமாகவும் பிரித்தானியா இருக்கின்றது. உலகின் வெவ்வேற நாடுகளில் பணமோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கும் பிரித்தானியா புகலிடமாக இருக்கின்றது. சென்றவாரம் வெளியான பன்டோரா அறிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள் பிரித்தானியாவில் இருப்பதுமட்டுமல்ல பிரித்தானிய அரசின் ஆட்சியாளர்களுடன் நெருக்கமானவர்களாகவும் உள்ளனர்.
இவ்வாறான பணமோசடி காரணமாக பிரித்தானிய வீதிகளில் கத்திக்குத்துகளும் கொலைகளும் இடம்பெற்று வருகின்றது. பணத்தின் மீது வெறிகொண்டு பணத்தைக்கொண்டு எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணத்தில் செயற்படுவதன் விளைவுகள் பாரதூரமாகிவிடுகின்றது.
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 03 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
பாகம் 3
தேசம்: இளந்தளிர் வாசகர் வட்டம் தொடர்பில் கதைத்திருந்தோம். அந்த நேரம் உங்களுக்கு கிட்டத்தட்ட 15 வயது வந்திருக்கும். அந்த காலகட்டத்தில் உங்களுடைய தந்தையார் இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அப்போது எத்தனை வயது உங்களுக்கு?
அசோக்: அப்பா இறக்கும் போது, எனக்கு பத்து வயது இருக்கும் என்று நினைக்கிறன்.
தேசம்: அது ஞாபகம் இருக்கா உங்களுக்கு…
அசோக்: பெரிதாக ஞாபகம் இல்ல. கொஞ்சம் ஞாபகம் இருக்குது. அப்பாக்கு தொடர்ந்து அஸ்மா தான். மட்டக்களப்பில் செல்லையா டாக்டர் என்று ஒருத்தர் இருந்தார். டிசம்பர் மாத காலத்தில், அப்பா எங்கட வீட்டில் இருக்கிறேல. Paying ward என்டு காசுக்கட்டி, செல்லையா டாக்டரிட வார்டில அப்பா அட்மிட் ஆகிடுவார். அந்தக் காலம் அங்கதான் அப்பா இருப்பார். ஏனென்றால் மார்கழி மாதக்குளிரில் அப்பாவுக்கு வருத்தும் கூட.
தேசம்: அந்த காலகட்டத்தில அப்பா ஓய்வு பெற்றுவிட்டாரா?
அசோக்: ஆம். அப்பா ஓய்வு பெற்றிட்டார். செல்லையா டாக்டரிட வாட்டிலதான் அப்பா இறந்தார். அம்மாவின் மடியில்தான் அப்பா இறந்தாக, அம்மா சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். நான் கடைசி ஆள் என்றபடியால், நான்தான் கிரியை செய்ய வேண்டும். அப்ப மொட்டையடித்து கொள்ளி வைத்தது அதெல்லாம் ஞாபகம் இருக்கு.
தேசம்: அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையிலான உறவு நிலையை எப்படிப் பார்க்கின்றீர்கள்? அவர்கள் விரும்பித் தான் செய்தவை. அவர்களுக்குள் சமத்துவம் இருந்ததா?
அசோக் : அப்ப தெரியல. ஆனால் இப்ப பார்க்கேக்கை, அப்பாட்ட ஒரு அதிகாரத்தனம் இருந்தது. தலைமை ஆசிரியரும் தானே அப்பா. அரசியல் ரீதியாக அப்பா ஒரு தமிழ்த் தேசியவாதியாகவும், பெரியாரிஸ்டாக இருந்தாலும், கூட வீட்டில ஒரு சட்டம்பியாகத்தான் இருந்தார். எனக்கு தெரிய படங்கள் எல்லாம் அவர் சொல்ற படங்கள் தான் அக்காக்கள் பார்க்க வேண்டும்.
தேசம்: பெண்களை பாதுகாக்கிற ஒரு எண்ணம்…
அசோக்: ஓம், சிவாஜி படங்கள் தான் பார்க்க வேண்டும். வேறு யாருடைய படங்களையும் பார்க்க கூடாது.
தேசம்: தன்னுடைய விருப்பங்கள் சார்ந்து செய்றார்.
அசோக் : சத்தியாகிரக போராட்டத்தில் அம்மா திருகோணமலைக்கு ஊர்வலமாக போனார் என்பது எங்களுக்கு முற்போக்காக பட்டாலும் கூட அது, அப்பாவினுடைய அபிலாஷையாகத்தான் இருக்க முடியும் என்று நான் நினைக்கிறன். அம்மா விரும்பி இருக்கலாம். ஆனால், அம்மாவுக்கு பெரிய ஒரு சுதந்திர வெளி இருந்ததாக தெரியவில்லை. ஆனால், அதற்காக அடக்குமுறை அடிப்பது அதுகள் இல்லை. ஆனா ஒரு ஆணாதிக்க தனம்தான் அப்பாவிடம் இருந்தது. அதிகார சட்டம்பித்தனந்தான் குடும்பத்தில் இருந்தது.
தேசம்: பெரும்பாலான முற்போக்கு பேசுபவர்களின் குடும்பங்களிலும் அதுதானே இன்றும் நிலைமை. அது அம்மாவை பாதிக்கும் விதமாக இருக்கவில்லை…
அசோக்: அப்படி இருக்கவில்லை. இதைவிட பெரிய பிரச்சினை கொடுக்கக்கூடிய ஆளாக நான் தான் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். என்னொரு விடயம் என்னென்றால், எங்கள் வீட்டில் அண்ணாக்கள் எல்லாருடையதும் காதல் திருமணம். அண்ணிமாரைத் திருமணம் செய்து அவங்கள்தான் அனைத்து பொறுப்பையும் பார்க்குற ஆட்களா இருந்தார்கள். அந்நேரம் அப்பா எதிர்ப்பு காட்டினாலும் கூட, காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஆளாக மாறிட்டார்.
தேசம்: திருமணத்தை தடுத்து நிறுத்தக்கூடிய அளவுக்கு எல்லாம் போகேலை
அசோக்: இல்லை
தேசம்: அப்பா இல்லாத காலத்தில் அந்தக் கால சமூகத்தில் ஆண் இல்லாமல் குடும்பத்தை கொண்டு நடத்துவது அல்லது முன்னுக்கு கொண்டுவருவது என்பது மிக கஷ்டமாக இருந்திருக்கும். நீங்கள் ஏழு வயதாக இருக்கும் போதே அப்பா இறந்துட்டார். அதற்குப் பிறகான உங்களை வளர்த்தெடுப்பதில் அம்மாவின் உடைய பங்கு எப்படி?
அசோக்: 7 வயதில்லை. எனக்கு அப்போது 10 வயது இருக்கும். அப்பா இறக்கும் போது அண்ணாக்கள் ஓரளவு வளர்ந்துட்டாங்க . ஆனா யாருக்கும் உத்தியோகம் இல்லை. அப்பாவினுடைய பென்ஷன் இருந்தது. காணிகள் வருமானங்கள் இருந்தது. அப்பா இறந்ததற்கு பிறகு என்ன நடந்தது என்றால் அப்பா அரசியல் நடவடிக்கைகள் சார்ந்து நிறைய கடன் பட்டிருந்தார். அப்பா நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார்.
எங்களுக்கு காணி, பூமி நிறைய இருந்ததால் அதை வைத்துதான் காலப்போக்கில் கடன்கள் எல்லாம் அடைத்தோம்.
78 ல் மட்டக்களப்பில் சூறாவளி வரும் வரைக்கும் தென்னந்தோப்பால் பெரிய வருமானம் இருந்தது. பொருளாதார ரீதியாக பெரிய பிரச்சனை இருக்கவில்லை. அம்மாவுக்கு நான் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற விருப்பம் நிறைய இருந்தது. 5ம் வகுப்பு கொலர்சிப்பில் பாஸ் பண்ணும் அளவுக்கு திறமை இருந்தது. ஆரம்ப இளம்வயதில் விளையாட்டுத்தனம் இருந்தாலும் இடைக்காலத்தில் நல்ல மாணவனாக நான் இருந்தேன். கிருஸ்ணபிள்ளை சேர், இவர் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்தவர். என்னில் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். இப்படித்தான் அம்மாவும்.
என் சிந்தனைகளும், போக்கும் அவங்களுக்கு நிறைய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என இப்ப நினைக்கிறன்.
தேசம் : அந்த நேரம் அப்பா தமிழரசுக்கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்திருக்கின்றார். அந்த காலகட்டத்தில் அப்பாவின் இழப்பு தமிழரசுக்கட்சி க்கு எப்படி இருந்தது?
அசோக்: தமிழரசுக் கட்சிக்கு அப்பாவினுடைய இழப்பு பெரிய ஒரு இழப்பாக இருக்கவில்லை. ஏனென்றால் அதை ஈடு செய்வதற்கு அவர்கள் இன்னொருவரை தேர்ந்தெடுத்து இருப்பார்கள்.
தேசம் : அவருக்கான கௌரவத்தை கொடுத்ததாக இல்லை?
அசோக் : இல்லை அப்பா தமிழரசுக்கட்சியை நேசித்தாரேயொழிய, தமிழரசுக்கட்சி அப்பாவை பயன்படுத்தியது. அது எனக்கு காலப்போக்கில் தெரியவந்தது. எனக்னொரு அத்தான் இருந்தார். இரா. பத்மநாதன் என்று பேர். சுதந்திரன் பத்திரிகையில் எஸ் .டி. சிவநாயகம் ஆசிரியராக இருந்த காலத்தில் அத்தான் அதன் துணை ஆசிரியராக இருந்தார். மட்டக்களப்பு எம்பியாக இருந்த இராஜ துரையின் வகுப்புத் தோழன். மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக உழைத்தவர். அத்தான், அப்பா போன்றவர்கள் பயன்படுத்தப்பட்டார்களே தவிர, எந்த கௌரவமும் அவர்களுக்கு கிடைக்கல்ல.
தேசம் : அதை எப்படி பார்க்குறீர்கள்? ஏன் அந்த உணர்வு உங்களுக்கு வருகிறது? நீங்கள் எந்த காலத்திலும் தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து வேலை செய்யவில்லை?
அசோக் : இல்லை. அண்ணாக்கள் தமிழரசுக் கட்சியுடன் மிகத் தீவிரமாக இருந்தவர்கள். ஒரு அண்ணன் இருக்கிறார் அவர் இப்போதும் தீவிரமான தமிழரசுக் கட்சிதான். எங்க குடும்பம் தமிழரசுக் கட்சி குடும்பமாக தான் எப்பவும் இருக்கிறது. எனக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவங்களின்ர காலத்தில் இருந்த அரசியல் நோக்கமும், போராட்ட உணர்வும் தமிழரசுக் கட்சியிடம் இல்லாமல் போய் விட்டது. அவர் உண்மையாகவே தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும், மலையக மக்களுக்குமான தீர்வை விரும்பினார். முதன் முதலில் முஸ்லிம் மக்களுக்காக தனிஅலகுக் கோரிக்கையை முன்வைத்தவர் அவர்தானே. முஸ்லிம் தமிழ் உறவை வளர்த்தவர். ஆனா, என்ன செய்வது வேறு தேர்வுகள் இல்லை. தமிழ் அரசுக் கட்சிதான் இருக்கிற திருடர்களில் நல்ல திருடனாக இருக்கிறது.
தேசம்: இந்த இளந்தளிர் வாசகர் வட்டம் தான் உங்களுடைய அரசியலின் அரும்பு நிலை என்று நினைக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் எப்படியான அரசியலை நீங்கள் தேர்வு செய்கின்றீகள்?
அசோக்: இளந்தளிர் வாசகர் வட்டத்துக்குள் இருக்கும்போது அப்ப 71 ஆம் ஆண்டு ஜனதா விமுக்திப் பெரமுன ஜே.வி.பி யின் ஆயுதப் புரட்சி நடக்குது.
தேசம்: அது தொடர்பாக உங்களுக்கு ஏதும் ஞாபகம் இருக்கின்றதா?
அசோக்: அது ஞாபகம் இருக்குது. அம்பாறையில் சென்றல் கேம் என்ற இடத்தில் ஒரு சிறைச்சாலை உருவாக்கி அங்கு அட்களை கொண்டு போனார்கள். அது மட்டக்களப்பிலிருந்து எங்கட ரோட்டாலதான் போனது. அப்பா சின்ன வயசுல நாங்க ….. கொண்டு போறாங்க என்று ஆட்கள் போய் பார்த்தவங்க. அந்த ஞாபகம் இருக்கு.
தேசம்: ஜே.வி.பி தொடர்பான பிரமிப்பு ஒன்று அந்த நேரம் இருந்திருக்கு…
அசோக் : அதுக்குப் பிறகு என்ன நடந்தது என்றால். 1977 ம் ஆண்டு இது நடக்குது. ஆறு வருஷத்தால ஜே.வி.பி வெகுஜன இயக்கமாக. ஜனநாயக முறைக்குத் திரும்புவதாக அறிவித்து அவங்கள் தங்களை பிரகடனப்படுத்துறாங்கள்.
78ஆம் ஆண்டு அவங்களுடைய கொள்கைப் பிரகடனம் தமிழில் வருது. இந்தப் பிரகடனத்தை படிக்கிறம் நாங்கள். ரஷ்யப் புத்தகங்களைப் படித்தது. கியுபா புரட்சி, வியட்நாம் போராட்டம் சேகுவேரா, பெடல் கஸ்ரோ, மார்க்சீய சித்தாந்தம் தொடர்பில் எங்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்ததுதானே. அந்தக் கொள்கை பிரகடனம் எங்களை கவர்ந்தது.
இலங்கையில் ஒரு வர்க்கப் போராட்டத்தை கொண்டு வரலாம் ஒரு முழுமையான புரட்சி என்ற சிந்தனை எங்களுக்கு இருந்தது.
தேசம்: கிட்டத்தட்ட 77 ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே உங்கட பார்வை ஒரு இடதுசாரி பார்வையாக வந்திட்டுது.
அசோக்: ஆம் ஏனென்றால் மாக்சிச புத்தகங்கள், ரஷ்யா நாவல்கள்: தாய், வீரம் விளைந்தது எல்லாம் படிக்கத் தொடங்கிவிட்டோம். லைபிறரில இந்த புத்தகங்கள் எல்லாம் வாரது தானே. அதால ஓரளவு இடதுசாரி அரசியல் எங்களுக்குள் உருவாகிவிட்டது. அதால தான் நாங்கள் அந்த கொள்கை பிரகடனத்தை படித்தவுடனேயே அதிலும் இலங்கையில் வர்க்கப் போராட்டம், தொழிலாளர் புரட்சி என பல்வேறு விடயங்கள் கதைக்க பட்டிருந்தது.
அப்ப நான் என்ன செய்தேன் என்றால் அந்த புத்தகத்தைப் படித்துவிட்டு, லயனல் பொபேகேவுக்கு கடிதம் எழுதுறன். அதுல ஒரு அட்ரஸ் போட்டிருந்தது. உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகின்றோம் என அனுப்பிட்டன். அனுப்பி ஒரு பதினைந்து இருபது நாள் போக அந்த கடிதத்தோடு தோழர் முபாரக் என்றவர் வீட்டில் வந்து என்னை சந்திக்க வாரார். நீங்கள் தோழருக்கு கடிதம் எழுதி இருந்தீங்க. உங்களோட கதைக்க வந்துள்ளேன் என்றார். அப்பதான் ஜனதா விமுக்திப் பெரமுனவுக்கும் எனக்கும் தொடர்பு ஏற்படுகிறது. பிறகு நாங்கள் தோழருடன் எல்லா நண்பர்களும் சந்தித்து வகுப்பெடுத்து…
தேசம்: நீங்கள் சொல்வது தனிப்பட்ட முறையிலா அல்லது இளந்தளிர் வாசகர் வட்டமாகவா?
அசோக்: இளந்தளிர் வாசகர் வட்டம்தான். நாங்கள் அவங்களுடைய கொள்கைப் பிரகடன த்தை படித்துவிட்டு தொடர்பு கொள்ளலாம் என்று முடிவெடுத்த பின்பு நான்தான் அந்த கடிதத்தை எழுதுறன். அவர் வந்து எங்களை சந்தித்த பிறகு கேள்விகள் கேட்கிறம். அந்தக் கேள்விக்கு எல்லாம் அவர் பதில் அளித்த பிறகு எங்களுக்கு சேர்ந்து வேலை செய்யலாம் என்று நம்பிக்கை வருது. எங்களுடைய முதல் வேலை போஸ்டர் ஒட்டுறது. துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது.
தேசம்: நீங்கள் சொல்லுகின்ற இதே காலகட்டத்தில் நீங்கள் ஜேவிபி சார்பாக போறீங்க அதே நேரம் உங்கட குடும்பம் வந்து தமிழரசு கட்சியுடன் தமிழ்தேசியத்தோட ஐக்கியமாகி இருக்கு. இதே காலகட்டத்தில் தான் வடக்கில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பாக நீங்கள் அந்த காலத்தில் ஏதும் அறிந்திருந்தீர்களா?
அசோக்: அப்பா சுதந்திரன் பத்திரிகை தொடர்ச்சியாக எடுக்கிறவர். அப்பா இறந்த பின்பும் சுதந்திரன் பத்திரிகை வீட்டுக்கு வாரது. அதற்கூடாக நாங்கள் அறிந்திருக்கிறோம்.
தேசம்: அறிந்திருந்தும் தான் நீங்கள் அங்கு செல்கிறீர்கள்?
அசோக்: ஓம். எனக்கு தமிழரசு கட்சியின் மீதான வெறுப்பு நிலை இருக்குதானே. இப்போ நினைத்துப் பாத்தா தமிழரசுக் கட்சி மீதான வெறுப்பு நிலையை விட அது கட்சி சார்ந்த எம் பிக்களின் போக்குகள் நடத்தைகள் காரணமாக வந்திருக்கும் எண்ணுகிறன்.
தேசம்: நீங்கள் ஒரு தமிழ் தேசிய அரசியல் குடும்பத்தில் இருந்து கொண்டு இடதுசாரி அரசியலை எடுக்கிறீர்கள். அதேநேரம் இடதுசாரி அரசியலை படிச்சுப்போட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பா தமிழ்த்தேசிய அரசியலுக்க போனவர்கள் இருக்கிறார்கள் தானே. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
அசோக்: அவர்கள் உண்மையான இடதுசாரி கருத்துக் கொண்டவர்களாக இருந்திருக்கெலாது. இருந்திருந்தால் புலி அரசியலுக்குள் போய் இருக்க முடியாது. இயக்கங்களை தேர்ந்தெடுத்து அங்கு போனதற்கு ஒவ்வொருவருக்கும் அரசியல் காரணங்கள் இருக்கு. அவங்ளின்ர அரசியல் வர்க்க நிலையும் இத தீர்மானிக்கும்தானே.
தேசம்: உங்களுக்கு ஜேவிபியோட இருக்கிற அரசியல் உறவிலிருந்து எப்படி நீங்கள் விடுபட்டீர்கள் பிறகு?
அசோக் : ஜே.வி.பியோட நாங்கள் தீவிரமாக வேலை செய்திருக்கிறோம். பாசறைக்கெல்லாம் போய் இருக்கின்றோம். படுவான்கரையில் ஒரு கிராமத்துல வீடெடுத்தனாங்கள். நாங்க ஒரு பதினைந்து இருபது தோழர்கள் போய் அங்கேயே தங்கி ஒரு வாரம் நின்று வகுப்பெடுத்து மிகத் தீவிரமாக இருந்தனாங்கள்.
அந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு முபாரக், உதுமாலெப்பை என்ற ஒரு தோழர் அவர் வந்து கொழும்பு மாவட்டத்தில் ஜேவிபினுடைய மாவட்ட சபை உறுப்பினராக இருந்தவர் என்று நினைக்கிறன். வகுப்பெடுத்தார்கள். முஸ்லிம் தோழர்கள் நிறைய பேர் ஜே.வி.பியில இருந்ததாங்க… அதுதான் மிகவும் ஆச்சரியமான விடயம். எங்களுக்கு வகுப்பெடுத்த 3 – 4 தோழர்கள் முஸ்லிம்கள். ஒரு தமிழ் தெரிந்த சிங்களத் தோழர். சிங்கள தோழர்கள் எடுக்கிறதை இவர்கள் மொழிபெயர்ப்பார்கள்.
தேசம்: மட்டக்களப்பில் தமிழ், சிங்களம், முஸ்லிம் சமூகமும் இருந்தபடியால் தான் ஜே.வி.பியினுடைய ஆதிக்கம் அங்கு வருதா? வடக்கில் நான் நினைக்கல இப்படியொரு ஆதிக்கம் இருந்தது என்று.
அசோக்: வடக்கில் இடதுசாரி கட்சிகள், இயக்கங்கள் இருந்தபடியால் அந்த இடத்தை ஜே.வி.பியால் நிரப்ப முடியவில்லை.
எங்களுக்குள்ள இடதுசாரித் தாக்கம் ஒன்று இருந்தபடியால் எங்களுக்கான இடம் வந்து ஜே.வி.பியாத்தான் இருந்தது. யாழ்ப்பாணத்தில இருந்த கம்யூனிஸ்ட் பார்ட்டி வேற ஏதும் வந்திருந்தால் நாங்கள் அவர்களுடன் சேர்ந்து இருப்போம்.
இடதுசாரி இயக்கம் வந்து, வர்க்கப் போராட்டம் என்று வந்திருந்தால், நாங்கள் அதற்குத்தான் போயிருப்போம். ஆனால் கிடைத்தது ஜே.வி.பி தான். பிறகு என்ன நடந்தது என்றால் அனுராதபுரத்தில் இனக்கலவரம் நடந்தது. அதற்குப் பின்னால் ஜே.வி.பி முக்கிய பங்கு வகித்தது என்ற ஒரு கதை வந்தது. அந்த கதை தொடர்பான உரையாடல்தான் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு வந்தது. பிறகு நாங்கள் அவர்கள் ஒரு இனவாதக் கட்சி தான் என்ற முடிவுக்கு வாறம். அதுல இருந்து நாங்க ஒதுங்குறம்.
தேசம்: ஜேவிபியினுடைய நீங்கள் சொன்ன ஐந்து பாடத்திட்டத்தில் ஒன்று இந்திய எதிர்ப்பு என்று நினைக்கிறேன்
அசோக்: அது எங்களுக்கு எடுக்கப்படவில்லை இந்திய விஸ்தரிப்புவாதம் என்ற அந்த வகுப்பு எங்களுக்கு இல்லை.
தேசம்: தமிழ் மக்களுக்கு எதிரான அந்த பகுதியே எடுத்துட்டாங்க
அசோக்: எடுத்திட்டாங்கள். வகுப்பில வந்து வந்து சுயநிர்ணய உரிமை பற்றி. தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் சம உரிமை, சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம்… சோசலிசம் இப்படி அரசியல் வகுப்புக்கள் இருக்கும். அவர்கள் எங்களுக்கு எடுக்காமல் விட்ட இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற வகுப்பு, மலையக மக்களுக்கு எதிரான இனவாதம் கொண்டது என்பதை அவர்களை விட்டு வந்த பிறகு அறிந்து கொண்டோம். ஜே.வி.பி இடது சாரி போலிமுகம் கொண்ட மோசமான இனவாதக்கட்சி.
தேசம் : கிட்டத்தட்ட 77ஆம் ஆண்டு காலகட்டம் என்றால் நீங்கள் ஜி.சி.இ எடுக்கிற காலகட்டம் என்று நினைக்கிறன்.
அசோக்: ஆம். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. சனி ஞாயிறு தான் எங்கடை சந்திப்புகள் எல்லாம் நடக்கும். ஒரு பாடசாலை விடுமுறை காலத்தில் தான் நாங்க பாசறைக்கு போனோம்.
தேசம்: பாசறை எங்க நடந்தது என்று சொன்னீர்கள்?
அசோக்: அது படுவான்கரையில் விவசாய நெல் காணியில் ஒரு வீடு எடுத்து, அங்கேயே தங்கி சமைச்சு சாப்பிட்டு அங்குதான் வகுப்பு நடந்தது.
தேசம்: இப்ப இந்த ஜே.வி.பியின் பிரச்சனைக்குப் பிறகு உங்களுக்கு இடைவெளி ஒன்று வரப்போகுது…
அசோக்: நாங்கள் என்ன செய்த என்றால் வெளியேறிவிட்டு, இளந்தளிர் வாசகர் வட்டம் , விளையாட்டுகள் என்று திரியிறம். இக் காலங்களில தேசிய இளைஞர் சேவை மன்றத்தோடும் நாங்க இருக்கம். அப்ப மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகஸ்தராக செட்டிபாளையத்தைச் சேர்ந்த செல்வநாயகம் அண்ணர் பொறுப்பாக இருந்தார். அவர் எங்களுக்கு நிறைய உதவிகள் செய்தார். அவர்கள் நடாத்தும் விளையாட்டு முகாம், தலைமைத்துவ பயிற்சி நெறி, சிரமதானம் என்று இதிலையும் ஈடுபடுகின்றோம். இந்த டைமில தான் 77 கலவரம் முடிந்து 78 என்று நினைக்கிறேன் காந்திய வேலைத்திட்டங்கள் அங்க மட்டக்களப்பு பிரதேசங்களில தொடங்குது.
தேசம்: 77 கலவரம் என்ன மாதிரி உங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது? அதுல கொஞ்சம் நீங்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?
அசோக்: அதை ஒரு இனவாதமாகத்தான் நாங்கள் பார்த்தனாங்கள். அதுல வந்து ஜே.வி.பி பெரிய ஈடுபாடு கொண்டிருந்தது என்பது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இடதுசாரி இயக்கமே அதுல பின்னணியாக இருந்தது என்பது பெரிய தாக்கமாக ஏமாற்றமாக இருந்தது. அது தாக்கத்தை கொடுத்தபடியால்த்தான் நாங்கள் காந்தியத்தோட வேலை செய்யத் தொடங்கினாங்கள். மக்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களோடு வேலை செய்ய வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு இருந்தது.
தேசம்: அப்பவும் தமிழ்தேசியத்தோடு அதற்கு போவதற்கு நீங்கள் விரும்பவில்லை?
அசோக் : இனவாதம், தேசிய இனப்பிரச்சனை, புறக்கணிப்புக்கள், தமிழர் மேலான வன்முறைகள், உரிமை மறுப்பு, கொடுமைகள் தொடர்பாய் எங்களுக்கு பார்வைகள் எண்ணங்கள் இருந்தன. திட்டமிட்ட சிங்கள குடியேற்ற திட்டங்களான கல்லோயா, கந்தளாய் பற்றியெல்லாம் அப்ப அறிந்திருந்தோம். தனிநாட்டுக் கோரிக்கை தொடர்பாக எங்களுக்கு அந்த ஐடியா இருக்கவில்லை. காசி ஆனந்தனின் பேச்சுக்கள் உணர்ச்சியூட்டக்கூடிய பேச்சுக்கள் எல்லாம் எனக்கு அந்த நேரமே அலர்ஜியாகத்தான் இருந்தது. அமிர்தலிங்கம் மங்கையர்கரசியின் பேச்சுக்களெல்லாம்… எப்பவுமே நான் இந்தக் கூட்டங்களில் ஆர்வம் காட்டியதில்லை.
தேசம்: அது முக்கியம் ஏனென்றால் அந்தப் பதின்ம வயதில் பெரிய அரசியல் விழிப்புணர்வு ஒன்று இருந்திருக்காது. இருந்தும், அது ஒரு சலிப்புத் தாற, உண்மைக்குப் புறம்பான விடயமாகத் தான் நீங்கள் பார்க்கிறீர்கள்?
அசோக்: காசி ஆனந்தனின் பாட்டெல்லாம் இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை கொடுத்தது ஆனால் எனக்கு எவ்வித தாக்கத்தையும் கொடுக்கவில்லை. இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை இலங்கைத் தொழிலாளர்களின் வறுமைப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது தமிழரசுக் கட்சியால் முடியாது என்பது அந்த வயதில் இந்த எண்ணம் எங்களிடம் இருந்தது. எங்க கிராமத்தில் தமிழரசுக் கட்சிக்கு செல்வாக்கு இருந்தது. எங்கள் மத்தியில் அது பெரிய தாக்கத்தை கொடுத்ததாக தெரியவில்லை. எனக்கு தெரிய மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி எம்பி மார்களின் குடும்பம் ஊழல் கொண்டதாகவே இருந்தது.பணம் ஒன்றே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் (பகுதி 02) (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
தேசம்: தோழர் நீங்கள் உங்கள் கிராமம் பற்றிச் சொல்லவில்லை. உங்களின் கிராமத்தின் சூழலை பற்றி சொல்லுங்கள். அதன் சனத்தொகை போன்ற விபரங்களைக் கூறுங்கள்.
அசோக்: என் களுதாவளைக் கிராமம் இயற்கைச் சூழலும் பசுமைகளையும் குளங்களையும் விவசாய தொழிலையும் கொண்டது. சனத்தொகை கூடிய கிராமங்களில் ஒன்று. வாக்காளர் பட்டியலில் மிகப் பெரிய கிராமம்.
வெற்றிலை செய்கைக்கு பெயர் போனது. ஒரு கிராமியப்பாட்டு உண்டு ‘களுதாவளை வெற்றிலைக்கும் காலிப் பாக்குக்கும் சிவந்ததுகா உன் உதடு’ என்று.
தேசம்: வழிபாட்டு முறைகள்,..
அசோக்: வழிபாட்டு முறை. பெருங்கோயில் என்றால் களுதாவளை விநாயகர் ஆலயம். முருகன் கோயில் இருக்கிறது. சிறு தெய்வ வழிபாடுகள் உண்டு. எழுவான்கரை என்றபடியால் ஒரு பக்கம் வங்காள விரிகுடா கடல். எமது கிராமம் கடலைச் சார்ந்து இருக்கும். கிராமத்தில் மூன்று குளங்கள், நீர்த்தேக்கங்கள் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து விவசாய காணிகள் இருக்கிறது. இங்கே நெற் பயிர்ச்செய்கையே மேற்கொள்ளப்படுகிறது.
அதற்கு அங்கால மட்டக்களப்பு வாவி. குளங்களைச் சுற்றி மருத மரங்கள் இருக்கின்றன. இயற்கையை தன்னகத்தே கொண்ட ஒரு அழகான கிராமம். கடல் கரையை அண்டிய பகுதியில் ஒரு இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியில் காடுகளும் பனை மரங்களும் இருக்கும். அதற்கு அங்கால எமது கிராமம். இப்போது அக் காடுகள் அழிக்கப்பட்டு விவசாயத்தை மேற்கொள்கிறார்கள். அங்கு இப்போது வெங்காயம், மிளகாய் போன்ற சிறு பயிர் செய்கையை மேற்கொள்கிறார்கள். விவசாயம் செய்வதற்கான இடமாக அது மாறிவிட்டது. நாட்டுக் கூத்தெல்லாம் என் கிராமத்தில் நடக்கும். இப்போது அருகிவிட்டது.
தேசம்: நீங்கள் சிறுபிள்ளையாக இருந்து வளர்ந்து வரும்போது உங்கள் அனுபவம் என்ன? உங்களின் ஆறு எழு வயதில் நடந்த சில சம்பவங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்குமென நம்புகின்றேன். அது தொடர்பாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
அசோக்: கிராமத்து சிறுவர்களுக்குரிய விளையாட்டுக்கள் அனைத்தையும் நான் விளையாடி இருக்கிறன். நிறைய சுதந்திரம். சிறு வயதில் வெறும் மேலோடு மேல் சட்டை இன்றியே திரிவேன். எங்கள் ஊர் குளங்களில் நீச்சல் அடிக்கிறது. கிட்டிப்புல் அடிப்பது கெற்றப்போல் அடிப்பது. எறி பந்து விளையாடுவது. கோயில் திருவிழாக்கள் என்றால் ஒரே கொண்டாட்டம்தான். சின்னவேட்டி கட்டி பக்திமானாக மாறிவிடுவேன். திருவெண்பாக்காலம் எனக்கு சந்தோசமான காலம். அம்மா கோயிலுக்கு வேறு எங்கு போனாலும் என்னை கூட்டிப் போவா. எனக்கு ஞாபகம் தெரிந்தவரை ஏழு எட்டு வயதுவரை காதில கடுக்கன் தோடு போட்டிருந்தேன். நிறைய ஞாபகங்கள் இருக்கு. நீண்டதாய் போய்விடும்.
தேசம்: உங்கள் கிராமத்திற்கே உரிய விளையாட்டு ஒன்றைப்பற்றி சொல்லியிருந்தீர்கள்.
அசோக்: ஆம் அதனை கொம்புமுறி விளையாட்டு என அழைப்பார்கள். இது கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடையது. சிறுவர்களுக்குரியதல்ல. குடிகளுக்கு இடையிலான போட்டி விளையாட்டு. ஒரு காலத்தில எங்க கிராமத்தில பிரபலமாக விளையாடப்பட்டது. பெரிய விழாவாக சடங்காக கொண்டாடுவாங்க. கொம்புச்சந்தி என்ற இடமே உண்டு எங்க ஊரில.
தேசம்: உங்களின் இளமைக்கால கல்வியைப் பற்றி கூறுங்கள்.
அசோக்: அப்பாவின் பாடசாலையான இராமகிருஸ்ணன மிஷனில் ஆரம்பக் கல்வியைக் கற்றேன். நான் கொஞ்சம் சுட்டித்தனம் கொண்டவனாக இருந்தபடியால் ஆரம்பக்காலத்தில் கல்வியில் பெரிய நாட்டம் இருக்கவில்லை. அப்பாவும் தலைமை ஆசிரியராக இருந்தபடியால் எனக்கு அழுத்தங்கள் கூடுதலாக இருக்கவில்லை. இரண்டாம் வகுப்பிற்கு பிறகே எழுத வாசிக்க தொடங்கினேன்.
தேசம்: இன்றைக்கு இருக்கும் ஒரு அரசியல் சூழல் அன்றைக்கு ஏற்பட்ட தாக்கத்தினால் உண்டானதா என்று சொல்ல ஏதாவது ஒரு விடயம் உண்டா?
அசோக்: தமிழரசு கட்சியுடன் அப்பாவுக்கு இருந்த அரசியல் சூழல்தான். நான் நிறைய வாசிப்பேன். எனது வீடு ஒரு நூலகம். நிறைய நூல்கள் இருந்தன. எனது அண்ணாமார்களும் அக்காக்களும் வாசிப்பதில் நாட்டம் கொண்டவர்கள். ஒரு அண்ணா இருந்தவர் தியாகராஜா என்று. பெரியாரின் கொள்கையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அண்ணாவும் அவர் நண்பர்களும் அந்தக்காலத்தில் இலக்கிய சஞ்சிகை ஒன்றை எழுதி கையெழுத்துப் பிரதியாக வெளியிட்டாங்க. பெரியார் தொடர்புடைய எல்லா புத்தகங்களும் இந்தியாவில் இருந்து வரும். இந்தியாவில் இருந்து வரும் நிறைய சஞ்சிகைகளும் எங்கள் வீட்டில் கிடைக்கும். அப்பா பெரியார் மீது நம்பிக்கையும் மரியாதையும் கொண்டவர். அப்பா வித்தியாசமானவர். எல்லாவற்றையும் வாசிப்பார்.
நல்லதொரு உதாரணம் அப்பாவின்ர பாடசாலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடமையாற்றினார். அவர் இடதுசாரிக்கட்சியில் இருந்தார். அவர் தேசாபிமானி என்ற பத்திரிகையை கொண்டு விற்பார். எங்கள் பாடசாலையிலேயே அதனை கொண்டு வந்து விற்பனை செய்வார். அதனையும் அப்பா வாசிப்பார்.
தேசம்: அந்த நேரம் உங்களின் பொழுது போக்குகள் எவை? வீட்டில் நிறையபேர் இருந்தாலும் வெளியில் போய் விளையாடுவதற்கான சூழல் மற்றும் நட்பு வட்டங்கள் எவ்வாறு இருந்தது?
அசோக்: நான் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே எங்கள் கிராமத்தில் படித்தேன். பின்னர் சிவானந்தா வித்தியாலயத்தில் படித்தேன். சிவானந்தா பாடசாலை மிகவும் கட்டுப்பாடான பாடசாலை. அங்கு நாங்க நினைத்த மாதிரி பெரிசா விளையாட முடியாது. லீவுநாட்களில் வீட்டுக்கு வருவேன். ஓரே விளையாட்டுத்தான். பொழுதுபோக்காக முத்திரை சேகரிக்கும் பழக்கம் இருந்தது.
தேசம்: உங்கள் ஊரில் இருந்து அப்பாடசாலை எவ்வளவு தூரம்?
அசோக்: ஊரில் இருந்து 16, 17 கிலோ மீற்றர் இருக்கும். விடுதியில் இருந்தே படித்தேன். இங்கு ஒருவருடம் கல்வி கற்றேன். விடுதியிலும் பாடசாலையிலும் மிகவும் கட்டுபாடுகள் இருந்தன. இந்த கட்டுப்பாடு எனக்கு கஸ்டமாகஇருந்தது. பிறகு வீட்டிலிருந்து போய் வந்தேன்.
இப்பாடசாலையில் சமஸ்கிருதமும் ஒரு பாடமாக இருந்தது. படிப்பும் ஒழுங்குகளும் முக்கியம் . ஒரு வருடத்தின் பின் அந்தப் பாடசாலைக்குச் செல்ல முடியாதெனத் தெரிவித்துவிட்டேன். ஆறாம் வகுப்பு மட்டும்தான் சிவானந்தா பாடசாலையில் கற்றேன். பின்னர் வந்தாறு மூலை மத்தியக் கல்லூரியில் கற்றேன். அந்தப் பாடசாலை எங்க ஊரிலிருந்து இருந்து 30 கிலோ மீற்றர் தூரம் இருக்கும்.அங்கேயும் விடுதியில் இருந்தே கல்வி கற்றேன்.
தேசம்: உங்கள் பகுதியில் அப்போது உயர்தரப் பாடசாலைகள் இல்லையா?
அசோக்: பாடசாலைகள் இருந்தன. என்றாலும் அப்பா விபுலானந்தரின் மேல் இருந்த அபிமானத்தில் சிவானந்தா வித்தியாலயத்தில் அந்தப் பாடசாலையில் சேர்த்தார். அங்கு கட்டுப்பாடு இறுக்கம் எனக்கு பிடிக்கவில்லை. அதற்குப்பிறகுதான் வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் சேர்ந்தேன். சனி ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டுக்கு வருவேன். எங்கள் ஊரில் கிராம சபையால் உருவாக்கப்பட்ட நூலகம் ஒன்று இருந்தது. அதில் இளந்தளிர் வாசகர் வட்டத்தை நா ங்க உருவாக்கினோம்.
தேசம்: உங்களுக்கு எத்தனை வயது?
அசோக்: அப்போது எனக்கு சுமார் 15, 16 வயதிருக்கும். அந்த வாசகர் வட்டத்தின் ஊடாக சிறியசிறிய கருத்தரங்குகள் நடத்துவோம். இளந்தளிர் வாசகர் வட்டத்தை உருவாக்கியமைக்கு காரணம் நாங்கள் விரும்பிய புத்தகங்களை வாசகர் வட்டத்தின் ஊடாக சிபாரிசு செய்யலாம். அதனூடாக நிறைய எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்தது. பாரதி நூற்றாண்டு விழாவை முதல் முதலாக இலங்கையில் செய்தவர்கள் நாங்கள் தான்.
இளந்தளிர் வாசகர் வட்டம் உருவாக்க காரணமாக இருந்தவர் வெல்லவூர் கோபால் அண்ணர். அதற்கு போஷகராக இருந்தவர். அவர்தான் எங்கள் ஆலோசகர். வழிகாட்டி. மிக அருமையானவர். இன்று குறிப்பிடத்தக்க வரலாற்று ஆய்வாளராக இலங்கையில் இருக்கிறார். அவர் மட்டக்களப்பு வரலாறு தொடர்பாக பல ஆய்வுகளை செய்துள்ளார். அவர் எங்கட கிராம ஆட்சி சபையின் காரியாலயத்தில பிரதம லிகிதராக இருந்தார். அவர் ஒரு கவிஞராக, எழுத்தாளராக இருந்தபடியால் அவரின் ஊக்கத்தினால இளந்தளிர் வாசகர் வட்டம் உருவாகியது.
தேசம்: அந்தக் காலத்தில் உங்களுடன் இருந்த நண்பர்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
அசோக்: அவர்களை ஞாபகம் இருக்கிறது. பிற்காலத்தில் அவர்களில் பலர் என்னோடு இயக்கத்தில் இணைந்து கொண்டனர்.
அசோக்: ரவி, பேரின்பம், சீவரெத்தினம். இப்போ கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். ஜெயவரதன். செல்வரெத்தினம் காலமாகி விட்டார். ஜெயரெத்தினம். திருநா. மனோ- தவராஜா, பணிக்ஸ், நல்லிஸ் தயா, சிவஞானம், குணம் சந்திரன் இப்படி நிறையப் பேர்களை சொல்லலாம். இவர்களில் பலர் என்னால் பாதிக்கப்பட்டவர்கள். சிறைக்குச் சென்று நிறைய பிரச்சினைகளை எதிர்நோக்கினாங்க.. எனது கிராமத்தைச் சேர்ந்த எனது நண்பர்கள் அனேகர் என்னால் பாதிக்கப்பட்டவர்கள்தான். என் நண்பன் ரவி பொலிசாரினால் கடும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டான். இன்றும் அதன் பாதிப்பிலிருந்து அவன் மீளமுடியவில்லை.
தேசம்: இந்த நீண்ட அரசியல் பயணத்தில் கலை இலக்கிய பயணத்திலும் இந்த இளந்தளிர் வாசகர் வட்டம் ஒரு முக்கியமான பங்கை வகித்துள்ளது.
அசோக்: ஆம் இளந்தளிர் வாசகர் வட்டம் எமக்கு வாசகர் வட்டம் மாத்திரமல்ல. கிராம அபிவிருத்தி, சிரமதானங்கள் விழாக்கள் கருத்தரங்குகள் செய்வதுடன் விளையாட்டுப் போட்டிகளும் நடத்துவோம். கிராமத்தில் நாங்கள் ஒரு வித்தியாசமான முன்னுதாரணங்களாக இருந்தோம். வெறும் படிப்புடன் இருக்காமல் சமூக சேவையிலும் ஈடுபடக்கூடியதாக இருந்தது.
தேசம்: பதின்ம பருவத்திற்குரிய எல்லா விடயங்களிலும் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள்?
அசோக்: ஆம் பதின்ம பருவத்திற்குரிய எல்லாச் சேட்டைகளும் எங்களுக்கு இருந்தது. என்றாலும் அதற்குள் முழுமையாக அகப்படாமல் தப்பித்துக் கொண்டோம். நம்பலாம்! எங்கள் அனைவருக்கும் சமூக அக்கறை இருந்தது. அந்த சமூக அக்கறையினால நாங்கள் காலப் போக்கில் அரசியலுக்குள்ளும் வந்தோம். பல்வேறு சஞ்சிகைகள், புத்தகங்கள் படித்தோம். இவைகள் எல்லாம் சேர்ந்து நாங்கள் அரசியல் மயப்படுவதற்கான ஒரு வாய்ப்பாக இருந்தது.
தேசம்: அந்தச் சூழல் பெற்றோரால் ஊக்குவிக்கப்பட்டதா? உங்கள் பார்வை என்ன?
அசோக்: எனது குடும்பத்தில் சுதந்திரம் இருந்தது. படி, படி என்று பெரிதாக கட்டாயப்படுத்தவில்லை.
தேசம்: இந்த சுதந்திரம் உங்களின் மற்ற நண்பர்களுக்கும் இருந்ததா?
அசோக்: அப்படி சொல்லமுடியாது.
தேசம்: உங்கள் கிராமத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களோடு உங்கள் உறவு எப்படி இருந்தது ?
அசோக்: எமக்கும் ஒடுக்கப்பட்ட சமூகம் எனச் சொல்லப்படுகின்ற மக்களுக்கும் மிகவும் நெருக்கமான உறவு இருந்தது. இயல்பாகவே ஒரு நட்பு இருந்தது. ஆனால் எமது கிராமத்திற்குள் பழைய தலைமுறையினருக்கு முரண்பாடு இருந்தது. பாரதி நூற்றாண்டு விழாவில் அவங்கட நாடகம் ஒன்றை போடுவதற்கு இருந்த வேளையில் எமது கிராமத்தில் ஒரு சிலரால் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனையும் மீறி சித்திரைப் புத்தாண்டு விழாவில் மேடையேற்றினோம்.
நாடங்களில் அவங்க மிகத் திறமையானவங்க. என்ர நண்பன் ஆனைக்குட்டி சிவலிங்கம் அண்ணா கலைமன்றம் வைத்திருந்தார். நிறைய நல்ல நாடகங்கள் போடுவாங்க. நான் சனி, ஞாயிறு போனால் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பேன்.
எங்கு ஒடுக்கப்பட்ட சமூகம் இருக்கிறதோ, அங்கு சாதிய முரண்பாடு நிச்சயமாக இருக்கும். எங்க கிராமத்திலும் இந்த முரண்பாடு காணப்பட்டது. கோயிலுக்குள் போக முடியாது. எங்க பாடசாலையில் படிக்க முடியாது. ஒடுக்கப்பட்ட பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்க கிராமத்தில் சைக்கிளில் ஓட முடியாது. அவ்வாறு சைக்கிளில் வந்தாலும் குறிப்பிட்ட இடத்தில் இருந்து உருட்டிக்கொண்டு போகவேண்டும். நான் அவர்களை சைக்கிளில் ஏற்றிச் செல்வேன். இப்படி என்ன செய்தாலும் எங்க கிராமத்தில் என்னை எதிர்ப்பவர்கள் குறைவு. அதற்கு எனது குடும்ப பின்னணியும் ஒரு காரணமாக அன்று இருந்திருக்கலாம். அவ்வாறான ஒரு சூழல்தான் நான் இருந்த போது இருந்தது. இப்போது நிறைய மாற்றங்கள் வந்துள்ளது.
அவங்க செய்யும் விழாக்கள் விசேடங்கள் எல்லாவற்றிக்கும் செல்வோம்.. நாடகம் போடுவார்கள். என் நண்பர்கள் அவங்கட நாடகங்களில் சேர்ந்து நடிப்பார்கள். என் அண்ணர் ஒருவர் தன் பிள்ளைகளை அவர்களிங்ர ஆரம்ப பாடசாலையில் சேர்த்தார். எனக்கு பல நண்பர்கள் அங்க இருந்தாங்க . அந்த நண்பர்களில் சில பேர் என்னோடு இயக்கத்திற்கு வந்தாங்க.
தேசம்: உங்களுக்கு இயல்பாகவே சாதி எதிர்ப்பு மனநிலை இருந்தது.
அசோக்: எனக்கு மாத்திரம் அல்ல என் நண்பர்களுக்கும் இருந்தது.
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரைஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் (பகுதி 01) (ஒளிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
எனது ஊரும் சுற்றமும்
தேசம்நெற் சார்பாக தோழர் யோகன் கண்ணமுத்து அவர்களுடன் நேரடியான ஒரு உரையாடல். கடந்த கால அரசியலில் 1956ஆம் ஆண்டு இலங்கையில் முதலாவது இனக்கலவரம் அல்லது ஸ்ரீ எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பமானதில் இருந்து அவரின் வரலாறும் கிட்டத்தட்ட தொடங்குகிறது. இலங்கையின் இனவிடுதலை வரலாறும் தோழர் அசோக் யோகன் கண்ணமுத்து உடைய வரலாறும் கிட்டதட்ட ஒரே சமாந்திரமாக பயணித்துள்ளது. அந்தவகையில் அவருடனான நேர்காணலும் இந்தப் பதிவும் வரலாற்று முக்கியத்துவமானது என நினைக்கின்றேன். நாங்கள் நேரடியாக இந்த உரையாடலுக்குள் செல்வோம்.
தேசம்: வணக்கம் தோழர் யோகன் கண்ணமுத்து!
அசோக்: வணக்கம் ஜெயபாலன்!
தேசம்: உங்களின் அரசியல் பயணத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் போராட்ட அரசியலை நாங்கள் எவ்வாறு அணுகினோம் என்றுதான் நாங்கள் பார்க்கப் போகின்றோம். பிறந்து, சிறுவனாக, இளைஞனாக வளர்ந்து போராட்டத்தின் முக்கியமான தளத்தில் இருந்திருக்கிறீர்கள். அத்துடன் இந்த புலம்பெயர் தளத்தில் அரசியல் சார்ந்த ஈடுபாட்டாளனாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் தற்போது சுமார் ஒரு 60 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று உங்களின் மிக இளமைப் பருவத்தில் எந்த விடயத்தை மீள கொண்டு வரக்கூடியதாக உள்ளது. அந்த நேர சூழல், உங்கள் கிராமம், எப்படியான சூழலில் நீங்கள் பிறந்திருந்தீர்கள்? உங்கள் பெற்றோரின் அரசியல் பின்னணி என்ன? எப்படி இந்த அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டீர்கள் என்பதைச் சொல்வீர்கள் என்றால் நன்றாக இருக்கும். அந்த அடிப்படையில் உங்களின் மிக இளமைப் பருவத்தில் என்ன ஞாபகம் இருக்கிறது? உங்கள் கிராமம், குடும்பம் சம்மந்தமாக..
அசோக்: மட்டக்களப்பிலிருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தூரத்தில இருக்கிற கடலோர விவசாயக் கிராமமான களுதாவளைதான் என் பூர்வீகம். எங்கள் குடும்பம் வந்து நிலப்பிரபுத்துவ சமூகம் சார்ந்த குடும்பம்…
அப்பா, அம்மா இருவரின் குடும்பமும் விவசாயக் குடும்பம்தான். விவசாயத்தையே பின்னணியாகக் கொண்டது. எனது அப்பாதான் எமது கிராமத்தில் படித்த முதலாவது தலைமுறை. களுதாவளையைச் சேர்ந்தவர். படுவான்கரை, எழுவான்கரை என இரண்டில் எமது கிராமம் எழுவான்கரை. விவசாயத்தை அடிப்படையாகக்கொண்டது.
அப்பா இராமகிருஸ்ண மிஷனுடன் மிகவும் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். விபுலானந்தர் மீது பற்றுக் கொண்ட விசுவாசியாக இருந்தார்
தேசம்: அதற்கு குறிப்பிடத்தக்க ஏதாவது காரணம்…?
அசோக்: அடிப்படையில் அப்பாவுக்கு ஆன்மீக ஈடுபாடு இருந்தது. அத்தோடு சமூக அக்கறை இருந்தது. அந்தக் காலத்தில் சுவாமி விபுலானந்தரின் சமூக சேவையின் ஊடாகத்தான் பள்ளிக் கூடங்கள் உருவாகியது. அபிவிருத்தி நடைபெற்றது. அதில் அப்பாவும் ஆர்வம் கொள்கின்றார். மிஷனரி பாடசாலைக்கு பதிலாக இராமகிருஸ்ணன மிஷன் திருகோணமலை, மட்டக்களப்பு பிரதேசங்களில் ஸ்தாபிக்கப்படுகிறது. சிவானந்தா வித்தியாலயம், காரைதீவு இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயம் ஆரம்பிக்கப்படுகிறது. இராமகிருஸ்ண மிஷன் களுதாவளையிலும் ஒரு பாடசாலையை ஆரம்பிக்கிறார்கள். அப்பா தான் தலைமை ஆசிரியராக இருந்தார்.
அப்பாவுக்கு அரசியல் ஈடுபாடும் இருந்தது. தமிழ்த் தேசியவாதியாகவும் தமிழ் ஆசிரியராகவும் இருந்த படியால் தமிழரசு கட்சியினுடன் அரசியல் உறவும் ஏற்படுகிறது.
தேசம் : அம்மாவின் பின்னணியைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்?
அசோக்: அம்மாவின் குடும்பமும் ஒரு விவசாயக் குடும்பம் தான். அம்மா 10 ஆம் வகுப்பு படித்தாவோ தெரியவில்லை எனக்கு. ஆனால் நிறைய வாசிப்பார். நாவல், சிறுகதை, இலக்கியம் என பயங்கர வாசிப்பு. நான் நினைக்கிறேன் அம்மா எட்டு ஒன்பதாம் வகுப்புதான் படித்திருப்பார். அப்பா, அம்மா காதலித்து அதில் நிறைய பிரச்சினைப்பட்டு …
தேசம்: இரண்டு பேரும் ஒரு கிராமமா?
அசோக்: ஆம் ஒரே கிராமம்தான். அம்மாவின் அப்பருக்கு விருப்பமில்லை.
தேசம்: ஏன்? சமூக பின்னணியா?
அசோக்: இரண்டு குடும்பமும் ஒரு சமூக பின்னணியை கொண்டிருந்தாலும் அம்மாவின் குடும்பம் கொஞ்சம் வசதியான குடும்பம். அம்மாவின் அப்பாவுக்கு அதில் விருப்பமில்லை. அப்பா வந்து அம்மாவை தூக்கிக்கொண்டு போய் மிஷனரியில் வைத்து திருமணம் செய்து அது பெரும் முரண்பாடு. காலப்போக்கில் இராமக்குட்டியாரின் கோபம் தணிந்து உறவு உருவாகிவிட்டது. இராமக்குட்டி என்பது அம்மாவின் அப்பா பெயர்.
தேசம்: இதில் பாரம்பரிய வித்தியாசம் அல்லது குல வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா?
அசோக்: என்ன சிக்கல் என்றால் எமது கிராமம் கிழக்கு மாகாணத்தில் தாய்வழி சமூகம். இது இறுக்கமான சமூகமாகும். எங்கள் கிராமத்தில் அம்மாவின் குடிதான் நான்.
தேசம்: குடி வழி சமூகம் என்றால்…?
அசோக்: குடிவழிச்சமுகம் என்றா அம்மாவின் வம்சத்தை வழியை கொண்டதாக இருக்கும். எங்கட கோயில் மற்ற சடங்குகள் திருவிழாக்கள் எல்லாம் அம்மாவின்ற குடியைக் கொண்டே நடக்கும். என்னை அழைப்பதென்றால் அம்மாவின் குடியைச் சொல்லித்தான் அழைப்பார்கள். அம்மா பெத்தான்குடி. அப்பா பேனாச்சிகுடி. அம்மா ஆட்கள் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டார்களோ தெரியல்ல. சில நேரத்தில் திருமணத்திற்கு அதுவும் ஒரு தடங்கலாக இருந்திருக்கும். அம்மாவை கொண்டு போய் அங்குள்ள கொன்வென்டில் தங்க வைத்து அப்பா படிப்பித்துள்ளார்.
தேசம்: அப்பாவின் அரசியல் போக்கு தொடர்பாக மாறுபட்ட கருத்திருந்ததா?
அசோக்: இல்லை. அவ்வாறாக தெரியல்லை.
தேசம்: அப்பாவின் அரசியல் தொடர்பால் அம்மாவின் நிலைப்பாடு என்ன?
அசோக்: அம்மாவின் ஒத்துழைப்பு நிறையவே இருந்தது. 1956ஆம் ஆண்டு ஸ்ரீ எதிர்ப்பு தனிச் சிங்கள சட்டமூலம் வந்தபோது அப்பா ஆறு மாதம் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். அம்மா 1961ஆம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கும் இமாநாட்டிற்கும் அறப் போரணித் தலைவர் அரியநாயகம் திருக்கோயில் அவருடைய தலைமையில் கால்நடையாக யாத்திரைச் சென்றுள்ளார் திருகோணமலைக்கு. பேரணியில் நிறைய பெண்கள் கலந்துகொண்டிருந்தனர். இது புரட்சியான விடயம். அந்தக் காலத்தில் பெண்கள் திருக்கோவிலில் இருந்து
திருகோணமலைக்கு கால்நடையாக போவது பெரிய விடயம். அதில் அம்மா கலந்துகொண்டதாக அம்மா சொல்ல அறிந்துள்ளேன்.
தேசம்: உங்கள் பெற்றோரை பொருத்தவரையில் இரண்டு பேரும் அரசியலில் ஈடுபட்டிருந்தனர்?
அசோக்: ஆம்
தேசம்: உங்கள் குடும்பத்தில் மொத்தம் எத்தனை பேர்?
அசோக்: நாங்கள் மொத்தம் ஒன்பது பேர். ஏழு அண்ணா இரண்டு அக்கா. நான் ஒன்பதாவது ஆள்.
தேசம்: நீங்கள் பெரிய குடும்பம். ஒரு அண்ணாவை நீங்கள் வளர்த்தும் உள்ளீர்கள்.
அசோக்: ஓம் ஒரு அண்ணா எங்களுடன் தான் வளர்ந்தார். மொத்தம் பத்து பேர்.
தேசம்: பெரிய குடும்பமாக இருந்து இன்னொருவரை எடுத்து வளர்ப்பது அதற்கான தேவை எப்படி வந்தது?
அசோக்: பொருளாதார ரீதியாக எங்கள் வீடு பிரச்சினைக்குரியது அல்ல. அப்பாவுக்கு தலைமை ஆசிரியர் தொழில் கௌரவ தொழிலேயொளிய, அதுதான் எங்களது பொருளாதாரம் இல்லை. அம்மாவின் பக்கம் நிறைய தென்னங் காணிகளும் விவசாயக் காணிகளும் இருந்தன. விவசாயக் காணிகளை நாம் செய்வதுடன் குத்தகைக்கும் கொடுப்போம். இப்போ அப்படியில்ல. பொருளாதார ரீதியில் சராசரி குடும்பம்தான். அன்றைய காலகட்டத்தில் தமிழரசு கட்சியினுடைய பொருளாதார வளங்களை கொடுக்கும் பெரிய பின்புலமாக அப்பா இருந்துள்ளார். அதனால்தான் எனக்கு தமிழரசு கட்சி யில் வெறுப்பு வந்தது. அப்பா் எப்படி பயன்படுத்தப்பட்டார் என்பது எனக்குத் தெரியும்.
தேசம்: களுதாவளையில் இருந்து ஒரு சராசரி குடும்பத்தையும் பார்க்க நீங்கள் கொஞ்சம் வசதியாக இருந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.
அசோக்: அப்படித்தான் நினைக்கிறன். நிலவுடைமைச் சமூகத்திற்குரிய அனைத்து குணாம்சங்களும் எமக்கிருக்கும். தோட்டங்களில் வந்து வேலை செய்வார்கள். நிறைய தொழிலாளர்கள் எங்களைச் சுற்றியிருப்பார்கள். ஒரு கூட்டு குடும்பத்துக்குரிய எல்லாம் இருக்கும். தொழிலாளர்கள் என்பதை விட ஒரு ஐக்கிய உறவு எங்களுக்குள் இருக்கும். ஏன் என்றால் நாங்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உறவுக்காரர்கள். யாழ்ப்பாணத்தில் தொழிலாளர்கள் வேறு சமூகம், நிலவுடையமையாளர்கள் வேறு சமூகம். எமது ஊரில் நிலவுடையாளர்களும், தொழிலாளர்களும் ஒரே சமூகம். அதனால் ஒரு கூட்டுறவு இருக்கும்.
தேசம்: களுதாவளைக் கிராமத்தை எடுத்தோமேயானால் ஒட்டுமொத்தமாக களுதாவளை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களா? அல்லது வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களா?
அசோக்: நல்லதொரு கேள்வி. யாழ்ப்பாண சமூகத்திற்கும் எமது சமூகத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பல்வேறு சாதிகள் இருக்கும். நீங்கள் வந்து கொக்குவில் கிராமத்தை எடுத்தீர்கள் என்றால் பல்வேறு சமூகங்கள் இருக்கும்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பை பொறுத்தவரையில் குறிப்பிட்ட கிராமங்கள் மட்டும்தான் சாதிய அடிப்படையிலான கிராமங்கள். ஆரம்ப காலத்தில் பண்டைய குடியேற்றங்கள் நடைப்பெற்ற போது சில கிராமங்களில் குடிமைச் சமூகங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளது. நீங்கள் எல்லா கிராமங்களிலும் ஒடுக்கப்பட்ட குடிமைச் சமூகத்தை காண இயலாது. குறிப்பிட்ட சில கிராமங்களிலேயே காண முடியும். ஐந்து கிராமங்கள் என நினைக்கின்றேன். குடிமைச் சமூகங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். களுதாவளை, கோமாரி, அம்பிளாந்துறை, கல்முனை, வெல்லாவெளி. இவ்வாறு நான்கு ஐந்து கிராமங்கள். இக்கிராமங்களில் ஒடுக்கப்பட்ட சமூகமாக பறையர் சமூகம் இருக்கும். கிழக்கு மாகாணத்தில் பறையர் சமூகத்திற்கு காணிகள் இருக்கும். யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட பெரும்பாலான பறையர் சமூகத்திற்கு நிலங்கள் இல்லை. இங்கு இவர்களுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இயல்பாகவே அவர்கள் பொருளாதார ரீதியாக சுயமாக வாழக்கூடிய சூழல் இருக்கும்.
தேசம்: சாதிய முரண்பாடு இங்கு ஓரளவு குறைவாக இருக்கும்?
அசோக்: ஆம் குறைவாக இருக்கும். சாதிய முரண்பாடு குறைவாக இருக்கும். பொதுத்தளத்தில் பார்க்கும் போது குறைவாக இருக்கும். ஆனா குடிமைச் சமுகங்கள் வாழும் அந்தந்த கிராமங்களில் இருக்கும். அந்த கிராமங்களில் அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகம் தானே. ஒடுக்கப்பட்ட சமூகம் உள்ள கிராமங்களில் அவர்கள் மீதான ஓடுக்குமுறை கடுமையாக இருக்கும். எங்களுடைய கிராமத்தில் பறையர் சமூகம் கோயிலுக்குள் செல்ல முடியாது. நாங்கள் படிக்கும் பாடசாலையில் படிக்க முடியாது. அவர்களுக்கு தனி பாடசாலை. தனி கோயில்.
நான் பல்வேறு முயற்சிகள் செய்து அவர்களை எங்கள் கோயிலுக்குள் கொண்டுச் செல்ல எடுத்த முயற்சியினால் பல்வேறு சிக்கல்களை அனுபவித்துள்ளேன். அது ஒரு காலம். இப்போதும் அப்படித்தான் என நினைக்கிறன். கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் சாதிய ஒடுக்குமுறை இல்லை என்று சொல்வதற்கு காரணம், ஒரு கிராமத்திற்கு சென்றால் அங்கு ஒரே சாதி. முக்குவராக இருப்பார்கள். அல்லது கரையார் சமூகமாக இருப்பார்கள். அங்கு சாதி ஒடுக்குமுறை இருக்காது. நூற்றுக்கு தொண்ணூறு வீதமான கிராமங்கள் ஒரு சமூகமாகத்தான் இருக்கும்.
தேசம்: இப்படி பார்க்கும் போது யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் சாதி முறைக்கும் வேலை பிரிவினைக்கும் ஒரு நெருக்கமான தொடர்பிருக்கிறது. நீங்கள் சொல்வதை பார்க்கும் போது வேலை பிரிவினை அடிப்படையில் சாதி இருப்பது போல் தெரியவில்லை. ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களே எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்.
அசோக்: ஆமாம். அப்படித்தான். உதாரணமாக பார்த்தால் இலங்கையில் இடதுசாரி இயக்கங்கள் யாழ்ப்பாணத்தில்தான் அதிகம். மட்டக்களப்பில் அதன் தோற்றம் இடம்பெறமுடியாமல் போய்விட்டது. ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் தொழிலாளர்களாகவும் நிலஉடமையாளர்களாகவும் இருந்தபடியால் அது கூர்மை அடையல்ல. சாதிய முரண்பாடுகளோ, வர்க்க முரண்பாடுகளோ வருவதற்கு சாத்தியம் இல்லாமல் போய்விடுகின்றது கூர்மை அடைந்தாலும் சமாளித்துவிடுவார்கள். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தானே.
சாதியும் வர்க்கமும் வடமாகாணத்தில் தாக்கம் அதிகம். மட்டக்களப்பில் ஒரே சமூகமாக இருக்கின்ற படியால் அந்த முரண்பாடுகள் கூர்மையடையாது.
ஈழ விடுதலைப் போராட்டம் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – புளொட் – தோழர் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம்
1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட, அதன் பின் பிறந்த தலைமுறையினர் தான் அசோக் யோகன் கண்ணமுத்து. 1957இல் பிறந்த இவர் தமிழர்களின் உரிமைப்போராட்டத்தோடு தவழந்து, நடந்து, இளைஞனாகி ஆயதமேந்திப் போராடி அதிஸ்டவசமாக உயிர்தப்பி தற்போது தனது சாட்சியத்தை தேசம்நெற் இணையத்தில் பதிவு செய்ய முன்வந்துள்ளார். ஈழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்டிருந்த தோழர் யோகன் கண்ணமுத்து: தமிழீழ விடுதலைப் போராட்டச் சூழல், தமிழீழ விடுதலைப் புலிகளினுள் ஏற்பட்ட பிளவு, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உருவாக்கம், மட்டக்களப்புச் சிறையுடைப்பு, கழகத்தினுள் இடம்பெற்ற பிளவுகள், தீப்பொறி, ஈஎன்டிஎல்எப் ஆகிய அமைப்புகளின் உருவாக்கம் என பல்வேறு விடயங்கள் பற்றியும் பதிவு செய்கின்றார்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழுவில் உறுப்பினராக இருந்த தோழர் யோகன் கண்ணமுத்து விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடனும் வெவ்வேறு தளங்களில் பயணித்தவர். சகோதரப் படுகொலைகள், பழிவாங்கல் செயற்பாடுகள் என போராட்டத்தின் பல்வேறு அம்சங்ளையும் அவர் இங்கு பதிவு செய்ய முற்பட்டு உள்ளார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்னணிப் போராளியான இவர் விடுதலைப் போராட்டம் பற்றிய இன்னுமொரு கோணத்தையும் பதிவு செய்கின்றார்.
இது தொடர்பாக வாசகர்களாகிய உங்களுக்கு ஈழப்போராட்ட வரலாறு தொடர்பாக கேள்விகள், சந்தேகங்கள் இருப்பின் அவற்றை இங்கு பதிவு செய்தால் அக்கேள்விகளுக்கான பதிலையும் பெற்றுக்கொண்டு இந்த வரலாற்றுத் தொடரை மேலும் காத்திரமானதாக ஆக்க முடியும்.
இப்பதிவு தற்போதைய புதிய தலைமுறையினருக்கு எமது விடுதலைப் போராட்டம் பற்றி மறைக்கப்பட்ட அல்லது அறிந்திராத பக்கங்களை எடுத்துக்காட்டும்.
அடுத்த வாரம் முதல் தேசம்நெற் இணையத் தளத்தில் இவருடைய நேர்காணல் பதிவு தொடராக எழுத்திலும் காணொலியாகவும் வெளிவரும்.
சரத்து 19: ஒவ்வொருவரும் சுயாதீனமான கருத்துக்களைக் கொண்டிருக்கவும் அதனை வெளிப்படுத்தவும் உரிமையுடையவர்கள். இந்த உரிமை என்பது இடையூறற்று கருத்துக்களைக் கொண்டிருக்கவும் தகவல்களையும் கொள்கைகளையும் தேடவும் எந்த ஊடகத்தினூடாகவும் எல்லைகளைக் கடந்தும் அதனை வெளிப்படுத்தவுமான உரிமையயை உள்ளடக்குகின்றது. – ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பிரகடனத்தின் 19வது சரத்து.
Article 19: Everyone has the right to freedom of opinion and expression; this right includes freedom to hold opinions without interference and to seek, receive and impart information and ideas through any media and regardless of frontiers.
இந்தக் கருத்துச் சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்காகப் போராடிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஊடகங்களில் ‘தேனீ’ இணையத்தளத்தின் பாத்திரம் மிகமுக்கியமானது. அதற்குப் பின்நின்ற ஜெமினியின் – கங்காதரனின் உழைப்பு மதிப்பிட முடியாதது.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தமிழர்களை உலகெங்கும் புலம்பெயர நிர்ப்பந்தித்த போது, யுத்தத்தின் ஆரம்ப காலகட்டங்களில் வடக்கு கிழக்கை விட்டு, ஆரம்ப நாட்களில் புலம்பெயர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அராஜகப் போக்கினால் பாதிக்கப்பட்ட மாற்று இயக்கத்தைச் சார்ந்தவர்களே. இலங்கையில் மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தை, தாங்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் அவர்கள் கட்டியெழுப்ப முற்பட்டனர்.
ஆனாலும் மிகக் கூறுகிய காலத்தினுள்ளேயே கட்டமைப்பு ரீதியாக மிகப்பெரும் பலத்துடன் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கம், புலம்பெயர் தேசங்களிலும் கோலோச்ச ஆரம்பித்தது. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான அரசியல் வன்முறையானது; அரசியல் படுகொலைவரை சென்றது. பாரிஸ், பேர்ளின், லண்டன், ரொறொன்ரோ, சிட்னி என வன்முறைகள் தொடர்ந்து சில படுகொலைகளும் நிகழ்ந்தது.
ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மிகப்பெரும் பொருளாதார, அரசியல், பலம்பொருந்திய கட்டமைப்பாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அராஜகத்திற்கு எதிராக தனியன்களாக; தங்களுடைய நாளாந்த குடும்பச் சுமைகளுடன், ஒரு சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்திற்காக ஒரிரு ஆண்டுகள் அல்ல கால்நூற்றாண்டாக போராடி வருவது என்பது சாதாரணமானதல்ல.
1990க்களின் பிற்பகுதியில் இணையத் தொழில்நுட்பம் வீச்சுப்பெறத்தொடங்கியது. இலங்கைத் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத் தளத்திலும் இது அதிர்வை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் பாரம்பரிய ஊடகங்களான பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி ஊடாக தங்கள் கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடியவர்கள்; அதற்கான கூட்டு உழைப்பை பெறுவதிலும், அதற்கான அதீத செலவீனங்களை தாங்க முடியாத நிலையிலும் தத்தளித்தனர். தங்களுடைய உழைப்பை வழங்குகின்ற அதேசமயம், தங்களுடைய வருமானத்தையும் செலவிட்டே இந்த கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைப் போராட்டத்தை நடத்தினர். இணையத்தின் வருகை இந்தச் செலவீனங்களை மிகமிக குறைத்துக்கொண்டது. வாசகர் பரப்பை நாட்டின் எல்லைகளைக் கடந்தும் விரித்துச் சென்றது.
தங்களுடைய உழைப்பினை மட்டும் வைத்துக்கொண்டு கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராட முடியும் என்ற ஒரு நிலையயை இணையத்தொழில்நுட்பம் வழங்கியது. உலெகெங்கும் பரந்திருந்த மாற்றுக் கருத்தாளர்களை இணைக்கின்ற தளமாக ‘தேனீ’ யயை ஜெமினி என எல்லோராலும் அறியப்பட்ட கங்காதரன் உருவாக்கினார்.
தேனீ, தேசம்நெற் (தேசம், லண்டன் உதயன், லண்டன் குரல்), ரிபிசி வானொலி என விரல்விட்டு எண்ணக் கூடிய ஊடகங்களே 1990க்களின் பிற்பகுதி முதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரங்களுக்கு சவாலாக செயற்பட்டு வந்தன. இணையத் தளங்கள் 2000ம் ஆண்டிற்குப் பின் வீச்சுப்பெற்று வந்தது. வன்னி யுத்தத்தின் போது தாயகத்தின் உண்மை நிலவரங்கள் மூடிமறைக்கப்பட்டு மக்கள் ஒரு மய உலகிற்குள் தள்ளப்பட்டிருந்த போது பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தது இந்த ஊடகங்கள் மட்டுமே.
இந்தப் பின்னணியிலேயே ஜெமினி – கங்காதரனின் வரலாற்றுப் பாத்திரத்தை என்னால் மதிப்பிட முடிகின்றது. ஒரு தனிமனிதனின் உழைப்பு ஒரு சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்தை தக்க வைத்துக்கொள்வதில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தி இருக்கும் என்பதற்கு தேனீ இணையமும் ஜெமினியின் உழைப்பும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றால் அது மிகையல்ல.
ஜெமினி – கெங்காதரனை ஸ்ருட்காட் ஜேர்மனியில் ஒரு சில கூட்டங்களில் சந்தித்து பேசியதைத் தவிர எனக்கு அவருடன் அவ்வளவு உறவு இருந்ததில்லை. அவருடைய அரசியல் நிலைப்பாடுகளுடனும் எனக்கு அவ்வளவு உடன்பாடும் இருந்ததில்லை. ஆனால் அவருக்கு சமூகத்தின் மீது இருந்த நேசமும் அதற்காக அவர் செய்த தன்னலமற்ற அர்ப்பணிப்பும் எனக்கு ஜெமினி மீது எப்போதும் ஒரு மரியாதையயை ஏற்படுத்தியது. இரவோடு இரவாக அரசியல் ஞானம்பெற்ற ‘கீ போர்ட் மார்க்ஸிட்டுக்கள்’ மத்தியில் தான் நம்பிய அரசியல் கருத்துக்களுக்கா இறுதிவரை போராடிய ஒரு தன்னலமற்ற போராளி ஜெமினி. அப்படிப்பட்ட ஒரு போராளியயை இக்கொடிய நோய் கொண்டு போனது கருத்துச் சுதந்திரத்தை மதிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட பேரிழப்பே.
“I disapprove of what you say, but I will defend to the death your right to say it”. Voltaire
“உன்னுடைய கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை, ஆனால் அதனைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமைக்காக எனது உயிரைக்கொடுத்தும் போராடுவேன்”. வோல்ரயர்
சீனாவின் சர்வதேச ஆதிக்கத்தை தாங்க முடியாத அமெரிக்கா!
அமெரிக்க ராஜாங்க அமைச்சர் மைக்கல் பொம்பயோ இலங்கை வருகை!!!
உலக பொருளாதார ஆதிக்கத்தை தன் பக்கம் சுவீகரித்துக்கொள்ளும் சீனாவின் வளர்ச்சியயைத் தடுக்க அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக்கல் பொம்பயோ ஆசிய சுற்றுப் பயணம் மேற்கொண்டு அதில் ஒரு கட்டமாக இலங்கைக்கும் வருகின்றார் இன்று. மைக்கல் பொம்பயோ காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துக் கொடுக்க இலங்கைக்கு வரவில்லை. அது பற்றி கரிசணையுடையவரோ அல்ல. அடுத்த இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதே கேள்விக்குறியாக இருக்கின்ற போது அமெரிக்க இராஜாங்க அமைச்சரின் ஆசிய விஜயம் ஒரு பொருட்டாகவே அமையப் போவதில்லை. தனது சொந்த நாட்டில் 225,000 பேர் கொல்லப்பட்டதையே பொருட்படுத்தாத ஒரு இராஜாங்க அமைச்சரிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடிக்கும் அதிகாரம் அந்த நாட்டிடம் உள்ளது என்று உளறும் முட்டாள்தனத்தை என்ன செய்வது.
இறுதி யுத்தத்தில் பெரும்பாலும் உயிரோடு இல்லை என்பது சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கும், தமிழ் அரசியல் வாதிகளுக்கும், இலங்கை அரசுக்கும், சர்வதேசத்திற்கும் மிகத் தெளிவாகத் தெரியும். உயிருடன் இருப்பவர்களையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் பரலோகம் அனுப்பிக்கொண்டுள்ளார். அவருடைய ராஜாங்க அமைச்சர் இல்லாதவர்களை எப்படி கண்டுபிடிக்க முடியும்?
ஈராக், அப்கானிஸ்தான், லிபியா இன்று சிரியா இப்படியே இந்த மேற்குலகம் கொலைக்களமாக்கிய நாடுகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஏராளம்! ஏராளம்!! யார், யாரிடம் எல்லாம் போய் நீதி கேட்பது என்ற விவஸ்தையே இல்லாமல் இன்னும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை வைத்துத் தான் அரசியல் நடத்த வேண்டும் என்ற அளவுக்கு தமிழ் அரசியல் ஈனமாகிப் போய்க் கிடக்கின்றது.
இறுதி யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்க படைகள் வன்னியில் உள்ள மக்களை மீட்கப் போவதாக ஒரு செய்தி அந்நேரத்தில் கசிந்தது. அவர்கள் எவ்வளவு தூரம் சாத்தியப்பட்டு இருக்கும் என்பது உறுதியாகத் தெரியாது. ஆனால் இச்செய்தி வெளியானதும் அமெரிக்காவில் உள்ள பேர்ள் என்ற தமிழர் அமைப்பு வன்னி எங்களின் சொந்த மண் அந்த மண்ணில் இருந்து மக்களை மீட்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டது. அதற்குக் காரணம் வன்னி யுத்தகளத்தில் இருந்து மக்கள் மீட்கப்பட்டால் – போராட்டத்தின் மண் மூட்டைகள் – பாதுகாப்பு அரண் – அடுத்த சில மணிநேரங்களிலேயே யுத்தம் முடிவுக்கு வந்துவிடும். போராட்டத்தை வைத்து சர்வதேச நாடுகளில் தாங்கள் வியாபாரம் செய்ய முடியாது. அதற்காகவே இந்த வெளிநாட்டு சரகு புலிகள் குரல்கொடுத்து வந்தனர். அன்று வன்னிமக்களை கொல்லக்கொடுத்து சூறையாடிய பணத்தில் இன்று பகட்டு வாழ்க்கை வாழ்கின்றனர். அதில் கொஞ்சத்தை வீசியெறிந்து இன்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்கின்றோம் என்று உலாவிக்கொண்டு திரிகின்றனர்.
கருத்துச் சுதந்திரம்: வல்லரசுகளுக்கும் அடிப்படைவாதிகளுக்கும் எப்போதும் ஆபத்தான ஆயுதம்!
பிரஞ்ச் எழுத்தாளர் வோல்ரயர் கருத்துச் சுதந்திரம் பற்றி குறிப்பிட்டது: “I disapprove of what you say, but I will defend to the death your right to say it” – “நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் உனக்கு சொல்வதற்குள்ள உரிமைக்காக எனது உயிரையும் கொடுத்து போராடுவேன்”
ஆம்! நேற்று மாலை மூன்று மணியளவில் பிரான்ஸ் தலைநகரான பரிஸின் புறநகர பாடசாலை ஒன்றின் வரலாற்று விரிவுரையாளர் கருத்துச் சுதந்திரத்திற்காக உயிரையும் கொடுத்து போராடியுள்ளார். 47 வயதான சம்பந்தப்பட்ட ஆசிரியர் மதஅடிப்படைவாதியால் கழுத்து வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பாடசாலைக்கு அருகே இடம்பெற்றுள்ளது.
இதுபற்றித் தெரியவருவதாவது படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளர் கருத்துச் சுதந்திரம் பற்றிய கற்பித்தலை மேற்கொள்ள பிரான்ஸின் தலைநகரில் நடைபெற்ற சார்லி ஹப்துல் படுகொலைக்கு காரணமான மொகம்மது நபியின் கார்ட்டூன்களை காண்பித்து விளக்கி உள்ளார். அதற்கு முன்னதாக இஸ்லாமிய மாணவர்கள் தங்கள் உணர்வுகளைப் பாதிக்கும் என்று கருதினால் வகுப்பை விட்டு வெளியேறவும் அனுமதி வழங்கப்பட்டது. இஸ்லாமிய மாணவர்கள் வெளியேற சில இஸ்லாமிய மாணவர்கள் வகுப்பில் தொடர்ந்தும் இருந்தனர். அதன்பின் ஒரு பெற்றார் இதனை ஒரு பிரச்சினையாக விடியோவில் பதிவிட இது ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பதிவாகி இச்சம்பவம் சர்ச்சைக்குரியதாகியது. பிரான்ஸில் வசிக்கும் மொஸ்கோவைச் சேர்ந்த செச்சினிய அடிப்படைவாதி அந்த ஆசிரியரை கழுத்தறுத்து தனது மத அடிப்படைவாதத்தை நிரூபித்துள்ளார்.
Everyone has the right to freedom of opinion and expression; this right includes freedom to hold opinions without interference and to seek, receive and impart information and ideas through any media and regardless of frontiers. – Article 19:
ஒவ்வொருவருக்கும் கருத்தைக் கொண்டிருக்கவும் அதனை வெளிப்படுத்தவும் உரிமை உண்டு. அவ்வுரிமையானது தடைகளேதுமின்றி சுதந்திரமாக கருத்துக்களைக் கொண்டிருக்கவும் தகவல்களையும் கருத்தியல்களையும் எந்த ஊடகத்தினூடாகவும் எல்லைகளுக்கு அப்பாலும் தேடவும் பெறவும் பரப்பவுமான உரிமையயை வழங்குகின்றது.
விஞ்ஞானம் தொழில்நுட்பம் நாகரீகம் நவீனத்தை நோக்கி நகர்ந்த போதும் மனதனின் அடிப்படைச் சிந்தனைகளில் இன்னமும் அடிப்படைமாற்றங்கள் நிகழவில்லை. வல்லரசுகள் முதல் அடிப்படைவாதிகள் வரை இன்னமும் அடிப்படை உரிமைகளை சாதாரணர்களுக்கு வழங்குவதை தங்களுக்கு மிகப்பெரும் ஆபத்தானதாகவே நோக்குகின்றனர். அடிப்படைவாதிகளுக்கு மொகம்மது நபிக்கு கார்ட்டூன் வரைந்ததைப் பொறுக்க முடியவில்லை தங்கள் கொலைவெறியயை காண்பிக்கின்றனர் அமெரிக்க பிரித்தானிய வல்லாதிக்க சக்திகளுக்கு தங்களைப் பற்றிய உண்மைத் தகவல்கள் வெளியே வருவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை விக்கிலீக்ஸ்யை உருவாக்கிய ஜூலியன் ஆசான்ஜ் மீது பொய் வழக்குகளைச் சோடித்து அவரை படுகொலை செய்ய முயற்சிக்கின்றனர். சர்வதே மனித உரிமை அமைப்புகள் அவரை விடுவிக்க கோரியும் பிரித்தானிய அரசு தனது அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு சேவகம் செய்வதில் எவ்வித குறையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றது.
கடவுள் நம்பிக்கையயை வைத்திருக்கின்றோம் என்ற பெயரில் இந்த கடவுள் நம்பிக்கையாளர்கள் பலரும் மிக மோசமான மனித விழுமியங்களுக்கு புறம்பான செயற்பாடுகளையே செய்கின்றனர். மத எல்லைகளுக்கு அப்பால் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் பெரும்பாலும் மனிதத்தை நேசிப்பவர்களாகவும் பண்பட்டவர்களாகவும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடவுளை அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் வணங்குபவர்கள் பெரும்பாலும் ஒப்பீட்டளவில் அன்பு பண்பு நேர்மை குன்றியவர்களாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பார்த்து நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.
சகிப்புத் தன்மை பொறுமை கருத்துக்களை கேட்கும் இயல்பு கருத்துக்களை அலசி ஆராயும் ஆளுமை நம்பிக்கை தன்னம்பிக்கை இவைகளின் பற்றாக்குறையானது தனிப்பட்ட உறவுகளிலும் சமூக உறவுகளிலும் அரசியலிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இந்த உலக சமூகத்தை அமைதியின்மைக்கும் வன்முறைக்கும் இட்டுச்செல்கின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம், பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிலிபைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ டொரேற்ரே போன்ற அரசியல் தலைவர்கள் இந்த அமைதியற்ற வன்முறையான சமூகத்தின் பிரதிபலிப்புகள். சமூகத்தில் மேற்குறிப்பிட்ட விழுமியங்களின் பற்றாக்குறையினால் பண்பற்ற சமூக நோக்கற்ற பிரபல்யவிரும்பிகள் ஆட்சிக்கு வருகின்றனர்.
“வரம்புயர நீருயரும் நீருயர நெல் உயரும் நெல்லுயர குடி உயரும் குடி உயர கோன் உயரும்” – ஔவை பாட்டி சொன்னது. இப்போது இது ரிவேர்ஸில் நடைபெறுகின்றது என்று கொள்ளலாம்.
கோன் இறங்க குடி இறங்கும்! குடி இறங்க காடெரியும்!! மதவெறியர் கழுத்தறுப்பர்!!!
குறிப்பு: பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு இக்கட்டுரையயை சமர்ப்பணம் செய்கின்றேன்.
தற்கொலைகளை நாங்கள் இன்னமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் சம்பவங்களாகவே பார்க்கின்றோம். ஆனால் உண்மை அதுவல்ல. தற்கொலைகள் உலகின் முக்கிய பொதுச் சுகாதாரப் பிரச்சினை.
உலகின் மக்களில் இறப்பவர்களில், ஆண்டுக்கு 1.4 வீதமானவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். அண்ணளவாக ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். உலகின் மரணத்துக்கான காரணிகளில் முதல் 20 காரணிகளில் ஒன்று தற்கொலை.
15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்தில் தற்கொலை இரண்டாவது முக்கிய காரணியாகும். 20 தற்கொலை முயற்சிகளில் ஒன்றுதான் மரணமாகின்றது. அப்படியாயின் எவ்வளவு பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பதை கணித்துப்பாருங்கள்.
இன்னும் 15 ஆண்டுகளில் உலகில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை வருடத்துக்கு பத்து லட்சத்தை எட்டும் என உலக சுகாராத அமைப்பு எச்சரித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியிலேயே தமிழ் மக்கள் மத்தியில் உள்ள தற்கொலைப் போக்கை நோக்க வேண்டியுள்ளது.
தமிழர் தற்கொலைகள்:
இக்கட்டுரையை எழுதுவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டிருந்த போது, ஒக்ரோபர் 3இல் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் ஒரே தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகொலை செய்யப்பட்டு கொலையாளி தற்கொலைக்கு முயற்சித்து கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் நால்வர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்செய்தியின் முழுவிபரங்ளும் வெளிவருவதற்கு முன்னமே ஆங்கிலக்கால்வாயின் அடுத்த கரையில், லண்டன் பிரன்ட்பேர்ட்டில் இன்னுமொரு தமிழர் ஒக்ரோபர் 6 இல் தன் மனைவியையும் மகனையும் கொலை செய்து விட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆய்வை மேற்கொண்டிருந்த வேளையில் எனது சகோதரி முறையான ஒருவரின் உணவகத்தில் பணியாற்றிய 22 வயதேயான வெள்ளையின இளைஞன் கிழக்கு லண்டனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். இச்சம்பவங்கள் எல்லாமே ஒரு சில நாட்கள் இடை வெளியில் நடைபெற்றவை.
லண்டனில் நான் ஊடகவியலாளனாக கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்சமூகத்தின் மத்தியில் நடைபெற்ற பல தற்கொலை மரணங்களைப் பதிவு செய்துள்ளேன். அதில் மூன்று சம்பவங்களில் தாய்மார் தம் இரு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, தாங்கள் தற்கொலைக்கு முயற்சித்து, அதில் தோல்வியடைந்தனர். ஒன்றில் தந்தை தன் இரு குழுந்தைகளைக் கொலை செய்துவிட்டு தான் தற்கொலைக்கு முயற்சித்து அதில் தோல்வியடைந்தார். பிரன்ட்பேர்ட்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் மட்டுமே கொலை செய்தவர் அதே முறையில் தற்கொலைக்கு முயற்சித்து தானும் தற்கொலை செய்து இறந்துபோனார்.
அதாவது, மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் அனைத்துமே மிக குரூரமான வன்முறையால் – கூரிய ஆயுதங்களால் குத்தி மரணம் ஏற்படுத்தப்பட்டவையாகும். அதே முறையில் தங்களைத் தாங்களே குத்தி மரணத்தை விளைவிக்க முனைந்த போது அவர்களால் அது சாத்தியப்படவில்லை.
இவற்றைவிட பல தமிழர்கள் பல்வேறு சமூக பொருளாதார மற்றும் வெவ்வேறு வயதுடையவர்கள் பலர் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்துகொள்கின்றனர். இவர்கள் ஓடும் புகையிரதத்தின் முன் பாய்வதை தங்கள் தற்கொலை முறையாகக் கொண்டிருந்தனர். சிலர் தூக்கிட்டு இறந்துள்ளனர். தங்களை கூரிய ஆயுதத்தால் குத்திக்கொண்டு, தற்கொலை செய்ய முயற்சித்தவர்கள் பெரும்பாலும் அதில் தோல்வியயையே தழுவினர்.
இலங்கையில் தமிழர்:
இந்தப் பின்னணியில் இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் நடைபெறும் தற்கொலைகள் பற்றிய ஆய்வுக்காக வடக்கில் செப்பரம்பர் 01 முதல் செப்ரம்பர் 14 வரை நடைபெற்ற மரணங்களை தேசம்நெற் ஊடகவியலாளர்களுடாக சேகரித்தேன், அதன் விபரம் பின்வருமாறு: (அருகில் தரப்படும் திகதியானது சம்பவம் நிகழ்ந்த திகதியல்ல. அச்சம்பவம் பத்திரிகையில் பிரசுரமான திகதி)
செப்ரம்பர் 01:
முல்லைத்தீவு தீர்த்தக்கரை: மூன்று பிள்ளைகளின் தந்தை, 47 வயது, பொது மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 04:
வவுனியா மாங்குளம்: தங்கவேல் சிவக்குமார், 26 வயது இளைஞர், வீட்டில், தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 07:
யாழ் மாதகல் நாவலடி: பாலசுப்பிரமணியம் முருகதாஸ், 32 வயது, காதல் விவகாரமாக தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 09:
யாழ் கோப்பாய் மத்தி: குகதாஸ் தினேஸ், 18 வயது, இளைஞர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், விசமருந்தி தற்கொலை
செப்ரம்பர் 09:
வவுனியா கூமாங்குளம்: ரஞ்சித் வசந், 22 வயது, இளம் குடும்பஸ்தர் (மனைவி 4 மாத கர்ப்பிணி) தற்கொலை
செப்ரம்பர் 11:
கிளிநொச்சி பெரியபரந்தன்: சசிதரன் வயது 28, தனுஷியா வயது 27ஆகிய இருவரும் காதலுக்கு குடும்பத்தார் சம்மதிக்காததால் காட்டுப்பகுதியில், தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 12:
கிளிநொச்சி அம்பாள் நகர்: 15 வயது, யுவதி, தற்கொலை
செப்ரம்பர் 14:
யாழ்ப்பாணம் குப்பிளான்: இளைஞர் தாய் பணம் தர மறுத்ததால் தற்கொலை
உணர்ச்சிவயப்பட்ட முட்டாள்கள்:
எமது மூளையின் சிந்தனையின் செயற்பாடானது இன்னமும் முழுமையாக அறியப்படாத, மிகவும் சிக்கலான, ஆனால் ஆழமான செயன்முறையாகும். அன்பு, பாசம், காதல், கோபம், வெறுப்பு, வேதனை, துயரம், ஆற்றாமை, சிரிப்பு, அழுகை, சோகம் போன்ற உணர்வுகள் மனம் சார்ந்ததாகவும் மனமே எமது தனித்துவத்தை தீர்மானிப்பதாகவும் உள்ளது.
ஆனால் எமது உடலில் மனம் என்ற ஒரு அங்கம் இல்லை. எமது உணர்வோட்டங்களே மனமாகச் சித்தரிக்கப்படுகின்றன. எமது உடலில் சுரக்கின்ற ஹோமோன்களே எங்களில் உருவாகின்ற காதலையும் வெறுப்பையும் சந்தோசத்தையும் அழுகையையும் தீர்மானிக்கின்றனவேயொழிய சம்பவங்களோ நபர்களோ அல்ல என்பதே விஞ்ஞானபூர்வமானது.
ஆனால் என்னாலும் எனக்கு வெளியே நின்று உணர்வை ஒதுக்கி வைத்துவிட்டு அவ்வாறு நோக்க முடிவதில்லை என்பதே உண்மை. நாம் எல்லோருமே ஒரு வகையில் எமோசனல் இடியட்ஸ் – உணர்வு வயப்பட்ட முட்டாள்கள். அதனால்தான் நாங்கள் விலைமதிக்க முடியாத உயிரைக் கூட சிறிய சம்பவங்களுக்காக, நபர்களுக்காக (அவை வெறும் இரசாயன மாற்றங்கள் என்று புரிந்துகொள்ளாமல்) மாய்த்துக்கொள்ளத் துணிகின்றோம்.
உளவியல் வலி:
நாங்கள் எத்தனை வயதுள்ளவர்களாக வளர்ந்தாலும் எமது நாற்பதுகளையும் ஐம்பதுகளையும் தொட்டாலும் எம்மில் பெரும்பாலானவர்களுக்கு உணர்வு வளர்ச்சி என்பது ஒன்பது வயதைத் தாண்டுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எமக்கு உயிராபத்தான விடயங்களில் கூட ஒன்பது பேரில் எண்மர் சரியான முடிவை எடுப்பதில்லையெனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏன் இவர்கள் தற்கொலைக்கு உந்தப்படுகின்றனர் என்ற கேள்விக்கான பதில் பல காரணிகளில் தங்கி இருக்கின்றது. அதில் மிகப் பிரதானமானது அவர்களுக்கு ஏற்படுகின்ற உளவியல் ரீதியான வலி.
இந்தத் தாங்க முடியாத உளவியல் வலியில் இருந்து தப்பித்துக்கொள்வதே அவர்களுக்கு மிகப்பெரும் நிம்மதியைத் தருகின்றது. அதுவே தற்கொலைக்கான உந்துதலாக அமைகின்றது. பொதுவாக அச்சம் உண்மைச் சம்பவங்களிலும் பார்க்க பீதியை ஏற்படுத்தக் கூடியது. தற்கொலைக்கு உந்தப்படுபவர்கள் இந்த அச்சத்தினால் ஆட்கொள்ளப்பட்டு விடுகின்றனர். இதனோடு ஒருவருடைய தனித்துவ பரம்பரையலகு, உணர்வுநிலை, உணர்வுப் பிரதிபலிப்பு, முடிவெடுக்கும் ஆற்றலின் பற்றாக்குறை என்பன தற்கொலைக்கு காரணமாகின்றன.
மனிதன் ஒரு சமூக விலங்கு:
மேலும் மனிதன் ஒரு சமூக விலங்கு. அப்படியிருக்கையில் தற்கொலை என்பது முற்றிலும் தனிநபர் சார்ந்தது என்று வரையறுத்துவிட முடியாது என்கிறார் எமிலி டேர்க்ஹெய்ம். அவர் தற்கொலைக்கு ஒரு சமூக இயல்பும் உள்ளது என்றும் கலாச்சாரகூறுகளும் அதற்கு காரணமாக இருப்பதாகவும் கூறுகின்றார்.
உளவியல் நிபுணர் தோமஸ் ஈ ஜோய்னியரின் தற்கொலைக்கான உள்ளுணர்வு கொள்கையின்படி “தற்கொலை மீது விருப்பம் இல்லாதவராலும், தற்கொலையை நிறைவேற்ற முடியாதவராலும், தற்கொலையைச் செய்ய முடியாது” என்கிறார். அதாவது தற்கொலைக்கான விருப்பமும் தற்கொலை செய்துகொள்வதற்கான வல்லமையும் உள்ள ஒருவரே தற்கொலையயைச் செய்ய முடியும் என்கிறார். இதற்கு அவர் இரு உள்ளுணர்வு கட்டமைப்புகளை முன்வைக்கிறார் ஒன்று நான் இன்னொருவரில் தங்கியிருக்க வேண்டியுள்ளது என்ற கற்பனை எண்ணப்பாடும், நான் நிராகரிக்கப்படுகின்றேன் என்ற எண்ணப்பாடும் இதற்கு காரணமாக உள்ளன.
நிலையை உணர மறுக்கும் வயோதிபர்:
வயதானவர்கள் தங்கள் பிந்தைய காலத்தில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை. ஆனால் இந்த மாற்றங்கள் தொடர்பில் மிகவும் உணர்வுரீதியில் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். அதனால் வாழ்க்கையின் பின்நாட்களில் ஏற்படும் தற்கொலைக்கு இது காரணமாகின்றது. சில நாளாந்த பழக்கங்களையும் எண்ணங்களையும் அவர்களால் செய்துகொள்ள இயலாத நிலையேற்பட்டும். மிகவும் உணர்வுமயப்பட்டு இருப்பதால் சிறு விமர்சனங்களையும் தாங்க முடியாதவர்களாகவும் இருப்பார்கள். இவை வாழ்க்கையின் பிற்பகுதியில் ஏற்படும் தற்கொலைகளுக்கு காரணமாக அமைகின்றது.
இலங்கை நிலவரம்:
மேலே பட்டியலிடப்பட்ட வடமாகாணத்தில் இடம்பெற்ற தற்கொலைச் சம்பவங்கள் எதுவுமே பொதுவிதியில் இருந்து விலகியவையல்ல. உலகில் 75 வீதத்திற்கும் அதிகமான தற்கொலைகள் வருமானம் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் உடைய நாடுகளிலேயே நடக்கின்றன. இதில் இலங்கை உட்பட்ட 11தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நாற்பது வீதம் வரையான தற்கொலைகள் நடைபெறுகின்றது.
1955இல் இலங்கை தற்கொலை வீத பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது முதல் தற்போது வரையில் இலங்கை தற்கொலைகளைக் கட்டுப்படுத்துவதில் பாரிய முன்னேற்றத்தை தொட்டு உள்ளது. ஆனால் 1995இல் இலங்கை தற்கொலை வீதத்தின் உச்சத்தை தொட்டு இருந்தது.
1990இல் உலகில் அதன் மக்கள் தொகைக்கு தற்கொலைகள் கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருந்தது. அப்போது இலங்கையில் 100,000 பேருக்கு 55 பேர்வரை தற்கொலை செய்யும் நிலையிருந்தது. அதற்கு அப்போது இலங்கை யுத்தத்தின் உச்சத்தில் இருந்தமை காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அமைதிப் பூமியான கிரீன்லாந்தில் 100,000 பேருக்கு 100 பேர் வரை தற்கொலை செய்துகொண்டனர். கிரீன் லாந்தின் ஒரு நாளில் 20 மணிநேரம் இருட்டாக இருக்கும் காலநிலை அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. ஆனால் அடுத்த கால் நூற்றாண்டு காலத்தில் இலங்கையும் கிரீன்லாந்தும் தற்கொலை தடுப்பு கொள்கைகளை அறிமுகப்படுத்தித் தற்கொலை வீதத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டன. 2017இல் கிரீன்லாந்தும் இலங்கையும் முறையே 50, 20 ஆக தங்கள் நாடுகளின் தற்கொலைகளைக் குறைத்துக்கொண்டன. இன்று இலங்கை உலக தற்கொலை நாடுகளின் பட்டியலில் 29வது இடத்தில் உள்ளது.
இலங்கையில் தமிழ் மாவட்டங்களில் தற்கொலைகளின் போக்கை அவதானிக்கும் எவரும் வடக்கில் குறிப்பாக வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்கள் தற்கொலை போக்கின் உச்சத்தை தொடுவதைக் காணலாம். (கீழுள்ள பட்டியல் தற்கொலை எண்ணிக்கை 100,000 பேருக்கு எத்தினைபேர் தற்கொலை செய்துள்ளனர் என்பதனைக் காட்டுகின்றது.) பொதுவாக வடமாகாணம் (விதிவிலக்கு மன்னார் மாவட்டம்) இயல்பாகவே தற்கொலை இயல்புடைய மாகாணமாக உள்ளது. தற்கொலைப் பதிவுகள் மேற்கொள்ளப்பட ஆரம்பிக்கப்பட்டது முதல் இற்றைவரை வடமாகாணம் தற்கொலைகளில் முன்னிலை வகிக்கின்றது.
இதற்கு யுத்தமும் ஒரு காரணமாக இருந்த போதும் அது முழுமுதற்காரணமல்ல என ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. பொதுவாகவே தற்கொலைகள் சனத்தொகை அடர்த்தி குறைந்த கிராமப்புறங்களில் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. இலங்கையில் சனத்தொகை அடர்த்தி மிகக் குறைந்த 5 மாவட்டங்களில் நான்கு மாவட்டங்கள் வடமாகாணத்தில் உள்ளன. கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார். தென்னிலங்கையிலும் ஒப்பீட்டளவில் சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசங்களில் தற்கொலை வீதம் அதிகம் காணப்படுகின்றது.
இலங்கையில் தற்கொலை வீதமானது இனங்களிடையே வேறுபடுகின்றதா என்பதற்கு வலுவான ஆய்வுகள் செய்யப்படவில்லை. மேலும் யுத்தத்தைக் காட்டிலும் சனத்தொகை அடர்த்தி தற்கொலையில் கூடிய செல்வாக்கைச் செலுத்துகின்றது. சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருப்பதும் வறுமை தனிமை வேலையின்மை போன்றன அப்பகுதிகளின் பொது இயல்பாக இருப்பதும் இங்கு தற்கொலைகள் அதிகரிப்பிற்கு காரணமாக உள்ளன.
தற்கொலையைத் தூண்டும் தனிமை:
தற்கொலைக்கு முக்கிய காரணிகளில் தனிமையும் ஒன்று. கிராமப்புறங்களில் இதுவொரு ஊக்கியாக அமைகின்றது. வெறுமைக்கும் விரக்திக்கும் அவர்களை இட்டுச்செல்கின்றது. தனிமையில் இருக்கின்ற போது சனநடமாட்டம் அற்ற பகுதிகளிலேயே தற்கொலைகள் நடைபெறுகின்றன. கிராமப்புறங்களின் சூழல் தற்கொலைக்கு வாய்ப்பாகின்றது.
இலங்கையில் தற்கொலை முறைகள்:
இலங்கையில் 1990களில் உச்சத்தை தொட்டிருந்த தற்கொலைகள் பெரும்பாலும் கிருமிநாசினி – நஞ்சருந்தி – விஷமருந்தி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைகளாகவே இருந்தன. சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் விவசாயத்தை தொழிலாகவும் கொண்டிருந்தனர். அதனால் கிருமிநாசினிகள் – விஷம் – நஞ்சு நினைத்ததும் கிடைக்கக் கூடியதாக இருந்தது.
தற்போது தற்கொலை சாதனமாக “தூக்கிடுவது”முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தற்கொலைக்கு இந்தப் பொருட்களின் நுகர்வை, பாவனையை, பரிமாற்றத்தைத் கட்டுப்படுத்தியதன் மூலம் இலங்கையில் சனத்தொகை அடர்த்தி குறைந்த விவசாய கிராமங்களில் தற்கொலை வீதம் சடுதியாக வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. இப்பொழுதெல்லாம் விசமருந்தி தற்கொலை செய்பவர்களின் வீதம் வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது தூக்கிட்டு கொள்வதே தற்கொலைக் கருவியாக உள்ளது.
தற்போது தற்கொலைச் சாதனமாக தூக்கிடுவது முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது. தூக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் கயிறு, சேலை, கட்டித் தொங்கப் பயன்படும் வளை என்பன நாளாந்த வாழ்வியலின் அம்சங்களாக இருப்பதால் அதனை கிடைக்காமல் செய்வது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. ஆனால் கயிறு போன்றவற்றை பெறுவதில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த முடியும். சட்டப்படி கூரைகள் இவ்வளவுஉயரமாக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் ஏற்படுத்தப்படலாம். இவற்றின் மூலம் இலகுவில் தூக்கிடுவதற்கானவாய்ப்புகளை இல்லாமல் செய்ய முடியும்.
தடுத்தல்:
முக்கியமாக தற்கொலைக்கான ஆபத்தான காரணியான தனிமையை வழங்கக் கூடாது. தற்கொலைக்கான இயல்புடையவர்கள் ஏற்கனவே தற்கொலை முயற்சியில் இறங்கியவர்கள் தனிமையில் இருப்பதை அனுமதிக்கக் கூடாது.
தற்கொலைகள் முற்றிலுமாக தடுக்கக் கூடியவை. அதனால் அதனைத் தடுப்பதற்கான முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதனைச் சாதிப்பதற்கு அனைத்துத் தரப்பினர் (சம்பந்தப்பட்டவர்கள், குடும்பம், சமூகம், அரசு) அனைவரும் ஒருமுகப்பட்டு செயற்பட வேண்டும்.
தற்கொலை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். தற்கொலைக்கான சாதனங்கள் கிருமிநாசினிகள், சுடுகருவிகள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் நுகர்வு, பாவனை, பரிமாற்றத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும். மனநலம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மனநலம் தொடர்பாக சமூகத்தில் உள்ள எதிர்மறையான எண்ணங்கள் களையப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர் மனம் திறந்து பேசுவதற்கான சமூகச் சூழல் உருவாக்கப்பட வேண்டும். ஊடகங்கள் தற்கொலைகளை உணரச்சியூட்டும் செய்திகளாக வெளியிடுவதற்கு மாறாக அறிவுபூர்வமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் செய்திகளாக வெளியிட வேண்டும்.
உளநலம் குறித்த தப்பெண்ணம்:
தற்கொலைகள் தொடர்பாக கிழக்கு இலங்கை பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் ஒருவர் தெரிவிக்கையில் வடக்கு கிழக்கில் மனநலம் பற்றிய தப்பெண்ணங்கள் தற்கொலைகளைத் தூண்டுவதாகத் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் விபரீதம் நிகழ்வதற்கு முன் உளநல உதவிகளைப் பெறுவதற்கு முன்வருவதில்லை என அவர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக உளநல சிகிச்சைக்கு முன்வந்து செல்வதில்லை. சம்பந்தப்பட்டவர்கள் தங்களுடைய வேறு நோய்களுக்கு சிகிச்சைக்கு வருகின்ற போதுதான், பொது மருத்துவர்கள் மற்றும் உடற்கூற்று மருத்துவர்கள் உளநல பிரச்சினைகளை இனம்கண்டு அவர்களை மனநல மருத்துவர்களிடம் காண்பிக்குமாறு அறிவுறுத்துகின்றனர். அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் கூட அடுத்த கட்டத்திற்கு செல்வதில்லை. அவர்கள் சமூகத்தின் எதிர்மறையான கருதுகோள் காரணமாக கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் வைப்பதுடன் நின்றுவிடுகின்றனர். அதனால் பாதிக்கப்பட்டவரின் உளநிலை மேலும் மோசமடையவே செய்கின்றது.
கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கையில் உளநல சிசிச்சையாளர்கள் இருக்கின்ற அளவிற்கு உளவியலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதாவது பொது உளநலப் பணியாளர்களின் போதாமை காணப்படுவதால் ஆரம்பத்திலேயே பொது உளநலப் பிரச்சினைகளை இனம்கண்டு அதனை மோசமடையாமல் தடுப்பதற்கான உளவியலாளர்கள் உருவாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
பிரித்தானியா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே உளநலம்பற்றிய தவறான எண்ணக் கருக்கள் இன்னமும் சமூகத்தில் காணப்படுகின்றது. அப்படி இருக்கயில் மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்கள் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இச்சூழலில் ‘ஜோதி’ என்ற இலவச உளவியல் ஆலோசணை அமைப்பு நண்பர் மு. கோபாலகிருஷ்ணந் என்பவரால், அவருடைய மகன் அகிலன் நினைவாக உருவாக்கப்பட்டு, தற்போது பத்தாண்டுகளுக்கு மேலாக இலவச உளவியல் ஆலோசனையை வழங்கி வருகின்றது.
பிரித்தானியாவில் 24 மணிநேர தற்கொலைத் தடுப்பு தொலைபேசிச் சேவையும் தற்கொலைத் தடுப்பு ஆலோசனைச் சேவையும் கூட உள்ளது. ஆனால் தமிழ் சமூகம் தன்னுடைய எதிர்மறையான எண்ணக்கருவை மாற்றிக் கொள்ளாதவரை இச்சேவைகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பில்லை.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் தனது மனைவியயையும் மகனையும் கொலை செய்தவர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். லண்டன் பிரன்பேர்ட்டில் உள்ள க்ளேபொன்ட் லேன் இல் இக்கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாரிஸில் ஐவர் படுகொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் இடம்பெற்று 72 மணி நேரத்தில் லண்டனில் இத்துயரம் நிகழ்ந்துள்ளது. கோவிட்-19 ற்குப் பிறகு லண்டனில் தமிழ் மக்கள் மத்தியில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
இரவு பொலிசார் பலாத்காரமாக சம்பவம் இடம்பெற்ற குடும்பத்தினரின் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்த போது நடுத்தர வயது மிக்க பெண்ணும் நடுத்தர வயதான ஆணும் மூன்று வயதேயான கைக் குழந்தையும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். மருத்துவப் பிரிவினர் அவர்களைக் காப்பாற்ற பல முயற்சிகளை எடுத்தனர். மருத்துவவண்டிகள் ஸ்தலத்துக்கு விரைந்து அனுப்பப்பட்டது. வான்வெளி மருத்துவ வாகனமும் தருவிக்கப்பட்டது. இவர்களைக் காப்பாற்ற எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பலனளிக்கவில்லை.
பொலிஸார் கொல்லப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் உறவானவர்கள் என்று தெரிவித்துள்ளனர். தேசம்நெற்கு கிடைக்கும் தகவலின் படி கணவர் சிவராஜ் தனது மனைவி காமேஸ்வரியயை யும் மூன்றே வயதான மகனையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனத் தெரியவருகின்றது. இவர்கள் வாழ்ந்த பகுதியியும் இவர்களின் மாடித்தொகுதியும் ஒரு வளம்மிக்க பகுதி. இவர்கள் அயலவர்களுடனும் மிக நல்ல உறவைப் பேணி வந்துள்ளனர். எப்போதும் குடும்பமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பவர்கள் என்று அயலவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தம்பதிகள் மலேசியத் தமிழ் குடும்பத்தினர் எனவும் தெரிய வருகின்றது.
அதிகாலை நான்கு மணியளவில் அவர்களுடைய உடல்கள் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.