புலம்பெயர் வாழ்வியல்

புலம்பெயர் வாழ்வியல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்களுடைய வாழ்வியல், சமூக, அரசியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

பிரித்தானிய தொழிற்கட்சியின் புதிய தலைவர். எட்வேர்ட் சாமுவேல் மிலிபாண்ட். : ரதிவர்மன்

Ed_Milibandவைகாசி மாதம் நடந்த தேர்தலில் தொழிற்கட்சி பதவியிழந்தது. அவர்களின் தோல்வி, 1918ம் ஆண்டுக்குப்பின் தொழிற்கட்சிக்குக் கிடைத்த படுதோல்வியாகக் கருதப்பட்டது. பெரும்பாலான பிரித்தானிய மக்களின் எதிர்பார்ப்பு, எட்வேர்ட்டின் தமயனான டேவிட் மிலிபாண்ட் தொழிற்கட்சியின் தலைவராக வருவார் என்பதாகும். டேவிட் மிலிபாண்ட், பிறவுன் அரசாங்கத்தில் வெளிநாட்டுத்துறை அமைச்சராகவிருந்தவர். ரோனி பிளேயரின் வாரிசாகக் கருதப்பட்டவர், ரோனி பிளேயரின் வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்படிப்பவர், ரோனி பிளேயர், பிரித்தானிய மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டு ஈராக்குக்குப் படையை அனுப்பியவர். இதனால் ஆயிரக்கணக்கான தொழிற்கட்சி அங்கத்தவர்கள் கட்சியை விட்டு வெளியேறினார்கள்.

ரோனி பிளேயர், ஈராக் நாட்டுக்குப் படை அனுப்பியதைச் சரி என்று இன்னும் வாதாடுபவர். இன்னொரு நாட்டுக்குப் படை அனுப்புவது பற்றிப் பேசும்போது ‘மனித உரிமைகளை எந்த அரசு மீறுகிறதோ அந்நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எங்களுக்குத் தார்மீக உரிமையுண்டு’ என்று சொன்னவர்.

ஆதனால் புலிகளின் ஆதரவாளர்கள் அவரின் மூலம் இலங்கைக்குத் தலையிடி கொடுத்தார்கள். பிரபாகரனைக் காப்பாற்ற டேவிட் மிலிபாண்டை 2009ம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கைக்கு அனுப்பினார்கள்.

ரோனி பிளேயரின்’ மனித உரிமைகளை மீறும் நாடுகளைக் கண்டிக்க (ஆக்கிரமிக்க?) பிரித்தானியாவுக்குத் தார்மீகக் கடமையிருக்கிறது என்பதைப் பாவித்தும், இலங்கையின் பழைய காலனித்துவ சக்தியென்ற  முறையில் பிரித்தானியா இலங்கையிற் தலையிட வேண்டும் என்று புலிகள் எதிர்பார்த்தார்கள். ரோனி பிளேயரின் வாரிசான டேவிட் மிலிபாண்டின் மூலம் வெளிநாட்டுப் படையொன்றை அனுப்ப எடுத்த புலி ஆதரவாளர்களின் அத்தனை போராட்டங்களும் பிரித்தானிய பாராளுமன்றத்துக்கு முன் 73 நாட்கள் நடந்த சோகமான நாடகமாக முடிந்தது. ( டேவிட் மிலிபான்ட் பற்றிய முன்னைய பதிவு: ”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன் )

அதன்பின், இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களைக் காரணம் காட்டி, இலங்கை அரசைக் கூண்டில் நிறுத்தப் புலி ஆதரவாளர்கள், அமெரிக்காவில் டேவிட்டின் அபிமானத்தைப் பெற்றவரான ஹிலாறி கிலிண்டன் தொடக்கம், பல செனேட்டர்களையும் அணுகினார்கள். இந்தியாவும் சீனாவும் இந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டுத்தடுத்தார்கள்.

David Milliband Meets London Tamilsதொழிற்கட்சியின் தலைவர் கோர்டன் பிறவுன், 2010ம் ஆண்டு வைகாசி மாதம்  தனது பதவியை இராஜினாமா செய்ததும், டேவிட் மிலிபாண்ட் அந்தத் தலைமைக்குத் தன் பெயரைக் கொடுத்ததும் புலிகளின் ஆதரவாளர்களுக்குப் புத்துயிரைக் கொடுத்தது. டேவிட் மிலிபாண்டைத் தேர்தலில் வெற்றி காண ‘தொழிற்கட்சிக்கான தமிழர்கள்’ (Tamils for Labour) என்ற பெயரில் கூட்டத்தையும் வைத்தார்கள். தேர்தலுக்கு உதவப் பணம் சேர்த்தார்கள். ( ஏழைத் தமிழரின் கண்ணீரில் உல்லாசப் படகோட்டும் புலம்பெயர் தமிழர்கள். : ரதிவர்மன் )

ஆனால்  பிரித்தானியாவின் பிரமாண்டமான தொழிற் சங்கங்களான யுனைட், யூனிசன் போன்றவர்களின் ஆதரவால் எட்வேர்ட் மிலிபாண்ட் தொழிற்கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப் பட்டிருக்கிறார். அன்னிய நாடுகள் பற்றிப் பேசும்போது, ஈராக் நாட்டுக்குப் போர்ப்படைகளை அனுப்பியது சரியான விடயமல்ல என்று எட் மிலிபாண்ட் சொல்லியிருக்கிறார்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்ட நாற்பது வயதான (24.12.1969) எட்வேர்ட்டின் தந்தை தாயார் இரண்டாம் உலகப்போர்க்கால கட்டத்தில் ஹிட்லரின் கொடுமையிலிருந்து தப்பி ஓடிவந்த அகதிகள். இடதுசாரியான எட்வோட்டின் தந்தை முதுபெரும் இடதுசாரியான ரோனி பென்னுடன் வேலை செய்தவர்.

இன்று, இருபதாவது தொழிற்கட்சித் தலைவராக வந்திருக்கும் எட்வேர்ட் ஐந்து வருடங்களின் பின்னர் நடக்கவிருக்கும் பிரித்தானிய பொதுத் தேர்தலின்பின் வெற்றி பெறலாம். பிரித்தானியாவின் பிரதமராகவும் வரலாம். ஆனால் பிரித்தானியாவிலுள்ள பொருளாதாரப் பிரச்சினை, குடிவரவுப்பிரச்சினை, குற்றங்களைத் தடுக்கும் சட்ட திட்டங்கள்பற்றிய தெளிவான கண்ணோட்டங்கள் சரிவர உணர்ந்து மக்களின் ஆதரவைப் பெறாவிட்டால் இந்த இளைஞரின் எதிர்காலம் கேள்விக்குறியாகவிருக்கும்.

ஓக்ஸ்போர்ட், லண்டன் கொலிஜ் ஒவ் எக்கொனமி போன்றவற்றில் கல்விகற்ற எட்வோர்ட் அமெரிக்காவில் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருந்தவர்.

Miliband_Brothersபழைய பிரதமர் ரோனி பிளேயரை எதிர்க்கும் கூட்டத்தால் தலைவராக்கப் பட்டிருக்கிறார். அன்னிய நாடுகளுடன் மோத வேண்டாம் என்று குரல்கொடுப்பவர்களின் ஆதரவு எட்வேர்ட்டுக்கு இருக்கிறது.

ஆனாலும். பழையபடி புலி ஆதரவாளர்கள் இவரை முற்றுகை போடுவார்கள், தூக்கிப்பிடிப்பார்கள் கூட்டம் போடுவார்கள்.ஆனாலும்  இவர் எதிர்க்கட்சித்தலைவராக இருக்கும்போது இலங்கையின் அரசியலில் பெரிதாகத் தலையிடமுடியாது.

இன்று இருக்கும் பிரித்தானிய கூட்டாட்சியின் வெளிவிவகார அமைச்சராகவிருக்கும் லியாம் பொக்ஸ், இலங்கையின் அரசியற் தலைமையுடன் பரவாயில்லாத உறவைப் பேணுகிறார். இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு இருக்கும்வரை மேற்கத்திய வல்லரசுகளால் இலங்கையை ஒன்றும் செய்ய முடியாது என்பது பலருக்கும் தெரியும்.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் முன்னொரு காலத்தில் இருந்ததுபோல், நெருக்கமான அரசியல் உறவுகள் இன்று கிடையாது. பழைய காலனித்துவ சக்தியாக பிரித்தானியா இலங்கைக்கு கொடுக்கும் உதவிகள், இராணுவப் பயிற்சி, சில தொழில் நுட்ப உதவிகளுடன் முடிகிறது. ஆனால், இன்று இலங்கையின்  பெரும்பாலான இராணுவப் பயிற்சிகள், இந்தியா, பாகிஸ்தான், சீனா, பங்களதேஷ் போன்ற நாடுகளில் நடக்கிறது.

இலங்கையின் மிகப்பெரிய வியாபார உறவுகள், இந்தியா, சீனா, ஈரான், ஈராக், மத்திய தரைக்கடல் நாடுகளுடன் விரிகிறது என்பதால் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் தன்மை பிரித்தானியாவுக்குக் கிடையாது. ஆனால் தமிழர்களின் வாக்குகளுக்காகப் பிரித்தானியா இலங்கையுடன் முட்டிக்கொள்ளலாம். ஆனால் அதனால் புலி ஆதரவாளர்களுக்கு வரும் பிரயோசனங்கள் மிகக்குறைவாகும்.

புலி ஆதரவாளர்கள் நெருங்கும் தலைவர்கள் துரதிர்ஷ்ட வசமாக நொருங்கித் தள்ளுகிறார்கள். (பிரபாகரன், சரத் பொன்சேகா, ரணில் அன் கோ, வைகோ, ஜெயலலிதா, டேவிட் மிலிபாண்ட்) என்பது நடைமுறை சாத்தியமாகவிருப்பதால், புலி ஆதரவாளர்கள் லண்டன் மேயர் தேர்தலில் போட்டியிடும் கென் லிவிங்ஸ்டனைத் தூக்கிக்கொண்டாடி தோல்வியைக் கொடுக்காவிட்டால் நல்லது.

”எமது கழகத்தில் நிதிநெருக்கடி உள்ளது. ஆனால் எமது முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் இதனைப் பெரிது படுத்துகின்றனர்!!!” வசந்தன் கிருஸ்ணன் (பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம்)

BTSL_Logoலண்டனில் தமிழ் விளையாட்டுக் கழகங்கள் லாபத்துடன் இயங்கி வருகின்றன. அப்படி இருக்கையில் மிகவும் வெறிறிகரமாகச் செயற்பட்ட பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் (British Tamils Spoerts League – BTSL) தற்போது நிதி நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளதாக அக்கழகத்தில் அங்கம் வகிக்கும் விளையாட்டுக் கழகங்கள் தெரிவிக்கின்றன. பந்துகள் வாங்குவதும் நடுவருக்கு கட்டணம் செலுத்துவதுமே பிரச்சினையானதாக மாறியுள்ளது எனவும் தெரியவருகின்றது.

பிரித்தானிய விளையாட்டுக் கழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அதன் பொறுப்பாளர் வசந்தன் கிருஸ்ணனை பிரித்தானியாவின் மிச்சம் பகுதியில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் சந்தித்து உரையாடினோம். அவர்களுடைய விளையாட்டுக்குழுவின் சந்திப்பின் பின்னதாக எமது சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலம்சென்ற போராளி கேணல் கிட்டுவின் பெரிய படத்துடன் இருந்த அந்தச் சந்திப்பு அறையிலேயே இச்சந்திப்பு நடைபெற்றது. தேசம்நெற் சார்பில் நானும் நண்பர் த சோதிலிங்கமும் தமிழர் விளையாட்டுக் கழகம் சார்பில் அதன் பொறுப்பாளர் வசந்தன் கிருஸ்ணன் வணங்கா மண் கப்பலில் பயணம் செய்த ஊடகவியலாளர் உதயணன் மற்றும் இரு உறுப்பினர்களும் இருந்தனர். பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் பொறுப்பாளர் என்ற வகையில் வசந்தன் கிருஸ்ணனின் கருத்துக்கள் மட்டுமே இங்கு பதிவு செய்யப்படுகிறது.

எமது கேள்விகள் பெரும்பாலும் பிரித்தானிய விளையாட்டுக் கழகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், அதன் அதன் நிதி நிர்வாகம், பிரித்ததானிய விளையாட்டுக் கழகத்தின் எதிர்காலம் பற்றியதாகவே இருந்தது.

இவற்றுக்குப் பதிலளித்த வசந்தன் கிருஸ்ணன் விளையாட்டுக் கழகம் சிறிய அளவில் நிதிநெருக்கடியை சந்தித்து உள்ளதாகவும் ஆனால் அது தங்கள் முன்னேற்றத்தை விரும்பாதவர்களால் பெரிதுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

‘பந்துகள் வாங்குவதற்கு பணம் வழங்கப்படுவதில்லை என்பதெல்லாம் உண்மையல்ல’ எனக் குறிப்பிட்ட அவர் ‘கிரிக்கட் விளையாட்டுக்கள் லண்டனின் பல்வேறு பாகங்களிலும் இடம்பெறுவதால் வாங்கிய பந்துகளை குறித்த நேரத்தில் விநியோகிக்க முடிவதில்லை’ எனத் தெரிவித்தார். இதற்கான மாற்று வழியாக விளையாட்டுக் கழகங்களே பந்துகளை வாங்கவும் நடுவருக்கான பணத்தைச் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார். ‘அதற்கான செலவை தாங்கள் அவர்களுடைய கட்டணத்தில் இருந்து குறைத்துக் கொள்வோம்’ எனவும் வசந்தன் சுட்டிக்காட்டினார்.

‘விளையாட்டுக் கழகம் கிரிக்கட் போட்டிகளை ஆரம்பித்த காலங்களில் மிகக் குறைந்த கட்டணத்தையே வசூலித்தது’ என்றும் அதனால் ஆரம்ப வருடங்களில் ஏற்பட்ட நட்டமே இப்போது நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாகவும் வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார்.

தமிழர் விளையாட்டுக் கழகம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக 10 வருடங்களுக்கு மேலாக யாழ் இந்தக்கல்லூரிப் பழைய மாணவர் எஸ் ஸ்கந்தமூர்த்தி என்பவர் கிரிகட் போட்டிகளை ஆண்டு தோறும் நடாத்தி வந்தார். இவருடைய லீக்கில் இருந்த விளையாட்டுக் கழகங்களைக் கவருவதற்காகவே பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் மிகக் குறைந்த கட்டணத்தை அறவிட்டது. அதில் ஓரளவு வெற்றியும் கண்டது. ஆனால் அதுவே இப்போதைய நெருக்கடிக்கு காரணமாகவும் அமைந்துள்ளது என வசந்தன் கிருஸ்ணன் தெரிவிக்கின்றார்.

‘ஸ்கந்தமூர்த்தி உருவாக்கிய விளையாட்டுக் கழகத்தில் இருந்து ஆரம்பத்திலேயே வெளியேறி தங்களுடன் இணைந்தவர்கள்  அதிருப்தியடைந்து வெளியேறியவர்கள். அவர்கள் தாயகப் பற்றுடையவர்கள்’ எனக் கூறும் வசந்தன் கிருஸ்ணன் ‘இறுதியில் வெளியேறி தங்களுடன் இணைந்தவர்கள் வேறு வழியின்றியே தங்களுடன் இணைந்தனர்’ எனக் கூறினார். ‘பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்துடன் பெரும்பாலான கழகங்கள் இணைந்த நிலையில் ஸ்கந்தமூர்த்தியினால் விளையாட்டுப் போட்டிகளை நடாத்த முடியாது போனமையினால் ஏனைய கழகங்கள் விரும்பமின்றி விளையாட்டுப் போட்டியில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே வந்து இணைந்தனர்’ என்றும் வசந்தன் கிருஸ்ணன் விபரித்தார். இவ்வாறான விளையாட்டுக் கழகங்களே தற்போது சிறிய விவகாரங்களையும் பெரிதுபடுத்துவதாக அவர் தெரிவித்தார்.

பிரித்தானிய விளையாட்டுக் கழகம் தனது கணக்கு விபரங்களை ஏன் இதுவரை வெளியிடவில்லை எனக் கேட்கப்பட்ட போது, ‘கழகங்கள் விரும்பும்பட்சத்தில் அதனைப் பார்வையிட முடியும்’ எனத் தெரிவித்தார் வசந்தன் கிருஸ்ணன். ‘அண்மையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது அதில் கணக்கு விபரங்களை வெளியிட்டோம். ஆனால் பல கழகங்கள் அதில் சமூகமளிக்கவில்லை’ எனவும் வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார். உங்கள் விளையாட்டுக் கழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் உறுப்புரிமைக் கட்டணம் செலுத்தியே உறுப்பினராக உள்ளனர். ஆகவே நீங்கள் கணக்கு விபரத்தை அவர்களுக்கு மின் அஞ்சலூடாக அனுப்ப முடியும் அல்லது உங்கள் இணையத்திலேயே பிரசுரிக்க முடியுமே எனக் கேட்ட போதும் ‘நாங்கள் கணக்கு வழக்கை காட்டத தயாராக உள்ளோம். விரும்பியவர்கள் எங்களை அணுகலாம்’ எனப் பதில் தரப்பட்டது.

தங்களுக்கு உள்ள நிதிநெருக்கடிகளை தாங்கள் ஓரளவு சமாளித்து வருவதுடன் கழகங்களிடம் பெற்ற கடன்களையும் மீளச் செலுத்தி வருவதாக வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார். இன்னும் சில ஆயிரம் பவுண்களே கடன்கள் இருப்பதாகத் தெரிவித்த வசந்தன் கிருஸ்ணன் இன்றுள்ள அரசியல் சூழலால் பல்வேறு தரப்பினரும் இந்த விளையாட்டுக் கழகத்தில் ஒரு கண் வைத்துள்ளதாகவும் இதனால், தான் உள்முரண்பாடுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளானதாகவும் கூறினார்.

எவ்வாறான நெருக்கடிகள் சிக்கல்கள் தோண்றிய போதும் பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் தனது பயணத்தை உறுதியுடன் தொடரும் என்றும் அவர் அழுத்தமாகத் தெரிவித்தார். தற்போதுள்ள நெருக்கடியில் இருந்து பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் மேவி வரும் என்ற நம்பிக்கையுடன் அவர் எமக்கு விடைதந்தார்.

._._._._._.

லண்டன் குரலில் வெளியான செய்தி:

100,000 பவுண் நிதிப்புரள்வு – 45,000 பவுண் லாபம் ஈட்டக் கூடிய அமைப்பு! 5 வருடங்களாக கணக்கு வழக்கு இல்லை! பிரித்தானிய தமிழர் விளையாட்டு கழகம் !

பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்தின் எதிர் காலம் கேள்விக் குறியாகி உள்ளது. ஆண்டுக்கு 50 000 பவுண்களை வரை லாபமீட்டக் கூடிய பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் கணக்கு வழக்குகளில் நட்டம் காட்டப்படுவதாக குற்றம்சாட்டப்படுகின்றது.

துடுப்பாட்ட விளையாட்டுக்கான பந்துகள் வழங்கப்படவில்லை, நடுவர்களுக்கு திகதியிடப்படாமல் வழங்கப்பட்ட காசோலைகள் திரும்புகின்றன, சில போட்டிகளுக்கு மைதானமே ஏற்பாடு செய்யப்படவில்லை. சில இடங்களில் பிரித்தானிய தமிழ் விளையாட்டு கழகத்திற்கு மைதானங்களை வழங்க உரிமை நிறுவனங்கள் மறுக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் தாயகத்தில் இருந்து வந்த வசந்தன் கிருஸ்ணன் என்பவர் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இவர் மட்டுமே பிரித்தானிய தமிழ் விளையாட்டு கழகத்தின் அறியப்பட்ட பொறுப்புடைய ஒருவராக உள்ளார். இவரைத்தவிர அந்த அமைப்பில் வேறு எவரையும் 1200 விளையாட்டு வீரர்களும் 60 விளையாட்டு கழகங்களும் அறிந்திருக்கவில்லை.

ஆனால் இந்த வசந்தன் என்ற பொறுப்பாளரின் பின்னால் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நிதி சேகரிப்பு விடயங்களுடனும் தொடர்புடைய தனம் என்பவர் இயங்குவதாக லண்டன்குரலுக்குத் தெரியவருகிறது.

100 000 பவுண் நிதி வருமானத்தையும்  45 000 செலவு தவிர்ந்த லாபத்தையும் பெறக்கூடிய பிரித்தானிய தமிழ் விளையாட்டக் கழகம் நட்டத்தில் உள்ளதாகக் கூறி விளையாட்டுக் கழகங்களின் பல்லாயிரக் கணக்கான பணத்தை காணாமலாக்கி உள்ளது.

1200க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களிடம் இருந்து ஆண்டுக்கு 100 000 பவுண்கள் வரை நிதியைப் பெற்றுக் கொள்கின்ற பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் (British Tamil Sports League) தற்போது நிதிப் பிரச்சினையில் சிக்கி உள்ளது. தங்களுடைய பொறுப்பு ”to develop such a sports organization and leagues set-up where sports and sportsmanship is truly developed and sustained at the same time”, என்று தங்கள் இணையத்தில் தெரிவித்துள்ள அமைப்பின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

அண்மைக் காலமாக பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் தன்னுடைய உறுப்பினர்களுக்கு வழங்கிய உறுதிமொழியில் இருந்தும் கடமையில் இருந்தும் தவறியுள்ளது. விளையாட்டு வீரர்களிடம் இருந்தும் விளையாட்டுக் கழகங்களிடம் இருந்தும் குறித்த காலத்தில் நிதியை வசூலித்த பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் தான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத்தவறியுள்ளது.

வாரம் தோறும் விளையாட்டுக் குழுக்களிடையே நடைபெறும் போட்டிகளை ஒழுங்கமைப்பதில் பல தவறுகள் விடப்பட்டு உள்ளது. கிரிக்கட் விளையாட்டில் தேவையான பந்துகள் வழங்கப்படவில்லை. நடுவர்களுக்கு வழங்க வேண்டிய கட்டணம் வழங்கப்படாததால் நடுவர்கள் கடமைக்கு வரத் தவறியுள்ளனர். சில போட்டிகளுக்கு மைதானமே பதிவு செய்யப்படாத சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக விளையாட்டுக் கழகங்கள் விளையாட்டு வீரர்கள் வெறுப்படைந்து போயுள்ளனர்.

பிரித்தானிய தமிழ் விளையாட்டு கழகத்தில் 40 துடுப்பாட்ட கழகங்களும் 20 உதைபந்தாட்டக் கழகங்களுமாக 60 விளையாட்டுக் கழகங்கள் 1200 விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.
அவை ஒவ்வொன்றும் ஆண்டுக்கு பின்வரும் கட்டணங்களைச் செலுத்துகின்றனர்.
விளையாட்டு வீரரின் உறுப்புரிமைக் கட்டணம் 10.00 பவுண்
விளையாட்டுக் கழகத்தின் நுழைவுக் கட்டணம் 605.00 பவுண்
Twenty – 20 துடுப்பாட்ட போட்டிகளுக்கான நுழைவுக்கட்டனம் 170.00 பவுண்
18 துடுப்பாட்ட போட்டிகளுக்கான அம்பயருக்கான கட்டணம் 360.00 பவுண் (ஒரு போட்டிக்கு ஒரு கழகம் 20 பவுண் செலுத்த வேண்டும் 18 போட்டிகளுக்கு)
18 துடுப்பாட்ட போட்டிகளுக்கான 18 பந்துகளுக்கான கட்டணம் 180.00 பவுண் (ஒரு பந்து 10.00 பவுண்)

இவ்வாறு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு இவற்றுடன் மைதானங்களுக்கான கட்டணமும் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு விளையாட்டுக் கழகமும் 1500 பவுண்கள் வரை கட்டணமாகச் செலுத்தி இருந்தனர்.

கட்டணங்களை ஆர்வமுடன் வசூலித்தவர்கள் அதற்கான சேவையை வழங்கவில்லை. இது பற்றி அறிய பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் பொறுப்பாளர் வசந்தன் கிருஸ்ணனுடன் தொடர்புகொள் முயற்சித்த போதும் அது வெற்றியளிக்கவில்லை. (லண்டன் குரல் பதிப்பிற்குச் சென்ற பின் வசந்தன் கிருஸ்ணனுடன் தொடர்புகொள்ள முடிந்தது. அதன் பின்னர் அவர்களுடைய அலுவலகம் சென்று வசந்தன் கிருஸ்ணனைச் சந்தித்தோம். அதன் விபரம் மேலுள்ளது.)

பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் பொறுப்பற்ற செயல் விளையாட்டு வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து வசந்தன் விளையாட்டுக் கழகங்களுக்கு யூலை 10, 2010ல் ஒரு மின்அஞ்சலை அனுப்பி இருந்தார். இம்மின் அஞ்சல் லண்டன் குரலின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அந்த மின்அஞ்சலில் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ”As you all aware, we have come across with some logistical problems in our 5th year Cricket league in 2010”, என வசந்தன் குறிப்பிட்டு உள்ளார். அதற்கு தீர்வாக விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்களில் இருந்து
1.    Organisation committee
2.    Team selecting committee
3.    Decision making committee
ஆகிய மூன்று குழுக்களை உருவாக்குவதாகக் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் இவ்வாறான குழுக்கள் இதுவரை அமைக்கப்பட்டது பற்றி தங்களுக்குத் தெரியாது என லண்டன் குரல் தொடர்புகொண்ட விளையாட்டு கழகங்கள் தெரிவித்தன.

அம்பயர் (நடுவர்)களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் வங்கிக் கணக்கில் பணம் இன்றித் திரும்பின. அதனால் நடுவர்கள் வராமல் இருப்பது ஒரு பிரச்சினையாக இருந்தது. பந்துகளும் வழங்கப்படுவதில்லை. அதனால் எதிர்காலத்தில் நடுவருக்கான கொடுப்பனவையும் பந்துகளை வாங்கும் பொறுப்பையும் கழகங்களுக்கே விட்டுவிடுவதாக வசந்தன் தன் மின் அஞ்சலில் குறிப்பிட்டு உள்ளார். கடந்த கால போட்டிகளில் நடுவருக்கான பணத்தைக் கட்டியும் நடுவர் வராது இருந்திருந்தால் அத்தொகையை அடுத்த ஆண்டு கண்டனத்தில் கழிப்பதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கு முன்னர் இவ்வாண்டு நடுப்பகுதியில்  விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு நிதி நெருக்கடி இருப்பதாகவும் அதற்காக விளையாட்டுக் கழகங்கள் 500 முதல் 1500 பவுண் வரை முற்பணமாகச் செலுத்தினால் யூன் 20 2010 ரூனமன்ற் முடிவில் அப்பணம் கையளிக்கப்படுவதுடன் அடுத்த ஆண்டு அவர்கள் கட்ட வேண்டிய லீக் கட்டணத்தில் அவர்கள் செலுத்திய தொகை கழிக்கப்படும் எனவும் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் சார்பில் வசந்தன் கேட்டு இருந்தார்.  இதற்கு சில விளையாட்டுக் கழகங்கள் செவிசாய்த்து பணத்தைச் செலுத்தியும் இருந்தன.

இது தொடர்பாக மகாஜநாக் கல்லூரியின் விளையாட்டுக் கழகத்துடன் தொடர்பு கொண்ட போது தாங்கள் கழகமாக பணம் செலுத்தவில்லை என்றும் தங்களுடைய இரு விளையாட்டு வீரர்கள் ஆளுக்கு 750 பவுண் வழங்கி 1500 பவுண்களை பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்திற்கு செலுத்தியதாக புவனேந்திரன் தெரிவித்தார். வேறு சில கழகங்களும் இவ்வாறு முற்பணத்தைச் செலுத்தி இருந்தனர். ஆனால் யூன் 20 ரூனமன்ற் நிறைவு பெற்று இரு மாதங்கள் ஓடிய நிலையிலும் இப்பணம் திருப்பி வழங்கப்படவில்லை. அதுவே வசந்தன் மின் அஞ்சல் அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. இருந்தும் வசந்தன் இதனை நடுவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற ஒரு 20 பவுண் பிரச்சினையாக உண்மையை மறைத்துள்ளார்.

வசந்தனுடைய மின் அஞ்சலுக்கு கடுமையான பதில்களை சில விளையாட்டு கழகங்கள் அனுப்பி வைத்தள்ளன. அவற்றில் சில லண்டன்குரலின் கவனத்திற்கும் அனுப்பப்பட்டு இருந்தது. யூலை 12 2010ல் கோட்டைமுனை விளையாட்டுக் கழகம் சார்பாக கார்த்திக் இவ்வாறு எழுதி இருந்தார். ”Hi Vasanthan, We are also in the same position, Just give us the money back and we have no intention of playing in your league for next year”.
 
இது பற்றி RLSSC விளையாட்டுக் கழகம் சார்பில் ரஞ்சன் எழுதிய மின் அஞ்சலில் ”Hi Vasanthan, Our club not accepting all this rubbish after five years. What happened to our money we already paid to you?” எனக் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் விளையாட்டுப் போட்டிகளை ஒழுங்கமைக்க லண்டனை தென்கிழக்கு, தென்மேற்கு வடகிழக்கு வடமேற்கு எனப் பிரித்து நால்வரை நியமித்துள்ளனர். அவர்கள் விபரம்
Southeast – Para (Lewshiam CC)
Southwest – Ragulan (Bloomfield CC)
Northeast – Sugumar (Five Star CC)
Northwest – Gobi (Tamil Union CC)

இவர்களில் லூசியம் விளையாட்டுக் கழகம் பரா, ஃபைவ் ஸ்ரார் விளையாட்டு கழகம் சுகுமார் ஆகியோருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. இவர்கள் பிரித்தானிய தமிழர் விளையாட்டு கழகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை உறுதிப்படுத்தினர். தங்கள் பகுதிகளில் உள்ள கழகங்கள் அதிருப்தி அடைந்துள்ளதையும் தெரியப்படுத்தினர்.

கடந்த ஐந்த ஆண்டுகளில் எப்போதாவது கணக்கு விபரங்கள் விளையாட்டு கழகங்களுக்கு காட்டப்பட்டதா எனக் கேட்ட போது பராவும் சுகுமாரும் இல்லையென்றே பதிலளித்தனர்.
பரா தனது பதிலில் ‘முதல் மூன்று வருடமும் பிரச்சினைகள் எதுவும் எழவில்லை. இப்போது தான் பிரச்சினைகள் எழுந்தள்ளது’ என்றார். அவர் மேலும் கூறுகையில் ‘எனக்கும் இந்த பண நிர்வாக விடயங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஒரு உதவியாக போட்டிகளை ஒழுங்குபடுத்தக் கேட்டார்கள் செய்கிறேன்’ என்றார். ‘இந்த வருடமே பணக் கஸ்டம் என்றால் ஏற்கனவே சில கிளப்புகளிடம் பணம் பெற்றுள்ளதால் அடுத்த வருஸம் எப்படி இருக்குமோ தெரியாது?’ என்றும் பரா சந்தேகத்தை வெளியிட்டார்.

சுகுமார் பதிலளிக்கையில் ‘அப்போது பணம் ஊருக்கு அனுப்பப்படுவதாகச் சொன்னார்கள். நாங்களும் யாரும் கணக்கு கேட்க விரும்புவதில்லை. இப்போது அங்கு பணம் அனுப்ப இவர்களுக்கு வழியில்லை. என்ன நடக்கிறது என்று கேட்கிறார்கள். பாஸ்ட் இஸ் பாஸ். இனி சரியாகச் செய்ய வேணும் என்று கேட்கிறார்கள். சில கிளப்புகள் கடுமையாக இருக்கிறார்கள். தாங்கள் அடுத்த வருடம் விளையாட வர மாட்டார்கள் என்கிறார்கள்’ என்றார். ‘இந்த வருசம் கிளப்புகள் பணம் செலுத்திவிட்டினம். அடுத்த வருஸம் அவர்கள் குறைந்த தொகையே கட்ட வேண்டி இருக்கும். அடுத்த வருஸம் எப்படிச் சமாளிப்பார்கள் என்று தெரியாது’ என சுகுமாரும் பரா போன்றே சந்தேகம் எழுப்பினார்.

விளையாட்டுப் போட்டிக்கான செலவுகள் அனைத்தும் 60 விளையாட்டுக் கழகங்களிடம் இருந்தும் பெறும் வேறுவேறு கட்டணங்களில் இருந்து பெறப்படுகிறது. மேலும் விளையாட்டுவிழா நுழைவுக் கட்டணம் செவனியர் மூலம் திரட்டப்படும் விளம்பரப் பணம், ஸ்பொன்சேர்ஸ் என்று பன்முகப்பட்ட வருவாய்கள் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு உண்டு. இவற்றைவிடவும் விளையாட்டுக் கழகத்தின் நுழைவுக்கும் விளையாட்டு வீரர்களின் உறுப்புரிமைக்கும் பெறப்படும் கட்டணம் 750 பவுண் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு உரியது. அதாவது ஆண்டுக்கு 45000 பவுண் செலவு தவிர்ந்த பணம்.  இந்நிலையில் பிரித்தானிய விளையாட்டுக் கழகம் நிதிப் பிரச்சினைக்கு உள்ளானதற்கான காரணங்கள் மர்மமானதாகவே உள்ளது. அதற்கான காரணங்கள் தெரியாத நிலையிலேயே உறுப்புரிமை செலுத்திய விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.

லண்டனில் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு முன்னரேயே இதில் தேர்ச்சி பெற்ற அமைப்புகள் இருந்தன. கிழக்கு லண்டனில் ஸ்கந்தமூர்த்தி கிரிக்கட் கழகங்களை இணைத்து விளையாட்டுப் போட்டிகளை பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடாத்தி வந்தார்.

தாயக மக்களுக்கு உதவுகின்றோம் தமிழ் கழகங்களில் வேறு இனத்தவர்கள் அனுமதிக்கப்பட முடியாது என்ற விடயங்களை முன் வைத்து பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் விளையாட்டுக் கழகங்களை தன் பக்கம் வளைத்தப் போட்டது. அதன் பின்னர் தங்கள் விதிமுறைகளை தேவைக்கு ஏற்ப வளைத்தனர். தமிழ் கழகங்களில் வேறு இனத்தவர்கள் இருக்கலாம் ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் என மட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் தாய் அல்லது தந்தை தமிழராக இருக்க வேண்டும் என்ற செருகல்கள் அனைத்தும் புகுத்தப்பட்டது. இருந்தும் தாயக மக்களுக்கு சில உதவிகள் கிடைக்கும் என பல விடயங்களும் பொறுத்துக் கொள்ளப்பட்டது. இப்போது நிலைமை முற்றாக மாறி உள்ளது.

தமிழ் பாடசாலைகள் விளையாட்டுக் கழகம் (Tamil Schools Sports Association – TSSA) கடந்த 19 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. இது பற்றி அவ்வமைப்பின் தலைவர் ந கெங்காதரன் லண்டன்குரலுக்குத் தெரிவிக்கையில், ‘TSSA என்றுமே விளையாட்டு விழாக்களை போட்டிகளை நடாத்தி நட்டப்பட்டதில்லை’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவு அறிக்கை கழகங்களின் பார்வைக்கு இருக்கும். பெறப்பட்ட லாபத்தில் மூன்றில் இரு பங்கு போட்டிகளில் கலந்துகொண்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களுக்கு பிரித்து வழங்கப்படும். அதனை அவர்கள் தங்கள் பாடசாலை வளர்ச்சிக்குப் பயன்படுத்தவார்கள். மூன்றில் ஒரு பங்கு TSSA இன் வளர்ச்சிக்கு அதன் வைப்பிலிடப்படும்’ எனத் தெரிவித்தார்.

பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் போட்டிகளை நடாத்திய அதே காலப்பகுதியில் தனிப் பாடசாலையாக தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி தங்கள் 150 ஆண்டு விழாவைக் குறிக்கும் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விளையாட்டுப் போட்டிகளிலும் தாங்கள் சில ஆயிரம் பவுண்களை யாவது லாபமீட்டியதாக அக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். தங்கள் வரவு செலவுக் கணக்கு வரும்போது உண்மையான தொகை தெரியவரும் எனத் தெரிவித்த அவர், பாடசாலையின் 150வது விழா என்பதால் தாங்கள் செலவுகளை சற்று அதிகமாகவே மேற்கொண்டதாவும் கூறினார்.

லண்டன்குரலுக்கு கிடைக்கின்ற தகவல்களும் ஏனைய விளையாட்டுக் கழகங்களின் அனுபவங்களும் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தில் பாரதூரமான நிதி நிர்வாகச் சீர்கேடுகள் இடம்பெற்றிருப்பதையே காட்டி நிற்கின்றது.

குகநாதன் கைது – கடத்தலில் அருள் சகோதரர்களுடன் கைகோர்த்த தமிழ்தேசியம் – டான் ரிவி உரிமையாளர் குகநாதன் கடத்தல் – கைது விவகாரம் : த ஜெயபாலன்

குகநாதன் கைது – கடத்தல் விவகாரம் அரசியல் பின்னணியுடன் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது. தமிழகத்தில் உள்ள தமிழ் தேசியவாதிகளினது செல்வாக்குடன் எஸ் எஸ் குகநாதனை தடுத்து வைத்து அவரிடம் இருந்து பணம் பறிக்கப்பட்டு உள்ளது. இக்கைது கடத்தல் நாடகத்தில் வை கோ வினதும் நெடுமாறனினதும் நெருக்கமான சட்டத்தரணிகள் ஈடுபட்டு இருந்துள்ளனர். அருள் சகோதரர்களின் ஊரவரும் நண்பரும் பல்லாயிரம் ஈரோக்கள் காணமல் போய்விட்டது என்று கணக்குக் காட்டியவருமான கஸ்பாரும் இச்சம்பவத்தடன் தொடர்புபட்டிருந்ததாக எஸ் எஸ் குகநாதன் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

குகநாதனை விடுவிக்க 20000 பவுண்ட் (15 லட்சம் இந்திய ரூபாய்) வழங்கப்பட்டது. இலங்கையில் இருந்து உண்டியல் செய்யும் ஒரு வர்த்தகர் மூலம் அனுப்பப்பட்ட பெரும்பகுதி பணத்தை கடன்பட்டு இப்போது செலுத்தி வருவதாக குகநாதன் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

எஸ் எஸ் குகநாதன் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளிலும் பணப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டு இருந்த போதும் ‘அவரின் குடும்பத்தாரிடம் அவருடைய குறைந்தபட்ச தேவைகளை நிறைவேற்றவே நிதி இருந்ததில்லை’ என எஸ் எஸ் குகுகநாதனின் நண்பரும் அவருடைய விவகாரத்தை சுமூகமாக தீர்க்க முற்பட்ட ஒருவர் தெரிவித்து இருந்தார். எஸ் எஸ் குகநாதன் மீது பல்வேறு பணப் பரிமாறல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் அவர் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு பணம் புரட்டுகிறார் எனக் கூறப்பட்ட போதும் அவரிடம் பணப் புழக்கம் இருக்கவில்லையென குகநாதனை விடுவிக்க 500 பவுண்களை தனது பங்காக செலுத்திய நண்பர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

குகநாதனை விடுவிக்க செலுத்திய இத்தொகையை கட்டி முடிக்க சில ஆண்டுகள் ஆகலாம் என திருமதி குகநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். ஏற்கனவே ஏற்பட்ட இழப்புகளால் இருக்கும் கடன்சுமையை இது மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தனது வேதனையைத் தெரிவித்தார்.

குகநாதனை விடுவிப்பது தொடர்பாக புலம்பெயர் குழுவில் சென்ற சிலர் தமிழக முதல்வரின் மகள் கனிமொழி உடன் நெருக்கமானவர்கள் மூலம் முயற்சி செய்ததாகவும் தற்போது தெரியவருகிறது. ஆனால் குகநாதன் விவகாரத்திற்கு பின்னால் இருந்தவர்களின் பலத்தை இவர்களால் மேவ முடியாததால் இம்முயற்சி கைவிடப்பட்டது. அதனால் பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறுவதே பாதுகாப்பானது என இவர்கள் குகநாதனின் மனைவிக்கு தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் இவ்விவகாரம் இலங்கை அரசின் உயர்மட்டத்திற்கு  தெரியப்படுத்தப்பட்டதையடுத்து இலங்கை அரசு டெல்லியில் உள்ள தனது தூதராலயம் ஊடாக அழுத்தங்களை வழங்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் குகநாதன் தங்களிடம் இல்லையென்றே தமிழக பொலிஸில் இருந்து தகவல் வழங்கப்பட்டதாக தெரியவருகின்றது. அச்சமயத்தில் குகநாதனின் உயிருக்கு ஆபத்து நேர்ந்து இருக்கலாம் அல்லது உயிராபத்து நேரலாம் என்ற அச்சம் டெல்லி – கொழும்பு உயர் மட்டங்களில் இருந்துள்ளது.

2008 மார்ச் இறுதிப் பகுதியில் இலங்கைத் திரைப்பட இயக்குநர் துசார பீரிஸ் தமிழத்தில் உள்ள தமிழ் தேசியவாதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு பொலிஸாரின் தலையீட்டின் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை தெரிந்ததே.

எஸ் எஸ் குகநாதன் விவகாரத்திலும் ‘இலங்கை அரச ஆதரவாளர் ஒருவரைப் பிடித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியிலேயே அவர்கள் இருக்கின்றனர்’ எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. தனிப்பட்ட விடயத்தையும் அரசியலுடன் இணைத்து அதனை நியாயப்படுத்துவதற்கான காரணங்களையும் அருள் சகோதரர்கள் மேற்கொண்டு உள்ளனர்.

அவர்களின் உரையாடல்களில் ‘அரச உளவாளியைக் கைதுசெய்துள்ளோம் என்று ஒரு இணையத்தைத் திறந்து விட்டால் புலம்பெயர்ந்த தமிழர்கள் இதிலும் பார்க்க பல லட்சங்களைத் தருவார்கள்’ என்றெல்லாம் உரையாடப்பட்டு உள்ளதாக எஸ் எஸ் குகநாதன் தேசம்நெற்க்கு தெரிவித்தார். ’20 000 பவுண்களை வெஸ்ற்றன் யூனியன் ஊடாக அனுப்புகிறோம். இவனை விட வேண்டாம் என்றெல்லாம் தொலைபேசிகள் வந்தது’ என்றும் எஸ் எஸ் குகநாதன் தெரிவித்தார்.

‘அவர்களிடம் உள்ள விடியோவை அவர்கள் உண்மையானவர்கள் என்றால் வெட்டிக்கொத்தாமல் வெளியில் விட்டால் உண்மைகள் பெரும்பாலும் தானே வெளிவரும்’ என்று தெரிவித்த குகநாதன் தமிழக கொமிஸ்னர் அலுவலகத்திற்கு முன்னுள்ள ஹொட்டலில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ரூம் எடுத்து தங்கி இருந்ததாகவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக திருமதி குகநாதனின் ஒலிப்பதிவு ஒன்றை இனியொரு இணையத்தளம் வெளியிட்டு இருந்தது. இதன் ஊடக நியாயம் பற்றி தேசம்நெற் இல் கேள்வி எழுப்பி இருந்தோம். அதற்கு இனியொரு ஆசிரியர் சபாநாவலன் திருமதி குகநாதனின் அனுமதியுடனேயே அதனை வெளியிட்டதாகக் கூறியிருந்தார்.

ஆனால் அதனை திருமதி குகநாதன் முற்றாக மறுத்துள்ளார். தன்னிடம் இனியொரு ஆசிரியர் அவ்வாறு எந்த அனுமதியையும் பெறவில்லை என்றும் இது பதிவு செய்யப்படுவது தெரிந்திருந்தால் தான் அவருடன் பேசியிருக்கவே மாட்டேன் என்றும் தெரிவித்தார். தன்னை நடுஇரவு தூக்கத்தில் எழுப்பி அதனைப் பதிவு செய்து தனது அனுமதியின்றியே அவர் அதனைப் பிரசுரித்து உள்ளதாகவும் திருமதி குகநாதன் குற்றம்சாட்டினார்.

தான் எந்த விவகாரத்திலும் முன்னிலைக்கு வரவிரும்புவதில்லை எனக் குறிப்பிட்ட அவர் இவ்விவகாரத்தில் தன்னையும் தங்களது நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாக வேதனைப்பட்டார்.

இச்சம்பவம் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள் புலிகள் மீது விமர்சனம் உடையவர்களை தமிழகத்தில் ஆதிக்கம் பெற்றுள்ள தமிழ் தேசியவாத சக்திகள் தங்கள் சுயலாபங்களுக்கு பயன்படுத்தலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசுக்கு ஆதரவானவர்களுக்கு எதிராக செயற்படுகிறோம் என்ற அரசியல் மூலம் தமிழக மார்க்ஸிய அமைப்புகளிடையே செல்வாக்குப் பெறவும் இதனைச் சிலர் பயன்படுத்தலாம் என்ற நிலையும் இப்போது ஏற்பட்டு உள்ளது.

._._._._._.

டான் ரிவி உரிமையாளர் குகநாதன் – அருள்சகோதரர்கள்: கடத்தல் – கைது விவகாரம்: ‘இது ஒரு சட்டபூர்வமான கடத்தல்’ எஸ் எஸ் குகநாதன்

Kuganathan_S_S_Dan_TV‘மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளி!’ ஏன்று ஆரம்பித்த இனியொரு இணையம் தற்போது டான் தொலைக்காட்சி ஊடக உரிமையாளரும் வர்த்தகருமான எஸ் எஸ் குகநாதன் கைது செய்யப்பட்டாரா? அல்லது கடத்தப்பட்டாரா?: என்ற விவாதத்திற்கான வெளியாகி நிற்கின்றது. தான் கைது செய்யப்பட்டதாகவும் சொல்ல முடியாது, கடத்தப்பட்டதாகவும் சொல்லிவிட முடியாது. இது கைது பாதி, கடத்தல் பாதி இரண்டும் சேர்ந்து ‘சட்டப்படி கடத்தப்பட்டேன்’ என்று தெரிவிக்கிறார். மேற்படி கைதை அல்லது கடத்தலை முன்னின்று மேற்கொண்ட அருள் சகோதரர்கள் (அருள்செழியன் – அருள்எழிலன்) இது முற்றிலும் சட்டப்படி மேற்கொண்ட நடவடிக்கை என்றும் எஸ் எஸ் குகநாதன் தங்களால் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டு பொலிஸாரினால் சட்டப்படி கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்விவகாரம் தொடர்பாக அருள் சகோதரர்கள் சபாநாவலன் ஆகியோரின் பதிவுகளை முழுமையாகக் காண:

“Fake Encounter ரயாகரன்” – எமது சமூகத்தின் புரையோடிப்போன புண்கள் : சபா நாவலன் inioru.com/?p=16707

குகநாதன் – நடந்தது என்ன..? : குகநாதன் – நடந்தது என்ன..? inioru.com/?p=16752

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அனைவரும் ஊடகவியலாளர்கள்.  எஸ் எஸ் குகநாதனால் குற்றம்சாட்டப்படும் அருள் சகோதரர்களில் ஒருவரான அருள்எழிலன் மற்றும் சபாநாவலன் ஆகியோர் இனியொரு இணையத்தளதின் முக்கியஸ்தர்கள். முன்னையவர் இனியொரு தளத்தின் முக்கிய கட்டுரையாளர். பின்ணையவர் இனியொருவின் ஆசிரியர். இவர் பிரித்தானியாவில் உருவாக்கப்பட்ட புதிய திசைகள் அமைப்பினதும் முக்கிய உறுப்பினர். சம்பந்தப்பட்டவர்களின் அரசியல் பின்னணி காரணமாகவும் பெரும்தொகை (15 லட்சம் இந்திய ரூபாய்கள்) கைமாறப்பட்டு உள்ளதாலும் இவ்விடயம் அரசியல் முக்கியத்துவம் உடையதாகவும் மாறி உள்ளது. மேலும் அருள் சகோதரர்களில் மற்றையவர் அருள்செழியன் தமிழகத்தின் முன்னணி ஊடகங்களில் பணியாற்றியவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தை நேர்காணுவதற்காக லண்டன் வந்திருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குகநாதன் தனக்குத் தரவேண்டிய வஞ்சகச் சூழ்ச்சியால் ஏமாற்றிய பலலட்சம் ரூபாய்களை அவரிடம் இருந்து பெறவும் அவருக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்கவுமே தான் சட்டப்படி குகநாதனைக் கைது செய்யும் சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதாக அருள்செழியன் தெரிவித்திருந்தார். இக்கைது விவகாரத்தின் பிரதான கதாநாயகனும் இவர்தான். ‘’வாழ்வின் ஒட்டு மொத்த சேமிப்புகளையும் குகநாதனிடம் இழந்த ஒருவரான அருள்செழியன் அவரது தனிப்பட்ட திட்டங்களினாலும் சட்ட ரீதியான போராட்டங்களினாலும் மட்டுமே குகநாதனைப் பிடித்தார். இதற்கும் வேறு எவர் ஒருவருக்கும் எந்த தொடர்புகளும் இல்லை.’’ என்கிறார் அருள்எழிலன்

தன்மீதான இக்குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ள குகநாதன் தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணலில் அருள்சகோதரர்களின் அரசியல் செல்வாக்கு அதன் மூலமான அதிகார துஸ்பிரயோகம் ஆகியவற்றினைப்  பயன்படுத்தி அந்நிய மண்ணில் தன்னை சட்டப்படி கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கின்றார். இக்கடத்தல் சம்பவம் பற்றி இனியொரு இணையத்தள ஆசிரியர் சபாநாவலன் எழுதிய பதிவு ‘அப்பட்டமான பொய்’ என்றும் தெரிவிக்கின்றார். ‘’குகநாதன் தான் பெருந்தொகையான பணம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும் ஆனால் அதனைக் கொடுப்பதற்கு தன்னிடம் போதிய வசதிகள் இல்லை என்றும் என்னை அவர்களை சமாதானப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்’’ அதனாலேயே தான் இவ்விவகாரத்தில் தலையிடவேண்டி ஏற்பட்டதாக இனியொரு ஆசிரியர் சபாநாவலன் தனது இணையத்தில் பதிவுசெய்து உள்ளார். எதேச்சையாக அருள்எழிலனுக்கு போன் செய்தபோது அவர் குகநாதனிடம் தொலைபேசியைக் கொடுத்து கதைக்கச் சொன்னபோதே இத்தொடர்பு ஏற்பட்டதாகவும் சபாநாவலன் எழுதியுள்ளார்.

ஆனால் எஸ் எஸ் குகநாதனின் வாக்கு மூலம் அதற்கு முற்றிலும் முரணாக உள்ளது. சட்டப்படி கடத்தி வைக்கப்பட்ட தன்னிடம் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு தப்பிக்கொள்ளுங்கள் என சபாநாவலன் கூறியதாக எஸ் எஸ் குகநாதன் தெரிவிக்கின்றார். எஸ் எஸ் குகநாதனின் இந்த சட்டப்படியான கடத்தலுடன் சபாநாவலனும் தொடர்புபட்டதாகவும் சட்டப்படி கடத்தியவர்கள் பணத்தைப் பெறுவதற்கு ஏதுவாக பொறுப்பு நிற்கக் கூடியவர்களை சபாநாவலனே முன்மொழிந்ததாகவும் குகநாதன் குற்றம்சாட்டுகின்றார்.

இவ்விவகாரம் இவ்வாறான வாதப் பிரதிவாதத்தில் நிற்க அருள் சகோதரர்கள் இவ்விடயத்தை நாவலாக வெளியிடப் போவதாக அறிவித்தனர். தற்போதே தங்களுக்கு நாவலின் பிரதிகளுக்கான கட்டளைகள் ஆயிரக்கணக்கில் வந்து குவிவதாகவும் அறிவித்துள்ளனர். ‘நாவல் ஒன்றுக்கு நான் கருப்பொருளானதில் மகிழ்ச்சியே’ என்று தெரிவித்துள்ள எஸ் எஸ் குகநாதன் அடுத்த ‘புக்கர் பிரைஸிற்கான’ ஆன நாவலாக இது இருந்தால் மேலும் சந்தோசப்படுவேன் என்ற வகையில் கருத்துத் தெரிவித்தார்.

._._._._._.
குகநாதன் – அருள்சகோதரர்கள் : கடத்தல் – கைது விவகாரத்தை அடுத்து குகநாதன் குறிப்பிட்ட சட்டப்படியான கடத்தலுடன் தொடர்புடைய அருள்சகோதரர்கள் சபாநாவலன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை இனியொரு இணையத்தில் வெளியிட்டு உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக முதற் தடவையாக எஸ் எஸ் குகநாதன் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார்.

சட்டப்படி கைது செய்யப்பட்ட அல்லது சட்டப்படி கடத்தப்பட்ட எஸ் எஸ் குகநாதன் உடன் நேர்காணல்:

தேசம்: நீங்கள் தமிழ்நாட்டில் சட்டப்படி கைது செய்யப்பட்டீர்களா அல்லது சட்டவிரோதமாக கடத்தப்பட்டீர்களா?

குகநாதன்: அருட்செழியன் என்பவர் கொடுத்ததாகக் கூறப்பட்ட புகாரின்பேரில் விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறிய பொலிசார், சென்னை பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரது புகார் பிரதியை எனது சட்டத்தரணி கேட்டபோது கூட காட்டத் தயாராக அவர்கள் இருக்கவில்லை. சட்டப்படி கைது செய்திருந்தால் 24 மணி நேரத்தில் என்னை நீதிமன்று ஒன்றில் ஆஜர்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யப்படவில்லை. அதிலிருந்து  நடந்தது என்ன என்பதை புரிந்துகொள்ளலாம். இது ஒரு சட்டபூர்வமான கடத்தல் என்றும் செல்லலாம்.

தேசம்: இச்சம்பவத்தின் பின்னணி என்ன?

குகநாதன்: ரிஆர்ரி தொடங்கிய (1997) காலத்திலிருந்து அருட்செழியன் எமக்காக சென்னையில் பணியாற்றியவர். நான்   ரிஆர்ரியிலிருந்து திட்டமிட்டு வெளியேற்றப்பட்டு பின்னர் டான் தொலைக்காட்சியை நடாத்திக் கொண்டிருந்தபோதும் எனக்கு சென்னையில் நிகழ்ச்சிகளைப் பெறுவதற்கு உதவியவர். 2003ம் ஆண்டு நாம் 6 தொலைக்காட்சி சேவைகளை ஆரம்பித்தபோது வேறு ஒரு நிறுவனத்தில் பணியாற்றியவாறு எமக்கும் பணியாற்றினார். அவ்வாறு பணியாற்றிய காலத்தில் எம்மிடமிருந்து அவருக்கு இந்திய ரூபாய் 55 லட்சம் செலுத்தப்பட்டது. அதிலிருந்து அவர் எமக்கான சேவையை செய்து கொண்டிருந்தார். 18 மாதங்களின் பின்னர் சில கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் வெளியேற வேண்டியேற்பட்டது. இதனையடுத்து எமக்கு சொந்தமான உபகரணங்களை நான் புதிதாக நியமித்தவரிடம் கொடுக்குமாறு கேட்டபோது அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்தார். அதனையடுத்து அந்த உபகரணங்களை அவரிடமிருந்து சட்டபூர்வமாகப் பெறுவதற்காக நான் அண்ணா சக்தி என்ற ஒருபத்திரிகையாளருக்கு அட்டோனி பவர் கொடுத்தேன். அவர் பொலிசில் இதுகுறித்து முறைப்பாடு செய்ததன்பேரில் அவர் அனைத்து உபகரணங்களையும் 3 லட்சம் ரூபா பணத்தினையும் அவரிடம் வழங்கியிருந்தார். இவை நடைபெற்றது 2005ம் ஆண்டில். அண்ணா சக்தி என்ற அந்தப் பத்திரிகையாளரைக் கூட எனக்கு அறிமுகம்செய்து வைத்தவர் வேறுயாருமல்ல, அருட்செழியனால் எனக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்ட அவரது நெருங்கிய உறவினரான ஒரு சட்டத்தரணிதான்.

இப்போது அவர் வழங்கியதாகக் குறிப்பிடப்படும் புகாரில், நான் அவருக்கு வழங்கிய 55 லட்சம் ரூபாவும் எனக்கு செலவிடப்பட்டதாகவும், அதனுடன் மேலதிகமாக 6 லட்சம் ரூபாவை தான் தனது சொந்தப்பணத்தில் செலவிட்டதாகவும், அதுதவிர தனக்கு 18 மாதம் சம்பளம் தரப்படவில்லை என்றும் தனக்கு மாதம் 50 ஆயிரம் சம்பளமாக நான் தருவதாக கூறியதாகவும் அதன்படி 9 லட்சம் சம்பளம் தரப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதாக பொலிசார் என்னிடம் தெரிவித்தனர். அண்ணா சக்தி என்பவர் பொலிசாரின் துணையுடன் தன்னை கட்டப்பஞ்சாயத்து நடத்தியே தன்னிடமிருந்து பணத்தையும் உபகரணங்களையும் பெற்றுக்கொண்டதாகவும் அவர் அந்தப் புகாரில் தெரிவித்ததாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது.

சில ஆயிரம் ரூபாக்கள் சம்பளத்தில் ஏற்கனவே வேறு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே எனக்கும் பணியாற்றிய அருட்செழியன் என்னிடம் எவ்வாறு 50 ஆயிரம் சம்பளம் கேட்டார் என்பது மற்றுமொரு தனிக்கதை. அவர் லண்டன் வர விரும்பியபோது, அவர் விசா பெறுவதற்காக அவர் எமது நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் அவருக்கு 50 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதனையே அவர் பொலிசாரிடம் கொடுத்து 9 லட்சம் ரூபா சம்பளம் கோரியிருந்தார்.
தனக்கு 15 லட்சம் ரூபா நான் தரவேண்டும் என்பதும் ஆனால் சமாதானமாக பேசுவதென்றால் 25 லட்சம் தரவேண்டும் என்றும் அவர் பேரம்பேசத் தொடங்கினார்.

தேசம்: இச்சம்பவம் எப்போது நடந்தது? எப்படி முடிவுக்கு வந்தது?

குகநாதன்: ஆகஸ்ட் 2ம் திகதி பிற்பகல் 3 மணியளவில் பொலிசார் என்னை அழைத்துச் சென்றனர். 3ம் திகதி இரவு 10 மணியளவில் வீடுசெல்ல அனுமதித்தனர். 5ம் திகதி கொழும்பு திரும்பினேன். அவர் நான் தரவேண்டும் என்று கூறியிருந்த 15 லட்சம் ரூபா வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை (மன்னிக்கவும் கைது அல்ல கடத்தல் விவகாரம்) முடிவுக்கு வந்தது.

தேசம்:அருள்செழியன் நீங்கள் தன்னை வஞ்சகமாக ஏமாற்றியதாகக் குற்றம்சாட்டி உள்ளார்? இதன் பின்னணி என்ன?

குகநாதன்: வஞ்சகம் என்பதற்கு தமிழ்நாட்டில் என்ன அர்த்தம் என்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. அதனால் நான் அவரை வஞ்சகமாக ஏமாற்றியதாகவே வைத்துக்கொள்வோம். அப்படி நான் அவரை ஏமாற்றியிருந்தால், அவர் இது தொடர்பாக 2005 முதல் 2006 கடைசிவரை சென்னையில் அசோக் நகரில் அலுவலகத்தை வைத்து நான் அங்கேயே தங்கியிருந்து டான் தொலைக்காட்சியை நடாத்திய காலத்தில் அவர் ஏன் என்மீது இந்தப் புகாரைத் தெரிவிக்கவில்லை. அல்லது தெரிவித்திருந்தால் பொலிசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. 5 வருடங்கள் கழித்து நடவடிக்கை எடுக்க என்ன காரணம். நான் வஞ்சகம் செய்தது 5 வருடங்களின் பின்னர் தான் அவருக்கு தெரியவந்ததா?.

தேசம்: உங்களை சுவாரஸ்யமான நாடகம் ஒன்றை அரங்கேற்றி உங்கள் செலவிலேயே சென்னைக்கு வரவழைத்ததாகக் அருள்செழியன் குறிப்பிடுகின்றார்?

குகநாதன்: சென்னைக்கு நான் சென்றிருந்தது எனது சொந்த விடயமாக. நான் இப்போது மட்டுமல்ல, இந்த வருடத்தில் மாத்திரம் 6 தடவைகள் சென்னை சென்று வந்திருக்கின்றேன். அவர் என்ன நாடகம் நடத்தினார் என்பது எனக்கு தெரியவில்லை. நான் சென்னை செல்வது எனது செலவிலேயே தவிர வேறு யாருடையை செலவிலும் அல்ல.

தேசம்: இச்சம்பவத்தை நாவலாக எழுதவுள்ளதாக அருள்செழியன் தெரிவித்துள்ளார்?

குகநாதன்: நாவல் ஒன்றுக்கு நான் கருப்பொருளானதில் மகிழ்ச்சியே.

தேசம்: ”அரை லட்சம் மனிதர்களைக் கொலைசெய்த இலங்கை அரசிற்கு ஆதரவாக கொழும்பிலிருந்து தொலைக்காட்சி நடத்தும் குகநாதன் என்னிடம் உதவி கேட்பதற்கு எந்தத் தார்மீக நியாயமும் இல்லை” என சபாநாவலன் எழுதியுள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்திற்கும் சபாநாவலனிற்கும் என்ன சம்பந்தம்?

குகநாதன்: எனக்கு அருட்செழியனைவிட சபா நாவலனின் எழுத்து மீதே வெறுப்பு ஏற்படுகின்றது. அவர் தனது இனியொரு இணையத்தளத்தில் எழுதியிருப்பது அப்பட்டமான பொய். நான் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சில நிமிடங்களில் அருள்செழியனின் சகோதரர் அருள்எழிலன் தனது தொலைபேசியை என்னிடம் கொண்டுவந்து தந்தார். எனக்கு தெரிந்த ஒருவர் பேசவேண்டுமாம் என்றே அவர் தனது கைத் தொலைபேசியை என்னிடம் தந்தார். நான் ஹலோ என்றதும் அவர் தன்னை சபா நாவலன் என்று அறிமுகம் செய்துகொண்டார். (அது சபா நாவலன் தானா அல்லது வேறுயாருமா என்பது கூட எனக்கு தெரியாது. ஏனெனில் அதற்கு முன்னர் அவர் குரலை நான் அறிந்திருக்கவில்லை) அப்போது நான் அவரை அறிந்திருக்கின்றேன் ஆனால் நேரில் கண்டதில்லை என்று ஆரம்பித்ததும், அவர் கூறியது இதுதான்:

‘அரசாங்கத்தின் ஆதரவாளர் ஒருவரை கைதுசெய்துவிட்டோம் என்றுதான் அவரது (செழியனின்) சட்டத்தரணிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரிகின்றது. நீங்கள் ஏதாவது கொடுத்துவிட்டு தப்பிக்கப் பாருங்கள்”.

எனக்கு முன் பின் தெரியாத ஒருவரிடம் எதுவும் விவாதிக்கவோ அல்லது கருத்துக்கூறவோ அப்போது முடியாததால், ‘நானும் அப்படித்தான் யோசிக்கின்றேன்” என்று அவரிடம் பதிலளித்தேன்.

பின்னர் அவர், ‘பாரிசில் சுபாசிடம் கதைத்தீர்களா?” என்று கேட்டார். எனக்கு சுபாசை தெரிந்திருந்தாலும் அவரிடம் அப்போது கதைக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை.

நான் கதைக்கவில்லை. உதயகுமாருடன்  மட்டுமே நான் பேசியதாக நான் கூறியபோது, அவராகவே சுபாஸ் பொறுப்பு நின்றால் நான் அவர்களிடம் சொல்கின்றேன் என்றார். நான் அதற்கு தேவைப்பட்டால் கேட்கின்றேன் என்று கூறிவிட்டு தொலைபேசியை எழிலனிடம் கொடுத்துவிட்டேன்.

இப்படி நடக்கவில்லை என்றால், நான் சொல்வது பொய்யா அல்லது சபா நாவலன் சொல்வது பொய்யா என்பதை அருட்செழியனிடமுள்ள வீடியோ வெளிவருகின்றபோது தெரிந்துகொள்ளலாம்.

குகநாதன் அவரிடம் உதவி கேட்பதற்கு தார்மீக உரிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் குகநாதன் கேட்காமலே உதவுவதற்கு சபா நாவலன் முன்வந்தார் என்பதை நிரூபிக்க சட்டப்படி கடத்தப்பட்ட என்னிடம் எதுவும் இல்லை.

என்னுடன் இவ்வாறு பேசியவர், அப்போது அங்கே இருந்த இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளரும், டான் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகியுமான திரு. சல்தான் அவர்களிடமும் பேசியதாக பின்னர் அறிந்துகொண்டேன். அவருக்கு அவர் கூறியது இதுதான்:
‘நீங்கள் தான் மகிந்த அரசு எல்லாம் நல்லாக செய்கிறது என்று கூறுகின்றீர்களே ராஜபக்சவிடம் வாங்கிக் கொடுக்கலாம் தானே.”

அருள்செழியன் கேட்பது நியாயமானதுதானா? என்பதை அறியாமல் அவருக்கு பணத்தைக் கொடுங்கள் என்று சொல்வதற்கு சபா நாவலனுக்கு எந்த அருகதையும் இல்லை. 

தேசம்: ”குகநாதனிடம் அவர் இலங்கை அரசின் ஊதுகுழல் என்பதால் இச் சம்பவத்தில் தலையிட விரும்பவில்லை என்பதைக் கூறியிருந்தேன். இலங்கை அரசின் பாசிசத்திற்கு எதிராக எழுதும் நான் இலங்கை செல்ல முற்பட்டால் குகநாதன் இன் வாக்குமூலங்களோடு இலங்கை அரச படைகள் என்னைக் கைது செய்யலாம்.” என சபாநாவலன் குற்றம்சாட்டுகிறார். இச்சம்பவங்களில் சம்பந்தப்பட்டு உள்ள அனைவருமே ஏதோ ஒருவகையில் ஊடகத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள். அப்படி இருக்கையில் இவ்வாறான ஒரு மோசமான சூழல் தேவையானதா?

குகநாதன்: அருள்செழியனின் என்மீதான புகார் தவறானது என்பதை நான் நிரூபிப்பது பெரிய விடயமல்ல. ஆனால் நான் அதனை சட்டரீதியாக எதிர்கொள்வதெனில் பொலிசார் என்னை நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும். அப்படி ஆஜர்படுத்தினால் நீதிமன்றம் எனது பாஸ்போட்டை தன்வசப்படுத்தும், நான் பிணையில் வந்தாலும் அந்த வழக்கு முடியும்வரை இந்தியாவில் நின்றிருக்க வேண்டி வரும். இவற்றைத் தவிர்க்குமாறு எனக்கு வேண்டிய சிலர் ஆலோசனை கூறினார்கள். நான் ஒரு வாரம் இந்தியாவில் நின்றிருந்தாலும் கொழும்பில் எனது நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டுவிடும். அதனால் அவர் கோரிய பணத்தை கொடுத்துவிட்டு பிரச்னையிலிருந்து விடுபடுவது என்று முடிவெடுத்தேன்.

அருள்செழியன் கோரிய 15 லட்சம் ரூபாவையும் ஒரேநாளில் செலுத்துவது சிரமமானதாக இருந்ததால், உடனே 10 லட்சமும் மிகுதி 5 லட்சத்தையும் ஒருமாதத்தில் செலுத்துவதாகவும் முடிவானது. அந்த 5 லட்சத்தை ஒரு மாதத்தில் பெறுவதற்கு யாரேனும் ஒருவரை ஐரோப்பாவில் பொறுப்பு நிற்கச் சொல்லுங்கள் என்று அவர்கள் கேட்டபோது, முதல்நாள் சபா நாவலன் கூறியது எனது ஞாபகத்திற்கு வந்தது. இதனால் மனைவியிடம் கூறி முதலில் சுபாஸ் பொறுப்பு நிற்பாரா என்று கேட்கச் சொன்னேன். (ஏனெனில் என்னுடன் தொலைபேசியில் எனது மனைவி மட்டுமே கதைக்க அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரெஞ்சு பொலிசார் மட்டுமன்றி பிரான்ஸ் லியொன் நகரில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் இன்ரர்போல் பொலிசார் கூட என்னுடன் கதைக்க சென்னை பொலிசார் அனுமதி வழங்கவில்லை.). தான் பொறுப்பு நின்றால் சபா நாவலன் பொறுப்பு நிற்பார் என்றால் அதற்கு நான் தயார் என்று சுபாஸ் கூறியதும் சபா நாவலனிடம் எனது மனைவி தொடர்புகொண்டார்.

மறுநாள் 10 லட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து மிகுதி பற்றி கதைத்தபோது சபா நாவலன் தான் பொறுப்புநிற்க மறுத்துவிட்டதாகவும், பிரான்சிலிருந்து அசோக் பொறுப்பு நின்றால் தங்களுக்கு சரி என்றும் அவர்கள் கூறினார்கள்.

குகநாதனுக்கு பிரான்சில் எப்படி செல்வாக்கு இருக்கிறது என்று பார்ப்போம். எங்கே அசோக்கிடம் கதைத்து அவரை எமக்கு கதைக்கச் சொல்லுங்கள் என்றார்கள்.

அசோக் இது போன்ற விடயங்களுக்கு பொறுப்புக்கு நிற்கமாட்டார் என்பதை அவர்கள் மட்டுமல்ல, நானும் நன்றாக அறிவேன். இருந்தாலும் கேட்டுப்பார்ப்பதில் தவறில்லை என்பதால் மனைவியிடம் அசோக்கிடம் கதைக்குமாறு கூறினேன்.

ஆச்சரியமாக இருந்தது. கூடவே மகிழ்ச்சியாகவும் இருந்தது. அசோக் தான் உடனே எழிலனுடன் கதைப்பதாக கூறினார்.

அப்போது எழிலன் அங்கிருக்கவில்லை. சில நிமிடங்களில் அருள்செழியனுடன் தொடர்புகொண்ட எழிலன், அசோக்கிடமிருந்து அழைப்பு வந்ததாகவும் தன்னை இந்த விடயத்திற்குள் இழுக்க வேண்டாம் என்று கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்து விட்டதாக எழிலன் கூறியதாக செழியன் கூறினார்.

ஆனால் அசோக் எம்மிடம் கூறியது, தான் தொலைபேசி எடுத்ததும் எழிலன் தன்னிடம் கூறினாராம், இந்த விடயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று. எழிலன் பொய் கூறினார் என்றே நான் நிச்சயமாக நம்புகின்றேன்.

தேசம்: இச்சம்பவத்தினுடைய பின்னணியில் அரசியல் செல்வாக்கு அல்லது அதிகார துஸ்பிரயோகம் என்பன பயன்படுத்தப்பட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா?

குகநாதன்: நிச்சயமாக. அதுகுறித்து நேரம் வரும்போது பேசுவேன்.

தேசம்: நீங்கள் கடத்தப்பட்ட சூழலில் அல்லது கைது செய்யப்பட்ட சூழலில் உளவியல் ரீதியாகவோ உடலியல் ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டீர்களா?

குகநாதன்: உடல்ரீதியாக அல்ல. ஆனால் உள ரீதியாக.

அப்போது எனக்கு ஞாபகம் வந்ததெல்லாம், முதன்முதலில் அருள்செழியனை ஐரோப்பா அழைத்துவந்தபோது காரில் பிரான்சிலிருந்து ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது விரைவு பாதையில் உள்ள தரிப்பிடம் ஒன்றில் தரித்து நின்றபோது அவர், என் முன்னே மண்டியிட்டு ‘’அண்ணே….. இப்படியெல்லாம் பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்திருந்தவனல்ல. இவற்றைக் காட்டிய உங்களை……’’ என்று இவர் மனமுருகிய காட்சி தான் எனக்கு ஞாபகம் வந்தது.

நான் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதும் பொலிசார் முதல்முதலில் செய்தது பத்திரிகைக்கு செய்தி எழுதியதுதான். நான் மண்டியிட்டு மன்றாடியதாக அருட்செழியன் ஒரு தளத்தில் எழுதியிருக்கிறார். கூடவே தன்னிடம் வீடியோ பதிவும் இருக்கிறது என்கிறார். அதனை பார்க்க நான் ஆவலாக இருக்கின்றேன். நண்பர்கள் சிலர் பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறுங்கள் என்று ஆலோசனை கூறியிருக்காவிட்டால் நிச்சயமாக சட்டரீதியாகவே எதிர்கொண்டிருப்பேன். அப்படியிருக்கையில் மன்றாட வேண்டிய தேவை எனக்கு இல்லை.

சம்பவம் நடைபெறுவதற்கு முன்னரும் பின்னரும் யார் யாரெல்லாம் செழியன், எழிலன் ஆகியோரின் கைத் தொலைபேசிகளுக்கு கதைத்தார்கள் என்ற விபரமும் தற்போது என்னிடம் இருக்கின்றது. இதுபற்றி பின்னர் எழுதுவேன்.

._._._._._.

குகநாதன் – அருள்சகோதரர்கள் : கடத்தல் – கைது விவகாரம் தொடர்பில் சில குறிப்புகள்

1. இச்சம்பவம் முற்றிலும் அருள்செழியன் – எஸ் எஸ் குகநாதன் சம்பந்தப்பட்ட நிதிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விடயம். இவர்களில் எவரும் புரட்சிகரமான நிறுவனங்களுக்கு பணிபுரிந்தவர்கள் அல்ல. இருவருமே ஒன்றாக இணைந்து வர்த்தக கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டவர்கள். தற்போது அது தொடர்பான சர்ச்சையில் இறங்கி உள்ளனர். இவர்கள் ஆளுக்கு ஆள் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நாட்டின் சட்டவரம்பிற்கு உள்ளேயே தீர்க்கப்பட வேண்டும்.

2. ‘மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளி!’ என்ற இலக்கு நோக்கிச் செயற்படும் இனியொரு இணையம், புதிய திசைகள் அமைப்பு (அவர்களும் ஒரு இணையத்தை குரல்வெப் என்ற பெயரில் செயற்படுத்துகின்றனர். சன்றைஸில் வானொலி நிகழ்ச்சி ஒன்றையும் நடத்துகின்றனர்.) இச்சம்பவத்துடன் எவ்வித தொடர்பும் அற்றதாக இருந்திருந்தால் இவ்விடயத்தை உடனடியாக வெளிக்கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் இச்சம்பவம் இடம்பெற்றது ஓகஸ்ட்  02 2010ல். இச்சம்பவத்தை தமிழ்அரங்கம் வெளிக்கொண்டுவந்தது சரியாக ஒரு மாதத்தின் பின்னர் செப்ரம்பர் 02 2010ல். நிர்ப்பந்தத்தின் பெயரில் இனியொரு ஆசிரியர் சபாநாவலன் பதில் எழுதியது செப்ரம்பர் 08 2010ல். ஒரு வகையில் தமிழ் அரங்கம் இந்நிகழ்வை வெளிக்கொணராது இருந்திருந்தால் இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றதோ பணப் பரிமாற்றம் இடம்பெற்றதோ வெளியே வந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் தமிழரங்கம் 6000 மைல்களுக்கு அப்பால் நடந்த ஒரு சம்பவத்தை சரியான முறையிலோ அல்லது தவறான முறையிலோ வெளிக்கொண்டுவந்துள்ளது. இந்தியப் பொலிஸ்சுடன் கூட்டுச் சேர்ந்து கட்டைப் பஞ்சாயத்து நடத்திய சபா நாவலன், குகநாதனிடம் 30 இலட்சம் கோரினார்!

இலங்கையில் இருந்து ஐரோப்பாவரை ஒளிபரப்பாகின்ற ஒரு தொலைக்காட்சியின் உரிமையாளர் தமிழ்நாட்டில் சட்டப்படி கைது செய்யப்பட்டமை மிக முக்கியமான செய்தி. அது இருட்டடிப்புச் செய்யப்பட்டதன் நோக்கம் கேள்விக்குரியது.

3. இச்செய்தியை இருட்டடிப்புச் செய்ததுமல்லாமல் இச்செய்தி வெளியே வந்ததும் அதுவரை மௌனம் காத்த இனியொரு இணையத்தளம் ‘’ அரை லட்சம் மனிதர்களைக் கொலைசெய்த இலங்கை அரசிற்கு ஆதரவாக கொழும்பிலிருந்து தொலைக்காட்சி நடத்தும் குகநாதன்’’ என்றும்  ‘’குகநாதன் போன்ற இலங்கை அரச ஊதுகுழல்’’ என்றும் குற்றம்சாட்டுகிறது. இது ஏதோ ஒருவகையில் அருள்சகோதரர்களின் செயலை நியாயப்படுத்த முயற்சித்து இருப்பதையே காட்டிநிற்கின்றது. வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவருக்கு இடையேயான பிரச்சினையில் அரசியல் தூய்மைவாதம் பேசுகின்ற நாவலன் ஒருபக்கம்சார்ந்து நிற்பது அவர்களுக்கு இருந்த நலன்களின் முரணையே காட்டி நிற்கின்றது. இது நாவலன் இச்சம்பவத்தில் தொடர்பட்டு இருந்தார் என்ற சந்தேகத்தை மேலும் வலுவாக்குகின்றது.

4. பிரித்தானியாவில் இடம்பெற்ற 20க்கும் மேற்பட்ட தமிழர்களிடையேயான படுகொலைகளில் கணிசமானவை பொருளாதாரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பானவை. வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிடையே இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களுக்கு எல்லையே இல்லை. இவற்றுக்கு அரசியல் முலாம்பூசி ஒரு தரப்பின் செயற்பாட்டை அரசியல் மூலம் நியாயப்படுத்துவது  நீண்ட அரசியல் செயற்பாடுகளுக்கு ஆரோக்கியமாக அமையாது.

5. இலங்கையில் விடுதலையின் பெயரில் இயங்கிய விடுதலை இயக்கங்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்து மேற்கொண்ட நடிவடிக்கைகள் இன்னமும் எம்மனக் கண் முன்நிற்கின்றது. விசாரணையின்றியே தண்டனை. தண்டனைக்குப் பின் காரணங்களைத் தேடுவதும் தீர்ப்பு வழங்குவதும். எஸ் எஸ் குகநாதன் மீதான காலம் தாழ்த்திய வருகின்ற குற்றச்சாட்டுக்கள் இதனையே காட்டுகின்றன.

6. இலங்கை இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளின் பொலிஸ்படைகள் பற்றி யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஒரு விவாதத்திற்காக ‘இனியொரு ஆசிரியர் சபாநாவலன் அருள்எழிலனுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றால் தமிகத்தின் பிரபல ஊடகங்களில் பிணியாற்றி செல்வாக்குள்ள அருள்எழிலனுக்கு சபாநாவலனை தமிழகம் வரச்செய்து அவரைக் கைது செய்து பணம்தரும்படி மிரட்டுவது ஒன்றும் கடியமான விடயம் அல்லவே.’ இனியொருவின் கூற்றுப்படி இலங்கை அரசின் ஊதுகுழல் ஊடகம் ஒன்றின் உரிமையாளரை அந்த அரசுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் தமிழக அரசின் பொலிஸ்படையைக் கொண்டு சட்டப்படி கைது செய்து நீதிமன்றம் செல்லாமலேயே 15 லட்சம் ரூபாய் பணத்தை அவரிடம் வாங்கிக் கொண்டு விடமுடியும் என்றால் எதுவும் சாத்தியம் அல்லவா?

7. இங்குள்ள ஆபத்து என்னவென்றால் இது இவ்வாறான செயல்களுக்கு ஒரு முன்ணுதாரணமாக அமைந்து உள்ளது. இலங்கைத் தமிழர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தமிழக காவல்துறையை வைத்து மிரட்டி அவர்களிடம் இருந்து பணத்தைப் பெற முடியும் என்பதனை இச்சம்பவம் நடைமுறையில் நிரூபித்து உள்ளது. ஏற்கனவே இவ்வாறான கசப்பான சம்பவங்கள் சில இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அவ்வாறான சம்பவங்களை நானே செய்தியாக வெளியிட்டும் உள்ளேன். இச்சம்பவம் இவ்வாறானவர்கள் தங்கள் செயல்களை நியாயப்படுத்துவதற்கு வழிகோலி உள்ளது.

8. கைது செய்யப்பட்ட நிலையிலோ அல்லது கடத்தப்பட்ட நிலையிலோ மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவர் வழங்கும் வாக்குமூலத்தையோ அல்லது அவருடைய துணைவி வழங்கும் வாக்குமூலத்தையோ உண்மையானதாக எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது சாதாரணர்களும் அறிந்த விடயம். அதனால் தான் சட்டத்தை அமுல்படுத்துபவர்களிடம் இருந்து நீதித்துறை சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்று கோரப்படுகிறது. தன்னை விடுவிப்பது அல்லது தனது துணைவரை விடுவிப்பதே அவருடைய அல்லது அவருடைய துணைவருடைய நோக்கமாக இருக்கும். அதனால் கைது செய்யப்பட்ட அல்லது கடத்தப்பட்ட நிலையில் பதிவு செய்யப்பட்ட விடயங்கள் சுயாதீனமான நிலையில் ஏற்றுக்கொள்ளப்படாதவரை அர்த்தமற்றவை. இருந்தாலும் எஸ் எஸ் குகநாதன் அப்பதிவுகளையும் மாற்றம் செய்யாது வெளியிடும்படி சவால்விட்டுள்ளார்.

9. அருள்சகோதரர்கள் குடும்பத்தினர் எஸ் எஸ் குகநாதனிடம் நிதியை இழந்தது உண்மையா இருந்தால் அவர்கள் குறைந்தபட்சம் நீதிமன்றத்தினூடாகவே அதனைப் பெற முயற்சித்து இருக்க வேண்டும். சமூகப் பொறுப்புடையவர்கள் இவ்வாறான வழிகளில் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வது பிறழ்வான சமூகப் போக்கிற்கு முன்னுதாரணமாக அமையும்.

10. ஏற்கனவே எழுந்துள்ள அரசியல் நிலையினால் தமிழகத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான உறவு பலவீனமானதாகவே உள்ளது. இவ்வாறான தனிப்பட்ட சம்பவங்கள் இவ்வுறவை மேலும் மோசமாக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

” யாழ்ப்பாண மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வந்தவர்கள் புலம்பெயர் தமிழர்களே” யாழில் நியூஹாம் உதவி மேயர் போல் சத்தியநேசன்

Paul_Sathyanesan_Cllrயாழ்ப்பாண மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வந்தவர்கள் புலம்பெயர் தமிழர்களே என்று பிரித்தானியாவின் நியூஹாம் மாநகர உதவி மேயர் போல் சத்தியநேசன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் இருந்து நாடு சென்றுள்ள இவர் சொந்த இடமான யாழ்ப்பாணத்துக்கும் வருகை தந்துள்ளார். இவருக்கு யாழ்.மாநகரசபை 09.09.10 மகத்தான வரவேற்பு வழங்கி விழா எடுத்தது. யாழ்.மாநகரசபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவர் இவ்வாறு கூறினார்.

இவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு: ”யாழ்ப்பாணத்தில் செத்த மக்களின் எண்ணிக்கையை வைத்தே வெளிநாடுகளில் தமிழர்கள் விசா பெற்றுக் கொள்கின்றனர். யாழ்ப்பாண மக்களை நடுவீதிக்கு கொண்டு வந்து விட்டவர்கள் புலம் பெயர் சமூகத்தினர்தான்.

யாழ்ப்பாணத்தில் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள் என ஐரோப்பிய நாடுகளில் சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் சீனப் பெண்களை வைத்து விபச்சாரம் நடக்கிறது என்றும் சிங்களப் பெண்கள் விபச்சாரம் செய்கின்றார்கள் என்றும் தமிழ்ப் பெண்களை இராணுவம் கற்பழிக்கின்றது என்றும் ஐரோப்பிய நாடுகளில் சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ”

யாழில் நவமங்கை இல்லத்தின் திறப்பு விழா நிகழ்விலும் கலந்துகொண்ட கவுன்சிலர் போல் சத்தியநேசன் தான் கற்ற பள்ளியான சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி இருந்தார். இலங்கையில் தமிழ் அரசியல் தலைமைகள் சிலரையும் தனது பயணத்தின் போது சந்தித்துள்ளார்.

ஏழைத் தமிழரின் கண்ணீரில் உல்லாசப் படகோட்டும் புலம்பெயர் தமிழர்கள். : ரதிவர்மன்

David Milliband Meets London Tamilஇதுவரையும் இலங்கையில் நடந்த அரசியல் சதுராட்டத்தில் பல துன்பங்களை அனுபவித்தவர்கள் இலங்கைத் தமிழர்கள். பஞ்சபாண்டவர்கள் தங்கள் மனைவியைச் சூதாட்டத்தில் இழந்ததுபோல் தமிழ்த் தலைவர்கள். ஏழைத் தமிழர்களின் வாழ்க்கையைச் சிங்கள இனவெறிக்குப் பலியிட்டார்கள்.  பாஞ்சாலி, கணவர்களின் சபதத்தை நிறைவேற்ற, அவள் பயணத்தைக் காடுமேடுகளிற் தொடர்ந்தது போல்த் தமிழ்மக்களும் தலைவர்களின் பகற்கனவை நிறைவேற்ற இடத்துக்கு இடம் அநாதைகளாக மேய்க்கப் பட்டார்கள் கடைசியில் புதுக்குடியிருப்பின் மிகச்சிறிய முள்ளியவளைப் பகுதியில் அடைக்கப்பட்டு, வைரவ கடவுளுக்குப் பலி கொடுக்கப்பட்ட ஆடுகளாகத் தமிழ் மக்கள் எதிரிக்குப் பலி கொடுக்கப்பட்டார்கள்.

கொலைகளுக்குத் தப்பி  வேலி தாண்டி ஓடிய உயிர்கள் இருபக்கக் குண்டுகளாற் துளைக்கப்பட்ட வெற்று மரங்களாகத் தமிழ்மண்ணிற் சாய்ந்து விழுந்தார்கள். ஊனமடைந்த உயிர்கள் இன்று ஏனேதானே என்று வாழ்ந்து முடிக்கவும் புலம்பெயர் தமிழர்கள் விடுவதாயில்லை. இதுவரையும் தமிழர்களின் ‘விடுதலை’ என்ற பெயரில் பணம் படைத்த  புலம்பெயர் தமிழ் முதலைகள் இன்றும் இலங்கைத் தமிழர் பெயரில் எப்படி உழைக்கலாம் என்ற வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரபாகரன் கொலைசெய்யப்பட்ட செய்தி உலக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தபோதும்,  ஐரோப்பிய நாடுகளிலுள்ள தமிழ்க் கடைகளில் கூலிவேலை செய்யும் ஏழைத் தமிழ் இளைஞர்களிடம் ‘தலைவர் கடைசி யுத்தத்திற்குப் பலம் வாய்ந்த ஆயுதம் வாங்கப்போகிறார், பிரபாகரன் தலைவராகவிருந்து சண்டை தொடர்வதால் வெளிநாடு  வந்த நீங்கள் ஒவ்வொருத்தரும் கட்டாயம் பணம் தரவேண்டும்’ என்று சொல்லிப் பணத்தை அள்ளிக்கொண்டு போனதை எத்தனையோ ஏழைத்தமிழ் இளைஞர்கள் மறக்க மாட்டார்கள்.

தமிழர்களின் பெயரில் சேர்த்த கோடிக்கணக்கான பணம் அவர்களின் கையில் இருக்கிறது. அதை மறைத்து, அந்தப் பணத்தைச் சூறையாட தமிழர்களின் பெயர் சொல்லிக்கொண்டு பல கூட்டங்கள் போடுகிறார்கள். வெளிநாட்டுப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் தமிழருக்கு ஈழம் எடுத்துத் தருவதாகக் கற்பனைக் கதைகள் விடுகிறார்கள். மனச் சாட்சியுள்ள தமிழர்கள் இவர்களைக் கேள்வி கேட்காமல் விட்டால் புலம்பெயர்ந்த ஈழம் என்ற பெயரில் பல கோமாளிக் கூத்துக்கள் இன்னும் அரங்கேற்றப்படப் போகின்றன. அதற்கு இந்திய தமிழக அரசியல்க் கோமாளிகள் தாளம் போடுவார்கள். இலங்கைத் தமிழரின் கண்ணீரும் கதறலும் ஒரு சில முதலைகளின் மூலதனமாக மாறிவிட்டது. இதைக்கேட்க யாருமில்லையா?

David Milliband Meets London Tamilsஅண்மையில், 04.09.10ல் ‘பிரிட்டிஷ் தொழிற்கட்சிசார்ந்த தமிழர்கள்’ என்ற பெயரில் வெஸ்ட்மினிஸ்டர் சென்றல் ஹாலில் ஒரு கூட்டம் நடந்தது. தொழிற் கட்சியின் பழைய தலைவர் கோர்டன் பிறவுன் இராஜினாமா செய்ததால் தொழில் கட்சியின் புதிய தலைமைத்துவத்துக்குப் போட்டியிடும், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மிலிபாண்ட் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக இக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டதாம். ஆனால் கூட்டத்தில் பேசிய புலி ஆதரவாளர்கள், ‘பிரித்தானியா, உலக ஐனநாயகக் காவலன்’ என்றும், மிலிபாண்ட் ஒருகாலத்தில் பிரதமராக வந்தால் கட்டாயம் ஈழம் கிடைக்க வாய்ப்புண்டு என்ற தோரணையில் பேச்சுரைகளை அள்ளி வழங்கினார்கள்.

( டேவிட் மிலிபான்ட் பற்றிய முன்னைய பதிவு: ”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன் )

பிரித்தானியரின் பேச்சைக் கேட்டு யுத்தத்தை நிறுத்தாத (பிரபாகரனைக் காப்பாற்றாத) இலங்கை அரசைக் கிண்டலடித்தார்கள். இலங்கையில் ஆளுமை செய்யும் ராஜபக்ஸா சகோதரர்களை யுத்தக் குற்றங்களை விசாரிக்கும் அகில உலக கோர்ட்டுக்கு கொண்டுபோவதற்கு உதவி செய்யும்படியும் கோரிக்கைகளை எழுப்பினார்கள். பொருளாதாரத் தடைபோட்டு இலங்கையைப் பணிய வைக்கும் யோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

பிரித்தானியா ஒருநாளும் தனக்கு இலாபம் கிடைக்காத விடயங்களில் தலையிடாது என்பதும், இலங்கையில் பிரித்தானியரால் ஒன்றும் செய்ய முடியாது என்பதும் தெரியாத தமிழ்ப் பிரமுகர்களின் குழந்தைத்தனமான பேச்சுக்களால் வந்திருந்த பலர் தர்மசங்கடப்பட்டார்கள். புலி ஆதரவாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் தமிழ்ப் பிரமுகர்கள் தங்களை முன்னிலைப்படுத்த முயன்றதும் டேவிட் மிலிபாண்ட்டுடன் ஒன்றாய் நின்று படம் எடுக்க முண்டியடித்ததும் வேடிக்கையாகவிருந்தது.

பிரித்தானிய தொழிற்கட்சி பற்றியோ அந்தக் கட்சியின் பாரம் பரியம் பற்றியோ, இரண்டாம் உலக யுத்தத்தின்பின் தொழிற்கட்சி ஆட்சியிலிருந்த படியாற்தான் பிரித்தானிய சாம்ராச்சியத்தை உடைத்து அடிமைகளாகவிருந்த நாடுகளுக்குச் சுதந்திரம் கொடுத்தார்கள் என்பதும் புலி ஆதரவாளர்களுக்குத் தெரியாது போலும். ஆனாலும் இன்று பிரித்தானிய தொழிற்கட்சியின் தலைவராகவிருந்த ரோனி பிளெயர் ஈராக் நாட்டுக்குப் படையெடுத்து சதாம் ஹசேயினைக் கொலைசெய்து, ஈராக் மக்களைத் துன்பத்தில் ஆள்த்துவது போல், இலங்கைக்கும் பிரித்தானியப் படையிறங்க வேண்டும் என்ற ஆதங்கத்தை கூட்டத்திற்கு வந்திருந்த புலி ஆதரவாளர்களில் ஒன்றிருவர் பகிர்ந்து கொண்டார்கள்.

கூட்டத்துக்கு வந்திருந்த சில இளைஞர்கள் ‘இவர்கள் (புலி ஆதரவாளர்கள்) எப்படியெல்லாம் சொல்லித் தமிழ் மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கிறார்கள்’ என்று விரக்தியுடன் பேசியதையும் கேட்கக் கூடியதாகவிருந்தது.

கூட்டத்துக்கு வந்திருந்த  தொழிற்கட்சி உறுப்பினர்களான, பழைய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட், பழைய அமைச்சர்களில் ஒருத்தரான கீத்வாஸ், ஐரோப்பியப் பாராளுமன்றப் பிரதிநிதியான குளொட் மொறிஸ், பிரித்தானியப பாராளுமன்றப் பிரதிநிதிகளான சிவோன் மக்டோனால், மைக்கல்கேற், ஸ்ரெலா கிறிஸி, என்போர் தமிழர்களின் ‘ஈழப்’ பிரச்சினையில் கைவைக்கவில்லை. இராஐதந்திரத்துடனான வசனங்களால், தமிழர்கள் ஏன் தொழிற் கட்சியில் சேர வேண்டும் என்று பேசினார்கள். பட்டும்படாத மாதிரி தமிழரின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசினார்கள். நான் இங்க தமிழ்ப் பிரச்சினை பற்றிப் பேசவரவில்லை, லேபர் பார்ட்டி பற்றிப் பேசவந்திருக்கிறேன்’ என்று சிவோன் மக்டோனால்ட் குறிப்பிட்டார்.

தமிழ்ப் பேச்சாளர்கள் ‘இலங்கையில் சிங்களவர்கள் செய்த அதிபயங்கரமான இனப் படுகொலையைப்’ பற்றிப் பேசினார்கள். புலிகள் மற்ற இயக்கங்களுக்குச் செய்த கொடுமைகளையோ, டெலோ உறுப்பினரை ஆரிய குளம் சந்தியில் டயர்களைப் போட்டு உயிரோடு எரித்ததையோ யாரும் அங்கு பேசவில்லை.

டேவிட் மிலிபாண்ட் பேசும்போது இலங்கைத் தமிழர்கள் உலக அரசியலில் தனது பார்வையை விரிவுபடுத்தியிருப்பதாகச் சொன்னார்.

பிரித்தானியாவில் வாழும் ஆசிய மக்களில் மிகவும் சிறந்த முறையில் ஒன்றுசேர்ந்து வேலை செய்பவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று அங்கு வந்திருந்த தமிழர்களுக்கு ஐஸ் வைக்கப்பட்டது. தமிழர்கள் ஒற்றுமையாயில்லாத படியாற்தான் தமிழர்கள் இந்த நிலையிலிருக்கிறார்கள் என்பதைத் தமிழர்களால் அரசியல் பார்வை பெற்ற டேவிட் மிலிபாண்டக்குச் சொல்வாரில்லை.

பாராளுமன்றப் பிரதிநிதியான சிபோன் மக்டோனால்ட் ‘இலங்கைப் பொருட்களை பகிஸ்கரிக்க வேண்டும்’ என்று பிரசாரம் செய்வதாகச் சொல்லப்பட்டது. தமிழக்கடைகளில் வல்லாரைக்கீரை கிடைக்காவிட்டால் விரதச்சாப்பாட்டில் ருசிவராது என்ற உண்மையை அந்தப் பெண்ணுக்கு யாரும் சொல்லவிலலை.

இலங்கைக்குப் பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்ற குரலும் தமிழ்ப் பேச்சுக்களில் ஓங்கி ஒலித்ததது. பொருளாதாரத்தடை மூலம் ஈராக் நாட்டைப் பிரிட்டிசார் பழிவாங்கினார்கள். வெள்ளைக்காரன் மருந்து கொடுக்காமல் ஈராக்கியக் குழந்தைகள் ஆயிரக்கணக்கில் இறந்த கதை தெரிந்தபடியாற்தான் இன்று வெள்ளைக்காரனை நம்பியிருக்காமல் ‘சிங்கள சகோதரங்கள்’ இந்தியாவை நம்புகிறது என்பதையும் புலி ஆதரவாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேற்கு நாட்டின் பொருளாதார வீழ்சியினால் அவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அப்படியிருக்கும்போது, இந்தியாவைப் பகைத்துக்கொண்டு இலங்கையைப் பழிவாங்க பிரிட்டிஷார் தயஙகுவார்கள். இன்று இந்திய, சீன  மூலதனங்கள் இலங்கையை வளம்படுத்துகிறது. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடும் என்பதுபோல் புலிகள் கனவு காண்கிறார்கள்.

இலங்கைக்குப் போய்வரும் பல தமிழர்கள் யாழ்ப்பாணம் எப்படி விருத்தியடைகிறது என்பதைப் பெருமையாகச் சொல்கிறார்கள். இதைப் புலிகள் நம்பத் தயாரில்லை போலிருக்கிறது. இலங்கையில் எப்படியும் ஒரு பிரச்சினையைக் கிளப்பி அதில் பணம் படைத்துத் தனது குடும்பத்தை முன்னேற்றுவதையே பல முதலைகள் விரும்புகிறார்கள் என்பது பல தமிழர்களுக்குத் தெரியும்.

பிரபாகரனை வை.கோ எமலோகம் அனுப்பி விட்டதாக கேபி அறிக்கை விட்டதையும் செவி மடுக்காமல் இன்னும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்குத் துடிக்கும் இவர்களுக்குத் தமிழர்கள் பாடம் படிப்பிக்க வேண்டும்.

இன்று உலகில் நடைபெறும் மாற்றங்ளை அவதானித்தால், நாளைக்குப் பிரித்தானிய அரசு, இலங்கையுடன் பெரிய வர்த்தக உடன்படிக்கையைச் செய்யாது என்று சொல்வதற்கில்லை. இலங்கையின் மன்னார்ப் பகுதிகளில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் எண்ணை பற்றிய முழுத்தகவல்களும் நோர்வே நாட்டில் இருக்கிறது. இலங்கைக்குரிய எண்ணையின்  பலன் இலங்கைக்குக் கிடைப்பதற்கு இலங்கையிடம் விஞ்ஞான, தொழில் வளர்ச்சி கிடையாது. அதனால் இந்தியாவும் பிரித்தானியாவும் இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் செய்யும் நிலை வந்தால் பிரித்தானியாவில் தமிழர்கள் லண்டனில் அரசியல்வாதிகளை வைத்துக் கூட்டம் வைத்துப் படம் எடுப்பதற்கும் வசதி வராது.

இதுவரையும் புலிகள் ஆதரவு கொடுத்த அரசியல்வாதிகள், தோற்றுக்கொண்டே வந்திருக்கிறார்கள். பிரபாகரன் புலிகளின் ஆதரவு அளவுக்கு மிஞ்சிப்போனதால் வைகோ கோஸ்டியால் பரலோகம் அனுப்பப்பட்டார்.

‘கிலாரி கிளிண்டனுக்கான தமிழர்கள் என்று அமெரிக்காவில் புலி ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்தார்கள் அந்தப் பெண்மணி தோற்றுப்போக, முன்பின், மக்களுக்குப் பெரிதாகத்  தெரியாமலிருந்த  ஓபாமா வெற்றி பெற்று இன்று விழிபிதுங்கப் பிதுங்க அமெரிக்கப் பிற்போக்குவாதிகளிடம் பேச்சுவாங்கிக் கொண்டிருக்கறார்.

லண்டனில் மேயராகவிருந்த கென் லிவிங்ஸ்டனைத் தோளிற் சுமக்காத குறையாகக் கொண்டு புலிகள் திரிந்தார்கள் பாவம் அந்த மனிதனுக்கும் படுதோல்வி.

இன்று கனடியக் கவர்ச்சிக் கவிஞரும் அமெரிக்க விரக்தி வழக்கறிஞரும் இதுவரை முப்படையும் வைத்துப் போராடிப் பிரபாகரனால் எடுக்க முடியாத ஈழத்தைத் தமிழருக்கு எடுத்துத்தருவதாகப் பிரசாரம் செய்கிறார்கள். அந்தக் கனவை வைத்துக்கொண்டு சிலர் இன்னும் பணம் பறிக்கிறார்கள் இது கொடுமையிலும் கொடுமை. இலங்கையில் இன்னும் அகதிகளாகத் துயர்படும் ஆயிரக் கணக்கான தமிழர்கள் பற்றி இவர்கள் பேசுவது கிடையாது. இந்தியாவில் கண்ணீர் சிந்தும் இலங்கை அகதித் தமிழர்கள் பற்றி மூச்சும் விடமாட்டார்கள்.

David Milliband Meets London Tamilsஎப்படியும் ஈழம் எடுத்து தமிழருக்குக் கொடுப்பதாகப் பறை சாற்றுகிறார்கள். இதுவரை இருதரம்  தமிழர்கள் கையில் ஈழம் மற்றவர்களால் எடுத்துக் கொடுக்கப்பட்டது. இந்தியா வந்து ஈழம் (கிட்டத்தட்ட) எடுத்து கொடுத்தபோது எதிரியுடன் சேர்ந்து இந்தியாவைத் துரத்தினார்கள். ஈழம் எடுத்துக்கொடுத்த ரஜீவ் காந்தியைப் போட்டுத் தள்ளினார்கள். இந்தியாவுக்கு எதிராகச் சண்டைபிடிக்க ஆயுதம் கொடுத்த அவர்களின்  சினேகிதனாயிருந்த பிரேமதாசாவைக் கொலை செய்தார்கள். நோர்வே நாடு ஈழம் (கிட்டத்தட்ட) என்ற ஒப்பந்தத்திற்கு கொண்டு போனபோது அந்த ஒப்பந்தத்தை உதறிவிட்டுச் சண்டைக்குப் போய் மண்டைகளைப் போட்டார்கள். இப்போது மிலிபாண்ட் மூலம் ஈழம் கேட்கிறார்கள் அதை வைத்துக்கொண்டு யாரைப் பரலோகம் அனுப்பப் போகிறார்கள்?
 
‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நெறிகெட்ட மனிதரை நினைந்து விட்டால்’

(இக்கட்டுரையாளர் தேசம்நெற் ஆசிரியர் குழுவிற்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். நீண்ட கால அரசியல் செயற்பாட்டாளர். எழுத்தாளர். )

Operation Loan Shark கிழக்கு லண்டன் ஈஸ்ற்ஹாமில் தமிழர் சிலர் கைது!!!

Operation_Loan_Shark‘ஒப்ரேசன் லோன் சார்க்’ பொலிஸ் நடவடிக்கையின் கீழ்  ஈஸ்ற்ஹாமில் சில தமிழர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். பொருளாதார ரீதியில் பலவீனமான நிலையில் பொருளாதார அறிவு குறைந்தும் வேறு வழிகளில் பொருளாதார உதவியைப் பெற முடியாதவர்கள் சில தனிப்பட்டவர்களிடம் இருந்து கடன் (லோன்) பெறுகின்றனர். வங்கிகள் போன்ற நிறுவனங்களிலும் பார்க்க அதிகப்படியான வட்டிக்கு கடன்பெறுகின்ற இவர்கள் இக்கடனை மீளச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

தங்கள் கடன் அதற்கான வட்டி மாதாந்தம் கிடைக்கத் தவறும் பட்சத்தில் கடன் வழங்கியவர் பல்வேறு அழுத்தங்களையும் மிரட்டல்களையும் கடன் வாங்கியவர்கள் மீது செலுத்துகின்றனர். இதற்கு வன்முறையும் பயன்படுத்தப்படுகின்றது. இந்தக் கடன் மற்றும் அதனுடன் தொடர்பான பிரச்சினைகளை பொலிஸ் பிரிவின் ‘ஒப்பிரேசன் லோன் சார்க்’ கையாண்டு வருகின்றது.

சில மாதங்களாக லண்டனில் தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற ஈஸ்ற்ஹாம் பகுதியில் ஒப்பிரேசன் லோன் சார்க் நடவடிக்கையில் சில தமிழர்களும் வர்த்தக நிறுவனங்களும் மாட்டியுள்ளனர். வட்டி மகேஸ், கணக்காளர் தர்மலிங்கம் போன்றவர்கள் இந்த ஒப்ரேசன் லோன் சார்க் நடவடிக்கையில் சில மாதங்களுக்கு முன்பாக மாட்டிக் கொண்டனர். இவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது.

இந்தப் பொலிஸ் நடவடிக்கையின் உதவியால் நாடு முழுவதும் 13500 பேரின் 25 மில்லியன் பவுண்கள் பெறுமதியான சட்ட விரோதமான கடன்கள் இல்லாமற் செய்யப்பட்டு உள்ளது என இந்நடவடிக்கைக்குப் பொறுப்பான பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

லண்டன் குரலில் இச்செய்தி வெளியான பின் லண்டன்குரல் உடன் தொடர்பு கொண்ட திருமதி தர்மலிங்கம் தனது கணவர் தவறான தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவும் தற்போது அவர் மீது எவ்வித வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார். தனது கணவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை எனக் காணப்பட்டு அவரூடைய பெயர் மீது இருந்த களங்கம் நீக்கப்பட்டதாகவும் திருமதி தர்மலிங்கம் தெரிவித்தார். தனது கணவர் தற்போது தொடர்ந்தும் கணக்காளராகப் பணியாற்றி வருவதாகவும் அவர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.

ஈஸ்ற்ஹாமில் இது தொடர்பான மற்றுமொரு வழக்கு தற்போது நடந்து கொண்டுள்ளது. இவ்விசாரணை வழக்கு இன்னும் சில வாரங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈஸ்ஹாமில் வதியும் யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த நடராஜா என்பவர் மீதே ஒப்ரேசன் லோன் சார்க் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். நாடராஜா வட்டிக்குப் பணம் கொடுத்ததாகவும் அது பற்றி கடன் பெற்ற ஒருவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து நடராஜா ஏப்ரல் 2010ல் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின் மறுநாளே விடுவிக்கப்பட்டு உள்ளார். தற்போது அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு உள்ளது.

இவர் தீபம் தொலைக்காட்சி சித்திரா நாடகம் மூலம் அறியப்பட்டவர். இந்நாடகத்தில் இவரது மனைவியும் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்போது இவர்கள் இவ்வழக்குத் தொடர்பான காரணங்களுக்காக பரவலாக அறியப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரம் பற்றித் தெரியவருவதாவது புகார் வழங்கியவர் நிதி நெருக்கடியில் இருந்த போது தனது இரண்டாவது வீட்டை  வாடகைக்கு வழங்கி முகாமைத்துவம் செய்ய அதனை செலெக்ற் புரொப்பற்டீக்கு வழங்கி உள்ளார். அதன் மூலம் ஏற்பட்ட நட்பினால் தனது நிதி நெருக்கடிக்கு செலக்ற் புரப்பற்டீயின் உரிமையாளர் வி ஜே போஸை அணுகியுள்ளர். அதற்கு முன்னர் சிறு சிறு உதவிகளைச் செய்துவந்த போஸ் தற்போது கேட்ட 5000 பவுண் உதவியை வழங்க முடியாதுள்ள நிலையை விளக்கி உள்ளார். ஆனால் தனது நிதிநெருக்கடியை வலியுறுத்தி வற்புறுத்திக் கேட்கவே வி ஜே போஸ் நடராஜாவை அறிமுகப்படுத்தினார்.

நிதி நெருக்கடியில் இருந்தவர் நடராஜாவுக்கு அறிமுகமில்லாதவராகையால் நடராஜா ஆரம்பத்தில் பணத்தை வழங்கத் தயங்கினார். பின்னர் நகைகயை பொறுப்பு வைத்து 5000 பவுண்களைப் பெற்றுக்கொண்டார். இப்பரிமாற்றம் இடம்பெற்றது 2007ல்.

இந்தப் பரிமாற்றத்தில் நடராஜா கைது செய்யப்படுவதற்கு அண்மை வரை கடனைப் பெற்றுக் கொண்டவருக்கு வழங்க வேண்டிய வீட்டு வாடகையில் இருந்து 150 பவுண்களை செலக்ற் புரப்பற்டீஸ் கழித்து வந்துள்ளது.

மாதங்கள் ஓடியது. தவணைகள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்தது. இந்நிலையில் கடனைப் பெற்றுக் கொண்டவர் செலக்ற் புரப்பற்டீஸிடம் வாடகை முகாமைத்துவத்திற்கு வழங்கிய வீட்டை அவர்களிடம் இருந்து மீளப் பெற்றுக்கொண்டார். மாதாந்தம் வழங்கிய 150 பவுண்கள் நடராஜாவுக்கு செல்வது தடைப்பட்டது. கடனை மீளளிக்காத பட்சத்தில் நகைகள் விற்கப்படும் என கடன் பெற்றவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இறுதித் தவணையும் வழங்கப்பட்டது.

இறுதித் தவணை வழங்கப்பட்ட அன்று ஏப்ரல் 2010ல் ஹைஸ்ரீற் நோத்தில் உள்ள செலக்ற் புரப்பற்டீஸ், லக்ஸ்மி ஜிவலர்ஸ், மற்றும் நடராஜா வீடு ஆகிய இடங்களை ஒரே நேரத்தில் முற்றுகையிட்ட ஒப்ரேசன் லோன் சார்க் பொலிஸார் அங்கிருந்த ஆவணங்கள் பதிவேடுகள் சிலவற்றை குற்றப் புலனாய்வு விசாரணைகளுக்காக எடுத்துச் சென்றனர். நடராஜாவும் கைது செய்யப்பட்டார்.

இவ்வட்டிக்கடன் விவகாரத்தில் கடன் பெற்றவரிடம் பொறுப்பாகப் பெற்றுக்கொண்ட நகைகள்  லக்ஸ்மி ஜீவலர்ஸில் விற்கப்பட்டதாக புகார் செய்யப்பட்டு இருந்ததாகவும் அதனாலேயே லக்ஸ்மி ஜீவலர்ஸ் இவ்விவகாரத்தில் தொடர்புபட்டதாகவும் தெரிய வருகின்றது.

இப்பின்னணியில் வழக்குத் தொடர்கின்றது.

தீர்ப்பு: பிரசவத்தின் போது ஏற்பட்ட மரணத்திற்கு கிங்ஸடன் வைத்தியசாலை பிரசவ பகுதி ஊழியர்களோ அல்லது நிர்வாகமோ பொறுப்பல்ல.

Kingston_Hospitalசுகதேகி யான ஆண் குழந்தையொன்றை கிங்ஸ்ரன் வைத்தியசாலையில் பிரசவித்த தாய் ஒருவர் இரத்தப்போக்கு காரணமாக இறந்தமை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றுள்ளது. சிறிலங்கா போக்குவரத்து இணைப்பாளர் சசித்ரா கலேலுவ (38) பிராங் அவன்யூ நியுமெய்டனில் வசிக்கும் இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் 25ம் திகதி 1 மணியளவில் இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு அதனைத் தொடர்ந்து மரணமானார். மரணவிசாரணை அதிகாரி டொக்டர் பீற்றர் எலியாஸ் வாக்கு மூலத்தை நெறிப்படுத்தினார்.  திருமதி சசித்ரா கலேலுவவின் மரணத்தைப் பற்றிய முழு விபரங்களையும் விளக்கினார். அந்நேரம் சசித்ரா கலேலுவவின் கணவரும் பிரசன்னமாயிருந்தார்.

லண்டன் தென்மேற்கு மரணவிசாரணை அதிகாரியின் விசாரணையின் போது டொக்டர் மற்றும். பிரசவ வைத்திய நிபணர், பதிவாளர் போனறோர் குழந்தையின் பிரசவத்திற்கு சுகாதார முறைப்படி கருவிகளை பாவித்ததைத் தெளிவு படுத்தினர்.

ஓர் பாதூரமான விசாரணை இந்த மரணம் தொடர்பாக நடந்துள்ளது. டொக்ரர் அந்த நோயாளியின் பெண்ணுறுப்பில் உள்ள ஒரு சிறு நரம்பு இரத்த ஓட்டமின்றி தடைப்பட்டதை விசாரணையின் போது தெரிவித்தார். இந்த முறைப்பாட்டின் முடிவை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என டொக்டர் எலியாஸ் சசித்திரா கலேலுவவின் கணவரை வினவிய போது, இந்த விசாரணை முடிவை மாற்றியமைக்க முடியுமென்று தான் எண்ணவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் அவர்  ஒரு தாதி மாணவியை இரத்தம் ஏற்றுவதற்கு உடனடியாக அதனைக் கொண்டு வரும்படி அழைத்தபோது அவர் 35 நிமிடங்கள் கழித்தே கொண்டு வந்துள்ளார். எப்படி இருப்பினும் இறுதித்தீர்ப்பில் கிங்ஸடன் வைத்தியசாலை பிரசவ பகுதி ஊழியர்களோ அல்லது நிர்வாகமோ பொறுப்பல்ல. இங்கு நடைபெற்ற விசாரணையில் கடும் தண்மையை கருத்தில் கொண்டு தனிப்பட்ட முறையில் சமாதானமாகின்றோம் எனத்தெரிவித்தார். கிங்ஸடன் வைத்தியசாலை பேச்சாளர் தமது ஆழந்த அனுதாபங்களை திருமதி கலேலுவ குடும்பத்தினருக்கு தெரிவித்ததுடன் இது ஒரு துரதிஸ்ட விதமான சம்பவம் என்றும் தெரிவித்தார்.

நோயாளிகளின் பராமரிப்பும், பாதுகாப்பும் முன்னுரிமையிலும் நம்பிக்கையிலுமே தங்கியுள்ளது. ஜனவரி மாதம் இவ்வைத்தியசாலை நிர்வாகம் இத்தவறுக்கும், பாதுகாப்பின்மைக்கும் மன்னிப்புக் கேட்டது.

13 வயதுச் சிறுவன் மீது பாலியல் துன்புறுத்தல்!

ரூரிங்கில் இருந்து மிற்சம் செல்லும் 280ம் இலக்க பஸ்ஸில் எறிய சிறுவன் ஒருவனை நபரொருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். யூன் மாதம் 22ம் திகதி பகல் 12.05 மணிக்கு நடைபெற்ற இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

பஸ் நிறுத்தத்தில் வைத்து குறித்த நபர் சிறுவனின் முழங்காலில் கையை வைத்தபடி உரையாடியுள்ளார். பின் சிறுவன் பிகர்ஸ்மார்ஸ் என்ற இடத்தில் இறங்கிய போது அவனைப் பின்தொடர்ந்து அவனின் மறைவிடத்தைத் தடவி ‘இது பெரியதா’ எனக்கேட்டுள்ளார். இச்சிறுவனுடன் நட்பு கொள்ள விரும்பவதாகவும், சிறுவன் அவனது வேலையை முடித்துவிட்டுத் திரும்பும் வரை தான் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.  பயத்தில் அச்சிறுவன் சத்தமிட்டு தனது உறவினர் ஒருவரை உதவிக்கு அழைத்தபோது அம்மனிதர் ஓடிவிட்டார்.

ஆறடி உயரம். 30 வயது மதிக்கத்தக்க அம்மனிதரின் நடை உடையை அவதானித்த போது அவர் ஓர் இலங்கையராக இருக்கலாம் என நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் இலங்கையரா என்பது உறுதியாகவில்லை. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக உறவில் உள்ள ஆண்கள் இவ்வாறான பாலியஸ் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுவது தற்போது வெளிவருகின்றது. 

கடைக்காரருக்கு நாமம் இட்ட போன்காட் முகவர்!!!

Phone_Cardsலண்டனில் குறிப்பாக கிழக்கு லண்டனில் கடைகளுக்கு போன் காட்டுகளை விநியோகிக்கும் மொத்த விநியோக முகவர் கடைகளுக்கு போன் காட்டுகளை விற்றுவிட்டு தனது நிறுவனத்தை சட்டப்படி வங்குரோத்தாக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளார்.

நியூஹாம் கவுன்சிலின் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த இம்முகவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக போன் காட் மொத்த விநியோகத்தில் ஈடுபட்டு வருபவர். ஈஸ்ற்ஹாம் ஹைஸ்ரீற் நோத்தில் கடையும் வைத்துள்ள இவர் அனுபவமற்ற தனது உறவுக்காரர் ஒருவரின் பெயரில் நிறுவனம் ஒன்றைப் பதிவு செய்து அதனூடாகவே வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். அதனால் சட்டப்படி இச்செயல்களுக்கு அவர் பொறுப்புடையவர் அல்ல.

நீண்ட காலம் இவர் போன் காட் மொத்த விநியோகத்தில் இருந்தமையால் இவருக்கு பெரும் தொகைக் கடன்களை போன் காட் நிறுவனங்கள் வழங்கி இருந்தன. ஆனால் இவர் சில்லறை வியாபாரிகளுக்கு முற்பணம் பெற்றுக் கொண்டே போன் காட்டுகளை விநியோகித்து இருந்தார். ஆனால் போன் காட் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.
தங்களுக்கு வரவேண்டிய கொள்முதல் பணம் வராததால் போன்காட் நிறுவனங்கள் இம்முகவருக்கு வழங்கிய போன் காட்களை பயன்படுத்த முடியாதவாறு செய்தனர். இதனால் ஏற்கனவே முற்பணம் செலுத்தி போன் காட்களைப் பெற்றுக்கொண்ட பல நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் பல நூற்றுக் கணக்காண ஆயிரக் கணக்கான பவுண்களை இழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் தங்கள் வியாபாரத்தில் மிகுந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சில்லறை வியாபாரிகள் நூற்றுக் கணக்கான ஆயிரக் கணக்கான பவுண்களை இந்த போன் காட் மோசடியில் இழந்துள்ளமையால் மிகவும் நொந்து போயுள்ளனர்.

‘பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்தது போலாகியது இந்த போன் காட் விடயம்’ என்கிறார் ஈஸ்ற்ஹாம் ஹைஸ்ரீறில் போன் காட் விற்கும் ஒரு நடுத்தர வயதானவர். ‘இப்பொழுது போன் காட் வியாபாரத்தில் போட்டி அதிகம். நாங்கள் ஒரு நாள் முழுக்க இதில் நின்றாலும் நாளாந்த வாழ்க்கைச் செலவுக்கே உழைப்பது காணாது. ஆனால் இப்ப எனக்கு ஒரு மாத உழைப்பே பறிபோய்விட்டது’ என்று விரக்தியுடன் தெரிவித்தார் அவர்.

தமிழ் போராட்டங்கள் – ஜி20 போராட்டங்கள் போன்றவை தடை செய்யப்படலாம்!!!

Steve_O_Connellலண்டனில் இடம்பெற்ற தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் ஜி20 போன்ற பெரும்  போராட்டங்களை மெற்றோ பொலிட்டன் பொலிஸார் தடைசெய்யவதற்கான தெரிவு அவர்களுக்கு இருப்பதாக அமைச்சரவை உறுப்பினர் ஸ்ரீவ் ஓ கொன்னல் தெரிவித்துள்ளார். இவர் மெற்றோ பொலிட்டன் பொலிஸ் ஆணையகத்தின் குரொய்டன் – சட்டம் பகுதிப் பிரதிநிதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் இக்கருத்தை யூலை 22ல் இடம்பெற்ற இக்குழுவின் சந்திப்பில் வெளிப்படுத்தி இருந்தார்.

பிரித்தானியாவில் ஆட்சியில் உள்ள கொன்சவேடிவ் – லிபிரல் டெமொகிரட் கூட்டாட்சி மெற் பொலிஸ் சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு 25 வீதத்தால் குறைத்துள்ளது. அதனால் மெற் பொலிஸ் தனது சேவைகளை மட்டுப்படுத்திக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளது. அதனால் 7.5 மில்லியன் பவுண் செலவை ஏற்படுத்திய தமிழ் மக்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள்; ஜி20 போராட்டங்கள் என்பனவற்றை எதிர்காலத்தில் அனுமதிக்க முடியுமா என்ற ஐயம் எழுப்பப்பட்டு உள்ளது.

‘தற்போதுள்ள நெருக்கடியான  சூழலில் வாழ்பவர்களை எது முக்கியம் எனக் கேட்டால் அவர்கள் இளைஞர்களின் வன்முறை, கடத்தல், பாதுகாப்பு என்பனவே முக்கியமானது எனப் பதிலளிப்பார்கள். போராட்டங்களைக் கவனிப்பது முக்கிய பொறுப்பாக இருக்க முடியுமா?’ என்று ஸ்ரீவ் ஓ கொன்னல் கேள்வி எழுப்பி உள்ளார்.

‘நான் ஒட்டுமொத்தமாக அனைத்து போராட்டங்களையும் தடை செய்யும் நிலைப்பாட்டைக் கொள்ளவில்லை. பிரித்தானியாவில் போராட்டங்களுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு.  பெரும்பாலான போராட்டங்கள் அனுமதிக்கப்படும். ஆனால் தமிழ் மக்களின் ஜீ20 போன்ற பெரிய அளவிலான போராட்டங்களே இதனால் பாதிக்கப்படும்’ என்றும் ஸ்ரீவ் ஓ கொன்னல் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த மெற் பொலிஸ் கொமிஸ்னர் சேர் போல் ஸ்ரீபன்சன் ‘பிரித்தானியாவுக்கு கருத்துச் சுதந்திரம் தொடர்பில் ஒரு பாரம்பரியம் உண்டு. லண்டனில் இடம்பெறும் போராட்டங்கள் அதில் முக்கியமானவை. இது லண்டன் நகருக்கும் பெருமை சேர்க்கின்ற விடயம்’ எனத் தெரிவித்து இருந்தார்.

சேர் போல் ஸ்ரீபன்சன் மேலும் தெரிவிக்கையில் ‘எதிர்காலத்தில் போராட்டங்களை ஏற்பாடு செய்பவர்களே அவற்றைக் கண்காணிப்பதற்கான தொண்டர்களை ஏற்பாடு செய்வதன் மூலம் பொலீஸ்க்கு ஏற்படும் செலவைத் தவிர்க்க முடியும்’ என்றார்.

ஸ்ரீவ் ஓ கொன்னலின் கருத்தை எதிர்த்த மெற் பொலிஸ் ஆணையகத்தின் தொழிற்கட்சி உறுப்பினர் வாஸ் சோகுரோஸ் ‘ஸ்ரீவ் ஓ கொன்னல்  எமது போராடும் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமையை கீழ்ப்படுத்தவும் பொலீஸ் வரவுசெலவுத் திட்டத்தை மேலும் 25 வீதத்தால் குறைக்கவும் சொல்கின்றாரா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

லண்டனில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் மக்டோனால்ட் சாப்பிட்டார் என சண் டெய்லி மெயில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு இருந்தன. இதற்கு எதிராக பரமேஸ்வரன் தொடுத்த வழக்கில் நீதிமன்ற விசாரணைகள் இல்லாமலேயே இரு தரப்பினரும் உடன்பாட்டுக்கு வந்து யூலை 29ல் இரு பத்திரிகைகளும் தங்களது செய்தி தவறானது எனத் தெரிவித்தனர். இரு பத்திரிககைளும் இணைந்து 77500 நட்டஈடு வழங்கவும் உடன்பட்டனர்.