::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

“இனி என்ன செய்யப்போகிறோம்’ காங்கிரஸை சங்கடப்படுத்தும் சி.டி.

IDP_Camp_Injured_Manகுண்டு வெடிப்புக் காட்சிகள், அகோர மரணங்கள், அழுது புலம்பும் பெண்கள், கால்நடைகள் போன்று நீண்ட தூரம் காணப்படும் அகதிகள் என்பனவற்றின் பின்னணியிலான பாடல் அடங்கிய சி.டி.யானது இந்திய காங்கிரஸ் கட்சிக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

“இனி என்ன செய்யப்போகிறோம்’ என்பது பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள சி.டி.யின் தலையங்கமாகும். இப்போது இச் சி.டி. பரந்தளவுக்கு சுற்றோட்டத்திற்கு விடப்பட்டிருக்கிறது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிஸுக்கு எதிராக வாக்களிக்குமாறு வேண்டுகோளும் இந்த சி.டி.யில் விடுக்கப்பட்டுள்ளது.

16 நிமிடங்கள் அடங்கிய இச் சி.டி.யானது பார்ப்பவர்களின் அபிப்பிராயத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக நியூஇன்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

வவுனியாவில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு மாத்தளையிலிருந்து உணவுப்பொருட்கள் அனுப்பிவைப்பு

Wanni_War_IDPs
வவுனியாவில் தஞ்சமடைந்துள்ள வடபகுதி அகதிகளுக்கு இவ்வார இறுதிக்குள் மாத்தளையிலிருந்து மற்றுமொரு தொகை அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மாநகர பிதா முகம்மது ஹில்மிகரீம் தெரிவித்தார்.

மாத்தளை நகர சர்வமதத் தலைவர்கள், பாடசாலைகள் சமூகநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரால் சேகரிக்கப்பட்ட ஒரு தொகை அத்தியாவசியப் பொருட்களை கடந்த வாரம் முற்பகுதியில் வவுனியாவுக்கு எடுத்துச் சென்று கையளித்தபோது அங்கு கடமையில் ஈடுபட்டுவரும் மாத்தளையைச் சேர்ந்த பிரிகேடியர் ஷவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் சஹீட் ஆகியோர் எம்மை சந்தித்து மேலும் ஒரு தொகை அத்தியாவசியப் பொருட்களை அனுப்பிவைக்குமாறு எம்மிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

அத்துடன் வவுனியாவில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு பெருந்தொகையான அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படுவதாகவும் நாட்டுமக்கள் இன, மத, மொழி பேதமின்றி மனிதாபிமான ரீதியில் இம்மக்களுக்கு நம்மாலான உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரச, மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் பாடசாலை மாணவர்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் உடை, தண்ணீர்ப் போத்தல், மருந்துவகைகள், பால்மா, உணவுப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை எதிர்பார்க்கிறோம்.

பொருட்களை அன்பளிப்பு செய்ய விரும்புவோர் அவற்றை மாத்தளை நகர சர்வமதத் தலைவர்களில் இவ்வார இறுதிக்குள் ஒப்படைக்கலாம், வாரநாட்களில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரையிலான காலப்பகுதிக்குள் மாத்தளை மாநகரசபை காரியாலயத்தில் ஒப்படைக்கலாம்.

இடம்பெயர்ந்துள்ள மாணவர்களுக்கு கல்வி வழங்க விசேட செயல்திட்டம். யுனிசெப் நிறுவனம் உதவி – பசில் எம்.பி.

20090424063601srilanka4.jpgஇராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள சுமார் 40 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி வசதிகள் அளிப்பதற்காக யுனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் விரைவில் விசேட திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதிக்கு சென்று இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆராய்ந்த அவர் இங்கு மேலும் கருத்துத் தெரிவித்ததாவது,

பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள எஞ்சிய மக்கள் விரைவில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரவுள்ளனர். அவர்களை மெனிக்பாம் 4ஆவது வலயத்தில் தங்கவைக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நபருக்கும் நாளாந்தம் 15 லீட்டர் நீர் வழங்க வேண்டும் என சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன.

ஆனால் நாம் நாளாந்தம் 50 லீட்டர் நீர் வழங்கி வருகிறோம். முகாம்களில் உள்ள மக்களுக்கு நீர் வசதி அளிக்க 105 கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 60 நீர் பவுசர்களினூடாக நீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும் 60 கிணறுகள் தோண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கென நாளாந்தம் 87 ஆயிரம் உணவுப் பார்சல்கள் வழங்கப்படுகின்றன. சமைத்த உணவுக்குப் பதிலாக அவர்களாக சமைப்பதற்கு விரைவில் வசதிகள் அளிக்க உள்ளோம்.

விரைவில் இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் சமையல் உபகரணங்கள் கிடைக்க உள்ளன. அவற்றோடு ஒரு வாரத்துக்கு தேவையான அரிசி அடங்கலான அத்தியாவசியப் பொருட்கள், ஆடைகள் என்பனவும் வழங்கப்படவுள்ளன.மருத்துவ வசதிகள் அளிக்க வரும் வெளிநாட்டு முகவர்களை முகாம்களில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு முன்பாக அவர்கள் தொடர்பாக இலங்கை மருத்துவ கவுன்ஸிலின் சிபாரிசு பெறப்படும் என்றார்.

இலங்கையில் முகாம்களில் உள்ள முதியவர்கள் வெளியே அனுப்பப்டுகின்றனர்

mahinda-samarasinha.jpgஇலங்கையின் வடக்கே பல்வேறு இடங்களில் உள்ள் முகாம்களிலிருந்து 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் வெளியே அனுப்பபடுவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக இலங்கை அரசின் மனித உரிமைகள்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தமிழோசையிடம் கூறும் போது, இந்த திட்டமானது ஏற்கனவே செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்றும், ஏற்கனவே சுமார் இரண்டாயிரம் முதியவர்கள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

ஏற்கனவே உள்ள முதியோர் இல்லங்களுக்கும் மேலாக புதிய இடங்களுக்கும் தாங்கள் ஏற்பாடு செய்து இருப்பதாகவும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும், இந்துக் கோயில்களிலும் இவர்களைத் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

வவுனியாவில் புனர்வாழ்வு நிலையத்தில் வன்னியிலிருந்து வந்த 800 இளைஞர்கள்

ltte_.jpgவவுனியாவில் இயங்கும் புனர்வாழ்வு நிலையத்தில் வன்னியிலிருந்து வந்த 800 க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வந்து சரணடைந்தவர்களே இங்கு தங்கவைக்கப்பட்டிருப்பதாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது.

இது பற்றி படைத் தரப்பு கூறுகையில்; படையினரிடம் சரணடைந்தவர்களுக்குரிய புனர்வாழ்வு நிலையம் வவுனியாவில் இயங்க ஆரம்பித்துள்ளது. நீதி அமைச்சின் கீழ் இந்த நிலையம் இயங்குகிறது.

வவுனியா மன்னார் வீதியிலுள்ள நெளுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரியே புனர்வாழ்வு நிலையமாக இயங்குகின்றது. வவுனியாவில் படையினரிடம் சரணடைந்த 800 க்கும் மேற்பட்டவர்கள் இங்கு தங்கவைக்கப்பட்டு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

வன்னியிலிருந்து மக்களுடன் இடம்பெயர்ந்து வந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்திருந்தனர். இவர்கள் தங்கவைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கவே இந்த நிலையம் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சரணடைந்த பலர் வெலிக்கந்த நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தொழில் பயிற்சியும் இவர்களுக்கு அளிக்கப்படவுள்ளது. இவர்களில் பெண்களும் உள்ளனர்.

பாதுகாப்பு வலயத்தில் செல் தாக்குதல் – படைத்தரப்பு மறுப்பு

udaya_nanayakkara_brigediars.jpgபாதுகாப்பு வலயப்பகுதியில் உள்ள முள்ளிவாய்கால் பகுதியில் உள்ள வைத்தியசாலை மீது நேற்று (02.05.2009) காலை செல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் 64 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 87 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பாதுகாப்பு தரப்பினர் முற்றாக மறுத்துள்ளது. மக்களின் நலன் கருதி தாம் வான் தாக்குதல்களையும், கனரக ஆயுத பாவனையையும் மேற்கொள்வதில்லை என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும் என அவர் மேலும் கூறியுள்ளார்.  

பாதுகாப்பு வலயத்தினுள் விமானம் மூலம் உணவுப் பொதிகளை போடுமாறு கோரிக்கை

Wanni_War_IDPs இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியரான சுஜன்தி ராஜாராம், மோதல் தவிர்ப்பு வலயத்தில் உள்ள பொது மக்களின் பட்டினிச்சாவைப் போக்க, விமானங்கள் மூலம் உணவுப் பொதிகளை போடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிடமே வைத்தியர் சுஜன்தி ராஜாராம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

வன்னி மக்களின் நலன் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறை அற்ற போக்கினை கடைப்பிடிக்கும் நிலையில், அது குறித்து, அவர் எழுதியுள்ள வன்னியின் மருத்துவ நிலைமைகள் எனும் தலைப்பிலான அறிக்கையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தமிழர் மறுவாழ்வுக்கென வழங்கப்படும் நிதி, அவர்களை அழிக்கவே பயன்படுத்தப்படும் : யசூசி அகாஷியிடம் தமிழ் கூட்டமைப்பு ஆட்சேபம்

fily-ap.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ள மக்களின் நிவாரணப் பணிக்காக ஜப்பான் வழங்கவுள்ள 480 மில்லியன் ரூபா அவர்களின் மறுவாழ்வுக்குப் பயன்படுத்தப்படமாட்டாது. அந்த நிதி யுத்தத்துக்கே செலவிடப்படும். நிவாரணத்துக்கென நிதிவழங்கி தமிழின அழிப்புக்கு ஜப்பான் துணைபோகக் கூடாது.

ஜப்பானின் விசேட தூதர் யசூசி அகாஷியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கண்டவாறு கேட்டுள்ளது. தமிழ் இன அழிப்பில் ஈடுபடும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் இடம்பெயர்ந்த தமிழ்மக்களின் நிவாரணப் பணிகளுக்காக 480 மில்லியன் நிதியை கையளிக்க வேண்டாம் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜப்பான் தூதுவர் யசூசி அகாஷியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளர்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த 1,82,480 பேர் நலன்புரி நிலையங்களில்-வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

chals_.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்த 1,82,480 நானூற்றி எண்பது பேர் வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 1,67,330பேர் வவுனியா மாவட்டத்தில் உள்ள இருபத்திநான்கு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

அகதிகள் தொடர்பாக வவுனியா அரசாங்க அதிபர் அலுவலகத்தினால் கடந்த 30ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 11,150 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 4 ஆயிரம் பேரும் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அகதிகளின் எண்ணிக்கை விபரம் வருமாறு :

வவுனியா மாவட்டத்தில் அரவிந்தோட்ட சைவ வித்தியாலயத்தில் 365 குடும்பங்களைச் சேர்ந்த 1183 பேர்,

ஆனந்தகுமார சுவாமி வலயம் ஒன்றில் 11600 பேர்,

கதிர்காமம் கிராமத்தில் 5904 குடும்பங்களைச் சேர்ந்த 22, 143 பேர்,

அருணாசலம் கிராமத்தில் 10831 குடும்பங்களைச் சேர்ந்த 37873 பேர்,

செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் 550 குடும்பங்களைச் சேர்ந்த 1793 பேர்,

பிள்ளையார்குளம் பாடசாலையில் 491 குடும்பங்களைச் சேர்ந்த 1575 பேர்,

முதலியார் குளம் பாடசாலையில் 288 குடும்பங்களைச் சேர்ந்த 817 பேர்,

ராமநாதன் வலயம் இரண்டில் 52,000 பேர்,

பம்பைமடு விடுதியில் 1421 குடும்பங்களைச் சேர்ந்த 4569 பேர்,

நெலுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் 1519 குடும்பங்களைச் சேர்ந்த 3491 பேர்,

சைவபிரகாச மகா வித்தியாலயத்தில் 1375 குடும்பங்களைச் சேர்ந்த 3437 பேர்,

தமிழ் மகா வித்தியாலயத்தில் 1808 குடும்பங்களைச் சேர்ந்த 4929 பேர்,

வவுனியா முஸ்லிம் வித்தியாலயத்தில் 509 குடும்பங்களைச் சேர்ந்த 1526 பேர்,

காமினி மகா வித்தியாலயத்தில் 734 குடும்பங்களைச் சேர்ந்த 1645 பேர்,

கோவில் குளம் மகா வித்தியாலயத்தில் 562 குடும்பங்களைச் சேர்ந்த 1829 பேர்,

கல்வியியற் கல்லூரியில் 1944 குடும்பங்களைச் சேர்ந்த 5990 பேர்,

பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் 570 குடும்பங்களைச் சேர்ந்த 1669 பேர்,

தமிழ் மகாவித்தியாலயத்தில் 465 குடும்பங்களைச் சேர்ந்த 1237 பேர்.

கந்தபுரம் வாணிவித்தியாலயத்தில் 1073 பேர்,

பூவரசங்குளத்தில் 994 பேர்,

தாண்டிக்குளம் பாடசாலையில் 561 குடும்பங்களைச் சேர்ந்த 1492 பேர்,

புதுக்குளம் பாடசாலையில் 989 குடும்பங்களைச் சேர்ந்த 3124 பேர்,

ரம்பைக்குளம் மகளிர் வித்தியாலயத்தில் 1350 பேர்,

கோமரசன் குளம் மகாவித்தியாலயத்தில் 2150 பேரும் தங்கி உள்ளனர்.

இதைத் தவிர யாழ். மாவட்டத்தில் உள்ள நலன்புரி நிலையங்களில் 3791 குடும்பங்களைச் சேர்ந்த 11150 பேர் தங்கி இருப்பதுடன் திருகோணமலை மாவட்டத்தில் மூன்று பாடசாலைகளில் 4000 பேர் தங்கி உள்ளனர்.

அவர்கள் தங்கியிருக்கும் பாடசாலைகளின் விபரம் வருமாறு:

அரபாத் நகர் முஸ்லிம் வித்தியலயத்தில் 1560 பேரும்,

முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 1797 பேரும்,

சிங்கள மகா வித்தியாலயத்தில் 643 பேரும் தங்கி உள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள அகதிகள் குறித்து மாவட்ட அரச அதிபர் தகவல் தருகையில், எமது மாவட்டத்தில் உள்ள முகாம்களில் தங்கி இருப்போரில் ஐம்பத்து ஐயாயிரம் பேரைத் தவிர, ஏனையோர் சமைத்து சாப்பிடுகின்றனர். அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நலன்புரி நிலையத்திற்கும் நிரந்தரமாக டாக்டர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நடமாடும் வைத்திய சேவைகளும் நடத்தப்படுகின்றன. இதுவரை முன்னூற்றி ஐம்பது மில்லியன் ரூபாவரை செலவிடப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களுக்கு எம்மால் முடிந்த அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம். 

வன்னி மக்களுக்கு ஒருவேளையாவது உணவளித்து உயிர்காக்க உதவுங்கள் – திருமலை, மட்டு .மறை மாவட்ட துணை ஆயர் அவசர கோரிக்கை

Wanni_War_IDPsமன்னார் மாவட்டத்தில் தினமும் பஸ்களில் கொண்டுவந்து குவிக்கப்படும் வன்னி அகதிகளுக்கு குடிநீருக்கும் உணவுக்கும் உதவுமாறு திருமலை, மட்டு .மறை மாவட்ட துணை ஆயர் வண. பொன்னையா ஜோசப் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;கடந்த 24 ஆம், 25 ஆம் திகதிகளில் மன்னாருக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டு விட்டு திரும்பிய பின் அவர் மட்டு. ஆயரில்லத்தில் வைத்து இந்த அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார்.

வன்னியின் போர் பிரதேசத்துக்குள்ளிருந்து தினம் தினம் வவுனியாவுக்குக் கொண்டுவரப்படும் அகதிகளில் பெரும்பாலானோரை வவுனியா செட்டிகுளம் மன்னார் வீதியின் இரு மருங்கிலுமுள்ள காட்டுப்பிரதேசங்களில் அரசாங்கம் கொண்டுவந்து இறக்கியுள்ளது. இப்பகுதிகளை அரச அதிகாரிகள் இயந்திரங்களை கொண்டு துரிதமாக துப்புரவு செய்துகொடுக்க, அவ்விடங்களில் தற்காலிக கொட்டில்களும் கூடாரங்களும் மலசல கூடங்களும் அமைக்கும் அவசர பணிகளில் யுனிசெப் அமைப்பும் கரித்தாஸ்(செடெக்) நிறுவனமும் இணைந்து செயலாற்றிக்கொண்டிருக்கின்றன.

தாம் மன்னாரில் நின்ற கடந்த 24 ஆம் ,25 ஆம் திகதிகளில் மிகப் பெருந்தொகையான பெண்களும் சிறுவர்களும் சிறுமியர்களும் வயது முதிர்ந்த ஆண்களும் பஸ்களில் கொண்டுவந்து இறக்கப்படுவதைக் கண்டோம். இவர்கள் உடுத்த உடுப்புக்கு மாற்றுடையில்லாமல் வெறும் கையினராகவே காணப்பட்டனர். இவர்கள் மத்தியில் ஆண்கள் தொகை குறைவாயிருந்தது. இறக்கப்பட்டவர்களில் பலரும் காடுமேடென்றும் பாராமல் பசியினாலும் தாகத்தினாலும் மயங்கிவீழ்ந்து கிடக்கக் காணப்பட்டனர். இந்தக்கையறு நிலையில் அவர்களுக்கு எதுவும் வழங்கக்கூடிய நிலையில் யாரும் இருக்கவில்லை. இவர்களுக்கு தினமும் ஆயிரம் உணவுப் பார்சல்களையாவது வழங்கமுடியாத நிலையில் தாங்களிலிருப்பதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் என்னிடம் கூறிக்கண்ணீர் வடித்தார்.

இந்த நேரத்தில் இன,மத பேதங்களுக்குமப்பால் மனிதநேயத்துடன் மற்றவர்கள் அந்த அகதிகளுக்கு உணவளிக்க முன்வரவேண்டும். நாள்தோறும் அவர்களுக்கு உணவளிப்பதே முக்கியம்.அதுவே அவசரம். அதன்பிறகே மற்றதெல்லாம். நேற்றைய நாள் கடந்துவிட்டது. நாளை என்ன நடக்குமோ தெரியாது. இன்றைய நாள் எமது கரங்களில் உள்ளது. இன்று துன்பத்தில் ஓலமிடும் எமது சகோதரர்களின் அவலக்குரலைக்கேட்டும் நாம் உதவிசெய்யமறுத்தால், பின் வாங்கினால் நாம் வாழ்ந்தும் பயனில்லை. நாளைவரை காத்திருக்கவேண்டாம். இன்று அவர்களுக்கு உணவளிக்காவிட்டால் நாளை அவர்கள் இருக்கமாட்டார்கள்.

உணவோடு குடிநீரும் குழந்தைகளுக்காக பால்மா, மருந்துப்பொருட்கள்,உடைகளும் அவர்களுக்குத்தேவை .அவலப்படும் இவர்களுக்கு செய்யும் உதவிகள் அந்த இறைவனுக்கே செய்வதாகுமென்று ஆயர் தெரிவித்தார்.