::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு : காலச்சுவடு

Wanni_War_Bombed_Safe-Zoneஉண்மைகள் சொல்லப்படாதவரையில் பொய்களின் ஊர்வலமே நடக்கும் என்பார்கள். இந்தப் பொய்கள் எப்போதும் எல்லோரையும் எல்லாவற்றையும் மயானத்துக்கே அழைத்துச் செல்லும். வன்னியுத்தமும் ஈழத்தமிழர் போராட்டமும் ஏறக்குறைய இத்தகையதொரு நிலையையே இன்று எட்டியுள்ளன. விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டம் பற்றியும் உற்பத்தி செய்யப்பட்ட புனைவுகள் ஒருபுறமும், சிறிலங்கா அரசினதும் சிங்களத் தரப்பினதுமான புனைவுகள் மறுபுறமுமாகப் பெரும் புனைவுகள் நம்மைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் புனைவுகளுக்கெதிரான மறுப்புக் குரல்களோ எதிர்க் குரல்களோ கலகக் குரல்களோ உரியமுறையில் வெகுசனத்திரளால் கவனத்திற்கொள்ளப் படவில்லை. எனவே இன்று வன்னி யுத்தம் பற்றியோ புலிகளின் இறுதி நாட்களைப் பற்றியோ அங்கே இருந்த மக்களின் நிலை பற்றியோ கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்தோ எதுவும் தெரியாதவாறு இந்தப் புனைவு மண்டலம் நீள்கிறது. இது மிகத் துயரமான ஒரு நிலை; அது மட்டுமல்ல ஆபத்தான நிலையும்கூட.

வன்னியில் என்ன நடந்தது? புலிகள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டனர்? அல்லது எப்படித் தோற்றனர்? உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இது போன்ற ஏராளமான கேள்விகள் நம் முன் விரிந்து கிடக்கின்றன. ஐ.நா. உட்படப் பல்வேறு தரப்பினரும் இந்த நிலைமைகள் மற்றும் விவரங்கள் தொடர்பாகப் பலவகையான அபிப்பிராயங்களைத் தெரிவித்து வருகின்ற போதும் உண்மை நிலவரத்தை எந்தத் தரப்பும் இன்னும் முழுமையாகக் கண்டறியவில்லை. உண்மை நிலவரத்தை அறிந்தவர்கள் வன்னி மக்கள் மட்டுமே. ஆனால் அவர்களோ இப்போது வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் நலன்புரி நிலையங்கள் என்ற தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் வெளியுலகத்துடன் தொடர்புகொண்டு பேசக்கூடிய நிலைமை உருவாகுமானால் எல்லாவற்றினதும் மெய்விவரங்களும் வெளித்தெரிய வரும். ஆச்சரியமளிக்கூடிய அதிர்ச்சியளிக்கூடிய உண்மைகள் அப்போது வெளியாகும்.

முதலில் இந்தப் பத்தியாளர் இன்னும் எல்லா உண்மைகளையும் சொல்ல முடியாத அச்சத்துடனேயே உள்ளார் என்பதை நீங்கள் உணர வேண்டும். இதுதான் இலங்கை நிலவரம். ஆனால் எல்லா உண்மைகளையும் இங்கே சொல்ல முடியாவிட்டாலும் பொய்யுரைப்பதைத் தவிர்த்திருக்கிறார். விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் உருவாக்கிய அச்சப் பிராந்தியமும் அபாய வெளிகளும் இன்னும் முற்றாக நீங்கவில்லை. புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் சிறிலங்கா அரசால் தொடரப்படும் நெருக்குவாரங்களும் ஜனநாயக மறுப்பும் ஊடகச் சுதந்திரத்திற்கு விடப்பட்டிருக்கும் சவால்களும் அகலவில்லை. எனவே வன்னியில் புலிகளின் தடைகள், ஜனநாயக மறுப்பு, கருத்து சுதந்திரமின்மைக்குள் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேச முடியாமை என்னும் நிலைமை இருந்ததைப் போலவே இப்போது அங்கிருந்து தப்பிவந்து இடைத்தங்கல் முகாம், (நலன்புரி நிலையம்) என்ற தடுப்பு முகாம்களில் இருந்துகொண்டும் எல்லாவற்றையும் பேச முடியவில்லை.

இங்கும் தொடர்பு வசதி இல்லை. அது மட்டுமல்ல, வன்னியிலிருந்து வெளியேறப் புலிகள் விதித்திருந்த பயணத் தடையைப் போன்றே இந்த முகாமிலிருந்தும் யாரும் வெளியே செல்ல முடியாது. ஒரு கைதி நிலையே (தடுப்பு நிலையே) தொடர்கிறது. அதனால் இந்தப் பத்திகூட மிக ரகசியமாகவே எழுதப்படுகிறது. வெளியுலகில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. இந்தத் தகவல் யுகத்தில் எந்தத் தொடர்பாடலுமில்லாமல் எல்லாவற்றிலிருந்தும் எல்லோருடனுமான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கிறோம். ஒரு பத்திரிகை வாசிப்பதற்குக்கூட ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இப்படியே இன்று மூன்று லட்சம் வரையான சனங்கள் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றைப் பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம். இப்போது வன்னியில் என்ன நடந்தது என்று பார்ப்போம். ஏனெனில் வன்னி நிலையே, புலிகளின் அரசியலே, ஈழத் தமிழரின் இந்த வீழ்ச்சிக்கு முழுக் காரணம்.

2

2006 ஆகஸ்ட் 11இல் விடுதலைப் புலிகள் யுத்தத்தை ஆரம்பித்ததுடன் வன்னிக்கான கதவுகள் பெரும்பாலும் மூடப்பட்டுவிட்டன. ஒரு பக்கத்தில் சிறிலங்கா ராணுவம் பாதைகளை மூடியது என்றால் மறுபுறத்தில் புலிகள் சனங்களுக்கான தொலைத்தொடர்புகள், போக்குவரத்து, பயண அனுமதி எல்லாவற்றையும் மூடினார்கள். வன்னி மக்கள் இரண்டு தரப்பினருடைய நெருக்கடிகளுக்கும் முற்றுகைக்கும் உள்ளாக வேண்டியதாகியது. யுத்தம் ஓய்வற்று நடந்த இரண்டரை ஆண்டுகளிலும் வன்னி மக்கள் பட்ட துயரங்களும் கொடுமைகளும் அழிவுகளும் அவமானங்களும் சாதாரணமானவையல்ல.

போர் தொடங்கியவுடன் புலிகள் முதலில் செய்த வேலை கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதுதான். பால், வயது வேறுபாடு இல்லாமல் எல்லாக் குடும்பங்களில் இருந்தும் போருக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்திப் பிள்ளைகளைப் பிடித்துச் சென்றனர். அப்போது இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வன்னியில் இருந்தது. ஐ.நா. உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் பலவும் வன்னியிலிருந்தன. புலிகளின் ஊடகங்கள் கட்டாய ஆள் சேர்ப்பை வலியுறுத்தியும் அதை நியாயப்படுத்தியும் பரப்புரை செய்தன. இவை எதைப்பற்றியும் இந்தச் சர்வ தேச அமைப்புகளும் பிரதிநிதிகளும் எந்தவகையான அபிப்பிராயமும் சொல்லவில்லை. அவை இதில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தன. புலிகள் இதைத் தமக்கான வசதியாகக் கருதி மெல்லமெல்ல தமது பிடியை இறுக்கி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர். சிறிலங்கா ராணுவம் மன்னார் மாவட்டத்திலிருந்து போரைத் தீவிரப்படுத்தி மெல்லமெல்ல வன்னி மையத்தை நோக்கி நகரத் தொடங்க, புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு மிகத் தீவிரமடையத் தொடங்கியது. ஏற்கனவே கிழக்கையும் அதன் தலைமைக்குரிய கருணாவையும் புலிகள் இழந்ததையும் நினைவிற் கொள்க.

புலிகள் எதிர்பார்த்திராத அளவுக்கு சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகள் அமைந்தன. மரபு வழியில் படைக் கட்டமைப்பையும் அதே வகையிலான தாக்குதல் மற்றும் படை நடவடிக்கைகளையும் குலையவிடக் கூடாது என்ற கவனத்தோடு புலிகள் செயல்பட்டனர். ஆனால் சிறிலங்கா ராணுவமோ மரபுவழி ராணுவமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதும் அதன் ஒரு பிரதான அம்சமாக ஒரு முக்கிய அலகு கெரில்லா போர்முறையைப் பின்பற்றிப் புலிகளின் மீது நடவடிக்கைகளில் ஈடுபட்டது. புலிகளை நிலைகுலைய வைக்கும் தாக்குதல்களை சிறிலங்கா ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் மிகக் கச்சிதமாக நடத்தின. இந்தத் தாக்குதல்களில் புலிகளின் முக்கியத் தளபதிகள் பலரும் கொல்லப்பட்டனர். இவ்வாறான ஒரு தாக்குதலின்போது புலிகளின் கொழும்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சார்ள்ஸ் என்பவர் (கேனல் சார்ள்ஸ்) மூன்று உதவியாளர்களுடன் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வன்னியின் புவியியல் அமைப்பு (காடும் ஆறுகளும் பெருங்குளங்களும்) இராணுவத்துக்கு வாய்ப்பாகியது. புலிகள் தமது திறன் வாய்ந்த கெரில்லாப் போர்முறையை முழுதாகக் கைவிட்டு முற்று முழுதாக மரபுவழிப் போர்முறையைக் கையாண்டனர். இதே வேளை புலிகளின் கடல்வழி ஆயுத வருகையை-விநியோகத்தை, சிறிலங்கா விமானப் படையும் கடற்படையும் இணைந்து முழுமையாகத் தடுத்திருந்தன. புலிகளின் நான்கு ஆயுதக் கப்பல்கள் கடலில் தாக்கி அழிக்கப்பட்டிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது. இதன் பின்னணியில் இந்தியாவும் அமெரிக்காவும் இருந்ததாக நம்பப்படுகிறது.

முக்கியமாக நான்காம் கட்ட ஈழப்போர் என்று வர்ணிக்கப்படும் இந்தக் காலகட்டப் போரில் புலிகளின் கடற்படை அல்லது கடற்புலிகளின் பலம் முற்றாகச் சிதைக்கப்பட்டது. அத்துடன் புலனாய்வுத் துறையும் அவர்களின் கரும்புலிகளின் அணியும் செயலற்ற நிலமைக்குத் தள்ளப்பட்டன. கொழும்பு நடவடிக்கைகளுக்கு இடமளிக்காமல் சிறிலங்கா அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டன. தவிர வன்னிக்கு வெளியே யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை மாவட்டங்களின் சிறு அளவிலான ராணுவ நடவடிக்கைகளையோ அரசியல் செயல்பாடுகளையோ மேற்கொள்ள முடியாதவாறு சிறிலங்கா அரசின் புலனாய்வு நடவடிக்கைகளும் இறுக்கமும் இருந்தன. அத்துடன் கேனல் கருணா என்ற விநாயக மூர்த்தி முரளிதரனின் பிரிவோடு கிழக்கில் புலிகளின் ஆதிக்கமும் அதன் வழியான எல்லா வளங்களும் பாதிக்கப்பட்டன. குறிப்பாகப் புலிகளின் போருக்குக் கிழக்கு இளைஞர்கள் பெரும் பலமாக இருந்தனர். கருணாவின் பிரிவோடு இது தடைப்பட்டது.

இதேவேளை கடலையும் காட்டுப்பகுதியையும் மெல்லமெல்ல தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் சிறிலங்கா ராணுவம் கொண்டுவந்தது. படைத்தரப்பு மன்னாரிலிருந்து நடவடிக்கையை மேற்கொண்டு வன்னி மேற்கின் காட்டுப் பகுதிகளையும் சிறுபட்டணங்களையும் முதலில் கைப்பற்றியது. ராணுவரீதியில் புலிகளின் ஆயுதமும் கவசமும் கடலும் காடுமே. மறுபுறத்தில் மக்கள். படைத்தரப்பின் போர் உத்தியாகக் காட்டையும் கடலையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்ததன் மூலம் புலிகளைப் பாதுகாப்பற்ற வெளிக்குள் தள்ளிவிட்டனர். இதனால் புலிகள் சனங்களை அரணாகப் பயன்படுத்தத் தொடங்கினர். புலிகளின் அழிவு என்பது இது போன்ற ஏனைய பல தவறான நடவடிக்கைகள் மூலம் ஏற்கனவே நிகழ்ந்திருந்தாலும் சனங்களைக் கட்டாயப்படுத்திப் போருக்கு இழுத்ததன் மூலம் மேலும் பாதகமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். சனங்களுக்கும் புலிகளுக்குமான முரண் ஒரு கட்டத்தில் உச்சநிலைக்குப் போய்விட்டது.

கட்டாய ஆள்சேர்ப்பை வலியுறுத்திய புலிகளின் ஊடகங்கள் மறுபக்கத்தில் மக்கள் தாமாக முன்வந்தே போரில் இணைகின்றனர் என்று ஒன்றுக்கொன்று முரணான செய்திகளை வெளியிட்டன. சிறிலங்கா அரசு சர்வதேசத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதைப் புலிகள் இன்னும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். வெளியே எந்தச் செய்திகளும் வர மாட்டாது என்பது உறுதியானவுடன் முழு அட்டகாசமாகத் தமது நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கட்டாய ஆள் பிடிப்பை வலியுறுத்திப் பேசியும் எழுதியும் வந்தனர். இந்த ஆள் சேர்ப்புக்கு (இதை வன்னி மக்கள் ‘லபக்’, ‘ஆள்பிடி’, ‘கொள்ளை’ என்ற சங்கேதப் பெயர்களில் குறிப்பிட்டனர்) எதிராகச் செயல்படுவோருக்கு மரண தண்டனை வழங்கலாம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். வன்னியிலிருந்து வெளிவந்த புலிகளின் ‘ஈழநாதம்’ பத்திரிகையும் ‘புலிகளின் குரல்’ வானொலியும் விடுதலைப் புலிகள் என்ற கொள்கை விளக்க ஏடும் இது தொடர்பான கட்டுரைகளையும் நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்தின.

ஆக மிக மோசமான ஒரு நிலை உருவானது. இதே வேளை படையினரின் முன்னேற்றம் தீவிரமடைந்து கொண்டேயிருந்தது. புலிகள் சேர்த்த பிள்ளைகள் (போராளிகள்) தொகை தொகையாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். ஊர்கள், தெருக்கள் எல்லாம் சாவை அறிவிக்கும் தோரணங்களாலும் சவ ஊர்வலங்களாலும் திணறின. மாவீரர் துயிலும் இல்லம் என்ற கல்லறை மயானங்கள் எல்லை கடந்து பெருத்தபடியே இருந்தன. சாவு ஒன்றுதான் நிச்சயமானதாக இருந்தது. சனங்கள் திகிலடைந்தனர். யுத்தம் மெல்ல மெல்லத் தீவிரமடைய இயல்பு வாழ்க்கை சிதைவடைந்தது. அகதிப் பெருக்கம், இடப்பெயர்வின் அவலம், சாவின் பெருக்கம் என நிலைமை மோசமான கட்டத்துள் வீழ்ந்தது. தினமும் இடப்பெயர்வு, கிராமங்கள் பறிபோதல், சிறு பட்டிணங்கள் வீழ்ச்சியடைதல் என்பதே செய்தியாயிற்று. ஆனால் புலிகளின் ஊடகங்கள் இதற்கு எதிரான செய்திகளையே சொல்லிக்கொண்டிருந்தன. ராணுவம் பொறியில் சிக்கப் போகிறது என்று அவை சொல்லிக் கொண்டிருந்தன. இடப் பெயர்வும் உயிரிழப்பும் மக்களை மிக மோசமாகத் தாக்கியது. மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்த இந்தச் சனங்கள் இடம்பெயர்ந்தபோது மிக மோசமான அவலத்திற்குள்ளானார்கள். இடம் பெயர்ந்திருந்த இந்த மக்களிடமிருந்து புலிகள் கட்டாய ஆள் சேர்ப்புக்காகவும் போர்ப்பணி என்ற பெயரிலும் ஏராளமானவர்களைப் பிடித்துச் சென்றனர். தவிர போர் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்ததால் இவர்கள் ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்துகொண்டேயிருந்தனர். இவர்கள் போகும் ஒவ்வொரு ஊரைத் தேடியும் படையினர் விரட்டத் தொடங்கினர். புலிகளின் இறுதி வீழ்ச்சி நடந்த இடமான புதுமாத்தளன்-முள்ளி வாய்க்கால் பகுதிவரையில் ஏறக்குறைய 20 தடவைவரை மன்னார் மக்கள் இடம் பெயர்ந்திருக்கின்றனர். இறுதிக் காலத்தில் ஒரு இடத்தில் ஐந்து நாட்கள் மூன்று நாட்கள் என்ற அளவிலேயே இருக்கக்கூடிய நிலை உருவானது. அந்த அளவுக்குப் படைத்தரப்பின் தாக்குதலும் படை நகர்வும் வேகமாக இருந்தன.

படையினரின் தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்கக் கொல்லப்படும் புலிகளின் தொகையும் அதிகரித்தது. கட்டாய ஆள் சேர்ப்பின் மூலம் பலவந்தப்படுத்தித் துப்பாக்கி முனையில் புதியவர்கள் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் எப்படி மூர்க்கத்தனமாக முன்னேறிவரும் படையினருடன் போரில் ஈடுபட முடியும்? அதிலும் புலிகள் தரப்பில் மிக இள வயதினர், குறிப்பாக மாணவப் பருவத்தினர். 15-22 வரையானவர்களே அதிகம். ஒரு வாரம் பயிற்சி, பின்னர் மூன்று நாள் பயிற்சி, இறுதியில் ஆயுதங்களை இயக்குவதற்கான பயிற்சி மட்டும் என்ற அளவிலேயே புலிகள் இவர்களைக் கள முனைக்கு அனுப்பினர். ஏற்கனவே முன்னேறிவரும் படையினர் வெற்றிபெற்றுவரும் சூழலில் அதற்கான உளவியலைப் பெற்றிருந்தனர். புலிகள் தரப்பில் பின்னடைவு நிலையில் மூத்த புலிகளின் உறுப்பினர்களுக்கு அவநம்பிக்கையும் உளச்சோர்வும் ஏற்பட்டிருந்தன. ஆனாலும் தலைமையின் கட்டளைக்கும் வற்புறுத்தலுக்கும் பணிந்து நடவடிக் கையை மேற்கொண்டாலும் படைத்தரப்பைச் சிதைக்கக் கூடிய மாதிரியோ அல்லது படைநகர்வை கட்டுப்படுத்தவோ தாமதப்படுத்தவோ கூடிய அளவுக்கு அவர்களின் தாக்குதல்கள் அமையவில்லை. இதன் காரணமாகக் கள முனையிலிருந்து கட்டாய ஆட்சேர்ப்பின் மூலமாகப் பிடித்துச் செல்லப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் தப்பி ஓடிக்கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் களமுனையிலிருந்தோ பயிற்சி முகாமிலிருந்தோ ஓடினால் அதற்குப் பதிலாக அந்தந்தக் குடும்பங்களில் இருந்து தாய் அல்லது தந்தை அல்லது குடும்பத்தின் வேறு உறுப்பினர்கள் எவரையாவது அவர்கள் பிடித்துச்சென்று கட்டாயத் தண்டனைக்குட்படுத்தினார்கள். இதன் காரணமாகச் சில பிள்ளைகள் போர்க்களத்தில் தப்புவதற்கு வழியற்று நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்வாறு இக்கட்டான நிலையில் போர்க்களத்தில் நின்று உயிரிழந்த இளைஞர்களும் பெண்களும் ஆயிரக் கணக்கில் அடங்கும். சனங்கள் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இடப் பெயர்வைச் சமாளிப்பதா? இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொளவதா? பிள்ளைகளைக் காப்பாற்றுவதா என்று தெரியாத பேரவலம் ஒரு பெரும் சுமையாகச் சனங்களின் தலையில் இறங்கியது. சனங்களுக்கும் புலிகளுக்குமிடையில் மோதல்கள் உருவாகின. இறந்த பிள்ளைகளின் உடலை பெற்றோரிடம் காட்டுவதற்கே புலிகள் அஞ்சும் நிலை ஏற்பட்டது. பல பெற்றோர் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் புலிகளைத் தாக்கியிருக்கின்றனர்.

இப்படிப் போரின் தீவிர நிலை சனங்களை இறுக்கிக் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தபோதுதான் புலிகளின் கெடுபிடிகளும் மிக உச்ச நிலையில் அதிகரித்தன. படையினர் நெருங்க நெருங்க அதைத் தமது பரப்புரைக்கு வாய்ப்பான ஆயுதமாக்கி ‘எதிரி வருகிறான்; நீங்கள் அவனிடம் மண்டியிடப் போகிறீர்களா?’, ‘உயிரினும் மேலானது தாய்நாடு’, ‘சிங்கள வெறியனின் கைகளில் சிக்கிச் சாவதைவிட அதற்கெதிராகப் போரிட்டுச் சாவது மேல்’, ‘எங்கள் குலத்தமிழ்ப் பெண்களே உங்கள் கற்பு சிங்கள வெறியனுக்கென்ன பரிசா?’ என்று சனங்களின் மனதில் கலவரத்தையும் அச்சத்தையும் ஊட்டினார்கள். படைத் தரப்பின் தாக்குதல்களும் சனங்களை அச்சமடையவே வைத்தன. இதனால் கடந்த காலங்களில் சிங்கள இராணுவத்தின் தாக்குதல்களால் மிகவும் கசப்பான அனுபவத்தைப் பெற்றிருந்த சனங்கள் இன்னும் இன்னும் அச்சமடையத் தொடங்கினார்கள். இது ஒருவகையில் புலிகளுக்குச் சாதக நிலையைத் தோற்றுவித்தது. மன்னாரிலிருந்து சிறிலங்கா படையினர் தமது நடவடிக்கையை ஆரம்பித்து ஒன்றரை வருடமாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏறக்குறைய இரண்டரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இந்தக் காலத்தில் மிக மூர்க்கமாக விமானத்தாக்குதல்கள் நடந்தன. இதன்போது பல நூற்றுக்கணக்கான சனங்கள் கொல்லப்பட்டிருந்தனர். செஞ்சோலைப் படுகொலை, தமிழ்ச்செல்வன் கொலை என்பவை பலருக்கும் நினைவுக்கு வரலாம். கிளிநொச்சியில் நடந்த பிறிதொரு தாக்குதலில் 26.11.2007 அன்று பிரபாகரன் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார்.

இக்காலகட்டத்தில் சிறிலங்கா இராணுவம் சனங்களின் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்ததாக யாரும் சொல்ல முடியாது. ஆனால் படைத்தரப்பின் தாக்குதல் வலயத்திற்கு அப்பால் மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். அப்படி ஓடிப் பாதுகாப்புத் தேடிக்கொள்வ தற்கான இடம் சனங்களுக்கிருந்தது. ஆனால், இப்படி ஓடிக்கொண்டிருந்தபோது அவர்களுக்கான உழைப்பு, வருமானம், இருப்பிடம், பொருட்கள் என்பன இல்லாத நிலை உருவாகியது. பொருட்களைக் கொழும்பில் இருந்து வன்னிக்குள் எடுத்துவருவதற்கான தடையும், கட்டுப்பாடுகளும் உணவுப்பொருட்களைப் பெறுவதற்கே பெரும் நெருக்கடியை உருவாக்கியது. பஞ்சம் பட்டினியும் தலைவிரித்தாடின. ‘வன்னி’ இலங்கையின் நெற்களஞ்சியம் என்று வர்ணிக்கப்படுவதுண்டு. சனங்கள் தங்களின் சேமிப்பிலும் சேகரிப்பிலுமிருந்த பொருட்களையே எடுத்துச்செல்ல முடியாத நிலையில் படை நடவடிக்கைகள் தீவிரமடைந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் கட்டாய ஆட்சேர்ப்பைத் தவிர்க்கும்படியும், போருத்திகளை மாற்றி அமைக்குமாறும், அமைதிப் பேச்சுக்குத் திரும்பும்படியும் இந்தியாவோடு இணக்கத்துக்குப் போகுமாறும் சிலர் புலிகளை வலியுறுத்தினர். ஆனால் புலிகளின் தலைமையோ பிடிவாதமாக மரபுவழி இராணுவ நடவடிக்கையிலேயே குறியாக இருந்தது. வேறு எவருடைய எந்தவிதமான அபிப்பிராயங்களையும் அது பொருட்படுத்தத் தயாராக இருக்கவில்லை. சனங்கள் படுகின்ற அவலத்தையோ அவர்களின் துயரத்தையோ புலிகள் பொருட்படுத்தவில்லை. சிங்களத் தரப்பை மிகக் கொடூரமான வரலாற்று எதிரி என்று வர்ணித்து அதற்குத் தக்க பாடம் படிப்பிக்க வேண்டும் என்று தமது நடவடிக்கையை மேற்கொண்டனர். கிளிநொச்சியைப் படைத்தரப்பு கைப்பற்றும் வரையில் புலிகள் ஏதாவது உத்திகளைக் கையாண்டு படைத் தரப்பைச் சிதைத்து வெல்வார்கள் என்ற நம்பிக்கை சனங்களுக்கிருந்தது உண்மையே. அந்த நம்பிக்கையோடு தான் அவர்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். தமது ஆட்சி, அதிகாரம் அரசுக் கட்டுமானம் என்ற கனவு குலைந்துபோகும் எனப் புலிகள் அஞ்சினார்கள். அதனாலேயே அவர்கள் மரபுவழியான நடவடிக்கையைத் தொடர்ந்தனர்.

கிளிநொச்சியைக் கைப்பற்றிய படையினர் ஆனையிறவினூடாக யாழ்ப்பாணத்துடன் இணைந்தனர். இந்த இணைவோடு யாழ்ப்பாணத்திற்குள் முடக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் இராணுவத்தினரும் படை நடவடிக்கையில் ஈடுபடும் நிலை உருவானது. உடனேயே தொடர்நடவடிக்கையைப் படைத்தரப்பு மேற்கொண்டு புலிகளை மேலும் விரட்டத் தொடங்கியது. ஜனவரி 15ஆம் திகதிக்குப் பின்னரான நிலைமைகள் இதனுடன்தான் ஆரம்பிக்கின்றன. உலகைக் குலுக்கும் நிலைமைகள் 2009 ஜனவரி 15க்குப் பின்னரான நடவடிக்கை வன்னி கிழக்கை நோக்கியது. ஏற்கனவே மணலாற்றில் இருந்து முல்லைத்தீவுப் பட்டிணம் வரையான பகுதியைப் படைத்தரப்புக் கைப்பற்றியிருந்தது. இதற்குள் புலிகளின் முக்கியமான தளபதிகள் பலரும் கொல்லப்பட்டிருந்தனர். அடுத்தது புலிகளின் உறுப்பினர்களிடமும் சனங்களிடமும் பெருமதிப்பைப் பெற்றிருந்த தாக்குதல் தளபதி பிரிகேடியர் பால்ராஜின் மரணம். (இவர் மாரடைப்பால் உயிரிழந்திருந்தார்.) இவை புலிகளைக் கடுமையாகப் பாதித்திருந்தன. அதிலும் கருணா அரசுடன் இணைந்திருந்ததனால் புலிகளின் போருத்திகள், படைவலு, பிரபாகரனின் சிந்தனைப் போக்கு, கள அமைவு எனச் சகலவற்றையும் கருணா படைத்தரப்புக்கு வழங்கியிருப்பார் என்ற அபிப்பிராயமும் உண்டு.

இவ்வாறு நிலைமைகள் பாதகமாக அமைந்திருந்த போதும் புலிகளின் ஊடகங்களும் உறுப்பினர்களில் பெரும்பகுதியினரும் ‘தலைமையின் மீது நம்பிக்கை வையுங்கள். எந்தச் சூழலிலும் நாம் தோற்றுப்போக மாட்டோம்’ என்று மக்களுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தனர். எந்த வகையான தருக்கமுமில்லாமல் வெறும் வாய்ப்பேச்சாகவே இந்தச் சொற்கள் இருந்தன. எவ்வளவுதான் புலிகளின் நம்பிக்கையூட்டல்கள் அமைந்தாலும் அதை நம்புவதற்குச் சனங்கள் தயாராக இல்லை. யுத்தமோ மிக மூர்க்கத்தனமாகச் சனங்களைத் தாக்கிக்கொண்டிருந்தது. இப்போது சனங்களின் சாவு வீதம் சடுதியாக அதிகரிக்கத்தொடங்கியது. கட்டாய ஆட்சேர்ப்பு எல்லா வகையான வரம்புகளையும் மீறிக் குடும்பத்தில் எத்தனைபேரையும் எங்குவைத்தும் எப்படியும் பிடித்துக்கொள்ளலாம் என்றாகியது. முன்னர் போராளிக் குடும்பங்களும் மாவீரர் குடும்பங்களும் ஆட்சேர்ப்பில் விலக்களிக்கப்பட்டிருந்தன. இறுதியில் இந்த வேறுபாடுகள் எதுவும் கடைப்பிடிக்கப்படாமல் கண்டபடி ஆட்சேர்ப்பு நடக்க ஆரம்பித்தவுடன் சனங்களுக்கும் புலிகளுக்குமிடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. சனங்கள் புலிகளைப் பகிரங்கமாகவே எதிர்க்கவும் தாக்கவும் தொடங்கினர். அவர்களுடைய உடைமைகளுக்கும் வாகனங்களுக்கும் தீவைத்துக் கொளுத்தினர். இந்தக் கட்டத்தில் புலிகளின் கடந்தகால முஸ்லிம் விரோத நடவடிக்கைகளையும் பிற இயக்கங்கள் மீது புலிகள் விதித்த தடைகளையும் மேற்கொண்டிருந்த தாக்குதல்கள்; படுகொலைகளையும் புத்திஜீவிகள் மீதான கொலை அச்சுறுத்தலையும் சிலர் வெளிப்படையாகவே கண்டித்தனர். பிரபாகரனை வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் சனங்கள் திட்டினர்.

இதேவேளை ஜனவரி 15க்குப் பின்னர் வன்னி கிழக்கில் விசுவமடு தொடக்கம் மக்கள் கொல்லப்படத் தொடங்கினர். போர் மிகவும் உக்கிரமாக நடக்கையில் சனங்கள் இனி ஓடுவதற்கு இடமில்லை என்ற நிலை உருவானது. முல்லைத்தீவுக்கு அண்மையில் இருந்த ஓட்டுசுட்டான் புதுக்குடியிருப்புப் பகுதிகளையும் படைத்தரப்பு கைப்பற்றியதுடன் சனங்களின் கதி மிகவும் ஆபத்தாகியது. இங்கிருந்து புலிகள் சனங்களைக் கவசமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். ஏற்கனவே சனங்கள் வெளியேறுவதற்கு இறுக்கமான தடையை விதித்திருந்த புலிகள் மேலும் பாதுகாப்பு நிலையை உயர்த்திச் சனங்கள் எங்கும் தப்பிச் செல்லாதிருக்கும்படி பார்த்துக்கொண்டனர். சனங்களின் செறிவு அதிகரிக்கும் போது யுத்தமும் சனங்களுக்குக் கிட்டவாக, நெருங்கிய சூழலில் தாக்குதல்களில் சனங்கள் கொல்லப்படத் தொடங்கினர். இந்த நாட்களின் நிகழ்ச்சிகளை விவரிக்கவே முடியாது.

குறிப்பாகப் படையினர் விசுவமடு என்ற இடத்தை நெருங்கியபோது நடத்திய தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். உடையார்கட்டுப் பகுதியில் இருந்து இந்தப் படுகொலை நாடகம் மிக உக்கிரமான நிலையில் ஆரம்பித்தது. தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். ஏற்கனவே கைப்பற்றிய சில பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சனங்கள் மட்டும் படையினரிடம் அகப்பட்டிருந்தனர். ஆனால் உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிமீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் சனங்களை நிலைகுலைய வைத்தன. முன்னர் நடந்த படை நடவடிக்கைகளின் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மருத்துவமனைகள் வெவ்வேறு இடங்களில் மட்டுப்பட்ட அளவில் இயங்கினாலும் அவற்றால் முழு அளவிலான சேவைகளை வழங்க முடியவில்லை. ஆனால் இரவு பகல் என்றில்லாமல் அங்கிருந்த மருத்துவர்கள் – இப்போது சிறிலங்கா அரசால் தடுத்து வைக்கப்பட்டுக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் டொக்ரர் சத்தியமூர்த்தி, டொக்ரர் வரதராஜன், டொக்ரர் சண்முகராஜா உட்படப் பல மருத்துவர்கள் – பெரும் சேவையாற்றினர். மனித குலம் தன் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத அளவுக்கான பெரும் சேவையை இவர்கள் செய்தனர். ஆனால் இவர்களுடைய அரசியல் பார்வை குறித்த விமர்சனங்கள் உண்டு என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மருந்துத்தடை அதனால் ஏற்பட்ட தட்டுப்பாடுகளின் மத்தியிலும் தாக்குதல்களில் காயப்படும் மக்களைக் காப்பாற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் மிகவும் உயிராபத்துகள் நிறைந்த சூழலில் இந்த மருத்துவர்களும் பணியாளர்களும் தொண்டாற்றினார்கள். அதேவேளை புலிகள் இந்த மருத்துவமனைகளைத் தமது நிழல் நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்தி வந்தனர். மருந்துப்பொருட்களையும் எடுத்துச் சென்றனர்.

உடையார்கட்டுப் பகுதியில் படைத்தரப்பு நடத்திய தாக்குதல்கள் மிகக் கொடியவை. சனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி நிலைகுலைய வைத்து அவர்களைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்கும் உபாயத்தைப் படைத்தரப்புக் கைக்கொள்ளத் தொடங்கியது. இது மிகக் கேவலமானது. மனிதாபிமானத்துக்கு முற்றிலும் எதிரான செயல் இது. எந்த வகையான நியாயப்படுத்தல்களையும் செய்ய முடியாத நடவடிக்கை இது.

மிகச் செறிவாக அடர்ந்திருந்த சனங்களை இலக்கு வைத்து ஆட்லறி மற்றும் எரிகணைத் தாக்குதல்கள் – றொக்கற் தாக்குதல்களைப் படைத்தரப்பு நடத்தியது. இதன்போது ஐ.நாவின் உலக உணவுத்திட்ட அதிகாரியும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதியும் வன்னியிலிருந்தனர். இந்தத் தாக்குதல்களை அடுத்து இவர்கள் வன்னியை விட்டு வெளியேறினர். அந்தளவுக்கு அவர்களுக்கே பாதுகாப்பற்ற நிலைமை என்றானது. சனங்கள் என்ன செய்வது, எங்கே செல்வது, எப்படித் தப்புவது என்று தெரியாமல் திணறினர். கண்முன்னே சிதறிப் பலியாகும் உடல்கள். இரத்தமும் சிதிலமுமான சூழல். சாவோலம். தீயும் புகையுமாக எரியும் காட்சி. சடங்குகள் சம்பிரதாயங்கள் இல்லாமல் கொல்லப்படும் இடங்களிலேயே சடலங்களைப் புதைக்க வேண்டிய நிலை. சவப்பெட்டிகளே இல்லை. சடங்குகளுக்கு அவகாசமில்லை. ஆனால் சாவுகள் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தன. குடும்பம் குடும்பமாகக் கொலைகள் நடந்தன.

கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பல நூற்றுக்கணக்கான படுகொலைகளைச் சந்தித்திருந்த ஈழத் தமிழ்ச் சமூகம் இப்போது நடந்த படுகொலைகளை ஜீரணிக்க முடியாமல் திணறியது. அந்தளவுக்கு அதன் அனுபவப்பரப்புக்கு அப்பால் முன்னெப்போதையும்விட மிக மோசமாக இந்தக் கொலைகள் நடந்தன. வீதிகள், காலனிகள், குடிசைகள் எங்கும் எங்கும் பிணக்குவியல்களே.

தாக்குதல்களும் சாவுகளும் இப்படித் தொடர்ந்து கொண்டிருக்கும்போது, அவலம் உச்சநிலையைக் கடந்துவிட்டபோதும் புலிகள் தமது நடவடிக்கைகளை மாற்றவில்லை. பதிலாகத் தமது நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு எதிராகத் தாம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாக அறிவித்துப் பகிரங்கத் தண்டனை வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இந்த அறிவிப்புடன் அவர்களின் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. எதிர்ப்பைக் காட்டுகின்றவர்கள் தேசத்துரோகிகள், இனத்துரோகிகள் என்று குறிப்பிடப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தண்டனை சுட்டுக் கொல்லுதல் என்பது வரையில் சென்றது. சனங்கள் என்னதான் வந்தாலும் பரவாயில்லை என்று தீர்மானித்துப் படையினரிடமே தப்பிச் செல்லத் தொடங்கினார்கள். சிலர் கடல் வழியாகத் தப்பிச் சென்றனர். மிகச் சிலர் இந்தியாவுக்குத் தப்பி ஓடினர். இவ்வாறு தப்பிச் செல்லும் மக்களைத் தடுக்கும் நடவடிக்கையை அரசியல் துறையின் துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன் தலைமையிலான புலிகளின் அணிகள் மேற்கொண்டன. புலிகளின் தடையை மீறிச் சென்ற மக்களின் மீது அவர்கள் ஈவு இரக்கமின்றித் தாக்குதல்களை நடத்தினர். சில சந்தப்பங்களில் மக்களின் மீது எரிகணைத் தாக்குதல்களைக்கூட மேற்கொண்டனர். புலிகளின் இவ்வாறான தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சனங்கள் கொல்லப்பட்டனர். படையினரின் கொலைவெறித் தாக்குதல்களில் இரண்டாயிரம் வரையான மக்கள் உடையார்கட்டு, சுதந்திரபுரம், வன்னிபுனம், தேவிபுரம், புதுக்குடியிருப்புப் பகுதிகளில் கொல்லப்பட்டனர்.

எனினும் புலிகளின் தடைகள், தாக்குதல்களையும் மீறிப் பதினைந்தாயிரம் வரையான சனங்கள் இராணுவத்தின் பக்கம் சென்றனர். சனங்கள் தொடர்ந்து தம்மிடம் வருவதை ஊக்கப்படுத்தும் நோக்கில் படைத்தரப்பு மேலும் மேலும் சனங்களின் மீதே தனது இலக்கை நிர்ணயித்தது. இது மிகக் கேவலமானதும் கொடூரமானதும் மன்னிக்க முடியாததுமான நடவடிக்கை. ஆனால், இதை மறைத்துக் கொண்டு வெற்றிகரமாகப் படையினர் புதிய பிரதேசங்களைக் கைப்பற்றிக் கொண்டதாகவும் சனங்களை மனிதாபிமான நடவடிக்கை மூலம் மீட்டதாகவும் படைத்தரப்பும் அரசும் பிரச்சாரம் செய்தன. இதில் இன்னும் கொடுமையானது பாடசாலைகளிலும் தற்காலிகமாக அவசர நிலையில் இயங்கிய மருத்துவமனைகள் மீதும் படையினர் நடத்திய தாக்குதல்கள். காயப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர்களையும் காப்பாற்றுவதற்கு முடியாது என்ற நிலை பயங்கரமாகியது. புலிகளின் ஆட்பிடி மற்றும் பலவகையான பலவந்த நடவடிக்கைகள் ஒரு பக்கமும் படையினரின் படுகொலைத் தாக்குதல்கள் மறுபுறமுமாக இரண்டு தரப்புக்குமிடையில் சிக்கித் திணறினர் மக்கள். ஆனால், இந்த நிலை குறித்து வெளியுலகத்துக்கு எந்தச் செய்தியும் வெளியே செல்ல முடியாதவாறு இரண்டு தரப்புகளும் இறுக்கமான நடவடிக்கைகள் மூலம் பார்த்துக்கொண்டன.

இதேவேளை புலிகளின் பரப்புரைப் பகுதிகள் வன்னி நிலைபற்றி ஏற்கனவே மேற்கொண்டு வந்த புனைவை மேலும் விரிவுபடுத்தி திரிவுபடுத்தி மேலும் பொய்ப்பரப்புரைகளில் ஈடுபட்டன. படையினரின் தாக்குதல்களில் கொல்லப்படும் மக்கள் பற்றிய உண்மைச் செய்திகளுடன் மேலும் பல பொய்களையும் இணைத்துத் தமது பரப்புரையை இவை மேற்கொண்டன. கொல்லப் படும் மக்களின் எண்ணிக்கையை மெல்ல மெல்ல புலிகள் கூட்டிச் சொல்லவும் தொடங்கினர். அதேவேளை அரசுக்கெதிரான கண்டனப் பரப்புரையை யும் அவை தீவிரப்படுத்தின. ஏற்கனவே சமூக அமைப்புகள், சக்திகளைக் குலைத்து தமக்கிசைவான சமூகக் கட்டமைப்புகளை உருவாக்கியிருந்த புலிகள் அந்த அமைப்புகளைக்கூட இயக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். புலிகளின் ஆட்சி, நிர்வாகக் கட்ட மைப்புகள் சகலதும் தகர்ந்து ஆட்டம் கண்டது. போர் தொடங்கிய போதே தமது நிர்வாகக் கட்டமைப்புகள் சகலதையும் போருக்கும் ஆட்சேர்ப்புக்கும் ஏற்ற வகையில் பயன்படுத்தி வந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும். புலிகள் அடிப்படையில் ஒரு இராணுவ அமைப்பு என்பதை நாம் முதலில் புரிந்துகொள்வது அவசியம்.

இது அவர்கள் பற்றிய விமர்சனம் அல்ல. முழு உண்மை. சகல வளங்களையும் தமது இராணுவ நடவடிக்கைகளுக்கும் வெற்றிக்குமாகவே பயன்படுத்திவரும் இயல்பு புலிகளினுடையது. தமது இராணுவ நடவடிக்கைகளுக்கான ஆதாரத் தளமாகவே அவர்கள் அவற்றைப் பயன்படுத்தினர். பிரபாகரன் எப்போதும் இராணுவ நடவடிக்கைகளிலும் இதற்கான தயார்படுத்தல்களிலும் வளங்களிலுமே கூடிய கவனத்தைச் செலுத்திவந்தார். அவருடைய அணுகு முறையே அரசியலில் இராணுவ மேலாதிக்கத்துக்கு முன்னுரிமை அளிப்பதாக இருந்தது. அதாவது புலிகளின் இராணுவ பலத்தின் மூலம் எதிரியையும் மக்களையும் வெல்ல முடியும் என்று நம்பிக்கை வைத்திருந்தார். தமது படையணிகளைக் கட்டமைப்பதிலும் தளபதி களைப் பெருக்குவதிலும் அவர் காட்டிய ஈடுபாட்டுக்கும் முன்னுரிமைக்கும் சமமாக அவர் பிற துறைகளில் எந்த ஆற்றலாளர்களையும் உருவாக்கவில்லை. எனவே எல்லா நிர்வாகத் துறைகளும் துணை அலகுகளும் அவர்களின் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் அளிப்பவையாகவே இருந்தன. அப்படியே அவற்றைப் பிரபாகரன் உருவாக்கியிருந்தார்.

எனவே சிதைந்த அந்த நிர்வாகக் கட்டமைப்புகள் சனங்களைப் போரை நோக்கித் திருப்புவதில் மும்முரமாகின. சனங்களோ அதுவரையிலும் நிபந்தனையற்ற முறையில் எல்லா வகையான தவறுகளுக்கும் அப்பால் அளிந்துவந்த தமது ஆதரவுத் தளத்தை மாற்றித் ‘தப்பினால் போதும்’ என்ற கட்டத்துக்கு வந்தனர். புலிகளால் சிறிலங்கா இராணுவத்தை வெல்லவும் முடியாது. தங்களையோ சனங்களையோ காப்பாற்றவும் முடியாது என்று அவர்கள் புரிந்துகொண்டனர். எனவே அவர்கள் எப்படியும் வன்னியை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் புலிகளின் ஊடகங்கள், இணையதளங்கள் எல்லாம் வேறு கதைகளையே பேசின. தமிழகம் உட்படப் புலம்பெயர் நாடுகள் வரையில் இந்தப் பொய்ப்பரப்புரையின் மண்டலம் நீண்டது, புலம் பெயர் மக்களுக்கு வன்னியில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இந்த அறியா நிலையைப் பிரபாகரன் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். இதேவேளை புலிகளும் அவர்களின் தீவிர ஆதரவாளர்களும் ‘புலிக் குடும்பங்கள்’ என்ற உயர்மட்டத் தலைவர்களின் குடும்பங்களும் எப்படியும் படைத்தரப்பை எதிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று வாதிட்டனர். ‘சிங்களப் படைகளிடம் மண்டியிடுவதை விடவும் இறுதிவரைப் போராடிச் சாவது மேலானது’ என்று அவர்கள் சொன்னார்கள். ‘போராட்டம் என்பது விடுதலையுடனான வாழ்வைப் பெறுவதற்கே’ என்று சிலர் வலியுறுத்தியபோது அதைப் பொருட்படுத்தாது, பிரபாகரன் 300 போர் வீரர்கள் (The Three Hundred) என்ற ஆங்கிலப் படத்தின் தமிழாக்கத்தைத் தனது இயக்கத்தின் உறுப்பினர்களுக்குக் காண்பித்து தனது இறுதி முடிவு இப்படி இருக்கும் என்றார். அதுவே உயர்ந்த வீரம் என்றும் தாய்நாட்டுக்கான தியாகம் என்று சொன்னார்.

ஆனால் வன்னியில் இருந்த புத்திஜீவிகள் சிலர் இதை மறுத்தனர். இந்த முடிவு மிக மோசமானது என்றும் வரலாற்றை மிகவும் பிழையான இடத்திற்கு அழைத்துச்செல்லும் செயல் இது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். சனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமே தவிர இவ்வாறு உணர்ச்சிவயப்பட்ட தீர்மானங்களுக்குப் போகக் கூடாது என அவர்கள் வாதிட்டனர். ஆனால், பிரபாகனிடம் யாரும் இதற்கான உரையாடலைச் செய்ய முடியவில்லை. அவர் எல்லாவற்றுக்கும் அப்பால் தன்னை நிறுத்திக்கொண்டார். சனங்களுடன் என்றுமே தொடர்புகளையோ உறவுகளையோ கொண்டிராத அவர் சனங்கள் குறித்து எவர் என்ன சொன்னாலும் எதையும் பொருட்படுத்தும் நிலையில் இருக்கவில்லை. தவிரவும் தனது இயக்க உறுப்பினர்களைத் தவிர அவர் வேறு எவரையும் – மக்கள் பிரதிநிதிகளைக்கூட – சந்தித்தவரல்ல. அவ்வாறு பிறரைச் சந்திப்பதாக இருந்தால் அவருடைய இயக்கத்தலைவர்களோ பொறுப்பாளர்களோ சிபாரிசு செய்யும் ஆதரவாளர்களையே சந்திப்பார். அவர்களோ புலிகளின் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தும் இயல்பும் குணமுமுடையவர்கள். அவர்களால் ஒரு போதுமே மக்கள் குறித்து நீதியாகவும் நியாயமாகவும் சிந்திக்கவும் முடியாது; செயல்படவும் முடியாது. அப்படியான செயல்வழமையை அவர்கள் கொண்டதுமில்லை. அப்படியொரு பழக்கமும் அவர்களுக்கில்லை. எனவே அவர்களால் புலிகளின் தீர்மானங்களைப் பற்றிய எந்த விமர்சனங்களையும் முன்வைக்க முடியவில்லை.

கிறிஸ்தவ மத குருமார் அமைப்பு இவ்வாறு எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை. நலன் விரும்பிகள் எடுத்த எந்த முயற்சிகளுக்கும் அவர் செவி சாய்க்கவும் இல்லை. இதேவேளை புலிகள் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை- போர் முறையை மாற்றி- அமைக்க வேண்டும் எனச் சிலர் வலியுறுத்தி வந்தனர். களத்தை மாற்றுங்கள் யுத்திகளை மாற்றுங்கள், என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதில் ஒரு சில புலம்பெயர் தமிழரும் அடங்குவர். ஆனால் இந்தப் புலம்பெயர் தமிழர்கள் புலிகளை விமர்சன பூர்வமாக ஆதரித்ததால் இவர்களின் கருத்தை ஏற்கப் புலிகள் தயாராக இருக்கவில்லை. இதே வேளை புலிகளின் ஊடகங்களோ மிக மூர்க்கமான விதத்தில் பொய்ப் பரப்புரைகளைச் செய்துவந்தன.

சிறிலங்கா அரசுக்கு எதிரான கண்டனத்தையும் விமர்சனத்தையுமே அவை தீவிரப்படுத்தின. அத்துடன் மாற்றுச் சிந்தனையாளர்களைக் கடுமையாக விமர்சித்தன. எந்தவிதமான அபிப்பிராயங்களையும் புறக்கணித்து விட்டுத் தனது அதிகாரத்தின் மூலம் தான் விரும்பிய மாதிரி பிரபாகரன் நடந்துகொண்டார். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே ஒரு கட்டத்தில் புலிகளின் நடவடிக்கைகள் குறித்துத் திகைப்படைந்து விட்டனர். அவர்கள் அளித்துவந்த ஆதரவை வைத்துக்கொண்டு அவர்களையே சிறைபிடித்தனர் புலிகள். எவராலும் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் எல்லோரும் சிக்கியிருந்தோம். ஜார்ஜ் ஆர்வெலின் ‘1984’ நாவல் நினைவுக்கு வந்தால் அதையும்விடப் பலமடங்கு இறுக்கமான நிலைமையும் அதிகார வெறியும் வன்னியில் நிலவியது என்று நீங்கள் மதிப்பிட்டுக் கொள்ளலாம்.

இதேவேளை படைத்தரப்பின் தாக்குதல்கள் மேலும் மேலும் மோசமடைந்தன. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பல நூற்றுக் கணக்கிலானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவ சிகிச்சைக்காக வெளியே கப்பல் மூலம் எடுக்கும் நடவடிக்கையைச் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பித்தது. இதற்கு முன்னர் புதுக்குடியிருப்பு மருத்துவமனை அங்கே இயங்கியபோது சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் அங்கே நிலைகொண்டிருந்தது. சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் ஏற்றுக்கொண்ட விதிகளின் பிரகாரம் செஞ்சிலுவைச் சங்கக் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால், ஒரு கட்டத்தில் மருத்துவமனைப் பகுதியை அண்மித்து நின்று விடுதலைப்புலிகள் கனரக ஆயுதம் மூலமாகப் படையினர் மீதும் விமானப் படையின் மீதும் தாக்குதல்களைத் தொடுத்தனர். இதை சிறிலங்கா அரசின் வேவு விமானம் (இது அமெரிக்கத் தயாரிப்பு, ஆளில்லா வேவு விமானம். அமெரிக்கா இந்த விமானத்தை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தது) வட்டமிட்டு நோட்டமிட்டது. (இந்த விமானம் எப்போதும் வானத்தில் பறந்து கொண்டேயிருக்கும். இந்த வேவுக் கண்ணை வைத்தே சிறிலங்கா அரசு போரில் பெரும் வெற்றியைப் பெற்றது.) வேவு விமானத்தின் தரவுகளின் படி புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் மீது படைத்தரப்பு தாக்குதல் நடத்தி அதைத் தரைமட்டமாக்கியது. பின்னர் புதுமாத்தளன் பகுதி கடற்கரையிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சையும் மேலதிக மருத்துவத்துக்காகக் கப்பல் மூலம் திருகோண மலைக்கும் காயமடைந்தவர்களும் நோயாளிகளும் எடுத்துச் செல்லப்பட்டனர். ஒவ்வொரு கப்பலிலும் 400க்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டனர். கை கால் இழந்தவர்கள், கண் பறிபோனவர்கள் உறவுகளை இழந்தவர்கள் என்றே இவர்கள் இருந்தனர். தினமும் தெருவிலும், ஆஸ்பத்திரியிலும், தார்ப்பாலின் கூடாரங்களின் மத்தியிலும் சாவடைந்த பிணங்கள் தொகை தொகையாகக் கிடந்தன. மரணம் எல்லோருடனும் குதித்து விளையாடியது. தாம் உயிர் பிழைப்போம் என்று அந்த நாட்களில் எவரும் நம்பியிருக்கவில்லை. சாவு அந்தக் கணம்வரைத் தங்களை நெருங்கவில்லை என்பது மட்டுமே உண்மை. மற்றபடி கொலை வலயத்தினுள்ளேதான் எல்லோரும் இருந்தனர்.

ஒரு சிறு அமைதியோ இடைவெளியோ வராதா; இந்தியாவோ தமிழகமோ ஐ.நாவோ பிற சர்வதேசச் சமூகமோ சிறியதொரு அமைதிச் சூழலை உருவாக்கித் தரமாட்டாதா என்ற ஏக்கம் எல்லோர் மனதிலுமிருந்தது. இதேவேளை புலிகளின் கடுமையான கண்காணிப்பையும் மீறிப் பொதுமக்கள் எப்படியோ வன்னியைவிட்டு வெளியேறிக்கொண்டேயிருந்தனர். ஆனால் அந்தத் தொகை பெரியதல்ல. புதிய புதிய காட்டுவழிகள், கடல்வழிகள், சதுப்பு நிலப்பாதைகளினூடாக மிக உச்சமான அபாயங்களின் மத்தியில் சனங்கள் ஓடி ஒளிந்துகொண்டிருந்தனர்.

வன்னியிலிருந்தால் மரணத்தைத் தவிர வேறு மார்க்கமே இல்லை என்ற நிலை. ஆனால் வன்னியை விட்டு எளிதில் வெளியேற முடியாது. அப்படிச் சுழித்துக்கொண்டு வெளியேறும்போது புலிகளின் கண்களில் சிக்கினால் அவ்வளவுதான். நெற்றிப்பொட்டுச் சிதறும். சுட்டுக் கொன்றுவிடுவார்கள் கொல்லப்படுவோர் தவிர இளவயதுடைய பெண்களையும் ஆண்களையும் பிடித்துச் செல்வார்கள். குழந்தைகளும் சிறுவர்களும் மட்டும் விடுவிக்கப்படுவார்கள். இளவயதினர் போருக்காகப் பிடித்துச் செல்லப்படுவர். இதைவிடப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஏதாவது வழியில் செல்லத் தொடங்கினால் கண்டமேனிக்குத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிடுவார்கள். இப்படிக் கொல்லப்பட்டவர்களும் காயப்படுத்தப்பட்டவர்களும் அதிகம். என்றாலும் சனங்கள் தப்பியோடுவதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சில சந்தர்ப்பங்களில் புலிகள் சுடச்சுடப் பலர் தப்பியோடி இராணுவத்தினரிடம் சரணடந்தார்கள். சிலர் தப்பியோடும்போது அவர்களுடைய குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். சிலர் கைதுசெய்யப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். புலிகள் தடுக்கத் தடுக்கப் பொதுமக்கள்மீதான இராணுவத்தின் தாக்குதல்களும் அதிகரித்தன. மருந்துத் தடை, உணவுப்பொருட் தடை என்பனவும் தீவிரமடைந்தன. சனங்களின் கையில் பணமில்லை, உற்பத்திகளில்லை வருமானமில்லை, சேமிப்பில்லை. வங்கிகள், பாட சாலைகள் எதுவுமில்லை. தூங்குவதற்கோ சமைப்பதற்கோ குளிப்பதற்கோ அவகாசமில்லாமல் எரிகணைகள் வீழ்ந்து வெடித்தன. சனங்களை இலக்குவைத்து இரண்டு தரப்புகளும் தாக்குதல்களை நடத்தின. புலிகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்குக் கொல்லப்படும் சனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்பதே இலக்கு. அப்படி என்றால்தான் இந்தப் படுகொலைகளை முன்னிட்டு ஐ.நாவோ இந்தியாவோ சர்வதேசச் சமூகமோ தலையிடக்கூடிய வாய்ப்பு உண்டாகும் என்று அவர்கள் நம்பினார்கள். அதை அவர்கள் முழுதாகவே எதிர்பார்த்தார்கள். எனவே கொலைப்பட்டியலை நீட்டிக் காட்டுவதற்கேற்ற முறையில் இராணுவத்தைச் சீண்டும் விதமாகக் கோப மூட்டும் வகையில் தமது தாக்குதல்களைத் தொடுத்தனர். படைத்தரப்புக்குத் தப்பியோடித் தங்களிடம் வரும் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட வேண்டிய அவசியம். சனங்களைப் புலிகளிடமிருந்து பிரித்துவிட்டால் புலிகளால் ஒரு நாளைக்குக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாது என்று அவர்கள் சரியாக மதிப்பிட்டிருந்தனர். எனவே சனங்களை மையமாக வைத்து, சனங்களின் உயிரைப் பணயமாக வைத்து இரண்டு தரப்பும் தமது தாக்குதல்களைத் தொடுத்தன.

ஒரு கட்டத்தில் இதுதான் உண்மை நிலைமை என்று சர்வதேச அமைப்புகளும் சர்வதேச ஊடகங்களும் கண்டுபிடித்திருந்தன. படைத்தரப்பு முன்னேற முன்னேற நிலைமை மோசமடையவே தொடங்கியது. இப்போது பங்கர்களும் பாதுகாப்பாற்றவையாகின. வெளியே நடமாட முடியாத அளவுக்கு ஓய்வில்லாத தாக்குதல். பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிக்குள்ளேயே தாக்குதல்கள். புலிகளும் இந்தப் பகுதிக்குள் இருந்தே தாக்குதல்களைத் தொடுத்தனர். எதிரியைச் சினமடைய வைக்கும் வகையிலான தாக்குதல்கள். புலிகளின் இந்த மாதிரியான பொறுப்பற்ற நடவடிக்கைகளைச் சனங்கள் கடுமையாக எதிர்த்தார்கள். ஏனெனில் தாக்குதல் எந்தப் பகுதியிலிருந்து வருகின்றதோ அந்தப் பகுதியை நோக்கி பதிலடியைப் படையினர் கொடுப்பார்கள். இதன்போது கொல்லப்படுவது சனங்களே.

முன்னரே குறிப்பிட்டுள்ளதைப் போலச் சனங்களின் சாவுப் பட்டியலில்தான் தமது எதிர்கால அரசியல் நலன் தங்கியிருக்கிறது எனப் புலிகள் நம்பினார்கள். இதற்கு ஏற்றமாதிரி அவர்கள் தம் வசமிருந்த இணைய தளங்களையும் செய்மதிற் தொலைபேசிகளையும் பயன்படுத்தினார்கள். அக்காலப் பகுதியில் வன்னியின் குரலாக வெளிப்பட்ட மருத்துவர்களின் வாக்கு மூலங்களில் பாதி உண்மைகள் மட்டுமே வெளிவந்தன. அதற்காக மற்றதெல்லாம் பொய் என்று பொருளல்ல. அவர்கள் மீதி உண்மையைச் சொல்லவில்லை. புலிகள் தரப்பு நடவடிக்கையைப் பற்றிப் பேசவில்லை. வெளி ஊடகங்கள் எதுவும் இல்லாத சூழலில் தாம் சொல்வதே வேத வாக்கு எனப் புலிகள் நிரூபிக்க முயன்றனர்.

புலிகளின் மரபின்படி எப்போதும் பிற தரப்பினரைக் குற்றம் சாட்டும் இயல்போடு தம்மைப் பற்றிய மீள் பரிசீலனை, சுய விசாரணை எதுவுமில்லாமல் அவர்கள் இயங்கினார்கள். இந்தக் குணாம்சத்துடனேயே அவர்களின் மீடியாக்களும் இயங்கின. புலிகள் களத்திலிருந்து கொடுக்கும் தகவல்களை எந்தவிதமான மறுவிசாரணைகளும் இல்லாமல் சுய சிந்தையே அற்றுப் புலம்பெயர் தேசங்களில் உள்ள – அவர்களின் ஏஜென்ஸிகளாக இயங்கும் – ஊடகங்கள் பரப்புரை செய்தன. இதுதான் அடுத்த பெரிய தவறாக அமைந்தது. முழுவதும் புனைவாகவே தமது கதையை அவர்கள் வளர்த்தனர். வன்னியில் என்ன நடக்கிறது? மக்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களின் உணர்வு நிலை என்ன? அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? போராளிகளின் மனநிலை என்ன? படைத்தரப்பு எப்படி நகர்கிறது? கள யதார்த்தம் என்ன? இவை எதைப் பற்றியும் வெளிப்படையான எந்த ஆய்வுக்கும் செய்திக்கும் புலிகள் இடமளிக்கவில்லை. பதிலாகப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் முற்றிலும் பொய்களையே சொல்லி வந்தார். மீள முடியாத தோல்வியை நோக்கி முழுதாக இருத்தப்பட்ட பின்னரும் அவர் வெற்றி குறித்த பிரமைகளிலும் எந்த முகாந்திரமுமில்லாத புனைவுகளிலுமே ஈடுபட்டார்.

இதைப் போன்றே சிறிலங்கா அரசு தரப்பிலும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாகப் பேசவல்ல அமைச்சர் ரோஹித பேகல்லாகம, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, சிறிலங்கா பிரதமர் ரமணசிறீ விக்கிரம நாயக்க உட்படச் சகலரும் முழுப் பொய்களையே சொல்லி வந்தனர். அதிலும் இந்தக் கொடூர யுத்தத்தை -போர் விதிமுறைகளை முற்றிலும் மீறிய கொடிய தாக்குதல்களை – இவர்கள் மனிதாபிமான நடவடிக்கை என்று அழைத்தனர். யுத்தத்தின்போது முதலில் பலியாவது உண்மை என்பார்கள். இந்த உண்மை முழுதாகவே பலியானது. இரண்டு தரப்பினரும் சனங்களைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு மக்களைக் கொன்று குவித்தனர். அப்போது இந்த நிலைமைகள் தொடர்பாகச் சில கிறிஸ்தவமதக் குருமார்கள் சொன்னார்கள்: “உண்மையில் இரண்டு தரப்பினருமே போர்க் குற்றவாளிகள்தான். அதிலும் போராட்டம், விடுதலை என்று வந்த சக்தியான புலிகள் இப்படி மனிதகுல விரோதச் செயலுக்குப் போனதை வரலாறு மன்னிக்காது. பிரபாகரனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையையே இப்போது புலிகள் செய்கின்றனர். தனியொரு மனிதனுக்காக இத்தனை உயிரிழப்புகளா? இவ்வளவு கொடுமைகளா? இதைவிடக் கேவலமானது, ஜனநாயக அரசு என்று சொல்லிக்கொண்டு மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் இப்படிச் சனங்களை இலக்கு வைத்தே தாக்குவதை எப்படி அனுமதிப்பது”. இது பற்றி இரண்டு தரப்பினரிடமும் தமது ஆட்சேபனைகளை அவர்கள் தெரிவித்துமிருந்தனர். ஆனால் இரண்டு தரப்புமே அவர்களின் குரலைப் பொருட்படுத்தவில்லை. வெறிகொண்ட இரண்டு மதயானைகளைப் போலத் தொடர்ந்து மோதிக் கொண்டேயிருந்தனர் அவர்கள்.

ஆனால் யாராலும் விளங்கிக் கொள்ள முடியாத விசயமாக இருப்பது புலிகளின் கரும்புலிகள் அணிகள் ஏன் செயற்பட முடியாமல் ஆகின என்பதே. படைத்தரப்பு புலிகளின் ஒவ்வொரு கோட்டையையும் கைப்பற்றி முன்னேறும்போது புலிகளின் உறுப்பினர்களின் மத்தியிலும் சனங்களின் மனதிலும் கரும்புலிகளின் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தவிரவும் பிரபாகரன் அரசியல்ரீதியாகச் சாணக்கியமோ கெட்டிக்காரத்தனமோ அக்கறையோ இல்லாதவராக இருந்தாலும் இராணுவரீதியாக மிகவும் ஆற்றலுள்ளவராக மதிக்கப்பட்டவர். ஆனால், எவருக்கும் தெரியாத, விளங்காத ஒரு புதிராக அவர் அமைதி காத்தபடி பின்வாங்கிக்கொண்டிருந்தார். கண் முன்னே பல ஆயிரக்கணக்கான சனங்கள் செத்து மடிந்துகொண்டிருந்தனர். அப்போதும் அவர் தனது நடவடிக்கையைக் கைவிடவில்லை. முன்னேறும் படையினரைத் தடுக்கும் அதே மாதிரியான ஒரே வகையான தாக்குதலையே தொடர்ந்தார். இந்தத் தடுப்பு நடவடிக்கையை எப்படி எதிர்கொள்வது, எவ்வாறு முறியடிப்பது என்று படைத்தரப்பு மிக நன்றாகப் படித்திருந்தது. அதன்படி அது எல்லா எதிர்ப்புகளையும் மிக லாவகமாகவும் இலகுவாகவும் முறியடித்தது.

இதன்போது நூற்றுக்கணக்கில் கட்டாய ஆட்சேர்ப்பில் பிடிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளைப் பற்றிய எந்தக் கவலையும் புலிகளிடம் இருக்கவில்லை. அவர்கள் வெறிகொண்டலைந்து இன்னுமின்னும் ஆட்களைப் பிடித்தார்கள். ஆட்பிடிப்பில் எந்தவிதமான மனிதாபிமானத்தையும் நாகரிகத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கவில்லை. இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டது என்று தெரிந்த பின்னர் தங்களுக்கு மக்கள் அபிமானம் தேவையில்லை என்று புலிகள் சிந்திக்கின்றனர் எனப் புலிகளின் முக்கிய ஊடக வியலாளர் ஒருவரே சொன்னார். அந்தளவுக்கு அவர்களின் உளநிலை மாறியிருந்தது.

மாத்தளன் தொடக்கம் வட்டுவாகல் வரையிலான முன்னூறு மீற்றர் அகலமும் 10 கிலோ மீற்றர் நீளமும் உள்ள கடற்கரையில் ஏறக்குறைய மூன்று லட்சம் மக்கள் செறிந்திருந்தனர். சாப்பாடு, குடிநீர், தங்குமிடம், பாதுகாப்பு, மருத்துவம், கழிப்பறை எனச் சகலத்துக்கும் பிரச்சினை. ஏற்கனவே இந்தப் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதி. இரண்டு கிராம அலுவலர்கள் பிரிவிலுமாக சுமார் முன்னூறு குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்த இடத்தில் இப்போது மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் என்றால் நிலைமை எப்படி இருக்கும்? அதுவும் எந்த அடிப்படை வசதிகளையும் செய்ய முடியாத சூழலில்!

சனங்கள் இந்தப் பகுதியில் தஞ்சமடைந்தபோது படையினர் புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, ஆனந்தபுரம் பகுதிகளில் மட்டும் முற்றுகைச் சமரில் ஈடுபட்டனர். புலிகளின் இறுதி எதிர் நடவடிக்கை இங்கேதான் நடந்தது. இந்த நடவடிக்கையை அவர்கள் மிகத் தீவிரமான முறையில் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். மக்களுக்கு ஏற்பட்டிருந்த உளச்சோர்வு, பேரவலம் எல்லாவற்றையும் இந்த நடவடிக்கை மூலம் போக்கிவிடலாம் என்று இறுதி நம்பிக்கையோடு புலிகளின் சில மூத்த தலைவர்கள் சொன்னார்கள். இந்தத் தாக்குதலில் அவர்களுடைய மூத்த முன்னணித் தளபதிகள் பலரும் கலந்துகொண்டனர். பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் மணிவண்ணன், கேனல் சேரலாதன், கேனல் ராகேஸ் உட்படப் பல தளபதிகள் இதன்போதே கொல்லப்பட்டனர். முழு நம்பிக்கையுடன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் புலிகளின் வரலாற்றிலேயே பெரும் தோல்வியாகவும் மாபெரும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் முடிந்தது. இது பிரபாகனை நிலைகுலைய வைத்தது. கொல்லப்பட்ட தளபதிகளின் சடலங்களைக்கூட அவர்களால் எடுக்க முடியவில்லை. ஏற்கனவே இன்னும் பல தளபதிகள் கள முனைகளில் கொல்லப்பட்டிருந்தனர்.

சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, மாலதி படையணி போன்றவையும் முன்னரே பெருமளவுக்குச் சிதைந்துவிட்டன. இந்த நிலையிலும் அவர்கள் வெளியுலகுக்குத் தவறான தகவல்களையே சொல்லிக்கொண்டிருந்தனர். பதிலாக சிறிலங்கா அரசு இன்னும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. இப்போது இறுதிக்கட்ட நடவடிக்கைக்குப் படைத்தரப்பு தன்னைத் தயார்படுத்தியது. அதுதான் புதுமாத்தளன் மற்றும் அம்பலவன் பொக்களையில் படைத்தரப்பு நுழைந்து ஒருலட்சத்திற்கும் அதிகமான சனங்களை மீட்ட நடவடிக்கை. உண்மையில் புலிகளின் பிடியிலிருக்கும்போது தம்மை முழுதாகப் பணயக் கைதிகளாகவே அந்த மக்கள் எண்ணியிருந்தனர். அந்த நிலையிலேயே அவர்களைப் புலிகள் நடத்தினார்கள். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பணயக்கைதிகள். (இப்போது அத்தனை பேரும் தடுப்புமுகாம்களில் தடைக்கைதிகளாக அரசாங்கத்தால் வைக்கப்பட்டுள்ளனர்.) இந்தப் பணயக் கைதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் அதிகமான சனங்கள் கொல்லப்பட்டனர்.

இதேவேளை இன்னும் ஒரு தொகுதிச் சனங்களைப் புலிகள் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தை நோக்கிக் கட்டாயப்படுத்தி அடித்து விரட்டினர். அதுவும் பல வந்தமாகவே விரட்டினர். ஏற்கனவே உணவுப்பொருட்களைப் பெறுவதற்கே வசதியற்றிருந்த மக்கள் சாப்பாடு இல்லாமல் சாவதைவிடப் படையினரிடம் போய்ச்சாவது மேல் என்று மறுத்தார்கள். எனினும் புலிகள் அவர்களைவிடவில்லை. கட்டாயப்படுத்தி முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் சென்றனர். இந்த முள்ளிவாய்க்கால் பகுதிதான் புலிகளின் களமாகியது. இறுதிநாட்கள் என்று சொல்லப்படும் ஏப்ரல் 18க்குப் பிந்திய மே 18 வரையிலான நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகியது. சனங்கள் ஏற்கனவே இரகசிய வழிகளைத் தேடித் தேடி மிகவும் ஆபத்தான வழிகளில் படைத் தரப்பிடம் தப்பிச்செல்ல முற்பட்டனர். சிலர் கடல் வழியாகப் படகுகளிலும் புறப்பட்டனர். ஆனால் புலிகள் உருவாக்கிய ஒரு படையணியினர் ‘பச்சை மட்டை’யுடன் நின்று சனங்களுக்கு அடிபோட்டுக் கலைத்தார்கள். சனங்கள் எதிர்ப்பைக் காட்டியபோது துப்பாக்கியால் சுட்டார்கள்.

இவ்வாறு சுடப்படும்போது இறந்தவர்கள் போக ஏனையோர் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனார்கள். சிலர் பயந்து பின்வாங்கினார்கள். சிலர் செத்து மடிந்தார்கள். சிலர் காயப்பட்டு மருத்துவமனையில் கிடந்தார்கள். இவ்வாறு தம்மால் சுடப்பட்டு மருத்துவமனையில் காயமடைந்து சேர்க்கப்பட்டவர்களை மேலதிகச் சிகிச்சைக்காகக் கப்பலில் எடுத்துச் செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. காயப்பட்டவர்கள் புதுமாத்தளன், முள்ளி வாய்க்கால் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

இதுபோலப் பல நிகழ்ச்சிகள் ஏற்கனவே நிகழ்ந்தன. இந்த நடவடிக்கைகளுக்கு முழுப்பொறுப்பாக முதலில் தங்கனும் அவருடன் இணைந்து புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த இளம்பரிதி, விளையாட்டுத் துறைப் பொறுப்பாளராக இருந்த வரும் பின்னர் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவருமான மாதவன் மாஸ்டர், திருமலை, சூட்டி உள்ளிட்ட பலரும் இருந்தனர். சனங்கள் தமது முழுமையான எதிர்ப்பையும் இந்தச் சந்தர்ப்பங்களில் காட்டத் தொடங்கினர். குறிப்பாக மாத்தளன் பகுதியிலுள்ள கப்பல் துறையில் மக்களுக்கும் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட மோதல்கள் முக்கியமானவை.

கட்டாய ஆட்சேர்ப்பின் போது ஏற்பட்ட தகராறில் ஒரு காலை மூன்று பேரைப் புலிகள் சுட்டுக்கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த சனங்கள் கொல்லப்பட்டவர்களின் சடலங்களைத் தூக்கிக்கொண்டு கப்பலுக்கு வழித்துணையாக வரும் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் சென்றனர். அங்கே புலிகளின் கொடுமையை அவர்கள் அந்தப் பிரதிநிதிகளுக்கு விவரித்தனர். அப்போது கூட்டம் கூட்ட வேண்டாம் என்று சனங்களை விரட்டியடிக்க வந்த புலிகளையும் அவர்களின் காவல் துறையினரையும் மக்கள் கலைத்துக் கலைத்து அடித்தனர். அவர்களுடைய வாகனங்கள் பலவும் எரியூட்டப்பட்டன. எதிர்பாராத இந்த நிகழ்ச்சியால் புலிகள் ஆடிப்போனார்கள். ஆனால் மறுநாள் அந்தப் பகுதியில் 1500க்கு மேற்பட்ட புலிகளின் உறுப்பினர்களும் காவல் துறையினரும் சுற்றிவளைப்பை மேற்கொண்டு கண்டபடி ஆண்களைப் பிடித்துத் தாக்கி எல்லோரையும் தமது வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். மேலும் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். முதல் நாள் கலவரத்தையடுத்து மக்கள் 30 படகுகளில் அந்தப் பகுதிகளிலிருந்து தப்பிச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று சேர்ந்தனர். இதுபோலப் பல சம்பவங்கள் உண்டு. வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த கொந்தளிப்பான நிகழ்ச்சிகள் அவை.

ஏப்ரல் 18, 19, 20, 21 ஆகிய நாட்கள் கடற்கரைப் பகுதியான புதுமாத்தளன், அம்பலவன், பொக்களை என்ற இடங்கள் படையினர் வசமாயின. சனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படையினரிடம் தப்பிச் செல்லப் புலிகளுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டுவிட்டது. கடலிலும் உச்ச பாதுகாப்பை சிறிலங்கா கடற்படை மேற்கொண்டிருந்தது.

இந்தக் காலப்பகுதியிலும் இதன் முன்னரும் புலம்பெயர் தமிழர்கள் தங்களுடைய நாடுகளில் தொடர் போராட்டங்களை நடத்தினர். உண்மையில் உயிர்த்துடிப் போடும் உணர்வெழுச்சியோடும் அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பிரித்தானியா, நோர்வே, சுவிஸ், அவுஸ்ரேலியா, பிரான்ஸ் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடத்திய போராட்டங்கள் முக்கியமானவை. ஆனால் இந்தப் போராட்டங்களை வன்னி மக்களில் பெரும்பான்மையானோர் விரும்பவில்லை.

காரணம் இந்தப் போராட்டங்கள் தங்களைப் பாதுகாக்கும் வகையில் இவற்றைச் சுருக்கி புலிகள் தமக்கு வாய்ப்பை உருவாக்கும் முறையில் மாற்றிக்கொண்டனர். போராட்டங்களை நடத்திய முறையும் புலிகள் புலம்பெயர் தமிழர்களையும் அமைப்புகளையும் பயன்படுத்திய முறையும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு வலுசேர்ப்பதாக அமையவில்லை. மக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்குப் புலம்பெயர் மக்களால் முடியாமல் போனதையிட்டு இதை யாரும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

இன்னும் சற்று விளக்கமாகச் சொன்னால் புலிகளின் ஜனநாயக மறுப்பைப் பற்றிப் புலம்பெயர் தமிழர்கள் போதுமான அளவு பேசியதில்லை. புலிகளின் பகுதியில் அல்லது இலங்கைத் தீவில் புலிகளின் மீது விமர்சனங்களை யாரும் வைக்க முடியாது. அதற்கான வெளியை புலிகள் விட்டுவைக்கவில்லை. ராஜினி திரணகம செல்வி, ‘புதியதோர் உலகம்’ நாவலை எழுதிய கோவிந்தன் உட்பட ஏராளமானவர்களின் படுகொலைகள் இதற்கு உதாரணம். எனவே புலம்பெயர் மக்களால் மட்டும்தான் ஓரளவுக்குப் புலிகளின் ஜனநாயக மறுப்பையும் அரசியல் பார்வையற்ற தன்மையை யும் சர்வதேச மற்றும் போராடும் மக்களின் மனநிலை சூழ்நிலை என்பவற்றைக் கணக்கில் கொள்ளாத போர்முனைப்பையும் இன்னும் பலவாறான எதிர்மறை அம்சங்களைப் பற்றியும் பேசியிருக்க முடியும். அவர்களுக்குத்தான் இந்தப் பொறுப்பு அதிகமுண்டு.

ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் எந்தவிதமான விமர்சனங்களுமற்று பிரபாகரனை வழிபட்டனர். புலிகளை நிபந்தனைகளற்ற முறையில் ஆதரித்தனர். இதற்கான பிரதான காரணம் இவர்கள் தமது தாய்நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து தூர இடங்களில் இருக்கும்போது ஏற்படும் சொந்த நிலத்தின் மீதான தாகம். அடுத்தது தாம் பாதுகாப்பாக இருக்கும்போது தமது உறவினர்கள் போரால் வதைபடுவதும் கொல்லப்படுவதும். மூன்றாவது காரணம், சிறிலங்கா அரசு மீதான காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும். இந்தக் காரணங்கள் அவர்களை விசுவாசமாகப் போராடத் தூண்டின. ஆனால் இதைப் புலிகள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தியதும் புலம்பெயர் தமிழர்கள் இதற்குப் பலியானதும் ஒன்றாகவே நடந்தன. புலிகள்மீதான விமர்சனத்தை வைத்து ஈழப் போராட்டத்தை விரிந்த தளத்தில் ஜனநாயக உள்ளடக்கத்துடன் முன்னெடுக்க வேண்டும் என்ற புலம்பெயர் தமிழர்களும் புத்திஜீவி களும் ஏற்கனவே புலிகளின் ஆதரவுச் சக்திகளால் ஓரங்கட்டப்பட்டு மௌனிக்கப்படுத்தப்பட்டிருந்தனர். ஒரு நண்பர் சொல்வதைப் போலப் பிரபாகரன் எல்லாவற்றையும் தியாகம் – துரோகம் என்ற பிரிகோட்டைப் போட்டுப் பிரித்து வைத்திருந்தார். புலிகளின் சிந்தனை முறைக்கு எதிராகச் சிந்திப்பவர்களும் செயல்படுபவர்களும் துரோகிகளாகவும் எதிர்நிலை யாளர்களாகவும் பார்க்கப்பட்டனர். வெகுஜனத் தளத்தில் இலகுவில் பதிந்துவிடக்கூடிய இன உணர்வு, மொழி உணர்வு போன்றவற்றை ஆதாரமாகக்கொண்டு பிரபாகரன் இதை வெற்றிகரமாகச் செய்துகொண்டார்.

எனவே ஜனநாயக உள்ளடக்கமற்ற புலிகளின் போராட்டத்தை – இந்தப் போராட்டங்களை நடத்திய மக்கள் தங்களின் கைகளில் பிரபாகரனின் படத்தையும் தமிழ் ஈழப் படத்தையும் வைத்திருந்ததை நினைவில் கொள்க -மேற்குலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் எப்படியும் யுத்தத்தை நிறுத்திவிட வேண்டும், மக்களைக் காப்பாற்ற வேண்டும், ஈழத்தில் ஒரு அமைதிச் சூழலை கொண்டுவரத் தாம் பாடுபட வேண்டும் என்று இந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் விசுவாசமாகவே முயன்றனர். அதற்காக அவர்கள் இரவு பகலாகத் தொடர்ந்து போராடினர்.

புலம்பெயர் மக்களின் போராட்டம் நிச்சயமாக ஏதாவது நல்விளைவுகளைத் தரும் என்று பிரபாகரன் நம்பினார். முதல் தடவையாக அவர் துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் நம்பிக்கை இழந்த நிகழ்ச்சி இது. அதுவரையும் எப்படியும் இராணுவத்தை ஏதாவது ஒரு புள்ளியில் வைத்து முறியடித்துத் தோல்வியைத் தழுவச் செய்யலாம் என்று இருந்த நம்பிக்கையைப் பிரபாகரன் மெல்ல மெல்ல இழந்திருந்தார்.

பிரபாகரன் எத்தகைய இராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பார் என்று தெரியாத ஒரு அச்சம் நிறைந்த புதிர் சிறிலங்கா அரசுக்கும், படைத் தரப்புக்கும் இருந்தது உண்மை. அதனால் அவர்கள் தமது நடவடிக்கையை முதலில் மந்தகதியிலேயே நடத்தினர். ஆனால் புலிகளின் பலவீனமான அம்சங்களை அடையாளம் கண்ட பின்னர் படை நகர்வின் வேகம் யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு வளர்ச்சியடைந்திருந்தது. ஆனாலும் தமது இறுதிக் கணம் வரையிலும் புலிகளின் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருந்தன என்பதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். இருந்தபோதும் பிரபாகரன் தன்னுடைய போரின் மூலம்-யுத்தத்தின் மூலம்-இனிமேல் எதையும் சாதிக்க முடியாது என்ற உண்மையை வந்தடைந்தார். பிரபாகரனைப் போலவே ஏனைய புலிகளின் உறுப்பினர்களும் இந்த உண்மைக்கு வந்து சேர்ந்திருந்தனர். குறிப்பாக மேற்குலகம் இந்தச் சந்தர்ப்பத்தில் சிறிலங்கா அரசுக்கு ஏதாவது அழுத்தங்களைக் கொடுக்கும்; யுத்த நிறுத்தமோ நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தைச் சூழலோ உருவாக்கப்படலாம் என்று அவர்கள் நம்பினர்.

இதற்கு முன்னர் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் நடந்த போராட்டங்களும், கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களும் குறிப்பாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிகளும் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு தனியே புலிகளுக்கு மட்டும் இருக்கவில்லை. சகல தமிழ் மக்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இருந்தது. இந்திய மத்திய அரசு தன்னுடைய தீர்மானங்களில் அல்லது நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தினால் நிலைமை சாதகமாக மாறும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு எதிராகவே நிகழ்ச்சிகள் நடந்தன. ராஜீவின் படுகொலையைப் புலிகள் சாதாரணமாகக் கருதினார்கள். இந்தியா அப்படி அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்திய யதார்த்தத்தின்படி இந்தியாவால் அந்தக் கொலையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதும் பிரபாகரனுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், அவ்வாறு அவர் நம்ப விரும்பினார். தமிழக எழுச்சி நிச்சயம் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் பிரபாகரனுக்கு நம்பிக்கையூட்டினார். இந்தியாவின் தேசியக் கட்சிகளான இடதுசாரிகளும் பாரதீய ஜனதாவும் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டையும் சிறிலங்கா அரசுக்கெதிர் போக்கையும் வெளிப்படுத்தியிருந்தமை பிரபாகரனுக்கும் நடேசனுக்கும் அதிக நம்பிக்கையளித்தது. ஆனால், இந்திய மத்திய அரசின் போக்கில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. மாற்றம் ஏற்பட வாய்ப்புமில்லை. தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவும் அவற்றின் இணைந்த நிலைப்பாடுகளும் எவ்வாறு இருக்கும் என்பதெல்லாம் பிந்தியே புலிகளுக்கு விளங்கியது. நீண்டகால ஈழப்போராட்ட ஆதரவாளர்களாக இருக்கும் நெடுமாறன் போன்றோர், மக்கள் திரட்சியை ஓரளவுக்குக் கொண்ட ராமதாஸ், திருமாவளவன் போன்றோரின் செல்வாக்குகளுக்கும் ஒரு எல்லையுண்டு. அதிகாரத்திலிருக்கும் தரப்பைத் தவிர பிற சக்திகளின் ஆதரவுகளுக்கு ஒரு வரையறை உண்டு என்ற விசயங்களையெல்லாம் பிரபாகரன் பிந்தியே புரிந்துகொண்டார். இதேவேளை மாற்று நடவடிக்கைக்கான அவகாசமே இல்லாமல் மகிந்த அரசு அரசியல் நடவடிக்கைகளையும் இராணுவத் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியது.

சர்வதேசத் தரப்பை ஒரே முகப்படுத்திய சிங்கள இராசதந்திரம் பாகிஸ்தான், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, இஸ்ரேல், பிரித்தானியா எனச் சகல நாடுகளில் இருந்தும் ஆயுத உதவிகளையும் போர்த்தொழில் நுட்பத்தையும் அரசியல் ஆதரவையும் பெற்றுக்கொண்டது. மகிந்த ராஜபக்சே எந்த விளைவுகளுக்கும் முகம் கொடுக்கத் தயார் என்ற நிலையில் தீர்மானங்களை எடுத்தார். ஏற்கனவே பெற்றிருந்த வெற்றிகள் சிங்களத் தரப்புகள் அத்தனையையும் போருக்கு ஆதரவாகத் திரட்டின. பிரபாகரன் எல்லோருடைய வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளானவர் என்ற அடிப்படையில் தமக்குள் முரண்கொண்ட சக்திகளும் இந்த விவகாரத்தில் ஒன்றுபட்டன. தமிழர்களோ – புலிகளோ நெருக்கடியில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள எந்த நண்பர்களும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

இதேவேளை இந்த இராணுவத் தாக்குதல்களால் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புகள் மட்டுமல்லாமல் இராணுவக் கட்டமைப்பும் ஆட்டம் கண்டது. குறிப்பாகப் புலிகளின் வெடிபொருட் தொழிற்சாலைகள் இடப்பெயர்வுக்கும் குண்டுவீச்சுக்கும் இலக்காகின. என்றபோதும் அவர்களின் உற்பத்திகள் நடந்துகொண்டேயிருந்தன. ஆனால் வரையறுக்கப்பட்ட அளவில் இறுதிவரை தாக்குதலை நடத்தும் திறனை இதன் மூலம் பிரபாகரன் தக்கவைத்திருந்தார்.

புது மாத்தளன், அம்பலவன் பொக்களையில் ஏப்ரல் 19, 20ஆம் திகதிகளில் இராணுவமும் உள்நுழைந்தவுடன் மாறிய நிலைமைகள் புலிகளுக்கு மேலும் நெருக்கடிகளைக் கொடுத்தன. கடலில் தீவிரக் கண்காணிப்பு, சிறிய நிலப்பகுதி, வெளிச்செல்ல முடியாத அளவுக்குச் சுற்றிவளைப்பு-இராணுவ வளையத்தின் இறுக்கம், தளர்வடைந்த தளபதிகள், எந்தப் போருபாயத்தாலும் இனி வெற்றி கொள்ள முடியாது என்ற நிலை நிச்சயமாகிவிட்டது. ஆனால், அப்போதும் தங்களால் போரில் வெற்றிபெற முடியும் என அவர்கள் சனங்களுக்குச் சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். புலிகளின் குரல் வானொலி போர் வெற்றி குறித்த நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளையும் அறிவிப்புகளையும் செய்துகொண்டேயிருந்தது. ஆட்பிடிப்பும் குறைவில்லை. அதேவேளை புலிகள் தாக்குதல்களை நடத்திக் கொண்டேயிருந்தனர்.

இப்பகுதிகளில் இருந்து சனங்கள் புலிகளின் தடைகளையும் மீறி யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்கும் சென்றனர். கடலில் பயணம் செய்தோரை நோக்கிக் கடற்புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால், தாக்குதல்களுக்கு இலக்கான படகுகளைத் தவிர ஏனையவை தப்பிச் சென்றுவிட்டன. இரவிரவாகப் படகுகள் புல்மோட்டைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் சென்றன.

மாத்தளன் பிரதேசம் படைக்கட்டுப்பாட்டுக்கு வந்தபோது அங்கே இயங்கிவந்த கப்பல்துறையை வன்னியில் இருந்த ஒரே அரசாங்க அதிகாரியான பார்த்தீபன் முள்ளிவாய்க்காலுக்கு மாற்றும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். புலிகளும் அதை விரும்பினர்.

புது மாத்தளன், அம்பலவன் பொக்களை, வலைஞர் மடம் பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்களைத் தவிர ஏனையோர் இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இடம்பெயர்ந்து தங்கினர். இது முல்லைத் தீவு நகரத்தின் நுழைவாயிலில் உள்ள பகுதி. சிறு கிராமம். ஆனால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்தச் சிறு கிராமங்கள் இரண்டிலும் நெரிசலாகத் தங்கினர். பலருக்குத் தார்ப்பாலின் கூடாரங்களே இல்லை குளிப்பில்லை. சாப்பாடில்லை. பதுங்கு குழியில்லை. போவதற்கு வழியில்லை. அங்கே தங்கவும் முடியாது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திக் கொண்டேயிருந்தது. சனங்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். புலிகளின் தலைமை இந்தப் பகுதியினுள்ளேயே சிக்கியிருக்கிறது என்பதை இராணுவத் தரப்பு உறுதி செய்திருக்க வேண்டும். எனவே முழு முனைப்போடு தாக்குதல் நடந்தது.

இதே வேளை புலம்பெயர் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் தீவிரப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தனர். இந்தப் போராட்டங்களின் மூலம் பிரிட்டனிலும் அமெரிக்க வெள்ளை மாளிகையிலும் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கு என்று பிரபாகரன் நம்பினார். சில புலம்பெயர் தமிழ் முக்கியஸ்தர்கள் பிரபாகரனுக்கு இந்த வகையில் நம்பிக்கையூட்டியதாக தகவல்கள் உண்டு. வேறு வழியோ கதியோ இல்லாதபோது இவ்வாறு நம்புவதைத் தவிர அவருக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. எனவே புலம்பெயர் தமிழர்களை அவர் முழு நம்பிக்கையோடு நம்பியிருந்தார். அவர்களின் அந்தப் போராட்ட இயந்திரத்தை அவர் முழு வேகத்தோடு இயக்கினார். இதற்கு நல்ல ஆதாரம் புலிகளின் புலம்பெயர் ஊடகங்கள். வன்னியிலிருந்து லண்டனில் இருந்து இயங்கும் மிஙிசி வானொலிக்குத் தகவல்களைத் தொலைபேசி மூலமாக வழங்கிய புலிகளின் சர்வதேசப் பரப்புரைப் பொறுப்பாளர் திலீபன் (இவர் தமிழ்ச் செல்வனின் மனைவியினுடைய உடன் பிறந்த சகோதரர்) விடுத்த கோரிக்கையும் தெரிவித்த கருத்துகளும் இதற்கு ஆதாரம். இவரே வெளிநாடுகளில் நடந்த போராட்டங்களை இணைந்து நடத்தினார்.

இந்தச் சந்தர்ப்பங்களில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரும் சிறிலங்காவுக்கு அவசரப் பயணத்தை மேற்கொண்டு அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். வவுனியா அகதி முகாம்களுக்கும் சென்றிருந்தனர். ஐ.நாவிலும் இலங்கை விவகாரம் உரத்த தொனியில் பேசப்படுவதான ஒரு தோற்றம் உருவாகியது. ஐ.நா செயலரின் சிறப்புத் தூதுவராக விஜய் நம்பியார் கொழும்புக்கு விரைந்தார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்பட்டது. இதற்கு அந்த நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த போராட்டங்களும் அழுத்தத்தை ஏற்படுத்தின. ஒபாமா நிர்வாகமும் இலங்கை நிலவரம் குறித்துக் கவனத்தைச் செலுத்தியது. இவையெல்லாம் யுத்தத்தை நிறுத்துவதற்கு அல்லது புலிகளின் தலைமையை ஏதோவொரு வகையில் காப்பாற்றுவதற்கு உதவும் என்ற நம்பிக்கை புலிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் மக்களின் ஒரு சிறுபகுதியினருக்கும் இருந்தது. ஆனால், நிலைமைகளைச் சரியாக அவதானிப் போருக்கும் அரசியல் ஞானமுடை யோருக்கும் இவற்றில் சிறு நம்பிக்கையும் இருந்ததில்லை. ஏனெனில் யுத்தத்தை நடத்திய தரப்புகளே இவைதானே. சர்வதேச அரசியல் பகைப்புலத்தில் பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்திய இந்த நாடுகள் தமது நாடுகளில் தடைசெய்த புலிகளின் அழிவை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தன என்ற யதார்த்தம் அரங்கேறியது.

பிரபாகரனுக்கு இராணுவரீதியிலும் மாற்று வழிகள் இல்லை என்றாகிவிட்டது. அரசியலிலும் வேறு தெரிவுகள் இல்லை. சர்வதேசப் பரபரப்பு இருந்ததே தவிர நிலைமைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே சிறிலங்கா அரசு இந்தச் சந்தர்ப்பத்தைத் தனக்கு இன்னும் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது. அந்தப் பகுதிக்கு உணவு, மருந்துடன் கப்பலை அனுப்பிக் கொண்டு, அதே சமயத்தில் பீரங்கிக் குண்டுகளையும் அங்கே ஏவியது.

மிஞ்சிய புலிகளின் கதையும் கதியும் இங்கே தான் வரலாற்றில் தீவிரக் கவனத்தைப் பெறும்வகையில் அமைந்திருந்தது. பிரபாகரன், அவருடைய குடும்பம், பொட்டம்மான், கடற்புலிகளின் தளபதி சூசை, கேனல் பானு, கேனல் ஜெயம், கேனல் ரமேஷ், பா. நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிகளின் முக்கியஸ்தர்கள் இங்கேதான் இருந்தனர். இப்போது பிரபாகரன் தான் அதிகம் நம்பிய துப்பாக்கியால் எதையும் செய்ய முடியாது என்பதை முழுதாக உணர்ந்திருந்தார். ஆனால் எதற்கு மாற்றீடாக எதையும் செய்ய முடியாது என்றும் அவருக்குத் தெரிந்தது. எல்லாவற்றுக்கும் காலம் கடந்த நிலை என்ற யதார்த்தம் முன்னின்றது.

இறுதி மூச்சை எப்படித் தக்கவைத்துக் கொள்வது என்று பிரபாகரனும் அந்த மூச்சை எப்படிப் பறிப்பது என்று அரசாங்கமும் இறுதிநிலையில் இருந்தன. மெல்ல மெல்லப் படைத்தரப்பு முன்னேறியது. மனித உரிமை மீறல்களைப் பற்றிய எந்தக் கவலையுமில்லாத அரசாங்கம் போரை ஈவிரக்கமில்லாமல் நடத்தியது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் கோரிக்கைகள், கண்டனங்களையெல்லாம் சிறிலங்கா அரசாங்கம் தூக்கித்தூர வீசிவிட்டது. ஏற்கனவே நவநீதம் பிள்ளையின் அறிக்கைகளும் இவ்வாறு தூக்கியெறியப்பட்டிருந்தன. வெற்றியை முழுதாகப் பறிக்கும் வெறியில் சரத்பொன்சேகாவும் மகிந்த ராஜபக்சேவும் இருந்தனர்.

அரசாங்கத்தின் திட்டப்படி மே 20ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு வந்தது.

பெரும் புகழோடும் தீராத கண்டனங்களோடும் எதிர்ப்பும் ஆதரவும் கலந்த வினோதமான கலவையாகவும் இருந்த பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை சிறிலங்கா அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை நம்புவதா விடுவதா என்ற தடுமாற்றத்தில் பல தரப்பினரும் இருந்தனர். அதற்கான காரணங்களும் உண்டு. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று முன்னரும் இந்திய அரசும், சிறிலங்கா அரசும் பல தடவைகள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அந்தச் செய்திகளுக்குப் பின்னரும் பிரபாகரன் உயிருடனேயிருந்தார். அடுத்துப் பிரபாகரனோ அவருடைய குடும்பமோ என்றைக்கும் மக்களுடன் வாழ்ந்ததும் இல்லை, வெளியரங்கில் நடமாடியதும் இல்லை. அவருடைய நடமாட்டம், நடவடிக்கைகள் குறித்துப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள், தளபதிகளுக்கே எதுவும் தெரியாது. எனவே அவருடைய பாதுகாப்பு அணியினரையும் பொட்டம்மான், சூசை ஆகியோரையும் தவிர வேறு எவருக்கும் எதுவும் தெரிந்திருக்கும் வாய்ப்பில்லை. பிரபாகரனின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்தவர் இரட்ணம் மாஸ்டர் எனப்படுபவர். இவரும் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டார் என்று சிறிலங்கா அரசு தெரிவித்திருந்தது.

மிஞ்சிய புலிகள் (நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட அணியினர் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர்) சனங்களோடு சனங்களாக இரட்டை வாய்க்காலிலும் வட்டுவாகலிலும் சரணடைந்தனர். சனங்கள், தாங்கள் உயிருடன் மீள்வோம் என்ற நம்பிக்கையே இல்லாமல், அதிர்ச்சியடைந்த முகத்தோடு – சவக்களை என்று சொல்வார்களே – இராணுவத்திடம் சரணடைந்தனர். 38 ஆண்டுகளாக நடந்த புலிகளின் போராட்டம் சரணடைவு நிகழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.

இப்போதுள்ள சில கேள்விகள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா? புலிகளின் எழுச்சி மீண்டும் நிகழுமா நிகழாதா? கொல்லப்பட்டு விட்டார் என்றால் தானே இறந்தாரா அல்லது படைத்தரப்பினால் கொல்லப்பட்டாரா என்பது. தானாக மரணித்தார் என்றால் எப்படி? படையினரால் கொல்லப்பட்டார் என்றால் அடித்துக்கொல்லப்பட்டாரா அல்லது சுட்டுக் கொல்லப்பட்டாரா? என்பது ஏனெனில் பிரபாகரனின் தலையில் அடிகாயமே காணப்படுகிறது என்று பலரும் கேட்கிறார்கள்.

உண்மையில் இந்தக் கேள்விகளையும்விட முக்கியமானவையும் தேவையான கேள்விகளும், பிரபாகரனால் தன்னைக் காப்பாற்ற முடியாமல் போனது எப்படி? அவரால் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனது எவ்வாறு? அவருடைய போராட்டத்தை அவரால் இறுதியில் இந்த நிலைக்குக் கொண்டுபோக வேண்டி வந்த காரணம் என்ன? இதுபோல ஏராளம் உண்டு. இவற்றுக்கான பதில்கள் பிரபாகரனின் கடந்தகால செயற்பாடுகளிலும் அவருடைய மனவுலகத்திலுமே இருந்தன. இருக்கின்றன.

மக்கள் சட்டியில் இருந்து அடுப்புக்குள்ளே இடம் மாற்றப் பட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். எல்லாவற்றையும் தானே எடுத்து தானே போட்டுடைத்த மனிதராக வரலாற்றில் மாறிவிட்டார் அவர்.

பிரபாகரனே சொல்வதைப் போல “வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம்” என்ற மாதிரியே இந்த நிகழ்ச்சிகளும் அமைந்துவிட்டன.

(நன்றி காலச்சுவடு)

வன்னி முகாம்களின் அவலங்கள்: வன்னியில் இருந்து ஒரு மின் அஞ்சல்

IDP_Camp_Aug09நண்பர்களே

இலங்கையில் யுத்தம் உக்கிரமடைந்த காலங்களின்போது உலகமே சனங்கள் சனங்கள் என்று ஓலமிட்டுக் கொண்டிருந்தது. இப்போது யுத்தம் முடிவடைந்து விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பிறகான காலத்திலும்‌ அந்தச் சனங்களின் வாழ்நிலையில் மாற்றமேதும் வந்துவிடவில்லை – சாவின் கரங்கள் மூர்க்கமான எறிக்ணைகளாகத் தம்மைத் தாக்கிச் சிதைக்கும் என்ற பயத்தில் மருளத் தேவையில்லை என்பதைத் தவிர்த்துப் பார்த்தால். ஆனால் போரின் கடைசிக் கணம்வரை பெருங்குரலெடுத்துக் கதறிக் கொண்டிருந்த உலகு சட்டென்று மௌனமாகிக் கிடப்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப்பற்றிப் பேசுபவர்கள் அதற்குக் கபடத்தனமான அரசியற் சாயம் பூசியே அதைச் செய்கிறார்கள்.

IDP_Camp_Aug09260 000க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் செட்டிக்குளம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை நிலைமையைப் படுமோசமாக்கியிருப்பதாகக் கண்டு வந்தவர்கள் சொல்கிறார்கள்.. (இணைக்கப் பட்டிருக்கும் படங்கள் சாட்சி). தற்காலிகமாக அமைக்கப்பட்ட‌ மலக்குழிகளில் பல நிரம்பி வழிந்தபடியிருப்ப‌தாகவும் பல முற்றாகச் சீர்கெட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள். எங்கும் தாங்க முடியாத‌ துர்நாற்றம். இது பெருத்த சுகதாரச் சீர்கேட்டுக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கும் என்பது திண்ணம். இணைக்கப்பட்டிருக்கும் படங்களில் மனிதக் கழிவின் மீது நெளியும் புழுக்களைக் காணலாம்.. (அரசாங்கம் நெடுநாளைக்கு மக்களை இந்த முகாம்களில் வைத்திருக்கக் கூடாது என்பதற்காகவே ஐ.நா தற்காலிக மலசலக் குழிகளை அமைத்துக் கொடுத்திருந்தது. ஆனால் அரசாங்கத்துக்கு அவர்களை இப்போதைக்கு மீளக் குடியேற்றும் எண்ணம் சற்றேனும் இருப்பதாகத் தோன்றவில்லை. குறைந்த பட்சம் வெளியே உறவினர்களோடு சென்று தங்கி வாழக்கூடிய நிலையிலுள்ள குடும்பங்களையாவது சோதனைகளை முடித்து விட்டுச் செல்ல அனுமதிப்பதாயில்லை. அப்படிச் செய்வது முகாம்களில் நிலவும் மிகுந்த சனநெரிசலை வெகுவாகக் குறைக்கும்)

IDP_Camp_Aug09இங்கே இலங்கையில் ஜனநாயகம் நாளுக்கு நாள் சீர் கெட்டுக் கொண்டிருக்கிறது. அனைவரும் ஒரேகுரலில் ஒரேதொனியில் ஒரேபொருளையே உரைக்க வேண்டுமென்று நிர்ப்பந்திருக்கிறது. ஒரு சில பேரால் மட்டுமே இயக்கப்படும் அரச யந்திரம். பெருத்த மௌனம் சனங்கள் மீது ஒரு கரும்போர்வையாகப் படர்ந்திருக்கிறது. ஆனால் வெளியுலகிலும் அப்படியா? இலங்கை அரசுக்கெதிரான குரல் விடுதலைப் புலிகள் அழியும் மட்டும் தான் ஒலித்தென்றால், அவ்வளவும் புலிகளுக்கு ஆதரவாக ஒலித்த குரல் மட்டும் தானா? சனங்களைப் பற்றிய கரிசனை..? இனியான எதிர்காலம் என்ன?

நண்பர்களே, இப்பிரச்சனை குறித்து நான் பணிபுரியும் பத்திரிகைக்காக எழுதிய செய்தியில் எனது பெயரைப் போடுவதற்கே திராணியற்ற நிலையில், அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலை செய்யும் நபரொருவர் அனுப்பி வைத்த இப்படங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். இவற்றை உங்களின் வலைத்தளங்களில் பிரசுரிப்பதன் மூலமும், வெகுஜன ஊடகங்களில் பணிபுரிபவர்கள் தத்தமது ஊடகங்களில் வெளியிடுவதன் மூலமும் பரந்தவொரு சனத்திரளின் பார்வைக்கு இந்தப் பிரச்சனையைக் கொண்டு செல்லலாம் என்ற நம்பிக்கையில்…

‘தமிழ் மக்களுடைய எதிர்ப்புணர்வு இலங்கை அரசுக்கு எதிரானதே அன்றி சிங்கள மக்களுக்கு எதிரான வன்மமாக அமையக் கூடாது’ கொமன்வெல்த் முன்பான ஆர்ப்பாட்டத் தொகுப்பு : த ஜெயபாலன்

Robin_Speech_at_the_Protestபுலம்பெயர் தமிழ் அரசியல் சூழல் மிகவும் குழப்பகரமானதாகவே இருந்து வந்துள்ளது. இன்னமும் அவ்வாறே உள்ளது. இங்கு முன்னெடுக்கப்படும் அரசியல் நடவடிக்கைகள் தாயகத்தில் உள்ள மக்களைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக அம்மக்களை தங்கள் எஜமானர்களுக்குப் பணிய வைப்பதாகவே இருந்து வந்துள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் புலி ஆதரவு அமைப்புகளானாலும் சரி, கிழக்கிலங்கை – தலித் – ஜனநாயக முன்னணிகள் போன்ற பெயரளவில் அல்லது பெயரில் மட்டும் ஜனநாயகத்தைக் கொண்டுள்ள புலி எதிர்ப்பு அமைப்புகளானாலும் சரி தாயகத்தில் உள்ள மக்களுக்கு தாங்களே குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டாலும் உண்மையில் அவர்கள் அம்மக்களின் குரல்களை இருட்டடிப்புச் செய்து தங்கள் அரசியல் நலன்களைத் தக்க வைக்கவே முயன்று வந்துள்ளனர்.

இவற்றுக்கு அப்பால் மக்கள் நலன் சார்ந்து முன்னெடுக்கபடும் போராட்டங்கள் மிக அருமையாகவே நடைபெறுகிறது. இது மிகக் குறைந்தளவினருடன் மேற்கொள்ளப்பட்ட போதும் அப்போராட்டங்கள் அரசியல் ரீதியில் தங்கள் நியாயத்தை உறுதிப்படுத்தி விடுகின்றன. அந்த வகையில் தமிழ் சொலிடாரிற்றி – தமிழ் ஒருங்கிணைப்பு அமைப்பினால் யூன் 24 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் குறிப்பிடத்தக்கது. கொமன்வெல்த் அலுவலகத்திற்கு முன் நூறுக்கும் உட்பட்டவர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சமூகங்களையும் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அதில் கலந்துகொண்ட தமிழர்களுக்கு இணையாக பிற சமூகத்தவர்களும் கலந்துகொண்டதுடன் அவர்களே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

Serra_Leading_the_Protestஒரு ரூபாயோ ஒரு பெனியோ மகிந்த ராஜபக்ச அரசுக்கு கொடுக்கப்படாது!
வழங்கப்பட்ட நிதிக்கு கணக்குகள் காட்டப்பட வேண்டும்!
வன்னியில் உள்ள முகாம்கள் உடனடியாக மூடப்பட வேண்டும்!

போன்ற கோசங்கள் அங்கு ஓங்கி ஒலித்தது. Stop Slaughter of Tamils என்ற சர்வதேசப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களே தமிழர் ஒருங்கிணைப்பு என்ற தலைப்பில் தற்போதைய போராட்டங்களை தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப முன்னெடுக்கின்றனர். பிரித்தானியாவில் உள்ள இடதுசாரி அமைப்பான Committee for Worker’s International என்ற அமைப்பே இப்போராட்டங்களின் உந்து சக்தியாகச் செயற்படுகின்றது. முக்கியமாக ‘த சோசலிஸ்ட’ பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான Sarah இப்போராட்டத்தில் முன்னின்று கோசங்களை வைத்தார். ஏனையவர்களும் ஈடுபட்டனர்.

இடையிடையே கலந்துகொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. பல்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். அவர்கள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டி அதற்காக தாங்கள் தார்மீக அடிப்படையில் குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தை சொல்லிச் சென்றனர்.

Robin_Speech_at_the_Protestகுறிப்பபாக ரொபின் என்பவரது கருத்துக்கள் தமிழ் மக்களது போராட்டங்கள் தொடர்பான மதிப்பீடாக அமைந்திருந்தது. நடந்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசு மீது மிகுந்த கண்டனத்தை தெரிவித்த ரொபின் இது சிங்கள பொது மக்களுக்கு எதிரான வன்மமாக அமையக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்தினார். இங்கு லண்டனில் சிலர் பௌத்த விகாரைக்கு தீயிட்டதையும் லோட்ஸ் மைதானத்தில் யூன் 21 அன்று இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வந்த சிங்கள இளைஞர்கள் தாக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய ரொபின் இவ்வாறான சிங்கள மக்களுக்கு எதிரான வன்மங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிங்கள மக்கள் தமிழ் மக்களுடைய எதிரிகள் அல்லர் அரசாங்கத்திற்கு எதிராகவே செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கட் போட்டியில் தமிழர்கள் சிலர் பாகிஸ்தானின் வெற்றியை எதிர்பார்த்து நின்றதையும் பாகிஸ்தானுக்காக குரல் கொடுத்ததையும் புரிந்துகொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்ட ரொபின் கடைசியாக இடம்பெற்ற யுத்தத்தில் பாகிஸ்தான் முழுமையான இராணுவ ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்கி இருந்ததையும் பாகிஸ்தான் விமான ஓட்டிகள் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டினார். உண்மையில் தமிழர்களுடைய எதிர்ப்புணர்வு பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும் அன்று அமைந்திருக்க வேண்டும் என்றும் ரொபின் கூறினார்.

இலங்கைத் தமிழ் மக்களுக்கான போராட்டம் வெறும் தமிழர்களுடைய போராட்டமாக அல்லாமல் பிற சமூகங்களையும் இணைத்து போராட வேண்டியதன் அவசியத்தை விளக்கிய ரொபின் ஏனைய ஒடுக்கபட்ட மக்களுக்காகவும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் குரல்கொடுக்க வேண்டும் என்றும் பரஸ்பரம் புரிந்துணர்வு வளர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். தமிழர்களுடைய பிரச்சினை மட்டுமல்ல பாலஸ்தீனியர்களுடைய பிரச்சினை காஸ்மீரியரின் பிரச்சினை எல்லாம் ஒரே வகையினதே என்று கூறிய ரொபின் இம்மக்களுடனும் இணைந்து போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இறுதியாகத் தெரிவித்தார்.

இலங்கை அரசும் சர்வதேச நாடுகளும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளும்வரை தங்கள் போராட்டங்கள் தொடரும் என்ற உறுதியுடன் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.

…….. தங்கிய ஜனாதிபதி அவர்களே! : துரை நரையன்

President_and_the_Peopleஇலங்கைத் தமிழினத்தை இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக திணறடித்துக் கொண்டிருந்த கொடிய மிருகங்களான புலிகளை முற்றாக அடித்து நொருக்கியதற்காக நானும் ஒரு தமிழன் என்ற அடிப்படையில் தங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த நன்றி தெரிவிப்பானது தாங்கள் தமிழினத்தை காப்பதற்காக தாங்கள் உள்ளத்தளவில் உணர்ந்து செயற்பட்டீர்கள் என்ற உணர்விலே என்னுள் எழவில்லை என்பதுதான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயமாகும்.

மாறாக இலங்கைத் தீவிலே வடக்கு – கிழக்கு வாழ் தமிழினத்தை இனச்செறிவின் அடிப்படையிலே அடித்து நொருக்குவதற்காகவே நீங்கள் முதற் கட்டமாக புலிகளை ஒடுக்கியிருக்கிறீர்கள் என்பதுதான் எனதுணர்வின் சிந்தனையும் உண்மையுமாகும்.

நிற்க! ‘புலிகள் வேறு தமிழினம் வேறு. புலிகளின் விருப்பும் தேவையும் வேறு! தமிழினத்தின் விருப்பும் தேவையும் வேறு!’ – இதுதான் புலிகளை அழிப்பதற்கு முன்பு உங்களின் வாதம். இப்போது உங்களுடையவாதம் என்ன என்பது எனக்கு தெரியாது தேவையும் இல்லை!

ராஜபக்ச அவர்களே! இலங்கையில் தமிழினம் நீண்ட காலமாக வெவ்வேறு வழிகளில் போராடியது ஏன்? மனநோயினாலா? அவ்வப்போது வேறுபட்ட வடிவிலான தீர்வுகள் சிங்களத் தலைமைகளுக்கும் தமிழ் தலைமைகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டு இருக்கின்றன ஏன்? இரு சாராருக்கும் இடையிலான மனநோயினாலா? 1987 ல் இலங்கை – இந்தியாவிற்கிடையில் கையொப்பம் இடப்பட்ட ஒப்பந்தம் ஏன் ஏற்பட்டது? வெறும் பொழுது போக்கு விடயமா? ஆனால் பொழுது போக்காகவே முடிந்து விட்ட வரலாற்றைத் தான் தமிழினம் கண்டது.

புலிகள் வேறு தமிழினம் வேறு என கூறிய சிங்களத் தலைமைகள் தமிழினத்திற்கான தீர்வை ஏன் முன்வைக்கிறார்கள் இல்லை? ஏன் முன்வைத்திருக்கவில்லை?  ‘புலிகள் வேறு தமிழினம் வேறு’ என கூறிய நீங்கள் தீர்வை வைப்பதற்கு ஏன் காலதாமதமாக்கினீர்கள்? ‘புலிகள் வேறு தமிழினம் வேறு’ என்றான போது தீர்வுக்கும் புலிகளுக்கும் சம்மந்தம் இல்லைத்தானே? எனவே ஏன் இன்னமும் தமிழர்களுக்கு எந்தத் தீர்வும் இன்னமும் கிடைக்கவில்லை. தமிழினத்திற்கான தீர்வு கிடைக்காதமைக்கு புலிகள் மட்டும் காரணமல்ல. அவர்களையே ஒத்த சிங்களமும் தான் அதாவது நீங்களும் தான் காரணம் என்பதே உண்மையானது.

உண்மையில் புலிகள் என்பவர்கள் கொடியவர்கள்தான் – அவர்களின் முழுதான பாசிச தவறுகள் தான் தமிழினம் விடுதலை அடைந்து விட முடியாததற்கான பிரதான காரணமாகும். ஆனால் புலிகள் ஏன் உருவானார்கள்? – எப்படி உருவாக்கப்பட்டார்கள்? – மேலும் புலிகளை தமிழ் மக்கள் ஓரளவுக்கு அவர்கள் செய்த கொடுமைகளையும் தாண்டி ஆதரித்து வந்தார்கள் என்ற உண்மை உலகறிந்தது. – நீங்களும் அறிவீர்கள். – இது ஏன் நடந்தது? – புரியவில்லையா? சிங்களப் பேரினம் அவ்வப்போது பெரிதாகவும் தொடர்ச்சியாக குறித்த இலக்குடனும் இலங்கையில் தமிழினத்தை அழித்தே தீருவது என்ற நிறுத்தப்படாத வேலைத் திட்டங்களுடன் செயற்படுவதுதான் தமிழினம் புலிகளையே ஆதரிக்க வேண்டியதற்கான பிரதான காரணமாயிருந்தது. சிங்களம் மீதும் சிங்களத் தலைமை மீதும் தமிழினத்திற்கு எவ்வாறான நம்பிக்கை ஏற்படவுமில்லை. சிங்களம் நம்பிக்கையுடன் நடந்து கொள்ளவுமில்லை என்பதே வெளிப்படையான உண்மை. இதற்கான ஆதாரங்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக இலங்கை வரலாற்றில் கொட்டிக்கிடக்கின்றன.

இதனால் இலங்கைத் தமிழினம் ஒப்பீட்டளவில் புலிகளை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அதாவது புலிகளை காட்டிலும் கொடியவர்களாக சிங்களத்தையும் சிங்களத் தலைமைகளையும் இலங்கைத் தமிழினம் கருதுமளவிற்கு நீங்கள் கொடியவர்களாக மனிதாபிமானம் அற்றவர்களாக இனவெறியர்களாக சூழ்ச்சி புரிபவர்களாக இனஅழிப்பின் மீது தீராத தாகம் கொண்டவர்களாக இருந்தீர்கள் என்பதற்கான வெளிப்படையான சாட்சியமே தமிழ் மக்கள் புலிகளை ஆதரித்தமையாகும். கடைந்தெடுத்த, ரௌடித்தனமான, தெருசண்டியன் போன்ற, பாசிச மிலேச்சதிகார, இன – ஜாதி –  மத வெறியையும்; தன்னுள் தீவிரமாக  கடைப்பிடித்த கேவலமான அமைப்பையே ஒரு மனிதக் கூட்டம் ஆதரித்ததற்கான காரணமாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் எவ்வளவு கேடு கெட்டவர்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!! – அவற்றை விவரணம் செய்வதற்கு எனக்கு வார்த்தைகள் போதாது.

இன்று பத்துலட்சத்திற்கும் மேலான தமிழ் மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி வாழ்கிறார்கள். இவ்வளவு மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் போதும் தவறினை உணர்ந்து நிலைமையை சீர் செய்ய முடியாத சிங்களத்தையும் சிங்களத் தலைமைகளையும் தமிழினம் எப்படி நம்புவது?!!

இனக்கலவரங்களை தடுக்காத சிங்களம் அதை உருவாக்கும் சிங்களம் அதனால் உருவாகும் அகதிகளை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பலேற்றினார்களே!

ஜனாதிபதி அவர்களே!

இன்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்னம் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். – சிங்கள இனத்தின் நெருக்கடியினாலேயே தவிர மன நோயினால் அல்ல. என்ன காரணங்களுக்காக தமிழ் இளைஞர்கள் தமது இனிய இள வயதுகளை இழந்து தமது அரிய உயிர்களையே முதலீடாக வைத்து போராட்டத்தை கையிலெடுத்தார்களோ அதன் காரணங்கள் – இன நெருக்கடிகள் – ஏமாற்றங்கள் அவமதிப்புக்கள் எல்லாம் தெளிவாக எதுவும் குறைவின்றி அப்படியே இருகின்றன. அதாவது தமிழினம் தனது ஆயுதப் போராட்டத்தை கைவிட வேண்டிய சூழிநிலையை ஏற்படுத்துகின்ற  நம்பிக்கையை, அதற்கான சமிக்ஞையை இதுவரைகாலும் சிங்களம் தோற்றப்படுத்தவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். மாறாக ஆயுதப் போராட்டத்தையே தனது தொழிலாக தாதாவிசமாக சுவீகரித்துக் கொண்ட பிரபாகனுடைய உலகின் உச்ச நிலைக்குரிய அடாவடித்தனங்களே, எஞ்சிய தமிழர்களை ஆயுதப் போராட்டத்தையே விட்டு ஓட்டமெடுக்கச் செய்தது – பெரும்பாலோர் புலிகளினாலேயே அழிக்கப்பட்ட பின்பு இன்று புலிகள் இல்லாத நிலையில், அன்று ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் அதனையே செய்வதற்கான சூழ்நிலைகள் மீண்டும் அப்படியே இருக்கின்றன எனும் போது என்ன நிகழப் போகின்றது என்பதை உங்ககளால் புரிந்து கொள்ள முடியாவிடில் யாராவது சாமானிய மக்களிடம் கேட்டால் புரிந்து கொள்ளலாம்.

பிரபாகரன் எவ்வாறான மிலேச்சதிகார பயமுறுத்தலை வைத்து தமிழினத்தையே அடிபணிய வைத்தாரோ அதே வழிமுறைகளையே நீங்களும் கடைப்பிடிப்பது போன்ற உணர்வே அதிகமாக தெரிகிறது. இந்த அதிகார வெறித் தோற்றப்பாடு நீண்ட காலத் தாக்குப் பிடித்தலுக்கு ஒரு போதும்; உதவப்  போவதில்லை. தமிழினத்திடம் இருந்து மட்டுமல்ல சிங்கள மக்களிடம் இருந்தே உங்கள் வெறியதிகாரத்திற்கெதிரான எழுச்சி எழுவதற்கான வாய்ப்புக்களும் மறுப்பதற்கில்லை. அதிகார வெறி உச்சத்தில் இருந்த போது பிரபாகரன் எப்படி கும்மாழமடித்தாரோ அவ்வாறே நீங்களும் கும்மாழமடிப்பது போல் தெரிகிறது – பிரபாகரனுக்கு நடந்தது உங்களுக்கு நடக்காது என ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா என்ன?

ஜனத்தின் அதிபதி அவர்களே!

புலிகள் மீதான இறுதித் தாக்குதலின் போது அகதிகளாக்கப்பட்ட சில லட்சம மக்களை  நீங்கள் நிர்வகிக்க முடியாமல் திண்டாடியதும், நிர்வாகக் கேடுகள் நிலைத்திருப்பதும் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

இந்த மக்களை ஏன் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும மட்டும்; குடியேற்ற வேண்டும்? ஏன் சிங்கள பகுதிகளில் வைத்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் எண்ணம் ஏற்படவில்லை? முடியாது. ஜனாதிபதி அவர்களே!! இதுதான் இலங்கையின் நிலவரம்!! இலங்கை தமிழ் அகதி மக்கள் இலங்கைச் சிங்களப் பகுதிகளில் பாதுகாப்பு பெற முடியும் என்பது சாத்தியமற்ற நிலையிலேயே இலங்கை நிலவரம் இருக்கிறது. சிங்களச் சிறைச் சாலைகளில் குட்டிமணி தங்கத்துரை எப்படி கொல்லப்பட்டார்களோ 58, 83 கலவர அகதிகள் எப்படி யாழ்ப்பாணம் அனுப்பபட்டார்களோ அதே நிலவரம் தான் நீறு பூத்த நெருப்பாக இன்றும் உள்ளது. இவ்வாறான இன வேறுபாடுகளே இலங்கையில் அன்றும் இன்றும் இருந்தது. இனி என்றும் இருக்கும். இந்த உதாரணமே உங்களுக்கு புரியவைத்து விடும் இரண்டு இனங்களும் ஒன்றாக வாழ்தல் கடினம் என்பது. இந்த அடிப்படைதான் தமிழினம் தனது பாதுகாப்பை தானே நிலை நிறுத்த வேண்டும் என்பதும் தன்னைக் சூழ பாதுகாப்பு வேலி (எல்லை) இடவேண்டும் என்பதுமாகும். இவை நிதர்சனமானவை. கண் கூடானவை. காலத்தால் அழிக்கப்பட முடியாத காரணிகள். இவைதான் ஒவ்வொரு தமிழனின் உள்ளக்கிடக்கைகளிலும் ஓங்கி அடித்துக் கொண்டிருக்கின்றன – தமது தாயகம் தாயகமாகவே காப்பாற்றப்பட வேண்டுமென்பது.

ஆனால் ஜனாதிபதி அவர்களே!

உங்கள் எண்ணமோ தமிழர் தாயகத்தை சிதைத்து தமிழன் செறிவை தகர்த்து, தமிழினத்தையே நாதியற்ற இனமாக்கி இல்லாதொழிக்கச் செய்யும் முயற்சியே உங்கள் செயற்பாடுகளால் உணரப்பட முடிகிறது. இதனை எந்த தமிழனும் மட்டுமல்ல எந்த நியாயமுள்ள மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். மூன்று தசாப்தங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் தேவைகளின் காரணமாகவே எழுந்தது. சிங்களக் கொடுமை ஏற்படுத்திய சூழ்நிலையின் இயல்பு வளர்ச்சியே அது. அதிதீவிர அதிகார உச்ச வெறியின் காரணமாக பிரபாகரனால் தமிழின ஆயுத விடுதலைப் போராட்டம் சீரழிக்கப்பட்டதே தவிர – மேலும் சில சந்தர்ப்பங்களில் வெற்றி நிலையை அடைந்து விட்ட சூழ்நிலைகள் கூட பிரபாகரனால் உடைக்கப்பட்டு தமிழினம் தொடர்ந்து சீரழிய வேண்டிய நிலை ஏற்பட்டதே தவிர மாறாக சிங்கள இனத்தினதோ அன்றி சிங்களத் தலைமைகளோ எந்த நல்ல காரியங்களையும் செய்து விட்டதனால் அல்ல. இந்த நீண்ட நெடிய போராட்ட காலத்தில் பிரச்சனைக்கான காரணிகளை அப்புறப்படுத்தாத சிங்கள நிர்வாகங்களே புலிகளிலும் கொடியவர்கள் என்பது தான் உண்மை. இந்த சிங்களக் கொடுமை தான் புலி போன்ற பாசிச கும்பலும் ஆதரிக்கப்படக் கூடிய (தமிழ் மக்களாலேயே) அளவுக்கு காரணியாக இருந்தனர் என்பதிலிருந்து நிலைமையை புரிந்து கொள்ளுங்கள்.

எனவே சிங்களமே! நீங்கள் தான் பிரதான தவறாக இருந்தீர்கள் – இன்றும் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதனையே ராஜபக்ச அவர்களும் வீறாக செய்வதற்கு முயற்சிக்கிறீர்கள். இந்த நிலை தொடர்ந்தால் ஒரு அடக்கப்பட்ட இனம் – அடக்கப்படுகிற இனம் என்ன செய்ததோ என்ன செய்ய வேண்டுமோ அதனையே செய்யும் என்பது இயல்பானது. நிதர்சனமானது. அதனை எந்த நிர்ப்பந்தங்களாலும் தடுத்து விட முடியாது. புலி முடிந்தவுடன் எல்லாம் முடிந்து விட்டதென்ற இறுமாப்பு உங்களிடம் இருந்தால் அது உங்கள் அறிவீனமாகவே இருக்க முடியும். அதாவது வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்ற அடிப்படையில் பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்றால் இலங்கையில் தமிழினம் மட்டுமல்ல சிங்கள இனமும் நிம்மதியாய் இருந்து விட முடியாது என்பதை சிங்களம் மட்டுமல்ல பின்னால் திரியும் தமிழர்களும் மறந்து விட வேண்டாம்.

மேலும் ஜனாதிபதி அவர்களே!

வெற்றிடமாக்கப்பட்ட தமிழர் பிரதேசமாகிய முல்லைத் தீவில் பொலிஸ் பயிற்சி நிலையம் தொடங்குவதாக அறிய முடிகின்றது – கிளிநொச்சியில் சுதந்திர வர்த்தக வலயம் அமைய இருப்பதாக அறிய முடிகின்றது. வன்னியின் சில பகுதிகள் விவசாய ஆராச்சிகளின் பரிசோதனைக் கூடமாக மாற இருப்பதாக தெரிய வருகிறது.

தமிழர் பிரதேசங்களில் உண்மையிலேயே உங்களுக்கு அன்பு இருந்தால் நன்றி! ஆனால் அவை ஒன்றும் இப்போது எமக்கு தேவையில்லை. தமிழர்களுக்கு தீர்வும் அதனூடான தமிழர் பிரதேசங்களில் தமிழர் நிர்வாகமும் தான் முதலில் தேவை.

தமிழர் பிரதேசங்களில் என்னத்தை தொடங்குவதென்பது அந்த தமிழர் நிர்வாகத்தினரின் அனுமதியுடன் தான் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற புரிந்துணர்வு உங்களுக்கு இல்லை என்றால் இலங்கையில் தமிழரும் சிங்களவரும் புரிந்துணர்வுடன் வாழலாம் என்பது வெறும் கற்பனையாகவே இருக்க முடியும். மாறாக தமிழினம் பிரிந்து செல்வதைத் தவிர வேறு வழியின்றி போய் விடும் என்பது தவிர்க்க முடியாததாகி விடும்.

ஜனாதிபதி அவர்களே!

நீங்கள் புலிகளுடனான யுத்தத்தில் வெற்றியடைந்திருக்கிறீர்கள்.  நல்லது! புலிகள் அடித்து அழிக்கப்பட்டதில் முழு உடன்பாடு உள்ளவன் நான். புலிகள் தமிழர்களின் வெற்றிகளையே தோல்விகளாக்கியவர்கள். அடித்து அழிக்கப்படத் தான் வேண்டும். இனி இருந்தாலும் தமிழினத்தை முன்னேற விடப் போவதில்லை. இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொலை செய்த காரணத்தினால் தமிழினத்தையே அனாதைகள் ஆக்கியவர்கள். அடித்து அழிக்கப்படத்தான் வேண்டும்.

ஆனால்…

அவர்களை அடிப்பதற்கு நீங்கள் யார்? அவர்கள் உருவாவதற்கே நீங்கள் தான் காரண கர்த்தாக்கள். அவர்கள் தமிழர்களாலேயே ஆதரிக்கப்படுவதற்கும் உங்கள் கொடுமைகள் தான் காரணம். புலிகள் தமிழர் போராட்டத்தின் ஒரு பகுதியினர்தான். மறு பகுதியினர் புலிகளாலேயே விரட்டப்பட்டுத் தான் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டார்களே தவிர சிங்களவர்களின் சீர்திருத்தங்களினால் அல்ல. புலிகள் சிங்கள நிர்வாகத்தினரால் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்றால் புலிகளின் நெருக்கடிகளாலேயே ஆயுதங்களை கைவிட்டவர்களும் அடிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் நீங்களோ அவர்களை மட்டும் நண்பர்களாக வைத்திருக்கிறீர்கள். ஆயுதப் போராட்டம் எழுந்ததற்கான காரணிகள் அப்படியே இருக்கின்றன. அதனடிப்படையில் நியாயமான ஆயுதப் போராட்டத்தை அந்தக் காரணிகளை அகற்ற முயற்சிக்காமல் அடித்து அழிப்பது எப்படி நியாயமாகும்.

மேலும் புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறப்புச் சிறைகளில் மறைத்து வைத்திருக்கிறீர்கள். தமிழன் போராட வேண்டிய சூழ்நிலைகளை வைத்துக் கொண்டு அதனைத் தீர்க்காமல் அதற்கெதிராக போராடியவர்களை தொடர்ந்து தண்டனை கொடுப்பது எப்படி நியாயமானது. மேலும் புலிகளின் நெருக்கடிகளால் மட்டும் போராட்டத்தைக் கைவிட்டவர்கள் சகஜமாய் வாழ முடிகிறது – ஏன் மந்திரியாகவும் இருக்க முடிகி;றது – மேலும் புலிகளிலேயே  சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தவர்கள் மந்திரிகளாகவும் கட்சியின் உப தலைமையாகவும் இருக்க முடியுமென்றால் சில வருடங்கள் மேலும் போராடியவர்கள் ஏன் சிறைகளில் வாட வேண்டும்.

எனவே சிங்களமே! மற்றும் அதன் ஜனாதிபதி அவர்களே! முதலில் பிரச்சனைக்கான தீர்வை இலங்கை – இந்திய ஒப்பந்தம் அல்லது அதற்கும் மேல் போய் தீர்வை செயற்படுத்துங்கள். அனைத்து போராட்டக் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள்.

இல்லையென்றால் இன்னொரு போராட்டம் தவிர்க்க முடியாததாகி விடும். அதை உருவாக்கியவர்களாக நீங்களே மறுபடி இருப்பீர்கள். நிம்மதியாய் இருந்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.

இலங்கைத் தமிழர்கள் தமது எதிர்கால வாழ்க்கை மீது நம்பிக்கை ஏற்படுத்தப்பபடாத சூழ்நிலை தொடருமாயின் பல சிவகுமாரன்கள்; தோன்றுவது இயற்கையானதும் தவிர்க்க முடியாததுமாகும்! ஒடுக்கு முறைக்கெதிராக கிளர்ந்தெழுவது என்பது எந்த விதமான அடக்கு முறையாலும் அடக்கப்பட்டு விட முடியாது.

அடக்கப்படும்; இனம் அமைதி காப்பதில்லை.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம்!!

பிற்சேர்க்கை – மேலும் இக்கருத்துக்களை எழுதும் நான் தமிழர்களுக்காக அடிமைத்தனமின்றி, அடங்கிப் போகும் குணமின்றி, நேர்மையாக தமிழருக்காகவே அரசியலில் ஈடுபட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளையும் ஏற்றுக் கொள்கிறேன். தமிழின விடுதலை என்பது பலவழிகளினூடு வந்து சேர்கின்ற இலக்குத் தான். எனவே அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். என்னிடம் தலைமை நோக்கமும் கட்சியும் இல்லாத காரணத்தால் இதை இலகுவாக என்னால் சொல்ல முடிகிறது.

மாறாக சமாதானம் – சுபீட்சம் – சகவாழ்வு என சொல்லிக் கொண்டும் தமது சொந்த சுபீட்சத்திற்காக கிளம்பியுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவர்களல்லர்.

தமிழ் தலைவர்கள் ஒரே தலைமையில் வருவதற்கு அவர்களது வர்க்க நலன் இடந்தராது என்பது ஒழுங்காக புரிந்து கொள்ளப்படும் காரணத்தினால் தமிழருக்கு சாதகமாக செயற்படுகிற அடிப்படையிலான அனைத்து தலைமைகளையும் ஏற்றுக் கொள்கிறேன்.

நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

SL_Soldier_bg_LTTE_Logoதற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை சரிவர புரிந்து கொள்வது பலருக்கு மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது. பொதுவாக புலிகளின் தலைமைப் பாத்திரம் நிரந்தரமானதல்ல. அதுவும் கூட ஒருநாள் மாற்றமடைந்தே தீர வேண்டும் என்று மிகவும் உறுதியாக நம்பியிருந்த புரட்சியாளர்கள் கூட இப்படியான வேகமானதும், சடுதியானதுமான ஒரு மாற்றத்தை தமது கனவிலுங்கூட எதிர்பார்த்திருக்கவில்லை. ஆமாம், வரலாறு எழுதிச் செல்லும் போது அது எந்தவிதமான ஈவிரக்கமும் காட்டாமல்தான் எழுதி முடிக்கிறது. அதனை புரிந்து கொள்வதற்குத்தான் அதற்குள்ளாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதிகம் சிரமத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இப்போது நடந்து முடிந்தது ஒரு அரசியல் “சுனாமி” தான். அதிலும் நாம் இப்போத வந்தடைந்திருக்கும் நிலைமையோ இன்னமும் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. தமது செயற்பாடுகளுக்கான அத்தனை கதவுகளையும் புலிகள் சாத்திவிட்ட நிலையில், சரி புலிகள் செய்வதை செய்து முடிக்கட்டும்: எமது சந்தர்ப்பங்கள் வரும்போது நாம் அதைப்பற்றி சிந்திக்கலாம் என்ற நினைப்பில் தமது அன்றாட வாழ்வின் போராட்டத்திற்குள் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் கூட இப்படிப்பட்ட மிகவும் சடுதியா வீழ்ச்சியை புலிகளிடத்தில் எதிர்பார்க்கவில்லை. சிறீலங்கா இராணுவத்தின் புள்ளி விபரங்களையும், ஏன் புலிகளது இராணுவ, அரசியல் ஆய்வாளர்களதும் புனைவுகளை நம்புவதில் இவர்களுக்கு பல சிரமங்கள் இருந்த போதிலும், புலிகளின் தலைமை பற்றிய “பிரமை” இவர்களிடத்தில் கூட காணப்பட்டது இப்போதுதான் இவர்களுக்கே உறைக்க ஆரம்பித்துள்ளது. புலிகளது தலைமை ஒன்றும் சூரியனது அவதாரம் என்று நம்புமளவிற்கு இவர்கள் முட்டாள்களாக இல்லாவிட்டாலும், அவர்களது அரசியலின் வங்குரோத்துத்தனம் பற்றி விரிவாகவே அறிந்திருந்தாலுங் கூட, புலிகள் அமைப்பின் இராணுவ வல்லமை, அதன் தலைமையின் போர்க்குணாம்சம் பற்றிய பிரமைகளை கொண்டிருந்தது இப்போது அம்பலமாகிறது.

ஏன் இப்படி நேர்ந்தது என்பதை புரிந்து கொள்வதற்கு பல நாட்கள் செல்கின்றன. பல நீண்ட கருத்துப் பரிமாறல்களும் விவாதங்களும் படிப்படியாக இந்த புதிரின் சிற்சில கூறுகளை தெளிவாக்க உதவி செய்கின்றன. இப்படிப்பட்ட விவாதங்கள், கலந்துரையாடல்கள், மற்றும் தேடல்களில் ஒரு தொகுப்புத்தான் இந்த கட்டுரையாகும். இதில் கூறப்பட்ட எடுகோள்கள், அனுகுமுறைகள் யாவும் திருப்தியானவை என்று கூறுவதைவிட முட்டாள்தனமானது வேறொன்றும் இருக்க முடியாது. சமகால பிரச்சனை ஒன்று தொடர்பாக, போராட்டத்தில் ஈடுபடும் இரண்டு தரப்பினரது வெளிப்படையற்ற தனமைகளையும் மீறித்தான் இந்த பரிசீலனையை செய்தாக வேண்டியுள்ளது. இன்னமும் நடந்து கொண்டிருக்கும விடயங்கள் தொடர்பாக சில உய்த்துணர்வுகளையும் முன்வைத்தாக வேண்டியுள்ளது. நாளைய வரலாற்று வெளிச்சத்தில் இந்த உய்த்துணர்வுகளில் சில அசட்டுத்தனமானவை என்று நிரூபனமாகவும் கூடும். ஆனால், போராளிகளுக்கு தேவைப்படுவது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் தொடர்பான புரிதலே அன்றி வரலாற்று ஆசிரியனின் “மரண பரிசோதனை” (post mortom)  அறிக்கையல்ல. மரண பரிசோதனை அறிக்கையானது உயிருள்ள மனிதரில் பெறப்படும் ஆய்வு அறிக்கையைவிட (diagnostic results) மிகவும் அதிகளவு சரியானதாக இருக்கிறது என்பதற்காக, நோயாளியை காப்பாற்ற முனையும் வைத்தியர் எவரும் மரண பரிசோதனைக்காக காத்திருக்க முடியாது. சில தவறுகளுடன் கூடத்தான் என்றாலும் சமகால பரிசீலனை ஒன்று மட்டுமே நோயாளியை காப்பாற்ற உருப்படியான பங்காற்ற முடியும்.

இன்று நடந்து முடிந்துள்ள யுத்தத்தை சரிவர புரிந்த கொள்ள வேண்டுமானால் நாம் இன்றைய நிலைமைக்கு எம்மை இட்டுச் சென்ற சில விடயங்களை எமது தொடங்கு புள்ளியாகக் கொண்டு அடுத்தடுத்து நடந்துவந்த நிகழ்வுகளினூடாக பயணிப்பதன் மூலமாக மட்டுமே நாம் நடந்து முடிந்த, தற்போது நடந்து கொண்டிருக்கும், அண்மை எதிர்காலத்தில் நடக்கப்போகும் விடயங்கள் தொடர்பா ஒரு ஆரோக்கியமான கண்ணோட்டத்தைப் பெற முடியும். இப்படிப்பட்ட ஒரு கண்ணோடடமானது, எமது உடனடிப் பணிகளை நிர்ணயித்துக் கொள்ள தீர்க்கமான வகையில் அவசியமானதாகிறது.

இன்றைய பிரச்சனைகளை சரிவர பற்றிக் கொள்வதற்கு நாம் குறைந்த பட்சம் ஆனையிறவு இராணுவ முகாமை விடுதலைப் புலிகள் அமைப்பு தாக்கியழிதது வெற்றி கொண்ட நிகழ்வுடன் தொடங்கியாவது எமது பயணத்தை மேற்கொண்டாக வேண்டியுள்ளது. இந்த தாக்குதலானது, 2000 ம் ஆண்டின் ஏப்பிரல் மாதம் நடந்தேறியது. இந்த தாக்குதலை அடுத்து ஈழப்போரட்ட சூழலில் மிகவும் அசாதாரண நிலைமைகள் காணப்பட்டன. இந்த தாக்குதல் வெற்றியானது அன்றிருந்து புலிகளது ஆயுத, ஆட்பல நிலைமைகளில் அடைய முடியாத ஒரு மிகப் பெரும் வெற்றியாக நாம் கருத முடியாவிட்டாலுங் கூட, இந்த தாக்குதல் ஏற்படுத்திவிட்ட புதிய சூழ்நிலையை புரிந்து கொண்டால் மட்டுமே அதனை அடுத்த வந்த நிகழ்வுகளையும், அவை மூலமாக எட்டப்பட்ட இன்றுள்ள நிலைமைகளையும புரிந்து கொள்வது சாத்தியப்படும்.

ஆனையிறவு முகாம் தாக்குதல்களை அடுத்து புலம் பெயர் தொடர்பு சாதனங்களான வானொலிகளும், தொலைக் காட்சிகளும் தமது வழமையான அனைத்து நிகழ்ச்சிகளையும் இடைநிறுத்திவிட்டு அன்றைய வெற்றி தொடர்பான அறிவித்தலுடன் விடுதலைப் புலிகளுக்கு பணத்தை சேகரிப்பதற்கான நிகழ்ச்சியாக மாற்றப்பட்டிருந்தன. மக்கள் தாமகவே முன்வந்து பணமாகவும், நகையாகவும் தாராளமாகவே அள்ளிக் கொடுத்தார்கள். புலிகளது தலைமையை விமர்சித்த பலரது வாயை அடைக்கச் செய்து அவர்களை புலிகளது ஆதரவாளர்களாக மாற்றி விட்டது இந்த வெற்றி. ஒரு புரட்சிகர குழுவிலிருந்த சிலர் தமது அமைப்பை கலைத்துவிட்டு புலிகளுடன் சென்று சங்கமாகும் அளவிற்கு இந்த சம்பவம் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த தாக்குதலை அடுத்து பெறப்பட்ட இராணுவ தளவாடங்கள் மற்றும் மன உந்துதல்கள் காரணமாக அடுத்து வரும் ஒரு குறுகிய காலத்தினுள் யாழ் குடாநாட்டிலுள்ள ஏனைய இராணுவ முகாம்களும் தாக்கியழிக்கப்படலாம் எனவும், இதனை தொடர்ந்து கிழக்கிலும் இதே நடவடிக்கைகளை தொடர்ந்தால் தமிழீழம் பிரகடனப்படுத்த வேண்டியதுதான் பாக்கி என்ற வகையில் எதிர்பார்ப்பு எங்கும் நிலவும் வகையில் படைகளின் சமபல தன்மை (Balance of Forces) புலிகளுக்கு மிகவும் சாதகமாக நகர்ந்திருந்தது. ஆனால் அடுத்த வந்த நிகழ்வுகள் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் விதத்தில் நகரவில்லை.

அன்றிருந்த சர்வதேச நிலைமைகளில். விடுதலைப் புலிகள் அமைப்பானது தனியான அரசை பிரகடப்படுத்தினால் அதனை அங்கிகரிப்பதற்கு எந்தவொரு நாடும் அல்லது சர்வதேச அமைப்புகளும் தயாராக இருக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட அமைப்பானது தன்னை தனியான அரசாக பிரகடனம் செய்வதை, சர்வதேச சமூகம் அங்கிகரிப்பதானது பல்வேறு காரணிகளில் தங்கியிருக்கிறது. ஒரு தேச அரசை பிரகடனப்படுத்துவதும் அதனை சர்வதேச சமூகம் அங்கிகரிப்பது என்பதும் வெறுமனே இராணுவ வெற்றிகளினால் மாத்திரம் நடந்தேறுவதன்று. ஒரு தனியான தேசமாகவும், அதற்கு தனியரசை அமைப்பதற்கான உரிமையை அந்த அரசு கொண்டிருப்பதையும் சர்வதேசம் ஏற்றுக் கொள்வது என்பது இன்னும் பல அம்சங்களில தங்கியிருக்கிறது. முறையானதொரு சிவில் சமூகத்தை கொண்டிருப்பது: முறையாக செயற்படும் ஒரு சிவில நிர்வாகத்தை கொண்டிருப்பது: தான் தனித்து ஒரு அரசாக செயற்படும் காலத்தில் தன்னை கொண்டு நடத்தக் கூடியதொரு மாற்று பொருளாதார திட்டங்களை வடிவமைத்து அவற்றை வெற்றிகரமாக செயற்படுத்துவது: பதில் சொல்லும் பொறுப்பைக் கொண்டதொரு சரியான அரசியல் தலைமையை கொண்டிருப்பது: சர்வதேச சூழலில் நற்பெயரைப் பெற்றிருப்பது போன்றவை இதற்கு மிகவும் அவசியமானதாகும். ஆனால் இப்படிப்பட்ட எந்த வொரு அம்சத்தைப் பற்றியும் கவலைப்படாமல் வெறுமனே இராணுவ வெற்றிகளால் மாத்திரம் ஒரு தனியான அரசை அமைத்துவிடுவது என்பது மிகவும் குறுகிய புரிதலின்பாட்பட்டதாகும். அதன் விளைவுகளே இங்கு வெளிப்பட்டன.

அத்துடன் இந்திய அரசு நேரடியான இராணுவ தலையீட்டடை தான் மேற்கொள்ளலாம் என்பது போன்ற சமிக்கைகளை வெளிப்படுத்தியது. தனது தரை. கடல் மற்றும் விமானப் படைகளை பெருமளவில் தென்னிந்திய தளங்களுக்கு நகர்த்தியதுடன், தேவைப்படடால் தாம் கப்பல் மூலமாக பலாலி மற்றும காங்கேசன்துறை இராணுவ முகாமகளிலுள்ள சிறீலங்கா படைவீரர்களை மீட்பதற்கு தயாராக இருப்பதாக பகிரங்கமாகவே அறிவித்தது.

இப்படிப்பட்ட ஒரு நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பானது தாம் தமிழீழத்தை அடைவது இராணுவரீதியில் சாத்தியமாகிவிட்டதாகவும், ஆனால் ஏனைய தயாரிப்புகள், அதிலும் குறிப்பாக சர்வதேச நிலைமைகளில் போதியளவு தயாரிப்பின்மை அல்லது இதில் இழைத்த தவறுகள் காரணமாகவே மேற்கொண்டு முன்னேற முடியாமல் இருப்பதாக கூறப்பட்டது. இராணுவரீதியில் சாத்தியமான ஒரு அம்சமானது, அரசியல்ரீதியாக சாத்தியமற்றுப் போனதற்கான ஒரு வகை மாதிரியை நாம் இங்கு காண்கிறோம். ஆனால் குறிப்பிட்ட ஒரு குறுகிய காலத்தினுள் நிலைமைகள் தலைகீழாக மாறிவிட்டது. இது எப்படியாக நடந்தேறியது என்பதையே இங்கு பார்க்க முனைகிறோம்.

he_president.jpggotabaya-rajapakasa.jpgbasil.jpgமும்மூர்த்திகள்

கடந்த காலத்தில் புலிகளுடான போரில் சிறிலங்கா அரசு முகம் கொடுத்த முக்கிய பிரச்சனை. தனது போர் நடவடிககைகளை ஒரே முனைப்புடன் முன்னெடுக்க முடியாமையாகும். இங்கு நாம் எடுத்துக் கொள்வது அதன் அரசியல் தலைமை பற்றிய விடயத்தை மட்டுமேயாகும். முதலாளித்து அரசியல் அறிஞர்கள் முதலாளித்துவ அரசை. சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை என மூன்று பிரிவுகளாக பிரித்துக் கூறுவார்கள். மார்க்சியவாதிகள் அரசு மற்றும் அரசாங்கம் என்பவற்றை வேறுபடுத்திப் பார்ப்பார்கள். பொதுப்புத்தி மட்டத்தில் கூறுவதானால். அரசியல் கட்சிகள், நிர்வாகம். மற்றும் இராணுவம் என இவற்றை நாம் குறிப்பிடவும் செய்யலாம். இப்படியாக நாம் குறிப்பிடுவதன் நோக்கம் முதலாளித்துவ அரசில் காணப்படும் பிளவுகள் மற்றும் இடைவெளிகளை சுட்;டிக்காட்டுவதற்கேயாகும். இத்தகைய பிளவகள், இடைவெளிகள் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளுக்கெதிரான போர் முனைப்பை முன்னெடுப்பதில் சிறீலங்கா அரசிற்கு தொடர்ச்சியாக பல இடையூறுகளை ஏற்படுத்தி வந்துள்ளன. பொதுவாக அரசியல் தலைமையினால் பணிக்கப்படும் போர் நடவடிக்கைகள ஒரு குறிப்பிட்ட இலக்குகளை அடையும்;போது, யுத்தத்தில் ஏற்படும் பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக சர்வதேச மட்டத்திலான ஆரவாரங்களை அடுத்து அரசியல் தலைமையானது, இராணுவ நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு இராணுவத்தை கேட்டுக் கொள்ளும். மறுதலையாக, சர்வதேச நெருக்குதல் காரணமாக அரசானது ஒரு சமரச உடன்பாட்டை தமிழ் தரப்புடன் மேற்கொள்ள முனைகையில், இராணுவமும் ஆட்சேபிக்கும்: எதிர் கட்சிகளும் அதனை ஊதிப் பெரக்கவைத்து மக்களை கிளர்ச்சியூட்டி வீதிக்கு இறக்கி விடுவார்கள். இதனால் சிறிலங்காவின் அரசியல் தலைமையினால் முரணற்ற விதத்தில் யுத்தத்தையோ அல்லது சமாதான முயற்சிகளையோ முன்னெடுப்பது நீண்டகாலமாகவே முடியாக ஒரு காரியமாக இருந்த வந்திருக்கிறது. இப்படியாக, ஒரு முரணற்ற அரசியல் தலைமையை படை நடவடிக்கைகளுக்கு வழங்க முடியாத சிறிலங்கா அரசின் பலவீனம் இராணுவத்தின் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தன. இந்த பிரச்சனை சிறிவங்கா அரசினுள் காணப்பட்ட பிளவுகள் காரணமாகவே இடம்பெற்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைமையானது சர்வதேச அழுத்தங்களுக்கு பணிந்து போகவேண்டிய நிலையிலேயே இருந்தது. இராணுவ தலைமையும், பாதுகாப்பு அமைச்சரும் எதிர்திசையில் செயற்படுபவர்களாக இருந்தனர். இதனால் இராணுவம் பல சந்தர்ப்பங்களில் தனது போர்வீரர்களது மன உணர்வுகளை ((morale)  உயர்ந்த தரத்தில் பேணுவதில் பாரிய பிரச்சனையை எதிர்கொள்ள நேர்ந்தது.

ஆனால் சிறீலங்கா அரசின் வரலாற்றில் முதல் தடவையாக அரசின் எல்லாப் பிரிவுகளும் ஒரே குடும்பத்தினுள், ஒரே விதமான சித்தாந்தத்தைக் கொண்ட மூன்று சகோதரர்களின் கைகளில் வந்து சேர்நதது மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்திலதான்; நடைபெற்றது. மகிந்தவின் ஆட்சியியானது ஒரு குடும்ப ஆட்சி எனவும், இவர்கள் இன்னொரு Dynasty அமைக்க முனைவதாகவும் விமர்சனங்கள் பரவலாக எழுந்தன. மகிந்த குடும்பத்தில் குறைந்தபட்சம் ஐந்து பேர்கள் அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்படுகிறார்கள். அத்தோடு பெருந்தொகையான உறவினர்கள் அரசாங்க பொறுப்புக்களில் அமர்த்தப்படும் ஒரு தவறான நடைமுறை பின்பற்றப்படுவதாகவும், ஊழலும் மோசடிகளும் மிகுந்த அரசாக இது திகழ்வதாகவும் விமர்சிக்கப்படுகிறது. ஒரு சகோதரரான கோத்தபாய ராஜபக்ச ஆயுத கொள்வனவு தொடர்பான ஊழல்களில் சம்பந்தப்பட்டதாக பத்திரிகைகளில் பகிரங்கமாகவே குற்றஞ்;சாட்டப்பட்டவராவர். இன்னொரு சகோதரராக பசில் ராஜசக்ச Mr. 10மூ என்று அழைக்கப்படும் அளவிற்கு ஊழல் மிக்கவர் என்பது எதிர்கட்சியினரதும், பத்திரிகையாளர்களதும் குறிறச்சாட்டாகும். இப்படியாக மகிந்தவின் குடும்ப ஆட்சியானது எந்தளவிற்கு ஊழல், மோசடிகளில் சிக்கியிருந்தது என்பது இங்கு நாம் எடுத்துக் கொண்ட ஆய்விற்கு பொருத்தமானதல்ல. எமது அக்கறையெல்லாம் முன்னைய அரசாங்களினால் செய்ய முடியாத ஒரு விடயத்தை இந்த அரசாங்கத்தினால் எவ்வாறு செய்து முடிக்க முடிந்தது என்பது பற்றியதாகவே மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும்.

மகிந்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும், அவர் தனது ஒரு சகோதரரான பசில் ராஜபக்ச என்பவரை பிரதான நிர்வாக ஆலோசகராகவும், மற்றொரு சகோதரான கோத்தபாய ராஜபக்ச என்பவரை பாதுகாப்புச் செயலாளராகவும் நியமனம் செய்தார். இந்த குடும்ப ஆட்சியானது இந்த யுத்தத்தை நடத்துவதில் சிறீலங்கா அரசிற்கு சாதகமான அம்சங்களையே தோற்றுவித்தது. பசில் ராஜபக்ச ஒரு சிறந்த நிர்வாகி: தொழில் முறையில் ஒரு சட்டத்தரனி: இவர்களது குடும்பமே ஒரு அரசியல் குடும்பமாக இருந்ததால் கட்சி அரசியலில் வழமையாக நடைபெறும் சுத்துமாத்துக்கள், கவிழ்ப்புகள், விலைக்கு வாங்குவது போன்று “சாணாக்கியங்கள்” யாவும் இவருக்கு சரியான அத்துப்படி. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மதிந்தவுடைய Campaign Manager ஆக இருந்து, மகிந்தவின் தேர்தல் வெற்றிக்கு அவசியமான பொருத்தமான கூட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். அடுத்தவரான கோத்தபாய ராஜபக்ச ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி: வடக்கில் 1987 இல் நடைபெற்ற ‘Operation Liberation’  இராணுவ நடவடிக்கைகளின் போது களத்தில் நேரடியாக நின்று போரிட்ட ‘மேஜர்’ தரத்திலிருந்தார்: அந்த இராணுவ நடவடிக்கையின் பின்பு அவர் ‘கொத்தலாவல படைத்துறை கல்லூரியின்’ பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு ‘லெப்டினன் கேர்ணல்’ தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டிருந்தார். சிறிது காலத்தில் இந்த பொறுப்பிலிருந்து தன்னை விடுவத்துக் கொண்ட இவர் அமெரிக்காவின் பிரசையாக மாறி அங்கு வர்த்தக முயற்சிசளில் ஈடுபட்டிருந்தார்.   இநத சகோதரர்கள் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான தகுதியையும், திறைமையையும் கொண்டவர்களாகவே இருந்தார்கள். இந்த வகையில் இது வெறுமனே குடும்ப ஆட்சியாக மடடும் இருக்கவில்லை. கூடவே தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும் தகுதி உடையவர்களாக இருந்ததுடன் ஜனாதிபதியின் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமானவர்கள்களாகவும் இவர்கள் விளங்கினார்கள்.

சிறீலங்காவின் முன்னைய தலைமைகள் போல இவர்கள் ஒன்றும் வீட்டில் ஆங்கிலம் பேசி தேர்தலுக்காக சிங்களச் சாயம் பூசும் போலிச் சிங்கள தேசியவாதிகள் அல்லர். சிங்கள தேசியவாதத்தின் கோட்டையாக கருதப்படும் (heartland of sinhala chauaniam) தெற்கு இலங்கையில் பிறந்து வளர்ந்த ”சிங்கள பூமி புத்திரர்கள்”. பாரம்பரியமான நிலவுடமைக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். தன்னகங்காரம் கொண்ட இவர்கள் தமக்கு சரியெனப்பட்டதை சபை நாகரீகம் கருதியோ அல்லது இராஜதந்திர காரணங்களுக்காகவே அமர்த்தி வாசிக்கத் தெரியாதவர்கள். இதனால் இவர்களுக்கு சக அரசியல்வாதிகள். பத்திரிகையாளர்கள் மற்றும் இராஜதந்திரிகள் மத்தியில் மிகவும் கெட்ட பெயருண்டு. அவர்கள் சர்வதேச அரங்கில் யாரையும் திருப்தி படுத்தும் நோக்கில் முன்னுக்குப் பின் முரணாக பேசவோ அல்லது தாம் முன்வைத்த திட்டத்திலிருந்து பின்வாங்கவோ இல்லை.இந்த யுத்தத்தில் சிறீலங்கா அரசின் வெற்றியை நிர்ணயித்த முதன்மையான காரணி இது என்றால் மிகையாகாது.

இவற்றில் எல்லாவற்றையும் விட வினோதமானதும், மிகவும் முரண்நகை மிக்கதுமான ஒரு விடயம் என்னவென்றால், மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெல்வதற்கு விடுதலைப் புலிகளே துணை நின்றார்கள் என்பதுதான். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது விடுதலைப் புலிகள், தெற்கில் ஒரு மோசமான இனவாத தலைமை தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வருவதை விரும்பினார்கள். இப்படியாக ஒரு மோசமான தலைமை சிறீலங்காவில் அமையும் போது அது சிறீலங்கா அரசை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்த உதவியாக இருக்கும் என்று நம்பினார்கள். (இங்கு கவனிக்கவும் எல்லா விடய்ஙகளைப் போலவே இங்கும் தமது அரசியலுக்கு எதிரியைத்தான் நம்புகிறார்கள்) இந்த அடிப்படையில் மகிந்தவின் குழுவுடன் புலிகளின் தலைமைக்கு ஓரு உடன்பாடு எட்டப்பட்டது. வழமையாக தென்னிலங்கையில் இரண்டு பிரதான சிங்கள் கட்சிகளும் கிட்டத்தட்ட சமமான வாக்குகளை பெறுமிடத்தில் தமிழரது வாக்குகள் வெற்றி பெறுபவரை தீர்மானிக்கும் நிலைமை இருந்த வந்தது. மிகவும் மோசமான சிங்கள இனவாத கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்த மகிந்தவுக்கு தமிழர் வாக்குகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அறவே இல்லாத நிலையில், அந்த வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்க கிடைக்க விடாமல் தடுப்பது என்பது மகிந்தவின் வெற்றிக்கு மிகவும் அவசியமானதாக இருந்தது. இந்த நோக்கில் தமிழ் மக்களை ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க செய்ய வேண்டும் எனவும் அதற்கு சன்மானமாக விடுதலைப் புலிகளுக்கு பத்து மில்லியன் டொலர் பணம் உடனடியாக கொடுக்கப்படும் எனவும், மற்றும் ஏனைய விடயங்கள் பற்றி தேர்தலின் வெற்றியின் பின்பு தீர்மானிப்பது என்றும் உடன்பாடானது. இதன் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் பகிஷ்கரிக்குமாறு புலிகள் தமிழ் மக்களை நிர்ப்பந்தித்தார்கள். இந்த தேர்தலில் நாடளாவிய ரீதியில் மகிந்த 50.29% வாக்குகளையும், ரணில் 48.43% வாக்குகளையும் பெற்றார்கள். தமிழ் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தால் ரணிலே ஜனாதிபதியாக வந்திருப்பார் என்பது இங்கு தெட்டத்தெளிவாகத் தெரிகிறது. இப்படியாக புலிகளின் உதவியுடன்தான் மகிந்த ஆட்சிக்கு வந்து சேர்ந்தார். இவரை ஆட்சியில் அமர்த்திய புலிகள், மகிந்தாவுக்கு இப்படிப்பட்ட தொரு பின்புலம் இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கக் கூட இல்லை.. அதற்கான விலைதான் இந்த தோல்வி.

ஒரு அரசியல் அமைப்பானது, சில கணிப்புகளை மேற்கொள்வதும், அந்த கணிப்புகளின் அடிப்படையில் ஆபத்தான (Calculated Risk) ஆன நடவடிக்கைகள் எடுப்பதும், தமது கணிப்பின் தவறான தன்மை காரணமாக  தோல்விகளை சில சமயங்களில் அடைவது என்பதும் கூட ஓரளவு மன்னிக்கக் கூடிடதுதான். ஆனால், தமிழ் மக்களது ஜனநாயக உரிமைகளை ஒட்டு மொத்தமாக பறித்தெடுத்து அதனை எதிரிக்கு மொத்தவிலைக்கு பேரம் பேசி விற்பது  என்பது அவ்வளவு இலகுவாக மன்னிக்கப்படக் கூடியதன்று. இன்று இந்த முடிவுகள் காரணமாக ஏற்பட்டுள்ள பாரதூரமான விளைவுகளை விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, தமிழ் மக்களும் தான் கொடுக்க நேரிட்டுள்ளது.    

gotabaya-rajapakasa.jpgsarathfonseka.jpgசரியான அரசியல் தலைமை

மகிந்த அரசு பதிவிக்கு வந்ததும் பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாயா அவர்கள் இராணுவ தளபதியான சரத் பொன்சேகாவுடன் இணைந்து  விடுதலைப் புலிகளை எவ்வாறு  தோற்கடிப்பது என்பதில் மிகவும் தீவிரமாக ஆய்வு செய்து முறையான திட்டமிடலை செய்து கொண்டார்கள். முதலில் இவர்கள் விடுதலைப் புலிகள் தொடர்பாக சிறீலங்கா இராணுவத்திடம் இருந்த வியப்பு மற்றும் மலைப்பு என்பவற்றை மாற்றியமைத்தார்கள். முறையான தலைமை வழங்கப்படுமானால் விடுதலைப் புலிகள் ஒன்றும் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் அல்லர் என்ற மன உணர்வை ஏற்படுத்தினார்கள். முன்னால் இராணுவ அதிகாரியான கோத்தபாய ராஜபக்ஷவும் இராணுவ தளபதியான சரத் பொன்சேகாவுடன் இணைந்த முன்வைத்த  ‘புரஜெக்ட் பீக்கன்’ (project beacon) என்பது மிகவும் நேர்த்தியாக திட்டமிடலை செய்திருந்தது. இத்திட்டத்தின் படி விடுதலைப் புலிகள் அமைப்பை ஐந்து வருடத்தில் தோற்கடிப்பதற்காகன கால நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. முதல் மூன்று வருடத்தில் விடுதலைப் புலிகளை இராணுவரீதியாக தோற்கடிப்பது என்றும், அடுத்த இரண்டு வருடங்களில் அவர்களில் மிச்ச சொச்சங்களை துடைத்தழிப்பது என்றும் முடிவு செய்யப் பட்டிருந்தது.  அதற்கான சம்மதத்தை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொண்டதுடன், இந்த திட்டமானது நிறைவேற்றப்படும் நிலையில் எந்தவிதமான அரசியல் தலையீடும் நடைபெறமாட்டாது என்ற உத்தரவாதத்தையும் பெற்றுக் கொள்ளப்பட்டது. 

அத்துடன் மாத்திரம் நில்லாது, இதே திட்டத்தை சமாதான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இணைத்தலை நாடுகளையும், சற்றுத் தயக்கத்துடன் தான் என்றாலும் ஏற்றுக் கொள்ளவும் செய்திருந்தனர்.  இணைத்தலைமை நாடுகளின் இந்த ஒப்புதல் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் சர்வதேச சமூகம் அதிகம் தலையீடு செய்யாமல் இருக்கச் செய்வதில் அதிக பங்காற்றியது.

திட்டமிடலில் மாத்திரமன்றி, அதனை அப்படியே அமுல்படுத்துவதிலும் கூட பிசகின்றி நடந்து கொண்டனர். கடந்த காலத்தில் இராணுவத்தில் செயற்பட்டபோது போதியளவு தலைமைத்துவத்தை வெளிப்படுத்தாத இராணுவ அதிகாரிகள், அவர்களது சேவைமூப்பு (siniority) என்பவற்றை பொருட்படுத்தாமல் ஓரங்கட்டப்பட்டார்கள். ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் புலிகளுக்கு உளவு சொல்பவர்களாக கருதப்பட்டவர்கள் நீக்கப்பட்டார்கள்: சிலர் தண்டனைக்கும் உள்ளானார்கள். திறமை மிக்கவர்கள் முன்னணிக்கு கொண்டுவரப்பட்டார்கள். அத்தோடு தமது திட்டங்களை செயற்படுத்துவதிலும் தொழில்முறை நேர்த்தியுடன் (professionslism) செயற்பட்டார்கள். இதற்கு நல்லதோர் உதாரணம், அவர்கள் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதற்கு வரையறை செய்திருந்த மூன்று வருடங்கள் நிறைவு பெற்றது 2009 ஆம் ஆண்டின் ஏப்பிரல் மாதம் 30 ஆம் திகதியன்று சிறீலங்கா இராணுவம் தனது கடைசி யுத்தத்தை முள்ளிவாய்க்காலில் நடத்திக் கொண்டிருந்தது.

lttelogo.jpgசர்வதேச உறவுகள்

செப்டம்பர் மாதம் பதினொராம் திகதிக்கு பிந்தைய சர்வதேச சூழல் அரசுகளுக்கு சாதகமாகவும், அரச எதிர்ப்பு போராளிகளுக்கு பாதகமாகவும் அமைந்திருந்தது. இதனை தனது நோக்கங்களுக்கு சாதகமாக சிறீலங்கா அரசு நன்கு பயன்படுத்திக் கொண்டது. சாரம்சத்தில் இரண்டு தேசங்களுக்கு இடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு போரை “பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்” என்று புதிதாக பெயரிட்டு தனது யுத்தத்திற்கு எதிராக எழக்கூடிய சர்வதேச ஆட்சேபனைகளை நடுநிலைப்படுத்திக் கொண்டது. சர்வதேச அபிப்பிராயத்தை உருவாக்கும் முன்னணி நாடுகளான மேற்கு நாடுகள் மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளை மட்டுமன்றி, சர்வதேசரீதியில் தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டிருந்த நாடுகளையும் இவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள். மேற்கு நாடுகளும் ஏனைய ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளும் சிறீலங்காவின் யுத்தத்திற்கு நிதி உதவியும், ஆயுத விற்பனையும் செய்யத் தயங்கிய போது சிறிதும் தயங்காமல், சீனாவையும் பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளை அணுகி ஆயுதங்களை பெற்றதுடன், தேவையான நிதியுதவிகளை லிபியா, ஈரான் போன்ற நாடுகளிடம் இருந்தும் பெற்றக் கொண்டது. இவற்றை விட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் செயலகத்திற்கு இலங்கையின் பிரதிநிதியாக டயன் ஜயதிலகவை நியமனம் செய்து, அவர் மூலமாக நன்கு திட்டமிட்ட முறையில் சர்வதேச அபிப்பிராயங்களை விடுதலைப் புலிகளுக்கு எதிராக திருப்புவதிலும் கவனமாக செயற்பட்டார்கள்.

விடுதலைப் புலிகளின் நிலைமை இதற்கு தலைகீழாக அமைந்திருந்தது. ஏற்கனவே இந்திய மேலாதிக்கமானது இலங்கையில் தமிழர்களுக்கு தனியான ஒரு அரசு அமைவதை எதிர்ப்பதற்கு கணிசமான உள்ளுர் காரணங்கள் இருந்தன. அதனை விட இந்திய இராணுவத்துடனான விடுதலைப் புலிகளின் மோதலும் அதில் இந்திய இராணுவம் பெற்ற தோல்வியும், அவர்களது பெரிய அகங்காரத்தை மிகவும் காயப்படுத்தியிருந்தது. இவற்றையெல்லாம் கடந்து ராஜிவ் காந்தியை கொலை செய்தது என்பது இந்தியாவுடனான உறவுகளை சீர் செய்ய முடியாத அளவிற்கு சேதப்படுத்தியிருந்தது. இவை நடந்து பதினைந்து வருடங்களுக்கு மேலாகியும் இந்த உறவுகளை சீர் செய்வதற்கு உருப்படியான முயற்சிகள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படவில்லை.

மேற்கு நாடுகளிலோ பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உணர்வுகளே ஓங்கியிருந்தன. இந்த நிலைமைகளின் கீழ் 2001 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் பதினொராம் திகதிக்கு அடுத்துவந்த உடனடி காலப் பகுதியிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பை அமெரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும் தடை செய்யாமல் விட்டதே பெரிய காரியம். ஆனால், நிலைமைகளின் பாரதூரமான தன்மையை விடுதலைப் புலிகள் புரிந்து கொண்டிருக்கவில்லை. கடைசியான போர் நிதியென்ற பெயரில் மேற்கு நாடுகளிலுள்ள தமிழர்களிடம் பலவந்தமான பணத்தை பறிக்க முயன்றதாக இந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் அந்தந்த அரசாங்கங்களுக்கு கொடுத்த புகார்களின் காரணமாக 2005 இல் புலிகள் அமைப்பு இந்த நாடுகளில்; தடை செய்யப்படுவது என்பது, சர்வதேச உறவுகளை மிகவும் மோசமாக கையால்வதன் வகைமாதிரியான உதாரணமாகும்.

karuna0000.jpgகருணா – கிழக்கு பற்றிய பிரச்சனை

கருணா புலிகள் அமைப்பைவிட்டு வெளியேறும் போது முன்வைத்த காரணங்கள் யாவும் பொதுவில் கிழக்கு மக்களுக்கு காணப்படும் பொதுவான பிரச்சனைகள்தாம் என்பதை விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் உட்பட அனைவரும் அறிவர். இவற்றை அரசியல்ரீதியாக அணுகாமல், வெறுமனே இராணுவரீதியா அணுகி கருணா குழுவினரை அழித்தொழிக்க முனைந்ததுதான் அவர்களை தமது பாதுகாப்பு கருதி அரசின் பக்கத்திற்கு தள்ளியது என்பதும் இதனால் புலிகள் அமைப்பிற்கு பலவிதமான நட்டங்கள் ஏற்பட்டன என்பதும் ஏற்கனவே பல தடவைகள் பேசப்பட்ட விடயங்கள்தாம். ஆனால் நாம் இங்கு கவனிக்க வேண்டியது இதனுடன் தொடர்புடைய இன்னொரு விடயமாகும்.

கிழக்கில் கருணா குழுவினர் இராணுவரிதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர், அந்த இடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிறீலங்கா படையினரை வைத்திருக்கும் விதத்தில் தொடர்ச்சியான, மிகவும் செயலூக்கமான ஒரு போர் முனையை தொடர்ந்தும் பேணவும், அதன் மூவமாக கணிசமான எண்ணிக்கையிலான படையினரை அந்த பிரதேசத்தில் தொடர்ந்தும் இழுத்து வைப்பதற்குமான ஒரு செய்ற்பாட்டை புலிகள் சரிவர மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக, சிறீலங்கா இராணுவமானது தனது படையின் பெரும் பகுதியை கிழக்கிலிருந்து வடக்கு போர்முனையை நோக்கி நகர்த்துவது சாத்தியமானது. இப்படியாக கிழக்கில் இராணுவத்தின் ஒரு பகுதியை கட்டிப்போட முடியாமற் போனது இந்த யுத்தத்தில் தீர்க்கமான அம்சங்களில் முக்கியமான தொன்றாகியது.

இந்திய – சீன போட்டா போட்டிகள்

தற்போதய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் சீனாவும், இந்தியாவும் முக்கியமானவையாகும். பிராந்திய வல்லரசு என்ற வகையில் இந்திய அரசு தனது மேலாதிக்கத்தை இலங்கையில் பேண தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறது. இந்த முயற்சிகள் சில சமயங்களில் வெற்றிகரமான விளைவுகளையும், சில சமயங்களில் சங்கடமாக நிலைமைகளையும தோற்றுவித்து வந்துள்ளன. மிக அண்மைக் காலத்தில்தான் இந்த அரங்கிற்கு வந்து சேர்ந்துள்ள சீன அரசோ, இந்திய மேலாதிக்கம் மற்றும் ஏனைய மேற்கத்திய செல்வாக்குகளையும் மீறித்தான் தனது கால்களை பதித்தாக வேண்டியுள்ளது. இப்படியாக ஒரு பலவீனமான நிலைலயில் தொடங்கும் சீன அரசானது, தனது பலம் மற்றும் பலவீனங்களை சரிவர இனங்கண்டு மிகவும் வித்தியாசமான இந்த விடயத்தை அணுக முற்படுகிறது. தனக்கு மிகவும் அவசியமாக உறவுகளை பலப்படுத்தியாக வேண்டும் என்ற நிலையில் உள்ள பிரதேசங்களில் தனக்கு புதிய நண்பர்களை தேடிக் கொள்வதில் சீன அரசானது மிகவும் தீவிரமான அணுகுமுறைகளை தயவு தாட்சண்யமின்றி மேற்கொள்கிறது. மிகவும் நீண்ட கால கண்ணோட்டத்தில் தனது பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்தும் பேணுவதற்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்வதில் எவ்விதமான தயக்கங்களை சீன அரசு காட்டுவதில்லை. அதிலும் சீனாவிலுள்ள அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளின் குறிப்பான தன்மைகள் காரணமாக அந்த நாடானது ஏனைய போட்டி நாடுகளைவிட சிறப்பாக இதனை செய்து முடிப்பது சாத்தியப்படுகிறது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சீனா கொங்கோ போன்ற சில நாடுகளில் செய்துவரும் பொருளாதார நடவடிக்ககைளாகும். அவர்கள் கிட்டத்தட்ட அந்த நாட்டையே விலைக்கு வாங்கிவிட்டது போல, அந்த நாட்டிலுள்ள வளங்களை நீண்ட கால கண்ணோட்டத்தில் முழுமையாகவே கொள்வனவு செய்துவிட்டு அதற்கு பதிலாக அந்த நாடுகளின் அடித்தள கட்டுமாணங்களை – புகையிரத, நெடுஞ்சாலை, பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றை – அமைத்துக் கொடுப்பதில் ஈடுபட்டுள்ளது. அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு குறிப்பிட்ட விடயத்தை அடைவது என முடிவு செய்துவிட்டால் அதற்கு எந்த விலையும் கொடுத்தாவது அடைந்தே தீருகிறார்கள். இதற்காக பொருள்வகையில் மட்டுமல்லாமல் அரசியல் மற்றும் சர்வதேசரிPதியிலும் கூட அவர்கள் எந்த விலையையும் கொடுக்க தயங்குவதில்லை.

மேற்கத்தைய நாடுகளும் இந்தியாவும் இராணுவ சாதனங்களை வழங்க மறுத்தபோது சிறீலங்கா அரசு சீனாவை நாடியது. சீன அரசோ, அம்பாந்தோட்டை துறைமுக வசதிகளை தனக்கென பெற்றுக்கொண்டு, சிறீலங்கா அரசிற்கு தாராளமாகவே இராணுவ உதவிகளை வழங்கியது. தேவையான கருவிகளை விலைக்கு கொடுத்ததுடன் இலவசமாகவும் வழங்கியது. பயிற்சி வசதிகளை நேரடியாகவும், மற்றய நாடுகள் ஊடாகவும் செய்து கொடுத்தது.  இப்படியாக சீனா உதவி வழங்க முன்வந்ததனால் பதற்றப்பட்டுப் போன இந்திய அரசானது சிறீலங்கா அரசின் தேவைகளை தானும் கொடுக்க முன்வந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பினரது விமானங்களை கண்காணிக்க அவசியமான ராடர் கருவிகளையும் அவற்றை கையாலும் தொழில் நுட்பவியலாளர்களையும் வழங்கியதுடன் தனது உளவுப் பிரிவான ‘ரோ’ ஊடாகவும உதவிகளை வழங்கியது. இதனால் புலிகள்; அமைப்பிற்கெதிரான யுத்தத்தில் சிறீலங்கா இராணுவத்திற்கு இராணுவ தளபாட தட்டுப்பாடுகள் இருக்கவில்லை. முன்பு புலிகளுடன் நிலவிவந்த இராணுவ சமபல நிலையை முற்றிலும் மாற்றி அமைக்கும் விதத்திலான பல முக்கியமான இராணுவ தளபாடங்களை சிறீலங்கா இராணுவம் பெற்றுக் கொண்டது. இவற்றில் வேகமாக தாக்கும் குண்டுவீச்சு விமானங்களும், ஆளில்லாமல் பறந்து எதிரியை உளவு பார்க்கவல்ல விமானங்களும், பல்குழல் ரொக்கட் செலுத்திகளும், ராடர்களும, துணைகோள் படங்களை பெற்றும் கொள்ளும் வசதிகளும் மிகவும் முக்கியமானவை.

புலிகளைப் பொறுத்தவரையில் நிலைமை தலைகீழானதாக அமைந்தது. ஆனையிறவு முகாம் தாக்குதல் மற்றும் ஜயசிக்குறு தாக்குதல்களுக்கு பின்பு அடிக்கடி பெரிய முகாம்களை தாக்குவது நின்று போனது. இதனால் அரசிடமிருந்து இராணுவ தளபாடங்களை கைப்பற்றுவது நின்று போனது. இத்துடன் மட்டும் நில்லாது இயக்கத்திற்கு நீண்டகாலமாக ஆயுத தளவாடங்களை கொள்வனவு செய்து, அவற்றை நாட்டிற்குள் வெற்றிகரமாக கொண்டு போய்ச் சேர்ந்த்துவந்த கே.பி என்பவர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார். அவரது இடத்தை நிரப்ப வந்த புதியவர்கள் ஒரு மிகவும் மோசமான சூழலில் தமது கன்னி முயற்சிகளில் ஈடுபடலானார்கள். சிலர் தமது முதல் எத்தனிப்பின் போதே கைதானார்கள். இவற்றை தாண்டி கப்பலில் ஏறிய பொருட்களும் கடலில் வைத்து இந்திய – சிறீலங்கா இராணுவங்களினால் கைப்பற்றப்பட்டன. நடந்து கொண்டிருந்த சமர்களில் பாவிக்கப்படும் வெடி பொருட்களை பெற்றுக் கொள்வதிலேயே சிரமான நிலைமைகள் தோன்றின. அதேவேளை இந்த யதார்த்த நிலைமைகள் பற்றிய சரியான தெளிவில்லாதவர்கள் போல புலிகளது செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம் பெற்று வந்தன. இரண்டு சிறிய  விமானங்களை வைத்துக் கொண்டு உலகிலேயே விமானப்படையை வைத்திருக்கும் ஒரே கெரில்லா அமைப்பு என்று மார்தட்டினார்கள். இவற்றை கொண்டு வந்து தம்மால் உள்ளூரில் தயாரிக்ப்பட்ட குண்டுகளை அரச இலக்குகள் மீது தாக்குவதற்கு பயன்படுத்தினார்கள். இதற்கு வழங்கப்பட்ட பிரச்சார முக்கியத்துவம் இருந்த அளவிற்கு இவற்றின் தாக்குதல்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கவில்iலை. (இதற்கு விதிவிலக்காக அநுராதபுரம் விமான நிலையம் மீதான தாக்குதலில் தரை மூலமாக ஊடுறுவித் தாக்கிய கெரில்லாக்களுக்கு துணையாக இந்த விமானங்கள் செயற்பட்டது இருக்கலாம்) ஆனால், இதற்கு மறுதலையாக, இவை ஏற்படுத்திய பாதகமான எதிர்வினைகள் பாரதூரமானதாக அமைந்தன.

இந்தியாவில் அணுஉலைகள் தென்னிந்தியாவில் இருக்கின்றன. இவை விடுதலைப் புலிகளது விமானங்களின் தாக்குதல் எல்லைக்கு உட்பட்டனவாக இருக்கின்றன. இந்தியாவின் கேந்திர நலன்களை பற்றிய எச்சரிக்கைகளை தேவையற்று கிளப்பிவிட இந்த விமானங்கள் காரணமாக அமைந்துவிட்டன. ஏற்கனவே சீனாவின் இராணுவ உதவிகள் காரணமாக எரிச்சலைடைந்து போயிருந்த இந்திய அரசு, இந்த விடயத்தில் சீனாவின் தொடர்ச்சியான பங்களிப்பை அனுமதிக்க முடியாது. ஏனெனில், சீனாவிலிருந்து பெறப்படும் ராடர்கள், புலிகளின் விமானங்களை மட்டுமன்றி இந்திய இராணுவ நடவடிக்கைகளையும் சீனா கண்காணித்துக் கொள்ள உதவும் என்பதால், இந்திய அரசு தான் விரும்பியோ, விரும்பாமலோ உதவி வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டது.

இப்படியாக, புலிகள் ஏற்கனவே இந்தியாவுடன் ஏற்படுத்தியிருந்த முரண்பாடுகள், இந்த விமானப்படை தொடர்பான எச்சரிக்கைகள், சீனாவின் தலையீடு தொடர்பாக இருந்த அவதானங்கள் போன்றவை ஒன்று சேரவே, இந்திய அரசானது, சிறீலங்கா அரசுடன் இந்த போர் நடவடிக்கைகளில் முழுமையாக ஒத்துழைத்து புலிகளை கருவறுப்பது என்பதில் முழு மூச்சாக இறங்க வழிவகுத்தது. இதுவும் இந்த யுத்தத்தின் முடிவுகளை நிர்ணயித்ததில் தீர்க்கமான பங்காற்றியுள்ளது. குறிப்பாக புலிகளின் தலைமை இறுதியில் முழுமையாக அழிக்கப்பட்டதில் இந்திய உளவுப்படையான ‘ரோ’ முக்கிய பாத்திரம் வகித்ததாக நம்பப்படுகிறது. அத்துடன் இலங்கை விவகாரங்களில் நீண்டகாலமாக தலையீடு செய்து வந்த இந்திய அரசின் பாத்திரம், ஏனைய நாடுகள் எதனது பங்களிப்பையும் விட முக்கியமானதாக அமைந்தது.

lttelogo.jpgபுலிகளது செயற்பாடுகள்

ஆனையிறவு தாக்குதலை அடுத்து எழுந்த stalemate நிலையை அடுத்து, புலிகள் உடனடியாக அதனை களைவதில் தமது கவனம் அனைத்தையும் குவித்தாக வேண்டியிருந்தது. ஏனெனில், ஒரு அரசுடன் விடுதலை அமைப்பானது மரபார்ந்த படையமைப்புகளுடன் நீண்ட காலாத்திற்கு stalemate நிலையில் இருப்பதானது, பெரும்பாலும் அரசுக்கே சாதகமாக அமையக்கூடியது. ஏனெனில், அரசானது தன்னிடமுள்ள பெருமளவிலான வளங்கள் மற்றும் சட்டபூர்வமான அரசாங்கம் என்ற அந்தஸத்து கொடுக்கக் கூடிய இராஜதந்திர சாதக அம்சங்கள் என்பவை மிகப்பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரசுக்கு சார்பாகவும், விடுதலை அமைப்புகளுக்கு எதிராகவும் அமையக் கூடியது. எனவே இப்படிப்பட்ட வாய்ப்புகள் (window of opportunity)  விடுதலை அமைப்புகளுக்கு வரலாற்றில் அரிதாகவே, அதுவும் ஒரு குறுகிய காலத்திற்கே கிடைப்பதுண்டு.  இந்த நிலையில் புலிகள் தனது சர்வதேச அங்கிகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை மிகவும் தீவிரப்படுத்தியிருக்க வேண்டும். அத்தோடு தேவையான இராணுவ கொள்வனவுகளை தீவிரமாக செய்து முடித்து யுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். இந்த கட்டத்தில் புலிகள் பாரதூரமாக தவறுகளை இழைத்துவிட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது.

சர்வதேச அங்கிகாரத்தை பெறுவதில் தீவிரம் காட்டுவதற்குப் பதிலாக, புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடம் பணத்தை பலவந்தமாக பெற முனைந்தது, இந்த நாடுகளில் புலிகள் அமைப்பை தடை செய்வதற்கு இட்டுச் சென்றது. 2001 செப்டம்பர் 11 இற்கு அடுத்த உடனடியான காலத்தில் தடை செய்யப்படாமல் தப்பிக் கொண்ட ஒரு அமைப்பானது, 2005 இல் தடை செய்யப்பட நேர்ந்ததென்பதை, புலிகளில் முட்டாள்தனம் தவிர வேறு விதமாக விளங்கிக்கொள்ள முடியாது.

அடுத்ததாக, புலிகள் வேகமாக மிகவும் அத்தியாவசியமாக அவசியப்பட்ட நவீன ஆயுத தளவாடங்களை வாங்கிக் கொள்ள அவசிமான ஒரு கட்டத்தில், அவர்களது நீண்ட கால ஆயுத்கொள்வனவாளரான கே.பி என்பவரை மாற்றிவிட்டு, புதியவர்களை நியமித்தது அடுத்த பாரிய தவறாக அமைந்தது. அப்போது தோன்றியிருந்த நெருக்கடிமிக்க சர்வதேச சூழலில், அனுபவம் வாய்ந்த ஒருவரே வெற்றிகரமாக தொடர்ந்தும் செயற்படுவது என்பது மிகவும் கடினமான ஒரு விடயமாகும். இதற்கு தலைகீழாக புதியவர்களது “கத்துக்குட்டித்தனம்” மிகவும் மோசமாக விளைவுகளை ஏற்படுத்தியது. அடுத்து அடுத்தாக பன்னிரன்று ஆயுத கப்பல்கள் கடலில் தாக்கி அழிக்கப்பட்டன. இப்படிப்பட்ட இழப்புகளை எந்தவொரு அமைப்புமே ஈடு கொடுப்பது என்பது மிகவும் கடினமானதே. இத்தனையும் நடந்து கொண்டிருக்கும் போதுதான் இந்த விமானப்படை பற்றிய பரபரப்பும் சேர்ந்துகொண்டது. உண்மையில் இவர்கள் தொழில் நேர்த்தியுடன் (professional) செயற்பட்டிருப்பார்களானால், இந்தவிதமான பரபரப்புகளில் சக்தியை விரயமாக்காமல், மிக முக்கியமான சில ஆயுதங்களையாவது, உதாரணமாக விமான எதிர்ப்பு ஏவகணைகள் (stinger missels)  மற்றும் தமது ஆயுதங்களுக்கு மிகவும் அத்தியாவசியமான வெடிபொருட்களையாவது விமானங்களின் உதவியுடன் பரசூட் மூலமாக இறக்கியிருக்க முடியும். இன்று கூட பல்வேறு போராளி அமைப்புகளும் மற்றும் போதைப் பொருள் வியாபாரிகளும் இப்படிப்பட்ட வழிமுறைகளை தாராளமாகவே கையாள்கிறார்கள். ஆனால் இவர்களது கவனங்களோ கோஷ்டி மோதல்களிலும், பண முதலீடுகளிலும் குவிந்திருந்தது.

இதேவேளை புலிகள் பலவந்தமாக புலம் பெயர் தமிழர்களிடம் சேகரித்த பணத்தில் பெரிய பகுதியொன்று அந்தந்த நாடுகளில்; மூலதனமிடப் பயன்படுத்தப்பட்டன. அதுவும் சாதாரணமான வியாபார முயற்சிகளில் இவை ஈடுபடுத்தப்பட்டன. உணவகங்கள், பலசரக்கு கடைகள், புடவைக்கடைகள் மற்றும் நீண்டகால முதலீடாக கருதப்பட்ட நிலையான கட்டிடங்கள் போன்றவற்றிலுமான முதலீட்டை எவ்வாறு புரிந்து கொள்வது. ஒரு குறுகிய காலத்தினுள் இயலுமான அனைத்தையும் செய்து அரசை அமைத்து, சர்வதேச அங்கிகாரத்தை பெற முயல்வதா அல்லது ஒரு வர்த்தக நிறுவனம் போல் நாலு காசு பார்க்க, அதுவும் நீண்டகால நோக்கில் முயல்வதா? நாம் எமக்கென சொந்த அரசை அமைத்த பின்பு இந்த கடைகளும் சொத்துக்களும் என்ன அந்நிய செலவாணியை ஈட்டித்தர வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்h? இதில் புலிகளுடன் இணைந்து நின்று வியாபாரிகளும், இந்த விவகாரங்களை ஊரிலிருந்து கையாண்டு நபர்களது இயலாமை தவிர வேறொன்றையும் காண முடியவில்லை. இந்த நிகழ்வுகள் புலிகளது தேசியிடுதலையை குறுகிய காலத்தினுள் அமைத்துவிடுவது தொடர்பாக அவர்களுக்கு இருந்த நம்பிக்கையின் தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

யுத்தம் நடந்து முடிந்தவிதம்

இந்த யுத்தம் தொடங்கியதிலிருந்து புலிகள் அமைப்பானது சிறீலங்கா இராணுவத்தின் மீது முறையான எதிர்த் தாக்குதல்களை நடத்தாமை இங்கு முனைப்பாக கவனிக்க வேண்டிய ஒரு விடயாக தெரிகிறது. ஒவ்வொரு களமுனையிலும் புலிகள் முதலில் பெயரளவிலான எதிர்ப்பை காட்டுவதும் பின்பு பின்வாங்கிச் செல்வதுமாகவே இந்த யுத்தத்தின் மிகப்பெரும் பகுதி – மாவிலாறு தொடங்கி புதுக்குடியிருப்பு வரையில் –  நடந்து முடிந்தது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. முதலாவது காரணம், சிறீலங்கா படையினரிடம் காணப்படும் மிக முக்கியமான ஆயுதங்களை எதிர்ப்பதற்கு புலிகளிடத்தில் வேறு வழிமுறைகள் இருக்கவில்லை என்பதாகும். குறிப்பாக Super sonic bombers, multi barrel rocket launcher, satelite reconecence, unmanned spy plane  போன்றவை இப்படிப்பட்டனவாக குறிப்பிடப்பட்டன. இதில் ஒரளவு உண்மையிருப்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே. ஆயினும் இதனையும் எதிர்பார்த்து, அதற்கான தயாரிப்புக்களை செய்வதற்கு தேவையான காலமும் வளங்களும் புலிகளிடத்தில் தாராளமாகவே இருந்தனவே. இவற்றை சரிவர நிர்வகிக்காமல் விட்டுவிட்டு இப்போது இந்த மாதிரியான காரணங்களை கூற முற்படுவது ஆரோக்கியமானதாக தெரியவில்லை. இங்கு முழுக்க முழுக்க தொழில்முறை நேர்த்தியின்மை (un-professionalism) தான் வெளிப்படுகிறது. 

அடுத்த காரணம், தலைவர் உள்ளுக்கு வரவிட்டு அடிப்பார், அகலக்கால் வைக்கிறார்கள், வாங்கிக் கட்டப் போகிறார்கள் என்பதாகும். ஆனால் இது கடைசிவரையில் நடைபெறவே இல்லை. இப்படியாக ஒரு அமைப்பு பின்வாங்கி பின்வாங்கியே சென்ற அழித்தொழிக்கப்படுவது என்பது எந்தவிதத்திலும் ஜீரணித்துக் கொள்ள முடியாத ஒரு விடயமாகவே இருக்கிறது. அப்படித்தான் தோற்பது என்றாலும் வீரர்களாக நாம் போராடி தோற்றிருக்கலாம். அப்படியானால் தமிழர்களது அரசியல் மற்றும் மனோபலம் பன்மடங்காக கூடியிருக்கும். ஆனால் நடந்து முடிந்தவிதமோ வரலாறு காணாத விதமாகவே அமைந்து விட்டுள்ளது.

அப்படித்தான் ஒரு மோசமான இராணுவ சமபல நிலையில் யுத்தம் தம்மீது திணிக்கப்பட்டிருந்தாலும் ஒன்றில் அதனை தவிர்க்க முனைந்திருக்க வேண்டும். இல்லையேல் அதனை வீரர்களாக முகம் கொடுத்து முறியடிக்க முயன்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம் நேரடியாக, பகல் பொழுதுகளில் மோதுவது சாத்தியப்படாமற் போனாலும், இரவுவேளைகளிலாவது பல ஊடுறுவித் தாக்குதல்களை முயன்றிருக்க வேண்டும். அவற்றில் சில வெற்றிகரமாக அமையவும், அந்த வெற்றிகளில் ஏதாவது ஒன்று தீர்க்கமானதாக அமையவும் நிறையவே வாய்ப்புகள் இருக்கவே செய்தது. அப்படியாக இழப்புகள் ஏற்பட்டு இருந்தாலுங்கூட தற்போதுள்ள நிலைமையுடன் ஒப்பிடும் போது ஒன்றும் மோசமானதாக அமைந்துவிட்டிருக்காது. குறைந்த பட்சம் இயன்றவரையில் போராடித்தான் தோற்றார்கள் என்ற நல்ல பெயரும் கௌரவமும் புலிகள் அமைப்பிற்கு மாத்திரமன்றி மொத்த ஈழத்தமிழருக்கும் கிடைத்;திருக்கும். ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.

அடுத்ததாக வன்னிக்கு யுத்தகளம் நகர்ந்தபோது புலிகள் நடந்து கொண்ட விதம் பற்றியதாகும். கிளிநொச்சி கைமாறியவுடன் புலிகள் தமது இராணுவ தந்திரோபாயங்களை மீள்பரிசீலனை செய்து, தேவையான மாற்றங்களை கட்டாயமாக ஏற்படுத்தியிருக்க முடியும். அவற்றில் மிக முக்கியமானதாக அமைந்திருக்கக் கூடிய தொன்று, அவர்கள் தமது படையணிகளை சுருக்கிக் கொண்டு முல்லைத்தீவு காடுகளுக்குள் நகர்ந்திருப்பதாகும். எம்மில் பலருக்கு தெரியாத ஒரு விடயம் முல்லைத்தீவு காடுகள் பற்றிய விடயங்களாகும். நெடுங்கேணி தொடங்கி மணலாறு வரையில் நீண்டு செல்லும் இந்த காடுகள் மிகவும் அடர்த்தியானவையாகும். இதற்குள் நுழைந்துவிட்டால் பகல் – இரவு கூட தெரியாது: ஒருவர் தனது உடைகளை தோய்த்து காயப்போட்டால் அவை உலர்வதற்கு நான்கு நாட்கள் எடுக்கும:. என முன்னாள் போராளிகள் கூறுவர். இந்த காடுகள்தாம் புலிகளை இந்திய இராணுவத்தின் கடுமையான தாக்குதல்களிலிருந்து தப்பிழைக்க வைக்க உதவியவையாகும்.

இப்படிப்பட்ட ஒரு காட்டுப் பகுதியில் மரபார்ந்த இராணுவத்தின் கனரக ஆயுதங்களும், குண்டு வீச்சு மற்றும் உளவு விமானங்களும் அதிகம் தாக்கம் நிகழ்த்த முடியாதவையாகிவிடும். இந்த கனரக ஆயுதங்களின் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றும் தன்மை காரணமாகவே சில கெரில்லா அமைப்புக்கள் காட்டை தமது தாய் என்று வர்ணிப்பதுண்டு.  இதனால்தான் வழிவழி வந்த பெரும்பாலான கெரில்லா அமைப்புக்கள் தாம் பலவீனமாக இருக்கும் ஆரம்ப கட்டத்திலாயினும் சரி, அல்லது தாம் யுத்தத்தில் தோல்வியுற்று அழித்தொழிக்கப்படும் நிலைமைகள் உருவாகும் சந்தர்ப்பத்திலும் சரி, காடுகளை நோக்கி நகர்வது முக்கியமான தப்பிழைக்கும் நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. காட்டுக்குள் பின்வாங்கியிருந்தால், இராணுவ சமபல நிலையை (balance of forces) சிறிலங்கா இராணுவத்திற்கு சாதகமாக மாற்றிய அவர்களது கனரக ஆயுதங்கள், குண்டுவீச்சு விமானங்கள், மற்றும் உளவு விமானங்கள், செயற்கைக் கோள் போன்றவற்றை செயலற்றனவாக மாற்றியிருக்க முடியும். இதன் மூலமாக இராணுவ சமபல நிலையில் இந்த ஏற்றத்தாழ்வை புலிகள் தமக்கு சாதகமாக நகர்த்தியிருக்க முடியும். ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்போ, காட்டுப் பகுதிக்குள் செல்வதற்குப் பதிலாக, போரிடுவதற்கு மிகவும் பாதகமான, இயற்கையான தடைகள் எதனையும் கொண்டிராத முல்லை கடற்கரைகளை நோக்கி நகர்ந்தார்கள். இவர்களது இறுதி நிகழ்வானது நந்திக் கட்லின் கரையில் முடிந்தது. அவர்களிடம் இருந்த பிரதேசங்கள் அனைத்திலுமே எதிர்த்து போரிடுவதற்கு மிகவும் பாதகமான ஒரு தரையமைப்பு இந்த பிரதேசமேயாகும். இந்த இடத்திற்கு, அதுவும் சிறிலங்கா அரசு கைகாட்;டிய இடத்;திற்கு போய்ச் சேர்ந்தார்கள். அதுவே அவர்களது இறுதி முடிவுகள் இவ்வளவு சோகமானதாகவும், சடுதியானதாகவும் நடந்தேற காரணமாக அமைந்தது.

இது ஏன் இப்படி நடைபெற்றது என்பதற்கு எந்தவிதமான வியாக்கினங்களும் தருவதற்கு புலிகளின் இராணுவ தலைமையில் யாருமே மிஞ்சவில்லை. எம்மால் செய்யக் கூடிய தெல்லாம், இது தொடர்பாக புலிகளின் ஆதரவாளர்கள் மூலமாக அவ்வப்போது பெறப்பட்ட தகவல்கள் மற்றும் புலிகளது நடவடி;ககைகளை நீண்ட காலமாக அவதானித்து, ஆக்கபூர்வமான விமர்சித்துவருபவர்களதும் கருத்துக்களை பரிசீலிப்பதுதான்.

இப்படியாக முன்வைக்கப்படும் கருததுக்களில் முக்கியமான ஒன்று புலிகளது “அதிகாரமயமாக்கம்” மற்றும் “மேட்டுக்குடியாக்கம்” பற்றியதாகும். புலிகள் அமைப்பு பெரியளவு நிலப்பரப்புகளை தமது கட்டுப்பாட்டில் எடுத்து “மாற்று” அரசாக செயற்பட தொடங்கிய காலம் முதலாக தமது போராட்ட குணாம்சங்களை படிப்படியாக இழந்து ஒரு அதிகாரவர்க்கமாக ஆகிவிட்டார்கள். அதனால்தான் இந்த யுத்தத்தில் போராடி இழப்புக்களை சந்திக்க தயாராக இருக்கவில்லை, என்பதாகும். கிளிநொச்சி மற்றும் புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளில் காணப்பட்ட புலிகளது தலைவர்களது வீடுகளும் மற்றும் அவர்களது அலுவலகங்கள், அதிகாரிகளது வாழ்க்கை மற்றும் செயற்பாட்டு முறைகள் இதற்கு சான்றாக அமைவதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் ஒரு சம்பவத்தை நினைவுபடுத்திப் பார்ப்பது பயனுடையதாக இருக்கும். 2003 ம் ஆண்டு என்று நினைக்கிறோம், சாமாதான பேச்சுவார்த்தைகள் நோர்வேயிலும் மற்றும் சர்வதேச நாடுகளிலும் நடைபெற்று வந்த காலமது. அந்த காலத்தில முன்னாள் ஈரோஸ் அமைப்பின் தலைவரும், தற்போது விடுதலைப் புலிகளது மூத்த உறுப்பினர் என்று அழைக்கப்படுபவருமான வே. பாலகுமார் ஐரோப்பிய விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அவரை முன்னாள் ஈரோஸ் உறுப்பினர்கள் சிலர் பிரான்சில் சந்தித்து பேசியபோது, யுத்த்தின் எதிர்காலம் பற்றிய கேள்வி அவர்களால் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பாலகுமார், இன்னொரு சண்டை வந்து அதில் பின்னடைவு வருமாயின் காட்டுக்குள் சென்று போராட பிரகாகரன் ஒருபோதும் தயாராக இருக்கமாட்டார் என்று கூறினார். அப்போது அது பாலகுமாரின காழ்ப்புணர்வின் வெளிப்பாடு என்று சிலரால் கருதப்பட்டது. ஆனால் அதுவே இப்போது நிதர்சணமாக இருக்கும் போது இந்த நிலைமையை எவ்வாறு புரிந்து கொள்வது என்பது பிரச்சனையானதுதான்.

அடுத்ததாக முன்வைக்கப்படும் இன்னொரு நம்பகமான ஒருவாதம் இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகிறது. இதன்படி, இராணுவத்தின் முன்னெடுப்புகள் ஒரு கட்டத்திற்கு மேல் தொடரப்பட மாட்டாது என்று சில சர்வதேச தரப்புகளால் புலிகளுக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது. அதாவது, ஏ – 9 பாதைக்கு மேல் இராணுவத்தினர் நகரமாட்டார்கள் என்பதால் இராணுவத்தினரை எதிர்த்து போராடி தமது சக்திகளை இழக்கத் தேவையில்லை என்று புலிகள் நம்பியதாக கூறப்படுகிறது. ஆனால் சிறீலங்கா இராணுவமானது ஏ – 9 பெருஞசாலையைத் தாண்டி கிளிநெரச்சியையும் கைப்பற்றி முல்லைத்தீவு நோக்கி முன்னேறத் தொடங்கிய போதுதான் புலிகள் பதறியடித்து செய்வதறியாது தடுமாறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையிலும் இந்த வெளிநாட்டு சக்தியானது புலிகளுக்கு புதிய வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அதன்படி, சர்வதேச சமூகம் இந்த யுத்தத்தில் தலையிட்டு புலிகளை காப்பாற்றுவதானால், சர்வதேச சமூகம் இலங்கை விரகாரங்களில நேரடியாக தலையீடு செய்யும் அளவிற்று ஒரு பலமான காரணம் தேவை. அது ஒரு “பாரிய மனிதப் பேரழிவாக” இருக்கலாம் என கருதப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்குறுதியை நம்பிய புலியின் தலைமையானது முக்கிய நபர்கள் மற்றும் வளங்களை நாட்டைவிட்டு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துவது: அமைப்பின் முக்கிய தாக்குதல் படைப்பிரிவுகளை முல்லைத்தீவு பகுதியின் அடர்ந்த காடுகளினுள் நகர்ந்து கெரில்லா போர் முறைக்கு ஏற்ப தம்மை மீளமைத்துக் கொள்வது: தமது அடிமட்ட அங்கத்தவர்களையும் சாதாரண குடிமக்கள் மற்றும் ஆதரவாளர்களையும் அவர்களது சொந்த விருப்பின் படி செயற்பட அனுபதிப்பது: என்பவற்றிற்குப் பதிலாக தொடர்ந்தும் பின்வாங்கிக் கொண்டே சென்றார்கள். மக்களை பலவந்தப்படுத்தி அழைத்துச் சென்றார்கள்: சிறுவர்களைக் கூட பலவந்தப்படுத்தி தமது படைகளில் சேர்த்து பீரங்கிக்கு தீனி போட்டார்கள். 

யுத்தம் நடைபெற்று, புலிகள் பின்வாங்கிச் செல்லும் பிரதேசங்களிலுள் மக்கள் சுதந்திரமாக தமது முடிவுகளை எடுத்த தமக்கு பாதுகாப்பு எனக்கருதும் பிரதேசங்களை நோக்கி நகர்வதற்கான சுதந்திரம் அந்த மக்களுக்கு இருக்கவில்;லை. புலிகளின் கட்டாயப்படுத்தலினால் மக்களும் பின்வாங்கிச் செல்லும் புலிகளுடன் இடம் பெயர்ந்து செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசம் சுருங்கச் சுருங்க, இடம் பெயர்ந்த மக்களது அடர்த்தியும் அதிகரித்துச் சென்றது. ஒரு கட்டத்தில் 10 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பினுள் சுமார் மூன்று இலட்சம் மக்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி தொடர்ச்சியான இராணுவ தாக்குதல்களினுள் தங்கியிருக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இது தொடர்பாக தமது கரிசனையை வெளிப்படுததிய புலிகளின் புலம்பெயர் ஆதராவாளர்களுக்கு நடேசன் அளித்த பதிலில் சுமார் பத்தாயிரம் வரையில் மக்கள் கொல்லப்படலாம் எனவும், எப்படியிருப்பினும் இறுதியில் புலிகள் பாதுகாப்பாக இருப்பார்கள் எனவும் கூறியிருக்கிறார். இப்போது பார்க்கும் போது இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட சிவிலியன்கள் கொள்ளப்பட்டதற்கான பொறுப்பு யாருடையது என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது. சிறீலங்கா இராணுவம் கண்மூடித்தனமாக, கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியது உண்மைதான் என்றால், அப்படிப்பட்ட ஒரு யுத்த சூழ்நிலைக்குள் தமிழ் குடிமக்களை நிர்ப்பந்தித்தது எப்படிப்பட்ட தர்மமாகும். இது பொதுமக்களை கவசமாக பாவித்து புலிகள் தப்பிக்க முயன்றதையே காட்டுகிறது.

Pro_LTTE_Protest_in_Bernஇப்படியாக நேரும் சிவிலியன்களின் இழப்புக்களை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் காட்டி அனுதாபத்தை தேடும் முகமாகவே புலம்பெயர் நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் இவற்றை பொதுப்படையானதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனையாகவும் focus பண்ண முயன்றவர்களது முயற்சிகள் ஊரிலிருந்து வந்த புலிகளது அறிவுறுத்தல்கள் மூலமாக முறியடிக்கப்பட்டன. இளைஞர்களை வீதிகளில் இற்க்கிவிட்டு இந்த போராட்டமானது புலிகளது தலைமையை பாதுகாபபாக மீட்டெடுப்பதற்கான போராட்டமாக மாற்றியமைக்கப்பட்டது. இந்த வெளிச்சத்தில பார்த்தால், இந்த போராட்டங்களில் புலிக்கொடிகள் காட்டப்பட்டதும், பிரபாகரனது படங்களும், பிரபாகரன்  மற்றும் புலிகள் தொடர்பான் கோசங்கள் எழுப்பப்பட்டதும் ஒன்றும் தற்செயலான, ஆர்வக் கோளாறு மிகுதியினால் செய்யப்பட்ட புத்திசாலித்தனமற்ற தவறுகள் அல்ல என்பது தெளிவாகும். இவை புலிகளினால் திட்மிடப்பட்டு, அவர்களது ஆதரவாளர்கள் மூலமாக வழிநடத்தப்பட்ட செய்ற்பாடுகளாகும். குடிமக்களின் இழப்புகள் தொடர்பாக உண்மையிலேயே கரிசனை கொண்ட மக்களது உணர்வுகள் மற்றும் போராட்டங்களின் மீது மீண்டும் ஒருதடவை புலிகள் சவாரி செய்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

விடயங்கள் இவ்வாறாக ஏன் நகர்ந்தன என்பதற்கு இன்னோர் விதமான வாதங்களும் முன் வைக்கப்படுகின்றன. அதனை இப்போது சற்று நெருக்கமாக பரிசீலிப்போம். சர்வதேச அங்கிகாரம் என்பது வெறுமனே இராணுவ வெற்றிகளால் மாத்திரம் கிடைத்துவிடுவதில்லை. இப்படிப்பட்ட ஒரு அங்கிகாரத்தை பெறுவதற்கு ஒரு இயக்கமானது நீண்டகாலமாக போராடி விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், இன்னும் பல அம்சங்களை தன்னிடத்தில் கொண்டிருக்க வேண்டும். இவற்றில் முக்கியமான சில அம்சங்களாக பின்வருவன அமையும்: முறையான ஒரு சிவில் சமூகத்தை கொண்டிருப்பது: நன்கு செயற்படும் ஒரு சிவில் நிர்வாகத்தை கொண்டிருப்பது: சுயமாக நிற்பதற்கு அவசியமான பொருளாதார திட்டங்களை செயற்படுத்துவது: உயிர்த்துடிப்பான அரசியல் தலைமை. இப்படியான அம்சங்கள் புலிகளிடத்தில் அறவே காணப்படவில்லை. பெயரிலவிலான காவல்துறை, நீதிமன்றம் போன்றவை காணப்பட்ட போதிலும் அவை சுதந்திரமானவையாக இயங்கவில்லை. மிகப்பெரும்பாலன அரச ஊழியர்கள் சிறிலங்கா அரசாங்கத்திடம் சம்பளத்தை பெற்றுக்கொண்டு, புலிகள் இட்ட பணிகளை செய்து வந்தார்கள். ஆசிரியர்கள், எழுது வினைஞர்கள், மருத்துவதுறை சார்ந்த ஊழியர்கள் மாத்திரமன்றி, சிறிலங்கா அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரத்தின் முக்கிய கூறுகாளன கிராம சேவை அதிகாரிகள், அரசாங்க அதிபர்கள் கூட இப்படித்தான் செயற்பட்டு வந்தார்கள். பொருளாதாரரீதியாக தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை சுயசார்புடையனவாக வைத்திருப்பதற்கான எந்த வகையான திட்டங்களும் இருக்கவில்லை. புலிகளது பொருளாதார நடைவடிக்கைகள் பூராவுமே வரி சேகரிப்பது என்பதாக குறுகிக் கிடந்தது. இந்த கடுமையான வரிவிதிப்பு முறைகளால் சமூகத்தில் இயல்பாக நடைபெறும் பொருளாதார முயற்சிகள் கூட தேங்கிப்போனது. நெல்லுற்பத்திக்கும் மற்றும் ஏனைய விவசாய, மீன்பிடி முயற்சிகளுக்கும் உதவிகளை செய்ய முடியாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் அவற்றிற்கு உச்சவிலையை தாமே நிர்ணயிப்பதும், அவற்றின் கொள்வனவிற்கு ஏகபோக உரிமையை தாமே வைத்திருப்பதும் சாதாரண எல்லாவிதமான பொருளாதார முயற்சிகளையுமே நசுக்கிவிடக் கூடியவையாகும். சமூகத்திலுள்ள அல்லது புலம் பெயர்ந்த தனிநபர்கள் சுயமாக மேற்கொண்ட ஓரளவு பெரிய அளவிலான பொருளாதார முயற்சிகள் கூட புலிகளால் பலவந்தமாக பொறுப்பெடுக்கப்பட்டன. சிறீலங்கா அரசின் பொருளாதார தடைகளை தாண்டி நின்று பிடிக்கக்கூடிய வகையிலான சுயசார்பு விவசாய மற்றும் கைத்தொழில் முறைகள் உருவாக்க அல்லது ஊக்குவிக்கப்பட இல்லை. இதனால் உணவுப் பொருட்களை கேட்டும், விவசாய இடுபொருட்களான பசளைகள், கிருமிநாசினிகள், மற்றும் மண்ணென்னைக்காகவும் பினாமியான ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் எந்தவிதமான சுதந்திரமான மக்கள் செயற்பாடுகளும் அனுமதிக்கப்படுவதில்லை என்பது முழு உலகிற்கே தெரிந்திருந்த நிலையில் இந்த பினாமி ஊர்வலங்கள் புலிகளது பலவீனங்களை பறைசாற்றுவதாக மட்டுமே இருந்தன. விடுதலைப் புலிகளே தமிழ் மக்களது ஏகோபித்த தலைமை என்பது கேட்பதற்கு வேண்டுமானால் சந்தோசமான விடயமாக இருக்கலாம். ஆனால் விடுதலைப் போராட்டத்தினுள் நடைபெற்ற சகோதரப் படுகொலைகள் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ள நிலைமைகள் போன்றவற்றை அறிந்து கொண்டுள்ள சர்வதேச சமூகத்திற்கு இது வெறுமனே ஒருவித பாசிச போக்காகவே தெரியும். சுதந்திரமானதும், வெளிப்படையானதுமான ஒரு சர்வஜன வாக்கெடுப்பு முறையன்றி வேறு எந்த முறையினாலும் இந்தவிதமான உரிமைகளை எவரும் பாராட்ட முடியாது. தமிழர் தேசிய கூட்டமைப்பினது தேர்தல் வெற்றி மற்றும் பொங்கு தமிழ் நிகழ்வுகள் என்பவை வெறும் கண்துடைப்புகள் என்பதை புரிந்து கொள்வதில் எந்தவொரு இராஜதந்திரிக்கும் அதிகம் சிரமமிருக்காது.

இதற்கு தலைகீழான விதத்தில் சர்வதேச அங்கிகாரத்தை பெறுவதற்கு தடையாக இருக்க்கூடிய பல அம்சங்களை புலிகள் கொண்டிருந்தார்கள். மோசமான மனித உரிமை மீறல்கள், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள், சித்திரவதை குற்றச்சாட்டுகள், குழந்தை போராளிகள், போர்க்கால குற்றங்கள் .. என இந்த பட்டியல் மிகவும் நீண்டதாக அமைகிறது. அண்மைக் காலத்தில் யுத்தம் நடைபெற்று , சமாதான தீர்வுகள் முன்வைக்கப்பட்ட பிரதேசங்களில் கூட அவற்றில் பங்குபற்றியவர்கள் தொடர்ந்தும் இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளின் பேரில் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டு சர்வதேச நீதிமன்றங்களில் நிறுத்தப்படுவது நிகழ்ந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலைமைகளின் கீழ் விடுதலைப் புலிகள் மேற்கொண்டு போராட்டத்தை முன்னெடுக்க முனைவது அல்லது ஒரு சமாதான தீர்வை நாடுவது போன்ற இரண்டிலுமே பிரச்சனைகள் இருப்பதாக சில ஆய்வாளர்கள் கருதத் தலைப்பட்டனர். இப்படிப்பட்ட நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக புலிகள் நடப்பு நிலைமையை அப்படியே நீடிப்பதற்கான முயற்சிகளில் இறங்கக் கூடும் என்றும் இவர்கள் கருதினர். அதாவது தீவிரமான யுத்தமும் கிடையாது: ஊக்கமான சமாதானமும் கிடையாது. தமது கட்டுப்பாட்டு பிரதேசங்கள் தமது கையை விட்டுப் போகாதவரையில் நிலைமைகள் இப்படியே தொடர்வதில் புலிகளின் நலன்கள் சம்பந்தப்பட்டதாக இந்த ஆய்வாளர்கள் கருதினார்கள்.

இதனை ஒத்த ஒரு சிந்தனையோட்டம் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு பகுதியினரிடமும் நிலவியதாக தெரிகிறது. இதன்படி பாலசிங்கம் மற்றும் கே.பி போன்றோர் 2005 ம் ஆண்டில் இந்த பிரச்சனை தொடர்பான தமது கவலைகளை பிரபாகரனுக்கு தெரியப்படுத்தி, புலிகள் அமைப்பானது சமாதானபூர்வமான ஒரு அரசியல் தீர்வுக்கு நகர்வது பற்றி பேசியுள்ளனர். ஆரம்பத்தில் பிரபாகரன் இதற்கு சாதகமான கருத்தை கொண்டிருந்திருக்கிறார். இதனையொட்டி அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இணைத்தலைமை நாடுகளை அணுகியபோது சாதகமான சமிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.  ஆனால் இந்த முன்னெடுப்புக்கள் புலிகளின் அமைப்பில் பிரபாகரனுக்கு அன்றாடம் நெருக்கமாக செயற்பட்டுவந்த தமிழ்ச்செல்வன், நடேசன், புலித்தேவன் ஆகியோர் இதற்கு மாறான கருத்துக்களை கொண்டிருந்ததாக தெரிகிறது. இவர்கள் தமிழக அரசியல்வாதிகளான நெடுமாறன், வைகோ போன்றோருடன் அன்றாடம் மிகவும் நெருக்கமான தொடர்பில் இருந்து வந்தார்கள். இந்த தமிழக அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகளை நம்பி சமாதான முன்னெடுப்புக்களுக்கான வாய்ப்புக்களை நிராகரித்துள்ளனர். இந்த தரப்பின் கை ஓங்கவே ஆரம்ப முயற்சிகள் கைவிடப்பட்டன. கடந்த பொதுத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியும், மத்தியில் பாரதிய ஜனதா கூட்டணியும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையிலேயே கடைசி நேரம் வரையில் காய்கள் நகர்த்தப்பட்டுள்ளன. தமது நம்பிக்கைகள் பொய்த்துவிட்டதை 16ம் திகதி காலையில் இவர்கள் கண்டு கொண்ட போது, விடயங்கள் கைமீறிப் போய்விட்டிருந்தது.  அப்படித்தான் ஒரு சமாதான தீர்வு அல்லது மூன்றாம் தரப்பு தலையீடு தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகளவில் இருந்திருந்தாலுங்கூட, புலிகள் தமது படைகளை முல்லைக் காடுகளை நோக்கி தற்காலிகமாவது பின்வாங்கியிருந்தால் இந்த மனித பேரவலத்தை தடுத்திருப்பதுடன், தமது எதிர்பார்ப்புகள் கைகூடாமல் போகும் போதுங்கூட ஒரு மோசமான அழிவை அமைப்பு முகம் கொடுக்காமலும் தவிர்த்திருக்கலாம். ஆனால் நந்திக்கடலில் இப்படி முடிந்ததற்கான காரணங்களை இன்னமும் சரிவர பிடிபடாமல்தான் இருக்கின்றன. கடந்த முப்பந்தைந்து வருடத்திற்கு மேலான அனுபவங்கள் இந்த அரிச்சுவடியைக் கூடவா பிரபாகரனுக்கும் அவரது தோழர்களுக்கும் கற்றுக் கொடுக்க தவறியிருந்தது என்பதை புரிந்து கொள்வது சிரமமானதாகவே இருக்கிறது.

மனித அவலம் ஒன்று உருவாகும் போது, அப்படிப்பட்ட நிலைமையில் சர்வதேச தலையீட்டை ஏற்படுத்துவதன் மூலமாக புலிகளின் அமைப்பையும் அதன் தலைமையையும் காப்பற்றுவதாக புலிகளது தலைமைக்கு வாக்களித்தவர்களில் ஒரு பகுதியினர் தாம் கொடுத்த வாக்கினை காப்பாற்றும் விதத்தில் முயற்சி செய்தார்கள் என்பது ஓரளவிற்கு உண்மைதான். பல்வேறு நாடுகளும் பலவிதமான வழிகளினாலும் புலிகளை மீட்டெடுக்க முயன்றதாகவே தெரிகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், நோர்வே, ஜப்பான் மற்றும் பல நாடுகளது முயற்சிகள் இந்த மும்மூhத்திகளின் முன்பு பலனளிக்கவில்லை என்றே படுகிறது. இதில் இந்தியாவின் பங்கு மிகவும் சந்தேகத்திற்குரிதாக அமைந்திருக்கிறது. இந்திய அதிகாரிகளான நாராயணன் மற்றும் மேனன் ஆகியோரதும், கூடவே ஐ . நா பிரதிநிதியாக செயற்பட்ட விஜய் நம்பியாரது பாத்திரமும் மிகவும் சந்தேகத்திற்கிடமானதாக அமைந்துள்ளது. இந்திய அதிகாரிகளான மேனன் மற்றும் நாராயணன் ஆகியோர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதிருந்த தமது பலியை தீர்த்துக் கொண்டதான ஒரு பொதுவான கருத்து இந்திய புலனாய்வு மற்றும் இராஜதந்திரங்கள் தொடர்பான ஆய்வாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. கடைசி நேரத்தில் நடைபெற்ற நெருக்கடிமிக்க பேச்சு வார்த்தைகளில் புலிகள் செங்சிலுவை சங்கத்திடம் சரணடைவதாகவும் அவர்களது பாதுகாப்பிற்கு சர்வதேச சமூகம் உத்தரவாதம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் சிறிலங்கா அரசானது தனது வாக்குறுதிகளை காப்பாற்றாமல், இந்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து புலிகளின் தலைமை அனைத்தையும் அவர்களது குடுப்பங்களுடன் சேர்த்து அழித்தொழித்ததாக தெரிய வருகிறது. இதில் விடயங்கள் நடந்து முடிந்தவிதம் தொடர்பாக பலவிதமான மாறுபட்ட, ஒன்றிற்கொன்று முரண்பட்ட versions வெளிப்பட்டுள்ளன. இவற்றின் சரியான அல்லது தவறான அம்சங்கள் பற்றி தேடித்திரிவது இங்கு எமக்கு முக்கியமானதாக படவில்லை. புலிகள் அமைப்பின் தலைமையானது முற்றிலும், அதன் படையணிகளில் மிகப் பெரும்பாலானவையும் முற்றாக அழித்தொழிக்கப் பட்டார்கள் என்பதை இன்று மிகப்பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். தமது தலைவர் இறக்க வில்லை என்று பகிரங்கமாக அறிவிப்பவர்களும் கூட அவரது மரணத்தை தனிப்பட்ட ரீதியிலும் அந்தரங்கமாகவும் ஒத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் இங்து கவனிக்கப்பட வேண்டியதாகும்.

lttepathmnathan.jpgதற்போதய நிலைமை தொடர்பாக

புலிகளின் தலைமை முற்றாக தாக்கி அழிக்கப்பட்டுவிட்டது என்பதும் தலைவர் பிரபாகரன் இதில் கொல்லப்பட்டுவிட்டார் என்பது புலம்பெயர்ந்த புலிகளின் தலைமை முழுவதற்கும் சந்தேகத்திற்கிடமின்றி தெரிந்தே இருக்கிறது. இந்த தகவலை தமது முக்கிய அங்கத்தவர்களை அழைத்து சொல்லியும் விட்டார்கள். இது கே.பி அவர்கள் பகிரங்கமாக அறிக்கை விடுவதற்கு முன்பே நடந்தேறி ஒரு விடயமாகும். அடுத்த நாள் கே.பி. யின் அறிக்கை வெளிவந்ததை அடுத்து புலிசார்பு தொடர்பு ஊடகங்கள் கூட இந்த செய்தியை வெளியிட்டு ஒரு வாரம் துக்க நிகழ்விற்கு அறிவிப்பு விடுத்திருந்தது.

இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. அடுத்த நாளே புலம் பெயர் புலிகளின் பொறுப்பாளர்கள் இந்த செய்தியை மறுத்ததுடன், கே.பி. அவர்களை ‘துரோகி’ பட்டம் சூட்டவும் தொடங்கினார்கள். புதிய புதிய பெயர்களில் புலிகளது கட்டமைப்புகளும், நபர்களும் அறிக்கைகள் விட்டார்கள். இவர்களுடன் தமிழகத்திலிருந்து வைகோ, நெடுமாறன், ராமதாஸ், திருமாவளவன்…. என்று பலரும் சேர்ந்து கேபி யை துரோகி என்றும், ஏதோ ஒரு உளவு நிறுவனத்திற்கு விலைபோனவர் என்றும் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். பிரபாகரனின் மறைவு சிறீலங்கா, இந்திய மற்றும் சர்வதேச அரசுகளுக்கும் மிகவும் விரிவாக தெரிந்திருக்கிறது. சிங்கள மக்கள் நன்கு அறிவார்கள். இப்படியாக அவர்களெல்லாம் திட்டவட்டமாக அறிந்திருக்கும் போது, புலம்பெயர் புலித்தலைமை தொடர்ந்தும் தமது தலைவரின் மறைவை தமிழ் மக்களுக்கு மறைப்பதன் மூலமாக எதைச் சாதிக்க முனைகிறார்கள் என்பது இப்போது பிரச்சனைக்குரிய விடயமாகிறது.

பல்வேறு தவறுகளுக்கும் அப்பால் விடுதலைப் புலிகளின் இயக்க்த் தலைவர் ஒரு போராளி. கடைசிவரையில் களத்திலே நின்று மரணித்;திருக்கிறார். அவருக்கு உரிய மறியாதை செய்வது அவசியம் என்பது அனைத்து புலி அங்கத்தவர்களதும் நெருங்கிய ஆதரவாளர்களதும் ஆதங்கமாகும். இதனைவிட, ஒரு குறிப்பிட்ட போராட்ட வழிமுறை தனது இலக்கை அடையத் தவறியது மட்டுமன்றி மாபெரும் பேரழிவை ஏற்படுத்தி ஓய்ந்திருக்கிறது. அத்தோடு இன்னமும் பெருந்தொகையாக மக்கள் வன்னியில் அகதி முகாம்களில் மிகவும் மோசமான நிலைமைகளில், தொடர்ச்சியான நெருக்குதல்களின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார்கள். இன்னுமொரு பகுதி புலிகளின் போராளிகள் ஈழத்தில் தலைமறைவாக செயட்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட பல்வேறு தரப்பினரும் இன்று புலம் பெயர் தமிழர் மற்றும் புலம் பெயர் அரசியல் தலைமை போன்றவர்களிடம் இருந்து முக்கியமான திட்டவட்டமான செயற்பாடுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சிறீலங்கா அரசோ விடுதலைப் புலிகளை தோற்கடித்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் என்ன காரணங்களுக்காக போராட நேர்ந்தது போன்ற விடயங்கள் மறக்கடிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்;சம் கௌரவத்துடன் கூடிய ஒரு சமாதானம் பற்றி பேசுவதற்கு கூட யாருமே தயாராக இல்லை. இப்போதுள்ள விழிப்புணர்வு பெற்றுள்ள சர்வதேச சூழலை பயன்படுத்திக் கொண்டு ஏதாவது உருப்படியாக செய்தால் அன்றி, நிலைமைகள் இன்னமும் மோசமாக கட்டத்தை அடைந்து தமிழ் மக்களது பிரச்சனைகள் இன்னமும் பல பத்தாண்டுகள் பின்தள்ளப்படும். அப்போது சிறீலங்கா அரசின் தொடர்ச்சியான திட்டமிட்ட இன சுத்திகரிப்பு மற்றும் இன ஒழிப்பு செயற்பாடுகளினால் ஒருவேளை மகிந்த சொல்வது போல :”சிறுபான்மை பிரச்சனை என்பது நாட்டில் இல்லாமற் செய்யப்பட்டு” விடவும் கூடும். ஆகவே இப்போது மயிர் பிளக்கும் விவாதங்களுக்கும் வியாக்கீனங்களுக்கும் கால அவகாசம் கிடையாது. ஆனால் இந்த இந்த அவசரமான பனிகளை சரிவர தொடங்குவது என்பது,  முன்னைய அத்தியாயத்தை மூடி அதனுடன் ஒரு திட்டவட்டமான கோட்டைக் கீறிக்கொள்வதால் மட்டுமே சாத்தியப்படும். அதனைச் செய்யாமல் கடந்த கால மாயைகளில் மக்களை வைத்திருப்பதும் சர்வதேச சமூகத்தை தொடர்ந்தும் ஏமாற்றலாம் என்று கற்பனை செய்வதும் முட்டாள்தனம். இதற்கு மேல் இப்படியான செயற்பாடுகளை செய்பவர்கள் தமிழர்களது அரசியல் தீர்வுகளுக்கான முன்னெடுப்புகளுக்கு தடையாக இருப்பவர்களாகவே கருதப்பட வேண்டியவர்களாவர். அப்படியானால், புலம் பெயர் புலித்தலைமை ஏன்; இப்படி செய்கிறது என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

விடுதலைப் புலிகளின் புலம் பெயர் அமைப்பின் தலைமையைப் பொருத்தவரையில் நாம் இரண்டுவிதமான போக்குகளை அவதானிக்க முடிகிறது. முதலாவது போக்கு, கே.பி மற்றும் அவரைச் சார்ந்தவர்களால் வெளிப்படுத்தப்படுகிறது. இவர்களது நிலைப்பாட்டின்படி, தலைவரது மரணத்தை பகிரங்கமாக ஒத்துக் கொள்வது: அவருக்கு உரிய கௌரவத்தையும் மறியாதையையும் செலுத்துவது: அதனைத் தொடர்ந்து கடந்த காலத்தில் புலிகளது தோல்விக்கு காரணமாக அமைந்த தவறான போக்குகளை களைந்து கொண்டு போராட்டத்தை இன்னமும் வுPரியமாக முன்னெடுப்பதற்கு அவசியமன நிலைமைகளை தாம் தோற்றுவிப்பது. புலிகளது ஏக பிரதிநிதித்துவம் பற்றிய கோரிக்கையை கைவிட்டு பன்முக அரசியலை ஊக்குவிப்பது: ஜனநாயக விழுமியங்களை உயர்த்திப் பிடிப்பது: வெளிப்படையான தன்மையையும், மக்களுக்கு பதில் செல்லவேண்டிய பொறுப்பையும் போராளிகள் கொண்டிருப்பது: போன்றவை இவற்றில் முக்கியமானவையாகும். இரண்டாவது போக்கினர், தம்மை, தமது கடந்தகால் நடவடிக்கைகளை பரிசீலனை செய்வதையே தவிர்க்க முனைகிறார்கள். தமது இயக்க தலைவரது மறைவை கூட தமது அங்கத்தவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் தெரியப்படுத்தாமல், தமது செயற்பாடுகளை அப்படியே தொடர்ந்து செல்லலாம் என்று கருதுகிறார்கள் போலத் தெரிகிறது.

இந்த இரண்டாவது தரப்பினர் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று யோசித்தாக வேண்டியுள்ளது. இப்படியாக செயற்படுபவர்களுள் பலதரப்பட்ட ஒன்றிற் கொன்று முரண்பட்ட நலன்களையும், அக்கறைகளையும் கொண்ட குழுக்களையும் நாம் வேறு படுத்தியாக வேண்டியுள்ளது. இவற்றில் ஒரு  தரப்பினர் கடந்த காலத்தில் புலிகளது புலம் பெயர் அங்கங்களில் பொறுப்புக்களில் அங்கம் வகித்தவர்கள். கடந்த காலத்தில் இந்த தலைமையானது தமிழ் மக்களை ஒரு மாயையில் வைத்திருந்தனர். பிரபாகரனை கடவுளாக்கி, அவருக்கு மறு கேள்வி கேட்காத கீழ்ப்படிவை “தேசபக்தி” என்று கற்பிதம் செய்தார்கள். அவர்களது மிகவும் நெருங்கிய, விசுவாசம் மிக்க அங்கத்தவர்கள், ஆதவாளர்களது அக்கறையான கேள்விகள் மற்றும அவதானிப்புக்களையெல்லாம் ‘தலை’க்கு இது தெரியாது என்று நினைக்கிறீர்களா என்று வாயை அடைக்கச் செய்தார்கள். இப்போது உண்மை நிலைமையை தெரிந்து கொண்டு கோபப்பட்டுப் போயுள்ள அங்கத்தவர்களை, ஆதரவாளர்களை எவ்வாறு சமாளிப்பது என்பதில் பிரச்சனை இருக்கலாம். கே.பி யின் அறிக்கையில் தலைவரது மரணம் பற்றிய செய்தி மட்டும் அல்ல, தமது கடந்த கால செயற்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு விடயமும் சம்பந்தப்பட்டு இருக்கிறது. இதனை செய்வதானால், தற்போது புலம்பெயர் புலி அமைப்புக்களில் பொறுப்புக்களில் இருப்பவர்கள் தம்மிடம் குவிந்துள்ள அதிகாரங்கள் மற்றும் கணக்கு வழக்குகள் பற்றியும் கவலைப்பட வேண்டியிருக்கும். இந்த பிரச்சனைகள் காரணமாகவே இவர்கள் பிரச்சனைகளை மூடிமறைத்து ஓட முனைவதாக தெரிகிறது. தவைவர் உயிருடன் இருக்கும் வரையில் அவரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக்கி துதி பாடியவர்கள், அவர் மறைந்ததும் அவருக்கு அஞ்சலி செய்ய மறுப்பதுடன், அவரால் நியமிக்கப்பட்டவரையும் துரோகி என்று கூறுவதில் கபடத்தனம் தெரிகிறது.

இரண்டாவது காரணம், பினாமி சொத்துக்கள் பற்றிய பிரச்சனையாகும். புலிகள் அமைப்பானது மிகவும் கஸ்டமான நிலைமைகளின் கீழ், அமைப்பின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது எமது சமூகத்தின் ஆதிக்க சக்திகள் அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மறுத்தார்கள். ஆனால், புலிகள் ஒரு பலமான சக்தியாக தம்மை நிலைநாட்டிக் கொண்ட பின்போ, பல்வேறு தரப்பட்ட வஞ்சகப் புகழ்ச்சியாளர்களும், பிழைப்புவாதிகளும், மோசடியாளர்களும் புலிகளைச் சூழ்ந்து கொண்டுள்ளார்கள். புலிகள் அமைப்பினுள்ளும, அதற்கு வெளியிலும் புலி அங்கத்தவர்களும் ஏனைய உண்மையான தேசபக்தர்களும், விடுதலைப் போராட்டத்தின் ஆரோக்கியமான எதிர்காலம் தொடர்பான அக்கறையில் பலவிதமான போராட்டங்களை புலிகளின் தலைமைக்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கையில்,  அந்த வெப்பத்தில் குளிர்காய புகுந்தவர்கள் இவர்கள். புலிகளது தலைமையும் கூட தமது செந்த அமைப்பினுள் நீண்டகாலமாக போரடிவந்த, போராட்டத்தின் எதிர்காலம் பற்றிய உண்மையான அக்கறைகளை எழுப்பிய போராளிகளை புறம் தள்ளிவிட்டு,  இநத மாதிரியான வஞ்சகப் புகழ்ச்சி செய்யும், கொத்தடிமைக் கூட்டத்தை அரவணைத்துக் கொண்டது: உண்மையான புரட்சியாளர்களை, தேச பக்தர்களை கொன்று குவித்தது.

இப்படியாயக உள்நுழைந்தவர்களது நோக்கமெல்லாம் எப்படி சுருட்டுவது என்பதாகவே இருந்தது. இவர்களது ஆலோசனையின் பேரிலேயே பல கோடி டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் பல்வேறு நபர்களது பெயர்களில் பினாமியாக வாங்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களால் நிர்வகிக்கப்பட்டும் வருகிறது. இத்துடன் கூடவே இன்னொரு பிரச்சனையும் இதில் இருக்கிறது. புலிகளது தலைமையினால் இந்த திட்டங்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டடதாகவும் ஒரு மையமான திட்டமிடலின் பேரிலும் இந்த முயற்சிகள் நடைபெறாமல், பல்வேறு நபர்களால், தத்தமது விசுவாசிகளுக்கூடாக இவை செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கான கணக்கு வழக்குகள் அந்தந்த புலம் பெயர் நாட்டு கிளைகளில் கூட சரிவர கிடையாது. தளத்தில் இருந்த கணக்கு வழக்கெல்லாம் அழிந்து போயுள்ளன. இபபோது இந்த பெருந்தொகையான பணம் பேசுகிறது. இந்த சொத்து பத்து பற்றிய கணக்கு வழக்கு பற்றிய பிரச்சனைகளில் இருந்து தப்பிக் கொள்வதற்கு தலைவரை உயிருடன் வைத்திருப்பது அவசியமானது.

காரணங்கள் எப்படிப்பட்டனவாக இருப்பினும், எப்படிப்பட்ட எண்ணங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் செய்ற்படடாலும், எவ்வளவு தூரம் ஒவ்வொருவரும் நிலைமைகளின் பாரதூரமான தன்மைகள் தெரிந்தோ தெரியாமலோ செயற்பட்டாலும், இவற்றின் விளைவுகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கப் போகின்றன. அதாவது, நமது தேசம் முன்னெப்பொழுதும் கண்டிராத ஒரு மோசமான இடரில் சிக்கியிருக்கிறது: காலம் தாழ்த்தாது உடனடியாகவே செயற்பட்டாக வேண்டியுள்ளது. இந்த நிலையில் எப்படிப்பட்ட காரணத்தினாலாலும், பிரச்சனைகளின் தீர்க்கமான தன்மைகளை உணராது, சொந்த நலன்களுக்காக மக்களது எதிர்காலத்துடன் விளையாடிக்கொண்டிருப்பது மாபெரும் வரலாற்றுத் துரோகமாகவே கருதப்பட வேணடியுள்ளது.

புலிகள் அமைப்பினுள் தோன்றியுள்ள இந்த இரண்டு போக்குகளில், கே.பி அவர்கள் சார்ந்தவர்களால் முன்னெடுக்கப்படும் போக்கானது ஆரோக்கியமானதாகும். இன்று தோன்றியுள்ள இடர்பாடுகளில் இருந்து மிஞ்சியுள்ள புலம் பெயர் அமைப்பையும் ஏனைய கூறுகளையும் அவர்களது வளங்களையும் உருப்படியான வேலைத்திட்டங்களை நோக்கி நகர்த்த இது முக்கிய பங்களிப்பாக அமையும். இரண்டாவது போக்கானது கஸ்ரோ மற்றும் பொட்டு ஆகியோரது விசுவாசிகளால் முன்னெடுக்கப்படுவதாகும். இதற்கு அரசியலில் எதிர்காலமே கிடையாது. அந்த வகையில் இதுவோர் Non Starter ஆகும். அமைப்பானது வெளிப்படையாகவும், முற்று முழுமையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இந்த தோல்விக்கு இட்டுச் சென்ற காரணங்களை கண்டறிந்து, அவற்றை களைவது, எதிர் காலத்தில் முன்னெடுக்கப்படக் கூடிய எந்தவிதமான ஆரோக்கியமான முன்னெடுப்புகளுக்கும் முன்னிபந்தனையானது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்தும் மக்களை உண்மைகளினால் அறிவொளி ஊட்டுவதற்குப் பதிலாக மாயைகளிலும், கனவுகளிலும் லயிக்க செய்வது இவர்களது நோக்கங்களையே கேள்விக்குள்ளாக்குகிறது.

பொறுப்பிலுள்ளவர்களுக்கு நிலைமைகளை சரிவர கையாள முடியாமல் இருக்கலாம். அது அவர்களது தவறு மாத்திரம் கிடையாது. ஏனெனில் கடந்த காலத்;தில் “சொன்னதைச செய்யும சுப்பர்களாக” இருந்த ஒரே காரணத்திற்காகவே இவர்கள் இந்த பொறுப்புக்களில் அமர்த்தப்பட்டவர்களாவர். ஆதலால், இப்படியாக நேர்ந்து முடிந்ததற்கு இவர்களை மாத்திரம் யாரும் குறை கூறிவிட முடியாது. ஆனால் இப்போது நிலைமைகள் தலைகீழாக மாறிவிட்டுள்ளதை அப்பட்டமாக ஏற்றுத்தான் ஆக வேண்டும். இதற்கு குறுக்கு வழிகள் எதுவுமே கிடையாது. இவர்கள் தாமதிக்கும் ஒவ்வொரு கணத்திலும் பல மோசடியாளர்கள் விடயங்களை தமது கைகளில் ஏந்திக் கொண்டு தத்தமது சொந்த நோக்கங்களுக்காக, தத்தமது சொந்த வேலைத் திட்டங்களுக்காக ஓடித்திரிகிறார்கள். இவற்றின் விளைவுகள் எவ்வளவு பாரதூரமானதாக அமையும என்பதை அனைவரும் தெட்டத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மாற்று தீர்வுகளுக்கான முயற்சிகளை செய்வதற்கான கால அவகாசமும்  என்றென்றைக்கும் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. ஏற்கனவே தனியான அரசை அமைப்பதற்கு கிடைத்த சர்ந்தர்ப்பங்களை தமது கடந்த கால் தவறுகள் காரணமாக விடுதலைப் புலிகள் தவறவிட்டதை நாம் வெளிப்படையாகவே அறிவோம். இப்போது சமாதான முயற்சிகளுக்கான சந்தர்ப்பங்களை தமது சுயநலம் காரணமாகவோ அல்லது இயலாமை காரணமாகவோ மீண்டும் தவற விடுவதற்கு இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இவர்களால் அனைத்து தேசபக்த் சக்திகளையும் ஒன்றிணைத்து இந்த இலக்குகளை நோக்கி நகர முடியவில்லையானால், உண்மையான தேச பக்தர்கள் விடயங்களை தமது கைகளில் எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு மார்க்கம் இருப்பதாக தெரியவில்லை.

முடிவாக…

அண்மைய போராட்டத்தில் அழிந்து போனது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமல்ல. தமிழ் மக்களில் போராட்ட தலைமையும் தான். இந்த வாதம் பலருக்கு உடன்பாடற்றதாக, மகிழ்ச்சியளிக்க மாட்டாதததாக இருப்பினும் கூட அதுதான் உண்மையான நிலைமையாகும். சரியாகவோ அல்லது தவறாகவோ, எமது சம்மதத்துடனோ அல்லது எமது அபிப்பிராயங்களை அறவே புறக்கணித்தோ, தமழீழ விடுதலைப் புலிகள் அமைப்புத்தான விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கி வந்தார்கள். இதனை நாம் மறுத்ததில்லை. புரட்சிகர சத்திகளது அக்கறையெல்லைம், எப்படி ஒரு பன்முக சக்திகளும் செயற்படவல்ல அரசியல் சூழலை உருவாக்குவதும், போராட்டத்திற்கான மாற்றுத்தலைமையை நிலைநாட்டுவதும் என்பதாகத்தான் இருந்து வந்தது. புலிகள் மாற்று சக்கதிகளை அழித்தொழித்தது உட்பட பல்வேறு காரணங்களால் எம்மால் புலிகளது ஏகபோக தலைமை என்ற நிலைப்பாட்டை நடைமுறையில் கேள்விக்குள்ளாக்க முடியவில்லை.

இப்படியாக புலிகள் தம்மை ஏகபிரதிநிதிகாளாக மக்களின் மேல் திணித்திருந்தார்கள். தேசிய விடுதலை என்ற பெயரால் செய்யப்பட்ட செயற்பாடுகளில் பெரும்பாலானவை இவர்களால்தான, பல மோரமான தவறுகளுடன் தானென்றாலும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. யுத்தம், சமாதானம், சர்வதேச அங்கிகாரம் பற்றிய பிரச்சனைகள் எல்லாமே விடுதலைப் புலிகளை ஒட்டித்தான் நடைபெற்று வந்தன. இப்படியாக பலவந்தமாக தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு தலைமை அமைப்பானது இன்று யுத்தத்தில் முற்றாக அழித்தொழிக்;கப்பட்டிருக்கிறது. இவர்கள் இதுவரைகாலமும் கடைப்பிடித்துவந்த ஏகபிரதிநிகள் என்ற நிலைப்பாடு காரணமாக வேறு மாற்று சக்திகள் எதுவுமே தமிழ் மக்களை தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லவல்ல பாத்திரத்தை ஆற்றும் நிலையில் இல்லை. இதனால், எமது போராட்டத்தின் ஒரு முக்கிமான கட்டத்தில் அதன் தலைமை என்பது வெற்றிடமாக விடப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற சிறிலங்கா அரசிற்கோ, அதன் வெற்றியில் களிப்புற்றிருக்கும் பெரும்பாலான சிங்கள மக்களுக்கோ அடுத்தடுத்ததாக தொடரப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக எந்தவிதமான அக்கறையும் இருப்பதாக தொரியவில்லை. இன்றுள்ள அரசியல், இராணுவ, சித்தாந்த கட்டமைப்புக்களில் கீழ் தமிழ் மக்கள் ஒரு கௌரவத்துடன் கூடிய சமாதானத்தை எதிர்பார்க்க முடியாது என்பதையே அண்மைக்கால அரசினதும் சிங்கள் மக்கள மற்றும் அவர்களை பிரதிநிதித்துவ முயலும் பல்வேறு அமைப்புகளதும் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

இப்படிப்பட்ட ஒரு நிலையில், தமிழ் தேசத்தில் உண்மையான அக்கறையுள்ள அனைவரும், வரலாறு நம்முன் வைத்துள்ள முக்கியமான கடமையில் தமது கவனத்தை குவிப்பது அவசியமானது. எம்மிட் பலரிடம் கட்ந்த காலத்தின் இழப்புகள் மற்றும் அவை ஏற்படுத்;திய தழும்புகள் போன்றவை இன்னமும் ஆறாத வடுக்களாக இருப்பது என்னவோ உண்மைதான். இதிலிருந்து ஒருவிதமான புலியெதிர்ப்பு வாதம் வெளிப்படுவதும் புரிந்து கொள்ளப்படப் கூடியதுதான். கடந்த காலத்தில் புலிகள் ஒரு வலுவான சக்தியாக இருந்தபோது அல்லது ஒரு வலுவான சக்தியாக தம்மை காட்டிக் கொண்டபோது நாமும் அவர்களை எதிர்த்து போராடித்தான் ஆக வேண்டியிருந்தது. ஆனால் இன்று புலிகளின் தலைமை மட்டுமல்ல புலம்பெயர் அங்கத்தவர்களது செயற்பாடுகளுக்கு ஆதர்சமாக விளங்கிய ஒன்றும் அழிந்த விட்டது. இப்படியாக புலிகள் அழியும் போது, புலிகளது நடவடிக்கைகளின் எதிர் விளைவாக உருவாகிய புலியெதிர்ப்பு வாதமும் தன்னை மறுபரிசிலனை செய்து, உருவாகிவிட்ட புதிய நிலைமைகளுக்கு ஏற்ப தமது நடவடிக்கைகளையும் மீள ஒழுங்கமைத்துக் கொள்வது அவசியமானதாகிறது.

மாற்று அரசியலை கட்டமைக்க விரும்பும் ஒவ்வொரு புரட்சிகர மற்றும் தேசபக்த சக்திகளும் தம்முன்னுள்ள வரலாற்குக் கடமைகளை உணர்ந்து கொண்டு அவற்றை முன்னெடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை வடிவமைப்பதில் தீவிரமான முனைப்புடன் செய்ய வேண்டும். இப்படியாக செய்யும் போது எமது கடந்தகால சிந்தனை முறைகளையும் ஒரு தடவை பரிசீலனைக்கு உள்ளாக்கியாக வேண்டியுள்ளது. புலிகள் மக்களையும் அவர்களது போராளிகளையும் கடுமையாக ஒடுக்கிவந்த நிலைமையில் உருவான, தவிர்க்க முடியாததாக இருந்த புலியெதிர்ப்புவாதமும் கூட இந்த நிலைமையில் தன்னை திருத்திக் கொண்ட சரியான இலக்குகளை நோக்கி தமது சக்திகளை ஒழுங்கமைக்கும் விதத்தில், தம்மை நோக்கி முன்னாள் புலிகள் உட்பட அனைத்து போராட்டத்தில் அக்கறையுள்ள சக்திகளுமே நாடிவருவதற்கு இடையூராக தம்மிடம் இருக்கும் அம்சங்களை களைந்துவிடுவது தொடர்பாகவும் தீவிரமான கரிசனையை வெளிப்படுத்தியாக வேண்டியுள்ளது. இதற்கு மேலும் புலியெதிர்ப்பு காய்ச்சலை வெளிப்படுத்துவது செத்த பாம்பை அடிப்பதற்கு சமமானதாக இருக்கும்.

இன்று எம்முன்னுள்ள வரலாற்று கடமைகளை நாம் சரிவர செய்வதற்கு முதலில் நாம் அந்த வரலாற்றும் கடமைகளை சரிவர இனம் கண்டு கொள்வது அவசியமாகிறது. இலக்குகளை இனம் கண்ட பின்னர் அந்த இலக்லை நோக்கி பயணிக்க தயாராக இருக்கும் அனைவரையும் எம்மோடு இணைத்துக் கொள்வதில் அதிகம் கவனத்தை செலுத்தியாக வேண்டியுள்ளது. இவர்களும் மாற்று அமைப்புக்களை கடந்த காலத்தில் கட்ட முனைந்து தோல்வியில் முடிவடைந்தவர்கள், மற்றும இப்போதும் கூட இப்படிப்பட்ட முயற்சிகளை சிறிய அளவிலாவது முன்னெடுத்துக் கொண்டிருப்பவர்கள் இதில் முக்கியமான பங்காளிகளாகிறார்கள். இவர்கள் அனைவரையும் விட ஒரு மிகவும் முக்கியமான பிரிவு புலிகளது சர்வதேச வலைப்பின்னலாகும்.

புலிகளின் சர்வதேச வலைப்பின்னலைப் பொருத்தவரையில் அவர்களுள் இரண்டுவிதமான அரசியல் போக்குகளை நாம் அவதானிக்க முடிகிறது. முதலாவது பிரிவானது கடந்தகால வேலை முறைகளுடன் கணிசமான அளவு முறித்துக் கொண்டு, தமது கடந்த கால தவறுகளை திருத்திக் கொள்ளும் விதத்தில் சில கடினமான, மகிழ்ச்சியளிக்காத முடிவுகளை துணிச்சலுடன் மேற்கொள்பவர்கள். இவர்கள் அமைப்பு அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் தமக்கு ஏற்படக் கூடிய அவப்பெயர்கள் மற்றும் அந்நியப்படுத்தல் போன்றவற்றையும் பொருட்படுத்தாமல், தாம் ஏற்றுள்ள வரலாற்று கடமைகள் காரணமாக சில தீhக்கமான முடிவுகளை மேற்கொண்டு அவற்றை பகிரங்கமாக தமது அங்கத்தவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் அறிவிக்கத் தயங்காதவர்கள். இவர்களது இந்த நடவடிக்கைகள் போராட்டத்தின் நீண்டகால நம்மை கருதி செய்யப்பட வேண்டியவையாகும். இவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் பன்முகதன்மை, ஜனநாயகம், கூட்டுச் செயற்பாடு என்பவை இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் எந்தவிதமான முன்னெடுப்புக்களை முன்னெடுப்பதற்கும் மிகவும் அத்தியாவசியமானதாகும்.

அடுத்த போக்கானது, புலிகளது கடந்தகால அரசியல் நடைமுறைகளை அப்படியே தொடர முயலவதாகும். இவர்கள் தலைவரது இறப்பு பற்றிய செய்திகளையே தமது அங்கத்தவர்களுக்கும், நெருங்கிய ஆதரவாளர்களுக்கும் அறிவிப்பதற்கு தயாரில்லாதவர்கள். இவர்களைச் சுற்றியுள்ள அதிகாரம், பணபலம், பிழைப்புவாதிகளது கூட்டம் போன்ற அனைத்துமே தத்தமது குறுகிய நலன்கள் என்ற நிலையிலிருந்து போராட்டத்தை அணுகுகிறார்களே அன்றி தமிழரது அரசியல் எதிர்காலத்திற்கு அத்தியாவசியமாக அவசியப்படும் அம்சங்கள் என்ற கோணத்தில் சிந்திக்கத் தலைப்படுகிறார்கள். இங்கு தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது  சாதாரண ஒரு தகவல் பற்றிய பிரச்சனை கிடையாது. ஒரு தேசத்தின் போராட்டமானது தனியொரு அமைப்பிலும், அந்த அமைப்பின் விதியானது தனிநபர் ஒருவருடனும் பின்னிப் பினைக்கப்பட்ட பின்பு அந்த தலைவரது மரணம் என்பது போராட்டத்தை தீர்க்கமாக பாதிக்கக்கூடியது. இப்படிப்பட்ட நிலைமையில் இந்த தகவலைக்கூட நேர்மையாக அறிவித்து, வீழ்ந்துவிட்ட அந்த போராளிகளுக்கு ஒரு முறைப்படியான கௌரவத்தை கொடுக்க முடியாதவர்கள் உண்மையான தலைவர்களாக இருக்க முடியும் என்பதே கேள்விக்குறியதுதான். தலைவர் மறைந்த செய்தியானது எமது எதிரிகளுக்கு, சாதாரண மக்களுக்கு மற்றும் சர்வதேச இராய தந்திரிகளுக்கு, அவர்களது உளவு அமைப்புபளுக்கு தெரிந்தே இருக்கிறது. இது மக்கள் தொடர்பாக இன்றும் தொடர்ந்துவரும் அதிகாரவர்க்க கண்னோட்டத்தையே காட்டுகிறது. இதனை நீண்ட காலத்திற்கு யாருமே மறைத்திருக்க முடியாது. இந்த நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மத்தியிலும் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் இவர்களது நம்பக தன்மையை குறைக்கவே வழிவகுக்கும்.

இப்படிப்பட்ட நிலைமையின் கீழ் மாற்று அரசியல் முன்னெடுப்புக்களை முன்னெடுக்க முனைபவர்கள் புலிகள் அமைப்பினுள் இருந்து அதன் கடந்தகால தவறான அரசியல் பாதைகளுடன் முறித்துக் கொண்டு, ஏனைய சக்திகளையும் இணைத்துக் கொண்டு, ஜனநாய பாதையில் போராட்டத்தை தெராட வேண்டுமென நினைப்பவர்கள் எமது இயல்பான நண்பர்களாவர். இந்த போக்கு எதிராக நிற்க முனைபவர்கள் ஒரு வரலாற்று ஓட்டத்தை தடுத்து நிறுத்த முனைபவர்கள் என்பதை வரலாறு விரைவில் நிரூபித்துவிடும். நாம் ஆதரிக்கும் போக்கை வெளிப்படுத்துபவர்கள் பற்றியும் பல் வதந்திகள் உலாவுகின்றன என்பதும் உண்மையே. நாம் இங்கு தனிநபர்களை அல்லாமல் அவர்களால் முன்வைக்கப்படும் அரசியலை கருத்திற்கொண்டுதான்; எமது முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். இவற்றையும் தாண்டி இன்னமும் பல சந்தேகங்களும், கடந்த காலம் தொடர்பான விமர்சனங்கசளும் கூட எமக்கு இருக்கின்றன என்பது உண்மையே. அவற்றையெல்லாம் பேசி தீர்த்துவிட்டுத்தான் எமது அரசியல் முடிவுகளை மேற்கொள்வோம் என்பது இன்றுள்ள நெருக்கடியான நிலைமைகளில சாத்தியப்படப் போவதில்லை. ஆனால் எமது அடுத்தடுத்த கட்டங்களில் இவை தொடர்பான பல்வேறு விடயங்களையும் தீர்த்துக் கொள்ளலாம்.

எதற்காக எப்படி ஏன் சிறிரெலோ உருவாக்கப்பட்டது? : முன்னாள் ரெலோ போராளி

TELO_SrisabaratnamSelvam AdaikalanathanUthayarajah_Sri_TELO(கட்டுரையாளர் தேசம்நெற்றுக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். ஆயினும் தன்னை இனம் காட்டுவது இன்றைய சூழலில் அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதுவதால் அவர் தனது பெயரைக் குறிப்பிடவில்லை. கட்டுரையாளர் மட்டு அம்பாறையைச் சேர்ந்த முன்னாள் ரெலோ போராளி.)

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) 1986 இல் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டு அதன் அப்பாவி உறுப்பினர்கள் புலிகளால் வேட்டையாடப்பட்டனர். இதைத் தொடர்ந்து ரெலோ உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினர். சிலர் புலிகளிடம் தாங்கள் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என எழுதிக் கொடுத்து விட்டு சாதாரண வாழ்க்கையை புலிகளின் சந்தேகங்களுக்கு முகம் கொடுத்த வண்ணம் இலங்கையில் வாழ மிகச்சிலர் அரச பாதுகாப்பு படையுடன் சேர்ந்து புலி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர் என்பது எல்லோருக்கும் நினைவிருக்கலாம்.

இதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய  கூட்டமைப்பில் சங்கமமான அரச ஆதரவு ரெலோவினர் தங்களது ஆதரவை புலிகளுக்கு நல்கி பல எம். பி பதவிகளை பெற்றுக் கொண்டனர். இதில் உண்மையை கூற வேண்டும் எனில் செல்வம் அடைக்கலநாதன் போன்றோருக்கு மன்னாரில் அவரது சாதி வாக்குகள் மிகத் தாராளமாக விழுந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இவர்களின் கண்மூடித்தனமான புலி ஆதரவு நாட்டிலும் வெளிநாடுகளிலும் ரெலோவினர் மத்தியில் எரிச்சலை உண்டு பண்ணியது. வெளிநாடுகளில் நடந்த ரெலோ கூட்டங்களில் சிறிகாந்தா சிவாஜிலிங்கம் போன்றோர் நேரடியாக விமர்சிக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக லண்டனில் 20 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் ஜனநாயக முகமூடியணிந்த ( இவர் புலிகளின் ஜனநாயக மனித உரிமை மீறல்களை மாத்திரம் விமர்சிப்பாராம்.) தலித் அரசியல் செய்யும் (பெரும்பான்மை) வெள்ளாளரான நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என பெயரில் மாத்திரம் கொண்டுள்ள முன்னாள் ரெலோ உறுப்பினரான ஒரு நபர் தனது அரச தொடர்புகளைக் கொண்டு, சிறி ரெலோவையும் அதன் வெப்சைட்டையும் நடத்தி வருகின்றார்.  முன்னாள் ரெலோ உறுப்பினர்களான எங்கள் முன் ஏராளம் கேள்விகள் உள்ளன.

ஜனநாயகம் பேசும் சிறிரெலோ புலிகள் அழிக்கப்படுவதற்கு முன் தான் செய்த ஜனநாயக மீறல்கள் பற்றி எங்காவது சுயவிமர்சனம் செய்ததா? சுதன், ரமேஸ் பிரச்சனையில் எத்தனை போராளிகளின் உயிர் பறிக்கப்பட்டது? எத்தனை போராளிகள் அடித்து முறிக்கப்பட்டது? சேலம் கொல்லி மலையில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? த.வி.கூட்டணி எம்.பிக்கள் ஆலாலசுந்தரம், தருமலிங்கத்தை ஏன் கொன்றீர்கள்? சமாதானம் பேச வருமாறு கூறி தாஸ், பீற்றர், காளி மற்றும் பலரை யாழ் போதனாசாலையில் வைத்துக் கொன்றொழித்தது பற்றி ஏதாவது கூறியுள்ளதா? இதை கண்டித்து ஊர்வலமாக வந்த மக்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தியதை என்னவென்று கூறுவது?

பின்பு தாஸ் குழுவை நாடு கடத்தியது (நன்றி : தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை) ஏன்? ஒரு தோழர் கூறுகிறார் சிறி சபா மிகவும் நல்லவராம் – அவர் தாஸ் குழுவை கொல்லாமல் (புலிகள் போல்) அனுப்பினவராம்! அந்த ஒரு விடயத்தில் மாத்திரம் சிறிசபா ஒழுங்காக கணக்குப் போட்டுள்ளார். ஏனெனில் அவருக்கு தனது அணியின் பலம் தெரிந்துதான் தாஸ் குழுவுடன் மோதவில்லை. விமல், நேரு போன்ற N.L.F.T அனுதாபிகளில் ஒருவரை செட்டி அவர்களைக் கொண்டே கிடங்கு வெட்டச் சொல்லி கொலை செய்தது, பல ரெலோ உறுப்பினர்களின் மக்கள் விரோத அராஜக நடவடிக்கைகள் இவையெல்லாம் சிறிசபாவின் தலைமையில் கீழ் தான் நடந்தது. அவர் இதை ஒருபோதும் கண்டித்ததில்லை – தண்டித்ததில்லை. ஆனால் இங்கு ஒரு கும்பல் சிறி சபாவின் பெயரில் ஒரு இயக்கம் அதுவும் ஜனநாயகம், மனித உரிமை போன்றவற்றின் பெயரால்…..! சரி – அதை விடுவோம்!

ஜனநாயகம், சுபீட்சம், புனர்வாழ்வு என்ற பெயரால் ஏன் புதிதாக ஒரு கட்சி (சிறி ரெலோ) இயங்க வேண்டும்? பேசாமல் மகிந்தவின் கட்சியிலோ அல்லது டக்கிளசின் கட்சியிலோ சேர்ந்து மக்கள் சேவையை புரியலாம்தானே? பெடரல் பார்டியை எப்படி தமிழரசுக் கட்சி என செல்வா, அமிர் கூறினார்கள் என கேள்வி கேட்ட அதே நபர்கள் ஐக்கிய இலங்கைக்குள் சிறி ரெலோ விடுதலை இயக்கம் என்ற பெயரில் கட்சி நடத்தி தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்? ரெலோவை புலி மாத்திரம் அழிக்கவில்லை. சிறிசபா தாஸ் குழுவை அழித்த போதே ரெலோவின் அழிவு தொடங்கி விட்டது! தாஸ் குழு இருந்திருந்தால் புலிகள் இலேசில் ரெலோவின் மேல் கைவைத்திருக்க மாட்டார்கள். இதன் மறுதலை தாஸ் புகழ் பாடுவது அல்ல. ரெலோ பலமாக உள்ளது என புலிகள் நினைத்திருப்பார்கள்.

ரெலோ புலிகளால் அழிக்கப்பட்ட பின்பு, இலங்கை அரசபடைகளுடன் சேர்ந்து இயங்கக் கூடாது என சொன்னவர்கள் பின்பு ரி.என்.ஏ இல் ரெலோ இயங்கிய போதும் புலிகளுடன் உறவு வைக்கக் கூடாது என சொன்னவர்கள் நாம். எனவே யாரோ சிலரின் பிழைப்பிற்காக ஒரு கட்சியை நடத்தி பாவப்பட்ட மக்கள் மேல் மேலும் தொல்லைகள் கொடுக்காதீர்கள் என தயவு செய்து நாம் மன்றாடி கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை எந்தளவிலும் இலங்கை அரசு தீர்க்கவில்லை அல்லது தீர்க்கப் போவதில்லை என்பதே எமது நிலையாகும். ஆனால் சிறி ரெலோவை இயக்கும் இந்த நபர்கள் தமிழ்பேசும் சிறுபான்மை  மக்களின் அடிப்படை அரசியலின் நலன்களுக்கு எதிராக இனவாரியான தரப்படுத்தல், சிங்கள குடியேற்றங்கள் சரியென்றும், இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எந்தவித பிரச்சனைகளும் இல்லையென்றும் பேசித்திரிகின்றார்கள். இவர்களது கருத்துப்படி பார்த்தால், பிரச்சனைகளற்ற தமிழ்பேசும் தமிழீழ மக்களுக்காக தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயரில் கட்சி நடத்தி தம் கருத்துக்களுடனேயே முரண்பட்டு கொள்கின்றனர்.

இந்திய சுதந்திரத்தின் பின்னர் காந்தியடிகள் காங்கிரஸை கலைத்து விடும்படி கூறினார்கள். அது போல் நாமும் இவர்களிடம் கோருகின்றோம் – ரெலோவைக் கலைத்து விடுங்கள் என்று! உங்கள் கருத்துப்படி பிரச்சினைகளற்ற தமிழ் மக்களுக்கு அது தேவையும் இல்லை!!

முன்னாள் ரெலோ உறுப்பினர்.

(பிற்குறிப்பு – இப்போதுள்ள செல்வம் ரெலோ ரெலோவை மூடிவிடுமாறு நாம் கோரிக்கை விடுத்து நீண்ட நாட்களாகின்றன.)

மறைமுக நோக்கங்களற்ற வன்னி மக்களுக்கான போராட்டங்கள் அவசியம்! த ஜெயபாலன்

Veddaiyadu Vilayaduஇன்று (யூன் 24 2009) மாலை நான்கு மணி முதல் மாலை ஆறு மணிவரை லண்டனில் உள்ள கொமன்வெல்த் அலுவலகத்திற்கு முன்பாக வன்னியில் உள்ள இடம்பெயர்வு முகாம்களை உடனடியாக மூடி மக்களை மீளக் குடியேற்றும்படி கோரி போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இலங்கைக்கு வழங்கப்படும் சர்வதே நிதியுதவிகளுக்கு என்ன நடக்கின்றது என்றும் இப்போராட்டம் கேள்வி எழுப்பி உள்ளது. ரமிழ் சொலிடாரிற்றி என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இப்போராட்டமே புலிகளின் அரசியல் நலன்களுக்கு வெளியே வன்னி மக்களின் நலனில் அக்கறையுடன் நடத்தப்படுகின்ற போராட்டமாகும். ஸ்ரொப் தி ஸ்லோட்டர் ஒப் ரமில்ஸ் என்ற போராட்டத்தை முன்னெடுத்தவர்களே தற்போது முகாமில் உள்ள மக்களை வெளியேற்றும்படி கோரும் இப்போராட்டத்தை ரமிழ் சொலிடாரிற்றி என்பதன் கீழ் முன்னெடுக்கின்றனர். இப்போராட்டங்களில் மட்டுமே தமிழரல்லாத பிற சமூகங்களும் இணைந்து தமிழ் மக்களுக்கான ஆதரவினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வகையான போராட்டம் பிராஸ்ஸில் உள்ள இடதுசாரி அமைப்புகளின் கூட்டான சமூகப் பாதுகாப்பு அமைப்பினால் Comité de Défense Social முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

யூன் 20ல் சர்வதேச அகதிகள் தினம். கடந்த ஆண்டு முடிவு வரை 42 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டு உள்ளதாக யுஎன்எச்சிஆர் குறிப்பிடுகின்றது. இவர்களில் 26 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த நாடுகளினுள்ளேயே தமது வாழ்விடங்களில் இருந்து வேரறுக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 80 வீதமானவர்கள் வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளிலேயே வாழ்கின்றனர். ஏனையவர்கள் அகதிகளாகவும் அரசியல் தஞ்சம் கோரியும் வேறு நாடுகளில் வாழ்கின்றனரர். 2008 முடிவில் 504 800 பேர் இடம்பெயர்க்கப்பட்டு வாழ்ந்தனர். இவர்களில் வன்னி மக்கள் 300 000 பேர்வரை தற்போது வடக்கு கிழக்கில் உள்ள 20 முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் 20 ஆண்டுகளுக்கு முன் 1990 ஒக்ரோபர் 20ல் தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் இருந்தும் ஏனைய வடக்கு மாவட்டங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட் முஸ்லீம் மக்கள் இன்னமும் புத்தளத்திலும் கிழக்கிலும் வாழ்கின்றனர்.

மே 18ல் பிரபாகரனின் மரணத்துடன் முடிவுக்கு வந்த இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டு யுத்தம் மிகப்பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியது. இலங்கை அரசு சர்வதேச யுத்த விதிகளை மீறி தனது சொந்த மக்கள் கொல்லப்படுவார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தும் அந்த மக்கள் செறிந்திருந்த பகுதிகள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதை சர்வதேச உரிமை அமைப்புகள் அனைத்துமே சுட்டிக்காட்டி உள்ளன. சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் ஊடகங்கள் எவற்றையும் அனுமதிக்காமல் சாட்சியமற்ற யுத்தத்தை மனிதப்படுகொலைகளை நிகழ்தியதாக அவை சரியாகவே சுட்டிக்காட்டி உள்ளன.

அதே சமயம் தமிழீழ விடுதலைப் புலிகளும் தங்களைப் பாதுகாப்பதற்காக மக்களை மனிதக் கேடயங்களாக்கி மக்கள் மத்தியில் இருந்தே தாக்குதலை நடத்தி மனித அவலம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்துள்ளனர். இதனை முழுமையாக அறிந்திருந்த பிரிஎப் ரிவைஓ மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்த புலி ஆதரவு அமைப்புக்கள் வன்னி மக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கும்படி கோராமல் வன்னி மக்களும் புலிகளும் ஒன்று, மக்கள் சுயவிருப்பிலேயே யுத்தப் பகுதிக்குள் இருக்கின்றனர் என பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டனர்.

20 000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு பிரிஎப் உம் பொறுப்புடையது என தீபம் தொலைக்காட்சியில் யூன் 19ல் இடம்பெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் ‘தேசம்நெற்’ சார்பிலும் ஏனைய நேயர்கள் சிலரும் கேள்வி எழுப்பிய போது பிரிஎப் சார்பில் கலந்துகொண்ட பத்மநாதன் விடுதலைப் ‘புலிகள் யார்? அவர்களும் எம்மவர்கள்தானே. அவர்களை விட்டுவிட்டு எப்படி மக்களை வெளியேறும்படி கேட்க முடியும்.’ என்று பதிலளித்தார். விடுதலைப் புலிகளுக்கு அந்த மக்களை கேடயங்களாக வைத்திருக்க பிரிஎப் உம் உடந்தையாக இருந்ததை அப்பதில் தெளிவாக்கி உள்ளது. அதே நிகழ்ச்சியில் பிரிஎப் போன்ற புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் வழங்கிய மிகைப்படுத்திய பொய்யான தகவல்களே இவ்வளவு மோசமான அழிவுக்கு இட்டுச்சென்றது அதற்கு பிரிஎப் வன்னி மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் போன்ற கேள்விகளுக்கு பத்மநாதனிடம் பதில் இருக்கவில்லை.

நடந்து முடிந்த மனித உரிமை மீறல்களுக்கும் படுகொலைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் சம பொறுப்புடையவர்கள் என்பது பரவலாக அனைத்து மனிதாபிமான மற்றும் உரிமை அமைப்புகளால் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. அப்படியான நிலையில் சிங்கங் கொடியையும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் படத்தையும் கொண்டுவந்து மனித உரிமை பற்றி பேசுவது எவ்வளவு கேலியானதோ அதே போல் புலிக்கொடியையும் அதன் தலைவர் பிரபாகரனது படத்தையும் கொண்டு வந்து மனித உரிமைப் போராட்டம் செய்வதும் கேலிக்குரியதே. வன்னி மக்களின் இரத்தத்தில் தோய்ந்த இவை எப்போதும் மனிதஉரிமைப் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதாகவே அமையும்.

அந்த வகையில் வன்னி மக்களின் இரத்தக் கறைபடியாத ரமிழ் சொலிடாரிற்ரி போன்ற அமைப்புகளின் போராட்டங்களே மனித உரிமையை வென்றெடுக்க வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்காக குரல் எழுப்ப தகமையுடையன. இப்போராட்டங்களில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவினதாக இல்லாவிட்டாலும் அவர்களுடைய போராட்டத்தில் உள்ள நியாயம் கௌரவிக்கப்படும்.

யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் வன்னி முகாம்களில் உள்ள நிலைமைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை. ஒரு முகாம் எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையின் குறைந்தபட்ச விடயங்கள் கூட இன்னமும் முகாம்களில் பிரச்சினையாகவே உள்ளது. சர்வதேச உதவி அமைப்புகளைக் கூட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அவர்கள் பணியாற்றுவதைத் தடுக்கின்றது. அரசு மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகிய நிலையில் வன்னி முகாம்களை பரமரிப்பதில் நிதித் தட்டுப்பாட்டினைக் கொண்டுள்ளது. ஆனாலும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளையும் பணியில் ஈடுபடுத்த அனுமதிக்கவில்லை. இவை இலங்கையரசு தமிழ் மக்களை இரண்டாம்தரப் பிரஜைகளாகவே நடத்துகின்றது என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

இடம்பெயர்ந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் நல்வாழ்வை மட்டுமே கவனத்திற்கொண்டு அம்மக்களின் உரிமைக்கான போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவது தவிர்க்க முடியாதது. அந்த வகையில் மறைமுக நோக்கங்களற்ற ரமிழ் சொலிடாரிற்றி போன்ற அமைப்புகளின் போராட்டங்கள் இலங்கை அரசு மீது தொடர்ச்சியான அழுத்தங்களை மேற்கொள்வதற்கு அவசியம்.

பிரபாகரனின் இறப்பின் பின் ஓர் உயிர்ப்பு : குலன்

Pirabakaran_in_TimePirabakaran_in_TimePirabakaran_in_TimePirabakaran_in_TimePirabakaran_in_Time

வைகாசி 17ல் பிரபாகரன் இறந்து பின் பிறந்து வைகாசி 19ல் மீண்டும் இறந்தார் என்பது அரசசெய்தி. பிரபாகரன் இறக்கவில்லை என்பது புலம்பெயர் புலிகளின் செய்தி. இன்றைய பிரச்சினை பிரபாகரன் பிறந்ததோ, இறந்ததோ அல்ல. பிரபாகரனால் என்ன நடந்தது என்பதுதான் பிரச்சனை. சரி அவர் உயிருடன் இருந்தால் வரும் போது வரட்டும். பிரபாகரனின் புலிப்பிறப்பும் நடப்பும் இறப்பும் எமக்கும் எம்சமூகத்திற்கும் சிலபாடங்களைச் சொல்லிச் சென்றிருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.

என்றும் இறந்தகாலமே எதிர்காலத்தின் திறவுகோல் என்பதால் இறந்தகாலத்தை திருப்பிப் பார்க்க வேண்டிய அவசியம் எமக்கு உண்டு. ஆனால் பழய பல்லவி பாடிக்கொண்டு இறந்த காலத்திலேயே நின்றுவிடக்கூடாது. எதிர்காலத்தில் இறந்தகாலத்தின் பிழைகளைத் திருத்துவதும், நல்ல அனுபவங்களை எதிர்காலத்துக்கு எடுத்துச்செல்வதுமே மனிதனுடைய வாழ்க்கை மட்டுமல்ல, ஓரினத்தின் வாழ்வையும் மேம்படுத்தும். என்சிற்றறிவுக்கு எட்டியதை எம்மக்களின் போராட்டமும் எதிர்காலமும் பற்றி அக்கறை கொண்டவன் என்ற வகையில் ஒரு கருத்துக்களம் ஒன்றை அமைக்கும் நோக்கிலேயே இக்கட்டுரை வரையப்படுகிறது. புலம்பெயர்ந்த இளையவர்களுக்கு எமது போராட்டவரலாறு முழுமையாகத் தெரியாத காரணத்தினால் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என பிழையான வழியில் போய்விடக் கூடாது என்ற நோக்கத்திலுமே மிக சுருக்கமாக இக்கட்டுரை எழுதப்படுகிறது.

புலிகளின் ஆரம்பம் இன்றைய விளைவும் – முற்குறிப்பு
தமிழ்மக்கள் மேல் ஏற்படுத்தப்பட்ட அரச பயங்கரவாதத்தின் விளைவாக பல இளைஞர்கள் தனிநபர் தீவீரவாதிகளானார்கள். தனித்து நின்றி போராடுவதனால் பயனில்லை என உணர்ந்தவர்கள் குழுக்களானார்கள். காட்டிக்கொடுப்போர் என்று துரோகிப்பட்டம் கட்டி பலதமிழர்களே கொல்லப்பட்டனர். இதில் முக்கியமாக கதைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளான இணுவிலைச் சேர்ந்த இரு சண்முகநாதன்கள், பஸ்தியாம்பிள்ளை முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். பொலிஸ் இலாகாவில் வேலைசெய்பவர்கள் வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்துதானே ஆகவேண்டும். அது அவர்கள் தொழில்தர்மம். அவர்கள் மாறுவதற்கோ சிந்திப்பதற்கோ சந்தர்ப்பம் கொடுக்கப்படாது கொல்லப்பட்டது எவ்வகையில் நியாயானமது? வாங்கும் சம்பளத்துக்கு மேலாக தமிழ் இளைஞர்களைச் சித்திரவதைக்கு உள்ளாக்கிய பஸ்தியாம்பிள்ளை தண்டிக்கப்பட வேண்டியவர்தான். துரோகிகள் என்று கொன்று குவிக்கப்பட்டவர்களுக்கு போதிய சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டனவா என்பது கேள்விதான்.

பின் துரோகிகள் என்பது இனத்துக்குரிய பதமாய் இன்றி தனிப்பட்ட முறையில் தமக்குப் பிடிக்காதவர்கள் எல்லோரும் துரோகிகள் ஆக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். அண்ணனுக்குத் தம்பியும் தம்பிக்கு அண்ணனுமாய் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளே ஒருவரை ஒருவர் கொன்ற சரித்திரம் எம்மிடையே பலவுண்டு என்பது வேதனையே. தமிழின அழிப்பு என்பது எதிரிகளால் மட்டுமல்ல தமிழர்களாலேயும் நடத்தப்படத் தொடங்கியதன் விளைவைத்தான் நாமின்று அனுபவிக்கிறோம். இப்படியான கொலைகளுக்கெதிராக ஒரு குரல்கூட வெளிவரவில்லை. அப்படி எழுந்திருந்தால் கொலை செய்யும் இரும்புத் துப்பாக்கி கூட ஒருகணம் சிந்தித்திருக்கும். தமிழ் படுகொலைகள் தமிழ்மக்களால் ஆதரிக்கப்பட்டனவா? ஆதரிக்காவிட்டால் பிழையெனக்கண்ட போது ஏன் தட்டிக்கேட்கவில்லை? சுடப்பட்ட அத்தனைபேரும் துரோகிகளா? யாரை யாரும் கொல்லலாம் துரோகி என்றும் தூக்கலாம். தமக்கு மட்டும் துரோகி என்ற பெயர் கட்டப்பட்டு விடுமே என்ற பயமா? இதை எல்லா இயக்கங்களும் செய்தன. இதில் முக்கியமானவர்கள் புலிகள் இன்று எம்மினத்துக்கே துரோகியாகிப்போய் நிற்கிறார்கள். எம்மியக்கங்கள் எம்மினத்தில்தானே சுட்டுப்பழகியது.

புலிகள் இன்று தமிழினத்தின் துரோகிகளா? தியாகிகளா?
இக்கேள்விகளுக்கு, கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? யார் எதை எப்படி செய்தார்கள் என்பது முக்கியமில்லை. முடிவு என்ன? எம்மினத்தின் இன்றைநிலை என்ன என்பதே முக்கியமானது. எம்மினத்தில் 60 000 பேருக்கு மேல் கொன்றும், கொல்வதற்கு வழிவகுத்தும் நின்றவர்கள் புலிகளும் சில இயக்கங்களும். இவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

சிங்களவர்கள் தமிழரைக் கலவரத்தில் கொன்றால் இது இனப்படுகொலை. மக்கள் கொடிபிடித்தார்கள் கோசம் போட்டார்கள். ஆனால் ஒரு இயக்கத்தை மற்றைய இயக்கம் கண்மூடித் தனமாக இராணுவத்தை விட மோசமாக கொன்றபோது ஏன் வாழாதிருந்தீர்? இது எப்படித் தியாகமானது?

சுமார் 500 000க்கு மேல் தமிழர்களை வெளிநாடுகளில் அகதியாக்கி, தம்சொந்த மண்ணை விட்டு அவனியெங்கும் அலையவிட்டு, அவர்களிடமே ஏமாற்றிப் பணம்பிடுங்கி வாழ்ந்தவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

மக்களை ஒருபோராடும் சக்தியாகக் கருதாது அவர்களை பதுங்கு குழிகளாகவும், மறைவிடங்களாக மட்டும் பயன்படுத்தி, போராடும் வலுவை இழக்கச்செய்து, பங்காளிகளாக்காது பார்வையாளராக வைத்திருந்தவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

ஈரோசைத்தவிர அனைத்து சிறு இயக்கங்களில் இருந்து பெரிய இயக்கங்களாக வளர்ந்த புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ் வரை கொன்று குவித்தது யார்? அவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

ஒவ்வொரு இயக்கமும் தம்முள் ஒருவரை ஒருவர் கொன்று தீர்த்தனவே அவர்கள் தியாகிகளா? துரோகிகளா? யாருக்கு விரல்விட்டுக் காட்டத் துணிவிருக்கிறது.

ஆயுதம் ஏந்தியவனால் தான் பிரச்சனை என்றால் ஆயுதமே தொட்டுப்பார்க்காத அரசியலில் மட்டும் ஈடுபட்ட அரசியல்வாதியில் இருந்து ஒன்றுமே அறியாத அப்பாவித்தமிழர்கள் வரை கொன்று போட்டவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

எம்மினத்தவனைக் கொல்லத் துப்பாக்கி தூக்கும் போது இவன் என்னினத்தவன் என்று ஒரு செக்கன் கூட சிந்திக்காது நிந்தித்தவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

அடித்துவிட்டு ஒளிப்பதற்கே மக்களைப் பயன்படுத்தியது மட்டுமல்ல, அவர்களை இராணுவம் கொன்று குவித்தபோதும் அருகில் நின்றும் தம்மை மட்டும் பாதுகாத்தவர்களை எப்படித் தியாகிகள் என்பது?

மண்மீட்பு மண்மீட்பு என்றவர்கள் மக்களை, மக்கள் கருத்துக்களை என்றும் காது கொடுத்துக் கேட்டதில்லை. மக்களை இராணுவம் கொன்று குவித்தபோதும் ஒடி ஒளித்தார்கள். மக்களை தம்பாதுகாப்புக்காக கேடயமாய் பாவித்தார்கள்? இவர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள்? மண் மண் என்றார்களே இன்று மண் எங்கே? ஒரு மண்ணாங்கட்டியைக் கூட மீட்க முடிந்ததா? மண் என்பது இருப்புமட்டுமே அன்றி மக்களாகாது. மக்களில்லாத மண்ணை வைத்து என்ன செய்யுமுடியும்? மண்ணின் பெயரைச் சொல்லிச் சொல்லி மக்களை அழிக்கக் காரணமாக இருந்தவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இறுதியாகப் புலிகளால் எமக்கு விளைந்தது என்ன? மக்கள் போராட்டம் என்றாலே பயப்படும் மனநிலைக்கும், தன்னம்பிக்கைச் சிதைவுக்கும், அடிமைத்தனத்தை ஆதரிக்கும் நிலைக்கும், கல்வி செல்வச்சீரழிப்புக்கும் எம்மக்களை உள்ளாக்கி, இறுதியில் விடுதலை என்ற சொல்லை எம் இருதலைமுறைகள் உச்சரிக்கவே பயப்படும் அளவுக்கு செய்துவிட்டு மறைந்த புலிகள் துரோகிகளா? தியாகிகளா?

மற்றவர்களை, தாம் விரும்பாதவர்களை, மற்ற இயக்கங்களை எல்லாம் துரோகிகள் என்று கூறிக்கூறியே தமிழ்மக்களின் உண்மைத் துரோகிகளாய் போனவர்கள் யார்?

இலங்கையரசின் காலத்தில் பேச்சு சுதந்திரமும் எழுத்துச் சுதந்திரமும் இருந்தது. ஆனால் புலிகள் ஆட்சியில் இச்சுதந்திரமும் பறிக்கப்பட்டது. எதிரியைக் கூட நல்லவனாக்கியது புலிகளே. இவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

என்கண்ணில் மக்கள் மட்டுமே பார்வையாளராக இருந்து தற்கொலை செய்து கொண்ட தியாகிகள்.

உயிருடன் மனிதனை ரயர்போட்டுக் கொழுத்த எதிரிக்குப் பழக்கிவிட்டது யார்? வீட்டில் வைத்துப்போடுதல், கவர் பண்ணும்போது போடுதல் போன்றவற்றில் ஈடுபட்டது யார்?

உலகத்தில் எத்தனையோ போராட்டங்கள் நடந்தன, வென்றன. எந்த இயக்கமும் தற்கொலைத் தாலிகட்டிச் சென்றதில்லை. ஆனால் மக்களின் போரட்ட உந்துசக்தியாக இருக்கும் இளைஞர்களை தற்கொலைக்கு தாலிகட்டி வழியனுப்பும் ஒரு கோழைத்தனமான விடுதலை அமைப்பு மன்னிக்கவும் மாவியா அமைப்பு புலிகளே. ஒவ்வொரு போராளியின் மனதிலும் எதிரியைக் கொல்லுவேன் வெல்லுவேன் எனும் மனத்திடம் தளர்ந்து அடிப்பேனா அன்றி சயனைட்டைக் கடிப்பேனா எனும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். புலிகள் தம்மைமட்டும் பாதுகாத்துக் கொள்வதற்காக தற்கொலைக் கலாச்சாரத்தை வளர்த்து ஒரு இனத்தையே தற்கொலை செய்யத் தூண்டியிருக்கிறார்கள்

இனியாவது சாப்பிடமட்டுமே வாய்திறப்பதை விட்டு விட்டு ஈழத்தமிழ் மக்களே! உண்மைக்காகவும் உரிமைக்காகவும் வாய் திறப்பீர்களா? எப்போ உங்கள் மௌனம் கலையும். சரியான மக்கள் நலன்விரும்பும் அமைப்புகளை உண்மை விடுதலை விரும்பிகளை இனங்காணுவீர்களா? உங்களைக் காக்கிறோம் என்று அரசில் இருந்து புலிகள் வரை இன்னும் எத்தனை எத்தனையோ அமைப்புகள் வரப்போகின்றன. உங்கள் அனுவங்களை வைத்து அடையாளம் காண்பீர்களா? அல்லது கெடுகிறேன் பிடிபந்தயம் என்று முன்புபோல் மீண்டும் மீண்டும் வதைபடப் போகிறீர்களா என்பதையும் நீங்களே தீர்மானியுங்கள்.

புலி இயக்கம் பிரபாகரனால் மட்டுமா ஆரப்பிக்கப்பட்டது?
தனிநபராக பிரபாகரன் பேருந்து ஒன்றை தீயிட்டுவிட்டு மாணவர்பேரவையைச் சேர்ந்த சத்தியசீலன் இடம் உரும்பிராய்க்கு வந்து தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார் என்றும் யூரியூபில் கூறியிருந்தார். அக்காலகட்டங்களில் சிவகுமாரனில் இருந்து தனிநபர் தீவிரவாதிகளே உருவாகியிருந்தார்கள். இருப்பினும் சிலஅமைப்புக்கள் தம்மாலியன்ற போராட்டங்களைச் செய்து கொண்டிருந்தனர். அவற்றில் மாணவர்பேரவை, இளைஞர் பேரவை போன்றவற்றைக் குறிப்பிடலாம். ரெலோ ஈரோஸ், ஈபிஆர்எல்எவ் என்பனவும் மிகப்பழமையான இயக்கங்கள். இவைபற்றிய வரலாறு எனக்குத் தெரியாது என்பதால் அதை விட்டுவிடுகிறேன்.

நீர்வேலி வங்கிக் கொள்ளையிலேதான் கேபி விமலராசா எனும் ரியூசன் வாத்தியாரின் உந்துறுளியை பாவித்தார் என்ற காரணத்தால் விமலராசா சிறைபோனார். அவர் மாதகலிலுள்ள கடம்பவாதத்தை முகவரியாகக் கொண்டவர். இதனால் இவர் நோர்வேக்குப் போனபோது புலிகளின் பொறுப்பாளராக ஆக்கப்பட்டார். அப்போதும் இவர்தொடர்பில் கேபி வந்துபோவார்.

மாணவர்பேரவையைச் சேர்ந்தவர்கள், இளைஞர்பேரவை இரண்டாகி இளைஞர்பேரவை விடுதலை இயக்கம் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு புறப்பட்டவர்கள், தனிநபர் தீவீரவாதிகள் எனப்பலரும் ஒரு அமைப்பாகி மத்திய செயற்குழுவை அமைத்தார்கள். இளைஞர்பேரவையில் இருந்த உமாமகேஸ்வரன் தலைவராகவும் பிரபாகரன் இராணுவ ஆயுதப் பொறுப்புக்களையும் ஏற்றனர்.

புதிய புலி என்றார்கள், உட்பூசல்களில் பிரிந்தார்கள். பிரிந்தவர்கள் புளொட் என்றும் புதியபாதையுடன் புறப்பட்டனர். இவை ஆரம்பகாலமும், ஒருபக்கச்சார்பான தகவல் மட்டும்தான். இக்காலகட்டங்களில் ரெலோ ஈரோஸ் தம்பரிமாணங்களையும் வளர்த்துக்கொண்டது. உட்பூசல்கள் சகோதரப் படுகொலைகளாகப் பரிணாமம் பெற்றது. முக்கிய நோக்கம் திசைமாறியது. இதை ஏன் இங்கே எழுதுகிறேன் என்றால் தமிழ்தேசிய விடுதலையை ஆரம்பித்தது பிரபாகரன் என்றும் அதன் ஏகபோக உரிமை அவருக்கே உண்டு என்றும் நம்புபவர்களுக்காகவே. அதுமட்டுமல்ல புலியியக்கம் தனியே பிரபாகரனால் மட்டும் உருவாக்கப்பட்டது என்பது தவறானதே.

யார் கெரில்லா, மாவியா?
ஒரு கெரில்லாவுக்கும் கொள்ளைகாரர், மாவியாக்களுக்கும் பலவித்தியாசம் கிடையாது. இவர்கள் அனைவரினதும் இயங்குதன்மை, செயற்பாட்டுத்திறன், நகர்வுகள், நகர்த்தல்கள் அனைத்தும் இரவுகளிலும், கூடுதலாக இரகசியமாகவும், உண்மை முகங்கள் மறைக்கப்பட்டும் இருக்கும். குறைந்த பொருட்செலவில் பெருவெற்றிகளையும், யாரும் எதிர்பாராவண்ணம் சடுதியான தாக்குதல்களையும் செய்வார்கள். அரசியலில் ஆர்வமும் பின்புல உறவுகளும் இருக்கும். ஆனால் வித்தியாசம் ஒன்றே ஒன்று மட்டும்தான் ”நோக்கம்” அதாவது மாவியாவானவன் என்றும் தன்சுயநலத்தில் மிக மிக கவனமாகவும், அக்கறையாகவும் இருப்பான். ஆனால் கொறில்லாவானவன் முக்கியமாக மக்களின் நலத்திலும், மக்களை நேசிப்பவனாகவும், மக்களின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ளவனாகவும் இருப்பான். இப்போ புலிகள் கெரில்லாக்களா? மாவியாக்களா? கெரில்லா தாக்குதல்கள் செய்பவர்கள் அனைவரும் கெரில்லாக்களாகிவிட முடியாது. சந்தணக் கடத்தல் வீரப்பன் பல கெரில்லாத் தாக்குதல்களைச் செய்தவன், இன்னுமேன் மக்களால் நேசிக்கப்பட்டவனும் கூட. ஆனால் இவன் ஒரு விடுதலைப் போராளியாகவோ கெரில்லவாகவோ இருக்க இயலாது. இங்கே புலிகள் மாவியாவா? கெரில்லாவா என்பதை வாசகர்கள் கையில் விட்டு விடுகிறேன்.

இனங்காணல்
இனங்காணல் என்பது ஒவ்வொரு மிருகங்களுடனும் ஏன் எல்லா ஜீவராசிகளுடனும் கூடிப்பிறந்த ஒன்றாகும். இது ஏன் தமிழர்களுக்கு மட்டும் இல்லாது போனது? நாலு ஆமியை சுட்டுவிட்டு 40 ஆமி என்று கொண்டாடும் போது மக்கள் புலிகளை அடையாளம் கண்டிருக்க வேண்டும் இது வெறும் வானவேடிக்கை என்பதை உணர்ந்திருக்க வேண்டும். சினிமா பார்த்து கீரோய்ஸ்சத்தில் (நாயகத்துவம்) வளர்ந்தவர்கள் நாயகமார்க்கத்தையே பின்பற்றுவர். மக்களும் கைதட்டி வரவேற்றனர். ஆமியைக் கொல்வதுதான் தமிழ்மக்களின் விடுதலையா? சரி இராணுவத்தை ஈழமண்ணில் இருந்து கலைத்து விட்டதும் எமக்கான விடுதலை கிடைத்துவிடுமா? அக்கேள்விகளும் இதற்கான வேள்விகளும் ஏன் நடக்கவில்லை?

ஒரு கெரில்லாவானவன் முக்கியமாக சகோதரப் படுகொலையைச் செய்யக்கூடாது. காரணம் அச்சகோதரனும் அவன் நேசிக்கும் மக்களின் ஒருவனே. இயலாக் கட்டத்திலோ பல அறிவுறுத்தல்கள் விளக்கங்களின் பின் சில கொலைகள் செய்யப்பட்டிருந்தால் கூட புலிகளை மன்னித்திருக்கலாம். எல்லோரும் தெரிந்து பிழைவிடுவதில்லை. விளக்கவின்மையும் தெளிவும் இல்லாமையே காரணம். சகோதரப் படுகொலைகள் நடைபெற ஆரம்பித்தபோது மக்களாவது தட்டிக்கேட்டிருந்தால் சிலவேளை புலிகள் திருந்தியிருக்கலாம். துப்பாக்கியால் மக்களிள் வாய்கள் பொத்தப்படும்போதே மக்கள் உணர்ந்திருக்க வேண்டும் இது சரியான விடுதலை அமைப்பா இல்லையா என்று. விடுதலை என்ற பெயரில் வளர்ந்த வளர்த்தெடுக்கப்பட்ட மாவியாக் கும்பல்தான் என்பதை இன்றைய நிலை உணர்த்தியுள்ளது. இன்னும் இப்படி பல எம்மத்தியில் உருவாகுவதற்குத் தயாராக உள்ளன. இவற்றை இனங்காண்பதற்கே இக்கட்டுரை முன்னுரிமை கொடுக்கிறது.

மாவீரர் தினத்தையோ பொங்குதமிழையோ ஒரு வெகுசனபோராட்ட நிகழ்வாகக் கொள்ள இயலாது. இது வெறும் வேடிக்கை மட்டுமே அன்றி வேறில்லை. மக்களை ஒரு போராட்ட சக்தியாக்கி அவர்களின் முன்னெடுப்புகளுக்கு பக்கபலமாக ஆயுதங்கள் இருந்திருந்தால் மக்கள் தமக்குரிய விடுதலையை வென்றெடுத்திருப்பார்கள். புலித்தலைமை முடிந்துவிட்டது புலிகள் அழிந்து விட்டார்கள் என்று நிம்மதியாக இருந்து விட இயலாது. தமிழர்களுக்கென்று ஒரு அரசியல் சுதந்திரம் உருவாகும் வரை போராட்டம் தொடரும். உயிருள்ள ஜீவராசிகள் அனைத்தும் போராடவே பிறந்தன. ஒரு சின்னங்சிறிய வயிற்றுக்காக எறும்பு போராடுகிறது. நாம்…?

புத்திஜீவிகள் அன்று கொல்லப்படும் போது கைகட்டி மௌனியாய் சமூகம் இருந்தது. அன்று கூட ஒரு கண்டன ஊர்வலத்தையோ புலிகளுக்கெதிரான குரல்களையோ எழுப்பியிருந்தால் இன்று குறைந்தபட்சம் தமிழர்களுக்கு இந்த நிலைவந்திருக்காது. மக்களுக்காகப் போராடுகிறேன் என்று கூறும் அமைப்பு எப்போது மக்களின் குரல்களுக்கு மதிப்பளித்தது? அப்போது கூட மக்கள் ஏன் புலிகளை இனங்காணவில்லை. தெரிந்தும் தெரியாமல் இருந்தீர்களா? ஆகவே உங்களுக்கு இன்று கிடைத்த தண்டனை சரியானதா இல்லையா?

பிரோமதாசாவின் வேண்டுகோளுக்காவே அமிர்தலிங்கம் கொல்லப்பட்டார் என்று அறியப்படுகிறது. சரி ஆயுதம் தாங்காது அரசியலை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கிய திறமைசாலியான அமிர் கொல்லப்படும் போது கூட மக்களே வாய் மூடிக்கொண்டுதானே இருந்தீர்கள். அன்று துணைத்தளபதி அமிர்தலிங்கம் என்று வாயாரக்கத்திய உங்கள் வாய்கள் ஏன் அடைத்துப்போயின?

எதிரியென நீங்கள் கருதும் சிங்கள அரசுடன் புலிகள் சேர்ந்து பலசெயற்பாடுகளைச் செய்த போது ஏன் மௌனமாக இருந்தீர்கள்? அப்போது தெரியவில்லையா புலிகளின் இயக்குதன்மை மாவியாக்கள் போல் அமைகிறது என்று? ஏன் இனங்காணவில்லை? எடுத்துக் கூறவில்லை. இன்று உள்ள கூத்தணிகளில் ஒருவரை விரல்விட்டுச் சுட்டிக்காட்டுங்கள் அன்றைய அமிருக்கு நிகராக இன்று வெளிநாட்டிலோ உள்நாட்டிலோ பேச்சுவார்த்தையையோ சட்டநுணுக்கங்களையோ அறிந்த அன்றி தமிழர்களின் நிலையை சரியான முறையில் எடுத்துரைக்கக் கூட ஒருமனிதரை? எல்லாவற்றுக்கும் காரணம் யாருமல்ல மக்களே நீங்கள் தான்..

மக்கள் மேல் குற்றச்சாட்டு
அப்பன் உழைத்துக் கொண்டுவர முழுக்குடும்பமும் சாப்பிட்டு வயிறாறும். அப்பன் இறந்தால் பெற்றோரின் பழிகளை சேர்த்து குடும்பவண்டியை இழுக்க மூத்தமகன் என்ற மாடு தயாராகி நிற்கும். குடும்பப் பெண்கள் பெண்கள் என்று யாரோ முன்பின்னறியா ஒருவனில் தங்கிவாழ பிறந்ததில் இருந்து தமிழ்பெண்கள் தயாராக்கப்படுகிறார்கள். இப்படியான ஒரு சமூகக் கட்டுமானத்தில் இருக்கும் மனிதர்களிடம் சுயசிந்தனையை எதிர்பார்ப்பது சரியா? இச்சமூகம் போராடும் குணாம்சங்கள் கொண்டதல்ல என்பதை புலிகள் அறிந்திருந்தார்கள்.

கலாச்சாரம் குடும்பம் என்று மற்றவர்களின் மூளையிலே சிந்திப்பார்கள். திருவள்ளுவர் சொன்னார், கம்பர் சொன்னார், லெனின் சொன்னார், மாக்ஸ், சே, மாவோ, தொல்காப்பியர், யேசு, புத்தன், கீதை என்று மற்றவர்களின் மூளையில் எம்மினம் சிந்தித்தது, வாழ்ந்தது வாழ்கிறது. எம்மக்கள் என்று புரட்சிகரமாக புதிதாக சிந்திக்கிறார்கள் என்ற நிலைவருகிறதோ அன்றுதான் எம்மக்கள் போராட்டத்துக்குத் தயாரானவர்கள் என்று கொள்ளலாம். எம்மக்கள் போராடத் தயாராக இருந்திருந்தால் புலிகள் பிள்ளை பிடிகாரர்களைப்போல் ஆள்பிடிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எமது கலாச்சாரமும் சரி, அரசியல் போராட்ட சக்திகளும் சரி மக்களை சுயமாகச் சிந்திக்கவோ போராடவோ அனுமதிக்கவில்லை என்பதே உண்மை.

இன்றும் தலைவா உன்னைத் தலையென்று நம்பினோமே விட்டுவிட்டுப் போட்டாயே என்று ஒப்புச்சொல்லி மாரடிக்கும் நிலையில்தான் மக்கள் இன்றும் உள்ளார்கள். இவர்கள் போராட, தன்உரிமைகளை வென்றெடுக்க தயாரானவர்கள் என்று சொல்கிறீர்களா? பிரபாகரன் இறந்துவிட்டார் என்றதும் ஒரு சமூகமே ஆடிப்போய் ஏன் நின்றது? அடுத்து என்ன செய்வது என்று ஏன் முழிக்கிறது. இதை மறைக்க மீட்பர் பிரபாகரன் இருக்கிறார் வருவார் என்று நம்புகிறது. இது ஏன்? இது தன்னம்பிக்கை இல்லாத ஒரு சமூகத்தையே புலிகளும் மக்களும் அரசியலும் கட்டிவைத்திருக்கிறார்கள் என்பது தான் நிஜம்.

புரட்சி என்பது புரளும் துப்பாக்கியான றிவோல்வர் போன்றவற்றில் இருந்து பிறப்பதல்ல. புரட்சியும் போராட்டகுணமும் மூளையில் இருந்தே பிறக்கிறது. துப்பாக்கி தூக்கும் ஒவ்வொரு போராளியின் மனத்திலும் நான் எதற்காகப் போராடுகிறறேன் என்ற தெழிவு இருக்கவேண்டும். புலிப்போராளிகளினது பல வாக்குமூலங்களை ஊடகங்களுடாகக் கேட்டும் போது பலதடமை வேதனைப்பட்டேன். ஆமிக்காரன் அடிக்கிறான் அனைப்கலைக்க வேண்டும். அண்ணை யோசிக்காதையுங்கோ நாங்கள் இருக்கிறம். சின்னப்புலிகள் சொன்னவார்த்தை இது. இவர்கள் நாட்டுக்காகப் போராடினார்களா? அண்ணைக்காகப் போராடினார்களா? இது ஒரு விடுதலை இயக்கமா? மாவியா கும்பலா?

போராட்டம் என்பது சமூக, பொருளாதார, சூழல் நிலைகளுக்கமைய மாறுபடும். ஒவ்வொரு கெறில்லாப் போராட்ம் என்றும் சூழல் காலநிலைகளுக்கேற்ப மாறுபட்டே ஆகும். சூழலுக்கு ஏற்ப போராடுபவன்தானே கெறில்லா? புலிகளும் புலம்பெயர்ந்த தமிழரிடம் போதிய பணம் வசதியுள்ளது என்ற சூழலை அறிந்து கொண்டுதான் போராடினார்களோ என்னவே? புலிகள் மக்களை தம்பதுங்கு குழிகளாகப் பாவித்தார்களே தவிர போராட்டம் சக்தியாக என்றும் பார்க்கவில்லை என்பதே உண்மை. அப்படி அவர்கள் மக்களைப் போராடுடம் சக்தியாகப் பார்த்திருந்தால் மக்களைப் போராடவிட்டுவிட்டு ஊக்கசக்தியாகவும் அவர்களைப் பாதுகாக்கும் சக்தியாகவுமே இருந்திருப்பார்கள். செய்தார்களா?

ஏன் இல்லை
ஒரு இறைமையுள்ள நாட்டில் இருந்த ஒருபகுதி பிரிந்துபோவதற்கு பலவரையறைகள் உண்டு. அதற்கு வெளிநாடுகளின் அனுசரணை என்பது மிகமுக்கியமானது. அன்ரன் பாலசிங்கத்துக்கு கூட இது தெரியவில்லை என்றால் பாவம் பிரபாகரனுக்கு இதுவற்றித் தெரிவதற்கு சந்தர்ப்பமே கிடைக்காது. தெருச்சண்டித்தனம் ஊர்சண்டித்தனம் போல் ஒருநாட்டைப் பிரித்துவிட முடியாது. உலகம் முழுவதும் தெருத்தெருவாய் கத்தினாலும் ஒர் இறைமையுள்ள நாட்டினுள் மற்றைய நாடுகள் தான்தோன்றித்தனமாக தமிழர்கள் கத்துகிறார்கள் என்பதற்காக ஊடுருவ முடியாது. அரசியலே தெரியாத புலிகளுக்கும் புலம்பெயர் புலிகளுக்கும் இது எப்படித்தெரியும்?

புலம்பெயர்நாட்டுத் தமிழ்பெற்றோரே
இனம் இனவுணர்வு, மொழி மொழியுணர்வு என்பது முக்கியமானதும் எம்முடையானானதுமாகும். ஆனால் உங்கள் பிள்ளைகள் சரியான முறையில் சரியான வழியில்தான் அரசியலையும் போராட்டத்தையும் புரிந்திருக்கிறார்களா என்பது மிக மிக முக்கியமானது.

இவ்வளவுகாலமும் இலங்கைக்குள் ஈழம் என்று விழுந்த கொலைகள் இனி……..? என் சிற்றறிவுக்குத் தெரிந்ததைச் சொல்லவேண்டியது எனது கடன். முடிவெடுப்பதும் வழிநடத்துவதும் உங்கள் திறன்.

தவிபு தலைவர் பிரபாகரன் உண்மையிலேயே வீர மரணம் எய்தி விட்டார். : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை

Pirabakaran V LTTEதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உண்மையிலேயே வீரமரணம் அடைந்துவிட்டதாக அவ்வமைப்பின் வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள அறிக்கையில் தலைவர் வே பிரபாகரன் சரணடையவோ கைது செய்யப்படவோ இல்லை என்றும் சிறிலங்காப் படையினருடனான மோதலிலே வீரச்சாவு அடைந்ததாகவும் வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் அறிவழகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் குமரன் பத்மநாதன் தலைவர் வே பிரபாகரன் வீரமரணமடைந்தாக வெளியிட்ட அறிக்கைக்கு மாறாக இவர் மே 22ல் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும் நலமாகவும் இருக்கிறார்’ என்று தெரிவித்திருந்தார். ஆனால் அதற்காக வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் தற்போது மன்னிப்புக் கேட்டு உள்ளார்.

பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ள வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் க அறிவழகன் அவருடைய மரணம் என்று நிகழ்ந்தது என்பதை குறிப்பிட்டு இருக்கவில்லை. மே 18 காலையே இவர் மரணமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மரணச் செய்தியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் கெ பத்மநாதன் ஆரம்பத்தில் மறுத்தாலும் அதனை பின்னர் உறுதிப்படுத்தி இருந்தார்.

இதுதொடர்பாக கெ பத்மநாதன் தேசம்நெற்ற்குத் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவில் இருந்த சிலர் தலைவரின் மரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகக் கூறினார். யூன் 14ல் தேசம்நெற்றுக்குத் அவர் மேலும் தெரிவிக்கையில் அவர்கள் ஒவ்வொரு திகதிகளைக் கூறி இழுத்தடித்ததாகவும் ஆனால் தாயகத்தில் உள்ள போராளிகளும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து உடனடியாக தலைவரின் வீர மரணச் செய்தியை அறிவித்தாகத் தெரிவித்தார்.

இச்செய்தியை ஜிரிவி வெளியிட்டதற்காக அதன் நிர்வாகிகளுக்கு பல கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அச்செய்தி நீக்கப்பட்டது. அச்செய்தியை வெளியிட்ட போது கெ பத்மநாதன் ஒருவாரத்தை தேசிய நினைவஞ்சலியாகக் கடைப்பிடிக்கும்படியும் கேட்டிருந்தார். அவ்வஞ்சலியும் நடைபெற்றிருக்கவில்லை.

30 வருட போராட்டத்தை முன்னெடுத்த உலகின் பலபாகங்களிலும் வியாபித்திருந்த ஒரு செல்வந்த இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்துவதற்குள்ளேயே இவ்வியக்கத்தின் உட்பூசல்களும் அதிகாரப் போட்டிகளும் வெளிப்பட்டு உள்ளது. வெளியகப் புலனாய்வுத்துறையும் சர்வதேச இணைப்பாளரும் புலிகளின் தலைவர் வீரமரணம் அடைந்ததை உறுதிப்படுத்திய போதிலும் சர்வதேசப் பிரிவிற்குப் பொறுப்பாக இருக்கும் நெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் பிரிவு இது பற்றி இன்னமும் மெளனமாகவே உள்ளனர். இவர்களிடமே சர்வதேச ரீதியில் திரட்டப்பட்ட நிதியும் ஊடகங்களும் கைவசமுள்ளதாகத் தெரியவருகிறது.

Pirabhakaran_Jothidamஇந்த சர்வதேசப் பிரிவு பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்தும் போது அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள அசையும் அசையாச் சொத்துக்கள் மற்றும் நிதி பற்றிய சர்ச்சைகள் ஏற்படும் என்பதால் அவர்கள் பிரபா இன்னமும் உயிருடன் உள்ளார் என இந்திய அரசியல்வாதிகளுடாக தெரிவித்து வருகின்றனர். இந்த தமிழகத் தலைவர்களே பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்திய, இறுதிவரை பிரபாவுடன் தொடர்பில் இருந்த கெ பத்மநாதனை தேசியத் துரோகி எனப் பட்டம் சூட்டினர். தற்போது பிரபாகரனின் சாதகப்படி அவர் 80 வயதுவரை நலமுடன் இருப்பார் என்றும் செய்தி வெளியிட்டுக் கொண்டு உள்ளனர். 2010 பிரபாவிற்குப் பொற்காலம் என்றும் இந்த ஜோதிடச் செய்தி தெரிவிக்கிறது.

பல்வேறு அரசியல் முரண்பாடுகள் விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வழிநடத்தி அதில் தனக்கிருந்த நம்பிக்கையில் தன்னையும் தனது மனைவி பிள்ளைகளையும் முழுவதுமாக இழந்த ஒரு போராளிக் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச கெளரவத்தைக்கூட தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ய மறுத்துள்ளனர்.

இன்னமும் பிரபாவின் மரணம் ஒரு கேலிக் கூத்தாக ஆக்கபட்டதற்குரிய பெரும்பான்மைப் பொறுப்பு நெடியவனின் தலைமையில் உள்ள சர்வதேச பிரிவையே சார்ந்துள்ளதாக முன்னாள் போராளிகள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். நெடியவன் சர்வதேச விவகாரங்களைக் கவனிப்பதற்காக காலம்சென்ற புலிகளின் தலைவர் வே பிரபாகரனால் அனுப்பி வைக்கபட்டதாகவும் அப்போராளிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பிரபாவின் இறுதி நாட்களில் அவருடன் ‘கெ பி அண்ணரே’ தொடர்பில் இருந்ததாகவும் அவருடைய தகவல்களே சரியானது என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அப்போராளிகள் தேசம்நெற்றுக்குத் தெரிவிக்கின்றனர்.

தற்போது இவ்வறிக்கையை வெளியிட்டுள்ள வெளியக புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் லண்டனில் வாழ்வதாக தேசம்நெற்றுக்கு தெரியவருகிறது.

._._._._._.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கீழே:

வெளியகப் பணிப் பிரிவு
புலனாய்வுத்துறை
18. 06. 2009

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம்

எம் பாசத்துக்குரிய தமிழ் பேசும் மக்களே!

எமது இயக்கத்தின் தலைவரும் பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது.

தேசியத் தலைவர் அவர்களைப் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேரச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த – தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள – எமது புலனாய்வுப் போராளிகள் வேறு துறைப் போராளிகள் மற்றும் சிறிலங்கா படைத் துறையின் உயர் பீடத்துடன் தொடர்புடைய எமது தகவலாளர்கள் ஆகியோர் தலைவர் அவர்களது வீரச்சாவினை இப்போது உறுதிப்படுத்துகின்றனர்.

கடந்த மே மாதத்தின் நடுப் பகுதியில் – 15 (வெள்ளிகிழமை) முதல் 19 ஆம் திகதி (செவ்வாய்கிழமை) வரையான காலப் பகுதியில் வன்னி – முள்ளிவாய்க்கால் களப் பிரதேசத்திலிருந்து முரண்பட்ட பல தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன. சீரான தகவல் பரிமாற்ற வசதிகள் இருக்காமையாலும் அங்கிருந்து வெளியேறிய எமது புலனாய்வுப் பேராளிகள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று சேர முடியாமல் இருந்தமையாலும் அவர்களால் அனுப்பப்பட்ட பல தகவல்கள் சிதைவடைந்த நிலையிலேயே வெளியில் கிடைத்திருந்தன. அதனால் – அப்போது கிடைத்த தகவல்களைச் சீர்ப்படுத்தி எடுத்ததன் அடிப்படையில் – எமது அன்புக்குரிய தலைவர் அவர்கள் நலமாக இருப்பதாகக் கருதியே அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட நாம் மே மாதம் 22 ஆம் நாள் தீர்மானித்தோம்.

இதே வேளை – தலைவர் அவர்களது பாதுகாப்பான இருப்பு மற்றும் நகர்வுகள் தொடர்பாக – இறுதிவரை அவருடன் கூட இருந்த தளபதிகளால் பல தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன. இவற்றின் அடிப்படையிலேயே – எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுத் துறையின் இயக்குனர் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்களும் – ஆரம்பத்தில் – இரு வேறு முரண்பட்ட செய்திகளைத் தரும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தார் என்பதையும் எம்மால் உணர முடிகின்றது.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அந்த மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை 22 ஆம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதே வேளையில் அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது.

எமது தேசியத் தலைவரின் வீரச்சாவு தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும் சரண் அடைந்ததாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் – எந்த செய்தியினையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வுத்துறையினர் ஆகிய எமக்கு உண்டு. அதனடிப்படையில் – தேசியத் தலைவர் அவர்கள் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்பதையும் அவர் சிறிலங்கா படையினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார் என்பதையும் நாம் மிகத் திடமாக உறுதிப்படுத்துகின்றோம்.

இப்போது தோன்றியுள்ள மிக உச்ச நெருக்கடியான கால கட்டத்தில் – எம் பெருந் தலைவர் அவர்கள் உருவாக்கி வளர்த்தெடுத்து நமது கைகளில் தந்து விட்டுச் சென்றுள்ள எமது விடுதலைப் போராட்டத்தை – அதே உறுதிப்பாட்டுடனும் அதே கட்டுக்கோப்புடனும் அதே ஒருங்கிணைவுடனும் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் எமது இறுதி இலட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக – தற்போது உருவாக்கப்படவுள்ள ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எம் முன்னால் உள்ள கடமையாகும்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும் அவருடன் வீரச்சாவடைந்த எமது இயக்கத்தின் போராளிகள் தளபதிகளுக்கும் வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன் இந்தப் போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை தனது அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

கதிர்காமத்தம்பி அறிவழகன்
பொறுப்பாளர்
வெளியகப் பணிப் பிரிவு
புலனாய்வுத்துறை

‘எம் மக்களை மீட்க ‘BTF ன்’ மாபெரும் (முதலைக் கண்ணீர்) போராட்டம்’ : ரி சோதிலிங்கம்

Protest_Londonமுகாம்களில் உள்ள மக்களுக்காக செய்யும் போரட்டம் அவர்களின் அவல நிலையையும் அவர்கள் திரும்பிப் போய் தமது சொந்த இடங்களில் வாழும்நிலையை உருவாக்கும் போராட்டமாக இருக்க வேண்டும். அந்த வகையில் யூன் 20ல் BTF -British Tamil Forum ஒழுங்கு செய்துள்ள பேரணி முகாம்களில் அவஸ்த்தைப்படும் மக்கள் மீண்டும் தமது வாழ்விடங்களுக்கு மீள குடியேற்ற உதவும் என்பதை நம்புவது மிகவும் கடினமாக உள்ளது.

2. கடந்த காலங்களில் பிரிஎப் (பிரித்தானிய தமிழர் பேரவை) போன்ற புலிகளின் ஆதவாளர்களால் நடாத்தப்பட்ட போராட்டங்கள் புலிகளின் அழிவுக்கும் புலிகளின் தலைவரின் படுகொலைக்கும் துணை போனது மட்டுமல்ல பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் உயிரிழப்பிற்கும் காரணமானது.

3. ‘புலிகளுக்கும் தமிழீழம் வேணும் எமக்கும் தமிழீழம் வேணும்’ என்பதால் நாம் அவர்கள் இயக்கத்தையும் அந்தக் கொடியையும் ஏற்றுக் கொண்டோம் என்று இயங்கி தமிழீழக் கோசம், பிரபாகரன் படம், புலிக்கொடியடன் நடாத்திய பேரணிகள் போல் இந்த முறையும்  பிரிஎப் புலிக்கொடி தமிழ்க் கொடி விற்று நிதி சேகரிப்பில் இறங்கினால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

4. புலிகளின் ஆதரவாளர்களால் இயக்குனர்களால் கடந்த காலங்களில் புலிகளின் பெயரால் மக்களுக்காக மக்களிடமிருந்து சேர்த்த  நிதி மோசடிகளும் தாம் போராட்டத்திற்கு உதவி செய்கிறோம் என்று போராட்த்திற்கும் துரோகம் இழைத்துள்ளதை புலிகளின் ஆதரவாளர்களால் பகிரங்கமாகவே பேசப்படும் விடயமாக உள்ளது.

5. இன்றுவரையில் உயிரிழந்த புலிப் போராளிகளுக்கும் அதன் தலைவருக்கும் அஞ்சலிக் கூட்டம் செய்யாமலும் இன்றும் புலிகள் மீண்டும் எழுவர்; 5வது தமிழீழப்போர் தொடுப்பர்; புலிக்கொடியே தேசியக் கொடி என்றும் கோசம் இட்டு முகாம்களில் உள்ள மக்களின் வாழ்வில் நிலைமைகளை மோசமாக்கும் நிலைக்குத் தள்ளிவிடுவார்கள் என்ற அச்சம் தவிர்க்க முடியாதது.

6. நாட்டில் உள்ள உண்மைச்சுற்றாடல் நிகழ்வை கவனத்தில் எடுக்காமல் புலம்பெயர் சூழலில் கனவு உலகில் தவறான முடிவுகள் எடுக்ப்பட்டு தவறாக வழிநடாத்தப்பட்டது. இதன் முடிவில் புலிகளின் தலைமையும் புலிப்போராளிகளும் அழிக்கப்பட்டனர். இந்த போராட்டங்களின் முடிவுகளின் விமர்சனங்கள் இல்லாமல் மீண்டும் ஒரு போரட்டம் நடத்துவதும் அதுவம் இவ்வளவு அவசர அவசரமாக இது நடாத்தப்படுவதும் இது புலிகளுக்குள்ளேயே நடைபெறும் குழுவாத்தின் பிரதிபலிப்புக்களா என்ற பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

7. இன்று இந்த மக்கள் முகாம்களில்  அவலநிலைக்குத் தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருப்பது கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு வவுனியா பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை புலிகளின் தலைவரையும் ஆயுதங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மனிதக் கேடயங்களாக பயன்படுத்த இழுத்துச்சென்றதே என்பதை பிரிஎப் மறந்து விடக்கூடாது. இப்படி இழுத்துச்சென்ற மக்களை புதைகுழிகளுக்குள்ளும் செல் மழைக்குள்ளும் பசி பட்டினியுடன் மரணத்தை எதிர்நோக்க வைத்ததும் புலம்பெயர் புலிகளின் தவறான வழிகாட்டலே என்பதை பிரிஎப் மறந்துவிடக்கூடாது. இன்றுள்ள வன்னி முகாம்களைவிட மிகவும் மோசமான நிலையிலேயே இந்த மக்களை புலிகளின் தலைமை வைத்திருந்ததும் இந்த மக்களை புலம் பெயர் புலிகளின் தவறான புத்திமதியில் பலிக்கடாக்களாக்கும் திட்டத்தின் தோல்வியையும் பிரிஎப் மறந்துவிடக் கூடாது.

8. இன்றுள்ள முகாம் வாழ்க்கையை புலிகளே புதுமாத்தளன் – முள்ளி வாய்க்கால் பகுதியில் ஆரம்பித்து வைத்து மக்களை மரணம் நோக்கி நடாத்தினர் என்பதையும் இந்த சம்பவங்களை பிரிஎப் புலிகளிடம் தட்டிக்கேட்கவில்லை என்பதையும் இங்கே கூறிக்கொள்வது தவிர்க்க முடியாதது.

9. அது மட்டுமல்ல இப்படியான இந்த சூழ்நிலையிலிருந்து தப்பி ஓடி வந்தவர்களை தலைவரை தனியே விட்டுவிட்டு ஓடிவந்த துரோகிகள் என்றும் இந்த துரோகிகளுக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது என்று கூறியவர்களும் பிரிஎப்  மற்றும் புலிகளின் ஆதரவாளர்களே.

10. மேலும் மேற்கூறிய இந்த துரோகப்பட்டத்தை ஏக்காளமாக தூபமிட்டு பரப்பிய ஜபிசி ஜிரிவி தீபம் போன்ற ஊடகங்கள் இன்று இவற்றுக்கு என்ன சொல்கிறார்கள்? அரசியல் சவால்களைவிட இராணுவ வெற்றிகளை தமிழீழ வெற்றியாக ஊதித் தொலைத்த இந்த ஊடகங்கள் இன்றும் உங்கள் பேரணியை ஊதித்தள்ளும்.

11. மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த மக்களின் பரிதாபத்தை துரோகம் என்று கூறிவிட்டு இன்று அதேமாதிரியான சூழ்நிலையில் ஆனால் ஓரளவு மரணபயம் இல்லாமல் வாழும் மக்களை அரசின் மனித உரிமை மீறல்கள் என்று சத்தம்போடும் பிரிஎப் ஏன் அன்று புலிகளால் இதே போன்ற கொடுமைகள் நடைபெறும் போது எதிர்த்து குரல் எழுப்பவில்லை. அப்படி குரல் எழுப்பி  தடுத்து வைக்கப்பட்டு இருந்த மக்களை விடுவிக்கும்படி புலிகளை வற்புறுத்தியிருந்தால் இந்த நிலைமை இப்படி ஏற்ப்பட்டிருக்காது.

12. இன்று புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டபின்பும் அந்தப் பிரதேசங்களில் மீளக் குடியேற்றம் செய்யாமல் எமது மக்களை இப்படியாக அடைத்து வைத்திருப்பதை மனிதாபிமானமுள்ள எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அப்படியான மனித உரிமை மீறல்களை தமிழ்பேசும் மக்கள் எதிர்த்தே வந்துள்ளனர். ஆனால் இதேமாதிரியான மனித உரிமை மீறல்களை புலிகள் செய்யும் பொது மட்டும் காரணம் கூறிய பிரிஎப் இப்போது அரசிற்கு எதிராக குரல் எழுப்புவதை வரவேற்கும் அதே வேளை தமது கடந்தகால தவறுகளையும் பகிரங்கமாக மக்களிடம் ஒத்துக்கொள்ள துணிந்து முன்வர வேண்டும்.

13. இந்த யுத்த திருவிழாவை நடாத்த பண உதவி செய்த புலம் பெயர் மக்கள் திருவிழா முடிவில் துப்பரவு வேவைகளுக்கும் செய்யவும் முன்வரவேண்டும். வன்னி நிலப் பரப்பு எங்கும் நிலக் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. புலிகளும் அதனைத் தெரிவித்துள்ளனர். ஆகவே இந்த யுத்தத்திற்கு ஆரம்பத்தில் போர் முழக்கம் இட்டவர்கள் இந்தக் கண்ணி வெடி அகற்றும் பணிக்கு உதவுவது அவசியம்.

14. இன்று வன்னி மக்களின் முகாம் வாழ்க்கையில் இலங்கை இராணுவம் பொலீசார் ஒருபக்கம் லஞ்சம் வாங்கிக்கொண்டு மக்களை வெளியே அனுமதித்துவிட்டு மக்கள் தப்பி ஓடிவிட்டனர் என்று தேடுதல் வேட்டைகள் செய்வதும் இவர்கள் காணாமல் போனோர் என தமிழர்கள் பிரச்சாரம் செய்வதும் நிகழ்கின்றது. புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் அழைத்துச் செல்லப்படும் சம்பவங்கள் நிகழ்ந்தள்ளன. நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது பற்றிய விபரங்களை அரசு வெளியிடவில்லை. இவை பற்றி சுனில் அபயசேகர போன்ற மனித உரிமைவாதிகள் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அவர்களது குரல்களைப் பலப்படுத்துவது மிக மிக அவசியம்.

15. மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் கடந்தகாலத் தவறுகள் பற்றிய விமர்சனத்தை முன்வைக்காமல் பிரிஎப் திடீரென இந்த மக்களுக்கான போராட்ட களத்தில் இறங்கியுள்ளது பலமான சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. இப்படியான போராட்டங்களை ஆரம்பிக்க முன்னர் பிரிஎப் ஒரு சுய விமர்சனத்தை முன்வைத்திருக்க வேண்டும்.