படையினரால் மீட்டெடுக்கப்பட்ட வடபகுதியும், அங்குள்ள மக்களும் வெகு விரைவில் உச்சக்கட்ட நன்மைகளை அடைவார்கள். இதற்கான சகல நடவடிக்கை களையும் அரசாங்கம் முன் னெடுத்துள்ளது என்று அரசியலமைப்பு விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் வெகுவிரைவில் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், கடந்த 25 வருடங்களாக தலைநகருடன் எந்த தொடர்புகளும் இல்லாமலிருந்த எமது மக்கள் மீட்டெடுக்கப்பட்டதன் மூலம் சிறந்த பலன்களை அடைவர் என்றும் அவர் தெரிவித்தார். வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் மன்னார், முசலி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சவேரியர்புரம் கிராமசேவைப் பிரிவில் 122 குடும்பங்களைச் சேர்ந்த 409 பேர் நேற்றுமுன்திம் மீளக்குடியமர்த்தப்பட்டனர். அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்க்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேலும் தகவல் தருகையில்:-
பிரபாகரன் தனது சொந்த நலனுக்காகவும், தனது பாதுகாப்புக்காகவும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பொது மக்களை பணயமாக வைத்திருந்ததை அனைவரும் கண்டோம். எஞ்சியுள்ள மக்களையும் எமது படைவீரர்கள் வெகுவிரைவில் மீட்டெடுப்பார்கள். நீண்டகால கொடிய யுத்தத்திலிருந்து நாங்கள் தற்பொழுது மீண்டு வந்துள்ளோம்.
நிச்சயமாக யுத்தத்தினால் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாது. எனவே யுத்தத்தை கைவிட்டு சிறந்த அரசியல் தீர்வு ஒன்றின் மூலம்எமது மக்களுக்கு தீர்வுகளையும், நன்மைகளையும் பெற்றுக்கொடுப்போம் என்று அன்று புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நானும் சிலரும் ஆலோசனைகளை முன்வைத்தோம். இதற்காக கடுமையாக முயற்சித்து பார்த்தோம். அன்று எமது கருத்தை மறுத்தார். ஒரு சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றையாவது பெற்றுக்கொடுக்க முயற்சித்தோம். ஆனால் அதனையும் பிரபாகரன் ஏற்றுக்கொள்ளவில்லை. யுத்த வெறியிலேயே அவர் இருந்தார். ஆனால் இதனால் பாரிய அழிவையே சந்திக்க நேரிடும் என்று கூறிவிட்டு நானும் எனது சகாக்களும் வெளியேறினோம்.
பிரபாகரன் அன்று அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று வன்னி மக்களை கொடுமையிலிருந்து பாதுகாத்திருக்க முடியும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமது மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர். எனவேதான் கிளிநொச்சி நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். படையினரின் மனோ வலிமையை மேம்படுத்துவதுடன் அங்குள்ள வளங்களை பயன்படுத்தி எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பாக ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாக இருந்தது.
வாகரைக்கு இப்போது சென்று பார்த்தால் அங்கு யுத்தம் நடைபெற்றதற்குரிய எந்த தடையமும் இல்லை. ஜனாதிபதியினதும், பசில் ராஜபக்ஷ எம்.பி.யினதும் வழிகாட்டல்களில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதே நிலைமை வெகுவிரைவில் வடக்கிலும் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.