வன்னிப் பிரதேசத்திலிருந்து 35000 மக்களை காப்பாற்ற இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதென ஜனாதிபதி இன்று மாலை தெரிவித்தார். மேலும் இந் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
புலிகள் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும், தற்கொலைத் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயப்பட்ட 17 பேர் விமான ஹெலிகப்டர் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரபாகரன் சரணடைய 24 மணி நேர காலக் கெடு : அரசு அறிவிப்பு
“24 மணி நேரத்துக்குள் பிரபாகரனும் அவரது குழுவினரும் சரண்அடைய வேண்டும். இல்லையேல் இலங்கை இராணுவம் அவர்களை அடியோடு வீழ்த்தி விடும்”
இவ்வாறு இலங்கை அரசு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : “பாதுகாப்பு பகுதியில் இருந்து இன்று மட்டும் 35 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர். விரைவில் ஒட்டு மொத்த மக்களையும் மீட்டு விடுவோம். விடுதலைப்புலிகள் முற்றிலும் தோல்வி அடையும் நிலையில் உள்ளனர்.
பிரபாகரனுக்கு 24 மணி நேரம் கெடு விடுக்கிறோம். அவரும் அவரது குழுவினரும் அதற்குள் சரணடைய வேண்டும். இல்லை என்றால் எங்கள் படை அவர்களை அடியோடு வீழ்த்தி விடும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
30,000 பொதுமக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சம் : புதுமாத்தளன் மேற்கு பகுதிமண் அரணின் 3 கி.மீ. படையினர் வசம்
விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுமாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கனை பகுதிகளில் இருந்து 30,000 பொதுமக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுமாத்தளன் மேற்கு பகுதியிலுள்ள மண் அரணின் 3 கிலோமீற்றர் அளவிலான பகுதியினை இன்று காலை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கையை இராணுவத்தின் 58ஆம் மற்றும் 53ஆம் படையணியினர் மேற்கொண்டுள்ளனர் எனவும் ஊடக தகவல் மையம் அறிவித்துள்ளது. அதேவேளை பாதுகாப்புக் கருதி இராணுவத்தினரிடம் வரும் பொதுமக்கள் மீது இன்று 3 தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 17 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 100 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு அரசாங்கம் 24 மணி நேர காலக்கெடுவினை அறிவித்துள்ளது. இன்று நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பித்துள்ள இந்த காலக் கெடு நாளை நண்பகலுடன் முடியவடையவுள்ளது.