::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

வன்னி வைத்தியசாலைகளுக்கு போதுமானளவு மருந்துகள்

medicine.jpgவவுனியா, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கென போதியளவு மருந்துப் பொருட்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

அதேநேரம் புலிகளின்பிடியில் சிக்குண்டுள்ள மக்களுக்கென புதுமாத்தளன் ஆஸ்பத்திரி உட்பட அப்பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்துப் பொருட்கள் ஏற்கனவே இரண்டு தடவைகள் கப்பல் மூலம் திருகோணமலையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அஜித் மெண்டிஸ் நேற்றுத் தெரிவித்தார்.

இந்த ஆஸ்பத்திரிகளுக்கு அடுத்துவரும் ஓரிரு தினங்களிலும் கப்பல் மூலம் மருந்துப் பொருட்கள் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேற்று (01) அழைத்துச் செல்லப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த இராணுவ உயரதிகாரி, படகுகள் மற்றும் வேறு மார்க்கங்களினூடாக இதுவரை 2233 பேர் யாழ். குடாநாட்டுக்கு வந்துள்ளதாக கூறினார்.

அவர்கள் கோப்பாய், மிருசுவில், குருநகர் மற்றும் கொடிகாமம் பகுதிகளில் உள்ள 4 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். முல்லைத்தீவில் இருந்து வரும் மக்களின் தொகை அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் இரண்டு நலன்புரி முகாம்கள் கொடிகாமத்தின் மற்றொரு பகுதியிலும் கைதடியிலும் அமைக்கப்பட உள்ளன. யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ள மக்களுக்கு தங்குமிட வசதி, மருத்துவ வசதி, உலர் உணவு அடங்கலான சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

காயமடைந்த 52 பேர் வவுனியா ஆஸ்பத்திரியில்

vanni-injured.gifவன்னியி லிருந்து படுகாயமடைந்த நிலையில் கப்பல் மூலம் திருகோணமலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டவர்களில் 52 பேர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  11 அம்புலன்ஸ்களில் இவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சுகமாகும் நோயாளர்கள் நலன்புரிநிலையங்களில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது. எக்காரணம் கொண்டும் வெளியே தங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களை வவுனியாவில் உள்ள உறவினர்கள் பொறுப்பேற்றால் அனுமதிக்கப்படுவர். எவரும் இல்லாதவர்கள் முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இடப்பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க நான்கு ஆஸ்பத்திரிகள் தயார்

trico.gifவன்னியி லிருந்து கடல் மார்க்கமாக திருகோணமலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும் நோயாளிகளுக்கு இடப்பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்குடன் நோயாளர்களை கந்தளாய், பொலன்நறுவை, வவுனியா மற்றும் மன்னார் ஆஸ்பத்திரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள். மருந்துப் பொருட்கள், ஆளணிகளும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் கஹந்தலியனகே உள்ளிட்ட குழுவினர் நேரடியாக சென்று நிலைமைகளை ஆராய்ந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

அத்துடன் சுகாதார அமைச்சின் செயலாளர் அடங்கலான குழுவினர் நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்கள், இடைத்தங்கல் முகாம்களுக்கும் சென்றனர்.  அரச கட்டுப்பாட்டுக்குள் வரும் மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சகல நிவாரணக் கிராமங்கள், இடைத்தங்கல் முகாம்களுக்கும் சென்று ஆராய்ந்து வருகின்றனர்.

ஜனாதிபதியின் விசேட பணிப்பிற்கிணங்க நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களின் சுகாதார தேவைகள் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதுடன் போஷாக்கின்மையால் உள்ளவர்களுக்கு எவ்வித வயது வித்தியாசமுமின்றி திரிபோஷா வழங்கவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.

விமானப் படை விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என விமானப்படைப் பேச்சாளர் அறிவிப்பு

mi-24.jpgவிமானப் படையைச் சேர்ந்த விமானமொன்று விடுதலைப் புலிகளால் வன்னிப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது குறித்து விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார நேற்று கருத்துத் தெரிவிக்கையில், விமானப்படை விமானம் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்ற செய்தியில் உண்மையில்லை எனவும், இச்செய்தி  பலவீனத்தை மறைக்க புலிகள் மேற்கொள்ளும் பொய் பிரசாரம் என்றும் தெரிவித்தார்.

குறிப்பிட்ட நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டிருக்கும் புலிகள் தமது படுதோல்வியை மறைப்பதற்காகவும், தாம் இன்னும் பலமுடனேயே இருக்கின்றோம் என சர்வதேசத்துக்குக் காட்டவுமே இவ்வாறான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

58 ஆவது, 57 ஆவது படைப் பிரிவினர் புதுக்குடியிருப்பில் புலிகளின் இலக்குகளை தாக்கியழிக்கும் அதேவேளை, தரைப்படையினருக்கு உதவும் வகையில் விமானப் படை விமானங்களும், ஹெலிகொப்டர்களும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் 252 பேர் திருகோணமலை வந்தடைந்தனர்

red-cr.jpgதிருகோண மலைக்கு வந்த நோயாளர்களில் ஒரு பகுதியினர் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின அனுசரணையுடன் நோயாளாகள், காயங்களுக்கு இலக்கானோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் உட்பட 252 பேர் கிறீன் ஓசன் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை திருகோணமலை அரசினர் பொது மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்ட மேலும் நூறு பேர் பேருந்துகள் மூலம் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம் இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு இதுவரை 746 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருகோணமலை அரசினர் பொதுமருத்துவமனைக்கு ஆறாவது தொகுதி நோயாளர்களும் கொண்டு வரப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இடநெருக்கடியை தவிர்க்கும் வகையில் ஓரளவு சிகிச்சை வழங்கப்பட்ட நோயாளர்களை மன்னார் அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் மூலம் 90 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள்

ship.jpgபாதுகாப்புப் பிரதேசத்துக்குள் வந்துள்ள மக்களுக்கென 90 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் 40 மெ. தொன் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அதேநேரம்,  இன்று 50 மெ. தொன் அத்தியாவசியப் பொருட்கள் கப்பல் மூலம் எடுத்துச் செல்லப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திவாரட்ன தெரிவித்தார்.

படையினரால் பாதுகாப்பு பிரதேசம் என பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வரும் குழந்தைகளுக்குரிய பால்மா வகைகள் தட்டுப்பாடின்றி கிடைக்கக் கூடியதாக, குழந்தைகளுக்கான பால்மா சுமார் 1000 பக்கற்களை மேலதிகமாக அனுப்பி வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் கூறினார். இதனை மற்றொரு கப்பலில் அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் புதுக்குடியிருப்பு புதுமாத்தளன் பகுதியிலுள்ள பாதுகாப்பு பிரதேசத்திலுள்ள மக்களுக்கென 40 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

அதேநேரம், குழந்தைகளுக்குத் தேவையான பால்மா வகைகளையும் அனுப்ப உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார். இன்று கின் ஓஷியன் என்ற கப்பல் மூலம் எடுத்துச் செல்லப்படும் கப்பலில் சீனி, மா, அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் அடங்குகின்றன.

கின் ஓஷியன் கப்பல் இன்று புறப்பட்டு முல்லைத்தீவு கடல் பரப்புக்கு செல்கிறது. அங்கிருந்து படகுகள் மூலம் புதுமாத்தளன் பகுதிக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படும். உலக உணவு திட்டத்தினரின் அத்தியாவசிய பொருட்களுடனும், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரினால் அனுப்பப்படும் பொருட்களுடனுமே கப்பல் புறப்படுகிறதென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுவோருக்கு தங்கு தடையின்றி நஷ்டஈடு வழங்கப்படும் – அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

risard.jpgஅரசாங்கம் பயங்கரவாத பிரச்சினைக்கு முகம்கொடுத்து அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையிலும் பயங்கரவாதம் காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்குரிய நஷ்ட ஈடுகளை எவ்வித தங்குதடையுமின்றி வழங்கி வருவதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத பிரச்சினை காரணமாக 1990 ஆம் ஆண்டிற்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈடு வழங்கும் நிகழ்வு புதன்கிழமை மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் இடம்பெற்றது.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டுக்கொடுப்பனவுகளை வழங்கினார். பயங்கரவாத பிரச்சினை காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் 58 பேருக்கும் சொத்துகளை இழந்த 20 பேருக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டது. மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்குமாக மூன்று மில்லியன் ரூபாவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சொத்துகளை இழந்த அரச ஊழியர்களுக்காக இரண்டு மில்லியன் ரூபாவும் மொத்தமாக வழங்கப்பட்டது.

இங்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் உரையாற்றுகையில்; கடந்த காலங்களில் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட அதிகமான நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலை எந்த அமைச்சிலும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் எவ்வித தாமதமுமின்றி கிடைக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாக இருக்கின்றார்.

ஜனாதிபதியினதும் அவரது ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவினதும் ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் எனக்கு அதிகமாக கிடைத்து வருகின்றது. இதன்காரணமாக பாதிக்கப்படுபவர்கள் உடனுக்குடன் தமது நஷ்ட ஈடுகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் (குண்டர் சட்டம்). 1வருடத்திற்கு வெளியே வர முடியாத நிலை

seeman.jpgஇயக் குனரும், இலங்கைத் தமிழர் போராட்ட ஆதரவாளருமான திரைப்பட இயக்குனர் சீமானை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (குண்டர் சட்டம்) கைது செய்ய தமிழக அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.

ஈழத் தமிழருக்கு ஆதரவாக புதுச்சேரியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் மாணவர்களை வாழ்த்திப் பேசிய இயக்குனர் சீமான் மீது, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிதாக காங்கிரஸ் கட்சியினர் கூறிய புகாரின் அடிப்படையில் புதுச்சேரி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து அவரை புதுச்சேரி போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடிக்கொண்டிருக்கும் போதே, சீமான் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடந்த ஈழத் தமிழர் ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக போலீசார் அறிக்கை சமர்ப்பித்தனர். இந் நிலையில் சீமான் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக வக்கீல்கள் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இங்கும் இந்திய அரசுக்கு எதிராக அவர் பேசியதாக குறிப்பு அனுப்பப்பட்டது. அந்த நேரத்தில்தான் அவரைக் கைது செய்வதற்கு புதுச்சேரி போலீசார் வந்தனர். ஆனால் அதற்குள் சீமான் தனது பேச்சை முடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டார் சீமான்.

இதையடுத்து புதுச்சேரி போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அச்சமயம் தானே நேரில் வந்து ஆஜராவதாக சீமான் அறிவித்தார். அதன்படி நெல்லை காவல்துறை ஆணையர் முன்பு சீமான் நேரில் சரணடைந்தார்.

நெல்லை கமிஷனர் மஞ்சுநாதா, சீமானை புதுச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சீமானை புதுச்சேரி நீதிமன்றத் தீர்ப்பின் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந் நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதாகக் கூறி சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

க்ரைம் நம்பர் 308/2009,  இந்திய தண்டனை சட்டம் 505, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 13(1), (B), 13(2) ஆகிய சட்டப்பிரிவுகளில் காவல்துறை சீமான் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில் இன்று, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்படும் தமிழக அரசின் உத்தரவை புதுச்சேரி சிறையில் இருக்கும் சீமானிடம் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் நாகராஜன் வழங்கினார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமான் சிறையில் அடைக்கப்படுவதால் அவர் 1வருடத்திற்கு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஈடுபடும் எண்ணத்தில் இருந்தார் சீமான். இந்த நிலையில் அவர் மீது தேசிய பாதுகாப்பு  சட்டம் பாய்ந்துள்ளது.

புதுக்குடியிருப்பில் புலிகளின் அதிநவீன தகவல் தொழில் நுட்ப நிலையம் கண்டுப்பிடிப்பு

setli.jpgமுல்லைத் தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியிலில் தேடுதல் நடவடிக்கைகளிலீடுபட்டிருந்த இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிநவீன  உயர் தொழில் நுட்பங்கள் கொண்ட சற்றலைட் தகவல் தொழில்நுட்ப  தொலைத்தொடர்பு  நிலையமொன்றைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது புதுக்குடியிருப்பு மேற்கு பகுதியை நோக்கி முன்நகர்வில் ஈடுப்பட்டுள்ள 58ஆவது படையணி புலிகளின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து முன்னேறிச் சென்றவேளை புலிகள் இவற்றை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம்  தெரிவித்துள்ளது.

இங்கு கணனிகள், கணனிகளுக்குத் தேவையான உபகரணங்கள், தொலைபேசிகள் போன்றவும் காணப்பட்டதாகவும் சற்றலைட் மூலம் சர்வதேச நாடுகளுடன் தொடர்பு கொள்ளக் கூடியதாக இந்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டிருந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம்  தெரிவித்துள்ளது.

செட்டிகுளம் கதிர்காமர் கிராமத்தில் 728 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டனர்

Wanni_Warசெட்டி குளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்குரிய கதிர்காமர் கிராமத்தில் 728 குடும்பங்களைச் சேர்ந்த 2791 பேர் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என செட்டிகுளம் பிரதேச செயலக புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து விடுவிக்கப்பட்ட பிரதேசத்திற்குள் வந்துள்ள மக்கள் தங்கியுள்ள பாடசாலைகளை விரைவில் திறக்கும் நோக்குடன் செட்டிகுளத்தில் அமைக்கப்படும் கிராமங்களில் இவர்கள் குடியமர்த்தப்படவுள்ளனர் என மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சு தெரிவிக்கின்றது.

இராமநாதன், அருணாசலம் ஆகியோரின் பெயர்களிலும் வன்னி அகதிகளுக்கு கிராமங்கள், செட்டிகுளத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. இடம்பெயர்ந்த மக்கள் வசித்த பிரதேசங்களில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் பூர்த்தியானதும் மீள்குடியேற்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். அதுவரையிலும் இவர்களுக்கு அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு பராமரிக்கப்படுவர்.

சுகாதாரம், மருத்துவம், கல்வி, கூட்டுறவு மற்றும் வங்கி சேவைகள் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும். கல்வியை இடைநடுவில் தவறவிட்ட இளைஞர்களுக்கு தொழில் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. ஆலயங்களும் இங்கு அமைக்கப்படும். உலக உணவு நிறுவனம் இவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்க முன்வந்துள்ளது. செட்டிகுளத்தில் ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடுகள் அமைக்கும் வேலைத்திட்டம் நடைபெறுகின்றது.