::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

சிவிலியன்களை பாதுகாப்பாக குடியமர்த்த செட்டிக்குளத்தில் மேலும் 100 ஏக்கர் காணி

vanni.jpgவன்னியில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி படையினரிடம் புகலிடம் தேடி வரும் சிவிலியன்களை பாதுகாப்பான முறையில் குடியமர்த்துவதற்கென வவுனியா செட்டிக்குளத்தில் மேலும் நூறு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இக்காணியில் புதிதாக தற்காலிக கொட்டில்கள், மலசலகூடங்கள் மற்றும் பாடசாலை என்பனவற்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மோதல்கள் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியிருக்கும் அகதிகளின் நலன்களை கண்டறியும் விசேட மாநாடு நேற்று அமைச்சர் ரிஷாட் தலைமையில் வவுனியாவில் நடைபெற்றது. இம்மாநாட்டில் வட மாகாண ஆளுநர் டிக்ஷன்தால, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ், பொலிஸ் அதிகாரிகள், படையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தங்களுக்குத் தேவையான உணவை தாமே சமைத்துக் கொள்வதாக இம்மாநாட்டில் கலந்துகொண்ட இடம் பெயர்ந்த மக்கள் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் 100 குடும்பங்கள் ஒரு வலயம் என்ற ரீதியில் பிரித்து விடப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்வரும் வியாழக்கிழமை முதல் இவர்களுக்கென வழங்கப்படும் பொருட்களைக் கொண்டு இவர்கள் தாமே உணவு தயாரிக்கவுள்ளனர்.

இதேவேளை, வவுனியாவில் தங்கியிருக்கும் வன்னியைச் சேர்ந்த அகதிகளுக்கு தேவையான அனைத்து கருமங்களும் உடனுக்குடன் முன்னெடுக்கப்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அகதிகளின் சுகாதாரம், குடிநீர், மலசலகூட வசதிகள் என்பன குறித்து இம் மாநாட்டின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

எல்ரிரிஈயினரின் பெருந்தொகை படைப் பொருட்கள் கண்டுபிடிப்பு

truck.jpgவிஸ்வமடுப் பகுதியில் எல்ரிரிஈயினருக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுவரும் 57வது படைப்பிரிவின் 571 வது, 572 வது பிரிகேட் படையினர் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில் நேற்று (பெப்:15) அப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இத்தேடுதலின் போது எல்ரிரிஈ பயங்கரவாதிகளால் விட்டுச் சென்ற பல படைப்பொருட்களை படையினர் கண்டுபிடித்துள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

571வது பிரிகேட்டின் 17வது கஜபா படையணியினர் விஸ்வமடுப் பகுதியில் நடத்திய தேடுதலில் 20 கைக்குண்டுகள், இரண்டு விருத்தி செய்யப்பட்ட வெடிக்கவைக்கும் உபகரணம்(IED) மற்றும் 81 மிமீ மோட்டார் குண்டுகள் என்பனவற்றைக் கைபற்றியுள்ளனர். அதேவேளை இப்பகுதியில் தேடுதல் நடத்திய  572வது படைப்பிரிவின் 7வது காலால் படையினர் பெருமளவான இராணுவ உபகரனங்களைக் கண்டுபிடித்துள்ளதுடன் பயங்கரவாதிகளால் கைவிடப்பட்ட  டீசல் மற்றும் மண்ணெண்ணெய் பீப்பாக்களையும் கைபற்றியுள்ளனர்.

இப்படையணி எல்ரிரிஈ பயங்கரவாதிகளால் கைவிடப்பட்ட முகாமையும் கண்டுபிடித்துள்ளனர்.  7 வது காலால் படையினர் இத்தேடுதல் நடவடிக்கையில் கண்டுபிடித்துள்ள மற்றய  உபகரணங்களின் விபரங்கள் பின்வருமாறு

09 x எல்ரிரிரிஈ பவுச் , 2530 x ரி-56 ரவைகள் ,250 x எப் என்சி ரவைகள் , 07 x கைக்குண்டுகள் , 41 x எல்ரிரிஈ தொப்பிகள், 52 x எல்ரிரிஈ  சீருடைகள் , 03 x ஜெகட்டுகள் , 05 x எல்ரிரிஈ பெக், 02 x 81 மிமீ மோட்டார் குண்டுகள்

விஸ்வமடுப் பகுதியில் 572பிரிகேட்டின்  9வது விஜயபாகு படைப்பிரிவினர் இருவேறு தேடுதல் நடவடிக்கையின் போது பெருந்தொகையான ஆட்டிலறி செல்களைக் கைபற்றியுள்ளனர். மேலும் 14 கிறீஸ் பெரல்கள்(210லீ), பசளைக் (யூரியா) களஞ்சியசாலைக் கட்டிடங்கள் மற்றும் டோசர் இயந்திரங்கள் உட்பட பல உபகரணங்களையும் கைபற்றியுள்ளனர். அத்துடன் கைப்பற்றப்பட்ட மற்றய பொருட்களின் விபரங்கள் பின்வருமாறு.  115 x 122மிமீ.ஆட்டி செல்கள், 40 x 130மிமீஆட்டிசெல்கள், 75 x 81மிமீ மோட்டார் பியூஸ்கள், 05 x 82 மிமீமோட்டார் குண்டுகள், 180 x 60 மிமீ.​மோட்டார் பியூஸ், 10 x 130மிமீஆட்டிலறி பியூஸ், 20 x 130மிமீ வெற்றுச் செல்கள், 01 x கண்ணிவெடி, 01 xடோசர் 02 x ரி- 56 துப்பாக்கிகள்.

திருகோணமலையில் சிகிச்சை பெற்று வந்த சிலர் வவுனியாவுக்கு மாற்றம்

trincomali.jpgஇலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து
திருகோணமலை அரசினர் பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்கு என்று கொண்டு வரப்பட்டோரில் 175 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஞாயிறன்று மதியவேளை மூன்று பஸ் வண்டிகள் மூலம் அவர்கள் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ சேவைகளுக்கான இணைப்பாளர் டாக்டர் ஞானகுணாளன் தெரிவித்துள்ளார்.

52 நோயாளர்கள் மேலதிக சிகிச்சை பெறும் நோக்கில் கந்தளாய் அரசினர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேநேரம் திருகோணமலை அரசினர் பொதுமருத்தவமனையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டோருக்கு இரத்தம் தேவைப்படுவதாகவும் ஆதலால் மக்கள் இரத்த தானம் செய்ய வருமாறும் மருத்துவமனை வட்டாரம் கோரியுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளாகள் இந்தக் கோரிக்கைக்கு அமைவாக ஞாயிறன்று இரத்த தானம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்கள்

civilians.jpgஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பொதுப்பிரதேசத்திலும், விசுவமடு பிரதேசத்திலும் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள இராணுவ தலைமையகம், இந்த மோதல்களின் பின்னர் நடத்தப்பட்ட தேடுதலின்போது இராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் வெடிப்பொருட்களைக் கைப்பற்றியிருப்பதாகக் கூறியிருக்கின்றது.

இதனிடையே, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்திற்கு இதுவரையில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்து வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். பதினொரு பாடசாலைகள் உட்பட உயர் கல்வி நிலையங்கள் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகப் படைத்தரப்பு தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை, வன்னிப் பிரதேசத்தில் விடுதலைப்புலிகளி்ன் பிரதேசத்தில் தொடர்ந்து எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாகவும், இதனால் பலர் கொல்லப்படுவதுடன் காயமடையவும் நேரிட்டுள்ளதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லை கடலேரியில் தற்கொலை படகுகள் மீது விமானத் தாக்குதல்

boats-1002-2.jpgமுல்லைத் தீவு கடற்பிரதேசத்தில் நேற்றுக்காலை புலிகளின் தற்கொலைப் படகுகள் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

முல்லைத்தீவு ஏரிக்கு வடக்கே புலிகளின் தற்கொலைப் படகுகள் மூன்றினை அவதானித்த விமானப் படையினர் கிபிர் விமானத்தின் மூலம் தாக்குதல் நடத்தியதாக பேச்சாளர் தெரிவித்தார். நேற்றுக் காலை 10.35 மணியளவில் புலிகளின் இலக்குகளைத் துல்லியமாக அவதானித்ததன் பின்னர் விமானப் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவு விசுவமடுவில் இராணுவத்தின் 58 ஆம் படைப் பிரிவினரிடம் நேற்று முன்தினம் மாலை 541 சிவிலியன்கள் தஞ்சமடைந்துள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார். மேலும், படகில் வந்த ஏழு சிவிலியன்கள் யாழ்ப்பாணம் முனை கடற்படை முகாமில் தஞ்சமடைந்ததாகவும் ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்

வவுனியா நிவாரண கிராமங்களில் அரசாங்க வங்கிகளின் கிளைகள். தங்கியுள்ளோர் விபரங்களை இணையத்தில் வெளியிட முடிவு

vanni.jpgகிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து நிவாரணக்கிராமங்களில் தங்கியுள்ள மக்களின் முழுமையான விபரங்களை உறவினர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில், மீள் குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு இணையத்தளத்தில் விசேட ஹொட் மெயில் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வவுனியா கதிர்காமர், அருணாச்சலம், ஆனந்த குமாரசுவாமி, இராமநாதன் ஆகிய நிவாரணக் கிராமங்களில் தற்காலிக, நிரந்தர வீடுகளில் தங்க வைக்கப்படும் மக்களின் முழுமையான விபரங்களை அமைச்சு எடுத்து வருகிறது.

விபரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்ட பின்னர் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படும். புலம் பெயர்ந்துள்ளவர்கள் தமது உறவுகள் எங்குள்ளார்கள் எனபதை அறிந்து கொள்ள இது ஏதுவாக அமையுமென மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த 13 ஆம் திகதி மாலை வரை 34,430 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளனர் எனக் குறிப்பிட்ட அமைச்சர், நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள தமது உறவினர்களுக்கு புலம் பெயர்ந்துள்ளவர்கள் உதவிகள் செய்வதற்கு ஏதுவாக மேற்படி கிராமங்களில் அரச வங்கிகளான மக்கள் வங்கி, இலங்கை வங்கிக் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினர்.

வன்னியில் பொதுமக்கள் இழப்பு தொடர்ந்து அதிகரிப்பு

artilary13.jpgமுல்லைத்தீவு தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் நேற்று முன்தினம் வியாழக் கிழமை இடம்பெற்ற கடும் ஷெல் மற்றும் பீரங்கித் தாக்குதல்களினால் 132 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 358 பேர் காயமடைந்துமுள்ளனர்.  வியாழக்கிழமை அதிகாலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து “புதினம்’ மற்றும் “தமிழ்நெற்’ இணையத்தளங்கள் கூறுகையில்;

தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் ஷெல், பீரங்கி மற்றும் பல்குழல் ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நாள் முழுவதும் ஆறாயிரம் ஷெல்கள் வரை வீழ்ந்து வெடித்ததில் 132 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 358 பேர் காயமடைந்துமுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 91 பேர் மாத்தள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் பத்துப்பேர் சிகிச்சை வழங்கப்பட்டுக்கொண்டிருக்கையில் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மிகவும் ஆபத்தாயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இடம் பெயர்ந்தோர் 3 வருடங்கள் தடுத்து வைக்கப்படுவர் என்ற செய்தி உண்மை அல்ல’

risard.jpgவன்னியிலி ருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்த பொது மக்கள் 3 வருடங்களுக்கு நலன்புரி முகாம்களிலேயே தடுத்து வைக்கப்படுவர் என்ற செய்திகளில் எந்த உண்மையும் கிடையாதென மறுத்திருக்கும் மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன்னிப் பிரதேசத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்றும் நோக்கமெதுவும் அரசாங்கத்துக்குக் கிடையாதென்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வன்னிப் பகுதியிலிருந்து நேற்று (காலை) வரை மொத்தமாக 34,430 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்தை வந்தடைந்திருப்பதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அமைச்சர் பதியுதீன் இந்த கருத்துகளை வெளியிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்:

“”வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வரும் பொது மக்கள் 4 கட்டங்களாக உள்வாங்கப்படுகின்றனர். வரும் மக்களுக்கு படையினரால் முதலில் சத்துணவுகள் வழங்கப்பட்டு பின்னர் ஏனைய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. இன்று (நேற்று) வரை 34,430 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளனர். இன்னும் சுமார் 65 ஆயிரம் மக்களே அரச கட்டுப்பாடற்ற பகுதியில் எஞ்சியிருக்கின்றனர்.

இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கென அரை நிரந்தர வீடுகள் வழங்கப்படவுள்ளன. இதற்கமைய 10 ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

அத்துடன், வவுனியாவில் ராமநாதன், கதிர்காமர், ஆனந்தகுமாரசுவாமி, அருணாசலம் ஆகிய பெயர்களில் 4 நலன்புரி கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாடசாலை, வங்கி, சுகாதாரம் என சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதேநேரம், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இப்போதே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டோம். மன்னார்சிலாபத்துறை பிரதேசங்களுக்கு மின்சார விநியோகம் வழங்க ஆரம்பிக்கப் பட்டுவிட்டன. பூநகரிசங்குப்பிட்டி பாலத்தின் புனரமைப்புகள் ஆரம்பமாகிவிட்டன. யாழ்ப்பாணம்மன்னார் “”ஏ32′ வீதியை கூடிய விரைவில் செப்பனிடும் பொருட்டு 12 ஒப்பந்தகாரர்களிடம் அந்தப் பணிகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. மாங்குளம் பகுதிக்கும் அடுத்த வாரமளவில் மின்சாரம் வழங்க அரசாங்கம் தயாராக இருக்கிறது.

இடம்பெயர்ந்து வந்தவர்களை கூடிய விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம். அதைவிடுத்து நலன்புரி முகாம்களிலேயே மக்கள் 3 வருடங்களுக்கு தடுத்து வைக்கப்பட போவதாக வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது.

அதுமட்டுமல்லாது, வன்னியில் சிங்கள, முஸ்லிம் மக்களை அரசாங்கம் குடியேற்றப் போவதாக சிலர் இப்போதே பிரசாரம் தொடங்கிவிட்டனர். ஆனால் வன்னியில் சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்றும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. அதற்கான அவசியமும் எமக்கில்லை.

இதேநேரம், இடம்பெயர்ந்து வந்த மக்களுடன் 8, 9 புலி உறுப்பினர்களும் வந்துள்ளனர். சிலர் அவர்களே அதை ஒப்புக் கொண்டனர். அவர்கள் திருந்தி மக்களுடன் வாழ விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் அவர்களை மக்களுடன் இணைத்து வைத்திருக்க முடியாது.

எனவே, அவர்களை நீதி அமைச்சின் பொறுப்பில் ஒப்படைத்து புனர்வாழ்வளித்து, அத்துடன் தொழிற் பயிற்சிகளையும் வழங்கி, வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை வழங்க திட்டமிடப் பட்டுள்ளன’ என்றார்.

1600 பேர் வருகை.

mullai-ahathi.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இன்று அதிகாலை 1657 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வருகை தந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதில் 1208 பேர் விஸ்வமடு பகுதியில்  படையினரிடம் தஞ்சம் கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவிலியன்கள் பஸ் மீது கைக்குண்டுத் தாக்குதல்: ஒருவர் பலி, 12 பேர் காயம்

udaya_nanayakkara_.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருநது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு மக்களை ஏற்றி வந்த பஸ் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதல் துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக ஒரு சிவிலியன் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று  அதிகாலையில் இடம் பெற்றதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கைக்குண்டுத் தாக்குதலில் வயதான ஐந்து ஆண்கள், இரு சிறுவர்கள், வயதான ஐந்து பெண்கள், இரு பெண்கள் ஆகியோர் அடங்குவர். இந்தச் சம்பவம் புளியங்குளம்-வவுனியா வீதியில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த அனைவரும் இராணுவ பஸ் வண்டிகள் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவரின் சடலமும் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.